சில படங்களுக்கு இப்படி அமைந்துவிடும். அப்படி அமைந்துவிட்ட ஒரு படம் மைனா. கண் மண் தெரியாமல் புகழுகிறார்கள். இப்படியொரு படமே வந்ததில்லை என்ற அளவுக்குப் பாராட்டு மழையால் குளிப்பாட்டுகிறார்கள். பத்திரிகைகள்தாம் என்றில்லை, பதிவுகளிலும் உச்சத்துக்குத் தூக்கிவைக்கிறார்கள். அதற்கென வரும் பின்மொழிகளிலும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். மொத்தத்தில் படம் நல்ல வசூலைக் குவித்துவிட்டது.... மகிழ்ச்சி.! ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னணியில் அத்தனைச் சிறப்புக்கு இந்தப் படம் தகுதியுடையதுதானா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு படம் மிகப்பெரிய பாராட்டுக்களோடு மிகப்பெரிய வசூல் சாதனையையும் பெறவேண்டுமெனில் முற்றிலும் புதிதானதொரு அனுபவத்தைத் தரவேண்டும். நாமெல்லாம் ஆயிரம் படம் பார்த்துவிட்டுத்தான் இன்னொரு படத்தையும் பார்க்க உட்காருகிறோம். களம் புதிது, கதை புதிது , அது சொல்லப்பட்ட பாதை புதிது என்றிருந்தால்தான் நல்ல அனுபவமோ புதிய அனுபவமோ வாய்க்கும் . மிகப்பெரும் வெற்றியடைந்த எல்லாப்படங்களும் இந்தப் பட்டியலில்தாம் வரும். அந்தக் காலகட்டத்தில் பராசக்தி படம் இந்த அனுபவத்தைத்தான் தந்தது. திருவிளையாடல், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆரம்பித்து அதற்கடுத்துவந்த ஸ்ரீதர் படங்கள், பாலச்சந்தர் படங்கள், பின்னர் வந்த அன்னக்கிளி, அதற்கடுத்து வந்த பாரதிராஜா படங்கள், ஏன் எம் ஜி ஆரின் உலகம் சுற்றிய வாலிபன் என்ற எல்லாப்படங்களுமே இந்த அடிப்படையில்தாம் இருந்தன.
மற்ற படங்களிலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக வந்த இன்னொரு படம் ‘ஒரு தலை ராகம்.’ அதனால்தான் இன்னமும்கூட டி.ராஜேந்தர் புகழுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். பின்னர் மணிரத்தினம் மிகமிக வித்தியாசமான கோணங்களில் கலைநயத்துடன் படங்கள் தந்து இந்தியாவையும் தாண்டி புகழ் பரப்பினார். சமீப காலமாக அப்படி முற்றிலும் வேறு கோணத்தில் படம் தந்த இயக்குநராக பாலாவைத்தான் சொல்ல முடியும். சேது , நந்தா, பிதா மகன், நான் கடவுள் என்று தமது ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசமான அனுபவங்களைச் சொன்னவர் அவர். பாலாவைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் பருத்திவீரன் மூலம் கவனம் கவர்ந்தார். அவரைத்தொடர்ந்து சசிகுமார், வசந்த பாலன், ஜனனாதன் ,பாண்டிராஜ், சுசீந்திரன், சற்குணம் என்றெல்லாம் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே வித்தியாசமான கதைக்களன்களை வித்தியாசமான சினிமா நடையில் சொல்லியிருக்கிறார்கள். நல்ல வெற்றிகளையும் ஈட்டியிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாருடைய படங்களை விடவும் அதிகமான பாராட்டு மழைகள் மைனாவுக்குப் பொழியப்படுவதன் காரணம்தான் விளங்கவில்லை. ஒரு பிரபல பெண்கள் பத்திரிக்கை தலையங்கமே எழுதியிருக்கிறது. உண்மையில் மைனா அந்த அளவுக்குத் தகுதிகள் படைத்த படமா என்பதுதான் புரியவில்லை. ஏதோ காரணங்களால் ஓடட்டும். வெற்றி பெறட்டும். அதுபற்றி நமக்கு ஆட்சேபம் கிடையாது. உண்மையில் பார்க்கப்போனால் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வணிகரீதியாகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறதாம். அது நல்ல அறிகுறிதான். ஆனால் அது நல்ல படமா என்பதுதான் கேள்வி.
