Friday, August 31, 2012

ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்


தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டக்கூடியதாய் இருக்கிறது. ஒரு சமூகம் என்பது வெறும் அரசியலோடு முடிந்துவிடுவதில்லை.  

இலக்கியம்,கலை,நாகரிகம்,பண்பாட்டு அடையாளச்சின்னங்கள் என்று பல்முனை சார்ந்து ஒரு கூட்டு அடிப்படைத்தளத்தில்தான் இயங்கவேண்டியிருக்கிறது.

அதனால்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது என்னும்போது நாம் கொதிப்பதும் கண்டிப்பதும் நிகழ்கிறது. வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டபோதும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டபோதும் கலைஞரை தமிழ் உணர்வாளர்கள் கொண்டாடியதும் இந்த பண்பாட்டு அடிப்படையைச் சார்ந்ததுதான். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அதே மன உணர்வில்தான் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பியனுப்பியபோது கொதித்ததும் கிளர்ந்தெழுந்ததும்கூட (கிளர்ந்தெழுந்தார்களா?) பண்பாடு மற்றும் மனிதாபிமானம்  அடிப்படையிலானதே. இதற்கும் அரசியலுக்கும்கூட சம்பந்தம் கிடையாது.

ஆனால் இங்கே, குறிப்பாகத் தமிழகத்தில் மழை பெய்வதும் அணையில் தண்ணீர் திறந்துவிடுவதும் மின்சாரம் உற்பத்தி செய்வதும் ஒரு இலக்கியவாதி புத்தகம் எழுதுவதும் அவனுக்கு ஒரு விருது அளிக்கப்படுவதும் ஏன், ஒரு சினிமா ஓடுவதும்கூட அரசியலாக்கப்பட்டு விட்டது.

இங்கே எல்லாமே அரசியல்.

தொடர்பு இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையுமே கொண்டுபோய் அரசியல் சாக்கடையில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

இதில் ரொம்பவும் மாட்டிக்கொண்டு பரிதவிப்பது கலையுலகமும் இலக்கிய உலகமும்தாம். கலையுலகத்திற்கும் அரசியலுக்கும் இங்கே வேறுபாடே இல்லை. இரண்டும் பின்னிப்பிணைந்து ஒன்றுபோலவேதான் காட்சியளிக்கின்றன. இது அண்ணாவின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இந்த நிலையை ஆரம்ப காலத்தில் பெரியாரும் காமராஜரும் எதிர்க்கவே செய்தனர். ‘கூத்தாடிகளை நம்பி ஆட்சியதிகாரத்தை எல்லாம் வழங்கிடாதீங்க. அப்புறம் எல்லாமே நாசமாப்போயிடும்’ என்று காமராஜர் ஆரம்பத்தில் சொல்லிப்பார்த்தார். இதற்காக அவர் மிகக் கேவலமாக விமர்சிக்கப்பட்டார். ‘ஆஹா கலைஞர்களைப்போய் கூத்தாடிகள் என்று விமர்சிக்கிறாரே இவர்’ என்பதாக காமராஜர்மீது இகழ்ச்சியும் கண்டனங்களும் பாய்ச்சப்பட்டன. காமராஜர்  மீதான இந்த தாக்குதல்களை அன்றைய இளைஞர் சமுதாயம் வெகுவாக ரசிக்கவே செய்தது. அடுத்து நேரப்போகும் ஆபத்துக்களை உணராமல் கூடச் சேர்ந்து ஆரவாரித்தது.

