Sunday, February 16, 2014

பாலுமகேந்திரா எதற்காக அப்படி ஓடினார்?பாலுமகேந்திராவைப் பற்றி எப்போது நினைத்தாலும் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவின்போது ஒவ்வொரு படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு முதல் ஆளாக வெளிவந்து எங்கேயோ வெகு அவசரமாக ஓடுவார். அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருக்கிறது. அது சாதாரண அவசரமாக இருக்காது. அடித்துப் பிடித்து ஓடுவதுபோல் இருக்கும். எங்கே ஓடுகிறார் என்பது தெரியாது. ஆனால் ஓடுவார்.

கொஞ்சம் தாட்டியான உடம்பு. தலையில் தொப்பி. (ஆமாம் அந்தக் காலத்திலேயே தொப்பிதான்) தோளில் ஒரு நீண்ட ஜோல்னாப்பை சகிதம் தியேட்டரை விட்டு வெளியில் போய்விடுவார். எங்கே போகிறார் என்பது தெரியாது.

அது சர்வதேச திரைப்பட விழா என்பதால் திரையுலகின் சாதனையாளர்கள் ஏகமாய் குவிந்து இரைந்து கிடப்பார்கள். படங்களைப் பற்றிய விமரிசனங்கள், புதியவர்களின் அறிமுகங்கள் என்று ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்பு அங்கே கிடைக்கும்.பாலுமகேந்திரா அங்கெல்லாம் நின்று பேசிக்கொண்டிருந்ததாக ஞாபகமில்லை. சில முக்கியமான படங்களின் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் சந்திப்பு நட்சத்திர ஓட்டலான அசோகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சில வேளைகளில் அந்தச் சந்திப்புகளில் பாலுமகேந்திராவின் முகம் தெரியும். சிறிது நேரம்தான்……பிறகு பார்க்கலாம் என்று பார்த்தால் ஆள் இருக்கமாட்டார்.

அவரிடம் எனக்கு நல்ல பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு  ஏழெட்டு தடவைகள் சந்தித்திருக்கிறேன் என்ற அளவுக்குத்தான் தெரியும். ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மலையாளப் படங்களின் ஒளிப்பதிவாளர், குறிப்பாக நெல்லு படத்தின் ஒளிப்பதிவாளர்  என்ற முத்திரை அவருக்கு இருந்தது. புகழ்பெற்ற சங்கராபரணமெல்லாம் பின்னால் வந்த படங்கள்…….

ஒரு படம் முடிந்து   அடுத்த படம் துவங்குவதற்கு இருந்த இடைவேளையில் நான், பத்திரிகையாளரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் மற்றும் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அதே அவசரத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தார் பாலுமகேந்திரா. “சார் வாங்க.. என்ன கிடைக்கவே மாட்டேன்றீங்க. அவசரமா எங்கேயோ ஓடிர்றீங்க. ஒரு காபி சாப்பிடலாம் இருங்க” என்று வல்லபன் சொன்னபோது “பேசிட்டிருங்க வல்லபன். கொஞ்சம் வேலையிருக்கு. இதோ வந்திர்றேன்” என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருந்தார் அவர்.

அவர் போனதும், “சார் நாளைக்கி நமக்கு இதான் சார் வேலை. அவரு எங்கே இப்படி ஓடுறார்னு கண்டுபிடிக்கணும்” என்று சொல்லிவிட்டார் வல்லபன்.

அதேபோல மறுநாள் முதல்காட்சி முடிந்து அவசர அவசரமாக பாலுமகேந்திரா கிளம்பியதும் நான், வல்லபன், மற்றும் இன்னொரு பத்திரிகை நண்பர் மூன்றுபேரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றோம்.

வேகமாகச் சென்ற அவர் மெஜஸ்டிக்கின் பிரதான சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போனார். குப்தா மார்க்கெட் என்ற பகுதி அது. அந்தக் காம்பவுண்டிற்குள் நுழைந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த போஸ்ட் பாக்சின் அருகில் சென்று நின்றார்.

தமது ஜோல்னாப் பையைத் திறந்து கத்தையாக இன்லண்ட் லெட்டர்களை எடுத்து அதிலிருந்து ஒன்றை உருவிக்கொண்டார்.

ஒரு நோட்டுப் புத்தகத்தை அடியில் கொடுத்து அந்தப் பெட்டியின் மீது வைத்து மளமளவென்று எழுத ஆரம்பித்தார்.

நாங்கள் மூன்று பேரும் எதிர்புறத்தில் இருந்த கடையின் நிழலில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தோம். வேகமாக எழுதியவர் கடிதத்தை முடித்து நாக்கில் ஈரப்படுத்தி அதை ஒட்டி அந்தத் தபால் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்தார்.

இப்போது அவர் முகம் ஆசுவாசப்பட்டதுபோல், தமது கடமையை முடித்துவிட்ட திருப்தியில் இருந்ததுபோல் இருந்தது. பிறகு சாவதானமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு மதிய உணவுக்காக பக்கத்திலிருந்த ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினார் அவர்.

‘பிலிம்பெஸ்டிவல் பற்றிக் கவர் பண்றதுக்காக ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம். அதான் ஒவ்வொரு படம் முடிந்தவுடனும் அது பற்றிய விவரங்களை உடனுக்குடன் எழுதி அனுப்பிடறார். நாம எல்லாம் குறிப்பு எடுத்து வச்சுக்கிட்டு ஓட்டல்ல போய் உட்கார்ந்து எழுதுவோம். அவர் பாருங்க உடனடியா எழுதி அனுப்பிடறார்’ என்று காரணம் சொன்னார் வல்லபன். அப்படித்தான் இருக்கும்போலும் என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டோம்.

அதன்பிறகு படம் முடிந்ததும் அவர் அவசரமாக ஓடியபோதெல்லாம் கடிதமெழுதத்தான் ஓடுகிறார் என்பது புரிந்தது. அவரும் குப்தா மார்க்கெட் காம்பவுண்டுக்குள்தான் போவார். அங்கே கடிதமெழுதி போஸ்ட் செய்துவிட்டுத்தான் வருவார். இது கடைசிவரைத் தொடர்ந்தபடியே இருந்தது.

இதன்பிறகு அவரை நேரில் சந்தித்தது கோகிலா கன்னடப் படத்தின் படப்பிடிப்பின்போது. கமல் கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தியபோது “உங்களை இதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கேனே” என்றார். “பிலிம் பெஸ்டிவல் நேரத்தில் வல்லபனுடன் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் முடிஞ்சதும் வேகமாகப் போய் ஒரு கடிதம் எழுதிப்போடுவீங்க. அதை கவனிச்சிருக்கேன்” என்றேன்.

