
தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நடிகர் சிவகுமாரின் சிறப்புப்பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்தப் பேட்டி நிறைய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. பொதுவாகவே அவரது இன்றைய பேச்சுக்கள் நிறையப் பேரால் கவனிக்கப்படுகின்றன. டிவி சேனல்கள் மூலம் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்களை நேரடியாகச் சென்று அடைகின்றன. ஹிண்டு பத்திரிகை ஒவ்வொரு பேச்சின் ஒளிபரப்பின்போதும் சிறப்புக்கட்டுரை எழுதுகிறது. பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றியபோதும் அவ்வளவாக கவலைப்படாதவர்கள் அவர் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தொட்டதும் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று இராமாயணம். இவர் எதற்காக ராமாயணத்தைப் பிரமோட் செய்யணும்? அதற்குபதில் சங்க இலக்கியம் பற்றிச்சொல்லலாம் திருக்குறள் பற்றிப்பேசலாம் என்பதான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இன்னொரு தரப்பினர், இவர் தலைவர்களைப்பற்றிப் பேசுகையில் காந்தி, காமராஜர், ஜீவா, வாஞ்சிநாதன், ஓமந்தூரார் என்று பேசுகிறார் பெரியார் பற்றியோ அண்ணா பற்றியோ ஏன் பேசுவதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர். பாரதி கண்ணதாசன் என்று பேசுபவர் பாரதிதாசனை அதிகம் பேசுவதில்லை என்பதும் இவர் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு.
அடுத்ததாக தற்போது மகாபாரதம் பற்றிப்பேசப்போவதாகவும் அதற்காக மகாபாரதம் படித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்போக கொஞ்சம் சூடான விவாதங்களே ஆரம்பமாகியுள்ளன. இதுபற்றி தமிழ்மணம் பதிவில் அவர் இப்படிச் சொல்லியிருந்தார்..... “மகாபாரதத்தையும் கம்பராமாயணம் பாணியில் சொல்லவேண்டும் என்ற முயற்சியில் தற்சமயம் என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் சீரியலே எழுபது மணிநேரம் ஓடுகிறது. சோ எழுதிய மகாபாரதமோ 1500 பக்கங்கள் கொண்டது. இவற்றையெல்லாம் பார்த்து படித்து உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் எக்காலத்திற்கும் சொல்லப்பட்ட தத்துவங்களைப் பிரித்தெடுத்து கதையோடு சேர்த்து அதன் மொத்த சாரமும் வருகிறமாதிரி மூன்றுமணி நேரத்தில் சொல்லவேண்டுமென்பதற்காக அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.”
இதற்கு ஒரு நண்பர் அனானிமஸ் என்ற பெயரில் கருத்திட்டிருந்தார். அவர் சொன்னது இது ; ‘சோவின் மகாபாரதமா? சுத்தம்! சிவகுமார் பேசுவது சிவனியம் மாலியம் சார்ந்த தமிழ் ஆன்மிகப்பாதை என்று நினைத்தேன். இது வைதிக ஆரிய பாசிசத்தில் போய்முடியும் என்று தோன்றுகிறது.’
இவரது கருத்திற்கு பதில் சொல்லவந்த நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ‘சிலர் எங்கும் எதிலும் பார்ப்பன துவேஷம் தேடி அலைகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் சொல்லவந்த நண்பர் அனானிமஸ் ‘சோ போன்ற இனவெறியனை பொதுவெளி ஒன்றில் மேற்கோளிட்டால் இதுபோன்ற எதிர்ப்பு வராமலா போய்விடும்?’ என்று கேட்டவர் மனுஸ்மிருதி பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
சிவகுமாருடைய பேச்சுக்கள் விமரிசனங்களுக்கு ஆளாவது இயல்பான ஒன்றே. என்னைப் பொறுத்தவரை இவரது பேச்சுக்கள் இதுவரை மேடைகளில் பேசப்படும் பொதுவகைப் பேச்சுக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ரகம்; மாறுபட்ட கோணம். இந்தக் காரணங்களால்தாம் அவை பெரிதும் கவனிக்கப்படுகின்றவையாக இருக்கின்றன.
