Sunday, January 1, 2012

தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ப் பதிவர்களும்


ரண்டாயிரத்து ஒன்பதில்தான் இணையத்தின் பக்கம் வந்தேன். ஆரம்பத்தில் தமிழ் இணையம என்பது தமிழின் இலக்கியங்களை, படைப்புக்களைப் பதிந்து வைப்பது, எந்தத் தகவல் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வது, சங்க இலக்கியம் பூராவையும் இணையத்தில் பார்க்கமுடியும், தற்கால இலக்கியத்தையும் கொண்டுவந்துவிடலாம், வீட்டிலேயே ஒரு மிகப்பெரிய நூலகமோ, என்சைக்ளோபீடியாவோ இருப்பதற்கு சமம் என்ற அளவில்தான் அறிந்துகொண்டிருந்தேன்.

கம்ப்யூட்டரின் வருகை என்பதே முதன்முதலாக எல்லாரைப் போலவும் மானசிக எதிர்ப்புடன்தான் எனக்கும் அறிமுகம் ஆகியிருந்தது. அப்போதெல்லாம் அரசாங்கப் பணியாளர்களில் பெரும்பகுதியினர் இந்தியாவில் கம்ப்யூட்டரின் வருகையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தனர். கம்ப்யூட்டர்

வந்துவிட்டால் பலருக்கு வேலைப் போய்விடும். பலரும் தங்கள் பணிகளை இழக்கவேண்டிவரும் என்ற கோஷம்தான் மக்கள் முன் வைக்கப்பட்டது. “ஒரு கம்ப்யூட்டர் இருநூறு பேரு வேலையைச் செய்யுமாம்லே......அப்ப நமக்கெல்லாம் வேலைப் போயிருமில்லே. திரும்ப ஊருக்குப் போயி களைப் புடுங்க வேண்டியதுதான். கம்ப்யூட்டர் வேணாமின்னு எதிர்த்து இன்னைக்கி ஆர்ப்பாட்டம். லீவு போட்டுப் போயி கலந்துக்க வேண்டியதுதான் என்று சொல்லி லீவு போட்டுட்டுப் போன பணியாளர்களை நான் அறிவேன்.

கம்ப்யூட்டரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் எல்லாம் நடந்தன. தொழிலாளர் யூனியன்கள் முறுக்கேறிய முஷ்டியுடன் கம்ப்யூட்டர் பெட்டியை உடைத்துவிட சகல ரௌத்ரங்களுடனும் தயாராக இருந்தன. ‘இந்தியா போன்ற ஜனத்தொகை அதிகமான நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லை. நூற்றுக்கணக்கான பேர் செய்யும் வேலையை ஒரேயொரு ‘பொட்டி செய்யிதுன்னா அப்ப இவனெல்லாம் மாற்று வேலைக்கி எங்கே போவான்? ஒண்ணு கம்ப்யூட்டர் நம்ம நாட்டுக்கு வேணாம், இல்லேன்னா ஒரு இருவது வருஷம் தள்ளி வரட்டும் என்று சில மிதவாதிகள் நியாயம் பகிர்ந்தனர். ஆனால் யாருக்காகவும் காத்திருக்காமல் எந்த எதிர்ப்பினையும் சட்டை செய்யாமல் கம்ப்யூட்டர் அது பாட்டுக்கு ஜம்மென்று வந்து இறங்கியது.

அடுத்த கட்டம் வேறொரு பரபரப்புடன் ஆரம்பித்தது.

“பரசுராமன் தன்னுடைய மகனை கம்ப்யூட்டர் படிக்க வச்சுட்டானாமில்லே........பத்தாயிரம் ரூபாய் சம்பளமாமில்லே என்ற குசுகுசு விசாரணை தொடங்கியது. கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பாடத்திட்டங்கள் புகுத்தப்பட்டு க்ம்ப்யூட்டர் சயின்ஸ் என்று அழைக்கப்பட்டது. நகரங்களில் பல்வேறு காதல்களுக்கும் இளைஞர்களின் மோதல்களுக்கும் களமாயிருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுகள் விடைபெற்று கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்டுகள் முளைத்தன.

ஆரம்ப காலத்தில் லட்சரூபாய் கட்டணத்துடன்தான் கம்ப்யூட்டர் கோர்ஸுகள் ஆரம்பிக்கப்பட்டன. கோர்ஸ் முடிந்ததும் சொந்தமாக ஒரு கணிணியும் ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உடனடி வேலை என்றும் கல்லூரி முடித்த இளைய தலைமுறைக்கு வலை விரிக்கப்பட்டது.

பின்னர் லட்ச ரூபாய் என்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டு முப்பதாயிரம் ரூபாய்க்கு வந்தது. அதன்பின்னர் மேலும் குறைந்து இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பேஸிக் பாடங்கள் ஒரு சில ஆயிரங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.

வீடுகளிலும் கம்ப்யூட்டர் லேண்ட் லைன் டெலிபோன் அளவுக்கு வந்துவிட்டன. எல்லார் கைகளிலும் செல்போன் என்பதுபோல் எல்லார் வீடுகளிலும் கம்ப்யூட்டர், எல்லார் கைகளிலும் லேப்டாப் என்பது இன்னும் சில வருடங்களில் வந்துவிடலாம்...........கம்ப்யூட்டர் பயன்பாட்டை ரயில்வே புக்கிங் கவுண்டரிலும் சில வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டிலும்தான் நேரடியாகப் பார்க்க முடிந்தது. இங்கிருந்து ஊருக்குப் போவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறோம் சரி; அங்கிருந்து திரும்பி வருவதற்கும் இப்போதே இந்த ஸ்டேஷனிலேயே டிக்கெட் எடுக்க முடியும்னா கம்ப்யூட்டர் என்பது ‘படா ஆசாமியாகத்தான் இருக்கமுடியும் என்று நண்பர் ஒருவர் வியந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

