-
(பதிவைப் படிக்க ஆரம்பிக்குமுன்
சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதற்காக இங்கே செரினா வில்லியம்ஸின் படம்? என்ற கேள்வி வரும்.
காரணமிருக்கிறது. பதிவின் கடைசியில் இதற்கான பதில் இருக்கிறது.)
தமிழின் இரு பெரிய பத்திரிகைகளான
குமுதத்திலும் ஆனந்தவிகடனிலும் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களின் பேட்டிகள் வந்துள்ளன.
இளையராஜாவுடையது பேட்டி அல்ல; வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் சொல்லும் விடைகள். ஏஆர்
ரகுமானுடையது விகடன் நிருபருக்கு அளித்த பேட்டி. இரண்டிற்கும் ‘வேறுபாடு’ இருந்தாலும்
விடை ஒன்றுதான். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொல்லியுள்ள பதில்கள்.
‘உங்களுக்குப்பின் வந்த
இசையமைப்பாளர்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்பதுதான் கேட்கப்பட்ட கேள்வி.
இந்தக் கேள்வி இருவரிடமும் வெவ்வேறு வடிவத்தில் வைக்கப்படுகிறது. ‘இளைய இசையமைப்பாளர்களைப்
பாராட்டாதது ஏன்?’ என்பது இளையராஜாவிடம் வைக்கப்படும் கேள்வி.
அவர் சொல்லியுள்ள பதில்
இது; ‘அவர்கள் ஒரு படத்திற்கு இசை அமைத்துவிட்டார்கள் என்பது ஒரு தகுதி அல்ல. அதை நீங்கள்
பாராட்டுகிறீர்கள் என்பதும் ஒரு தகுதி அல்ல. அதற்காக நான் பாராட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பும்
சரி அல்ல. நீங்கள் ஒரு பாடலைக் கேட்பதைப்போல நான் கேட்பதில்லை. அதில் எவ்வளவோ விஷயங்களும்
உள்அர்த்தங்களும் உள்ளன. உண்மையிலேயே விஷயங்களை உள்ளடக்கிய பாடலை ஒரு உண்மைக்கலைஞனால்
பாராட்டாமல் இருக்கமுடியாது. நீங்கள் பாராட்டிய விஷயங்கள் எல்லாம் ஒரு மாதத்திற்குமேல்
தாங்கமாட்டேனென்கிறது என்றால் அதை நான் எப்படிப் பாராட்டுவது?ஏன் பாராட்டவேண்டும்?
ஒன்று……….அந்த இசையில்
எனக்குத் தெரியாத ஒன்றை அடடா இதை நான் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே என்றும் இந்த
ஐடியா எனக்கு வராமல் போய்விட்டதே என்றும் என்னை எண்ணவைக்கவோ கற்றுக்கொள்ள வைக்கவோ வேண்டும்.
இதுவரை இசைமேதைகள் தொடாதவற்றைத் தொட்டிருக்கவேண்டும்.
நான் இந்த ஜன்மம் முழுதும்
கற்க வேண்டிய விஷயங்கள் நம் முன்னோர்களின் இசையில்தான் இருக்கிறது. அவர்களை வணங்கி
வழிபடுவதே எனக்குப் புண்ணியம். அது இந்தத் தலைமுறைக்கு ஆகிற காரியமா என்ன?’-
-இதுதான் பல இசை விரும்பிகளால்
இசைஞானி, ராகதேவன், இசைக்கடவுள் என்று கொண்டாடப்படுகிறவரின் பதில்.
கேள்வி ரொம்பவும் எளிமையானது.
‘உங்களுக்குப்பின் வந்த இளைய இசையமைப்பாளர்களை நீங்கள் ஏன் பாராட்டுவதில்லை? என்ற கேள்வியிலேயே
–
“தம்பி நீ நல்லா வருவே.
இன்னமும் நீ தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சுக்கணும். முயற்சி
பண்ணு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” என்று இளையவர்களை முதுகில் தட்டிக்கொடுத்தலோ
ஊக்கப்படுத்துதலோ உற்சாகப்படுத்துததலோ அடங்கியிருக்கிறது.
