Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Saturday, January 10, 2015

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தாக்கங்கள் - பகுதி 1





பாலச்சந்தரும் பாடல்களும் 

தமிழ்த்திரையுலகின் ஆரம்ப காலப்  படங்களில் தியாகராஜபாகவதர் மற்றும் பியூசின்னப்பாவின் பாடல்கள் நிரம்பிய காலம் மாறி சிவாஜி மற்றும் கலைஞரின் தாக்கத்துடன் பராசக்தி வந்தபிறகுதான் தமிழ்ப்படங்கள் வேறொரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தன. இந்தப் பாதையில் பயணித்த படங்களை அழகு படுத்தி இன்றைய பாதைக்குக் கொண்டுவருவதற்கான அஸ்திவாரம் போட்ட பலரில் பீம்சிங், மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்குக் கணிசமான பங்கு உண்டு. 

பாலச்சந்தரின் வருகை என்பது சிவாஜி எம்ஜிஆர் படங்களைத் தாண்டி கவனிக்கப்படவேண்டும் என்பதில் மட்டுமின்றி ஸ்ரீதரைத் தாண்டியும் நாம் கவனிக்கப்படவேண்டும் என்ற சவாலும் அன்றைக்கு அவருக்கு இருந்தது.

ஏனெனில் சிவாஜி எம்ஜிஆரைத் தாண்டி கவனிக்கப்பட்டவர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனத்தின் ‘படகுப் படம்’ தோன்றியதுமே தியேட்டரில் கைத்தட்டல் எழுந்த காலம் அது. இவற்றையெல்லாம் தாண்டித்தான் பாலச்சந்தர் நின்றார் என்பதுதான் அவரது பெருமை. 

பாலச்சந்தரின் நேரடித் திரை அனுபவங்கள் நீர்க்குமிழி படத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கும் முன்பே தெய்வத்தாய் படத்திலிருந்தே அவரது திரைப்பிரவேசம் ஆரம்பமாகிவிட்டது. எம்ஜிஆரின் தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரையுலகப் பிரவேசம்.

தெய்வத்தாய் படத்தில் எம்ஜிஆர் பாலச்சந்தரை அறிமுகப்படுத்தினாரா என்று பார்த்தால் பெருமை ஆர்.எம்.வீரப்பன் பக்கம் போகிறது. ஆர்எம்வியின் முதல் தயாரிப்பு தெய்வத்தாய் படம். சத்யா மூவிஸ் ஆரம்பித்து ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரை வைத்துப் படமெடுத்தபோது திரைக்கதை இயக்கம் பி.மாதவன் என்றும், வசனம் பாலச்சந்தர் என்றும் ஆர்எம்வி எடுத்த முடிவுகளில் எம்ஜிஆர் தலையிடவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனை கேபியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்த ஆர்எம்வியே சன் தொலைக்காட்சிக்கு அளித்த நேரலையில் “பாலச்சந்தரை தெய்வத்தாய் மூலம் நான்தான் திரையுலகிற்குக் கூட்டி வந்தேன்” என்று சொன்னார். அத்தோடு அவர் இன்னொன்றையும் சொன்னார்.  “அது என்னுடைய முதல் படம் என்பதால் இயக்குநராக பி.மாதவன் மற்றும் அன்றைக்கு மிகப்பிரபலமாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களையும் முதன்முதலாக எம்ஜிஆர் படத்திற்கு நான்தான் அழைத்துவந்தேன்” என்றார்.

பி.மாதவன், பாலச்சந்தர் என்பதோடு ஆர்எம்வி நிறுத்திக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தியையும் எம்ஜிஆர் படத்துக்கு நான்தான் முதன்முதலாகக் கூட்டிவந்தேன் என்று சொன்னார் என்பது விளங்கவில்லை. ஏனெனில் 1955-ல் குலேபகாவலி, 1957-ல் மகாதேவி, 1960-ல் மன்னாதி மன்னன், 1962-ல் பாசம், 1963-ல் ஆனந்தஜோதி, பணத்தோட்டம், பெரிய இடத்துப் பெண், 1964-ல் என் கடமை என்று பல எம்ஜிஆர் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான புகழ்பெற்ற பாடல்களை ஏற்கெனவே எம்ஜிஆருக்குத் தந்தபிறகுதான் தெய்வத்தாய்க்கு வருகிறார்கள். இது இப்படியிருக்க ஆர்எம்வி எதற்காக அப்படிச் சொன்னார் என்பது விளங்கவில்லை.

