Friday, December 31, 2010

தமிழ் மணம் தேர்வில் ‘அமுதவன் பக்கங்கள்!’

தமிழ் மணம் போட்டியின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுக்கு என்னுடைய இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. இரண்டு பதிவுகளுக்கும் ஓட்டுப்போட்டவர்களுக்கும் மறுபடி ஓட்டுப்போட இருக்கின்றவர்களுக்கும் எனது நன்றி. உண்மையில் இந்தப்போட்டியில் நான் எழுதிய வேறு சில பதிவுகளைத்தான் சிபாரிசு செய்யவிருந்தேன். ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் டெம்ப்ளேட்டை மாற்றப்போக தமிழ்மணம் இணைப்பிற்கான சுட்டியும் அத்துடன் போய்விட்டது. பின்னர் என்ன செய்தும் பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. உங்கள் பதிவு ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வருகிறதேயல்லாமல் இணைக்க முடியவில்லை.அதனால் திரைப்படம் பற்றியவை அல்லாத வேறு பதிவுகளைக்கூட திரைமணத்தில் இணைத்துப் பின்னர்தான் தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தது. இந்தக் காரணத்தால் ரெய்கி பற்றிய என்னுடைய ஒரு பதிவும், தற்காலத்தமிழ் இலக்கியம் பற்றிய இன்னொரு பதிவையும் தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கப்படாததால் அவர்கள் அனுப்பிய பட்டியலில் இந்த இரண்டு கட்டுரைகளும் சேர்க்கப்படவில்லை.

உண்மையில் மாற்று மருத்துவம் பற்றிய ரெய்கி கலைக்கான கட்டுரை போட்டியில் இடம்பெற வேண்டும் என்று நிறைய விரும்பினேன். பரிசு பெற வேண்டும் என்பதற்காக அல்ல; நிறையப்பேரைச் சென்றடையுமே என்பதால்.

போட்டியில் சேர்க்க நினைத்த மூன்று கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகளைச் சேர்க்க முடியாததால் வேறு இரண்டு கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். அவற்றில் இரண்டு கட்டுரைகள் இரண்டாவது கட்டத்துக்கு வந்துள்ளன.
ஒன்று; உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக மாற்றிய கலைஞரின் டெக்னிக்.

இரண்டு; இளைய ராஜாவா, ரகுமானா...?
இந்த இரண்டு கட்டுரைகளுமே அவசியம் நிறையப்பேரைச் சென்றடைய வேண்டிய விஷயங்கள் கொண்டவை என்றே கருதுகின்றேன்.

குறிப்பாக கலைஞர் தமது நுண்ணிய அறிவாற்றலால் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகுகிறார் என்பதும், எவ்வாறு தாம் விரும்புவதற்கேற்ப குயுக்தியாக காய்களை நகர்த்தி தந்திரமாகத் தம்முடைய விருப்பத்திற்கேற்ப அவற்றை மாற்றியமைத்து மற்றவர்களையும் அதனை ஒப்புக்கொள்ள வைக்கிறார் என்பதையும் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். கலைஞரைப் பற்றித் துல்லியமாக அறிந்துகொள்ள இந்தப் பதிவு உதவும்.

அடுத்ததாக, ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ என்ற கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்துகொண்டிருந்த ‘பிலிமாலயா’ இதழில் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான கட்டுரைகளை எம்.ஜி.வல்லபனும் நானும் எழுதிவந்தோம். அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களைப்பற்றி சற்றே வித்தியாசமான கட்டுரைகளை மிகச்சிலர்தான் எழுதிவந்தோம். இன்றைய நிலை போல் நிறையப்பேர்கள் எழுதிக்கொண்டிருக்கவில்லை. இன்றைய இணையத்திலும் சில சிறு பத்திரிகைகளிலும் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான பார்வைகளை நிறையப்பேர் முன்வைக்கிறார்கள். ஆனாலும் சில அடிப்படையான விவரங்களில் அவர்கள் மேலோட்டமாக மட்டுமே கருத்துச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாக கடந்து சென்றுவிடுவதைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றில் ஒன்று திரை இசைத்துறை. திரை இசையைப் பற்றி ஷாஜி என்பவர் நிறைய எழுதுகிறார். அதுகூட அவர் மலையாளத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி தமிழில் மொழி பெயர்க்கப்படும் எழுத்துக்களாகத்தான் இருக்கின்றன. இசையைப் பற்றியும் திரை இசையைப் பற்றியும் அவருக்கு நிறையத் தெரிந்திருக்கிறதே தவிர, அவர் எடுக்கும் சார்பு நிலைகளை அவரால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்தான் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மகத்தான ஒரு பாடகரையெல்லாம் மிக மோசமாக அவரால் கேவலப்படுத்திவிட முடிகிறது. இது ஒருபுறமிருக்க, இசை என்றதும் அதுவும் திரைப்பட இசை என்றதும் இது ஏதோ இளையராஜாவிலிருந்துதான் தொடங்கியது என்பது போன்ற ஒரு பிரமை, அல்லது தவறான ஒரு கற்பிதம்-இன்றைய பெரும்பாலானோருக்கு இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு யார் மார்க்கெட்டில் இருக்கிறார்களோ அவர்களையும், அவருக்கு முன்னால் வரிசையில் யார் இருந்தார்களோ அவர்களையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது என்ற நோய் பெரும்பாலானவர்களைப் பீடித்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நோய் தமிழர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேகமான நோய்தான். மிகச்சிறந்த பாடகர் என்றால் அது எஸ்பிபி மட்டும்தான். டி.எம்.சௌந்தரராஜனை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். மிகச்சிறந்த பாடகி என்றால் அது சித்ராவும் எஸ்.ஜானகியும்தான். பி.சுசீலாவை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சி செய்யவும் மாட்டார்கள். தங்கள் எதிரில் என்ன இருக்கிறதோ அது மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும். அதுதான் வரலாறு; அதுதான் சாதனை; அதுதான் உலகம். இந்தக் கண்ணோட்டம் சராசரி ரசிகனுக்கு சரியாயிருக்கலாம். பொதுவில் வந்து நின்று பேசவோ எழுதவோ செய்கிறவன் கொஞ்சமாவது அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். செயற்பட வேண்டும்.

இந்தப் புரிதல் எல்லாம் இல்லாமல் இருப்பதால்தான் இயக்குநர் என்றால் மணிரத்தினம் மட்டுமே என்ற கண்ணோட்டத்திலேயே இவனால் இருக்க முடிகிறது. பாலச்சந்தரையோ ஸ்ரீதரையோ அவர்களுக்கும் முன்னால் இங்கே சரித்திரம் படைத்தவர்களையோ திரும்பிப் பார்க்கும் பக்குவமோ பட்டறிவோ இவனுக்கு இல்லை. அதனைத் தேடிக்கொள்ளவும் விரும்புவதில்லை. தன் முன் இருக்கும் கலைஞர்களில் மட்டுமே ஆரம்பித்து மொத்த விவகாரத்துக்கும் சேர்த்து ஜட்ஜ்மெண்ட் கொடுத்துவிடும் தகுதி தனக்கு இருப்பதாகவே பல விற்பன்னர்களும் நினைக்கிறார்கள். கருத்து மன்னர்களாக உலா வந்து இதனையொட்டியே தங்கள் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதாவது, காங்கிரஸ் என்றால் சோனியா காந்தியும் ராஜிவ் காந்தியும்தான். இந்திரா காந்தியையோ,நேருவையோ கணக்கில் எடுத்துக்கொள்ளும் பக்குவமோ புரிதலோ இவர்களுக்கு இல்லை; அது தேவையும் இல்லை.

