Sunday, July 7, 2013

இளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.



 கங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்பிய கலைஞர்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அத்தனை திறமையும் இருந்து சாதனை படைத்தவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் மீடியா கவனமும் மக்கள் பார்வையும் இவர்கள் மீது பதிந்து இருக்கும். இன்றைய திரையுலகில் டி.ராஜேந்தருக்கடுத்து கங்கை அமரனைத்தான் இந்தவகையில் நம்மால் சேர்க்கமுடியும்.

கங்கை அமரன் கதை எழுதுவார், வசனம் எழுதுவார், பாடல்கள் புனைவார், அவரே பாடுவார், இசை அமைப்பார், படங்களை இயக்குவார், டிவியிலும் மேடைகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்குவார், பல வாத்தியக்கருவிகளை வாசிப்பார்………………என்று எண்ணற்ற திறமைகள் கைவரப்பெற்றவர் கங்கை அமரன்.

இளையராஜா சகோதரர்கள் மூன்று பேராகத்தான் திரையுலகில் நுழைந்தனர். மூத்தவர் பாஸ்கர் குடும்ப நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டு விளம்பர வெளிச்சத்திற்கு அதிகமாக வராமலேயே நின்றுவிட்டார். மற்ற இரு சகோதரர்களும் திரைப்பட வெளிச்சத்திலேயே உழல்கின்றவர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டு விட்டனர். இளையராஜா வந்த காலத்தில் இளையராஜா ஒரு பக்கம் இசையமைத்துக்கொண்டிருக்க இளையராஜாவுக்காகத் திரையுலகில் செய்யப்பட்ட ‘மவுத் பப்ளிசிடி’ சாதாரணமானதல்ல; அதனைப் பெரும்பாலும் பல்வேறு உத்திகளிலும் ‘ரூபங்களிலும்’ செய்துவந்தவர் கங்கை அமரன்தான். இன்றைய பின்னூட்டப் புலிகளுக்கெல்லாம் அதன் மகத்துவமோ முக்கியத்துவமோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை. ஏனெனில் இதனைப் படித்ததும் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் ராஜாவுக்கான விளம்பரம் மட்டுமல்ல அவருக்கான ‘எல்லாமே’ அவரது இசைதான். அவரது இசையே போதுமானது. அதுவே மொத்த உலகையும் சுருட்டிக் கொண்டுவந்து அவரது காலடியில் கிடத்தும்’ என்பதுபோல் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். திரையுலகில் இதெல்லாம் வேலைக்காவாது. 

எத்தனைத் திறமை எத்தனை வல்லமை இருந்தாலும் அங்கே நிற்கவும் நிலைக்கவும் ‘வேறுமாதிரியான’ சில ‘சப்போர்ட்டுகள்’ தேவைப்படுகின்றன. அதையெல்லாம் அன்றைக்கு கவனித்துக்கொண்டவர் கங்கைஅமரன்தான்.

அதுமட்டுமல்ல, தன்னுடைய சகோதரரை இளையராஜா வேண்டாமென்று சொல்கிறவரைக்கும் இளையராஜாவுடன் மட்டுமல்ல அவரது ‘இசையுடனும்’ கூடவே இருந்தவர் கங்கை அமரன். 

இவரது ‘பங்களிப்பு’ எத்தகையது என்பதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் கங்கைஅமரனின் ‘பங்களிப்பே துளிக்கூட இல்லை’ என்று நிச்சயம் சொல்வதற்கில்லை.

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

இளையராஜாவுக்கும் கங்கைஅமரனுக்கும் இடையில் தகராறுகள் வந்து “இனிமேல் நீ ரிகார்டிங் இடத்திற்கு வரவேண்டாம்” என்று தம்பியை இளையராஜா கடுமையாகச் சொல்லிவிட்டார் என்று செய்தி.

இந்தச் செய்திகளுக்குக் காரணம் கங்கை அமரன் தனியாக இசையமைக்கச் சென்றதுதான் என்றும் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் இரண்டு சகோதரர்களுக்கும் பொதுவான ஒரு நண்பர், “நீ அந்தப் பக்கமாய்ப் போயிறாதே. அண்ணன் உன் மீது ரொம்பவும் கோபமாயிருக்காராம். அவர் கம்போஸ் பண்ணி வச்சிருந்த டியூனையெல்லாம் நீ எடுத்துவந்து அவரை முந்திக்கிட்டு உன்னுடைய படத்துல பாடல்களாய் போட்டுடறியாம்” என்று சொன்னதற்கு-

“அப்ப இத்தனை நாட்களும் நான் எத்தனை டியூன் சொல்லியிருப்பேன். அதையெல்லாம் அவர் போட்டு பேரும் பணமும் வாங்கினாரே அதுமட்டும் பரவாயில்லையா?” என்று கங்கைஅமரன் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். இதுபற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது அவர்களுக்குள் உண்டான சகோதரச் சண்டை.

