பெருந்தலைவர் காமராஜர்
முதலமைச்சராக இருந்த நேரம். தலைமைச் செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக
அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர். பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது. வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை. மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்ல அனுமதி கிடைக்கிறது.
அடுத்தநாள்………. நேற்று
தமது காரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர்.
குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார். சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது.
குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறு இடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது
என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.
இவரும் பயந்துகொண்டே போய்ச்
சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன்.
மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன்?
நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு
ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது. அவனவன் கடமையை அவனவன்
ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு
நீ சலுகை காட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான்
உன்னைக் கூப்பிட்டேன். கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க”
என்று சொல்லி அவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.
நீண்ட நாட்களுக்கு முன்னர்
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.
நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும்
பொருத்திப்பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.
ஒன்று மட்டும் நிச்சயம்.
தலைவர் என்பவர் இப்படித்தானே
இருக்கவேண்டும்!