Sunday, January 1, 2012

சிக்மகளூரில் ஒரு நாள்!

அந்த மலைப்பிரதேசம் முழுக்க இருள் கவிழ்ந்திருக்க மழை அமர்க்களமாய்க் குதூகலித்துக்கொண்டிருந்தது.

வளைந்து வளைந்து

வழுக்கிச்செல்லும் இக்கட்டான சாலையில் சாமர்த்தியமாகச் செலுத்தப்பெற்ற ஜீப் , எஸ்டேட்டின் அந்தப் பெரிய வீட்டை அணுகியதும் நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கிய உடன் குளிர் தாக்கியது.வழுக்கிச்செல்

ஒரு போலீஸ் அதிகாரி ஓடி வந்து ‘யார், எ

ன்ன, ஏது, எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்....எங்கே த

ங்கப்போகிறீர்கள்? என்பது போன்ற எங்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் ஜாதகப்பலன்களையும் கேட்டுவிட்டு அந்த வீட்டின் சொந்தக்காரர்களுடன் அவர்கள் ஜீப்பிலேயே நாங்கள் வந்ததால் உள்ளே நுழைய அனுமதித்துவிட்டுப் போய்விட்டார்.

‘நாங்கள் எனில், குமுதம் பால்யூ, புகைப்பட நண்பர் யோகா, இன்னொரு புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நான்!


அது 1978-ம் ஆண்டு.

*** *** *** ***

வீட்டின் ஹாலில் அந்தப் பெரியவர் உட்கார்ந்திருந்தார். ரொம்ப நேரமாய் அதே இடத்தில் அதே சாய்மானத்தில் உட்கார்ந்திருப்பாரென்று தோன்றியது. பழுத்த பழம். அந்தக் காலத்து மனிதர்.....எங்களை எதிரில் உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார். கிராமத்துக் கன்னடம்........

அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு எத்தனை மரக்கால் நெல் விற்றது என்பதில் ஆரம்பித்து இன்றைய விலைவா

சி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதுவரை நிறுத்தி நிதானமாகப் பேசினார்.

நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு முழுக்கக் காலையிலிருந்து அலைந்து கொண்டிருந்ததில் அசதியும் தளர்ச்சியும் சேர்ந்து தூக்கம் கண்களைச் சுழற்றியது. பசி வயிற்றைப் பிடுங்கியது. பெரியவரின் பேச்சுத் துணைக்கு வருஷக்கணக்காக ஆட்கள் கிடைக்கவில்லையோ என்னவோ, எங்களை விடாமல் பிடித்துக்கொண்டு விட்டார்.


“சாப்பாடு தயார் என்று சொன்னார்கள்.


“இல்லை.....அவர் வரட்டும். ‘அவரைச் சந்தித்த பி

ன் ‘அவரிடம் பேசியபின்தான் படுக்கை. சாப்பாட்டை வேண்டுமானால் முடித்துக்கொள்வோம். என்றார் பால்யூ.

*** *** *** *** ***

ர வேண்டிய பிரமுகர் இன்

னமும் வரவில்லை. அவருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். எங்களோடு இருந்த பெரியவர் பொறுத்துப் பார்த்தார். மழையும் நின்றபடியாக இல்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவரால் முடியவில்லை. “சரி நான் போய்ப்படுத்துக்கறேன். அவர் வந்ததும் எழுப்புங்கள். என்று வீட்டாரிடம் சொல்லிவிட்டு எங்களிடமும் விடைபெற்றுக்கொண்டு போய்ப்படுத்துக் கொண்டுவிட்டார்.

இன்னொரு மணி நேரம் சோம்பலாய் நகர்ந்தது. பத்துமணி தாண்டியிருக்கும்.

திடீரென்று ஒரு வெளிநாட்டுக் கார் வாசலில் வந்து நிற்க-

அந்தப் பிரமுகர் இறங்கினார்!

ஒல்லியான உருவம். காலை முதல் இவ்வளவு நேரமும் அலைந்த சோர்வு உடலெங்கும் வியாபித்திருக்க, ‘நமக்கு இப்படியொரு

நிலை வந்துவிட்டதே என்ற அடிமனதின் சோகம் முகத்தில் துல்லியமாய் எழுதப்பட்டிருந்தது. புதியவர்களைப் பார்த்ததும் செயற்கையாய் ஒரு சிரிப்பு. செயற்கைப் பணிவுடன் கைகூப்பி ஒரு ‘நமஸ்தே...............முன்னந்தலை அவசரமாய் நரைத்திருக்க.........சில மாதங்களிலேயே பத்து வயது கூடியிருந்தது.

