Sunday, February 24, 2013

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்


பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்திகள் எல்லாரையும் உலுக்கி எடுத்திருக்கிறது. ஈழம் உட்பட எல்லா விஷயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள அரசாங்கத்தையும் அவர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவி புரிந்த இந்திய அரசாங்கத்தையும் ஆதரித்துவந்தவர்கள் கூட இந்தப் பச்சைபடுகொலையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கின்றனர். சில பேர் நமக்கேன் வம்பு கொஞ்ச நாட்களுக்கு வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவோமே என்று கள்ள மவுனம் சாதித்துவருகின்றனர்.

நம்முடைய அரசியல் தலைவர்கள் எல்லாரும் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்’ என்றிருக்கிறார். ‘பாலச்சந்திரனுக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. அவன் ஒரு குழந்தை. அந்தக் குழந்தை எந்தவிதக் குற்றமும் புரியவில்லை. பிரபாகரனின்  மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அந்தக் குழந்தையைச் சுட்டுத்தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த ஆதாரங்களையும் இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மையும் மனப்பான்மையும் எண்ணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும்போது முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி ஞாபகம்தான் வருகிறது.’ என்பவர், இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி “பாலச்சந்திரன் என்ற இளம்தளிரை துப்பாக்கிக் குண்டுகளால் கருகச்செய்த கோர நிகழ்ச்சியைக் காணும்போது கொடுமை கொடுமை இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காணமுடியாது. உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்குகளின் மத்தியிலே பிணைக்கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்? அந்த இளைஞனை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்? பாலச்சந்திரனின் மூத்த சகோதரனைப் போர்க்களத்திலே கொன்றழித்த மாபாவிகள் பாலச்சந்திரனை நிராயுதபாணியாக நிற்கவைத்து மூன்றடி தூரத்தில் இருந்தவாறு சுட்டுக்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்?’ என்று குமுறித்தள்ளியிருக்கிறார்.

வைகோ இப்படிக் கொதிக்கிறார். “நம் போற்றுதலுக்குரிய தேசியத்தலைவர் பிரபாகரினின் இளையபுதல்வன் 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் அச்சின்னஞ்சிறு பாலகனையும் 5 குண்டுகளைச் சுட்டுக் கொலைசெய்த கொடுமை கோடானுகோடித் தமிழர்களை மனம் பதறச் செய்து உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது” என்றிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் “12 வயது பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் சிறைபடுத்தப்பட்டு பிஸ்கெட் போன்ற பொருட்களைக் கொடுத்து பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை மூலம் தெரிய வருகிறது. இது ஒன்றே சிங்கள இனவெறி அரசாங்கத்தின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு போதுமான ஆதாரமாகும். எனவே போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணை வேண்டும்” என்று கொதித்திருக்கிறார்.

விஜயகாந்த் “12 வயதே நிரம்பிய பால்வடியும் முகம் மாறாத பாலச்சந்திரன் சிங்களராணுவத்தால் கொல்லப்படுவதற்கு சில வினாடிகள் முன்பு எடுக்கப்பட்டு இருக்கின்ற புகைப்படத்தையும் சடலமாக இருக்கின்ற புகைப்படத்தையும் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். உலகம் தெரியாத அப்பாவி குழந்தையாக சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிலவறையில் பசிக்கு ருசி அறியாது என்பதுபோல் கைக்கு கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு நல்ல நிலையில் இருக்கும் குழந்தை சற்று நேரத்தில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சடலமாக கிடக்கின்ற காட்சி காண்போரைக் கண்கலங்க வைக்கிறது. ……இலங்கை மண்ணிலே பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசு எப்பொழுதும் போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது செயல்பட வேண்டும்” என்றிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் “பன்னிரண்டே வயதான அந்தச் சிறுவனை நேருக்குநேர் நிறுத்தி மிக அருகில் நின்று துப்பாக்கியால் சுட்டு அவன் நெஞ்சைத் துளைத்துக்கொன்றுள்ளது சிங்கள இனவெறி ராணுவம். இது போர்க்குற்றம் அல்ல இந்தப் போரே குற்றம் என்பதை சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றிருக்கிறார்.

