Saturday, July 28, 2012

ஒலிம்பிக்ஸில் இளையராஜா


தற்போது உலகின் மொத்த கவனமும் பதிந்திருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இளையராஜாவின் இசையமைப்பும் இருக்கிறது என்ற செய்தி கடந்த இரண்டு மாத காலங்களாகவே இணையத்தில் இறக்கை கட்ட ஆரம்பித்துவிட்டது. நாம் பாட்டுக்கு நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இளையராஜா பாட்டிற்கு அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதில் நம்முடைய இரண்டுபக்க கவனத்தையும் திசைதிருப்புகிற மாதிரியான இப்படியொரு செய்தி வந்ததுமே சரி இளையராஜா மறுபடி புதிதாக எதையோ சாதிக்கப்போகிறார் என்பதாகவும், அல்லது அவரது மேதைமைக்கு மரியாதை செய்யும்விதமாக ஒலிம்பிக்ஸ் கமிட்டி அவரைத் தேடிவந்து புதியதோரு பொறுப்பைக் கொடுத்து மறுபடி அவரையும் அவரது பாடலை விரும்பிக்கேட்ட கோடானுகோடி ரசிகர்களையும் அவரைத்தவிர இசையமைப்பாளர்கள் இந்தப் பூவுலகில் பிறக்கவேயில்லை என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் சில நூறு இணைய ரசிகர்களையும் பெருமையின் உச்சிக்கே கொண்டுசென்று உட்காரவைக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கைப் புதியதாகத் துளிர்விட ஆரம்பித்தது.

நிறைய ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் இயக்குநர் டானி பாயில்தான் தொடக்கவிழாவின் கலை நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சரி ரகுமானுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பினால் ஏ.ஆர்.ரகுமானை அழைத்து ஏதாவது இசைக்கோர்ப்பு வேலைகளைத் தருவதற்கு வாய்ப்பிருக்கிறது இவர் எப்படி இளையராஜாவைக் கூப்பிட்டு எந்த அஸைன்மென்ட்டும் தருவார் என்ற சந்தேகம் எழவே செய்தது. ஆனால் இணைய இளையராஜா ரசிகர்களின் இசையறிவைக் கணக்கில்கொள்ளும்போது இளையராஜாதானே ஒரேயொரு இசைச்சக்கரவர்த்தி இவரைப் புறக்கணித்து உலகில் பெரிய எந்த நிகழ்ச்சியும் களைகட்ட முடியாதே என்பதனால் இந்தச் செய்திக்கும் சாத்தியம் இருக்கும்போலும் என்ற நினைப்பு ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது.
இதை மெய்ப்பிக்கும் விதமாகப் பத்திரிகைகளிலும் சில செய்திகள் வந்தன.
இளையராஜாவின் ஏதோ ஒரு பழைய பாடலிலிருந்து ஒரேயொரு அடியை மட்டும் எடுத்துப்போட்டு ஒரு இசைக்கோர்ப்பு செய்யப்படும் என்று ஒரு செய்தி வந்தது. வேறொரு கலைக்குழுவினர் அங்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அவர்கள் ஆடும் ஒரு பாட்டில் இளையராஜா இசையமைத்த ஒரு பிட்டுக்கு ஆடப்போவதாகவும் சொல்லியிருந்தனர். ஏதோ நம்ம ஆளுடைய இசை எப்படியாவது உலகை அசைத்துப்பார்க்கட்டுமே என்ற எண்ணம்தான் இருந்தது.

ஒலிம்பிக்ஸ் துவக்கவிழாவின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு பிரிட்டிஷ் தேசப்பாடல் பாடப்பட்டபோதும் சரி; மிஸ்டர் பீனைக் கதாபாத்திரமாக வைத்து ஸ்டார்வார்ஸ் இசையமைப்பாளர் சிம்பொனி இசையமைப்பை வழங்கியபோதும் சரி நம்ம மாஸ்டரின் பாடல் இன்னமும் வரவில்லையே என்றுதான் மனம் எண்ணியது. பிரதான நிகழ்ச்சியில் ஒன்றும் வரவில்லை. பின்னர் நடைபெறும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளில் யாரும் அறியாதவண்ணம் ஒரு ஓரத்தில் எங்காவது இளையராஜா பாடலை நுழைத்துவிடும் சாகசத்தை எந்தக் கலைக்குழுவாவது செய்துவிட்டு வருமா என்பது தெரியவில்லை. அப்படி வந்தால் அவர்களுக்கு இணையத்தில் நடைபெறும் பாராட்டுக்கள் இமயத்தையும் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

இது இப்படியிருக்க தொலைக்காட்சியில் பார்த்த நமக்குத்தான் எதுவும் சரிவரப் பார்க்கவோ கேட்கவோ கிடைக்காமல் போயிருக்கலாம் லண்டனில் இருக்கும் என்னுடைய நண்பர் முனிராஜு நேரில் ஒலிம்பிக்ஸிற்குப் போயிருக்கிறார். அவரையாவது கேட்டு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக தொலைபேசியில் அவரை அழைத்துக்கேட்டேன். "பிரதான நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த பாடல் எதுவும் இடம் பெற்றதா?" என்று கேட்டேன்.

"ஓ....இடம் பெற்றதே நான் கேட்டேனே" என்றார் அவர்.

"அப்படியா எப்போது?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"நிகழ்ச்சி உச்சகட்டத்தை எட்டியதா? அந்தச் சமயத்தில் இளையராஜா பாடல் இல்லாவிட்டால் எப்படி என்பதற்காக நானே அன்னக்கிளி உன்னத்தேடுதே என்று மெதுவாக என் காதுக்கு மட்டுமே கேட்கிறமாதிரி  பாடிக்கொண்டேன். அப்படியானால் இளையராஜா இசையுடன் ஒலிம்பிக்ஸ் துவங்கியதாகத்தானே அர்த்தம்!" என்றார் அவர்!

Monday, July 2, 2012

சகுனி சொல்லும் சேதிகள்!


ஒரு படத்தைப் பற்றிய விமரிசனங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் படத்தின் ஓட்டமும் வசூலும்தாம் திரைப்படத்துறையில் ஒரு பிரபலத்தின் புகழை அல்லது செல்வாக்கை – அது நடிகராக இருந்தாலும் சரி, இயக்குநராக அல்லது இசையமைப்பாளராக யாராக இருந்தாலும், நிர்ணயிக்கின்ற விஷயங்களாக இருக்கின்றன.

நல்ல கதை, நல்ல படம் என்ற அளவுகோல்கள் மட்டுமே ஒரு படம் வெற்றிபெற போதுமானவை அல்ல. சுமாரான கதையோ மோசமான கதையோ, சுமாரான நடிப்போ மோசமான நடிப்போ அந்தப் படம் ஓடுவதைப் பொறுத்துத்தான் அந்தப் படத்தின் தலைவிதியும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தலைவிதியும் தீர்மானிக்கப்படுகின்றன. நல்ல கதை, நல்ல படம், நல்ல நடிப்பு என்பவை மட்டுமே ஒரு வெற்றிப்படத்திற்கான அளவுகோல்களாக இருந்திருந்தால் எம்ஜிஆர் ரஜினிகாந்த்தெல்லாம் இத்தனைக்காலம் தாக்குப்பிடித்து இருந்திருக்கவே முடியாது. எப்படியோ ஓடிவிடும் படங்கள் அந்த ஓட்டத்திற்கான வெற்றிக்குப் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்து நாளடைவில் அவற்றையே வெற்றிக்கான அளவுகோல்களாகவும் தீர்மானித்து அவற்றை அங்கீகரித்தும்விடுகின்றன.

ஒரு கதாநாயகனின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் செல்வாக்கிற்கும் புகழிற்குமான காரணங்கள் மிகமிக எளிமையாக்கப்பட்டுவிட்டன. படம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை – படம் ஓடுகிறதா ஓடுவதற்கான விஷயங்கள் படத்தில் இருக்கின்றனவா என்பது மட்டுமே பார்க்கப்பட்டு போதுமான வசூலை அள்ளிக்குவிக்கிறதா அதுபோதும் அவன் வெற்றிக்கதாநாயகனாகப் பவனிவர என்கிற அளவுக்கு வந்துவிட்டது.

சகுனி விஷயமும் அப்படித்தான். படம் சரியில்லை, கதை சரியில்லை, படத்தில் லாஜிக் இல்லை ஒளிப்பதிவில் பிரமாதமில்லை என்றெல்லாம் விமரிசகர்கள் விழுந்து புரண்டுகொண்டிருக்க படம் பாட்டுக்குப் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு கதாநாயகன் பெருமைப்பட்டுக்கொள்ள படத்தின் ஓட்டமும் இரண்டாவது அம்சம்தான்.
 முதல் அம்சம் என்ன தெரியுமா?
படத்தின் ரிலீஸ்.

ரிலீஸ்தான் முதல் அம்சம் என்கிற கோட்பாடு சமீப காலமாக நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சகுனி ரிலீஸ் கார்த்தி மட்டுமல்ல, கார்த்தி நிலையில் இருக்கும் யாராக இருந்தாலும் முழுக்கப் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம்தான்.

ஒரு படம் 1154 தியேட்டர்களில் ரிலீஸ் என்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல; இதற்கு முந்தைய கணக்கின்படி, தமிழில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்தான் உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட படம் என்று சொல்கிறார்கள். அதுதான் இதுவரையிலும் உள்ள ரிகார்ட். ஆனால் இங்கே எந்திரனின் பின்னணியைப் பார்க்கவேண்டும். தமிழில் சிவாஜி எம்ஜிஆருக்கடுத்து ஆகப்பெரும்நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த். 

திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே நாற்பது வருடங்களைக் கடந்தவர். அந்த ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யாராய், பிரமாண்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் ஷங்கர், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இத்தனை படாபடா பின்புலங்களுடன் சன் டிவி என்ற வர்த்தக ராட்சசன் என்ற இத்தனையும் சேர்ந்துதான் எந்திரனின் பிரமாண்ட ரிலீஸுக்குக் காரணமாக அமைந்தன.
இங்கே இவையெல்லாம் ஒன்றுமேயில்லை.

கார்த்தி என்ற ஒரேயொரு சின்னப்பையன் கதாநாயகன், அவ்வளவுதான்!
இயக்குநர் சங்கர் தயாள் யாரென்றே தெரியாது. விகடன் மாணவப்பத்திரிகை நிருபராயிருந்து திரையுலகிற்கு வந்திருப்பவர் என்று சொல்கிறார்கள்.

கதாநாயகி ப்ரணிதாவுக்கும் எந்த அடையாளமும் இல்லை ஓரிரு கன்னடப் படங்களில் நடித்தவர் என்பதைத்தவிர.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு இளம் இசையமைப்பாளர்.

சந்தானம் மட்டும்தான் ‘பேசப்படும் நடிகர்களில் ஒருவர். அதுவும் கவுண்டமணி வடிவேல் என்று யாரும் களத்தில் இல்லாததால் விவேக்கா சந்தானமா என்று வரும்போது ‘சந்தானமே இருக்கட்டும் என்று விநியோகஸ்தர்களால் சொல்லப்படும் ஒருவர்தானே தவிர விநியோகஸ்தர்களால் பிரமாதமாக விலைபேசப்படுபவர் அல்ல.

இப்படியொரு சர்வசாதாரணக் கூட்டணியுடன் களமிறங்கி தான் நடித்த ஆறாவது படமே ஆயிரத்து நூற்றைம்பத்து நான்கு தியேட்டர்களில் வெளியாகின்ற பெருமையுடன் வலம்வர கார்த்தியால் முடிகிறது எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

சகுனி - விமரிசன அளவுகோல்களுடன் பார்க்கும்போது கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடும் அளவுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். சரியான திரைக்கதை இல்லை, படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இல்லை, பாடல் காட்சிக்கு உடன் ஆட்டம்போடுவதற்கு ஒரு பெண் வேண்டும் என்பதைத்தவிர கதாநாயகிக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, இது வெறும் ஒரு காமெடிப் படமா என்பது தெரியவில்லை, மிகப்பெரிய பிரமாண்டம் இல்லை, ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் இல்லை, இந்தப் படத்தை ஒரு நல்ல பொலிட்டிகல் திரில்லராகச் செய்திருக்கலாம் செய்யப்படவில்லை........இத்தனை ‘இல்லைகள்இருந்தபோதும் கணிசமான வசூலுடன் இந்தப் படம் ஓடுகிறது. 

என்ன காரணமாம்? படத்தைப் பார்த்துவந்த ஒரு பெண்மணி சொன்னார் “லாஜிக் அது இதெல்லாம் தெரியாதுங்க. படம் ஜாலியா ஓடுதுங்க. 

கார்த்தி சந்தானம் அடிக்கும் லூட்டி கலகலன்னு இருக்குதுங்க. அது போதும்
ஆக கார்த்தி மக்களின் மனதில் ஜாலியான படங்களுக்கான நம்பகமான ரசிக்கத்தக்க கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பிடித்துவிட்டார். இங்கிருந்துதான் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் ஆரம்பிக்கிறது.

சூர்யாவை சாதாரணமாக எடைபோட முடியாது. மிகமிக அழுத்தக்காரராக இறுக்கமாக இருந்து எந்தச் சமயத்தில் எதில் எப்படி ஸ்கோர் செய்யவேண்டுமோ அப்படி இறங்கி அடிக்கும் களவீரராகத் தம்மை மாற்றிக்கொண்ட வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது. 

அதனால்தான் அமைதியாக இருந்து இருந்தாற்போலிருந்து திடீரென்று இறங்கி எந்த ஆட்டம் வேண்டுமானாலும் ஆட முடிகிறது அவரால். அதற்கான சூத்திரம் அவருக்குக் கைவந்த கலையாகியிருக்கிறது. 

அகரம் பவுண்டேஷனாகட்டும், போதிதர்மர் ஆகட்டும், கணிணி முன்னால் சூட்கோட் அணிந்து கோடிரூபாய்க்கான கேள்விகள் கேட்டுத் தமிழகத்தைக் கட்டிப்போடும் மாஸ்டராகட்டும் எந்த பிரம்மாண்டத்தையும் அவரால் சர்வசாதாரணமாகச் செய்துவிட்டுப் போய்விடமுடிகிறது. 

காரணம் சூர்யாவின் பாதை அவருக்குள்ளாக மிகத் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. ‘My steps are measured’ என்ற உறுதியான முடிவும் அவரால் எடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் கார்த்தி விஷயத்தில் இதற்குமேல்தான் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற வரையறையை சகுனி நிர்ணயித்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

ஏனெனில் ஆபத்தான சில சமயங்களில் நாமே எதிர்பாராத வெற்றிகள் நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்திவிடும். அதுபோன்ற ஒரு வெற்றிதான் இது என்பதாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது.

ஏனெனில் நிறைய ஓட்டைகளுடனான இந்தக் கப்பல் மிக வெற்றிகரமாகக் கரை சேர்ந்திருக்கிறது.


இனி நல்ல கப்பல்களை மட்டுமே கார்த்தி தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. சகுனி சொல்லும் சேதி இதுதான்.

Tuesday, May 15, 2012

கண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு?

கண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அத்தனைப் பேருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய பாடல்களில் ஒன்று இது. இந்தப் பாடல்கூட முழுவதும் கண்ணதாசனால் எழுதப்பட்டது அல்ல. முக்கால்வாசிப் பாடலுக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதியார். கால்வாசிப் பாடல் மட்டும்தான் நம்முடைய கவிஞருடையது. பாரதியின் பாடலுக்குக் கவிஞரின் விளக்கம் இது என்றும் சொல்லலாம், பாரதியின் பாடலுக்கு இவர் செய்த பகடி என்றும் சொல்லலாம்.

பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் சிறப்புக்களைப் புகழ்ந்து போற்றி பாரதி பாடிய பாடல் அது. இன்னமும் பாரதியின் அந்தப் பாடல் வரிகளைச் சொல்லிச்சொல்லித்தான் நாம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறோம். 

பல்வேறு இலக்கியக்கூட்டங்களில் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் பேசுவதற்கு அந்தப் பாடலிலிருந்துதான் வரிகளைப் பெறுகிறோம். அந்தப் பாடலைக் கேட்ட கண்ணதாசனுக்கு ‘என்னடா இது பாரதி இப்படிப் பண்ணிவிட்டாரே என்று தோன்றியிருக்கலாம். எது எதையோ பெருமைகளாகச் சொல்கிறாரே நிஜ வாழ்க்கையில், நடைமுறையில் இவையெல்லாம் வேறாக இருக்கின்றனவே என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனால் இவர் என்ன செய்கிறாரென்றால் பாரதி பாடிய அந்த வரிகளை அப்படியே வைத்துக்கொண்டு இரண்டாவது வரியில், மூன்றாவது வரியில் அல்லது ஈற்றடியில் தமது கருத்தைப் பாடலிலே பொதிந்து வைக்கிறார்.

செந்தமிழ் நாடு என்ற பாரதியார் பாடலுக்குப் புதுவுரைச் சொல்லவந்த கண்ணதாசன் தமது பாடலுக்குப் ‘புதிய தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டியிருக்கிறார். கேலியும் கிண்டலும் பரிகாசமும் எள்ளலும் கண்ணதாசனின் வரிகளில் விரவுகின்றன. அதைவிடவும் ‘நடைமுறை இதுவே என்பதுதான் கவிஞர் சொல்லவரும் சேதி.

பாடலைப் பார்ப்போம்.

முதலாவதாக பாரதியின் பாடல் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே....... என்று ஆரம்பிக்கிறது. இந்த வரியையே ஆட்சேபிக்கிறார் கண்ணதாசன்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள்வந்து கொட்டுது காதினிலே.....என்று ஒரே போடாகப் போடுகிறார்.


அடுத்தது பாரதியின் வரி -‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.... என்று வீரத்தைப் பறை சாற்றுகிறது.
இங்கே அப்படியே ஒரு யூ டர்ன் அடிக்கிறார் கண்ணதாசன்.
தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்பதை விட்டுவிட்டு
‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே என்று நேரடியாக அரசியலுக்கு வருகிறார்....வந்தவர், ‘கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
இந்த ஒரு வரி விமரிசனத்தில் இங்கே நிறைய தலைகள் உருளக் காத்திருக்கின்றன. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டோமானால்கூட பிரபலமான அமைச்சரவை என்று காமராஜருடைய அமைச்சரவையை மட்டும்தான் சொல்லமுடியும். 
அந்த அமைச்சரவையில் காமராஜர், கக்கன், மஜீத் போன்ற ஓரிருவரை மட்டுமே சிறப்பானவர்களாக உயர்த்திப் பிடிக்கமுடியும்.  
அதற்கு அடுத்த அமைச்சரவையில் அண்ணாவையும் சாதிக்பாட்சாவையும் மட்டுமே நல்ல அமைச்சர்களாகச் சொல்லமுடியும். 
கலைஞர் அமைச்சரவையிலும் மறுபடி சாதிக் பாட்சா மட்டுமே தனித்து நிற்கிறார்.


அடுத்து எம்ஜிஆர் அமைச்சரவை. இந்த அமைச்சரவையிலும் எந்த அமைச்சரையும் –கவனியுங்கள், எம்ஜிஆர் உட்பட எந்த அமைச்சரையும்- சிறப்பானவர்கள் பட்டியலில் வைக்கமுடியாது.