அரசியலும் கலையுலகமும் இணைந்த ஒரு அபின் கலவை தமிழகத்தின் மூச்சுக்காற்றோடு கலக்கப்பட்டது. அரசியலும் சினிமாவும் பின்னிப்பிணைந்திருக்கின்றன என்பது வெளியே தெரியாத வண்ணம் அரசியலும் இலக்கியமும், அரசியலும் தமிழர் நாகரிகமும், அரசியலும் சங்க காலத்தமிழர் பண்பாடும் மட்டுமே கலந்திருக்கிறது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை அண்ணாவும் அவருடைய தம்பிமார்களும் மிக அழகாகவும் மிக வெற்றிகரமாகவும் ஏற்படுத்தினர். இதன் முதல் அறுவடை அண்ணாவுக்கே கிடைத்தது. அவரது உடல்நலக் கோளாறால் நீண்ட காலம் அவரால் ஆட்சி செய்யமுடியாமல் போய்விட அதனைத் தொடர்ந்து கருணாநிதியும் அவரைத் தொடர்ந்து எம்ஜிஆரும் அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் சங்கிலித் தொடராய் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றனர். இதன் நீட்சியே இப்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நடிகர் விஜயகாந்த் வீற்றிருப்பது. இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதனால்தான் சில நடிகர்கள் இரண்டு படங்கள் வெற்றிபெற்றவுடனேயே அடுத்த படத்தின் வசனங்களில் தங்களை எதிர்கால முதல்வராகப் பிரகடகனம் செய்துகொள்ளும் அவலமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இத்தகைய அவலங்கள் இத்தகைய அசிங்கங்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் நடைபெறுவதில்லை. அங்கே அரசியலும் மற்ற மற்ற விஷயங்களும் வேறுவேறாகப் பகுத்துப் பார்க்கப்படுகின்றன. கலையும் இலக்கியமும் அததற்கான தளங்களில் அவற்றுக்குரிய சிறப்பான அடையாளங்களுடன் தனித்தே இயங்குகின்றன. கலையுலகின் இலக்கிய உலகின் சாதனையாளர்கள் அவர்களின் சாதனைகளுக்காக மட்டுமே அங்கே கொண்டாடப்படுகிறார்கள். யாரும் யாருக்கும் அரசியல் சாயம் பூசிப்பார்ப்பதில்லை. இலக்கிய உலகிலோ கலை உலகிலோ ஒரு சாதனையாளனை தேடிச்சென்று கொண்டாடுவது மட்டுமே அங்கே ஆட்சிக்கு வருபவர்கள் செய்கின்ற வேலை.

தமிழகத்திலே என்ன நடக்கிறது?

யோசித்துப் பாருங்கள். வங்காளத்திலும் மலையாளத்திலும் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் படைப்பாற்றல்கொண்ட எந்த படைப்பாளியாவது எந்த இலக்கியவாதியாவது அந்தந்த அரசினால் கொண்டாடப்படாமல் கௌரவிக்கப் படாமல் விடுபட்டுப் போயிருக்கிறார்களா என்று! அந்தந்த அரசுகள் மட்டுமின்றி மத்திய அரசின் மூலமாக அந்தந்த சாதனையாளர்களுக்குச் சேரவேண்டிய கௌரவங்கள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனையையும் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன மாநில அரசுகள்.

மற்ற மாநிலங்களின் அத்தனை சீனியர் எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இலக்கியவாதிகளும் மாநில அரசுகளின் கௌரவங்களைப் பெற்றது போக மத்திய அரசின் அத்தனை விருதுகளையும் தவறாமல் பெற்றிருக்கின்றனர்.

இலக்கியம் சினிமா சங்கீதம் ஓவியம் நாடகம் நாட்டியம் என்று கலை தொடர்பான எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை.
சிவாஜிகணேசன் போன்ற ஒரு மாபெரும் கலைஞனைக்கூட அவமதித்து அவருக்குச் சேரவேண்டிய விருதுகளையோ கௌரவங்களையோ கிடைக்கவிடாமல் செய்வதற்குத் தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது?

