Saturday, January 17, 2015

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தாக்கங்கள்; பகுதி -2


இது சிவாஜி படம், எம்ஜிஆர் படம், இது ஸ்ரீதரின் படம் என்பதுபோல்  தன்னைப் பற்றியும் பேசப்படவேண்டும் என்றால் வித்தியாசமான கதைக்களன்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஆரம்பமுதலே இருந்தது.

ஆங்கிலப்படங்கள் மற்றும் உலகமொழிப் படங்களின் தாக்கங்களை அதிகமாகப் பெற்றவர்தான் கேபி. சர்வதேசத் திரைப்பட விழாக்களைப் பொதுவாக அவர் தவறவிட்டதே இல்லை. இவருக்கு முன்பிருந்த இயக்குநர்கள் எல்லாம் பாரம்பர்ய நாடகத்துறையையொட்டியே தமது சிந்தனைகளை அமைத்துக்கொண்டவர்கள். இவர் புதிய நூற்றாண்டின் பிரதிபலிப்பாக உருவானவர். அதனால் வெளிநாட்டுப் படங்களில் காட்சி அமைப்புகளிலும் கதைகளிலும் தென்படும் புதுமைகளையும் மாறுதல்களையும் தமிழ்ப்படங்களிலும் கொண்டுவரவேண்டும் என்பதாகவே தமது சிந்தனையை அமைத்துக்கொண்டவர்.

இவருக்குப் பக்கபலமாக இருந்தவர் இவருடைய உதவியாளர் அனந்து. அனந்துவை ஒரு நடமாடும் திரைத்துறைப் பல்கலைக்கழகம் என்றே அழைப்பார்கள். நடிகர் கமலஹாசனே அனந்துவைப் பற்றி அப்படித்தான் குறிப்பிடுவார்.

அனந்து தனியாக டைரக்ஷன் செய்து ஒன்றையும் சாதிக்கமுடியவில்லையே தவிர, பாலச்சந்தருடன் வெளி உலகிற்குத் தெரியாமல் இணைந்து செய்த சாதனைகள் அளப்பறியவை.
அனந்து மறைவுக்குப் பிறகு பாலச்சந்தரால் ‘பழைய பாலச்சந்தர்போல்’ அத்தனை சாதனைகளைச் செய்யமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே நினைத்துப்பார்க்கவேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளைப் பரீட்சார்த்தமாகச் செய்துபார்க்கலாம் என்ற பாணியிலேயே அமைந்திருந்தது பாலச்சந்தரின் பயணம்.

அதற்கேற்ப கதைகளைத் தேர்வு செய்வார் அவர். வழக்கமான தமிழ்த்திரையுலகப் பாணியிலிருந்து முற்றிலும் விலகியே இருக்கும் அந்தக் கதைகள்.

அதனால்தான் இரண்டு மனைவியர், ஒரு பெண்ணை மூன்றுபேர் காதலிப்பது, மூன்று பெண்கள் ஒருவனைக் காதலிப்பது என்றெல்லாம் உறவுச் சிக்கல்களோடு பின்னிப்பிணைந்திருக்கும் அந்தக் கதைகள். படைப்பிலக்கியத்தில் தி.ஜானகிராமன் முற்றிலும் உறவுச்சிக்கல்கள் கொண்ட கதாபாத்திரங்களைப் படைத்திருப்பார். பாலச்சந்தரையும் அந்த வகைப் படைப்பாளராகத்தான் நாம் பார்க்கவேண்டியிருக்கும்.

எத்தனை உறவுச்சிக்கல்கள் இருந்தபோதும் பெண்களின் உள் மனத்து உணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள் ஆகியவற்றை பாலச்சந்தர்போல் வெளிப்படுத்திய இயக்குநர்கள் கிடையாது. அவள்ஒரு தொடர்கதை எம்.எஸ்.பெருமாளின் குறுநாவல். அந்தக் கதையின் நாயகிக்கு கவிதா என்று பெயரிட்டு சுஜாதாவை நடிக்கவைத்து எத்தனை ஆண்டுகளானாலும் அந்தக் கதாபாத்திரம் பற்றிப் பேசும்படி படமாக்கியவர் அவர்.
                                     
‘அவள் ஒரு தொடர்கதைதான் இன்றைய எல்லா சீரியல்களுக்கும் தாய்’ என்று குறிப்பிடுகிறது விகடன் கட்டுரை ஒன்று.

அவள் ஒரு தொடர்கதை கவிதா, அரங்கேற்றம் லலிதா, அபூர்வராகங்கள் பைரவி, மரோசரித்ரா ஸ்வப்னா, சிந்துபைரவி சிந்து, மனதில் உறுதி வேண்டும் நந்தினி, புதுப்புது அர்த்தங்கள் கீதா என்றெல்லாம் அந்தந்தப் படத்தின் நாயகிகளை அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டே அறிந்துகொள்கிறோம் என்றால் அந்தப் பாத்திரங்கள் எத்தனை நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது விளங்குகிறது.

இருகோடுகள் ஜெயந்தி கணவனைத் தாண்டி தனக்கு வேறு உலகம் இல்லை; அவன் தனக்குத்தான், தனக்கு மட்டும்தான் என்று நினைக்கிற ரகம் என்பதை சித்தரித்தவர் அந்த ஜெயந்தியையே வெவ்வேறு பெயர்களில் தனது பாத்திரங்களாகப் படைத்துக்கொண்டே இருக்கிறார். அக்னிசாட்சி சரிதா அதே பாத்திரம்தான்.

சிந்துபைரவியில் சுலக்ஷணா அதே கதாபாத்திரம்தான்.

குறிப்பிட்ட படத்தின் இயக்குநர் என்பதைத்தாண்டி அன்றைய சமூகத்தின் அறிவுசார் மக்களின் பேசுபொருளாக மாறியிருந்தவர் பாலச்சந்தர்.

நான்கு பேர் ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் அந்த இடத்தில் கட்டாயம் பாலச்சந்தரைப் பற்றிய பேச்சோ விமரிசனமோ விவாதப்பொருள் ஆகியே தீரும்.

எழுபது எண்பதுகள் எல்லாம் கடிதப்போக்குவரத்து இருந்த காலகட்டங்கள்.

அகிலன் கண்ணன், எம்எஸ்பெருமாள், எழுத்தாளர் இந்துமதி, சுகிசிவம், பேராசிரியர் சு. வேங்கடராமன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைராக இருந்தவர் இவர். வைணவ இலக்கியம் சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சி நூல்கள் எழுதியிருக்கிறார்) இவர்களோடெல்லாம் எழுதும் கடிதங்களில் பாலச்சந்தர் பற்றிய விவாதங்கள் அன்றைக்குத் தூள் பறக்கும்.
                                
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்துவிட்டு அதில் நடித்த ஸ்ரீவித்யாவுக்குக் கடிதமெழுதப்போய் நட்பு ஆரம்பித்தது தனிக்கதை.

நண்பர்கள் மனோபாலா (இவர் இப்போதுதான் காமெடி நடிகர். அப்போதெல்லாம் அறிவுஜீவிகளில் ஒருவர்) ராபர்ட் ராஜசேகரன், குடிசை ஜெயபாரதி ஆகியோரோடெல்லாம் பெங்களூர் கப்பன் பூங்காவில் உட்கார்ந்து கடலைக்காய் தின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த பேச்சுக்களில் முக்கிய இடம் பிடித்தவர் கேபிதான்.

ஒவ்வொரு படத்திலும் படக்கதைகளின் மீது விவாதங்கள் இருந்தாலும் புதுக்கவிதைகள் போல், மின்னல்கீற்றுக்கள் போல ரசிப்பதற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கும். அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டைட்டிலில் நடிகர்களின் பெயர்களைப் போட்டுவிட்டு ‘மற்றும் அருவி’ என்று போட்டிருப்பார்.
                                 
புதுக்கவிதை ட்ரெண்ட் சுற்றிச்சுழன்று சூறாவளியாய் அடித்த சமயத்தில் அக்னிசாட்சி கதாநாயகியைப் புதுக்கவிதை எழுதுகிற பெண்ணாக உருவாக்கி வாலியை வைத்துக்கொண்டு ஏராளமான புதுக்கவிதைகளைப் படம் பூரவாவும் இறைத்திருப்பார்.

கேபியுடனான அறிமுகம் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்துவிட்டு எழுதின விமரிசனக் கடிதத்திலிருந்து துவங்கிற்று என்று சொல்லலாம்.

