Friday, August 31, 2012

ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்


தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டக்கூடியதாய் இருக்கிறது. ஒரு சமூகம் என்பது வெறும் அரசியலோடு முடிந்துவிடுவதில்லை.  

இலக்கியம்,கலை,நாகரிகம்,பண்பாட்டு அடையாளச்சின்னங்கள் என்று பல்முனை சார்ந்து ஒரு கூட்டு அடிப்படைத்தளத்தில்தான் இயங்கவேண்டியிருக்கிறது.

அதனால்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது என்னும்போது நாம் கொதிப்பதும் கண்டிப்பதும் நிகழ்கிறது. வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டபோதும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டபோதும் கலைஞரை தமிழ் உணர்வாளர்கள் கொண்டாடியதும் இந்த பண்பாட்டு அடிப்படையைச் சார்ந்ததுதான். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அதே மன உணர்வில்தான் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பியனுப்பியபோது கொதித்ததும் கிளர்ந்தெழுந்ததும்கூட (கிளர்ந்தெழுந்தார்களா?) பண்பாடு மற்றும் மனிதாபிமானம்  அடிப்படையிலானதே. இதற்கும் அரசியலுக்கும்கூட சம்பந்தம் கிடையாது.

ஆனால் இங்கே, குறிப்பாகத் தமிழகத்தில் மழை பெய்வதும் அணையில் தண்ணீர் திறந்துவிடுவதும் மின்சாரம் உற்பத்தி செய்வதும் ஒரு இலக்கியவாதி புத்தகம் எழுதுவதும் அவனுக்கு ஒரு விருது அளிக்கப்படுவதும் ஏன், ஒரு சினிமா ஓடுவதும்கூட அரசியலாக்கப்பட்டு விட்டது.

இங்கே எல்லாமே அரசியல்.

தொடர்பு இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையுமே கொண்டுபோய் அரசியல் சாக்கடையில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

இதில் ரொம்பவும் மாட்டிக்கொண்டு பரிதவிப்பது கலையுலகமும் இலக்கிய உலகமும்தாம். கலையுலகத்திற்கும் அரசியலுக்கும் இங்கே வேறுபாடே இல்லை. இரண்டும் பின்னிப்பிணைந்து ஒன்றுபோலவேதான் காட்சியளிக்கின்றன. இது அண்ணாவின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இந்த நிலையை ஆரம்ப காலத்தில் பெரியாரும் காமராஜரும் எதிர்க்கவே செய்தனர். ‘கூத்தாடிகளை நம்பி ஆட்சியதிகாரத்தை எல்லாம் வழங்கிடாதீங்க. அப்புறம் எல்லாமே நாசமாப்போயிடும்’ என்று காமராஜர் ஆரம்பத்தில் சொல்லிப்பார்த்தார். இதற்காக அவர் மிகக் கேவலமாக விமர்சிக்கப்பட்டார். ‘ஆஹா கலைஞர்களைப்போய் கூத்தாடிகள் என்று விமர்சிக்கிறாரே இவர்’ என்பதாக காமராஜர்மீது இகழ்ச்சியும் கண்டனங்களும் பாய்ச்சப்பட்டன. காமராஜர்  மீதான இந்த தாக்குதல்களை அன்றைய இளைஞர் சமுதாயம் வெகுவாக ரசிக்கவே செய்தது. அடுத்து நேரப்போகும் ஆபத்துக்களை உணராமல் கூடச் சேர்ந்து ஆரவாரித்தது.

அரசியலும் கலையுலகமும் இணைந்த ஒரு அபின் கலவை தமிழகத்தின் மூச்சுக்காற்றோடு கலக்கப்பட்டது. அரசியலும் சினிமாவும் பின்னிப்பிணைந்திருக்கின்றன என்பது வெளியே தெரியாத வண்ணம் அரசியலும் இலக்கியமும், அரசியலும் தமிழர் நாகரிகமும், அரசியலும் சங்க காலத்தமிழர் பண்பாடும் மட்டுமே கலந்திருக்கிறது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை அண்ணாவும் அவருடைய தம்பிமார்களும் மிக அழகாகவும் மிக வெற்றிகரமாகவும் ஏற்படுத்தினர். இதன் முதல் அறுவடை அண்ணாவுக்கே கிடைத்தது. அவரது உடல்நலக் கோளாறால் நீண்ட காலம் அவரால் ஆட்சி செய்யமுடியாமல் போய்விட அதனைத் தொடர்ந்து கருணாநிதியும் அவரைத் தொடர்ந்து எம்ஜிஆரும் அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் சங்கிலித் தொடராய் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றனர். இதன் நீட்சியே இப்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நடிகர் விஜயகாந்த் வீற்றிருப்பது. இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதனால்தான் சில நடிகர்கள் இரண்டு படங்கள் வெற்றிபெற்றவுடனேயே அடுத்த படத்தின் வசனங்களில் தங்களை எதிர்கால முதல்வராகப் பிரகடகனம் செய்துகொள்ளும் அவலமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இத்தகைய அவலங்கள் இத்தகைய அசிங்கங்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் நடைபெறுவதில்லை. அங்கே அரசியலும் மற்ற மற்ற விஷயங்களும் வேறுவேறாகப் பகுத்துப் பார்க்கப்படுகின்றன. கலையும் இலக்கியமும் அததற்கான தளங்களில் அவற்றுக்குரிய சிறப்பான அடையாளங்களுடன் தனித்தே இயங்குகின்றன. கலையுலகின் இலக்கிய உலகின் சாதனையாளர்கள் அவர்களின் சாதனைகளுக்காக மட்டுமே அங்கே கொண்டாடப்படுகிறார்கள். யாரும் யாருக்கும் அரசியல் சாயம் பூசிப்பார்ப்பதில்லை. இலக்கிய உலகிலோ கலை உலகிலோ ஒரு சாதனையாளனை தேடிச்சென்று கொண்டாடுவது மட்டுமே அங்கே ஆட்சிக்கு வருபவர்கள் செய்கின்ற வேலை.

தமிழகத்திலே என்ன நடக்கிறது?

யோசித்துப் பாருங்கள். வங்காளத்திலும் மலையாளத்திலும் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் படைப்பாற்றல்கொண்ட எந்த படைப்பாளியாவது எந்த இலக்கியவாதியாவது அந்தந்த அரசினால் கொண்டாடப்படாமல் கௌரவிக்கப் படாமல் விடுபட்டுப் போயிருக்கிறார்களா என்று! அந்தந்த அரசுகள் மட்டுமின்றி மத்திய அரசின் மூலமாக அந்தந்த சாதனையாளர்களுக்குச் சேரவேண்டிய கௌரவங்கள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனையையும் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன மாநில அரசுகள்.

மற்ற மாநிலங்களின் அத்தனை சீனியர் எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இலக்கியவாதிகளும் மாநில அரசுகளின் கௌரவங்களைப் பெற்றது போக மத்திய அரசின் அத்தனை விருதுகளையும் தவறாமல் பெற்றிருக்கின்றனர்.

இலக்கியம் சினிமா சங்கீதம் ஓவியம் நாடகம் நாட்டியம் என்று கலை தொடர்பான எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை.
சிவாஜிகணேசன் போன்ற ஒரு மாபெரும் கலைஞனைக்கூட அவமதித்து அவருக்குச் சேரவேண்டிய விருதுகளையோ கௌரவங்களையோ கிடைக்கவிடாமல் செய்வதற்குத் தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது?

