Saturday, March 27, 2010

பெண்ணின் உடல்மொழி ஆபாசமா ?

லீனா மணிமேகலையின் கவிதைகள் பரபரப்பான விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன . நவீன இலக்கியம் என்பதே பாலியல் உறவுகளைப் பச்சையாக எழுதிச்செல்லுதல் என்பதாக மாறிக்கொண்டு வருகிறது. அதிலும் பெண் எழுத்தாளர்கள் அதுபோல எழுதும்போது கவனம் ஈர்ப்பது சுலபமாகிவிடுகிறது. (எழுத்தில் ஆண் எழுத்தென்ன பெண் எழுத்தென்ன என்றொரு கிளை விவாதம் வேறு இருக்கிறது.இது அவரவர் சௌகரியத்தையொட்டி அவ்வப்போது லேபிள்களைத் தரித்துக்கொள்ளும்.) பாலியல் அனுபவங்கள் பெரும்பாலும் ஆணின் பார்வை சார்ந்தே இருப்பதால் , பெண்ணின் பார்வையில் அனுபவங்களோ அல்லது விமர்சனங்களோ வெளியாகும்போது கூடுதல் கவனம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பெண்ணின் உடல்மொழியைப் பெண்ணே சொல்லும்போதுதான் யதார்த்தத்தின் பதிவுகள் சரிவரக் கிடைக்கின்றன என்பதும் உண்மைதான். இதில் இன்னமும் கவனம் பெறுவது அந்த உடல் மொழிகள் எல்லாம் 'தன்னுடைய உடலுடையதே' என்கிற அறிவிப்போடு வருகிற எழுத்துக்கள். இத்தகைய எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும் அருவெறுக்கத்தக்கவை என்றும் தடை செய்யப்பட வேண்டியவை என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறமோ "ஆபாசம் என்று சொல்ல இவர்கள் யார்? இவர்களெல்லாம் என்ன கலாச்சாரக் காவலர்களா? பெண்ணியல் சிந்தனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த நினைக்கும்போதெல்லாம் குறுக்கே நிற்கும் பிற்போக்குவாதிகள்" என்று பதிலிறுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட எழுத்துக்குரியவரோ "இதைத்தான் எழுத வேண்டும் என்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றிக் குரல் கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு. இது தனியொரு படைப்பாளியாக எனக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சீண்டிப்பார்க்கும் வேலை. ஒரு சட்டத்துக்குள் இருந்துகொண்டு வாழச்சொல்லும் இவர்களின் அடக்குமுறை என்னிடம் எடுபடாது. பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்கும் என் எழுத்துக்கள் தொடரந்து இதே வீச்சோடுதான் இருக்கும்" என்றிருக்கிறார்.
மேம்போக்காகப் பார்க்கும்போது படைப்பாள இனத்தையே காபந்துபண்ணும் பதில் மாதிரி தோற்றமளித்தாலும் ஏகப்பட்ட ஓட்டை உடைசல்களுடன் கூடிய பதிலாகத்தான் இது இருக்கிறது. முதலாவதாக இதைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் இவரைக் கட்டாயப் படுத்தவில்லை. இப்படியா எழுதுவது இப்படியெல்லாம் எழுதலாமா என்பதுதான் கேள்வியே தவிர, நீ இமயமலையைப் பற்றி எழுது, பாஞ்சாலங்குறிச்சிப் போரைப்பற்றி எழுது என்றா சொன்னார்கள்? 'உலகின் அழகிய முதல்பெண் ' என்ற தலைப்பில் 'நான் லீனா, இலங்கை இந்தியா சீனா' என்ற வரிகளுடன் ஆரம்பித்திருக்கும் கவிதைகளைப் பற்றித்தான் ஆட்சேபமே தவிர, ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சுற்றிவளைத்து வந்திருக்கும் ஆட்சேபங்கள் அல்ல. குறிப்பிட்ட அந்தக் கவிதையிலும் சரி தொடரும் இன்னும் சில கவிதைகளிலும் சரி பாலியல் அங்கங்களின் பச்சைக் காட்சிகள் கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, பாலியல் அத்துமீறலின் எந்த 'வேதனை' வெளிப்பட்டிருக்கிறது என்றும் புரியவில்லை.
மாறாக, பாலியல் ரீதியான இத்தகு வெளிப்பாடுகள் அவ்வப்போது சில பெண்களிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சாவித்திரி என்ற பெண் பெங்களூரில் தன்னை நிர்வாணமாக வரைந்துவைத்து ஒரு ஓவியக் காட்சி நடத்தினார். பல்வேறு கோணங்களில் அவர் தன்னுடைய உடலைக் காட்சிப் பொருளாக்கி இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள். நிற்பது, படுப்பது, புரள்வது, உட்கார்ந்திருப்பது என்பதாக அவரின் பல்வேறு நிர்வாணக் கோலங்கள் . பெரிதாக உணர்வின் வெளிப்பாடுகளோ கலையின் பிரதிபலிப்புக்களோ இல்லாத, உடம்பின் அங்க அவயங்களைக் காட்டும் வெற்று ஓவியங்கள்தாம் அவை. “எதற்காக இப்படி வரைந்திருக்கிறீர்கள் இதன் நோக்கம் என்ன?” என்றதற்கு , “என்னை வரைந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது,வரைந்தேன். இரண்டாவதாக ஒரு மாடலை வைத்து இப்படியெல்லாம் வரைவதற்கு பதில் நாமே ஏன் மாடலாக இருக்கக்கூடாது என்று தோன்றிற்று.பெரிய அளவு கண்ணாடி வைத்து கண்ணாடியில் என்னையே நான் பாரத்துக்கொண்டு வரைந்தேன்" என்றார். இதனை ஒருவிதமான மனப்போக்கு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய அங்க அவயங்களைத் திரையில் காட்ட மனதார விரும்பும் நடிகைகளின் விருப்பிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை. பிரஷ்ஷும் கான்வாஸும் ஓவியத்திறமையும் மட்டுமே பெரிதான கலாபூர்வமான பிம்பத்தை ஏற்படுத்தித்தரும் என்றும் சொல்வதற்கில்லை.
உடல்மொழிகளின் உணர்வுகளை எந்த மாதிரியான வார்த்தைகளில் என்ன மாதிரியான வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அவற்றுக்கான முக்கியத்துவமும் அங்கீகாரமும் வரையறுக்கப்படுகின்றன.
சந்துமுனைகளிலும் குழாயடிச்சண்டைகளிலும் பெண்களோடு பெண்கள் சண்டையிடும்போது வெளிப்படும் உடல்மொழி வாக்குவாதங்களையெல்லாம் தடையில்லாத கருத்துச் சுதந்திரம் என்றோ, ஆஹா என்ன அழகாக உடல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றோ கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அதே சமயம் அவர்கள் தங்கள் மொழிகளையும் கருத்துக்களையும் வெளியிடுவதையும் தடுத்து நிறுத்தவும் முடியாது.
அந்த காலக்கவிஞன் கூந்தலின் வாசம் பற்றி எழுதினான். இவர்கள் அந்தரங்க வீச்சம் பற்றி எழுதுகிறார்கள். கூடவே, “ என்னுடைய சிந்தனைகள் இதே பாணியில்தான் இருக்கும் என்னை யாரும் தடுக்க முடியாது" என்றெல்லாம் வீறாப்பு பேசுவதற்கும் சவால் விடுவதற்கும் பின்னணியில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது.
இத்தனைப் பட்டவர்த்தனமாக எழுதத் தொடங்கிவிட்ட பிறகு அதிகமாக எழுதுவதற்கு மேற்கொண்டு ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதுதான் அது.

