Showing posts with label அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார்.. Show all posts
Showing posts with label அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார்.. Show all posts

Thursday, January 2, 2014

டெல்லியில் உருவான மாற்றம்.



டெல்லியில் புதியதொரு மாற்றம் உருவாகியிருக்கிறது. இளைய சமுதாயம் இத்தனை நாட்களும் தேடிக்கொண்டிருந்த மாற்றம் இதுவென்று தாராளமாய்ச் சொல்லலாம்.

நாள் தவறாமல் அரசியல் தலைவர்களின் பேச்சுக்களைப் பல வருடங்களாகப் படித்துவருகிறோம். எல்லா அரசியல் தலைவர்களும் இந்த  தேசத்தின் மீதும் மக்களின் மீதும் அபரிமிதமான பற்று கொண்டவர்களைப் போலவும் தேச நலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மட்டுமே தாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மக்கள் நலைனைக் கருதி இந்த நாட்டிற்காக மட்டுமே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுவதுபோலவும் தோன்றும் விதமாகவே பேசி வருகிறார்கள்.

ஆனால் நடைமுறை வேறாகத்தான் இருக்கிறது.

ஆட்சிக்கு வந்த சிறிது நாட்களிலேயே அவர்களின் சுயரூபங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றன.
அவர்கள் பேசிய பேச்சுக்களும் கொஞ்ச நாட்களிலேயே பல்லிளித்து அவர்கள் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகின்றன.

மக்கள் முன்னால் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்ளும் அவர்கள் பேசும் தில்லுமுல்லுப் பேச்சுக்கள் அவர்களின் சாயத்தை வெளுத்துவிடுகிறது.

தங்களை எப்படியாவது காப்பாற்றிக்கொண்டு மறுபடியும் மக்களை ஏய்ப்பதற்கு என்ன வழி என்பதில்தான் அவர்கள் ஒவ்வொருவரும் மறுபடியும் ஈடுபடுகின்றனர்.

இது ஒரு சுழல்வட்டம் போல் நம்மைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது பலகாலமாய்.
வேறெந்த மாற்று வழியும் மக்கள் முன்பும் இந்த ஜனநாயக அமைப்பின் முன்பும் இல்லாமல் போகவே வேறுவழியின்றி இதையே சகித்துக்கொள்ள மக்களும் பழகிப்போய் விட்டிருக்கிறார்கள்.
அதனால்தான், இந்த அரசியல்வாதியும் கட்சியும் தவறுகளில் ஈடுபடுகின்றனரா, சரி கொஞ்ச காலம் இவர்களை ஒதுக்கிவிட்டு அடுத்தவருக்கு வாய்ப்புக் கொடுப்போம். அடுத்தவரும் முந்தையவரைவிட மோசமா? இருந்துவிட்டுப் போகட்டும்………………….இப்போதைக்கு நம்மால் ஒன்றும் செய்வதற்கில்லை அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முந்தையவர்களையே மீண்டும் பழைய இடத்தில் உட்கார்த்தி வைக்கலாம்- என்ற இந்த விஷவட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் அதிலேயே உழன்று பழகிப்போய் வெகுகாலம் ஆகிவிட்டது.

இப்படியே போய்க்கொண்டிருந்த இந்த மாயச்சுழலுக்கு ஒரு விடிவு காலம்போல் முகிழ்த்த ஒரு அரசியல் கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி என்று தோன்றுகிறது. நாம்தான் இதனை அரசியல் கட்சி என்று சொல்கிறோமே தவிர அவர்கள் இதனை இன்னமும் ஒரு இயக்கம் என்றே சொல்லிவருகிறார்கள்.

காரணம் அரசியல் கட்சி என்று சொன்னால் மக்கள் நம்மை நம்ப மாட்டார்களோ என்ற பயம்.
அரசியல் கட்சிகளுக்கென்று இந்த அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வைத்திருக்கிற பிம்பம் அத்தகையதாயிருக்கிறது.

ஆம்ஆத்மி தேர்தலில் நின்று வெற்றி இலக்கை ஓரளவு தொடுகின்ற அளவுக்குவந்து ஏதோ ஒரு அமைப்பு முறையின் மூலம் ஆட்சியிலும் உட்கார்ந்தாகிவிட்டது. இன்னமும் இதனை அரசியல் கட்சி என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன தயக்கம் என்று புரியவில்லை.

இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் இவர்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. டெல்லியில் இருபத்தெட்டு சீட்டுகள்தானே கிடைத்திருக்கின்றன என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இவர்களுக்கு ஓட்டுப்போட்டால் ஆட்சிக்கு வருவார்களோ மாட்டார்களோ என்று மக்களுக்கு இருந்த நம்பிக்கையின்மையால் வந்த குளறுபடி அது. அதனால் காங்கிரஸுக்கு எதிரான பாதி ஓட்டுக்களை பாரதிய ஜனதாவுக்குக் குத்தி வைத்தார்கள்.

இதோ, காங்கிரஸுக்கு எதிராகவும், பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் ஒரு மாற்று அணி இருக்கிறது; அதற்கு ஓட்டுப்போட்டால் அந்த அணி ஆட்சியைப் பிடிக்கும் என்பதற்கான அத்தாட்சி டெல்லியில் கிடைத்துவிட்டது.

இப்போதுகூட டெல்லியில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் ஐம்பதுக்கு நாற்பத்தைந்து இடங்களையாவது மக்கள் ஆம்ஆத்மி கட்சிக்குத் தந்துவிடுவார்கள்.
அவ்வளவு வெளிப்படை, அவ்வளவு தெளிவு, மக்களின் மனங்களுடனும் மக்களின் எதிர்பார்ப்புடனும் அவ்வளவு ஒத்திசைவாக இருக்கிறது அந்தக் கட்சி.

மக்களின் எதிர்பார்ப்புக்கெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பிக்கொண்டு போங்கு அரசியல் நடத்திவருகிறவர்கள் இனிமேல் வெகு காலத்துக்கு அதையே செய்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கமுடியாது என்பதற்கான நம்பிக்கைக் கீற்றை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் விதைத்திருக்கிறார்.

‘கொள்கை கோட்பாடு என்றெல்லாம் ‘பிலிம்காட்டி’ மக்களை இனிமேலும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என்ற சிந்தனைக்கு இளைஞர்கள் வந்துவிட்டனர். படித்துவிட்டு 

வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றுவரும் இளைய தலைமுறை அங்கிருக்கும் அரசுகள் போல் இங்குள்ள அரசுகள் செயல்படுவதில்லையே ஏன்?’ என்ற கேள்வியைக் கேட்கின்றனர்.

‘மக்களுக்கான அரசு என்பதற்கான ஒரு சிறு அடையாளம்கூட இல்லாமல் இங்கிருக்கும் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு விரோதமானவர்களாகவே நடந்துகொள்கின்றனரே ஏன்?’ என்பதுதான் அவர்களின் கேள்வி.

‘மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசு அதிகாரிகளாக வருகிறவர்கள் மக்களைப் பிச்சைக்காரர்களை நடத்துவதுபோல் நடத்துகிறார்களே ஏன்?’ என்ற கேள்விதான் அவர்களைக் குடைகிறது.

‘ஒவ்வொரு விஷயத்திற்கும் லஞ்சம் என்ற பெயரில் காசு வாங்குகிறார்களே ஏன்?’ என்ற கேள்வி இவற்றிலெல்லாம் தலையாயது.

‘அப்படித் தங்களிடமிருந்தே காசு வாங்குகிறவர்கள் தங்களை அதிகாரம் செலுத்தும் எஜமானர்களாக அவர்களை எப்படிக் கருதிக்கொள்ளமுடியும்?’  என்பது இந்த நாறிப்போன சமுதாயத்தைப் பார்த்து இளைய சமுதாயம் எழுப்பும் உச்ச பட்ச கேள்வி.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களாகவே ஆம்ஆத்மி கட்சியைத் தேர்வு செய்திருக்கின்றனர் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

இதை இந்தக் கோணத்தில்தான் பார்க்கவேண்டுமே தவிர, ‘கெஜ்ரிவாலால் முடியுமா, சொன்னதையெல்லாம் செய்துவிடுவாரா, வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றிவிடுவாரா, அரசு செயல்பாடுகளென்பது இவர் நினைத்துக் கொண்டிருப்பதைப்போல் அவ்வளவு சுலபமான கட்டமைப்பு சார்ந்ததா?’ என்று கேட்டு ஒரு புதிய முயற்சியை ஆரம்பத்திலேயே கழுத்தை முறித்துப் போட முனையக்கூடாது.