அதுபோகட்டும், தெய்வத்தாய் படத்தில்தான் கேபி முதன்முதலாக திரையுலகில் நுழைகிறார். 

இந்தப் படத்திற்கும் வசனம் மட்டும்தான் பாலச்சந்தர். மூலக்கதை நானாபாய் பட். இந்தப் படம் பாலச்சந்தருக்கு மட்டுமல்ல பி. மாதவனுக்கும் முதல் படம். பி. மாதவன் அதுவரை ஸ்ரீதரிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு வெளியே வந்து முதன்முதலாகத் தனியே டைரக்ட் செய்ய ஆரம்பிக்கிறார். அன்னக்கிளி மூலம் புகழ்பெற்ற இயக்குநர்களான தேவராஜ் மோகன் இருவரும்  ஸ்ரீதரிடம் பணியாற்றிவிட்டு மாதவனுடன் கூடவே வெளியேறியவர்கள். இருவரும் பி.மாதவனின் உதவியாளர்களாக தெய்வத்தாயில் பணியாற்றுகிறார்கள்.

தெய்வத்தாய் படத்து அனுபவங்களை தேவராஜ் (மோகன்) மிகுந்த சுவாரஸ்யத்துடன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். இவற்றில் பல செய்திகள் எம்ஜிஆரின் அசுரத்தனமான பிராபல்ய ஆளுமையால் வெளியே சொல்லமுடியாதவை.  

சிலவற்றை லேசாகப் பகிர்ந்துகொள்ளலாம். 

அவற்றில் ஒன்று தெய்வத்தாய்க்கு பாலச்சந்தர் எழுதிய வசனங்கள். பாலச்சந்தர் பேச்சிலும் சரி எழுத்துக்களிலும் சரி நிறைய ஆங்கில வார்த்தைகள் கலந்திருக்கும். சாதாரணமாகவே ஆங்கிலம் கலந்துதான் பேசுவார், எழுதுவார். அதுவும் தெய்வத்தாய் அவருக்கு ஆரம்பகாலப் படம். அவர் எழுதிய வசனங்களில் பெருமளவு ஆங்கிலம் கலந்திருக்குமாம். மாதவன் பார்த்து ஓகே பண்ணிவிடுவார். 

வசனப் படிகள் எம்ஜிஆரிடம் போகும். வசனங்களைப் பார்க்கும் எம்ஜிஆர் முகம் சிவந்துவிடுமாம். “என்னய்யா வசனம் இது? நாம என்ன ஆங்கிலப்படமா எடுக்கிறோம்? எதுக்காக இத்தனை ஆங்கில வசனங்கள்? எல்லாத்தையும் மாத்தச்சொல்லு. தமிழ்ல எழுதித் தரச்சொல்லு”
சில வார்த்தைகள் தமிழ்ப்படுத்தப்படும். சில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தினால் சரியாக வராது. 

“சின்னச்சின்ன வார்த்தைகள்தானே? அப்படியே இருக்கட்டுமே. இயல்பாத்தானே இருக்கு” என்பாராம் பாலச்சந்தர்.

“அவருக்கு இயல்பா இருக்குய்யா. பேசறதுக்கு எனக்குத்தானே கஷ்டமா இருக்கு? போ போ போய் மாத்திக்கிட்டு வா. இல்லாட்டி நீ உக்காந்து மாத்தி எழுது” பேப்பரைக் கொண்டுபோய்க் காட்டும் தேவராஜிடம் கறாராக வரும் எம்ஜிஆரின் உத்தரவு.

ஒருவழியாக அன்றைய படப்பிடிப்பு முடியும்.