பிறகு ஜெயலலிதா அமைச்சரவை. எம்ஜிஆர் அமைச்சரவையிலேயே யாரும் தேறவில்லை என்னும்போது ஜெயலலிதா அமைச்சரவையில் சிறப்பானவர்களை எங்கே போய்த்தேடுவது? 


அதனால் கண்ணதாசன் சொல்வதுபோல ‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே- கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்ற விமரிசனம் அத்தனை அமைச்சர்களுக்கும் பொருந்தும். இதனை அப்படியே ஒப்புக்கொண்டு அடுத்த அடிக்குச் செல்வோம்.

காவிரி தென்பெண்ணைப் பாலாறு- தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பல ஓடத் –திரு
மேனி செழித்த தமிழ்நாடு..... என்பது பாரதியின் வரிகள்.


இதனைக் கண்ணதாசன் எப்படிச் சொல்கிறார் பார்ப்போம்.
‘காவிரி தென்பெண்ணைப் பாலாறு –தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பலவினிலும் –உயர்
வெள்ளை மணல்கொண்ட தமிழ்நாடு – எப்படி கவிஞர்?


அடுத்து பாரதியின் வரிகள்;
நீலத்திரைக்கட லோரத்திலே –நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.......


இந்த வரிகளை எப்படி எடுத்துக்கொள்கிறார் தெரியுமா கண்ணதாசன்?
‘நீலத் திரைக்கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு
அட, அட.. என்று பாராட்டத் தோன்றுகிறதா இல்லையா?


கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ் நாடு......இது பாரதியின் பாடல்.


இதனை மாற்றி எழுதவந்த கண்ணதாசன்,
‘கல்வி சிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். அவருடைய கோடரி அடுத்த வரியில்தான் இறங்குகிறது.
‘நல்ல பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு........ என்பது கண்ணதாசன்.


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு –நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் –மணி
ஆரம்படைத்த  தமிழ்நாடு என்பது பாரதியின் பெருமிதம்.


இதனையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார் கண்ணதாசன்.
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளையெனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு....என்கிறார்.


‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு..... என்பது பாரதியின் பெருமை.


கண்ணதாசனின் பார்வையில் நடைமுறையில் இதுவும் நிஜமில்லையே என்கிற வருத்தம்.
‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி –அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு – என்று நடைமுறையைக் காட்சிப்படுத்துகிறார்.

‘விண்ணை யிடிக்கும் தலையிமயம் –எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் –சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு...என்கிறார் பாரதியார்.


அது கண்ணதாசனின் பார்வையில் இப்படி வருகிறது.
விண்ணை இடிக்கும் தலைஇமயம்-எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னை பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!

சரி இப்போது கவிஞரின் முழுப்பாடலையும் ஒருமுறைப் பார்த்துவிடலாமா?

செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!

காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!

நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!

கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!

சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!


இன்னமும் எத்தனை வருடங்களானாலும் அன்றன்றைய நிலைமைகளை அப்படியே கண்முன்பு நிறுத்தும்விதமாக பாடிச்சென்றிருக்கும் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்லுவது!

Monday, April 23, 2012

இளையராஜாவும் இன்னிசை மழையும்!


 கலைஞர் டிவியில் இசையை வைத்து ஒரு நல்ல நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்கால இலங்கை வானொலியில் தமது கம்பீரக்குரலாலும் தெளிவான உச்சரிப்பாலும் லட்சக்கணக்கான நேயர்களை ரசிகர்களாகப்பெற்ற பி.ஹெச்.அப்துல்ஹமீது நடத்தும் நிகழ்ச்சி ‘இன்னிசை மழை.’. ‘இன்னிசை மழை.’இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது மற்ற காம்பியர்கள் நடத்தும் பழைய விஷயங்களைச் சார்ந்த நிகழ்ச்சிகள் என்றால் அவர்களுக்கு அந்த விஷயங்கள் பற்றிய தகவல்கள் யாவும் சொல்லப்பட்டு அறிவுறுத்தப்பட்டு அதன்பின்னர் அந்த நிகழ்ச்சி நடத்தப்பெறும். அப்படி அறிவுறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளில்கூட அவர்கள் போட்டு அதிரடியாக சொதப்புவார்கள்.

“ஓ! சாவித்திரி என்று அந்தக் காலத்தில் ஒரு நடிகை இருந்தாங்களா?
“அட, ஆயிரத்தில் ஒருவன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் வெளிவந்திருக்குங்களா?
“அப்படியா, கே.பாலசந்தர் அப்படீன்றவர் ரஜனியையும் கமலையும் ஒண்ணா நடிக்கவச்சு படம் எடுத்திருக்காரா? என்பன போன்று காம்பியர்களின் அட்டூழியங்களைக் கேட்கும்போது அப்படியே எழுந்துபோய் அவர்களின் கழுத்தை நெரிக்கலாமா என்று தோன்றும்.

அப்துல்ஹமீது போன்ற ஒருசிலரின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. அதிலும் அப்துல்ஹமீது திரைஇசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முற்றுமுழுதாக அறிந்தவர். இன்னமும் சொல்லப்போனால் நிகழ்ச்சியில் பங்குபெறும் சில கலைஞர்களை விடவும் நிறைய செய்திகள் அறிந்தவர். எனவே ஒரு நிறைவான நிகழ்ச்சிக்கு உத்தரவாதம் என்ற அளவில் இந்த நிகழ்ச்சியை அணுகலாம்....அனுபவிக்கலாம்!
 

முதலாவதாக இது பாடல் போட்டி நிகழ்ச்சி அல்ல. அதனால் ஓ....ஹூ...ஹா என்ற ஆண்ட்டிகளின் கூச்சலும் அந்த மாஸ்டர் இந்த மாஸ்டர் என்ற எந்த மாஸ்டரின் நீதிபதி சட்டாம்பிள்ளைத்தனமும் இல்லாமல் பார்க்கக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய நிகழ்ச்சியாகவும் இது இருக்கிறது. இதனை ஐம்பது வயதைக் கடந்தவர்கள் அதிலும் குறிப்பாகப் பழைய பாடல்களை விரும்புபவர்கள் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்பதில்லை. இன்றைய இளைஞர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி என்பதுதான் இதற்கான முக்கியத்துவம்.

அதிலும் குறிப்பாக பாடல்போட்டிகளில் க்ளிஷே போன்ற ஒரு சம்பிரதாயமான மொக்கை பதில்களைக் காணலாம். பாட வந்திருக்கும் பையனிடம் “உனக்குப் பிடித்த பாடகர் யார்? யார் உன்னுடைய ரோல் மாடல்? என்று கேட்டுவிட்டால் போதும்.
அவன் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான். “எனக்குப் பிடித்த பாடகர் எஸ்பிபிதான்

இதே கேள்வியைப் பாட வந்திருக்கும் பெண்ணிடம் கேட்டுவிட்டால் போதும். “எனக்குப் பிடிச்சவங்க ஜானகியம்மாதான். அப்புறம் சின்னக்குயில் சித்ராவைப் பிடிக்கும்

“உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? என்ற அடுத்த கேள்விக்கு சட்டென்று வரும் பதில் “இசைஞானி இளையராஜா என்பதுதான். அப்புறம் எதற்கும் இருக்கட்டுமே அப்ளிகேஷன் போட்டுவைக்கலாம் என்பதுபோல் “ஏ.ஆர்.ரகுமானையும் பிடிக்கும் என்பார்கள்.

இவையெல்லாம் சரியான பதில்கள் இல்லையா என்றால் அவர்கள் ‘போகவிரும்பும் உயரத்தைக் கணக்கில்கொண்டால் சரியான பதில்களே. அரைக்கிணறு மட்டுமே தாண்ட விரும்புபவர்களுக்கு இது போதும். ஆனால் திரைஇசையை சரியான அளவில் கற்கத்துணிந்திருக்கும் ஒரு திரைஇசை மாணாக்கருக்கான சரியான பதிலா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

டி.எம்.சௌந்தரராஜனையும் பி.சுசீலாவையும் கேட்காமல், பலமுறைக் கேட்டு அவர்களின் வித்தையை மனதிற்குள் வாங்காமல், அவர்களின் ராக பாவ ஆலாபனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், உணர்ச்சிகளை தங்கள் குரல்களில் அவர்கள் கொண்டுவரும் நேர்த்தியை உணர்ந்துகொள்ளாமல், மிக முக்கியமாக தமிழை எப்படி  உச்சரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அவர்கள் இருவரும் புகுத்தியுள்ள நுணுக்கங்களையும் அழகுகளையும் கணக்கில் கொள்ளாமல், ஏதோ போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக தங்களுக்கு முன்பு யார் இருந்தார்களோ அவர்களை மட்டுமே சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று நினைக்கும் இளம்எதிர்கால கலைஞர்கள் எதைப் பெரிதாக சாதித்துவிட முடியும்?

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டி.எம்.சௌந்தரராஜன் ஆளுமை இருந்த காலத்துக்குப் பிறகு தமிழில் ஒரு குரல்கூட ‘ஆண்குரல் இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம். டிஎம்எஸ் இடத்தை யாரும் இன்னமும் நிரப்பவில்லை, நிரப்பிவிடவும் முடியாது.

