நீண்ட நாட்களாகப் பதிவர் வவ்வாலை தமிழ் இணைய வெளியில் எங்கும்
காணோம். அவருடைய தளமான ‘வவ்வால்- தலைகீழ் விவாதங்கள்’ தளம்கூட இந்த வருடம்(2014) ஆகஸ்ட்
பன்னிரெண்டாம் தேதிக்குப் பிறகு எந்தவிதப் புதிய பதிவுகளும் இல்லாமல் வெறிச்சோடியே
இருக்கிறது.
இம்மாதிரியான நீண்ட இடைவெளிகள் அவர் அவ்வப்போது எடுத்துக்கொள்வது
உண்டுதான். ஆனால் பதிவுகள் இல்லாத நாட்களில்கூட அவருடைய காரசாரமான பின்னூட்டங்கள் இல்லாமல்
போகாது.
தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமெல்லாம் பார்க்கமாட்டார். பதிவுலகில்
புகழ் பெற்றவர் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? ஆனால் அப்படி இருப்பதாக தங்களுக்குத்
தாங்களாகவே நினைத்துக்கொண்டு சிலர் செய்யும் அலப்பறைகள் வேடிக்கையானவை), புதியவர் என்றெல்லாம்
பார்க்கமாட்டார். நம்முடைய குழுவைச் சேர்ந்தவர்களா, இவர் நமக்குத் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள்
போடுகிறவரா, இவர் நம்மைப் பாராட்டி எழுதுகிறவரா என்பது போன்ற எந்தவித அளவுகோள்களையும்
வைத்துக்கொள்ள மாட்டார். பதிவுகளைப் படிக்கும்போது தனக்கு எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா
உடனடியாகத் தமது கருத்தைப் பதிவு செய்துவிடுவார்.
அந்தக் கருத்து பெரும்பாலும் இன்னொரு
விவாதத்திற்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது
யதார்த்தம்.
ஆனால் அதுதான் இணைய தளத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயமாக
இருக்கும்.
இப்படிப்பட்டவர் கடந்த நான்கு மாதங்களாக இணைய தளத்தில் எங்கேயும்
காணவில்லை.
நெய்வேலி புத்தகச் சந்தையின்போது நெய்வேலி சென்று அவர் எழுதிய பதிவுதான்
அவருடைய தளத்தில் இன்னமும் காட்சியளிக்கிறது. அதன்பிறகு என்னுடைய தளத்தில் சிவாஜிகணேசன்
பற்றிய என்னுடைய கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சில பின்னூட்டங்கள் எழுதியிருந்தார்.
ஏற்கெனவே சில தளங்களில் அவரது கருத்துக்கள் பற்றி அறிந்திருந்ததனால்
அவர் எம்ஜிஆர் ரசிகர் என்ற விஷயம் லேசுபாசாகத் தெரிந்திருந்தது. ‘சிவாஜி பற்றி எதிர்த்து
எழுதுகிறீர்களா எழுதுங்கள்.
அதென்ன ‘சிவாசி’ என்றெழுதுவது? நீங்கள் அப்படியொன்றும்
தனித்தமிழ் எழுதுகிற ஆசாமி இல்லை. அப்படியிருக்க சிவாஜியை சிவாசி என்றெழுதுவதன் மூலம்
மட்டுமே அவருடைய மதிப்பைக் குறைத்துவிடுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்பதுபோல்
பதில் எழுதினேன்.
மீண்டும் மீண்டும் சிவாசி என்றே எழுதிக்கொண்டிருந்தார்.
அவருக்கான சில பதில்களுக்குப் பிறகு, அந்தக் கட்டுரையை விதண்டாவாதங்களுக்கான
ஒரு
கட்டுரையாக மாற்றிவிட என்னுடைய மனம் ஒப்பதாததால் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை
என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கும் முன்னர் வவ்வாலின் பின்னூட்டத்திற்கு அனானிமஸ் பெயரில்
கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் பதில் எழுதியிருந்தார். வவ்வாலைப் பற்றி ரசக்குறைவான
வார்த்தைகளும் அதில் இருந்தன. அத்தகைய வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை நான் என் தளத்தில்
வெளியிடுவதில்லை என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பதால் அந்தப் பின்னூட்டத்தை வெளியிடவில்லை.