ஆரம்பத்தில் ஒரு இசைக்குழுவாகவே அவர்கள் செயல்பட்டு வந்ததால் இதுவெல்லாம் சாத்தியமே. நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்களில் அந்தச் சகோதரர்களுக்கு நிறைய பரிச்சயம் இருப்பதால் தங்களைக் கவர்ந்த, தங்களுக்குத் தெரிந்த பல பாடல்களை அவர்கள் திரைப்படங்களில் மெட்டுக்களாகப் போட்டிருக்கிறார்கள். எந்தப் படத்தில் எந்தப் பாடல் அப்படி வந்தது போன்ற விவரங்களையும் கங்கை அமரன் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிறையச் சொல்லியும் பாடிக்காட்டியும் இருக்கிறார்.

அவர் டைரக்ட் செய்து மிகப்பெரிய வசூலைப் பெற்ற கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு’ பாடல்கூட கோவிலில் பாடப்படும் வேறொரு பாடலின் தழுவல்தான் என்று சொல்லி இரண்டு பாடல்களையும் நிறைய நிகழ்ச்சிகளில் பாடிக்காட்டியிருக்கிறார் அமரன்.

பொதுவாக இது இந்தப் பாடலின் தழுவல், அது அந்தப் பாடலின் தழுவல்……இளையராஜா இந்தப் பாடலிலிருந்து இதனைத் தழுவியிருக்கிறார் என்பது போன்ற பட்டியலை நான் எப்போதுமே எழுதுவதில்லை. ஆனால் இது சம்பந்தமாய் வரும் விவாதங்களில் சிலவற்றைச் சொல்லமுனைவதுண்டு. ராஜ்கபூர் படத்தின் பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது முகேஷோ, மன்னாடேயோ பாடிய ஒரு பாடலைக் கேட்டபோது ‘அட இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்று தோன்றிற்று.பிறகு பார்த்தால் ‘வெத்தல வெத்தல வெத்தலையோ’ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி படப்பாடல் ‘இங்கிருந்துதான்’ என்பது தெரிந்தது.

‘ஓஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…………….’.என்று பிரபுதேவாவின் அண்ணன் ராஜூசுந்தரம் ‘இதயம்’ படத்தில் பாடிக்கொண்டு ஆடிய பாடல் ‘ஓஓஓ தேவதாஸ்’ என்று தேவதாஸ் படத்தில் சி.ஆர். சுப்பராமன் போட்ட டியூன்தான் என்பதும் நிறையப்பேருக்குத் தெரிந்த விஷயமே.

இதெல்லாம் சாதாரணமே. அங்கீகரிக்கக்கூடிய ஒரு விஷயமே. ஏனெனில், திரைத்துறையில் ஒரு பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என்று நிலைத்திருந்து தொழில் செய்யும்போது இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கமுடியாதவை. ஐநூறு படங்கள், அறுநூறு படங்கள், எண்ணூறு படங்கள் என்று ஒப்புக்கொண்டு பணியாற்றும்போது சில தழுவல்கள் வந்துதான் தீரும். இது ராஜாவுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே பொருந்தும். அதுபோன்ற தழுவல்களில் ஈடுபட மாறுபாடான பல்வேறு காரணங்களும் அமைவதுண்டு.

இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, கவிஞர்களுக்கும் இது பொருந்தும். கண்ணதாசன் பாடல்களிலுள்ள சில வரிகளைக் குறிப்பிட்டு ‘இது தனிப்பாடலில் வந்துவிட்டது. இது மகாபாரதத்தில் உள்ள வரி. இது குற்றாலக்குறவஞ்சியில் உள்ளது. அங்கிருந்து சுட்டிருக்கிறார் கவிஞர். இது கம்பராமாயணத்தில் வந்த வரி; இது பட்டினத்தாரில் உள்ள வரி’ என்றெல்லாம் எழுதுவார்கள். இருக்கலாம். அந்த வரி ஏதோ ஒரு இடத்தில் அதிகம் பேர் கவனிக்கமுடியாத இடத்தில் வந்திருக்கிறது. அது பல பேரைச் சென்று அடையவேண்டிய வரி. நாம் பணியாற்றும் ஊடக வழியாக அதனைப் பயன்படுத்தினால் அதனை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்றுகூட ஒரு கவிஞன் நினைத்து தான் எழுதும் பாடலில் அந்தவரியைச் சேர்க்கலாம். அதேபோலவே ஒரு இசையமைப்பாளரும் எங்கோ தான் கேட்டு ரசித்த ஒரு மெட்டை, அல்லது தன்னைக் கடந்துபோகும்போது ஒருகணம் தன்னைப் பரவசப்படுத்திவிட்டுப் போகும் ஒரு இசைத்துணுக்கை, எல்லாரும் கேட்டு அனுபவிக்கட்டும் என்ற எண்ணத்தில்கூட தன்னுடைய இசையில் சேர்க்கலாம். இது தவறே இல்லை. தவறில்லை என்பது மட்டுமல்ல, பல்வேறு தருணங்களில் இது நடைமுறைச் சாத்தியமே.

ஆனால் இது ‘பொதுபுத்தியில்’ எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்றுதான் பார்க்கவேண்டும். பிரபல பதிவர் வவ்வால் தம்முடைய ஒரு பதிவில் சில தழுவல் பாடல்களின் பட்டியலையும் அதற்கான இணைப்புகளையும் கொடுத்திருந்தார். அவற்றில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஒன்றும், மீதி நான்கு பாடல்கள் இளையராஜா பிற மெட்டுக்களைத் தழுவி அமைத்த பாடல்களும் இருந்தன.

விகடன் இணையதளத்தில் யார் யார் எந்தெந்தப் பாடல்களிலிருந்து ‘சுட்டிருக்கிறார்கள்’ என்று ஒரு வீடியோ தொகுத்திருந்தார்கள். மற்ற எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களும், இளையராஜா, ரகுமான் பாடல்களும் அதில் இருந்தன. இந்த விகடன் இணையதளத்தில் வந்த வீடியோவை மதுமதி என்ற பதிவர் தமது தளத்தில் எடுத்துப்போட்டு ‘எல்லா இசையமைப்பாளர்களும் எப்படி தழுவியிருக்கிறார்கள்  பாருங்களேன்’ என்று ஒரு பதிவு எழுதுகிறார். உடனே கமெண்ட் என்ன வருகிறது என்றால் “அப்படியானால் நம்முடைய இசைஞானி ஒருவரைத்தவிர மற்ற அத்தனைப்பேரும் இப்படித் திருடித்தான் போடுகிறார்களா’ என்பதுபோன்ற தொனியில் உடனடியாக எதிர்வினை ஆற்றப்படுகிறது.

‘ஏங்க நீங்க வீடியோவை சரியாகக் கேட்கவில்லையா, பார்க்கவில்லையா? சரியாக கவனிக்காமலேயே பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல’ என்று அந்தப் பதிவர் பதில் சொல்லுகிறார். ஏனெனில் இளையராஜா தழுவியிருக்கும் டியூன்களையும் கொண்டதுதான் அந்த வீடியோ என்பதே கமெண்ட் போட்டவருக்குத் தெரியவில்லை. அல்லது இளையராஜா அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் அல்ல என்று மட்டுமே நம்புகிற ரகம்.

ஆக, இப்படியொரு பிரமை, இப்படியொரு மயக்கம், இப்படியொரு மூடஎண்ணம், இப்படியொரு அபரிமிதமான தவறான சிந்தனை இளையராஜாவைப் பற்றி நிறையப்பேருக்கு இணையத்திலும் சரி, எண்பதுக்குப் பிறகு பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்தவர்களுக்கும் சரி இருக்கிறது – ஏற்பட்டிருக்கிறது –ஏற்படுத்தப்படுகிறது.

இளையராஜாவை நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லுங்கள்; அருமையான பல பாடல்களைத் தமிழுக்குத் தந்தவர் என்று சொல்லுங்கள்; சில படங்கள் அவரது இசை காரணமாகவே வெற்றி பெற்றிருக்கின்றன என்று சொல்லுங்கள். யாரும் ஆட்சேபணை தெரிவிக்கப்போவதில்லை. 

