Saturday, July 22, 2017

சிவாஜியும் கண்ணதாசனும் தமிழ்ச் சமூகமும்......

நாகேஷ் மிகச்சிறந்த நடிகர். தேர்ந்த திறமை மிக்கவர். நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு குணச்சித்திர நடிப்பிலும், நடனக் காட்சிகளிலும்கூட வெகு நேர்த்தியாகத் தம்மை நிரூபிக்கக் கூடியவர். அவருக்கென்று சில லிமிட்டேஷன்கள் உண்டு. அந்த வரையறைக்குள் அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை மிகச்சிறப்பாகச் செய்து எவரையும் அசத்திவிடக்கூடிய அளவு ஆற்றல் மிக்கவர். ஒரு தருமியாகவும், மாதுவாகவும், சுந்தரமாகவும், வைத்தியாகவும், ஒரு ஜோசப்பாகவும் அவரை உச்சத்தில் வைத்துப் பார்க்கமுடியுமே தவிர -
குணசேகரனாகவோ, பிரஸ்டிஜ் பத்மனாபனாகவோ, சிவனாகவோ, திருமாலாகவோ, கர்ணனாகவோ, பாலும் பழமும், பாசமலர், உயர்ந்த மனிதன், அந்த நாள், பலேபாண்டியா, தெய்வமகன், உத்தம புத்திரன், புதிய பறவை, திரும்பிப் பார், மனோகரா, நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், ஞான ஒளி, தங்கப்பதக்கம், வ.உ.சி, கட்டபொம்மன், என்ற பாத்திரங்களிலோ வைத்துப் பார்க்க முடியாது, கூடாது.
சிவாஜி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிம்பம் என்பது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தாலோ, சில பாத்திரங்களாலோ கட்டமைக்கப்பட்ட ஒன்று அல்ல. தோற்றம், அழகு, திறன், உடலிலுள்ள கம்பீரம், குரலில் உள்ள கம்பீரம், உடல் மொழியிலுள்ள நேர்த்தி, நடையிலுள்ள நுணுக்கம், பேசும் திறனிலுள்ள நுணுக்கம், உதட்டசைவு, கண்ணசைவு இவை எல்லாவற்றையும் தாண்டிய தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்ட பிம்பம்தான் சிவாஜியே தவிர குறிப்பிட்ட சில பாத்திரங்களில் நன்றாக நடித்திருப்பவர் என்ற பெருமை மட்டுமே அவருக்கு உரித்தானது இல்லை...............!
இப்போது எதற்காக இவற்றையெல்லாம் சொல்ல நேர்கிறது எனில் நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேலையே எங்காவது நாகேஷ் பற்றிய பதிவுகள் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருப்பதுதான். நாகேஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்ற பதிவைப் பார்த்துவிட்டால் சர்வாங்கமும் மகிழ்ச்சிப் பொங்கிப் பூரித்துவிடும் இவர்களுக்கு. உடனடியாக ஒரு 'கருத்து' எழுதுவார்கள். என்னவென்று தெரியுமா?