அந்த நேரத்தில் எனக்கு பதிலளித்து வவ்வால் இன்னொரு பின்னூட்டமும்
எழுதினார். ஏற்கெனவே ஒரு ‘அனானிமஸ்’ வரிசையில் இருக்கிறார். அதனையே வெளியிடவில்லை.
இப்போது வவ்வாலின் பின்னூட்டமும் அந்த அனானிமஸ் சொல்லியுள்ள கருத்துக்களைப் பெருமளவு
ஒட்டியதாகவே இருக்கிறது என்பதனால் இவை இரண்டையும் வெளியிட்டு புதியதொரு வேண்டாத விவாதத்தைத்
தொடரக்கூடாது என்பதனால் வவ்வாலின் பின்னூட்டத்தையும் தவிர்த்துவிட்டேன். பதிவுக்குத்
தொடர்பில்லாத அசிங்கம் பிடித்த பின்னூட்டங்கள் தவிர, இம்மாதிரியான பின்னூட்டங்களைத்
தவிர்ப்பவன் நான் அல்ல. ஆனால் தேவை கருதியே இதனைத் தவிர்த்தேன்.
ஆனால் இதனால் எல்லாம் வவ்வால் போன்றவர்கள் கோபித்துக்கொள்வார்கள்
என்ற சிறுபிள்ளைத்தனமான நினைப்பும் எனக்கில்லை. ஆனால் அந்தப் பின்னூட்டங்களுக்குப்
பிறகு அவரை எங்கேயுமே காணோம் என்பதுதான் வருத்தமாயிருக்கிறது.
அதன்பிறகு மற்றவர்களின் ஏதோ ஒன்றோ இரண்டோ பதிவுகளில் வவ்வாலின்
ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே பார்த்ததாக ஞாபகம். அவைகூட வவ்வாலின் முத்திரை எதுவும்
இல்லாமல் மிகவும் சாதாரணமாகவே இருந்தன.
அதன் பிறகு அவரை சுத்தமாக இணையவெளி எங்கும் காணோம்.
அவருடைய வழக்கமான எதிர்க்கருத்துக்களும், விவாதங்களும் இல்லாமல்
தமிழ் இணையவெளி சற்றே போரடிக்கிறது என்பதும் உண்மைதான். தமிழ் இணையத்தில் சுவாரஸ்யமானவைகளே
இந்தப் ‘பின்னூட்டங்கள்’ என்று சொல்லப்படும் எதிர்க்கருத்துக்கள்தாம்.
இவற்றைப் பின்னூட்டம் என்று சொல்லலாமா, அது சரியான பொருளாகுமா
என்ற கேள்வியை சமீபத்தில் ஒரு பதிவர் எழுப்பியிருந்தார்.
உண்மைதான்.
எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது.
தமிழில் இணையவெளியை ஆரம்பித்து வடிவமைத்தவர்கள் இணையத்திற்கு
என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கட்டுமே, கட்டுரை என்று சொல்லவேண்டாம், பதிவு என்று
சொல்லலாம். கடிதம் என்றோ கருத்து என்றோ சொல்லவேண்டாம், பின்னூட்டம் என்று சொல்லுவோம்
என்பதாக நினைத்து இந்த வடிவத்தைத் தமிழ் உலகின் முன்பு சமர்ப்பித்திருக்கக்கூடும்.