ஏனெனில் இவையெல்லாமே எல்லா பிரபல இசையமைப்பாளர்களுக்கும் ஏற்படும் விவகாரங்கள்தாம்.

அந்தக் காலத்திலேயே பாடல்களுக்காக மட்டுமே ஓடிய படங்கள் எத்தனை? 

எஸ்விவெங்கட்ராமனுக்கும் சிஆர் சுப்பராமனுக்கும் ஜி. ராமனாதனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை என்ன? அவர்களின் இசை கட்டிப்போட்ட ரசிகர்கள் எவ்வளவு?

பழைய நாட்களை விட்டுவிடுவோம்.

இரண்டு தலைமுறைக்கு முன்புகூட என்ன நடந்தது? கேவிமகாதேவனின் சங்கராபரணம் சாதிக்காத கர்நாடக இசையனுபவமா? அந்த ஒரு படத்திற்காக இந்த நாட்டின் சாதாரண தொழிலாளி முதல் குடியரசுத்தலைவர்வரை கேவிஎம்முக்கு மரியாதை செய்தார்கள். அவரைக் கூப்பிட்டு கௌரவிக்காத சங்கீத சபாவே இந்தியாவில் இல்லை. இந்துஸ்தானி மேதைகளிலிருந்து கர்நாடக இசைமேதைகள்வரை பலரும் வீடுதேடிவந்து கேவிஎம்மைப் பாராட்டிவிட்டு நெக்குருகி நின்றார்கள்.

ஒரு பின்னணிப் பாடகருக்கு ஆயிரம் படத்தில் பாடினாலும் கிடைக்கமுடியாத மரியாதை எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு அந்த ஒரே படத்தில் கிடைத்தது.

கேவிமகாதேவன் மட்டுமா?

தன்னுடைய ஒரே ஒரு பாட்டின் மூலமே பல படங்களை ஓட வைத்திருக்கிறார் எம்எஸ்வி. ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா?’ பாடலுக்காகவே ‘தீர்க்கசுமங்கலி’ படம் ஓடியது ஒருபுறம் இருக்க இன்றைக்கும் வாணி ஜெயராமின் விலாசமே அந்தப் பாடல்தானே?
‘அடி என்னடி ராக்கம்மா’ பாடல் தாரை தப்பட்டைக் கிழிபட பட்டிதொட்டியெங்கும் அடித்துத் தூள் கிளப்பியதா இல்லையா?

தோல்விப்படம்தான் என்றாலும் ‘ரோஜாமலரே ராஜகுமாரியை’க் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவர்கள் இன்றைக்கும் லட்சக்கணக்கில் இருக்கிறார்களா இல்லையா? (முரசு, மெகா டிவி, ஜெயா மேக்ஸ் ஆகிய சேனல்களில் இந்தப் பாடல் நாள்தவறாமல் ஒருமுறையாகிலும் ஒளிபரப்பப்பட்டுவிடுகிறது.)

கேஎஸ்ஜியின் திறமையான திரைக்கதையமைப்பும் வசனங்களும் படத்தின் வெற்றிக்குத் துணைபோயின என்றாலும் ‘கற்பகம்’ என்ற படத்தை நினைத்ததும் நினைவுக்கு வருவது ‘அத்தைமடி மெத்தையடி’தானே?

‘எலந்தப் பயம்’ என்ற ஒற்றைப் பாடல் ‘பணமா பாசமா’ படத்தை இருபத்தைந்து வாரங்களுக்கும் மேல் ஓட வைத்த கதை எத்தனைப்பேருக்குத் தெரியும்?

அந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டுதான் அதுவரை வெளிவந்த தமிழ் இசைத்தட்டுக்களிலேயே அதிகம் விற்பனையான இசைத்தட்டு என்று ஹெச்எம்வி நிறுவனம் அறிவித்த கதை தெரியுமா?
இதுபோன்ற பட்டியல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.

இப்போதுகூட இவற்றையெல்லாம் எதற்காகச் சொல்ல நேர்ந்திருக்கிறது என்றால் காலம்காலமாகத் திரையுலகில் நடந்துவரும் பல சர்வசாதாரண நிகழ்வுகளையெல்லாம் ஏதோ இளையராஜா வந்து செய்த சாதனை என்பதுபோல் பலபேர் நினைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நேற்றுக்கூட ஒரு தளத்தில் யாரோ ஒரு அன்பர், ‘இளையராஜா தமது பாடல்களினாலேயே எத்தனைப்பேரை லட்சாதிபதியாக்கியிருக்கிறார் தெரியுமா?’ என்று எழுதியிருக்கிறார்.

