Monday, April 23, 2012

இளையராஜாவும் இன்னிசை மழையும்!


 கலைஞர் டிவியில் இசையை வைத்து ஒரு நல்ல நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்கால இலங்கை வானொலியில் தமது கம்பீரக்குரலாலும் தெளிவான உச்சரிப்பாலும் லட்சக்கணக்கான நேயர்களை ரசிகர்களாகப்பெற்ற பி.ஹெச்.அப்துல்ஹமீது நடத்தும் நிகழ்ச்சி ‘இன்னிசை மழை.’. ‘இன்னிசை மழை.’இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது மற்ற காம்பியர்கள் நடத்தும் பழைய விஷயங்களைச் சார்ந்த நிகழ்ச்சிகள் என்றால் அவர்களுக்கு அந்த விஷயங்கள் பற்றிய தகவல்கள் யாவும் சொல்லப்பட்டு அறிவுறுத்தப்பட்டு அதன்பின்னர் அந்த நிகழ்ச்சி நடத்தப்பெறும். அப்படி அறிவுறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளில்கூட அவர்கள் போட்டு அதிரடியாக சொதப்புவார்கள்.

“ஓ! சாவித்திரி என்று அந்தக் காலத்தில் ஒரு நடிகை இருந்தாங்களா?
“அட, ஆயிரத்தில் ஒருவன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் வெளிவந்திருக்குங்களா?
“அப்படியா, கே.பாலசந்தர் அப்படீன்றவர் ரஜனியையும் கமலையும் ஒண்ணா நடிக்கவச்சு படம் எடுத்திருக்காரா? என்பன போன்று காம்பியர்களின் அட்டூழியங்களைக் கேட்கும்போது அப்படியே எழுந்துபோய் அவர்களின் கழுத்தை நெரிக்கலாமா என்று தோன்றும்.

அப்துல்ஹமீது போன்ற ஒருசிலரின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. அதிலும் அப்துல்ஹமீது திரைஇசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முற்றுமுழுதாக அறிந்தவர். இன்னமும் சொல்லப்போனால் நிகழ்ச்சியில் பங்குபெறும் சில கலைஞர்களை விடவும் நிறைய செய்திகள் அறிந்தவர். எனவே ஒரு நிறைவான நிகழ்ச்சிக்கு உத்தரவாதம் என்ற அளவில் இந்த நிகழ்ச்சியை அணுகலாம்....அனுபவிக்கலாம்!
 

முதலாவதாக இது பாடல் போட்டி நிகழ்ச்சி அல்ல. அதனால் ஓ....ஹூ...ஹா என்ற ஆண்ட்டிகளின் கூச்சலும் அந்த மாஸ்டர் இந்த மாஸ்டர் என்ற எந்த மாஸ்டரின் நீதிபதி சட்டாம்பிள்ளைத்தனமும் இல்லாமல் பார்க்கக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய நிகழ்ச்சியாகவும் இது இருக்கிறது. இதனை ஐம்பது வயதைக் கடந்தவர்கள் அதிலும் குறிப்பாகப் பழைய பாடல்களை விரும்புபவர்கள் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்பதில்லை. இன்றைய இளைஞர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி என்பதுதான் இதற்கான முக்கியத்துவம்.

அதிலும் குறிப்பாக பாடல்போட்டிகளில் க்ளிஷே போன்ற ஒரு சம்பிரதாயமான மொக்கை பதில்களைக் காணலாம். பாட வந்திருக்கும் பையனிடம் “உனக்குப் பிடித்த பாடகர் யார்? யார் உன்னுடைய ரோல் மாடல்? என்று கேட்டுவிட்டால் போதும்.
அவன் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான். “எனக்குப் பிடித்த பாடகர் எஸ்பிபிதான்

இதே கேள்வியைப் பாட வந்திருக்கும் பெண்ணிடம் கேட்டுவிட்டால் போதும். “எனக்குப் பிடிச்சவங்க ஜானகியம்மாதான். அப்புறம் சின்னக்குயில் சித்ராவைப் பிடிக்கும்

“உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? என்ற அடுத்த கேள்விக்கு சட்டென்று வரும் பதில் “இசைஞானி இளையராஜா என்பதுதான். அப்புறம் எதற்கும் இருக்கட்டுமே அப்ளிகேஷன் போட்டுவைக்கலாம் என்பதுபோல் “ஏ.ஆர்.ரகுமானையும் பிடிக்கும் என்பார்கள்.