இடுப்பிற்குக் கீழே எந்தவித சுவாதீனமும் இல்லாமல் வெறுமனே ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு துவண்ட கால்களுடைய பெண்மணி அவர். பெங்களூரில் வசிக்கிறார் ஜானகி என்று பெயர். துவண்ட கால்களையுடைய அந்தப் பெண்மணி இங்கிலீஷ் கால்வாயை நீந்திக்கடந்து சாதனை படைத்திருக்கிறார். இந்தச் சாதனை கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் பெண்மணியைப் பேட்டி கண்டு கல்கி பத்திரிகையில் எழுதினேன். அட்டைப்படக் கட்டுரையாகப் போட்டிருந்தார்கள். சில மாதங்கள் கழித்து ‘அந்தக் கட்டுரையை எங்கள் நாட்டுப் பாடபுத்தகத்தில் பயன் படுத்திக்கொள்ளப் போகிறோம். தங்கள் அனுமதி தேவைஎன்று சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதம் மிகவும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்திருந்தது. நம்முடைய கட்டுரையைப் பாடநூலில் வைக்கப்போகிறார்கள் என்ற நிறைவுடன் ஒப்புதல் தெரிவித்து சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுத நினைத்தேன். நான் பணிபுரிந்த டெலிபோன் தொழிற்சாலையின் சேர்மனுக்கு உதவியாளராயிருந்தவர் நண்பர் தேசிகன். முக்கியமான கடிதங்களையெல்லாம் அவரிடம்தான் டைப் பண்ணித்தரச்சொல்வேன். அருமையான ஆங்கிலத்தில் எழுதி எலெக்ட்ரானிக் டைப்ரைட்டிரில் மிக நேர்த்தியாக டைப் செய்து தருவார். இந்தக் கடிதத்தையும் அவரிடம் கொண்டுபோனேன். மளமளவென்று டைப் அடித்து உருவி கறுப்புப்பேனா தந்து கையெழுத்துப் போடச்சொன்னார். போட்டேன். எழுந்து அவரது சேம்பரில் புதிதாய் இடம்பிடித்திருந்த ஒரு இயந்திரத்தில் பதிந்தார். இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கு ஊடுருவிய பேப்பரை உருவி எடுத்து என்னிடமே தந்து “உங்க பதில் சிங்கப்பூர் அமைச்சகத்துக்குப் போய்விட்டது என்றார்.

“என்னது? என்றேன் அதிர்ந்துபோய்!

FAX என்றார்.

கம்ப்யூட்டருக்குத் தங்கை போலும்.

இத்தனை விரைவில் இப்படியெல்லாம் செய்யமுடியும் என்பதை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்துக்கூட பார்த்திருக்கமுடியாது. சென்னையிலிருந்து பெங்களூருக்கு டிரங்கால் போட்டுவிட்டு அந்த போன் தொடர்பு கிடைத்ததும் நான்கு ஊருக்குக் கேட்கும்படிக் கத்தினால்தான் அந்த முனைக்கு சன்னமாகவாவது கேட்கும். வெளிநாட்டு தொடர்புகளுக்குக் கேட்கவே வேண்டாம். அந்தக் கால மாரியப்பா, ஜீவா அளவுக்குக் கத்த வேண்டும். இப்போதெல்லாம் அப்படியில்லை. அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் இருக்கும் மகள் ஜி மெயிலில் காமிராவுக்கு முன் உட்கார்ந்து பிஸா சாப்பிட்டுக்கொண்டே மணிரத்தினம் படத்து மெல்லிய குரலில் பேசினாலும் பெங்களூரோ சென்னையோ எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டே நாமும் ஆற அமர கம்ப்யூட்டர் மானிட்டரில் முகம் பார்த்து பதில் சொல்லிக்கொண்டிருக்க முடிகிறது.

கணிணியில் தமிழைக் கொண்டுவர முடியும் என்பதை நீண்ட நாட்களாக பார்க்கப்போகும் போதெல்லாம் சுஜாதா சொல்லிக்கொண்டே இருப்பார். முதல்முறை அமெரிக்கா சென்று அங்கு பார்த்துவந்ததைப் பற்றிப் பேசும்போது அவருடைய பேச்சு முழுக்க கம்ப்யூட்டர் பற்றியதாகவே இருந்தது. “இன்னும் கொஞ்ச நாள்ல டைப்ரைட்டிங் மெஷின் எல்லாம் போயிரும்யா. நான் கூட கம்ப்யூட்டர்லயே எழுத ஆரம்பிச்சுருவேன் என்றார்.

“தமிழ்ல எழுத முடியுமா? என்றேன்.

“ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழ்தான் கம்ப்யூட்டர் துறையில மிக வேகமாக வளர்ந்துட்டிருக்கு. சிங்கப்பூர்ல எல்லாம் கம்ப்யூட்டருக்குள்ள தமிழ் வந்தாச்சு. நமக்குத்தான் இன்னமும் கம்ப்யூட்டரே சரியா வரலையே என்றார்.

அடுத்து ஒருமுறை நண்பர் பாவை சந்திரன் மற்றும் ஒரு நண்பருடன் சென்றிருந்தபோது எங்கள் மூவரையும் அறைக்குள் அழைத்துச்சென்று புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த கம்ப்யூட்டரைக் காட்டினார். “தமிழ் சாப்ட்வேர் போட்டாச்சு. இப்பல்லாம் தமிழ்லயே டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன். என்றவர் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ‘இங்கு வருகை தந்திருக்கும் நண்பர்கள் பாவைசந்திரன், அமுதவன், குமார் ஆகியோருக்கு நல்வரவு என்று டைப் அடித்துக்காட்டினார். அதுதான் கம்ப்யூட்டரில் நான் பார்த்த முதல் தமிழ்!