கண்ணதாசன் போன்ற ஒரு பெருங்கவிஞன் திரைஇசை, இலக்கியம் என்று இரண்டு தளங்களிலும் அபரிமிதமான சாதனைகளுடன் உழன்ற ஒரு கவிஞனை இவர்கள் சல்லிக்காசுக்குக்கூட மதிக்காமல் புறக்கணித்தார்கள் என்பதையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது?
மற்ற விஷயங்களை வேண்டுமானால் விட்டுவிடுவோம். சிவாஜிபோன்ற ஒரு மகாநடிகனுக்கு இந்தியாவின் அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்கிறது என்பது மிகமிகச் சாதாரண விஷயம். அதனைக்கூட கிடைக்கவிடாமல் செய்ய இங்கிருந்து அன்றைக்கு அமைச்சரவையில் இரண்டாம் நிலையில் இருந்த நெடுஞ்செழியன் டெல்லிக்கு அனுப்பப்பட்டு அவர் அங்கு போய் லிஸ்டிலிருந்த சிவாஜியின் பெயரை அடித்துவிட்டு அதற்கு பதிலாக அப்போது அவர்களுக்கு வேண்டியிருந்த எம்ஜிஆரின் பெயரைச் சேர்த்து ‘ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு சிறந்த நடிகர் விருது’ என்று அறிவிக்கச்செய்த சாதனையுடன் திரும்பி வந்ததை என்னவென்று சொல்வது?

கண்ணதாசனைப் புறக்கணிக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் செய்த இலக்கிய மோசடி என்ன தெரியுமா? திராவிட இலக்கியவாதிகள் அத்தனைப்பேரும் சங்க கால இலக்கியம் என்று தொடங்குவார்கள். 
புறநானூறு அகநானூறு என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம்வரை வந்து பாரதியை கவனமாகத் தவிர்த்துவிட்டு பாரதிதாசனுக்கு வருவார்கள். அவர் எழுதிய சமுதாய சீர்திருத்தப் பாடலையும் தமிழ் உணர்வுப் பாடலையும் சொல்லிவிட்டு பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கிவிடுவார்கள். எழுத்திலும் இவ்வளவுதான். பாரதிதாசனுக்குப் பிறகு யாரும் கவிதையே எழுதவில்லையா? அவருடன் தமிழ் இலக்கியம் முடிந்து போய்விட்டதா? கவிதைக்கும் பாடல்களுக்கும் இரும்புத்திரைப் போடப்பட்டுவிட்டதா? எந்த அரசாங்கமாவது தமிழ்க்கவிதைகளைத் தடை செய்துவிட்டதா? தெரியவில்லை.

சரி கண்ணதாசனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்கள் அபிப்பிராயப்படி அவன் ஒரு ‘குடிகாரக் கவிஞன்’. கண்ணதாசனைத் தவிர்த்து சுரதாவையோ அப்துல் ரகுமானையோ மேத்தாவையோ மீராவையோ சிற்பியையோ ஞானக்கூத்தனையோ குறிப்பிட்டுப் பேசலாம் இல்லையா? இவர்களெல்லாம் தமிழ்க்கவிதை எழுதவில்லையா? ஹீப்ரூவிலும் பிரெஞ்சிலுமா கவிதை எழுதுகிறார்கள்?......பேச.மாட்டார்கள். ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்க்கவிதை என்பதும் பாரதிதாசனுடன் முடிந்துபோய்விடுகிறது.
‘தமிழ் உரைநடை இலக்கியம்’ என்பதும் திருவிகவில் ஆரம்பித்து அண்ணாவுக்கு வந்து முவவைத் தொடர்ந்து கலைஞர் எழுத்துக்களுடன் நின்றுபோய் விடுகிறது. அதற்கு முன்னாலும் யாரும் உரைநடை எழுதவில்லை. அதற்குப் பின்னாலும் யாரும் தமிழில் உரைநடை எழுதவில்லை.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன், நாபா, தி,ஜானகிராமன், சாண்டில்யன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ராகி,ரங்கராஜன் கி.ராஜநாராயணன் இவர்களெல்லாம் யார்? இவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசு இதுவரை இத்தனை ஆண்டுகளாக என்ன மரியாதை செய்தது, எப்படியெல்லாம் கௌரவித்திருக்கிறது என்பதையெல்லாம் யோசித்துப்பாருங்கள்.

