Saturday, July 22, 2017

சிவாஜியும் கண்ணதாசனும் தமிழ்ச் சமூகமும்......

நாகேஷ் மிகச்சிறந்த நடிகர். தேர்ந்த திறமை மிக்கவர். நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு குணச்சித்திர நடிப்பிலும், நடனக் காட்சிகளிலும்கூட வெகு நேர்த்தியாகத் தம்மை நிரூபிக்கக் கூடியவர். அவருக்கென்று சில லிமிட்டேஷன்கள் உண்டு. அந்த வரையறைக்குள் அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை மிகச்சிறப்பாகச் செய்து எவரையும் அசத்திவிடக்கூடிய அளவு ஆற்றல் மிக்கவர். ஒரு தருமியாகவும், மாதுவாகவும், சுந்தரமாகவும், வைத்தியாகவும், ஒரு ஜோசப்பாகவும் அவரை உச்சத்தில் வைத்துப் பார்க்கமுடியுமே தவிர -
குணசேகரனாகவோ, பிரஸ்டிஜ் பத்மனாபனாகவோ, சிவனாகவோ, திருமாலாகவோ, கர்ணனாகவோ, பாலும் பழமும், பாசமலர், உயர்ந்த மனிதன், அந்த நாள், பலேபாண்டியா, தெய்வமகன், உத்தம புத்திரன், புதிய பறவை, திரும்பிப் பார், மனோகரா, நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், ஞான ஒளி, தங்கப்பதக்கம், வ.உ.சி, கட்டபொம்மன், என்ற பாத்திரங்களிலோ வைத்துப் பார்க்க முடியாது, கூடாது.
சிவாஜி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிம்பம் என்பது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தாலோ, சில பாத்திரங்களாலோ கட்டமைக்கப்பட்ட ஒன்று அல்ல. தோற்றம், அழகு, திறன், உடலிலுள்ள கம்பீரம், குரலில் உள்ள கம்பீரம், உடல் மொழியிலுள்ள நேர்த்தி, நடையிலுள்ள நுணுக்கம், பேசும் திறனிலுள்ள நுணுக்கம், உதட்டசைவு, கண்ணசைவு இவை எல்லாவற்றையும் தாண்டிய தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்ட பிம்பம்தான் சிவாஜியே தவிர குறிப்பிட்ட சில பாத்திரங்களில் நன்றாக நடித்திருப்பவர் என்ற பெருமை மட்டுமே அவருக்கு உரித்தானது இல்லை...............!
இப்போது எதற்காக இவற்றையெல்லாம் சொல்ல நேர்கிறது எனில் நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேலையே எங்காவது நாகேஷ் பற்றிய பதிவுகள் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருப்பதுதான். நாகேஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்ற பதிவைப் பார்த்துவிட்டால் சர்வாங்கமும் மகிழ்ச்சிப் பொங்கிப் பூரித்துவிடும் இவர்களுக்கு. உடனடியாக ஒரு 'கருத்து' எழுதுவார்கள். என்னவென்று தெரியுமா?

'நாகேஷ் ஒரு அற்புதமான நடிகர். பிறவி நடிகர். அவரை விட்டால் சிவாஜியையே 'தூக்கிச் சாப்பிட்டுவிட்டு'ப் போய்விடுவார்' என்ற பாணியில் அந்தக் 'கருத்து' இருக்கும். (இம்மாதிரியான கருத்துக்களை எல்லாம் நாகேஷே எப்படிப் புறம் தள்ளுவார் என்பது இந்த மூடர்களுக்குத் தெரியாது. 'சிவாஜியெல்லாம் நாம் அன்னாந்து பார்க்கக்கூடிய இமயம். அவரெல்லாம் மனிதரே கிடையாது. இறைவன் அனுப்பிய வரம்' என்பது நாகேஷின் கூற்று.) நாகேஷுக்கு மட்டுமல்ல, இதே 'கருத்தை' நாகேஷ் என்ற பெயரை மட்டும் எடுத்துவிட்டு வேறு சிலர் பற்றிய 'கமெண்டுகளிலும்' வைப்பார்கள். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்கராவ் என்று யாரைப்பற்றி 'சிறப்பித்து'ச் சொல்ல வேண்டுமென்றாலும் இவர்களுக்கு இந்த ஒரே Pattern தான்.