படம் தொடங்கி கடைசி வரையிலும் ஏதாவது ஒரு படத்தின் நினைவு வந்துகொண்டேயிருப்பது ஒரு நல்ல படத்திற்கு இலக்கணம் அல்ல. மைனாவில் இதுதான் நடக்கிறது. படம் தொடங்கி இடைவேளை வருவதற்குள் பூ, பருத்தி வீரன், பசங்க என்று நான்கைந்து படங்களின் நினைவைப் படம் எழுப்பிவிடுகிறது. காரணம் ஒரே மாதிரியான காட்சியமைப்புகள்....!கடைசியில் நடைபெறும் வன்முறையான பெண்ணின் கொலையும் பல படங்களில் பார்த்த காட்சியமைப்புத்தான். அந்த பஸ் மலைச்சரிவில் பாதியில் துருத்திக்கொண்டு நிற்பதுவும் பல ஆங்கிலப்படங்களில் ஏற்கெனவே பார்த்த காட்சிதான்.
இப்போதெல்லாம் சினிமா என்பதே ஆங்கிலப்படமோ, தழுவல் படமோ எவ்வளவு நன்றாகக் காப்பி அடிக்கிறார்கள் என்பதைக்கொண்டுதான் இயக்குநர்களின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் அதிலும் தங்களின் கற்பனையோட்டத்தை எவ்வளவு கலந்து தருகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் இயக்குநர்களின் திறமைகள் சிறக்கின்றன.
கவுதம் மேனன் , முருகதாஸ், லிங்குசாமி , செல்வராகவன், போன்று பெரிய அளவில் படம் செய்யும் இயக்குநர்களின் படங்களெல்லாம் பெரும்பாலும் தழுவல் படங்கள்தாம். ஆனாலும் தங்களின் கைவண்ணமும் சேர்த்தே கொடுக்கும் கலை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
மைனா இயக்குநரைப் பொறுத்தவரை அவருக்கு சினிமா மொழி மிகச்சிறப்பாகக் கைவருவதை நிச்சயம் குறிப்பிடவேண்டும். அதனால்தான் எந்த இடத்திலும் கொஞ்சம்கூடத் தொய்வு ஏற்படாமல் படத்தை மிகவும் விறுவிறுப்புடன் கொண்டு செல்வதற்கும் சின்னப்பையனிலிருந்து அந்தப் படத்தில் நடித்த அத்தனைப் பேரிடமும் தமக்கு என்ன வேண்டுமோ அந்த நடிப்பைத் துல்லியமாகக் கொண்டுவரும் வித்தையும் அவருக்கு அநாயாசமாகக் கை வந்திருக்கிறது. எடிட்டிங் நாலெட்ஜும் அவரிடம் அபாரமாக இருக்கிறது.
ஆனால் படத்தின் மூலம் அவர் சொல்லவருகின்ற மெசேஜ்தான் நம்மை உறுத்துகிறது. பெண்களின் மீதும் பெண்மையின் மீதும் அவருக்குக் கொஞ்சம்கூட மதிப்போ மரியாதையோ இல்லையென்பதைத்தான் அவர் படத்தில் வைத்திருக்கும் காட்சிகள் மூலம் மறைமுகமாகச் சொல்லுகிறார். பெண்கள் படத்தில் ஒரு இடத்தில்கூட நல்லமுறையில் காட்டப்படவில்லை, நாயகி ஒருத்தியைத் தவிர.! நாயகியைக்கூட வெறும் சினிமா நாயகிக்குரிய வழக்கமான பாணியில்தான் காட்டியிருக்கிறார்கள். படத்தில் வரும் தாய்மார்கள் எல்லாருமே ஏதோ வில்லன்கள் அளவுக்குப் பந்தாடப்படுகிறார்கள்- அதுவும் கதாநாயகனாலேயே!
அப்பாவையும் அம்மாவையும் போட்டுத் துவைத்து எடுக்கிறான் கதாநாயகன். இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் சொல்லவருகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு பாவமோ பச்சாத்தாபமோ அல்லது அவன் தவறு செய்கிறானே என்ற தாக்கத்தைப் பார்க்கிறவர்களுக்கு எழுப்பும் எந்தவித புரிதலும் இல்லாமல் ஏதோ அவன் மிகச் சரியான ஒன்றைத்தான் செய்கிறான் என்ற பாவனையிலேயே கதை நகர்த்தப்படுகிறது.
