Thursday, February 23, 2017

ஜெயலலிதாவைச் சந்தித்தபோது……………..
அது 1975ம் ஆண்டு. பல பத்திரிகைகளில் சிறுகதைகளும் சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகளும் எழுதிவந்த சமயம் அது. அப்போதெல்லாம் பிலிமாலயா என்றொரு சினிமாப் பத்திரிகை மிகப் பரபரப்பூட்டும் வகையில் வெளிவந்துகொண்டிருந்தது. கண்ணதாசன் குடும்பத்தைச் சேர்ந்த கண. இலக்குவன் என்ற லட்சுமணன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திக்கொண்டிருந்தார். 

அவருடைய பெயரில் பத்திரிகை வந்துகொண்டிருந்ததே தவிர எம்.ஜி.வல்லபன்தான் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தவர்.

பொதுவாக சினிமாப் பத்திரிகை என்றாலேயே ‘பேசும் படம்’ மற்றும் ‘பொம்மை’ ஆகிய இரு இதழ்கள்தாம் திரைப்படங்களைப் பற்றிய பத்திரிகைகள். இந்தப் பத்திரிகைகளிலெல்லாம் எந்தவித பரபரப்பிற்கும் இடம் இல்லை.ஆனால் இவற்றைத் தாண்டிவந்து முன்நிற்கவேண்டிய கட்டாயம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிலிமாலயாவுக்கு இருந்தது.

பிலிமாலயா வெளியானவுடனேயே ஒரு பெரிய அதிர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்திற்று. அதற்குக் காரணம் அந்தப் பத்திரிகையில் எம்ஜிஆரைப்பற்றிய பரபரப்பான கட்டுரைத் தொடர் ஒன்று வர ஆரம்பித்திருந்தது.

எம்ஜிஆரை வைத்துப் படமெடுக்க ஆரம்பித்து நஷ்டமடைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு ‘ஒரு மாடிவீட்டு ஏழையின் கண்ணீர்க்கதை’ என்ற தொடரை ஆரம்பித்திருந்தார். அந்தத் தொடரில் எம்ஜிஆரால் தான் எப்படியெல்லாம் ஏமாந்தோம் என்ற விஷயத்தை தைரியமாக வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார். அந்தக் காலத்தில் எம்ஜிஆரைப் பற்றிய எதிர்மறையான விஷயங்கள் எந்தப் பத்திரிகையிலும் வராது. எந்தப் பத்திரிகைக்கும் எம்ஜிஆரைப் பற்றிய நெகடிவ் விஷயங்களைப் போடும் தைரியம் இருந்ததில்லை. இதனை முதன் முதலாக உடைத்தது பிலிமாலயாதான். 

இதனால் விற்பனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்தப் பத்திரிகையில் வித்தியாசமான கட்டுரைகளும் வர ஆரம்பித்திருந்தன.

அப்போதுதான் கன்னடப்படமான ‘சம்ஸ்காரா’விற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. 

மலையாளத்தில் ‘செம்மீனு’க்கு அடுத்து ஒரு தென்னிந்திய மொழிப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஒரு அபூர்வமான விஷயம்.

அதனால் கன்னடப்பட உலகமே தன்னைப் புரட்டிப்போட்டுக்கொண்ட சூழலில் இருந்தது. 

சம்ஸ்காராவைத் தொடர்ந்து வம்சவிருக்ஷா, காடு, பனியம்மா போன்ற படங்கள் வித்தியாசமான கோணங்களிலும் வித்தியாசமான கதைக்களன்களிலும் வர ஆரம்பித்திருந்தன. அந்தப் படங்களைப் பற்றிய கட்டுரைகளையும், செய்திகளையும் படத்தில் ஈடுபட்டவர்களின் பேட்டிகளையும் நான் பிலிமாலயாவில் எழுத ஆரம்பித்திருந்தேன். இது மட்டுமின்றி பல பொதுவான கட்டுரைகளையும் பிலிமாலயாவில் எழுதி வந்தேன்.

திரைப்பட ஈடுபாடு வர ஆரம்பித்திருந்ததால் ஒரு படம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை முழுவதுமாக அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகமிருந்தது. அதனால் நிறைய படங்களின் படப்பிடிப்புகளுக்குச் சென்றுவர ஆரம்பித்தேன்.

என்னதான் கன்னடப்படங்களின் படப்பிடிப்புகளுக்குச் சென்றுவந்தாலும் தமிழில் படம் தயாராவதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்தான் ஆர்வம் அதிகமிருந்தது.

பெங்களூரில் வசித்துவந்ததாலும், தவிர ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்ததாலும் இதற்கான வாய்ப்பு இந்த ஊரில் அவ்வளவாக இருக்கவில்லை.

இந்த நாளில் திடீரென்று ஒரு செய்தி கிடைத்தது. அதாவது ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்ற படத்தை நடிகரும் டைரக்டருமான திரு சோ பெங்களூரிலேயே எடுத்து முடிக்கப்போகிறார் என்ற செய்திதான் அது.

இந்தச் செய்தி கிடைத்ததும் எப்படியாவது முழுப்படத்தையும் உடனிருந்து கவனிப்பது என்ற எண்ணம் தோன்றியது.