இவையெல்லாம் சரியான பதில்கள் இல்லையா என்றால் அவர்கள் ‘போகவிரும்பும் உயரத்தைக் கணக்கில்கொண்டால் சரியான பதில்களே. அரைக்கிணறு மட்டுமே தாண்ட விரும்புபவர்களுக்கு இது போதும். ஆனால் திரைஇசையை சரியான அளவில் கற்கத்துணிந்திருக்கும் ஒரு திரைஇசை மாணாக்கருக்கான சரியான பதிலா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

டி.எம்.சௌந்தரராஜனையும் பி.சுசீலாவையும் கேட்காமல், பலமுறைக் கேட்டு அவர்களின் வித்தையை மனதிற்குள் வாங்காமல், அவர்களின் ராக பாவ ஆலாபனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், உணர்ச்சிகளை தங்கள் குரல்களில் அவர்கள் கொண்டுவரும் நேர்த்தியை உணர்ந்துகொள்ளாமல், மிக முக்கியமாக தமிழை எப்படி  உச்சரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அவர்கள் இருவரும் புகுத்தியுள்ள நுணுக்கங்களையும் அழகுகளையும் கணக்கில் கொள்ளாமல், ஏதோ போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக தங்களுக்கு முன்பு யார் இருந்தார்களோ அவர்களை மட்டுமே சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று நினைக்கும் இளம்எதிர்கால கலைஞர்கள் எதைப் பெரிதாக சாதித்துவிட முடியும்?

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டி.எம்.சௌந்தரராஜன் ஆளுமை இருந்த காலத்துக்குப் பிறகு தமிழில் ஒரு குரல்கூட ‘ஆண்குரல் இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம். டிஎம்எஸ் இடத்தை யாரும் இன்னமும் நிரப்பவில்லை, நிரப்பிவிடவும் முடியாது.

திரைஇசை மக்களை வெகுவாக வசீகரிக்கத் துவங்கிய அந்தக்காலத்தில் ஆண்குரல் என்று பி.யூ.சின்னப்பா குரலைச் சொல்லலாம். அதன்பிறகு பெருவாரியானவர்களைக் கவர்ந்த ஆண்குரல்கள் நிறையவே இருந்தன. டிஆர்மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன் என்று நிறையப்பேர் இருந்தனர்.
இவர்களுடைய கம்பீரம் ஒருபக்கமிருக்க கொஞ்சம் பெண்மை கலந்து தமிழ்நாட்டையே வசீகரித்த குரல் எம்கேடியுடையது. அவரைச் சார்ந்துவந்த குரல்தான் ஏ.எம்.ராஜாவுடையது. ஏ.எம்.ராஜா இசையமைப்பாளரான பிறகு அவருக்கு மாற்றாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி கொண்டுவந்த குரல்தான் பி.பி.ஸ்ரீனிவாஸுடையது. பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலுக்கு மாற்றாக வந்தவைதாம் கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் குரல்கள். எஸ்பிபியின் குரலுக்குப் பின்னர் தற்போது வந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட குரல்களும் எஸ்பிபியின் பாணியில் வந்துள்ள குரல்கள்தாமே தவிர 
ஒன்றுகூட ஆண்குரலுக்குரியவை அல்ல.

இவர்களில் கொஞ்ச காலத்துக்கு ஆண்குரலுடன் வந்த பாடகராக மலேசியா வாசுதேவனைச் சொல்லலாம். வேறு எந்த ஆண் குரலையும் எண்பதுக்குப் பின்னர் தமிழ்த்திரை இசையுலகம் அனுமதிக்கவே இல்லை.
இந்த அனுமதியின்மைக்குக் காரணம் திரை இசை முழுக்க முழுக்க இளையராஜாவின் ஆதிக்கத்தில் இருந்ததுதான்.

