Monday, August 8, 2011

ஈரோடு புத்தகத்திருவிழாவில் சிவகுமார்!





ஈரோட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக புத்தகத்திருவிழாவையும் ஆக்கிய பெருமை மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனையே சேரும். தமிழர்கள் அனைவரும் நூல்களைப் படிக்கவேண்டும், அதுவும் மாணவச்செல்வங்கள் படிக்கும் காலத்திலிருந்தே சிந்தனைச்செல்வத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பல்வேறு தளங்களில் முயற்சிகள் மேற்கொண்டு செயல்பட்டு வருகிறார் அவர். அதில் ஒன்றுதான் புத்தகத்திருவிழா. முதலில் சிறிதாக ஒரு மண்டபத்தில் ஆரம்பித்து இன்றைக்கு வருடந்தோறும் வ.உ.சி பூங்காவில் இருநூறுக்கு மேற்பட்ட ஸ்டால்களில் ஈரோட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் ஏன், பாலக்காட்டிலிருப்பவர்களும் வந்து செல்கிற அளவுக்கு அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமான ஒரு திருவிழாவாகவே மாற்றிக்காட்டியிருக்கிறார். புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் பிரபலங்களை வரவழைத்து தினந்தோறும் மிகச்சிறந்த சொற்பொழிவுகளை அரங்கேற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்..

ஸ்டாலின் குணசேகரனே ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பதால் இவரது பேச்சே நல்லமுறையில் களைகட்டிவிடுகிறது. அடுத்துப்பேசவரும் சிறப்புப்பேச்சாளருக்கான எதிர்பார்ப்பை மக்கள் மனதில் சரியான விகிதத்தில் விதைக்கும் கலையை இவரது பேச்சு மிக எளிதாகச்செய்துவிடுகிறது.

இது ஏழாவது ஆண்டு. இந்த முறையும் பல்வேறு பிரபலங்கள். தமிழருவி மணியன், சுகிசிவம், குன்றக்குடி அடிகளார், தமிழச்சி தங்கபாண்டியன் என்று வரிசைகட்ட, ஞாயிரன்று நடிகர் சிவகுமாரின் சிறப்புச்சொற்பொழிவு.


சிவகுமார் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு – தவப்புதல்வர்கள்!

‘தவப்புதல்வர்கள்’ தலைப்பு என்றவுடன் அவருடைய தவப்புதல்வர்களான சூர்யா பற்றியும், கார்த்தி பற்றியும் பேசப்போகிறாரா என்று கேட்டார்களாம். சிவகுமார் பேசியது இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த, நாட்டுக்காக பாடுபட்ட தவப்புதல்வர்கள் பற்றி!
காந்தி, உத்தம்சிங், வாஞ்சிநாதன், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, ஓமந்தூர் ராமசாமிரெட்டியார், காமராஜர் ஆகிய தலைவர்களை அவர் பேசுபொருள்களாக எடுத்துக்கொண்டிருந்தார். அவர் எடுத்துக்கொண்டிருந்த தலைப்பும் சரி; அதன் விவரங்களும் சரி, எப்பேர்ப்பட்ட பேச்சாளர்களையும் கொஞ்சம் தயங்க வைக்கும். இது பற்றியெல்லாம் பேச என்ன இருக்கிறது... அல்லது இன்றைய அவசர உலகில் இவர்களைப்பற்றியெல்லாம் பேசினால் யார் கேட்கப்போகிறார்கள்?....கூட்டம் கலைந்துவிடும், அல்லது போதும் நிறுத்து என்று சலசலப்பு ஏற்படும். அதனால் கொஞ்சம் சுவாரசியமான தலைப்பாக எடுத்துக்கொண்டு உணர்ச்சி நகைச்சுவை கலகலப்பு என்று கலந்துகட்டி அடித்து கைத்தட்டலை அள்ளலாம் என்றுதான் தீர்மானிப்பார்கள். ஆனால் சிவகுமார் துணிந்து இந்தத் தலைப்பை எடுக்கிறார். மேடை மீது நிற்கிறார். ஆயிரக்கணக்கில் கூட்டம் அப்பிக்கிடக்கிறது. “என்னை முழுமையான பேச்சாளனாக்கியதே இந்த ஈரோட்டு புத்தகத்திருவிழா மேடைதான்” என்று ஆரம்பிக்கிறார்.