இதற்கும் ஒரு வழி கிடைத்தது. அப்போது ஆர்ட் டைரக்டர் ராமசாமி மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார். முக்தா பிலிம்ஸ், பாலச்சந்தர் படங்கள் இவற்றுக்கெல்லாம் திரு ராமசாமிதான் கலை இயக்குநர். சோ படங்களுக்கும் ராமசாமிதான் ஆர்ட் டைரக்டர். திரு ராமசாமியை அவரது மைத்துனர் தமிழரசன் மூலம் ஏற்கெனவே நல்ல பழக்கம். கடிதத் தொடர்புகளும் இருந்தன. இந்தப் படம் பெங்களூரில் எடுக்கப்போகிறார்கள் என்ற விஷயத்தையே திரு ராமசாமி அவர்கள்தான் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

ஆகவே என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து ராமசாமிக்குக் கடிதம் எழுதினேன். ‘அதற்கென்ன தாராளமாக வாருங்கள். நீங்கள் தினசரி வந்து படம் எடுக்கப்படுவதை கவனிக்கலாம்’ என்று பதில் எழுதியிருந்தார்.

அதன்படி முதல்நாளன்று சென்றிருந்தேன். பெங்களூரின் சிவாஜி நகர் பகுதியில் இருந்த சாமுண்டேஸ்வரி ஸ்டுடியோவில்தான் மொத்தப் படப்பிடிப்பும் நடைபெறுவதாக இருந்தது. ஸ்டுடியோ சென்று ராமசாமியைச் சந்தித்தேன். “இருங்க………… டைரக்டரை ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாம். அவர் சம்மதித்தால் நீங்கள் தினசரி வந்து போகலாம்” என்று சொன்ன ராமசாமி என்னை சோவிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்துவைத்தார். கூடவே எனது விருப்பத்தையும் சொன்னார்.

என்னை அவர் அறிமுகம் செய்ததும் “இவரைத் தெரியுமே பார்த்திருக்கேனே” என்று சொன்ன சோ என்னுடைய விருப்பத்தைச் சொல்லியதும் என்னை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தார். அவரது முட்டைக் கண்கள் கண்ணாடி வழியே என்னை வெறித்தன. “ம்ம்ம்? நான் டைரக்ட் பண்ணப் போறதைப் பார்த்து டைரக்ஷன் கத்துக்கப்போறீங்களா நீங்க?” என்றார்.

“இல்லை படம் எடுக்கப்படுவதை கவனிக்கப்போகிறேன்” என்றேன்.

“எல்லாம் ஒண்ணுதான்” என்றவர் -

“நீங்க ரொம்ப தப்பான முடிவுக்கு வந்திருக்கீங்க. ரொம்பத் தப்பான ஆளைத் தேர்வு செய்திருக்கீங்க. படம் எப்படி எடுக்கப்படணும்ன்றதை கவனிக்கணும்னா நீங்க ஸ்ரீதர் படப்பிடிப்பையோ, பாலச்சந்தர் படப்பிடிப்பையோ கவனிக்கப்போயிருக்கணும். என்னைப் பார்த்து என்ன செய்யப்போறீங்க? எனக்கு டைரக்ஷனெல்லாம் தெரியாது. ஏதோ ஸ்கிரிப்ட் பண்ணுவேன். டிராமா வருது. எழுதினதை ஜனங்க ரசிச்சதால, வெற்றி பெறச் செய்ததால அதைப் படமாக்கறேன்னு ஏமாந்த புரொடியூசர் முன்வந்திருக்கார். அவருக்காக இந்தப் படமெடுக்கிறேனே தவிர ‘எனக்கு டைரக்ஷன் தெரியும்’ என்பதால் அல்ல. இப்பதான் நானே டைரக்ஷன் கத்துக்கிட்டு வர்றேன்….முகமது பின் துக்ளக் படத்தில்கூட டைரக்ஷன் கற்றுக்கொள்ள முயற்சி என்றுதான் டைட்டிலில் போட்டிருப்பேனே கவனிச்சுருப்பீங்களே….. .ம்ம்ம்?” என்றவர் சிறிதுநேரம் பேசாமல் இருந்தார்.

எங்கே வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்று தவிப்பாக இருந்தது.

“சரி……. தினசரி வந்து கவனிக்கத்தானே போறீங்க? ஓகே. உங்க தலைவிதி அதுன்னா நான் என்ன செய்யமுடியும்? ஒண்ணுமட்டும் கத்துக்கலாம். ஒரு படத்தை எப்படி டைரக்ட் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு வேணும்னா என்னுடைய டைரக்ஷனையும் படமெடுக்கற முறையையும் நீங்க பார்த்துக் கத்துக்கலாம்” என்று அவருக்கேயுரிய பாணியில் முடித்தார்.

இந்த சம்மதம் ஒன்றே போதுமானதாக இருந்தது.

நடிகர் ஸ்ரீகாந்த் (அன்றைக்கு வில்லன் கதாநாயகன் இரண்டு வேடங்களிலும் பிரதானமாக நடித்துக்கொண்டிருந்தவர்) அசோசியேட் இயக்குநர் கௌசிக் என்று தெரிந்த முகங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தனர். சோவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எழுத்தாளர் பரந்தாமனும் செட்டில் இருந்ததால் ஒரு அணுக்கச் சூழல் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தது.

படத்தின் கதாநாயகர் சிவகுமார் என்றும் கதாநாயகி ஜெயலலிதா என்றும் சொல்லப்பட்டிருந்தது. இருவரும் அன்றைய தினம் படப்பிடிப்பில் இல்லை. ஜெயலலிதா நாளை முதல் படப்பிடிப்பிற்கு வருவார் என்றும் சிவகுமார் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் சொன்னார்கள். முதல்நாள் டைரக்டர் விஜயன், ஸ்ரீகாந்த் என்று என்னமோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். சவ சவ என்றிருந்ததால் பெரிதான ஈர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை.
மறுநாளும் அப்படியேதான் போயிற்று.