ஆக, இவர்களுடைய நோக்கமெல்லாம் நாகேஷை, எம்.ஆர்.ராதாவை, எஸ்.வி.சுப்பையாவை, ரங்கராவைப் புகழ்வதோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல. மாறாக -
சிவாஜியை 'சிறுமைப் படுத்துவது'.
இப்படிக் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் சிவாஜி மீது மண்ணை, கல்லை, சேற்றை வாரி இறைத்துவிட்டதாக இவர்களுக்குள் ஒரு சிறிய சந்தோஷம் கிளம்புமே.................. அதுதான் முக்கியம். அது போதும் இவர்களுக்கு.
இம்மாதிரியான விவாதங்கள் வரும்போது சிவாஜியைப் பற்றி, அவரது பல்வேறு சிறப்பான தகுதிகள் பற்றிக் கூறுகிறோம் இல்லையா? கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் இவர்களுக்குக் கையில் கிடைக்கும் இன்னொரு அஸ்திரம் - சிவாஜியின் வசன உச்சரிப்பு............. தமிழ் உச்சரிப்பு.
உடனடியாக 'இவர்களுடைய' தலையில் பதில் வந்து துருத்திக்கொண்டு நின்றுவிடும். "ஏன், எஸ்.எஸ் ராஜேந்திரன் தமிழை அழகாக உச்சரிப்பவர் இல்லையா?"என்று கேட்டுவிட்டு வேலை முடிந்ததென்று கிளம்பிவிடுவார்கள். (பாருங்கள்..... ஒரு மனிதரின் சிறப்புக்களைக் 'குறைக்க' இவர்கள் கையெலெடுக்கும் நபர்கள் எத்தனைப் பேர் என்று. நாகேஷ், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ், இன்றைக்குக் கமலஹாசன், அப்புறம் கடைசியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன்)
அட, புத்திக் கொழுத்த சுப்பன்களே உங்களுக்கு அறிவே கிடையாதா? (இதில் மனோரமாவைப் 'பொம்பளை சிவாஜி' என்று ஒரு பாராட்டுக் கூட்டத்தில் சோ சொல்லிவைக்க, அதைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். -அப்படியானால் நடிகையர் திலகம் என்றழைக்கப்பட்ட சாவித்திரி என்ன ஆனார்? என்பதற்கு சோ தான் பதில் சொல்ல வேண்டும்.)
ஆயிற்றா?
விஷயம் இத்தோடு முடியவில்லை. இன்னமும் இருக்கிறது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தமிழ்த் திரை இசைக்குக் கிடைத்த மகத்தான கவிஞர்களில் ஒருவர். அவருக்கான பாராட்டுக் கட்டுரை எங்காவது வருகிறதா? மூக்கு வேர்த்துவிடும் சிலருக்கு. உடனே தயாராகிவிடுவார்கள். எதற்கு...................?
கொஞ்சம் பொறுங்கள்.
மெட்டுக்கு ஏற்பப் பாடல் புனைவதிலும், வெகுஜன ரசனைக்கேற்ப விருந்து வைப்பதிலும் தம்மைப் பட்டைத் தீட்டிக்கொண்டு ஜொலித்தவர் வாலி. வாலி பற்றிய சிறப்புக் கட்டுரைகள் எங்காவது வருகின்றனவா? அது போதும் இவர்களுக்கு. ஆனந்தமாய்க் கிளம்பிவிடுவார்கள். எதற்கு?.............
கொஞ்சம் பொறுங்கள்.
மாயவநாதன் தண்ணிலவு தேனிறைக்க போன்ற அழகிய தமிழ் வரிகள் மூலம் பாடல்களைச் செழுமைப் படுத்தியவரா?
புதுக்கவிதைப் பாணியைத் திரை இசையில் விதைக்க வந்தவரா வைரமுத்து? அது போதும். மூக்கு வேர்த்த பட்டாளங்கள் கிளம்பிவிடும். '
பட்டுக்கோட்டை பிரமாதமான பாட்டுக்கோட்டை. மாயவநாதன் சொல்லாற்றல் முகிந்த கவிஞன்' என்ற பாணியில் `கருத்துரைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்?
அவர்களின் நோக்கம் பட்டுக்கோட்டையாரையோ, வாலியையோ, மாயவநாதனையோ, வைரமுத்துவையோ, புகழ்வதோ தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல.
பின் என்ன? 'அவர்களுடைய கருத்துக்கள்' எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான் ....................