திரைஇசை மக்களை வெகுவாக வசீகரிக்கத் துவங்கிய அந்தக்காலத்தில் ஆண்குரல் என்று பி.யூ.சின்னப்பா குரலைச் சொல்லலாம். அதன்பிறகு பெருவாரியானவர்களைக் கவர்ந்த ஆண்குரல்கள் நிறையவே இருந்தன. டிஆர்மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன் என்று நிறையப்பேர் இருந்தனர்.
இவர்களுடைய கம்பீரம் ஒருபக்கமிருக்க கொஞ்சம் பெண்மை கலந்து தமிழ்நாட்டையே வசீகரித்த குரல் எம்கேடியுடையது. அவரைச் சார்ந்துவந்த குரல்தான் ஏ.எம்.ராஜாவுடையது. ஏ.எம்.ராஜா இசையமைப்பாளரான பிறகு அவருக்கு மாற்றாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி கொண்டுவந்த குரல்தான் பி.பி.ஸ்ரீனிவாஸுடையது. பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலுக்கு மாற்றாக வந்தவைதாம் கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் குரல்கள். எஸ்பிபியின் குரலுக்குப் பின்னர் தற்போது வந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட குரல்களும் எஸ்பிபியின் பாணியில் வந்துள்ள குரல்கள்தாமே தவிர 
ஒன்றுகூட ஆண்குரலுக்குரியவை அல்ல.

இவர்களில் கொஞ்ச காலத்துக்கு ஆண்குரலுடன் வந்த பாடகராக மலேசியா வாசுதேவனைச் சொல்லலாம். வேறு எந்த ஆண் குரலையும் எண்பதுக்குப் பின்னர் தமிழ்த்திரை இசையுலகம் அனுமதிக்கவே இல்லை.
இந்த அனுமதியின்மைக்குக் காரணம் திரை இசை முழுக்க முழுக்க இளையராஜாவின் ஆதிக்கத்தில் இருந்ததுதான்.

அவர் என்னென்ன டிரெண்டைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருந்தாரோ அந்த டிரெண்டிற்கு ஆண்குரல்கள் தோதுப்படவில்லை போலும். மலையாளத்தில் யார் பாடலைக்கேட்டாலும் ஏசுதாஸ் பாடிய பாடலைப் போலவே இருப்பதுபோல தமிழில் எந்த ஆண்குரல் பாடலும் எஸ்பிபி அவரைத் தொடர்ந்து பிபிஸ்ரீனிவாஸ் அவரைத் தொடரந்து ஏஎம்ராஜா என்ற ஞாபக அடுக்குத்தொடரை நினைவூட்டுவதாகவே அமைந்துவிட்டது. இப்படி அமைந்துவிட்டதை ஒரு துறைக்கு ஏற்பட்ட இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்ததையும் அவரைத் தமிழ்த் திரையுலகம் ஒதுக்க ஆரம்பித்ததையும் இளையராஜாவின் வருகைக்கு முற்பட்ட காலத்து விஷயங்களாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்துபோவதற்கான ஏற்பாடுகளை டிஎம்எஸ்ஸேதான் ஏற்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்கிறார்கள். குறிப்பாக எம்ஜிஆரைப் பற்றியும் சிவாஜி பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்கள்...இருவருமே தன்னால்தான் இத்தனைப் பாப்புலராக இருக்கிறார்கள் என்பதுபோல் அவர் ஊடகத்தில் சொல்லிய விஷயம்தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை சிவாஜி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது சுபாவம் அது. யார் தம்மைப்பற்றி என்ன சொல்லியிருந்தாலும் “சொல்லிட்டுப் போறாம்ப்பா. வயித்துப் பொழப்புக்காக என்னத்தையோ சொல்லுவானுங்க. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக்கூடாது. அவன் தொழிலைப் பிரமாதமா செய்யறான் இல்லையா. நமக்கு வேண்டியது அவன் தொழில்தானே? அவனையே போடு என்று சொல்வது சிவாஜியின் சுபாவம்.

எம்ஜிஆர் குணம் வேறு மாதிரியானது. தம்மைப் பற்றித் தவறாக யாராவது ஏதாவது சொன்னது தமது காதுக்கு வந்துவிட்டால் அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட்டு மறுவேலைப் பார்ப்பது எம்ஜிஆரின் சுபாவம். அன்றைய திரையுலகில் இதற்கான சம்பவங்கள் ஏராளம் ஏராளமாக நடந்துள்ளன. பிறகு எம்ஜிஆர் அரசியலில் வெற்றிபெற்றுவிட்டார் என்றதும் இம்மாதிரி தகவல்கள் யாவும் மறைக்கப்பட்டு அவர் பெயரைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் மட்டுமே பாய்ச்சும்வேலைகளை ஊடகங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டது வேறு விஷயம். இளையதலைமுறையினருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் இதனை இங்கே குறிப்பிடவேண்டி வந்தது.
இதன் பிறகுதான் டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருத்தரைக் கொண்டுவர எம்ஜிஆர் விரும்ப, அதிர்ஷ்டக்காற்று அல்ல அதிர்ஷ்ட சுனாமியே எஸ்பிபிக்கு அடித்தது. எம்ஜிஆர் சிவாஜியின் கோபத்துக்கு மட்டுமல்ல இன்னமும் பல இசையமைப்பாளர்களின் மற்றும் முக்கியமான பிரதான பின்னணிப் பாடகியின் கோபத்திற்கும் ஆளானார் டிஎம்எஸ் என்று சொல்கிறார்கள். சில பாடல்களை அவருடன் சேர்ந்து டூயட் பாடமாட்டேன் என்று குறிப்பிட்ட பின்னணிப் பாடகி சொல்லிவிட அதற்காகவும் அடித்தது யோகம் எஸ்பிபிக்கு.

அன்னக்கிளியில் அன்னக்கிளி ஒன்னத்தேடுதே பாடலைப்பாடும்போது டிஎம்எஸ் சொல்லிய சில திருத்தங்கள் இளையராஜாவுக்குப் பிடிக்காமல் ஆனால் அன்றைய தினத்தில் வேறு வழியில்லாமல் அந்தப் பாடலை அவர் ரிகார்டிங் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரியான டிஎம்எஸ் பற்றிய சில பலவீனங்களான பகுதிகள் உள்ளன. ஆனால் அதற்காக அந்த மகா பாடகரைப்பற்றிய திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடுதல் ஆகாது. டிஎம்எஸ்ஸுக்கு இணை டிஎம்எஸ்தான். மற்றவர்களின் பாடல் இவர் பாடலுக்கு ஈடாகிவிடாது.
அதே போலத்தான் பி.சுசீலாவும். பி.சுசீலாவின் ஒற்றைக்குரலை இந்த தமிழ்நாடு நாற்பது வருடங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. 

சிறிதும் சலிப்புத் தட்டவில்லை.

இனிமை குறையவில்லை.

வேறு குரலைக் கேட்கத்தோன்றவில்லை

தேவையிருக்கவில்லை.

சுசீலா காலம் முடிந்தபிறகு என்னாயிற்று? இன்னொரு பெண் குரலை பத்துவருடங்கள் தொடர்ச்சியாக கேட்க முடியவில்லை. இப்போது பத்துவருடங்களும் குறைந்து ஐந்து வருடங்கள் இரண்டு வருடங்கள் ஏன்......இப்போதெல்லாம் ஒரு பாடல், அத்தோடு போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறமாதிரி ஆகிவிட்டது.

எஸ்.ஜானகி இளையராஜா கண்டுபிடித்த அல்லது அவர் அறிமுகப்படுத்திய பாடகி அல்ல. காலகாலமாகவே தமிழிலும் அதைவிட அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் கோலோச்சிக்கொண்டிருந்தவர்தான் அவர். அவருடைய குரல் குறிப்பிட்ட ‘மூடுக்கு சரியானதாக இருக்கும் என்று அன்றைய இசையமைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டு ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல்கள் என தமிழில் பயன்படுத்தப்பட்டவர் ஜானகி. அந்தக்கால இசையமைப்பாளர்களால் இப்படி பயன்படுத்தப்பட்ட ஜானகி பாடிய பெரும்பாலான பாடல்கள் பெரிய அளவில் புகழ்பெற்ற பாடல்களாகவே அமைந்தன.

இளையராஜாவின் ஆட்சிக்காலம் திரையுலகில் தொடங்கியபோது தமக்கென்று தனித்த அடையாளங்களும் தமக்கென்று தனியானதொரு ‘டீமும் இருக்கவேண்டும் என்று நினைத்தார் ராஜா. இந்த நினைப்பில் எந்தத் தவறும் கிடையாது. டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக எஸ்பிபியை வரித்தவர், பி.சுசீலாவுக்கு மாற்றாக எஸ்.ஜானகியை முன்னிறுத்தினார். எஸ்.ஜானகியைப் பயன்படுத்தி சுசீலாவின் சாம்ராஜ்ஜியத்தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் இளையராஜாவுக்கு இருந்திருக்கலாம். தொழில் ரீதியாக அந்த ‘அப்புறப்படுத்தல்ராஜாவுக்கு சாத்தியமானது. ராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களைப் பாடிய பெண்குரலுக்கு சொந்தக்காரரானார் ஜானகி. இதன் பலனாக சில நல்ல பாடல்கள் கிடைத்த அதே நேரத்தில் பல பாடல்கள் ஜானகி கீச்சுக்கீச்சென்று கீச்சுக்குரலில் கத்தும் பாடல்களாக அமைந்தன. மற்ற இசையமைப்பாளர்கள் ஜானகியின் ரேஞ்ஜ் தெரிந்து அவருக்கான பாடல்களைத் தந்தனர். இளையராஜாவோ தம்முடைய இசை எல்லாவற்றையும் சரிசெய்யும் என்றும் தாம் செய்துவிட்டால் மறுபேச்சுக்கு இங்கே இடமில்லை என்றும் பெருநம்பிக்கைக் கொண்டவராக இருந்ததால் கீச்சுக்குரல் பாடல்கள் ஏராளமாக தமிழுக்குக் கிடைத்தன.