கண்ணதாசன் போன்ற ஒரு பெருங்கவிஞன் திரைஇசை, இலக்கியம் என்று இரண்டு தளங்களிலும் அபரிமிதமான சாதனைகளுடன் உழன்ற ஒரு கவிஞனை இவர்கள் சல்லிக்காசுக்குக்கூட மதிக்காமல் புறக்கணித்தார்கள் என்பதையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது?
மற்ற விஷயங்களை வேண்டுமானால் விட்டுவிடுவோம். சிவாஜிபோன்ற ஒரு மகாநடிகனுக்கு இந்தியாவின் அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்கிறது என்பது மிகமிகச் சாதாரண விஷயம். அதனைக்கூட கிடைக்கவிடாமல் செய்ய இங்கிருந்து அன்றைக்கு அமைச்சரவையில் இரண்டாம் நிலையில் இருந்த நெடுஞ்செழியன் டெல்லிக்கு அனுப்பப்பட்டு அவர் அங்கு போய் லிஸ்டிலிருந்த சிவாஜியின் பெயரை அடித்துவிட்டு அதற்கு பதிலாக அப்போது அவர்களுக்கு வேண்டியிருந்த எம்ஜிஆரின் பெயரைச் சேர்த்து ‘ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு சிறந்த நடிகர் விருது’ என்று அறிவிக்கச்செய்த சாதனையுடன் திரும்பி வந்ததை என்னவென்று சொல்வது?

கண்ணதாசனைப் புறக்கணிக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் செய்த இலக்கிய மோசடி என்ன தெரியுமா? திராவிட இலக்கியவாதிகள் அத்தனைப்பேரும் சங்க கால இலக்கியம் என்று தொடங்குவார்கள். 
புறநானூறு அகநானூறு என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம்வரை வந்து பாரதியை கவனமாகத் தவிர்த்துவிட்டு பாரதிதாசனுக்கு வருவார்கள். அவர் எழுதிய சமுதாய சீர்திருத்தப் பாடலையும் தமிழ் உணர்வுப் பாடலையும் சொல்லிவிட்டு பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கிவிடுவார்கள். எழுத்திலும் இவ்வளவுதான். பாரதிதாசனுக்குப் பிறகு யாரும் கவிதையே எழுதவில்லையா? அவருடன் தமிழ் இலக்கியம் முடிந்து போய்விட்டதா? கவிதைக்கும் பாடல்களுக்கும் இரும்புத்திரைப் போடப்பட்டுவிட்டதா? எந்த அரசாங்கமாவது தமிழ்க்கவிதைகளைத் தடை செய்துவிட்டதா? தெரியவில்லை.

சரி கண்ணதாசனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்கள் அபிப்பிராயப்படி அவன் ஒரு ‘குடிகாரக் கவிஞன்’. கண்ணதாசனைத் தவிர்த்து சுரதாவையோ அப்துல் ரகுமானையோ மேத்தாவையோ மீராவையோ சிற்பியையோ ஞானக்கூத்தனையோ குறிப்பிட்டுப் பேசலாம் இல்லையா? இவர்களெல்லாம் தமிழ்க்கவிதை எழுதவில்லையா? ஹீப்ரூவிலும் பிரெஞ்சிலுமா கவிதை எழுதுகிறார்கள்?......பேச.மாட்டார்கள். ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்க்கவிதை என்பதும் பாரதிதாசனுடன் முடிந்துபோய்விடுகிறது.
‘தமிழ் உரைநடை இலக்கியம்’ என்பதும் திருவிகவில் ஆரம்பித்து அண்ணாவுக்கு வந்து முவவைத் தொடர்ந்து கலைஞர் எழுத்துக்களுடன் நின்றுபோய் விடுகிறது. அதற்கு முன்னாலும் யாரும் உரைநடை எழுதவில்லை. அதற்குப் பின்னாலும் யாரும் தமிழில் உரைநடை எழுதவில்லை.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன், நாபா, தி,ஜானகிராமன், சாண்டில்யன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ராகி,ரங்கராஜன் கி.ராஜநாராயணன் இவர்களெல்லாம் யார்? இவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசு இதுவரை இத்தனை ஆண்டுகளாக என்ன மரியாதை செய்தது, எப்படியெல்லாம் கௌரவித்திருக்கிறது என்பதையெல்லாம் யோசித்துப்பாருங்கள்.

கண்களில் ரத்தம் வரும்.

மேற்கண்டவர்கள் எல்லாம் பிரபல வாரப்பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் காசு சம்பாதித்தவர்கள் என்று மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைப்பு.

மேற்கண்டவர்களில் ஜெயகாந்தன் ஒருவருக்கு ஏதோ ஒரு விருதும் மருத்துவச்சேவையும் செய்ததைத் தவிர (அதற்கான காரணம் என்னவென்பது வேறு விஷயம்) எந்த மரியாதையோ மத்திய அரசின் எந்தவொரு  விருதோ இதுவரையிலும் கிடைத்ததில்லை.
தமிழில் எந்தவொரு எழுத்தாளருக்காவது பத்மஸ்ரீ விருதோ பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளோ கிடைத்திருக்கின்றனவா? இல்லை. ஆனால் இதே தகுதிகள் உடைய மற்ற மாநில எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இத்தகைய விருதுகளுடன் பவனி வருகிறார்களே எப்படி?

தமிழின் மகத்தான இலக்கியவாதிகளும் கலையுலகின் உண்மையான சாதனையாளர்களும் ‘உங்களுக்கு மாநில அரசின் அல்லது மத்திய அரசின் விருதுகள் ஏதேனும் கிடைத்திருக்கிறதா?’ என்ற கேள்வி முன்வைக்கப்படும்பொழுது “எனக்கு மக்களுடைய ஆதரவு கிடைத்திருக்கிறதே இதுவே போதும். இதைவிடப் பெரிய அங்கீகாரம் என்ன இருக்கின்றது?” என்று சிரித்துக்கொண்டே சொல்லும்போது அந்த ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வழிந்து உறைந்துபோன ரத்தத்தின் வாசம் ஆட்சியாளர்களின் மூக்கைத் தொட்டிருக்கிறதா தெரியவில்லை.

இங்கே இந்தப் பதிவுகளில் மறுபடி மறுபடி கண்ணதாசனைச் சொல்லக் காரணம் அந்தக் கவிஞன்தான் ஏடுகளைத் தாண்டிவந்து மனிதர்களை – தமிழர்களைத் – தொட்டவன்! படித்தவர்களுக்கு மட்டுமென்று இருந்த இலக்கியத்தை படிக்காத ஏழைகளுக்கும் கொண்டுசென்று சேர்த்தவன். அதிகபட்சம் ‘ஆத்தா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே’ என்று மட்டுமே இலக்கியம் பாடிக்கொண்டிருந்த ஏழைகளின் வாயில் “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்றும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்றும் செந்தமிழ் வார்த்தைகளை உட்கார வைத்தவன். ‘எங்கள் திராவிடப்பொன்னாடே’ என்று பழந்தமிழ் வரலாறு சொன்னவன். போனால் போகட்டும் போடா, சட்டிசுட்டதடா கை விட்டதடா என்று சித்தர் தத்துவம் ஆரம்பித்து ‘ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்’ என்று ஒற்றை வரிக்கே பிஎச்டி பண்ணுமளவுக்கு மிக அனாயாசமாய் மனோதத்துவம் புகுத்தியவன். காதல் மயக்கம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவந்து ‘மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய இருளினைப்போலே மனமயக்கத்தைத் தந்தவள் நீயே’ என்று இரண்டு வரிகளில் சர்வசாதாரணமாக இலக்கியம் பேசத்தெரிந்தவன், மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று தமிழ்மூலம் உலகுக்கு நெறிகள் சொன்னவன். ‘காத்துக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி’ இரண்டு இரண்டு வார்த்தைகளில் ஓராயிரம் சிந்தனைகளை விதைக்க முடிந்தவன்…..இப்படிப்பட்ட ஒருவன் எந்த மொழிக்குக் கிடைத்திருக்கிறான்? இந்தியாவில் கண்ணதாசனைப் போன்ற கவிஞன் வேறு மொழிக்குக் கிடைத்திருந்தால் அவனை இந்நேரம் ரவீந்திரநாத தாகூரை விடவும் மேம்பட்ட கவிஞனாக உயரத்தில் தூக்கிவைத்து அந்த மாநிலமும் இந்தியாவும் கொண்டாடியிருக்கும்.