தாம் என்ன பேசப்போகிறோம் என்பதை லேசாகக் கோடிட்டுக்காட்டிவிட்டு நேரடியாக விஷயத்துக்குள் நுழைகிறார். ஒரேயொரு சின்ன சலசலப்புகூட இல்லாமல் ஒன்றரை மணி நேரத்துக்குக் கூட்டம் கட்டுண்டு கிடக்கிறது. ஏதோ ஒரு இறுக்கத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிரி, ஏதோ ஒரு தவறுசெய்துவிட்டு அதற்காக வருந்துவதுபோல் வாய்பேசாமல் கைகட்டி நிற்பதுமாதிரி அப்படியே திணறிப்போய் நிற்கிறது கூட்டம். இத்தனைக்கும் மைதானம் நிரம்பி வெளியிலிருந்த சாலைகளெல்லாம் நிறைந்து வழிந்த மக்கள்கூட்டம் முணுமுணுக்கக்கூட மறந்து கலைந்துசென்ற காட்சியைத்தான் பார்க்கமுடிந்தது.

அப்படி என்ன பேசினார் சிவகுமார்? மகாத்மாவின் மறைந்த பக்கங்களை எடுத்துக்கொண்டார். எந்த இடத்திலும் மகாத்மாவை பூஜிக்கவில்லை. பாரதி சொன்ன வாழ்கநீ எம்மான் பாடலைச் சொன்னதைத்தவிர. காந்தி ஒவ்வொரு நிகழ்வின்போதும் எப்படி நடந்துகொண்டார், கஸ்தூரிபாவுடன் எப்படி இருந்தார், கஸ்தூரிபாவை எப்படி நடத்தினார், செக்ஸ்பற்றி என்ன சொன்னார்(மனிதனுக்கு செக்ஸ் என்பது அத்தியாவசியமான ஒன்றல்ல என்கிறாராம் காந்தி), தெருநாய்களைப்பற்றி என்ன சொன்னார், பசுக்களை வெட்டுவதுபற்றி என்ன சொன்னார், ஜின்னாவின் பின்புலம், நவகாளி யாத்திரை, சுதந்திரம் பெற்ற அன்றைக்கு காந்தி எங்கிருந்தார், இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் வந்து காந்தி சுடப்படுவதுவரையிலும் சொல்லி உத்தம்சிங் பற்றி பேச ஆரம்பித்தார்.

உத்தம்சிங், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, ஓமந்தூர் ராமசாமிரெட்டியார் போன்றவர்களைப்பற்றி, நிறைய படிக்கிறவர்களுக்கே தெரியாத பலவிஷயங்கள் வந்துகொண்டேயிருந்தன. கையில் எந்த ஒரு சின்னக்குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் இந்த மனிதர் இத்தனைப்புள்ளிவிவரங்களை எப்படி இவ்வளவு சரமாரியாய் சொல்லுகிறார் என்ற பிரமிப்புதான் கேட்கிறவர்களுக்கு நிரம்பியிருந்தது. கடைசியாக காமராஜரைப்பற்றிப் பேசியவர் அவரது தன்மைகளையெல்லாம் சொல்லி ‘இதுபோன்ற மாமனிதர்கள் வாழ்ந்த நாட்டில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கே சொன்ன அத்தனை மனிதர்களும் தங்களுக்கென்றோ தங்கள் குடும்பத்துக்கென்றோ எதையுமே சேர்த்துவைத்துக்கொள்ளாதவர்கள் என்பதுதான் முக்கியம்’ என்று சொல்லி நிறைவு செய்தார். அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவர்களாய் பாராட்டும் விதமாக கைத்தட்டலில் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து கலைந்தது கூட்டம்.
இத்தனை விஷயங்களைத் தொகுக்கவும் திரட்டவுமே மிகுந்த சிரமமாக இருந்திருக்குமே என்றேன். “ஆமாம் ராமாயணம் பேசுவதற்காக ஒரு வருடம் என்ன உழைப்பு தேவையாயிருந்ததோ அத்தனை உழைப்பை இருபதுநாட்களில் இந்தப்பேச்சுக்காக உழைக்க வேண்டி இருந்தது” என்றார் சிவகுமார்.