கண்களில் ரத்தம் வரும்.

மேற்கண்டவர்கள் எல்லாம் பிரபல வாரப்பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் காசு சம்பாதித்தவர்கள் என்று மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைப்பு.

மேற்கண்டவர்களில் ஜெயகாந்தன் ஒருவருக்கு ஏதோ ஒரு விருதும் மருத்துவச்சேவையும் செய்ததைத் தவிர (அதற்கான காரணம் என்னவென்பது வேறு விஷயம்) எந்த மரியாதையோ மத்திய அரசின் எந்தவொரு  விருதோ இதுவரையிலும் கிடைத்ததில்லை.
தமிழில் எந்தவொரு எழுத்தாளருக்காவது பத்மஸ்ரீ விருதோ பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளோ கிடைத்திருக்கின்றனவா? இல்லை. ஆனால் இதே தகுதிகள் உடைய மற்ற மாநில எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் இத்தகைய விருதுகளுடன் பவனி வருகிறார்களே எப்படி?

தமிழின் மகத்தான இலக்கியவாதிகளும் கலையுலகின் உண்மையான சாதனையாளர்களும் ‘உங்களுக்கு மாநில அரசின் அல்லது மத்திய அரசின் விருதுகள் ஏதேனும் கிடைத்திருக்கிறதா?’ என்ற கேள்வி முன்வைக்கப்படும்பொழுது “எனக்கு மக்களுடைய ஆதரவு கிடைத்திருக்கிறதே இதுவே போதும். இதைவிடப் பெரிய அங்கீகாரம் என்ன இருக்கின்றது?” என்று சிரித்துக்கொண்டே சொல்லும்போது அந்த ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வழிந்து உறைந்துபோன ரத்தத்தின் வாசம் ஆட்சியாளர்களின் மூக்கைத் தொட்டிருக்கிறதா தெரியவில்லை.

இங்கே இந்தப் பதிவுகளில் மறுபடி மறுபடி கண்ணதாசனைச் சொல்லக் காரணம் அந்தக் கவிஞன்தான் ஏடுகளைத் தாண்டிவந்து மனிதர்களை – தமிழர்களைத் – தொட்டவன்! படித்தவர்களுக்கு மட்டுமென்று இருந்த இலக்கியத்தை படிக்காத ஏழைகளுக்கும் கொண்டுசென்று சேர்த்தவன். அதிகபட்சம் ‘ஆத்தா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே’ என்று மட்டுமே இலக்கியம் பாடிக்கொண்டிருந்த ஏழைகளின் வாயில் “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்றும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்றும் செந்தமிழ் வார்த்தைகளை உட்கார வைத்தவன். ‘எங்கள் திராவிடப்பொன்னாடே’ என்று பழந்தமிழ் வரலாறு சொன்னவன். போனால் போகட்டும் போடா, சட்டிசுட்டதடா கை விட்டதடா என்று சித்தர் தத்துவம் ஆரம்பித்து ‘ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்’ என்று ஒற்றை வரிக்கே பிஎச்டி பண்ணுமளவுக்கு மிக அனாயாசமாய் மனோதத்துவம் புகுத்தியவன். காதல் மயக்கம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவந்து ‘மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய இருளினைப்போலே மனமயக்கத்தைத் தந்தவள் நீயே’ என்று இரண்டு வரிகளில் சர்வசாதாரணமாக இலக்கியம் பேசத்தெரிந்தவன், மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று தமிழ்மூலம் உலகுக்கு நெறிகள் சொன்னவன். ‘காத்துக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி’ இரண்டு இரண்டு வார்த்தைகளில் ஓராயிரம் சிந்தனைகளை விதைக்க முடிந்தவன்…..இப்படிப்பட்ட ஒருவன் எந்த மொழிக்குக் கிடைத்திருக்கிறான்? இந்தியாவில் கண்ணதாசனைப் போன்ற கவிஞன் வேறு மொழிக்குக் கிடைத்திருந்தால் அவனை இந்நேரம் ரவீந்திரநாத தாகூரை விடவும் மேம்பட்ட கவிஞனாக உயரத்தில் தூக்கிவைத்து அந்த மாநிலமும் இந்தியாவும் கொண்டாடியிருக்கும்.