'நாகேஷ் ஒரு அற்புதமான நடிகர். பிறவி நடிகர். அவரை விட்டால் சிவாஜியையே 'தூக்கிச் சாப்பிட்டுவிட்டு'ப் போய்விடுவார்' என்ற பாணியில் அந்தக் 'கருத்து' இருக்கும். (இம்மாதிரியான கருத்துக்களை எல்லாம் நாகேஷே எப்படிப் புறம் தள்ளுவார் என்பது இந்த மூடர்களுக்குத் தெரியாது. 'சிவாஜியெல்லாம் நாம் அன்னாந்து பார்க்கக்கூடிய இமயம். அவரெல்லாம் மனிதரே கிடையாது. இறைவன் அனுப்பிய வரம்' என்பது நாகேஷின் கூற்று.) நாகேஷுக்கு மட்டுமல்ல, இதே 'கருத்தை' நாகேஷ் என்ற பெயரை மட்டும் எடுத்துவிட்டு வேறு சிலர் பற்றிய 'கமெண்டுகளிலும்' வைப்பார்கள். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்கராவ் என்று யாரைப்பற்றி 'சிறப்பித்து'ச் சொல்ல வேண்டுமென்றாலும் இவர்களுக்கு இந்த ஒரே Pattern தான்.
ஆக, இவர்களுடைய நோக்கமெல்லாம் நாகேஷை, எம்.ஆர்.ராதாவை, எஸ்.வி.சுப்பையாவை, ரங்கராவைப் புகழ்வதோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல. மாறாக -
சிவாஜியை 'சிறுமைப் படுத்துவது'.
இப்படிக் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் சிவாஜி மீது மண்ணை, கல்லை, சேற்றை வாரி இறைத்துவிட்டதாக இவர்களுக்குள் ஒரு சிறிய சந்தோஷம் கிளம்புமே.................. அதுதான் முக்கியம். அது போதும் இவர்களுக்கு.
இம்மாதிரியான விவாதங்கள் வரும்போது சிவாஜியைப் பற்றி, அவரது பல்வேறு சிறப்பான தகுதிகள் பற்றிக் கூறுகிறோம் இல்லையா? கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் இவர்களுக்குக் கையில் கிடைக்கும் இன்னொரு அஸ்திரம் - சிவாஜியின் வசன உச்சரிப்பு............. தமிழ் உச்சரிப்பு.
உடனடியாக 'இவர்களுடைய' தலையில் பதில் வந்து துருத்திக்கொண்டு நின்றுவிடும். "ஏன், எஸ்.எஸ் ராஜேந்திரன் தமிழை அழகாக உச்சரிப்பவர் இல்லையா?"என்று கேட்டுவிட்டு வேலை முடிந்ததென்று கிளம்பிவிடுவார்கள். (பாருங்கள்..... ஒரு மனிதரின் சிறப்புக்களைக் 'குறைக்க' இவர்கள் கையெலெடுக்கும் நபர்கள் எத்தனைப் பேர் என்று. நாகேஷ், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ், இன்றைக்குக் கமலஹாசன், அப்புறம் கடைசியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன்)
அட, புத்திக் கொழுத்த சுப்பன்களே உங்களுக்கு அறிவே கிடையாதா? (இதில் மனோரமாவைப் 'பொம்பளை சிவாஜி' என்று ஒரு பாராட்டுக் கூட்டத்தில் சோ சொல்லிவைக்க, அதைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். -அப்படியானால் நடிகையர் திலகம் என்றழைக்கப்பட்ட சாவித்திரி என்ன ஆனார்? என்பதற்கு சோ தான் பதில் சொல்ல வேண்டும்.)
ஆயிற்றா?
விஷயம் இத்தோடு முடியவில்லை. இன்னமும் இருக்கிறது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தமிழ்த் திரை இசைக்குக் கிடைத்த மகத்தான கவிஞர்களில் ஒருவர். அவருக்கான பாராட்டுக் கட்டுரை எங்காவது வருகிறதா? மூக்கு வேர்த்துவிடும் சிலருக்கு. உடனே தயாராகிவிடுவார்கள். எதற்கு...................?
கொஞ்சம் பொறுங்கள்.
மெட்டுக்கு ஏற்பப் பாடல் புனைவதிலும், வெகுஜன ரசனைக்கேற்ப விருந்து வைப்பதிலும் தம்மைப் பட்டைத் தீட்டிக்கொண்டு ஜொலித்தவர் வாலி. வாலி பற்றிய சிறப்புக் கட்டுரைகள் எங்காவது வருகின்றனவா? அது போதும் இவர்களுக்கு. ஆனந்தமாய்க் கிளம்பிவிடுவார்கள். எதற்கு?.............
கொஞ்சம் பொறுங்கள்.
மாயவநாதன் தண்ணிலவு தேனிறைக்க போன்ற அழகிய தமிழ் வரிகள் மூலம் பாடல்களைச் செழுமைப் படுத்தியவரா?
புதுக்கவிதைப் பாணியைத் திரை இசையில் விதைக்க வந்தவரா வைரமுத்து? அது போதும். மூக்கு வேர்த்த பட்டாளங்கள் கிளம்பிவிடும். '
பட்டுக்கோட்டை பிரமாதமான பாட்டுக்கோட்டை. மாயவநாதன் சொல்லாற்றல் முகிந்த கவிஞன்' என்ற பாணியில் `கருத்துரைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்?
அவர்களின் நோக்கம் பட்டுக்கோட்டையாரையோ, வாலியையோ, மாயவநாதனையோ, வைரமுத்துவையோ, புகழ்வதோ தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல.
பின் என்ன? 'அவர்களுடைய கருத்துக்கள்' எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான் ....................
'ஒரே பாடலில் கண்ணதாசனையே மிஞ்சிவிட்டார் பட்டுக்கோட்டையார்'
'வாலி ஒன்றும் குறைந்தவர் அல்ல; கண்ணதாசனுக்கு சமமானவர்தான் வாலி. என்னவொன்று, கண்ணதாசன் முன்னரே வந்துவிட்டார். வாலி சற்று பின்னால் வந்தார் அவ்வளவுதான்.'
'மாயவநாதனுக்குப் போதுமான வாய்ப்புகள் மட்டும் கிடைத்திருந்தால் கண்ணதாசன் ஒன்றுமே இல்லாமல் போயிருப்பார்.'
'முதல் மரியாதை படப்பாடல்களை கண்ணதாசனுக்கு சமமாக எழுதி இருக்கிறார் வைரமுத்து.'
இப்படித்தான். இதுதான் அவர்கள் போடக்கூடிய 'கருத்துக்கள்'. இங்கேயும் பாருங்கள், கண்ணதாசன் என்ற ஒரு மனிதருக்காக இவர்கள் நான்கைந்து பேர்களைத் தோளில் தூக்கிச் சுமந்து வந்து இறக்க வேண்டியிருக்கிறது.
இப்படிக் 'கருத்து'க் கூறும் இந்தக் கூட்டத்தை நாம் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தோமானால் இவர்கள் அத்தனைப் பேரும் - ஆமாம் அத்தனைப் பேரும் - ஒரே புள்ளியிலிருந்து கிளம்பி வந்திருப்பார்கள் என்பதை நம்மால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.
ஆம்.
எம்ஜிஆர் என்பதுதான் அந்த ஒரு புள்ளி.
இது கொஞ்சம் கசக்கும் செய்தி என்றாலும் உண்மை இதுதான்.
'இப்படியெல்லாம்' எழுதுபவர்களின், பேசுபவர்களின் அடிப்படைக்குச் சென்று பாருங்கள். அவர்கள் நேசிக்கும், சுவாசிக்கும் ஒரே கலைஞர் எம்ஜிஆராகத்தான் இருப்பார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தெய்வமாக எம்ஜிஆரை 'வைத்திருப்பவர்கள்' சிவாஜியையும், கண்ணதாசனையும் விலக்கப்பட்ட பட்டியலில்தான் வைக்க விரும்புவார்கள்.
அதன் வெளிப்பாடுகள்தாம் இவ்வளவும்.(சிவாஜியும் எம்ஜிஆரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும்,
கண்ணதாசனுக்கு கடைசிக் காலத்தில் அரசவைக் கவிஞர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர் - என்ற பதில்களையெல்லாம் தூக்கிக்கொண்டு யாரும் ஓடிவர வேண்டாம். அவையெல்லாம் வேறு விவாதங்கள்)
மேற்கண்ட எண்ணம் கொண்டவர்களால்தான் தமிழ்ச்சமூகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் கலையின் அடையாளமாக சிவாஜி சொல்லப்படுகிறாரா? அங்கே வந்து நின்று சிவாஜி மீது சேற்றை இறைத்து அவரை சிறுமைப் படுத்து. ஒன்றுமில்லாமல் ஆக்கு. அல்லது அந்த 'உயரத்தைக்' குறை.
தமிழ்த் திரைப்பாடல்களின் அடையாளமாக கண்ணதாசன் சொல்லப்படுகிறாரா? அந்த அடையாளத்தை நொறுக்கு. ஏதாவது செய்து அழி. 'இளிச்சவாய்த் தமிழன்' அத்தனையையும் கேட்டுக்கொண்டு அடையாளங்கள் இல்லாமல் இருக்க சம்மதிப்பான்.
காலகாலமாய் இங்கே நடந்துகொண்டிருப்பது இதுதான்.
பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ராஜ்குமாரை பொதுவெளியில் விமர்சித்துவிட்டு அவன் உயிருடன் வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது. காரணம் கலையின் அடையாளமாக ராஜ்குமார் இங்கே கொண்டாடப் படுகிறார்.
தமிழன் சிவாஜியைச் சொல்கிறானா?
சிவாஜியா விமர்சித்து கிழித்துத் தூக்கி எறி.
காமராஜரை ஒரு அரசியல் அடையாளமாக மாற்றுவதைத் தமிழன் தொலைத்தான். தொடர்ந்து பாரதியை, பாரதிதாசனை, கண்ணதாசனை இங்கே கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு அடையாளங்களை ஏற்படுத்த விடாமல் தமிழனே தடுத்தான்.
கேட்பதற்கு நாதி இல்லை. இதுதான் தமிழ் இனம்.