சிவகுமார் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவரைப் பற்றிய பிம்பம் அவரது பேச்சுக்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றது. நேரடியாக அவர் தமது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும்போது அவை புதிய பரிமாணத்துடன் மக்களைச் சென்று சேர்கிறது. மாணவமாணவிகளிடம் சென்று அவர்கள் வாழவேண்டிய வாழ்க்கைப் பற்றியும் மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கம் பற்றியும் பேசுகிறார். வேறு யாராவது அவர் பேசுவதுபோல் இளைஞர்களிடம் சென்று பேசினால் நடப்பதே வேறாக இருக்கும். தகுதியானவர் பேசுகிறார், கேட்போம் என்ற நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் அவை கேட்கப்படுகின்றன. கிராமத்து வாழ்க்கை பற்றி மேடைகளில் இவர் பேசும் அளவுக்கு அத்தனை நீளமாக வேறு யாராவது பேசியிருக்கிறார்களா? பேசினால் மக்கள் கேட்டுக்கொண்டிருப்பார்களா? கிராமத்தைப் பற்றிப்பேசும் அவரது நோக்கம் வேர்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே.
தலைவர்களைப் பற்றிப்பேசும் நேரங்களில்கூட வீண்புகழ்ச்சிக்கும் வெற்று கோஷங்களுக்கும் போவதில்லை அவர். அவர்கள் வாழ்க்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் சொல்லி அப்படிப்பட்ட தலைவர்கள் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்களாய் நாம் உருவாகவேண்டும் என்ற எண்ணத்தை இளையதலைமுறையிடம் விதைப்பதாகத்தான் அவர் பேச்சின் போக்கு இருக்கிறது.
அவர் பெரியார் பற்றியும் அண்ணா பற்றியும் பேசுவதில்லையே என்ற குற்றச்சாட்டில் சாரமிருப்பதாகத் தெரியவில்லை. பெரியார் பற்றி மிகச்சிறப்பாகப் பேசியிருக்கிறார். அண்ணாவின் தமிழ் பற்றியும் அண்ணாவின் வசனநடை பற்றியும் நிறையமுறை பேசியிருக்கிறார்.
அண்ணாவையும் பெரியாரையும் பேசுவதற்கு இரண்டு மாபெரும் இயக்கங்களே இருக்கின்றன.
திகவும் திமுகவும் அறுபது ஆண்டுகாலமாக அண்ணாவையும் பெரியாரையும்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று எத்தனை இயக்கங்கள்? தெருக்கள் தோறும் வீதிகள் தோறும் பெரியார், அண்ணா, பாரதிதாசன் மூன்றுபேரையும்தானே இந்த இயக்கத்திலுள்ளவர்கள் பேசுகிறார்கள்?
அதிலும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்றுபேரைத்தவிர மற்றவர்களைப் பற்றிப்பேசியிருக்கிறார்களா இதுவரை?
பாரதிதாசனைப் பேசும் திராவிட இயக்கத்தவர்கள் பாரதிதாசனுக்குக் கீழே இறங்கியிருக்கிறார்களா? பாரதிதாசன் முற்றத்தைத் தாண்டியதேயில்லையே.
இலக்கியத்துறையில் அண்ணா கலைஞர் பாரதிதாசன் என்ற மூவரைத் தாண்டாததன் பலன்தான் உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த நிலை என்பது திராவிடச்சிந்தனை நண்பர்களுக்குப் புரிகிறதா?
கன்னடமும் மற்ற மொழிகளும் ஏழு எட்டு என ஞானபீட விருதுகளும் மற்ற விருதுகளும் வாங்கிக் குவித்திருக்கையில் தமிழுக்கு இரண்டே இரண்டு என்பதற்கு காரணம் தெரிகிறதா?
மக்களோடு கலந்துவிட்ட மக்கள் நேசிக்கிற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் கொண்டாடாமல் இரண்டு தலைமுறைகள் போய்விட்டதை நீங்களெல்லாம் உணரவே மாட்டீர்களா?