“ஜெயலலிதா வரவில்லையா?” என்று கேட்டதற்கு “இன்றைக்கு வந்திருக்க வேண்டும். என்னமோ தெரியலை. வரலை. நாளைக்குத்தான் வருவாங்க போலிருக்கு” என்றார்கள்.

அடுத்த நாள் போயிருந்தபோது படப்பிடிப்பில் சிறிது கெடுபிடி அதிகம் இருந்தது. ஜெயலலிதா வந்திருப்பது அப்போதே புரிந்தது. செட்டுக்குள் போக முற்பட்டபோது “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். ஷூட்டிங் போயிட்டிருக்கு. சீன் முடிஞ்சதும் நீங்க உள்ள போகலாம்” என்றார்கள். ஆகவே ஒரு பத்து நிமிடம் காத்திருந்தேன். உள்ளே ஏதோ பாட்டுச் சத்தமும் “ஸ்டார்ட் காமிரா ரெடி ஆக்ஷன்” என்ற குரல்களும் கேட்டவாறு இருந்தன.

சில விஷயங்களையெல்லாம் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும்.

என்னதான் ஜெயலலிதா பற்றி அன்றுமுதலே பெரிதான நல்ல அபிப்பிராயமெல்லாம் இல்லை என்றபோதும் அவரை முதன் முதலாக பார்க்க நேர்ந்த அந்த சந்தர்ப்பம் மறக்க  முடியாதது. 

முதன் முதலில் ஜெயலலிதாவைப் பார்த்த அந்தக் காட்சி இன்னமும் அப்படியே கண் முன்னால் நிற்கிறது.

செட்டுக்குள் நுழைந்த இரண்டாவது நிமிடம் மறுபடியும் விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்கும் இருட்டு. இப்போது கும்மிருட்டில் மாடிப்பட செட்டின் வாசலுக்கு மட்டும் விளக்கு வெளிச்சம் பாய்ச்சப்பட்டது.

பாடல் ஆரம்பித்தது.

திரைச்சீலையை விலக்கிக்கொண்டு வெளிவந்தார் ஜெயலலிதா.

அவர் கைகளில் ஒரு மெழுகுத் திரி.

இப்போது அவரது முகத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்கிறது.

பாடல் ஓடுகிறது.

‘அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ?’

இருள் சூழ்ந்த மொத்த செட்டில் ஜெயலலிதாவின் உருவத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சப்பட கையில் மெழுகுத் திரியை ஏந்தியபடி பாடிக்கொண்டே இறங்கி வருகிறார். ஜி.கே.வெங்கடேஷின் இசையில் பாடல் வரிகள் மனதில் ஆழமாக இறங்குகின்றன.

‘பாவங்கள் சில செய்து நான் பாவியானேன் பரிகாரம் எங்கே தேவா?’ என்றொரு வரி வருகிறது. இன்னமும் கவனித்ததில் ‘சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன். சித்தார்த்தன் இங்கே யாரேனும் உளரோ?’ என்றெல்லாம் பாடல் வரிகள் போகின்றன.

தனது இன்னொரு கையில் வைத்திருக்கும் மூன்று மெழுகுத்திரிகளையும் மாடிப்படியின் கைப்பிடிச் சுவர்களில் பொருத்தி அதனைக் கையிலிருக்கும் மெழுகுத்திரியால் கொளுத்தியபடி இறங்கி வருகிறார். அதுதான் காட்சி.

இரண்டு மூன்றுதரம் சோவுக்கும், ஒளிப்பதிவாளருக்கும், ஜெயலலிதாவுக்கும் திருப்தி ஏற்படும்வரை இதையே மறுபடி மறுபடி படமாக்குகிறார்கள். அடுத்தடுத்த காட்சிகளும் அந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்பவே படமாக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கான படப்பிடிப்பு முடிகிறது.

ஒரு மணி நேரத்திற்கப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸாக தனக்கான நாற்காலியில் வந்து அமர்கிறார் ஜெயலலிதா. பக்கத்திலுள்ள விஜயன், ஸ்ரீகாந்த் போன்றவர்களிடம் சகஜமாக உரையாட ஆரம்பிக்கிறார்.

ஸ்ரீகாந்த் பக்கத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். ஸ்ரீகாந்திடம் எனக்கு நல்ல பழக்கமிருக்கிறது. இருந்தும் ஏனோ அவர் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப் படுத்தவில்லை. அங்கிருந்த மற்றவர்களும் அறிமுகப்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் ஆர்ட் ராமசாமி வந்து அங்கே அமர்ந்து பேச்சில் கலந்துகொள்கிறார்.

யாரிடமும் வலியச் சென்று அறிமுகம் செய்துகொள்ளும் பழக்கம் இல்லையென்பதனால் நான் பாட்டுக்கு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.

தவிர, அன்றைய தினத்தில் ஜெயலலிதா என்பவர் ஒரு படத்தின் கதாநாயகி. அவ்வளவுதான். வேறெந்த லேபிளும் அவருக்கு அப்போது ஒட்டப்பட்டிருக்கவில்லை.

சாதாரணமாக எத்தனையோ படப்பிடிப்புகளுக்குச் சென்றிருந்தாலும் நடிகைகளிடம் வலியச் சென்று பேச்சுக் கொடுத்ததில்லை. மற்றவர்களிடம் வேண்டுமானால் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசலாமே தவிர நடிகைகளிடம் அப்படிச் சென்று பேசுவது உசிதமாக இருக்காது. மரியாதையான முறையில் அவர்கள் பழக மாட்டார்கள். அதற்கான சூழ்நிலையும் அவர்களுக்கு இல்லை  என்பதனால் நடிகைகளிடம் வலியச்சென்று பேசுவதை இன்றுவரை தவிர்த்தே வந்திருக்கிறேன்- அறிமுகம் செய்துவைக்கப்பட்டால் மட்டுமே அவர்களிடம் பேசுவது என்பது வழக்கம்.
அவர்களிடம் அறிமுகம் செய்து வையுங்களேன் என்றும் யாரிடமும் வேண்டுகோள் விடுத்தும் பழக்கமில்லை.