நாங்கள் இருந்த வீட்டில் திடீரென்று சுறுசுறுப்பு பற்றிக்கொள்ள வீட்டுப்பெண்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். தயாராய் வைக்கப்பட்டிருந்த பூமாலை அந்த அகால வேளையில் போடப்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்டு இனிமையான ராகத்தில் கன்னட நாட்டுப்பாடல் ஒன்று பாடப்பட்டு ஒரு பெண்மணி திலகம் வைத்துவிட, உள்ளே நுழைவதற்கு முன் எல்லோரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

வீட்டின் பெரியவரை(கொஞ்ச நேரம் முன்புவரை அந்த ஹாலில் காத்திருந்தவரை) தூக்கம் கலைத்து எழுப்பிவந்து “இவர்தான் எங்க குடும்பத்திற்கே பெரியவர் என்று சொல்லி அறிமுகப்படுத்த-

அவருக்கும் ஒரு அவசர ‘நமஸ்தே!’

விடுவிடென்று வீட்டுக்குள் நுழைந்தார் அவர். நாங்கள் உட்கார்ந்திருந்த ஹாலுக்குப் பக்கவாட்டு அறைதான் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தவம் கிடந்த எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நேரே சென்று அறைக்குள் நுழைந்துகொண்டார்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“என்ன நாளைக் காலைப் பேசிப்போமா?” என்றேன் பால்யூவிடம்.

பால்யூ என்னை ஒரு கணம் பார்த்தார். அந்தப் பிரமுகர் சென்று மூடிக்கொண்ட கதவை ஒருதரம் பார்த்தார். “இல்லை. இப்போதே பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இந்த மனிதருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது என்று யோசித்தேன். என்னுடைய யோசனையை எல்லாம் பொருட்படுத்துகிறவராக இல்லை பால்யூ.

விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி நடந்தார். கூடவே நானும் கிருஷ்ணமூர்த்தியும் சென்றோம்.

தைரியமாய் அந்தக் கதவைத் தட்டினார்.

இந்த ‘தைரியம் எந்தப் பத்திரிகையாளனுக்கும் ஏன் அந்தப் பிரமுகருடைய சொந்தக்காரர்களில் எவருக்கும்கூட வந்திருக்கமுடியாத தைரியம் அது. அவ்வளவு சுலபமாக பத்துமணி தாண்டிய இரவில் அவருடைய கதவைத் தட்டிவிட முடியுமா என்ன?

ஏனெனில் பால்யூ தட்டியது இந்திரா காந்தி நுழைந்த அறையின் கதவை!

கோபத்துடன் கதவு திறக்கப்பட்டது. திறந்தவர் இந்திரா காந்தியேதான்.

“மேடம் ஐயம் பால்யூ ஃப்ரம் குமுதம்-தமிழ் மேகஸீன்.. எடிட்டர் எஸ்ஏபி உங்களைப் பேட்டி எடுத்தாரே. திரு மூப்பனார் உங்களைச் சந்திக்க கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் எங்களுக்காக ஒதுக்கினீர்கள் என்றால் போதுமானது என ஆங்கிலத்தில் சொல்ல-

இந்திரா காந்திக்கே ஒரு குழப்பம் வந்திருக்கவேண்டும். எங்களையெல்லாம் பார்த்தபடியே மிகவும் நிதானமாய் “நான் இப்போது மிகவும் டயர்டாய் இருக்கிறேன். பேட்டிக்கோ புகைப்படத்திற்கோ இப்போது முடியாது. ஒன்று செய்யுங்கள். காலையில் மறுபடியும் சந்திப்போம். அப்போது உங்கள் பேட்டியை வைத்துக்கொள்ளலாம். குட் நைட்

கதவு சாத்தப்பட்டு விட்டது.

