Monday, January 27, 2014

வீரப்பன் கூட்டாளிகள் நான்குபேரின் தூக்கு தண்டனை ரத்து ; சில நினைவுகளும் சில சிந்தனைகளும்…………



 

 சந்தனக்கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது பற்றி ஊடங்களில் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்களில் இது தொடர்பாக நடத்தப்படும் விவாதங்களில் பங்குபெறும் முக்கியஸ்தர்கள் இரண்டு பிரிவுகளாக கருத்துக்களை முன்வைக்கின்றனர். சில பேர் இது ஒரு புரட்சிகரமான தீர்ப்பு என்றும், மரணதண்டனை என்ற ஒன்றையே உலகிலிருந்து ஒழிக்கவேண்டும் என்ற மனிதாபிமான போராட்டங்களுக்குத் தீர்வாக இந்தத் தீர்ப்பு ஒரு ஆரம்பமாக இருக்கிறது என்றும் பேசுகின்றனர்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் சிலர் ‘மரணதண்டனை ஒழிப்பைப் பற்றிப் பேசும் நபர்கள் குற்றவாளிகள் காப்பாற்றப்பட வேண்டும் அவர்களுடைய மனம் எத்தனைப் புண்படும், அவர்கள் சிறையிலேயே மரணதண்டனையை விடவும் கொடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகவில்லையா என்றெல்லாம்தான் கவலைப்படுகிறார்கள்- பேசுகிறார்களே தவிர, கொலையுண்டவர்களைப் பற்றிக் கொஞ்சம்கூட சிந்திப்பதே இல்லை. ‘இந்தக் கொலைகாரர்களால் கொல்லப்பட்ட குடும்பங்களைப் பற்றியோ அவர்களின் வேதனைப் பற்றியோ கவலைப்படுவதே இல்லை. இவர்களுக்குக் கொலைகாரர்கள் காப்பாற்றப்பட வேண்டும் அவ்வளவுதான் கவலை.’ என்று பேசினர்.

காவல்துறை சார்பாக விவாதத்தில் கலந்துகொண்ட ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி “நாங்கள் எவ்வளவோ சிரமப்பட்டு கொலையாளிகளைப் பிடித்துக்கொண்டுபோய் கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறோம். அவர்களுக்காக வாதாடும் வக்கீல்கள் சின்னச்சின்ன டெக்னிகல் காரணங்களைக் காட்டி அவர்களை விடுதலை செய்யக்கோருகின்றனர். கோர்ட்டுகளும் அந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விடுகின்றன. இப்படியே தீர்ப்புக்களெல்லாம் கொலையாளிகளுக்கு சாதகமாய் வெளியானால் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? கொலையாளிகளுக்குத்தானே பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது? ஒருவன் எத்தனைக் கொலை வேண்டுமானாலும் செய்யலாம். அவனுக்குப் பெரிதாக தண்டனை ஒன்றும் கிடைத்துவிடாது. அவன் சில ஆண்டுகளில் வெளியே வந்துவிடலாம் என்ற நிலைமை வந்துவிடாதா?” என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இவரது வாதங்களிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்றைக்கு இது தொடர்பாக விவாதிக்கப்படும் எல்லா விவாதங்களுக்கும் பொதுவான நியாயம் என்ற  ஒன்று இல்லை என்பதுதான் முக்கியம்.

பல கொலை வழக்குகளில் சிரமப்பட்டு காவல்துறை கொலையாளிகளைப் பிடிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் எத்தனை வழக்குகளில் கோட்டை விடுகிறார்கள்? எத்தனை வழக்குகளில் கொலையாளிகளைத் தப்பிக்க விடுகிறார்கள்! எத்தனை வழக்குகளில் மேலிடத்திலிருந்து வரும் ஆணைகளுக்கேற்ப சட்டத்திலுள்ள ஓட்டைகளை இவர்களாகவே கொலையாளிகளுக்குத் திறந்து வைக்கிறார்கள். எத்தனை வழக்குகளில் யாரையோ ஒருவரைப் பிடித்து அத்தனை வழக்குகளையும் ஒருத்தன் மீதே போட்டு அவனை மாட்டவைத்துவிட்டு இவர்கள் கைகளைக் கழுவிக்கொள்கிறார்கள்?