மீண்டும் அடுத்த நாள் படப்பிடிப்பு. அன்றைய வசனத்துக்கான பேப்பர். வசனப்படிவத்தைப் பார்த்ததும் எம்ஜிஆரின் கோபம். “என்ன நினைச்சுக்கிட்டிருக்காருய்யா அவரு? யாருய்யா அவரை வசனம் எழுத கூட்டிட்டு வந்தது? இதெல்லாம் சிவாஜிக்கு எழுத வேண்டிய வசனங்கள். அவர்தான் அழகாப் பேசிக் கைத்தட்டல் வாங்குவாரு. எனக்கெதுக்கு இதெல்லாம்? தேவராஜ் திரும்ப இன்னொரு தரம் இதுபோல வசனங்களைக் கொண்டுவந்தியோ தொலைச்சுப்பிடுவேன் உன்னை. எல்லாத்தையும் அடிச்சுட்டு தமிழ்ல எழுதிக்கொண்டா”

எம்ஜிஆரின் அருகில் வராமல் சற்றே தூரத்தில் நின்றிருக்கும் பாலச்சந்தரிடம் வசனங்களை மாற்றச்சொன்னால் “என்ன சார் அவருக்குப் புரியவே மாட்டேங்குது. போலீஸ் ஆபீசர் கேரக்டர்தானே அவருடையது?  சிஐடி ஆபீசருங்க எல்லாம் எப்படிப் பேசுவாங்க? இப்படிப் பேசினாத்தானே இயல்பா இருக்கும்? ரொம்ப நேச்சுரல் வசனங்கள் சார் இது” என்பாராம்.

மறுநாள் எம்ஜிஆரின் கார் படப்பிடிப்புக்கு வரும்போது “வர்றாரு, சின்னவர் வந்துட்டாரு. வந்ததும் அவர் கண்ணு முன்னாடி நீங்க நிக்காதீங்க. காலையில் பார்த்தா டென்ஷன் ஆயிருவாரு. அந்தப் பக்கமாப் போயிட்டு அப்புறம் வாங்க” என்று பாலச்சந்தரிடம் சொல்லி அனுப்பி அவர் மரத்துக்குப் பின்னால் நின்றுகொண்ட சம்பவங்கள் எல்லாம் உண்டு” என்று நிறையச் சொல்வார் தேவராஜ்.

பிற்பாடு சற்றே பழக ஆரம்பித்தபின் ஒருநாள் இதுபற்றி பாலச்சந்தரிடமே கேட்டேன். 

சிரித்துக்கொண்டவர் “யார் சொன்னது உங்களுக்கு?” என்றார்.

“தேவராஜ் (மோகன்)” என்றேன்.

“ஆரம்பத்துல அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். எனக்கு சரியா நினைவில்லை. அதுக்குப் பின்னாடி எம்ஜிஆர் என்னிடம் ரொம்பவும் அன்பாகவும் மரியாதையாகவும்தான் பழகறார். 
முந்தாநாள்கூட ஒரு நிகழ்ச்சியில சந்திச்சோம். எம்மேல ரொம்பவும் அன்பு செலுத்தறவர்தான் அவர்” என்றார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த நாட்கள் அவை. அதற்குமேல் நான் இதுபற்றி பாலச்சந்தரிடம் எதுவும் பேசவில்லை.

தெய்வத்தாய் படத்தை இப்போது பார்க்கும்போதும் சில காட்சி அமைப்புகளில் பாலச்சந்தரின் டச் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓடவிட்டேன்’ பாடல் காட்சி. 
எம்ஜிஆர் சரோஜாதேவியின் வீட்டிற்கு வந்து தனக்குக் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு மிச்சத்தை வைத்துவிட்டுப் போய்விடுவார். அதற்குப்பின் அங்கே வரும் சரோஜாதேவிக்கு அந்தக் கண்ணாடி டம்ளரின் மிச்சமிருக்கும் குளிர்பானத்திற்குள் எம்ஜிஆரின் உருவம் இருப்பதுபோல் தோன்றும்.

அந்த பிம்பத்துடன் காதல் மொழி பேசுவார்.

வம்புக்கிழுப்பார்.

‘குளிருதா இரு உன்னை கவனிச்சுக்கறேன்’ என்ற பாணியில் “ஐஸ் பிடிக்காதா?” என்று கேட்டுக் கையில் இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து டம்ளருக்குள் போடுவார். ஐஸ் கட்டியின் குளிர் தாங்காமல் உடல் சிலிர்த்து நடுங்கிக்கொண்டு எழுவார் எம்ஜிஆர். “ஐயோ பாவம் குளிருதா?” என்று கேட்டு போட்ட ஐஸ் கட்டியை எடுத்துவிடுவார். இனிமையான பின்னணி இசையுடன் பாடல் ஆரம்பிக்கும்.

