Thursday, January 5, 2012

ஜெயகாந்தன்....ஜெயகாந்தன்....ஜெயகாந்தன்..!

ழுத்துலகிற்கு வருவதற்கு முன்னால் அகிலன், ஜெயகாந்தன், கல்கி, நாபா, தி.ஜானகிராமன் என்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே என்னுடைய ஆதர்ச கதாநாயகர்களாக எழுத்தாளர்களே இருந்தார்கள். பிறகுதான் சிவாஜிகணேசன், கண்ணதாசனுக்கெல்லாம் மனதில் சிம்மாசனங்கள் உருவாகின. அகிலன் நாபா இவர்களுடனான சந்திப்புகளெல்லாம் நடந்தபிறகும் ஜெயகாந்தன் சந்திப்பு மட்டும் நடைபெறாமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜெயகாந்தன் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த நேரம் அது.

பெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக South Indian Writers Conference ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் மூன்று நாட்களுக்கான கருத்தரங்கம். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை அங்கே அழைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் அன்றைக்குப் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள் யார்யாரோ அவர்கள் அத்தனைப்பேரையும் அழைத்திருந்தார்கள். தமிழிலிருந்து அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, நீலபத்மனாபன், ஸ்ரீவேணுகோபாலன், ஜி.நாகராஜன், ராஜம் கிருஷ்ணன், வல்லிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்திருந்ததால் நானும் கலந்துகொண்டேன். மலையாளத்தில் தகழியைத் தவிர மற்ற பெரிய எழுத்தாளர்கள் அனைவரும் வந்திருந்தனர். அதேபோல கன்னடத்திலிருந்தும் தெலுங்கிலிருந்தும் அன்றைக்குப் புகழோடு இருந்த அத்தனைப் பெரிய எழுத்தாளர்களும் கருத்தரங்கிற்கு வந்திருந்தனர்.

கருத்தரங்கம் பெங்களூரிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் நடந்தது. இன்றைக்கு

ஒயிட்ஃபீல்டை

நிறையப்பேருக்குத் தெரியும். ஏனெனில் ஐ.டி பூங்காவே அங்குதான் உள்ளது. அன்றைக்கு அது ஒரு வனாந்தரம். இந்த அமைப்பின் கட்டிடம் மட்டும் பெரிதாக இருக்க சுற்றிலும் அடர்த்தியான காடுபோல் இருந்த பிரதேசம் அது. கருத்தரங்கம் துவங்குவதற்கு முதல் நாளே அகிலன், நாபா, வல்லிக்கண்ணன் ஆகியோர் வந்துவிட்டனர். வேறு மாநில எழுத்தாளர்களும் வந்திருந்தனர்.

அகிலனையும் நாபாவையும் பார்த்தவுடனேயே மற்ற மொழி எழுத்தாளர்கள் “ஓ............மிஸ்டர் அகிலன், ஓ......மிஸ்டர் பார்த்தசாரதி என்று கூப்பிட்டுக்கொண்டே வந்து கைகுலுக்கி அறிமுக வணக்கம் செய்துகொள்வார்கள்.எப்படி இருக்கிறீர்கள்......? எப்போது வந்தீர்கள்.........? என்பதுபோன்ற சம்பிரதாயக்கேள்வி கேட்பார்கள். “மெட்றாஸிலிருந்துதானே வருகிறீர்கள்? என்பார்கள். இந்தக் கேள்விகளெல்லாம் முடிந்தபிறகு அவர்கள் தவறாமல் வேறொரு கேள்வியைக் கேட்பார்கள். “ஜெயகாந்தன் வரவில்லையா? என்பதுதான் அந்தக்கேள்வி.

இந்த ‘ஜெயகாந்தன் வரவில்லையா? என்ற இந்தக்கேள்வி கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அனைவரிடமும் கேட்கப்பட்டது. “நம்ம பெயர்போட்ட பேட்ஜை சட்டையிலே குத்தியிருப்பதற்கு பதில் ‘Jayakanthan not yet come என்பதுபோல ஒரு பேட்ஜ் குத்திக்கொள்ளலாம் போலிருக்கிறதே என்று ஜோக் அடித்தார் நாபா.

“ஜேகேவிற்கு இங்கே இத்தனை எதிர்பார்ப்பு இருப்பதைப் பார்த்தால் மொத்தக் கருத்தரங்கத்திற்கும் அவர்தான் ஹீரோவாக இருப்பார் போலிருக்கு. ஆனா அவர் வருவாரா என்பது தெரியலை. பல இடங்களுக்கு வருவேன் என்று ஒத்துப்பார். ஆனா வரமாட்டார். இங்கே வருவாரா என்பது தெரியலை. வந்து சேர்ந்தாரானால்தான் நிச்சயம் என்றார் இன்னொரு தமிழ் எழுத்தாளர்.

அன்று மாலையே ஜெயகாந்தன் வந்து இறங்கிவிட்டார்.

ஜெயகாந்தனை ஏற்கெனவே தமிழ்ப்புத்தகாலயத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன். அதிகம் பேசினதில்லை. இங்கே இன்னமும் மூன்றுநாட்கள் தங்கியிருப்பார் என்பதனால் தனிமையில் சந்தித்து நிறையப் பேசவேண்டும் என்று ஆசை. ஆனால் அவரைப்பற்றிய பிம்பம் பயமுறுத்தியது.

அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவர். யாரையும் மதிக்கமாட்டார். எடுத்தெறிந்து பேசுவார்........எதற்காக நாமாக அவரிடம் வலியப்போய் அவமானப்படவேண்டும் என்கிற தயக்கமும் இருந்ததனால் உடனிருந்த பழம்பெரும் எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். ஜேகேவின் சுபாவம் எப்படி? என்று வல்லிக்கண்ணன் அவர்களைக் கேட்டேன். ஏனெனில் ஜெயகாந்தன் வல்லிக்கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். அகிலன் நாபா ஆகியோருடன் வல்லிக்கண்ணனும் அன்று மதியம் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.

ஜெயகாந்தன் சுபாவம் பற்றிக்கேட்டதற்கு “அப்படியெல்லாமில்லை. கொஞ்சம் முரடர் போலத்தோன்றும்தான். ஆனால் அருமையான மனிதர். நீங்க வாங்க....நான் உங்களை அறிமுகப்படுத்தறேன். எப்படிப் பழகறார் என்பதை நீங்களே பாருங்க என்று சொல்லி ஜெயகாந்தன் அறைக்கு அழைத்துச்சென்றார் வல்லிக்கண்ணன்.

நாங்கள் போன சமயம் குளியலறைக்குப் போவதற்குத் தயாராக இருந்தார் ஜெயகாந்தன். இடுப்பில் ஒரேயொரு துண்டு மட்டுமே கட்டியிருந்தார். வாயில் வைத்திருந்த பைப்பிலிருந்து கடைசிப் புகையை இழுத்துவிட்டு பைப்பை உதவியாளரிடம் நீட்டிவிட்டு வந்தார்.

வல்லிக்கண்ணனைப் பார்த்ததும் முகமெல்லாம் சந்தோஷமாய் என்னென்னவோ பேசினார். என்னை வல்லிக்கண்ணன் அறிமுகப்படுத்தி வைக்க “ஏற்கெனவே பார்த்திருக்கேனே இவரை என்றார். பெங்களூர்ல என்ன பண்றீங்க? கிளைமேட் எப்படி என்பதுபோல் பொதுவாகப்பேசிக்கொண்டிருந்துவிட்டு குளிக்கச்சென்று விட்டார்.

அடுத்த நாள் கருத்தரங்கம் துவங்கிற்று. நிறையப்பேர் கட்டுரை வாசித்தார்கள். அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடந்தன. கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வருடம் ஞானபீடப் பரிசு அகிலனுக்குக் கிடைத்திருந்ததனால் அவருக்கு விசேஷ மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டன. அவரது கட்டுரையைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விடையளித்ததும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் சம்பிரதாயமான ஒன்று என்பது போன்றே இருந்தன. மதியம் வேறு மொழி எழுத்தாளர்கள். அவர்களுடனான விவாதம் என்று கழிந்தது

அன்று இரவு சுமார் ஏழு மணி இருக்கும். ஞானசேகரன் என்பவர் அகிலன் நாபா இருவரும் தங்கியிருக்கும் அறைக்கு ஓடி

வந்தார். ஞானசேகரன் அந்த அமைப்பின் செயலாளர். அவர்தான் மொத்த ஏற்பாடுகளையும் முன்நின்று கவனித்துக்கொண்டிருந்தவர்.

“சார் நாளைக்குக் காலையில ஜெயகாந்தன் பேப்பர் படிக்கணும். அவர் என்ன சப்ஜெக்ட் படிக்கணும் என்பதையெல்லாம் அவருக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தி இருக்கோம். இப்ப அவரிடம் போய் உங்க கட்டுரையைக் கொடுங்க சைக்ளோஸ்டைல் பிரதியெடுத்து(அப்போதெல்லாம் ஜெராக்ஸ் கிடையாது) எல்லாருக்கும் விநியோகிக்கணும். நீங்க கட்டுரைப் படிக்க ஆரம்பிக்கும்போது எல்லாரிடமும் அந்தப் பிரதி இருக்கணும். நீங்க எழுதிட்டுவந்திருக்கற பேப்பர் கொடுங்கன்னு கேட்டா “பேப்பரா என்ன பேப்பர்? அப்படின்னு திருப்பிக்கேட்கறார். இங்க படிக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் எழுதிக்கிட்டு வரலை. நீங்க என்ன சப்ஜெக்ட் எழுதுனீஙன்றதே தெரியாது. மறந்து போச்சு. நான் வெறும் கையோடத்தான் வந்திருக்கேன். அப்படின்றார். “அப்ப நாளைக்கு உங்க பேப்பர் செஷனுக்கு என்ன பண்றது? ன்னு கேட்டா “ஒண்ணும் பண்ணாதீங்க ன்னு சொல்லிச் சிரிக்கறார். இப்ப என்ன சார் பண்றது? என்று பதட்டத்துடன் கேட்டார்.

அகிலன் புன்னகைத்து “அதான் ஜெயகாந்தன் என்றவர் “அந்த நேரத்துக்கு வேறு யாரையாவது பேச வையுங்கள் கடைசி நாள் வேணும்னா ஜெயகாந்தனை வச்சுக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.