அவர் என்னென்ன டிரெண்டைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருந்தாரோ அந்த டிரெண்டிற்கு ஆண்குரல்கள் தோதுப்படவில்லை போலும். மலையாளத்தில் யார் பாடலைக்கேட்டாலும் ஏசுதாஸ் பாடிய பாடலைப் போலவே இருப்பதுபோல தமிழில் எந்த ஆண்குரல் பாடலும் எஸ்பிபி அவரைத் தொடர்ந்து பிபிஸ்ரீனிவாஸ் அவரைத் தொடரந்து ஏஎம்ராஜா என்ற ஞாபக அடுக்குத்தொடரை நினைவூட்டுவதாகவே அமைந்துவிட்டது. இப்படி அமைந்துவிட்டதை ஒரு துறைக்கு ஏற்பட்ட இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்ததையும் அவரைத் தமிழ்த் திரையுலகம் ஒதுக்க ஆரம்பித்ததையும் இளையராஜாவின் வருகைக்கு முற்பட்ட காலத்து விஷயங்களாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்துபோவதற்கான ஏற்பாடுகளை டிஎம்எஸ்ஸேதான் ஏற்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்கிறார்கள். குறிப்பாக எம்ஜிஆரைப் பற்றியும் சிவாஜி பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்கள்...இருவருமே தன்னால்தான் இத்தனைப் பாப்புலராக இருக்கிறார்கள் என்பதுபோல் அவர் ஊடகத்தில் சொல்லிய விஷயம்தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை சிவாஜி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது சுபாவம் அது. யார் தம்மைப்பற்றி என்ன சொல்லியிருந்தாலும் “சொல்லிட்டுப் போறாம்ப்பா. வயித்துப் பொழப்புக்காக என்னத்தையோ சொல்லுவானுங்க. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக்கூடாது. அவன் தொழிலைப் பிரமாதமா செய்யறான் இல்லையா. நமக்கு வேண்டியது அவன் தொழில்தானே? அவனையே போடு என்று சொல்வது சிவாஜியின் சுபாவம்.

எம்ஜிஆர் குணம் வேறு மாதிரியானது. தம்மைப் பற்றித் தவறாக யாராவது ஏதாவது சொன்னது தமது காதுக்கு வந்துவிட்டால் அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட்டு மறுவேலைப் பார்ப்பது எம்ஜிஆரின் சுபாவம். அன்றைய திரையுலகில் இதற்கான சம்பவங்கள் ஏராளம் ஏராளமாக நடந்துள்ளன. பிறகு எம்ஜிஆர் அரசியலில் வெற்றிபெற்றுவிட்டார் என்றதும் இம்மாதிரி தகவல்கள் யாவும் மறைக்கப்பட்டு அவர் பெயரைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் மட்டுமே பாய்ச்சும்வேலைகளை ஊடகங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டது வேறு விஷயம். இளையதலைமுறையினருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் இதனை இங்கே குறிப்பிடவேண்டி வந்தது.
இதன் பிறகுதான் டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருத்தரைக் கொண்டுவர எம்ஜிஆர் விரும்ப, அதிர்ஷ்டக்காற்று அல்ல அதிர்ஷ்ட சுனாமியே எஸ்பிபிக்கு அடித்தது. எம்ஜிஆர் சிவாஜியின் கோபத்துக்கு மட்டுமல்ல இன்னமும் பல இசையமைப்பாளர்களின் மற்றும் முக்கியமான பிரதான பின்னணிப் பாடகியின் கோபத்திற்கும் ஆளானார் டிஎம்எஸ் என்று சொல்கிறார்கள். சில பாடல்களை அவருடன் சேர்ந்து டூயட் பாடமாட்டேன் என்று குறிப்பிட்ட பின்னணிப் பாடகி சொல்லிவிட அதற்காகவும் அடித்தது யோகம் எஸ்பிபிக்கு.

அன்னக்கிளியில் அன்னக்கிளி ஒன்னத்தேடுதே பாடலைப்பாடும்போது டிஎம்எஸ் சொல்லிய சில திருத்தங்கள் இளையராஜாவுக்குப் பிடிக்காமல் ஆனால் அன்றைய தினத்தில் வேறு வழியில்லாமல் அந்தப் பாடலை அவர் ரிகார்டிங் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரியான டிஎம்எஸ் பற்றிய சில பலவீனங்களான பகுதிகள் உள்ளன. ஆனால் அதற்காக அந்த மகா பாடகரைப்பற்றிய திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடுதல் ஆகாது. டிஎம்எஸ்ஸுக்கு இணை டிஎம்எஸ்தான். மற்றவர்களின் பாடல் இவர் பாடலுக்கு ஈடாகிவிடாது.
அதே போலத்தான் பி.சுசீலாவும். பி.சுசீலாவின் ஒற்றைக்குரலை இந்த தமிழ்நாடு நாற்பது வருடங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. 

சிறிதும் சலிப்புத் தட்டவில்லை.

இனிமை குறையவில்லை.

வேறு குரலைக் கேட்கத்தோன்றவில்லை

தேவையிருக்கவில்லை.