அவர் முகத்தில் சட்டென்று ஆச்சரியம் தாக்கியதுபோல் என்னை ஒரு கணம் பார்த்தவர் “ஓ. அதை கவனிச்சிருக்கீங்களா நீங்க?” என்றார்.

“என்ன பிலிம்பெஸ்டிவல், என்ன கடிதம்?” என்றார் கமல்.

“அதை அப்புறமா சொல்றேன்” என்று கமலுக்கு பதிலளித்தார் பாலுமகேந்திரா.

“இவர் சுஜாதாவுக்கும் நல்ல நண்பர். சுஜாதாவை இங்கே அழைச்சுவரச் சொல்லியிருக்கேன். போன்ல பேசியிருக்கார். சாயந்திரமா சுஜாதா இங்கே வரப்போறதா சொல்லியிருக்கார்.”என்று தெரிவித்தார் கமல்.

“ஓ….சுஜாதா வரப்போறாரா?” என்றவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

சற்று நேரம் கழித்து சுஜாதா வந்ததும் “இவர் முதலில் எழுத்தாளர், அப்புறம் கவிஞர், அப்புறம் ஒளிப்பதிவாளர், அப்புறம் டைரக்டர் - மொத்தத்தில் ஒரு படைப்பாளி” என்று பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்தினார் கமல்.

“இது நீங்களே எழுதினதா இந்தக் கதை? அப்புறம் எப்படி தெரியாத கன்னட மொழியில படம் எடுக்கறீங்க? தமிழ்லயே எடுக்க வேண்டியதுதானே” என்றார் சுஜாதா.

“உங்களுக்கு சினிமா ஃபீல்டைப் பற்றித் தெரியாது சார். எத்தனைப் பெரிய கொம்பனா இருந்தாலும் அவன் திறமையை வச்சு இங்கே அங்கீகரிக்க மாட்டான். வெற்றியை மட்டும்தான் ஒத்துக்குவான். இந்தப் படத்துக்கே தமிழ்ல எத்தனைப் பேரிடம் கேட்டிருக்கேன் தெரியுமா? எவனும் முன்வரலை. கமலும் ட்ரை பண்ணினார். கமல் நடிச்சுத்தர்றேன்னு சொன்னபிற்பாடுகூட எவனும் தயாரிக்க முன்வரலை. கன்னடத்தில் சின்ன பட்ஜெட் என்பதால் இங்கே தயாரிப்பாளர் கிடைச்சிருக்கார். எந்த மொழியாயிருந்தா என்ன முதல்ல நம்மை நிரூபிக்கணும்னு இறங்கியிருக்கேன். நமக்கு என்ன சார் நாம பேசறது சினிமா மொழிதானே?”

அதன்பிறகு அவர் படப்பிடிப்பில் ஈடுபட அவர் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த சுஜாதா அவரிடம் காமிரா லென்ஸ் லைட்டிங் என்று தொழில்நுட்பங்களாக என்னென்னமோ பேசிக்கொண்டே இருந்தார்.

அடுத்து இரண்டொருநாள் கோகிலா படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ஒன்றை கவனிக்க முடிந்தது.

அது நடிகை ஷோபாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் இருந்த அந்நியோன்யம். அதுபற்றி அப்போதே பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருந்ததும் பிறகு அது பெரிய அளவிலான செய்தியாக மாற்றம் பெற்றதும் எல்லாருக்கும் தெரியும்.

அதற்கு அடுத்து பாலுமகேந்திராவைச் சந்தித்தது ஒரு வருடத்திற்குப் பிறகு என்று நினைக்கிறேன்.

அப்போது கமலுக்கு சேஷாத்ரி என்றொரு உதவியாளர் இருந்தார். கமலுடைய சினிமா வரலாற்றில் அவருடைய முதல் உதவியாளர் இவர்தான். இருவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்களாம். கமல் சினிமாவில் பெரிய ஆளானதும் இவர் கமலின் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். கமல் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்தபோதும் இவர்தான் அவருடைய உதவியாளராக இருந்தவர். அதன்பிறகுதான் ஏதோ காரணத்தால் கமல் இவரை விலக்கிவிட்டதாகச் சொல்வார்கள்.

சேஷாத்ரியிடமிருந்து போன் வந்தது. தான் அடுத்தநாள் பெங்களூர் வரப்போவதாகவும் ஒருநாள் தம்முடன் செலவிடமுடியுமா என்றும் கேட்டு போன் செய்திருந்தார்.

மறுநாள் சேஷாத்ரியைச் சந்தித்தபோது இது கமல் சம்பந்தப்பட்ட விஷயமில்லை என்றும் ‘கமலுக்கே இன்னமும் தெரியாது; அவரிடம் சொல்லவில்லை, விஷயம் நல்லபடியாய் முடிந்தால் அவரிடம் சொல்லி பர்மிஷன் வாங்கிக்கொள்வேன்’ என்றும் சொன்னார். அதாவது கோகிலா படத்தைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் செய்யும் உரிமையைத் தமக்கு வழங்கும்படி பாலுமகேந்திராவைக் கோரப்போவதாகவும், அவர் அதற்கு ஏற்பாடு செய்வாரானால் கமலின் செகரட்டரியாக இருந்துகொண்டே உபரியாக ஒரு பிசினஸைத் தம்மால் சுலபமாகச் செய்யமுடியும் என்றும் முடிவிலிருந்தார் அவர். இன்னமும் இதுபற்றி பாலுமகேந்திராவுக்கே சொல்லவில்லை என்றும் பெங்களூரில் இருக்கும் அவரை உடனடியாக சந்திக்கவிரும்புவதாகச் சொன்னபோது இன்றைக்கு வரச்சொல்லியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

பாலுமகேந்திரா வழக்கமாக பெங்களூர் வந்தால் தங்குவது செயிண்ட் மார்க்ஸ் ரோடு அருகிலிருக்கும் ஏர்லைன்ஸ் ஓட்டலில். எப்போதும் அங்குதான் தங்குவதாகவும், கோகிலா படத்திற்காக மட்டும்தான் அந்த தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்த பராக் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் ஏற்கெனவே அவர் சொல்லியிருந்தார். ஏர்லைன்ஸ் ஓட்டலும் அவருடைய ரசனைக்கு ஏற்றதாக ஏகப்பட்ட தோட்டமும் துரவுமாக இருக்கும்.

சேஷாத்ரியும் நானும் ஏர்லைன்ஸ் ஓட்டலுக்குச் சென்றிருந்தோம். எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பாலுமகேந்திரா. வேறொரு பட ஒளிப்பதிவுக்காக பெங்களூர் வந்திருப்பதாகவும் இன்றைக்கு மதியத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சேஷாத்ரியின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

கமல் நடித்த கோகிலா படத்தை டப் செய்யும் முடிவில் அந்தத் தயாரிப்பாளர் இல்லையென்றும், அப்படியே டப் செய்வதாக இருந்தாலும் அவராகவே டப் செய்து அவரேதான் தமிழகத்திலும் வெளியிடும் முடிவில் இருப்பதாகவும் வேறு யாருக்கும் தரப்போவதாக இல்லையென்றும் சொன்னார்.