'ஒரே பாடலில் கண்ணதாசனையே மிஞ்சிவிட்டார் பட்டுக்கோட்டையார்'
'வாலி ஒன்றும் குறைந்தவர் அல்ல; கண்ணதாசனுக்கு சமமானவர்தான் வாலி. என்னவொன்று, கண்ணதாசன் முன்னரே வந்துவிட்டார். வாலி சற்று பின்னால் வந்தார் அவ்வளவுதான்.'
'மாயவநாதனுக்குப் போதுமான வாய்ப்புகள் மட்டும் கிடைத்திருந்தால் கண்ணதாசன் ஒன்றுமே இல்லாமல் போயிருப்பார்.'
'முதல் மரியாதை படப்பாடல்களை கண்ணதாசனுக்கு சமமாக எழுதி இருக்கிறார் வைரமுத்து.'
இப்படித்தான். இதுதான் அவர்கள் போடக்கூடிய 'கருத்துக்கள்'. இங்கேயும் பாருங்கள், கண்ணதாசன் என்ற ஒரு மனிதருக்காக இவர்கள் நான்கைந்து பேர்களைத் தோளில் தூக்கிச் சுமந்து வந்து இறக்க வேண்டியிருக்கிறது.
இப்படிக் 'கருத்து'க் கூறும் இந்தக் கூட்டத்தை நாம் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தோமானால் இவர்கள் அத்தனைப் பேரும் - ஆமாம் அத்தனைப் பேரும் - ஒரே புள்ளியிலிருந்து கிளம்பி வந்திருப்பார்கள் என்பதை நம்மால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.
ஆம்.
எம்ஜிஆர் என்பதுதான் அந்த ஒரு புள்ளி.
இது கொஞ்சம் கசக்கும் செய்தி என்றாலும் உண்மை இதுதான்.
'இப்படியெல்லாம்' எழுதுபவர்களின், பேசுபவர்களின் அடிப்படைக்குச் சென்று பாருங்கள். அவர்கள் நேசிக்கும், சுவாசிக்கும் ஒரே கலைஞர் எம்ஜிஆராகத்தான் இருப்பார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தெய்வமாக எம்ஜிஆரை 'வைத்திருப்பவர்கள்' சிவாஜியையும், கண்ணதாசனையும் விலக்கப்பட்ட பட்டியலில்தான் வைக்க விரும்புவார்கள்.
அதன் வெளிப்பாடுகள்தாம் இவ்வளவும்.(சிவாஜியும் எம்ஜிஆரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும்,
கண்ணதாசனுக்கு கடைசிக் காலத்தில் அரசவைக் கவிஞர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர் - என்ற பதில்களையெல்லாம் தூக்கிக்கொண்டு யாரும் ஓடிவர வேண்டாம். அவையெல்லாம் வேறு விவாதங்கள்)
மேற்கண்ட எண்ணம் கொண்டவர்களால்தான் தமிழ்ச்சமூகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் கலையின் அடையாளமாக சிவாஜி சொல்லப்படுகிறாரா? அங்கே வந்து நின்று சிவாஜி மீது சேற்றை இறைத்து அவரை சிறுமைப் படுத்து. ஒன்றுமில்லாமல் ஆக்கு. அல்லது அந்த 'உயரத்தைக்' குறை.
தமிழ்த் திரைப்பாடல்களின் அடையாளமாக கண்ணதாசன் சொல்லப்படுகிறாரா? அந்த அடையாளத்தை நொறுக்கு. ஏதாவது செய்து அழி. 'இளிச்சவாய்த் தமிழன்' அத்தனையையும் கேட்டுக்கொண்டு அடையாளங்கள் இல்லாமல் இருக்க சம்மதிப்பான்.
காலகாலமாய் இங்கே நடந்துகொண்டிருப்பது இதுதான்.
பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ராஜ்குமாரை பொதுவெளியில் விமர்சித்துவிட்டு அவன் உயிருடன் வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது. காரணம் கலையின் அடையாளமாக ராஜ்குமார் இங்கே கொண்டாடப் படுகிறார்.
தமிழன் சிவாஜியைச் சொல்கிறானா?
சிவாஜியா விமர்சித்து கிழித்துத் தூக்கி எறி.
காமராஜரை ஒரு அரசியல் அடையாளமாக மாற்றுவதைத் தமிழன் தொலைத்தான். தொடர்ந்து பாரதியை, பாரதிதாசனை, கண்ணதாசனை இங்கே கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு அடையாளங்களை ஏற்படுத்த விடாமல் தமிழனே தடுத்தான்.
கேட்பதற்கு நாதி இல்லை. இதுதான் தமிழ் இனம்.