இளையராஜா போன்ற மூத்த இசையமைப்பாளர்கள்
இளைய இசையமைப்பாளர்களுக்கும் இளைய கலைஞர்களுக்கும் செய்யவேண்டிய மிக மிக சாதாரண கைங்கர்யம்
இது என்பது மட்டுமல்ல, அதற்கான கடமையும் இளையராஜா போன்றவர்களுக்கு இருக்கிறது.
புகழ்பெற்ற மூத்த கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதும்,
பணம் சம்பாதிப்பதும், எந்நேரமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கவேண்டுமென நினைப்பதுவும்
மட்டுமே அவர்களின் சமூகப் பங்களிப்பு ஆகிவிடமுடியாது.
தங்களுக்குப் பின்னே தங்கள் துறையில் தங்களைத்
தொடர்ந்துவரும் இளையவர்களை முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் தட்டிக்கொடுத்து
அவர்களை ஊக்குவிப்பதும்கூட அவர்களுடைய சமூகப் பங்களிப்புகளில் ஒன்றுதான்.
சமூகப் பங்களிப்பு மட்டுமல்ல,
கடமையும்கூட. இதற்காக யாரும் ‘நீங்கள் பள்ளிகளை
ஆரம்பித்து இளைய கலைஞர்களை உருவாக்குங்கள்’ என்று சொல்லவில்லை.
வளரத் துடிக்கும் கலைஞர்களைக்
குறைந்தபட்சம் வசைபாடுவதும் கேலி பேசுவதும் புறம் சொல்வதும், என்னைப்போல முடியுமா என்று
சவால் விடுவதும், ‘உன்னிடம் என்ன இருக்கிறது?’ என்று நையாண்டி செய்வதும், எனக்குத்
தெரியாத ஒன்றை நீ தந்துவிட்டாயா? என்று அகம்பாவத்துடன் வினவுவதும் ‘இந்த ஐடியா எனக்கு
வராமல் போய்விட்டது என்று நான் ஒன்றும் நினைக்கவில்லையே’ என்று ஏகடியம் செய்வதும் எந்தவகையில்
சேர்த்தி என்பதே புரியவில்லை.
இத்தகைய ஆணவப்போக்கு நல்லதொரு
கலைஞருக்குத் தகுமா என்பதுதான் கேள்வி.
விஸ்வநாதனுக்குப் பிறகு
திரைப்படத்துறைக்கு வந்து விஸ்வநாதனின் இடத்தைப் பிடித்தவர் என்று கருதப்படும் இளையராஜாவைப்
போலவே இளையராஜாவுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தவர் என்று கருதப்படும் ஏ.ஆர்.
ரகுமானிடம் இதே கேள்வி அல்லது இதே தொனியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் என்ன பதில்
சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.
ரகுமான் சொல்கிறார்….”இப்ப
வர்ற இளைஞர்களுக்கு நிறையத் திறமை தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கறதுக்கு
அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ………….இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா
உழைச்சா அதில் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்.”- இது ரகுமான்!
இன்னொரு சிக்கலான, அவரது
ஈகோவைத் தூண்டிவிடுகிறமாதிரியான அடுத்த கேள்வி வைக்கப்படுகிறது. “உங்க இடத்தை யார்
பிடிக்கமுடியும்னு நினைக்கறீங்க?”
ரகுமான் சொல்கிறார்; “யார்
நினைச்சாலும் பிடிக்கமுடியும். என் இடத்தைப் பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த
அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும்
மக்களுடைய அலைவரிசையும் ஒண்ணா சிங்க் ஆச்சுன்னா நாளைக்கு என் இடத்தில் நீங்க இருப்பீங்க.
மக்கள் கேட்டா அது நல்ல பாட்டு. அவங்க கேக்கலைன்னா அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான்.