அதைவிட முக்கியமாக, படத்தில் கமலே கன்னடம் பேசி நடித்திருப்பதால் டப் செய்வதை கமலே விரும்பவில்லை என்றும் டப் செய்யாமலேயே கன்னடத்திலேயே படத்தை வெளியிட்டு ஓடவைக்க முடியும் என்று கமல் விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.

ஆக, வந்த விஷயம் டிராப் ஆனதும் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தோம்.

தமிழ் இலக்கியங்களிலும் தற்கால இலக்கியங்களிலும் பாலுமகேந்திராவுக்கு இருந்த ஈடுபாடும் அவருடைய வாசிப்பு அனுபவமும் புரிந்தது. சிவாஜி காலத்துக்கு முந்தைய படங்கள், சிவாஜியின் வருகைக்குப் பின்பான படங்கள், இப்போது கமல் ரஜனி என்று ஆரம்பித்திருப்பதால் இதற்குமேல் தமிழில் வரப்போகும் படங்கள், வரவேண்டிய படங்கள் என்று நிறையப் பேசினார். அன்றைய தினத்தில் மலையாளப் படங்களின் மீதான ஈடுபாடு அவரிடம் அபரிமிதமாக இருந்தது. 

“நானே உங்களை ஒரு மலையாளத்துக்காரர் என்றுதான் நினைத்திருந்தேன்” என்றேன்.

“நீங்கள் மட்டுமில்லை மொத்த இண்டஸ்ட்ரியுமே என்னை மலையாளத்துக்காரனாகத்தான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று சிரித்தார்.

சினிமா இலக்கியம் என்பதற்குப் பின் அவருக்கு மிக உவப்பான விஷயம் மியூசிக் என்பது புரிந்தது.

அந்தக் காலத்தில் பிரபல மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன்- இவரும் ஒரு தமிழர்தான்.- ஒரு இசைக்குழுவை வைத்துக்கொண்டு வானொலியில் கோயர் முறையில் பிரமாதமான இசைத்தொகுப்பை வழங்கிக்கொண்டிருந்தார். எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையைப் பற்றியும் (கே.ஜே.ஏசுதாசைத் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்) அதே போன்ற கோயர் கூட்டத்தை வைத்துக்கொண்டு சலீல் சௌத்ரி வடக்கே பிரமாதப் படுத்திக்கொண்டிருப்பதையும் சிலாகித்துப் பேசினார். சலீல் சௌத்ரி பற்றிப் பேசியபோது மதுமதி செம்மீன் படங்களில் வந்த இசைத்தொகுப்பு குறித்தெல்லாம் பேசினார். இதனைப் பிற்பாடு அழியாத கோலங்கள் படத்தை எடுத்தபோது பாலுமகேந்திரா அதே சலீல் சௌத்ரியைத்தான் இசையமைப்பாளராகப் போட்டார் என்பதையும் இணைத்துப் பார்க்கவே தோன்றிற்று.

அழியாத கோலங்களில் வரும் ‘நான் எண்ணும் பொழுது’…… என்று எஸ்பிபி பாடிய பாடல் ஒரு மறக்கமுடியாத அபாரமான பாடல். (அதனை ‘நான் என்னும்பொழுது’ என்று பாடியிருப்பார் எஸ்பிபி. இரண்டு வார்த்தைகளுமே பொருந்தும்படித்தான் இருக்கும்).

‘நான் எண்ணும்பொழுது………..ஏதோ சுகம், எங்கோ தினம், செல்லும் மனது’ என்று வெகு சுகமாகக் கிளம்பும் பாடல் அது. பழைய நினைவுகளையும் பழைய எண்ணங்களையும் அடிமனதிற்குள் போய்க் கிளறி மேலே கொண்டுவந்து பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்று விட்டுவிட்டு வந்துவிடும் இசையைக் கொண்ட பாடல் அது.

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை

என்றும் அது கலைவதில்லை

எண்ணங்களும் மறைவதில்லை – என்றுபாடி ‘அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே’ என்று இறங்கும்போது நம் மனதை ஒரு வழி செய்திருக்கும் அந்த இசை.

அடுத்த தொகையறாவையும்,

ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே

அங்குவந்த காற்றினிலே

தென்னை இளங்கீற்றினிலே – என்று செம ஈடுபாட்டோடு வார்த்தைகளைப் போட்டு விளையாடியிருப்பார் பாடலாசிரியர் கங்கைஅமரன். இந்த வரிகளுடன் நம்மை இழுத்துக் கொண்டுபோகும்போது எஸ்பிபியும் சரி சலீல் தாதாவும் சரி நம்முடைய மனதை ஒரு ரேஞ்சுக்குப் பதம் பார்த்துவிடுவார்கள்.

இசை பற்றிப் பேசுவதற்கு நடுவில் “ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசுவோமே” என்ற பாலுமகேந்திரா போனை எடுத்து “நம்ம ஐஸ்கிரீம் ஒரு மூணு பிளேட் அனுப்புங்க” என்றார்.

ஐஸ்கிரீம் மூணு பிளேட்டா?

வந்தபிறகுதான் தெரிந்தது. அது எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது.

கீழே ஒரு லேயர் முழுக்க ஸ்பாஞ்ஜ் கேக்.

அதற்கடுத்து நடுவில் ஐஸ் கிரீம் ஒரு லேயர்.

மறுபடியும் அதை மூடினதுபோல் திரும்பவும் ஸ்பாஞ்ஜ் கேக் இன்னொரு லேயர்…………..

அன்றைய தினத்தில் அப்படியொரு காம்பினேஷனுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதில்லை என்பதால் அதன் சுவை எங்கோ தூக்கிக்கொண்டு போயிற்று.

“ரொம்பப் பிரமாதம்” என்றபோது “வேற சில இடங்கள்ள இந்தக் காம்பினேஷன்ல கிடைக்கும் ஆனா இந்த சுவைக்கு ஈடில்லை” என்றார் பாலுமகேந்திரா. “இந்த ஓட்டல்ல ரெகுலரா நான் வந்து தங்கறதுக்கு இது ஒரு காரணம். இங்கே இந்த ஐஸ்கிரீமும் மசால் தோசையும் பிரமாதம். அதற்காகவே இங்கே தங்கறேன்” என்றார்.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விடைபெற்று வந்தோம். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பாலுமகேந்திராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு திரும்பவும் அமையவில்லை. அழியாத கோலங்கள் வந்தபோது அதைப் பார்த்துப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நன்றி தெரிவித்து பதில் கடிதம்  போட்டிருந்தார் பாலுமகேந்திரா.