இந்த மனப்பிரமையைப் போக்கும் கட்டுரைதான் ‘இளையராஜாவா...ரகுமானா?’ தேவை கருதி கொஞ்சம் பெரிய கட்டுரையாகவே அது நீண்டிருக்கிறது. தயவு செய்து அதனைப் படித்துப் பாருங்கள். தமிழ் மணம் போட்டியினால் நிறையப்பேரின் கவனம் கவரும் கட்டுரையாக அது அமையும் என்று நம்புகின்றேன். அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

போட்டியின் 20-ம் பிரிவான ‘உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான பதிவுகள்’ என்ற பட்டியலில் ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ கட்டுரையை நீங்கள் பார்க்கலாம்.

Tuesday, December 14, 2010

தற்காலத் தமிழ் இலக்கியம்- தேவை புதிய பார்வை!
தமிழுக்கு நிறைய செய்து வருவதாக கலைஞர் சொல்லிவருகிறார். இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸின் போக்கிற்குத் தம்மை ஒடுக்கிக் கொண்டுவிட்டார் என்பதைத் தவிர தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் தொண்டுகள் எந்த ஆட்சியாளரும் செய்யாதவை என்பதை மறுப்பதற்கில்லை. வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, பெங்களூரில் வள்ளுவர் சிலை திறப்பிற்கான முயற்சி, தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம், செம்மொழி உலகத்தமிழ் மாநாடு, தஞ்சைக் கோவிலின் ஆயிரமாவது விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்கின்ற அணிகலன்கள் தமிழன்னைக்குக் கலைஞரால் அணிவிக்கப்பட்டுள்ளன
ஆனால் –
இது ஒரு பெரிய ‘ஆனால்’-

இவை அனைத்துமே – நூலகம் ஒன்றைத் தவிர – தமிழனது பழம்பெருமைகளைப் பேசும் முயற்சிகளுக்கான அடையாளங்கள்தாமே தவிர இந்த நூற்றாண்டின் - இனிவரப்போகும் நூற்றாண்டுகளுக்கான தமிழை அடையாளப்படுத்தும் , பிரதிநிதித்துவப் படுத்தும் சான்றுகளோ அடையாளங்களோ அல்ல .

கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

தமிழுக்குச் செந்தமிழ்த் தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கன்னடமும் தெலுங்கும் ஒரேயொரு ‘சாதாரணக் கடிதம்’ மூலம் செம்மொழித் தகுதியைப் பெற்றுவிட்ட காட்சியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம், இந்த நாட்டின் அரசியல்.
அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல்.......தமிழகத்தைப் பொறுத்தவரை வேறு மாதிரியான அரசியல். இந்த அரசியல் மொழி விவகாரங்களிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று – திராவிட இலக்கியம், மற்றொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.
தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி ; அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் , தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் , தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சரி , இன்னொரு பெரிய தவறையும் செய்துவருகின்றன.
தமிழை வளர்ப்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் – அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா?

சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக்கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றிய ஆய்வுகள் , இது பற்றிய நூல்கள், இது பற்றிய கருத்தரங்குகள் , இது பற்றிய கலந்தாய்வுகள் , இது பற்றிய இலக்கியக் கூட்டங்கள் – இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதாம். இவற்றைக்கூட நமக்குள் பழம்பெருமைப் பேசும் நடவடிக்கைகளைத்தாம் செய்கிறார்களே தவிர இவற்றை மற்ற மொழிகளுக்கோ , உலகுக்கோ , குறைந்த பட்சம் ஆங்கிலம் மூலம் அனைத்துத் தரப்பினர்க்கோ கொண்டு சென்று சேர்க்கும் எவ்விதமான முயற்சிகளும் செய்யப்படுவதாகத் தகவல் இல்லை.

இவை ஒருபுறமிருக்க ,தொல்காப்பியத்தில்ஆரம்பித்துபுறநானூறு,அகநானூறு,சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிருதிருமுறை, நளவெண்பா, முத்தொள்ளாயிரம் ,என்று வருவார்கள். இன்னும் கொஞ்சம் ‘தம்’ பிடித்து பாரதியாரைத் தொடுவார்கள். அங்கேயே ஆணி அடித்தாற்போல் நின்றுவிடுவார்கள் – இலக்கிய வாதிகளில் இவர்கள் ஒருவகை.

இன்னொருவகையினரோ தமிழரின் பெருமை, சங்க இலக்கியம், திருக்குறள் என்று ஆரம்பிப்பார்கள். கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியத்தையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மனப்பாடமாகச் சொல்லிவிட்டு பாரதிதாசனிலிருந்து ஒரேயொரு அங்குலம்கூடக் கீழே இறங்கிவர மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பது பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது. பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை!

இந்த இரண்டாவது கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. இருபது இருபத்தோறாம் நூற்றாண்டைப் பற்றியோ தற்காலத்தமிழுலகம் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது-

தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பாடப்புத்தகங்களை விட்டு வெளியே வந்துதான் தமிழைத் தேடுகிறார்கள். இல்லாவிட்டால், இத்தனை வார, மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன? இத்தனை நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன...?
தமிழை – தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா எல்லாக் காலத்துக்கும் பரிமாறிக்கொண்டிருப்பது? “சங்க இலக்கியத்தில் என்ன இல்லை?” என்பார்கள்.
உலகம் புதிது; ஒவ்வொரு நாளும் புதிது ; தினசரி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்‘ என்று மனிதர்களைச் சொல்வதும் அதற்காகத்தான். எல்லாமே புதியதாய் வந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழில் மட்டும் வெறும் பழையதுதான் என்று சொல்லிக்கொண்டிருப்பது எந்தளவு புத்திசாலித்தனம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி; சாதாரணக் கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி, வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள்...! அதுவும் ‘இன்றைய’ படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளையும் முந்தைய படைப்பாளிகளையும் சேர்த்துத்தான் எல்லா மொழிகளும் கொண்டாகின்றன – தமிழைத் தவிர!

மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில், வங்காளத்தில் இந்த நிலைமைதான் இருக்கிறது. தமிழில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட ‘இன்றைய’ படைப்பாளிகளுக்குத் தரப்படுவதில்லை.

1)ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்க வேண்டியுள்ளது.

2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்க வேண்டியுள்ளது.

3)ஒரு இலக்கியவாதி புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்க வேண்டியுள்ளது.

தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு தமிழைப் பள்ளி கல்லூரிகளைத் தாண்டி வீட்டுக்குள்ளே கொண்டுசென்று வாழவைத்தவர்கள் யார்?

கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா?

செம்மொழி மாநாட்டில் அந்திகீரனார்,பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கள் அமைத்தபோது, கல்கி, அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயர்களில் அரங்கங்கள் வேண்டாமா ?

செம்மொழி மாநாட்டில் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இடம் என்ன? சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்-73, மொழியியல்- 51, இலக்கணம்- 46, ஒப்பிலக்கியம்-39, ஆவணப்படம்-1, என்ற வரிசையில் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிப் படிக்கப்பட்ட கட்டுரைகள் வெறும் மூன்று . மூன்று மட்டுமே!..விளங்குமா படைப்பிலக்கியம்..?

அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்பிலக்கியம் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; கனிமொழி படைப்புக்கள் பற்றி மூன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்; அகிலன் கல்கி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கண்ணதாசன் பற்றியெல்லாம் மருந்துக்குக்கூட ஒரேயொரு கட்டுரைக்கூட இல்லையே...!

இவர்களையெல்லாம் படைப்பிலக்கியவாதிகளாகவே ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது தற்காலப் படைப்பிலக்கியம் பற்றிய சிந்தனேயே அரசுக்கு இல்லையா?
வேறொரு கோணமும் இருக்கிறது. வங்காள மொழிக்கு கலையின் அடையாளமாய் அவர்கள் உலகிற்குக் காட்டுவது சத்யஜித்ரேயை ! கன்னடத்தில் கலையின் அடையாளமாகக்கூட இல்லை, கர்நாடகத்தின் அடையாளமாகவே அவர்கள் காட்டுவது நடிகர் ராஜ்குமாரை ! ஆனால் உலகப்பெரு நடிகர்களுள் ஒருவராக நாம் கொண்டாடவேண்டிய நடிகர் திலகத்தை நாம் நமது கலையின் அடையாளமாகவேனும் சொல்கிறோமா? நேற்று மரித்த நடிகர் விஷ்ணுவர்த்தனுக்கெல்லாம் சிலையும் நினைவு மண்டபமும் அமைத்து உத்தரவிடுகிறது கர்நாடக அரசு. இங்கே என்ன நடக்கிறது? சிவாஜியை ‘ஆருயிர் நண்பர்’ என்று கூட்டங்களில் உருகுவதுடன் நிறுத்திக்கொள்கிறார் கலைஞர்.

‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்று புறப்பட்டுத் தென்றலாய் கோடிக்கணக்கான தமிழர்களின் காதுகளுக்குள் நுழைந்து உணர்வாய் உதிரமாய்ப் படிந்து போனவர் கவியரசர் கண்ணதாசன். கண்ணதாசனையும் ‘ஆருயிர் நண்பர்’ லிஸ்டில் சேர்த்துவிட்டு கண்ணதாசனுக்குத் தரவேண்டிய எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்காமல்தானே இருக்கிறார் கலைஞர்...!
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆங்கிலமும் விஞ்ஞானமும் படித்த இளைய தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா, அந்த வித்தக எழுத்தாளருக்கு அரசு தந்திருக்கும் அங்கீகாரம் என்ன?

தமிழ் என்றால் தொல்காப்பியத்தில் தொடங்கி திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்துக்கு வந்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்கள் நிகழ்த்துவதும், இலக்கிய மலர்கள் தயாரிப்பதுவும், கருத்தரங்குகள், கலந்தாய்வுகள் நிகழ்த்துவதும் இந்தக் கோணத்திலேயே இலக்கியச் சேவையை முடித்துக்கொள்வதுவும் முறையான தற்கால இலக்கியத்தைப் பற்றிய புரிதலே இன்றி நடந்துகொள்வதுவும்தான் அரசின் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பணியாகவும் இருந்து வருகிறது.

தற்கால இலக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தற்கால இலக்கியப் படைப்பாளர்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும் இந்த நூற்றாண்டு படைப்பாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் விடுவதும் ஒரு மொழியைப் பாதுகாப்பதாகவோ வளர்ப்பதாகவோ ஆகாது.

இத்தகு மோசமான நிலைமைக்கு சில இலக்கிய நாட்டாண்மைகள் சொல்லும் பதில் என்னவென்றால் மற்ற மொழியினருக்கு பழமையான இலக்கியங்கள் கிடையாது. அதனால் அவர்கள் தற்கால படைப்புக்களைத் தூக்கிவைத்துக்கொண்டு பெருமையடைகிறார்கள். ஆனால் நமக்கு சங்க கால இலக்கியங்கள் இருக்கின்றன. அதனால் நாம் பழம்பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இது ஒரு கவைக்குதவாத சொத்தையான வாதம். உலகம் இந்த வாதங்களை எல்லாம் ஏற்பதில்லை. உங்கள் மொழியில் இந்த வருடம் என்ன படைப்பிலக்கியம் வந்தது..சென்ற வருடம் எது வந்தது என்றுதான் பார்த்து பரிசு தந்து கொண்டாடுகிறதேயல்லாமல் உங்களிடம் நானூறு வருடங்களுக்கு முந்தைய கவிதை இருக்கிறதா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாவல் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு பரிசு தந்து கொண்டாடுவதில்லை. பழைய இலக்கியங்கள் நம்மிடம் உள்ள பூர்விகச் செல்வங்கள். அவற்றை நாம் கொண்டாடுவோம். அதே சமயம் புதிய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் உயர்த்திப் பிடிக்கவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
தங்களின் மொழிகளில் வரும் தற்கால இலக்கியங்களை வெவ்வேறு மொழிகளுக்குக் கொண்டுசென்று அதன் மூலம் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளையெல்லாம் ஐரிஷ், ஸ்பானிஷ் போன்ற சின்னச்சின்ன மொழிகளெல்லாம் பெற்று அந்த மொழிகளின் படைப்பாக்கங்கள் உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பயணித்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் “எங்கள் மொழியில் எல்லாம் இருக்கிறது. அதனால் எங்கள் இலக்கியம் பாரதிதாசனோடு நின்றுவிடுகிறது. இதற்குமேல் நாங்கள் பயணிப்பதாக இல்லை” என்று அறிவித்துவிடலாமா?

பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் ஆயிரக்கணக்கான சிலைகளும்,மணிமண்டபங்களும், நூலகங்களும், நகர்களும், வரவேற்பு வளையங்களும் உள்ளன. இனிமேலாவது இலக்கிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகளுக்கும் கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்ற படைப்பிலக்கியவாதிகளின் பெயர்களைச் சூட்டுங்கள். படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரித்து கௌரவியுங்கள். கர்நாடகத்தில் இதைத்தான் செய்கிறார்கள். தற்கால படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரிக்கிறார்கள். வெறுமனே அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதில்லை. கர்நாடகத்திற்கும் பெங்களூருக்கும் வந்திருப்பவர்கள் நிஜலிங்கப்பா, ஹெக்டே என்ற பெயர்களையும் சிலைகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மாபெரும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் பண்பு இங்கே இருக்கிறது.
அதனால்தான் கன்னடமொழிக்கு ஏழு ஞானபீடம், வங்காள மொழிக்கு ஐந்து ஞானபீடம், மற்ற மொழிகளுக்கு நான்கு ஞானபீடம் தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு என்ற நிலைமை நீடித்து வருகிறது.
சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் வெறும் நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனநிலையிலிருந்து என்றைக்கு நாம் மாறப்போகிறோம் ?

Friday, December 10, 2010

மைனா- அபத்தங்களின் குவியல் !