இந்த நோக்கத்தில்தான் சிவகுமார் பேசுகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சிவாஜியையும் கண்ணதாசனையும் கொண்டாடாமல் விட்ட சமூகத்திற்கு(அவர்கள் அவர்களது துறையில் ராஜாவாக மட்டுமின்றி சக்கரவர்த்திகளாகவும் விளங்கினார்கள் என்பது வேறு விஷயம்.) இவர்கள் இருவரைப்பற்றியும் பேசத்தகுதியுள்ள ஒருவர் பேசுகிறார் என்பதாகவே நான் நினைக்கிறேன்.
இப்போது மகாபாரதத்திற்கு வருவோம்.
திரு சிவகுமார் ராமாயணம் பேசியபோதே சில முணுமுணுப்புகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தச் சாதனையின் வீச்சு எங்கேயோ சென்றுவிட்டது. இப்போது மகாபாரதம் பேசப்போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். இதையொட்டி சில முணுமுணுப்புகள் மட்டுமின்றி சில விமரிசனங்களும் வந்துள்ளன. மகாபாரதத்தை அவர் எப்படி அணுகப்போகிறார், அதனை எப்படி வெளிப்படுத்தப்போகிறார், எந்தக் கோணத்தில் அது அவரிடமிருந்து வெளியாகப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.
ஏன், இன்றைய நிலையில் அவருக்கே அது தெரியாது என்றே நினைக்கிறேன்.
அண்ணா கம்பராமாயணம் படித்துக்கொண்டிருந்தபோது அது ‘கம்பரசமாக’ வெளிப்படப்போகிறது என்று யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும்?
என்னுடைய பதிவில் கேள்வி எழுப்பிய நண்பர் மகாபாரதம் பற்றிய கேள்வியில் சிவகுமாரின் நோக்கம் பற்றி தவறுதலாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ‘சோ எழுதிய புத்தகத்தையும் படித்துவிட்டா?’ என்பதுதான் அவர் எழுப்பி இருக்கும் கேள்வி. பின்னூட்டத்தில் அவர் அது பற்றி விளக்கவும் செய்கிறார். சோ சிவகுமாருக்கு நல்ல நண்பராகவும் சகநடிகராகவும் இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழ்ச்சமூகத்தில் சோ எப்படிச் செயல்படுகிறார் என்பதுபற்றி அந்த நண்பர் கேள்வி எழுப்புகிறார்.
நண்பரின் கேள்வி நியாயமானது. ஆனால் சிவகுமார் பற்றி இப்படியொரு சந்தேகம் எழும்பத்தேவையில்லை. ஏனெனில் சிவகுமார் யாரையும் அவ்வளவு சுலபமாகப் பின்பற்றுகிறவர் அல்ல. யாரையும் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்கிறவரும் அல்ல. விவேகாநந்தரைக்கூட கேள்விகளுடன்தான் அணுகுகிறவர். காந்தியைப் புகழ்ந்து பேசிய தவப்புதல்வர்கள் கேட்டுப்பாருங்கள்... ‘மனைவியை மலம் அள்ளச்சொல்லுகிறார் காந்தி. அந்த ஆள் மனுஷனா?’ என்று கேட்கிறார். ராமாயணக்கதையில் ராமனை இவர் செய்த விமரிசனம் புவியரசு கோவைஞானி போன்ற இலக்கிய அறிஞர்களையே உலுக்கியது.
சோ சிவகுமாருக்கு மிக நல்ல நண்பர்; மிக நெருங்கிய நண்பர். ஆனால் அதற்காக சோவின் கருத்துக்களை சிவகுமார் ஏற்றுக்கொண்டவர் என்றோ அவரைப் பின்பற்றுகிறவர் என்றோ பொருள்கொள்ள முடியாது. சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த தமிழ் இனம் சார்ந்த சோவின் எந்தக்கருத்தையும் சிவகுமார் ஏற்றுக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடன் பல விஷயங்கள் தொடர்பாக விவாதித்திருக்கிறேன். எந்த விஷயத்திலும் சோவின் கருத்தை சிவகுமார் பிரதிபலித்ததாக எனக்கு நினைவில்லை.