திரையுலகில் இதெல்லாம் சர்வசாதாரணம். ஐடியில் பணிபுரியும் தம்பி ஒருவர் வந்திருந்தார். சென்னையைச் சேர்ந்தவர். ‘நாங்க ரொம்ப பெரிய பணக்காரரா இருந்தோம். நிலம் நீச்சு என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒரேயொரு படம் எடுத்து அத்தனை சொத்துக்களும் போச்சு. இப்ப வாடகை வீட்லதான் இருக்கோம். காரணம் அப்பா ஒரேயொரு படம் எடுத்து அத்தனையும் இழந்துட்டார். வெறும் புதுமுகங்கள் நடித்த படம். இளையராஜா மியூசிக் ஒன்றுக்காகவே ஓடிடும்னு நினைச்சு எடுத்த படம். மியூசிக்கல் சப்ஜெக்ட். படமோ பாட்டோ எடுபடலை. பயங்கர நஷ்டம்” என்றார். இதற்காக இளையராஜா மீது குறையோ குற்றமோ சொல்லவா முடியும்? திரையுலகில் அன்றாடம் கடந்துபோகும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரி, இப்போது நாம் கங்கை அமரன் விஷயத்துக்கு வருவோம். 

கங்கை அமரனை எனக்கு நேரில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. இளையராஜாவை ஒரு ஏழெட்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவரது அண்ணன் பாஸ்கருடன் சில நாட்கள் பழகியிருக்கிறேன். ஆனால் கங்கை அமரனை இளையராஜா பெங்களூரில் ஆர்க்கெஸ்டிரா நடத்த வந்தபோது ஒரேயொரு முறை சந்தித்து ஒரு ஒருமணி நேரம்போல பேசிக்கொண்டிருந்திருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் அந்த ஒரு மணி நேரத்திலேயே எத்தனை விஷயங்கள் பேசினார் என்பதை நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது., நகைச்சுவைக்கும் கலகலப்பிற்கும் சொந்தக்காரர் அவர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களின் வெற்றி குறித்தெல்லாம் பல விஷயங்கள் பேசினார் அவர். விஸ்வநாதனின் திறமை குறித்து அந்த அளவுக்குப் பெருமைப்பொங்கப் பேசினார்.

பாடல்களுக்கு நடுவில் வரும் இடையிசை குறித்துப் பேசினோம். BGM என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். இடையிசை, இன்டர்லூட் என்று இந்தக் காலத்தில் சொல்லிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருக்கும் அதே சமாச்சாரம்தான். அந்த இடையிசையில் அப்போதுதான் இளையராஜா கொஞ்சம் மாற்றத்தைச் செய்ய ஆரம்பித்திருந்தார். என்ன மாற்றம்?

விஸ்வநாதனும் மற்றவர்களும் பிஜிஎம்மில் ஒரு அழகிய கோர்வையைச் செய்திருப்பார்கள். அதுவே ஒரு அற்புதமான இசைக்கலவையாக இனிமைத்துணுக்காக இருக்கும். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் வரும் அந்த இசைத்துணுக்கு அப்படியே மனதில் இடம் பிடித்துவிடும். முதல் அடி சரணத்திற்குப்பின் வரும் இரண்டாவது சரணத்தில் சில சமயம் மிகச்சில வேறுபாடுகள் செய்வார்கள். சிலவற்றை அப்படியே இரண்டாவது சரணத்திலும் போட்டுவிட்டு மூன்றாவது சரணத்திற்கு மட்டும் வேறு மாதிரி போடுவார்கள். எப்படிப்போட்டாலும் ஒரு முழுமை அதில் இருக்கும். கவனித்துப் பார்த்தால் தெரியும். அதுவும் ஒரு குட்டிப்பாட்டுத்தான். கவிதை மொழியில் சொன்னால் அது ஒரு குட்டிக்கவிதை. மிகச்சிறிய ஹைக்கூ.

இதற்கு உதாரணமாக நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்லலாம். ஆனால் ஒரேயொரு பாடல் எனில் ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாடலைக் கேளுங்கள்.