தூக்குதண்டனை ஒழிப்பிற்காக வாதாடுகிறவர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தினசரி பத்திரிகைகளைத் திறந்தால் இந்தியாவில் குறைந்தது பத்து கொலைகளாவது நடைபெறுகின்றன. அப்படியானால் வருடத்திற்கு குறைந்தபட்சம் மூவாயிரத்து அறுநூற்று ஐம்பது கொலைகள். 

ஒவ்வொரு கொலைக்கும் ஒருவனுக்குத் தூக்கு தண்டனை என்றால் வருடத்திற்குக் குறைந்தது முன்னூறு தூக்கு தண்டனைகளாவது கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா?
அப்படியா நடைபெறுகிறது?

வருடத்திற்கு பத்திற்கும் குறைவான தூக்குதண்டனைகள்தாம் விதிக்கப்படுகின்றன.
அதாவது ‘அரிதினும் அரிதான’ வழக்குகளில் மட்டும்தான் தூக்கு தண்டனை வழங்கப்படுகின்றது.
ஆனால் அந்த அரிதினும் அரிதான வழக்குகள் நியாயமாக விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்டனவா என்பது கேள்விக்கும் விவாதத்திற்கும் உரியது.

வீரப்பன் வழக்கையே எடுத்துக்கொண்டாலும் சட்டத்திற்குப் புறம்பாக வீரப்பன் செயல்பட்டான் என்றாலும் அவனைப் பிடிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின் போது போலீசார் நடந்துகொண்ட முறை ஒன்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

வீரப்பனுக்கு உதவியவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் அதற்காக சில மலைக்கிராம மக்கள் மீது போலீசார் நடத்திய அட்டூழியம் சொல்லத்தரமன்று. கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டி விரட்டிப் பிடித்துச் சென்றதுமல்லாமல் பெண்களையெல்லாம் சூறையாடினர். சிறுமியரையும் கர்ப்பிணிப் பெண்களையும்கூட விட்டுவைக்கவில்லை.

இதுபற்றி சோளகர் தொட்டி என்ற நாவலில் அந்த நூலாசிரியர் என்னென்ன அக்கிரமங்களும் கொடுமைகளும் தரப்பட்டன என்று தத்ரூபமாகச் சித்தரித்திருப்பார்.

வீரப்பனுக்கு உதவியவர்களுக்கு மட்டுமின்றி அந்த மலைக்கிராமத்தில் பிறக்க நேர்ந்துவிட்ட ஒரே துரதிருஷ்டத்திற்காக சிறைக்கொட்டடியில் காலமெல்லாம் துயரப்பட்டவர்களுக்கு என்ன கைமாறு செய்துவிட முடியும்?

ஆனால் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அங்கே சென்று அத்தனை அட்டூழியமும் புரிந்துவிட்ட வந்த எத்தனையோ காவலர்களுக்கு பரிசும் பட்டமும் பதவி உயர்வும் அல்லவா கைம்மாறாகக் கிடைத்தது!

காவல்துறை பல வழக்குகளில் ‘குற்றவாளிகளை’ எப்படிப் பிடித்து வருகிறது என்பதற்கு வீரப்பனைப் பற்றிய இந்த ஒரு வழக்கே ஒரு சாட்சியமாக இருந்தது என்றே சொல்லலாம்.

1993-ல் நடைபெற்ற சம்பவத்திற்காக போலீசாரால் தீவிரமான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு ஏராளமான பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக நிறையப்பேரை அள்ளிக்கொண்டுவந்து சிறையிலே தள்ளி வழக்கும் போட்டது காவல்துறை.

பல வருடங்களுக்கு இவர்களைச் சீந்துவாரே இல்லை. பின்னர் ஜூனியர் விகடன் மூலம்தான் இவர்களின் வாழ்க்கைக்கு விடியல் கீற்று தென்பட்டது. எத்தனை அப்பாவிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் சிறையில் நடைபெறும் கொடுமைகள் குறித்தும் அந்த இதழ்தான் முதலில் சமூகத்தின் வெளிச்சத்திற்கு செய்திகளைக் கொண்டுவந்தது.

அதன்பிறகும் இந்த ஏழைப் பாழைகளுக்காக சட்டத்தைக் கையிலெடுத்து வாதாடி இவர்களை வெளிக்கொணர்கிறவர்கள் யாரும் இருக்கவில்லை. எந்த அரசியல் கட்சியும் சரி, எந்த அரசியல் தலைவரும் சரி இதற்காக முன்வரவில்லை.