அந்த முன்னோடிகளுக்கு மதிப்பளித்து நாமும் அதனை அப்படியே தொடர்வோம்
என்ற எண்ணத்தில்தான் நானும் பின்னூட்டம் என்றே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால்
பின்னூட்டம் என்பது சரியான பொருள் தரவில்லையோ என்ற எண்ணம் சமீப காலமாக மிக அழுத்தமாகவே
மனதில் இருக்கிறது. அதனால் தமிழ்ப்பெரியவர்கள் எல்லாரும் இணைந்து இதனை மாற்றினார்களென்றால்
நாமும் மாறலாம். ஏனெனில் இணையத்தின் தளங்கள் வெவ்வேறானவை.
பலவிதமான எழுத்துக்களும் இணையத்தில் உலா வருகின்றன.
சமூக மற்றும் அரசியல் விவாதங்களில் வினவு தளத்தின் சாதனைகள்
அசாதாரணமானவை.
சவுக்கு தளத்தை எந்த வரிசையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
ஆனால் சவுக்குசங்கரின் திறமையும் துணிச்சலும் சாதாரணமானதல்ல. யாருக்கும் அவ்வளவு எளிதாக
அத்தனைத் துணிச்சல் வருவதற்கில்லை.
தம்முடைய கருத்தில் மிகவே உறுதியாக இருக்கும் இன்னொரு பதிவர்
திரு வே.மதிமாறன்.
நேரடியாக ஆழமான கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவுகளை எழுதும்
பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி, மூங்கில்காற்று டி.என்.முரளிதரன், தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார்,
ஸ்ரீராம் என்று அவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது.
தாங்கள் உண்டு தங்களின் பதிவுகள் உண்டு என்று அப்புராணியாய்
பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் நிறைய.
தாங்கள் கொண்ட கருத்துக்களை முன்வைத்து சிறப்பாக வாதம் புரியும்
பதிவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக காரிகன், இக்பால் செல்வன், சுவனப்பிரியன், சார்வாகன்
ஆகியோரைச் சொல்லலாம்.
தற்சமயம் பதிவுகளை நிறையவே குறைத்துவிட்டபோதிலும் வால்பையன்
போன்றவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இவற்றில் எந்த வகையிலும் சேராமல் மிகப்பெரிய டாக்டராய் பணியாற்றிவந்தபோதிலும்
அந்தச் சுவடு சிறிதுமின்றி ஏகப்பட்ட சேட்டையும் கலகமும் செய்யும் நம்பள்கியும் குறிப்பிடப்படவேண்டியவரே
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வவ்வால் விஷயத்திற்கு வருவோம்.
வவ்வாலுக்கு இணையத்தில் நிறைய நண்பர்களும் வாசகர்களும் உண்டு.
அதுபோலவே நிறைய எதிரிகளும் உண்டு.
எதிர்க் கருத்துக்களை மற்றவர் மனம் நோகாமல் சொல்லலாம் என்கிற
ஜாதியெல்லாம் இல்லை அவர். பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பதுதான் அவர் பாணி. சண்டைக்கு
வருகிறாயா வா. நீயா நானா ஒரு கை பார்த்துவிடுவோம் என்பதுபோல்தான் விவாதங்களில் இறங்குவார்.
சில சில்லுண்டிகள் போல வெற்று அரட்டை அவரிடம் இல்லை.
ஏடா கூடமாக எழுதுவதற்கும் அவர் தயார். எவ்வளவுக்கு வேண்டுமானாலும்
‘இறங்கி ஆடும்’ பதிவர்கள் தமிழ் இணையத்தில் உண்டு. அவர்களில் இவரும் ஒருவர். விவாதங்களில்
சூடு பறக்கும் என்பதோடு ஆபாச அர்ச்சனைகளுக்கும் இவர்கள் ரெடி.
ஆனால் இந்த இடத்தில்தான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது.
