Monday, January 14, 2013

லியோனியின் பட்டிமன்றமும் பாரதிதாசனும்


திருவிழா நாட்களில் எல்லா முக்கிய சேனல்களிலும் பட்டிமன்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகிவிட்டது. ஆரம்பித்த புதிதில் சன் டிவி ஆரம்பித்துவைத்த இந்தக் கலாச்சாரம் இப்போது எல்லா சேனல்களையும் பீடித்துவிட்ட நோயாகவே மாறிவிட்டது. எல்லா முக்கிய சேனல்களும் வானொலியின் நிலைய வித்துவான்கள்போல் பட்டிமன்றத்துக்கென்று சில நிரந்தர பேச்சாளர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவி சாலமன் பாப்பையாவை நிரந்தர வித்துவானாக வைத்துக்கொண்டிருப்பது போன்றே கலைஞர் டிவி திண்டுக்கல் லியோனியை நிரந்தர பட்டிமன்ற வித்துவானாக வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தலைமையில்  சிலரைத் தவிர மற்ற பேச்சாளர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பொங்கலுக்கு அம்மாதிரி மாறிவந்த பேச்சாளர்களில் ஒருவர் அன்பு. இவர் பேராசிரியர் என்றும் ஏதோ கல்லூரிக்கு முதல்வர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவர் பேசும்போது பாரதிதாசனைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் ஒரு அற்புதமான தகவலைச் சொன்னார். அதாவது அண்ணா முதல்வராக இருந்தபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு ஒரு விழா எடுத்து பொற்கிழி வழங்கியதாகவும் அதனைப் பெறப்போகும் கவிஞரை அண்ணா “நான் என்னதான் நாட்டுக்கு முதல்வராக இருந்தாலும் நீங்கள் ஒரு பெரிய கவி. நான் கொடுக்கும் இந்தப் பொற்கிழியை வாங்குவதற்கு உங்கள் கரம் தாழ்ந்துபோகக்கூடாது. என்னுடைய கரம் கீழேபோகலாம். அதனால் இதனை நான் என் கையில் வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் கரத்தை மேல்நோக்கிக் கொண்டுவந்து அதனை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.”- என்பதாக ஒரு அரும்பெரும் தகவலைச் சொன்னார்.

கேட்டதும் தலை கிறுகிறுத்துப் போய்விட்டது. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது, அண்ணா எப்போது இப்படி சொன்னார், பாரதிதாசன் அதுபோன்று நடந்துகொண்டாரா……………. இப்படியொரு சம்பவம் எங்கு நடந்தது ஒன்றுமே புரியவில்லை.

காரணம் அண்ணா வெற்றிபெற்று முதல்வராக வந்தது 1967-ல். பாரதிதாசன் இறந்தது
1964-ல்.  


இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தோராம் தேதி. அப்படியிருக்க இப்படியொரு சம்பவம் எப்படி நடந்தது என்பதே புரியவில்லை. ஒருவேளை திராவிட முன்னேற்ற கழகம் பாரதிதாசனை மட்டுமே தமிழின் ஆகச்சிறந்த ஒரே கவிஞராக உயர்த்திப் பிடித்ததனால் அண்ணா முதல்வராக வந்ததும் ‘நம்மை உயர்த்திப் பிடிச்ச ஆட்கள் ஆட்சிக்கு வந்துட்டாங்க. நாம இனிமேலும் மண்ணுக்குள்ளேயே புதைஞ்சி கிடக்கிறது நல்லதுக்கில்லை. போய் அவங்க கொடுக்கற மரியாதையை எல்லாம் ஏத்துக்கலாம்’ என்று நினைத்து எழுந்து வந்துவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. அதுவும் பேசியது யாரோ ஒரு பொதுஜனம் என்றாலும் பரவாயில்லை.  கல்லூரியின் பேராசிரியர் தற்சமயம் முதல்வராகவும் பொறுப்பேற்றிருப்பவர் இப்படித் தப்பும் தவறுமாக ஒரு தகவலை அதுவும் நிறையப்பேர் பார்க்கும் ஒரு பண்டிகை நாளில் சொல்கிறார் என்றால் அதை எந்த வகையில் சேர்ப்பது என்பதே தெரியவில்லை. அத்தனையும் தவறு; பொய்யாய்ப் புனையப்பட்ட கதை என்பது அவருக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. இதனை அவர் எங்கே படித்தார் அல்லது யார் அவரிடம் சொன்னார்கள் அப்படியே யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் அதனை உலகம் முழுதும் ஒளிபரப்பாகும் ஒரு பெரிய டிவி சேனலில் சொல்லும்முன்பு சரிபார்த்துக்கொண்டாரா என்பதும் தெரியவில்லை. இப்படியொரு தவறான தகவலை அவர் சொல்லியபோது லியோனி அவரைத் திருத்தவில்லை. ஒருவேளை அடுத்த பேச்சாளரை அழைப்பதற்கு முன்பு இதுபற்றிய சரியான தகவலை லியோனி சொன்னாரா என்பதும் தெரியவில்லை(ஏனெனில் அதன் பிறகு அந்தச் சேனலைத் தொடரும் வாய்ப்பு இருக்கவில்லை).