.பெங்களூரின் தமிழ்ப்பிரமுகராக இருந்த காலஞ்சென்ற அண்ணாச்சி சண்முகசுந்தரமும், பெங்களூர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் தற்போதைய முதல்வரான பேராசிரியர் ராமமூர்த்தியும்தாம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மைசூரிலுள்ள வழக்கறிஞர் வேணுகோபால் என்ற இளைஞர் தாமாக முன்வந்தார். திரு கொளத்தூர் மணி மேலதிக உதவிகளைச் செய்ய முன்வந்தார். இவர்கள் மட்டும் இந்த முயற்சிகளை முன்னெடுக்கவில்லை என்றால் மொத்தமிருந்த 123 பேரின் நிலைமையும் படு கேவலமாகப் போயிருக்கும். இன்னமும் சிறைக்கொட்டடியிலேயே கிடக்க நேர்ந்திருந்தாலும் நேர்ந்திருக்கலாம்.

சண்முகசுந்தரம், கொளத்தூர் மணி, பேராசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் முயற்சியில் இவர்களுக்காக  வாதாட வந்த வழக்கறிஞர் வேணுகோபாலால் வழக்கு விசாரணை ஒரு முடிவை எட்டியது. இறுதியாக ஒரு பெரிய வழக்கறிஞர் வாதாடினால் நன்றாக இருக்கும் என்று வேணுகோபால் அபிப்பிராயப்படவே முன்னாள் திமுக எம்பியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான திரு சண்முகசுந்தரம் நேரில் வந்து வாதாடுவதற்கான முயற்சிகளை மேற்கண்ட மூவரும் செய்தனர். சண்முகசுந்தரத்தின் வாதங்கள் எப்படியும் இந்த அப்பாவிகளை வெளியே கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திற்று.

வழக்கு விசாரணை முடிந்து 2001-ம் ஆண்டு மைசூர் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக பேராசிரியர் ராமமூர்த்தியுடன் நானும் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து திரு பழ.நெடுமாறன் வந்திருந்தார்.

இந்த வழக்கில் போலீசும் அரசு அமைப்புகளும் எப்படி நடந்துகொண்டன என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு அங்கே கிடைத்தது.

மைசூர் தடா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றம். மைசூரிலிருந்து ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய பங்களா போன்ற கட்டிடத்தில் நடைபெற்றுவந்தது. அந்த வழக்கின் தீர்ப்பிற்காக சிறைக்குள் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து திரண்டு வந்திருந்தனர். சுமார் நூறு நூற்றைம்பதுபேர் இருக்கும். எல்லாரும் கந்தலும் கசங்கிய துணிகளுமாக பார்க்கவே பரிதாபமாக இருந்தனர். அவர்கள் மத்தியில் அப்போதைய ஹீரோக்கள் கொளத்தூர் மணியும், சண்முகசுந்தரமும்தாம். ஹீரோக்கள் என்பதைவிடவும் தெய்வங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

காலை ஒன்பது மணிமுதலே அழுதுவடியும் கண்ணீரும் கூப்பிய கரங்களுமாக “ஐயா எப்படியும் விடுதலை கிடைச்சிருமாங்கய்யா?” என்று நொடிக்கொரு தரம் கேட்டபடியே இருந்தனர்.
“நிச்சயம் விடுதலை கிடைச்சிரும். கவலைப்படாமல் இருங்க” என்று கொளத்தூர் மணியும், சண்முகசுந்தரமும் ஆறுதல் கூறியபடியே இருந்தனர்.