அதற்கு சற்றுமுன்னால் என்று நினைக்கிறேன். ஒரு நாள் சிங்கப்பூரிலிருந்து நண்பர் நா.கோவிந்தசாமி வீட்டிற்கு வந்திருந்தார். அகிலன் கண்ணன் மூலம் பழக்கமான நல்ல நண்பர் அவர். கம்ப்யூட்டரில் தமிழ் கொண்டுவருவதற்கு பாடுபட்ட முக்கயஸ்தர்களில் ஒருவர் அவர். “இன்னமும் கொஞ்ச நாட்களில் கம்ப்யூட்டர்தான் எல்லாம் என்று ஆகப்போகிறது. தமிழை கம்ப்யூட்டரில் முழுக்க முழுக்க கொண்டுவருவதற்கான முயற்சிகளை இப்போதே ஆரம்பித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நாம் எல்லாவற்றிலும் பின்தங்கிப் போய்விடுவோம். இதற்கான திட்டங்களையும் சாப்ட்வேர்களையும் கொண்டுவந்து தமிழக ஆட்சியாளர்களிடம் விளக்கம் தந்து செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துச்சொல்லி அவர்களை செயல்படவைக்கலாம் என்று பார்த்தால் அதிகாரிகள் மட்டத்திலும் சரி, ஆட்சியாளர்கள் மட்டத்திலும் சரி போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. முதல்வரிடம் எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் அவர் புரிந்துகொள்ள மறுக்கிறார். “சரி...சரி...அதையெல்லாம் பல்கலைக்கழகங்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்றே பதில் சொல்கிறார். கம்ப்யூட்டர் என்பது வெறும் கல்வி சம்பந்தப்பட்டது என்று மட்டுமே அவர் நினைக்கிறார். அவர் எப்போது புரிந்துகொண்டு எப்போது சரியான நடவடிக்கைகள் எடுப்பாரோ தெரியவில்லை. ஏனெனில் இதில் அரசு செய்யவேண்டிய வேலைகள்தாம் நிறைய இருக்கின்றன. நம் ஆட்சியாளர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்பதே தெரியவில்லை என்று நிறைய வருத்தப்பட்டார். தமிழ் மூலம் கம்ப்யூட்டரில் என்னென்ன செய்யமுடியும் என்பதையெல்லாம் மிக விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர்!

இன்று கம்ப்யூட்டரில் தமிழ் வந்தே விட்டது. சமையல் ஜோசியம் வாஸ்து பகுத்தறிவு சாதிச்சண்டை மதச்சண்டை காதல் கவிதை, சிறுகதை, மொக்கை, புனைவு என்றெல்லாம் எழுதுகிறார்கள். சாருநிவேதிதா எழுதாத கெட்டவார்த்தைகளைக்கூட சர்வசாதாரணமாய் பதிவு என்ற பெயரிலும் பின்னூட்டம் என்ற பெயரிலும் எழுதுகிறார்கள். எழுத்துக்களில் வசீகரமும் அறிவுசார்ந்த வாதங்களும் எப்படி முன்வைக்கப்படுகிறதோ அதே அளவுக்கு வன்மமும் முன்வைக்கப்படுகிறது. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாம் என்பதற்கு எல்லாவிதமான வசதியையும் கம்ப்யூட்டர் தமிழ் செய்துகொடுத்திருக்கிறது. எழுதுகிறவர்கள் முகம் தெரியாதவாறு தம்மை மறைத்துக்கொள்ளலாம் என்பதும் தம்முடைய விலாசத்தை அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாதவாறு செய்யலாம் என்பதும் இதிலுள்ள வசதிகள். ஒரு சில உண்மையான பிரச்சினைகளைப் பற்றிய கருத்துக்களையோ தகவல்களையோகூட சொல்வதற்கு ஊடகங்கள் முன்வருவதில்லை என்கிற நிலைமை நிறையவே இருக்கின்ற சந்தர்ப்பங்களில் மிகவும் தைரியமாக அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கின்ற பணியையும் கம்ப்யூட்டர் மிகச்சுலபமாக நிறைவேற்றிவிடுகிறது.

சீரியஸான விஷயங்கள்தாம் என்றில்லாமல் சர்வசாதாரணமான நமக்குத்தேவையில்லாத ஆனால் நம்மைத் தேடிவந்து தொந்தரவு செய்கின்ற விஷயங்களைப் பற்றிய எரிச்சல்களையும் மனவிகாரங்களையும் கொட்டுவதற்கும் கம்ப்யூட்டர் தமிழ் நிறையவே பயன்படுகிறது(உதா; நயன்தாரா பிரபுதேவா மற்றும் பிரகாஷ்ராஜ் மறுதிருமணங்கள்)

விக்கிலீக்ஸ் அளவுக்குத் தமிழ் இணையம் இன்னமும் நாட்டைப் புரட்டிப்போடவில்லையே தவிர அப்படிப் புரட்டிப்போடுவதற்கான எதிர்கால அடையாளங்கள் நன்றாகவே தெரிகின்றன. நிறைய ஊடகங்கள் நாட்டு நடப்பின் அக்கறையோடு செயல்படுவதை சுலபமாக ஊகிக்க முடிகிறது. தமிழில் சமூக அக்கறையோடு தனிமனிதர் துதியில்லாமல் செயல்படும் இரண்டு ஊடகங்களாக வினவு மற்றும் சவுக்கு ஆகிய தளங்களைச் சொல்லலாம். (சவுக்கில் தனிமனித துதி இல்லையே தவிர தனி மனித எதிர்ப்பு மிகவும் பலமாக உள்ளது.) திரட்டிகளின் பணி மிகவும் மகத்தானது. இத்தகைய திரட்டிகள் மட்டும் இல்லையென்றால் ஈழம் மற்றும் முள்ளிவாய்க்கால் சம்பந்தமான பல தகவல்கள் தெரியாமலேயே போயிருக்கும். பல விஷயங்கள் வெளிஉலகுக்குத் தெரிந்துவிட்டதனாலேயே மேலும் பல அட்டூழியங்களைப் புரிய சம்பந்தப்பட்டவர்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்பது தமிழ் இனத்திற்கு இணையத்தினால் ஏற்பட்ட நன்மை என்றே சொல்லலாம்.