சில படங்களுக்கு இப்படி அமைந்துவிடும். அப்படி அமைந்துவிட்ட ஒரு படம் மைனா. கண் மண் தெரியாமல் புகழுகிறார்கள். இப்படியொரு படமே வந்ததில்லை என்ற அளவுக்குப் பாராட்டு மழையால் குளிப்பாட்டுகிறார்கள். பத்திரிகைகள்தாம் என்றில்லை, பதிவுகளிலும் உச்சத்துக்குத் தூக்கிவைக்கிறார்கள். அதற்கென வரும் பின்மொழிகளிலும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். மொத்தத்தில் படம் நல்ல வசூலைக் குவித்துவிட்டது.... மகிழ்ச்சி.! ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னணியில் அத்தனைச் சிறப்புக்கு இந்தப் படம் தகுதியுடையதுதானா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு படம் மிகப்பெரிய பாராட்டுக்களோடு மிகப்பெரிய வசூல் சாதனையையும் பெறவேண்டுமெனில் முற்றிலும் புதிதானதொரு அனுபவத்தைத் தரவேண்டும். நாமெல்லாம் ஆயிரம் படம் பார்த்துவிட்டுத்தான் இன்னொரு படத்தையும் பார்க்க உட்காருகிறோம். களம் புதிது, கதை புதிது , அது சொல்லப்பட்ட பாதை புதிது என்றிருந்தால்தான் நல்ல அனுபவமோ புதிய அனுபவமோ வாய்க்கும் . மிகப்பெரும் வெற்றியடைந்த எல்லாப்படங்களும் இந்தப் பட்டியலில்தாம் வரும். அந்தக் காலகட்டத்தில் பராசக்தி படம் இந்த அனுபவத்தைத்தான் தந்தது. திருவிளையாடல், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆரம்பித்து அதற்கடுத்துவந்த ஸ்ரீதர் படங்கள், பாலச்சந்தர் படங்கள், பின்னர் வந்த அன்னக்கிளி, அதற்கடுத்து வந்த பாரதிராஜா படங்கள், ஏன் எம் ஜி ஆரின் உலகம் சுற்றிய வாலிபன் என்ற எல்லாப்படங்களுமே இந்த அடிப்படையில்தாம் இருந்தன.

மற்ற படங்களிலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக வந்த இன்னொரு படம் ‘ஒரு தலை ராகம்.’ அதனால்தான் இன்னமும்கூட டி.ராஜேந்தர் புகழுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். பின்னர் மணிரத்தினம் மிகமிக வித்தியாசமான கோணங்களில் கலைநயத்துடன் படங்கள் தந்து இந்தியாவையும் தாண்டி புகழ் பரப்பினார். சமீப காலமாக அப்படி முற்றிலும் வேறு கோணத்தில் படம் தந்த இயக்குநராக பாலாவைத்தான் சொல்ல முடியும். சேது , நந்தா, பிதா மகன், நான் கடவுள் என்று தமது ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசமான அனுபவங்களைச் சொன்னவர் அவர். பாலாவைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் பருத்திவீரன் மூலம் கவனம் கவர்ந்தார். அவரைத்தொடர்ந்து சசிகுமார், வசந்த பாலன், ஜனனாதன் ,பாண்டிராஜ், சுசீந்திரன், சற்குணம் என்றெல்லாம் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே வித்தியாசமான கதைக்களன்களை வித்தியாசமான சினிமா நடையில் சொல்லியிருக்கிறார்கள். நல்ல வெற்றிகளையும் ஈட்டியிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாருடைய படங்களை விடவும் அதிகமான பாராட்டு மழைகள் மைனாவுக்குப் பொழியப்படுவதன் காரணம்தான் விளங்கவில்லை. ஒரு பிரபல பெண்கள் பத்திரிக்கை தலையங்கமே எழுதியிருக்கிறது. உண்மையில் மைனா அந்த அளவுக்குத் தகுதிகள் படைத்த படமா என்பதுதான் புரியவில்லை. ஏதோ காரணங்களால் ஓடட்டும். வெற்றி பெறட்டும். அதுபற்றி நமக்கு ஆட்சேபம் கிடையாது. உண்மையில் பார்க்கப்போனால் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வணிகரீதியாகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறதாம். அது நல்ல அறிகுறிதான். ஆனால் அது நல்ல படமா என்பதுதான் கேள்வி.

படம் தொடங்கி கடைசி வரையிலும் ஏதாவது ஒரு படத்தின் நினைவு வந்துகொண்டேயிருப்பது ஒரு நல்ல படத்திற்கு இலக்கணம் அல்ல. மைனாவில் இதுதான் நடக்கிறது. படம் தொடங்கி இடைவேளை வருவதற்குள் பூ, பருத்தி வீரன், பசங்க என்று நான்கைந்து படங்களின் நினைவைப் படம் எழுப்பிவிடுகிறது. காரணம் ஒரே மாதிரியான காட்சியமைப்புகள்....!கடைசியில் நடைபெறும் வன்முறையான பெண்ணின் கொலையும் பல படங்களில் பார்த்த காட்சியமைப்புத்தான். அந்த பஸ் மலைச்சரிவில் பாதியில் துருத்திக்கொண்டு நிற்பதுவும் பல ஆங்கிலப்படங்களில் ஏற்கெனவே பார்த்த காட்சிதான்.
இப்போதெல்லாம் சினிமா என்பதே ஆங்கிலப்படமோ, தழுவல் படமோ எவ்வளவு நன்றாகக் காப்பி அடிக்கிறார்கள் என்பதைக்கொண்டுதான் இயக்குநர்களின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் அதிலும் தங்களின் கற்பனையோட்டத்தை எவ்வளவு கலந்து தருகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் இயக்குநர்களின் திறமைகள் சிறக்கின்றன.

கவுதம் மேனன் , முருகதாஸ், லிங்குசாமி , செல்வராகவன், போன்று பெரிய அளவில் படம் செய்யும் இயக்குநர்களின் படங்களெல்லாம் பெரும்பாலும் தழுவல் படங்கள்தாம். ஆனாலும் தங்களின் கைவண்ணமும் சேர்த்தே கொடுக்கும் கலை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

மைனா இயக்குநரைப் பொறுத்தவரை அவருக்கு சினிமா மொழி மிகச்சிறப்பாகக் கைவருவதை நிச்சயம் குறிப்பிடவேண்டும். அதனால்தான் எந்த இடத்திலும் கொஞ்சம்கூடத் தொய்வு ஏற்படாமல் படத்தை மிகவும் விறுவிறுப்புடன் கொண்டு செல்வதற்கும் சின்னப்பையனிலிருந்து அந்தப் படத்தில் நடித்த அத்தனைப் பேரிடமும் தமக்கு என்ன வேண்டுமோ அந்த நடிப்பைத் துல்லியமாகக் கொண்டுவரும் வித்தையும் அவருக்கு அநாயாசமாகக் கை வந்திருக்கிறது. எடிட்டிங் நாலெட்ஜும் அவரிடம் அபாரமாக இருக்கிறது.
ஆனால் படத்தின் மூலம் அவர் சொல்லவருகின்ற மெசேஜ்தான் நம்மை உறுத்துகிறது. பெண்களின் மீதும் பெண்மையின் மீதும் அவருக்குக் கொஞ்சம்கூட மதிப்போ மரியாதையோ இல்லையென்பதைத்தான் அவர் படத்தில் வைத்திருக்கும் காட்சிகள் மூலம் மறைமுகமாகச் சொல்லுகிறார். பெண்கள் படத்தில் ஒரு இடத்தில்கூட நல்லமுறையில் காட்டப்படவில்லை, நாயகி ஒருத்தியைத் தவிர.! நாயகியைக்கூட வெறும் சினிமா நாயகிக்குரிய வழக்கமான பாணியில்தான் காட்டியிருக்கிறார்கள். படத்தில் வரும் தாய்மார்கள் எல்லாருமே ஏதோ வில்லன்கள் அளவுக்குப் பந்தாடப்படுகிறார்கள்- அதுவும் கதாநாயகனாலேயே!
அப்பாவையும் அம்மாவையும் போட்டுத் துவைத்து எடுக்கிறான் கதாநாயகன். இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் சொல்லவருகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு பாவமோ பச்சாத்தாபமோ அல்லது அவன் தவறு செய்கிறானே என்ற தாக்கத்தைப் பார்க்கிறவர்களுக்கு எழுப்பும் எந்தவித புரிதலும் இல்லாமல் ஏதோ அவன் மிகச் சரியான ஒன்றைத்தான் செய்கிறான் என்ற பாவனையிலேயே கதை நகர்த்தப்படுகிறது.