இங்கே என்ன நடக்கிறது?

கவியரசர் என்று அவரை அழைக்கிறார்களாம். ஆட்சியாளர்களுக்கும் அவருக்கும் தகராறு. அப்படி அழைக்கலாமா கண்ணதாசனை…. அழைத்தல் தகுமா? இதனை மாற்ற என்ன செய்யலாம்?

தற்போது பிரபலமாக இருக்கும் வேறொருவருக்கு அந்தப் பட்டத்தை நாமே சூட்டிவிடலாம்.

வைரமுத்து ‘கவியரசர்’ ஆக்கப்படுகிறார்.

கண்ணதாசனுக்கு இருக்கும் பட்டம் அது. வைரமுத்துவுக்கு அதனை எப்படி வழங்கலாம் என்று எதிர்ப்பு வலுக்கிறது.

எதிர்ப்பு தாங்காமல் வைரமுத்துவே அதனைக் கைவிடுகிறார்.

எல்லாக் களேபரங்களையும் தமக்கேயுரிய ‘நமட்டுச்சிரிப்புடன்’ பார்த்துக்கொண்டிருக்கும் சூத்திரதாரியான கலைஞர் கருணாநிதி இப்போது அறிவிக்கிறார். “கவியரசர் என்று சொன்னால்தானே எதிர்ப்பு? இதோ இப்போது சூட்டுகிறேன் இவர் கவிப்பேரரசு. இனிமேல் வைரமுத்துவைக் கவிப்பேரரசு என்று அழைப்போம்” இப்படியொரு சூழ்ச்சியான தீர்ப்பை அறிவிக்கிறார்.

இதற்குப் பிறகு இரண்டுமுறை ஆட்சி பீடம், மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் ரீதியாக கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு, கருணாநிதி மட்டுமின்றி டி.ஆர்.பாலு மற்றும் திரைப்படத்துறையிலும் ஊடகங்களிலும் இருக்கும் வைரமுத்துவின் செல்வாக்கு அனைத்தும் சேர்ந்து இப்போது கவிப்பேரரசு என்ற பட்டம் வைரமுத்துவுக்கு நிரந்தரமானது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. கவிப்பேரரசு என்ற பட்டம் வைரமுத்துவுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் இந்த அரசியல் மிக அருவெறுப்பானதாகவே இருக்கும். வைரமுத்து ஏதோ ஒரு பட்டம் பெறுவதிலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதிலும் நமக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. ஆனால் கவியரசரின் புகழைக் குறிபார்த்து எய்யப்பட்ட இந்த அம்பு வைரமுத்துவின் வெற்றிப் பதாகையில் வீற்றிருப்பதைப் பார்க்கும்போதுதான் இதையெல்லாம் சொல்லத்தோன்றுகிறது.  

அரசியல் ரீதியாகத் தமது வாழ்க்கையில் மிகப்பெரும் ராஜதந்திரங்களையும் ராஜதந்திரங்கள் என்று நினைத்து பல தவறுகளையும் செய்த கலைஞர் கருணாநிதி இலக்கிய ரீதியாகச் செய்த மாபெரும் தவறும் மோசடியும் இதுவென்றே படுகிறது.

இப்படி கண்ணதாசனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைத்தால் அவரை முற்றாகப் புறக்கணிக்கவேண்டியதுதானே? அதுதான் இல்லை. தமக்குத் தேவையான இடத்தில் ‘மட்டும்’ கண்ணதாசனைச் சேர்த்துக்கொள்கிறார். கண்ணதாசன் எழுதிய அத்தனை ஆயிரம் பாடல்களையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டியதுதானே? சன் டிவி கலைஞர் டிவி மட்டுமில்லாமல் ‘முரசு’ டிவியையும் ஆரம்பித்து கண்ணதாசன் எழுதிய பாடல்களை முதன்மையாக வைத்துத்தான் காலத்தை ஓட்டவேண்டியிருக்கிறது. இன்று மட்டும் அல்ல பின்வரும் நாட்களிலும- என்னே காலத்தின் கொடுமை!

திராவிட ஆட்சிக்காலத்தில் திரைத்துறையிலேயேகூட எத்தனையோ சாதனையாளர்கள் பத்ம விருதெல்லாம் கிடைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார்கள். முத்துராமன் எஸ்எஸ்ஆர் நாகேஷ் போன்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படவில்லை.

ஏன் இன்றைக்கு உலகத்தமிழர்கள் மத்தியில்  தமது வித்தியாசமான உரைவீச்சால் தமிழ்த்திரை விற்பன்னர்களின் சாதனைகளை வரலாற்றுப்பதிவுகளாகப் பதியவைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மத்தியில் தாமே  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகுமாருக்குக்கூட பத்மஸ்ரீ உட்பட எந்த விருதுமே வழங்கப்படவில்லை. 

சரி, நாம் ஜெயலலிதாவுக்கு வருவோம்.

அரசியல் ரீதியாக அம்மையார் மீது நமக்கு கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. ஆனால் சில விஷயங்களில் அவர் எடுக்கும் தடாலடி முடிவுகள் பாராட்டுக்குரியதாகவே உள்ளன. மழைக்கால நீர் சேமிப்பு போல ஒரு சில அரசாங்க கொள்கை முடிவுகளும் சரி, செய்கிறாரோ இல்லையோ ‘நான் வந்தால் தமிழ் ஈழம் கிடைக்கச் செய்வேன்’ என்று போகிற போக்கில் ஒரு அணுகுண்டு வீசியதையும் சரி ரசிக்கவே முடிந்தது. இதோ இப்போது விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கான பாராட்டு விழா பற்றியதும் அப்படியான ஒன்றாகவே படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாக அரசியல் இருக்கிறதோ இல்லையோ இந்த நிகழ்ச்சியை இப்படித்தான் நடத்தவேண்டும் என்று தீர்மானித்ததில் அரசியல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முதலமைச்சர் என்பதையும் தாண்டி ஒரு ரசிகை தான் நேசித்த இரு மாபெரும் கலைஞர்களுக்கு ஆத்மார்த்தமாகச் செய்த மரியாதை என்பதாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி முடிவுக்கு வர முடிகிறது.
அதுவும் மரியாதை என்ற பெயரில் வெறும் பொன்னாடைப் போர்த்தி அனுப்பிவிடாமல் இருவருக்கும் தலா அறுபது பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும் ஃபோர்டு பியஸ்டா கார் ஒன்றையும் வழங்கியதுடன் நில்லாமல் ‘திரை இசைச் சக்கரவர்த்திகள்’ என்ற பட்டமும் கொடுத்து கௌரவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சும் எவ்வித பகட்டும் பாசாங்கும் இல்லாமால் படு நேர்மையுடன் இருக்கிறது.
“இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால்தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகாவரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒருமுறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில் குழந்தையாக இருந்தபோது அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர்மூச்சு உள்ளவரை ,அந்தப் பாடல்கள் என் மனதைவிட்டு அகலாது” என்ற முதல்வரின் வார்த்தைகள் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் சார்பாக சொல்லப்பட்ட வார்த்தைகளாகவே படுகின்றன.