கலைஞரின் ஆட்சி சென்ற தேர்தலில் மண்ணைக்கவ்வியதற்கும் இணையத்தின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. அவரை மோசமாக அல்லது கேவலமாகத் திட்டிய பணியினையும் இணையம் வஞ்சனையில்லாமல் செய்தது. இந்த அளவு திட்டுக்களை அவர் அதிமுக மேடைகளின் மூன்றாந்தர பேச்சாளர்களிடம்கூட வாங்கியிருக்க சாத்தியமில்லை. அவரைக் குப்புறத்தள்ளிவிட்டு ஜெயலலிதாவை ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்வதற்கான பங்களிப்பைச் செய்து இன்றைக்கு ஜெயலலிதாவை ஒன்றும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருப்பதும் அதே இணையம்தான்.

தமிழ் இணையத்தில் திரட்டிகளின் பங்கு மிகவும் மகத்தான ஒன்றாகத் தோன்றுகிறது. இருபது பத்திரிகைகளின் பணியை ஒரு திரட்டி செய்துவிடுகிறது. பத்திரிகைகளுக்கு இருக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் திரட்டிகளுக்கு இல்லை. அதுவும் தவிர பெரும்பாலான திரட்டிகள் தானியங்கி முறையில் செயல்படுவதால் எழுத்தின் சுதந்திரத்திற்குத் தடையே இல்லை. தமிழர்களுக்கு சுயகட்டுப்பாடு சிறிது குறைவு என்பதால் ‘கேட்க நாதியில்லை மகனே இஷ்டத்துக்கு ஆடு கதைதான். அதனால் சிலரின் அளவு மீறிய ஆட்டத்துக்கும் எல்லையில்லாமல் போய்விடுகிறது. தனிமனித விவகாரங்களும் விகாரங்களும் மிக மோசமான முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஒருவருக்கொருவர் மோசமான வசவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் இணையம் விளையாட்டு மைதானமாக இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது இணையத்தில் உள்ள சௌகரியம் என்பதால் மட்டுமல்ல யார் எத்தனைப்பெரிதாக எவ்வளவு சிரமப்பட்டு மாளிகையே கட்டிவைத்திருந்த போதிலும் நான் சுலபமாய் கல்லெறிந்து கண்ணாடியை உடைத்துவிடுவேன் என்ற மனவிகாரமும் ஒரு காரணம்.

தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10, தமிழ்வெளி, உலவு போன்ற திரட்டிகளின் பங்கு மிகச்சிறப்பானது. புகழ்பெற்ற இவற்றைத்தவிர வேறு பல திரட்டிகளும் செம்மையான முறையில் செயல்பட்டு வருகின்றன. படிப்பதில் ஆர்வம் உள்ள ஒருவன் ஒரு திரட்டியைச் சார்ந்து உட்கார்ந்துவிட்டால் ஒரு முழு நாளைக்கூடக் கழித்துவிடமுடியும். அந்த அளவுக்குக் கைச்சொடுக்கிலேயே முழு உலகையும் கொண்டுவந்துவிடுகின்றன தமிழ் திரட்டிகள். கம்ப்யூட்டருடனேயே முழுநாளும் வாசம் செய்யும் தொழிலதிப நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் இந்தத் திரட்டிகளை அறிமுகம் செய்துவைத்தேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். “கம்ப்யூட்டரில் தமிழில் படிக்க இத்தனைப் புதுவிஷயங்களா? நான் இவ்வளவு நாட்களும் சில ஆங்கில வெப்சைட்டுகளைப் பார்வையிட்டுக்கொண்டும் படம் பார்த்துக்கொண்டும்தான் இருந்தேன். இனி தமிழை விடவே மாட்டேன்.என்று பரவசப்பட்டுப் போனார். ஆக, தமிழ் இணையம் என்பது இன்னமும் நிறைய பரவ வேண்டியதிருக்கிறது.

இணையத்தில் எழுதும் பதிவர்களில் நிறையப்பேருக்கு பத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களின்மீது ஒரு துவேஷம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இலக்கியவாதி என்று ஒருவரைச் சொல்லப்போக “ஓஓஓ, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா நீயி? இலக்கியவியாதியா? அப்படின்னா இங்கே உனக்கு இடமில்லை. தூரப்போயிரு என்ற வாதம் கேட்கிறது. இன்னொருவர் கட்டுரை என்று சொல்லப்போக ‘இனிமேல் பதிவு என்று சொன்னால்தான் இங்கே இடம். அம்மாதிரி சொற்களையெல்லாம் இங்கே பயன்படுத்தினால் இனிமேல் பின்னூட்டத்தில் கூட உங்களை அனுமதிக்கமாட்டோம் என்ற எச்சரிக்கையைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதெல்லாம் மாறிவிடும். பத்திரிகைகளில் எழுதி அனுப்பி அங்கே அவதிப்பட்ட அல்லது அவமானப்பட்ட வடுக்கள் ஆறுவதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம்.

தமிழ் இணையத்தில் சில வலைப்பூக்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நிச்சயமாக பல புதிய எழுத்தாளர்களை இனம் காட்டியிருக்கிறது இணையம். புதிதாய்ப் பிறப்பெடுக்கும் எதுவொன்றும் தனக்கென புதிய வழித்தடங்களையும் புதிய வழிமுறைகளையும் புதிய கோட்பாடுகளையும் கொண்டு இயங்குவதுதான் இயல்பு. அப்படி புதிதாகத் தோன்றிய இணையமும் புதிய வழிகளில் தமிழைப் பரப்புவதை நாம் மகிழ்வுடன் கொண்டாடத்தான் வேண்டும். பத்திரிகைகள் திரட்டிகள் ஆகிவிட்டன. கதைகள் புனைவுகளாகிவிட்டன. கட்டுரைகள் பதிவுகளாகிவிட்டன. ஆசிரியருக்குக் கடிதங்கள் பின்னூட்டங்களாகி விட்டன. புத்தகங்கள் வலைத்தளங்களாகிவிட்டன. பத்திகள் வலைப்பூக்களாகிவிட்டன.