“அதான் சார் நாளை சாயந்திரத்துக்குள்ள கட்டுரைத் தந்துட்டார்னாக்கூட நாளை மறுநாள் அவர் நிகழ்ச்சியை வச்சுக்கலாம். அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிடுவேன் என்று விடைபெற்றுப்போனார் ஞானசேகரன்.

மறுநாள் மாலை. திரும்பவும் அகிலன் அறைக்கு அதே விதமான பதட்டத்துடன் வந்தார் அவர். “சார் இன்னைக்கும் இந்த நிமிடம்வரை கட்டுரை தரலைசார். கேட்டா அதெல்லாம் பிரிபேர் பண்ணமுடியாது அப்படின்றார். இப்ப என்ன செய்யட்டும் சார்?

“என்ன செய்யமுடியும்? விட்டுர வேண்டியதுதான் என்றார் அகிலன்.

“அதுவும் முடியாதே சார், மற்ற மொழி ரைட்டர்ஸுக்கு என்னால பதில் சொல்லி மாளலை. எங்கே ஜெயகாந்தன் செஷன்? அவருடைய கட்டுரை எப்போன்னு கேட்டுத் துளைச்சு எடுக்கறாங்களே சார்

“விஷயத்தை அவர்ட்டயே எடுத்துச்சொல்லிப் பேசிப்பாருங்க

ஜெயகாந்தன் அறைக்குச் சென்றுவிட்டு அரைமணி நேரம் கழித்துத் திரும்பினார் ஞானசேகரன். “ஜெயகாந்தன்கிட்ட பேசிட்டேன் சார்...........கட்டுரை எழுதி வெச்சுக்கிட்டுப் படிக்கவெல்லாம் முடியாது. வேணும்னா ஒரு அரை மணிநேரம் பேசறேன்றார்

“சரி, அப்படியே செய்யுங்க- அகிலன்.

“அதுல ஒரு சிக்கல் சார் என்றார் அவர். “இந்தக் கருத்தரங்கத்திற்கு எல்லா மொழிகள்ள இருந்தும் எல்லாப் பெரிய எழுத்தாளர்களும் வந்திருக்கீங்க. எல்லாரும் எழுதி எடுத்துவந்த கட்டுரையைப் படிப்பது, அதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களுக்கு பதிலளிப்பது என்கிறமாதிரிதான் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கு. ஞானபீடம் பெற்ற உங்களைப்போன்ற எழுத்தாளர்கள்கூட அதுக்கு உட்பட்டுத்தான் நடந்தீங்க. அப்படியிருக்கும்போது இவர் மட்டும் பேப்பர் எதுவும் படிக்கமாட்டார். வேணும்னா லெக்சர் கொடுப்பார் என்று அறிவிப்பு செய்வது எந்த அளவுக்கு சரிப்படும் என்பது தெரியவில்லை. ‘இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்? என்று யாராவது கேட்டுட்டா என்ன செய்வது சார்? என்றார் அவர் பதட்டத்துடன்.

“நீங்க நினைக்கிறமாதிரி யாரும் அப்படிக்கேட்க மாட்டாங்க. ஆனாலும் ஒரு அமைப்பாளர்ன்ற முறையில உங்க தயக்கம் நியாயமானது. ஒண்ணு செய்யுங்க ஞானசேகரன், மற்ற மொழியைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களை சந்திச்சு விஷயத்தைச் சொல்லிப்பாருங்க. அவங்க ஒப்புதல் தந்தாங்கன்னா ஜெயகாந்தன் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருங்க என்றார் அகிலன்.

புறபட்டுச்சென்ற அந்த அமைப்பாளர் சிறிதுநேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “சார் மத்தவங்க கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் சார். We are eager to hear him னு சொல்றாங்க. அவர் பேச்சைக்கேட்க அவ்வளவு ஆர்வமா இருக்காங்க சார்............... நாளைக்காலையில அவருடைய ஸ்பீச்சிற்கு ஏற்பாடு பண்ணிடறேன் என்று சொல்லிப்போனார்.

மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்ற அறிவிப்பு சைக்ளோஸ்டைல் பண்ணப்பட்டு அன்றைய இரவே எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது.

கருத்தரங்க ஹால் முழுக்க முழுமையான கூட்டம். ஏறக்குறைய வந்திருந்த அத்தனைப் பிரதிநிதிகளும் நிறைந்திருந்தனர். தமிழில் ஜி.நாகராஜன் மட்டும் ஊருக்குக் கிளம்பிவிட்டிருந்தார்.

கோட் சூட் சகிதம் கையில் பைப்புடன் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயகாந்தன். சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின்னர் ஜெயகாந்தன் பேசுவதற்கு எழுந்தார். எல்லாரும் ஆர்வத்துடன் உட்கார்ந்திருக்க......... “நான் தமிழ்ல பேசட்டுமா? என்று கேட்டார்.

“ஓ யெஸ் என்று சில குரல்களும் “இங்கிலீஷ் என்று சில குரல்களும் ஒலித்தன.

“சரி தமிழ்ல பேசறேன்........முடிஞ்சா இங்லீஷ்லயும் பேசறேன். இங்கிலீஷ் சரியாக வராவிட்டால் தமிழுக்கு வந்துவிடுவேன் என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலேயே அந்த முரட்டு அடி எல்லார் மீதும் விழுந்தது!

