Tuesday, December 25, 2012

‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.

உலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும். 

அறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.

ஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்? 

அப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர்? (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்) 

இன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.

சிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.

ஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும்.

‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)

இப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.

இந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது.

மாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.

ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது?

பல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.
பல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.
சில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.

ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. 

ஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை.

அவ்வளவு கூட்டம்!

தினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.

நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.

சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.

சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.
மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.

அதுதான் எட்டு நடை!

எட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.

அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.

மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.

இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்

மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.  

அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.
அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.

இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.

எட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.

இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட 
பிரச்சினைகள் விலகும்.

ரத்த ஓட்டம் சீர்ப்படும்.

ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.

தூக்கமின்மை சரியாகும்.

அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.
ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.

அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.

இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.

நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.
ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம்.

இந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. 

இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். 

சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.

இந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்.

என்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.

தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.

கால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.

எல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
காசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா? 

எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்!

Monday, December 10, 2012

இந்த நூற்றாண்டின் முதல் மகாகவிஇந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த முதல் மகாகவி பாரதிதான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனிப்பட்ட நடையில் உழன்று கொண்டிருந்த தமிழ்க்கவிதையைச் சட்டென்று திசைதிருப்பி இன்றைக்கு இருக்கின்ற - இனிமேல் இருக்கப்போகின்ற நவீன நடைக்கான ராஜபாட்டையை- மன்னிக்கவும் மக்களுக்கான பாட்டையைப் போட்டுக்கொடுத்த அற்புதன் அவன்தான். அவனுடைய காலம்வரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்ப்பாடல்கள் என்பதும் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத்தான் இருந்தது. அதன் மருட்சி நடை பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கித் திரும்பவில்லை. எந்தச் சாதாரணப் பாடலுக்கும் உரை சொல்வதற்கு ஒரு தமிழ் வித்துவானையோ தமிழ்ப்புலவரையோ தேடிப்போக வேண்டியிருந்தது. 

சில புலவர்களின் தமிழ் உரையை விளங்கிக்கொள்வதற்கு இன்னொரு உரை தேவையிருந்தது. இதே நிலைமை தொடர்ந்திருந்திருந்தால் தமிழ்க்கவிதைகள் அழிந்தே போயிருக்கும். வேகமாய் வந்துகொண்டிருந்த நவீனத்தின் காலம் ஒரு பாடலைப் புரிந்துகொள்ள யாரையோ தேடிப்போகவேண்டும் அவர்கள் விளக்கம் சொன்னார்களானால்தான் இலக்கியம் புரியும் என்ற 

நிலைமை தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு உரை நடைக்கும் (அந்தக் காலத்திலே அதற்குப் பெயர் வியாசம்) ஒரு வித்துவானைத் தேடிக்கண்டுபிடித்து உரை சொல்லக்கேட்டு இலக்கியம் படித்திருக்கப் போகிறார்கள்? ‘குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்” என்று ஆரம்பித்தவுடன் “அண்ணே எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறமா வாரேன்” என்று எழுந்து போய்விட மாட்டார்களா? நம் காலத்து மொழிநடையில் கவிதை இருக்கவேண்டும் கரடு முரடான தமிழ் பேச்சுமொழிக்கும் சற்றே மேம்பட்ட ஒரு நடையில் இருக்கவேண்டும் ரொம்ப உயரத்தில் புரியாத மொழிநடையில் இருக்கக்கூடாது என்ற எண்ணம் பாரதி காலத்துக்குக் கொஞ்சம்  முன்னரே விதைக்கப்பட்டிருந்த போதிலும் அதனை வெற்றிகரமாகக் கையிலெடுத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவன் பாரதிதான்.

இயல்பான மொழிநடை, உணர்ச்சிகரமான சொற்கள், தத்துவ விசாரம், ஆன்மிக ஞானம் பழையன சாடல் புதியன பேசல் புதுப்புது உத்திகள் அறநெறி பேணல் விடுதலை வேட்கை காதல், நாட்டுப்பற்று, மொழி உணர்வு, அழகியல், இயற்கையை நேசித்தல் என்று மக்களின் வெகு அருகில் வந்து நின்று இலக்கியம் பேசியவன் பாரதி. அதனால்தான் அவனை ஒரு மகாகவியாகவும் யுகபுருஷனாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

பாரதிக்கு அடுத்துவந்த பாரதிதாசன் பாரதி பாடாமல் விட்ட சில பகுதிகளையும் மாறிவரும் சமுதாயத்திற்குத் தேவையான உணர்வுகளையும் ஊட்டத்தொடங்கினான். தேசவிடுதலையை பாரதி பாடிச்சென்றுவிட ‘ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று தனக்கு முன்னோன் சொன்னதை 
தமிழ் இனப்புரட்சியாக கொண்டுவர பாடுபட்டவன் பாரதிதாசன்.

அடுத்துவந்த கண்ணதாசன் சங்க இலக்கியத்தின் மரபு சார்ந்த நீட்சியையே பாடுபொருள் ஆக்குகிறான். அவன் காலத்தில் இருந்த கவிஞர்களுக்கும் அவனுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் கண்ணதாசனுக்கும் அதுதான் வித்தியாசம். சங்க இலக்கிய மரபு திரைஇசைப் பாடலாக உலா வர ஆரம்பிக்கிறது. அதற்கு அவனுக்கு அற்புதமாய் வாய்த்த இடம் திரைப்படத்துறை. ஏட்டில் படிப்பதுதான் இலக்கியம் என்றிருந்த காலகட்டம் மெதுவாக மாறுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் மீடியா வானொலி இசைத்தட்டு டேப்ரிகார்டர், சி.டி, ஐபேட் என்று வகைவகையாக மாறி இசைவடிவத்தில் பாடல் வரப்போக ஏட்டில் படிக்காதவனையும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்று இதழில் தேன் தடவிப் பாடவைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் வெறும் சினிமாக்கவிஞன் தானே சினிமாப்பாட்டெல்லாம் இலக்கியமாகிவிடுமா? என்று இன்னமும் சிலபேர் முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட கவிஞன் அவன்.  மனித 
வாழ்க்கையின் அத்தனை நொடிகளையும் பாடிவைத்திருக்கும் ஒரே கவிஞன் அவன்தான்.
நாம் பாரதிக்கு வருவோம்.