இப்படிப் புதிய தளங்களைக்கொண்டு இயங்கும் இணையம் சில புதிய கண்ணோட்டத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். பத்திரிகைத் துறையிலேயே செல்லரித்துப்போன பல விஷயங்களை விட்டு விலகி இருந்திருக்கவேண்டும். ஆனால் இங்கே பத்திரிகைகள் தூக்கிச்சுமந்து கொண்டிருக்கும் சில கிளிஷேக்கள் அப்படியே தொடர்கின்றன இன்னமும் மோசமாய்.

ரஜினியை பத்திரிகைகளை விடவும் மோசமாய் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது இணையம்.

இளைய ராஜா மட்டும்தான் இசையமைப்பாளர் அவருக்கு இணை இங்கே யாருமில்லை என்கிறது.

தமிழகத்தைக் காக்க வந்த ஒரே புரட்சித்தலைவன் எம்ஜிஆர்தான் என்கிறது.

கருணாநிதி காலில் போட்டு மிதிக்கப்படவேண்டியவர்.

விஜய் என்ற நடிகரை ஏகத்துக்கும் தரம்தாழ்ந்து கிண்டலடிக்கிறது.

தமிழில் எழுத்தாளர்கள் என்றால் மூன்றே மூன்று பேர்தான் என்று கட்டியம் கட்டி வளையம் சுற்றுகிறது.

இந்தக் கிளிஷேக்களிலிருந்து விடுபட்டு வெளிவரவேண்டியதைப் படித்த இளைஞர்கள் செய்யவேண்டும். படித்த இளையதலைமுறைக்கு கொலவெறியை இன்னமும் புகழ்மிக்கதாகச் செய்ய என்ன செய்யலாம் என்ற கவலைதான் அதிகம் போலும்.

இதையெல்லாம் ஒதுக்கிவைத்துத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது பல புதிய சிந்தனைகள் தமிழில் இணையம் மூலம் வந்துகொண்டிருக்கின்றன. இப்படி புதிய வார்ப்புகளைக் கொண்டுவந்துள்ள இணையத்தையும் இணைய எழுத்தாளர்களையும் பெரிய பத்திரிகைகள் அங்கீகரிக்கவேண்டும்.இணையத்திற்கும் பத்திரிகைகளுக்கும் நிலையான உறுதியான பாலம் ஏற்படுத்தப்பட வேண்டும். இணைய எழுத்தாளர்களை இனம்கண்டு பத்திரிகைகள் ஆதரித்துக் கைதூக்கிவிட வேண்டும். பத்திரிகைகளில் எழுதிப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இணையத்திற்கு வர வேண்டும். இதில் பெரிய பத்திரிகை, சிறிய பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை என்ற பாகுபாடெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் இணைப்பு அவசியம்.

பத்திரிகைகளை விடவும் இணையம் மூலம் உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் நொடியில் சென்று சேர முடிவது ஒரு விஞ்ஞான ஆச்சரியம். இதனை உணர்ந்துதான் இணையத்தில் எழுத வந்தேன். பத்திரிகைகள் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஜரா.சுந்தரேசன், அகஸ்தியன் என்ற கடுகு, உட்பட இன்றைய முன்னணி எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரும் இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னமும் நிறைய பத்திரிகை எழுத்தாளர்கள் இணையத்திற்கு வரவேண்டும்.

வாருங்கள் நண்பர்களே எல்லாரும் சேர்ந்து தமிழ் வளர்ப்போம்!

54 comments :

Anonymous said...

வாழ்த்துக்கள் சார்! தமிழ்மண நட்சத்திரமானதுக்கு. நிறைய பதிவுகளைத் தாருங்கள்.

A.R.ராஜகோபாலன் said...

””””சில மாதங்கள் கழித்து ‘அந்தக் கட்டுரையை எங்கள் நாட்டுப் பாடபுத்தகத்தில் பயன் படுத்திக்கொள்ளப் போகிறோம். தங்கள் அனுமதி தேவை’ என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதம் மிகவும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்திருந்தது.”””

உங்கள் எழுத்தை படிக்கும் என்னை போன்றவர்களுக்கும் பெருமை தந்த செய்தி அய்யா, மனமும் மதியும் ஒரு சேர மகிழ்ந்து போனேன்

Unknown said...

கணிணிக்கான வரவேற்பு சுவாரசியம்...

kaialavuman said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்
நல்ல ஆய்வு.

//ஜெயலலிதாவை ஒன்றும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருப்பது//
அவரை எதிர்ப்பதற்கு காலம் இன்னமும் கனியவில்லையோ? மேலும், கலைஞர் எதிர்ப்பில் காட்டிய வன்மம் காரணமானத் தயக்கமாகக் கூட இருக்கலாம்.

//இந்தக் கிளிஷேக்களிலிருந்து விடுபட்டு வெளிவரவேண்டிய//
transition காலம் கடந்த பின் தெளிவு கிடைக்கும். தங்கள் போன்றவர்களின் இது போன்ற கட்டுரைகள் (பதிவு என்பதைத தவிர்த்துவிட்டேன்!!) அதை நோக்கி எதிர்கால பதிவர்களை நகர்த்த உதவும்.

நன்றிகள்

இடி முழக்கம் said...

இவ்வார நட்சத்திர நாயகனுக்கு எனது வாழ்த்துக்கள்.
http://idimulhakkam.blogspot.com/

சிவக்குமார் said...

ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் செறிவான கருத்துக்கள் நன்று. அந்தக் கால கணினி எதிர்ப்புப் போராட்டங்கள் நான் கேள்விப்படாதது. மிகவும் சிறப்பாக பதிவுலகை அளவீடு செய்திருக்கிறீர்கள். பதிவுலகம் தாண்டி ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியனவும் உள்ளன. வலைப்பூ எழுதுமளவுக்கு பொறுமையும் முயற்சியும் இல்லாதவர்கள் அதில் எழுதுகிறார்கள். இது பதிவுலகை விட அதிகமாக இருக்கலாம்.