இதை மனசுல வச்சுட்டுத்தான் வேலைப் பார்க்கறேன்”
கேள்வி கேட்டவர் அவ்வளவு
சுலபமாக ரகுமானை விடுவதாக இல்லை.
அவரது அகங்காரத்தை எப்படியாவது
சிறிய அளவிலாவது சீண்டிப் பார்த்துவிட முடியுமா என்பதற்கேற்பவே அடுத்த கேள்வியையும்
வீசுகிறார். “இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்கறது கஷ்டமாச்சே?”
“நானும் மனுஷன்தான். எனக்கும்
தடுமாற்றங்கள் வரும். ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புக்களைப் பத்தி யோசிக்கும்போது
நாமெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப்போட்டுட்டு வேலைப் பார்க்கக்
கிளம்பிடுவேன்” என்கிறார் ரகுமான்.
ஆக, எத்தனைக் கேட்டும்
அங்கே கர்வத்துக்கோ அகங்காரத்திற்கோ ஆணவத்திற்கோ இடமில்லை. துளியும் இடமில்லை.
உலக அரங்கில் வெற்றிகரமாக
வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு இசைக்கலைஞன், ரசிக வட்டம் மட்டுமின்றி உலகின் வணிக எல்லைகளிலும்
இளவரசனாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன்- எத்தனை இலகுவாகத் தன்னுடைய இயல்பை பாசாங்கற்று
வெளிப்படுத்துகிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது.
‘நிலை உயரும்போது பணிவுகொண்டால்
உலகம் உன்னை வணங்கும்’ என்ற கண்ணதாசனின் வரி நினைவுக்கு வந்து செல்கிறது. Hats off
Rahman!
இருவருடைய மனோநிலைகளையும்
இங்கே பேசும்போது சிலருக்குக் கோபம் வரும். மிக அதிகமான கோபமே வரும். பலருக்கு இளையராஜாவுடன்
ரகுமானைச் சேர்த்துப் பேசுவதே பிடிப்பதில்லை. இளையராஜா எத்தனைப் பெரியவர்? அவருக்குப்
பக்கத்தில்போய் இந்தப் பையனை நிற்கவைப்பதா? என்று பொருமுகிறார்கள்.
அவர்கள் ஒரு விஷயத்தை சௌகரியமாக
மறந்துவிடுகிறார்கள். இளையாராஜாவுக்கு முன்னால்
ஒரு மிகப்பெரிய முன்னோர்கள் வரிசையே இருக்கிறது- இளையராஜாவுக்கு முன்னால் எம்எஸ்வியே
இருக்கிறார். அவருக்கும் முன்னால் கே.வி.மகாதேவன் இருக்கிறார். அந்த முன்னோர்கள் வரிசையில்
கொஞ்சமும் ஆசூயை இல்லாமல் இளையராஜாவை நிறுத்துகிறார்கள். சிலர் அப்படி. இன்னும் சிலரோ
இதைவிடவும் மோசம். இளையராஜாவை ஒரு சுயம்பு என்று எண்ணுகிறார்கள். தமிழ்த்திரை இசையைக்
கண்டுபிடித்தவரே இளையராஜாதான். தமிழகத்திற்கும் உலகிற்கும் இசையை அறிமுகப்படுத்தியவரே
இளையராஜாதான் என்று கண்மூடித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இசை என்பது இளையராஜா
உலகிற்கு அளித்த கொடை என்பதாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர் ரசிகர் ஒருவரின்
ஞாபகம் வருகிறது. தொலைபேசித் தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அது.
எம்ஜிஆருக்கு உடல்நிலை மோசமாகி குணப்படுத்துவதற்காக அமெரிக்கா கொண்டுசெல்வதாகப் பத்திரிகையில்
செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்த எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் சொன்னார். “இவனுங்க எதுக்காக
எங்க தலைவரை இப்படியெல்லாம் பண்றானுங்கன்னு தெரியலை. அவருக்கு என்ன ஆயிடப்போகுது? சாவா
வந்துரும்? சாதாரண மனுசப்பிறவியா இருந்தா ஏதாவது ஆகும். எங்க எம்ஜிஆர் தெய்வம். அவருக்குப்போய்
என்ன ஆயிடும்?”