சிவகுமாரிடமிருந்து நிச்சயமாக இது வேறொரு புது அனுபவமே.

இப்படிப்பட்ட விஷயங்களை மக்கள்முன்னால் நின்று ஓங்கி உரைப்பதற்கான தகுதி, எப்பேற்பட்ட பொருளைப் பேசவந்தாலும் அதை எப்படிப்பேசுவது என்பதற்கான திறமை- இது இரண்டும் இருப்பதால்தான் இப்படியொரு உரையை இத்தனைப்பெரிய கூட்டத்தில் அவரால் ஆற்றமுடிகிறது. எப்படியும் இந்த உரை ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பப்படும். அவரது எல்லா உரைகளும் சிடிக்களாக வந்துவிடுகின்றன. அவருடைய சிடி தொகுப்புகள் வைத்திருப்போர்களுக்கு ‘வெரைட்டி’ கிடைப்பது நிச்சயம்.


சிவகுமாரின் அத்தனை முக்கியக்கூட்டங்களுக்கும் கோவையைச் சேர்ந்த சில பெரிய மனிதர்கள் தங்களின் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு ஆஜராகிவிடுவது வழக்கம். ராம்ராஜ் காட்டன்ஸ் நாகராஜ், சக்திமசாலா தம்பதியர் துரைசாமி- சாந்தி துரைசாமி, இயாகோவா சுப்பிரமணியம், கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் நடராஜன், சுமங்கலி அதிபர் சந்திரசேகரன், எம்பரர் பொன்னுசாமி, ஆடிட்டர் லோகநாதன், வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வர், வேணுகோபால், பீளமேடு பழனிச்சாமி, ஆல்ஃபா பழனி, கோவை ராமலிங்கம், சோமனூர்ஐயா சுப்பிரமணியம், வாத்தியார் குமாரசாமி, குமரேசன், கருப்பசாமி என்று ஒரு முன்வரிசைப் பட்டாளம் எப்போதும் கண்டிப்பாக இருக்கும். இந்தக்கூட்டத்திலும் அனைவரும் இருந்தனர். கூடவே திட்டக்கமிஷன் துணைத்தலைவர் குமாரவேலு, பத்மஸ்ரீ விருது வாங்கிய ஒரே ஆடிட்டரான மனோகர் சௌத்ரி ஆகியோரும் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் இன்னொரு முக்கிய அம்சம் சக்தி மசாலா தம்பதியினர் செய்யும் புத்தகத்தொண்டு. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி அவற்றை இவர்களாகவே அரசுப்பள்ளிகளுக்கு எடுத்துச்சென்று அங்கே நூல்நிலையம் ஏற்படுத்தச்செய்து அதில் ஒரு நூலகரையும் இவர்களுடைய செலவிலேயே அமர்த்தி மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத்தூண்டி வருகிறார்களாம். இதனை மாவட்டம்தோறும் என்பது மாத்திரம் இல்லாமல் மாநிலம் முழுவதுமே நடத்தும் எண்ணமும் செயல்பாடும் உள்ளதாகவும் திருமதி சாந்தி துரைசாமி தெரிவித்தார்.

சக்தி மசாலா தம்பதியரும் சரி, ஸ்டாலின் குணசேகரனும் சரி இப்படியொரு புத்தகத்திருவிழாவை நடத்துவதிலும் அரங்க அமைப்புகளைப்பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். ஈரோட்டைப் பொறுத்தவரை அந்த அரங்க அமைப்புகள் மிகச்சிறந்தவையாக இருக்கலாம். ஆனால் புத்தகத்திருவிழா, அதிலும் அரங்க அமைப்புகள் என்பதுபற்றி பெருமைகொள்ள வேண்டுமென்றால் பெங்களூரில் இன்னும் சில தினங்களில் பேலஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தகத்திருவிழாவிற்கு ஒருநடை இவர்கள் வந்து செல்லலாம். அரங்கங்களை இன்னமும் சிறப்பாக அமைப்பதுபற்றிய ஒரு வடிவம் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கக்கூடும்.