“ம்? இங்கே வந்திருக்கும் ஜனங்களைப் பாருங்க. எந்தக் கோலத்தில் இருக்காங்க? இவங்க அத்தனைப்பேர் வீட்டிலிருந்தும் சம்பாதிச்சுப் போடற ஆட்களைப் பிடிச்சுக்கிட்டுப்போய் இத்தனை வருஷ காலமாய் சிறையில் போட்டு சித்திரவதைப் படுத்திக்கிட்டு இருக்காங்க. சம்பாத்தியம்னா என்ன ஆபீசுக்குப்போய் சம்பாதிக்கிறதா? ஏதோ விவசாயம் செய்து பிழைக்கிறவன், மரம் வெட்டிப் பிழைக்கிறவன் இப்படித்தான் இருப்பான். அவங்க அத்தனைப் பேரையும் மானாவாரியா பிடிச்சுக்கிட்டு வந்து சிறையில போட்டு வச்சிருக்காங்க. பாவம் இந்தப் பொம்பளைங்க எல்லாம் என்ன பாவம் செய்தாங்க? மொத்த வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிக்கிறாங்க” என்று தம்முடைய ஆற்றொணாக் குறையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் அண்ணாச்சி சண்முகசுந்தரம்.

காலை பத்தரை மணி வாக்கில் தீர்ப்பு செய்தி வந்தது. ‘12 பெண்கள் உட்பட 109 பேர் விடுதலை என்றும், 14 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பாகி இருப்பதாகவும் அவர்களிலும் 6 பேர் தண்டனைக் காலத்தைச் சிறையிலேயே அனுபவித்துவிட்டதனால் விடுதலை ஆகிறார்கள் என்றும் மீதி எட்டுப்பேரில் ஏழுபேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பு வந்தது.
அவ்வளவுதான். அந்த இடமே அல்லோலகல்லோலப் பட்டது. ஓவென்ற கூச்சல். 

நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலை என்பதால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் தங்கள் மகிழ்ச்சியையும் அழுகையாகத் தெரிவிக்க விடுதலை செய்யப்படாதவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பிரதான சாலையிலேயே படுத்துப் புரண்டு அழ ஆரம்பித்தனர்.

கோர்ட் காம்பவுண்டில் நெடுமாறன், கொளத்தூர் மணி, அண்ணாச்சி சண்முகசுந்தரம். மற்றும் நானும் இன்னொரு நண்பரான அறவாழி என்பவரையும் மட்டுமே அனுமதித்திருந்த போலீஸ்(எங்களுடன் வந்திருந்த பேராசிரியர் ராமமூர்த்தி ஒரு வழக்கறிஞரும்கூட என்பதால் அவர் கோர்ட்டுக்குள் சென்றிருந்தார்.) வீரப்பன் ஊரைச் சேர்ந்தவர்களை சாலைக்கு அந்தப் புறத்திலேயே நிறுத்திவைத்திருந்தனர். சாலை ஓரத்திலும் காம்பவுண்டிற்குள்ளும் ஏராளமான போலீசும் போலீஸ் வண்டிகளும் நின்றிருந்தன. பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு ஈ காக்கைக்கூட அங்கே வந்திருக்கவில்லை.

தீர்ப்பு வந்ததும் ஏதோ மடை திறந்ததுபோல் சாலையின் மறுபுறம் நின்றிருந்த மக்கள் வெள்ளம் சாலையைக் கடந்து காம்பவுண்டிற்குள் ஓடிவந்து நெடுமாறன், கொளத்தூர் மணி, சண்முகசுந்தரம் ஆகியோரின் கால்களில் விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தது.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

இவர்களுக்கு விடுதலை என்பதை விரும்பாத போலீஸ் லத்தியைச் சுழற்றி கிடைத்தவர்களையெல்லாம் பிளந்துகட்டத் தொடங்கினர். ஏனென்றால் சாலையைக் கடந்து போலீஸ் அனுமதித்திருந்த எல்லையைக் கடந்து ஓடிவந்துவிட்டனராம்.

அப்போது சண்முகசுந்தரம் ஆங்காரமாய் ஒரு அதட்டல் போட்டார். “ஏய்! என்ன செய்யறீங்க? உங்க பவரையெல்லாம் இந்த ஏழைப் பாழைங்களிடம்தான் காட்டணுமா? என்ன செய்துட்டாங்க அவங்க? இத்தனை நேரம் சும்மா நிற்கலை? வருஷக்கணக்குல புருஷனையும் மகனையும் போலீஸ்கிட்ட வாரிக்கொடுத்துட்டு சோத்துக்குக்கூட வழியில்லாம இருக்கிற ஜனங்களிடம் கொஞ்சம் மனிதாபிமானமா நடந்துக்க வேணாம்? என்ன கிரிமினல் குத்தமா பண்ணிட்டாங்க? உணர்ச்சிவசப்பட்டு ஓடிவந்து எங்களைப் பிடிச்சுட்டு அழறாங்க…..அவங்க மேல ஏன் மிருகத்தனமா பாயறீங்க? இனி அவங்க மேல ஒரு சின்ன அடி விழுந்திச்சு இங்க நடக்கறதே வேற” புலியைப்போல் வந்த உறுமலில் மொத்த போலீசும் அடங்கி ஒடுங்கிப் பம்மியது.