அநாதையாய் வந்த குடும்பத்திற்கு இடம் கொடுத்து , அவர்கள் பிழைக்க வழி செய்து கொடுத்து, அந்தப் பெண்ணை தினந்தோறும் பள்ளிக்குக் கூட்டிச்சென்று கூட்டிவந்து பார்த்துக்கொள்ளும் கதாநாயகன் போல ஒரு பையன் கிடைக்கும்போது அந்தப் பையனுக்கே கட்டிக்கொடுத்து பெண்ணை வாழவைக்கலாம் என்றுதான் ஒரு ஏழைத்தாயின் மனம் விரும்பும். அதுவும் ஒரு கிராமத்து ஏழைத்தாய் அப்படித்தான் எண்ணுவாள். அதுவும் மைனாவில் காட்டப்படும் காடு போன்ற எவ்வித நாகரிகமும் எட்டிப்பார்க்காத – காட்டுக்குள்ளே மிகமிக தூரத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய குக்கிராமத்தில் இருக்கும் ஏழைத்தாய்க்கு- வேறுமாதிரி சிந்தனை வரவே வாய்ப்பில்லை. என்னுடைய பெண்ணை பட்டணத்தில் படித்த பெரிய நாகரிக மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று சொல்கிறாளாம். உடனே தன்னுடைய காதலியின் தாயாரை சினிமாப்பட வில்லன் அளவுக்குப் புரட்டிப்போட்டு துவைத்து எடுக்கிறானாம் கதாநாயகன். லாஜிக் என்பதெல்லாம் படத்தில் சுத்தமாகக் கிடையாது என்பதற்கு இது மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளுமே இம்மாதிரிதான் உள்ளன.

ஒரு காட்சியில் கதாநாயகி ருதுவாகிறாள். வீட்டில் சடங்கு செய்யப்படுகிறது. அங்கு வாழ்த்த வந்த ஒரு பெண்மணி அந்தப் பெண்ணை “இவ்வள அழகா இருக்கற உன்னை எந்த மகாராஜன் வந்து கல்யாணம் செய்துக்கப்போறானோ” என்று வாழ்த்துகிறாள். எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு இயல்பான நிகழ்வு இது. ஆஹா நம்ம இயக்குநர் இங்கே பிடித்திருக்கிறார் பாருங்கள் ஒரு காட்சியை... அந்தப் பெண்மணி வாழ்த்திவிட்டு வெளியில் வந்ததும் வழிமறித்துத் தடுத்து நிறுத்துகிறான் நம்ம கதாநாயகன். “என்னடி சொன்னே? என்னடி சொன்னே?” என்று கேட்டு அவளைக் குட்டுகிறான் பாருங்கள்..(நினைவு வருகிறதா பருத்தி வீரனில் பொணந்தின்னியை ஒரு சிறுவனை வைத்து கார்த்தி குட்டச்சொல்லும் காட்சி) அதே காட்சியின் ரிப்பீட்டுதான் . அந்த கிராமத்துத் தாயின் கபாலம் நொறுங்கும் அளவுக்குக் குட்டிக்கொண்டே இருக்கிறான் கதாநாயகன். இயக்குநர் சொல்ல வருவது என்னவென்றால் அவன் உயிருக்குயிராக நேசிக்கும் அவளை இன்னொருவருக்கு என்று அந்த அம்மையார் சொல்லிவிட்டாராம். அவளைப் பற்றிக் குறைவாக யார் என்ன சொன்னாலும் நம் கதாநாயகன் சும்மா விடமாட்டானாம். அவ்வ்வளவு காதல் உள்ளவனாக அவனைக் காட்ட வேண்டுமாம். இதுமாதிரியேதான் நிறையக் காட்சிகள் காணக்கிடைக்கின்றன. இன்னமும் ஒரேயொரு காட்சியைத்தான் இயக்குநர் தவற விட்டிருக்கிறார். எல்லாப் பள்ளிப்பிள்ளைகளும் விளையாடிக்கொண்டிருக்கின்றன.... ஆளாளுக்குத் தங்களுக்குப் பிடித்த பறவைகளைச் சொல்லி விளையாடுகிறார்கள். ஒரு பையன் தனக்குப் பிடித்தது கிளி என்கிறான். இன்னொருவன் சிட்டுக்குருவி என்கிறான். ஒரு பையன் மைனா என்கிறான். உடனே ஒரு சின்னப்பெண் “ஐயே எனக்கு மைனா பிடிக்காது” என்கிறாள். அவ்வளவுதான். அதைக்கேட்டு விடுகிறான் நம் கதாநாயகன். உடனே அந்தப் பெண்ணைத் துரத்திச்சென்று அப்படியே காலைப்பிடித்துத் தூக்கித் தரையில் அடித்துத் துவைத்து அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுகிறான் என்ற ஒரு காட்சியை மட்டும்தான் இயக்குநர் போனால் போகிறதென்று சேர்க்காமல் விட்டிருக்கிறார். மற்றபடி இதே பாணியில் ஏகப்பட்ட அபத்தக் காட்சிகள்.
ஒரு காவல்துறை அதிகாரி தலைதீபாவளிக்கு வருவதில்லை என்பதற்காக அவருடைய மாமனார் வீடும் அவருடைய சுற்றங்களும் இப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பிரபு சாலமோன் மட்டும் ஒரு நாவலாக எழுதியிருப்பாரேயானால் அவருக்கு நிச்சயம் நோபல் பரிசே கிடைத்திருக்கும். இந்த வருடத்தின் மிகச்சிறந்த அபத்தமாக இதனை தாராளமாகச் சொல்லலாம். இன்னொரு மிகப்பெரிய அபத்தம் காவல்துறை அதிகாரியின் மனைவியாக வருகிறவரின் பாத்திரப்படைப்பு. பெண்மைக்கான இலக்கணங்கள் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்த எல்லா ஒழுங்கு நியதிகளையும் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பெண்ணை முன்னிறுத்தியே தான் கிளைமாக்ஸும் எடுக்கப்பட்டிருக்கிறது. அபத்தமும் அநியாயமுமாக எத்தனை ரத்தம் கொட்டமுடியுமோ அத்தனை ரத்தம் கொட்டப்பட்டிருக்கிறது.
கதாநாயகனின் பாத்திரப்படைப்பு பருத்திவீரன் கார்த்திதான். பேசுவது தலையாட்டுவது எல்லாமே அப்படியே சுவீகரித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடைசியில் தன்னைக் கைது செய்துகொண்டு போகிற காவல்துறை அதிகாரியை அவன் காப்பாற்றுகிறான் என்பது மட்டுமே இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சொல்லும் தார்மிக தர்மம்.

