Sunday, January 8, 2012

நன்றி நண்பர்களே நன்றி!


ஒரு வாரம் எப்படி ஓடிற்றென்றே தெரியவில்லை. அவ்வளவு வேகமாக ஓடிவிட்டது.

தமிழ்மணத்தில் ‘இந்த வார நட்சத்திரமாக இருந்தது ஒரு சுவாரசியமான அனுபவம். திருமணம் போன்ற ஒரு விசேஷ நிகழ்ச்சியில் நண்பர்களும் சுற்றமும் சமூகத்தின் பெரிய மனிதர்களும் கூடியிருக்கும் இடத்தில் எல்லாருடனும் ஒன்றாக மகிழ்வும் நிறைவுமாய் கலந்திருந்துவிட்டுப் பிரிவதைப் போலுள்ளது.

தமிழ்மணம் தந்த இந்த வாய்ப்பைக் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்யலாம் என்றே முடிவெடுத்தேன். முதலில் பதிவுலகமும் எழுத்துலகமும் பற்றிய கட்டுரை ஒன்று. அடுத்து இந்திரா காந்தி பற்றிய கட்டுரை, இளையராஜாவா ரகுமானா என்று ஒரு கட்டுரை, கமலஹாசன்-சுஜாதா சந்திப்பு பற்றிய கட்டுரை, ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரை, மற்றும் சிவகுமாருடைய பேட்டி என்று முடிவாயிற்று.

இவற்றில் இந்திரா காந்தியைப் பற்றிய கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாக நினைக்கிறேன். ஆனால் வாசகர்களின் கவனம் நான் நினைத்த அளவுக்கு அதன் மீது பதியவில்லை என்றே தோன்றுகிறது. அதற்கு வைக்கப்பட்ட தலைப்பான ‘சிக்மகளூரில் ஒரு நாள் என்பது காரணமாக இருக்கலாம். இந்திரா காந்தியுடன் இரண்டு நாட்கள் என்பதுபோல் வைத்திருந்தால் அதிகமான கவனம் ஈர்த்திருக்கமுடியுமோ என்னவோ.

கமல் சுஜாதா சந்திப்பு, ஜெயகாந்தன் பற்றிய நினைவு இவை போக இளையராஜாவா ரகுமானா கட்டுரை நான் எதிர்பார்த்த அதிர்வுகளை ஏற்படுத்திற்று. ஏனெனில் சிலருடைய சில நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அந்தப் பதிவைப் படித்த இளைய தலைமுறையினர் கோபம் கொண்டார்களே தவிர அவர்களால் சரியான காரணங்களைச் சொல்லி வாதாட முடியவில்லை. தவிர இதில் வாதாடுவதற்கும் ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.

திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. அந்தக் கருத்துக்களிலிருந்து மாறுபடுபவர்கள் எத்தனைக் கேள்விகளை எழுப்பிக்கொண்டாலும் சரி, அத்தனைக் கேள்விகளுக்குமான விடை அந்தக் கட்டுரைகளிலேயே இருக்கிறது. தமிழ்த்திரை இசை என்பது இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதாக அவர்களுக்குள்ளாகவே ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் முன்பு இந்தச் சில கேள்விகளை மட்டும் வைக்கிறேன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தியைத் தள்ளிவைத்துவிட்டுப் போவது அவ்வளவு சாதாரணமில்லை. ‘கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் என்று சொல்வார்களே அப்படி நிற்கக்கூடிய பாடல்கள் சில உள்ளன.

1) தமிழில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள்.

2) பி.சுசீலாவின் பாடல்கள்.

3) கண்ணதாசனின் பாடல்கள்

4) சிவாஜிகணேசனின் பாடல்கள்

5) எம்ஜிஆர் பாடல்கள்

6) சந்திரபாபு பாடல்கள்

7) பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்

8) எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்

9) சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

10) டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்

11) வாலி பாடல்கள்..........................................இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தரம்பாள் பாடல்கள்......இப்படியெல்லாம் வகைப்பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியேஇளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?

இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் டிஎம்எஸ் பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப் பாடல்? பேசுவதற்கு வாய் கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு அந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு அந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்.