டெல்லி என்பது ஒரு டவுன் அவ்வளவுதான். அது ஒரு மாநிலம் அல்ல. அது ஒரு மாநகராட்சி அளவுக்கேயானது. அதனால் அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சி ஒரு மாநிலத்தைப் பிடித்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது என்றெல்லாம் அரசியல் விற்பன்னர்கள் சிலர் ஆரூடம் கூறிவருகின்றனர்.

எந்த ஒன்றுமே ஒரு சிறிய விதையிலிருந்துதான், சிறிய இடத்திலிருந்துதான் ஆரம்பமாகும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

அதுவும் இந்தப் புதிய மாற்றம் அப்படியொன்றும் சிறிய இடத்திலிருந்துகூட அல்ல, ஒரு மிகப்பெரிய இடத்திலிருந்துதான், தலைநகரான டெல்லியிலிருந்துதான் ஆரம்பமாகி இருக்கிறது.
நிலப்பரப்பு அளவில் வேண்டுமானால் அது சிறிய மாநிலமாக இருக்கலாமே தவிர, அரசியல் முக்கியத்துவத்தில் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தை விடவும் பெரியதுதான் டெல்லி.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி என்பதை ஒரு நல்ல தொடக்கமாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர, அந்த இயக்கத்துக்கேயுரிய சின்னச்சின்ன பலவீனங்களை பூதாகாரமாக்கி பார் பார் இதெல்லாம் ஒன்றுமேயில்லை; எங்களுடைய (பல காலமாக ஏமாற்றிவரும்) கட்சிதான் இந்தியாவுக்கு வேண்டிய கட்சி என்று சொல்லிக்கொண்டுத் திரியக்கூடாது.

இது ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்கின்ற அதே நேரத்தில், கெஜ்ரிவால் சரியில்லை என்று தோன்றும்பொழுது அவரையும் தூக்கியெறிய இந்த சமுதாயம் தயங்காது என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டதும் கெஜ்ரிவால் ஆற்றிய உரை மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. அவர் பேசுகிறார் – “டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி அல்ல. சாமானியர்களாகிய நீங்கள்தான். இன்று உங்கள் முன்பு முதல் மந்திரியாகப் பதவியேற்றது நானல்ல சாமானியர்களாகிய நீங்கள்தான். டெல்லியில் சாமானியனுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற அவநம்பிக்கையில் மக்கள் இருந்தார்கள். ஆனால் டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

யாராலும் நேர்மையுடன் அரசியல் நடத்த முடியும். நேர்மையுடன் தேர்தலில் போட்டியிடமுடியும், ஜெயிக்கவும் முடியும் என்று டெல்லி வாக்காளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இது ஒரு தொடக்கம்தான்.

இப்போது சாமானியர்களின் ஆட்சி மட்டுமே அமைந்துள்ளது. உண்மையான போராட்டம் இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் போராட்டத்தை அர்விந்த் கெஜ்ரிவால் தனியாக முன்னெடுக்க முடியாது.  மந்திரிகளாகப் பதவியேற்ற நாங்கள் ஆறு அல்லது ஏழு பேர் செய்யமுடியாது. கோடிக்கணக்கான சாமானியர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

‘அரசியல் ஒரு சாக்கடை; அதில் நாம் ஏன் விழுந்து புரண்டு எழவேண்டும்?’ என்று அன்னா ஹசாரேஜீ கூறினார். அவரிடம் நான் ‘அன்னாஜி, அரசியல் ஒரு சாக்கடை என்றால் அதனை நாம் இறங்கித்தான் சுத்தப்படுத்தவேண்டும்’ என்று கூறினேன்.

நம்முடைய நாட்டில் பல பிரச்சினைகளும் சாக்கடையாகிப்போன இந்த அரசியல் நடைமுறைகளால்தான் உருவாகின்றன.

நம்முடைய அரசியல் கெட்டுப்போயிருக்கிறது.

எனவேதான் இந்த அரசியல் அமைப்பை நாம் முன்வந்து சுத்தப்படுத்தும் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம்.