அதன்பிறகு அவர் இயக்குநராகப் படங்கள் தயாரித்ததுவும், ஷோபா விஷயத்தில் அவர் பேசப்பட்டதுவும் ஷோபாவின் அசாதாரண மரணமும் அவரை மிகமிக பரபரப்புக்குள்ளான மனிதராக மாற்றிவிட்டிருந்தன. 

சில மனிதர்களின் சாதனைகள் அவர்களை எங்கோ உச்சத்தில் தூக்கி நிறுத்திவிடும். அதன்பிறகு எத்தனை தாறுமாறான மோசமான தகவல்கள் வந்தாலும் அவை அவர்களை அசைத்துப் பார்ப்பதில்லை. அவற்றையும் தாண்டி அதே செல்வாக்குடன் அல்லது அதைவிடவும் அதிக செல்வாக்குடன் நின்று நிலைத்துவிடுவார்கள்.

பாலு மகேந்திராவும் அத்தகையோரில் ஒருவர்தான்.

ஏனெனில் ஷோபாவின் மரணத்துக்குப் பிற்பாடு திரையுலகைச் சார்ந்த ஒரு பெரிய மனிதரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நண்பர் மனோபாலாவின் டைரக்ஷனில் ரஜனி நடித்துக்கொண்டிருந்த ஊர்க்காவலன் படத்தின் படப்பிடிப்பு அது.

“பாலுமகேந்திரா மிக அருமையான ரசனையுள்ள மனிதர். அற்புதமான கலைஞன். ஆனால் மற்ற எதைவிடவும் ஷோபா மீது அவர் வைத்த அளவுக்கு அதிகமான காதல் அவருக்குள்ளிருக்கும் கலைஞனைப் பாதித்துவிடாமல் இருக்கணும்” என்பதுபோல் அவரிடம் ஏதோ ஒரு கருத்தைச் சொன்னேன்.

அதற்கு அந்தப் பெரிய மனிதர் சொன்ன பதில்தான் வியக்க வைத்தது. “பாலுமகேந்திரா ஒரு அற்புதமான கலைஞர் அபாரமான திறமைசாலி என்பதிலெல்லாம் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. அவர் ஷோபா மேல வச்ச அதே காதலைத்தான் நிறையப்பேர் மேல வச்சிர்றாரு என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

மத்தவங்களை விடுங்க. மூன்றாம்பிறை படத்தில் நடிச்ச அந்தக் கதாநாயகி மேல அவருக்கு உண்டான ‘காதலைக்’ கேட்டிங்கன்னா மூர்ச்சையே போட்டுருவீங்க. முக்கால்வாசிப் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. மாலையானதும் படப்பிடிப்பு முடிஞ்சிரும். ஷூட்டிங் முடிஞ்சதும் கதாநாயகியை வீட்டுக்கு அனுப்பமாட்டார்.

ஸ்டில் போட்டோஸ் எடுக்கணும் என்று சொல்லி நிறுத்திவைத்து விடுவார்.

சரிவுகளுக்கும் ஆபத்தான மலைப்பகுதிகளுக்கும் கூட்டிச்சென்று நிற்க வைத்து விதவிதமாக படங்கள் எடுப்பார். படங்கள் என்னவோ பிரமாதமாக வரும். சரி ஒரு காமிராக் கலைஞனுடைய கலைத்தாகம் எப்படியெல்லாம் வெளிப்படுது என்றுதானே பார்ப்போம்…… அப்படி எடுத்த அந்தப் படங்களை அன்றைய தினமே எக்ஸ்போஸ் பண்ணி பிரிண்ட் எடுத்து என்லார்ஜ் ஆக்கி பிரேம் போட்டுக்கொண்டு வரச்சொல்லுவார்.

ஊட்டியில் இதற்கெல்லாம் வசதி ஏது?

‘எனக்கு நாளைக் காலைக்குள்ள ரெடியாயிருக்கணும். கோயம்புத்தூருக்குப் போய் செய்துட்டு வந்துருங்க’ என்பார். அந்தப் படங்கள் வந்தால்தான் அடுத்த நாள் ஷூட்டிங் துவங்கும். வேறுவழியில்லாமல் கோயம்புத்தூர் போய் அவர் சொன்னபடி என்லார்ஜ் பண்ணி பிரேம் போட்டு எடுத்து வருவோம்.

தயாராக அழகான பொக்கே ஒன்று வாங்கி வைத்திருப்பார். இந்தப் புகைப்படத்துடன் என்னென்னமோ காதல் கவிதைகள் எல்லாம் எழுதி அந்தக் கதாநாயகிக்குப் பரிசளிப்பார்.

கதாநாயகி ஆச்சரியத்தில் மலர்ந்து போவாரே தவிர சிறிது நாட்களுக்குப்பின் இவரின் இத்தகைய டார்ச்சர்களிலிருந்து மீள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார் அந்தப் பெரிய மனிதர்.

இந்தத் தகவல் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொன்றையும் அணுகுகிறார்கள் என்பதுதான் இங்கே நமக்குக் கிடைக்கும் சேதி.

இப்போது மறுபடியும் தலைப்பிற்கும் முதல் பாராவுக்கும் வருவோம்.

முதன் முதலாக பாலுமகேந்திராவைப் பார்த்தபோது அவர் கடிதம் எழுதுவதற்காக ஓடினதும் ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு விமரிசனம் எழுத கமிட் ஆகியிருப்பார் என்று வல்லபன் சொன்னதற்குமான உண்மையான பதில் ஷோபா இறந்தபிறகுதான் கிடைத்தது.

ஷோபா பற்றிய கட்டுரையொன்றில் பெங்களூரின் இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் பற்றிக் குறிப்பிடும் பாலுமகேந்திரா ஒவ்வொரு படம் முடிந்ததும் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் விமரிசனங்களையும் ஷோபாவுக்கு உடனுக்குடன் கடிதம் எழுதித் தெரிவித்ததைக் குறிப்பிடுகிறார். சுமார் நாற்பது ஐம்பது கடிதங்கள் எழுதினதாகவும், ஒவ்வொன்றையும் அந்தப் படங்கள் முடிந்து சில நிமிடங்களுக்குள் எழுதி போஸ்ட் செய்ததையும் குறிப்பிடுகிறார். அந்தக் கடிதங்கள்தாம் ஷோபாவை அவர்பால் காதல் கொள்ள வைத்தது என்பதாகவும் சொல்கிறார்.

ஷோபா பற்றிய தொடர் கட்டுரையில் கோகிலா படத்திற்காக பராக் ஓட்டலில் தங்கியிருந்தபோது நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பற்றியும் மிகவும் உணர்ச்சிகரமாகச் சொல்கிறார்... கொஞ்சம் கோக்குமாக்கான விஷயம் அது.