சிவகுமாரின் புதிய அவதாரம்தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் தங்கள் ஆண்டு விழாவுக்கு இரண்டுபேரின் வருகைக்காக மட்டுமே காத்திருக்கின்றன. ஒருவர் அப்துல் கலாம். இன்னொருவர் நடிகர் சிவகுமார்.
அப்துல்கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர். விண்வெளி ஏவுகணைத் துறையில் உலகம் கவனிக்கத் தகுந்த விஞ்ஞானி. தாம் வகித்த பதவிக்கு கௌரவம் சேர்த்த அந்த மனிதர் 'முன்னாள் குடியரசுத் தலைவர்' என்ற வசதிகளோடு ஒரு குட்டி மாளிகையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு நாடு பூராவும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் இளம் பருவத்தினரைச் சந்திப்பது. அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நல்லெண்ணெங்களை விதைப்பது; எதிர்காலச் சிந்தனைகளை உயர்ந்த நெறிகளாக மாற்றுவது; அதன் மூலம் இளம் சந்ததியினரை வல்லரசு நாட்டின் குடிமக்களாக மாற்றுவதற்காக அவர்களை 'லட்சியக் கனவு' காணவைப்பது. இந்தப் பின்புலத்தில் அப்துல்கலாம் நாடெங்கும் பயணம் செய்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இளம் பருவத்தினரைச் சந்தித்து வருகிறார்.
சிவகுமாரின் பயணம் வேறுமாதிரியானது.
இருப்பதிலேயே மிகவும் கவர்ச்சிகரமான திரைப்படத்தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர் சிவகுமார். அவரது இரு மகன்களில் ஒருவரான சூர்யா தமிழின் மிக முன்னணி நடிகர்களில் ஒருவர். இரண்டாவது மகனான கார்த்தியும் அந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர். மருமகளான ஜோதிகாவும் பிரபல நடிகையாயிருந்தவர். 'தமிழ்த்திரைப்படங்களின் பொற்காலம் ' என்று சொல்லப்படும் சிவாஜி-எம்.ஜி.ஆர் காலகட்டத்து நடிகர்களில் ஒருவர் சிவகுமார். சிவாஜியோடு நிறையப் படங்களிலும் ,எம்ஜிஆருடன் சில படங்களிலும் இணைந்து நடித்தவர். தமிழின் புராணப் படங்களில் முருகனாகவும் வேறு சில தெய்வப் பாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவர். தாம் இருநூறு படங்கள்வரை நடித்திருந்த போதிலும் பரபரப்பான கதாநாயகனாக இல்லாமல் நிதானமாய் அடியெடுத்து வைக்கும் கதாநாயகனாகவே இருந்து நிலையான ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தவர். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அடையாளம் அவருக்குக் கிடைத்திருந்தது. நடிகர்களில் மிகச்சிறந்த ஓவியக்கலைஞராக அறியப் பட்டிருந்தவர் அவர். இதைவிடவும் பெரிதான இன்னொரு அடையாளமும் அவருக்கிருந்தது. நீக்குப் போக்குகள் நிறைந்த திரைப்பட உலகில் பண்பாட்டு நெறிகள் கொண்ட மனிதராகவும் , ஒழுக்க சீலமிக்க கலைஞராகவும் அவர் மதிக்கப்பட்டார். அதனால்தான் இயக்குநர் கே. பாலச்சந்தர் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் "நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி; நடிகர்களுக்கு இலக்கணம் சிவகுமார்" என்றார்.
திரைப்படத்துறையில் தமக்கான இடம் நழுவ ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தது சின்னத்திரையை. திரைப்படத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் சின்னத்திரையை மிகச் சாதாரணமாகவும் கேவலமாகவும் பேசிக்கொண்டிருந்த காலட்டம் அது. சிவகுமார் துணிந்து சின்னத்திரையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்துதான் பெரிய பெரிய ஜாம்பவான்கள்கூட சின்னத்திரைப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்தத் தொடங்கினர். ஆக சின்னத்திரையையும் திரைப்படக்கூட்டம் மொய்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் அங்கிருந்து அடுத்த தளத்திற்குச் செல்ல விரும்பியிருக்கிறார் சிவகுமார். அவர் தேர்ந்தெடுத்த துறைதான் ஆச்சரியம் மிகுந்தது. அது பேச்சு........மேடைப் பேச்சு!
திரைபடத்துறையில் இருந்த காலத்திலிருந்தே மற்றவர்கள் கவனிக்கத் தகுந்த ஒரு பேச்சாளராகத்தான் அவர் விளங்கிக்கொண்டிருந்தார். முக்கியமான விழாக்களில் நல்ல பேச்சு தேவைப்படும் மேடைகளில் 'சிவகுமாரைக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன்' என்று கலைஞர் போன்றவர்கள் குறிப்பட்டுச் சொல்லும் அளவுக்குத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர் அவர். அதிலும் குறிப்பாக சிவாஜியின் புகழ்பெற்ற வசனங்களை சிவாஜியே வியக்குமளவுக்கு மேடைகளில் அற்புதமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பொருத்தமான இடங்களில் பேசிக்கொண்டிருந்தவர். திரைப்படத்துறையின் சிறந்த பேச்சாளராக அறியப்பட்டவர். இந்தப் பின்புலத்தில் தம்மை ஒரு பேச்சாளராக வரித்துக்கொண்டு தமிழகத்தில் மைக் முன் வந்து நிற்கிறார்.