ஒரு பாவமும் அறியாத அந்தப் பெண் மைனா அவ்வளவு கோரமாகவும் கொடூரமாகவும் கொல்லப்படுவதற்கு என்ன லாஜிக் என்ற கேள்விகளும் கேட்கப்படக்கூடாது.
இந்தப் படத்தை இவ்வளவு விரிவாக எதற்காக ஆராய்வது என்ற கேள்வியும் எழுப்பலாம். கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி மிக அதிகமாக வியந்துரைத்திருக்கிறார்கள். மற்ற பெரியவர்களும் இதே பாணிக்கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் இப்படியெல்லாம் சொல்லும்போது நாம் எப்படி சரியான கருத்தைச் சொல்வது என்று நிறையப்பேர் தயங்கி பேசாமலிருந்திருக்கலாம். அப்படி இருக்கவேண்டாமே என்பதற்காகத்தான் இங்கே இதனை எழுதியிருக்கிறேன்.

நிச்சயம் பிரபு சாலமோனிடம் நல்ல திறமை இருக்கிறது. சினிமா மேக்கிங் அவருக்குப் பிரமாதமாக வருகிறது. நல்ல கதைகளுடன் நல்ல படங்களை அவர் உருவாக்கட்டும்.

மைனா நன்றாக எடுக்கப்பட்ட படமே தவிர, நல்ல படம் அல்ல!

Tuesday, December 7, 2010

ரெய்கியைத் தெரியுமா ?


ஆன்மிகத்தின் பெயரால் அகில உலகிலும் புகழ்பெற்றிருந்த ஒரு சாமியார் பெண் விவகாரத்தால் மிகப்பெரிய அளவில் பெயர் கெட்டுப்போனதையும் அவரை நம்பியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளானதையும் சமீபத்திய நிகழ்வுகளாகப் பார்த்தோம். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் மிகக் குறுகிய காலத்தில் அவருக்கு ஏற்பட்ட புகழும் செல்வாக்கும் இத்தனை லட்சம் பக்தர்களும், இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல இடங்களிலும் ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களும் குவிந்த கோடிக்கணக்கான பணமும் அதனையும் தாண்டி பக்தர்கள் என்ற பெயரில் அவரிடம் வந்து விழுந்த அப்பாவிப் பொதுமக்களும்தாம்................

இத்தனை பக்தர்கள் கூட்டம் இவ்வளவு குறுகிய கால அளவில் மற்ற எந்தவொரு ஆன்மிக குருவுக்கும் ஏற்பட்டதில்லையே இவருக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது என்பதற்கு அந்த பக்தர்களில் பலரது பதிலே விடையாகக் கிடைக்கிறது. “நீங்கள் எப்படி இவருக்கு பக்தரானீர்கள்?” என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட எல்லாருமே ஒரே மாதிரியான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “உடம்புக்கு வியாதி வந்ததுன்னு அவரிடம் போனோம். கையை வைச்சார். உடனே குணமானது. எங்களுக்கு ஒரே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. எப்படி ஒரு மனிதரால் இப்படிச்செய்ய முடியும். இவர் நிச்சயம் கடவுளின் அவதாரமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தோம். தொடர்ந்து அவரிடம் போக ஆரம்பித்து அவருடைய பக்தர்களாகவே ஆகிவிட்டோம்.”

ஆக.....முக்கால்வாசிப்பேரின் வாக்குமூலம் இதுவாகவே இருக்கிறது. உடம்புக்குப் பிரச்சினை என்று போயிருக்கிறார்கள். பிரச்சினைக்குரிய இடத்தில் அவர் கையை வைத்திருக்கிறார். குணம் கிடைத்திருக்கிறது. உடனடியாக அவர் கடவுளின் அவதாரம் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்.தலைவலி என்று ஒருவர் வருகிறார். அவர் தலைமீது மற்றவர் சிறிதுநேரம் கையை வைக்கிறார். உடனடியாகத் தலைவலி குணமாகிறது. தலைவலியுடன் வந்தவருக்கு கையை வைத்தவர் மீது ஒரு ஆச்சரியமும் அதிசயமும் உண்டாகுமா இல்லையா?

சம்பந்தப்பட்ட அந்த சாமியாரின் விவகாரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதே இந்த நோய் தீர்க்கும் அதிசய சிகிச்சை முறைதான். இதெல்லாம் உண்மையா இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா...? இல்லை ஏதாவது செப்படி வித்தையா என்பது நியாயமான கேள்வி.
அந்தச் சாமியாரை நாம் மறந்துவிடுவோம். கையை வைப்பதன் மூலம் நோய்கள் குணமாகுமா அப்படியொரு சிகிச்சை முறை இருக்கிறதா என்பது நாம் விவாதிக்கப்போகிற விஷயம்.

உலகம் தோன்றியது முதல் இன்றுவரை மனிதன் பல்வேறு விதங்களில் போராடிக்கொண்டே இருக்கிறான். சுகமான, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அவனது போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சிரமமான காரியமும் இல்லை. பார்க்கப்போனால் அது மிகவும் எளிதான செயல்தான். சில நல்ல பழக்கவழக்கங்கள், சில ஒழுங்கு நியதிகள், சுகாதாரம், நல்வழிச்சிந்தனைகள், சரியான உணவுமுறை, கட்டுக்கோப்பான நெறிகள் என்று கடைப்பிடித்தாலே போதும். ஆரோக்கியமான வாழ்வு கைவசமாகிவிடும். இது பொதுவானது.
அதே நேரத்தில் சுற்றுச்சூழல்களாலும், இயற்கைப் பாதிப்புகளாலும், பரம்பரைத் தொடர்களாலும் ஆரோக்கியம் கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவற்றால் ஏற்படக்கூடிய ஆரோக்கியக் குறைவின் சதவீதம் மிகவும் குறைவுதான்.
நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய கையில்தான் உள்ளது. நம்முடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைமுறைதான ஆரோக்கியக் குறைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஆரோக்கியக்குறைவு வரக்கூடாது என்பதற்காகவும் , அப்படி வந்துவிட்டால் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காகவும் பல்வேறு மருத்துவமுறைகளையும் .பல்வேறு சிகிச்சை முறைகளையும் மனித இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது.
வீட்டுவைத்தியம், நாட்டுவைத்தியம், பாட்டி வைத்தியம் முதல் இன்றைய நவீன ‘அலோபதி’ என்று சொல்லக்கூடிய ஆங்கில மருத்துவமும் , பரம்பரை வைத்தியம் என்று சொல்லப்படும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி. ஹோமியோபதி போன்றவையும் மனித குலத்துக்கு நல்லதே செய்திருக்கின்றன; செய்தும் வருகின்றன.....இந்த மருத்துவ முறைகள் எல்லாம் மருந்து, மாத்திரைகளின் உதவியோடு செயல்படக்கூடிய மருத்துவ முறைகள்.
மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே நோய்களை குணமாக்கும் எத்தனையோ சிகிச்சை முறைகள் அன்றுமுதல் இன்றுவரை உலகின் பல திசைகளிலும் மிக வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ரெய்கி, பிராண சிகிச்சை(pranic healing) அக்குபங்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, மலர் மருத்துவம், உளவியல் சிகிச்சை, ஹிப்னாடிசம், பிரமிட் சிகிச்சை, கிரிஸ்டல் சிகிச்சை, சுஜோக் என்றழைக்கப்படும் தானிய சிகிச்சை(seed therapy) போன்ற மருந்து மாத்திரைகள் இல்லாமல் செய்யப்படும் மருத்துவ முறைகளும் மனித குலத்துக்கு மிகமிக நல்லதை மட்டுமே செய்துவருகின்றன.
இவற்றில் எந்த மருத்துவமுறை சிறந்தது என்பதும், எது மிக உறுதியாக நல்ல முறையில் பயனளிக்கும் என்பதும் எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் நம்பிக்கைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி மாறுபடலாம்......ஆகவே குறிப்பிட்ட இந்த மருத்துவமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்பது எந்த வகையிலும் பலன் தராது.

