Tuesday, May 6, 2014

பதிவர்களே பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள்!

பதிவுலகில் நான்கைந்து நாட்களாக சில பதிவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வருத்தத்தையே தருகிறது. எதற்காகச் சண்டை? ஏதாவது முக்கியமான பிரச்சினையா? கொள்கை ரீதியான கருத்து மோதல்களா? என்றால் அப்படியெல்லாம் ஒரு புடலங்காயும் இல்லை.

இவர்களது பதிவுகளைப் படித்துப் பார்த்தால் ஏதோ கருத்து மோதல்கள் எதற்காகவோ ஒருவரோடொருவர் மோதிக்கொள்கிறார்கள், எதற்காகவோ ஆவேசப்படுகிறார்கள், எதற்காகவோ கறுவிக்கொள்கிறார்கள், எதற்காகவோ சவால் விட்டுக்கொள்கிறார்கள் எதற்காகவோ ஒருவரையொருவர் தூற்றிக்கொள்கிறார்கள் என்பது தெரிகிறதே தவிர-எதற்காக என்பது தெரியவில்லை!


சரி இப்படியே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எங்கே வந்தவுடன் நிற்கப் போகிறார்கள்? எதை அடைந்தவுடன் சமாதானமடையப் போகிறார்கள்? என்ன சாதகத்தை, என்ன பலனை அடைய, இப்படியெல்லாம் போராடுகிறார்கள்? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்கள்? என்பது புரியவில்லை.

யார் இப்படியெல்லாம் அடித்துக்கொள்வது என்று பார்த்தோமானால் மூன்று பேர்.

ஒருவர் வவ்வால்
இன்னொருவர் வருண்
மூன்றாமவர் ஜெயதேவ்.

மூன்று பேருமே இன்றைய தமிழ்ப் பதிவுலகில் குறிப்பிடத்தகுந்த பதிவர்கள்.

பதிவுலகில் ஏகப்பட்ட பதிவர்கள் இருக்கின்றனர். கூகிள் ஏற்படுத்தித் தந்துள்ள சாதகங்களைப் பயன்படுத்தித் தங்கள் எழுத்துக்களை உலகமெங்கும் கொண்டுசெல்லும் வசதியை எப்படி எப்படியோ பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். பலபேர் மொக்கைப் பதிவுகள் போடுவார்கள். நாம் எழுதியதுதான் எழுத்து. நமக்கிருப்பது கட்டற்ற சுதந்திரம், நம்மை யார் கேள்வி கேட்பது, நான் எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் என்று எழுதுபவர்கள் இருக்கிறார்கள். வெறும் சம்பிரதாயமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். சம்பிரதாயத்திற்கும் கீழே எழுதி படிக்கிறவனைப் பதம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்………..

கூர்மையான கண்ணோட்டங்களோடு, வித்தியாசமான களங்களில், தளங்களில் தங்கள் எழுத்துக்களை எழுதி வெளியிடுகிறவர்கள் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்
நாம் நினைப்பதை எல்லாம் எழுதலாம் என்பது இணையம் நமக்குத் தந்திருக்கும் ஒரு வரப்பிரசாதம்.

ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டாலோ அல்லது கருத்துத் தெரிவிக்கும் தளங்களில் ஒன்றைத் திறந்துவைத்துக்கொண்டுவிட்டாலோ என்ன எழுதலாம் என்பதும் எப்படியெல்லாம் எழுதலாம் என்பதும் பலபேருக்குத் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம். இதில் சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம். ஆனால் சுய கட்டுப்பாட்டை நமக்கு எப்படி ஏற்படுத்திக்கொள்வது என்பதும் எது சுயக்கட்டுப்பாடு என்பது புரிவதில்லை என்பதும்தான் பிரச்சினை.

இதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்குத் தோதான ஒரு பத்திரிகையை மனதிற்குள் கொண்டுவாருங்கள்.(அது அயனாவரம் பத்திரிகையாகவும் இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகையாகவும் இருக்கலாம்) நீங்கள் எழுதியதை அந்தப் பத்திரிகைக்கு அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இதனைப் பிரசுரிப்பார்களா என்று ஒரு கணம் யோசியுங்கள். பிரசுரிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் தாராளமாக இணையத்தில் அதனை ஏற்றலாம். ‘இதைப்போய் அவர்கள் பிரசுரிப்பார்களா என்ன?’ என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றினால் அதனை நீங்கள் இணையத்தில் ஏற்றாமலேயே இருந்துவிடலாம்.

இந்த வகைக்குள் எல்லாம் வராமல் தன்னிச்சையாக தங்களுக்குள் வரித்துக்கொண்டுவிட்ட வரைமுறைகளுடன் எழுதும் பதிவர்கள் ஒரு ஐம்பது பேராவது இருப்பார்கள்.

அவர்களில் ஒரு இருபது இருபத்தைந்துபேர் பிரமாதமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள். தேர்ந்த விஷயஞானமும் நல்ல எழுத்தாற்றலும் வித்தியாசமான அணுகுமுறையும் கொண்டவர்களாக இந்த இருபது இருபத்தைந்து பேரைச் சொல்லலாம்.

மேற்கண்ட மூவரும் நிச்சயம் இந்தப் பட்டியலில் வருகிறவர்கள்தாம்.

ரிலாக்ஸ் பிளீஸ் என்ற வலைப்பூவில் எழுதும் வருண், தான் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே போட்டு உடைப்பதைத் தன் பாணியாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். நடுநடுவே சிறுகதைகள் எழுதுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்கிறார்.

தலைகீழ் பார்வையை எழுதும் வவ்வால், எந்தப் பிரச்சினை என்றாலும் ஏழு கடல்களிலும் மூழ்கி தோண்டியெடுத்து வருவதில் விற்பன்னர் என்று பேர் படைத்தவர். கட்டுரைகளில் அசாத்தியம் காண்பித்தபோதிலும் இவர் பிரபலமாகியிருப்பது பின்னூட்டம் போடுவதில்தான். அதில் இவர் ஒரு கில்லாடி என்றே பெயர் பண்ணியிருக்கிறார்.

ஜெயதேவ்தாஸ் ஆத்திகப்பதிவுகள் போடுவதில் மன்னர். அதிலும் ஆத்திகத்தை எதிர்ப்பவர்களுக்கு சளைக்காமல் பதில் கொடுப்பதில் இணையத்தில் இவருக்கு ஈடாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். வினவு தளத்தில் ஆத்திகம் பற்றிய ஒரு விவாதம் தீப்பிடித்துக்கொள்ள பத்துப் பதினைந்துபேர் இவருக்கு எதிராகத் திரண்டு வாதம் செய்தபோது சளைக்காமல் ஒற்றை ஆளாகவே நின்று அத்தனைப் பேரோடும் சமர் புரிந்து இருநூறு பின்னூட்டங்களுக்கும் மேல் வெற்றிகரமாகச் சமாளித்தவர் இவர் என்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல.

ஆக, இந்த மூன்று பேருமே தங்களுக்கென்று தனித்த அடையாளங்களை வைத்திருப்பவர்கள்தாம்.

ஒருவருக்கொருவர் எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல.

ஆனால் எதற்காகவோ இந்த மூன்றுபேரும் இன்றைக்கு இணையத்தில் முட்டிக்கொள்கிறார்கள்; மோதிக்கொள்கிறார்கள். எத்தனை வசவுகள் உள்ளனவோ அத்தனையும் வந்துவிட்டன. எவ்வளவு ஆபாசமாய் ஒருவரையொருவர் விளிக்கமுடியுமோ அவ்வளவும் விளித்தாகி விட்டது. ஒருவரையொருவர் எத்தனை தரம் தாழ்த்தமுடியுமோ அத்தனையும் தரம் தாழ்த்தியாகிவிட்டது. எவ்வளவு திட்டிக்கொள்ளமுடியுமோ அவ்வளவும் திட்டிக்கொண்டாகி விட்டது. மண்டை உடைந்து ரத்தம் கொட்டாததுதான் பாக்கி.
இந்த நிலையில் இருக்கிறது இவர்களுடைய சண்டை.