அடுத்து முக்கியமான கட்டத்துக்கு வருகிறார் ஜெயலலிதா. “இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலத்தைத்தான் ‘பொற்காலம்’ என்று சொல்வார்கள். அதுபோல விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.”
இதனைத்தான் இந்தக் கருத்தைத்தான் நானும் இங்கே பல்வேறு பதிவுகளின் வாயிலாக இணையத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எண்பதுக்குப் பின்னர் பிறந்து தன்னுடைய பிறப்பிற்கு முன்னால் உலகம் என்ற ஒன்றே இல்லையென்பதுபோலும் தான் பிறந்த பிறகுதான் உலகம் இயங்க ஆரம்பித்து திரைப்படம் என்ற ஒன்றும் திரையிசை என்ற ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு அது  இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தீர்மானித்துக்கொண்டு மாய உலகத்தில் இருக்கும் ஒரு கூட்டம் வேறொரு இசையமைப்பாளர்தான் இசையையே கண்டுபிடித்தார் என்பதுபோல் நினைத்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பதுதான் மிகப்பெரிய சோகம்.

இளையராஜாவுக்கு முந்தைய தமிழ்த்திரை இசையை ரசிக்காதவர்கள் தங்கள் ரசனை வாழ்க்கையின் மிகப்பெரும் பகுதியை இழந்த பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் கொள்ளப்படுவார்கள். இவர்களைத் தாண்டியும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசைப்பிரவாகம் இன்னமும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த விழாவை நடத்திய விதத்தில் அரசியல் இல்லையே தவிர நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்த விதத்தில் ஒரு நுண்ணிய அரசியல் இருந்ததாகச் சொன்னார்கள். இது எங்கிருந்தோ கேள்விப்பட்ட ஒரு சமாச்சாரம்தான் எந்த அளவு உண்மையோ தெரியாது.
விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு என்னென்ன பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன என்று விசாரித்தாராம் ஜெயலலிதா. இதுவரை ஒரு விருதுகூடக் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டதாம். அதிர்ந்து போனவர் ‘ஐம்பது ஆண்டுகாலமாய் இசையமைத்துக்கொண்டிருப்பவர் அதுவும், முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழில் நம்பர் ஒன் என்ற இடத்திலேயே இருந்தவருக்கு எதற்காக இந்த விருதுகள் இன்னமும் வழங்கப்படவில்லை?’ என்று கேட்டாராம்.

‘விஸ்வநாதன் கண்ணதாசனோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததாலும் அவரை உயிர்மூச்சாய் கொண்டிருப்பவர் என்பதாலும் விருதுகள் தடுக்கப்பட்டன’ என்று பதில் சொல்லப்பட்டதாம். இதனைக் கேட்டு மனம் கொதித்துப்போன முதல்வர் இப்படியொரு விழாவுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் என்பதாகவும் ஒரு செய்தி கசிந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியின் நம்பகத்தன்மைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் முதல்வரின் பேச்சில் இந்த விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது. “இவர்களுக்கு தேசிய விருது பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. …………………………….நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்”

கட்சி சார்ந்தவர்களை அதுவும் கழகம் சார்ந்தவர்களை மட்டுமே மதிப்பது கொண்டாடுவது என்பது கலைஞரின் வழக்கம். அதைத் தாண்டி மக்கள் கொண்டாடுபவர்களை கௌரவிப்பது மதிப்பது என்று எம்ஜிஆர் மக்களிடம் நேரடியாக வந்தார். கவியரசரை அரசவைக்கவிஞராக நியமித்தது பிரபாகரனை ஆதரித்தது என்று மக்களின் மன ஓட்டத்தை மதிக்கும் கலை அவருக்குத் தெரிந்திருந்தது.


இதில் எந்தவகை அரசியலை அம்மையார் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஐம்பதாண்டுகால திரை இசைக்கு அவர் செலுத்தியிருக்கும் மரியாதைக்கு இசை ரசிகர்கள் சார்பாக அவருக்குப் பெரிய பூங்கொத்து கொடுத்துப் பாராட்டவேண்டும்.

21 comments :

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சிவகுமார் அவர்களைப் பற்றிய பத்தியைத் தவிர இந்தப் பதிவின் அனைத்தும் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டியவை...

சிவகுமாரின் திரை உலகப் பங்களிப்புகளைச் சாதனை' வட்டதிற்குள் கொண்டு வர நிச்சயம் யோசிக்க வேண்டும்; அவரது சமீப காலப் பிரசங்க முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை,ஆனால் நிச்சயம் சாதனைகள் அல்ல.

ஒரு நல்ல மனிதர்,நல்ல தந்தை,நடிகர்களில் அபூர்வமான ஒழுக்கமான மனிதர்...அதற்காக நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்..

மற்றபடி கண்ணதாசன், சிவாஜி கணேசன், விஸ்வநாதன் ஆகியவர்கள் விதயத்தில் நடந்தது கேவல அரசியல்..

இப்போதைய ஜெயலலிதா நிச்சயம் சிறிது வித்தியாசமாக இருக்கிறார்..போகப்போக எப்படி இருக்கும் என்பதே கேள்வி.

Anonymous said...

சங்கப்பலகை அறிவன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்...

Anonymous said...

தமிழர்களை மிதித்து ஆட்சி புரிவது ஜெ. அடுத்தவர் புகழ் பெற கூடாது என்பதில் கவனமாக இருப்பார். (நூலகம், செயலகம், இன்னும் எவ்வளவோ)
மக்கள் எப்படி போனால் என்ன என்று நினைப்பவர். (மின் வெட்டு, பஸ் கட்டணம், சமசீர் பல..) சட்டத்தை படுத்திய பாடு, உலகிலே அழியா புகழ் கொண்டது.
சக மனிதருக்கு இவர் தரும் மதிப்பு பற்றி சொல்லி தெரிய வேண்டாம். இவரின் எதாவது ஒரு குணம், நமக்கு தெரிந்த யாரிடமாவது இருந்தால் அதை நாம் புகழ்வோமா ?. முடிந்தால் மற்றவரை விட தான் இன்னும் சிறப்பாக செயல் பட்டு புகழ் பெற வேண்டும் என்று மட்டும் நினைக்க இயலாதவர்.
பார்பனியம் அப்படித்தானே நினைக்கும்.

எல்லா இடங்களிலும் கட்டாயங்கள் உள்ளன. தமிழன் எந்த காலத்தில் ஒற்றுமையாக இருந்து எதை சாதித்து உள்ளான்.
உணர்சிக்கு முக்கியம் கொடுத்து, உண்மையை மறந்து எல்லா காலங்களிலும் அடி வாங்குவதை கடமையாக கொண்டுள்ளான்.
தன் இனந்தில் ஒருவர் நற் பெயர் பெறுவது என்பதை எப்படி அவனால் ஏற்று கொள்ள முடியும்.
பார்பனாகவோ அல்லது வேறு மொழி பேசுபவனாக இருந்தால் அவர்களை உயர்த்தி வைப்பதை கடமையாக கொண்டு செய்வான். இந்த மோகமெல்லாம் அவனின் டி என் ஏ விலே பல நூறு ஆண்டுகளாக பதிந்து உள்ளது.
அடுத்த தமிழன் சாவதை பொறுத்து இருந்த தமிழர்களுக்கு, துன்பம் எப்படி வராமல் போகும். ஏன் அப்போது எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வாருங்கள் என்ற போது, கபட நாடகம் என்ற ஒரே வாதத்தை சொல்லி கொட நாடு ஒய்வு தேவைப்பட்டது.
உயிருக்கே இங்கு ஒற்றுமை இல்லை, சினிமா காரர்களுக்கும், பத்திரிக்கை காரர்களுக்கும் பரிசு என்பதில் எப்படி ஒற்றுமை வரும்.?
பார்ப்பனீயம் இன்றும் வெற்றி புன்னகையுடன் உள்ளது. இது மாறினால் நீங்கள் விரும்பும் பலருக்கு பரிசு கிடைக்கும்.
மற்றவர் புகழ் பாட வேண்டுவது உங்கள் நோக்கமாக இருக்கலாம். கட்சி கடந்து பலரையும் கௌரவித்துள்ளது கலைஞர்.
பல தாழ்த்த பட்ட மக்கள், பிற்படுத்த பட்ட மக்கள் உயர வழி செய்தது கலைஞர்.