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமான வாழ்க்கையைத் ‘தேடி அலையும்’ மேலை நாட்டினர் அறிவியல் முன்னேற்றத்தால் பல நவீன மருத்துவக்கருவிகளையும் மருந்து மாத்திரைகளையும் கொண்டுள்ள அலோபதி மருத்துவ முறையை விட்டு ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் யோகாசனம், தியானம், இயற்கை மருத்துவம் போன்றவற்றை நாடி நம்நாட்டுக்குப் படை எடுத்து வருகின்றனர்.
மேலைநாடுகளில் மட்டுமின்றி கீழை நாடுகளில் கூட குறிப்பிட்ட மருத்துவமுறை என்றில்லாமல் Holistic treatment என்ற பெயரில் செய்யப்படும் கூட்டுமருத்துவ சிகிச்சைகளும் இன்று பிரபலமடைந்து வருகின்றன.

அலோபதி மருந்துகள் அந்தந்த நேரத்துக்குப் பலன் தருகின்றன என்பதுடன் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்ற வாதத்தை அலோபதி மருத்துவம் இன்றுவரை மறுத்ததே இல்லை. அதே சமயம் , நாளுக்குநாள் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்துவரும் அலோபதி மருத்துவத்தின் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அவசரக்கால சிகிச்சை தேவைப்படும் போதும், திடீர் இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களின்போதும் , மகப்பேறு சமயங்களிலும், மாரடைப்பு போன்ற அசாதாரண நிலைகளிலும், விபத்துக்களின் போதும் மேலும் சில நவீன ரக அறுவை சிகிச்சைகளின் போதும் அலோபதி மருத்துவம் பிரமிப்பைத் தருவதை மறுப்பதற்கில்லை.

ஆனால் எல்லா மருத்துவ முறைகளுக்கும் ஒரு limitation (எல்லைக்கோடு) இருப்பதுபோலவே அலோபதி மருத்துவத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. பல நோய்களையும் பிரச்சினைகளையும் குணமாக்குவது போலவே பல நோய்களையும் பிரச்சினைகளையும் குணமாக்க முடியாமலும் இருக்கிறது. அலோபதி மருத்துவத்தில் குணமாகாமல் இருக்கும் பல நோய்கள் ஹோமியோபதியில் குணமாகிவிடுகின்றன. பல நோய்கள் சித்தமருத்துவத்தில் குணமாகிவிடுகின்றன. பல நோய்கள் ஆயுர்வேதத்தில் குணமாகிவிடுகின்றன. இன்னமும் பல நோய்கள் அக்குபங்சர், அல்லது அக்குபிரஷர் சிகிச்சையில் குணமாகிவிடுகின்றன. இதுபோலவே ரெய்கியிலும் பல நோய்கள் மிக நல்ல முறையில் பரிபூரணமாகவே குணமாகிவிடுகின்றன.

ரெய்கியில் குணமாவது இருக்கட்டும் ரெய்கி என்பது என்ன.. ரெய்கியால் குணப்படுத்த முடியுமா என்பது கேள்வி.

பிரபஞ்சம் எங்கும் COSMIC ENERGY நிறைந்திருக்கிறது. இதனைத் தமிழில் உயிர்சக்தி என்றழைக்கலாம். அல்லது ஜீவ சக்தி என்றும் அழைக்கலாம். அந்தக் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து அதனை அடுத்தவர் உடலில் செலுத்துவதே ரெய்கி கலை.
நமது உடல் மொத்தம் ஏழு சக்கரங்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கிறது. தியானம் பயின்றவர்களுக்கு இந்தத் தகவல் தெரியும். சக்கரங்கள் என்றால் என்னவோ ஏதோவென்றெல்லாம் கலவரப்பட வேண்டாம். சக்தி மையங்களைத்தான் சக்கரம் என்றழைக்கிறார்கள். இந்தச் சக்கரங்கள் சரிவர இயங்குவதற்கு அவற்றில் சரியான அளவு உயிர்சக்தி இருக்கவேண்டும். பல்பு எரிய இத்தனை வால்ட் மின்சாரம் தேவை; மோட்டார் ஓட இத்தனை வால்ட் மின்சாரம் தேவை என்பதுபோல.....! அந்த சக்தி மையங்களில் பல்வேறு காரணங்களால் சக்தி குறைபாடு ஏற்படும்பொழுது அந்த மையத்துக்கு உட்பட்ட அங்கங்களில் பாதிப்பு நேர்கிறது என்பதுதான் ரெய்கியின் தத்துவம்.

காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து குறிப்பிட்ட அந்தச் சக்கரத்தை வலுவூட்டுவதன்மூலம் இழந்த சக்தியை அந்தச் சக்கரம் பெற்றுவிடுகிறது. சக்தி சமன் செய்யப்பட்டவுடன் பிரச்சினை தீர்ந்து உடல் பழைய நிலைமைக்கு வந்துவிடுகிறது. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் நோய் தீர்ந்துவிடுகிறது.

இது எப்படி சாத்தியம்? பிரபஞ்சம் எங்கும் இருக்கும் ஜீவசக்தியை எப்படிக் கிரகிப்பது.... அதனை எப்படி அடுத்தவர் உடலில் செலுத்துவது....? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதுதானே? எல்லாவற்றிற்கும் வழிமுறைகள் இருப்பதுபோலவே இதற்கும் வழிமுறைகள் உள்ளன. தீட்சையும் சில வகை தியானங்களும் இதற்கான பாதையை அமைத்துத் தருகின்றன. தியானத்தைத் தொடர்ந்து சில பயிற்சிகளை மேற்கொண்டால் ரெய்கி வழங்குவதற்கான ஆற்றலைப் பெறமுடியும். அப்படி ஆற்றல் வரப்பெற்றவர்கள் பிறருக்கு ரெய்கி வழங்க முடியும்.

ரெய்கி வியாதிகளை குணப்படுத்துவது என்பதெல்லாம் உடான்ஸ், மக்களை ஏமாற்றுவது என்பதுபோல் சிலர் சொல்லலாம். ரெய்கி வியாதியை குணப்படுத்தும் என்பதற்கு விஞ்ஞானபூர்வ ஆதாரம் ஏதேனும் உண்டா என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்படலாம். மருத்துவ விஞ்ஞானிகள் முன்வந்தால் விஞ்ஞான பூர்வ ஆதாரங்களை நிச்சயம் கொண்டுவர முடியும். எதுஎதையோ படம்பிடித்து நிரூபிக்க விஞ்ஞானபூர்வ கருவிகள் வந்துவிட்டன. ரெய்கி செய்யப்படும்பொழுது மனித உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? ஆனால் விஞ்ஞான மருத்துவம் ஏதேதோ போலிக்காரணங்களைச் சொல்லி மறுத்துவிடுகிறது. தியானம் செய்யும்பொழுது மனித உடலில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்கின்றனவோ அதைப்போன்று அபரிமிதமான மாறுதல்கள் ரெய்கி செய்யும்போதும் நிகழ்கின்றன.