இங்கே என்ன நடக்கிறது?

கவியரசர் என்று அவரை அழைக்கிறார்களாம். ஆட்சியாளர்களுக்கும் அவருக்கும் தகராறு. அப்படி அழைக்கலாமா கண்ணதாசனை…. அழைத்தல் தகுமா? இதனை மாற்ற என்ன செய்யலாம்?

தற்போது பிரபலமாக இருக்கும் வேறொருவருக்கு அந்தப் பட்டத்தை நாமே சூட்டிவிடலாம்.

வைரமுத்து ‘கவியரசர்’ ஆக்கப்படுகிறார்.

கண்ணதாசனுக்கு இருக்கும் பட்டம் அது. வைரமுத்துவுக்கு அதனை எப்படி வழங்கலாம் என்று எதிர்ப்பு வலுக்கிறது.

எதிர்ப்பு தாங்காமல் வைரமுத்துவே அதனைக் கைவிடுகிறார்.

எல்லாக் களேபரங்களையும் தமக்கேயுரிய ‘நமட்டுச்சிரிப்புடன்’ பார்த்துக்கொண்டிருக்கும் சூத்திரதாரியான கலைஞர் கருணாநிதி இப்போது அறிவிக்கிறார். “கவியரசர் என்று சொன்னால்தானே எதிர்ப்பு? இதோ இப்போது சூட்டுகிறேன் இவர் கவிப்பேரரசு. இனிமேல் வைரமுத்துவைக் கவிப்பேரரசு என்று அழைப்போம்” இப்படியொரு சூழ்ச்சியான தீர்ப்பை அறிவிக்கிறார்.

இதற்குப் பிறகு இரண்டுமுறை ஆட்சி பீடம், மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் ரீதியாக கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு, கருணாநிதி மட்டுமின்றி டி.ஆர்.பாலு மற்றும் திரைப்படத்துறையிலும் ஊடகங்களிலும் இருக்கும் வைரமுத்துவின் செல்வாக்கு அனைத்தும் சேர்ந்து இப்போது கவிப்பேரரசு என்ற பட்டம் வைரமுத்துவுக்கு நிரந்தரமானது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. கவிப்பேரரசு என்ற பட்டம் வைரமுத்துவுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் இந்த அரசியல் மிக அருவெறுப்பானதாகவே இருக்கும். வைரமுத்து ஏதோ ஒரு பட்டம் பெறுவதிலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதிலும் நமக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. ஆனால் கவியரசரின் புகழைக் குறிபார்த்து எய்யப்பட்ட இந்த அம்பு வைரமுத்துவின் வெற்றிப் பதாகையில் வீற்றிருப்பதைப் பார்க்கும்போதுதான் இதையெல்லாம் சொல்லத்தோன்றுகிறது.  

அரசியல் ரீதியாகத் தமது வாழ்க்கையில் மிகப்பெரும் ராஜதந்திரங்களையும் ராஜதந்திரங்கள் என்று நினைத்து பல தவறுகளையும் செய்த கலைஞர் கருணாநிதி இலக்கிய ரீதியாகச் செய்த மாபெரும் தவறும் மோசடியும் இதுவென்றே படுகிறது.