//ரஜினியை பத்திரிகைகளை விடவும் மோசமாய் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது இணையம்.

இளைய ராஜா மட்டும்தான் இசையமைப்பாளர் அவருக்கு இணை இங்கே யாருமில்லை என்கிறது.

தமிழகத்தைக் காக்க வந்த ஒரே புரட்சித்தலைவன் எம்ஜிஆர்தான் என்கிறது.

கருணாநிதி காலில் போட்டு மிதிக்கப்படவேண்டியவர்.

விஜய் என்ற நடிகரை ஏகத்துக்கும் இகிண்டலடிக்கிறது.//
இதில் ரஜினி குறித்த கருத்து உண்மை, எம்ஜியாரைப் புகழ்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியவில்லை. இளையராஜா இணையில்லாதவர் என்றுதான் நானும் நினைக்கிறேன், ஆனால் ரகுமான், ஹாரிஸ், பிரகாஷ் குமார் தான் அதிகமாக புகழப்படுகிறார்கள். கருணாநிதி ஈழப்பிரச்சனையில் எடுத்த நிலைப்பாடு அவரை அனைவராலும் வெறுக்கப்பட வைத்தது. விஜய் மீதான தாக்குதல்கள் தனிமனித வக்கிரத்தின் உச்சம், அவரது அரசியலும் அவர் மீதான தாக்குதல் போலவே சகிக்க முடியாதது.

இடி முழக்கம் said...

///வாருங்கள் நண்பர்களே எல்லாரும் சேர்ந்து தமிழ் வளர்ப்போம்!///


முதலில் எனக்குள் தமிழை வளர்த்து .........கண்டிப்பாக தமிழையும் வளர்க்க முனைகிறேன்.

Ganpat said...

அன்பின் அமுதவன்,

மிகவும் சிந்தித்து சீர்தூக்கி எழுதப்பட்ட பதிவு.வருடத்தின் முதல் நாள் இவ்வளவு சிறப்பாக எழுதப்பட்ட இந்த பதிவு, வரும் நாட்களில் எங்கள் எதிர்பார்ப்பினை மிகவும் அதிகரிக்க செய்கிறது.

>>வாருங்கள் நண்பர்களே எல்லாரும் சேர்ந்து தமிழ் வளர்ப்போம்!<<

நீங்களே இந்த நல்ல செயலை துவங்கிவைத்தால் என்ன?நீங்கள் பல்வேறு வலைத்தளங்களை படிப்பவர்.மாதம் ஒரு முறை நீங்கள் சென்ற மாதத்தில் படித்த சிறந்த பதிவு ஒன்றினை எல்லாருக்கும் சிபாரிசு செய்யலாமே!மாதம் ஒரு முறை என்பதால் உங்களுக்கு அதிக பளுவும் இரா என நினைக்கிறேன்!

இணையத்தால் நான் அடைந்த பயன்,உங்களைப்போன்ற நல்ல மனிதர்களின் நட்புதான்.அதைவிட வேறு என்ன வேண்டும்.

வாழ்க வளர்க!

Rathnavel Natarajan said...

அருமையான கட்டுரை.
ஆழ்ந்து படிக்க வேண்டிய கட்டுரை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

vimalanperali said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்,

ப்ரியமுடன் வசந்த் said...

இந்தவருடத்தின் முதல் நட்சத்திர தேர்வு தமிழ்மணம் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறது இணையம் பற்றிய இணைய எழுத்துக்கள் பற்றிய மிகச்சிறந்த பார்வை பதிவு.. நட்சத்திர வாழ்த்துகள்

Amudhavan said...

Chilled beers...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி. நல்ல இயல்பான நகைச்சுவை உணர்வோடு எழுதுகிறீர்கள் என்று உங்கள் வலைப்பக்கத்தில் சொல்லியிருந்தேன். இப்போதும் அதையே சொல்லத்தோன்றுகிறது. தங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

Amudhavan said...

ஏ.ஆர்.ராஜகோபாலன் அவர்களுக்கு.....நீண்ட நாட்களாகத் தங்கள் எழுத்துக்களைக் காணோமே ஏன் எழுதுவதைக் குறைத்துவிட்டீர்கள் என்று கேட்டுத் தங்கள் வலைப்பக்கத்தில் நேற்று நீங்கள் எழுதிய பதிவுக்கு கருத்து எழுதி எத்தனை முயற்சி செய்தும் இணையம் அதைக் கொண்டு செல்ல மக்கர் பண்ணிவிட்டது. சரியென்று விட்டுவிட்டேன். இப்போது தங்களின் பாராட்டுக்களும் மகிழ்ச்சியும் இங்கே....மிகவும் நன்றி.

Amudhavan said...

மரு.சுந்தரபாண்டியன் அவர்களுக்கு....வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

Amudhavan said...

வேங்கடஸ்ரீனிவாசன்......தங்கள் கருத்திற்கு நன்றி.

Amudhavan said...

தங்கள் கருத்திற்கு நன்றி இடிமுழக்கம்.

Amudhavan said...

தமிழானவன்......தங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு, சிற்சில திருத்தங்களுடன். எல்லாவற்றையும் பற்றி தொடர்ந்து விவாதிக்கலாமே.

Amudhavan said...

வாருங்கள் கண்பத், தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு என்னுடைய தொடர்ச்சியான நன்றி. தங்களைப்போன்ற நல்ல நண்பர்களின் வருகை இனம்புரியாத நிறைவைத் தருகிறது. உங்கள் யோசனை நல்லதுதான். ஆனால் ஒரேயொரு பதிவைச் சிறந்தது என்று சொல்வதில் நிறைய சங்கடங்கள் உள்ளனவே. பெங்களூரில் நடந்த நாடகப்போட்டி ஒன்றிற்கு நடுவராக இருந்துவிட்டு தேர்வு பெறாத நிறைய நாடகக்குழுக்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டிவந்த சந்தர்ப்பங்கள் வந்திருக்கின்றனவே. என்ன செய்யலாம்?