என்னென்னவோ சொல்லி மக்களை மடையர்களாக்கி அவர்களை ஏமாற்றி ஒரு மௌடீக நிலைக்கு அவர்களைக்கொண்டு வந்துவிடுவதால் ஏதோ ஒரு உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தோன்றுகிறது. அது ரெய்கியால் ஏற்பட்டது என்று சொல்லமுடியாது என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது உண்மையல்ல; ஏனெனில் ஒன்றுமே பேசாமல் எதையும் உணர்த்தாமல் ஒரு சின்னக்குழந்தைக்கு வந்திருக்கும் உடல் பிரச்னைகளையும் ரெய்கியால் சரிசெய்துவிட முடியும். இன்னமும் சொல்லப்போனால் பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கு ரெய்கி செய்யும்பொழுது அது மிக விரைவாகச் செயல்பட்டு விரைவான குணம் கிடைக்கிறது.

எல்லாம் சரிதான், பிரபஞ்ச சக்தி அந்த சக்தி இந்த சக்தி என்றெல்லாம் சொல்லுவதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்கிறீர்களா? மனிதர்களின் சாகசங்களை கின்னஸ் வழியாகப்பார்க்கிறோம். சராசரி மனிதனால் செய்யமுடியாத, ஏன் யோசித்தே பார்க்க முடியாத பல்வேறு சாகசங்களைப் பல்வேறு பயிற்சிகளின் மூலம் பெற்ற அவர்கள் நம்மால் நினைத்தே பார்த்திராத அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள். அது வெறும் உடற்பயிற்சியாலும் சில வகை உத்திகளாலும் சாத்தியமாகிறது. உடலால் செய்யப்பட்ட பயிற்சிகளுக்கே அத்தனை அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்னும்போது மனதால் எண்ணத்தால் ஞானத்தால் செய்யப்படும் பயிற்சிகள் எத்தனை வலுவானதாக இருக்கமுடியும் என்பதையும் அதன் வலிமை எத்தகையதாய் இருக்கும் என்பதையும் கற்பனை செய்து பார்த்தீர்கள் என்றால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப முடிகிறது; சாட்டிலைட் மூலம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது. நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சை இங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது; அமெரிக்காவில் இருக்கும் உறவினரிடம் இங்கிருந்தே அளவளாவ முடிகிறது. செல்போன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிமும் நினைத்த நேரத்தில் பேச முடிகிறது. ஒரு இடத்தில் இருந்தபடியே நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தைக்கூட இலக்கு வைத்து குண்டெறிந்து தாக்க முடிகிறது. எங்கெங்கும் வியாபித்திருக்கும் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகிக்க முடியாதா என்ன.....! அப்படிக் கிரகித்துத்தான் வியாதிகளை குணமாக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘பராலிஸிஸ் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாரிச வாதத்தினால் தாக்கப்பட்டவர்கள் உடனடியாக அலோபதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதம் அளவுக்கு அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அல்லது எண்பதாயிரம் அளவுக்கு மருத்துவச்செலவு செய்து ‘சரியாகிவிட்டதாக’ டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் நோயாளிகளைப் பார்த்திருப்போம். வாய் இன்னமும் கோணியபடி, ஒரு கை மார்போடு மடங்கிக்கொண்டிருக்க , விரல்களெல்லாம் இறுக்கமாக மடிந்து கிடக்க, காலும் இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்க.. எழ முடியாமலும் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் இன்னமும் முக்கால்வாசி நோயாளியாகவே அவர் ‘சிகிச்சை முடிந்து’ திரும்பியிருப்பதை நாம் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்......ஆக, பக்க வாதத்தால் தாக்கப்பட்ட நோயாளியின் ‘உயிரைக்காக்கின்ற’ ஒரு விஷயத்தை மட்டுமே அலோபதி செய்து அனுப்பிவைத்திருப்பதை உணரலாம். அதைத் தொடர்ந்து எத்தனைத்தான் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் எவ்வளவு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டாலும் அந்த நிலையைத்தாண்டி பெரிதான முன்னேற்றம் எதுவும் கிடைத்துவிடுவதில்லை.

ஆனால் இதே நோயாளிக்கு ஆயுர்வேத மருந்தும், தொடர்ச்சியான மசாஜூம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துவிடும். அக்குபங்சரில் அல்லது அக்குபிரஷரில் சில புள்ளிகளைத் தூண்டிவிடுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர் மிக வேகமாக குணமடைவதைப்பார்க்க முடியும். இவை எல்லாவற்றையும் விட ரெய்கி சிகிச்சையின் மூலம் மிகமிக வேகமான முன்னேற்றத்தை இந்த நோயாளிகள் அடைந்ததை என்னால் வலியுறுத்திச்சொல்ல முடியும்.
ஆறு மாதங்கள் அல்லது ஆறு வருடங்கள் வரைக்கும் கையையும் காலையும் அசைக்க முடியாமல் மடங்கிய நிலையிலேயே வைத்திருந்தவர்களுக்கு ஒரு வார ரெய்கி சிகிச்சையிலேயே மிக நல்ல பலன்கள் கிடைத்திருகின்றன. ’இழுத்துப்பிடித்திருந்த அந்தப் பிடிப்பு’ ஒரு வாரத்திலேயே ‘விட்டுவிடும்’ அதிசயம் ரெய்கியில் சாத்தியமாகிறது.

மன உளைச்சல், மனப்பிறழ்வு , மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ரெய்கி சிகிச்சையினால் பிரமாதமான பலன்களைக் காண்கின்றன. மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளில் ரெய்கிக்கு ஒரு பிராதானமான இடம் உண்டு. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று இதனை ஒரு மாற்றுமருத்துவக் கலை என்ற அளவில் சொல்லாமல் இதற்கு ஆன்மிக வண்ணம் பூசி அதன் மூலம் தங்களைக் கடவுள் அவதாரம் என்பதுபோல் சிலர் பிழைப்பு நடத்துவதால் இதன் மீது நம்பிக்கை வராமற்போவது ஒரு வகை; எதுவாக இருந்தாலும் விஞ்ஞான ஆதாரம் இல்லாமல் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள் இன்னொரு வகை. எல்லாவற்றுக்குமே விஞ்ஞான ஆதாரம் கொடுத்துக்கொண்டிருக்கத் தேவை இல்லை. இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது. கேட்டு உடல் உருகிப்போனேன் என்று நான் சொல்லும்போது அதற்கு விஞ்ஞான ஆதாரம் கொடுக்கத் தேவை இல்லை. எங்க அம்மா என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்று சொல்வதற்கு எதற்காக விஞ்ஞான ஆதாரம்?
விஞ்ஞான மருத்துவம் அலோபதியைத் தவிர வேறு எந்த மருத்துவ முறையையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறதா இல்லையா என்பது பற்றிய கவலை வேண்டாம். உடல் பிரச்சினை தீர்ந்ததா இல்லையா என்பதை மட்டும் பார்த்தாலேயே போதும்.

ரெய்கியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. எந்த வயதினரும் செய்து கொள்ளலாம். என்னுடைய அனுபவத்திலேயே இஸ்ரோவில் பணியாற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள், அலோபதி மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மென்பொருள் நிபுணர்கள் என்று பல துறையினருக்கும் ரெய்கி சிகிச்சை அளித்துள்ளேன். தொண்ணூற்றைந்து சதம் முழு அளவில் குணம் கிடைத்திருக்கிறது என்பதுவே ரெய்கியின் நம்பகத்தன்மையைச் சொல்லப்போதுமானதாக இருக்கிறது.

மாற்று மருத்துவ முறைகளில் ரெய்கியை Mother treatment என்றழைக்கிறார்கள். பெயருக்கேற்றது போலவே கனிவும் அரவணைப்பும் கொண்ட சிகிச்சை முறை இது.