கடிதங்களுக்குத் தவறாமல் பதில் எழுதும் நல்ல பழக்கம் ஒரு சில பெரியவர்களைப் போலவே கேபிக்கும் உண்டு. ஆரம்பத்தில் சம்பிரதாயமான முறையில் பதிலெழுதியவர், ஒரு வேளை என்னுடைய கடிதங்கள் அவருக்குப் பிடித்துப்போயினவோ என்னவோ- இரண்டு பக்கங்கள் மூன்று பக்கங்கள் என்று பதில் எழுதினார்.

நூல்வேலி படத்திற்கா அல்லது அபூர்வராகங்கள் படத்திற்கா என்று ஞாபகமில்லை. சற்றே கோபத்துடன் ஆறு பக்கங்களுக்கு பதில் எழுதியிருந்தார்.

எந்தவித பந்தாக்களும் இல்லாமல் சில உண்மைகளை அவர் அங்கீகரித்துக்கொள்வது ஆச்சரியமாக இருக்கும்.

அவரது ஓரிரு படங்களில் மொட்டை மாடிகள் பிரதானமான இடம் வகிக்கும். அதைக்குறிப்பிட்டு ஒருமுறை எழுதியிருந்தேன் ‘உங்களுடைய எல்லாப் படங்களிலும் மொட்டை மாடிகள் வருகின்றன. அவை பிரதானமான இடங்களைப் பிடித்துக்கொள்கின்றன. பாசு சாட்டர்ஜியின் எல்லாப் படங்களிலும் மழைபெய்து ஓய்ந்த ஈரக்காட்சிகள் வரும். அதுபோல உங்களின் எல்லாப் படங்களிலும் தவறாமல் மொட்டைமாடிக் காட்சிகள்……. மொட்டை மாடிகளை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்’

‘மொட்டை மாடிகளை நான் காதலிக்கிறேன் என்ற செய்தியே எனக்கு வியப்பாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. நான் மொட்டை மாடிக் காட்சிகளை விரும்பி அமைக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் அவற்றை நான் காதலிக்கிறேன் என்பதுதான் – என்பது, நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. Thanks’ என்று பதில் எழுதியிருந்தார்.

பிறகு அவரை இரண்டொருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 

ஓரளவு அறிமுகமாகியிருந்த நேரத்தில் ஒருமுறை எம்எஸ்பெருமாளின்(இவர் தூரதர்ஷன் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர். சுகிசிவத்தின் அண்ணன்) மகள் திருமணத்திற்கு வருகைப் புரிந்திருந்தார் பாலச்சந்தர்.

அவர் வருகையின்போது ஒரு ஓரத்தில் நின்று வணக்கம் சொன்னேன். கைகூப்பிவிட்டு நடந்துகொண்டே இருந்தவரிடம் இயக்குநர் வசந்த் “சார் அமுதவன் வணக்கம் பண்றார் சார்” என்று சொல்ல உடனே நின்று திரும்பியவர் அத்தனைக் கூட்டத்துக்கு மத்தியில் என்னிடம்
 திரும்பிவந்து “சாரி…. எனக்கு உங்க முகம் சரியாக நினைவில்லை. அதான் போயிட்டேன். எப்ப வந்தீங்க?” என்று தோள்மீது கைபோட்டபடி சற்றுதூரம் பேசிக்கொண்டே வந்தார். 

அத்தனை உயரத்திலும் அத்தனைப் புகழ் வெளிச்சத்திலுமாக இருந்த ஒருவர் இப்படி இவ்வளவு தணிவாகவும் எளிமையாகவும் நடந்துகொண்டது வியப்பாகவே இருந்தது.

ஏக்துஜே கேலியே படத்திற்கு சாவி பத்திரிகையில் விமர்சனம் எழுதியிருந்தேன். “என்னைத் திட்டணும்ன்றதுக்காகவே சாவியும் நீங்களும் சேர்ந்துகொண்டு இரண்டு பக்கங்களுக்கு சென்டர்ஸ்ப்ரெட்டாகப் போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே” என்றார்.

சாவியில் தொடர்கதையாக எழுதிய ‘கங்கையெல்லாம் கோலமிட்டு’ நூல்வடிவில் வந்தபோது பாலச்சந்தரிடம் தந்து “சார் முடிஞ்சா படிச்சுட்டு கருத்துச் சொல்லுங்க” என்று கேட்டிருந்தேன். அவரிடமிருந்து எந்தவித கடிதமும் வரவில்லை. சரி இதையெல்லாம் எங்கே படித்திருக்கப்போகிறார் என்ற எண்ணத்தில் பேசாமலிருந்துவிட்டேன்.

அடுத்தமுறை அவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார். “நீங்க உங்க முன்னுரையில் அந்த பாலாமணியைப் பற்றி எழுதியிருந்தீங்க பாருங்க…………….. ‘இந்த பாலாமணியுடைய காரெக்டர் இத்தனை முக்கியத்துவம் பெறும் என்று நான் தீர்மானிக்கவில்லை. நாம் எழுதிக்கொண்டே செல்லும்போது ஏதாவது ஒரு காரெக்டர் மற்ற எல்லாக் காரெக்டர்களையும் முந்திக்கொண்டு வந்து மற்ற காரெக்டர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தான்அதிக முக்கியத்துவம் பெற்று நின்றுவிடும். அந்த முக்கியத்துவத்தை படைப்பாளி அல்ல, அந்தக் காரெக்டரே தீர்மானித்துக்கொள்கிறது’ என்று. எனக்கு என்னுடைய படங்களில் இதுதான் பலமுறை நடந்திருக்கிறது. அட, இதை எப்படி இவர் இத்தனைக் கரெக்டா சொல்லியிருக்கிறார் என்று வியப்பாக இருந்தது’ என்றார்.

உடம்பெல்லாம் ஜிவ்வென்று சூடேறியது போல் இருந்தது.

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தைக் கன்னடத்தில் தயாரிக்கப்போவதாகவும் பாலச்சந்தரே இயக்குவதாகவும் செய்தி வந்தது. பாலச்சந்தர் படம் இயக்குவதைப் பார்க்கும் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் படப்பிடிப்பு நடைபெற்ற பெங்களூர் அரண்மனை வளாகத்திற்குச் சென்றிருந்தேன்.

முதல்நாள் படப்பிடிப்பு.

எழுத்தாள நண்பர் பாலகுமாரன் அப்போது பாலச்சந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்திருந்தார். உதவியாளர்கள் புடைசூழ பாலச்சந்தர் வந்துகொண்டிருந்தார். அருகில் வந்ததும் பாலகுமாரன் என்னை அறிமுகப்படுத்த முயன்றதுதான் தாமதம், “இவரைத் தெரியுமே. என்ன ஒண்ணுன்னா இவர் பெயரைக் கேட்டதும் எனக்கு இவருடைய கையெழுத்துத்தான் நினைவுக்கு வருமே தவிர, இவர் முகம் நினைவுக்கு வராது. அந்த அளவுக்கு இவர் கையெழுத்து எனக்குப் பரிச்சயம்” என்று சொல்லி வாத்சல்யத்துடன் தோளில் கைப்போட்டு பேசியபடியே நடந்தார் பாலச்சந்தர்.

அந்தச் சந்திப்பை வேறு வகையிலும் உபயோகித்துக்கொள்ளலாம் என்று தோன்றிற்று. “சார் உங்களை ஒரு பேட்டி எடுக்கணும்” என்றேன்.

“பேட்டியெல்லாம் எதுக்கு? நாம பேசிக்கிட்டிருப்போமே” என்றார்.

“அப்படிப் பேசுவதையே நான் எழுதிர்றேனே” என்றேன்.

சிரித்துவிட்டு “அப்படியா ஒண்ணு செய்வோம். இன்னைக்குத்தான் முதல்நாள். அனேகமாய் திங்கட்கிழமைவரை இங்குதான் ஷூட்டிங். நீங்க ஞாயிற்றுக்கிழமை வந்துருங்க. நாம இங்கேயே எங்காவது உட்கார்ந்து பேசுவோம்” என்றார்.

அதன்படி அவர் சொல்லியிருந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தபோது நேரமொதுக்கி படப்பிடிப்பு இடைவெளிகளில் மாலை நான்குமணிவரை விட்டுவிட்டுப் பேசினார்.