கிட்டத்தட்ட இந்த ரசிகரின்
மனநிலையில்தான் இணையத்தில் உலா வரும் பல இளையராஜா ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான்
சோகம். அந்த எம்ஜிஆர் ரசிகராவது பரவாயில்லை. அவருடைய படிப்பறிவு குறைவு. இணையத்தில்
உலா வரும் பெரும்பாலான இளைஞர்கள் நன்கு படித்தவர்கள். படிப்பிற்கும் வேறு பல விஷயங்களுக்கும்
சம்பந்தமே இல்லை என்பது இவர்களாலும் உறுதிப்படுகிறது. இவர்களின் அசைக்கமுடியாத சித்தாந்தம்
இதுதான். ‘இசை என்றாலேயே இளையராஜாதான். அதற்கு முன்னும் யாருமில்லை; பின்னும் யாருமில்லை’.
பாவம் இவர்கள்.
காலம் இவர்களுக்காகவெல்லாம்
காத்துக்கொண்டும் இருப்பதில்லை. இரக்கப்படுவதும் இல்லை. அதுபாட்டுக்குத் தேவையான சமயத்தில்
ஒவ்வொருவரையும் தேவையான இடத்தில் தேவையான உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்துக்கொண்டே
இருக்கிறது. அது பாட்டுக்கு நடைபோட்டுக்கொண்டே இருக்கிறது.
விஸ்வநாதனுக்குப் பிறகு
இளையராஜா வந்தார். இளையராஜாவுக்குப் பிறகு ரகுமான் வந்தார். ரகுமானுக்குப் பிறகு இன்னொருவர்
வருவார். இப்படித்தான் நடைபோடும் காலம். இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் ஒரே இடத்தில்
தேங்கி நிற்கவும் கூடாது. நின்ற இடத்திலேயே நின்று ‘குதித்துக்கொண்டிருக்கவும்’ கூடாது.
இளையராஜா குமுதத்தில் தெரிவித்திருந்த
கூற்றுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் வந்ததாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இணையத்தில்
எந்தவிதமான எதிர்ப்பும் வரவில்லை. மற்ற எல்லா விஷயங்களுக்கும் வீடுகட்டி சதிராடி கும்மியடித்து
கூறுகட்டும் பதிவர்கள் இளையராஜாவின் இத்தகைய அடாவடித்தன பேச்சுக்கு வாயையே திறக்கவில்லை.
இதையே ரகுமானோ அல்லது ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு புறம்போக்கோ சொல்லியிருந்தாலோ இந்நேரம்
நாடு கடத்தும் அளவு படுத்தி எடுத்துவிட்டிருப்பார்கள்.
விகடனில் ரகுமானின் பேட்டி
வருகிறது. அதே பேட்டி விகடனின் இணையத்திலும் வருகிறது. விகடன் இணைய இதழ் பின்னூட்டத்தில்
இதற்கான கருத்துக்கள் நூற்றுக்கும் மேல் வந்துள்ளன. அவர்களில் யாரோ ஒருவர் ரகுமானையும்
இளையராஜாவையும் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் போலும். அவ்வளவுதான். கிளர்ந்து எழுந்துவிட்டார்கள்
இளையராஜாவின் ரசிகர்கள்.
‘நான் இளையராஜாவின் இசையைக்
கேட்டு வளர்ந்தவனில்லை, வாழ்ந்தவன். என் இனிய பொன் இரவுகளை அவரது இசை மட்டுமே உருவாக்கமுடியுமென
நான் நம்புகின்றேன். ஒரு இசை மேதையைப் புகழ இன்னொரு இசைமேதையைக் கேவலப்படுத்துவது என்ன
நியாயம்?’ – என்று குமுறுகிறார் ஒருவர். இவருக்கு எந்த பதிலும் சொல்லத் தேவையில்லை.