இளையராஜாவின் ரசிகர்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசித்துவிட்டுப் போவதுபற்றிக் கவலை இல்லை. ஆனால் பாடவேண்டும் என்று களத்துக்கு வருகிறவர்கள் எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக முன்னோர்கள் எது எதையெல்லாம் எப்படியெப்படி எல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதை நேர்மையான முறையில் தெரிந்துகொண்டு களத்துக்கு வருவது அவசியம்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

தமிழ்த்திரை இசையில் முன்னோர்களின் சாதனைகள் என்ன என்பதை ஒரு பகுதியாவது அறிந்துகொள்ள அப்துல்ஹமீதின் இன்னிசை மழை நிகழ்ச்சி உதவுகிறது என்பதுதான் விஷயம்.
இதுவரை திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், ஏ.எம்.ராஜா ஆகியோர் பற்றிய தகவல்களும் அவர்கள் பாடிய காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்களும் வந்தன. ராகவேந்தரின் மகளான கல்பனா பல்வேறு பாடல்கள் பற்றிய தகவல்களுடன் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். இளையராஜாவின் தம்பியும் கவிஞர் இசையமைப்பாளர் இயக்குநர் என்று பல்வேறு சிறப்புக்களுடன் வலம்வரும் கங்கை அமரன் நிகழ்ச்சியும் வந்தன. கங்கை அமரன் மிகமிக நேர்மையோடு முன்னோர்களுக்கான மரியாதையையும் அவர்களுக்கான இடத்தையும் மிகச்சரியாக வழங்கி தமது நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தமது அண்ணன்களின் புகழை எந்தெந்த இடங்களில் சொல்லவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சரிவரச் சொன்னார். அவர் சொன்னதில் வேறு மூன்று முக்கிய நிகழ்வுகள்.......
“அந்தக் காலத்தில் எல்லாம் விஸ்வநாதன் இசையமைத்து பாப்புலரான பாடல்களில் அந்த மெட்டுக்களுக்கு வேறு பாடல்வரிகளைப் போட்டுத்தான் நாங்கள் மேடையில் பாட்டுக்கச்சேரி நடத்துவோம். ஒருமுறை திருச்சி பொன்மலைப் பகுதியில் எங்கள் பாட்டுக்கச்சேரி. அங்கே நாங்கள் மேடைப் போட்டிருக்கும் பகுதிக்கு வெகு அருகில் எம்எஸ்வி ஐயா அவர்களுக்கு உறவினர் ஒருவர் வீடு. அந்த வீட்டிற்கு அப்போது எம்எஸ்வி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து எப்படியாவது அவர் காதில் எங்களுடைய பாட்டு விழாதா அந்த மேதையின் பார்வை எங்கள் மீது படாதா என்ற எண்ணத்தில் அந்தக் கச்சேரியை நாங்கள் நடத்தியது மறக்கமுடியாதது.

“புன்னகை மன்னன் படத்திற்கு அண்ணன் இளையராஜா மியூசிக். அந்தப் பாடல்களுக்கு கீ போர்டு வாசித்தவர் ஏ.ஆர்.ரகுமான். ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. பாடல் ரிகார்டிங்கிற்கு முன்னால் பிஜிஎம் என்னென்ன வரவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நோட்ஸை முன்பே எழுதிக்கொடுத்துவிடுவார் அண்ணன் இளையராஜா. அப்படி எல்லாருக்கும் நோட்ஸ் கொடுத்து அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை ரிகர்சல் பார்ப்பதற்காக ஒவ்வொருவரையும் வாசித்துக் காட்ட சொன்னார். கிடார் வாசிக்கிறவர் அவர் நோட்ஸை வாசித்தார். ப்ளூட் வாசிக்கிறவர் அவர் நோட்ஸை வாசித்தார். அடுத்து கீ போர்டு. ம்ம்ம்..நீ வாசி என்று அண்ணன் சொல்ல அவர் கீழே குனிந்து இரண்டு மூன்றுமுறை அவரே வாசித்து சரிபார்த்துக்கொண்டு அப்புறம்தான் அந்த நோட்ஸை வாசித்துக்காட்டினார். காரணம் பெர்ஃபெக்ஷன். தம்முடைய மனதுக்கு மிகச்சரியாக வரும்வரை அவர் தயாராகி அப்புறம்தான் வாசித்தார். இந்த குணம் அன்றைக்கே அவரிடம் இருந்தது.

“மிகப்பெரிய இசைமேதையான எம்எஸ்வியும் அண்ணன் இளையராஜாவும் இணைந்து இசையமைத்த பாடல்களில் ஒன்று ‘ஊருசனம் தூங்கிருச்சி ஊதக்காத்தும் அடிச்சிருச்சி இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பாடலுக்கான மெட்டு எம்எஸ்வி அவர்கள் அமைத்தது. பின்னணி இசைதான் அண்ணன் இளையராஜா அமைச்சார். அந்தப் படத்துல ஒரேயொரு பாடலுக்கு மட்டும்தான் இளையராஜா இசையமைச்சார். மற்ற எல்லாப் பாடல்களுக்கும் எம்எஸ்விதான் இசையமைச்சார்.- என்பது போன்ற பல தகவல்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சொன்னார் கங்கை அமரன்.

(அந்த ஒரு பாடல் மெல்லிசை மாமன்னர்களின் இசையமைப்பு அளவுக்கு ஏன் இருக்கிறது என்பது இப்போது தெரிகிறதா?)

அவருக்கு அடுத்து ஏ.எல்.ராகவன் என்று பயணிக்கிறது அந்த நிகழ்ச்சி. இன்னமும் இரண்டு வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லக்கூடிய கான்செப்ட்டை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
முன் பின் என்று எதுவும் தெரியாமல் தெரிந்து கொள்ள விரும்பாமல் இசை என்றால் இளையராஜா, பாடகர் என்றால் எஸ்பிபி, பாடகி என்றால் ஜானகி என்று மொக்கையாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி அது.

Wednesday, February 22, 2012

ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத்தின் மறக்கமுடியாத நகைச்சுவை!



                       


ஒளிப்பதிவாளர் ஆர் என் கே பிரசாத்தை நினைக்கும் போதெல்லாம் அவரது நெடிதுயர்ந்த தோற்றமும் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் முகமும்தாம் நினைவுக்கு வரும். எப்போதும் கலகலப்பாகவே இருப்பார். கன்னடம் கலந்த தமிழில் ஏதாவது ஜோக்குகள் உதிர்த்துக்கொண்டே இருப்பார். அவர் இருக்கும் இடம் எப்போதுமே சிரிப்பால் அதிர்ந்துகொண்டேதான் இருக்கும்.

மிகவும் சாத்வீக குணம். யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். யாரிடமும் விரோதம் பாராட்ட மாட்டார். எதையாவது பிடிக்கவில்லை என்று சொல்லவேண்டிவந்தாலும் சம்பந்தப்பட்டவரின் மனம் நோகாத வண்ணம் பூவை மேலே எறிவது போல்தான் மிகவும் நாசுக்காகத் தமது கருத்தை வெளிப்படுத்துவார்.

தமிழில் அவ்வளவாக எல்லாருக்கும் தெரிந்த முகமாக இவர் இல்லையே தவிர கன்னடத்தில் மிகமிகப் பிரபலம். இவர் மட்டுமல்ல இவரது குடும்பமே மக்கள் மத்தியிலும் கன்னடத் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் மட்டுமல்ல ; மிகவும் மரியாதைக்குரியவர்களாகவும் மதிக்கப்பட்டவர்கள்.

கன்னடத்திரைப்படங்களின் தந்தையர் என்று அழைக்கப்படுபவர்கள் இரண்டு பேர். ஒருவர் குப்பி வீரண்ணா. இன்னொருவர் ஆர். நாகேந்திர ராவ். குப்பி வீரண்ணா நம்முடைய சிவாஜி கணேசன், ராஜ்குமார் போன்றவர்களைத் தம்முடைய நாடகக் கம்பெனி மூலம் உருவாக்கியவர். அடுத்தவர் கன்னடத்திரைப்படங்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்து பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தவர்- ஆர்.நாகேந்திர ராவ். அவரது மூத்த மகன்தான் ஆர்என்கே பிரசாத்.

பிரசாத் மூத்த மகன் என்பதோடு முடிந்துவிடவில்லை. ஆர்.நாகேந்திர ராவுக்கு மூன்று மகன்கள். மூவருமே கன்னடத்திரைப்பட உலகில் பிரபலம். ஆர்என்கே பிரசாத் – ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர், அவரது இளவல் ஆர் என் ஜெயகோபால்தான் கன்னடத்திரை உலகின் கண்ணதாசன். 

மிகப்பிரபலமான திரைஇசைக் கவிஞர். கடைசித்தம்பி சுதர்சன் மிகப்பெரிய வில்லன் நடிகர்.

மற்ற சகோதரர்கள் இருவரும் கன்னடத்திலேயே நின்றுவிட (சுதர்சன் ஓரிரு தமிழ்ப்படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி ஷைலஸ்ரீயும் ஒரு நடிகையே.) பிரசாத் மட்டும் தமிழிலும் ஒரு சுற்று வலம் வந்தவர். மொத்தம் எண்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர்என்கே பிரசாத் அன்னக்கிளியின் வெற்றிக்குப் பின்னர் தேவராஜ் மோகன் இயக்கிய பல படங்களில் ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்து பணியாற்றியவர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில், சிட்டுக்குருவி, பூந்தளிர் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

“கமலஹாசன் படத்துல ஒளிப்பதிவாளராகப் பணியாற்றணும்னு மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்தது. இதை அவரிடமும் சொல்லியிருந்தேன். ஆமா உங்களோடு பணிபுரியணும்னு எனக்கும் ஆசை இருக்கு. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்னு கமல் சொல்லியிருந்தார். திடீர்னு கமல் ஒரு நாள் போனில் கூப்பிட்டார். நாம இணைந்து ஒரு படம் பண்ணுவோம்னார். சரிதான் ஒளிப்பதிவுக்கு நல்ல வேலையிருக்குன்னு நினைச்சி விவரம் கேட்டா “சார் நீங்க மட்டுமில்லை. நீங்களும் உங்க மத்த இரண்டு சகோதரர்கள் என்று மூன்று சகோதரர்களும் என்னோட நடிக்கிறீங்க. மூணுபேரும் மிகப்பெரிய வில்லனுங்க. தாதாவுங்க..என்ன சரிதானே? என்கிறார். ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. நான் பரவாயில்லை. சுதர்சனும் பரவாயில்லை. 