அதனால் ஜெயலலிதாவிடமும் பேசவில்லை.

இந்த நடைமுறை ஒருநாள் இரண்டு நாட்கள் என்றால் சரியாக இருக்கலாம். தொடர்ந்து இதே நடைமுறை என்பது சங்கடமாக இருந்தது.

ஏனெனில் செட்டில் பேசுவதற்கு சில சமயங்களில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு மட்டுமே காட்சிகள் இருக்கும். படப்பிடிப்பில் அவரைத்தவிர மற்ற எல்லாரும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என்பதனால் பேச்சுத் துணைக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள். சோவும் படத்தை டைரக்ட் பண்ணிக்கொண்டே நடிக்கவும் வேண்டி இருப்பதால் முக்கால்வாசி ராவுத்தர் வேடத்தில் இருப்பாரே தவிர அவரும் செட்டின் உள் வட்டத்தில்தான் இருப்பார்.
ஒற்றை நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்திருக்க பக்கத்தில் போய் உட்கார வழியில்லாமல் வேறு எந்தப்பக்கமாகவாவது நின்றுகொண்டோ அமர்ந்துகொண்டோ இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பல நாட்கள் இப்படியே இருந்தன.

ஏழெட்டு நாட்கள் இப்படியே சென்ற பின்னர் ஒரே ஒரு நாள் அவரிடமிருந்து ஒரு சின்ன அறிமுகப் புன்னகைக் கிடைத்தது. அவ்வளவுதான். உடனடியாகக் கையிலிருந்த ஆங்கில நாவலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். நானும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இன்னொரு நாள் படப்பிடிப்புக்குச் சென்றபோது படப்பிடிப்புத் தளம் வெறிச்சோடிக் கிடந்தது. யாரும் இருக்கவில்லை.

திடீரென்று எங்கிருந்தோ வந்தார் ஆர்ட் ராமசாமி. “என்ன பார்க்கறீங்க? இன்னைக்கு அவுட்டோர் ஷூட்டிங். சிவகுமார் வந்திருக்கார். அவருடன் இந்த சங்கராபரணம் நடிகை மஞ்சுபார்கவி இருக்கு பாருங்க அவங்களோடெய தங்கச்சி சுனந்தி பார்கவின்னு ஒரு பொண்ணு. அதுதான் சிவகுமாருக்கு காதல் ஜோடி. அந்தப் பொண்ணுடன் பாடல் காட்சி…… அல்சூர் ஏரி, லால்பாக் இம்மாதிரி இடங்கள்ள ஷூட்டிங். நமக்கு ஒண்ணும் வேலை இல்லை. உட்காருங்க சாவகாசமாப் பேசிட்டிருக்கலாம்” என்றார்.

“ஜெயலலிதாவுக்கு ஷூட்டிங் இல்லையா?” என்றேன்.

“இல்லை. அவங்களுக்கான வக்கீல் சிவகுமார். ஆனா ஜோடி கிடையாது. ஜெயலலிதா இன்னைக்கு ரெஸ்ட்லதான் இருக்காங்க. அசோகாவுலதான் இருக்காங்க. பார்க்கணுமா என்ன?” என்றார்.

“இல்லை. வேணாம்” என்று அவசரமாக மறுத்தேன். (பின்னர் இதனை பிலிமாலயா வல்லபனிடம் சொன்னபோது “அடாடா அவரையும் கூட்டிட்டுப் போய் பேட்டி எடுத்திருக்கலாமே சார், அவங்க இன்டெலிஜெண்ட் லேடியாச்சே. பிலிமாலயாவில் வித்தியாசமான ஒரு பேட்டியாகச் செய்திருக்கலாமே” என்றார்.)

இப்படிச் சில நாட்கள் ஓடின.

ஒரு ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புக்குச் சென்றிருந்தபோது பக்கத்திலிருந்த இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடக்கிறது அங்கே செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். அசோகன் எல்லாம் பங்கேற்ற படப்பிடிப்பாக அது இருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டும் இல்லையா?

அப்படி இந்தப் படப்பிடிப்பு விசிட்டுக்கும் ஒரு முடிவு வந்தது. “அனேகமாய் நாளையோட இங்கு படப்பிடிப்பு முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். நாளை மாலையே எல்லாரும் சென்னைக்குப் போறோம். உங்களுக்கு எதுவும் பலன் இருந்ததா?” என்று கரிசனத்தோடு வினவினார் ஆர்ட் ராமசாமி.

“நிச்சயம் பலன் இருந்தது. நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது” என்றேன். “நாளைக்கு வாங்க பேசுவோம்” என்று சொல்லி அவர் பணியைப் பார்க்கப்போனார்.

அடுத்த நாள் படப்பிடிப்புத் தளத்திற்குப் போனபோது வெளி கேட்டிலேயே கெடுபிடி இருந்தது. படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியே ஓடுபாதையில் சில மாறுதல்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே வெளியிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிந்தது.

அன்றைய தினம் என்னுடன் புகைப்பட நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ண மூர்த்தியும் வந்திருந்தார். உள்ளே சில காட்சிகள் எடுத்து முடித்தார்கள். அவை முடித்தவுடன் “வெளில ரெடியா வெளில போலாமா?” என்று கேட்டார் சோ.