பேசிப் பேசியே தமிழகத்தைக் கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு பலபேரின் மீதும் பரவலாக வந்திருக்கும் நிலையில் சிவகுமாரின் பேச்சுக்களம் ஆரம்பமாகிறது. மேடைப்பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருக்கிறது தமிழ் இனம். அரசியல் மேடைகளுக்கென்று ஒரு பாணி. அலங்கார வார்த்தைகள் ; பொய்யான வாக்குறுதிகள், வெற்றுக்கூச்சல்கள், சாரமற்ற சவால்கள்..........
இலக்கியப் பேச்சுக்களுக்கென்று ஒரு பாணி. மனப்பாடம் செய்த சில செய்யுள்கள் ; குட்டிக்கதைகள், வறண்டுபோன நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்கள்..........
இவை இரண்டும் கலந்த குழப்பமான கலவையில் பொதுவான சில பேச்சுக்கள்..........
இதே சப்பையான பாணியில் எல்லாப் பேச்சுக்களும் மக்களைச் சுற்றிவளைக்க ஆரம்பித்ததில் இப்போதெல்லாம் பேச்சுக்கேட்க வரும் கூட்டம் சுத்தமாய் அற்றுப்போய் விட்டது. பல கூட்டங்களுக்கு எண்ணி எட்டுப்பேர் பத்துப்பேர்கூட வருவதில்லை என்ற நிலைமை. இந்தச் சூழலில்தான் சிவகுமார் 'பேச' வருகிறார்.
ஈரோட்டு புத்தகச் சந்தை அவருக்குக் களம் அமைத்துத் தருகிறது. பல்லாயிரக்கணக்கில் கூட்டம். 'திரை வளர்த்த தமிழ்' என்று ஆரம்பிக்கிறார். இளங்கோவன் துவங்கி அண்ணா, கலைஞர்,ஏ.பி.நாகராஜன், சக்தி கிருஷ்ணசாமி, ஸ்ரீதர், கே.பாலச்சந்தர்வரை தமிழை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று விவரிக்கிறார். அவர் பேசப் பேச ஒவ்வொரு காட்சியும் மக்கள் மனதில் நாடகக் காட்சிகளாய்த் திரைக்காட்சிகளாய் விரிகின்றன. வசனங்கள் மட்டுமின்றி பாடல்களில் தமிழ் எவ்வாறு பயன்பட்டது என்பதை விவரிக்கிறார். பாபநாசம் சிவன் தஞ்சை ராமையா தாஸ் துவங்கி கண்ணதாசன் வைரமுத்துவரை தமிழை எப்படியெல்லாம் கையாண்டார்கள் என்பதை எடுத்துரைக்கிறார். பண்பட்ட நடிகராக இருந்ததனால் குரலில் ஏற்ற இறக்கங்களும் உச்சரிப்பு சுத்தங்களும் கேட்போரைக் கட்டிப் போடுகின்றன. பேசும்போது கையில் ஒரு சிறிய குறிப்புக்கூட வைத்திருப்பதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்.
தொடர்ந்து மூன்று வருடங்கள் ஈரோட்டு புத்தகச் சந்தையில் பேச்சு. ஒவ்வொரு வருடமும் கூட்டம் பெருகிக்கொண்டே போனது. இதற்கிடையில் ஒரு பேச்சின் பதிவு விஜய் டிவியின் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பாக ஆதரவு அதிகரித்தது. அடுத்த பதிவையும் அடுத்த பண்டிகைக்கு ஒளிபரப்பியது விஜய் டிவி. இதன் தலைப்பு;'பெண்-தாய், மனைவி , மகள் ' இதில் தன்னுடைய தாயாரை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகளை முன்னிருத்தி பெண்களைப் பற்றிய தமது மதிப்பீட்டை தமது மரியாதையை சமூகத்தின் முன் வைக்கிறார் சிவகுமார். எந்தவித ஜோடனைகளோ பாசாங்குகளோ இல்லாமல் பட்டவர்த்தனமாய்த் தம்மையே படையலிட்டிருந்த சிவகுமாரின் நேர்மை கேட்டவர்களை உலுக்கிற்று. விளைவு, தொலைக்காட்சியின் பிரபலத்தைத் தாண்டி பிரபல மோசர்பியர் நிறுவனம் சிவகுமாரின் பேச்சுக்களை சிடிக்களாக வெளியிட ஆரம்பித்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களின் வியாபார உத்தியாக குறிப்பிட்ட தொகைக்குமேல் தங்களிடம் துணி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிவகுமாரின் சி.டி.க்களை போனஸாக விநியோகிக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்தார் சிவகுமார். 