“எனக்கு எப்போதுமே இந்தக் கருத்தரங்கு, செமினார், கான்ஃபரன்ஸ், மீட்டிங்..............இவைகள் மீதெல்லாம் நம்பிக்கையும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இவைகளில் கலந்துகொள்வதிலோ பங்குபெறுவதிலோ எனக்கு உடன்பாடோ விருப்பமோ கிடையாது. இம்மாதிரி கருத்தரங்குகளில் உட்கார்ந்துகொண்டு மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்று பொழுது போக்குவதைக் காட்டிலும் தெருவிலே போகின்ற ஒருவனை நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் சந்தோஷமும் அதிகம். பயனும் அதிகம். என்றார்.

தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் நெளிய ஆரம்பிக்க.......மற்ற மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புருவம் சுருக்கி இன்னமும் அதிகமாய் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து அடுத்த சம்மட்டி விழுந்தது. “எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்ற ரீதியில் ஆரம்பமாயிற்று அவருடைய பேச்சு. ஆரம்பம்தான் இப்படி இருந்ததே தவிர அதன்பிறகு சீரியஸான விஷயத்துக்குப் போய்விட்டார். தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்து ஏறக்குறைய முக்கால் மணிநேரத்துக்குத் தொடர்ந்தார்.

அவரது உரை முடிந்ததும் அவரைக் கேள்விகள் கேட்டார்கள். பொதுவாக அவரது படைப்புக்கள் பற்றியும் சிறுகதைகள் பற்றியும் கேள்விகள் இருந்தன. இந்த நிகழ்ச்சி முடிந்தது.

இது முடிந்ததும் அடுத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டொரு ஜெயகாந்தனின் நூல்களை அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.(அதன் பதிப்பாளர் திரு முத்து என்பதாக ஞாபகம்) ஜெயகாந்தனின் பேச்சு முடிந்ததும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தைச் சுற்றி ஒரே கூட்டம். கருத்தரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முண்டியடித்துக்கொண்டு அந்த நூல்களை வாங்குவதற்குப் போட்டியிட்டனர். Joseph wept (தமிழில், ‘யாருக்காக அழுதான்?) என்ற புத்தகம் ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது. வேறு இரண்டொரு புத்தகங்களும் அதே வேகத்தில் முழுமூச்சாக விற்றுத்தீர்ந்தன.

அடுத்து இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது.

போட்டி போட்டுக்கொண்டு புத்தகங்களை வாங்கிய அந்த மகா மகா எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவரிடம் கையெழுத்து வேட்டை!

தங்களுக்குப் பிடித்த அபிமான நடிகரையோ எழுத்தாளரையோ சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கும் சாதாரண ரசிகர்களைப்போல நமது ஜெயகாந்தனைச் சூழ்ந்துகொண்டு மற்ற மொழியைச் சேர்ந்த பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஒன்றை கவனிக்க வேண்டும். அவர்கள் யாருமே வெறும் ரசிகர்களோ வாசகர்களோ கிடையாது...........அனைவருமே எழுத்தாளர்கள். அதுவும் அவரவர் மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். அந்த எழுத்தாளர்கள் இவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு சாதாரண ரசிகர்களைப்போல இவரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால் இவரது பெருமை – இவரது புகழ் என்னவென்பதை நினைத்தபோது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது.

கையெழுத்து வேட்டையெல்லாம் முடிந்தபிறகு வாயில் பைப் புகைய ஹாலை விட்டு வெளியில் வந்தார் ஜெயகாந்தன். வணக்கம் சொன்னதும் சிநேகமாகப் புன்னகைத்தார். “வாங்க...........இந்தப் பக்கமா நடந்துட்டு வரலாம்....சாப்பாட்டுக்குத்தான் இன்னும் நேரமிருக்கே என்று சொல்லியபடியே என்னுடைய தோள் மீது கையைப் போட்டுக்கொண்டார். “எப்படி இருந்தது பேச்சு? என்று கேட்டபடியே நடக்க ஆரம்பித்தார்.

“பிரமாதமாயிருந்தது....உங்களுடைய பேச்சும் சரி எழுத்துக்களும் சரி என்றைக்குமே இன்னொருவரால் வெல்ல முடியாத ரீதியில்தானே இருக்கும்........உங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, அல்லது ஒப்புக்கொள்வதே இல்லை என்று வைத்துக்கொண்டாலும் நீங்கள் சொல்லும் அந்தக் கருத்தை நீங்கள் சொல்லும் ரீதியில் மறுக்கமுடியாது. அப்படி ஒரு கோணம் உங்களுக்கு. அது போன்ற ஒரு பார்வை உங்களுடையது என்றேன்.

“எப்படிச் சொல்றீங்க? என்றார்.