அந்தப் பேட்டியை அப்போதைய குங்குமம் இதழுக்கு அனுப்பிவைத்திருந்தேன். “பேட்டி நன்றாக இருக்கு. ஆனால் ரொம்பவும் நீளமா இருக்கு. அதற்காக அதனை எடிட் பண்ணப்போவதில்லை. 
இரண்டு இதழ்களில் வருகிறமாதிரி போட்டுவிடுகிறேன்” என்று சொன்ன அப்போதைய குங்குமம் இதழின் ஆசிரியர் பாவை சந்திரன் இரண்டு இதழ்களில் அந்தப் பேட்டியை வெளியிட்டார்.

பேட்டிக்கென  இல்லாமல் அவர் சொன்ன ஒரு விஷயம்… “படப்பிடிப்புக்கு இங்கே வந்தேனே தவிர இந்த அரண்மனையைச் சேர்ந்த மிக முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு தகவல் என்னை ரொம்பவும் கலக்கிருச்சி. இரண்டொரு நாட்களாக சரியான தூக்கம்கூட இல்லாமல் பண்ணிருச்சி. எத்தனைப் பெரிய மகாராஜா அவர்… அவர் பேர்ல கேஸ். தான் கோர்ட்டுக்குப் போகணுமா? அப்படின்னு நினைக்கிறாரு. அதைவிட செத்துப்போயிரலாம்னு முடிவெடுக்கறாரு. தன்னுடைய விரல்ல 
போட்டிருக்கற வைரமோதிரத்தை இடிச்சு எதிலோ போட்டுக் குடிச்சி தன்னுடைய வாழ்க்கையையே முடிச்சுக்கறாரு. மைசூர் மகாராஜாவின் முடிவு இப்படி அமைஞ்சு போச்சி. விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே ஆடிப்போயிட்டேன். ரெண்டு நாளா மனசில இதேதான் இருக்கு. இதை அடிப்படையா வெச்சு ஒரு படம் பண்ணனும்னு இருக்கேன்” என்றார்.

ஆனால் பாலச்சந்தர் அப்படி ஒரு படம் எடுக்கவில்லை.
                                     
பாலச்சந்தரை அடுத்தமுறை பார்க்க நேர்ந்தது நடிகர் சிவகுமாருடன்.

90-களில் குமுதம் இதழ் வாரம் ஒரு  பிரமுகரை சிறப்பாசிரியராக ஆக்கி சிறப்பிதழ்கள் வெளியிட்டு வந்தார்கள். சிவகுமார் ஆசிரியராக இருந்து தயாரித்த குமுதம் இதழுக்காக, அவரது தயாரிப்பில் உதவுவதற்காக சென்னை சென்றிருந்தேன். சிவாஜிகணேசன், நடிகை பத்மினி, கே.பாலச்சந்தர், எழுத்தாளர் சுஜாதா, பத்மா சுப்பிரமணியம், ஓவியர் ஆதிமூலம் என்று சந்திக்கப்போகிறவர்களின் லிஸ்ட் வைத்திருந்தார் சிவகுமார். (அன்றைக்குக் குமுதம் மீதிருந்த கோபத்தில் பேட்டி தரமாட்டேனென்று சொல்லிவிட்டார் சிவாஜி) பத்மினி பேட்டி முடிந்ததும் பாலச்சந்தரைத் தொடர்பு கொண்டார் சிவகுமார்.

காலை எட்டே முக்கால் மணிக்கு வரச்சொன்னார் பாலச்சந்தர்.

சிவகுமார் எப்போதுமே நேரம் தவறாமைக்குப் பேர்போனவர். எதுவொன்றும் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி நடந்தாகவேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருப்பவர்.

பாலச்சந்தரும் நேர விஷயத்தில் ரொம்பவும் கறார் என்று சொல்வார்கள்.

இரண்டு கறார் விஐபிக்களின் சந்திப்பு எப்படி இருந்தது என்பதை அன்றைக்குப் பார்க்கமுடிந்தது.
காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.

கிளம்பிய சிறிது நேரத்தில் வந்துவிட்டதால் வாரன் ரோட்டிலிருக்கும் பாலச்சந்தரின் வீட்டிற்கு சற்றே தூரத்தில் ஒரு மரத்தடியில் கார் நிறுத்தப்பட்டது.

சிறிதுநேரம் காத்திருந்து சரியாக எட்டு நாற்பத்து மூன்று ஆனதும் காரைக் கிளப்பச்சொன்னார் சிவகுமார்.

மிகச்சரியாக எட்டு நாற்பத்து நான்கிற்கு கார் கேபியின் காம்பவுண்டின் அருகில் வர முற்படுவதற்குள் காம்பவுண்ட் கேட் திறக்கப்பட, கேட் அருகில் சிவகுமாரை வரவேற்பதற்கு நின்றிருக்கிறார் கேபி.

“வாங்க சிவகுமார். நேரத்தை மிகவும் துல்லியமாகக் கடைப்பிடிப்பீங்கன்னு தெரியும். அதான் சரியாக எட்டு நாற்பத்து இரண்டிற்கு கேட் அருகில் வந்து நின்றுவிட்டேன்” என்றார் அவர்.

சிவகுமாரும் கேபியும் அன்றைக்குப் பரிமாறிக்கொண்ட பேச்சுக்கள் அர்த்தமும் கனபரிமானமும் கொண்டவை. ஆனால் அதில் பத்து சதவிகிதம்கூட குமுதத்தில் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கேபியுடன் பேசுவதற்கென்றே சிவகுமாரின் இயல்புப்படி ஏகப்பட்ட தயாரிப்புக்களுடன் வந்திருந்தார் அவர். கேபியும் மனம் விட்டும் சீரியஸாகவும் பல விஷயங்களைப் பேசினார். அதில் ஒரு கேள்வி.
“உங்களுக்குப் பிடிச்ச படங்களில் ஒன்று அக்னிசாட்சி.  நீங்கள் ரொம்பவும் இன்வால்வ் ஆகி செய்த படம் அது. ஸ்கிரிப்ட் எல்லாம் அவ்வளவு பக்காவாக இருக்கும். நீங்கள் எந்த அளவுக்கு இன்வால்வ் ஆனீங்களோ அதே அளவுக்கு நானும் சரிதாவும் இன்வால்வ் ஆகி நடித்திருப்போம். டப்பிங் பேசுகையிலேயே எமோஷனல் தாங்காமல் நானும் அழுது சரிதாவும் அழுது….. ஒரு கட்டத்தில் சரிதா மயக்கம்போட்டே விழும் அளவுக்குப் போய் என்றெல்லாம் உழைத்துச் செய்த படம் அது……………….! அந்தப் படம் தோல்வியடைஞ்சது எனும்போது உங்க உணர்வு எப்படி இருந்தது?” – இது சிவகுமார்.

“தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனைச்சேன்” என்றார் பாலச்சந்தர் சட்டென்று.

அங்கே திடீரென்று அமைதி விழ சிறிது நேரம் யாருமே பேசவில்லை. பிறகு அந்த மௌனத்தை பாலச்சந்தரே உடைத்தார். “நெஜமாத்ததான் சொல்றேன். இந்த உணர்வேதான் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இருந்தது. அந்த ஐரனியிலிருந்து வெளிவர ரொம்ப நாள் பிடிச்சது எனக்கு”

அந்தச் சந்திப்பில் அவர் சொன்ன இன்னமும் இரண்டு விஷயங்கள்…………
…………… “நாம என்ன நினைக்கிறோமோ அந்த உணர்வை அதன் தாக்கத்தை கலர்ஃபிலிமில்  கொண்டுவர முடிவதில்லை என்பதுதான் உண்மை. மறுபடியும் நான் ஒரு கறுப்பு வெள்ளைப் படம் எடுக்கலாம்னு இருக்கிறேன்”  

“என்னதான் பெரிய வெற்றிகளைப் பெற்றபோதும் நாடகங்கள் மூலம் அடைந்த வெற்றிகளும் அந்தத் திருப்தியும் தனியானது. மறுபடியும் நாடகங்கள் பக்கம் போகணும்ன்ற ஆசை ரொம்பவே அதிகமாக இருக்கிறது. திரும்பவும் நாடகங்கள் போடணும்ன்ற எண்ணம் இருக்கு”

தன்னை எந்த நாளும் புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்பதும், எந்த நிலையிலும் உழைக்கத் தயாராக இருந்தார் என்பதும்தான் அவரது நீடித்த புகழுக்குக் காரணம்.

தம் படைப்புக்களில்  அவை வெளிவந்த காலகட்டத்தையும் தாண்டி சிந்தித்தவர் அவர்.