நடிகர்கள் மக்களுக்கு செய்த பங்களிப்பு என்ன.? சிவகுமார் என்ன செய்தார்? சாதனை என்ன ? ஒரு விவசாயி, செருப்பு தைப்பவர் , சவரம் செய்பவர் மற்றும் பலரை விட இவர்கள் எந்த விதத்திலாவது பெரியவர்களா? கம்ப ராமாயண ஆராய்ச்சி செய்து மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலை, பார்பனுக்கு இனிக்கும் , ஏழை தொழிலாளிக்கு, இல்லாத மக்களுக்கு எதற்கு ? இன்னும் எவ்வளவு காலம் அடிமையாக இருப்பது. இவர்கள் நோகாமல் நொங்கு தின்று கொண்டு, சமுகத்தை ஏமாற்றுகிறார்கள். அதே போல் நீங்கள் கூறிய எழுத்தாளர்களில் எத்தனை பேர், இந்த சமுகம் முன்னேற அவர்கள் எழுதினார்கள்? பலர் தங்களின் பார்பனிய பெருமை நிலைக்க எழுதினார்கள். பலர் நடப்பதை எழுதிகிறோம் என்று ஆபாசத்தை தான் எழுதினார்கள்.

இருந்தாலும் நாசுக்கான ஜெ துதி சிறப்பாக உள்ளது.

( ஒரு சார்பாக இருந்ததால், கலைஞர் பற்றி எழுதினேன்.)

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!பல உணர்வுகளைத் தூண்டி விட்டது இந்த பதிவு.எதற்கு பின்னூட்டமிடுவதென்றே தெரியவில்லை.தமிழகத்தின் அரசியல்,இசை,கவிதை,திரைப்படம்,கண்ணதாசன்,சிவாஜி,வைரமுத்து,கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,விஜயகாந்த் என்பவற்றோடு சுரதாவையோ அப்துல் ரகுமானையோ மேத்தாவையோ மீராவையோ சிற்பியையோ ஞானக்கூத்தனையோ என எல்லோரும் மறந்து போன வானம்பாடிக் கவிஞர்களையும் குறிப்பிட்டுள்ளது தனிச் சிறப்பு.

சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பாரத் பட்டம் கூட நம்ம கட்சியில் இருப்பவர்தானே குரல் எழுப்பமாட்டார் என்ற காங்கிரஸ் அரசியல் நோக்கில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது என்றும் கூட செய்திகள் அரசல் புரசலாக பரவின.மக்கள் மனம் சார்ந்த கலைஞனாக எம்.ஜி.ஆர் இருந்த போதும் இன்றும் பழைய திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது சிவாஜி கணேசனின் குளோசப் ஷாட்கள் இப்படியொரு நடிகன் இனிமேல்தான் பிறந்து வரவேண்டும் என்ற சிவாஜி மீதான அபிமானத்தை இன்னும் வலியுறுத்தவே செய்கின்றன.

இன்று வைரமுத்துவின் வைர வரிகளாய் கருதப்படும் மனிதன் பாதி,மிருகம் பாதி பாடலின் வரிகளை நடிகர் கே.ஆர் ராமசாமி சிவன் வேடத்தில் வாயசைக்க ஏற்கனவே சொன்னது என்பதை சமீபத்தில் கறுப்பு வெள்ளை திரைப்படப்பாடலைக் காணும் போது புரிந்தது.

கதைக்களம் அனைத்தும் சொல்லியாகி விட்டது.கதைக்கான முகங்கள் மட்டுமே மாறுபடுகின்றன என்று நடிகர் நாகேஷ் ஒரு முறை சொன்னார்.

நிர்வாக ஒப்பீட்டளவில் கலைஞரின் சாதனை மிகப்பெரியது என்ற போதிலும் தான் சார்ந்த உள்நோக்க அரசியல்,சுயநலம் போன்றவற்றில் கருணாநிதி கெட்டிக்காரர் எனபதை திரும்ப திரும்ப பதிவு செய்ய வேண்டியது அவசியமில்லையென்ற போதும் விடாக்கொண்டனாக அறிக்கை விடுவதால் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் இங்கே.சென்ற வாரம் பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தையே கைவிட்டேன் என்று அறிக்கை விடுவதை நம்புவதை விட மத்திய காங்கிரஸின் நிலைப்பாட்டில் மாநில அரசு இணங்கி செயல்பட்டது என்ற என்.ராமின் புதிய தலைமுறை நேர்காணல் வலுவானது.

ஜெயலலிதாவை இன்னும் முழுவதுமாக அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள மனமில்லா விட்டாலும் கூட நீர் சேகரிப்பு,இசைக்கலைஞர்களுக்குப் பாராட்டாக எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி இரட்டையரை கௌரவித்தது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் பாராட்டுக்குரிய விசயங்கள்.இரு அரசுகளின் காலகட்ட அரசியல்,நிர்வாக செயல்பாடுகளில் இன்னும் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்க வேண்டிய அவசியமில்லாத நிலையே இருக்கிறது.நுணலும் தன் வாயால் கெடும் என்பது மாதிரி ஜெயலலிதா தன் வாயால் கெட்டால் ஒழிய தி.மு.கவிற்கான எதிர்காலம் கேள்விக்குறியானதே இந்தப் பின்னூட்ட கால கட்டம் வரை.

ராஜ நடராஜன் said...

பதிவில் நீங்கள் எதை சார்ந்து பேசு பேசுகிறீர்கள் என்ற புரிதல் இன்றி உங்களுக்கு ஜெ.துதி என அனானி பேசுவது கண்ணில் பட்டது.நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன்.

ராஜ நடராஜன் said...

@சங்கப்பலகை அறிவன்!நடிகர் சிவக்குமார் தமிழக அரசியல்,திரையுலக மறைவு அரசியல் என எந்த அரசியலிலும் சிக்காமல் இருந்ததே பெரும் சாதனைதான்.கிடைத்த வரமான ஓவியத்தை இன்னும் பட்டை தீட்டியிருக்கலாம்.

Amudhavan said...

சங்கப்பலகை அறிவன் தங்களின் வருகைக்கு நன்றி. மற்ற விஷயங்களை ஒப்புக்கொண்டுவிட்டு சிவகுமார் விஷயத்துக்கு மட்டும் மாறுபடுகிறீர்கள். சிவகுமாரின் ஓவியங்களை அந்த மகாத்மா ஓவியத்தையும் கலைவாணர் மற்றும் சில ஓவியங்களையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இதுபோன்று சொல்லியிருக்கமாட்டீர்கள். கோபுலு போன்றவர்கள் வியக்கும் ஒரு ஓவியர் அவர். ஒரு ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி நடிகராக வலம்வந்தவர் அவர். இங்கே ஒரு ஓவியராக அவரை முன்னிறுத்தவில்லையே என்று சொல்லலாம். ஒரு பன்முகத்திறமை கொண்ட அவர் இன்றைக்கு தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறார் என்பதைத்தான் எழுதியிருந்தேன்.
இயக்குநர் பாலச்சந்தர் ஒருமுறை சிவகுமார் பற்றிச்சொன்னார்; "நடிப்புக்கு இலக்கணம் சிவாஜிகணேசன். நடிகர்களுக்கு இலக்கணம் சிவகுமார்"
மற்ற மொழிகளில் யார்யாருக்கெல்லாம் விருதுகள் குறிப்பாக பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன என்கிற பட்டியலெல்லாம் தெரிந்திருந்தால் நீங்கள் இப்படிக் குறிப்பிட்டிருக்கப்போவதில்லை.
அவருடைய நினைவாற்றல் ஒன்றிற்காகவே அவருக்கு ஆயிரம் பத்ம விருதுகள் தரலாம்.