அநாதையாய் வந்த குடும்பத்திற்கு இடம் கொடுத்து , அவர்கள் பிழைக்க வழி செய்து கொடுத்து, அந்தப் பெண்ணை தினந்தோறும் பள்ளிக்குக் கூட்டிச்சென்று கூட்டிவந்து பார்த்துக்கொள்ளும் கதாநாயகன் போல ஒரு பையன் கிடைக்கும்போது அந்தப் பையனுக்கே கட்டிக்கொடுத்து பெண்ணை வாழவைக்கலாம் என்றுதான் ஒரு ஏழைத்தாயின் மனம் விரும்பும். அதுவும் ஒரு கிராமத்து ஏழைத்தாய் அப்படித்தான் எண்ணுவாள். அதுவும் மைனாவில் காட்டப்படும் காடு போன்ற எவ்வித நாகரிகமும் எட்டிப்பார்க்காத – காட்டுக்குள்ளே மிகமிக தூரத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய குக்கிராமத்தில் இருக்கும் ஏழைத்தாய்க்கு- வேறுமாதிரி சிந்தனை வரவே வாய்ப்பில்லை. என்னுடைய பெண்ணை பட்டணத்தில் படித்த பெரிய நாகரிக மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று சொல்கிறாளாம். உடனே தன்னுடைய காதலியின் தாயாரை சினிமாப்பட வில்லன் அளவுக்குப் புரட்டிப்போட்டு துவைத்து எடுக்கிறானாம் கதாநாயகன். லாஜிக் என்பதெல்லாம் படத்தில் சுத்தமாகக் கிடையாது என்பதற்கு இது மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளுமே இம்மாதிரிதான் உள்ளன.
ஒரு காட்சியில் கதாநாயகி ருதுவாகிறாள். வீட்டில் சடங்கு செய்யப்படுகிறது. அங்கு வாழ்த்த வந்த ஒரு பெண்மணி அந்தப் பெண்ணை “இவ்வள அழகா இருக்கற உன்னை எந்த மகாராஜன் வந்து கல்யாணம் செய்துக்கப்போறானோ” என்று வாழ்த்துகிறாள். எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு இயல்பான நிகழ்வு இது. ஆஹா நம்ம இயக்குநர் இங்கே பிடித்திருக்கிறார் பாருங்கள் ஒரு காட்சியை... அந்தப் பெண்மணி வாழ்த்திவிட்டு வெளியில் வந்ததும் வழிமறித்துத் தடுத்து நிறுத்துகிறான் நம்ம கதாநாயகன். “என்னடி சொன்னே? என்னடி சொன்னே?” என்று கேட்டு அவளைக் குட்டுகிறான் பாருங்கள்..(நினைவு வருகிறதா பருத்தி வீரனில் பொணந்தின்னியை ஒரு சிறுவனை வைத்து கார்த்தி குட்டச்சொல்லும் காட்சி) அதே காட்சியின் ரிப்பீட்டுதான் . அந்த கிராமத்துத் தாயின் கபாலம் நொறுங்கும் அளவுக்குக் குட்டிக்கொண்டே இருக்கிறான் கதாநாயகன். இயக்குநர் சொல்ல வருவது என்னவென்றால் அவன் உயிருக்குயிராக நேசிக்கும் அவளை இன்னொருவருக்கு என்று அந்த அம்மையார் சொல்லிவிட்டாராம். அவளைப் பற்றிக் குறைவாக யார் என்ன சொன்னாலும் நம் கதாநாயகன் சும்மா விடமாட்டானாம். அவ்வ்வளவு காதல் உள்ளவனாக அவனைக் காட்ட வேண்டுமாம். இதுமாதிரியேதான் நிறையக் காட்சிகள் காணக்கிடைக்கின்றன. இன்னமும் ஒரேயொரு காட்சியைத்தான் இயக்குநர் தவற விட்டிருக்கிறார். எல்லாப் பள்ளிப்பிள்ளைகளும் விளையாடிக்கொண்டிருக்கின்றன.... ஆளாளுக்குத் தங்களுக்குப் பிடித்த பறவைகளைச் சொல்லி விளையாடுகிறார்கள். ஒரு பையன் தனக்குப் பிடித்தது கிளி என்கிறான். இன்னொருவன் சிட்டுக்குருவி என்கிறான். ஒரு பையன் மைனா என்கிறான். உடனே ஒரு சின்னப்பெண் “ஐயே எனக்கு மைனா பிடிக்காது” என்கிறாள். அவ்வளவுதான். அதைக்கேட்டு விடுகிறான் நம் கதாநாயகன். உடனே அந்தப் பெண்ணைத் துரத்திச்சென்று அப்படியே காலைப்பிடித்துத் தூக்கித் தரையில் அடித்துத் துவைத்து அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுகிறான் என்ற ஒரு காட்சியை மட்டும்தான் இயக்குநர் போனால் போகிறதென்று சேர்க்காமல் விட்டிருக்கிறார். மற்றபடி இதே பாணியில் ஏகப்பட்ட அபத்தக் காட்சிகள்.