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தமிழ்மண நட்சத்திரதிற்கு எனது வாழ்த்துகள். அனுபவம் பெற்ற எழுத்தாளர் நீங்கள். உங்கள் பதிவு ரசிக்கும்படியும்...உபயோகமாகவும் இருக்கிறது. நீங்களும் தினமணி என்ற போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தினமணி சென்னை பதிப்பில் வர்த்தக மேலாளராக இருக்கிறேன்.

Amudhavan said...

ரத்னவேல் அவர்களின் அன்பிற்கு நன்றி.

Amudhavan said...

நன்றி விமலன்.

Amudhavan said...

வசந்த், தங்களின் பிரியமான வாழ்த்துக்களுக்கு நன்றி.

Amudhavan said...

தமிழன் வீதி தோழன் மபாவின் வருகைக்கு நன்றி. தினமணியில் நீங்கள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. இன்னமும் சொல்லப்போனால் இந்த நட்சத்திரப்பதிவுகளுக்காக எழுதியிருக்கும் 'சிக்மகளூரில் ஒருநாள்' இந்திரா காந்தியைப் பற்றிய கட்டுரை தினமணியில் தலையங்கப்பக்கத்தில் வெளியான கட்டுரையே. சிற்சில மாறுதல்களுடன் இங்கே தந்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

முதல் விமர்சனம் எழுதி வெளியிடும் நேரம் இங்கே மின்தடை பழிவாங்கிவிட்டது. மக்கள் முந்திக் கொண்டு விட்டார்கள். நிறைய விசயங்கள். நானும் எழுத நினைத்த விசயங்கள். ஆனால் இந்த அளவுக்கு உங்கள் அனுபவ தாக்கம் போல எழுத முடியாது. மிக அற்புதமான நடையில் தெளிவான விசயங்கள். நன்றி.

Amudhavan said...

வருக ஜோதிஜி, நேற்றைக்கு எனக்கு ஏற்பட்ட மின்தடை இணையச்சிக்கல் அனுபவம் இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. உங்களின் நல்ல எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவருகிறேன். தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்.... கணினியில் தமிழ் பார்த்து அதிசயப்பட்டவர்களில் நானும் ஒருவன்....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி. இது எனது முதல் வருகை... இனி தொடர்ந்து வருவேன்...

ஷைலஜா said...

நலல்தொரு அலசலைத் த்ந்திருக்கிறீர்கள் அமுதவன் /நட்சத்ர வாழ்த்துகள்!

Amudhavan said...

நன்றி வெங்கட் நாகராஜ் தொடர்ந்து வாருங்கள். அடிக்கடி சந்திப்போம்.

Amudhavan said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஷைலஜா. (அந்தக் கிளி ரொம்பவும் அழகாயிருக்கிறது.)

Anonymous said...

நீண்டநாட்களுக்குப் பிறகு காலத்திற்கேற்ற
ஒரு பயனுள்ள ஒரு கட்டுரையைப்
படித்ததில் மிக்க மகழ்ச்சி.
வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் !

வில்லவன் கோதை said...

தமிழ்மணம் இப்போது தரமான நட்சத்திரத்தை கண்டறிந்திருக்கிறது.குறைவான வாசிப்பு திறனும் பின்னோக்கிப்பாற்க சலிப்படைபவர்களுமே இன்றைய இணையதள குப்பைகளுக்கு காரணாமாயிருக்கிறார்கள்.அமுதவனின் அனுபவமும் நான் உணர்ந்ததுதான்.
பாண்டியன்ஜி - வேர்கள்

Amudhavan said...

தங்களின் பாராட்டுகளுக்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரவாணி.

Amudhavan said...

'குறைவான வாசிப்புத் திறனும் பின்னோக்கிப் பார்க்க சலிப்படைபவர்களுமே இன்றைய இணையதள குப்பைகளுக்குக் காரணமாயிருக்கிறார்கள்....' மிக சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாண்டியன்ஜி. தங்களின் வருகைக்கும் எனது நன்றி.

Matangi Mawley said...

பதிவுலகத்துடன் 5 வருட காலம் தொடர்பு இருந்தாலும், தமிழ் பதிவுலகத்துடன் கடந்த 2009 முதல் தான் எனக்கு பரிச்சயம். தமிழிலும் பதிவுகள் எழுதும் மக்கள் இருக்கிறார்கள்- என்று- இங்கு வந்த பிறகு தான் தெரிந்துகொண்டேன். ஆங்கிலத்தில் எழுதிப் பழகிய ஒருவரால்- தமிழில் எழுத முடியுமா- என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள எண்ணினேன். ஒரு "experiment" ஆக.
நீங்கள் குறிப்பிடுவது போன்ற பதிவுகள் நான் அவ்வளவாக படித்தது கிடையாது. எனது "பதிவு வட்டம்"- என்பது மிகச் சிறியது. எப்போதாவது- திடீரென்று ஒரு அபூர்வமான வலை தளத்தில்- தடுக்கி விழ நேரிடும். தங்களது வலைக்கு வந்ததும்- இப்படித்தான். In fact, "வலை தளம்"/"பதிவு" போன்ற வார்த்தைகள் கூட- பதிவுலகம் தான் எனக்கு கற்பித்தது. Once an encounter with knowledge- there is no luxury of ignorance. தேவையற்ற விஷயங்களும் வலைகளில் ஏராளம்- என்றாலும், அது தெரியாமல் இருந்துவிடவும் முடியவில்லை தான். Occupational hazard? May be! ஆனால்- நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொள்ளும் வசதியும் இங்கு இருப்பது தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்- இந்த வலையுலகத்தில்!
Responsible பதிவு... (அல்லது "கட்டுரை"- என்று சொல்லலாமா? :) )

Amudhavan said...