அவரது சில படங்கள் இன்றைக்கு முதன்முதலாகச் சொல்லப்பட்டிருக்குமானால் அதன் தாக்கங்களும் வெற்றிகளும் நிச்சயமாக வேறு திசையில் பயணித்திருக்கும். 

டிவியின் ஆதிக்கம் உருவானபோது சீரியல்கள் மூலம் அவர் பதித்து வைத்திருக்கிற முத்திரைகள் நிரந்தரமானவை.

அவரது இறுதி ஊர்வலத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது இரண்டு விஷயங்கள் மனதைப் பாதித்தன.

முதலாவது, ஒரு இறுதி யாத்திரை ஊர்வலத்தில் எந்தமாதிரியான மனநிலையுடன் பங்குபெறுகிறோம் என்ற எண்ணமோ, யாருக்காக, எதற்காகக் கூடியிருக்கிறோம் என்ற விவஸ்தையோ சிறிதளவுகூட இல்லாமல் கலந்துகொண்டிருந்த கூட்டம்……………..
                                             
ரஜனியைப் பார்த்ததும் ஓவென்று கத்திக் கூச்சலிட்டு ஆர்ப்பரித்து முண்டியடித்த கூட்டத்தின் அராஜகம் தமிழ் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.

‘எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற ரசிக மனப்பான்மை இன்னமும் எவ்வளவு காலத்திற்கு இங்கே இருக்கப்போகிறது என்பதும் இதிலிருந்தெல்லாம் விடுபடுவது எப்போது?’ என்பதும் தமிழினம் யோசிக்கவேண்டிய விஷயங்கள்.

‘இந்தக் கூட்டம்தான் நம்மை ஆளப்போகிறவர்கள் யார் என்பதையும் தீர்மானிக்கிறது’ என்பதையும் யோசித்தால்தான் ‘விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழச்சாதியை?’ என்ற பாரதியின் கவலைப் புரிகிறது.

இறுதி ஊர்வலங்களில் அமைதியாக ஒதுங்கி வழிவிட்டு நிற்கும் மரியாதையையும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கையும் - என்றைக்குக் கற்றுக்கொள்ளப் போகிறது தமிழ் இனம்?

எந்த நிகழ்ச்சியானாலும் காமிரா தன்னுடைய பக்கம் திரும்பியதும் உடனே எழுந்து நின்று இளித்துக்கொண்டே கையாட்டும் அசிங்கத்தையும் எப்போது நிறுத்தப்போகிறது தமிழ்க்கூட்டம்? (இவனுடைய இளிப்பையும் கையாட்டலையும் எவன் கேட்டான்?)

இரண்டாவது, 

கமலஹாசன் இறுதி ஊர்வலத்தில் இல்லாதது.

இதுபற்றிய விவாதங்களுக்குள் போக விரும்பவில்லையெனினும் அந்த எண்ணம் வருவதையும் வந்ததையும் தவிர்க்கமுடியவில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனெனில் கமலஹாசன் மீது பாலச்சந்தர் வைத்திருந்த அன்பும் பிரியமும் பாசமும் நேசமும் நம்பிக்கையும் அத்தகையவை.
                                                        
நான்கூட அவரிடம் ஒருமுறைக் கேட்டிருக்கிறேன். “சார் இயல்பான நடிப்பு என்பதைத்தாண்டி சில கிம்மிக்ஸை வைத்து அதன்மூலம் பார்வையாளர்களின் கவனத்தைக் கவரும் வேலையைத்தானே நீங்கள் கமலை வைத்து இப்போது செய்கிறீர்கள்? கமலை இயல்பான நடிப்பின் மூலம் அல்லாமல், எப்படியாவது ரசிகனிடம் கொண்டு சேர்த்துவிடுவது என்ற பகீரத முயற்சிகள் உங்கள் படங்களில் வெளிப்படுகின்றனவே”

“it may be true”- என்றார் பாலச்சந்தர். “He deserves it” என்றவர் “அவனை இன்னமும் எப்படியெல்லாம் ரசிகர்கள் முன்னால் கொண்டுபோகலாம்ன்னுகூட யோசிக்கிறேன். எத்தனைச் செய்தாலும் போதாது அவனுக்கு. அத்தனையும் தாங்குவான் அவன். அவ்வளவு திறமை இருக்கு அவனுக்கு” என்றார்.

அவரது இந்த மனப்போக்கை நேரடியாகக் காணும் அனுபவம் பெங்களூரில் நடந்த கன்னடப்படமான ‘பெங்கியல்லி ஹரளித ஹூவு’(நெருப்பிலே பூத்த மலர்) படப்பிடிப்பேலேயே கிடைத்தது.

அந்தப் படத்தின் ஹீரோவாக நடித்தவருக்கு ஒரு பாடல் காட்சி.

நடனம் ஆடிக்கொண்டே வந்து தரையில் இரு கால்களையும் விரித்து சர்ரென்று சரிந்து வழுக்கிக்கொண்டே வந்து நிற்கவேண்டும்.

டான்ஸ்மாஸ்டர் ஆடிக்காட்டியதில் சில திருத்தங்கள் சொல்லி நடிகரை ஓரிருமுறை நடிக்கவைத்து சரிபார்த்துவிட்டு “ரெண்டு மூணுதரம் நல்லா பிராக்டிஸ் பண்ணிக்க. டேக் போகலாம்” என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து கண்களை மூடி இளைப்பாற ஆரம்பித்தார் பாலச்சந்தர்.

ஒரு கால்மணிநேரம் கழித்து எழுந்துவந்து “ரெடி போகலாமா?” என்று படப்பிடிப்பு இடத்திற்கு வந்தவருக்கு சட்டென்று கோபம் வந்துவிட கன்னாபின்னாவென்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சத்தம்போட ஆரம்பித்துவிட்டார். “யார் செய்தது இது? யாருடைய வேலை இது? ராஸ்கல்ஸ்…………… மொதல்ல தொடைச்சு சுத்தம் பண்ணுங்க இந்த இடத்தை” என்று கத்தினார்.

அந்தக் கதாநாயகனுக்காகச் செய்யப்பட்டிருந்த வேலைதான் அது.

நடனம் ஆடிக்கொண்டே கால்களை விரித்தபடி வந்து நின்றதும் ஆடிவந்த வேகத்தில் அப்படியே சர்ரென்று ஆறேழு அடிதூரம் சறுக்கிக்கொண்டே வந்து நிற்கவேண்டும்.

இது காட்சி.

விஷயம் என்னவென்றால் நடன மூவ்மெண்ட் எல்லாம் நன்றாகத்தான் வந்தது.

ஆனால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்ற அந்த சறுக்கல் எத்தனை முயன்றும் வரவில்லை.

அங்கிருந்த யாரோ ஒருவர் யோசனை சொன்னார். டால்கம் பவுடரை அந்த இடம்பூரவாவும் கொட்டிவைத்தால் ஈசியாக வழுக்கிக்கொண்டுவந்து நிற்கலாம் என்று.

அதன்படி ஒரு டப்பா டால்கம் பவுடர் கொட்டப்பட்டு நடிகர் ஓரிருமுறை நடித்துப் பார்த்தார். பிரமாதமாக வந்தது.

பவுடர் கொட்டியிருப்பது காமிராவில் வருமா என்று கேட்டதற்கு “அதெல்லாம் வராமல் நான் பாத்துக்கறேன்” என்று சொல்லியிருந்தார் ஒளிப்பதிவாளர்.

நடிகரும் சந்தோஷத்துடன் அந்தக் காட்சியில் நடிக்கத் தயாராக இருந்தார்.

இதுதான் பாலச்சந்தரின் கோபத்துக்குக் காரணம்.

அந்த நடிகரை அழைத்தார் பாலச்சந்தர். “இது உன்னுடைய ஒப்புதலோடுதானே நடந்தது?”
“ஆமாம்சார்” என்றார் அவர்.

“புத்தியிருக்கா உனக்கு? இந்த ஒரு விஷயத்துக்கு உனக்கு இப்படியெல்லாம் தோண்றதுன்னா எல்லா விஷயத்திலும் இப்படித்தான் எதிர்பார்ப்பே. எல்லாத்தையும் சுலபமா நோகாம பண்ணிட்டுப் போயிரலாம்னு நினைச்சா என்ன நடிகன் அவன்?

சிவாஜி நாகேஷெல்லாம் எத்தனைக் கஷ்டப்பட்டிருக்காங்க தெரியுமா?