ஏனெனில் இவரே சொல்லிவிட்டார். நான் இளையராஜா இசையைக் கேட்டு வளர்ந்தவனில்லை- ‘வாழ்ந்தவன்.’
ஆக இளையராஜா இசையை மட்டுமே கேட்டுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த ஒரு காரணத்தினாலேயே
இவர் இன்னமும் வளரவே இல்லை.
அவருக்கான பொன் இரவுகளை
எப்படி இளையராஜா மட்டுமே உருவாக்கமுடியுமென அவர் நம்புகிறாரோ அப்படியே இன்னொருத்தருக்கான
பொன் இரவுகளை லதா மங்கேஷ்கர் மட்டுமே உருவாக்கமுடியும். கிஷோர்குமார் மட்டுமே உருவாக்கமுடியும்.
முகமதுரபி உருவாக்கமுடியும். பி.சுசீலா உருவாக்கமுடியும். டிஎம்எஸ் உருவாக்கமுடியும்.
கேவிமகாதேவன் உருவாக்கமுடியும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி உருவாக்கமுடியும். வெறும் விஸ்வநாதனே
உருவாக்கமுடியும். பிபிஎஸ் உருவாக்கமுடியும். கேஜே யேசுதாஸ் உருவாக்கமுடியும். ஏ.ஆர்.ரகுமான்
உருவாக்கமுடியும். ஏன் இன்றைய ஹாரிசும் ஜிவிபிரகாஷ்குமாரும்கூட உருவாக்கமுடியும்.
அட அதெல்லாமில்லை என்றாலும்
யாரோ ஒரு சரளாவோ கோமளாவோ கூட உருவாக்கமுடியும். ஆக, இது ஒன்றும் பிரச்சினை இல்லை.
இன்னொருவர் சொல்கிறார்;
‘அடக்கம் தனிமனித குணம். அதற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. 1976-ல் வந்த இளையராஜாவின்
பெருமையை இன்றும் கேட்டு ரசிக்கமுடியும். அவரது இசையமைப்பை வெல்ல இன்னொருவன் இன்றுவரை
தமிழகத்தில் இல்லை. இனி ஒரு காலத்தில் வரலாம்.’
அடக் கஷ்டகாலமே, இன்றைய
புதிய பாடல்களுக்கான நிகழ்ச்சிகளைத் தவிர பழைய பாடல்களை ஒளிபரப்புவதற்கென்றே ஏகப்பட்ட
நிகழ்ச்சிகள் பொதிகை, ஜெயாடிவி, ஜெயாபிளஸ், ராஜ்டிவி, கேப்டன், வசந்த், மெகாடிவி, கலைஞர்,
விஜய் என்று ஏகப்பட்ட சேனல்களில் போதும் போதும் என்னுமளவுக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கித்
தள்ளிக்கொண்டிருக்கிறார்களே.
போதாததற்கு வெறும் பழைய
பாடல்களை போடுவதற்கென்றே ஏறக்குறைய நான்கோ ஐந்தோ தனிச்சேனல்களே உள்ளனவே. முரசு, ஜெயா
மியூசிக் என்று. ஏதேதோ பெயர்களில்… இவற்றில் போடப்படும் பாடல்களை கவனித்திருக்கிறீர்களா?
எல்லாமே இளையராஜா காலத்துக்கு
முற்பட்டவை.
அந்தப் பாடல்களுக்கு இருக்கும்
மவுசையும் புகழையும் யாரால் சீர்குலைக்க முடியும்? அதனால்தானே உங்களைப் போன்றவர்களுக்குப்
புரியட்டும் என்று கங்கை அமரனும் இளையராஜாவும் வாய்ப்புக்கிடைக்கும் இடத்திலெல்லாம்
“நாங்கள் இன்றைக்கு
வாழும் வாழ்க்கை இந்த பங்களா இந்தக்
கார் இந்த வசதி இவையெல்லாம் விஸ்வநாதன் போட்ட பிச்சை” என்றல்லவா சொல்கிறார்கள்?