சண்முகசுந்தரத்திடம் ஓடிவந்த ஒரு உயர் அதிகாரி “இல்லை சார் நாங்க டிசிப்ளின் காப்பாத்தணும். ஜட்ஜ் ஐயா கிளம்பிப் போகணும். அவருக்கு வழி ஏற்படுத்தித் தரணும். இவங்களையெல்லாம் ரோட்டுக்கு அந்தப் புறம் போகச்சொல்லுங்க” என்றார்.

சண்முகசுந்தரம் பெரிய மனிதராகவும் கர்நாடக அரசாங்கம் முதல் டெல்லிவரைக்கும் உயர்தொடர்புகள் உள்ளவர் என்பதனாலும் அவரால் இப்படிப் போலீசை எதிர்த்துப் பேச முடிந்தது.
“எல்லாரும் ஜெயிலுக்குப் போங்க. சட்டரீதியான நடைமுறைகள் எல்லாம் முடிந்தபின்னர் அத்தனைப் பேரும் விடுவிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார் உயர் போலீஸ் அதிகாரி.

இதற்குள் பல்வேறு தரப்பிலிருந்தும் பத்திரிகையாளர்கள் வருகிறார்கள் என்று தகவல் வரவே ஏதோ ஒரு கெஸ்ட் ஹவுசில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. “ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பாக அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அங்கு அறிவித்தார் நெடுமாறன்.

பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு சிறை வாசலுக்கு வந்தோம்.

பகல் பன்னிரண்டரை மணியிலிருந்து காத்திருந்தோம், காத்திருந்தோம் அப்படிக் காத்திருந்தோம். இதோ அதோ என்றார்களே தவிர ஒருத்தரையும் வெளியில் விடவில்லை. நெடுமாறனுக்கு மட்டும் பக்கத்திலிருந்த கடையிலிருந்து இரண்டு இட்டிலிகள் வாங்கிவந்து சாப்பிடவைத்துவிட்டு நாங்கள் யாவரும் வெறும் வயிற்றுடனேயே இருந்தோம்.

ஐந்துமணி ஆகியும் யாரையும் விடுவிக்கவில்லை. மறுநாள் முக்கிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்கவேண்டும் என்பதற்காக அன்றைய இரவு மெயிலில் சென்னைக்குப் போக வேண்டிய கட்டாயத்திலிருந்தார் நெடுமாறன். ஆகவே ஐந்தரை மணி வாக்கில் நெடுமாறன் பெங்களூர் புறப்பட்டுவிட்டார்.

சிறைவாசலில் கொளத்தூர் மணி, சண்முகசுந்தரம் நான் மற்றும் நண்பர் அறவாழி. காத்திருந்த பத்திரிகையாளர்கள் ‘இது வேலைக்காகாது’ என்பதுபோல் ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்றுவிட ஒருவரோ இருவரோ மட்டும் புகைப்படக்காரருடன் காத்திருக்க………நேரம் சென்றுகொண்டே இருந்தது.

கடைசியில் இரவு பத்து மணி ஆனபிறகுதான் முதல் ஆள் விடுதலையாகி வெளியே வந்தார்.
சரியான இருட்டு. அவருடைய சொந்தக்காரர்கள் யார் என்பதைக்கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஒருவழியாகத் தேடிப்பிடித்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களின் குடும்பத்தாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் சந்தித்த சமயத்தில் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு கதறிய அந்த அபூர்வ உணர்ச்சிமயமான காட்சியை நினைத்தால் இப்போதும் சிலிர்க்கிறது.