Amudhavan said...

மேற்கண்ட பதிலிலேயே உங்களுக்கான பங்கும் இருக்கிறது அனானிமஸ்

Amudhavan said...

பெயரிலி என்ற பெயரில் வந்திருக்கும் நீங்கள் யாரென்று தெரியவில்லை. ஆனாலும் இணையம் சார்ந்து திமுகழகம் இத்தனை நாட்களும் பெரிதாக கவலை இல்லாமல் இருந்து தற்போது அதன் உண்மாயான வீச்சு தெரிந்து கலைஞரே இணையத்தின் மீது கவனம் செலுத்துகிறார் என்கிற செய்தியைத் தொடர்பு படுத்தி இந்த பதிலையும் எடுத்துக்கொள்கிறேன்.
முதலாவதாக உங்கள் இறுதிப்பகுதியான 'நாசுக்கான ஜெ துதி சிறப்பாக உள்ளது' என்றிருக்கீறீர்கள். பதிவை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.அரசியல் ரீதியாக அம்மையார் மீது நமக்கு கருத்துவேறுபாடுகள் நிறைய உள்ளது- என்றுதான் ஆரம்பித்திருக்கிறேன்.
அதேபோல கலைஞரைப் பற்றிக்குறிப்பிடும்பொழுதும் அவருடைய கன்னியாகுமரி வள்ளுவர் சிலையை எல்லாம் வியந்து எழுதியதை எல்லாம் சௌகரியமாக விட்டுவிடுகிறீர்கள். நமக்கிருக்கும் பெரிய குறையே இங்கே கருத்துக்கள் என்றாலேயே ஒன்று ஜெவுக்கு முழுமையான அளவில் ஆதரவு -அதே சமயம் கலைஞரை மோசமான அளவுக்கு வெறுப்பது. அதே போல கலைஞரை முழுமையான அளவில் ஆதரிப்பது-அதே சமயம் ஜெவை முழுமையான அளவில் வெறுப்பது.. இப்படித்தான் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள்.
இது அந்தந்தக் கட்சிகளின் விசுவாசமான தொண்டர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். எல்லாரும் இப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது.
நடிகர்கள் மக்களுக்கு செய்த பங்களிப்பு என்ன? என்று கேட்கிறீர்கள். இதையும் கலைஞரை 'முழுமையாக'ஆதரிக்கும் நிலையில் இருந்துகொண்டு கேட்கிறீர்கள். இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்வதை விடவும் கலைஞரே நல்ல பதிலைச் சொல்லுவார். ஆரம்பத்தில் எம்ஜிஆரை, கே.ஆர்.ராமசாமியை,எஸ்எஸ்ஆரை,இன்னும் பல நடிகர்களை, பிறகு ராதிகாவை ஏன் இப்போது குஷ்புவை ஆதரிப்பவர் அவர்தானே? அவரது கழகம்தானே?
நான் குறிப்பிட்டிருக்கும் எத்தனைப்பேர் சமூகம் முன்னேற எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். இலக்கியம் என்பது காலத்தையும் வாழ்க்கையையும் சமூகத்தையும் பிரதிபலிப்பதுதானே தவிர வெறும் நீதி நெறி சொல்லுவது என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது அல்ல.
உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் நீங்கள் நாபாவின் பல நாவல்களைப் படித்ததில்லை போலிருக்கிறது. நாபாவின் எழுத்துக்கள் எல்லாம் சமூகத்தை உயர்த்துவதற்காக எழுதியவைதாம். அகிலனின் பல நாவல்கள்(பால்மரக்காட்டினிலே, எங்கே போகிறோம்?) இந்த வகையைச் சார்ந்தவைதாம்.
கலைஞரை பதிவில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள்போக மற்ற பல விஷயங்களுக்கு ஆதரிப்பவன் நான். கவியரசர், சிவாஜி,மற்றும் பிரபாகரன் விஷயங்களில் அவருடைய நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. இதனைச் சொல்லவேகூடாது என்பது என்ன நியாயம்?

Amudhavan said...

வாருங்கள் நடராஜன். எனக்கான பதிலை நீங்கள் சொல்லியிருப்பதற்கு நன்றி.
பதிவினை நன்றாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சிவகுமார் தாம் ஏன் ஓவியராகவே தொடரவில்லை என்பதை நிறைய தடவை அவராகவே சொல்லியிருக்கிறார். அவர் ஓவியராகவே தொடர்ந்திருந்தால் இன்றைக்கு மகாபலிபுரம் போகும் சாலையில் இருக்கும் ஓவிய கிராமத்தில் அங்கிருக்கும் ஒரு முப்பது ஓவியர்களுடன் தாம் வரையும் ஓவியங்களைச் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொண்டு யாருக்கும் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். எப்போதாவது ஒரு விகடன் இதழில் குட்டி போட்டோவும் பேட்டியும் வந்திருக்கும். ஒரு சூர்யாவையும் கார்த்தியையும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

வவ்வால் said...

அமுதவன் ,

உங்கள் வெகுஜனப்பத்திரிக்கை அனுபவத்தின் அடிப்படையில் நன்றாக கட்டுரை படைத்துள்ளீர்கள், நீங்கள் சொன்னது போல கலையுலகும், அரசியலும் இணைந்தது ,அரசியல்,கலை மட்டுமில்லாமல் மக்களையும் இன்றளவும் பாதித்து வருகின்றது.

எம்.எஸ்.விக்கு பத்மஶ்ரீ முதல் எவ்வித தேசிய விருதும் கிடைக்கவில்லை என்பதனை விகடனில் எஸ்.ரா எழுதிய கட்டுரையின் அடிப்படையில் நான் முன்னர் பதிவிட்டேன்,

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!
எம்.எஸ்.விக்கு விருது கொடுப்பட வேண்டும் என இணைய பெட்டிஷன் உருவாக்கி ஆதரவு திரட்ட சர்வேசன் என்றப்பதிவர் முயற்சித்தார்.
Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ...

//தமிழில் எந்தவொரு எழுத்தாளருக்காவது பத்மஸ்ரீ விருதோ பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளோ கிடைத்திருக்கின்றனவா?//

கண்ணதாசன்னுக்கு 1980 இல் சேரமான் காதலி என்ன்ற நூலுக்கு சாகித்ய அகதமி விருது அளிக்கப்பட்டது,

ஜெயகாந்தருக்கு 1972 இல் சாகித்ய அகதமி விருதும்,
2002 இல் ஞானபீட விருதும்
2009 இல் பத்மபூஷன் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது, (தமிழில் முதல் எழுத்தாளர்)
1996 - Fellow of Sahitya Akademi என மரியாதையும் செய்யப்பட்டுள்ளது.


வைரமுத்து ,சாகித்ய அகதமி மற்றும் பத்மஶ்ரீ பெற்றுள்ளார்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட பல எழுத்தாளர்களும் சாகித்ய அகதமி விருது பெற்றவர்களே.

//ஒரு சூர்யாவையும் கார்த்தியையும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.//

இது என்ன சார் காமெடி, அப்படினா நடிகர் அல்லாதவர்கள் வாரிசுகள் என்றால் நடிக்கவே வர முடியாதா, இல்லை சூர்யாவும்,கார்த்தியும் தமிழ் கலையுலகின் பொக்கிஷங்களா?