“அரவிந்த்ஜி நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகார வர்க்கம் உங்களை செயல்பட விடாது” என்று என்னிடம் பலரும் எச்சரிக்கிறார்கள்.

உங்களுக்கு எதிராக சதிகள் செய்வார்கள் என்று எச்சரித்தார்கள்.

நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கடந்த சில நாட்களாக டெல்லி அரசின் சில அதிகாரிகளைச் சந்தித்தேன். ஒரு சில அதிகாரிகள் ஊழலில் திளைக்கிறார்கள் என்றால் பெரும்பாலான அதிகாரிகள் என்றும் நேர்மையுடன் செயல்படுகிறார்கள் என்று கண்டிப்பாக சொல்வேன். அவர்கள் இந்த நாட்டுக்கு உழைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

இப்போது டெல்லி அதிகார வர்க்கத்துக்கு எதிரிலும் பெரிய சவால் எழுந்துள்ளது. டெல்லியின் அதிகாரிகள் இனி சாமானியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்டின் அனைத்து மக்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்தால் இந்த நாட்டில் ஊழலை அடியோடு ஒழிக்கமுடியும்.

நான் என்னுடன் பதவியேற்றிருக்கும் மந்திரிகளிடம், சட்டசபை உறுப்பினர்கள், எங்கள் கட்சியின் செயல் வீரர்களிடம் இருகரம் கூப்பி  ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

நம்முடைய மனங்களில் எக்காரணம் கொண்டும் அகம்பாவம் குடியேறக்கூடாது.

ஆம்ஆத்மி கட்சி பிற கட்சிகளின் அகம்பாவத்தை உடைத்தெறியத் தோன்றியிருக்கிறது. நாளை நம்முடைய அகம்பாவத்தை உடைத்தெறிய இன்னொரு கட்சி தோன்றக்கூடிய நிலைமையை நாம் உருவாக்கக்கூடாது.”

இத்தனைத் தெளிவாகத் தம்முடைய கட்சி பற்றியும் தம்மைப் பற்றியும் சொல்லும் கெஜ்ரிவால் முதல் மந்திரியாகப் பதவி ஏற்றதைப் பற்றி மேலும் சொல்கிறார். “மந்திரியாக, முதல்மந்திரியாக எம்எல்ஏவாக அதிகாரம் செலுத்துவதற்கு நாம் வரவில்லை. சேவை செய்யத்தான் வந்திருக்கிறோம். இந்த நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, டெல்லியின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பெரும் சக்திகளுக்கு சவால் விடுத்திருக்கிறோம். இந்த நாட்டின் அதிகார வர்க்கத்துக்கும், பிரிவினை வாதத்துக்கும் பெரிய சவால் விடுத்திருக்கிறோம்.

இந்த அனைத்து சக்திகளும் நம்மை கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது.

நமக்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்புவார்கள்.

எனக்குப் பலவகையிலும் செய்திகள் கிடைத்து வருகின்றன. அவற்றை இப்போது பகிர்ந்துகொள்ள முடியாது.” என்று தம்மைச் சுற்றிலும் எப்படிப்பட்ட ஆபத்து சூழ்ந்திருக்கிறது எப்படிப்பட்ட வலை தம்மை நோக்கி பின்னப்பட்டிருக்கிறது என்பது பற்றிய தெளிவான சிந்தனை அவருக்கு இருக்கிறது.
ஒரு புதிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் கூர்மையான பார்வை அவருக்கு இருப்பதை அவரது தொடர்ச்சியான பேச்சு விளக்குகிறது. “உங்களுக்குத் தெரியும் சத்தியத்தின் பாதைகள் அவ்வளவு எளிதானவை கிடையாது. அவை கற்களும், முட்களும் நிரம்பியவை.

இன்றுவரை நாங்கள் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வருகிறோம். என் மீதும் எங்கள் மந்திரிகள் மீதும் எங்கள் எம்எல்ஏக்கள் மீதும் மிகப்பெரிய பொறுப்பை டெல்லி மக்கள் சுமத்தியிருக்கிறார்கள். நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்த பொறுப்புக்களை நாங்கள் யாரும் தனியாக நிறைவேற்ற முடியாது. மக்களுடன் இணைந்துதான் செய்ய வேண்டும். மக்களுடன் இணைந்து டெல்லி அரசை நடத்திச் செல்வோம்.