இந்தப் பட்டியல்களுக்கெல்லாம் பிறகுதான் இளையராஜா பாடல்கள் ,ரகுமான் பாடல்கள், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள், வித்யா சாகர் பாடல்கள் என்று வரவேண்டும். தமிழ்த்திரையிசையின் அடையாளங்களான மேற்கண்ட பாடல்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மத்தியிலிருந்து ஆரம்பிப்பது சில பேருக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாமே தவிர நேர்மையோ அறமோ கிடையாது.

எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும் ரகுமானைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு போங்கள். ஆனால் இளையராஜாவிலிருந்துதான் தமிழ் திரை இசை துவங்கியது என்பதுபோல் சொல்லாதீர்கள். இதோ அப்படிச் சொல்லிமுடிப்பதற்குள் ரகுமான் வந்துவிட்டார். அதுவும் சாதாரணமாக வராமல் உண்மையிலேயே புயல் போல் வந்திருக்கிறார். ஆஸ்கார் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும். அவருடைய இசை ஆல்பங்கள் வெளியாகின்ற தினங்களில் அரபுதேசங்களிலும் வேறு நாடுகளிலும் மக்கள் கியூவில் நின்று அவற்றை வாங்குகிறார்கள் என்கிறது செய்தி. இன்னொரு நாட்டில் ஆல்பம் வெளியான அன்று தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது என்கிறது இன்னொரு செய்தி. முன்னோர்களை அப்படியே தலையில் ஏறி மிதித்துவிட்டுத் தனக்குப் பிடித்த நபருக்குக் கிரீடம் சூட்டுவது மிகவும் ஆபத்தானது. பாசமலர் படத்தில் சிவாஜிகணேசன் ஒரு சட்டிக்கதை சொல்லுவார்.(வசனம் ஆரூர் தாஸ்) அந்தக் கதைதான் நினைவு வருகிறது.

இவ்வாரத்தில் எனக்கு வந்த சில தொலைபேசிகளைப் பற்றிச்சொல்ல வேண்டும். தாம்பரத்திலிருந்து பிரகாஷ் குமார் என்பவர் தொலைபேசி செய்திருந்தார். “இளையராஜாவா ரகுமானா கட்டுரைப் படித்தேன். நான் அன்னக்கிளி படம் வந்தபோது எஸ்எஸ்எல்சி முடித்தவன். அந்த நாட்களிலிருந்துதான் நான் தனியாகவும் நண்பர்களுடனும் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். இளையராஜாவின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஆனால் எங்கப்பா எப்போதுமே பழைய பாடல்களின் ரசிகர். பழைய பாடல்கள் போல் வராது என்பார். அவருக்கும் எனக்கும் எப்போதுமே இந்த விஷயத்தில் ஆகாது. நான் என்னுடைய கருத்துக்களை விட்டுக்கொடுத்ததே இல்லை. உங்கள் பதிவை உங்களுடைய நண்பர் வீட்டில்தான் படித்தேன். படித்துவிட்டு ஒரு இரண்டு நாட்கள் எங்க அப்பா கேட்கும் பாடல்களைக் கேட்டுப்பார்த்தேன். குறிப்பாக ‘நினைக்கத்தெரிந்த மனமே பாடலும் ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்துபாடலும் என்னை என்னவோ செய்தன. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்காமல் இருந்தது இத்தனை நாட்களும் வாழ்வில் எதையோ இழந்ததைப்போல் உணர்கிறேன் என்றார். இதுதான் இதுதான் எனக்கு வேண்டியிருந்த பலன். யாரோ ஒருவருக்கு ஒரே ஒருவருக்கு இதுபோன்ற எண்ணம் வந்திருந்தாலும் போதும் என்றே தோன்றுகிறது.

இறுகப் படிந்துவிட்ட சில படிமங்களை உலுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் தமிழில்தான் இம்மாதிரியான குளறுபடிகள் அதிகம். அத்தனைக்கும் இந்த ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம். சிவாஜிகணேசனை மிஞ்சிவிட்டார் கமல் என்று சொல்லுவது, கண்ணதாசனை மிஞ்சிவிட்டார் இன்னொருவர் என்று சொல்லுவது இம்மாதிரியான போக்குக்கெல்லாம் கர்நாடகத்திலெல்லாம் இடமே இல்லை. ராஜ்குமாரை மிஞ்சிவிட்டார் இன்னொருவர் என்று சொல்லிவிட்டு எவனும் கர்நாடகத்தைவிட்டு உயிரோடு போய்விடமுடியாது.