24 comments :

ஜோதிஜி said...

வருத்தப்படதேவையில்லை. அங்கீகாரம் என்பது காலத்தை வென்று நிற்பது. இவர்கள் முடிவு செய்வது அல்ல. காலம் தீர்மானிக்கும்.

பிரசன்னா said...

அமுதவன் அவர்களே, நீங்கள் மேற்கண்டவர்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இளையராஜா எனும் ஒரு கலைஞனின் திறமை மீது (அவர் அகங்காரம் பிடித்தவரா, இல்லையா என்பது இருக்கட்டும்) நீங்கள் உங்கள் கட்டுரைகளில் வைத்த விமர்சனங்கள் சரியானவையா? என்று சற்று யோசித்துப் பாருங்கள். தென்னிந்திய திரையுலகில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத 'இடைவெளிகளை அழகாக இட்டு நிரப்பும்' திறமைபெற்ற இளையராஜாவை, கங்க‍ை அமரனின் பிஜிஎம் பற்றிய ஒரு பேட்டியை முன்வைத்து, மிக சாதாரணமாக விமர்சித்தீர்கள். இளையராஜாவைப் பற்றிய உங்களின் அதிகபட்ச மதிப்பீடு 'ஏதோ, அவரையும் ஒரு வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்' என்பதுபோலவே உங்களின் அதிகபட்ச அங்கீகாரம் இருக்கிறது. பல்வேறு இசையமைப்பாளர்களும், இசையை அறிந்தவர்களும் பிரமிக்கும் இளையராஜாவின் இசைப் பற்றிய உங்களின் அங்கீகாரம் நிச்சயம் சரியான ஒன்றாக இருக்க முடியாது. அதில், ஒருவித காழ்ப்புணர்ச்சி தெளிவாகவே தென்படுகிறது. எனவே, இதுபோன்ற பாணியையே மேற்கண்டவர்களும் பின்பற்றுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

Amudhavan said...
பிரசன்னா said...
\\தென்னிந்திய திரையுலகில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத 'இடைவெளிகளை அழகாக இட்டு நிரப்பும்' திறமைபெற்ற இளையராஜாவை\\

பிரசன்னா, முதலில் இதற்கு விளக்கம் தாருங்கள். மற்றவற்றைப் பற்றி நாம் பிறகு பேசலாம்.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களின் பதிவு. என் வருகையும் அப்படியே. இப்போதுதான் படித்தேன். உடனே கருத்து சொல்ல முடியாது என்பதால் சற்று கழித்து என் கருத்தை பதிவு செய்கிறேன்.

ஒரே குறைதான் நீங்கள் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.

Amudhavan said...

Waiting for Prasanna's reply

பிரசன்னா said...

அமுதவன் அவர்களே, இடைவெளிகளை இட்டு நிரப்பும் திறமை என்று நான் சொன்னது அவரின் பிஜிஎம் கோர்ப்பு திறனை முன்வைத்துதான். நீங்கள் அவரின் பாடல்களை எந்தளவிற்கு நுணுக்கமாக ரசித்துக் ‍கேட்டுள்ளீர்கள் என்று தெரியவிைல்லை. பாடகர்களின் குரலையே பெரிதும் நம்பியிருந்த தமிழ் திரையிசையில், இசைக்கருவிகளின் ஆதிக்கம் இவரின் காலத்தில்தான் துவங்கியது. 1965 இந்தி எதிர்ப்பு போரின் வெற்றிக்குப் பின்னரும், தமிழ்நாட்டில் கோலோச்சிய இந்தி இசையை விரட்டும் திறமை இளையராஜாவிற்கு மட்டுமே இருந்தது. கே.வி.மகாதேவன் மற்றும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் பணியும் பாராட்டுக்குரியதே. அவர்கள் அமைத்தது தனி இசை சாம்ராஜ்யம் என்றால், இளையராஜா அமைத்தது ஒரு சிறந்த தனி சாம்ராஜ்யமே. அந்த ஸ்தானத்தை நீங்கள் தர மறுப்பது ஏனோ? ஏதோ, அவரையும் வரிசையில் ஒரு ஓரமாக நிற்க சொல்லலாம் என்பது போலவே உங்களின் விமர்சனங்கள் இருக்கின்றன. தென்னிந்திய திரையுலகில் இளையராஜாவிற்கு இருக்கும் மாபெரும் புகழை நிச்சயம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

அமெரிக்க ஆதிக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் ஆஸ்கார் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் (அவர் தனியான திறமைசாலி என்பது வேறு விஷயம்), ஒரு பேட்டியில் "ஆஸ்காரைவிட இளையராஜா உயர்ந்தவர் என்று சொன்னார். அவரின் பணிவுக்கு அது ஒரு சாட்சி என்றாலும், வேறு யாரையாவது அவரால் சொல்லியிருக்க முடியாது. சொல்லவும் மாட்டார். இளையராஜாவின் இசை சாதனைகளை நுட்பமாக அறிந்தவர் என்ற முறையிலேயே அவர் சொல்லியிருக்கக்கூடும்.