“எல்லாம் தயார்” என்றார்கள்.

“ம்ம்ம்.. இப்ப படப்பிடிப்பு தளத்துல இருக்கற எல்லாரையும் வெளில அனுப்பு. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒருத்தரும் இருக்கக்கூடாது. யூனிட்லகூட எல்லாரும் வேணாம். கிளைமாக்ஸ் எடுக்கப்போறோம். கேமிரா மேன், அசோசியேட், ஆர்ட்டிஸ்ட் தவிர வேடிக்கைப் பார்க்கறவங்க யாரும் வேணாம். எல்லாரையும் கிளியர் பண்ணு” என்றார் சோ.

இம்மாதிரியான நிலைமை படப்பிடிப்புகளில் சகஜம். பொதுவாக நெருக்கமான காதல் காட்சிகள், கதாநாயகிகள் குளிப்பது, மற்றும் படுக்கை அறைக் காட்சிகள் போன்ற காட்சிகளை எல்லாரையும் அனுப்பிவிட்டு நடிகர்கள் (பெரும்பாலும் நடிகைகள்தான்) ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர்கள் மட்டுமே இருந்து ஷூட் பண்ணுவார்கள் என்பது தெரிந்த விஷயம். எதற்கு வம்பு நாமே வெளியேறி விடுவோமே என்று செட்டை விட்டு வெளியில் வந்து படப்பிடிப்பு இல்லாத இடம் என்பதாகப் பார்த்து ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து நானும் நண்பரும் நின்று கொண்டோம்.
வெளியில் வந்த சோ ஏற்பாடு செய்துவைத்திருந்த இடத்தைப் பார்த்துத் திருப்தி இல்லாதவராக இன்னமும் சற்று மேற்புறம் வந்து நின்று “கேமராவை இங்கே கொண்டு வாப்பா” என்றார்.

அந்த இடம் நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு மிகப்பக்கத்தில் இருந்தது.

உதவியாளர் வந்து எங்களை அப்புறப்படுத்த முயல “அவங்க இருந்துட்டுப் போகட்டும்” என்று சொல்லிவிட்டார் சோ.

எனவே நாங்கள் அங்கேயே நின்று கொண்டோம்.

அந்தக் கோணமும் சரிவராமல் ஒரு பத்தடி முன்னே போய் “இங்கே வை காமிராவை” என்றார் சோ. காமிரா இடம் மாற்றப்பட்டது. எதிரிலேயே ஜெயலலிதாவைப் படுத்துக்கொள்ளச் சொன்னார். 

மல்லாந்து படுத்துக்கொண்டார் ஜெயலலிதா. தரையில்தான்.

ஸ்ரீகாந்த் ஜெயலலிதாவைக் கத்தியால் குத்திக் கொல்வதாகக் காட்சி.

முதல் சில காட்சிகள் எடுத்து முடித்ததும் ஜெயலலிதாவின் வெள்ளைப் புடவையில் மார்பிலெல்லாம் சிகப்புச் சாயம் பூசி அடுத்த காட்சியை எடுத்தார்கள். கத்தியால் குத்துவது, ஜெயலலிதா திமிறுவது, ரத்தம் பெருகுவது, கடைசியில் இறந்து போவது  என்றெல்லாம் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.

எல்லாமே சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு டேக் தான். எந்தக் காட்சிக்கும் அடுத்த டேக்கே இல்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் முடிந்தன.

முடிந்ததும் “காமிராவை உள்ள ஷிப்ட் பண்ணு. ஸ்ரீகாந்துக்கு சில ஷாட்ஸ் எடுக்கணும்” என்றவர் ஜெயலலிதாவைப் பார்த்து “ஓகே. தாங்ஸ். நீ போகலாம்” என்றார்.

படப்பிடிப்புக் குழுவினர் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவிடம் வணக்கம் கூறி விடை பெற்று செட்டுக்குள்ளே சென்றவண்ணம் இருந்தனர்.

நாங்களும் முறைப்படி செட்டுக்குள்ளே போகவேண்டும். சரி, அதுதான் ஜெயலலிதா புறப்படுகிறாரே அவர் சென்றபின்னர் செல்லலாம் என்று அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தோம். 

இரண்டொருவர் மட்டும் ஜெயலலிதாவிடம் பேசியபடி நின்றிருந்தனர். புரடக்ஷன் மேனேஜர் எனப்படுபவர் அழைக்கப்பட்டார். அவரிடம் பேசிய ஜெயலலிதா “எல்லா workersஐயும் கூப்பிடுங்க” என்றார்.


அந்த படத்தில் பணிபுரிந்த அத்தனைத் தொழிலாளர்களும் வரவழைக்கப்பட்டனர். வந்தவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக நின்றனர். ஒரு முப்பது முப்பத்தைந்து பேர் இருந்திருக்கலாம்.

இப்போது அவரது உதவியாளர் (மேக்கப் டச்அப் உமனாகப் பணிபுரிந்தவர்) தன்னிடம் இருந்த கைப்பையைத் திறந்து புத்தம் புதிய நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்து ஜெயலலிதாவிடம் நீட்டினார். நாங்கள் பேசாமல் எங்களுடைய இடத்தில் நின்று கவனித்துக்கொண்டிருந்தோம்.

அதனைப் பெற்றுக்கொண்ட ஜெயலலிதா அதிலிருந்து மூன்று மூன்று தாள்கள் உருவி ஒவ்வொருவரிடமும் தந்து மானசிகமாக கைகூப்பி வணங்கினார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மறுபடி வணக்கம் செலுத்திவிட்டு தங்கள் பணியை கவனிக்க செட்டுக்குள்ளே சென்று கொண்டே இருந்தனர்.