நம்முடைய அடையாளங்களாக பத்துவருடத்திற்கு ஒருவரை மாற்றிக்கொண்டிருந்தோமானால் மாற்றியவரும் நிற்கமாட்டார். மற்றவனும் இந்த சமுதாயத்தை மதிக்கமாட்டான். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அரசியல், இலக்கியம், திரைப்படம், கலையுலகம் எல்லாவற்றிலும் நாம் பாட்டுக்கு என்னென்னமோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு பத்து வருடங்களுக்கு அல்லது இருபது வருடங்களுக்கு ஒருவரை மாற்றிக்கொண்டே இருக்கிறோம்.

இன்னொரு திரையுலகைச் சேர்ந்த நண்பர் போன் செய்திருந்தார். அவர் எம்எஸ்விக்கும் நல்ல நண்பர். அவர் சொன்னார். “இன்றைய இளையதலைமுறையினரில் சில பேர் இதுமாதிரி கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான். அதுவும் நெட்டில்தான் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் கருத்து எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தைத் தந்தது. இந்த விஷயம் எப்படியும் எம்எஸ்விக்குத் தெரியாது. நான் பிரிண்ட் அவுட் எடுத்து அவருக்குத் தரலாம் என்றிருக்கிறேன் என்றார். எனக்கு முழு அளவு நிறைவாயிருந்தது. ஏனெனில் எனக்கு எம்எஸ்வியைப் பழக்கமில்லை. தூரத்தில் பார்த்திருக்கிறேனே தவிர அறிமுகமில்லை. இத்தனை வருடங்களாக இந்தத் தமிழ் சமூகத்திற்கு இவ்வளவுபெரிய இசைக்கொடையை வழங்கியிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் மேதைமையைச் சொல்லுவதுதான் நேர்மை என்ற அளவில் மட்டுமே இங்கே அவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.

அந்த நண்பரிடம் “அப்படியே ராமமூர்த்திக்கும் ஒரு பிரதி சேர்ப்பித்துவிடுங்களேன் என்று வேண்டுகோள் வைத்தேன்.

தமிழ்மணமும் சரி என்னுடைய வலைத்தளமும் சரி வெவ்வேறு தளங்களில் உள்ள பெரிய பெரிய ஆளுமைகளை எல்லாம் தொட்டிருக்கிறது என்பது முக்கியமானது. அதற்கு சிவகுமாரின் பேட்டி காரணமாக இருக்கலாம்.

பல பெரியவர்கள் படித்துவிட்டுக் கருத்துச் சொன்னார்கள். சில பேர் தங்களைப் பற்றிக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லிவிட்டதால் விட்டுவிடுகிறேன். நிறைய ஐஏஎஸ்கள், நடுவண் அரசு மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் என்று படித்தவர்கள் நிறைய.

நிறைய டாக்டர்களை உருவாக்கியவரும் புகழ்பெற்ற டாக்டர்களில் ஒருவருமான டாக்டர் எம்.ராஜேந்திரன் போன் செய்திருந்தார். “இணையத்தில் தமிழ் படிக்கலாம் என்று உட்காருவேன். ரொம்ப மோசமான, ரொம்ப ஸில்லியான விஷயங்களையெல்லாம் எழுதியிருப்பாங்க. இணையம் என்பது என்னமாதிரியான விஞ்ஞான வளர்ச்சி. அத்தனைப் பெரிய தொழில்நுட்பத்தை என்ன இம்மாதிரியெல்லாம் உபயோகிக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும். உங்க பிளாக் ரொம்ப நன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக சிவகுமார் பேட்டி சூப்பர்ப் என்றார்.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கச் செயலாளர் தாமோதரன் போன் செய்து “அத்தனைக் கட்டுரைகளையும் படிச்சேன். அவ்வளவும் பயனுள்ளதாக இருந்தது. ரொம்பவும் வித்தியாசமாக இருந்ததுன்றதுதான் முக்கியம். அத்தனையையும் அப்படியே புத்தகமாகப் போட்டுவிடலாம் அப்படியிருந்ததுஎன்றார்.