அவர்கள் நடிப்பதைப்பற்றி ஒன்றும் இல்லை, சிவகுமார் நடிகராகவில்லை என்றால் அவர்களை நடிகர்களாக தமிழகம் பெற்றிருக்காது மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது போல பேசுவது மிகையான ஒன்றாக இருக்கு.

Amudhavan said...

வவ்வால் உங்களை ராஜநடராஜன் நிறையப் புகழ்ந்து படித்திருக்கிறேன். பல தளங்களில் தங்களின் அறிவுசார் விமரிசனங்களைப் படித்திருக்கிறேன். சில விவகாரங்களை உண்டுபண்ணும் என்றபோதிலும் உங்களுக்கென்று ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.சாகித்ய அகாடமி கிட்டத்தட்ட நிறையப்பேருக்கு கிடைத்திருக்கிறது. நான் சொல்ல வந்தது மாநில அரசின் விருதுகள் அல்லது மாநில அரசு சிபாரிசு செய்து வாங்கித்தரும் விருதுகள்....ஜெயகாந்தனுக்கு மட்டுமல்ல அதற்கும் முன்பே அகிலனுக்கும் ஞானபீடம் கிடைத்திருக்கிறது. அகிலன் ஞானபீட விருது பெற்றபோது அவருடன் சென்றவர்கள் அவரது மகன் அகிலன் கண்ணனும் அடியேனும். இவையெல்லாம் மாநில அரசின் சிபாரிசுகள் இல்லாமல் வழங்கப்பட்டவையே. இந்த விஷயங்களில் மாநில அரசின்(திமுக,அதிமுக ஆட்சிபீடம் ஏறிய பிறகு)போக்கு என்ன என்பதுதான் என்னுடைய பதிவின் அடிநாதம்.
இன்றைய இளையதலைமுறை நடிகர்களில் சூர்யா மிகத்திறமையுடனும் அதைவிடவும் மிகப்பெரும் உழைப்புடனும் நடித்துவரும் ஒரு நடிகர்.சமூக அளவில் மிகவும் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் விளம்பர வெளிச்சம் தாண்டி செயல்படும் நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர். சூர்யா மட்டுமல்ல, கார்த்தியும் நிச்சயம் பேசப்படப் போகிறவர்களே.
தங்களின் வருகைக்கு நன்றி மட்டுமல்ல சந்தோஷமும்கூட. தாங்கள் அனுப்பியுள்ள இணைப்புகளைப் படிக்கிறேன்.

Ganpat said...

அன்புள்ள அமுதவன்,

பல மாதங்களுக்குப்பிறகு உங்களுடன் மீண்டும் அளவளாவுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.ஒரு அரிய அற்புத பதிவிற்கும் நன்றி.

காட்டில், எண்ணிக்கையில் மிகுந்த நரிகளும்,மான்களும்,ஆடு மாடுகளும் சேர்ந்து விருது வழங்கும்போது, அது ஏன் சிங்கத்திற்கும்,புலிக்கும் கொடுக்கப்படவில்லையென வருத்தப்படுவது தவறன்றோ?.

அஹிம்சை என்பதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி எந்த போராட்டத்திலும் வெற்றி பெறலாம் என மானிட இனத்திற்கே கற்பித்த நம் தேசப்பிதாவிற்கே சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை எனும் ஒரு எடுத்துக்காட்டு போதாதா இந்த விருதுகளின் லட்சணத்தை நமக்குப்புரியவைக்க??

சுதேசமித்திரன் நாளிதழ் 1910 களில் நடத்திய ஒரு கவிதைப்போட்டியில் முதல் பரிசு யாரோ ஒருவருக்கு கிடைத்தது.இரண்டாம் பரிசு சுப்பிரமணிய பாரதி எனும் கவிஞர் எழுதிய "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கும் கவிதைக்கு கிடைத்தது.

இறைவனுடைய பரிபூரண அருளுடன், நம்மை உய்விக்க நம்மிடையே தோன்றி, வாழ்ந்து, மறையும் இந்த மகா கலைஞர்களுக்கு நாம் என்ன அய்யா விருது அளிப்பது,அவர்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குவதை தவிர?
சிவாஜியோ,கண்ணதாசனோ,விஸ்வனாதனோ,
இளைய ராஜாவோ
சுசீலாவோ,எந்த விருதிற்கும் மேம்பட்டவர்கள்.
அப்பாற்பட்டவர்கள்
தமிழ் பேசும் பலகோடி இல்லங்களில் எந்த ஒரு இல்லத்திற்கும்,எந்த நாளிலும்,எந்நேரத்திலும் முன் அறிவிப்பின்றி இவர்களில் எவரேனும் சென்று அழைப்பு மணியை ஒலிக்கட்டும்.கதவைத்திறக்கும் இல்லத்தலைவர்/தலைவி முகத்தில் இவரைப்பார்த்தவுடன் கோடி சூரியன் உதித்தது போன்ற ஒளியும், கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுமே,அதைவிடவா ஒரு உயர்ந்த விருது இருக்கப்போகிறது?

ஆம்!இன்னும் பத்ம விருதுகளுக்கு நாகேஷ்,கண்ணதாசன்,விஸ்வநாதன் ஆகியோர் கிடைக்கத்தான் இல்லை.

அடுத்து சிவகுமார்.இவருடைய சாதனை என்ன என்று வினவும் சில நண்பர்களுக்கு என் பதில்:
தலைவாழை இலையில் இருபது பதார்த்தங்களுடன் தொடர்ந்து தினந்தோறும் பரிமாறப்பட்ட விருந்தை ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல வருடங்கள் கையே வைக்காமல் வைராக்கியமாக இருந்த சாதனை ஒன்று போதாதா? தான் பனைமரத்தின் கீழ் அமர்ந்து,கலயத்தில் குடித்தாலும் அது பாலே என மற்றவர்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்படுத்திய சாதனை ஒன்று போதாதா?
ஆசிரியர்களே ஒழுக்கமற்று காணப்படும் இக்காலத்தில் ஒழுக்கத்திற்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் நடிகர் அல்லவா இவர்!

இப்பொழுது கருணாநிதி!
ஒரு எண்ணை, எத்தனை எண்களுடன் பெருக்கினாலும் அவைகளில் ஒன்று பூஜ்யம் என்றால்,விடையும் பூஜ்யமல்லவா?
கருணாநிதி என்ற மனிதனிடம் இருக்கும் பல திறமைகளும்,சாதுர்யங்களும், அவர் நேர்மையற்றவர்,பொய்யர்,சுயநலவாதி எனும் பூஜ்யங்களால்,வலுவிழந்து,மதிப்பிழந்து அவரையே பூஜ்யமாக்க்கி விட்டதன்றோ!

நண்பர் அமுதவனுக்கு மீண்டும் நன்றி.

காரிகன் said...