இப்படி கண்ணதாசனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைத்தால் அவரை முற்றாகப் புறக்கணிக்கவேண்டியதுதானே? அதுதான் இல்லை. தமக்குத் தேவையான இடத்தில் ‘மட்டும்’ கண்ணதாசனைச் சேர்த்துக்கொள்கிறார். கண்ணதாசன் எழுதிய அத்தனை ஆயிரம் பாடல்களையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டியதுதானே? சன் டிவி கலைஞர் டிவி மட்டுமில்லாமல் ‘முரசு’ டிவியையும் ஆரம்பித்து கண்ணதாசன் எழுதிய பாடல்களை முதன்மையாக வைத்துத்தான் காலத்தை ஓட்டவேண்டியிருக்கிறது. இன்று மட்டும் அல்ல பின்வரும் நாட்களிலும- என்னே காலத்தின் கொடுமை!

திராவிட ஆட்சிக்காலத்தில் திரைத்துறையிலேயேகூட எத்தனையோ சாதனையாளர்கள் பத்ம விருதெல்லாம் கிடைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார்கள். முத்துராமன் எஸ்எஸ்ஆர் நாகேஷ் போன்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படவில்லை.

ஏன் இன்றைக்கு உலகத்தமிழர்கள் மத்தியில்  தமது வித்தியாசமான உரைவீச்சால் தமிழ்த்திரை விற்பன்னர்களின் சாதனைகளை வரலாற்றுப்பதிவுகளாகப் பதியவைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மத்தியில் தாமே  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகுமாருக்குக்கூட பத்மஸ்ரீ உட்பட எந்த விருதுமே வழங்கப்படவில்லை. 

சரி, நாம் ஜெயலலிதாவுக்கு வருவோம்.

அரசியல் ரீதியாக அம்மையார் மீது நமக்கு கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. ஆனால் சில விஷயங்களில் அவர் எடுக்கும் தடாலடி முடிவுகள் பாராட்டுக்குரியதாகவே உள்ளன. மழைக்கால நீர் சேமிப்பு போல ஒரு சில அரசாங்க கொள்கை முடிவுகளும் சரி, செய்கிறாரோ இல்லையோ ‘நான் வந்தால் தமிழ் ஈழம் கிடைக்கச் செய்வேன்’ என்று போகிற போக்கில் ஒரு அணுகுண்டு வீசியதையும் சரி ரசிக்கவே முடிந்தது. இதோ இப்போது விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கான பாராட்டு விழா பற்றியதும் அப்படியான ஒன்றாகவே படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாக அரசியல் இருக்கிறதோ இல்லையோ இந்த நிகழ்ச்சியை இப்படித்தான் நடத்தவேண்டும் என்று தீர்மானித்ததில் அரசியல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முதலமைச்சர் என்பதையும் தாண்டி ஒரு ரசிகை தான் நேசித்த இரு மாபெரும் கலைஞர்களுக்கு ஆத்மார்த்தமாகச் செய்த மரியாதை என்பதாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி முடிவுக்கு வர முடிகிறது.
அதுவும் மரியாதை என்ற பெயரில் வெறும் பொன்னாடைப் போர்த்தி அனுப்பிவிடாமல் இருவருக்கும் தலா அறுபது பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும் ஃபோர்டு பியஸ்டா கார் ஒன்றையும் வழங்கியதுடன் நில்லாமல் ‘திரை இசைச் சக்கரவர்த்திகள்’ என்ற பட்டமும் கொடுத்து கௌரவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சும் எவ்வித பகட்டும் பாசாங்கும் இல்லாமால் படு நேர்மையுடன் இருக்கிறது.
“இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால்தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகாவரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒருமுறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில் குழந்தையாக இருந்தபோது அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர்மூச்சு உள்ளவரை ,அந்தப் பாடல்கள் என் மனதைவிட்டு அகலாது” என்ற முதல்வரின் வார்த்தைகள் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் சார்பாக சொல்லப்பட்ட வார்த்தைகளாகவே படுகின்றன.

