Sunday, January 8, 2017

வேண்டாம் இந்த விபரீதம் ; குழந்தைகளைத் தலைக்குமேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள்.

கிட்டத்தட்ட தொண்ணூற்று ஒன்பது சதம்  பெற்றோர்களிடமும் இந்த விபரீத விளையாட்டு இருக்கிறது. இது அவர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாக இருக்கிறது
. குறிப்பாக குழந்தைகளின் தந்தையர்தாம் இந்த விபரீத விளையாட்டை விளையாடுகின்றனர்.

அதாவது அவர்களுடைய குழந்தைகளைத் தலைக்கு மேலே தூக்கிப்போடுவது……….. அந்தக் குழந்தை அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டுக் கீழே வரும்போது பிடித்துக்கொண்டு அப்படிப் பிடித்த வாக்கிலேயே குலுக்குவது…….. இதைப் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின் தாய் மொத்தக் காட்சியையும் பார்த்து அப்படியே ‘பரவசப்பட்டு’ நிற்பது….. ‘ஆஹா நம் கணவர் எவ்வளவு பலசாலியாகவும், சாமர்த்தியசாலியாகவும் இருக்கிறார்’ என்று உள்ளுக்குள்ளேயே பெருமிதப்பட்டுக்கொள்வது …………….. இந்தக் கைங்கர்யங்கள் அங்கங்கே நிறைய நடந்தேறுகின்றன.

இணையத்தில் இன்னொரு கண்றாவியும் நடைபெறுகிறது. குழந்தையை தலைக்கு மேலே தூக்கி வீசிவிட்டுக் கைகளை அகல விரித்துக்கொண்டு நிற்க வேண்டியது…….கூடவே ‘மகனே, (அல்லது மகளே) நீ விண்ணைத் தொட்டுவிட்டு வா. உன்னைத் தாங்கிப்பிடிக்க கீழே நான் உன் தந்தை இருக்கிறேன். கவலைப்படாதே’ என்று அபத்தமாய்ப் பீத்தல் வார்த்தைகள் போட வேண்டியது……………….

இம்மாதிரிக் காட்சிகளைக் காணும்போதெல்லாம் பதறியடித்து ‘ஐயையோ விபரீதம் உணராமல் இப்படிச் செய்கிறீர்கள்; தயவு செய்து இம்மாதிரி செய்யாதீர்கள்’ என்று அவர்களிடம் சொல்லி வருகிறேன்.

இணையத்தில் இம்மாதிரியான காட்சிகளைக் காணும்போதெல்லாம் அது யாருடைய பதிவு என்பதையெல்லாம் பார்க்காமல் வலுக்கட்டாயமாய்ப் போய் ‘இனிமேல் நீங்கள் இப்படிச் செய்யாதீர்கள்; இது மிகவும் தவறு. இப்படிப்பட்ட புகைப்படங்களையும் பகிராதீர்கள்’ என்று கமெண்டும் போட்டு வருகிறேன். - ஆனால் இப்படிச் சொல்லுமிடங்களிலெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு அலட்சியம் பரவலாக இருப்பதையும் என்னால் உணர முடிகிறது. ‘நம்குழந்தையைத் தூக்கிப்போட்டு விளையாடினால் அதையெல்லாம் போய் நொட்டையும் நொள்ளையும் சொல்லிக்கொண்டு இருக்கிறானே’ என்ற ஒருவகையான திமிர் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இது எத்தனை விபரீத விளையாட்டு என்பது பற்றி அவ்வப்போது மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தச் செய்தி பரவலாக எத்துணை தூரம் எல்லாரையும் சென்று சேர வேண்டுமோ அத்துணை தூரம் சென்று சேரவில்லை என்பதுதான் பரிதாபத்திற்குரிய செய்தி. இந்த விபரீதம் பற்றி அறிந்தவர்கள் இரண்டு சதம், மூன்று சதம்கூட இருக்கமாட்டார்கள். இது பற்றித் தமிழில் முன்பு ஆனந்த விகடன் இதழில் சில மருத்துவர்களின் பேட்டிகள் படித்தது நினைவில் இருக்கிறது. இப்போது இதனை இங்கே பகிர வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று பார்த்தோமானால் அதற்குக் காரணம் இன்றைய தினத்தந்தி.