ஒரு காவல்துறை அதிகாரி தலைதீபாவளிக்கு வருவதில்லை என்பதற்காக அவருடைய மாமனார் வீடும் அவருடைய சுற்றங்களும் இப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பிரபு சாலமோன் மட்டும் ஒரு நாவலாக எழுதியிருப்பாரேயானால் அவருக்கு நிச்சயம் நோபல் பரிசே கிடைத்திருக்கும். இந்த வருடத்தின் மிகச்சிறந்த அபத்தமாக இதனை தாராளமாகச் சொல்லலாம். இன்னொரு மிகப்பெரிய அபத்தம் காவல்துறை அதிகாரியின் மனைவியாக வருகிறவரின் பாத்திரப்படைப்பு. பெண்மைக்கான இலக்கணங்கள் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்த எல்லா ஒழுங்கு நியதிகளையும் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பெண்ணை முன்னிறுத்தியே தான் கிளைமாக்ஸும் எடுக்கப்பட்டிருக்கிறது. அபத்தமும் அநியாயமுமாக எத்தனை ரத்தம் கொட்டமுடியுமோ அத்தனை ரத்தம் கொட்டப்பட்டிருக்கிறது.
கதாநாயகனின் பாத்திரப்படைப்பு பருத்திவீரன் கார்த்திதான். பேசுவது தலையாட்டுவது எல்லாமே அப்படியே சுவீகரித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடைசியில் தன்னைக் கைது செய்துகொண்டு போகிற காவல்துறை அதிகாரியை அவன் காப்பாற்றுகிறான் என்பது மட்டுமே இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சொல்லும் தார்மிக தர்மம்.
ஒரு பாவமும் அறியாத அந்தப் பெண் மைனா அவ்வளவு கோரமாகவும் கொடூரமாகவும் கொல்லப்படுவதற்கு என்ன லாஜிக் என்ற கேள்விகளும் கேட்கப்படக்கூடாது.
இந்தப் படத்தை இவ்வளவு விரிவாக எதற்காக ஆராய்வது என்ற கேள்வியும் எழுப்பலாம். கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி மிக அதிகமாக வியந்துரைத்திருக்கிறார்கள். மற்ற பெரியவர்களும் இதே பாணிக்கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் இப்படியெல்லாம் சொல்லும்போது நாம் எப்படி சரியான கருத்தைச் சொல்வது என்று நிறையப்பேர் தயங்கி பேசாமலிருந்திருக்கலாம். அப்படி இருக்கவேண்டாமே என்பதற்காகத்தான் இங்கே இதனை எழுதியிருக்கிறேன்.
நிச்சயம் பிரபு சாலமோனிடம் நல்ல திறமை இருக்கிறது. சினிமா மேக்கிங் அவருக்குப் பிரமாதமாக வருகிறது. நல்ல கதைகளுடன் நல்ல படங்களை அவர் உருவாக்கட்டும்.
மைனா நன்றாக எடுக்கப்பட்ட படமே தவிர, நல்ல படம் அல்ல!
12 comments :
அனர்த்தமான பார்வை.
சிந்திக்க வைத்தது...
மதி.சுதா.
நனைவோமா ?
நந்தலாலாவுக்கும், மைனாவுக்கும் தகுதிக்கு மீறிய புகழ்.
அருமை அருமை மைனா
வருகைக்கு நன்றி ஜெரி, ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டால் எப்படி? கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்......
நன்றாகவே நனைவோம் வாருங்கள் சுதா...
வருகைக்கு நன்றி ராமலிங்கம். திண்டுக்கல்லில் ஒரு திரையரங்கில் பதினைந்து பேர் மட்டுமே இருந்த ஒரு மேட்னிக்காட்சியில் மைனாவைப் பார்த்தேன். நந்தலாலாவை இன்னமும் பார்க்கவில்லை. அதனால் நந்தலாலா பற்றிய கருத்தை இப்போது சொல்வதற்கில்லை.
வருகைக்கு நன்றி சிவதரிசன். ஆனால் நீங்கள் என்ன கருத்துரைக்க வருகிறீர்கள் என்பதே புரியவில்லையே.
அமுதவன், மிக சரியான விமரிசனம், நான் மனதில் நினைத்த அத்தனையும் உங்கள் விமரிசனத்தில் கண்டேன்.ஊரே ஒரு பக்கமாய் ஜால்ரா தட்டும் பொழுது, துணிந்து நின்று உண்மையை உரைத்தது அருமை. துணிவுக்கு வாழ்த்துக்கள்.
தங்களின் கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி வானம்
ellaarum paaraattinaal eppadi? oruththar ippadiyum venum.nalla karuththu,nalla rasanai,nalla paarvai? vazhka.
வாழ்த்துக்கள் இந்த படம் கண்டபோது எனக்கும் இதுவே தோன்றியது. மேலும் நமது இயக்குனர்கள் கிராமத்தவர்கள் என்றால் தலைசீவாத, சுத்தமற்ற குளிக்காத, முரட்டு பார்வை படைத்த ஆண்களாகவே காட்டுவதின் பின்னனி தான் புலன்படவில்லை. கிராம ஆண்கள் தான் வெள்ளையும் சொள்ளையுமாக மிடுக்காக காட்சி தர முயல்கின்றனர், விரும்புகின்றனர்.
Post a Comment