***** ***** *****

அந்த மலைப்பிரதேசத்தின் சற்று தூரத்திலுள்ள இன்னொரு வீட்டில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கம் வந்துவிடவில்லை. அன்றைக்கு இந்தியா பூராவிலும், ஏன் உலக அரங்கத்திலும்கூட எல்லாருடைய கவனமும் நாங்கள் அடுத்த நாள் சந்திக்கவிருக்கும் அவர் மீதுதான் இருந்தது. பாரதத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் இருந்த பத்திரிகைகளின் பிரதிநிதிகள் யாவரும் கர்நாடக மாநில மலைப்பிரதேசங்களில் ஒன்றான சிக்மகளூரில்தான் குழுமியிருந்தனர். திடீரென்று உலகின் கவனத்தை ஈர்க்கும் புகழ்பெற்ற பிரதேசமாக சிக்மகளூர் அன்றைக்கு மாறியிருந்தது. அகில உலகிலும் புகழ்பெற்ற அந்தப் பிரமுகர் குளிர் கவிந்து கிடந்த அந்த மலைப்பிரதேசத்தின் முன்பின் தெரியாத ஏற்ற இறக்கங்களில் பரிதாபத்திற்குரியவராய் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்.

ஆனந்த பவனத்தின் அற்புத அறைகளிலும் வேற்றுநாட்டு மாளிகைகளின் வியப்புக்குரிய பளிங்கு மண்டபங்களிலும் காஷ்மீரக் கம்பளம் விரிக்கப்பட்டு பதமாகவும் இதமாகவும் பதிந்து கொண்டிருந்த பட்டுப்பாதங்கள்- சாதாரண ஹவாய் செருப்பு அணிந்து காப்பித் தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றைக் குடியிருப்புகளைக்கூடத் தேடிச்சென்று கைகுவித்து ஓட்டுக்கேட்டதைப் பார்க்க நேர்ந்தபோது ‘அடப்பாவமே என்ற கழிவிரக்கம் வரவே செய்தது.

ஆயிரம் கசப்புகளும் வெறுப்புகளும் அவர்மீது இருந்தாலும் சிக்மகளூர் இடைத்தேர்தலில் இந்திராகாந்தி ஓட்டுவேட்டையாடிய காட்சியை உடனிருந்து பார்த்த அந்த அனுபவம் இப்போது நினைத்தாலும் உருக்கமானதாகத்தான் தோன்றுகிறது.

***** ***** *****

சிக்மகளூரில் அவர் இடைத்தேர்தலுக்கு நின்றிருந்தபோது ஒரு இரண்டு நாட்கள் அவரது அருகிலேயே இருந்து கவனிக்கும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருந்தது. அவருடைய காருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான கார்களின் பவனியை வாழ்க்கையில் அன்றைக்குத்தான் முதன்முதலாகக் காண்பது மிகவும் புதிதாக இருந்தது. (இப்போதுதான் இதனை எல்லாப்பிரமுகர்களுக்கும் டிவியில் பார்க்கிறோமே) அன்றைக்கு இது மிகவும் ஆச்சரியமூட்டிய அபூர்வக்காட்சி. காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர்கள், தவிர வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் அத்தனைப் பேரும் அந்தக் கார்களில் இருந்தனர். இருந்தபோதிலும் இந்திரா காந்தி காருக்கு அடுத்த மூன்றாவது கார் எங்களுடையது. காரணம் இந்திரா காந்திக்காகப் பதவியை ராஜினாமா செய்து வழி தந்திருந்த சந்திரே கௌடாவின் உறவினர் ஒருவருக்கு நாங்கள் மிகச்சிறிய உதவி ஒன்றைச் செய்யப்போக- மற்ற யாரும், எந்தப் பத்திரிகையாளரும் நெருங்கமுடியாத அண்மை எங்களுக்கு வாய்திருந்தது. இந்திரா காந்தியுடன் இரண்டு நாட்களுக்கு கிட்டத்தட்ட நிழல் போலத் தொடர முடிந்தது.

ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பது முப்பத்தைந்து கூட்டங்களில் இந்திரா காந்தி பேசினார். ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாமே சாலையோரக் கூட்டங்கள் தாம். பெரிய கூட்டங்கள் என்பது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மட்டுமே. மற்றவை எல்லாம் சின்னச்சின்ன கூட்டங்கள். சாதாரணமாய் அவர் பேசிய தெருவோரக் கூட்டங்களில் கூடியிருந்த மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