இளையராஜாவின் இசை உங்களை பெரிதும் கவராமல் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. எல்லோருக்கும் எல்லாவிதமான இசையும் பிடிக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இல்லைதான். ஆனால், விமர்சனம் என்று வருகையில், சுயவிருப்பம் குறுக்கிடக்கூடாதல்லவா...? இளையராஜா தமிழ் திரையிசையில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகின் மாபெரும் ஜாம்பவான்..! என்பதற்கு அவருக்கிருக்கும் புகழே சாட்சி..! அவரின் மாபெரும் ரசிகர் பட்டாளமே சாட்சி..! அவரின் ஏராளமான பாடல்களை எடுத்துக்கொணடு, நாம் எப்படி வேண்டுமானாலும் நுணுக்கமாக ஆராய்ந்து விமர்சிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அந்தப் பாடல்களில் உள்ளன. நீங்கள் பிரதானமாக தூக்கிப் பிடிக்கும் பலரும் இளையராஜாவை சிலாகித்துள்ளனர்.

நீங்கள் இளையராஜா குறித்த உங்கள் விமர்சனங்களில் ஒன்றை வைப்பதுண்டு. அதாவது, இளையராஜா மாதிரி வருமா..! என்று சிலாகிப்பவர்களெல்லாம் 1976க்கு முன் வந்த பாடல்களை கேட்காதவர்கள் என்று. அவர்கள் நிச்சயம் கேட்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பிரச்சினை ரசனை அடிப்படையிலானது. இன்று எத்தனையோ பேர், இளையராஜாவிற்கு முந்தைய பாடல்களை சிலாகித்துக் கேட்டுக்கொண்டுள்ளார்கள், எத்தனையோ பேர் (குறிப்பாக இன்றைய தலைமுறையினர்) இளையராஜாவிற்கு பிந்தைய பாடல்களை கேட்டு ரசிக்கின்றனர். அவை ரசனை அடிப்படையிலானவை. ஒருவேளை எதிர்காலத்தில் அவர்களின் ரசனை மாறலாம். ஆனால், விமர்சனம் என்று வரும்போது, ரசனைகளை முன்வைக்க முடியாது. இசையின் தரத்தைதான் முன்வைக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் சிலாகித்து கேட்கிறார்கள் என்பதற்காக, இன்றைய இசையமைப்பாளர்களை இசை விற்பன்னர்கள் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? இளையராஜா தனது இசையில் செய்த சாதனைகள் மிகப்பல. அவற்றைப் பற்றியெல்லாம் உங்கள் அனுபவத்திற்கும் வயதிற்கும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இளையராஜாவின் சில தீவிர ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியில் எதையேனும் பேசியிருக்கலாம். அதற்காக, அதையெல்லாம் எடுத்துக்கொண்டு இளையராஜா சாதாரண வரிசையில் நிற்பதற்கு மட்டுமே தகுதியானவர் என்று நீங்கள் சொல்வதை (கெளரவர்களின் படைத்தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மர், கர்ணனை சாதாரண வீரர்களின் வரிசையில் நின்று கூட்டத்தோடு கூட்டமாக சண்டையிடவும் என்ற அந்தஸ்தை ஆரம்பத்தில் வழங்குவாரே, அதுபோல) எப்படி ஏற்க முடியும்? உங்கள் ரசனைக்கு இளையராஜாவின் இசை பெரிதாக ஒத்துவரவில்லை என்றால் அதில் பிரச்சினையில்லை. ஆனால், விமர்சனம் என்று வரும்போது....

Amudhavan said...

பிரசன்னா அவர்களே, தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் அல்லது தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பல ஆண்டுகளாக ஏற்கெனவே எல்லா இடங்களிலும் புழங்கிவரும் ஒன்றுதான். ஆனால் பதில் சொல்லப்படாமலேயே புழங்கிக் கொண்டிருக்கிறது. 'சிம்பனி வகையறா' என்று வைத்துக்கொள்வோமே. பதில் சொல்லி விளக்கமளித்தபிறகு இப்போது யாருமே - அல்லது தொண்ணூற்று ஒன்பது சத இ.ரா ரசிகர்கள் யாரும் சிம்பனியைச் சொல்வதில்லை. அம்மாதிரி பதில் இல்லாமல் புரண்டு கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களுக்கும் கமெண்ட் பாக்ஸில் பதில் சொல்ல முடியாது. ஓரிரு நாட்களில் தனிப்பதிவாகவே எழுதுகின்றேன். நன்றி.

settaikkaran said...

ஒரு சிவாஜி ரசிகனாய் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

Amudhavan said...

சேட்டைக் காரன் said...
\\ஒரு சிவாஜி ரசிகனாய் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.\\
தங்களின் வருகைக்கு நன்றி சேட்டைக்காரன்.

பிரசன்னா said...

நன்றி ஐயா, எழுதுங்கள்.... படித்துவிட்டு பதில் சொல்கிறேன்.

பிரசன்னா said...

இன்னொரு விஷயம், ஏ.ஆர்.ரகுமானின் பேட்டிக்கும் மறக்காமல் பதில் சொல்லி விடுங்கள்.

Amudhavan said...