ஜெயகோபால் கன்னடத்தில் பெரிய கவிஞர். அவர் எப்படி வில்லனாக என்று தயங்கினேன். “அதெல்லாம் ஒண்ணும் பாதிக்காது. இது பாருங்க ஒரு புது மாதிரியான அனுபவத்தைத்தரும் என்றார். கமல் எப்போதுமே இப்படி குறும்பாக வித்தியாசமாக எல்லாம் சிந்திக்கக் கூடியவர். அவர் சொன்னபடியே நாங்க மூணுபேரும் நடித்தோம். எங்களுக்கு அது வித்தியாசமாக இருந்ததுடன் பட்டி தொட்டியெல்லாம் எங்களைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது ஒரு பெரிய அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும் என்று போனில் அவர் உற்சாகமாக நாயகனிலும் மைக்கேல் மதன காமராஜனிலும் ‘நடித்த அனுபவத்தைச் சொன்னது இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது.

இவர் ஒளிப்பதிவாளராக ஆரம்பித்தது என்னவோ அவரது தந்தையார் இயக்கிய ‘பிரேம புத்ரி என்ற படத்தின் மூலமாகத்தான். ஆனால் அதற்குப்பின்னர் புட்டண்ண கனகல், லட்சுமி நாராயண் போன்றவர்களின் படங்களில் பணியாற்றி ஒளிப்பதிவுக்காக நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறார். நாந்தி, பெள்ளிமோடா, விஜயநகரத வீரபுத்ரா மூன்றும் இவருக்கு விருதுகள் வாங்கித்தந்த படங்கள்.

இவரே இயக்கி ஒளிப்பதிவும் செய்த ‘நகுவ ஹூவு(சிரிக்கும் மலர்) என்ற படம் ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பெற்றது. ஒளிப்பதிவு குறித்து இவர் எழுதியிருக்கும் புத்தகம் இன்றைக்கும் ஒளிப்பதிவு கற்பிக்கும் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொஞ்சமும் அலட்டலோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல்தான் பழகுவார்.

இவரது சகோதரர் ஆர் என் ஜெயகோபால் எழுதி இயக்கிய ‘கெசரின கமலா படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்தப் படத்தின் மீது அசாத்திய நம்பிக்கை இருந்தது இவருக்கு. ஒரு விலைமாது பற்றியது அந்தப் படம். கன்னடத்தில் அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த கல்பனா கதாநாயகியாய் நடித்திருந்தார். கெசரின கமலா என்றால் சேற்றுத் தாமரை என்று அர்த்தம். அந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிக்கு அழைத்திருந்தார். கல்பனாவும் வந்திருந்தார். படம் முடிந்ததும் ‘எப்படியிருக்கிறது? என்று கேட்டார். “கல்பனா நன்றாக நடித்திருக்கிறார். 

உங்களுடைய ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. மற்றபடி படம் ரொம்பவும் சுமாராகத்தான் இருக்கிறது. என்றேன். அவர் முகம் வாடிவிட்டது. “என்ன சார் இது? நாங்க பிரசிடெண்ட் அவார்டு, உலகத்திரைப்பட விழா என்றெல்லாம் கற்பனையில் இருக்கிறோமே என்றார். அந்தப் படம் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை. தவிர ஓட்டமும் வெகு சுமாரானதாகவே இருந்தது. தவிர இந்தப் படம் வெளிவந்து சில மாதங்களிலேயே கல்பனா தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டார். அடுத்த சந்திப்பில் கல்பனாவுக்காக அவர் வருத்தப்பட்டது ஒரு உண்மையான மனிதாபிமானியை மிக உருக்கமான முறையில் வெளிக்காட்டிய நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.

என்னுடைய நண்பர் மாருதி சிவராம் இயக்கிய மகாதியாகா என்ற கன்னடப் படத்திலிருந்துதான் ஆர்என்கே பிரசாத் எனக்கு அறிமுகம். மாருதி சிவராம் ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் ஒரிஜினல் படமான பரசங்கத கெண்டே திம்மா என்ற கன்னடப்படத்தின் இயக்குநர். சந்தித்தவுடன் என்னுடைய விலாசம் பெற்றுக்கொண்டு சென்றார் பிரசாத். அடுத்த வாரத்தில் ஒரு கடிதம் வருகிறது. பிரித்தால் இவர் தமிழில் எழுதியிருக்கும் கடிதம். ‘என்னுடைய தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும். மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு தமிழ் எழுத்தாளருக்குத் தப்பும் தவறுமாய் கடிதம் எழுத எவ்வளவு தைரியம் வேண்டும் எனக்கு? ஆனால் தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் நான் தொடர்ந்து தங்களுக்கு இந்தத் தப்பைச் செய்யப்போகிறேன் என்று தொடங்கி மூன்று பக்கங்களுக்கு எழுதியிருந்தார். 

இந்தக் கடிதப்போக்குவரத்து ஒரு நான்கைந்து ஆண்டுகள் தொடர்ந்து பின்னர் அப்படியே நின்றுவிட்டது. இதற்குள் ஒரு பத்துக்கடிதங்களாவது அவரிடமிருந்து வந்திருக்கும்.  சந்தர்ப்பங்களில் நல்ல தமிழில் எழுதப்படும் கடிதங்களைவிடவும் இம்மாதிரி தமிழ் மீது ஆர்வம்கொண்ட மற்ற மொழிக்காரர்கள் சிற்சில எழுத்துப்பிழைகளுடன் எழுதும் கடிதங்கள் மிகுந்த மகிழ்ச்சியையே கொடுக்கும்  என்பது இவரின் கடிதங்களைப் பார்க்கும்போதுதான் விளங்கும்.

பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய பகுதியிலேயே கட்டப்பட்டிருந்தது இவரது வீடு. அண்ணனும் தம்பியும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் குடியிருந்தனர். நானும் அகிலன் கண்ணனும் மற்றொரு நண்பருமாக இவரது வீட்டிற்கு ஒரு மாலை சென்றிருந்தபோது எங்களை அத்தனைப் பிரியமாய் உபசரித்து இரவு உணவு உட்கொள்ளவைத்து அனுப்பிவைத்த பாங்கினை இப்போதும் நெகிழ்ச்சியாய் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

சிட்டுக்குருவி படத்தின்போது மைசூரில் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்புகிற வழியில் வீட்டிற்கு வந்திருந்தார் நடிகர் சிவகுமார். அவருடன் ஒரு இனிய ஆச்சரியமாக ஆர்.என்.கே.பிரசாத். “பார்த்தீங்களா? நீங்க வீட்டிற்கு வரச்சொல்லிக் கூப்பிட்டப்ப எல்லாம் என்னால வரமுடியலை. இப்ப நீங்களே எதிர்பாராதவிதமா வந்து நின்னுட்டேன் என்று சிரித்தார். சிவகுமார் வந்திருப்பது தெரிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வீட்டில் ஏராளமான கூட்டம் கூடிவிட்டது. இந்தக் களேபரத்தில் ஆர்என்கே பிரசாத்தின் செருப்பை யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள். தேடிப்பார்த்துக் கிடைக்காமல் விமானத்துக்கு நேரமாகிறது என்பதால் கிளம்பிப் போய்விட்டார்கள். சென்னை போனதும் கடிதம் எழுதியிருந்தார். 

‘உங்கள் வீட்டிற்கு வந்து சென்றது ஒரு மறக்கமுடியாத ஆச்சரியமான அனுபவம். இதுவரை வெறுங்காலுடன் விமானத்தில் பயணம் செய்ததில்லை. அன்றைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு என்ன வருத்தம் என்றால் அந்தச் செருப்பை எடுத்துக்கொண்டு போன ரசிகன் நிச்சயம் அது என்னுடையது என்பதற்காக எடுத்துச்சென்றிருக்க மாட்டார். சிவகுமாருடையது என்று நினைத்துத்தான் எடுத்துச்சென்றிருப்பார். 

சிவகுமாருடையதை எடுத்துச் சென்றிருந்தாலாவது அதனை அவரால் உபயோகித்திருக்க முடியும். என்னுடைய கால் சைஸ் ரொம்பவும் பெரியது. நிச்சயமாக அதனை அவரால் உபயோகிக்க முடியாது. இதற்காக நிச்சயம் நான் அந்த நண்பர் மீது பரிதாபப்படுகிறேன்.....இப்படித்தான் எல்லாவற்றையும் சுலபமாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்வது அவரது பாங்கு.

ஆரம்பத்தில் ஒருநாள் அவரது அப்பாவைப் பற்றி விசாரித்தேன். “அப்பாவும் அம்மாவும் பெங்களூர்ல இருக்காங்களா அல்லது சென்னையில இருக்காங்களா?என்றேன்.

