Monday, April 15, 2013

பி.பி.ஸ்ரீனிவாஸூடன் ஒரு சந்திப்பு!



பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸை முதன் முதலாக மிக அருகில் பார்க்கநேர்ந்தது அப்போதைய டிரைவ்இன் உட்லாண்ட்ஸில். இப்போது செம்மொழிப் பூங்கா இருக்கும் இடத்தில் இருந்த டிரைவ்இன் உட்லாண்ட்ஸில் திரையுலக நண்பர்கள் சிலருடன் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த சமயத்தில் உடன் இருந்த நண்பர் ஒரு மரத்தடியைச் சுட்டிக்காட்டி “அதோ அங்கே அமர்ந்து ஏதோ 

எழுதிக்கொண்டிருக்கிறாரே…அவரைத் தெரியுமா?” என்று கேட்டார்.

பார்த்தால் பி.பி.ஸ்ரீனிவாஸ்!

அப்போது தலைப்பாகை இல்லை. எம்ஜிஆர் அணிந்திருந்த  தொப்பி போன்று ஒரு கலர்த்தொப்பி அணிந்திருப்பார்.

“அடட அவரைப் பார்த்துப் பேசணுமே” என்றேன்.

“அதுக்கென்ன எனக்குப் பழக்கம்தான். சாப்பிட்டு முடித்ததும் போய்ப் பேசலாம்” என்றார். சாப்பிட்டு முடித்து நண்பர் தொடர அவரது அருகில் சென்றோம். அவரது அருகில் போய் “சார்……சார்” என்று இரண்டுமுறை அழைத்தார் நண்பர்.

ம்ஹூம். எழுதிக்கொண்டிருந்ததில் இருந்து அவர் தலைநிமிரவே இல்லை. மீண்டும்  குரலைச் செருமிக்கொண்டு கொஞ்சம் சத்தமாக “சார்” என்றார் நண்பர். அப்போதும் ஏறிடவில்லை அவர்.  அந்தப் பக்கமாக வந்த சர்வர் சிரித்துக்கொண்டே “அவர் அப்படித்தான் சார். தீவிரமாக கவிதை ஏதும் எழுதும்போது எத்தனைக்கூப்பிட்டாலும் ஏறெடுத்துப் பார்க்கவே மாட்டார். அதை முடித்தபின்தான் நிமிர்வார். கொஞ்ச நேரம் கழிச்சு பேசிப்பாருங்களேன். குழந்தைப் போல பேசிக்கொண்டிருப்பார்” என்றார்.

சரி அவரை அவரது மூடிலிருந்து தொந்தரவு செய்யவேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று கருதி அப்போது வெளியேறிவிட்டோம்.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சியில் பிபிஎஸ்ஸின் நீண்ட பேட்டியொன்று வெளியாயிற்று. பல நினைவலைகளை மிக உற்சாகமாகப்  பகிர்ந்து கொண்ட பேட்டி அது. 

சாகாவரம்பெற்ற  என்றும் இனிக்கும் பல பாடல்களைப் பற்றிய அருமையான நினைவுகளை மிகவும் நெகிழ்ந்துபோய் பகிர்ந்துகொண்டிருந்தார் அவர். அந்தப் பேட்டியைப் பார்த்ததும் அவருக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று தோன்றியது. உடனே ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். கடிதம் எழுதினேனே தவிர  அவரிடமிருந்து பதில் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மகிழ்ச்சியையும் மரியாதையையும் தெரிவிக்கத்தோன்றியதால் ஒரு கடிதம். அவ்வளவுதான்!
கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்றிருக்கும். அலைபேசி ஒலித்தது. ஏதோ புதிய எண். எடுத்துப் பேசினால் “இஸிட் மிஸ்டர் அமுதவன்?” என்றது குரல். ஆமாம் என்றதும் “நமஸ்காரம். நான் பி.பி,ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகர், சென்னையிலிருந்து பேசறேன்” என்றார். “சார் வணக்கம் சார். 
 கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. எப்படி இருக்கீங்க? ரொம்ப சந்தோஷம்” என்றேன்.
 “அது என்ன சார் அப்படி ஒரு எழுத்து உங்களுக்கு? உங்களுடைய சில கட்டுரைகளை பிலிமாலயாவில் படிச்சிருக்கேன். அப்போதே மிஸ்டர் வல்லபன்ட்டகூடச் சொல்லியிருக்கேன். ரொம்ப நல்ல கட்டுரைகள்னு. ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்களுடைய கடிதம் கிடைச்சது. ஒரு மாசத்துக்கு மேலாகியிருக்கும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் மூணு நாலு தரம் வாசிச்சிட்டேன். என்ன ஆத்மார்த்தமா எழுதியிருக்கீங்க! ரொம்ப அற்புதமான ரைட்டிங். இப்படியெல்லாம் எழுதமுடியாது. ஃபண்டாஸ்டிக்” என்றார்.