Thursday, August 4, 2011

ஈழத்தமிழர்பிரச்சினை தீர்வு தொடர்பாக, பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் அரியதொரு பங்களிப்பு !



பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் திருவள்ளுவர் சிலை திறப்புக்குப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க செயலைச் செய்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான அரியதொரு செயலாகவே அதனை நினைக்கத்தோன்றுகிறது.

இலங்கைத்தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. ஐ.நா சம்பந்தப்பட்ட அறிக்கைகளாகட்டும், சேனல்-4ன் ஒளிபரப்புகளாகட்டும் தமிழர்களைத்தாண்டி மற்றவர்களையும் இதன்பால் கவனம் ஈர்க்கும்படிச்செய்திருக்கிறது. இன அழிப்பில் ஈடுபட்ட கொடுங்கோலர்களைப் போர்குற்றவாளிகளாக்கி சாட்சிக்கூண்டில் ஏற்றி விசாரித்து தக்க தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
அவலத்துக்கு ஆளாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவும் அவர்களுடைய வாழ்விடங்களில் அவர்கள் சென்றுவாழ வகை செய்திடவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் செயல்கள் நடைபெறவேண்டியுள்ளன.

இதற்கடுத்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம், அவர்கள் தங்கள் வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ளப்போகிறார்கள், எங்கே அமைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதெல்லாம் உலகின் முன்னுள்ள கேள்விகள். இதற்கு பதிலளிக்கவேண்டிய கடமையும் கட்டாயமும் உலக மாந்தர் அனைவருக்குமே உள்ளது. யாருக்கு உள்ளதோ இல்லையோ அந்தத் தமிழர்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிய இந்திய அரசுக்கும் அதற்குத் துணைபோன மற்ற ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.

இதற்கான பணிகளை நிறைய ஆர்வலர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்புவது, பிரதமருக்கு அனுப்புவது என்றெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர் பிரச்சினையைப் பற்றி நிறைய பேசித்தீர்த்துவிட்டோம். நிறைய பொதுக்கூட்டங்கள், மறியல்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என்று எந்தெந்த வகைகளில் முடியுமோ அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஆனாலும் ஒரு சின்னக்கீற்றளவுக்காவது வெளிச்சம் கிடைத்திருக்கிறதா என்பதைச் சொல்லமுடியவில்லை.

ஆனால் துவந்த முயற்சிகள் நின்றபாடில்லை. நிற்கவும் கூடாது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஈழப்பிரச்சினையை நாம் பல்வேறு தளங்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். பலருக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. சாதாரண மக்களுக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, மிகப்பெரும் அரசியல் தலைவர்களுக்கும் புரியவில்லை என்பது ஆச்சரியமான தகவல் மட்டுமல்ல, அவலமான தகவலும்கூட. ஈழ விவகாரம் தொடர்பாக செயற்படும் தலைவர் ஒருவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். அகில இந்தியக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரைச் சந்தித்து இலங்கைப்பிரச்சினையை நீங்கள் பாராளுமன்றத்தில் கையில் எடுக்கலாமே என்று கேட்டதற்கு அந்தத் தலைவர் சொன்னாராம்....”அங்கே என்ன நடக்குது? இங்கிருந்து போன தமிழர்கள் அங்கே போய் எங்களுக்குத் தனி நாடு குடுங்கன்னு கேட்டு போராட்டம் நடத்தினா எந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும்?” இந்த பதில் அந்த ஒரு தலைவர் மனதில் மட்டும் இருக்கிற ஒன்றில்லை. இந்தியாவிலுள்ள தொண்ணூற்றொன்பது சதவீத கட்சித்தலைவர்களின் மனதில் உள்ள பிம்பம் இதுதான். ஏன், தமிழர்களிலேயேகூட பலபேருக்கு இருக்கும் எண்ணம் இதுதான். யாருக்கும் உண்மை நிலைமை என்னவென்பது தெரியவில்லை. தெரிந்துகொள்ளவேண்டிய எண்ணம் இல்லை. அவசியமும் இல்லையென்பதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘இங்கிருந்து போய்விட்டு தனிநாடு கேட்கிறார்கள். பிரபாகரன் ஒரு தீவிரவாதி. தீவிரவாதத்தை எக்காரணம் கொண்டும் ஆதரிக்கக்கூடாது’. அவ்வளவுதான், அவ்வளவேதான்!

இவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொல்ல சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை. பத்திரிகைகளில் திரித்துச்சொல்லப்படும் தகவல்கள் இவர்களை சரியான திசைநோக்கித் திருப்பும் வகையிலும் இல்லை. இவர்களாகவே சரியான நூல்களைத் தேடிச்சென்று படித்துத் தெரிந்துகொள்ளும் அவசியமும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை. இத்தனை ஆண்டுகளாகவும் இப்படித்தான் இந்தப் பிரச்சினை பயணித்துக்கொண்டு இருக்கிறது.

இதனை மாற்றவேண்டும் என்ற சிந்தனை பெங்களூரிலே இரண்டுபேருக்கு வருகிறது. பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், செயலாளருமே அந்த இருவர். பெங்.தமிழ்ச்சங்கத்தின் தலைவரான திரு மீனாட்சி சுந்தரமும் திரு கோ.தாமோதரனும்
இதற்காக முனைகின்றனர்.




ஈழத்தமிழர்களின் தொன்மையான வரலாறு, ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமைகள், 60ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், ஈழப்போராளிகள் ஆயுதம் ஏந்திப்போராடவேண்டிய நிலை, இறுதிப்போரில் இலங்கை அரசும், ராணுவமும் செய்த போர்க்குற்றங்கள், ஈழம் குறித்த உலகத்தலைவர்களின் கருத்துக்கள் இவற்றை ஆவணப்படுத்தி தகுந்த ஆதாரங்களுடன் ஒரு ஆங்கில நூலை உருவாக்குவது என்றும் இந்த நூலை இந்தியாவிலுள்ள அத்தனைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அத்தனை முதல்வர்களுக்கும், அத்தனை தேசியக் கட்சித்தலைவர்கள் பத்திரிகையாளர்கள், விருதுபெற்ற எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், இனவிடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் முக்கியப்பிரமுகர்கள் என்று அனைவருக்கும் வழங்குவது என்றும் அதன்மூலம் இவர்களிடம் பிரச்சினையின் அடித்தளத்தை- முக்கியமான ஆணிவேரை, மற்ற ஊடகங்களால் சரியாகச் சொல்லாமல் விடுபட்ட வரலாற்றைப் புரியவைப்பது என்றும் முடிவு செய்தனர்.

அதற்கான வரலாற்று ஆவணத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார் திரு மீனாட்சி சுந்தரம். மாதக்கணக்கில் உழைத்து பல்வேறு நூல்களிலிருந்தும், செய்திக்குறிப்புகளிலிருந்தும், நாளேடுகளிலிருந்தும், இணையத்திலிருந்தும் ஆவணங்களைத் தயார் செய்தார். தவறான அல்லது ஒருபக்கச்சார்பான வரலாறாகவோ, செய்தியாகவோ இருந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு ஒரு புத்தகத்தைத் தயாரித்தார். வரலாற்றைச் சொல்லும்போது அதில் தவறுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இவர்களுக்கு வேண்டிய புத்தகத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதுபோன்ற பழி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் , இரண்டு மூன்று வரலாற்றாசிரியர்கள் எழுதியவற்றிலிருந்து தொகுப்பை அப்படியே வைக்கிறார். இதுபோலவே மொத்தப் புத்தகத்தையும் பார்த்துப்பார்த்துத் தொகுத்திருக்கிறார் மீனாட்சிசுந்தரம்.

இதனை பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் சார்பாக வெளியிடுவதுடன் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் சென்று முக்கிய தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் சந்தித்து முடிந்தவரை நேரில் கொடுப்பது என்றும் மற்றவர்களுக்கு அஞ்சல்மூலம் அனுப்புவது என்றும் முடிவெடுத்து அதன்படியே ஆயிரம்படிகள்வரை எல்லாருக்கும் சேர்ப்பித்திருக்கிறார்கள்.