வாருங்கள் மாதங்கி, தங்கள் தேடல் சார்ந்த ரசனையுடன் கூடிய படைப்புக்களை பதிவுலகில் நிறையவே பெற முடியும். ஏன், நீங்களே மிக நன்றாக எழுதக்கூடியவர் என்பது உங்களின் கருத்துரைகளிலிருந்தும் எழுத்து நடையிலிருந்தும் புலனாகிறது.நிறைய எழுதுங்களேன்.

சஞ்சயன் said...

நட்சத்திரபதிவரானதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஜோ/Joe said...

கமல்-சுஜாதா சந்திப்பு பதிவை நண்பர் ஒருவர் பகிர அதன் மூலம் உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன் ..பிற பதிவுகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன் ..பல பெருந்தலைகளோடு நேரடி அனுபவம் உள்ள உங்கள் அனுபவ எழுத்துகளை படிக்க அத்தனை சுவாரசியம் .. தொடர்ந்து வாசிக்க நிறைய எழுதுங்கள் ஐயா

G.M Balasubramaniam said...

என்னைப் போல் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆதங்கங்களை பகிர வலைத்தளம் மிகவும் உதவுகிறது. அங்கீகாரம் கிடைக்காமல் எழுதுவதையே நிறுத்திவிட்ட வர்களுக்கு வலைத்தளம் ஒரு வடிகாலாயிருக்கிறது. ஒரு சமயம் நான் எழுதிய ஒரு பதிவுக்கு நான் யாரென்று தெரியாமலேயே உங்களிடமிருந்து பின்னூட்டம் இருந்தது.இணையத்தின் வளர்ச்சி குறித்து அழகாக ,சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Amudhavan said...

வருகைக்கு நன்றி விசரன்.

Amudhavan said...

நன்றி ராபின்.

Amudhavan said...

ஜோ அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி. தங்களின் ரசனையான வாசிப்பனுபவத்துக்கு ஏற்ப எழுதுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். தொடர்ந்து சந்திப்போம்.

Amudhavan said...

ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு வணக்கம். அந்தக் காலத்தில் விதானசௌதா கட்டியபோது நிகழ்ந்த நிகழ்வு பற்றிய பதிவை எழுதியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னூட்டம் போட்டிருந்தது நினைவு இருக்கிறது. நீங்கள் யாரென்று தெரியாமலேயே பின்னூட்டம் போட்டிருந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். 'தெரிந்தவர்களுக்கு' என்பதில்லாமல் எனக்குப் பிடித்த பதிவாயிருந்தால் அவர் இணையத்துக்குப் புதிதோ அல்லது புகழ்பெற்றவரோ அதையெல்லாம் பார்க்காமல் பாராட்டுவதையோ அல்லது கருத்துச்சொல்வதையோ வழக்கமாகக்கொண்டிருக்கிறேன்.
தங்களுக்கு மீண்டும் எனது நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

நல்லதொரு ஆய்வு.. தங்களை நீண்ட இடைவெளீக்குப்பின் சந்தித்ததில் மகிழ்ச்சி, தமிழ்மண நட்சத்திரப்பதிவர் தேர்வுக்கு வாழ்த்துகள்

ராஜ நடராஜன் said...

கம்ப்யூட்டர் என்ற சொல்லை முதலில் கண்டது சுஜாதாவின் தொடர்கதையில்.குமுதமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.கம்யூட்டர் ஆசாமி எப்படியிருப்பார் என தெரியாமல் ஆர்வத்தில் போய் உட்கார்ந்த இடம் குவைத் பல்கலைக்கழகம்.கணினி 286. வட்டு 5.1

ரொம்ப தூரம்தான் கணினி பயணித்திருக்கிறது.

மறு வாசிப்புக்கு மீண்டும் வருகிறேன்.

Amudhavan said...

வாங்க செந்தில்குமார் தினசரி நான்கைந்து பதிவுகள் எழுதி அவற்றை இணையத்தில் போட்டு நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லி.....என்று இவற்றுக்கே நேரம் இருக்காத நிலையில் நீங்கள் மற்றவரின் தளங்களுக்கு வருவதை நினைத்தாலே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமாம், சுருதிஹாசன் பற்றி மேலதிகத் தகவல்கள் எதுவும் கிடைத்தனவா?

Amudhavan said...

பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் தொழில்ரீதியாகவும் கணிணியுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நீங்கள் சொல்வது கனமானதாகத்தான் இருக்கும். வந்து செல்லுங்கள்..நடராஜன்.

Thekkikattan|தெகா said...

நல்ல ஓட்டமா ஓடினிச்சு. ஒரே அமர்வில வாசிச்சிட்டேன். அப்படியே பகிர்ந்திக்கிறேன் எல்லா இடத்திலும். நன்றி :)

Amudhavan said...

நன்றி தெகா.

பிரபாகர் said...

நெடுநாட்களுக்குப் பின் ஒரு அருமையான கட்டுரையை வாசித்த மகிழ்வில் பின்னூட்டுகிறேன்... எல்லாவற்றையும் எடுத்து வரிக்கு வரி பாரட்டவேண்டும்போல் இருக்கிறது. நன்றி அய்யா!... தொடருங்கள்.

பிரபாகர்...

Amudhavan said...

தங்களின் அடிமனதிலிருந்துவரும் வார்த்தைகள் நெகிழ்ச்சியாய் உள்ளன. நன்றி பிரபாகர், தொடர்வோம்.

சமுத்ரா said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்

Amudhavan said...

நன்றி சமுத்ரா.

R.S.KRISHNAMURTHY said...

தமிழ்மணத்தின் உண்மையான 'star of David' க்குப் பாராட்டுக்கள்!

Amudhavan said...

ஆஹ்ஹாஹ்ஹா....என்னென்னமோ சொல்லிப் புகழ்றீங்களே.........

Post a Comment