அடுத்து வருபவர்களும், புதிதாக வருபவர்களும் - தங்களுக்கென்று ஏதாவது வித்தியாசம் செய்து காட்டவேண்டாமா? இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார். மறுபடி அடுத்த சரணத்தில் இதையே இன்னும் அங்கே கொஞ்சம் மாற்றி இங்கே கொஞ்சம் மாற்றி என்று வித்தைகள் செய்து பாடலை முடிக்கிறார்.

ரிசல்ட் என்னவென்றால் கேட்பதற்கு பழைய வழக்கமான பாடல்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பாடல்போல் ஒலிக்கிறது. தோன்றுகிறது.

பின்னர் இதே பாணியைத் தம்முடைய பாணியாகவும் அவர் ஆக்கிக்கொண்டுவிட்டார்.
பாடல் வித்தியாசமாக ஒலிக்கிறது சரி; பிரச்சினை என்னவென்றால், இந்த இசைத்துணுக்குகள் கோர்வையாக இல்லாத காரணத்தினால் எந்த வாத்தியக்காரர்களாலும் தனித்தனி இழைகளாக வாசிக்கப்பட்ட இந்த இசைத்துணுக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது.
ஏன் இளையராஜாவுக்கே அந்த இசைத் துணுக்குகள் ஞாபகமிருக்க வாய்ப்புகள் இல்லை. அவர் ‘எழுதிக்கொடுத்துவிடுகிறார்’ என்கிறார்களே அது இதைத்தான்.

இதனை ‘எழுதிக்கொடுக்காமல்’ அந்தக் கடவுளே வந்தாலும் வாசிக்கமுடியாது. அதனால்தான் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற வேண்டுமென்றால் மிக அதிகமான பயிற்சிகள் நடைபெற வேண்டியுள்ளது. நிறைய ஒத்திகை திரும்பத் திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.

ரிகர்சல்……………மீண்டும் மீண்டும் ரிகர்சல் என்பார்கள்!

அப்படிப் பார்த்துக்கொண்டு போனாலும் நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் ‘இளையராஜாவின் ஸ்பெஷல்’ என்று சொல்லப்படும் அந்த இன்டர்லூட் எப்படியோ ‘ஒப்பேற்றப்பட்டுத்தான்’ அடுத்த சரணத்தை எட்டிப்பிடிக்கிறது என்பதை சற்றே நுணுக்கமாக கவனிக்கிறவர்களால் கண்டுணர முடியும். இதனால் கிடைத்த லாபம் என்னவென்றால் சாதாரண இசைக்கோஷ்டிகளால் திரையில் ஒலித்த, அல்லது டேப்பில் ஒலித்த அதே இன்டர்லூடை மேடையில் வாசிக்கமுடியாது. பாடலைக் கேட்பவர்கள் “என்ன இருந்தாலும் ஒரிஜினல் மாதிரி இல்லையே” என்று சொல்லிவிடுவார்கள்.

“என்ன இருந்தாலும் இசைஞானி பாடலை எல்லாம் அவ்வளவு சுலபமா வாசிக்கமுடியுமா? அதுக்கெல்லாம் ஞானம் பத்தாது. அந்த நுணுக்கங்கள் எல்லாம் அத்தனை சுலபமாக வந்துவிடாது’ என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள்.

என்ன ஆகும் தெரியுமா?

பல பாடல்கள் அதோ கதியென்று விடப்பட்டுவிடும்.

இன்னிசைக் கோஷ்டிகள் இப்படிப்பட்ட பாடல்களை சத்தமில்லாமல் கைகழுவிவிட்டு அடுத்த பாடலுக்கு நகர்ந்துவிடுவார்கள்.

இளையராஜாவின் மிகமிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஓரிரண்டை மட்டும் வாசித்துவிட்டு இன்றைய ஹிட் பாடல்களுக்கும் அந்தக் காலத்தின் ‘எவர்கிரீன்’ பாடலுக்குமாகச் சென்றுவிடுவார்கள். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு பாடல் ஐம்பது வருடங்கள் அறுபது வருடங்கள் எழுபது வருடங்கள் என்று தொடர்ந்து நிலைக்க மக்கள் முணுமுணுக்கவேண்டும். இன்னிசைக் கோஷ்டிகள் தவறாமல் ஒவ்வொரு மேடையிலும் பாடவேண்டும். ஒலிபெருக்கிகளிலும், சேனல்களிலும் இடைவெளி குறையாமல் ஒலிக்க ஒளிக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் “நான் வீட்டில் எத்தனை சிடிக்கள் வாங்கிவைத்திருக்கிறேன் தெரியுமா? என்னுடைய ஐபாடில் இருப்பதெல்லாம் வெறும் அவருடைய பாடல்கள் மட்டுமே” என்பதுபோன்ற சவடால்கள் எல்லாம் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவித்துவம் பெற்றுத்தந்துவிடாது.