பிரசன்னா said...
\\இன்னொரு விஷயம், ஏ.ஆர்.ரகுமானின் பேட்டிக்கும் மறக்காமல் பதில் சொல்லி விடுங்கள்.\\
மிகச் சரியான பாயிண்டுகளைப் பிடிக்கிறீர்கள். அல்லது பிடித்ததாக நினைத்துக்கொள்கிறீர்கள். மேடை நாகரிகம் கருதி அல்லது ஒரு காலத்தில் அவரிடம் உதவியாளராக வாசித்ததற்கு நன்றி கூறும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் சொன்ன ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.எத்தனையோ மேடைகளில் ஒரு சிலரை 'இவர் இமயத்தை விடவும் உயர்ந்தவர்' என்றெல்லாம் புகழக் கேட்டிருக்கிறோம். அதற்கெல்லாம் 'பிராக்டிகலாக' அர்த்தம் காணப் புகுந்தால் தேவையற்ற சர்ச்சையாகிவிடும். ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைத்ததற்காக மிகப்பெரிய பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாரும் பேசுகிறார்கள், புகழ்கிறார்கள். இளையராஜாவும் கலந்துகொண்டு ரகுமானைப் 'பாராட்டுகிறார்'. 'அவர் ஆஸ்காரெல்லாம் வாங்கிவிட்டார் என்று புகழ்கிறார்கள். வாங்கட்டுமே... என்னிடம் வாசித்துக்கொண்டிருந்தவர்தானே' - என்கிறார்.(உடனே அவர் கிண்டலாகவெல்லாமோ குறைத்தோ மதிப்பிட்டுச் சொல்லவில்லை.யதார்த்தமாகச் சொன்னார் என்றெல்லாம் மல்லுக்கட்ட வராதீர்கள்) ரகுமான் தன்னுடைய பதிலில் சொல்லுகிறார்."என்னிடம் வாசித்துக்கொண்டிருந்தவர்தானே? என்று இளையராஜா சொன்னார். ஆமாம். உண்மைதான். அவரிடம் வாசித்தேன்தான். என்னுடைய அப்பாவுக்கு இளையராஜா வாசித்தார். நான் இளையராஜாவுக்கு வாசித்தேன். அதற்கும் இதற்கும் சரியாகப் போய்விட்டது" என்றார் ரகுமான். இதையும் சேர்த்தே படித்துக்கொள்ளலாம். எப்படி சௌகரியம்?

Amudhavan said...

'வண்ணத்திரை பத்திரிகையில் ஒருமுறை இளையராஜாவின் அட்டைப்படம் போட்டோம். அந்த வார விற்பனை ரொம்பவும் பேஜார் பண்ணிவிட்டது' என்ற வண்ணத்திரை ஆசிரியரின் அறிவிப்பையும் எடுத்துக்கொண்டு பேசுவோமா?

பிரசன்னா said...

ஐயா, முகஸ்துதிக்காக புகழ்வது வேறு. ரகுமான் ராஜாவை புகழ்ந்தது வேறு. ராகுமானை விடுங்கள், பாலசுப்ரமணியம் போன்ற உலக சாதனை பாடகர்கள் தொடங்கி, இந்தியாவின் மிக சிறந்த கம்போசர்கள் தொடங்கி, தமிழின் பெரிய இசை சக்கரவர்த்திகள் வரை, எத்தனையோ மேதைகள் ராஜாவை புகழ்ந்தவர்களே. இதில் வெளிநாட்டினரும் அடக்கம். தமிழில், ஏன் தென்னிந்திய சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஏராளமான இசையமைப்பாளர்கள் உண்டு. அவர்களுள் பெரும் ரசிக கூட்டத்தை வென்று சிம்மாசனம் ஏறியவர்கள் மிக மிக சிலரே. அவர்களுள் ராஜா மிக முக்கியமானவர். ஏன் நீங்கள் அந்த அங்கீகாரம் கூட தர மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை. சினிமா துறையில் உங்களுக்கு அறிமுகங்கள் ஏராளம் என்று உங்களின் எழுத்துக்கள் கூறுகின்றன. ஒருவேளை ராஜாவுடன் ஏதேனும் உங்களுக்கு மனஸ்தாபம் நேர்ந்திருக்கலாம் என்று கூட எனக்கு எண்ண தோன்றுகிறது. சரி விடுங்கள் ஐயா. நான் அந்த வகையில் போக விரும்பவில்லை. நீங்கள் புதிதாக எழுதப்போகும் பதிவு வரட்டும், காத்திருக்கிறேன்.
வண்ணத்திரை புத்தகம் பற்றி கூறியிருந்தீர்கள். அது அவ்வளவு முன்னணி பத்திரிக்கையா என்ற கேள்வியும் எழுகிறது. எத்தனை பத்திரிக்கைகளுக்கு இதுபோன்ற அனுபவம் நேர்ந்துள்ளது என்று தெரியவில்லை. ராஜாவுக்கு கூடும் கூட்டத்தை நாம் பல ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கடந்த காலத்தில் குமுதத்தில் வெளிவந்து கொண்டிருந்த சுப்புடுவின் இளையராஜா குறித்த தொடருக்கு எழுந்த வாசகர் எதிர்ப்பையும், அதனால் அத்தொடர் நிறுத்தப்பட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம். பின்னர் இளையராஜாவின் ரசிகராக ஆக வேண்டிய கட்டாயத்தையும் காலம் சுப்புடுவுக்கு விதித்தது.

Amudhavan said...