“வேறெதுவும்கூட வேண்டாம். என்னுடைய இந்தக் கூற்றுக்கு உதாரணம் உங்கள் புத்தகங்களின் முன்னுரைகள். அந்த முன்னுரைகளில் நீங்கள் வைக்கின்ற வாதங்கள். எந்த விஷயம் பற்றியும் நீங்கள் செய்யும் வாதங்களும் சரி அந்தக் கோணத்தில் அதை மீறி ஒரு பதில் வந்துவிட முடியாது என்பதுபோல்தான் இருக்கின்றன....அப்படியே வரும் பதில்களும் உங்கள் வாதங்களுடன் மோதிப்பார்க்க இயலாதவையாய் வலுவிழந்து பரிதாபம் காட்டுவதோடு நின்றுவிடுகின்றன. இதற்கு ஒரு விஷயம் காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்

பேசிக்கொண்டே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். நான் பேச்சில் சிறிது இடைவெளி விட.... “ம்ம்..மேலே சொல்லுங்க என்றார்.

நான் சொன்னேன். “வெல்லும் சொல்!............தமிழில் ‘மங்களச்சொற்கள்இருப்பதைப் போலவே ‘வெல்லும் சொற்களும் உள்ளன. இந்த ‘வெல்லும் சொல்ஒரு சிலருக்கு மட்டுமே கைவருகிறது. அவர்களுக்கு மட்டுமே கைகட்டிச் சேவகம் புரிகிறது. அவர்களுடைய நாக்கிலும் கையிலும் மட்டுமே புரள்கிறது. அவை ஒன்றாகக்கூடி கம்பீரமாகவோ அழகாகவோ அணிவகுத்து வருகையில் மற்ற சொற்கள் எதுவும் அவற்றுக்கு ஈடாக நிற்க முடியாமல் விழுந்துவிடுகின்றன.

இன்றைக்கு இந்த ‘வெல்லும் சொற்கள்தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்.....இன்னொன்று கண்ணதாசன்............மூன்றாமவர் நீங்கள்.....இந்த வெல்லும் சொல் ஒன்றும் புதியதல்ல, திருவள்ளுவர் சொல்லிவைத்திருப்பதுதான். ‘சொல்லுக சொல்லை அச்சொல்லைப் பிறிதோர்சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து- என்கிறாரே அந்த ‘வெல்லும்சொல்லை வைத்திருப்பவர் நீங்கள்

“ஓஹ்ஹோ என்று பெரிதாகச் சத்தமெழுப்பி அட்டகாசமாகச் சிரித்தார் ஜெயகாந்தன். எந்த பதிலும் சொல்லவில்லை.

“எல்லாம் ஓகே...உங்களிடமும் சரி ; கண்ணதாசனிடமும் சரி ஏகப்பட்ட முரண்பாடுகள். அவைகளைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை என்றேன்.

“குறிப்பாக என்ன முரண்பாடு?”

“குமுதத்தில் ஒரு பக்கம் எழுதினீர்களே அவற்றிலேயே எவ்வளவு முரண்பாடு....இப்போது நீங்கள் பேசிய பேச்சில்கூட நிறைய முரண்பாடுகள் இருந்தனவே

“முரண்படுகிறவன்தான் மனிதன் என்றார் ஜெயகாந்தன் அழுத்தமாக.

“உண்மைதான்..ஆனாலும்

“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை

“புரியலை என்றேன்.

“புரியலை? என்றார் குரலை உயர்த்தி.

“இல்லை

“சொல்கிறேன்.......நேற்று மாலை நீங்கள் என்னைப் பார்க்க வல்லிக்கண்ணனுடன் என்னுடைய அறைக்கு வந்தீர்கள் அல்லவா............அப்போது நான் என்ன உடுத்தியிருந்தேன்?

“துண்டு

“என்ன துண்டு? கோவணம் என்று சொல்லுங்கள்......நேற்றைக்கு நான் கோவணம் கட்டியிருந்தேன். காரணம் அது என்னுடைய அறை. இப்போது இந்தக் கருத்தரங்க ஹாலுக்கு எப்படி வந்திருக்கிறேன்? கோட் சூட் உடுத்தி............! அங்கே கோவணத்துடன் இருந்தவன் இங்கே கோட்டும் சூட்டும் உடுத்தி டை கட்டி வந்திருக்கிறேன் எனில் இது என்னுடைய முரண்பாடு........அதாவது என்னளவில் நான் முரண் பட்டிருக்கிறேன் என்று அர்த்தம். இங்கே கருத்தரங்க ஹாலுக்குள்ளும் நான் கோவணத்துடன் வந்து நின்றிருந்தேன் என்றால் மற்றவர்களை முரண்படுத்துகிறேன் என்று அர்த்தம்

அவர் பேசுவதைக் கேட்டபடியே நடப்பது சுகமான அனுபவமாக இருந்தது. சுற்றிலும் மரம் செடி கொடிகள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்த அந்த வனாந்திரத்தில் அவர் பாட்டுக்குத் தம்மை மறந்து பேசிக்கொண்டே வந்தார். அவரது அறை வந்ததும் சிரித்துக்கொண்டே “அதிகம் பேசி போரடிச்சுட்டேனா? என்றார்

“அதிகம்தான் பேசினீர்கள்...........ஆனால் போரடிக்கவில்லை

“எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம் என்றார்.

அதுதான் ஜெயகாந்தன்!

24 comments :

ஷைலஜா said...