பல கூட்டங்களில் வெறும் இருபது இருபத்தைந்து பேர் கூட இருக்கமாட்டார்கள். ஆமாம், வெறும் இருபது பேர் மட்டுமேதான். அவ்வளவுதான் கூட்டத்தின் தொகை. இந்திரா காந்தியின் காரைத் தொடர்ந்துவரும் கார்களின் எண்ணிக்கையோ நூறைத் தொட்டிருக்கும். ஆனால் கார்களில் இருப்பவர்கள் யாரும் இந்தச் சின்னக்கூட்டங்களுக்கு இறங்க மாட்டார்கள். அந்த மலைப்பிரதேச வளைவு சுழிவுகளில் அத்தனைப்பேர் இறங்கவும் மறுபடி ஏறவுமான வசதிகளும் அவ்வளவாக இல்லை. இந்திரா காந்தி மட்டும்தான் இறங்குவார். கூடவே சந்திரே கௌடா இறங்குவார். இந்திரா காந்திக்குத் துணையாக மோட்டம்மா என்ற பெண்மணி. அப்போதுதான் அந்த ஏரியாவில் ரிசர்வ் தொகுதியில் முதல்முறையாக எம்எல்ஏவாக வெற்றிபெற்றிருந்தார்.(தற்போது காங்கிரஸ் கட்சியில் கர்நாடகத்தில் சிறுபான்மை இன மகளிர் தலைவியாக முக்கியப்பதவி வகிக்கிறார்) கூடவே நாங்களும் இறங்கி இந்திரா காந்தியின் உடன் செல்வோம்.

பல இடங்களில் அவசரமாய் ஒரு கீற்றுப்பந்தல். சில இடங்களில் பந்தல் கூட இல்லாமல் வெறும் இரண்டு நாற்காலி மற்றும் ஒரு மேஜை. வேறு சில இடங்களில் அதுவும் இருக்காது. வெறும் அங்குள்ள குடிசைகளில் இருக்கும் மக்கள் மட்டுமே.

நைந்து மெலிந்த உருக்கமான குரலில் ஆரம்பிப்பார். “நான் உங்களைச் சேர்ந்தவள். ஜவாஹர்லால் நேருவின் மகள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சிக்மகளூரின் சொந்தப்பெண்ணாக நீங்கள் என்னைக் கருத வேண்டும். இந்த ஊரின் பெயரே சிக்கமகளூர். அதாவது சின்ன மகளின் ஊர். அந்தச் சின்ன மகள் நான்தான்...(ஒரு சின்னச்சிரிப்பு) உங்களை நம்பித்தான் நான் தேர்தலில் நின்றிருக்கிறேன். நீங்கள் என்னை ஆதரிக்கவேண்டும். நமஸ்காரா அவ்வளவுதான். சுருக்கமான இரண்டு நிமிடப் பேச்சு. சந்திரே கௌடா மொழிபெயர்ப்பார்.

***** ***** *****

திரும்பவும் நாம் இந்திரா காந்தி தங்கியிருக்கும் வீட்டிற்கு வருவோம்.

அன்றைக்கு இந்திரா தங்கியிருந்தது சந்திரே கௌடாவின் பெரியப்பா வீடு. சந்திரே கௌடா சிக்மகளூரைச் சேர்ந்தவர். நீண்ட காலமாக கர்நாடக அரசியலில் முக்கியமான சக்தி வாய்ந்த தலைவராக இருப்பவர். மாணவர் தலைவராக இருந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர். ஏகப்பட்ட எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். ஏற்கெனவே எம்பியாக இருந்தபோதிலும் இந்திரா காந்திக்குத் தன்னுடைய தொகுதியை விட்டுக்கொடுத்ததிலிருந்து அவருடைய அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. (மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டியவர் என்ற போதிலும் அடிக்கடி கட்சி மாறினவர் என்ற பெயர் அவரை எப்போதும் இரண்டாம் மட்டத்தலைவர் அளவிலேயே வைத்திருக்கிறது.)

சந்திரே கௌடாவின் பெரியப்பாதான் அவர்கள் குடும்பத்திலேயே பெரிய தலை. உள்ளூரில் மதிப்பும் மரியாதையும் மிக்க பெரியவர். அதனால் அவரது வீட்டில்தான் இந்திரா காந்தி தங்குவதற்கு ஏற்பாடு.

அருகிலேயே இன்னொரு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். இரவு பூராவும் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக விடியற்காலையிலேயே மழை நின்றுவிட்டது.