“அம்மா எங்களோட இருக்காங்க.... அப்பா அவரது மனைவியைப் பார்த்துக்கொண்டு பெங்களூர்ல இருக்கார் என்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒருநாள் சென்னைக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரசில் வந்துகொண்டிருக்கும்போது ஏதோ காரணத்திற்காக வண்டி ஜோலார்பேட்டை ஜங்ஷனில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காலாற இறங்கி நிற்கலாம் என்று நின்றிருந்தபோது பக்கத்து ஏசி பெட்டியின் அருகில் நின்றிருந்தார் ஆர்என்கே. “ஹலோ சார் என்று அருகில் சென்றபோது பிளாட்பாரம் என்றும் பார்க்காமல் அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டார். “நிறைய இளைஞர்கள் வந்துட்டாங்க...எல்லாரும் நல்லா செய்யறாங்க...உங்க கமல் நம்மளை திடீர்னு நடிகரா மாத்திட்டார். கொஞ்ச நாள் இப்படியெல்லாம் பிளாட்பாரத்துல நிற்க முடியாம எல்லாம் இருந்துச்சி. இப்ப பரவால்லை ஜனங்க கொஞ்சம் மறந்துட்டாங்க. அதனால தாராளமா நிற்க முடியுது என்று சுவாரஸ்யம் குறையாமல் பேசினார். அவரைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான்.

ஆர்என்கே பிரசாத்தின் நகைச்சுவையான பேச்சுக்களில் ஒன்றை மறக்கமுடியாது. கவிக்குயில் படத்தின் படப்பிடிப்பு சிக்மகளூர் மலைப்பிரதேசத்தில் நடந்துகொண்டிருந்தது. சிவகுமாரும் ஸ்ரீதேவியும் தூரத்தில் நின்று நடித்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு பாடல் காட்சி. மலையின் ஒரு சரிவான பகுதியில் காமெராவை வைத்துப் படம்பிடித்துக்கொண்டிருந்தனர். அடுத்த காட்சிக்கான ஆங்கிளை டைரக்டர் தேவராஜ்(மோகன்) விளக்கினார். “இம்மாதிரியான ஷாட் வேண்டும் எனக்கு என்றார்.

“அதெல்லாம் சரி அந்தச் சரிவுல காமெராவை வைக்கிறதுன்னா நான் எங்க நின்னு ஆபரேட் பண்றது? என்று கேட்டார் பிரசாத்.


“எங்க நிற்பீங்களோ தெரியாது. ஆனா இந்த ஆங்கிள்தான் சரியா இருக்கும் என்றார் தேவராஜ்.

டைரக்டரின் உதவியாளர் ஒரு யோசனை சொன்னார். “இத பாருங்க சார்..இந்தக் கட்டை மேல இப்படி உட்கார்ந்துகிட்டு நீங்க படமெடுக்கலாம் என்று உட்கார்ந்து காண்பித்தார்.

“ரொம்ப ரிஸ்க்..அப்படி உட்கார முடியாது – இது பிரசாத்.

“என்ன நீங்க? ஹாலிவுட் காமெராமேனுங்க எல்லாம் எவ்வளவு மோசமான இடத்துல எல்லாம் உட்கார்ந்து படமெடுக்கறாங்க......நீங்க இதுக்குப்போய்த் தயங்கறீங்களே என்று தேவராஜ் சொல்ல அவருக்கு பிரசாத் சொன்ன பதிலால் அங்கிருந்த படப்பிடிப்புக் கூட்டமே சிரிப்பில் அதிர்ந்தது.
அவர் சொன்ன பதில் “ஹாலிவுட் காமிராமேன் உட்காருவான் சார். ஏன்னா அவனுடைய பட்டக்ஸ் மேட் இன் அமெரிக்கா. அது தாங்கும். என்னுடைய பட்டக்ஸ் மேட் இன் இந்தியா. தாங்காது. கிழிஞ்சிரும்
இந்த நகைச்சுவையை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. ஈரமான நினைவுகளில் ஆர்என்கே பிரசாத் என்றும் வாழ்கிறார்.

Sunday, January 22, 2012

சோவும் சிவகுமாரும்..........

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நடிகர் சிவகுமாரின் சிறப்புப்பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்தப் பேட்டி நிறைய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. பொதுவாகவே அவரது இன்றைய பேச்சுக்கள் நிறையப் பேரால் கவனிக்கப்படுகின்றன. டிவி சேனல்கள் மூலம் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்களை நேரடியாகச் சென்று அடைகின்றன. ஹிண்டு பத்திரிகை ஒவ்வொரு பேச்சின் ஒளிபரப்பின்போதும் சிறப்புக்கட்டுரை எழுதுகிறது. பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றியபோதும் அவ்வளவாக கவலைப்படாதவர்கள் அவர் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தொட்டதும் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று இராமாயணம். இவர் எதற்காக ராமாயணத்தைப் பிரமோட் செய்யணும்? அதற்குபதில் சங்க இலக்கியம் பற்றிச்சொல்லலாம் திருக்குறள் பற்றிப்பேசலாம் என்பதான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இன்னொரு தரப்பினர், இவர் தலைவர்களைப்பற்றிப் பேசுகையில் காந்தி, காமராஜர், ஜீவா, வாஞ்சிநாதன், ஓமந்தூரார் என்று பேசுகிறார் பெரியார் பற்றியோ அண்ணா பற்றியோ ஏன் பேசுவதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர். பாரதி கண்ணதாசன் என்று பேசுபவர் பாரதிதாசனை அதிகம் பேசுவதில்லை என்பதும் இவர் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு.

அடுத்ததாக தற்போது மகாபாரதம் பற்றிப்பேசப்போவதாகவும் அதற்காக மகாபாரதம் படித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்போக கொஞ்சம் சூடான விவாதங்களே ஆரம்பமாகியுள்ளன. இதுபற்றி தமிழ்மணம் பதிவில் அவர் இப்படிச் சொல்லியிருந்தார்..... “மகாபாரதத்தையும் கம்பராமாயணம் பாணியில் சொல்லவேண்டும் என்ற முயற்சியில் தற்சமயம் என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் சீரியலே எழுபது மணிநேரம் ஓடுகிறது. சோ எழுதிய மகாபாரதமோ 1500 பக்கங்கள் கொண்டது. இவற்றையெல்லாம் பார்த்து படித்து உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் எக்காலத்திற்கும் சொல்லப்பட்ட தத்துவங்களைப் பிரித்தெடுத்து கதையோடு சேர்த்து அதன் மொத்த சாரமும் வருகிறமாதிரி மூன்றுமணி நேரத்தில் சொல்லவேண்டுமென்பதற்காக அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு ஒரு நண்பர் அனானிமஸ் என்ற பெயரில் கருத்திட்டிருந்தார். அவர் சொன்னது இது ; ‘சோவின் மகாபாரதமா? சுத்தம்! சிவகுமார் பேசுவது சிவனியம் மாலியம் சார்ந்த தமிழ் ஆன்மிகப்பாதை என்று நினைத்தேன். இது வைதிக ஆரிய பாசிசத்தில் போய்முடியும் என்று தோன்றுகிறது.

இவரது கருத்திற்கு பதில் சொல்லவந்த நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ‘சிலர் எங்கும் எதிலும் பார்ப்பன துவேஷம் தேடி அலைகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் சொல்லவந்த நண்பர் அனானிமஸ் ‘சோ போன்ற இனவெறியனை பொதுவெளி ஒன்றில் மேற்கோளிட்டால் இதுபோன்ற எதிர்ப்பு வராமலா போய்விடும்? என்று கேட்டவர் மனுஸ்மிருதி பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

சிவகுமாருடைய பேச்சுக்கள் விமரிசனங்களுக்கு ஆளாவது இயல்பான ஒன்றே. என்னைப் பொறுத்தவரை இவரது பேச்சுக்கள் இதுவரை மேடைகளில் பேசப்படும் பொதுவகைப் பேச்சுக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ரகம்; மாறுபட்ட கோணம். இந்தக் காரணங்களால்தாம் அவை பெரிதும் கவனிக்கப்படுகின்றவையாக இருக்கின்றன.

சிவகுமார் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவரைப் பற்றிய பிம்பம் அவரது பேச்சுக்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றது. நேரடியாக அவர் தமது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும்போது அவை புதிய பரிமாணத்துடன் மக்களைச் சென்று சேர்கிறது. மாணவமாணவிகளிடம் சென்று அவர்கள் வாழவேண்டிய வாழ்க்கைப் பற்றியும் மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கம் பற்றியும் பேசுகிறார். வேறு யாராவது அவர் பேசுவதுபோல் இளைஞர்களிடம் சென்று பேசினால் நடப்பதே வேறாக இருக்கும். தகுதியானவர் பேசுகிறார், கேட்போம் என்ற நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் அவை கேட்கப்படுகின்றன. கிராமத்து வாழ்க்கை பற்றி மேடைகளில் இவர் பேசும் அளவுக்கு அத்தனை நீளமாக வேறு யாராவது பேசியிருக்கிறார்களா? பேசினால் மக்கள் கேட்டுக்கொண்டிருப்பார்களா? கிராமத்தைப் பற்றிப்பேசும் அவரது நோக்கம் வேர்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே.

தலைவர்களைப் பற்றிப்பேசும் நேரங்களில்கூட வீண்புகழ்ச்சிக்கும் வெற்று கோஷங்களுக்கும் போவதில்லை அவர். அவர்கள் வாழ்க்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் சொல்லி அப்படிப்பட்ட தலைவர்கள் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்களாய் நாம் உருவாகவேண்டும் என்ற எண்ணத்தை இளையதலைமுறையிடம் விதைப்பதாகத்தான் அவர் பேச்சின் போக்கு இருக்கிறது.

அவர் பெரியார் பற்றியும் அண்ணா பற்றியும் பேசுவதில்லையே என்ற குற்றச்சாட்டில் சாரமிருப்பதாகத் தெரியவில்லை. பெரியார் பற்றி மிகச்சிறப்பாகப் பேசியிருக்கிறார். அண்ணாவின் தமிழ் பற்றியும் அண்ணாவின் வசனநடை பற்றியும் நிறையமுறை பேசியிருக்கிறார்.

அண்ணாவையும் பெரியாரையும் பேசுவதற்கு இரண்டு மாபெரும் இயக்கங்களே இருக்கின்றன.