நாகேஷுக்கு இந்தமாதிரி சீனெல்லாம் வெச்சா அவன் இங்கிருந்து சரிஞ்சுபோய் வாசலுக்கு வெளில விழுவான் தெரியுமா?

எதுக்கு சிவாஜி, நாகேஷெல்லாம்?

கமலை எடுத்துக்க. என்ன மாதிரி நடிகன் தெரியுமா அவன்?

இங்கிருந்து குதிக்கணும்னு சொன்னா அடுத்த நிமிஷம் மேலே ஏறி நின்னுக்கிட்டு “சார் குதிக்கட்டுமா டேக் போலாமா”ன்னு கேட்பான்.

அத்தனை உயரமாச்சே. குதிச்சா கால் உடைஞ்சிருமேன்னெல்லாம் யோசிக்கமாட்டான்.

ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் சொன்னா அதைவிடக் கஷ்டமான மூணு மூவ்மெண்ட் செய்துகாட்டி ‘எதை வச்சுக்கலாம் சார்?’னு கேட்பான்.

அந்த மாதிரி கலைஞன் அவன். காரணம் அவனுடைய டெடிகேஷன். அதானாலத்தான் இத்தனை உயரத்துக்கு வளர்ந்திருக்கான்.

அவனையெல்லாம் இன்ஸ்பிரேஷனா வெச்சுக்க. அவன் எப்படியெல்லாம் முயற்சிகள் எடுக்கறான்றதைக் கேட்டுத் தெரிஞ்சுக்க.

இன்னமும் கால்மணிநேரம் டயம் தர்றேன். அதுக்குள்ள இன்னும் நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு வா.

சொல்லத்தான் நினைக்கிறேனில் அவன் எப்படி டான்ஸ் ஆடியிருக்கானோ அதை மைண்ட்ல வெச்சுக்கிட்டு இதில் நடி. ஏறக்குறைய அந்தப் பாட்டுமாதிரி வரணும்னுதான் இதை எடுக்கறேன். தெரியுதா? கோ அண்ட் பிரிபேர்”

கமல் மீது அவர் வைத்திருந்த எண்ணம் இது.

உடம்பிற்கு முடியாமல் இருந்த ஒருவரை சந்திக்க பாலச்சந்தர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் அறியும் சந்தர்ப்பம் வேறொருமுறை வாய்த்தது.

பிலிமாலயா வல்லபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.

அவரைப் பார்க்கச்சென்றிருந்தபோது பாலச்சந்தரிடமிருந்து போன் வந்திருந்தது. “வல்லபன் எப்படி இருக்கீங்க? எப்ப டிஸ்சார்ஜ் ஆனீங்க? இப்ப வீடு எங்கே?” என்று கேட்டார் பாலச்சந்தர்.


“நேற்றைக்கு டிஸ்சார்ஜ் ஆனேன்’ என்றார் வல்லபன்.

“அது தெரியாமல் நான் உங்களைப் பார்க்க ஆஸ்பத்திரி போயிட்டேன். நீங்க டிஸ்சார்ஜ் ஆயிட்டீங்கன்னு சொன்னாங்க. சரி வீட்ல இருப்பீங்க பார்த்துட்டுப் போகலாம்னு உங்க வீட்டுக்குப் போனேன். அங்க போனால் வீட்டைக் காலி பண்ணிட்டுப்போய் ஒரு மாதம் ஆகுதுன்னு சொல்லிட்டாங்க. இப்ப எங்க இருக்கீங்க?”

“காம்தார் நகர்ல இருக்கேன் சார்”

“அப்படியா நான் பழைய வீட்டுக்குப் போயிட்டேன். நீங்க வீடு மாத்தினது எனக்குத் தெரியாது. சரி, இப்ப படப்பிடிப்புக்குப் போகணும். நேரமில்லை. புது வீட்டைத் தேடி இப்ப வரமுடியாது. ஒரு ரெண்டு நாள் கழிச்சு நான் உங்களை நேர்ல வந்து பார்க்கிறேன்” என்றார் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் எத்தனை எளிய மனிதராகவும் எத்தனை மனிதாபிமானமுள்ளவராகவும் இருந்தவர் என்ற எண்ணம் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி உயர்ந்து நிற்கிறது.

Saturday, January 10, 2015

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தாக்கங்கள் - பகுதி 1

பாலச்சந்தரும் பாடல்களும் 

தமிழ்த்திரையுலகின் ஆரம்ப காலப்  படங்களில் தியாகராஜபாகவதர் மற்றும் பியூசின்னப்பாவின் பாடல்கள் நிரம்பிய காலம் மாறி சிவாஜி மற்றும் கலைஞரின் தாக்கத்துடன் பராசக்தி வந்தபிறகுதான் தமிழ்ப்படங்கள் வேறொரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தன. இந்தப் பாதையில் பயணித்த படங்களை அழகு படுத்தி இன்றைய பாதைக்குக் கொண்டுவருவதற்கான அஸ்திவாரம் போட்ட பலரில் பீம்சிங், மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்குக் கணிசமான பங்கு உண்டு. 

பாலச்சந்தரின் வருகை என்பது சிவாஜி எம்ஜிஆர் படங்களைத் தாண்டி கவனிக்கப்படவேண்டும் என்பதில் மட்டுமின்றி ஸ்ரீதரைத் தாண்டியும் நாம் கவனிக்கப்படவேண்டும் என்ற சவாலும் அன்றைக்கு அவருக்கு இருந்தது.

ஏனெனில் சிவாஜி எம்ஜிஆரைத் தாண்டி கவனிக்கப்பட்டவர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனத்தின் ‘படகுப் படம்’ தோன்றியதுமே தியேட்டரில் கைத்தட்டல் எழுந்த காலம் அது. இவற்றையெல்லாம் தாண்டித்தான் பாலச்சந்தர் நின்றார் என்பதுதான் அவரது பெருமை. 

பாலச்சந்தரின் நேரடித் திரை அனுபவங்கள் நீர்க்குமிழி படத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கும் முன்பே தெய்வத்தாய் படத்திலிருந்தே அவரது திரைப்பிரவேசம் ஆரம்பமாகிவிட்டது. எம்ஜிஆரின் தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரையுலகப் பிரவேசம்.

தெய்வத்தாய் படத்தில் எம்ஜிஆர் பாலச்சந்தரை அறிமுகப்படுத்தினாரா என்று பார்த்தால் பெருமை ஆர்.எம்.வீரப்பன் பக்கம் போகிறது. ஆர்எம்வியின் முதல் தயாரிப்பு தெய்வத்தாய் படம். சத்யா மூவிஸ் ஆரம்பித்து ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரை வைத்துப் படமெடுத்தபோது திரைக்கதை இயக்கம் பி.மாதவன் என்றும், வசனம் பாலச்சந்தர் என்றும் ஆர்எம்வி எடுத்த முடிவுகளில் எம்ஜிஆர் தலையிடவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனை கேபியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்த ஆர்எம்வியே சன் தொலைக்காட்சிக்கு அளித்த நேரலையில் “பாலச்சந்தரை தெய்வத்தாய் மூலம் நான்தான் திரையுலகிற்குக் கூட்டி வந்தேன்” என்று சொன்னார். அத்தோடு அவர் இன்னொன்றையும் சொன்னார்.  “அது என்னுடைய முதல் படம் என்பதால் இயக்குநராக பி.மாதவன் மற்றும் அன்றைக்கு மிகப்பிரபலமாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களையும் முதன்முதலாக எம்ஜிஆர் படத்திற்கு நான்தான் அழைத்துவந்தேன்” என்றார்.

பி.மாதவன், பாலச்சந்தர் என்பதோடு ஆர்எம்வி நிறுத்திக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தியையும் எம்ஜிஆர் படத்துக்கு நான்தான் முதன்முதலாகக் கூட்டிவந்தேன் என்று சொன்னார் என்பது விளங்கவில்லை. ஏனெனில் 1955-ல் குலேபகாவலி, 1957-ல் மகாதேவி, 1960-ல் மன்னாதி மன்னன், 1962-ல் பாசம், 1963-ல் ஆனந்தஜோதி, பணத்தோட்டம், பெரிய இடத்துப் பெண், 1964-ல் என் கடமை என்று பல எம்ஜிஆர் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான புகழ்பெற்ற பாடல்களை ஏற்கெனவே எம்ஜிஆருக்குத் தந்தபிறகுதான் தெய்வத்தாய்க்கு வருகிறார்கள். இது இப்படியிருக்க ஆர்எம்வி எதற்காக அப்படிச் சொன்னார் என்பது விளங்கவில்லை.