கண்ணாடி கிளாஸூக்குள் குட்டியூண்டு எம்ஜிஆர்.

வெளியில் சரோஜாதேவி.

பாடலின் நடுவே அப்படியே நடுங்கிக்கொண்டே எழும் எம்ஜிஆர் சட்டென்று எழும்பி கண்ணாடி டம்ளரின் விளிம்பில் பேலன்ஸ் செய்து நிற்பார். சரோஜாதேவி மெல்லிய அபிநயத்துடன் அறைக்குள் பாடிக்கொண்டே இருக்க  கண்ணாடி டம்ளரின் விளிம்பில் வட்டமாக நடப்பார் 
எம்ஜிஆர்.  இனிமையோ இனிமையாக பாடல் தவழும்.

வெகுஜன ரசனையில் அவ்வளவாகப் போற்றப்படாத பாடல் இது. ஆனால் அந்தப் படத்தின் சிறந்த பாடல் இதுதான். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ பாடலும், ‘ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன்’ பாடலும், ‘இந்தப் புன்னகை என்னவிலை’ பாடலும் மற்ற பாடல்களும் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். அவற்றைவிட இனிமையும் மிகுந்த அழகியல் உணர்வும் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் பாடல் இது. இந்தப் பாடலில் மெலடியைப் போட்டுப் பின்னியெடுத்திருப்பார்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். சுசீலாவின் குரலும், உச்சரிப்பில் கொடுக்கும் அழகுகளும் மயக்கும். 

படமாக்கப்பட்ட விதமும் அத்தனை பாந்தமாக வசீகரமாக இருக்கும்.

இந்தப் பாடல் நிச்சயம் பாலச்சந்தரின் கற்பனையில் எழுந்த காட்சிதான் என்று நம்ப 
இடமிருக்கிறது.


அதே நாட்களில் வந்த இன்னொரு படம்தான் சர்வர் சுந்தரம். நாகேஷின் அத்தனைத் திறமைகளையும் வெளிக்கொண்டுவந்து கொட்டிய படம் இது. இப்போது பார்த்தாலும் அத்தனைப் புதிதாக இருக்கும். டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு என்று இருந்தாலும் பாலச்சந்தர் படம் பார்ப்பதுபோன்ற நினைப்பே படம் முழுவதும் இருக்கும். ஏனெனில் காட்சிக்குக் காட்சி பாலச்சந்தர் சம்பந்தப்பட்ட படம் இது.

ஏற்கெனவே நாகேஷுக்காக பாலச்சந்தரால் எழுதப்பட்டு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டு பிறகு படமாக வந்த படைப்பு. பாடல்களும் பிற நடிகர்களும் மட்டும்தான் பிற்சேர்க்கை. இந்தப் படத்திலும் இரண்டு பாடல்களை பாலச்சந்தரின் கைவண்ணம் என்று சொல்லலாம். முதலாவது, ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல். ஒரு கதாநாயகராக நாகேஷ் நடிப்பது போலவும் அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதுபோலவும் பாடல் ரிகார்டிங் நடைபெறுவதுபோலவும் காட்சிகளெல்லாம் வரும் அந்தப் படத்தில். டிஎம்எஸ், எல்ஆர் ஈஸ்வரி ஆகியோர் பாடுவதும் எம்எஸ்வி இசைக்குழுவினரைக் கண்டக்ட் செய்வதுபோலவும் (யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி ராமமூர்த்தியும் அந்தக்கூட்டத்தில் இருப்பார்) காட்சி அமைந்திருக்கும். படப்பிடிப்பு எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்பதை இந்தப் படத்தில் காட்டுகிறார்கள் என்ற தகவல் அந்தக் காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

அதே படத்தில் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா’ என்ற பி.சுசீலாவின் இன்னுமொரு வைரம் உண்டு.

கே.ஆர். விஜயா ஒரு கிளியொன்றை வைத்துக்கொண்டு பாடும் பாடலாக காட்சி அமைந்திருக்கும். விஜயா பாடும்போது கூடவே கிளியும் பாடுவதாக அல்லது பேசுவதாக பாடல் அமைக்கப்பட்டிருக்கும். சதன் என்ற பலகுரல் மன்னன் ஒருவர் அப்போது எம்எஸ்வி குழுவில் இருந்தார். கிளிக்கான குரலை சதன் கொடுத்துவர பாடல் நெஞ்சமெல்லாம் இனிக்கும்..
துளித்துளியாய் இனிமை சொட்டும் ஏராளமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களில் இதுவும் ஒன்று. பி.சுசீலாவின் பெயர் சொல்லும் பல பாடல்களில் இந்தப் பாடலுக்குச் சிறப்பான இடம் ஒன்று உண்டு.