மருத்துவர் ராமதாசும் இதே போன்று தமது வருத்தத்தையும் குமுறலையும் தெரிவித்திருக்கிறார்.

கவிதை நெஞ்சம் குமுறுவதை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார், “பாலச்சந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும்போது இருதயம் ஒருகணம் நின்றுவிட்டது. 
 என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள் மிருகம்கூட அவனைக்கண்டு ஒதுங்கிப்போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நிகழும்போது என்னதான் நினைத்திருக்குமோ அந்த கொலைக்களத்துக் குலக்கொழுந்து? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான்.

வாழைத்தண்டு மார்பில் வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப்போன தோட்டாக்கள். கண்கள் என்ற உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன். ஒரு பிள்ளையைக் கொல்லவா பீரங்கி? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு?......................ராஜபட்சே கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப்போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப்போகிறார்கள்? பால்முகம் மாறாத பாலகனே! பாலச்சந்திரனே! அபிமன்யுபோல அஞ்சாமல் களப்பலி ஆனவனே! அழுகிறோம். சாவை மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து சிந்திய ரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து” என்று கண்ணீரைக் கொட்டியிருக்கிறார் அவர்.

இந்த அளவுக்குத் தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்று பார்த்தோமானால் நேற்றைக்கு அல்ல, முந்தாநாளோ அதற்கு முந்தின நாளோ நடைபெற்றது அல்ல; போன வாரம் நடைபெறவில்லை. நடைபெற்று ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. 2009-ம் வருடம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெற்று உலகையே குலுக்கிப்போட்டிருக்கவேண்டிய சம்பவம் இது. அப்படி எதுவும் அப்போது நடைபெறாமல் இப்போது ‘லேசான குலுக்கல்களுக்காக’ எப்படியோ யாராலோ பந்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பவமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

பிரபாகரனின் பச்சிளம் பாலகனான இந்தக் குழந்தை பரிதாபமாக செத்துக்கிடக்கும் இந்தப் படங்களும் புதியவை அல்ல; இணையதளங்களில் வலம் வருகிறவர்களுக்கு இந்தப் படம் மிகப்பழைய ஒரு படமே. சில பத்திரிகைகளில் குறிப்பாகச் சொல்லப்போனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட படங்கள்தாம் இவை.

அப்போதெல்லாம் ஏற்படுத்தாத தாக்கத்தை நம்முடைய தலைவர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் இந்தப் படங்கள் இப்போது ஏன் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் கேள்விக்குரியது. 

அந்தப் படங்களுடைய பின்னணி பற்றியும் உண்மைத்தன்மை பற்றியும் சாதாரணர்களான நமக்குத் தெரியாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. குப்பனுக்கும் சுப்பனுக்கும், ராமசாமிக்கும் நாகசாமிக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். கருத்துத் தெரிவித்திருக்கிற ஆட்சியாளர்கள், பெரியவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குக் கூடவா அந்தப் படங்களைப் பற்றிய தகவல்களும் பின்னணிகளும் உண்மைத்தன்மைகளும் தெரியாமல் போய்விட்டன? அப்போதெல்லாம் ஒரு சிறிய முனகலைக்கூடத் தெரிவிக்காதவர்கள் இப்போது புரண்டு புரண்டு அழுவதும் புலம்புவதும் கங்கையையும் காவிரியையும் இணைத்த அளவுக்குக் கண்ணீர் வடிப்பதும் ஓலமிடுவதும் ஒப்பாரி வைப்பதும் புதிராக இருக்கிறது.

அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் பார்வைக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய செய்திகளும் அப்போதே வரவில்லையா? ஸ்டாலினுக்கு, பேராசிரியர் அன்பழகனுக்கு அப்போதே தெரியாதா?


ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துவதாக’ இப்போது குமுறும் ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்போதே இந்தப் படங்கள் தென்படவில்லையா?

நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் ராமதாஸுக்கும் தொல்.திருமாவுக்கும் சீமானுக்கும் புத்தம் புதிய செய்திகளா இந்தப் படங்களும் இவைபற்றிய தகவல்களும்?

தன்னுடைய சமூகத் தொடர்புகளை ஈழ விடுதலைப் போராளிகளுடன் ஆரம்பித்த விஜயகாந்துக்கு இந்த விஷயம் வரவே இல்லையா?

‘காலையில் தினமும் கண்விழித்தெழுவதற்கு முன்பேயே தொலைபேசியில் என்னை அழைக்கும் கரகரக் குரல் கலைஞருடையது’ என்றெல்லாம் சொந்தம் கொண்டாடி எந்நேரமும் ஆட்சியாளர்கள் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய தகவல்களும் இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கக் கிடைத்தனவா?

என்ன சொல்லுகிறார்கள் இவர்கள். என்ன செய்ய முயலுகிறார்கள்?

ஒன்றும் புரியவில்லை.

அப்போதே இந்தப் படங்கள் பார்க்கக் கிடைத்திருந்தபோதிலும் அவைபற்றிய உண்மைத்தகவல்கள் தெரியாமல் இருந்து இப்போது சேனல்4 தொலைக்காட்சி ‘உறுதிசெய்தபிற்பாடுதான்’ இவர்களுக்கு உணர்வுவந்து கொதித்து எழுந்திருக்கிறார்களா?

அல்லது இந்து பத்திரிகை தெரிவித்திருப்பதனால்தான் இவர்களின் ‘சந்தேகம்’ போக்கப்பட்டதா?

ஏற்கெனவே மூன்றுமுறையோ நான்கு முறையோ பிரபாகரனைக் கொன்றுவிட்டு ஒருமுறை Funeral today என்று வெளியிட்ட பத்திரிகைதானே இந்து? அப்புறம் ‘இந்தமுறை மட்டும்’ எப்படி இந்துவின் மீது நம்பிக்கை வந்தது?

இந்து பத்திரிகையை விடுவோம். நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் எல்லாம் இத்தனை நாட்களும் என்ன செய்துகொண்டிருந்தன? தமிழில் வரும் புலனாய்வு பத்திரிகைகள் என்ன அவ்வளவு சாதாரணமானவையா?

மதுரையிலிருந்து கோபத்துடன் கோபாலபுரம் வீட்டிற்கு வரும் அழகிரி வீட்டுக்குள்போய் தனியறையில் தயாளுஅம்மாளிடம் என்ன பேசினார் எப்படிக் குமுறினார் என்பதையெல்லாம் அடுத்தவாரமே வெளிக்கொண்டுவந்துவிடுவதில்லையா நம் பத்திரிகைகள்?

கோபித்துக் கொண்டிருந்த நாட்களில் ஜெயலலிதா சசிகலாவை போயஸ்கார்டனுக்கு வரவழைத்து தனியறைக்குக் கூட்டிச்சென்று எப்படியெல்லாம் பேசினார் இருவரும் என்னென்ன பேசிக்கொண்டார்கள் ஜெயலலிதா எங்கெங்கே குரலை உயர்த்தினார் சசிகலா எங்கெல்லாம் அழுதார் அப்புறம் எப்படி சமாதானத்துக்கு வந்தார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாகப் புட்டுப்புட்டு வைப்பதில்லையா நம் பத்திரிகைகள்?