ரொம்ப சிறுமி நான் அப்போ ஜெயகாந்தன் ஸ்ரீரங்க்ம்க்கு வீட்டுக்குவந்திருந்தார். “மாமா தெற்குவாசல் போலாமா?” என்றேன் சரி வா என்றார்.கையைப்பிடிச்சிட்டுபோனேன்.கூல் ட்ரிங் வாங்கித்தந்தார். தலைல சுருட்டையா அழகா இருக்கு ஆனா இன்னும் நீளம் வேணும் உன் முடிக்கு வா உனக்கு ஹேர் ஆயில் வாங்கித்தரேன் என்றார். வாங்கும் போது சிகரெட் பிடிச்சார் ‘மாமா புகை ரொம்ப வர்து அப்படி திரும்பி சிகரெட் பிடிங்க’ என்று அதட்டினேன். ஊர்போய் மறுபடி திருச்சிக்கு ஏதோ மீட்டிங் வந்தவர் என்னை அப்பாவுடன் தேவர் ஹாலில் பார்த்தபோது’ என்ன நான் வாங்கித்தந்த ஹேர் ஆயில் எப்டி?’ என்றார் பெருமையாய் ‘ஆஹா மாமா ஹேர் ஆயில் விற்பனை அமோகம் ஏன்னா நாந்தான் அதிகம் வாங்கறேன் ஆனா என் தலைமுடி அப்படியே இருக்கு’;என்றேன் பெரிதாய் சிரித்தார் .. என்னால் ஜெயகாந்தனைப்பற்றி இவ்வளோ தான் சொல்லமுடிகிறது அமுதவன் உங்கள் அனுபவம் அதன் வாயிலாய் எழுந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்!

//எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம்” என்றார்.

அதுதான் ஜெயகாந்தன்!
//

இப்படி முடித்தவிதம் இருக்கே அதுதான் அமுதவன்!!! திருச்சி மண்ணுக்கே திறமை ஜாஸ்திதான்(ஐய்யெயோ எத்தனை நெல்லை மதுரை இதர மாநிலம்லாம் என்னை கொலைவெறியாப்பாக்கப்போகுதோ?:)

kaialavuman said...

அவர் காகிதத்தில் (எழுத்தில்) மட்டுமல்ல வாழ்க்கையிலும் சிங்கம் தான் என்றுக் கேள்விப் பட்டுள்ளோம். தங்களின் அனுபவம் அதை மேலும் உறுதி படுத்துகிறது. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்; இது போன்ற அனுபவங்களை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

ராஜ நடராஜன் said...

எனது இலக்கிய வாசனையை சிந்துபாத் கதையிலிருந்து துவங்கலாம்:)ஆனால் புத்தக வடிவமாக மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டவர்கள் ஜெயகாந்தனும்,சுஜாதாவும்.

பொன்னியின் செல்வன் கற்பனைகள் கலந்து படித்த விறுவிறுப்பு.சாண்டில்யனை வாத்ஸால்யனத்துக்கு மட்டுமே படித்தது,பின்பு ல.ச.ரா சொல்லும் கிடுக்கிப்பிடி தமிழுக்கு பொருள் கண்டு பிடிக்க முடியாமல் போனதென தொலைக்காட்சியின் தாக்கத்துக்கு முன்பு தமிழ் இலக்கியமும்,வாசிப்பும்
இனிமையான காலங்கள் எனலாம்.

சுஜாதா சொல்லும் தமிழாங்கிலம்,(செவர்லே கார்,மைக்கேல் ஜாக்சன் போன்ற சொற்களின் அறிமுக்ம்),கணேஷ் பாத்திரத்தின் துப்பறியும் மெல்லிய நகைச்சுவை,சின்னதான வாக்கியச் சொற்கள் போன்றவற்றை சொல்லலாம்.

இதற்கு நேர்மாறாக ஜெயகாந்தன் நீங்கள் சொல்வது மாதிரி முன்னுரையே ஒரு நாவலுக்கு நிகரான நீண்ட கருத்தாக்கம் கொண்ட சொற்களின் சொந்தக்காரர்.

வெல்லும் சொல் மூன்று பேரிடம் என கலைஞர் கருணாநிதி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் என மூன்று பேரைக் குறிப்பிட்டிருந்ததும்,முரண்பாட்டின் சொந்தக்காரர்கள் என ஜெயகாந்தனையும்,கண்ணதாசனையும் நீங்கள் சொன்னது என்னை வேறு கோணத்தில் யோசிக்க வைத்தது.முந்தைய கலைஞருக்கும்,2006-2011 வருட தி.மு.க ஆட்சிமுறையில் கருணாநிதிக்கும்தான் எவ்வளவு முரண்பாடு!

எனவே வெல்லும் சொல்லுக்கும்,முரண்பாட்டுக்கும் மூவரும் சொந்தக்காரர்களே:)

ராஜ நடராஜன் said...

யாரங்கே ஷைலஜா!திருச்சி மலைக்கோட்டையையும்,ஸ்ரீரங்க்த்தையும்,அமுதவனையும் வைத்துக்கொண்டு ஊர்ப் பெருமை பேசுவது:)

மெட்ராஸ் சூடு தாங்காம இலக்கிய தாகத்துக்கும்,சாப்பாட்டு ருசிக்கும் குடுகுடுன்னு ஓடி வர்றதுக்கு கோயம்புத்தூர்தான் வசதியாக்கும்.ராமலிங்க மண்டபம்,சிதம்பரம் பூங்கா,ராஜவீதி,தேர்முட்டித் தெரு,ஜி.டி.நாயுடு ஹாலையெல்லாம் கேட்டா ஆயிரமாயிரம் சரித்திர கதை சொல்லுமாக்கும்!