திகவும் திமுகவும் அறுபது ஆண்டுகாலமாக அண்ணாவையும் பெரியாரையும்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று எத்தனை இயக்கங்கள்? தெருக்கள் தோறும் வீதிகள் தோறும் பெரியார், அண்ணா, பாரதிதாசன் மூன்றுபேரையும்தானே இந்த இயக்கத்திலுள்ளவர்கள் பேசுகிறார்கள்?

அதிலும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்றுபேரைத்தவிர மற்றவர்களைப் பற்றிப்பேசியிருக்கிறார்களா இதுவரை?

பாரதிதாசனைப் பேசும் திராவிட இயக்கத்தவர்கள் பாரதிதாசனுக்குக் கீழே இறங்கியிருக்கிறார்களா? பாரதிதாசன் முற்றத்தைத் தாண்டியதேயில்லையே.

இலக்கியத்துறையில் அண்ணா கலைஞர் பாரதிதாசன் என்ற மூவரைத் தாண்டாததன் பலன்தான் உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த நிலை என்பது திராவிடச்சிந்தனை நண்பர்களுக்குப் புரிகிறதா?

கன்னடமும் மற்ற மொழிகளும் ஏழு எட்டு என ஞானபீட விருதுகளும் மற்ற விருதுகளும் வாங்கிக் குவித்திருக்கையில் தமிழுக்கு இரண்டே இரண்டு என்பதற்கு காரணம் தெரிகிறதா?

மக்களோடு கலந்துவிட்ட மக்கள் நேசிக்கிற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் கொண்டாடாமல் இரண்டு தலைமுறைகள் போய்விட்டதை நீங்களெல்லாம் உணரவே மாட்டீர்களா?

இந்த நோக்கத்தில்தான் சிவகுமார் பேசுகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சிவாஜியையும் கண்ணதாசனையும் கொண்டாடாமல் விட்ட சமூகத்திற்கு(அவர்கள் அவர்களது துறையில் ராஜாவாக மட்டுமின்றி சக்கரவர்த்திகளாகவும் விளங்கினார்கள் என்பது வேறு விஷயம்.) இவர்கள் இருவரைப்பற்றியும் பேசத்தகுதியுள்ள ஒருவர் பேசுகிறார் என்பதாகவே நான் நினைக்கிறேன்.

இப்போது மகாபாரதத்திற்கு வருவோம்.

திரு சிவகுமார் ராமாயணம் பேசியபோதே சில முணுமுணுப்புகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தச் சாதனையின் வீச்சு எங்கேயோ சென்றுவிட்டது. இப்போது மகாபாரதம் பேசப்போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். இதையொட்டி சில முணுமுணுப்புகள் மட்டுமின்றி சில விமரிசனங்களும் வந்துள்ளன. மகாபாரதத்தை அவர் எப்படி அணுகப்போகிறார், அதனை எப்படி வெளிப்படுத்தப்போகிறார், எந்தக் கோணத்தில் அது அவரிடமிருந்து வெளியாகப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

ஏன், இன்றைய நிலையில் அவருக்கே அது தெரியாது என்றே நினைக்கிறேன்.

அண்ணா கம்பராமாயணம் படித்துக்கொண்டிருந்தபோது அது ‘கம்பரசமாகவெளிப்படப்போகிறது என்று யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும்?

என்னுடைய பதிவில் கேள்வி எழுப்பிய நண்பர் மகாபாரதம் பற்றிய கேள்வியில் சிவகுமாரின் நோக்கம் பற்றி தவறுதலாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ‘சோ எழுதிய புத்தகத்தையும் படித்துவிட்டா? என்பதுதான் அவர் எழுப்பி இருக்கும் கேள்வி. பின்னூட்டத்தில் அவர் அது பற்றி விளக்கவும் செய்கிறார். சோ சிவகுமாருக்கு நல்ல நண்பராகவும் சகநடிகராகவும் இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழ்ச்சமூகத்தில் சோ எப்படிச் செயல்படுகிறார் என்பதுபற்றி அந்த நண்பர் கேள்வி எழுப்புகிறார்.

நண்பரின் கேள்வி நியாயமானது. ஆனால் சிவகுமார் பற்றி இப்படியொரு சந்தேகம் எழும்பத்தேவையில்லை. ஏனெனில் சிவகுமார் யாரையும் அவ்வளவு சுலபமாகப் பின்பற்றுகிறவர் அல்ல. யாரையும் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்கிறவரும் அல்ல. விவேகாநந்தரைக்கூட கேள்விகளுடன்தான் அணுகுகிறவர். காந்தியைப் புகழ்ந்து பேசிய தவப்புதல்வர்கள் கேட்டுப்பாருங்கள்... ‘மனைவியை மலம் அள்ளச்சொல்லுகிறார் காந்தி. அந்த ஆள் மனுஷனா?என்று கேட்கிறார். ராமாயணக்கதையில் ராமனை இவர் செய்த விமரிசனம் புவியரசு கோவைஞானி போன்ற இலக்கிய அறிஞர்களையே உலுக்கியது.

சோ சிவகுமாருக்கு மிக நல்ல நண்பர்; மிக நெருங்கிய நண்பர். ஆனால் அதற்காக சோவின் கருத்துக்களை சிவகுமார் ஏற்றுக்கொண்டவர் என்றோ அவரைப் பின்பற்றுகிறவர் என்றோ பொருள்கொள்ள முடியாது. சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த தமிழ் இனம் சார்ந்த சோவின் எந்தக்கருத்தையும் சிவகுமார் ஏற்றுக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடன் பல விஷயங்கள் தொடர்பாக விவாதித்திருக்கிறேன். எந்த விஷயத்திலும் சோவின் கருத்தை சிவகுமார் பிரதிபலித்ததாக எனக்கு நினைவில்லை.

ஈழ விஷயத்தில்கூட சோவுக்கு முற்றிலும் எதிரான கருத்தைக்கொண்டவர்தான் சிவகுமார்.

இது ஒரு புறமிருக்க மகாபாரதம் பற்றிப்பேசப்போகிறவர் சோ எழுதியிருக்கும் மகாபாரதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வதே தவறு என்றும் நான் நினைக்கவில்லை.

சிவகுமாருடைய மகாபாரத உரையில் சாதியை உயர்த்தும் விஷயம் வராது என்று நிச்சயம் நம்பலாம். கடவுளை உயர்த்திப்பேசும் போக்கு இருக்காது என்பதும் கிருஷ்ணனின் பெருமைகளை உயர்த்திப்பேசுவதும் இவரது நோக்கமாக இருக்காது என்றும் நான் நம்புகிறேன்.

சரி, இந்த விவகாரம் குறித்து சிவகுமார் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா? அவர் எழுதி அனுப்பிய பதில் இது;

நான் மகாபாரதம் படிப்பது ஏதோ வயதான காலத்தில் காசி ராமேஸ்வரம் என்று புனித தலங்களுக்குச் சென்று புண்ணிய நதிகளில் மூழ்கி பாவம் தொலைத்து பகவான் தரிசனம் கொண்டு மோட்சத்தை நோக்கிப் பயணிக்கும் கோணத்தில் அல்ல என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

செம்மொழி மாநாட்டில் என் உரையைக் கேட்டவர்களுக்குத் தெரியும்.

பொழுது விடிந்தால் ‘ஏன் விடிகிறது, இன்று எத்தனை வீடுகள், எத்தனைத் தெருக்களுக்குப் போய் மலம் அள்ள வேண்டும்?என்ற உச்சகட்ட வேதனையுடன் வாழும் – உன்னை ஒத்த மனிதச்சகோதரன் செய்யும் வேலையை ஒரு நாள் ஒரேயொரு நாள் நீ நினைத்துப் பார்த்திருக்கிறாயா?

டாய்லெட்டில் உன் மலத்தையும் சிறுநீரையும்கூடத் திரும்பிப்பார்க்காமல் ஃபிளஷ் செய்யும் உனக்கு அவன் வலி எப்படித்தெரியும்?

என்னதான் வார்த்தை ஜாலங்களால் அதை வர்ணித்தாலும் அந்தச் சகோதரன் வலி அவனுக்குத்தான் தெரியும்.

நீ கற்பனைக்கூடச் செய்யமுடியாத – அந்த கடைநிலை ஊழியனாக்கப்பட்ட சகோதரன் செய்யும் பணிக்காக அவனை கடவுளுக்குச் சமமாக மதிக்கவேண்டும் என்று என் பிள்ளைகளிடம் கூறியுள்ளேன்.

மனுஸ்மிருதி பற்றிக்கேள்வி எழுப்புகிறவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில்.

.சாதிகள் பற்றிப்பேசவோ கடவுளின் மகிமைகளைச் சொல்லவோ என் மகாபாரத உரை நிச்சயம் அமையாது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.

பீஷ்மர், தர்மர், கர்ணன், கிருஷ்ணன் – கதாபாத்திரங்களின் வழியாக இன்றைய தலைமுறைக்குப் பயன்படும் சேதி ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுவதற்காகவே நான் மகாபாரதம் படிக்கிறேன்.

மண்ணில் வாழும் மனிதன் சக மனிதனைச் சமமாக மதிக்கவேண்டும். அவன் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை இல்லாத மனிதனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். கர்வமில்லாமல் வாழ வேண்டும்.

பூமிப்பந்தில் உள்ள எல்லா ஊரும் நம் ஊரே. மண்ணில் பிறந்த மக்கள் அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற உண்மையான உணர்வுடன் வாழ ஏதாவது செய்தி மகாபாரதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்வதே என் நோக்கம்.

காலங்காலமாகக் கொண்டாடப்படும் ஒரு காவியத்தை படிப்பதுகூடத் தவறு என்று வாதிடுவது சரியா என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நன்றி!

அன்புடன்,

சிவகுமார்.