'கம்பன் என் காதலன் ' என்ற தலைப்பில் கம்பனின் நூறு பாடல்கள் வழியாக மொத்த இராமாயணக் கதையையும் ஒரே பரப்பில்- ஆங்கிலத்தில் at a stretch என்பார்களே அதுபோல் விவரித்தார். "ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு. பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித்தரும் உன்னத காவியம் இராமாயணம். அது இளையதலைமுறையினரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சி இது" என்றார். இதனை ஒரு புராண நோக்கிலோ கதா காலாட்சேப நோக்கிலோ இல்லாமல் இலக்கிய நோக்கில் சொன்னதும், வழக்கம்போல் கையில் ஒரு சின்னக்குறிப்பும் இல்லாமல் இலக்கிய நடையை எளிய தமிழில் அதுவும் அங்கங்கே தமது விமர்சனங்களையும் இணைத்துச் சொன்னதும்தான் இவரின் சிறப்பு. இதனைப் பெண்கள் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு கல்லூரி விழாவில் அரங்கேற்றினார் அவர். பேசினார் என்று சொல்லமுடியாது. 'அரங்கேற்றம்'தான். இதற்கு அவர் எடுத்துக் கொண்டது இரண்டரை மணிநேரம். அந்த இரண்டரை மணிநேரமும் ஒரு சின்னச் சலனமோ அசைவோ இன்றி விக்கித்து விதிர்விதிர்த்துப்போய் செவி மடுத்த கூட்டம், சிவகுமார் பேசி முடித்துக் கீழே மண்டியிட்டுத் தரையைத்தொட்டு வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று ஐந்து நிமிடத்திற்கும் மேலாகக் கைத்தட்டியது இதுவரை யாருக்கும் கிடைக்காத பெருமை என்றே சொல்லலாம்.
அடுத்தது இன்னொரு கல்லூரி வளாகம். சேலத்தில் நடந்த இந்த விழாவில் 'என் கண்ணின் மணிகளுக்கு' -என்று பேச ஆரம்பிக்கிறார். இந்த தடவை அவரது பேச்சு முழுக்கவும் இளைய சமுதாயத்தைச் சுற்றிச் சுழல்கிறது. ஒரு தந்தையாக, ஒரு ஆசானாகச் சொல்ல வேண்டிய செய்திகளை ஒரு தோழனின் தொனியில் சொல்லிச் செல்கிறார். வேறு யார் சொல்லியிருந்தாலும் நல்லுரைகளாக, உபதேசங்களாக எரிச்சல் ஊட்டியிருக்கக்கூடிய விஷயங்கள் இவரது மொழிநடையில் கவனமாகச் செவிமடுக்கும் உரையாக மாற்றம் கொள்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் அழுகையை அடக்க முயலும் பெண்களையும் தேம்பியழும் இளையதலைமுறையினரையும் கவனமாகப் பதிவு செய்கிறது காமிரா.
நாமக்கல் பாவை எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷனில் பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டம். இங்கே 'ஒரு கிராமத்து இளைஞனை கலைஞனாக மனிதனாக மாற்றியவர்கள்' என்ற தலைப்பில் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அப்பட்டமான கிராமத்தின் படப்பிடிப்பு.ஏதோ தி.ஜானகிராமன் நாவலையோ, கி. ராஜநாராயணன் நாவலையோ படித்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை. அத்தனை அசலாய் கிராமம் பற்றிய வர்ணனைகள். அதற்கடுத்து குடும்பச்சூழல், ஓவியக் கல்லூரி, திரைப்பட நுழைவு, தாம் சந்தித்த பெரிய மனிதர்கள் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் என்று பேசிச்செல்கிறார். எல்லாம் புதிய புதிய தகவல்களாய் வந்து விழுகின்றன. மெய்மறந்து கேட்கிறது கூட்டம்.
எல்லாப் பேச்சுக்களிலுமே அடிநாதமாய் ஓடும் இழை ஒன்றே ஒன்றுதான். 'நீ வளர்ந்த சமுதாயத்தின் வேர்களை விட்டுவிடாதே . பெற்ற தாய் தந்தைக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள். உலகம் உன்னுடையது. ஒவ்வொரு நாளையும் ரசனையுடன் வாழக்கற்றுக்கொள்.' - இந்தச் செய்தியைத் தம்முடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே தொகுத்துச் சொல்கிறார். ஒளிவு மறைவில்லாத பட்டவர்த்தனமான உண்மைகள் சர்வசாதாரணமாய் வருகின்றன. தாம் சந்தித்த தோல்விகளையும் அவமானங்களையும்கூட சத்திய சோதனைபோல் சொல்லிச் செல்வதனால் இந்த மனிதரின் பேச்சிலுள்ள நேர்மை கேட்பவர்களைக் கட்டிப்போடுகிறது.
திரையுலகின் புகழ்பெற்ற அத்தனைப் பெரிய மனிதர்களோடும் பழகியவர் என்பதனால் அவர்களைப் பற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல தகவல்கள் தெரிய வருகின்றன.அவை எல்லாமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கின்றன. பேசி முடிக்கும்போது கனமான ஒரு இறுக்கம் கவிந்தது போன்ற உணர்வு தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு பேச்சைக் கேட்டுவிட்டு வந்தோம் என்பதுபோல் இல்லாமல் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்று வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதில் சுலபமான வெற்றிபெறுகிறார் சிவகுமார்.
ஒரு ஓவியராக, நடிகராக, மக்கள்முன் பிரபலமடைந்த சிவகுமார் இன்றைக்கு ஒரு சிறந்த பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு பிரபலமான பேச்சாளர் என்றோ இலக்கியப் பேச்சாளர் என்றோ வகைப்படுத்த முடியாது. தமிழின் நல்லெண்ணத் தூதுவர்களில் ஒருவர் என்பதே பொருத்தமாக இருக்கும்.