R.S.KRISHNAMURTHY said...

இந்த சீரியஸான பேட்டி(?)யோடு, நாபா, அகிலன், நீங்கள் மற்றும் நான் நால்வரும் ப்ராட்வே ஹோட்டலில் இருந்து பெங்களூர் சிடி ரயில் நிலையம் வரை வாக்கிங் போனதும், களைப்படைந்த அகிலன், ’மீதி வாக்கிங்கை டாக்ஸியில் போலாமா’ என்று கேட்டதும் நினைவுக்கு வந்தது. அத்தோடு, உங்கள் அன்னையின் அருமையான விருந்தும் நினைவுக்கு வந்தது!

கீதமஞ்சரி said...

என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய இக்கட்டுரையில் அவரை அதிகம் புரிந்துகொள்ள முடிகிறது. மகிழ்வோடு நன்றி. அவரோடு தங்களையும் அதிகமாய் புரிந்துகொள்ள முடிகிறது. தங்கள் எழுத்தின் தாக்கம் மன ஆழம் வரை ஊடுருவிப் பாய்வதாக உள்ளது. அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும் தங்களிடம். தொடர்ந்து வருவேன்.

Amudhavan said...

என்னங்க ஷைலஜா உங்களுடைய ஜெயகாந்தன் பற்றிய அனுபவமும் அருமையாய் இருக்கே. சுஜாதாவைப் பற்றிய உங்கள் நினைவுகளையும் நீங்கள் எழுதலாமே.

Amudhavan said...

எழுத்தில் மட்டுமல்லாது நடை உடை பாவனை பேச்சு எல்லாவற்றிலும் சிங்கம் போன்றவர்தான் ஜெயகாந்தன். பல பேர் அவரைப் புரிந்துகொள்ளாமல் போனதும் உண்டு. பலபேரிடம் தம்மைப் புரிந்துகொள்ளவிடாமல் ஜெயகாந்தனே செய்ததும் உண்டு. நன்றி ஸ்ரீனிவாசன்.

Amudhavan said...

வாங்க நடராஜன், நீங்கள் வருவீர்கள் என்னும்போதே கருணாநிதி பற்றிய இந்த வரிகளுக்கு ஏதேனும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். நான் சொல்ல வருவதும் அந்தக்கால பழைய கலைஞரைத்தான். கருணாநிதி என்னும்போதும் சரி; சிவாஜி என்னும்போதும் சரி, நான் கணக்கில் கொள்வது பழைய சிவாஜியைத்தான். அதே போல பழைய வசனகர்த்தா கருணாநிதியைத்தான்.

சிவாஜியின் தங்கப்பதக்கத்துக்குப் பின் வந்த படங்களை நான் கணக்கில் கொள்வது கிடையாது.அவை எத்தனைப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்த போதிலும். பாருங்கள் எல்லாரையும் இப்படியெல்லாம் வரைமுறை வைத்துக்கொண்டுதான் கொண்டாட வேண்டியிருக்கிறது.

Amudhavan said...

ஓ...நீங்க கோயமுத்தூர்காரரா நடராஜன்? கோவையில்தான் நமக்கு வேண்டியவர்கள் நிறையப்பேர் உண்டு.

Amudhavan said...

நான் எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும் புகுந்து வலம்வந்த நாட்களில் முக்கால்வாசி என்னுடனேயே இருந்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த நாள் ஞாபகங்கள் நிறைய இருக்கிறது இல்லையா ஆர்எஸ்கே!

Amudhavan said...

வாருங்கள் கீதா...தங்களின் அன்பான வருகையை ஆவலுடன் வரவேற்கிறேன்.

ஷைலஜா said...

//ராஜ நடராஜன் said...
யாரங்கே ஷைலஜா!திருச்சி மலைக்கோட்டையையும்,ஸ்ரீரங்க்த்தையும்,அமுதவனையும் வைத்துக்கொண்டு ஊர்ப் பெருமை பேசுவது:)

மெட்ராஸ் சூடு தாங்காம இலக்கிய தாகத்துக்கும்,சாப்பாட்டு ருசிக்கும் குடுகுடுன்னு ஓடி வர்றதுக்கு கோயம்புத்தூர்தான் வசதியாக்கும்.ராமலிங்க மண்டபம்,சிதம்பரம் பூங்கா,ராஜவீதி,தேர்முட்டித் தெரு,ஜி.டி.நாயுடு ஹாலையெல்லாம் கேட்டா ஆயிரமாயிரம் சரித்திர கதை சொல்லுமாக்கும்
/////

கோவைக்காரங்க மரியாதையே தனிங்க... அதை மதிச்சிப்போடணுமுங்க....(சமாளிச்சிட்டேன்னு நினைக்கிறேன்:))

ஷைலஜா said...

//Amudhavan said...
என்னங்க ஷைலஜா உங்களுடைய ஜெயகாந்தன் பற்றிய அனுபவமும் அருமையாய் இருக்கே. சுஜாதாவைப் பற்றிய உங்கள் நினைவுகளையும் நீங்கள் எழுதலாமே.

