Thursday, November 20, 2014

பச்சிளம் குழந்தைகள் மரணமும், முத்தப் போராட்டமும்……………….குழந்தைகள்……………..பச்சிளம் குழந்தைகள்………….சரியான சிகிச்சை தரப்படாமல் தர்மபுரியின் அரசாங்க ஆஸ்பத்திரியிலிருந்து தினசரி கொத்துக் கொத்தாக செத்துப்போய்க்கொண்டிருக்கும் செய்திகள் சில நாட்களாக நாள்தவறாமல் வந்துகொண்டே இருக்கின்றன.

ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் தினசரி மெடல்களின் புள்ளிவிவரம் வருவதுபோல் நாள்தவறாமல் இத்தனைக் குழந்தைகள் மரணம் என்ற செய்தி வந்துகொண்டே இருக்கிறது. 

மாபெரும் அதிர்ச்சி மட்டுமல்ல தமிழகத்துக்கே அவமானமும் கேவலமும் தலைநிமிர முடியாத அளவுக்கு வெட்கமும் படத்தக்க செய்தி இது.
.
 ஆனால் இத்தனை ஆகியிருந்தும் இந்தச் செய்திக்கான அதிர்வுகளையோ, குறைந்தபட்சம் சில போராட்டங்களையோ, எழுந்திருக்கவேண்டிய சாதாரண எதிர்ப்பையோகூட பதிவு செய்யாமல் இருக்கிறது தமிழ்நாடு.

வேறு மாநிலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டிருந்தால் இந்த நேரம் அந்த மாநிலம் பற்றி எரிந்திருக்கும்.

இந்தியா முழுமைக்கும் ஊடகங்களால் குதறப்பட்டு அல்லோல கல்லோலம் பட்டிருக்கும்.

போராட்டங்கள் வெடித்திருக்கும்.

சமூக ஆர்வலர்களும், இளைய சமுதாயமும், மக்கள் நலம்பேணும் கட்சிகளும். குறிப்பாக மாணவர் படையும் திரண்டெழுந்து போராடியிருப்பார்கள்.

குறிப்பிட்ட மருத்துவமனையையும் அதில் பொறுப்பற்று இருந்தவர்களையும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக ஒரு வழி செய்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளும், ஆட்சியாளரும் எல்லாவற்றுக்கும் பொறுப்பான அரசாங்கமும், மருத்துவத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரும், குறிப்பாக முதல் அமைச்சரும் மக்கள் முன்னைலையில் விளக்கம் அளிக்க நின்றிருப்பார்கள்.

ஆனால் இங்கோ –

செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெத்தலைப் பாக்கு கணக்காக ஒரு சலனமும் இல்லாமல் கிடக்கிறது தமிழ்நாடு.

செய்திகளைப் படிக்கப் படிக்க மனம் பதறுகிறது.

14, 15 தேதிகளில் நாளொன்றுக்குத் தலா ஆறு குழந்தைகளாம்……….

மே மாதம் 400 குழந்தைகள் அட்மிட் ஆகியிருந்தனவாம். அதில் 35 குழந்தைகள் இறந்துபோயிருக்கின்றன.

ஜூன் மாதம் அட்மிட் ஆன குழந்தைகள் 325. இறந்துபோன குழந்தைகள் 45.

ஜூலை மாதம் அட்மிட் ஆன குழந்தைகள் ஏறக்குறைய 300. இறந்துபோன குழந்தைகள் 35.

ஒட்டுமொத்தமாக ஒரு கணக்கைச் சொல்லியிருக்கிறார் அந்த மருத்துவமனையின் டீன். 


அதாவது “இந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 4000 குழந்தைகள் அட்மிட் ஆகின்றன. 

அவர்களில் 400 பேர்தானே இறந்திருக்கிறார்கள்?” என்று ஒரு சூப்பர் கேள்வியைக் கேட்டிருக்கிறார் அந்த பிரகஸ்பதி.

யாராவது இந்த மகானுபாவனுக்கு நோபல் பரிசு போன்ற எதையாவது வாங்கித்தாருங்கள்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான் சில தலைவர்கள் வாய் திறந்திருக்கிறார்கள்.

கடுமையான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் கலைஞர்.

தமது பங்கிற்கு ‘விசாரணை நடத்தப்படவேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்’ என்று அறிக்கை விடுத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

தமிழிசை சவுந்தரராஜன் சிறிது விவரமாகப் பேசியிருக்கிறார். “தர்மபுரி ஆஸ்பத்திரியில் நிறைய பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. ஒரே நேரத்தில் குழந்தைகள் இறந்து இருப்பதை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நான் ஒரு டாக்டர். அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததுதான் குழந்தைகள் இறப்பிற்குக் காரணம். ஆஸ்பத்திரியில் 400 பணியிடங்கள்கூட காலியாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

டீன் கூட இப்போதுதான் நியமித்தார்கள். பச்சிளங்குழந்தைகள் வார்டில் எத்தனை டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றினார்கள், என்னென்ன வசதிகள் இருந்தது என்பதை அரசு விளக்கவேண்டும். அங்கு எவ்வளவு மருந்து இருக்கிறது? குழந்தைகள் சிகிச்சைப் பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அப்போதுதான் அது வெளிப்படையான விசாரணையாக இருக்கும்” என்பது தமிழிசை சவுந்தரராஜனின் அறிக்கை. 