“எதுவும் ஒரு ஒழுங்கமைதியுடனும் கோர்வையுடனும் இருந்தால்தான் நினைவில் தங்கும். 

‘மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை’ 

என்ற வரியைச் சொல்லிப்பாருங்கள். ஒரு கோர்வை இருக்கிறது இல்லையா? ஒருமுறை படித்துவிட்டால் ஜென்மத்துக்கும் மறக்காது. எதிலும் கோர்வை வேண்டும். துண்டுத் துண்டாய்ச் சொல்லப்படும் வார்த்தைகள் எத்தனை வலிமையாக இருந்தபோதிலும் சீக்கிரத்திலேயே மறந்துபோய்விடும்” என்பார் கொத்தமங்கலம் சுப்பு.

அம்மாதிரி இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்க வேண்டிய இளையராஜாவின் சில பாடல்கள் காணாமல் போய்விட்டதற்கு அவருடைய இந்தப் ‘புதுமையான’ இன்டர்லூடும் ஒரு காரணம். கோர்வை இல்லாததால் கவனம் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது. சாத்தியமில்லை. கவனம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் வாசிக்கமாட்டார்கள். பேசாமல் அடுத்த விஷயத்துக்குப் போய்விடுவார்கள்.

கங்கை அமரன் சொன்னார். “அண்ணனின் இந்த வகையான பிஜிஎம் எப்படி நிற்கப்போகிறது நிலைக்கப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். நாம விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிஜிஎம் பற்றிப் பேசணும்னா அதெல்லாம் யாராலும் முடியாத விஷயம். ஏன்னா அவங்களுடைய பிஜிஎம் ஒன்றே போதும். அதை மட்டுமே எடுத்துக்கொண்டு இன்னொரு முழுப்பாடலுக்கு இசையமைத்துவிட முடியும். அப்படிப்பார்த்தால் அந்த பிஜிஎம்மை மட்டுமே தனியாக எடுத்து நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான புது மெட்டுக்களைப் போட்டுவிட முடியும். அப்படிப்பட்ட பிஜிஎம்கள் அவை.  

அவங்களுடைய எந்தப் பாடலை வேணும்னாலும் சொல்லுங்க நான் அதை அப்படியே பிஜிஎம் உட்பட வாயாலேயே இசைத்துக்காட்டிவிடுவேன். அந்த அளவுக்கு மனப்பாடம். மனப்பாடம் மட்டுமல்ல எங்க ரத்தத்துலேயே ஊறிப்போய்க்கிடக்கற பாடல்கள் அவர்களுடையவை”

அவர் மேலும் சொன்னார். “விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைச்சது ஆகட்டும், தனியா விஸ்வநாதண்ணன் இசையமைச்ச பாடல்கள் ஆகட்டும். அத்தனைப் பாடல்களும், வெறும் முக்கியமான பாடல்கள்னு இல்லை – அவங்களுடைய அத்தனைப் பாடல் கலெக்ஷனும் எங்களிடம் இருக்கு. ஒரேயொரு படம், ஒரேயொரு பாடல்கூட மிஸ் ஆகலை. அத்தனையும் இருக்கு. இந்தக் கலெக்ஷன் விஸ்வநாதண்ணனிடம்கூட இல்லை. விஸ்வநாதண்ணனே “பல பாட்டுக்கள் எங்கிட்ட இல்லை. குடுப்பா” அப்படின்னு என்னைக் கேட்டிருக்காரு. அந்த அளவுக்கு அந்த நாட்களிலிருந்தே பொக்கிஷம் போல் சேர்த்துவைத்திருக்கிறோம்”

இதனையெல்லாம் இங்கே சொல்வதற்குக் காரணம் ஏதோ அண்ணனுக்கும் தம்பிக்கும் இப்போது ஆவதில்லை (இதுவே உண்மையா என்பது தெரியாது) என்பதனால் அவர் இப்போது இப்படிப் பேசுகிறார் என்பதுபோல் யாரும் பின்னூட்டம் போட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். இருவரும் ஒன்றாக இருந்த காலத்திலேயே எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டவர்தான் கங்கை அமரன்.