ஈழ விஷயத்தில்கூட சோவுக்கு முற்றிலும் எதிரான கருத்தைக்கொண்டவர்தான் சிவகுமார்.
இது ஒரு புறமிருக்க மகாபாரதம் பற்றிப்பேசப்போகிறவர் சோ எழுதியிருக்கும் மகாபாரதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வதே தவறு என்றும் நான் நினைக்கவில்லை.
சிவகுமாருடைய மகாபாரத உரையில் சாதியை உயர்த்தும் விஷயம் வராது என்று நிச்சயம் நம்பலாம். கடவுளை உயர்த்திப்பேசும் போக்கு இருக்காது என்பதும் கிருஷ்ணனின் பெருமைகளை உயர்த்திப்பேசுவதும் இவரது நோக்கமாக இருக்காது என்றும் நான் நம்புகிறேன்.
சரி, இந்த விவகாரம் குறித்து சிவகுமார் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா? அவர் எழுதி அனுப்பிய பதில் இது;
நான் மகாபாரதம் படிப்பது ஏதோ வயதான காலத்தில் காசி ராமேஸ்வரம் என்று புனித தலங்களுக்குச் சென்று புண்ணிய நதிகளில் மூழ்கி பாவம் தொலைத்து பகவான் தரிசனம் கொண்டு மோட்சத்தை நோக்கிப் பயணிக்கும் கோணத்தில் அல்ல என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
செம்மொழி மாநாட்டில் என் உரையைக் கேட்டவர்களுக்குத் தெரியும்.
பொழுது விடிந்தால் ‘ஏன் விடிகிறது, இன்று எத்தனை வீடுகள், எத்தனைத் தெருக்களுக்குப் போய் மலம் அள்ள வேண்டும்?’ என்ற உச்சகட்ட வேதனையுடன் வாழும் – உன்னை ஒத்த மனிதச்சகோதரன் செய்யும் வேலையை ஒரு நாள் ஒரேயொரு நாள் நீ நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
டாய்லெட்டில் உன் மலத்தையும் சிறுநீரையும்கூடத் திரும்பிப்பார்க்காமல் ஃபிளஷ் செய்யும் உனக்கு அவன் வலி எப்படித்தெரியும்?
என்னதான் வார்த்தை ஜாலங்களால் அதை வர்ணித்தாலும் அந்தச் சகோதரன் வலி அவனுக்குத்தான் தெரியும்.
நீ கற்பனைக்கூடச் செய்யமுடியாத – அந்த கடைநிலை ஊழியனாக்கப்பட்ட சகோதரன் செய்யும் பணிக்காக அவனை கடவுளுக்குச் சமமாக மதிக்கவேண்டும் என்று என் பிள்ளைகளிடம் கூறியுள்ளேன்.
மனுஸ்மிருதி பற்றிக்கேள்வி எழுப்புகிறவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில்.
.சாதிகள் பற்றிப்பேசவோ கடவுளின் மகிமைகளைச் சொல்லவோ என் மகாபாரத உரை நிச்சயம் அமையாது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.
பீஷ்மர், தர்மர், கர்ணன், கிருஷ்ணன் – கதாபாத்திரங்களின் வழியாக இன்றைய தலைமுறைக்குப் பயன்படும் சேதி ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுவதற்காகவே நான் மகாபாரதம் படிக்கிறேன்.
மண்ணில் வாழும் மனிதன் சக மனிதனைச் சமமாக மதிக்கவேண்டும். அவன் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை இல்லாத மனிதனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். கர்வமில்லாமல் வாழ வேண்டும்.
பூமிப்பந்தில் உள்ள எல்லா ஊரும் நம் ஊரே. மண்ணில் பிறந்த மக்கள் அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற உண்மையான உணர்வுடன் வாழ ஏதாவது செய்தி மகாபாரதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்வதே என் நோக்கம்.
காலங்காலமாகக் கொண்டாடப்படும் ஒரு காவியத்தை படிப்பதுகூடத் தவறு என்று வாதிடுவது சரியா என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நன்றி!
அன்புடன்,
சிவகுமார்.