சுசீலா காலம் முடிந்தபிறகு என்னாயிற்று? இன்னொரு பெண் குரலை பத்துவருடங்கள் தொடர்ச்சியாக கேட்க முடியவில்லை. இப்போது பத்துவருடங்களும் குறைந்து ஐந்து வருடங்கள் இரண்டு வருடங்கள் ஏன்......இப்போதெல்லாம் ஒரு பாடல், அத்தோடு போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறமாதிரி ஆகிவிட்டது.

எஸ்.ஜானகி இளையராஜா கண்டுபிடித்த அல்லது அவர் அறிமுகப்படுத்திய பாடகி அல்ல. காலகாலமாகவே தமிழிலும் அதைவிட அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் கோலோச்சிக்கொண்டிருந்தவர்தான் அவர். அவருடைய குரல் குறிப்பிட்ட ‘மூடுக்கு சரியானதாக இருக்கும் என்று அன்றைய இசையமைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டு ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல்கள் என தமிழில் பயன்படுத்தப்பட்டவர் ஜானகி. அந்தக்கால இசையமைப்பாளர்களால் இப்படி பயன்படுத்தப்பட்ட ஜானகி பாடிய பெரும்பாலான பாடல்கள் பெரிய அளவில் புகழ்பெற்ற பாடல்களாகவே அமைந்தன.

இளையராஜாவின் ஆட்சிக்காலம் திரையுலகில் தொடங்கியபோது தமக்கென்று தனித்த அடையாளங்களும் தமக்கென்று தனியானதொரு ‘டீமும் இருக்கவேண்டும் என்று நினைத்தார் ராஜா. இந்த நினைப்பில் எந்தத் தவறும் கிடையாது. டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக எஸ்பிபியை வரித்தவர், பி.சுசீலாவுக்கு மாற்றாக எஸ்.ஜானகியை முன்னிறுத்தினார். எஸ்.ஜானகியைப் பயன்படுத்தி சுசீலாவின் சாம்ராஜ்ஜியத்தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் இளையராஜாவுக்கு இருந்திருக்கலாம். தொழில் ரீதியாக அந்த ‘அப்புறப்படுத்தல்ராஜாவுக்கு சாத்தியமானது. ராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களைப் பாடிய பெண்குரலுக்கு சொந்தக்காரரானார் ஜானகி. இதன் பலனாக சில நல்ல பாடல்கள் கிடைத்த அதே நேரத்தில் பல பாடல்கள் ஜானகி கீச்சுக்கீச்சென்று கீச்சுக்குரலில் கத்தும் பாடல்களாக அமைந்தன. மற்ற இசையமைப்பாளர்கள் ஜானகியின் ரேஞ்ஜ் தெரிந்து அவருக்கான பாடல்களைத் தந்தனர். இளையராஜாவோ தம்முடைய இசை எல்லாவற்றையும் சரிசெய்யும் என்றும் தாம் செய்துவிட்டால் மறுபேச்சுக்கு இங்கே இடமில்லை என்றும் பெருநம்பிக்கைக் கொண்டவராக இருந்ததால் கீச்சுக்குரல் பாடல்கள் ஏராளமாக தமிழுக்குக் கிடைத்தன.

இளையராஜாவின் ரசிகர்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசித்துவிட்டுப் போவதுபற்றிக் கவலை இல்லை. ஆனால் பாடவேண்டும் என்று களத்துக்கு வருகிறவர்கள் எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக முன்னோர்கள் எது எதையெல்லாம் எப்படியெப்படி எல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதை நேர்மையான முறையில் தெரிந்துகொண்டு களத்துக்கு வருவது அவசியம்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