பிரசன்னா, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை. எதுவும் சொல்ல வருகிறீர்களா அல்லது என்ன சொல்லுவது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா என்பதும் புரியவில்லை. எது எப்படியோ, ராஜாவுக்கு எதிராக எதுவுமே சொல்லக்கூடாது என்ற படபடப்பில் இருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. இளையராஜாவுக்கு இணை இங்கே யாருமே இல்லை என்கிற ரீதியில் எழுதிக்கொண்டிருந்த இணைய இ.ரா வீரர்கள் இப்போதெல்லாம் இ.ராவுக்கு நீங்கள் ஏன் சிறப்பான அந்தஸ்து கொடுக்க மாட்டேனென்கிறீர்கள் என்ற ரீதியில் புலம்பும் புலம்பல்களில் ஒன்றாகத்தான் உங்கள் வார்த்தைகளையும் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. சரி.... கொஞ்சம் தள்ளிப்போட்டே எழுத நினைத்ததை எழுதுகிறேன்.

Amudhavan said...

வண்ணத்திரைக்கென்று ஒரு சர்க்குலேஷன் உண்டு. அந்த சர்க்குலேஷன் அந்தக் குறிப்பிட்ட வாரம் பாதிக்கப்பட்டது என்பதுதான் இதிலுள்ள செய்தி. அதை அந்த அளவில் விளங்கிக் கொண்டாலேயே போதும்.

பிரசன்னா said...

ஐயா, எனது கருத்துக்கள் புரியவில்லை என்று நீங்கள் கூறியிருப்பதை சுத்தமாக ஏற்க முடியவில்லை. பதில் சொல்ல முடியாமல் நீங்கள் மழுப்புவது தெளிவாக தெரிகிறது. நான் வரிக்கு வரி உங்களுக்கு பதில் சொல்வதைப்போல், நீங்கள் எனக்கு பதில் சொல்வதேயில்லை என்பது படிப்பவர்களுக்குப் புரியும். நான் சில விஷயங்களை நேரடியாகவே சொல்லி விடுகிறேன். இதற்குமேல் இந்த விவாதத்தை தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஏதோ இளையராஜாவை அங்கீகரியுங்கள் என்று உங்களின் ராஜாவின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுப்பதைப்போல் எழுதியிருக்கிறீர்கள். ராஜாவின் புகழும் வளர்ச்சியும் எந்தளவிற்கு என்பது அனைவருக்குமே தெரியும். அந்தளவில் பார்க்கும்போது, உங்கள் அங்கீகாரத்தால் எந்தப் பயனும் இல்லை. உங்களின் விமர்சனங்கள் பலவும் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு அடிப்படையில் அமைந்துள்ளதை உங்கள் வலைப்பூவில் நான் கண்டிருக்கிறேன். திரைப்படங்கள் என்ற பெயரில் 'நாடகங்களை' எடுத்த, அதிலும் தன் ஜாதி உணர்வையும், கேவலமான உறவு சிக்கல்களையும் கையாண்ட பாலச்சந்தரை மிகவும் திறமையான இயக்குநர் என்பீர்கள். நடிகர் சிவகுமார் உங்களின் நண்பர் என்ற வகை‍யில் அவர் குறித்த விமர்சனங்களையும் படித்துள்ளேன்.

நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடும் எந்த தென்னிந்திய இசையமைப்பாளர்களை விடவும் இளையராஜா மிகவும் சிறந்தவர் மற்றும் தாக்கம் மிகுந்தவர் என்பதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. நீங்கள் புகழும் சிவாஜி மற்றும் கண்ணதாசன் ஆகியோர் குறித்து, அவர்கள் தகுதிக்கு மீறி கொண்டாடப்பட்டது குறித்து சில பல கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. அவைகளை நான் படித்துள்ளேன். அதற்காக, அவர்கள் இருவரையும் மட்டம் தட்டி உங்களைப்போன்று நான் களம் இறங்கிவிடவில்லை. இளையராஜாவின் தனிப்பட்ட குணாதிசயம் எனக்குத் தேவையில்லை. அவரின் இசைத் திறனே எனக்கு முக்கியம். அதற்காக, தனித்திறமையுள்ள மற்ற இசையமைப்பாளர்களையும் நான் மதிக்கிறேன். வண்ணத்திரை போன்ற மூன்றாந்தர பத்திரிக்கையை எல்லாம் விவாதத்திற்கு கொண்டுவந்திருக்க வேண்டிய தேவையில்லை என்பது என் கருத்து. இளையராஜாவிற்கு எந்தளவிற்கு ரசிகர் பட்டாளம் உண்டு என்பது உண்மையில் அவரின் மார்க்கெட் போனபிறகுதான் பலருக்கும் தெரிந்தது நான் உட்பட. அவர் ஒரு மகா கலைஞன். காலத்தில் தன் முத்திரையைப் பதித்தவர். இதை மாபெரும் இசை ‍மேதைகள் பலர் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். தனித்திறனோ, மாபெரும் ஆற்றலோ இல்லாமல், எந்த துறையிலும் யாராலும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மை.

Amudhavan said...

பிரசன்னா said...

\\தனித்திறனோ, மாபெரும் ஆற்றலோ இல்லாமல், எந்த துறையிலும் யாராலும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மை\\