இப்படி அத்தனைப் பேருக்கும் நடந்தது.

ஒவ்வொருவருக்கும் மூன்று ரூபாய் நோட்டுக்கள்.

இந்த முன்னூறு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை.

நானும் நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் வியப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்.

ஆயிற்று.

எல்லாரிடமும் பணம் தந்து வணங்கிவிட்டு எல்லாரும் உள்ளே செல்வதைப் பார்த்தபடி நின்றிருந்த ஜெயலலிதா தம்மைச் சுற்றி நின்றிருந்த ஒரு சில ஆட்களிடமும் விடை பெற்றுக்கொண்டார்.
இந்தச் சமயத்தில் அவரை ஏற்றிச்செல்ல பளபளவென்ற அம்பாசிடர் காரும் அவரது பக்கத்தில் வந்து நின்றது.

காரில் ஏறிக்கொண்டு போகப்போகிறார் என்று நாங்கள் நினைத்தபடி நின்றிருந்தபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஆமாம்……………… காரில் ஏறிச்செல்லாமல் –

ஒரு சின்னப் புன்னகையுடன் –

எங்களை நோக்கி வந்தார் ஜெயலலிதா.

எங்கள் அருகில் வந்தவர் எங்களைப் பார்த்துக் கையெடுத்து வணக்கம் சொல்லி “வருகிறேன்”  என்றார்.

இதனைச் சற்றும் எதிர்பாராமல் நின்றிருந்தோம் என்பதால் எனக்கு உடம்பு சிலிர்த்தது. 

சுதாரித்துக்கொண்டு நானும் கைகூப்பி வணங்கி “போய் வாங்க” என்றோம்.

நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் வணங்கி “போய் வாங்க” என்றார்.

அவ்வளவுதான்.

சற்று தூரத்தில் நின்றிருந்த காரில் ஏறிக்கொண்டு கிளம்பிப் போனார் அவர்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

அதன்பிறகு ஜெயலலிதாவை நேரில் ‘பார்க்க’ முடிந்தது சிவகுமாரின் மகள் பிருந்தா திருமணத்திலும், சூர்யா திருமணத்திலும்தான். ‘பார்க்கத்தான்’ முடிந்ததே தவிர அருகில் சென்று பேசவோ அறிமுகப்படுத்திக்கொள்ளவோ முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் செய்யவில்லை.

ஆனால் இப்போது அவருடன் நிறைய லேபிள்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.

பிருந்தா திருமணத்தின்போது ‘புரட்சித்தலைவி, மாண்புமிகு முதல்வர், அதிமுகவின் பொதுச்செயலாளர்’ என்ற லேபிள்களுடன் யாராலும் அணுக முடியாதவர், யாரையும் நெருங்கவிடாதவர்  என்பன போன்ற லேபிள்களும் இருந்தன.

பிருந்தா திருமணத்திற்கு விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிட்டார் அவர். அத்தனைக் கெடுபிடிகளும் இருக்கவில்லை. அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு நான்கு நாற்காலிகள் தள்ளித்தான் அமர்ந்திருந்தேனே தவிர அவரைச் சந்திக்கவோ, பேசவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அதற்கான விருப்பமும் இருக்கவில்லை.

ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்து தனக்கான இரும்பு வேலிகளைத் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்டதும், அதை இந்த சமூகம் அனுமதித்துக் கொண்டாடியதும், எப்பேர்ப்பட்ட  கொம்பனாக இருந்தாலும் ‘அம்மாவை’ப் பார்க்கமுடியாது என்ற நிலைமை உருவாகப்பட்டதும், மந்திரிகளும் மிகப்பெரிய மனிதர்களும் அவர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்ததும், அவர் பறந்துவரும் ஹெலிகாப்டர் திசை நோக்கிக் கும்பிட்டதும், கீழே காரில் பயணம் செய்யும்போது கார் டயரைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்ட அமைச்சர் பெருமக்களையும் பார்த்தபோது எனக்கு பெங்களூர் சாமுண்டேஸ்வரி ஸ்டுடியோவில் அன்றைக்கு நிகழ்ந்த இந்த கண்ணியம் மிக்க காட்சிகள்தாம் ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வரும்.
இங்கே இன்னொன்றையும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் என்னை மட்டும்தான் கைகூப்பி வணங்கினார் என்று சொல்லவில்லை. அந்த செட்டில் பணிபுரிந்த அத்தனைத் தொழிலாளர்களையும் கையெடுத்துக் கும்பிட்டுத்தான் விடைபெற்றுக்கொண்டார்
தமிழ்ப் பண்பாட்டுப் பாணியில், அதனுடைய தொடர்ச்சியோ நீட்சியோதான் எனக்குக் கிடைத்த அனுபவமும்.

ஆனால் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஒரே செட்டில் இருந்தும் ‘பேசாமல் கண்டுகொள்ளாமல்’ இருந்த ஒருத்தனையும் மதித்து அருகில் வந்து புன்னகையுடன் அவர் விடைபெற்றுச் சென்ற காட்சிதான் என்னிடம் இன்னமும் பதிந்திருக்கிறது. அவரது பண்பு நலன் குறித்து ‘இந்தப் பார்வையில்’ எனக்கு அவர் மீது மரியாதையும் உண்டு. அதற்கான குற்ற உணர்ச்சியும் என்னிடம் உண்டு.

ஆனால் அதற்குப் பின்னான அவரது அரசியல் செயல்பாடுகளையும் அவரது அரசியல் அணுகுமுறைகளையும், அவர் கடைப்பிடித்த அதிகார மமதைகளையும் என்னால் ஏற்கமுடியவில்லை. அவற்றிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டம்தான் எனக்கு.