எத்தனை ஆபாச அர்ச்சனைகளுடன் இவர்கள் எழுதியபோதும் அடுத்த பதிவிலேயே
ஒரு ஆழமான சப்ஜெக்டுடன் உலா வந்துவிடுவார்கள். ‘நான் யார் என்பது இந்தப் பதிவில் இருக்கிறது
பார்த்துக்கொள்’ என்று சவால் விடுவதுபோல் இருக்கும் அந்தப் பதிவு. சாதாரண பதிவர்களால்
நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு விவரங்களும் தகவல்களும் கொண்டு தமிழ்ப் பத்திரிகைகளில்கூட
வரமுடியாத அளவுக்கான ஆழமான கட்டுரையாக அந்தப் பதிவு இருக்கும்.
இப்படிப்பட்ட பதிவர்கள் உலாவரும் இடமாகத்தான் தமிழ் இணையவெளி
இருக்கிறது. இந்த வரிசையில் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர்களாக……... வவ்வால், வருண்,
ஜெயதேவ்தாஸ் ஆகியோரைச் சொல்லலாம்.
வவ்வால் இணையத்தில் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர்.
தமிழ் எழுத்தாளர்களில் ராஜேந்திரகுமார் ‘ஙே’ என்ற எழுத்தை அடிக்கடிப் பயன்படுத்துவார்.
அப்படி வவ்வால் பயன்படுத்துவது ‘அவ்வ்’ என்ற எழுத்துக்கள். சில சமயம் இது ஒரு அடையாளம்
என்பதையும் தாண்டி எரிச்சலைத் தரும் நிலைக்குப் போய்விடுவதும் உண்டு. (அவருடைய
மீள்வருகையில்
இதனை முழுக்கத் தவிர்ப்பார் என்று நம்பலாம்)
இன்னொன்று நடிகை அசின் புகைப்படங்கள். ஒவ்வொரு பதிவிலும் அசினின்
விதவிதமான படங்களைத் தேடியெடுத்துப் போட்டுப் பதிவுகளைத் தொடங்குவார். (அந்தப் படங்களை
அவரைத் தவிர வேறு யாரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை)
இவற்றையெல்லாம் அவரது சேட்டைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும்.
ஏனெனில் அவரது பல பதிவுகள்……. சமீபத்துப் பதிவுகளைச் சொல்லவேண்டுமெனில் ‘கச்சத்தீவு
மறைக்கப்பட்ட உண்மைகள்’, ‘தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள் வந்தவிதம்’, ‘மலேசிய விமானம்
என்ன ஆனது?’ மற்றும் நடந்துமுடிந்த தேர்தலில் ‘வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடுகள்
நடக்க வாய்ப்பிருந்ததா?’ என்பதுபோன்ற கட்டுரைகள் மிகுந்த உழைப்பையும் எழுதுகிறவருடைய திறமையையும் பறை சாற்றுபவை.
அவருடைய பின்னூட்டப் பெட்டியில் ‘மட்டுறுப்பு’ வைக்கப்பட்டிருக்கிறது.
அவரது இணைய நண்பர்களில் ஒருவரான திரு ராஜநடராஜன் (இவர் தற்சமயம் ‘Nat’ என்ற பெயரில்
எழுதுகிறார்.) ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் 18-ம் தேதிவரைக்குமாக தொடர்ந்து ஒன்பது
கருத்துரைகள் எழுதியிருக்கிறார். இவை அத்தனையும் வவ்வாலின் ‘கிளியரன்ஸிற்குப்’ பிறகே
வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆகவே வவ்வால் ‘ஏதோ’ காரணத்தினாலேயே பதிவுலகில் இயங்காமல் இருக்கிறார்
என்பது புரிகிறது.
சுறுசுறுப்பாக பின்னூட்டங்கள் இடும் ஏலியன் என்பவர் வவ்வாலைத்
தமது குருவாகக் கொண்டாடுபவர். அவராவது வவ்வாலின் கனத்த மவுனம் குறித்து ஏதாவது கருத்துச்
சொல்லியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
எது எப்படியோ பறந்து வாருங்கள் வவ்வால்!