என்ன சோகம் என்றால் எம்எஸ்விக்குப் பிறகு இம்மாதிரியான சோதனை முயற்சிகளுக்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விட்டது. இசை என்பதே வெறும் வாத்தியங்களின் இரைச்சல் கூடவே டெக்னாலஜியின் கைவண்ணம் என்ற அளவில் மாறிப்போய்விட்டது.

அதுவே இளைஞர்களின் ட்ரெண்ட் என்றும் ஆகிவிட்டது.

இந்தப் பாடலும் எதற்காக இங்கே குறிப்பிடப்படுகிறது என்று பார்த்தோமானால் பிற்பாடு தம்முடைய படங்களில் பாடல்களைப் படமாக்க கேபி மேற்கொண்ட முயற்சிகள்……. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலையாவது வித்தியாசமாகச் செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டவர் போலவே தமது ஒவ்வொரு படத்திலும் முயன்றிருப்பார் அவர்.

மேஜர் சந்திரகாந்த் படத்திலேயே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார் பாலச்சந்தர். வி.குமாரின் இசையில் உருவான அந்தப் படத்தில் (பாலச்சந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்துவந்த வி.குமார்தான் பிற்பாடு பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது ஒருபுறமிருக்க பாலச்சந்தரை முதன்முதலாக இயக்குநராக அறிமுகப்படுத்திய ஏ.கே. வேலனிடம் வி.குமார்தான் பாலச்சந்தரையே அறிமுகப்படுத்தினார் என்று சிவகுமாரின் தகவல் கூறுகிறது)வந்த ‘ஒருநாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ’- என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடல்.

எம்எஸ்வியின் பாணியிலேயே அந்தப் பாடலின் மெட்டு அமைந்திருக்கும். அதனால் அந்தப் பாடல் எம்எஸ்வி இசையமைத்தது என்றே இன்னமும் பலபேர் நினைத்திருப்பார்கள். அந்தப் பாடல் அமைந்திருக்கும் விதத்தைப் பார்த்தோமானால் படு சுவாரஸ்யமாக இருக்கும். அண்டாவுக்குள் பாத்திரங்களைத் தூக்கிப் போடுவது, டம்ளர்களைத் தாம்பாளத்தில் கவிழ்த்து அடுக்கிவைப்பது, கிண்ணங்களைத் தூக்கி எறிவது, ஸ்பூன்களைத் தட்டில் கொட்டுவது, டர்ர்ர் என்று துணியைக் கிழிப்பது, ஸ்பூன்களைக் கீழே பரப்பிவிட்டு ஒவ்வொரு ஸ்பூனாகத் தட்டுவதன் மூலம் ஒவ்வொரு டம்ளரிலும் ஒவ்வொன்றாக அவற்றை விழவைப்பது என்று அதகளம் பண்ணியிருப்பார் நாகேஷ்.

அத்தனை செய்கைகளுக்கும் ஒவ்வொரு இசைத்துணுக்கும் சத்தமும் எழும்பிக்கொண்டே வந்து ஒரு அழகிய, மிக அழகிய பாடலாக வடிவம் பெறும் காட்சி அமைப்பு அது.

ஊஞ்சல் ஒன்றில் நின்றபடி ஜெயலலிதா பாடலைப் பாடிக்கொண்டிருக்க ஊஞ்சலை ஆட்டியபடியே பின்னணி இசையையும் கொடுத்துக்கொண்டு ஜெயலலிதாவின் வாயசைப்புக்குத் தகுந்தாற்போல் மைக்கை ஊஞ்சலின் ஆட்டத்திற்கு ஏற்ப நடந்தும் ஓடியும் நீட்டித்தும் குறுக்கியும் பிடித்துக்கொண்டு……………அட்டகாசமான சேஷ்டைகளுடன் அடித்துத் துவைத்திருப்பார் நாகேஷ் . 