Friday, March 5, 2010

சடுதியில் விழுந்த நித்யானந்த பிடுதி!

நித்தியானந்தாவை இந்தக் கோலத்தில் வீடியோவில் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் ,பாலும் பழமும் படத்தில் சிவாஜி சரோஜாதேவிக்கு 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்று பாடிக்கொண்டே பணிவிடை புரிந்து பேணிப்பாதுகாப்பதுபோல் அவ்வளவு சாவதானமாகக் கண்ணின் மணிபோல் பாவித்து பால் கொடுத்து, உணவு கொடுத்து, மாத்திரைக் கொடுத்து, கால் அமுக்கிவிட்டு அப்புறம் காதல் வயப்பட்டவளாய் மேலே விழுந்து பற்றிப் படர்ந்து சேவை செய்கிறார் என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அந்த நடிகை " சாமி,கடவுள் இதுமேலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.நான் சாமியெல்லாம் கும்பிடமாட்டேன்" என்று எப்போதோ பெரிய பகுத்தறிவுவாதிபோல பேட்டி கொடுத்திருந்ததாக ஞாபகம்.

நித்தியானந்தா பெங்களூரில் வந்து காலூன்ற பெருமளவு உதவி புரிந்தவர் மறைந்த சண்முக சுந்தரம். பெங்களூர்த் தமிழர்களாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் அன்புடன் 'அண்ணாச்சி' என்று அழைக்கப்பட்டவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டுவரக் காரணமாயிருந்தவர். பெங்களூர்த்தமிழ்ச்சங்கத் தலைவராகவும் இருந்தவர். அவருக்கு உடல்நிலையில் பாதிப்புவர கைகளால் சக்தி பாய்ச்சுவதன் மூலம் குணப்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா. அந்த வகையில் அவரால் கவரப்பட்ட அண்ணாச்சி நித்தியானந்தாவுக்கு பெங்களூரில் ஆசிரமம் அமைத்துத் தர பெருமளவில் உதவிகரமாக இருந்தார். தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தேவே கௌடாவிடமும் ,எஸ். எம். கிருஷ்ணாவிடமும் பேசி பெங்களூர் - மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் (கன்னடத்தில் பிடுதி என்றால் விடுதி என்று பொருள்) இடம் அமைத்துத் தந்தார். ஆரம்பத்தில் நித்தியானந்தாவும் அண்ணாச்சிக்கு மிகவும் விசுவாசமானவராகவே இருந்தார். அண்ணாச்சியின் உதவிகள் பல்வேறுவகையிலும் அன்றைக்கு நித்தியானந்தாவுக்கு அவசியமானதாக இருந்தன.

"உங்களை அவரிடம் கூட்டிப்போகிறேன் அவரைச் சந்தியுங்கள். பக்தி இலக்கியத்தில் நித்தியானந்தாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும் சரி, நோய்களை குணமாக்குவதில் அவருக்கு இருக்கும் ஆற்றலும் சரி உங்களுக்குப் பெருமளவு உதவும்" என்று சொல்வார் அண்ணாச்சி.
"சரி போகலாம்" என்று சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் நித்தியானந்தாவின் பெயரோ புகழோ அந்த அளவுக்குப் பரவியிருக்கவில்லை. மேலும் எனக்கு இம்மாதிரி சாமியார்களிடமெல்லாம் பெரிய அளவில் மதிப்போ நம்பிக்கையோ இருந்ததுமில்லை. ஆனால் அவருக்கு இவர் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.அவரது நம்பிகையைச் சிதைக்க வேண்டாமென்று பேசாமல் இருந்துவிடுவேன்.சந்திக்க நேரும்போதெல்லாம் நித்தியானந்தரின் நோய்களை குணமாக்கும் ஆற்றல் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்வார் சண்முக சுந்தரம்.
ஒருமுறை அவரிடம் "கையை வைப்பதன் மூலம் நோய்களை குணமாக்கும் கலையைத்தான் நானும் செய்துவருகிறேன். 'ரெய்கி' என்ற பெயரில் மிக்காவோ உசூயி என்ற ஜப்பானியர் வடிவமைத்த கலை இது. இன்றைக்கு உலகம் பூராவும் பரவியிருக்கிறது. சாதாரண மனிதர்களால் இருநூறு கிலோ எடையைத் தூக்க முடியாது. ஆனால் அதற்கென்று விசேஷப் பயிற்சி பெற்ற பளு தூக்குபவர்கள் இருநூறு கிலோ எடையைத் தூக்கிவிட முடியும். சாதாரண ஒரு ஆளால் ஒரு விமானத்தை ஓட்ட முடியாது. ஆனால் அதற்கான பயிற்சியும் யுக்திகளும் கற்றால் விமானத்தை ஓட்ட முடியும். ரெய்கியும் அப்படித்தான். அதற்குரிய தீட்சைப்பெற்று சில விசேஷப் பயிற்சிகள் பெற்றால் கைகளை வைத்து ஒருவருடைய நோய் களை குணமாக்கும் கலையைச்செய்ய முடியும். இதனை ஆன்மிகத்துடன் சம்பந்தப்படுத்தி தெய்வ வரம் பெற்றதால்தான் செய்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை. இயற்கையோடு நம்மைப் பிணைத்துக் கொண்டாலேயே இது சாத்தியம்தான் " என்ற என்னுடைய விளக்கம் அன்றைய நிலையில் அண்ணாச்சிக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது "உங்களுக்கு வலம்புரி ஜானிடம் பழக்கம் உண்டா? உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் நித்தியானந்தரிடம் வந்து மிக வேகமாகத் தேறிவருகிறார். பெங்களூரிலேயே தங்கியிருந்து சாமிகளிடம் சிகிச்சைப் பெற்று வருகிறார். முடிந்தால் வலம்புரிஜானைச் சந்தியுங்கள். நாம் மூணுபேரும் சேர்ந்தே நித்தியானந்தரைச் சந்திப்போம்" என்றார்.