“சார் சார் என்ன சார் நீங்க போய் இப்படியெல்லாம் சொல்றீங்க? உங்க பாடல், உங்க குரல் அதனைக் கேட்கும்போது ஏற்படுற அற்புத அனுபவம் இதையெல்லாம் அப்படியே எழுத்தில் சொல்லும்போது அது நன்றாக இருக்கும்போலிருக்கிறது. அந்தக் கடிதம் நன்றாக இருந்தது என்றால் அதற்குக் காரணம் நீங்கதானே தவிர என்னுடைய எழுத்து இல்லை. உங்க பாடல் என்னுடைய மனசில ஏற்படுத்திய தூண்டுதல். அதனை அப்படியே வெளிப்படுத்தியிருந்தேன். அவ்வளவுதான்” என்றேன்.

“இல்லை உங்க கடிதம் இப்பவும் என் கையில்தான் இருக்கு. நாலைந்துமுறை படிச்சிட்டேன். என்னுடைய சந்தோஷத்தையும் நன்றியையும் சொல்றதுக்குத்தான் போன் செய்தேன். புகழ்றது பாராட்டறது எல்லாம் வேற. நிறைய பாராட்டுக்கள் நிறைய புகழ்மாலைகள் எல்லாம் வாங்கியாச்சு. இப்பவெல்லாம் யாராவது பாராட்டினா கூச்சமாத்தான் இருக்கு. ஆனால் சில பாடல்கள் நாம ரொம்ப முயற்சி செய்து சிரமப்பட்டு பாடியிருப்போம். அது ரசிகர்கள் மத்தியில் என்னவிதமான எஃபெக்டை ஏற்படுத்துது என்பதைத் தெரிஞ்சுக்க விரும்புவோம். விரும்பின எஃபெக்டை ஏற்படுத்தினா அந்தக் கலைஞனுக்கு ஒரு ஆத்ம திருப்தி. பல வருஷங்கள் கழிச்சி சுமார் நாற்பது ஐம்பது வருஷங்கள் கழிச்சும் அன்னைக்கு நாம என்ன நினைச்சோமோ அந்த அனுபவத்தை இப்பவும் ஏற்படுத்துது அப்படின்னா அது எப்பேர்பட்ட அனுபவம். எப்பேற்பட்ட சாதனை. அந்த சாதனைகளைச் செய்தவர்கள் எல்லாம் எப்பேர்ப்பட்ட மகானுபாவர்கள். எல்லாம் இசையமைப்பாளர்கள்தாம். அந்தப் பெருமை பூராவும் இசையமைப்பாளர்களுக்குத்தான் சேரணும். விஸ்வநாதன் ராமமூர்த்தி, மகாதேவன், ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு, சுதர்ஸனம் என்றெல்லாம் எத்தனை எத்தனை சாதனையாளர்கள். ஏதோ அவங்க கூட எல்லாம் சேர்ந்து பணியாற்றும் பாக்கியம் பெற்றவன் நான். அந்தப் பாக்கியத்துனால எனக்கும் சின்னதா ஒரு இடம் கிடைச்சிருக்கு. இதுக்கெல்லாம் ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார்.