தமிழ்த்திரை இசையில் முன்னோர்களின் சாதனைகள் என்ன என்பதை ஒரு பகுதியாவது அறிந்துகொள்ள அப்துல்ஹமீதின் இன்னிசை மழை நிகழ்ச்சி உதவுகிறது என்பதுதான் விஷயம்.
இதுவரை திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், ஏ.எம்.ராஜா ஆகியோர் பற்றிய தகவல்களும் அவர்கள் பாடிய காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்களும் வந்தன. ராகவேந்தரின் மகளான கல்பனா பல்வேறு பாடல்கள் பற்றிய தகவல்களுடன் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். இளையராஜாவின் தம்பியும் கவிஞர் இசையமைப்பாளர் இயக்குநர் என்று பல்வேறு சிறப்புக்களுடன் வலம்வரும் கங்கை அமரன் நிகழ்ச்சியும் வந்தன. கங்கை அமரன் மிகமிக நேர்மையோடு முன்னோர்களுக்கான மரியாதையையும் அவர்களுக்கான இடத்தையும் மிகச்சரியாக வழங்கி தமது நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தமது அண்ணன்களின் புகழை எந்தெந்த இடங்களில் சொல்லவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சரிவரச் சொன்னார். அவர் சொன்னதில் வேறு மூன்று முக்கிய நிகழ்வுகள்.......
“அந்தக் காலத்தில் எல்லாம் விஸ்வநாதன் இசையமைத்து பாப்புலரான பாடல்களில் அந்த மெட்டுக்களுக்கு வேறு பாடல்வரிகளைப் போட்டுத்தான் நாங்கள் மேடையில் பாட்டுக்கச்சேரி நடத்துவோம். ஒருமுறை திருச்சி பொன்மலைப் பகுதியில் எங்கள் பாட்டுக்கச்சேரி. அங்கே நாங்கள் மேடைப் போட்டிருக்கும் பகுதிக்கு வெகு அருகில் எம்எஸ்வி ஐயா அவர்களுக்கு உறவினர் ஒருவர் வீடு. அந்த வீட்டிற்கு அப்போது எம்எஸ்வி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து எப்படியாவது அவர் காதில் எங்களுடைய பாட்டு விழாதா அந்த மேதையின் பார்வை எங்கள் மீது படாதா என்ற எண்ணத்தில் அந்தக் கச்சேரியை நாங்கள் நடத்தியது மறக்கமுடியாதது.

“புன்னகை மன்னன் படத்திற்கு அண்ணன் இளையராஜா மியூசிக். அந்தப் பாடல்களுக்கு கீ போர்டு வாசித்தவர் ஏ.ஆர்.ரகுமான். ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. பாடல் ரிகார்டிங்கிற்கு முன்னால் பிஜிஎம் என்னென்ன வரவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நோட்ஸை முன்பே எழுதிக்கொடுத்துவிடுவார் அண்ணன் இளையராஜா. அப்படி எல்லாருக்கும் நோட்ஸ் கொடுத்து அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை ரிகர்சல் பார்ப்பதற்காக ஒவ்வொருவரையும் வாசித்துக் காட்ட சொன்னார். கிடார் வாசிக்கிறவர் அவர் நோட்ஸை வாசித்தார். ப்ளூட் வாசிக்கிறவர் அவர் நோட்ஸை வாசித்தார். அடுத்து கீ போர்டு. ம்ம்ம்..நீ வாசி என்று அண்ணன் சொல்ல அவர் கீழே குனிந்து இரண்டு மூன்றுமுறை அவரே வாசித்து சரிபார்த்துக்கொண்டு அப்புறம்தான் அந்த நோட்ஸை வாசித்துக்காட்டினார். காரணம் பெர்ஃபெக்ஷன். தம்முடைய மனதுக்கு மிகச்சரியாக வரும்வரை அவர் தயாராகி அப்புறம்தான் வாசித்தார். இந்த குணம் அன்றைக்கே அவரிடம் இருந்தது.

“மிகப்பெரிய இசைமேதையான எம்எஸ்வியும் அண்ணன் இளையராஜாவும் இணைந்து இசையமைத்த பாடல்களில் ஒன்று ‘ஊருசனம் தூங்கிருச்சி ஊதக்காத்தும் அடிச்சிருச்சி இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பாடலுக்கான மெட்டு எம்எஸ்வி அவர்கள் அமைத்தது. பின்னணி இசைதான் அண்ணன் இளையராஜா அமைச்சார். அந்தப் படத்துல ஒரேயொரு பாடலுக்கு மட்டும்தான் இளையராஜா இசையமைச்சார். மற்ற எல்லாப் பாடல்களுக்கும் எம்எஸ்விதான் இசையமைச்சார்.- என்பது போன்ற பல தகவல்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சொன்னார் கங்கை அமரன்.

(அந்த ஒரு பாடல் மெல்லிசை மாமன்னர்களின் இசையமைப்பு அளவுக்கு ஏன் இருக்கிறது என்பது இப்போது தெரிகிறதா?)

அவருக்கு அடுத்து ஏ.எல்.ராகவன் என்று பயணிக்கிறது அந்த நிகழ்ச்சி. இன்னமும் இரண்டு வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லக்கூடிய கான்செப்ட்டை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
முன் பின் என்று எதுவும் தெரியாமல் தெரிந்து கொள்ள விரும்பாமல் இசை என்றால் இளையராஜா, பாடகர் என்றால் எஸ்பிபி, பாடகி என்றால் ஜானகி என்று மொக்கையாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி அது.