தற்சமயம் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் இருக்கும் என்னுடைய மகள் “ப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு அவ்வளவையும் படிச்சிடறேன். எல்லாமே புதுசாவும் நல்லாவும் இருக்கு என்றாள். ‘ரொம்பக் கஷ்டப்பட்டு அவள் படிப்பதற்குக் காரணம் பெங்களூரில் பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் படிக்கமுடியாததுதான்.

ஒரு நல்ல வாய்ப்பை எனக்குத் தந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் குறிப்பாக மெயிலிலும் தொலைபேசியிலும் என்னைத் தொடர்பு கொண்ட திரு சங்கரபாண்டி அவர்களுக்கும், சென்ற வாரம் பூராவும் பதிவுகளில் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் ஏற்கெனவே ஃபாலோயர்களாக இருந்தவர்களுக்கும் புதிதாக என்னுடைய ஃபாலோயர்களாகச் சேர்ந்திருக்கும் திருவாளர்கள் சோம்லே,வெங்கட்குமார், அமிர்தநாதன் பிரசாந்தன், சில்ட் பீர்ஸ், சுனாபானா, இடிமுழக்கம், ப்ரியமுடன் வசந்த், வெங்கட் நாகராஜ், டாக்டர் பி.கந்தசாமி, ஸ்ரவாணி, தண்டோரா, விசா, முன்பனிக்காலம், குமரன், பிரபாகர் ராமசாமி, அசோக் குமார், கீதமஞ்சரி, வெண்புரவி, ஜீ..., ரியாஸ் அகமது, மாணவன் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க கேள்விகளுக்கான பதில்களைத் தம் கைப்படவே எழுதியனுப்பியதோடில்லாமல் பத்திரிகைகளில் வராத புகைப்படங்களாக வேண்டும் என்று கேட்டதற்கேற்ப படங்களைத் தேடியெடுத்து அனுப்பி முழு ஒத்துழைப்பு தந்த திரு சிவகுமார் அவர்களுக்கு என்னுடைய நன்றி.

இன்னமும் எனக்கு கணிணி பற்றியெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது. எழுதத்தெரியும் அவ்வளவுதான். அதையெல்லாம் இத்தனை நாட்களும் புகைப்படங்களுடன் ஜோடித்து தமிழ்மணத்திற்கு அனுப்பிவைத்துக்கொண்டிருந்த என்னுடைய இளைய மகளுக்கும் நன்றி.

சரி நண்பர்களே உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றி,

நாம் தொடர்ந்து சந்திப்போம்.!

14 comments :

kaialavuman said...

தங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.

நல்ல கலவையான பதிவுகள். ஒரு அலசல் கட்டுரை, பழைய நினைவுகள், ஒரு சுவையான பேட்டி என்று அருமையான கலவை.

சமீபங்களில், சாதாரணமாக மாதத்திற்கு ஒன்றிரண்டு பதிவுகளே தங்களிடமிருந்து வந்து கொண்டிருந்த நிலையில் ஒருவாரம் முழுதும் தினமும் ஒரு பதிவு இட வேண்டிய நிலையை தங்களுக்கு உண்டாக்கி எங்களை மகிழ்வுறச் செய்த தமிழ்மணத்திற்கும் நன்றிகள்

Amudhavan said...

கருத்திடுகையில் இத்தனை அன்பை வெளிப்படுத்தியுள்ள நண்பர் வேங்கட ஸ்ரீனிவாசனுக்கு நன்றி.

குறும்பன் said...

அனைத்து கட்டுரைகளும் மிகச் சிறப்பாக இருந்தன. ஒன்றிற்கு மட்டும் பின்னூட்டம் இட முடிந்தது. இதுவரை உங்கள் வலைதளம் குறித்து தெரியாமல் இருந்த நான் தமிழ்மணம் நட்சத்திர வாரம் மூலம் தெரிந்து கொண்டேன். அதனால் உங்களை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி நன்றி நன்றி.