தினத்தந்தி என்ன அவ்வளவு சாதாரணப் பத்திரிகையா? தமிழகத்தின் எங்கேயோ மூலையில் முட்டுச்சந்தில் நடைபெறும் கள்ளக்காதல் விவகாரங்களையெல்லாம் ஒன்றுவிடாமல், ஒருவரி விடாமல் பிடித்துக்கொண்டு வருவதில்லையா?

இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இவ்வளவு பெரிய அரசியல் நிகழ்வுகளில் நடப்பது என்ன என்பதை வெளிக்கொண்டுவருவது அவ்வளவு சிரமமா என்ன?

பின்னே எதற்காக எல்லாரும் சேனல்4 என்ன சொல்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?
இனிமேல் சேனல்4 என்ன சொல்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்கே அரசியல் நிகழ்வுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றதா?

எங்கேயோ கண்காணாத தேசத்தில் இருக்கும் ஒரு புலனாய்வு ஊடகத்துக்கு இருக்கும் பொறுப்பும் திறமையும் நம்முடைய ஊடகங்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லையா?

புரியவில்லை!

இந்தப் பதிவைப் படிக்கும் சில நண்பர்கள் உடனடியாக வந்து கருணாநிதி மீது மட்டும் சொல்லக்கூசும் வார்த்தைகளைப் போட்டுத் திட்டித்தீர்த்துவிட்டு விலகிவிடுவார்கள்.

கருணாநிதி தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. நடைபெற்ற அவ்வளவு தவறுகளுக்கும் அவரை மட்டுமே குற்றம் சாட்டிவிட்டு மற்றவர்களெல்லாம் தப்பித்துவிடும் கைங்கரியத்துக்குத் துணை போய்விடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அவர் ஆட்சியில் இருந்தார் என்பதனாலும் தமிழர்களின் ஒரே இனமானத் தலைவராக அவரை மட்டுமே இந்தத் தமிழ் சமூகம் நினைத்தது என்பதாலும் அவர் எப்படியாவது இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்திவிடுவார் என்ற நினைப்பு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இருந்தது என்பதாலும் அவ்வளவு நம்பிக்கையிலும் மண்ணைக்கொட்டிச் சிதறடித்துவிட்டார் என்பதாலும் அவர் மீது ஆற்றமுடியாத கோபம் இருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈழப்படுகொலைகள் நடந்த காலகட்டங்களில் கருணாநிதியைத்தவிர நாட்டில் இருந்த – குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் இருந்த மற்ற தலைவர்களின் பங்கு என்ன பொறுப்பு என்ன அவர்கள் ஆற்றிய கடமைகள் என்ன என்பதையெல்லாம் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கருணாநிதி ஒரு தலைவனே இல்லை என்றெல்லாம் கூப்பாடு போடுவதெல்லாம் சரிதான். அவர் குடும்பத்தை மட்டுமே கவனிக்கிறார், மற்ற எல்லா விஷயங்களிலும் கபட நாடகங்கள் மட்டுமே ஆடுகிறார் என்று சொல்வதெல்லாம் சரிதான்………

அவர் இல்லையென்றால் உடனடியாக அவருக்கு மாற்றாக இன்னொருவரைத் தேர்வு செய்கிறோமல்லவா அந்த ‘இன்னொருவர்’ அல்லது அதற்கு ‘மாற்றானவர்கள்’ ஆற்றிய கடமை என்ன என்பது முக்கியமில்லையா? அவர்கள் என்ன பங்கு பெற்றார்கள், எப்படியெல்லாம் காய் நகர்த்தினார்கள் எப்படியெல்லாம் ஈழப்போராட்டங்களைக் கொண்டு சென்றார்கள் என்பதெல்லாம் விவாதத்திற்கு வரவேண்டாமா?

இந்த நாட்டின் அரசியல் அமைப்பு என்பது எப்படி இருக்கிறது? ஆட்சி அதிகாரம் எல்லாம் ஒருபுறம் இருக்க அந்த ஆட்சி அதிகாரத்தைத் தட்டிக்கேட்கும் மற்ற எதிர்கட்சிகளின்- எதிர்க்கட்சித்தலைவர்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன, என்பதெல்லாம் கணக்கில் வரவேண்டுமா வேண்டாமா?

ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எதிர்ப்பரசியலும் மக்களைத்திரட்டி அரசுக்கெதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராடுவதும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின்- தலைவர்களின் பொறுப்பா இல்லையா?

அதனைத் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைப்பேரும் செய்திருக்கிறார்களா?
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பதற்காக எல்லா எம்பிக்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கருணாநிதி அறிவித்ததற்கேற்ப ராஜினாமா செய்ய எல்லாக்கட்சி எம்பிக்களும் முன்வந்தார்களா?

திமுக எம்பிக்கள் வெறும் ‘அவரிடம்’ மட்டுமே ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து நாடகமாட மற்ற எல்லாக்கட்சி எம்பிக்களும் அதுமாதிரியான நாடகத்தைக்கூட ஆடாமல் எங்கேயோ போய்ப் பதுங்கிக்கொண்டார்களா இல்லையா?

கருணாநிதி இலங்கை விவகாரத்தில் இன்னின்ன மாதிரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அவருக்கு அரசியல்ரீதியான அழுத்தம் என்னென்ன கொடுக்கப்பட்டது?

எப்படியெல்லாம் கொடுக்கப்பட்டது?

வேறுமாதிரியான சிந்தனையே அவருக்கு எழாதவண்ணம் அவரைத் தங்கள் போக்கிலேயே இழுத்துக்கொண்டு செல்லலாம் என்ற அளவிற்கு எதிர்க்கட்சிகளோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர்களோ அவருக்கு என்ன அழுத்தத்தைக் கொடுத்தனர்?

என்ன மாதிரியான போராட்டத்தை அவருக்கு எதிராக நடத்தினர்?

எல்லாருமே வாய்மூடி கள்ள மவுனம் சாதித்துக்கொண்டிருந்துவிட்டு அங்கே ஒரு பேரழிவு நடைபெற்று முடிந்தபின்னர் எல்லாரும் சேர்ந்து அவருக்கெதிராக மட்டுமே குற்றச்சாட்டு வீசிக்கொண்டிருந்தால் எப்படி?

மற்ற மாநிலங்களில் எல்லாம் இதுவா நடைபெறுகிறது? பொதுவான விஷயங்கள் என்று வரும்போது எல்லாக்கட்சிகளும் ஒருமித்த குரலில்தாம் போராடுகின்றன. எல்லா விஷயங்களிலும் ‘ஒற்றைமுடிவுகள்தாம்’ மேற்கொள்ளப்படுகின்றன. எல்லா விஷயங்களிலும் எல்லாக்கட்சிகளும் ஒரே அணியில் நின்றுதான் போராடுகின்றன.

அதெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

இருக்கவேண்டுமா இல்லையா?

வெறும் கருணாநிதியை மட்டும் திட்டித்தீர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தால் எப்படி?

மற்ற விஷயங்கள் போகட்டும். ஈழ விவகாரம் என்பது மக்கள்இனம் நேரடியாக கொத்துக்கொத்தாக செத்துப்போகின்ற விளிம்பில் நின்றுகொண்டிருந்த விவகாரம். இதில்கூட அத்தனைக்கட்சிகளும் – அழுத்தம் கொடுத்துப் படியுங்கள், அத்தனைக் கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் நின்றுகொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்துபோனதும் ‘ஒரேயொருவர்மீது’ மட்டும் அத்தனைப் பழியையும் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பிக்க நினைத்தால் எப்படி?

இதையே வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம். அங்கே யார் புண்ணியத்திலோ அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இனப்படுகொலை எதுவும் நடைபெறாமல் நின்று போயிருந்தது என்று வைத்துக்கொள்வோம். ‘என்னால்தான் நின்றது’ ‘நான்தான் பிரதமரிடம் பேசி நிற்கவைத்தேன்’ ‘எங்கள் கட்சிதான் இதற்கான தீர்வை முன்வைத்தது’ என்று எத்தனைப்பேர் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள் தெரியுமா?