சங்கடம் என்னவென்றால் தமிழ்நாட்டின் ஒரு கல்லூரி முதல்வர் நடக்காத ஒன்றை நடந்ததுபோலும் அதுவும் மிகவும் பெருமைக்குரிய சம்பவம் என்பதுபோலும் ஒரு பிரபல சேனலில் சொல்லுகின்றார். பல தகவல்கள் அறிந்த லியோனி போன்றவர்கள் அதனை மறுத்துத் திருத்தாமல் இருக்கிறார்கள்.

அதாவது பரவாயில்லை. அந்தப் பேச்சின் தொகுப்பு ஒன்றும் நேரலையல்ல. கலைஞர் டிவியின் ஆசிரியர் குழுவால் பார்க்கப்பட்டு செப்பனிடப்பட்டு எடிட் பண்ணப்பட்டுத்தான் ஒளிபரப்பாகிறது. அங்கிருந்த ஒருத்தருக்குக்கூடவா இத்தனைப் பெரிய தவறு தெரியவில்லை? சாதாரண அடிப்படைத் தகவல்கள்கூடத் தெரியாதவர்கள்தாம் இம்மாதிரி பட்டிமன்றப் பேச்சுக்கள் போன்றவற்றை எடிட் செய்யும் பொறுப்பில் உட்காருகிறார்களா? சில பகுதிகளை டிலீட் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றைத்தவிர அவர்களுக்கு வேறு எந்தத் தகவல்களும் தெரியாதா? அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது பாரதிதாசன் உயிருடன் இருக்கவில்லை என்ற தகவல்கூடவா யாருக்கும் தெரியவில்லை? யார் என்ன சொன்னாலும் அதனைக் கொஞ்சம்கூடச் சரிபார்க்காமல் அப்படியே ஒளிபரப்பிவிடுவார்களா? பத்திரிகைகள் மற்றும் இம்மாதிரி ஊடகங்களில் இருப்போர் பொதுமக்களைவிடவும் மேலதிகத் தகவல்கள் தெரிந்து இருக்கும் காலமெல்லாம் மெதுவே 
மறைந்து வருகிறதா? வருத்தமாக இருக்கிறது.

இந்தப் பேராசிரியர்களெல்லாம் சங்க இலக்கியத்திலிருந்து நேரே அப்படியே சொய்ங் என்று இறங்கிவந்து அவர்கள் மையம் கொண்டு நிற்கும் இடமே பாரதிதாசன்தான். அப்படியே தமிழ் தமிழ் உணர்வு என்று பேசுபவர்க்கெல்லாம் ஆதர்சம் அறிஞர் அண்ணா. இவர்கள் இருவரையும் இணைத்து ஏதாவது சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர். யாரோ சொன்ன இந்த டுபாக்கூர் கதையை அவிழ்த்து விட்டுவிட்டார்.
உண்மையில் இப்படியொரு சம்பவம் பாரதியார் வாழ்வில் நடந்ததாகத்தான் சொல்வார்கள். அதுவும் அன்றைய ராமநாதபுரம் சேதுபதி பாரதிக்கு ஏதோ பொற்கிழி கொடுக்கப்போக “நீர் கொடுக்க நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய கை தாழாது. நீர் உம் கையில் வைத்துக்கொள்ளும். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று பாரதி சொல்லி எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. இது ஒரு சம்பவம்.

பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி கொடுத்த சம்பவமும் நடைபெற்றது.
பாரதிதாசன் பிறந்த நாளுக்காக திமுகழகம் சார்பில் நிதி திரட்டப்பட்டு அதனை ஒரு விழாவில் அண்ணா அவரிடம் வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட பாரதிதாசன் அண்ணாவைப்பற்றியே மிக மோசமாக அந்த விழாவில் பேசப்போக அது அப்போது 


மிகப்பெரிய பரபரப்பாகிவிட்டது. திமுகவினரெல்லாம் பாரதிதாசன்மீது ஏகத்துக்கும் கடுப்பெய்திவிட அப்போது திமுகவிலிருந்த கண்ணதாசன் பாரதிதாசன் மீது செம கோபம் கொண்டு ‘குரல்கெட்ட குயிலே கேள்!’ என்ற தலைப்பில் பாரதிதாசனைக் கடுமையாகத் தாக்கி தென்றல் பத்திரிகையில் கவிதை எழுதப்போக அது இன்னமும் பரபரப்பாகிவிட்டது. (இந்தக் கவிதை கண்ணதாசனின் கவிதைத் தொகுதியில் இன்றும் காணக்கிடைக்கிறது) அதன்பிறகு அண்ணா தலையிட்டு பாரதிதாசன் மீது யாரும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று தடுக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இந்த விஷயங்களெல்லாம் அந்தப் பேராசிரியருக்குத் தெரியாது போலும். ஏதோ சொல்லவேண்டுமே என்பதற்காக எதையோ புனைகதையாகப் புனைந்து சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


இனிமேலாவது இதுபோன்ற பட்டிமன்றங்களில் பேச வருகின்றவர்கள் சரியான தகவல்களுடனும் பொறுப்புணர்வுடனும் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.