ஒரு இளைஞன் ஓடிவந்து தடாலென்று சண்முகசுந்தரம் காலில் விழுந்தான். “ஐயா பத்து வருஷம் ஆயிருச்சி. எனக்கு அப்போ எட்டு வயசு. எங்கம்மா களத்துல வேலை செய்துகிட்டிருந்த எங்க ஐயாவுக்கு கஞ்சி கொடுத்துட்டு வரச்சொல்லி ஒரு அலுமினிய டிபன்ல கஞ்சி ஊத்தி அனுப்புனாங்க. அதை எடுத்துக்கிட்டு நான் போய்கிட்டிருந்தேன். போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிருச்சி. ‘இந்தக் கஞ்சியை யாருக்கு எடுத்துட்டுப் போற? வீரப்பனுக்குத்தானேன்னு’ சொல்லி கேஸ் போட்டுருச்சி. எத்தனைச் சொல்லியும் கேட்கலை. இதோ இப்பத்தான் விடுதலையாகி இருக்கேன். அப்ப தமிழ் ஸ்கூலுக்குப் போய்த் தமிழ் படிச்சிக்கிட்டிருந்தேன். இங்கே ஜெயில்ல கன்னடம் கத்துக்கொடுத்தாங்க. தமிழெல்லாம் மறந்துருச்சி. இப்ப நான் ஊருக்குப் போய் என்ன செய்வேன்? என்னுடைய வாழ்க்கைப் பூராவும் பாழாப் போச்சே” என்று சொல்லிக் கதறினான்.

அந்தக் கதறல் இன்னமும் மறக்கவில்லை.

சில நிமிடங்கள் ஆகியிருக்கும்.

பகலில் கோர்ட் வாசலில் என்ன நடந்ததோ ஏறக்குறைய அதே போன்றதொரு சம்பவத்தை அந்த இரவிலும் சிறை வாசலில் அரங்கேற்றத் துவங்கியது போலீஸ். “யாரும் இங்கே நிற்கக் கூடாது. கூட்டம் சேர்க்கக்கூடாது. இது சிறை வளாகம். உடனடியாக இங்கிருந்து எல்லாரும் போங்க” என்று விரட்ட ஆரம்பித்தனர்.

யார் என்ன பேசிப்பார்த்தும் ஒன்றும் எடுபடவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேசியவர்களையும் பேசவிடாமல் துரத்தியடித்தனர்.

மணியோ இரவு பதினொன்று இருக்கும்.

இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டம். யாரும் எதுவும் சாப்பிடவும் இல்லை. அத்தனைப் பேர் அந்த இரவில் எங்கே போய் என்ன செய்யமுடியும்?

பயங்கர சுறுசுறுப்பாய் செயல்பட்டார் கொளத்தூர் மணி. எங்கேயோ யாருக்கோ போன் செய்தார். யார் யாரிடமோ பேசினார். ஏதோ ஒரு ஓட்டலுக்குச் சொல்லி எல்லாருக்கும் சாப்பாடு பொட்டலங்கள் வரவழைத்தார். எங்கே உட்கார்ந்து சாப்பிடுவது?

இன்னொரு போன். காரை எடுத்துக்கொண்டு எங்கோ சென்று திரும்பிவந்தார்.
அருகிலுள்ள பிலோமினா சர்ச்சில் அந்தப் பாதிரியாரைப் பார்த்துப் பேசி மாதா கோவில் காம்பவுண்டுக்குள் அத்தனைப் பேரையும் கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்கே உட்கார்ந்து எல்லாரையும் சாப்பிடவைத்தார்.

பலபேரிடம் திரும்ப ஊருக்குப் போவதற்கு டிக்கெட்டிற்குக் காசில்லை. அதுபற்றியெல்லாம் எதுவும் யோசிக்காமல் வெள்ளந்தியாய் ‘இன்றைக்கு நம்ம ஆளு விடுதலையாயிரும். போய்க் கூட்டிட்டு வந்திருவோம்’ என்ற சிந்தனையுடன் மட்டுமே கிடைத்த காசை எடுத்துக்கொண்டு பஸ் பிடித்து மைசூருக்கு வந்திருந்த கூட்டம் அது. திரும்பப் போவதற்கு டிக்கெட் காசிற்கு எங்கே போவது?
என்ன செய்தாரோ தெரியவில்லை. சிறிது நேரத்தில் பெரிய பையுடன் ஒருவர் வந்து சேர்ந்தார்.
எல்லாரையும் வரிசையில் நிற்கவைத்து ஒருவருக்குத் தலைக்கு இருநூறு ரூபாயோ எவ்வளவோ வழங்கினார்.