"சரி" என்றேன். ஆனால் அண்ணாச்சியின் தொடர் பணிகளினால் அது இயலாமல் போய்விட்டது. இந்த நிலையில் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் திருவாசகம் சம்பந்தமாக நித்தியானந்தரும் வலம்புரிஜானும் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாகவே வந்துவிட்ட வலம்புரிஜானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். “ நான் இப்போது உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமே சாமிகள்தாம். அவரால்தான உயிர்பிழைச்சிருக்கேன். நடமாடும் தெய்வம்னா இவர்தான்" என்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தது தெரிந்தது. கூட்டத்தில் பேசும் நிலையில் ஜான் இருக்கவில்லை. நடக்கவே இயலாமல் இருந்தார். “உடம்புக்கு முடியாத நிலையில் எதுக்காக கூட்டத்தில் பேசுறீங்க?” என்றேன்.

"கூட்டத்தில் பேச முடியலைன்னா உடம்பு இருந்து -உயிர் இருந்து என்ன பயன்?” என்றார்.
சற்று நேரத்தில் நித்தியானந்தர் வர கூட்டம் ஆரம்பித்தது. வலம்புரிஜானும் நித்தியானந்தரும் பேசினார்கள். கூட்டம் முடிந்ததும் "சாமி பேசினதை கவனிச்சீங்களா" என்றார் வலம்புரிஜான். “கவனிச்சேன். நல்லா இருந்தது" என்றேன்.
"திருவாசகம் பற்றிப் பேசினார். ஆனால் ஒரேயொரு செய்யுளாவது சொன்னாரா? ஒரு சாதாரணப்பேச்சாளனோ இலக்கியப் பேச்சாளனோ எத்தனை செய்யுளைச் சொல்லியிருப்பான். அதுதான் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம். இவர் ஞானிகூட இல்லை. கடவுளின் அவதாரம்" என்றார்.சொல்லிக்கொண்டே காரில் ஏறி உட்கார்ந்தவர் "நான் சென்னை சென்று திரும்பியதும் உங்களுக்கு போன் செய்கிறேன் அப்போது சந்திப்போம்"என்று சொல்லிச் சென்றார்.

ஒரு இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்றைக்கு வந்த ஜூனியர் விகடன் இதழில் நித்தியானந்தரைப் பற்றிய கடுமையான அட்டைப்படக் கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் அந்தப் பேட்டியைத் தந்திருந்தவரே வலம்புரிஜான்தான்.நித்தியானந்தாவைப் பற்றியும் அவருடைய ஆசிரமத்தைப் பற்றியும் பல நிழலான விஷயங்களைப் பூடகமாகத் தெரிவித்திருந்தார் வலம்புரிஜான்.
மேலும் ஒரு மாதம் சென்றிருக்கும். சிவாஜி நகர் கன்னிங்காம் சாலைக்கருகில் நித்தியானந்தரின் ஆசிரமக் கிளையில் சிகிச்சைகள் பிரபலமாகி வருகிறது என்றும் "நீங்கள் வேண்டுமானால் அங்கே சென்றுசிகிச்சை அளிக்கிறீர்களா நான் அவரிடம் சொல்கிறேன்" என்றும் கேட்டார் சண்முகசுந்தரம். “ரெய்கி சிகிச்சை என்றால் நான் அளிக்கத் தயார்" என்றேன். சில நாட்கள் கழித்து "அவர்கள் முறைப்படியான சிகிச்சைதான் அங்கே ஒப்புக் கொள்வார்களாம். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் தீட்சைப்பெற்றுக் கொண்டு அங்கே சிகிச்சை அளிக்கலாம். யோசிச்சுப் பாருங்க" என்றார். “இருக்கட்டும் ஐயா. அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லித் தவிர்த்துவிட்டேன்.

மேலும் சில நாட்கள் சென்றன. வேறொரு நிகழ்ச்சியில் அண்ணாச்சி சண்முகசுந்தரத்தைச் சந்திக்க நேர்ந்தது. “பிடுதிக்குப் போகலாம் நித்தியானந்தாவைச் சந்திக்கலாம்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தேன் இல்லையா? இப்ப நானே அங்க போறதை நிறுத்திட்டேன். அங்க நடக்கறது ஒண்ணும் சரியாயில்லை. முதல்ல காதுக்கு வந்தப்ப நானும் நம்பலை.அப்புறமா தெரிஞ்ச விஷயம் ரம்ப மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சி.எதுக்காக இத்தனைச் சிரமப்பட்டு தேவேகௌடாவையெல்லாம் சந்திச்சு அந்த இடம் கிடைக்க பாடுபட்டேனோன்னு ரம்ப வருத்தமா இருக்கு..ம்ம்ம் இப்ப நாமெல்லாம் ஒண்ணும் செய்யறதுக்கில்லை.அவங்க எங்கேயோ போயிட்டாங்க. இண்டர்நேஷனல் லெவலுக்குப் போயிட்டாங்க, அந்த ஆளை நான் ரம்பப் பெரிய ஆன்மிகத் தலைவரா வருவார்னு எதிர்பார்த்தேன். ப்ச்ச் எல்லாம் போயிருச்சி" என்றார். என்ன ஏதென்ற உள் விவகாரத்துக்கெல்லாம் நான் போகவில்லை. எதையும் கிளறிப்பார்க்கவும் விரும்பவில்லை. தவிர, அண்ணாச்சி சண்முகசுந்தரம் அப்படியெல்லாம் எதையும் சொல்லி விடுகிறவரும் இல்லை. அதனால் பேசாமல் இருந்துவிட்டேன்.
இன்றைக்கு அவரும் உயிருடன் இல்லை. பிடுதி ஆசிரம விவகாரங்கள் இன்றைக்கு தூள் பறந்து கொண்டிருக்கின்றன. மொத்த விவகாரத்தையும் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. எல்லாமே சட்சட்டென்று மாறும் நாடகக் காட்சிபோல் வந்தார்,ஆசிரமம் தொடங்கினார், புகழ் பெற்றார் புகழின் உச்சத்துக்குச் சென்றார்,அகில உலகிலும் கிளைகள் பரப்பினார், எங்கேயோ போயிருக்கவேண்டியவர் தொபுகடீர் என்று விழுந்தார் என்று இவ்வளவு வேகமான காட்சிகள் எந்த திரைப்படத்திலும் நாவலிலும்கூட வந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஒரு திரைப்படம் பார்க்க ஐந்து கைக்குட்டைகள்