சாதாரண விஷயங்களுக்கே அத்தனை அலட்டிக்கொள்கிறவர்கள் இருக்கும் சினிமாத்துறையில் எவ்வளவோ சாதித்திருந்தும் இவ்வளவு பணிவுடன் இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.
பிறகு அவராகவே குடும்பம் தொழில் பிள்ளைகள் என்றெல்லாம் விவரம் கேட்டார். முன்னர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் சந்திக்க நினைத்து முடியாமற்போனதைச் சொன்னபோது “இதுதான் என் செல் நம்பர். குறிச்சுக்கங்க. அடுத்தமுறை சென்னை வந்தால் போன் பண்ணுங்க. நிச்சயம் சந்திப்போம்” என்றார்.

“சந்திக்கலாம் சார். அதே போல நீங்க எப்பவாவது பெங்களூர்ப் பக்கம் வந்தீங்கன்னா தெரியப்படுத்துங்களேன். சந்திப்போம்” என்றேன்.

“அவசியம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இது நடந்து முடிந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் ஆகியிருக்கும். ஒருநாள் காலை சுமார் பத்தரை மணிக்கு அலைபேசி ஒலித்தது. பெயரைப் பதிவு செய்து வைத்திருந்ததால் பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று காட்டிற்று.

ஆச்சரியத்துடன் எடுத்து வணக்கம் சார் என்றேன்.

“நமஸ்காரம். நான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பேசறேன். பெங்களூருக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வந்துருவேன். பெங்களூர்ல எனக்கு ஏதோ ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செஞ்சிருக்காங்க. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தலைமையில நடக்கப்போகுது. பெங்களூர்ல ஆனந்தராவ் சர்க்கிள்ள இருக்கிற மௌரியா ஓட்டல்லதான் தங்கறேன். சாயந்திரம் ஐந்து மணிக்குத்தான் நிகழ்ச்சிக்குப் போகணும். நீங்க ஃப்ரீயா இருந்தா ரூமுக்கு வர்றீங்களா? சந்திப்போம். ஒரு மூணு மணிக்கு வந்தீங்கன்னா நாம பேசிட்டிருக்கலாம். தொந்தரவு இல்லைன்னா வாங்க. எதுக்கும் வர்றதுக்கு முன்னால போன் பண்ணிட்டு வாங்க” என்றார்.

தொந்தரவா? இத்தகைய சாதனையாளர்கள் அவர்களாகவே நினைவு வைத்திருந்து இந்த ஊருக்கு வரும்போது சந்திக்க வரச்சொல்லி அவர்களாகவே அழைக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ஒரு மணி அளவில் போன் செய்தபோது “இப்பதான் வந்து சேர்ந்தேன். லஞ்ச் சாப்பிட்டு  ஒருமணி நேரத்துக்கு ரிலாக்ஸ் செய்துக்கறேன். நீங்க மூணுமணிக்கு வந்திருங்க” என்றார்.

பரபரப்புடன் கிளம்பியபோது என்னுடைய மூத்தமகள் “ப்பா பிபிஎஸ்ஸைத்தானே பார்க்கப்போறீங்க? அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய ‘பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்’தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட். அவரைப் பார்க்க நானும் வர்றேன்” என்றாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜர்னலிஸம் முடித்து பெங்களூரின் பெரிய ஆங்கில தினசரியில் பணிபுரிந்துகொண்டிருக்கும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களில் இத்தனை ஈர்ப்பு என்பது எனக்கே தெரியாத செய்தியாக இருந்தது.

அவளையும் கூட்டிக்கொண்டு ஓட்டலுக்குச் சென்றேன்.