இன்னமும் தொடர்ந்து சண்டையிட்டு என்ன சாதிக்கப்போகிறீர்கள்?

நீங்கள் மூவரும் ஒன்றும் சின்னப்பிள்ளைகள் அல்ல; விவரம் தெரியாதவர்கள் அல்ல; படிக்காதவர்கள் அல்ல.

நிறையப் படித்தவர்கள், மெத்தப் படித்தவர்கள். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் பவனி வருபவர்கள்.

இத்தனைக்கும் வருண் இருப்பது அமெரிக்காவில். அமெரிக்காவில் நல்ல பொறுப்பில், நல்ல சம்பளத்தில் இருப்பவர் வருண்.

வவ்வால் இருப்பது சென்னையில். தொழில் என்னவென்று தெரியவில்லையே தவிர பெரிய பொறுப்பில் அல்லது பெரிய சம்பாத்தியத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர் வவ்வால்.

ஜெயதேவ்தாஸ் இருப்பது பெங்களூரில். சென்னை ஐஐடியில் படித்து பெங்களூரின் பெரிய நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாய் இருப்பவர்.

ஆக, மூவருக்கும் சமூக அந்தஸ்தும் சரி, பொறுப்புக்களும் சரி, சாதாரண மக்களைவிடவும் கூடுதலாகவே இருக்கின்றன எனலாம்.

மூவரும் மூன்று திசைகளில் இருந்துகொண்டு தொடர்ந்து சண்டையிட்டு எதைச் சாதிக்கப்போகிறீர்கள்?

இங்கே எதற்காக உங்களுக்குள் சண்டை ஆரம்பித்தது என்கிற விவகாரத்திற்கோ இந்த சண்டைக்கெல்லாம் காரணகர்த்தா யார் என்றோ, யார் மீது தவறு இருக்கிறது என்ற விவகாரத்திற்குள்ளோ நுழைய விரும்பவில்லை.

உள்ளே நுழைந்து பார்த்தால் எல்லாவற்றுக்கும் காரணம் ego clash ஆகத்தான் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இணையத்தில் கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படக்கூடாது என்பது அல்ல. கருத்து மோதல்கள் இருக்கலாம். வேகத்துடன் மோதிக்கொள்ளலாம். ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக்கொள்ளலாம்.

கருத்து மோதல்களில் தீப்பொறி பறக்கவும் செய்யலாம்.

ஆனால் அது பதிவுலகத்தை எரித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையா இல்லையா?

ஏதாவது ஒரு இடத்தில் யாராவது ஒருவர் நிறுத்திவிட வேண்டாமா?

தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்து என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி.

என்னுடைய பதிவுகளில் நான் காட்டமாக எதையும் எழுதுவதில்லை.

ஆனால் மாறுபட்ட கருத்தையோ கண்ணோட்டத்தையோ வைத்தாலேயே கோபம் கொண்டு சீறுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நான் எப்படி எதிர்கொள்கிறேன் தெரியுமா?
வாதங்களில் ஈடுபடுபவர்களை அல்ல, மிக மோசமாகவும் கேவலமாகவும் நடந்துகொள்கிற சில அனானிகளைப் பற்றித்தான் சொல்கிறேன்.

சில பொய்யான கற்பிதங்களை உடைத்தாலேயே(அதனை நல்ல வார்த்தைகளில் செய்திருந்தபோதிலும்) கோபம் கொண்டு, ‘விட்டேனா பார்’ கபர்தார்… ஆ… ஊ….. என்றெல்லாம் பேட்டை ரவுடிகள்போல சண்டித்தனம் செய்துகொண்டுவரும் சண்டியர்கள் இருக்கிறார்கள்.

ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுமின்றி மிரட்டல் தொனியில் சாபமிடுபவர்கள் இருக்கிறார்கள். இந்தவகை சாபமிடுகிறவர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே வருத்தம் தோய்ந்த கவலை உண்டு.

இந்தவகை அனானிகள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்கள் சாபமிட்டால் அது நமக்கு பலித்துவிடும் அளவுக்கு இவர்கள் ஒன்றும் புத்தர்களோ புனிதர்களோ கிடையாது.

அத்தகைய உயர்ந்த ஞானமுக்தி நிலையில் தங்களைப் பொருத்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள் இல்லை.

மிக மிக சாதாரண இயல்பு வாழ்க்கை வாழ்கிறவர்கள்தாம் இவர்கள். இவர்கள் ஒருவருக்கு இப்படி ஆக வேண்டும் அப்படி ஆக வேண்டும் என்றெல்லாம் மிரட்டல் சாபமிட்டால் அது அடுத்தவரைப் போய் பாதிக்குமா என்ன?

ஆனால் இம்மாதிரி விஷயங்களில் என்ன நடக்கிறது என்றால் இத்தகைய சாபங்கள் யார் தருகிறார்களோ அவர்களையே திரும்ப வந்து அந்த சாபமே தாக்கும் என்பதுதான் உண்மை.

அதுதான் இயற்கை.

இது பகுத்தறிவுக்கெல்லாம் அப்பாற்பட்டு நடைபெறும் ஒரு விஷயம்.

இந்த இடத்தில் மோசமான, அல்லது நெகட்டிவ்வான உதாரணம் வேண்டாம். ஒரு நல்ல உதாரணமாகவே சொல்கிறேன். ஒருத்தர் ஒரு ஆயிரம் ரூபாயை நமக்குத் தருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அதனை நான் வாங்கிக்கொண்டால்தானே அது என்னைச் சேரும்!

வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் என்றால் அது கொடுக்கவந்தவருடைய பாக்கெட்டைத்தானே மறுபடியும் சென்று சேரும்.

அதுபோலவேதான் சாபங்களும்….

சாபங்களை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? அதுவும் இணையத்தின் வழியாக வரும் சாபங்களையும் வசவுகளையும்?

எனக்கு இயற்கை சக்தி, ஆன்ம சக்தி போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. சில பயிற்சி முறைகளையும் கற்றிருக்கிறேன்.

நோ தாங்ஸ் என்று மறுத்துவிட்டால் – கவனியுங்கள், கோபம் எதுவுமின்றி அதனை எழுதிய அனானிக்கே போய்ச்சேரும் விதமாக திருப்பியனுப்பிவிட்டால் -நிச்சயமாக அதனை அனுப்பிய அனானியையே அது பன்மடங்கு வேகத்துடனும் வீர்யத்துடனும் சென்று தாக்கும் வல்லமையை அது பெற்றுவிடுகிறது. ‘அடப் பாவமே’ என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இது மோசமான அனானிகளை நான் எதிர்கொள்ளும் முறை.

நல்ல வேளையாக இந்த மூன்று பதிவர்கள் மத்தியிலும் இப்படிப்பட்ட அனானிகளெல்லாம் இல்லை.

இவர்களுக்கான ஈகோ யுத்தத்தை இவர்களாகவே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் மற்ற பதிவர்கள் மத்தியில் இது வரவேற்பையோ ஈடுபாட்டையோ உருவாக்கவில்லை என்பதை இவர்கள் உணரவேண்டும்.

உங்களின் தேவையற்ற கோபதாபங்களை விட்டுவிட்டு இயல்புக்கு வாருங்கள் நண்பர்களே.

தமிழ்ப் பதிவுலகம் இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.