அதுபோகட்டும், தெய்வத்தாய் படத்தில்தான் கேபி முதன்முதலாக திரையுலகில் நுழைகிறார். 

இந்தப் படத்திற்கும் வசனம் மட்டும்தான் பாலச்சந்தர். மூலக்கதை நானாபாய் பட். இந்தப் படம் பாலச்சந்தருக்கு மட்டுமல்ல பி. மாதவனுக்கும் முதல் படம். பி. மாதவன் அதுவரை ஸ்ரீதரிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு வெளியே வந்து முதன்முதலாகத் தனியே டைரக்ட் செய்ய ஆரம்பிக்கிறார். அன்னக்கிளி மூலம் புகழ்பெற்ற இயக்குநர்களான தேவராஜ் மோகன் இருவரும்  ஸ்ரீதரிடம் பணியாற்றிவிட்டு மாதவனுடன் கூடவே வெளியேறியவர்கள். இருவரும் பி.மாதவனின் உதவியாளர்களாக தெய்வத்தாயில் பணியாற்றுகிறார்கள்.

தெய்வத்தாய் படத்து அனுபவங்களை தேவராஜ் (மோகன்) மிகுந்த சுவாரஸ்யத்துடன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். இவற்றில் பல செய்திகள் எம்ஜிஆரின் அசுரத்தனமான பிராபல்ய ஆளுமையால் வெளியே சொல்லமுடியாதவை.  

சிலவற்றை லேசாகப் பகிர்ந்துகொள்ளலாம். 

அவற்றில் ஒன்று தெய்வத்தாய்க்கு பாலச்சந்தர் எழுதிய வசனங்கள். பாலச்சந்தர் பேச்சிலும் சரி எழுத்துக்களிலும் சரி நிறைய ஆங்கில வார்த்தைகள் கலந்திருக்கும். சாதாரணமாகவே ஆங்கிலம் கலந்துதான் பேசுவார், எழுதுவார். அதுவும் தெய்வத்தாய் அவருக்கு ஆரம்பகாலப் படம். அவர் எழுதிய வசனங்களில் பெருமளவு ஆங்கிலம் கலந்திருக்குமாம். மாதவன் பார்த்து ஓகே பண்ணிவிடுவார். 

வசனப் படிகள் எம்ஜிஆரிடம் போகும். வசனங்களைப் பார்க்கும் எம்ஜிஆர் முகம் சிவந்துவிடுமாம். “என்னய்யா வசனம் இது? நாம என்ன ஆங்கிலப்படமா எடுக்கிறோம்? எதுக்காக இத்தனை ஆங்கில வசனங்கள்? எல்லாத்தையும் மாத்தச்சொல்லு. தமிழ்ல எழுதித் தரச்சொல்லு”
சில வார்த்தைகள் தமிழ்ப்படுத்தப்படும். சில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தினால் சரியாக வராது. 

“சின்னச்சின்ன வார்த்தைகள்தானே? அப்படியே இருக்கட்டுமே. இயல்பாத்தானே இருக்கு” என்பாராம் பாலச்சந்தர்.

“அவருக்கு இயல்பா இருக்குய்யா. பேசறதுக்கு எனக்குத்தானே கஷ்டமா இருக்கு? போ போ போய் மாத்திக்கிட்டு வா. இல்லாட்டி நீ உக்காந்து மாத்தி எழுது” பேப்பரைக் கொண்டுபோய்க் காட்டும் தேவராஜிடம் கறாராக வரும் எம்ஜிஆரின் உத்தரவு.

ஒருவழியாக அன்றைய படப்பிடிப்பு முடியும்.

மீண்டும் அடுத்த நாள் படப்பிடிப்பு. அன்றைய வசனத்துக்கான பேப்பர். வசனப்படிவத்தைப் பார்த்ததும் எம்ஜிஆரின் கோபம். “என்ன நினைச்சுக்கிட்டிருக்காருய்யா அவரு? யாருய்யா அவரை வசனம் எழுத கூட்டிட்டு வந்தது? இதெல்லாம் சிவாஜிக்கு எழுத வேண்டிய வசனங்கள். அவர்தான் அழகாப் பேசிக் கைத்தட்டல் வாங்குவாரு. எனக்கெதுக்கு இதெல்லாம்? தேவராஜ் திரும்ப இன்னொரு தரம் இதுபோல வசனங்களைக் கொண்டுவந்தியோ தொலைச்சுப்பிடுவேன் உன்னை. எல்லாத்தையும் அடிச்சுட்டு தமிழ்ல எழுதிக்கொண்டா”

எம்ஜிஆரின் அருகில் வராமல் சற்றே தூரத்தில் நின்றிருக்கும் பாலச்சந்தரிடம் வசனங்களை மாற்றச்சொன்னால் “என்ன சார் அவருக்குப் புரியவே மாட்டேங்குது. போலீஸ் ஆபீசர் கேரக்டர்தானே அவருடையது?  சிஐடி ஆபீசருங்க எல்லாம் எப்படிப் பேசுவாங்க? இப்படிப் பேசினாத்தானே இயல்பா இருக்கும்? ரொம்ப நேச்சுரல் வசனங்கள் சார் இது” என்பாராம்.

மறுநாள் எம்ஜிஆரின் கார் படப்பிடிப்புக்கு வரும்போது “வர்றாரு, சின்னவர் வந்துட்டாரு. வந்ததும் அவர் கண்ணு முன்னாடி நீங்க நிக்காதீங்க. காலையில் பார்த்தா டென்ஷன் ஆயிருவாரு. அந்தப் பக்கமாப் போயிட்டு அப்புறம் வாங்க” என்று பாலச்சந்தரிடம் சொல்லி அனுப்பி அவர் மரத்துக்குப் பின்னால் நின்றுகொண்ட சம்பவங்கள் எல்லாம் உண்டு” என்று நிறையச் சொல்வார் தேவராஜ்.

பிற்பாடு சற்றே பழக ஆரம்பித்தபின் ஒருநாள் இதுபற்றி பாலச்சந்தரிடமே கேட்டேன். 

சிரித்துக்கொண்டவர் “யார் சொன்னது உங்களுக்கு?” என்றார்.

“தேவராஜ் (மோகன்)” என்றேன்.

“ஆரம்பத்துல அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். எனக்கு சரியா நினைவில்லை. அதுக்குப் பின்னாடி எம்ஜிஆர் என்னிடம் ரொம்பவும் அன்பாகவும் மரியாதையாகவும்தான் பழகறார். 
முந்தாநாள்கூட ஒரு நிகழ்ச்சியில சந்திச்சோம். எம்மேல ரொம்பவும் அன்பு செலுத்தறவர்தான் அவர்” என்றார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த நாட்கள் அவை. அதற்குமேல் நான் இதுபற்றி பாலச்சந்தரிடம் எதுவும் பேசவில்லை.

தெய்வத்தாய் படத்தை இப்போது பார்க்கும்போதும் சில காட்சி அமைப்புகளில் பாலச்சந்தரின் டச் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓடவிட்டேன்’ பாடல் காட்சி. 
எம்ஜிஆர் சரோஜாதேவியின் வீட்டிற்கு வந்து தனக்குக் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு மிச்சத்தை வைத்துவிட்டுப் போய்விடுவார். அதற்குப்பின் அங்கே வரும் சரோஜாதேவிக்கு அந்தக் கண்ணாடி டம்ளரின் மிச்சமிருக்கும் குளிர்பானத்திற்குள் எம்ஜிஆரின் உருவம் இருப்பதுபோல் தோன்றும்.

அந்த பிம்பத்துடன் காதல் மொழி பேசுவார்.

வம்புக்கிழுப்பார்.

‘குளிருதா இரு உன்னை கவனிச்சுக்கறேன்’ என்ற பாணியில் “ஐஸ் பிடிக்காதா?” என்று கேட்டுக் கையில் இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து டம்ளருக்குள் போடுவார். ஐஸ் கட்டியின் குளிர் தாங்காமல் உடல் சிலிர்த்து நடுங்கிக்கொண்டு எழுவார் எம்ஜிஆர். “ஐயோ பாவம் குளிருதா?” என்று கேட்டு போட்ட ஐஸ் கட்டியை எடுத்துவிடுவார். இனிமையான பின்னணி இசையுடன் பாடல் ஆரம்பிக்கும்.