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி இவர்களுடைய இந்தப்பணியைக் கட்சிவித்தியாசம் பாராமல் எல்லாரும் வரவேற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. நெடுமாறன், திருமாவளவன், டி.கே.எஸ் இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, சற்குணம் போன்றவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் டெல்லியில் இவர்களுடைய பணிக்குத் தங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறார்.

தங்கபாலுதான் இந்தக்குழுவினரைப் பிரதமரிடம் கூட்டிச்சென்றிருக்கிறார். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் ‘நான் நிச்சயம் கவனிக்கிறேன்.எனக்கு எப்போதுமே தமிழர்கள்மீது பரிவு உண்டு.தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று சொல்லியிருக்கிறார்.(மறுநாளே பாராளுமன்றத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை கொலைகாரகும்பல் வந்து அமர்ந்தது வேறு கதை)

சென்னையில் தலைநகர் தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலையொன்றினை பெங்களூர்த்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் வழங்க அதன் திறப்புவிழாவில் இந்த புத்தகத்தின் வெளியீட்டையும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தகத்தை வெளியிட்ட வி.ஐ.டியின் வேந்தர் திரு.ஜி.விசுவநாதன் புத்தகத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோய் பாராட்டியதோடு ‘இவ்வளவு சிறப்பாகத் தொகுத்தமைக்காக என்னுடைய சார்பாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குகிறேன்’ என்று அறிவித்து அங்கேயே வழங்கியிருக்கிறார்.

இந்த புத்தகம் எந்த அளவு கவனிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அடையாளம், பிருந்தா காரத்தைச் சந்தித்து புத்தகத்தைத் தந்திருக்கிறார்கள்.”எங்கள் அலுவலகத்துக்கு வந்துவிட்டது. நான் நேற்றே பார்த்துவிட்டேன். நிச்சயம் நாங்கள் இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசுவோம்’ என்றிருக்கிறார். இவரது கணவர் காரத் புத்தகத்தைப் பாராட்டியதுடன் சங்கத்திற்கு தொலைபேசி செய்து மேலும் ஐம்பது புத்தகங்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறார்.

தமிழர்களின் நிலைபற்றிப் பரிவுடன் பேசிய இன்னொரு தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான். ‘இலங்கைத்தமிழர் விவகாரம்பற்றி முழுசா புரிஞ்சிட்டிருக்கேன். மக்களிடம் பரப்ப நிச்சயம் முயற்சி செய்வேன்’ என்றிருக்கிறார். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த டெல்லியின் துணைமேயர் அனில் சர்மா மறுநாள் இந்தக்குழுவினர் உண்ணாவிரதம் இருந்த மேடைக்கே வந்து தமது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.


சங்கத்தைச்சேர்ந்த தலைவர் மீனாட்சி சுந்தரம், துணைத்தலைவர் ராசுமாறன், தி.கோ.தாமோதரன், மு.சம்பத், தமிழ்ச்செல்வி, கோபாலகிருஷ்ணன், அன்புநிதி, புண்ணியமூர்த்தி, தி.சு.தென்னவன், இயக்குநர் கணேசன், கோடீஸ்வரன், கண்ணன் ஆகியோர் டெல்லிக்குச்சென்று முடிந்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புத்தகத்தைத் தந்து விளக்கியதோடல்லாமல் உலகத்தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த பட்டினிப்போராட்டத்திலும் கலந்துகொண்டு வந்திருக்கிறார்கள். இதுவன்றி இந்தியாவில் உள்ள அத்தனைக்கட்சித் தலைமை அலுவலகங்களுக்கும் நூலின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு நாளேடுகளுக்கும் இதழ்களுக்கும்கூட அனுப்பப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட் சேனல்-4கைப் பார்த்துவிட்டு “எங்களின் அதிர்ச்சியை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறினாற்போல் தெரிகிறது. இவற்றை நடத்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்வகையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது.’’ என்று தமது கருத்தைப் பதிவு செய்தார். இத்தகு உணர்வை தமிழ்ச்சங்கத்தின் இந்த நூலும் ஏற்படுத்தும் என்று நிச்சயம் சொல்லலாம்.