அறைக்குச் சென்று மணியை அழுத்தியதும் அவரது மகன் எழுந்துவந்து கதவைத் திறந்தார். பெயர் சொல்லியதும் சிரித்தபடி “உள்ளே வாங்க” என்றார். நாங்கள் போனபோதும் ஏதோ ஸ்வரங்கள் சொல்வதும் கைவிரல்களால் அவற்றைக் கணக்கிட்டு எழுதிக்கொள்வதுமாக இருந்தார் பிபிஎஸ். எங்களைப் பார்த்ததும் டேபிள் மீது வைத்திருந்த தலைப்பாகையை எடுத்து அணிந்துகொண்டார். பாக்கெட்டில் இருக்கவேண்டிய ஏகப்பட்ட கலர்ப்பேனாக்கள் டேபிள் முழுக்கப் பரவியிருந்தன.
குரலில் முதுமைக் காரணமாக ஒரு தளர்ச்சி வந்துவிட்டிருந்தாலும் மூக்கும் தொண்டையும் கலந்த ஒரு இளமையான இனிமை அப்படியே பாக்கி இருந்தது. தென்னகத்தையே பல வருடங்களாகக் கட்டிப்போட்டிருக்கிற மெல்லிய இளமையல்லவா அது!

காலங்களில் அவள் வசந்தம் பாடலில் ஆரம்பித்து பாடாத பாட்டெல்லாம், இந்த மன்றத்தில் ஓடிவரும், இளமைக் கொலுவிருக்கும், மனிதனென்பவன் தெய்வமாகலாம், நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், நிலவே என்னிடம் நெருங்காதே, மௌனமே பார்வையால், மாலையில் மலர்ச்சோலையில், கண்படுமே பிறர் கண்படுமே, கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே என்று நினைவுவந்த பல பாடல்கள் பற்றியும் நினைவுபடுத்தியபோது அந்தப் பாடல்களைப் பாட நேர்ந்த சம்பவம், இசையமைத்த விஷயங்கள், பாடல் எழுதிய தருணம் என்று ஏதாவது ஒன்றை நினைவுகூர்ந்து அந்தந்த வரிகளை மிக மெதுவாகப் பாடிக்காட்டினார். தென்னங்கீற்று ஊஞ்சலிலே என்று அடுத்த பாடலைச் சொல்வதற்காக நான் மெதுவாகப் பாடியபோது அவரும் கூடச்சேர்ந்து பாடியது என்னைப் பரவசமடைய வைத்தது. அதற்குப்பின் நிறையப் பாடல்களை என்னுடன் அவரும் அவருடன் நானுமாகப் பாடியதை அவர் அனுமதித்தார் என்பது இப்போதும் நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.

“இத்தனை வருடங்கள் கழித்தும் இந்தப் பாடல்களெல்லாம் எப்படி சிரஞ்சீவியாய் இருக்கின்றன” என்று நான் வியந்தபோது அவர் மிகச் சுலபமாக அதற்கான பதிலைச் சொன்னார்.

 “வேறொண்ணுமில்லை. பாடும்போது கேட்பவர்களின் காதுகளைப் போய்ச் சேரணும்னு நினைச்சுப் பாடாம உள்ளத்தைத் தொடணும்னு நினைச்சுப் பாடினோம்னா போதும். சரியா வந்துரும்” 



காக்கிநாடாவிலிருந்து கிளம்பி வந்ததையும் தம்முடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பின்னணிப் பாடகராக வரமுடியாது ஜாதகத்தில் இடமில்லை என்று சொன்ன ஜோஸ்யரின் வார்த்தையைப் பொய்யாக்கியதையும் (என்னுடைய மகளைப் பார்த்து-“இதபாரும்மா உனக்குத்தான் சொல்றேன். எதையாவது சாதிக்கணும்னு இறங்கினா அதைச் சாதிக்கிறவரைக்கும் ஓயாதே. சும்மா ஜோஸ்யன் சொன்னான் ஜாதகம் சொல்லுதுன்னு என்ன சொன்னாலும் முயற்சியை மட்டும் விட்டுராதே”) தெலுங்கிலும் கன்னடத்திலும் கண்டசாலா உச்சத்தில் இருந்தபோது இரு பட உலகிலும் நுழைந்து தன்னுடைய குரலால் தெலுங்கையும் கன்னடத்தையும் வசப்படுத்தியதையும் நினைவுபடுத்திப் பேசினார்.