//ராஜ்குமாரை மிஞ்சிவிட்டார் இன்னொருவர் என்று சொல்லிவிட்டு எவனும் கர்நாடகத்தைவிட்டு உயிரோடு போய்விடமுடியாது. // இது யாருக்கும் நல்லதில்லையே, கெடுதல் ஆச்சே.

சிவாஜிகணேசனை இவர் மிஞ்சிவிட்டார் எம்ஜிஆரை இவர் மிஞ்சிவிட்டார் கண்ணதாசனை இவர் மிஞ்சிவிட்டார் என்பது அவர்கள் முன்னவரைப் பற்றி குறைவாக (அ) மிகக் குறைவாக தெரிந்து வைத்துள்ளார்கள் என்று பொருள். ஆனால் அது அவர்கள் கணிப்பு. நம் கணிப்பெல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லையே. ஊடகங்கள் பணத்திற்காக உயர்வு நவிற்சியாக சில முறை சொல்வதை இவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஊடகங்களுக்கு பணமே முதன்மை என்பது உண்மை.

Amudhavan said...

குறும்பன் தங்கள் அன்பிற்கும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் நன்றி. கர்நாடகத்தினரைப் பற்றிச் சொல்லியிருப்பதற்குக் காரணம் சில விஷயங்களில் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றன என்பதைச் சொல்லவேண்டியே. தமிழன் பல்வேறு விஷயங்களில் உறுதியாக இல்லையென்பதும் அவனுடைய மேலோட்டமான தான்தோன்றிப்போக்கினாலும்தான் எத்தனை இழப்புகளைப் பெற்றுவருகிறான் என்பதற்கு ஏராளமான சாட்சிகளை தினமும் பார்த்துவருகிறோம். சிவாஜிகணேசனுக்குக் கடைசிவரை ஒரேயொரு சிறந்த நடிகர் விருதுகூட இல்லையென்பதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்? அவர் ஒரு படத்தில்கூட சரிவர நடிக்கவில்லை என்பதுதானா?

மற்றமொழிகளில் தலைசிறந்தவர்களாக அந்த மொழிக்காரர்கள் கொண்டாடும் உயர் நடிகர்களை சரிவர மதிக்காமல் மத்திய அரசைச் சேர்ந்தவர்கள் அந்த மாநிலங்களில் நடமாடிவிட முடியுமா என்று யோசித்துப்பாருங்கள்.

தமிழுக்கு ஏன் வெறும் இரண்டே இரண்டு ஞானபீடம் என்று யோசியுங்கள். நம்மிடையே இருக்கும் அடிப்படை பலவீனங்கள் என்ன என்பது புரியும்.

எல்லா வகையான முடிவுகளும் அந்தந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.

R.S.KRISHNAMURTHY said...

வரவர நீங்கள் எழுதும் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் எழுதியே நானும் பிரபலமாகிவிடுவேன் போலத் தோன்றுகிறது! ஆனாலும், நீங்கள் (கொஞ்சம் கடுமையாகவே) முன்வைத்திருக்கும் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முன் இல்லாமல் இன்றில்லை,இன்றில்லாமல் பின் இல்லை என்பதை என்றுதான் புரிந்துகொள்ளப் போகிறோம்? தகுதிக்கான அங்கீகாரம் கிடைக்காத தமிழன் சிவாஜி என்றால், பார்ப்பனனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அனைத்து திராவிடக் கட்சிகளாலும் ஒதுக்கப் பட்டவர், மகாகவி பாரதி. ஏவி மெய்யப்ப செட்டியார் விலை கொடுத்து வாங்கி, தான் தயாரித்த திரைப்படங்களில் உபயோகித்துப் பிரபலப் படுத்தியதனால் மட்டுமே பின்னர் வந்த அரசுகள் பாரதியின் படைப்புகளைப் பொதுவாக்க முடிந்தது என்பதுதான் கசப்பான உண்மை! என்றைக்கு நாம் ரசனையை மேம்படுத்தி, பாகுபாடில்லாமல் ரசிக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்றே நம் தமிழ்ச் சமுதாயம் உருப்படும். இசைக்கும் இலக்கியத்திற்க்கும் எதற்கும் இது பொருந்தும்.