ஒன்று மட்டும் புரிகிறது;

இப்போது மக்கள் அறிந்த ஜெயலலிதா என்பவரின் பிம்பம் புரட்சித் தலைவிக்கும் தமிழக முதல்வருக்கும் ஆனது.

நான் அன்றைக்கு சந்தித்த ஜெயலலிதாவின் பிம்பம் ஒரு எளிய பெண்மணிக்கானது.

15 comments :

ஜோதிஜி said...

இந்தப் பதிவுக்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

உங்களுக்கு இருக்கும் திரைப்பட அனுபவங்களை வைத்து பல கட்டுரைகள் நீங்கள் எழுதலாம். படிக்க ஆரம்பித்தேன். முடிந்தபோதுதான் அடடா இத்தனை சீக்கிரத்தில் முடித்துவிட்டாரே என்ற எண்ணம் வந்தது. நூல் போல செல்கிறது உங்கள் எழுத்து. அபாரம்.

பொதுவாக ஜெ வைப் பற்றி பல தவறான அப்பிராயங்கள் உண்டு. அவர் ஆண்களை மதிக்காதவர். திமிர் பிடித்தவர்.... இது போன்று.. ஒருவிதத்தில் அவர் ஒரு மிக எளிமையான நடிகை. எம் ஜி ஆர் அவரை வைத்து அரசியல் காய்கள் நகர்த்தவில்லை என்றால் அவர் வாழ்க்கை வெகு சாதாரணமாகவே இருந்திருக்கும்.

புதிர் போல சிலரது வாழ்க்கை மாறிவிடுகிறது. ஜெ அதற்கு சரியான உதாரணம். உங்கள் பதிவை படிக்கும்போது எனக்கு தோன்றிய எண்ணம் "நல்லா இருந்திருக்க வேண்டியவர்." என்பதுதான்.

அருமையான பதிவு. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அமுதவன் பாணி எழுத்து. பாராட்டுக்கள்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\இந்தப் பதிவுக்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை.\\

என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்பதே ஒரு கருத்தா? ஏதாவது சொல்லியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

Amudhavan said...

காரிகன் said...
உங்களுக்கு இருக்கும் திரைப்பட அனுபவங்களை வைத்து பல கட்டுரைகள் நீங்கள் எழுதலாம். படிக்க ஆரம்பித்தேன். முடிந்தபோதுதான் அடடா இத்தனை சீக்கிரத்தில் முடித்துவிட்டாரே என்ற எண்ணம் வந்தது. நூல் போல செல்கிறது உங்கள் எழுத்து. அபாரம்.

பொதுவாக ஜெ வைப் பற்றி பல தவறான அப்பிராயங்கள் உண்டு. அவர் ஆண்களை மதிக்காதவர். திமிர் பிடித்தவர்.... இது போன்று.. ஒருவிதத்தில் அவர் ஒரு மிக எளிமையான நடிகை. எம் ஜி ஆர் அவரை வைத்து அரசியல் காய்கள் நகர்த்தவில்லை என்றால் அவர் வாழ்க்கை வெகு சாதாரணமாகவே இருந்திருக்கும்.

புதிர் போல சிலரது வாழ்க்கை மாறிவிடுகிறது. ஜெ அதற்கு சரியான உதாரணம். உங்கள் பதிவை படிக்கும்போது எனக்கு தோன்றிய எண்ணம் "நல்லா இருந்திருக்க வேண்டியவர்." என்பதுதான்.

அருமையான பதிவு. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அமுதவன் பாணி எழுத்து. பாராட்டுக்கள்.

வாருங்கள் காரிகன், தங்கள் எண்ணப்பதிவிற்கு நன்றி. பாருங்கள், பல்வேறு பணிகளுக்கிடையில் இன்னமும் விசுவநாதன் பற்றிய தங்களின் பதிவுக்கு பதில் எழுதவேண்டும் என்ற எண்ணம் மனதில் அப்படியே இருக்கிறதே தவிர அதனை செயலாற்றுவதற்கான நேரம்தான் அமையவில்லை. தங்களின் அன்பிற்கு என் நன்றி.

Peppin said...

எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருவரை பற்றி பிடித்தக்கட்டுரை அமுதவன் சார்!

Anonymous said...

ஒரு குற்றவாளியை சந்தித்ததற்கு இவ்வளவு அலட்டலா? அராஜகத்தை ஆளுமைன்னு கொண்டாடும்பொழுது இதுவும் பெருமையாத்தான் இருக்கும்போல!

Amudhavan said...

Peppin said...

\\எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருவரை பற்றி பிடித்தக்கட்டுரை அமுதவன் சார்!\\

ஒரு வரியில் நச்சென்று உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

Amudhavan said...

Anonymous said...
\\ஒரு குற்றவாளியை சந்தித்ததற்கு இவ்வளவு அலட்டலா? அராஜகத்தை ஆளுமைன்னு கொண்டாடும்பொழுது இதுவும் பெருமையாத்தான் இருக்கும்போல!\\

இங்கே எது அலட்டல் என்பது புரியவில்லை. குற்றவாளியை அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே எதிர்த்த கருத்துக்களைத்தான் நான் அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது அவரை மிகத்தீவிரமாக எதிர்ப்பவர்களிடம் பேசவேண்டியதை நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

ஜெயலலிதாவை மய்யப்படுத்தி,அன்றைய சினிமா படபிடிப்பை பார்த்த அனுபவத்தினை, எழுத்தாளர்களுக்கே உரிய ‘சஸ்பென்ஸ்’ நடையில் சுவாரஸ்யமாக சொன்னதற்கு நன்றி.