நாகேஷைப் போன்ற கலைஞர்கள் எல்லாம் இதற்குமேல் தோன்றுவார்களா என்பது சந்தேகமே.

பாலச்சந்தர் விஸ்வநாதனுடன் இணைவதற்கு முன்பு வி.குமார் மூலம்தான் நிறையப் புதுமைகளையும் இனிமைகளையும் இசைத்துறைக்குச் சேர்த்தார்.



அதன் பின்னர் எம்எஸ்வி உதவியுடன் பாலச்சந்தரின் விசேஷ பாடல் அமைப்பு எல்லாப் படங்களிலுமே தொடர்ந்தது.

பாமா விஜயம் ஒரு நகைச்சுவைப் படம்.

ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை படத்திற்கு அடுத்து தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படமாக பாமா விஜயத்தைச் சொல்லலாம். அந்தப் படத்திலும் நடிகையின்(நடிகையாக ராஜஸ்ரீ நடித்திருப்பார்) வீட்டிற்குள் நுழையும் நாகேஷ் அங்குள்ள ஹாலில் நடிகையின் விதவிதமான படங்கள் மாட்டப்பட்டிருக்க……. அந்தப் படங்களிலுள்ள ராஜஸ்ரீயுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதாக நாகேஷ் கற்பனை செய்து பார்க்கிறமாதிரியான ஒரு காட்சி அமைத்திருப்பார்.

ஒவ்வொரு சரணத்திற்கும் அந்தப் படத்தின் சட்டத்திலிருந்து ராஜஸ்ரீ இறங்கிவந்து நாகேஷூடன் ஜோடி சேர்ந்து ஆடிவிட்டு மறுபடியும் அந்தச் சட்டத்துக்குள்ளேயே போய்விடுவதாக காட்சி.

அந்தப் பாடலைத் தவிர ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பாடல். கவியரசரின் எளிமையான யதார்த்தமான நடைமுறைத் தத்துவங்கள் நகைச்சுவையுடன் பாடல் பூராவிலும் இறைந்துகிடக்க விஸ்வநாதனின் இசை சாம்ராஜ்யமும் டிஎம்எஸ்ஸின் குரல் சாம்ராஜ்யமும் கொடிகட்டிப் பறக்கும் பாடல் அது. ஆமாம், படத்தில் பாடலைப் பாடுபவர்கள் டி.எஸ்.பாலையா, மேஜர் சுந்தரராஜன், முத்துராமன், நாகேஷ் ஆகியோர். இந்த நான்கு பேர்களுக்கும் டிஎம்எஸ் ஒருவரையே பின்னணி பாடவைத்திருப்பார் எம்எஸ்வி.
இத்தகைய அனாயாசமான துணிச்சலும் திறமையும் எம்எஸ்வி ஒருவருக்கே உரியது. 

எம்எஸ்வியைத் தமது படங்களில் பல்வேறு புதுமைகளைச் செய்ய வைத்திருப்பார்.
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்’, ‘வசந்தகால நதிகளிலே’, ‘கம்பன் ஏமாந்தான்’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’ என்ற இனிமைகளைத் தொடர்ந்து பட்டினப்பிரவேசத்தில் ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ பாடலை ஒரு ஒற்றை வயலினை மட்டுமே பிரதானமாக்கி அமைத்திருப்பார் விஸ்வநாதன்.

அந்தப் படத்தில் ஒற்றை வயலின் என்றால் ‘அவர்கள்’ படத்தில் ஒற்றைப் புல்லாங்குழல். ‘இப்படி ஓர் தாலாட்டு பாடவா’ பாடலின் பின்பகுதியில் ரவிக்குமார் வாசிப்பதுபோல் ஒரு ஒற்றைப் புல்லாங்குழல் வரும். மீராவையும் கண்ணனையும் இணைத்து கண்ணதாசன் வரிகளைப் பின்னியிருக்க ஒற்றைப் புல்லாங்குழலில் மொத்தப் பாடலின் இனிமையையும் குழைத்துவந்து செவி வழியே உள்ளே அனுப்பி நெஞ்சை நெகிழ வைப்பார் எம்எஸ்வி.

எம்எஸ்வியும் கேபியும் பாடல்களில் செய்திருக்கும் புதுமைகளும் புரட்சிகளும் சாதாரணமானவை அல்ல.