கண்ணாடி கிளாஸூக்குள் குட்டியூண்டு எம்ஜிஆர்.

வெளியில் சரோஜாதேவி.

பாடலின் நடுவே அப்படியே நடுங்கிக்கொண்டே எழும் எம்ஜிஆர் சட்டென்று எழும்பி கண்ணாடி டம்ளரின் விளிம்பில் பேலன்ஸ் செய்து நிற்பார். சரோஜாதேவி மெல்லிய அபிநயத்துடன் அறைக்குள் பாடிக்கொண்டே இருக்க  கண்ணாடி டம்ளரின் விளிம்பில் வட்டமாக நடப்பார் 
எம்ஜிஆர்.  இனிமையோ இனிமையாக பாடல் தவழும்.

வெகுஜன ரசனையில் அவ்வளவாகப் போற்றப்படாத பாடல் இது. ஆனால் அந்தப் படத்தின் சிறந்த பாடல் இதுதான். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ பாடலும், ‘ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன்’ பாடலும், ‘இந்தப் புன்னகை என்னவிலை’ பாடலும் மற்ற பாடல்களும் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். அவற்றைவிட இனிமையும் மிகுந்த அழகியல் உணர்வும் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் பாடல் இது. இந்தப் பாடலில் மெலடியைப் போட்டுப் பின்னியெடுத்திருப்பார்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். சுசீலாவின் குரலும், உச்சரிப்பில் கொடுக்கும் அழகுகளும் மயக்கும். 

படமாக்கப்பட்ட விதமும் அத்தனை பாந்தமாக வசீகரமாக இருக்கும்.

இந்தப் பாடல் நிச்சயம் பாலச்சந்தரின் கற்பனையில் எழுந்த காட்சிதான் என்று நம்ப 
இடமிருக்கிறது.


அதே நாட்களில் வந்த இன்னொரு படம்தான் சர்வர் சுந்தரம். நாகேஷின் அத்தனைத் திறமைகளையும் வெளிக்கொண்டுவந்து கொட்டிய படம் இது. இப்போது பார்த்தாலும் அத்தனைப் புதிதாக இருக்கும். டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு என்று இருந்தாலும் பாலச்சந்தர் படம் பார்ப்பதுபோன்ற நினைப்பே படம் முழுவதும் இருக்கும். ஏனெனில் காட்சிக்குக் காட்சி பாலச்சந்தர் சம்பந்தப்பட்ட படம் இது.

ஏற்கெனவே நாகேஷுக்காக பாலச்சந்தரால் எழுதப்பட்டு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டு பிறகு படமாக வந்த படைப்பு. பாடல்களும் பிற நடிகர்களும் மட்டும்தான் பிற்சேர்க்கை. இந்தப் படத்திலும் இரண்டு பாடல்களை பாலச்சந்தரின் கைவண்ணம் என்று சொல்லலாம். முதலாவது, ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல். ஒரு கதாநாயகராக நாகேஷ் நடிப்பது போலவும் அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதுபோலவும் பாடல் ரிகார்டிங் நடைபெறுவதுபோலவும் காட்சிகளெல்லாம் வரும் அந்தப் படத்தில். டிஎம்எஸ், எல்ஆர் ஈஸ்வரி ஆகியோர் பாடுவதும் எம்எஸ்வி இசைக்குழுவினரைக் கண்டக்ட் செய்வதுபோலவும் (யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி ராமமூர்த்தியும் அந்தக்கூட்டத்தில் இருப்பார்) காட்சி அமைந்திருக்கும். படப்பிடிப்பு எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்பதை இந்தப் படத்தில் காட்டுகிறார்கள் என்ற தகவல் அந்தக் காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

அதே படத்தில் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா’ என்ற பி.சுசீலாவின் இன்னுமொரு வைரம் உண்டு.

கே.ஆர். விஜயா ஒரு கிளியொன்றை வைத்துக்கொண்டு பாடும் பாடலாக காட்சி அமைந்திருக்கும். விஜயா பாடும்போது கூடவே கிளியும் பாடுவதாக அல்லது பேசுவதாக பாடல் அமைக்கப்பட்டிருக்கும். சதன் என்ற பலகுரல் மன்னன் ஒருவர் அப்போது எம்எஸ்வி குழுவில் இருந்தார். கிளிக்கான குரலை சதன் கொடுத்துவர பாடல் நெஞ்சமெல்லாம் இனிக்கும்..
துளித்துளியாய் இனிமை சொட்டும் ஏராளமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களில் இதுவும் ஒன்று. பி.சுசீலாவின் பெயர் சொல்லும் பல பாடல்களில் இந்தப் பாடலுக்குச் சிறப்பான இடம் ஒன்று உண்டு.

என்ன சோகம் என்றால் எம்எஸ்விக்குப் பிறகு இம்மாதிரியான சோதனை முயற்சிகளுக்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விட்டது. இசை என்பதே வெறும் வாத்தியங்களின் இரைச்சல் கூடவே டெக்னாலஜியின் கைவண்ணம் என்ற அளவில் மாறிப்போய்விட்டது.

அதுவே இளைஞர்களின் ட்ரெண்ட் என்றும் ஆகிவிட்டது.

இந்தப் பாடலும் எதற்காக இங்கே குறிப்பிடப்படுகிறது என்று பார்த்தோமானால் பிற்பாடு தம்முடைய படங்களில் பாடல்களைப் படமாக்க கேபி மேற்கொண்ட முயற்சிகள்……. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலையாவது வித்தியாசமாகச் செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டவர் போலவே தமது ஒவ்வொரு படத்திலும் முயன்றிருப்பார் அவர்.

மேஜர் சந்திரகாந்த் படத்திலேயே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார் பாலச்சந்தர். வி.குமாரின் இசையில் உருவான அந்தப் படத்தில் (பாலச்சந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்துவந்த வி.குமார்தான் பிற்பாடு பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது ஒருபுறமிருக்க பாலச்சந்தரை முதன்முதலாக இயக்குநராக அறிமுகப்படுத்திய ஏ.கே. வேலனிடம் வி.குமார்தான் பாலச்சந்தரையே அறிமுகப்படுத்தினார் என்று சிவகுமாரின் தகவல் கூறுகிறது)வந்த ‘ஒருநாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ’- என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடல்.

எம்எஸ்வியின் பாணியிலேயே அந்தப் பாடலின் மெட்டு அமைந்திருக்கும். அதனால் அந்தப் பாடல் எம்எஸ்வி இசையமைத்தது என்றே இன்னமும் பலபேர் நினைத்திருப்பார்கள். அந்தப் பாடல் அமைந்திருக்கும் விதத்தைப் பார்த்தோமானால் படு சுவாரஸ்யமாக இருக்கும். அண்டாவுக்குள் பாத்திரங்களைத் தூக்கிப் போடுவது, டம்ளர்களைத் தாம்பாளத்தில் கவிழ்த்து அடுக்கிவைப்பது, கிண்ணங்களைத் தூக்கி எறிவது, ஸ்பூன்களைத் தட்டில் கொட்டுவது, டர்ர்ர் என்று துணியைக் கிழிப்பது, ஸ்பூன்களைக் கீழே பரப்பிவிட்டு ஒவ்வொரு ஸ்பூனாகத் தட்டுவதன் மூலம் ஒவ்வொரு டம்ளரிலும் ஒவ்வொன்றாக அவற்றை விழவைப்பது என்று அதகளம் பண்ணியிருப்பார் நாகேஷ்.

அத்தனை செய்கைகளுக்கும் ஒவ்வொரு இசைத்துணுக்கும் சத்தமும் எழும்பிக்கொண்டே வந்து ஒரு அழகிய, மிக அழகிய பாடலாக வடிவம் பெறும் காட்சி அமைப்பு அது.

ஊஞ்சல் ஒன்றில் நின்றபடி ஜெயலலிதா பாடலைப் பாடிக்கொண்டிருக்க ஊஞ்சலை ஆட்டியபடியே பின்னணி இசையையும் கொடுத்துக்கொண்டு ஜெயலலிதாவின் வாயசைப்புக்குத் தகுந்தாற்போல் மைக்கை ஊஞ்சலின் ஆட்டத்திற்கு ஏற்ப நடந்தும் ஓடியும் நீட்டித்தும் குறுக்கியும் பிடித்துக்கொண்டு……………அட்டகாசமான சேஷ்டைகளுடன் அடித்துத் துவைத்திருப்பார் நாகேஷ் . 