தந்தியில் ‘தினம் ஒரு தகவல்’ என்ற தலைப்பில் பயனுள்ள ஒரு பகுதி வந்து கொண்டிருக்கிறது. அதனை எத்தனைப் பேர் கவனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தினத்தந்தியிலேயே மிகவும் பயனுள்ள பகுதியாக அந்தப் பகுதியைச் சொல்லமுடியும். அந்தப் பகுதியில் இன்றைக்கு (ஜனவரி 9, 2017) வந்திருக்கும் தகவல் இதுதான். தலைப்பு; ‘குழந்தைகளைத் தூக்கிப்போட்டு விளையாடாதீர்!’

அதன் சாராம்சம் இது; மனிதனுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அதனால்தான் தலையில் ஏற்படும் காயங்களினால் சில சமயங்களில் உயிர் போய்விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே காரணம். காயம் எதுவும் இல்லாமலேயே மூளை பாதிக்கும் பருவம் இரண்டு முறை வாழ்நாளிலே வருவது உண்டு. ஒன்று முதுமைப் பருவம், மற்றொன்று குழந்தைப் பருவம்.

சாதாரணமாக குழந்தையின் மண்டை ஓட்டுக்குள் சிறிதுகூட அங்கும் இங்கும் அசையாதபடி மூளை கச்சிதமாகப் பொருந்தியிருக்கும். ஆனால் வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சம் சுருங்கக் கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக் குழாயில் கீறல் விழுந்துவிடும்.

அதன் வழியாக கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா’ என்று அழைக்கிறார்கள். நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான்.

சரி, இப்போது குழந்தைகளுக்கு வருவோம்.

குழந்தைகள் இதில் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள்? வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால் இந்தப் பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும். குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாகச் சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதைப்போல மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும்.

இதை ‘ஷேக்கிங் ஹெட் இன்ஜூரி’ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ‘தலை குலுக்குக் காயம்’ என்று பெயர்.

குழந்தைகளுக்கு இப்படியொரு ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிப்போட்டுப் பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான் அதன்பின் திரும்ப விழிக்காது.

அதனால் குழந்தைகளைத் தலைக்குமேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.’


இதுதான் இன்றைய தினத்தந்தியில் வந்திருக்கும் பகுதி.

பார்த்தீர்களா?

விபரீதத்தை உணர்ந்து கொண்டீர்களா?

உங்கள் குழந்தைகளுடன் இதுபோல விளையாடுபவர்களா இருந்தால் அதனை உடனடியாக நிறுத்திவிடுங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

குழந்தைகளிடம் இரண்டு விதமாக விளையாடாதீர்கள் என்று நான் வற்புறுத்துவது வழக்கம். ஒன்று தலைக்கு மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடாதீர்கள். இரண்டு, இரண்டு உள்ளங்கைகளையும் பிடித்துத் தூக்கி ஆலவட்டம் சுழற்றாதீர்கள். ஆலவட்டம்கூட வேண்டாம்; சும்மாவே இரண்டு பிஞ்சுக்கைகளையும் பிடித்துத் தூக்குவது –

குழந்தையின் உடல் எடையைத் தாங்கும் வலிமை அவர்களுடைய தோள்பட்டை மூட்டுக்குக் கிடையாது.

மூட்டு விலகிவிடும்.

குழந்தையைத் தூக்கிப்போட்டு விளையாடுவதால் மூளையின் உரசல்களால் சில வருடங்கள் கழித்துக் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வருகின்ற அபாயமும் உண்டு என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே இந்த விபரீத விளையாட்டிற்கு இன்றைக்கே குட்பை சொல்லிவிடுங்கள்.
இந்த இரண்டு செய்திகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தையிடம் வேறு வடிவில் உங்கள் அன்பையும் ஆசையையும் காட்டுங்கள்.