“ஏ.எம்.ராஜாவுக்கு மாற்றாகத்தானே உங்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி கொண்டுவந்தார்கள்?” என்று கேட்டபோது-

“ஏ.எம்.ராஜா மிகச்சிறந்த பாடகர். அவருடைய பாடும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். ஒரு புதுப்பாடகரைக் கொண்டுவருவதற்கும் அவர்களைப் பிரபலப் படுத்துவதற்கும் ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இதெல்லாம் தொடர்ச்சியாக நடந்துவருபவைதான். என்னுடைய இடத்துக்கு எஸ்பிபியைக் கொண்டுவந்ததாகச் சொல்வார்கள். அதில் ஒண்ணும் ஆச்சரியமில்லை. நான் பிபிஎஸ். அவர் எஸ்பிபி. என்னுடைய இனிஷயலை மாற்றிப்போட்டால் அவர். அவ்வளவுதான்.

என்னுடைய இடத்துக்கு மட்டுமல்ல; டிஎம்எஸ் இடத்துக்கும் அவரை வைத்துத்தான் நிரப்பினார்கள். இதெல்லாம் திரையுலகில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஒன்றுதான். என்ன விஷயம்னா ஆண்டவன் யார்யாருக்கு என்னென்ன பொறுப்பு கொடுத்திருக்கானோ அதனை சின்சியராச் செய்துவந்தால் போதும். நான் அப்படித்தான் என்னுடைய செயல்களைச் செய்துவந்தேன். அதனாலதான் உச்சத்தில் இருந்தபோது எனக்கு எந்தவிதமான தலைக்கனமும் வரலை. அதேபோல என்னுடைய இடத்துக்கு மத்தவங்க வந்தபோது கவலையோ வருத்தமோ வரலை. ‘அது நமக்கானது; இது அவங்களுக்கானது’ என்று ஏத்துக்கற பக்குவம் இருந்தது. உச்சத்துல இருக்கும்போது ‘நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்’னு கண்ணதாசன் சொன்னாரே அதை நினைவு வச்சிருந்தால் போதும்”

அவருடைய இந்தக் குணம் ரொம்பவும் அபூர்வமானதாக இருந்தது. பிரபலமாயிருந்து இப்போது ஓய்வுபெற்ற பல கலைஞர்கள் ஒருவித வயிற்றெரிச்சலுடன்தான் இருப்பார்கள். இப்போது இருக்கும் கலைஞர்களெல்லாம் தங்களுக்கு இணையானவர்கள் இல்லை என்பதுபோல்தான் பேசுவார்கள். ‘என்ன இருந்தாலும் எங்களுடைய காலம்போல் வருமா?’ என்பார்கள். அதில் உள்ள உண்மையைத் தாண்டி கோபமும் பொறாமையும்தான் மிகுதியாக இருக்கும்.

இவர் பேசிய ‘அந்தக் காலத்தைப் போல் வருமா?’ பேச்சு அந்த ரகம் இல்லை. சரியான மதிப்பீடு. சரியான அளவீடு. ‘அன்றைய டெடிகேஷன் இன்றைக்கு இல்லை. அது வராது. காரணம் காலமாற்றம். இப்போது யாருக்கும் எதற்கும் நேரமில்லை. முன்னைப்போல் ஒரு பாட்டுக்குப் பத்து நாட்கள் பதினைந்து நாட்கள் செலவழிக்க யாரும் தயாரில்லை. இன்றைய பட்ஜெட்டும் அதற்கு இடம் கொடுக்காது. வாத்தியங்களே இல்லாமல் வாத்தியக்கலைஞர்களே இல்லாமல் பாட்டு ரிகார்டிங் பண்ணுகிற காலம் இது. அதற்கேற்பத்தானே எல்லாம் இருக்கும்” என்று சிரித்தார்.