இன்னமும் எத்தனைப்பேர் வேறுமாதிரியான பாட்டுப் பாடியிருப்பார்கள் தெரியுமா? ‘தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வாய்ப்பை கருணாநிதிதான் கெடுத்துவிட்டார். ராஜிவ் கொலையாளிகளைத் தப்பிக்கவைத்தது கருணாநிதிதான். அந்தக் கொலையாளிகளைப் பிடித்துவந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அதற்கான தண்டனையை அவர்களுக்கு மட்டுமில்ல கருணாநிதிக்கும் கொடுக்கப்படவேண்டும்’ – சொல்லியிருப்பார்களா இல்லையா?

அதனால் இம்மாதிரியான விவகாரங்களில் எல்லாம் நாம் நம்முடைய சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம். தங்களுக்கான கடமைகளில் தவறிவிட்டு அதனை வேறொருவர் மீது மட்டுமே போட்டுவிட்டுத் தப்பிக்க நினைக்கும் தலைவர்களையும் கொஞ்சம் அடையாளம் கண்டுகொள்வோம்.
இது தொடர்பாக ஒரு பிரபல கவிஞர் சொன்னதை மறந்துவிடக்கூடாது. “ஈழ விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அத்தனைத் தலைவர்களின் கரங்களிலும் ரத்தக்கறை படிந்துதான் இருக்கிறது!”
எல்லாத் தலைவர்களுமே தங்கள் கரங்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இப்போது இந்தப் பாலகனின் படுகொலை விஷயத்திற்கு வருவோம்!

தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் இப்போதுதான் தகவல் கேள்விப்பட்டதுபோல் இப்படிக் கூப்பாடு போடுகிறார்களே என்ன நடந்துவிடப்போகிறது?

எல்லா இடங்களிலும் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி எந்த இடத்தில் தேவையான விளைவுகளையும் மாறுதல்களையும் ஏற்படுத்தவேண்டுமோ அந்த இடத்தில் துளியேனும் மாறுதலையோ சின்னஞ்சிறு அசைவையோகூட ஏற்படுத்தவில்லை என்பதுதான் கொடுமையான விஷயம்.

இந்திய அரசாங்கத்தின் கண்களைத் திறந்து வெளியுறவுக் கொள்கைகளில் சிறிய அளவிலேனும் தங்கள் பார்வையை இந்த அரசாங்கம் மாற்றிக்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான அவசியம் எதுவும் இல்லை என்பது போன்ற அவர்களுடைய அறிவிப்புதான் தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திப் பழிவாங்கும் போக்காகவே இருந்துவருகிறது.

இதோ, “இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல; பாதிதான் உண்மை. மீதி சித்தரிக்கப்பட்டவை. உலக அரங்கில் ஸ்ரீலங்காவைக் குற்றவாளியாகக் காட்டவேண்டும் என்பதற்காக எதிரிகள் சித்தரித்திருப்பவை” என்று எவனோ ஒரு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அமைச்சர் சொல்லிவிட்டான்.

உடனே அதனை அப்படியே அடிபணிந்து நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் “அந்தப் படங்களின் உண்மைத்தன்மை பற்றி விசாரிக்கவேண்டியிருக்கிறது. அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன? தூக்கிக் கடாசிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதானே!

நம்முடைய அரசியல்தலைவர்கள் வாய்ப்பந்தல் போடுவதற்கு இன்னொரு ஈழத்தமிழரின் துயரம் தோய்ந்த இன்னொரு விவகாரம் வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?

கண்ணதாசன் எத்தனைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறான்-
‘ஒண்ணுமே புரியலே உலகத்துலே
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்துலே!’