பிரபலமான மனிதர்களில் இரண்டுவகை உண்டு. புகழ் பெற்ற பிரபலங்கள் ஒருவகை, அந்தப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவகுமார். நடிகர் சத்யராஜுக்கு அண்ணன்முறை. “நான் இன்றைக்கு இந்த அளவு புகழ் பெற்றவனாக வந்திருக்கிறேன்னா அதுக்கு அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான் காரணம்" என்று சத்யராஜால் அடையாளம் காட்டப்படுபவர். விஜய், அஜீத், சூர்யா துவங்கி சிம்பு வரையிலும் இளைய தலைமுறையின் எந்தப் பெரிய நடிகர்கள் நடித்தாலும் எல்லாரின் படங்களிலும் காமெடியில் கலக்குபவர் நடிகர் சத்யன். அந்த சத்யனின் தந்தை இவர்.


கோயம்புத்தூர் பகுதியில் மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எம்.என்.எஸ் என்றும் மாதம்பட்டிக்காரர் என்றும் அறியப்படுபவர். குறுநில மன்னர் பரம்பரை. ஒரு காலத்தில் ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து பின்னர் அவ்வளவையும் விற்று நிறையப் படங்கள் எடுத்து (நினைவிருக்கிறதா? சின்னத்தம்பி பெரிய தம்பி) தற்போது விவசாயம் பார்க்கக் கூடிய அளவு மட்டும் நிலத்தை மட்டும் வைத்து நிர்வகித்து வருபவர்.
இவரது அன்புப் பட்டியல் மிகப்பெரியது. அந்த அன்புப் பட்டியலில் ஒருமுறை விழுந்து விட்டால் போதும். அவர்கள் விக்கித்துப் போகும் அளவுக்கு அன்பாலும் உபசரிப்பாலும் திக்குமுக்காடச் செய்துவிடுவார். அவர்களின் பிறந்த நாளை அவர்களுக்கே தெரியாமல் குறித்துவைத்துக் கொள்வார். பிறகு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பெற்றவர்களிடமி ருந்தும் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் வாழ்த்து வருகிறதோ இல்லையோ முதல் வாழ்த்து இவரிடமிருந்து வந்துவிடும்.

மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …....எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர். “ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”
' நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்" என்கிறார்.

"சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா " என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.
இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக்ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.
எழுத்துக்களில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு மனம் பறிகொடுத்தவர். எந்த அளவு ஈடுபாடு எனில் எண்பதுகளின் மத்தியில் நான் கோவையில் இவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிப் பேசினோம். “ அவரைச் சந்திக்க வேண்டுமே ஏற்பாடு செய்ய முடியுமா ?” என்று கேட்டார்.
"அதற்கென்ன பெங்களூர் சென்றதும் ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். பெங்களூர் வந்ததும் சுஜாதாவிடம் சொன்னேன். “அழைத்து வாருங்களேன்" என்றார் சுஜாதா. மாதம்பட்டிக்காரருக்குத் தெரிவித்தேன் . அவ்வளவுதான். அடுத்த ஃபிளைட் பிடித்து பெங்களூர் வந்தார். சுஜாதாவைச் சந்தித்துப் பேசினார்.மறு ஃபிளைட்டில் கோயம்புத்தூர் திரும்பிவிட்டார்.
எண்பதுகளில் 'கிராமர் வெர்ஸஸ் கிராமர்' என்றொரு ஆங்கிலப்படம் வந்தது. பாசத்தைப் பிழிந்துதரும் படம். 'பாசமலர் அளவுக்கு மனதை உருக்குகிறது. படம் பார்த்து அழாமல் வரமுடியாது ' என்ற விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருந்த வெற்றிகரமான படம் அது. “இங்கே வர தாமதாகும்போல் தெரிகிறது. பெங்களூருக்குப் படம் வந்தால் தெரிவியுங்கள்" என்று கடிதம் போட்டிருந்தார் மாதம்பட்டி சிவகுமார். படம் பெங்களூர் வந்ததும் தெரிவித்தேன். அடுத்த நாளே காரை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்துவிட்டார் என்பது முக்கியமல்ல. படத்திற்குக் கிளம்பும்போது சூட்கேஸைத் திறந்து ஆறேழு கைக்குட்டைகளை எடுத்துக்கொண்டார். “எதுக்குசார் இவ்வளவு கைக்குட்டைகள் ?” என்றேன்.
"படம் ரொம்ப சோகமாயிருக்கும். நிறைய அழுகை வரும் என்றார்களே" என்றார்.
அந்த ரசனையுள்ள குழந்தை படத்தின் பல இடங்களில் கேவிக்கேவி அழுததை கலைக்க விரும்பாமல் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நல்ல ரசனை உள்ளவர்கள் தாம் ரசித்ததை அழகாக மற்றவர்களிடம் விவரிப்பதைக் கேட்பது ஒரு தனி அனுபவம். கண்ணதாசன் பாடல் எழுதிய நாளில் உடனிருந்து அதனை அனுபவித்த விவரத்தை இவர் சொல்வதைக் கேட்க வேண்டும். …....
"சிவகுமார் அண்ணன் நடிச்ச படம் 'சந்ததி'. அந்தப் படத்திற்கான ஒரு பாடல் கம்போசிங்கிற்
காக நானும் உடன் சென்றிருந்தேன். கவிதா ஓட்டல்ல கவிஞர் வந்து உட்கார்ராரு. நாங்கள்ளாம் அவர் முன்ன உட்கார்றோம். டைரக்டர் கதையைச் சொல்றாரு. நடிகர்கள் யார் யாருன்னு கேட்கறார் கவிஞர். பாட்டு எந்த சிச்சுவேஷன், இரவு எஃபெக்டா பகல் எஃபெக்டான்னு கேட்கறாரு. பாட்டு பிக்சரைஸ் பண்ணும்போது காட்சியில யார்யார் இருக்காங்கன்னு கேட்கறார். தொகையறா வேணுமா அல்லது பல்லவியிலிருந்தே ஆரம்பிச்சுரலாமான்னு கேட்கறார்.