இரவு பூராவும் தூக்கமே வரவில்லை. ஏனெனில் அடுத்த நாள் காலைச் சிற்றுண்டியின்போது- எங்களுக்கும் இந்திரா காந்தியுடனேயே சிற்றுண்டி – அருந்தியபடியே அவரைப் பேட்டியும் புகைப்படமும் எடுப்பது என்பதாக ஏற்பாடு.

விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்துகொண்டோம். வெந்நீர் தயாராக இருந்தது. அவசர அவசரமாய்க் குளித்து முடித்தோம். இந்திரா காந்தி விடிகாலையிலேயே குளித்து முடித்துத் தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்துவிடுவார் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் சடுதியில் கிளம்பினோம்.

கிளம்பவிருந்த சமயம் காலைச் சிற்றுண்டி வந்தது. எங்கள் மனதிற்குள் லேசான மறுப்பு. தயங்கினோம். சந்திரே கௌடாவின் பெரியப்பா வீட்டில் உலகப் புகழ்பெற்ற இந்திரா காந்தியுடன் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று எதிர்பார்த்திருக்க........என்ன இது?

ஜாடை மாடையாய் மறுத்துப் பார்த்தோம். ..............ம்ஹூம் முடியவில்லை..............பிடிவாதம் பிடித்து சாப்பிடச்சொன்னார்கள். சரி, பண்பாடு கருதி பேருக்குச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம் என்று கிளம்பியபோது-“எதற்காக இவ்வளவு சீக்கிரம்? இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். உங்களைக் கூட்டிப்போக ஆள் வரும். அதன்பிறகு போகலாம் என்றார்கள்.

“இல்லை இல்லை....இந்திரா காந்தியுடன் பேட்டி எடுக்க வேண்டும். இப்போது கிளம்பினால்தான் சரியாயிருக்கும். மேடம் நேரம் தவறாதவர். உங்கள் விருந்தோம்பலுக்கெல்லாம் ரொம்ப நன்றி. நாங்கள் புறப்படுகிறோம் என்றார் பால்யூ.

“இல்லை....வந்து......அங்கிருந்து வந்து உங்களைக் கூப்பிடுவார்கள். அப்போது நீங்கள் போகலாமே

“அந்தச் சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். வந்த வேலை முடியணும் நாங்க போறோம்

அந்த வீட்டுக்காரர் கொஞ்சம் தயங்கியபடி சொன்னார் . “இல்லை......இப்போது ......அங்கே..............அந்த வீட்டிற்கு நீங்கள் போகவேண்டாம்

“ஏன்.....? என்ன விஷயம்..............?

“இல்லை............வந்து..........அங்கே. என்று மறுபடியும் தயங்கினார்கள்.

“என்ன சொல்லுங்கள்

“இல்லை.........ஒரு துக்ககரமான நிகழ்ச்சி நடந்துவிட்டது..............பெரியவர் இறந்துவிட்டார்

“என்னது...... எந்தப்பெரியவர்?

அவரே தான்! இந்திரா காந்தி தங்கியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரரான பெரியவர். சந்திரே கௌடாவின் பெரியப்பா. இரவு நீண்ட நேரம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தாரே அவர். சந்திரே கௌடாவின் மொத்தக் குடும்பத்திற்கும் மூத்தவரான அந்தப் பெரியப்பா.

எப்படி இறந்தார்?

தங்கள் வீட்டிற்கு இந்திரா காந்தியே வந்து தங்கியிருக்கிறார் என்ற நம்ப முடியாத மகிழ்ச்சி அவரைத் தாக்கியிருக்கக்கூடும். நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு அந்தப் பெரியவரை பலிவாங்கி விட்டிருக்கிறது.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வதென்று யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.

அதைவிட அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் அவர்கள் இருந்தார்கள். “இன்னமும் மேடத்திற்குத் தெரிவிக்கவில்லை. மேடம் அறைக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். எழுந்தவுடன் எப்படிச் சொல்வது என்பது தயக்கமாக இருக்கிறது. வீட்டின் நடு ஹாலில் உடலைக் கிடத்தியிருக்கிறோம். மேடம் அறைக் கதவைத் திறந்தார்களென்றால் சாவுதான் தென்படும். தான் வந்து தங்கிய வீட்டில் சாவு விழுந்து விட்டதை அவர்கள் எப்படி ஃபீல் பண்ணுவார்களோ