இளையராஜா இன்னமும் ஒருபடி
மேலே போய் “விஸ்வநாதன் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எங்களின் இன்றைய சாப்பாடு” என்றல்லவா
சொல்கிறார்!
இவற்றையெல்லாம் கேட்டபிறகுகூட
இவற்றிலுள்ள தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் சவடால் பேச்சுப் பேச உங்களால் எப்படி
முடிகிறது?
அதுவும் நீங்கள் ‘பதில்’
சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் என்ன அனாமத்து ஆசாமியா?
உலக அரங்கின் உச்சியிலே
நிற்கும் ஒரு இந்தியன் – இசைத் தமிழன்!
ஏ.ஆர்.ரகுமானின் ஒரு இசை
ஆல்பம் வருகிறது என்றால் உலகின் பல பகுதிகளிலே மக்கள் முதல்நாளே கியூவில் நின்று அதனை
வாங்குகிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் ஒரு படம்
ஒப்புக்கொள்கிறார் என்றால் எத்தனைக் கோடிகள் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
திரைப்படத் துறையிலிருந்து
ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.
அது இரவு நேரம்…. ரகுமானைப்
பார்ப்பதற்காக ஒரு நண்பர் போயிருக்கிறார். அங்கு சென்ற நண்பர் அங்கே பார்த்த காட்சியைப்
பார்த்ததும் திகைத்துப் போயிருக்கிறார். காரணம் அந்த இரவு நேரத்தில் கையில் தலையணையுடன்
இரண்டொருவர் காத்திருக்க……..சிலபேர் அங்கிருந்த சோபாக்களில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்களாம்.
இவ்வாறு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்தனைப் பேருமே இந்தியாவின், தமிழின்,
தெலுங்கின் மிகப்பெரும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!
அடுத்து நம்மைக் கூப்பிடமாட்டாரா,
அடுத்து நம்முடைய பாடல் இசை வடிவம் பெறாதா…அடுத்த ஒப்புதல் நமக்குக் கிடைக்காதா என்று
காத்துக்கிடக்கும் கூட்டம் அப்படிப்பட்டது!
-இப்படி ஒரு கமர்ஷியல்
டிமாண்டும், நேரமின்மையும், உச்சகட்ட புகழும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை பவ்வியத்துடன்
எவ்வளவு பணிவுடன் பேசுகிறார் என்பதைப் பாருங்கள்.
இளையராஜாவின் பணிவும் பவ்வியமும்
வெறும் விஸ்வநாதன்-கண்ணதாசனுடன் முடிந்துவிடுகிறது. இவர்கள் இருவரைத்தவிர அவர் யாரையுமே
மதிப்பதுமில்லை. மரியாதையுடன் பார்ப்பதுமில்லை.
வேறொரு வாசகர் விகடன் தளத்தில்
இன்னொரு கருத்தை நினைவு கூர்ந்திருந்தார். ‘ஒரு பொங்கல் சன்டிவி நிகழ்ச்சியில் இளையராஜா
சொன்னார். “எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று கியூவில் நிற்கிறார்கள். வேறு
கதியே இல்லை. இன்றைக்கு இசைத்துறையில் கிடையாது. அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை.
அதனால் நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி. வேறு நாதியே
இல்லை” அன்றிலிருந்து அவர் மீதிருந்த மரியாதையே போய்விட்டது’ என்று சொல்லியிருந்தார்
அந்த வாசகர்.
உடனே அடக்கம் தனிமனித குணம்
அதற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்று ‘அடக்கமின்மைக்கு’ ஆதரவாய்க் களம் இறங்க
சிலர் ஓடி வருகிறார்கள்.
அடக்கமில்லாத ‘திறமையை’
இந்த உலகம் நிச்சயம் கொண்டாடும்.
எப்போது தெரியுமா?
தொடர்ச்சியான வணிகவெற்றிகள்
இருந்துகொண்டே இருக்கும் சமயம்வரை.