அந்த ஓட்டலில் தங்கியிருந்தபோது இருவரும் மிகவும் அந்நியோன்யமாக இருந்த பொழுதில் ஷோபாவை மிக ஆழமாக முத்தமிட்டபோது ஷோபாவின் மூக்கிலிருந்த வைர மூக்குத்தி இவருடைய வாய்வழியாக வயிற்றுக்குள் போய்விட்டதாகவும் மறுநாள் டாய்லெட்டில் கையைவிட்டுத் தேடி அந்த மூக்குத்தியைக் கண்டெடுத்ததாகவும் அத்தனை ஆழமான காதலை அந்த தேவதை மீது வைத்திருந்தேன் என்பதாகவும் எழுதுகிறார். 

இலக்கியங்களிலும் காவியங்களிலும்கூட வரமுடியாத இத்தனை ஆழமான காதல் ஷோபா மீது என்றால்-

அது அந்தப் பெண்ணுடன் மட்டுமே நின்றிருக்கவேண்டும்!

ஆனால் அப்படியில்லை.

மேற்கொண்டு கிடைக்கிற செய்திகளில் பாலுமகேந்திராவின் காதல் மடைமாற்றப்பட்டு அர்ச்சனா மௌனிகா என்றெல்லாம் பயணித்ததை நிஜ வாழ்க்கையில் செய்திகளாக அறிகிறோம். மூன்றாம் பிறை படத்தின் சந்தர்ப்பத்தில் வேறொரு பெண்ணிடமும் இது போன்ற ஒரு காதலுக்கான முயற்சிகள் நடைபெற்றதாகவும் தெரியவருகிறது.

ஒரு மிகப்பெரிய ஒளிப்பதிவு மேதையையும் திரைப்படக் கலைஞனையும் புரிந்துகொள்ள முடிந்த நம்மால் இவர் காதல் மீது கொண்டிருந்த மதிப்பீடுகளையும் தாத்பர்யங்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

வரிசையாக இவர் காதலைத் தொடர்ந்துகொண்டிருந்த விதமும் சரி, பெண்களும் அதற்கேற்ப வரிசையாக இவரிடம் விழுந்துகொண்டிருந்த முறையும் சரி கொஞ்சமும் புரிபடாத மர்மங்களாகவே போய்விட்டன.

எது எப்படியோ, அந்த மகத்தான கலைஞன் போய்ச் சேர்ந்துவிட்டான். அழியாத கோலங்கள் படத்தில் வரும் பாடலைப் போலவே

‘நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை

என்றும் அது கலைவதில்லை


எண்ணங்களும் மறைவதில்லை’- என்ற வார்த்தைகள் பாலுமகேந்திரா படைத்த திரைஓவியங்களுக்கு மட்டுமில்லை, இவர் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதே.

Monday, February 3, 2014

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் முடிவுகள் உணர்த்தும் பாடம்
                   
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் பேரபிமானம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பவனிவருகிறது. அதன் முடிவுகள் எப்படித் தீர்மானிக்கப் படுகின்றன என்றும் பரிசுகள் எப்படி வழங்கப்படுகின்றன என்றும் நிறைய பாடபேதங்கள் வழங்கப்படுகின்றன. ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் முறையால் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்றும், அந்த லாபத்தில் எவ்வளவு சிறு பகுதியினை அவர்கள் பரிசுகளுக்காகச் செலவு செய்கிறார்கள் என்றும் நுணுகி ஆய்ந்து பல கட்டுரைகளும் பதிவுகளும் வந்திருக்கின்றன.

இன்றைய வியாபார யுகத்தில் எப்படியெல்லாம் மக்களிடமிருந்து பெரும்பணத்தை ஈர்த்து அதில் ஒரு சுண்டைக்காயளவு தொகையை மக்கள் பக்கமே வீசுவது என்ற நரகாசுர உத்திகள் எல்லாமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டன. அதனால் ஏர்டெல்லோ ஏர்செல்லோ ஒரு அழைப்புக்கு எவ்வளவு பணம் பறிக்கிறார்கள், அதில் எவ்வளவு பணத்தை இதற்காகச் செலவழிக்கிறார்கள்?

பரிசுத் தொகையாக வீடு தரும் அந்த நிறுவனம் மக்களிடமிருந்து ஒரு அபார்ட்மெண்டுக்கு எவ்வளவு தொகையைப் பெறுகிறது?................ என்றெல்லாம் கணக்குப்போட்டு இந்த நிகழ்ச்சியைப் பேசுவது என்பது ஒரு வகை அரசியல்.

அதற்குள் நாம் போகவில்லை.

ஏனெனில் இதுபோன்ற செலவுகள் எதுவும் செய்யாமல் மொத்த லாபத்திலும் பங்குபோட்டு அதை மக்களுக்கே திருப்பித்தரும் விதமாக பணத்தைக் குறைத்துக்கொண்டு வீடு வழங்கும் திட்டத்தை எந்த ரியல் எஸ்டேட் நிறுவனமும் செய்யப்போவதில்லை.

அதுபோலவே நீங்கள் வேண்டிய மட்டும் பேசிக்கொள்ளுங்கள் நாங்கள் விளம்பரப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை மட்டும் பார்த்தால் போதும் மற்றபடி பேசுவதற்கான கட்டணத்தை நாங்கள் உங்களிடம் வசூலிக்கப்போவதில்லை என்று எந்தத் தொலைபேசி நிறுவனமும் சலுகைகளும் தரப்போவதில்லை.

அதனால் இதுபற்றிப் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை.

சூப்பர் சிங்கர் போன்ற  நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் நம்மிடமிருந்து பணத்திற்கான ஆட்டையைப் போடுகிறார்கள் என்பது தெரிந்தே அதுபோன்று செய்வினையாற்ற மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.கூடவே இந்த நிகழ்ச்சியின் முடிவுக்குத் தாங்களும் ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியுடனேயே அவர்கள் இதுபோன்ற போட்டிகளில் எல்லாம் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் மக்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது என்பதற்கான சான்றுகள் அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருந்தன. ‘கல்யாண ரிசப்ஷன் வச்சிருக்கீங்களா? அன்னைக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்குதேன்னு பார்த்தேன்’ என்று கூறிய பிரகஸ்பதிகளைப் பார்க்க முடிந்தது.

சேலத்தில் ஒரு பகுதியில் அந்த ஏரியா கேபிள் ஆப்பரேட்டர் எந்தக் காரணத்தினாலோ விஜய் டிவியை அந்தப் பகுதிக்கு வழங்காமல் போய்விட என்னுடைய நண்பரும் பேராசிரியருமான ஒருவர் அந்தக் கேபிள் டிவிக்காரரிடம் சண்டைப்போட்டு ‘நான் விஜய்டிவிக்கே கம்ப்ளெயிண்ட் செய்வேன்’ என்றெல்லாம் சொல்லி, அவர்கள் பகுதியில் விஜய்டிவியை மறுபடியும் கொண்டுவந்த சம்பவங்களெல்லாம் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்றன.