பிரசன்னா ஏதோ நான் வேலை வெட்டியில்லாமல் உட்கார்ந்துகொண்டு உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்களாகக் கற்பனை செய்துகொண்டால் செய்துகொண்டு போங்கள். உங்கள் அபிப்பிராயத்திற்குக் குறுக்கே நான் வரவில்லை.
நீங்கள் மேற்கூறிய கருத்துக்கு பதில் பிக்பாஸின் ஓவியாதான். ஒன்றைரை மாதத்தில் ஓவியா ஆர்மி என்றெல்லாம் ஆரம்பித்துவைக்கும் அளவுக்கு மக்களை - குறிப்பாக இளைஞர்களைக் 'கொண்டு செலுத்தும்' சக்தி இன்றைய மீடியாக்களுக்கு இருக்கிறது.அந்த வலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்யலாம்? ஐயோ பாவம் என்று விலகித்தான் செல்லவேண்டும்.
நீங்கள் என்னமோ மிகப்பெரும் வாதங்களை வைத்துவிட்டது போலவும் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் மழுப்பி ஓடுவது போலவும் நீங்களாகவே கற்பனை செய்து கொள்வதிலும் உங்களைப் பொறுத்தவரை ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. நான் சிம்பனி பற்றிக் கேட்டிருந்தேன். அதற்கு ஒரு பதிலும் இல்லை. சிம்பனிக்காக கஸ்பார் என்று நினைக்கிறேன். ஏகப்பட்ட லட்சங்களை அந்த ஆர்கனைசேஷனில் செலவு செய்திருக்கிறார்கள். அது என்னவானது என்பதே தெரியவில்லை.
ஒரு பாராட்டு விழாவில் ரகுமானைப் பற்றி இ.ரா ஏதோ பேசப்போய் அதற்கு ரகுமான் சொல்லிய பதில் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கும் இ.ரா குரூப்பிடமிருந்து பதில் இல்லை. இம்மாதிரி அவர்களுக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு வெகு நைச்சியமாக ஒரு பக்கமாய் இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தீர்கள். அதை நிறுத்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் உங்களுக்குக் கோபம் வருகிறது. சிவாஜி பற்றி, கண்ணதாசன் பற்றியெல்லாம் உங்களுடன் விவாதிக்கப்போவதில்லை. நீங்கள் சொல்லாமலேயே உங்கள் மனவிருப்பம் என்ன என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. போய்வாருங்கள். பிறகு பார்க்கலாம்.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

கொஞ்சம் லேட்டாக வந்தால் இத்தனை சூடான சங்கதிகள் அரங்கேறியிருக்கின்றன. பாவம் சிலரால் வட்டத்தை விட்டு வெளியே வர இயலாது.

கண்ணதாசன், சிவாஜி, மேலும் பலரைப் பற்றி எதிர்மறை கருத்துக்கள் நிறையவே உண்டு. அவர்களை எல்லோரும் புகழ வேண்டும் என்று யாரும் நிர்பந்திப்பதில்லை. அதேபோல் தான் இராவும். சிலர் ஒரே ஒரு நட்சத்திரத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள். சிலரோ கண்ணில் தென்படும் எல்லா நட்சத்திரங்களையும் ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

Arul Jeeva said...

அமுதவன் அவர்களே,
கண்ணதாசனும்,சிவாஜியும் தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த பொக்கஷங்களே.ஒருவர் தன் பாடல்களாலும்,மற்றொருவர் தன் அபார நடிப்பாலும் தனக்கென ஓரிடத்தை தக்கவைத்துக்குக் கொண்ட தன்னிகரற்றவ ஜாம்பவான்கள்.ஆயிரம் பேர் வந்து சென்றாலும் காலத்தால் அழியாத காவிய நாயகர்கள்.
இவையெல்லாம் முழு மனதோடு பலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதே.மறுப்பதற்கும் சிலர் இருக்கலாம் .இயற்கையின் நியதியும் அதுதானே.இரவு- பகல் ,சரி- தவறு,நல்லது- கெட்டது ,விறுப்பு- வெறுப்பு........
எல்லா நிகழ்வுகளிலும் ஆதரிப்பும் ,மறுப்பும் தொடர்வது தானே.

கண்ணதாசனையும்,சிவாஜியையும் மறுதலிப்பவர்களுக்காக பரிந்துரைக்கும் தாங்கள் தாங்கள் திரு.பிரசன்னா அவர்கள் கூறியுள்ளது போல இளையராஜா என்று வரும்போது தனிமுகம் காட்டுவது ஏன்? கலைஞர்கள் விருப்பு,வெறப்புக்கு அப்பாற்பட்டவர்கள் தானே.கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து அவர்களது திறமையை மட்டும் தானே பார்க்கவேண்டும். இவ்வகையில் நீங்கள் முரண்படுவதேன்?
உடனே இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டமென்று விமர்சிக்க வேண்டாம். போற்ற வேண்டுமென வலியுத்தவில்லை.தூற்றாதிருந்தால் நலமாயிருக்கும் .நாங்கள் வானில் தோன்றும் அனைத்து நட்சத்திரங்களையும் ரசிப்பவரகள் தான்.கூடுதலாக விடிவெள்ளி தனியொருவனாய் எங்களை ஈர்க்கிறது.
கலைகள் பலவிதம்.
கலைஞர்கள் பலவிதம்.
ரசனை பலவிதம்.
ரசிகர்களும் பலவிதம்.
கலையையும்,கலைஞனையும் கொச்சைப்படுத்தாது அவரவர் விருப்பத்தில் கலைகளைப் போற்றி,கலைஞர்களையும் வாழ்த்துவோம்.

Amudhavan said...