இந்தப் பெரிய கூட்டத்தில் அனைவரின் முன்பும் நான் மனம் திறந்து கூறுகிறேன். காங்கிரஸ் பாஜக மற்றும் அனைத்து கட்சிகளிடமும் வேண்டுகோளை விடுக்கிறேன்.

நீங்கள் எங்கள் கட்சியைப் பற்றி மறந்துவிடுங்கள்.

நீங்கள் அனைவரும் எங்களுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டின் முன்னேற்றத்துக்குக் கைகொடுங்கள்.

நடைபெறப்போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் தேறமாட்டோம் என்று சிலர் என்னிடம் கூறினார்கள். ஒரு சிலர், நம்பிக்கை வாக்கெடுப்பில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் என்றும் கூறுகிறார்கள். இதைப்பற்றி எனக்குக் கவலை எதுவும் இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் ஜெயித்தாலும் தோற்றாலும் அது எங்களுக்கு மிகவும் சிறிய விஷயம்தான்.

நாங்கள் நாட்டைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறோம்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் தோற்றால் மக்களிடம் மீண்டும் திரும்பி வருவோம். மக்கள் அடுத்த தேர்தலுக்குத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைப் பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்வார்கள் மக்கள்.

நாம் இங்கிருந்து ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டுச் செல்லவேண்டும். சபதத்தை நான் முன் மொழிகிறேன். “நாம் எக்காரணம் கொண்டும் இனி லஞ்சம் வாங்க மாட்டோம். யாருக்கும் லஞ்சம் தரவும் மாட்டோம்.”

அரசு அலுவலத்தில் யாராவது லஞ்சம் கேட்டால் நீங்கள் அவர்களுடன் பேரத்தை முடித்துக்கொண்டு எங்களுக்குத் தகவல் கொடுங்கள். நாங்கள் லஞ்சம் வாங்குபவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கிறோம்.  பிறகு உங்கள் காரியத்தை முடித்துக்கொடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.”

ஆஆஆ வந்துட்டாம்ப்பா, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர்களிடம் நாம் பேரம் பேசணுமாம். இவனுங்க ஒரு போன் நம்பர் கொடுப்பாங்களாம். அதுக்கு போன் செய்யணுமாம். இவங்க வருவாங்களாம். நாம் லஞ்சம் கொடுக்கும்போது அப்படியே பிடிச்சிருவாங்களாம்.- இதெல்லாம் நடக்கிற காரியமா? என்றெல்லாம் எகத்தாளம் பேசும் சில பதிவுகளும் ஃபேஸ்புக் கமெண்டுகளும் வந்திருக்கின்றன.

அவர் சொல்லியிருப்பது ஒரு வழிமுறைதான். அது மட்டுமே நிரந்தரம் அல்ல. அந்த வழிமுறையில் ஓட்டை உடைசல்கள் இருக்குமென்றால் நீங்கள் வேறு நல்ல வழிமுறைகளைச் சொல்லி இந்த ‘கான்செப்டை’ செயல்படுத்தப்பாருங்கள் என்பதுதான் இதில் உள்ள செய்தி. 

அதனால்தான் திரும்பத் திரும்ப அவர் சொல்கிறார். சீரழிந்து புழுத்துப்போயிருக்கும் இந்த அரசாங்க அமைப்புகளை நான் ஒருத்தன் மட்டுமோ அல்லது ஆம்ஆத்மி கட்சியின் சில நிர்வாகிகளோ நாங்கள் மட்டுமே சீர்படுத்திவிட முடியாது. நீங்களும் வந்து இணையுங்கள் என்று.

இணைவது என்றால் கட்சியில் சேர்ந்து கோஷம் போடுவது அல்ல. அநீதிக்கு எதிராக ஒன்றைணைவது என்று அர்த்தம்.