அந்த அளவுக்குப் பாப்புலர் ஷோக்களில் ஒன்றாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கலந்துகொண்டு ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பதின்மூன்று லட்சத்துச் சொச்சம் என்று அறிவித்தார்கள். ஓட்டளித்தவர்களே பதின்மூன்று லட்சத்துச் சொச்சம் என்றால் வீடுகளில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் எவ்வளவு என்பதை ஊகிக்க முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நான் பார்த்ததில்லை. ஒருநாளோ இரண்டு நாட்களோதான் பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் காம்பியர்களான அந்த இளைஞரும், அந்தப் பெண்ணும் செய்த, மற்றும் பேசிய அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை. இறுதி நிகழ்ச்சியிலும் அந்த அலப்பறை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் போட்டியாளர்களுக்காக கடைசிப் பாதி நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.

வெற்றிபெற்ற அந்தப் பையன் பாடிய அந்தப் பாடலிலிருந்து நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்தேன். பலே பாண்டியா படத்திலிருந்து ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று அந்த இளைஞன் ஆரம்பித்து பல்லவியை முடிப்பதற்குள்ளாகவே அவனுடைய வெற்றி தீர்மானமாகிவிட்டது என்றே தோன்றிற்று.

அத்தனை அருமையாக அற்புதமாக அசத்தலாகப் பாடினான் அந்த இளைஞன்.

பெயர் திவாகர் என்றார்கள்.

மொத்தக்கூட்டமும் வாயடைத்துப் போய் உட்காரும் வண்ணம் அத்தனைச் சிறப்பாக அந்தப் பாடலைப் பாடிமுடித்தபோது பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் எழுந்துநின்று கைத்தட்டினார்கள்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருமதி எஸ்.ஜானகி அவராகவே எழுந்து சென்று அந்த இளைஞனைக் கட்டிப்பிடித்து கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கியபோது மொத்தக்கூட்டமும் சிலிர்த்து அடங்கியது.

அந்தக் கணமே அந்தப்பையனின் வெற்றி தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் எல்லாருக்குமே தெரிந்துபோய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எப்போதுமே முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் அமைந்துவிடும்.

மக்களெல்லாம் ஒருவரை நியாயப்படி தேர்ந்தெடுத்து வைத்துக் காத்திருக்க, நீதிபதிகள் என்று உட்காரும் மகானுபாவர்கள் வேறு ஏதேதோ காரணம் சொல்லி வேறொருவரைத் தேர்வு செய்வார்கள்.

அல்லது அப்படித் தேர்வு செய்வதற்கான நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கும். பார்த்தவர்களும் ‘என்னமோ போ நமக்கென்ன வந்தது? அந்தப் பெண் - அல்லது ஆணுக்கு அதிர்ஷ்டமில்லை’ என்று போய்விடுவார்கள்.

ஆனால் இந்த நிகழ்வில் அப்படிச் சொல்வதற்கு இல்லை. நிச்சயம் அந்த இளைஞனுக்குத்தான் பரிசு வரவேண்டும் என்று டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமல்லாது அங்கே அந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்த பிரம்மாண்ட கூட்டமும் தீர்மானித்துவிட்டது.

தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே திவாகர், திவாகர் என்று சத்தமிடத் தொடங்கியிருந்தது கூட்டம்.

இந்த நிலையில் தீர்ப்பு மட்டும் வேறுமாதிரியாகப் போயிருக்குமானால் கூட்டத்தின் வெளிப்பாடு எப்படி இருந்திருக்கும் என்பதையும் சொல்வதற்கில்லை. கலவரம் கூட வெடித்திருக்கலாம். அத்தனை உணர்வுபூர்வமாக மொத்தக் கூட்டத்தையும் மாற்றியிருந்தது திவாகரின் பாடல்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பலேபாண்டியாவில் இடம்பெற்று இன்றுவரை பல லட்சக்கணக்கானவர்களின்  ஃபேவரிட் பாடலாக அமைந்திருக்கும் பாடல் அது. இந்தப் பாடல் சிவாஜி மற்றும் எம்.ஆர்.ராதாவின் அற்புதமான நடிப்பிலும் அதற்கேற்ற காட்சியமைப்பினாலும் புகழ்பெற்ற பாடல். இத்தனைக்கும் நகைச்சுவைதான் இந்தப் பாடலில் பிரதானம். இருந்தும் சிவாஜியும் எம்ஆர்.ராதாவும் சேர்ந்து தூள் கிளப்பியிருப்பார்கள். பாடல் துவங்கி முடியும்வரை இரண்டுபேருமே அட்டகாசப்படுத்தியிருப்பார்கள். இவர்களின் துவம்சம் ஒரு பக்கம் என்றால் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைகோர்ப்பும், கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் டிஎம்எஸ்ஸூம் மற்றவர்களும் அதனைப் பாடியிருக்கும் முறையும் எல்லாவற்றையும் தூக்கியடிக்கும் ஒன்றாக அமைந்துவிட்ட நேர்த்தி அது.

இந்தப் பாடல் பற்றி இரண்டு தகவல்கள் நினைவு வருகின்றன.

இந்தப் பாடல் தயாராகி சிவாஜியிடம் போட்டுக் காட்டப்பட்டபோது “என்னப்பா ஜதிகள், ஸ்வரங்கள் எல்லாம் அமர்க்களமா இருக்கே. உடனடியாய் இதைப் படமாக்கவேண்டாம். எனக்கு ஒரு இரண்டு நாட்கள் டைம் கொடுங்க. நான் மொத்தத்தையும் மனப்பாடம் பண்ணிடறேன். அப்படி மனப்பாடம் பண்ணி நடிச்சாதான் சரியா இருக்கும்” என்று சொல்லி ஜதி, ஸ்வரம் உட்பட மொத்தப் பாடலையும் மனப்பாடம் பண்ணிவிட்டுத்தான் நடிக்கவந்தாராம்.

இந்தச் செய்தி எம்ஆர் ராதாவுக்குப் போகிறது. “அண்ணே இப்படி சிவாஜி ஜதி, ஸ்வரங்கள்  எல்லாம் மனப்பாடம் செய்து நடிக்கப்போறாராம். நீங்கள் எப்படி ஈடு கொடுக்கப்போறீங்களோ பார்த்துக்கங்க” என்று சொன்னார்களாம்.