ஒரு கவிஞன் எந்நாளும் நிலைத்து நிற்க அவன் வெறுமனே அழகியலைப் பாடிச்செல்லுபவனாகவோ தினசரி வாழ்க்கையைப் பதிவு செய்துவைத்துவிட்டுப் போகிறவனாகவோ மட்டும் இருந்தால் போதாது. அவன் ஒரு தத்துவ ஞானியாகவும் இருத்தல் வேண்டும். 

இப்போதெல்லாம் சில கவிஞர்கள் பாடல்களில் நிறைய புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். இன்னும் சில கவிஞர்கள் என்சைக்ளோபீடியா விஷயங்களைச் சொல்லுகிறார்கள்.

“எறும்பு பற்றித் தெரியுமா நண்பர்களே உங்களுக்கு?

அதன் சின்னஞ்சிறு உருவத்துக்குப் பின்னே இருக்கும் மலைக்க வைக்கும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூச்சி இனத்தில் மிகுந்த அறிவு கொண்டது எறும்புதான் என்பது தெரியுமா?

எறும்புகளில் எட்டாயிரம் வகைகள் உண்டு

உடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.

பிரிந்துபோன எறும்பு ஒன்று ஆறுமாதம் கழித்து வந்தாலும் மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டுகொள்ளும்.

எறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியுமரோன் ப்யூமரிக் அமிலம்தான்

அவை மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்……………”இப்படியெல்லாம் ‘கவிதை’ எழுதுகிறார்கள்.

இந்தக் கவிதை கவிதை அல்ல; தினமணியில் வந்த செய்தித் துணுக்குத்தான். இப்படி தினமணி தினத்தந்தி தினமலர் போன்ற பத்திரிகைகளின் சிறுவர் மலர்களிலும் பாப்பா மலர்களிலும் ஓராயிரம் தகவல்கள் வருகின்றன. அதனைத் தொகுத்து பாடல்களாகவும் கவிதைகளாகவும் சிறுபிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். இந்த தகவல் துணுக்குகள் எல்லாம் தகவல் துணுக்குகளே. கவிதைகள் ஆகா.

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்றவன் பாரதி. தீ சுடும் என்பது தகவல். ‘தீ இனிது’ என்றானே அதுதான் கவிதை.

பாரதி பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் இவ்வார தினமணியின் தமிழ்மணி பகுதியில் வந்துள்ளது. அவற்றிலுள்ள சில பகுதிகளைப் பாருங்களேன்.

‘தம்பி- மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கின்றேன். 

நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலேயே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.

நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

தமிழ் – தமிழ் – தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்.

தம்பி – நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.

தமிழைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை!

தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி!

உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு!

மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணு.

பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி!

உனக்குச் சிறகுகள் தோன்றுக.

பறந்து போ! பற, பற!

மேலே மேலே மேலே!

தம்பி _ ‘தமிழ் நாடு வாழ்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக’ என்றெழுது. ‘அந்தப்  பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க’ என்றெழுது.

தமிழ் நாட்டிலே ஒரே ஜாதிதான் உண்டு!

அதன் பெயர் தமிழ் ஜாதி!

அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது!

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்வு செய்தோன் கண்ணைக் குத்திக்கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள் தொழில்கள் தொழில்கள் என்று கூவு!

வியாபாரம் வளர்க, இயந்திரங்கள் பெருகுக, முயற்சிகள் ஓங்குக.

சங்கீதம், சிற்பம், இயந்திர நூல், பூமி நூல், வான நூல்…………இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் – 

இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! சக்தி! சக்தி! – என்று பாடு!”

இவன்தான் பாரதி.

தினமணியில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணி இம்மாதிரியான முத்துக்களையெல்லாம் தேடியெடுத்து வாசகப்பரப்பில் வைக்கிறது. இப்படியொரு இலக்கியச்சேவையை இன்றைய நாளில் எந்தவொரு ஊடகமும் செய்வதில்லை என்பதைப் பார்க்கும்போதுதான் இதன் மேன்மை புரியவரும். கலாரசிகன் என்ற பெயரில் இந்தப் பகுதியைச் சிறப்பாகச் செய்துவரும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர்.  

பாரதியை சரிவரப் படிக்காமலேயே அல்லது இனம்சார்ந்த விமர்சனத்தை அந்த மகாகவிஞன் மீது வைப்பதானாலேயே அவன்மீது சேற்றை வாரித்தூற்றும் சிலரை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அவன் ஆதங்கப்பட்டிருப்பதையெல்லாம் வசதியாகத் திரைப்போட்டு மறைத்த திராவிட சிந்தனையாளர்களையும் இந்த நேரத்தில் பரிதாபமாக நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவர்களையெல்லாம் தாண்டிக்கொண்டுதான் மகாகவிகள் நிற்கிறார்கள்.

இமயத்தைவிடவும் அதைவிட உயரமாகவும் அவர்கள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.