அடுத்து முக்கியமான கட்டத்துக்கு வருகிறார் ஜெயலலிதா. “இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலத்தைத்தான் ‘பொற்காலம்’ என்று சொல்வார்கள். அதுபோல விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.”
இதனைத்தான் இந்தக் கருத்தைத்தான் நானும் இங்கே பல்வேறு பதிவுகளின் வாயிலாக இணையத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எண்பதுக்குப் பின்னர் பிறந்து தன்னுடைய பிறப்பிற்கு முன்னால் உலகம் என்ற ஒன்றே இல்லையென்பதுபோலும் தான் பிறந்த பிறகுதான் உலகம் இயங்க ஆரம்பித்து திரைப்படம் என்ற ஒன்றும் திரையிசை என்ற ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு அது  இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தீர்மானித்துக்கொண்டு மாய உலகத்தில் இருக்கும் ஒரு கூட்டம் வேறொரு இசையமைப்பாளர்தான் இசையையே கண்டுபிடித்தார் என்பதுபோல் நினைத்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பதுதான் மிகப்பெரிய சோகம்.

இளையராஜாவுக்கு முந்தைய தமிழ்த்திரை இசையை ரசிக்காதவர்கள் தங்கள் ரசனை வாழ்க்கையின் மிகப்பெரும் பகுதியை இழந்த பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் கொள்ளப்படுவார்கள். இவர்களைத் தாண்டியும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசைப்பிரவாகம் இன்னமும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த விழாவை நடத்திய விதத்தில் அரசியல் இல்லையே தவிர நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்த விதத்தில் ஒரு நுண்ணிய அரசியல் இருந்ததாகச் சொன்னார்கள். இது எங்கிருந்தோ கேள்விப்பட்ட ஒரு சமாச்சாரம்தான் எந்த அளவு உண்மையோ தெரியாது.
விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு என்னென்ன பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன என்று விசாரித்தாராம் ஜெயலலிதா. இதுவரை ஒரு விருதுகூடக் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டதாம். அதிர்ந்து போனவர் ‘ஐம்பது ஆண்டுகாலமாய் இசையமைத்துக்கொண்டிருப்பவர் அதுவும், முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழில் நம்பர் ஒன் என்ற இடத்திலேயே இருந்தவருக்கு எதற்காக இந்த விருதுகள் இன்னமும் வழங்கப்படவில்லை?’ என்று கேட்டாராம்.

‘விஸ்வநாதன் கண்ணதாசனோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததாலும் அவரை உயிர்மூச்சாய் கொண்டிருப்பவர் என்பதாலும் விருதுகள் தடுக்கப்பட்டன’ என்று பதில் சொல்லப்பட்டதாம். இதனைக் கேட்டு மனம் கொதித்துப்போன முதல்வர் இப்படியொரு விழாவுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் என்பதாகவும் ஒரு செய்தி கசிந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியின் நம்பகத்தன்மைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் முதல்வரின் பேச்சில் இந்த விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது. “இவர்களுக்கு தேசிய விருது பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. …………………………….நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்”

கட்சி சார்ந்தவர்களை அதுவும் கழகம் சார்ந்தவர்களை மட்டுமே மதிப்பது கொண்டாடுவது என்பது கலைஞரின் வழக்கம். அதைத் தாண்டி மக்கள் கொண்டாடுபவர்களை கௌரவிப்பது மதிப்பது என்று எம்ஜிஆர் மக்களிடம் நேரடியாக வந்தார். கவியரசரை அரசவைக்கவிஞராக நியமித்தது பிரபாகரனை ஆதரித்தது என்று மக்களின் மன ஓட்டத்தை மதிக்கும் கலை அவருக்குத் தெரிந்திருந்தது.


இதில் எந்தவகை அரசியலை அம்மையார் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஐம்பதாண்டுகால திரை இசைக்கு அவர் செலுத்தியிருக்கும் மரியாதைக்கு இசை ரசிகர்கள் சார்பாக அவருக்குப் பெரிய பூங்கொத்து கொடுத்துப் பாராட்டவேண்டும்.