எத்தருக்கு எத்தரான எம்ஆர்.ராதா “அப்படியா சேதி? அவரு எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி நடிக்க வர்றாரா? அதுக்கு நான் ஈடு கொடுக்கணுமா? கொடுத்துட்டா போச்சு. எப்படி ஈடு கொடுக்கறேன்னு படப்பிடிப்பு சமயத்துல பார்த்துக்கோங்க” என்று தமக்கேயுரிய குரலிலும் பாணியிலும் பதில் சொன்னாராம்.

எல்லாரும் இவர் எப்படி சிவாஜிக்கு ஈடு கொடுக்கப்போகிறார் என்று பார்த்தவாறிருக்க கஷ்டமான வரிகளுக்கும், ஜதி ஸ்வரங்களுக்கும் எம்ஆர். ராதாவின் வாயசைப்பு எங்கெல்லாம் வரவேண்டுமோ அந்த இடத்திலெல்லாம் அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தலைகுனிந்து தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி கோமாளித்தனம் பண்ணுகிறமாதிரியான சேஷ்டையில் ஈடுபட்டு ஒரே அட்டகாசம் செய்ய படப்பிடிப்புக் குழுவினரும் சிவாஜியுமே ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

இப்படியாகப் பாடல் காட்சியும் அற்புதமாக அமைந்துவிட்டது என்று சொல்வார்கள்.

இந்தப் பாடல் பற்றிய வேறொரு நினைவும் உண்டு.

பெங்களூரில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கவியரசரைக் கூப்பிட்டிருந்தார்கள்.

ஏகப்பட்ட கூட்டம். இதோ வருகிறார், வந்துவிடுவார், வந்துவிட்டார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்களே தவிர, நேரமாகிக் கொண்டே இருந்தது. அதுவரையிலும் ஏதோ ஒரு நாதஸ்வரக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்தது.  தில்லானா மோகனாம்பாள் படம் வெளியாகி நாதஸ்வரக் கச்சேரிகளுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்த நேரம் அது. கவிஞர் வரவில்லை என்ற காத்திருந்த கூட்டம் கொஞ்சம் பொறுமையில்லாமல்தான் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்தது.

இதோ கவிஞர் வந்துவிட்டார் என்ற தகவல் வந்தது.

உடனே வாசித்துக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு ‘நலம்தானா நலம்தானா’ பாடலை வாசிக்க ஆரம்பித்தார்கள். கவிஞரும் கைகுவித்தபடியே கூட்டத்திற்கு நடுவில் நடந்துவந்து எதிரில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அவர் உட்கார்ந்ததுதான் தாமதம். வாசித்துக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று நாதஸ்வரத்தில் துவங்கியதும் கூட்டத்தின் கைத்தட்டல் மண்டபத்தைப் பிளந்தது.

தம்மைப் புகழ்ந்து பாடினாலோ பேசினாலோ வழக்கமாய் எந்தவித முகபாவனையும் காட்டாத கண்ணதாசன் அன்றைக்கு அவராகவே சிரித்து நாதஸ்வரக் காரர்களைப் பார்த்து நன்றி என்று கையசைத்தது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற வரியையே சிவாஜியை மனதில் வைத்துத்தான் கவிஞர் எழுதினார் என்று சொல்வார்கள். சிவாஜி படங்களில் அவரை உயர்த்திப் பாடும் பாடல்களுக்கெல்லாம் பொதுவாக இடமிருப்பதில்லை. “அதெல்லாம் எதுக்கு? காரெக்டருக்கு ஏற்ப எழுதினாப் போதும்” என்று சிவாஜி சொல்லிவிடுவார் என்பார்கள். இன்றைக்கு முக்காலணா நடிகர்கள் எல்லாரும் தங்களுக்கென்று பஞ்ச் டயலாக் எழுதவைத்துப் பேசும் நிலைமையை நினைத்துப் பார்த்தோமானால்தான் அந்த மாபெரும் நடிகனின் இந்த மறுதலிப்பின் சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

எம்ஜிஆரின் பாணி அதுவல்ல.

பாடல்களிலும் தனிப்பட்ட வசனங்களிலும் அவரைத் தனிப்பட்டுப் புகழ்கின்ற வரிகள் வேண்டும். அப்படி இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவர் வழக்கம்.

சிவாஜி ரசிகர்களுக்கென்று அம்மாதிரியான வரிகளை சில இயக்குநர்கள் சிவாஜியின் விருப்பத்துக்கு மாறாகத்தான் படங்களில் அமைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. கவிஞரைப் பொறுத்தவரை அவரை இப்படி எழுது அப்படி எழுது என்றெல்லாம் நிர்ப்பந்தப் படுத்தி பாடல் எழுத வைக்கமுடியாது. ‘இந்தக் கதாநாயகரைப் புகழ்ந்து இப்படியெல்லாம் பாட்டு எழுதினால்தான் மறுபடி நம்மைக் கூப்பிடுவார்கள்’ என்ற நிலைமையும் கவிஞருக்குக் கிடையாது. அதனால் சிவாஜியைப் புகழும் இம்மாதிரியான ஒரு சில பாடல்கள் எல்லாம் மிக மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தாம் அன்றைக்கு இருந்தன.

அப்பிடிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் சரி, பொதுவாக இந்த நிகழ்ச்சி முழுதுமே இடம்பெற்ற பாடல்களைப் பொறுத்தவரையிலும் சரி ஒரு முழுமையான இசை வட்டம் நிரம்பியிருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.

ஏனெனில் சமீபத்திய பத்திரிகை உலகிலும் சரி; குறிப்பாக இணைய உலகிலும் சரி தமிழ்த் திரை 
இசையை ஒரு குறிப்பிட்ட சின்னஞ்சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்துவிட முயற்சி செய்யும் ஒரு தவறான போக்கு பெருகிக்கொண்டு வருகிறது.

இசையை ஒரேயொரு மனிதருக்குள்ளே மட்டுமே பார்க்கிறார்கள்.

அவர் இசையமைத்தவை மட்டும்தான் பாடல்கள், அவருக்கு முன்பும் பாடல்கள் இல்லை, அவருக்குப் பின்பும் பாடல்கள் இல்லை என்றே மனதார நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையை அதீதமாய் வலியுறுத்துகிறார்கள். முரட்டுத்தனமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் மூலம் இத்தகைய கருத்துக்களை எப்படியாவது நிரந்தரமாக்கிவிடலாம் என்று நம்புகிறார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

இசை என்பதே ஒரு புண்ணிய உலகம். எத்தனையோ அறிஞர்களும் மேதைகளும் சேர்ந்து அதனை வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த முன்னோர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களைப் போற்றி வணங்கிப் புகழ வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அவர்களைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், அல்லது அதுபற்றிய சிந்தனைகளே இல்லாமல், இதற்கு முன்னால் என்ன வந்திருக்கிறது என்பதைப் பார்க்காமல், நமக்கு எது பிடித்ததோ அதை மட்டுமே ரசித்தால் போதும், அதை மட்டுமே கொண்டாடினால் போதும் என்ற மனநிலை ஏற்புடையது அல்ல.