அந்த சமயத்துல டைரக்டருக்கும் அவர் உதவியாளருக்கும் தொகையறா வேணுமா வேணாமான்னு சொல்லத்தெரியலை. “இல்ல இந்தப் பாட்டுக்குத் தொகையறா போட்டுக்கங்க" என்கிறார் கவிஞர். டைரக்டர் சரின்றாரு.
அதுக்குப் பிறகு ஒரு நிமிஷம்.......ஒரேயொரு நிமிஷம் டைரக்டர் சொன்ன கதையை மைண்ட்ல ஓட்டறார். அவருடைய உதவியாளரைப் பார்த்து "எழுதிக்க" என்கிறார்.
இறைவன் எழுதிய கடிதம் ஒன்று
கையினில் கிடைத்தது இன்று
அது கால்பக்கக் கடிதம்
ஆரம்பம் முடிந்து அந்திக்கு வருகின்றது-உண்மை
சந்திக்கு வருகின்றது
எழுதி முடித்ததும் டைரக்டர் பாட்டில் புற்றுநோய் வரணும் என்கிறார்.
"அது அவ்வளவு நல்லா இருக்காதே" என்கிறார் கவிஞர்.
"இல்லைங்க கதை அதுதான். கதாநாயகனுக்கு ப் புற்றுநோய். ரத்தப் புற்றுநோய். அவன் சாகப்போறான். அந்த வார்த்தைப் பாடலில் வரணும்" என்கிறார் டைரக்டர்.
அப்படியா என்று யோசிக்கிறார் கவிஞர். ஒரு நிமிடம்....ஒரே நிமிடம்தான்.
'என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன்
சந்ததியில் விருப்புற்று நோய் தந்தான் தந்தை
அப்போது புரியவில்லை ஆண்டவனின் வடிவம்
இப்போது வருகிறது இறைவனவன் கடிதம்-
அப்படின்னாரு. அப்படியே மலைச்சு மந்தரிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தோம். அந்தப் படத்தின் கதை என்னன்னா, வாடகைக்கு ஒரு விலைமாதைக் கொண்டுவந்து சந்ததிக்காக அவள் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது...பின்னர் அவளுக்குக் காசு கொடுத்து அவளை அனுப்பிவிடுவது. இவருக்கு யாரும் சொந்தத்துல பொண்ணுதர மாட்டாங்க. அதுக்காக வாடகைத் தாயார் அப்படின்றது கதை. வாடகைத்தாயா ஸ்ரீபிரியா நடிச்சிருந்தாங்க. இதைச் சொல்லி முடிச்சதுதான் தாமதம்.
'இரவுக்கு வாழ்ந்த பெண்களில் ஒருத்தி
உறவுக்கு வந்தது என்வீடு-அதில்
வரவுக்கு ஒன்றை வைத்த பின்னாலே
செலவில் முடிந்தது என் ஏடு
வேலியில் ஒருவன் தாலியில் ஒருத்தி
யார்கடன் முதலில் நான் கொடுப்பேன்-என்
வேஷத்தில் ஒருவன் பாசத்தில் பிறப்பான்
வானத்தில் இருந்தே நான் பார்ப்பேன்'
அப்படீன்னார்.அந்தக் கணம், அந்தக் கணத்தில் எழுதியது. ரூம் போட்டோ, நேரம் எடுத்துக்கொண்டோ, வீட்டுக்குப்போய் யோசிச்சோ எழுதியதில்லை. அப்போதே அந்த நேரத்திலேயே எழுதியது. டைரக்டர் புற்றுநோய் வரணும்னு சொன்னதுக்காக என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன், விருப்புற்று நோய்தந்தான் தந்தை என்று அற்புதமாக அந்தச் சொல்லை வரவழைத்தார். தொடர்ந்து-
ஒருதுளி நீரில் ஆறடி உருவம்
உலகினில் வந்தது அவனாலே
அந்த ஆறடி உருவம் ஆறடி நிலத்தில்
அடங்கப் போவதும் அவனாலே- என்று தொடர்ந்து எழுதி முடிக்கிறார். கேட்ட மாத்திரத்தில் கதையையும் காட்சியையும் சொன்ன மாத்திரத்தில் அருவிபோலக் கொட்டிமுடித்ததை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் சிலிர்க்குது" என்றார் மாதம்பட்டி சிவகுமார்.
கோவைத் தங்கங்களில் மாதம்பட்டியும் ஒன்று!