‘முத்துக்குளிக்க வாரீகளா’ ஆகட்டும், ‘நினைத்தால் சிரிப்புவரும்’ ஆகட்டும், ‘இருமனம் கொண்ட திருமணவாழ்வில்’ ஆகட்டும் வித்தியாசங்களைத் தந்த கேபியும் எம்எஸ்வியும் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ பாடலில் செய்த புதுமை எந்த இசையமைப்பாளரையும் வியக்கச்செய்யும் தன்மை வாய்ந்தது.

கமலஹாசனை ஒரு பலகுரல் மன்னனாகவும் தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதாகவும் அந்தத் திருமணவிழாவில் கலந்துகொண்டு பலகுரல்களில் ஒரு இசைக்கச்சேரி செய்வதாகவும் காட்சி அமைத்திருப்பார் கேபி. பல இயற்கை சத்தங்களுடன் பல மிருகங்களின் சத்தங்கள் என்றெல்லாம் கலந்துகட்டி தூள் கிளப்பியிருப்பார் எம்எஸ்வி.
அடுத்து, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ஸ்ரீதேவி ஸ்வரம் சொல்ல அதற்கேற்ப பாடல் வரிகளைக் கமலஹாசன் சொல்லுவதுபோல காட்சி.

‘தந்தன தத்தன தந்தன தத்தன தான தையன தந்தானா’ என்பது முதல் ஸ்வரம்.
‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்தபார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ என்பார் கமல்.

இது இப்படியே தொடரும்.

அதற்கு அடுத்து விசில், லாலல்லா, ம்ஹூஹூம் நாநாந நாநா, தாரன்ன தாரன்ன தானா என்றெல்லாம் ஸ்ரீதேவி சத்தங்கள் எழுப்ப கமல் அதற்கெல்லாம் வார்த்தைகள் தொடுத்து பாடலாகத் தருவது தமிழுக்கு ரொம்பவும் புதுசு.

இதனைக் கண்ணதாசனையும், எம்எஸ்வியையும் வைத்துக்கொண்டு அருமையாகச் செய்திருப்பார் பாலச்சந்தர்.

எம்எஸ்வி பாலசுப்ரமணியத்தையும், எஸ்.ஜானகியையும் வைத்து கலந்துகட்ட படத்தில் ஸ்ரீதேவியும் கமலஹாசனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

அத்தனையையும் சேர்த்து கலவையாக்கித் தமிழில் மிகப்புதுமையாய் அந்தக் காட்சியை அமைத்திருப்பார் பாலச்சந்தர். “கவிஞரும் இசையமைப்பாளரும் டைரக்டரும் ஒன்றாகக் கைகோர்க்கும் இடமென்றால் அது இதுதான்” என்று இந்தப் பாடல்காட்சியைப் புகழ்ந்து எழுதியிருந்தது குமுதம்.

அதன்பிறகு இளையராஜா காலம் வந்தபோது புன்னகை மன்னன் படத்திற்கும் சிந்துபைரவி படத்திற்கும் இளையராஜாவை வைத்து அருமையான பாடல்களை இசைக்கச் செய்திருப்பார் அவர். புன்னகை மன்னன் பாடல்களும் சிந்துபைரவி பாடல்களும் அதிகம் பேசப்பட்ட பாடல்கள். உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் படங்களுக்கும் இ.ரா தான் இசை. 



இதற்கடுத்து ஏ.ஆர்.ரகுமான் ஆதிக்கம் உருவானபோது (ஏ.ஆர்.ரகுமானைத் திரைத்துறைக்குக் கூட்டிவந்ததில் பாலச்சந்தரின் பங்கும் உண்டு) டூயட் படத்தில் ரகுமானின் சாதனைகள் குறிப்பிடத்தகுந்தவை. ‘பார்த்தாலே பரவசமும்’ ரகுமான்தான். ஆனால் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ரகுமான் அதில் எதுவும் செய்யவில்லை. எம்.பி.ஸ்ரீனிவாசனின் உதவியாளராக இருந்த வி.எஸ்.நரசிம்மனையும் இசையமைப்பாளராகத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் கேபிதான்.


பாடல்களில் இப்படி வித்தியாசங்கள் காட்டிய கேபி கதைகளில் காட்டிய வித்தியாசங்கள் பிரதானமானவை. (தொடரும்)