வணிக வெற்றிகளின் பரபரப்பு
என்றைக்கு ஓய்கிறதோ அன்றைக்கு அடக்கமின்மை, ஆணவம், கர்வம், தலைக்கனம், அகங்காரம் இம்மாதிரியான
கல்யாண குணங்கள் கொண்ட ஆசாமி எத்தனைத் திறமையானவராக இருந்தாலும், எத்தனை சாதனைகள் செய்தவராக
இருந்தாலும், எத்தனைக் காலம் ஆட்சி புரிந்தவராக இருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலை
இல்லாமல் காலச்சுழற்சியின் கடைசி முனைக்குத் தூக்கிக் கடாசிவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கும்.
இன்னொரு அதிபுத்திசாலி
‘மன்மோகன் சிங்கிற்குக்கூடத்தான் அடக்கமும் பொறுமையும் இருக்கிறது. அதற்காக அவரை இந்தியாவின்
சிறந்த பிரதமர் என்று சொல்லமுடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்.
இவர்களுக்கெல்லாம் பணிவு
பண்பு இவை பற்றியெல்லாம் கவலைக் கிடையாது. கவலைக்கிடையாது என்பது மட்டுமல்ல; அவையெல்லாம்
தேவையுமில்லை என்று நினைக்கிற கூட்டம்தான் இவர்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது.
‘திறமை’ இருக்கிறவன் என்றால் டெல்லியில் ஐந்துபேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழித்துக்கொன்றார்களே
அவர்களில் ஒருவனுக்கு ஏதோ ஒரு ‘திறமை’ இருக்கிறது என்றால் அவனை விட்டுக்கொடுக்காமல்
கொண்டாடவேண்டும் என்பது இவர் கட்சி போலும்..
நாம் இளையராஜாவுக்கு வருவோம்.
இளையராஜாவைப் பற்றி நினைக்கும்போது
செரினா வில்லியம்ஸ் பற்றிப் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. செரினா உலகின்
நம்பர் ஒன் டென்னிஸ் சாம்பியன். பதினைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்குச் சொந்தக்காரர்.
அவரை ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதியில் தோற்கடித்தவர் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் என்ற இருபது வயதான
அமெரிக்க வீராங்கனை. அவர் செரினாவைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “ஆஸ்திரேலிய
ஓபன் டென்னிஸ் போட்டியில் செரினாவை நான் தோற்கடித்த பிறகு அவர் என்னுடன் பேசியது கிடையாது.
மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்.
சக வீராங்கனைகளுடன் அவர்
நன்கு பழகக்கூடியவர் என்று மக்கள் நினைக்கலாம். அதில் எந்தவித உண்மையும் கிடையாது.
அவர் கர்வம் பிடித்தவர். ஆஸ்திரேலிய போட்டியில் தோற்றபிறகு அவர் ஒரு வார்த்தைகூட என்னிடம்
பேசவில்லை. சக வீராங்கனை என்ற முறையில் ஹாய் என்றுகூட சொல்லவில்லை. என்னை ஏறிட்டுக்கூட
பார்க்கவில்லை. அதன் பின்னர் நாங்கள் இருவரும் அறையைக்கூட ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளவில்லை.
சமூக வலைத்தளத்தில்கூட என்னைப் பின்பற்றுவதைத் தவிர்த்துவிட்டார். தோல்விக்குப் பின்னர்
சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த அவர் என்னை உருவாக்கியதாக தெரிவித்திருந்தார்.
அதற்கு ‘என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்று நான் பதிலளித்திருந்தேன். ஆட்டோகிராபுக்காக
நாள் முழுக்க நான் காத்திருந்தேன். நான் காத்திருந்த இடத்தை மூன்று முறை கடந்து சென்ற
அவர் போஸ்டரில் கையெழுத்துப் போடவில்லை” என்றிருக்கிறார்.
செரினா வில்லியம்ஸின் இந்த
குணங்கள் இளையராஜாவிடமும் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.