மைசூர் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசி இரவு பன்னிரண்டு மணி வாக்கில் அத்தனைப் பேரும் புறப்பட்டு அவர்கள் ஊருக்குப் போகும்படி இரண்டு பேருந்துகளோ மூன்று பேருந்துகளையோ ஏற்பாடு செய்தார்.

அத்தனைப் பேரையும் அனுப்பிவைத்துவிட்டு கொலைப்பசியுடன் இருந்த நாங்கள் எங்களுக்கான இரண்டு கார்களில் ஏறிக்கொண்டு மைசூரெல்லாம் தேடி அந்த இரவில் திறக்கப்பட்டிருந்த ஏதோ ஒரு ஓட்டலில் காய்ந்துபோன சப்பாத்திகளையும் இன்னமும் எதையோ தின்றுவிட்டு பெங்களூர் வந்து சேர்ந்தபோது விடிந்திருந்தது.

“ஒண்ணும் கவலைப்படாதீங்க. அந்த நாலுபேரையும்கூட வெளியே கொண்டுவந்துவிட ஏற்பாடு பண்றோம்” என்று அன்றைக்கு கோர்ட் வாசலில் அந்தக் குடும்பத்தினரிடம் கொளத்தூர் மணியும் சண்முகசுந்தரமும் சொல்லிவிட்டு வந்தது இப்போதுதான் நடந்திருக்கிறது.

அப்படிச்சொன்ன இருவரில் ஒருவரான கொளத்தூர் மணி தற்போது சிறையில் இருக்கிறார். 


அண்ணாச்சி சண்முகசுந்தரம் உயிரோடு இல்லை.

Monday, January 13, 2014

சுஜாதா பற்றிய ‘என்றென்றும் சுஜாதா’ நூலுக்கான மூன்று விமரிசனங்கள்.




நான் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள சுஜாதாவைப் பற்றிய நூலான ‘என்றென்றும் சுஜாதா’ நூலுக்கு வந்திருக்கும் மூன்று விமரிசனங்கள் இவை.

முதலில் புகழ்பெற்ற ஆங்கில தினசரியான THE HINDU வில் வந்த விமரிசனம் இது.










இதனை இப்படி மொழிபெயர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

‘சாதனையாளரான சுஜாதா மீது தீவிர பற்றுகொண்ட வாசகர்களுக்கு சுஜாதாவின் படைப்புக்கள் 
மட்டுமல்லாது அவரைப் பற்றிய படைப்புக்களைப் படிப்பதிலும் தீவிர வேட்கை இருக்கும். 

அப்படிப்பட்ட வாசகர்களுக்கு இந்த நூல் ஒரு விருந்து.


அமுதவனுடைய பேனாவின் மூலம் அவரைப் பற்றிய படிமங்கள் அடுக்கடுக்காக வருகின்றன. சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் அதிர்ஷ்டம் பெற்ற ஒரு சிலரில் இந்த நூலின் ஆசிரியரும் ஒருவர்.  சுஜாதாவை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுபவர்களில் ஒருவராக இருக்கும் இந்த நூலாசிரியர் தம்மை முன்னிருத்திச் சொல்லிவந்தாலும்  எந்தவகையிலும் அது துருத்திக்கொண்டு நிற்பதாக இல்லை.


ம.செயின் (மணியம் செல்வனின்) அட்டைப்படம் அசத்துகிறது.


******************         ****************************      ******************



அடுத்து நடிகர் சிவகுமார் அவர்களின் விமரிசனம்……………….



“மூன்று ஆண்டுகளாக மகாபாரதம் படித்துக்கொண்டிருக்கிறேன். முழுதாகச் சமீபத்தில் ஒரே நாளில் படித்து முடித்த புத்தகம் ‘என்றென்றும் சுஜாதா’….

1970-களில்  நட்புகொண்டு 20 ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகி,


பாசாங்கு இல்லாத, தன் பலவீனங்கள் மறைக்காத,


தற்பெருமை கிஞ்சித்தும் பேசாத- ஒரு அறிவு ஜீவியை,


அனைவருடனும் சமமாகப் பழகும் பண்பாளரை


– மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்திருக்கிறது நண்பர் அமுதவனின் பேனா.