இந்த அறிக்கைகள் ஒருபுறமிருக்க சில கேள்விகள் எழுகின்றன.

எந்த ஆஸ்பத்திரியிலும் இல்லாமல் இந்த ஆஸ்பத்திரியில் மட்டும் எதற்காக இப்படியொரு சிசுக்கொலைகள் நடந்திருக்கின்றன?

 ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 4000 குழந்தைகள் எதற்காக அட்மிட் ஆகவேண்டும்? அதற்கான சமூகக் காரணங்கள், அல்லது ஆரோக்கியக்குறைபாடு யாது?

அவர்களில் 400 குழந்தைகள் ஏன் சாகவேண்டும்?

அத்தனைக் கேவலமான, கொடூரமான நிலையிலா அரசாங்க ஆஸ்பத்திரிகள் இயங்குகின்றன?

சின்னஞ்சிறு பாலகர்களைக் காப்பாற்ற வக்கின்றி சாக விட்டுவிட்டு வல்லரசு நாடு என்றும், செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பினோம் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்வதில் ஏதாவது பெருமை இருக்கிறதா?

சட்டமன்றக் கட்டடம் என்று ஒன்றைக் கட்டினால் அதனைக்கூட நவீன ஆஸ்பத்திரியாய் மாற்றுவேன் என்று பேசித்திரியும் தமிழக அரசின் மக்கள் நலன் காக்கும் லட்சணம் இதுதானா?

சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் ஆட்சியாளருக்கும், மாநிலத்தை ஆளுகின்ற பொறுப்பிலிருப்பவர்களுக்கும் மனசாட்சி, மனிதாபிமானம், ஈவு, இரக்கம் போன்ற மனிதர்களுக்குத் தேவையான எந்த குணங்களும் கிடையாதா?

என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

எது எதற்கோ கொதிக்கும், குதிக்கும் இந்த நாட்டில் பச்சிளம் பாலகர்களைக் கொல்லும் அவலத்தைக் கேட்கக்கூட நாதியில்லையா?

எங்கோ டெல்லியில் குழந்தைகளைக் கொன்று பாதாளச் சாக்கடையில் எறிந்த ஒரு வழக்கு நடைபெற்றதே, சற்றேறக்குறைய அதுபோலல்லவா இருக்கிறது இதுவும்?

இதுபோல ஒரு சம்பவம் கர்நாடகத்திலோ கேரளத்திலோ நடந்திருந்தால் மக்கள் கொதித்தெழுந்து அந்தந்த மாநில முதல்வர்களை அடித்து விரட்டியிருப்பார்கள், ராஜினாமா செய்யவைத்திருப்பார்கள் இந்நேரம்.

தமிழ்நாடு குன்ஹாவை எதிர்த்துப் போராடிவிட்டு இப்போதுதான் சற்றே ஆசுவாசமாய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது.

அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாக இன்னமும் சில மாதங்களாவது தேவை.

அதுவும் ‘மக்களின் முதல்வர் கீர்த்திக்கு’ ஏதாவது ஆபத்து என்றால் மட்டுமே கிளர்ந்தெழ வேண்டியிருக்கும்.

பாலகர்களின் சாவுக்கெல்லாம் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருந்தால் தமிழனின் ‘மானம்’ என்னாவது?

இளைஞர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும்கூட இதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்கவேண்டிய தேவையில்லை. 

அவர்களுக்கு இதைவிடவும் முக்கியமான போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய கடமையும் அவசியமும் காத்திருக்கிறது.

அடுத்த முத்தப்போராட்டம் எப்போது, எங்கே?

அதுபற்றிய ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக்கில் எப்போதுவரும்?

அதற்கு எப்படித் தயாராவது? என்பதில் அவர்கள் பிசியாக இருக்கிறார்கள்.

அதனால் அவர்களை விட்டுவிடுவோம்.

இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் கிருஷ்ணசாமி என்று ஏகப்பட்ட டாக்டர்கள், கட்சிகளின் தலைவர்களாகவே இருக்கிறார்கள்.

என்ன காரணத்தினால் இப்படியொரு அவலம் ஏற்பட்டது என்பதை அறிந்து அதனை மக்களுக்கு விளக்கி தேவைப்பட்டால் மக்களையும் சேர்த்துப் போராட்டம் நடத்தும் கடமை இவர்களுக்கு நிறையவே இருக்கிறது.

என்ன செய்யப்போகிறார்கள்?

பார்க்கலாம்..