கங்கை அமரனிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைவிடவும் அவரைப்பற்றி நினைத்தால் உடனே ஞாபகம் வரக்கூடிய சுவாரசியமான சம்பவம் ஒன்றும் இருக்கிறது. கங்கைஅமரனுக்கு நிறைய பெயர்கள். கங்கை அமரன் என்பது மூன்றாவது பெயர் என்று நினைக்கிறேன். பிறந்தபோது வைத்த பெயர் வேறு. அதற்குப்பின்னர் அவருடைய பெயர் அமர்சிங். சினிமாவில் வாய்ப்புத்தேடிய சமயங்களில் அவரது பெயர் அமர்சிங்தான். தம்மை ஒரு பாடகராக நிலைநிறுத்திக்கொள்ளத்தான் அமரன் வந்தாராம். அப்படி வாய்ப்புத்தேடி கவிஞர் வாலியை அணுகியிருக்கிறார். வாலி சொன்னாராம். “உன்னுடைய பெயர் அமர்சிங். நீ பாடத்தெரியும் என்கிறாய். வா இப்படி. அமர். அமர்ந்தாயிற்றா சிங்” என்றாராம். இதையெல்லாம் கங்கை அமரன் சொல்லிக்கேட்கவேண்டும்.

ஆயிற்றா?




இதோ இன்றைய தினத்தந்தியில்(06-07-2013) இன்னொரு செய்தி வந்திருக்கிறது. இதுவும் கங்கை அமரன் பேசியதுதான். தேனான்டாள் பிலிம்ஸ் ராமநாராயணன் தயாரித்து இயக்கும் 126-வது படமான ‘ஆர்யா சூர்யா’ படவிழாவில் கங்கை அமரன் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அவர் கூறுகிறார். “நான் இளையராஜாவின் பாடல்களைக் காப்பியடித்து இசையமைத்து இருக்கிறேன். 

அதேபோல் இளையராஜா எம்எஸ் விஸ்வநாதன் பாடல்களை காப்பி அடித்து இருக்கிறார். எத்தனைப் பாடல்கள் என்று என்னால் சொல்லமுடியும். எந்தெந்த பாடல்கள் என்பது எனக்கும் இளையராஜாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.


இளையராஜாவுக்கு கிராமிய பாடல்களுக்கு மட்டுமே இசையமைக்க முடியும் என்று முதலில் பேசினார்கள். சிகப்பு ரோஜாக்கள் படம் அதை மாற்றிக்காட்டியது. கர்நாடக சங்கீதமும் அவருக்குத் தெரியும் என்று நிரூபித்தது சிந்துபைரவி படம்” மேற்கண்டவாறு கங்கை அமரன் பேசினார் என்று சொல்கிறது தினத்தந்தி.

இந்தப் பதிவுக்கு முன்னர் இளையராஜா எழுதும் நோட்ஸ் பற்றிய பதிவொன்றை எழுதுவதாக டி.சௌந்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்தேன். அதனை முந்திக்கொண்டது இந்தப் பதிவு.

இந்தச் செய்திகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதற்குக் காரணம் ‘இளையராஜாவையும் தமிழுக்குக் கிடைத்த நல்லதொரு இசையமைப்பாளர் என்ற பொதுப்பார்வையில் பாருங்கள்’ என்பதற்குத்தான். அதில்லாமல் ‘பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா, மொசார்டுக்கு இசை சொல்லிக்கொடுத்தவர், பாக்கிற்கு டியூஷன் எடுத்தவர்’ என்றெல்லாம் சொல்வதால்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. இதோ இப்போதுகூட ஃபேஸ்புக்கில் யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர் சொன்னார். ‘இளையராஜா தமிழ்நாட்டில் பிறக்காமல் வெளிநாட்டில் மட்டும் பிறந்திருந்தால் பீத்தோவனை விடவும் உயர்வாக மதிக்கப்பட்டிருப்பார்’ என்று எழுதியிருக்கிறார்களாம். கங்கை அமரன் ‘இளையராஜா எம்எஸ்வியைக் காப்பியடித்துப் பாடல்கள் போட்டார்’ என்கிறார்.


பீத்தோவன், மொசார்ட், பாக் இவங்கெல்லாம் எங்க ஞானிக்கு முன்னால் ஒண்ணுமே இல்லை என்கிறது ஒரு கூட்டம். இப்படியெல்லாம் எழுதி எழுதியே பாவம் அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.