இந்த தனிப்பட்ட ரசிக மனப்பான்மை தவறானது அல்ல. ஆனால்-

ஒரு தனி மனித ரசிக மனப்பான்மைக்கு மட்டுமே உரியது இந்த ரசனை.

இந்த ரசனையை வைத்துக்கொண்டு மொத்த இசை உலகத்தையே கேவலப்படுத்துவதும், முன்னோர்கள் யாருமே இவருக்கு இணையானவர்கள் இல்லை என்று கூப்பாடு போடுவதும், இவர்தான் கடவுள், இவர்தான் இசையைப் படைத்தவர் என்று பிதற்றித் திரிவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

ஒரு காலத்தில் ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ என்று ஒரு கோஷம் இங்கே புகுத்தப்பட்டது. அத்தனை ஊடகங்களாலும் இந்த ஒற்றை வார்த்தை அத்தனை மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. அதனைத் திணிக்க ஊடகங்கள் மட்டுமின்றி தனிப்பட்ட மனிதர்களும் பணிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வலுவான அத்தனை அசுர சக்தியும் இதனை வலியுறுத்திற்று. என்ன ஆனது?

திடீரென்று ஒருநாள் அத்தனையும் அடித்து நொறுக்கப்பட்டன. எல்லாமே புஸ்வாணமாகப் போய்விட்டன.

வரலாறுகள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவதில்லை. மாற்றி அமைத்துவிடவும் முடியாது.

அவரவர்களும் அவரவர்களுக்குத் தேவையான புகழையும் பெருமையையும் பெற்றே தீருவர்.

சரி, இவர்களெல்லாம் அப்படிப் போற்றியும் புகழும் கொண்டாடும் அந்த இசையமைப்பாளர் போற்றுதலுக்கு உரியவர் இல்லையா?

அப்படியெல்லாம் அல்ல. அவரும் அவர் பங்கிற்கான சாதனைகளை நிறையவே செய்திருக்கிறார். அதற்குண்டான பெருமையை அவருக்குத் தாருங்கள். அதற்கான பணமும் புகழும் அவருக்குத் தேவைக்கு மீறியே வழங்கப்பட்டிருக்கின்றன. விஷயம் அது அல்ல. அவர் மட்டுமே இசையமைப்பாளர் அவரை மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதான செயல்பாடுகள்தாம் இதனையெல்லாம் எழுத வைக்கின்றன.

இசைக் கடல் மிகவும் பெரியது. அதனைச் சிறு சிமிழுக்குள் அடக்கி அதனையே தமிழ்கூறு நல்லுலகம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுப்பதை மட்டும்தான் வேண்டாம் என்கிறோம்.

நல்ல வேளையாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இம்மாதிரியான வலைகளுக்குள் மாட்டிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஜி.ராமனாதன் பாடல்களும் இங்கே பாடப்படுகின்றன, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களும் பாடப்படுகின்றன, எம்எஸ்வி பாடல்களும் போட்டிகளில் கலந்துகொள்கின்றன, கேவிமகாதேவனுக்கும் இங்கே இடமிருக்கின்றது, ஏம்எம் ராஜா பாடல்கள், இளையராஜா பாடல்கள், ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் என்று நன்றாகவே ஒரு சுற்று வலம்வருகிறார்கள். குட்டி ஏரியாவுக்குள் மாட்டிக்கொண்டு குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் அவஸ்தைகள் இங்கே இல்லை.

இந்த நிகழ்ச்சி இத்தனை லட்சக்கணக்கான மக்களைத் தன்பால் ஈர்த்து வைத்திருப்பதற்கான காரணம் இதுமட்டும்தான்.

இங்கே காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறுகின்றன,

மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பாடல்கள் இடம் பெறுகின்றன!

மக்கள் மனதில் நிலைத்திருக்கும் டி.ஆர்.மகாலிங்கம், டிஎம்எஸ். சீர்காழி. பிபிஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, எஸ்பிபி, எல்லாருமே இங்கே மதிக்கப்படுகிறார்கள்- நினைவுகூறப் படுகிறார்கள்.

மக்கள் தங்கள் பேரபிமானம் பெற்ற பாடல்கள்  பாடப்படும்பொழுது அந்தப் பாடலை முதன்முதலாகச் செவிமடுத்த அந்தக் காலத்திற்கே சிறிது நேரம் பயணப்பட்டுத் திரும்பி வருகிறார்கள். தங்கள் அபிமான சிவாஜியையும், எம்ஜிஆரையும், ஜெமினியையும், கமல், ரஜனியையும்-

அதுபோலவே வைஜயந்திமாலாவையும், பத்மினியையும், சாவித்திரியையும், சரோஜாதேவியையும், ஸ்ரீபிரியாவையும் ,ஸ்ரீதேவியையும் இன்றைய தமன்னாவையும், காஜலையும் நினைவில் கொண்டு வருகிறார்கள்.

கூடவே கண்ணதாசனையும் பட்டுக்கோட்டையாரையும், வாலியையும் வைரமுத்துவையும் நினைவுகூறுகிறவர்களும் உண்டு.

அதனால் இது ஒரு அற்புதமான மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அற்புதம்தான் இத்தனை லட்சம் பேரை அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியான ரசிகர்களாய் உருமாற்றியிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த அந்தப் பாடல் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலை வெற்றிபெற்ற திவாகர் இரண்டுபேருக்கான குரல்களுடனும் ஜதி மற்றும் ஸ்வரங்களுடனும் பாடுகிறார். செம்மையாகப் பாடுகிறார். அந்தப் பாடலுக்கு விழுந்த வாக்குகள் மட்டும் ஏழு லட்சத்துச் சொச்சம். மீதிப் பாடல்களுக்கு மிச்ச ஐந்து லட்சத்துச் சொச்சம் வாக்குகள் விழுகின்றன. ஆக பதின்மூன்று லட்சத்துச் சொச்சம் வாக்களித்த மக்களுக்கும் சரி, அவர்களின் குடும்பங்களுக்கும் சரி திரையிசைப் பாடல்கள் மீது எந்தவிதமான குறுகிய அப்ளிகேஷன்களோ பெயிண்டிங்குகளோ இல்லை. நல்ல பாடலா ரசிப்போம் என்ற மனப்பான்மை மட்டும்தான் அவர்களுக்கு.

இப்படியொரு நிலைமையை சரியான சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தித்தரும் விஜய்டிவிக்கு நமது பாராட்டுக்கள்.


ஒரு நல்ல பாடலை அற்புதமாகப் பாடி அபார்ட்மெண்ட் வென்ற திவாகர் என்ற ஏழை இளைஞன் திரையில் பெரிதாய் வலம்வர நமது வாழ்த்துக்கள்.