எந்தச் சூழலில் தாம் அரசியல் செய்யப்போகிறோம் என்பதையும், எம்மாதிரியான அரசியல் என்பதையும்  அவர் மிகத் தெளிவாகவே வரையறுத்து வைத்திருக்கிறார் என்பதையும் அவரின் பேட்டிகளிலிருந்து பார்க்கிறோம். “பழைய தேசிய கட்சிகளின் ஊழல் அரசியலில் மக்கள் அலுத்துப்போய் விட்டார்கள். ஊழல் மற்றும் விலைவாசி காரணமாக மக்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டமாகிவிட்டிருக்கிறது. ஜாதி, மதம், குற்றம், பணபலம், ஆள்பலம் அடிப்படையிலான வழக்கமான அரசியலை மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்.  நேர்மை, உண்மையை வைத்து ஒரு கட்சி போட்டியிட்டது இதுதான் முதல் முறை. நேர்மையான அரசியல் தற்போது துவங்கியிருக்கிறது. முதல்முறையாக, நேர்மையான முறையிலும் தேர்தலில் போட்டியிடலாம். நேர்மையான சாதாரண மக்களும் அரசியலுக்கு வரலாம் என்பது நீரூபிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் செய்த பல விஷயங்கள் இந்திய அரசியலுக்குப் புதியவை. நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட  வேண்டிய அரசியல் சக்திதான் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டிருக்கிறார்கள்.”

கெஜ்ரிவாலைப் பற்றிய கட்டுரைகள் பலவற்றைப் படிக்கும்பொழுது அவர் சிறிய வயதிலிருந்தே சிறுமை கண்டு பொங்குகிறவராகவும், நேர்மைக்காகப் போராடுகிறவராகவும்தான் வளர்ந்துவந்திருக்கிறார் என்பது புலனாகிறது. படித்துக்கொண்டிருக்கும்போதேயே ஹாஸ்டல் மற்றும் மெஸ்ஸில் கண்காணிப்புப் பணிகளையும் அங்கே தவறுகள் நடைபெறும்போது அதனைத் தட்டிக்கேட்கிறவராகவும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் கிடைக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராட்டங்களுக்காக 2006-ம் ஆண்டின் மகசேசே விருதை அவர் பெற்றிருக்கிறார்.

டாடா ஸ்டீலில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது மதர் தெரெசாவின் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் சேவை செய்தவராகவும் இருக்கிறார்.

இதுதான் கெஜ்ரிவாலின் பிம்பமே தவிர, புதிய மாற்றங்களின் போக்கைப் பார்த்து அதற்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொண்டு அரசியல் வெற்றிகளை அடையப்பார்க்கும் ஒருவர் என்ற நோக்கில் நாம் அவரைப் பார்ப்பதற்கில்லை.

அந்த பதவியேற்பு விழாவில் அவர் ஒரு பாட்டைப் பாடினார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அந்தப் பாடலை அவர் கலந்துகொள்ளும் நிறையக் கூட்டங்களில் தமது பேச்சினை முடிக்கும்போது பாடுகின்றாராம். பாய்காம் படத்தில் கவிஞர் பிரதீப் எழுதிய பாடல் அது. அந்தப் பாடலின் வரிகள் இப்படி அமைந்திருக்கின்றன.

“மக்களுக்குள் சகோதர உறவு வேண்டும்
இதுதான் எங்கள் செய்தி.
பணக்காரர் என்றும் ஏழை என்றும்
வித்தியாசங்கள் கூடாது.
அரண்மனையிலிருந்து இந்தச் செய்தி
எதிரொலிக்க வேண்டும்.
குடிசைகளில் விளக்குகள்


ஏற்றப்பட வேண்டும்
எல்லோருக்கும் சமவிகித
சந்தோஷங்கள் வேண்டும்
இதுதான் எங்கள் செய்தி”

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் உண்மையான அக்கறைக் கொண்ட ஒரு தலைவராகவே கெஜ்ரிவால் தெரிகிறார். இதே திசையில் செல்வாரேயானால்-
பொய்மைகளற்று தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட காமராஜர்போல்- ஒரு நவீன காமராஜராகவே இவர் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

“இந்த கான்செப்ட் தமிழ்நாட்டில் ஏற்பட முடியுமா?” என்று கேட்டார் நண்பரொருவர்.

“நடிகர் சிவகுமார், கலெக்டர் சகாயம், சுப.உதயகுமார் மூவரும் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று வையுங்களேன். அடுத்த தேர்தலிலேயே பெரிய மாற்றத்தை இங்கே உருவாக்கலாம்” என்றேன் நான்.