கடந்த வாரத்தமிழ்மணம் தள நட்சத்திர வாய்ப்பைச் சிறப்பாகப் பயன் படுத்தி, பயனுள்ள வாசிப்பை மேம்படுத்திய தங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் ‘ஸ்டார் வேல்யூ’ அளித்த எளியவர் சிவகுமாருக்கும் நன்றி. வாழ்க, வளர்க!

Amudhavan said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஆர்எஸ்கே. உங்கள் கருத்துக்கள் எல்லாம் சரி, ஆனால் இணையத்தில் நீங்கள் எங்கே இன்னுமொரு டோண்டு ராகவனாய் ஆகிவிடுவீர்களோ என்று பயமாயிருக்கிறது.

கீதமஞ்சரி said...

தமிழ்மண நட்சத்திர வாரத்தை அழகாய் நிறைவு செய்தமைக்கு நன்றியும் பாராட்டும். உங்கள் தளத்தை அறிய வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும் நன்றி. அரசியல், இலக்கியம், இசை, திரைத்துறை என எல்லா மக்களின் ரசனை சார்ந்த பதிவுகளிலும் வாழ்வியலையும் மனோவியலையும் மையமாய் வைத்துப் படைத்த விதத்தை வெகுவாய் ரசித்தேன். மனமார்ந்த நன்றி.

Amudhavan said...

தங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தொடர்ந்து வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்தமைக்கு நன்றி கீதா.

A.R.ராஜகோபாலன் said...

மதி நிறை அய்யா வணக்கம்
இத்தனை செய்திகளை தன்னுள்ளே வைத்திருக்கும் உங்களின் எழுத்துக்களை படிக்க நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் கூடவே உங்களின் இளைய மகளுக்கும் நன்றியை தெரிவியுங்கள்.

Amudhavan said...

ரொம்ப நன்றி ஏஆர்ஆர்.

Ganpat said...

அன்பின் அமுதவன்,
பொங்கல் வாழ்த்துக்கள்.
சில பணிகளின் காரணமாக இப்பக்கம் வர இயலவில்லை.உங்கள நட்சத்திர பதிவுகள் அனைத்தும் மிக அருமை.(வழக்கம் போல)
நற்பணி தொடரட்டும்
அன்புடன்,

தறுதலை said...

தமிழ்மணம் வழி உங்கள் பதிவுகளைப் படித்தேன். அருமையான பதிவுகள். வலைப்பதிவுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பும், வழிகாட்டுதலும் மிகவும் தேவை. நன்றி.

--------------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன - '2012)

Amudhavan said...

கண்பத், உங்களை எங்கே காணோமே என்று நினைத்தேன். தங்களின் அன்பான கருத்துக்கள் இல்லாதது சிறு குறை போலும் இருந்தது.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Amudhavan said...

நண்பர் 'தறுதலை'அவர்களின் வருகைக்கு நன்றி. தமிழ்மணம் வழி என்னுடைய முந்தைய பதிவுகள் சிலவற்றிற்கும் கருத்துக்கள் கூறியிருக்கிறீர்கள். தங்களின் எல்லாக்கருத்துக்களுக்கும் நன்றி.

ஜெயகாந்தன் பற்றி எனக்கும் சில மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆனாலும் அவரது ஆளுமையும் எழுத்து மட்டுமின்றி நடையுடையில் வெளிப்படும் கம்பீரமும் எழுத்தாளர்கள் மத்தியில் அவரைத் தனித்துக் காட்டியதை மறுப்பதற்கில்லை.

அவர் என்னமாதிரியான கம்யூனிஸ்ட் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதில் எனக்கும் மறுப்பு இல்லை.

அந்த எழுத்தாளர்கள் சபையில் அவர் நடந்துகொண்ட விதத்திலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவரது அந்தவிதமான நடத்தைக்கும் அங்கு வந்திருந்த மற்ற ஏனைய மொழி எழுத்தாளர்களும் சரி நம்முடைய தமிழ் எழுத்தாளர்களும் சரி விரும்பியே அனுமதித்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.மற்ற மொழி எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனின் மாட்சி எப்படியிருந்தது என்பதை வெளிச்சொல்லவேண்டும் என்பது முக்கியமென்றே கருதுகின்றேன். நன்றி தறுதலை.

Post a Comment