இந்தப் புத்தகத்தில் எந்த வரிகளும் என் கண்ணில் படவில்லை. காட்சிகளாக அவை விரிகின்றன.


எழுத்து மூலமாகக் கூட ஒரு மனிதரின் வாழ்க்கையைத் திரைப்படமாய்க் காட்டமுடியும் என்பதை நிரூபிக்கிறது இந்தப் புத்தகம்……………………..


ரத்தமும் சதையுமாக சுஜாதாவோடு வாழ்ந்து பார்க்க உங்களுக்கு ஆசையா?

உடனே இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.


_ சிவகுமார்.






*********************             ****************      ************************




மூன்றாவதாக சித்த வைத்தியத்தின் முன்னோடிகளில் ஒருவரும் இலக்கிய அறிஞருமான மூலிகை மணி டாக்டர் க. வேங்கடேசன் அவர்களின் விமரிசனம்……..

 

அமுதவன் அவர்கள் எழுதியுள்ள ‘என்றென்றும் சுஜாதா’ நூலினைப் படித்தேன். நான் B.Sc படிக்கும்போது ஆங்கிலப்பாடத்தில் Bowell's Life of Johnson என்ற கட்டுரையை நினைவுப்படுத்தியது போல் இந்நூல் அமைந்திருப்பதை உணர்ந்தேன். ஆங்கிலப் பேரகராதியை தொகுத்தளித்த ஜான்சனின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்துப் பரவசமடைந்த பாஸ்வெல் எனும் அவர் நண்பர் எழுதிய ஜான்சனின் வாழ்க்கை வரலாறு அவ்வளவு சுவையானது. அகராதி எழுதிய அவ்வளவு பெரிய மேதையை- ஒரு குழந்தையை போல்  நம்முன் சித்தரித்துக்காண்பிப்பார் Boswell.

நவீன நாவல் உலகின் பிதாமகரான சுஜாதாவை பல ஆண்டுகள் அருகிலிருந்து உரையாடி, Boswell-ஐ போல் அணுஅணுவாக ரசித்த அமுதவனின் அனுபவங்களைச் சுருங்கச் சொல்லவேண்டுமானால், தில்லானா மோகனாம்பாள் படத்தில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ பாட்டில் வரும்.. ‘நவரசமும்.. மறைந்திருக்கும் முகத்தில்’ என்ற வரிக்கு நாட்டியப் பேரொளி பத்மினி, ஒரே ஷாட்டில் வெளிப்படுத்தும் நவரச பாவங்களையும் அமுதவனின் ‘என்றென்னும் சுஜாதா’ நூலில் உணரமுடிகிறது.
சுஜாதாவை பார்த்திராத அடுத்த தலைமுறையினர்க்கு இந்த நூல் அவரை ஒரு குழந்தையாக, அறிவியல் அறிஞராக, நகைச்சுவை நண்பராக, எளிமையான மனிதராக, பணத்திற்கு அடிமையாகாத நல்லவராக, இலக்கிய படைப்பாளியாக, சிறந்த விமர்சகராக, கணினி வல்லுநராக, திரைப்பட க் கலைஞராக என்று பன்முகப் பண்பாளராக வாழ்திருக்கின்றார் சுஜாதா’ என்பதை, இந்நூல் வழி அறிமுகப்படுத்துகிறார் அமுதவன்.
சுஜாதாவின் முதலாண்டு நினைவு நாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த மத்திய அரசு ‘நினைவு அஞ்சல் தலை’ வெளியிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். எப்போது அது வரும் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய முதலாண்டு நினைவு நாளில் ‘என்றென்றும் சுஜாதா’ என்ற மாபெரும் புகழஞ்சலியை அமுதவன் அளித்துள்ளார்.
நன்றி அமுதவன் சார்!
என்றென்றும் மூலிகை மணத்துடன்,
க.வேங்கடேசன்.


விமரிசனம் எழுதிய THE HINDU வைச் சேர்ந்த கீதா வெங்கட்ராமன் அவர்களுக்கும், திரு சிவகுமார் அவர்களுக்கும், மூலிகை மணி டாக்டர் வேங்கடேசன் அவர்களுக்கும் என் நன்றி.


சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாசக வரவேற்பு பெற்ற நூல்களில் இந்த நூலும் ஒன்று.



விகடன் பிரசுர ஸ்டால்களில் நூல் கிடைக்கும்