அவர்களுடைய தயக்கம் எங்களுக்குப் புரிந்தது. கொடுமையான சங்கடம் புரிந்தது. நள்ளிரவிலிருந்து சாவைக் கிடத்திவைத்துக்கொண்டு சின்ன சப்தம் கூட பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் இந்திராவை எழுப்பிவிடும் என்பதற்காக அழுகையை நெஞ்சிற்குள்ளேயே அடக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் தவிப்பு புரிந்தது. அது மட்டுமின்றி நாங்கள் தங்கியிருந்த அவர்கள் உறவினர் வீட்டிலும் எங்கள் காதுக்கு சாவுச்செய்தி எட்டிவிடாமல் பார்த்துக்கொண்டு எங்களையெல்லாம் குளிக்கவைத்து, காலைச் சிற்றுண்டியும் சாப்பிடவைத்து அதன் பின்னரே விஷயம் சொல்லிய அந்த மக்களின் பண்பாடு உடலைச் சிலிர்க்க வைத்தது.

கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல் பொடி நடையாக நடந்து அந்த வீட்டை வந்தடைந்தோம்.

சந்திரே கௌடா மிகுந்த தயக்கத்துடன் கதவு தட்டி உள்ளே சென்று திருமதி காந்தியிடம் விஷயம் சொல்லி வெளிவந்தார்.

கதவு திறக்கப்போகும் அந்தப் பரபரப்பான நிமிடத்திற்காக எல்லாரும் காத்திருந்தோம்.

கதவு திறந்து அதிர்ந்துபோன திகிலான முகத்துடன் இந்திரா காந்தி வெளிவந்தார்.

குடும்பத்து உறுப்பினர்களிடம் துக்கம் விசாரித்தார்.

அவ்வளவு விரைவாக அவர் இறுதி மரியாதை செலுத்துவதற்கான பூமாலை கொண்டுவரப்பட்டிருந்தது. இறுகிய முகத்துடன் மாலையை உடல்மேல் வைத்து வணங்கினார்.

அதற்குள்ளாக அவர் கிளம்பிச்செல்ல வாகன அணிவகுப்பு காத்திருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார். ஒரு காப்பியோ சிற்றுண்டியோ இல்லாமல் அன்றைய தேர்தல் சுற்றுப்பயணம் ஆரம்பித்தது.

ஒரு பத்து மணி வாக்கில் வழியில் ஒரு இளநீர் பருகினார் என்று ஞாபகம்.

17 comments :

ஷைலஜா said...

அருமையான இடுகை இந்திராகாந்தியைப்பற்றி!
இனிய புத்தாண்டு வாழ்த்துஅக்ள் அமுதவன்!

Ganpat said...

ஒரு கடந்த காலப்பதிவை இதைவிட சிறப்பாக செய்யமுடியாது சடுதியில் பதிவினுள் நுழைந்த நான்,முடிந்த பின் வெளியே வர மிக சிரமப்பட்டேன்!
மிக நுண்ணிய உணர்வுகள் என்னைப்பின்னி விட்டன!
வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அரிய செய்தி (very rare).
மிக்க நன்றி.

Amudhavan said...

தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஷைலஜா. நேற்றைக்கு என்னுடைய கணிணியிலிருந்து இணையத்தொடர்பு சரிவர கிடைக்கப்பெறாததால் தங்கள் வலைப்பூவைப் படித்துப் பாராட்டி எழுதியதை உங்கள் வலையில் கொண்டுவந்து சேர்க்கமுடியாமல் பண்ணிவிட்டது. நல்லது. தங்களின் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி கண்பத். இப்போதும் அந்த நிகழ்ச்சியின் அத்தனைக் கணங்களும் மனதிற்குள் அப்படியே இருக்கின்றன.மறக்கமுடியாத அனுபவம் அது.

Amudhavan said...

ரத்னவேல் அவர்களுக்கு என்னுடைய நன்றி.

Indian said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

மனதை கனக்க வைத்த இடுகை.

dondu(#11168674346665545885) said...

சிக்மகளூரில் இந்திரா அபார வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் முந்தைய பாராளுமன்றத்தில் பொய் உரைத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு அவர் பதவி பறிக்கப்பட்டு, அந்த பாராளுமன்ற செஷன் முடியும் வரை திகார் சிறையில் வைக்கப்பட்டார்.