சார்லஸ் said...

சார்

ஒரு அழகான சிறுகதை படித்து முடித்த திருப்தி ஏற்பட்டது. ஜெயலலிதாவைப் பற்றி என்னென்னவோ பிம்பங்கள் எனக்குள் இருந்தாலும் இந்தப் பதிவு ஒரு நல்ல பிம்பத்தையும் உண்டாக்குகிறது. மனிதர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வயதுகளில் புதிய பரிமாணங்களாவும் புதிய தோரணைகளைச் சூடியவர்களாகவும் மாறிப் போய் விடுவார்கள் என்பதற்கு உங்களின் பதிவு ஒரு சாட்சி .

பணம், பதவி , பகட்டு , புகழ் , செல்வாக்கு எல்லாம் ஒருசேரும்போது அதை எவ்வாறு கொள்ள வேண்டும் என்ற பக்குவம் இல்லாவிடில் மதிக்கப்படும் நிலையிலிருந்து சரிந்து போவார்கள் என்பது பதிவின் இறுதி பகுதியில் தெரிகிறது.


' அந்த' கும்பலோடு சேர்ந்திருக்காவிட்டால், ஒருவேளை ஜெயலலிதா அவர்கள் , கால காலமாய் தமிழக மக்களால் பேசப்படும் பெருந்தலைவராக தோன்றுமளவிற்கு ஒளிர்ந்திருப்பாரோ என்னவோ ?!
கூடா நட்பு கேடாய் முடிந்தது.

Arul Jeeva said...

மனிதனின் மறுபக்கம் எப்படி பிரதிபலிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது தங்கள் பதிவு.
ஜெ.வின் இந்த மாற்றத்திற்கு எதனை முன்னிலைப்படுத்துவது?.பதவி வரும்போது பணிவு வேண்டும் என்பதை மறந்த தா,கூடா நட்பு கேடாய் முடிந்த தா, காலத்தின் கட்டாயமா.
ஒருவன் தடம் மாறுவதற்கு அவனது செயல்கள் ஒருபுறமிருந்தாலும் ,அவனை வழிநடத்த,ஆலோசனை வழங்கி ஆறுதல் படுத்த யாருமற்ற சூழல் ஏற்படுவதும் முக்கிய காரணமென எங்கோ படித்ததாக ஞாபகம்.
நரியை ஆடு என்று நம்பியதன் விளைவு இரும்புப் பெண்மணி எனப் பலரால் போற்றப்பட்டவர் இன்னுயிரைத் தாரை வார்த்துக் கொடுத்து இரும்புக் கம்பிகளுக்குப் பின் நிற்கும் நிலையைத் தவிர்த்துக் கொண்டார் போலும்.உயிரோடிக்கும் போது கூனிகுருகி கும்பிடு போட்டு ஆதாயம் தேடிய வேடதாரிகள் தற்போது சமாதியில் நெடுஞ்சாண்கிடையாக !

Arul Jeeva said...

மனிதனின் மறுபக்கம் எப்படி பிரதிபலிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது தங்கள் பதிவு.
ஜெ.வின் இந்த மாற்றத்திற்கு எதனை முன்னிலைப்படுத்துவது?.பதவி வரும்போது பணிவு வேண்டும் என்பதை மறந்த தா,கூடா நட்பு கேடாய் முடிந்த தா, காலத்தின் கட்டாயமா.
ஒருவன் தடம் மாறுவதற்கு அவனது செயல்கள் ஒருபுறமிருந்தாலும் ,அவனை வழிநடத்த,ஆலோசனை வழங்கி ஆறுதல் படுத்த யாருமற்ற சூழல் ஏற்படுவதும் முக்கிய காரணமென எங்கோ படித்ததாக ஞாபகம்.
நரியை ஆடு என்று நம்பியதன் விளைவு இரும்புப் பெண்மணி எனப் பலரால் போற்றப்பட்டவர் இன்னுயிரைத் தாரை வார்த்துக் கொடுத்து இரும்புக் கம்பிகளுக்குப் பின் நிற்கும் நிலையைத் தவிர்த்துக் கொண்டார் போலும்.உயிரோடிக்கும் போது கூனிகுருகி கும்பிடு போட்டு ஆதாயம் தேடிய வேடதாரிகள் தற்போது சமாதியில் நெடுஞ்சாண்கிடையாக !

Jayadev Das said...

\\அவர் அரசியலுக்குள் நுழைந்து தனக்கான இரும்பு வேலிகளைத் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்டது\\

இது மன்னார்குடி கொள்ளைக்கு கும்பல் போட்டது.

\\
* எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் ‘அம்மாவை’ப் பார்க்கமுடியாது என்ற நிலைமை

* மந்திரிகளும் மிகப்பெரிய மனிதர்களும் அவர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்தது

* அவர் பறந்துவரும் ஹெலிகாப்டர் திசை நோக்கிக் கும்பிட்டது

* கீழே காரில் பயணம் செய்யும்போது அமைச்சர் பெருமக்கள் கார் டயரைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டது \\

இது அத்தனையுமே மக்கள் மனதில் அந்தம்மா ஒருத்தரை நம்பியே மத்த எல்லோரும் இருக்காங்க, அவர் அதிகாரத்துக்கு கீழே தான் மற்ற எவரும் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்காத தானே தவிர, அதனால் ஜெவுக்கு எந்த லாபமோ, அல்லது விழுந்தவர்களுக்கு மனதில் உண்மையான மரியாதை இருந்ததாகவோ தெரியவில்லை.

Information said...

நன்று.

Amudhavan said...

நன்றி நண்பரே.

Post a Comment