தவிர, சேனல் 4-ன் நோக்கம் மறைக்கப்பட்ட உண்மைகளையும் கொடுமைகளையும் உலகத்தின்முன்னே வெளிச்சம்போட்டுக் காட்டுவது மட்டுமே. இந்த நூல் அதையும் தாண்டிப் பயணிக்கிறது...’தமிழ் ஈழம் ஒன்றே தமிழர்களுக்குத் தீர்வு. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒரு தீர்வு என்பதெல்லாம் உலகை ஏமாற்றுவதற்கான சப்பைக்கட்டு வித்தைதான். ஒரு லட்சம் தமிழர்களை அதுவும் நிராயுதபாணிகளான அப்பாவிகளை உயிரோடு கொன்று குவித்துவிட்டு அதை நியாயப்படுத்திப்பேசும் ஒரு இனத்தோடு தமிழர்கள் எந்த நாளும் சேர்ந்துவாழ்வதென்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று’ என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லுகிறது இந்தப்பேரேடு.


இந்த நூலுக்கு இறுதி வடிவம் கொடுத்த சமயத்தில் தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் தாமோதரன் ஆகியோரிடம் நான் என்னுடைய யோசனையாக ஒன்றே ஒன்றைச் சொன்னேன்.”பாராளுமன்ற எம்பிகளிடமும், மற்ற ஆட்சியாளர்களிடமும் தரவேண்டும் என்பதற்காக ஒரு கெஜெட்டைப்போல் நூலைத் தயாரித்துவிடாதீர்கள். நல்ல தகவல்களுடனும் சரியான புள்ளிவிவரங்களுடனும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி வாங்கி வைத்துவிடுவார்கள். ஒருத்தரும் புரட்டிக்கூட பார்க்கமாட்டார்கள். பக்கத்துக்குப் பக்கம் பெட்டிச்செய்திகள், தகவல்கள், படங்கள் என்று வையுங்கள். முடிந்தால் கவிதைகளைச் சேருங்கள், இனஅழிப்பைக்குறிக்கும் ஓவியங்களைப் பகிருங்கள். படிக்கவே வேண்டாம், புத்தகத்தை ஒருமுறை புரட்டினாலேயே மொத்தமும் புரிந்துவிடவேண்டும். அப்படிப்பட்ட புகைப்படங்களை நிறையப்போடுங்கள்’’ என்று எனது யோசனையைத் தெரிவித்தேன். கூடவே
“பல்வேறு நூல்களிலிருந்தும் எடுத்தாள்வதுடன் இணையத்தில் சிலருடைய ஆக்கங்களையும் படித்துவிடுங்கள். அதிலிருந்து உங்களுக்கு ஒரு வடிவம் கிடைக்கலாம். பிளாக்குகளில் சில நல்ல கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக கீற்று நந்தன், ராஜநடராஜன், இக்பால்செல்வன், ரதி போன்றவர்களின் சில கட்டுரைகளைப் படித்துப்பாருங்கள்’’ என்றும் சொன்னேன். பெருமளவு இதனையொட்டி நூல் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் எனக்கு நிறைவே.

ஈழப்பிரச்சினைக்காக மேற்கொள்ளவேண்டிய பணிகளும் பயணங்களும் நிறைய இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று; ஆனால் மிக முக்கியமான ஒன்று என்பதாகவே பெங்களூர்த்தமிழ்ச் சங்கத்தின் இந்தப்பணியைப் பற்றிச் சொல்லத்தோன்றுகிறது.

டிஸ்கி ; நண்பர்களே, என்னுடைய எந்தப்பதிவிற்கும் படித்துவிட்டீர்கள்தானே ஒரு ஓட்டுப்போட்டுவிட்டுப் போங்கள் என்று நான் இதுவரையிலும் கேட்டதில்லை. ஆனால் இந்தப்பதிவின் சமூக முக்கியம்குறித்து அதனை நான் கேட்கிறேன். ஏனெனில், இந்தத் தகவல் நிறையப்பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது தொடர்பாக பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தைத் தொடர்புகொள்ள நினைக்கிறவர்கள்
Bangalore Tamil Sangam, 59,Annaswamy Mudaliar Road, Bangalore-560 042 என்ற முகவரிக்கோ, தொலைபேசி;080-25510062; FAX; 044 25551357 அணுகலாம்.