அவசரகாலத்தின் போது த்னது மிருகபல மெஜாரிட்டியை வைத்து சுப்பிரமனியம் ஸ்வாமியின் எம்பி பதவியை பிடுங்கிய அவர் தானே அதே தண்டனையைப் பெற்றது ஒரு poetic justice.

பிறகு 1979-ல் ஜெயித்து தனது தந்திர வேலைகளைத் துவக்கி, அதன்படி தான் உருவாக்கிய பிந்த்ரன் வாலேயைக் கொல்வித்து, அதன் பலனாக தனது காவலாளிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Very nice.
k.suresh.

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Indian.

Amudhavan said...

டோண்டு அவர்களின் வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

வரலாற்றின் பக்கங்கள் பின்னூட்டம் சொல்லும் இவ்வளவு அருகாமையிலா!வியப்பு!

சிக்மக்ளூர் இந்திய,இந்திரா காந்தியின் சரித்திரத்தில் ஒரு முக்கியப்புள்ளி.

ராஜ நடராஜன் said...

டோண்டு சார்!எதையும் நேர் பார்வையே பார்க்க மாட்டீங்கன்னு அப்படி என்ன விரதம் உங்களுக்கு:)

பிந்தரன்வாலே,பொற்கோயில் ராணுவ ஆக்கிரமிப்புக்கு தனி தைரியம் தேவை.இப்போதைய காஷ்மீர் போன்ற பிரச்சினை அப்போதைய பஞ்சாப்.

இந்திரா காந்தியின் துணிச்சலான முடிவுகள் அரசு மானியம் ஒழிப்பு,அரசு வங்கியாக்கம்,பொற்கோயில் ராணுவ நுழைவு,பெங்களாதேஷ் போன்றவை.

உயிர் என்ன பொட்டலம் கட்டியா கொண்டு போகப்போகிறோம்?

Amudhavan said...

வருகைக்கு நன்றி ராஜநடராஜன். மற்றபடி ஓவர் டு டோண்டு ராகவன்.

R.S.KRISHNAMURTHY said...

அப்போதிருந்த இந்திராகாந்தியுடனும் பால்யூவுடனும் மீண்டும் நெருங்கவைத்த நண்பரே, நன்றி! அம்மையாருக்குச் சில மலர்களால் ஒவ்வாமை உண்டு என்று அவரின் அணுக்கத் தோழி மூலம் தெரிந்து கொண்ட நாம் பல மாலைகள் அவர் கழுத்து வரை செல்லாமல் தடுத்து, ஆங்கிலத்தில் நன்றி பெற்றுக் கொண்டதை மறந்து விட்டீர்களே! உணர்ச்சிகரமான படைப்பு! மீண்டும் நன்றி

Amudhavan said...

ஆமாம்.அந்த நினைவுகளெல்லாம்கூட அப்படியே மனதில் இருக்கின்றன.இந்திரா காந்தியுடன் மிகமிக அண்மையில் இருக்கக்கிடைத்த அந்த இரண்டு நாட்கள் வேறெந்த பத்திரிகைகாரர்களுக்கும் வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. அவர் காரிலிருந்து இறங்கியது முதல் திரும்பவும் காருக்குள் வந்து உட்காருவதுவரை அவரது ஒவ்வொரு அசைவையும் நீங்கள் ஓடி ஓடிப் படமெடுத்தது பரபரப்பான ஒன்று. ஆனால் அத்தனைப் படங்களையும்(அந்த நாட்களிலெல்லாம் பிலிம் ரோல்கள்தானே)குமுதத்தின் ப்ராபர்ட்டி இது;எடிட்டரிடம் கேட்டுக்கொண்டுதான் தரமுடியும் என்று சொல்லி பால்யூ வாங்கிக்கொண்டு சென்றதும் திரும்பவும் கண்ணில்கூடக் காட்டாமல் போய்விட்டதும்தான் சோகம்.

dondu(#11168674346665545885) said...

பிந்த்ரன்வாலேயெஇ தனது கிட்ட நோக்குப் பார்வை அரசியலுக்காக உருவாக்கியவர் இந்திரா காந்தி. பிறகு அவரே கை மீறிப் போனார். பொற்கோவில் விவகாரத்தில் மனம் புண்பட்ட சீக்கியர்கள் என்ணற்றவர்கள்.

நான் கூறியது ஒரு தகவல் மட்டுமே.

பஞ்சாப் பிரச்சினையை சரியாக தீர்த்தது ராஜீவ் காலத்தில்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Post a Comment