அவரது பாடல்களின் வெற்றிக்குக் காரணமாக விஸ்வநாதன் ராமமூர்த்தியையும், 
 விஸ்வநாதனையும், “மாமா” கே.வி.மகாதேவனையும் மற்ற இசையமைப்பாளர்களையும் சொன்னாலும் “உங்கள் பாடல்களின் வெற்றிக்குக் காரணம் உணர்ச்சிக் கொந்தளிப்பை விடவும் நீங்கள் பாடும்போது இயல்பாக வெளிப்படுத்தும் சின்னஞ்சிறு நுணுக்கங்கள். இதயத்தை மயிலிறகால் வருடுவது போன்று வெளிப்படுத்தும் மென்மையான உணர்வுகள். ஸ்டைல் என்ற பெயரில் போலித்தனம் எதுவும் காட்டாமல் ராகத்தின் போக்கிலிருந்து சிறிதும் மாறாமல் அந்தத் தடத்திற்குள்ளேயே நடைபோடுவது; முக்கியமாக நீங்கள் உங்கள் குரலை எந்த இடத்திலும் உதறுவதே இல்லை. ஆற்றொழுக்கு போன்ற மென்மையான நடைதான் உங்கள் ஸ்டைல்.” என்றேன்.

“இருக்கலாம். ஏறக்குறைய இதையேதான் உங்கள் கடிதத்திலும் எழுதியிருந்தீர்கள். என்னுடைய பாட்டில் இயல்பாக வெளிப்படுத்தும் சின்னஞ்சிறு நுணுக்கங்கள் என்று சொல்கிறீர்கள். 
 என்னுடையை பாடல்களை ஒரு முப்பது வருடங்களாக மேடையில் பாடும் பாடகர் ஒருவர் இருக்கிறார்.(அவர் பெயரைச் சொல்கிறார்) ஏறக்குறைய மானசிக குருவாக என்னை ஏற்றவர் அவர். அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலை இதுவரைக்கும் ஒரு இரண்டாயிரம் தடவையாவது மேடைகளில் பாடியிருப்பேன். எல்லாம் சரியாக வருகிறது. ஆனால் அந்தப் பாடலில்  ‘நீ’  என்று ஒவ்வொரு முறையும் உச்சரிக்கிறீர்கள் பாருங்கள். அதற்கான பாவம் மட்டும் இதுவரையிலும் ஒருதடவைக்கூட எனக்கு வரமாட்டேனென்கிறது. அந்த ‘நீ’க்கு நீங்கள் கொடுக்கும் feelஐ என்னால் தரமுடியவில்லை என்று சொன்னார் அவர். எல்லாம் ஆண்டவன் கொடுத்தது” என்று மேலே கையைக் காட்டிச் சிலாகித்தார் பிபிஎஸ்.

கண்ணதாசனைப் பற்றிய பேச்சு வந்தபோது நான் அவரிடம் சொன்னேன். “கவிஞர் தமது திரைப்பட வாழ்வில் மூன்று படங்களில் அவரே தோன்றி நடித்து அவரது பாடல்களைப் பாடுகின்ற மாதிரியான காட்சிகள் வருகின்றன. முதல் படம் கறுப்புப்பணம். அந்தப் படத்தில் அவரே தோன்றி ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்று பாடுகிறார். இது சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது; அடுத்த படம் இரத்தத் திலகம். இதில் ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று பாடுகிறார். இது டிஎம்எஸ் பாடியது. மூன்றாவது சூரியகாந்தி படத்தில் ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?” என்று பாடுகிறார். இதுவும் டிஎம்எஸ் பாடியது. ஆனால் இந்த மூன்று பாடல்களில் எதையும் அவர் கலந்துகொள்ளும் இலக்கியக்கூட்டங்களில் பாடியதில்லை. அவர் கலந்துகொள்ளும் எல்லா இலக்கியக்கூட்டங்களிலும் அவரது வேறு இரண்டு பாடல்களை அவரே பாடுவார். அவர் குரல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அந்த இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடி முடிக்கும்போதும் சரி; அந்தப் பாடலிலுள்ள முக்கியமான வரிகள் வரும்போதும் சரி கைத்தட்டல் மண்டபத்தைப் பிய்த்துக்கொண்டு போகும். அந்த இரண்டு பாடல்களும் நீங்கள் பாடியவைதான். தெரியுமா உங்களுக்கு?” என்றேன்.