நாகேஷைப் போன்ற கலைஞர்கள் எல்லாம் இதற்குமேல் தோன்றுவார்களா என்பது சந்தேகமே.

பாலச்சந்தர் விஸ்வநாதனுடன் இணைவதற்கு முன்பு வி.குமார் மூலம்தான் நிறையப் புதுமைகளையும் இனிமைகளையும் இசைத்துறைக்குச் சேர்த்தார்.அதன் பின்னர் எம்எஸ்வி உதவியுடன் பாலச்சந்தரின் விசேஷ பாடல் அமைப்பு எல்லாப் படங்களிலுமே தொடர்ந்தது.

பாமா விஜயம் ஒரு நகைச்சுவைப் படம்.

ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை படத்திற்கு அடுத்து தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படமாக பாமா விஜயத்தைச் சொல்லலாம். அந்தப் படத்திலும் நடிகையின்(நடிகையாக ராஜஸ்ரீ நடித்திருப்பார்) வீட்டிற்குள் நுழையும் நாகேஷ் அங்குள்ள ஹாலில் நடிகையின் விதவிதமான படங்கள் மாட்டப்பட்டிருக்க……. அந்தப் படங்களிலுள்ள ராஜஸ்ரீயுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதாக நாகேஷ் கற்பனை செய்து பார்க்கிறமாதிரியான ஒரு காட்சி அமைத்திருப்பார்.

ஒவ்வொரு சரணத்திற்கும் அந்தப் படத்தின் சட்டத்திலிருந்து ராஜஸ்ரீ இறங்கிவந்து நாகேஷூடன் ஜோடி சேர்ந்து ஆடிவிட்டு மறுபடியும் அந்தச் சட்டத்துக்குள்ளேயே போய்விடுவதாக காட்சி.

அந்தப் பாடலைத் தவிர ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பாடல். கவியரசரின் எளிமையான யதார்த்தமான நடைமுறைத் தத்துவங்கள் நகைச்சுவையுடன் பாடல் பூராவிலும் இறைந்துகிடக்க விஸ்வநாதனின் இசை சாம்ராஜ்யமும் டிஎம்எஸ்ஸின் குரல் சாம்ராஜ்யமும் கொடிகட்டிப் பறக்கும் பாடல் அது. ஆமாம், படத்தில் பாடலைப் பாடுபவர்கள் டி.எஸ்.பாலையா, மேஜர் சுந்தரராஜன், முத்துராமன், நாகேஷ் ஆகியோர். இந்த நான்கு பேர்களுக்கும் டிஎம்எஸ் ஒருவரையே பின்னணி பாடவைத்திருப்பார் எம்எஸ்வி.
இத்தகைய அனாயாசமான துணிச்சலும் திறமையும் எம்எஸ்வி ஒருவருக்கே உரியது. 

எம்எஸ்வியைத் தமது படங்களில் பல்வேறு புதுமைகளைச் செய்ய வைத்திருப்பார்.
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்’, ‘வசந்தகால நதிகளிலே’, ‘கம்பன் ஏமாந்தான்’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’ என்ற இனிமைகளைத் தொடர்ந்து பட்டினப்பிரவேசத்தில் ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ பாடலை ஒரு ஒற்றை வயலினை மட்டுமே பிரதானமாக்கி அமைத்திருப்பார் விஸ்வநாதன்.

அந்தப் படத்தில் ஒற்றை வயலின் என்றால் ‘அவர்கள்’ படத்தில் ஒற்றைப் புல்லாங்குழல். ‘இப்படி ஓர் தாலாட்டு பாடவா’ பாடலின் பின்பகுதியில் ரவிக்குமார் வாசிப்பதுபோல் ஒரு ஒற்றைப் புல்லாங்குழல் வரும். மீராவையும் கண்ணனையும் இணைத்து கண்ணதாசன் வரிகளைப் பின்னியிருக்க ஒற்றைப் புல்லாங்குழலில் மொத்தப் பாடலின் இனிமையையும் குழைத்துவந்து செவி வழியே உள்ளே அனுப்பி நெஞ்சை நெகிழ வைப்பார் எம்எஸ்வி.

எம்எஸ்வியும் கேபியும் பாடல்களில் செய்திருக்கும் புதுமைகளும் புரட்சிகளும் சாதாரணமானவை அல்ல.

‘முத்துக்குளிக்க வாரீகளா’ ஆகட்டும், ‘நினைத்தால் சிரிப்புவரும்’ ஆகட்டும், ‘இருமனம் கொண்ட திருமணவாழ்வில்’ ஆகட்டும் வித்தியாசங்களைத் தந்த கேபியும் எம்எஸ்வியும் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ பாடலில் செய்த புதுமை எந்த இசையமைப்பாளரையும் வியக்கச்செய்யும் தன்மை வாய்ந்தது.

கமலஹாசனை ஒரு பலகுரல் மன்னனாகவும் தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதாகவும் அந்தத் திருமணவிழாவில் கலந்துகொண்டு பலகுரல்களில் ஒரு இசைக்கச்சேரி செய்வதாகவும் காட்சி அமைத்திருப்பார் கேபி. பல இயற்கை சத்தங்களுடன் பல மிருகங்களின் சத்தங்கள் என்றெல்லாம் கலந்துகட்டி தூள் கிளப்பியிருப்பார் எம்எஸ்வி.
அடுத்து, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ஸ்ரீதேவி ஸ்வரம் சொல்ல அதற்கேற்ப பாடல் வரிகளைக் கமலஹாசன் சொல்லுவதுபோல காட்சி.

‘தந்தன தத்தன தந்தன தத்தன தான தையன தந்தானா’ என்பது முதல் ஸ்வரம்.
‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்தபார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ என்பார் கமல்.

இது இப்படியே தொடரும்.

அதற்கு அடுத்து விசில், லாலல்லா, ம்ஹூஹூம் நாநாந நாநா, தாரன்ன தாரன்ன தானா என்றெல்லாம் ஸ்ரீதேவி சத்தங்கள் எழுப்ப கமல் அதற்கெல்லாம் வார்த்தைகள் தொடுத்து பாடலாகத் தருவது தமிழுக்கு ரொம்பவும் புதுசு.

இதனைக் கண்ணதாசனையும், எம்எஸ்வியையும் வைத்துக்கொண்டு அருமையாகச் செய்திருப்பார் பாலச்சந்தர்.

எம்எஸ்வி பாலசுப்ரமணியத்தையும், எஸ்.ஜானகியையும் வைத்து கலந்துகட்ட படத்தில் ஸ்ரீதேவியும் கமலஹாசனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

அத்தனையையும் சேர்த்து கலவையாக்கித் தமிழில் மிகப்புதுமையாய் அந்தக் காட்சியை அமைத்திருப்பார் பாலச்சந்தர். “கவிஞரும் இசையமைப்பாளரும் டைரக்டரும் ஒன்றாகக் கைகோர்க்கும் இடமென்றால் அது இதுதான்” என்று இந்தப் பாடல்காட்சியைப் புகழ்ந்து எழுதியிருந்தது குமுதம்.

அதன்பிறகு இளையராஜா காலம் வந்தபோது புன்னகை மன்னன் படத்திற்கும் சிந்துபைரவி படத்திற்கும் இளையராஜாவை வைத்து அருமையான பாடல்களை இசைக்கச் செய்திருப்பார் அவர். புன்னகை மன்னன் பாடல்களும் சிந்துபைரவி பாடல்களும் அதிகம் பேசப்பட்ட பாடல்கள். உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் படங்களுக்கும் இ.ரா தான் இசை. இதற்கடுத்து ஏ.ஆர்.ரகுமான் ஆதிக்கம் உருவானபோது (ஏ.ஆர்.ரகுமானைத் திரைத்துறைக்குக் கூட்டிவந்ததில் பாலச்சந்தரின் பங்கும் உண்டு) டூயட் படத்தில் ரகுமானின் சாதனைகள் குறிப்பிடத்தகுந்தவை. ‘பார்த்தாலே பரவசமும்’ ரகுமான்தான். ஆனால் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ரகுமான் அதில் எதுவும் செய்யவில்லை. எம்.பி.ஸ்ரீனிவாசனின் உதவியாளராக இருந்த வி.எஸ்.நரசிம்மனையும் இசையமைப்பாளராகத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் கேபிதான்.


பாடல்களில் இப்படி வித்தியாசங்கள் காட்டிய கேபி கதைகளில் காட்டிய வித்தியாசங்கள் பிரதானமானவை. (தொடரும்)