அடிக்கடி எட்டிப்பார்க்கும் உங்கள் பக்கத்திற்கு சிலநாட்களாக வராமல் இருந்தேன்.காரணம் நீங்கள் புதிதாக எதையும் எழுதவில்லை என்பதால்.தற்போது வந்தபோது உங்களின் ஜெயலலிதா கருணாநிதி தலைப்பிட்ட பதிவை காணமுடிந்தது.சோடைபோகாத வழக்கமான கண்ணியமான நடையில் சிறப்பான பதிவை மீண்டும் எழுதி இருக்கிறீர்கள்.ஜெயலலிதாவை பற்றி பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் இப்போது அவர் எம் எஸ் வி,டி கே ஆர் அவர்களுக்கு எடுத்துள்ள பாராட்டு விழா அரசியல் தாண்டி விமர்சங்கங்களை வென்று விட்ட ஒரு அரிதான நிகழ்வு.இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துக்கள் உண்மையானவை. கிளாசிக் பாடல்களை விரும்பும் எவரும் மனதில் வைத்திருக்கும் வார்த்தைகளையே அவர் பேசிஇருக்கிறார்.இத்தனை காலமாக தமிழ் உள்ளங்களுக்கு இனிய சுகமான தாலாட்டு போன்ற பல அற்புதங்களை அனாசயமாக கொடுத்துள்ள எம் எஸ் வி அவர்களை பழங்கஞ்சி என்று சில அறிவிலிகள் ஓரங்கட்டும் இந்த வேளையில் அவர் இதை செய்திருப்பது கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய ஒன்று. இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு திரு அமுதவன் என்ன எழுதப்போகிறார் என்று நான் காத்திருந்தேன்.ஜெயலலிதாவை பற்றி நல்லவிதமாக எழுதினால் பார்ப்பனீய ஆதரவாளன் என்று வண்ணம் பூசும் சில அரசியல் கோமாளிகள் இணையத்தில் நிறையவே உண்டு.எப்படி இளையராஜா ஒருத்தர்தான் என்று மார் தட்டும் சில ஞான சூனியங்கள் இங்கே அலைந்துகொண்டிருக்கின்றனவோ அதைப்போலவே.நல்ல காரியத்தை ஒருவர் செய்யும் போது அதை பாராட்டினால் அதையும் குதர்க்கமாக சாடை பேசும் மஞ்சள்காமாலை கண் கொண்ட இவர்களை அப்படியே ஒரு ஓரமாக புறந்தள்ளி விடுங்கள். இந்த நிகழ்ச்சியில் திரு இளையராஜா என் இசை எம் எஸ் வி அவர்கள் போட்ட பிச்சை என்று சொன்னது அடிக்கோடிட்டு எழுத வேண்டிய ஒரு உண்மை. மீண்டும் நிறைய எழுத வேண்டி இருப்பதால் தற்போதைக்கு வெளியே செல்கிறேன். நன்றி அமுதவன் அவர்களே.

Amudhavan said...

கண்பத் அவர்களின் இடைவெளிக்குப் பின்னான வருகைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தில்...'இறைவனுடைய பரிபூரண அருளுடன் நம்மை உய்விக்க நம்மிடையே தோன்றி வாழ்ந்து மறையும் இந்த மகா கலைஞர்களுக்கு நாம் என்ன அய்யா விருது அளிப்பது? அவர்கள் பொற்பாதங்களைத் தொட்டு வணங்குவதைத்தவிர'....என்ற ஒரு வரி இருக்கிறது பாருங்கள். இந்த வார்த்தைக்கு இணையான இன்னொரு விமரிசனம் இந்தக் கட்டுரைக்கு வர வாய்ப்பே இல்லை என்றே படுகிறது. தங்களின் அற்புத வரிகளுக்கு நன்றி.

Amudhavan said...

வாருங்கள் காரிகன். நீங்களும் வந்து நாளாச்சே உங்கள் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நானும் ஆவலாகவே இருந்தேன்.
இளையராஜா அந்த நிகழ்வில் என்ன பேசினார் என்பது பற்றிய முழு தகவல் கிடைக்காததால் அந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்புக்குப்பின் எழுதலாம் என்றிருக்கிறேன்.(அநேகமாக தீபாவளி அன்றைக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம்)

இதில் குமுதம் கேள்விபதில்கள் வேறு. இளையராஜாவின் பதில்கள் எல்லாமே நன்றாகவும் சரியாகவும் இருக்க கேள்வி கேட்கும் நபர்கள் பற்றித்தான் கவலையாயிருக்கிறது.நீங்கள் எழுதவேண்டியிருப்பதை எழுதுங்கள். நிறையப் பேசுவோம்.

MUKUNTHAN said...

நான் நேற்று இட்ட எந்தவித அநாகரிகமான வார்த்தைக்கும் பயன்படுத்தாத YOUTUBE லிங்க் போட்ட என்னுடைய பின்னோட்டத்தை நீக்கியதன் மூலம் வெளிபட்ட தங்களின் நேர்மையை கண்டு நான் வியர்ப்படைய வில்லை. நான் எதிர்பார்த்தது தான்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண்டும். இது தனது நண்பர்களையோ அல்லது வேண்டயவர்களையோ விமர்சிக்கும் வேளையிலும் பொருந்தும்.

நீங்கள் நடிகர் சிவகுமாருடன் பழக்கம் உள்ள, நண்பர் என்று சொல்லத்தக்க அளவில் உள்ளவர் என்பது உங்கள் பல பதிவுகளில் தெரிகிறது.உங்களது நட்பைப் பாராட்டும் நேரத்தில் ஒரு விமர்சகராக நீங்கள் சாய்கிறீர்கள் என்பதை சுட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர் சிவகுமார் ஒரு பன்முகத் திறமையாளர்;ஆனால் எந்த ஒரு துறையிலும் ஒரு சாதனையாளர் அல்ல.

நடிகர் என்று எடைபோட்டால் அவரை விட சந்திரபாபு கூடத் திறமையானவர்; ஒரு பேச்சாளர் என்று எடுத்தால் அறிவொளியின் அருகில் கூட வரமாட்டார்; ஒவியராக நீங்கள் கோபுலுவுக்கு அருகில் சிவகுமாரைக் கொண்டு செல்வது, எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.இதில் சிவகுமாரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறாயா என்று என்னைக் கேட்கிறீர்கள்..நீங்கள் கோபுலுவின் ஓவியங்களைக் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

சிவகுமாரின் ஓவியங்களை கோட்டோவிய வடிவங்களில்,நுண்மைச் சிறப்பு வகையில் சேர்க்கலாம்;கோபுலு நீர்நிறம் மற்றும் எண்ணெய்வண்ண ஓவியங்களில்-வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில்- நுண்மை வகையில் உச்சங்களைத் தொட்டவர்.(அவரது ஓவியங்களை பலவற்றைப் பார்க்க நேரிடா விட்டாலும் நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு கோபுலுவைப் பற்றி எழுதிய கட்டுரையைத் தேடி வாசியுங்கள்!). சிவகுமார் ஒரு நல்ல ஓவியர், அவ்வளவே.

ஒரு நல்ல தந்தை;ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த நடிகர் என்பதெல்லாம் 'சாதனை' என்ற வட்டத்தில் அவரைச் சேர்ப்பதற்குப் பொருத்தமானவை அல்ல.

சிவகுமாரை எனக்கும் பிடிக்கும்; ஒரு 'பேக்கேஜ்' ஆக அவர் ஒரு வியப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர். ஆனால் நிச்சயம் சாதனையாளர் அல்ல.

இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எனினும் சொல்லாமலிருக்க முடியவில்லை.

விமர்சகராக அறியப்பட முடிவுசெய்தால் அதில் உச்ச பட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது கொள்கைப்பாடு காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..எண் கவனகம் திருக்குறள் முனுசாமி பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா?

சிவகுமாருக்கு நினைவாற்றலுக்காக பத்ம விருது கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொடுப்பது?!

உங்களுடைய பதில்கள் சிறுபிள்ளை வாதம் போலிருக்கிறது !
:)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

முனுசாமி என்று தவறான பெயர் எழுதி விட்டேன். அவரது பெயர் இராமையா என்று நினைக்கிறேன்.

Amudhavan said...

'எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல;சிலருக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் புதிதாக எதையாவது படிக்கலாம். அல்லது புதிதாக எதையாவது எழுதலாம்'என்று அடிக்கடி சுஜாதா சொல்லுவார். அது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது. தங்கள் வருகைக்கு நன்றி அறிவன்.

Post a Comment