January 6, 2012 4:27 AM <<<....


உங்க அளவு எழுதவருமா தெரியல ஆனா கண்டிப்பா எழுதறேன் நன்றிங்க அமுதவன்.

SathyaPriyan said...

பதிவிற்கு நன்றிகள் கோடி அமுதவன். உங்களை போன்றவர்களின் அனுபவங்கள் எங்களுக்கு ஒளிவிளக்கு போன்று இருக்கிறது. இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதே எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கிறது.

ஜெயகாந்தன் ஒரு அனுபவம். அனுபவித்தவர்களால் சொல்லில் விளக்க முடியாது. உங்களை போன்ற தேர்ந்த எழுத்தாளர்களுக்கே அது இலகுவாகிறது.

அமர பாரதி said...

அருமையான கட்டுரைகள் நண்பர் அமுதவன் அவர்களே. நட்சத்திர வாழ்த்துக்கள்.

Amudhavan said...

வருக சத்யப்பிரியன்,தங்களைப்போன்று எவ்வித பலன்களையும் பாராது பாராட்டும் நல்ல உள்ளங்களை நினைக்கும்போது மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளது. தங்களுக்கு எனது நன்றி.

Amudhavan said...

நல்லது அமரபாரதி.மிகவும் நன்றி.

தறுதலை said...

இதில் கொண்டாட என்ன இருக்கிறதென்று புரியவில்லை. சப்பையாக தொடங்கிய பேச்சு வீரியமாக முடிந்தது என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் அந்த வீரியம் என்ன என்று சொல்லவில்லை.

புகைத்து முடித்த பைப்பை உதவியாளரிடம் கொடுத்த communist.

ஜெயகாந்தனின் சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அவரின் ஆளுமை அந்தக் கதைகளோடு முடிந்து விடுகிறது.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2012)

Amudhavan said...

'புகைத்துமுடித்த பைப்பை உதவியாளரிடம் கொடுத்த கம்யூனிஸ்ட்....' உங்களுடைய இந்தக் கண்டனத்தில் எனக்கும் உடன்பாடுண்டு தறுதலை.

Anonymous said...

ஜெயகாந்தன் கம்யூனிஸ்டா ?
சிரிப்பாக உள்ளது.கம்யூனிஸ் கட்சியிலிருந்து வளர்ந்து விட்டு காங்கிரசு பல்லக்கு தூக்குபவர்.அவருடைய தான்தோன்றி தனமான பேச்சை கேட்கும் பொது அவர் சுய நினைவுடன் பேசுகிறாரா ?என்று எண்ணதோன்றும்.
அவர் எண்ண பேசினாலும் கைதட்ட ஒரு கூட்டம் இருப்பதால் அவர் அடிக்கடி உளறுகிறார்இந்த அதிகப்பிரசங்கி.


தாஸ்

Amudhavan said...

தாஸ் அவர்களே உங்களிடம் இருக்கும் மிகவும் கறாரான, கண்டிப்பான அளவுகோல்களை வைத்து அளக்கும்போது நிச்சயம் பலபேர் வீழ்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் சில பலவீனங்களைக் கழித்துவிட்டுத்தான் அவர்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனுடைய சில பேச்சுக்களும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் கொஞ்சம் தள்ளிவைத்து அணுகும்போது அவர் மிகப்பெரும் இலக்கயக்கர்த்தா என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் கண்ணோட்டத்தைத்தான் இந்தக் கட்டுரையிலும் பதிவு செய்திருக்கிறேன்.

Anonymous said...

அவர் எழுத்துக்களில் இருந்த வீச்சு ,சத்தியஆவேஷம் எல்லாம் ஒரு காலத்தில் போற்ற தக்கதாய் இருந்ததால் அவர் புகழின் உச்சிக்கு சென்றார்.இன்று அவர் பேசும் பேச்சுக்கள் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதையே வருத்தத்துடன் குறிப்பிடுகின்றேன்.நல்ல கருத்துக்களை அள்ளி வீசிய சிறந்த எழுத்தாளன் ஜெயகாந்தனின் வீழ்ச்சி அவர் வரித்துக் கொண்ட அரசியல் சீரழிவின் ஊடாகவே வந்தது.மற்றவனுக்கு புத்தி சொல்லும் "சமூக உணர்வுள்ள ஒரு எழுத்தாளன் " என்று பெயர் எடுத்த ஒருவர் மற்றவர்களின் நையாண்டிக்கு ஆளாகியது பரிதாபத்திற்குரியது.இதெல்லாம் அவருக்கு தெரியாத சங்கதிகளும் அல்ல.இருப்பினும் அவர் திருந்த போவதில்லை.இவை எல்லாம் அகங்காரத்தில் செய்யபடுபவை.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.!

தாஸ்

தி.தமிழ் இளங்கோ said...

GOOGLE Search தேடுதல் உதவியுடன் இங்கு வந்து இப்போதுதான் இந்த பதிவைப் படித்தேன். சுவாரஸ்யமான பதிவு. ஜெயகாந்தன் வாழ்வில் ஒருநாள் நிகழ்வு. சுவாரஸ்யமான பதிவு. நன்றி.

Post a Comment