அருள் ஜீவா வாருங்கள். உங்களுடைய முதல் பாராவை முழுமையாக ஏற்கும் அதே நேரத்தில் தங்களின் இரண்டாம் பாராவை அப்படி ஏற்க முடியவில்லை. சிவாஜியை விடுங்கள் நிறையப் பேசியாகிவிட்டது. கண்ணதாசன் பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டாலும் கண்ணதாசனுக்கான எதிர்ப்பு என்பது பல முனைகள் உடையது.எத்தனை முனைகள் இருந்தபோதும் பல கோடி மக்களின் வாய்களிலும் மனங்களிலும் வார்த்தைகளாக உட்கார்ந்திருப்பவர் கண்ணதாசன். இதனை எந்தக் கவிஞனாலும் மிஞ்ச முடியாது. அவருடைய சித்தர் சிந்தனைகளைத் தழுவிய பாடல்களை விடுங்கள், தர்மம் பற்றி அவர் சொல்கிறார். தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று ஆரம்பிக்கிறவர் 'கூட இருந்து குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்' என்கிறார். அப்படியே தொடர்ந்து 'நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிடச் செய்துவிடும்' என்கிறார். இம்மாதிரியான கொன்றைவேந்தன் டைப் வரிகளுக்கெல்லாம் அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. என்ன சொன்னாலும் இவையெல்லாம் தமிழர் மனங்களில் அழிக்கமுடியாத கல்வெட்டுக்களே. இப்படிப்பட்ட கண்ணதாசனை ஒன்றுமே இல்லை என்று தூக்கி வீசக் காத்திருப்பவர்கள் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. அவர்களுக்கு பதில் சொல்லுவதும் வீண் என்ற முடிவுக்கு எப்போதோ வந்தாகிவிட்டது.
'இளையராஜாவைத் தூற்றுவதாகச்' சொல்லியிருக்கிறீர்கள். தூற்றவே இல்லை. எங்கே சிம்பனி? என்று கேட்பது தூற்றுவதா? வேறு எந்த மியூசிக் டைரக்டரும் செய்யாத ஒன்றை இவர் செய்தார் என்கிறீர்கள். அப்படி என்ன செய்தார் என்ற தெய்வீக ரகசியத்தைச் சொல்லுங்கள் என்கிறோம். அது தூற்றுவதா? இவருக்கு இங்கே இணை யாருமில்லை என்பது போன்ற விமர்சனங்களைக் கேள்விகள் கேட்பது தூற்றுவது ஆகாது என்பதையெல்லாம் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறீர்களோ தெரியவில்லை.

சார்லஸ் said...

அமுதவன் சார்

உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை உயரத்தில் தூக்கிப் பிடிப்பதும் பிடிக்காதவர்களை தூக்கி எறிவதும் உங்களின் பல பதிவுகளில் நான் பார்த்து வந்திருக்கிறேன். இந்தப் பதிவில் சிவாஜியையும் கண்ணதாசனையையும் உயர்த்திப் பார்க்க முனைகிறீர்கள். தவறொன்றுமில்லை.

நடிப்பின் சிகரம் சிவாஜி , காவிய கவிஞர் கண்ணதாசன் இருவருமே சினிமா உலகத்தின் அழிக்க முடியா பக்கங்களில் வரலாறாய் மாறிப் போனவர்கள். உலகம் உள்ளளவும் அவர்களின் பெயரும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். யாரும் மறுக்கவில்லை. இளையராவின் பெயரும் அந்தப் பட்டியலில் நிச்சயம் இருக்கும் என்பதை எப்படி நீங்கள் மறுக்க முடியும் ?

நடிப்புக்கு இலக்கணம் சொன்னவர் சிவாஜி என்பது உங்களைப் போன்றோர் பலரின் கருத்தானால், இசைக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் இளையராஜா என்பது அவர் ரசிகர்களின் கருத்து; ஏன் பெரும்பான்மையான தமிழர்களின் கருத்துமாகும். நடிப்பின் இமயம் சிவாஜி என்று நீங்கள் தீர்மானிக்கும்போது இசைக்கு இமயம் இளையாராஜா என்று நாங்கள் தீர்மானித்துக் கொள்ளல் கூடாதா?


சிம்பொனி பற்றி ராஜாவே விளக்கம் கொடுத்து விட்ட பிறகும் இன்னும் அந்த வழக்கொழிந்து போன ரெக்கார்டு பிளேயரை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டுகிறீர்கள் . சிம்பொனி இசை வெளியிடாததால் இளையராஜாவின் நாற்பது ஆண்டு கால சரித்திர புகழ் வாய்ந்த சாதனை இல்லையென்று ஆகிப் போகுமா? சினிமா இசையை கர்னாடக இசைக் கலைஞர்களும் பாராட்டிப் பேசும் நிலையை உருவாக்கியவர் இளையராஜாதான் சார்! சினிமா இசையை தமிழர்கள் அனைவரும் விரும்பிக் கேட்கும் வண்ணம் அழகுற வெளிப்படுத்தியவர் இசைஞானி .

எல்லோருக்கும் பதிலுரைக்கும்போது கூட ராஜாவைப் பற்றிய கீழ்மைக் கருத்துகளை நீங்கள் எப்போதும் வெளிப்படுத்தி விடுவீர்கள். இப்போதும் அப்படியே செய்திருக்கிறீர்கள். திறமையுள்ளவர்களை நீங்கள் புறந்தள்ளி பேசும்போது சிவாஜியையும் கண்ணதாசனையையும் மற்றவர் புறந்தள்ளுவது மட்டும் அழகற்றதாக தெரிவது என்ன நியாயம்? உங்களுக்கு ரத்தம் எங்களுக்கு தக்காளிச் சட்னியா? பிரசன்னாவின் கேள்வியும் அப்படிதான் உள்ளது. அவருக்கு உங்களின் பதில் ஆணித்தரமாக தெரியலாம். என்னைப் பொறுத்தவரை வெறும் மழுப்பல்.

ராஜாவை மட்டம் தட்டுவதில் உங்களுக்கு அலாதிப் பிரியம் எனில் சிவாஜியையும் கண்ணதாசனையும் சிலர் குறைத்துப் பேசுவதில் மட்டும் குறையாக குமுறுவது ஏன்? குறைத்து பேசிவிட்டு போகட்டுமே!

சார்லஸ் said...

சிவாஜியை இந்த உலகம் இன்னும் கூட புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைக்கு கட்டியம் கூறும் வண்ணம் இன்னொமொரு அழகான கட்டுரை உங்களின் பார்வைக்கு.....

http://prabahar1964.blogspot.in/2017/10/

Kasthuri Rengan said...

ஒரு வெள்ளைத் தாளின் மிகச்சிறிய கருப்பு புள்ளியை குறித்து விசனப்படுவோர் நிறையப்பேர் இருக்கிறார்கள்

அவர்கள் குறித்து நமக்கென்ன கவலை


விட்டுத்தள்ளுங்கள்

சிவாஜி இவர்கள் சிதைப்பதால் சிதைந்துவிடக்கூடிய பிம்பம் அல்ல ..

Post a Comment