பிபிஎஸ் பரபரப்பாகிவிட்டார். “அப்படியா அவர் நான் பாடிய பாடல்களை மேடைகளில் பாடினாரா? 
இந்தச் செய்தி இதுவரைக்கும் நான் கேள்விப்படாததாக இருக்கிறதே. இதுவரைக்கும் யாரும் என்னிடம் சொல்லியதே இல்லையே. என்ன பாடல் அவை?” என்றார்.

“ஒரு பாடல்- ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வரத் துடித்தேன் உனைத்தேன் எனநான் நினைத்தேன்’. இரண்டாவது பாடல் ‘எந்த ஊர் என்றவனே அந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?”

உடனே பழைய நினைவுகளில் மூழ்கி அந்தப் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்தார் அவர். “இரண்டும் என்ன அற்புதமான பாடல்கள் சார்; இப்படியெல்லாம் திரைப்படங்களுக்குள்ளும் எழுத முடியும் என்பதை நிரூபித்தவர் கண்ணதாசன் ஒருவர்தான். இத்தனைக் கவிஞர்கள் இருந்தபோதும் கண்ணதாசனுக்கு மட்டும் தனியான இடம் எதுக்கு சொல்லுங்கள் பார்க்கலாம்”
“பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அவர் ஒருவர்தான் பாடல் எழுதியிருக்கிறார்” என்றேன்.

“ஆமாமா அது நிஜம்தான். ஆனா இத்தனைப் பெரிய எக்ஸ்பிளனேஷன் தேவையில்லை. சுருக்கமாய்ச் சொல்லிவிடலாம். கவிஞர்களில் அவர் ஒரு மகான். அதனால அவர் விசேஷமானவர்.” என்றார் பிபிஎஸ் மிகச்சுலபமாக.

இம்மாதிரியான தீர்க்கமான, ஆனால் சுலபமான நிறைய ‘முடிவுகள்’ அவரிடம் இருந்தன.
எஸ்பிபியைப் பற்றி எப்படி அவருக்குள் மிக மேலான அபிப்பிராயம் இருந்ததோ அதே போன்று இளையராஜா குறித்தும் ஏ.ஆர்.ரகுமான் குறித்தும்கூட மிகமிக நல்ல அபிப்பிராயங்களே அவரிடம் இருந்தன. அனைவரிடமும் உள்ள சிறப்பான அம்சங்களை மட்டுமே மனதிற்குள் தேக்கி வைத்திருந்தவர் அவர்.

கன்னடத்தில் நம்பர் ஒன் பாடகராக இருந்த இவர் தமது படங்களுக்கான அத்தனைப் பாடல்களையும் ராஜ்குமாரே பாட ஆரம்பித்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஓரம் கட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். அந்த வருத்தம்கூட இவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை ராஜ்குமாரைப் பற்றிச் சொன்னதிலிருந்து உணர முடிந்தது.. “ஒரு ஃபங்ஷனில் ராஜ்குமார் முன்னாடியே போய் உட்கார்ந்துட்டார். நான் கொஞ்சம் லேட்டாகப் போனேன். நான் உள்ளே நடந்து வருவதைப் பார்த்து ராஜ்குமார் கமெண்ட் அடித்தார். ”இதோ பாருங்கள் ராஜ்குமாரின் சரீரம் இங்கே உட்கார்ந்திருக்கிறது. சாரீரம் அங்கே நடந்து வருகிறது. இப்படி அவரே சொன்னார் பாருங்க. அது ஒண்ணே போதும் இல்லையா”

ஐந்து மணி ஆனதும் “சார் உங்க நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்பறேன்” என்றேன்.

“இல்லை. ஏழு மணிக்குத்தான் நிகழ்ச்சி. என்னைக் கூட்டிப்போக ஆறரை மணிக்கு வருவார்கள். அவர்கள் வரும்வரைக்கும் நீங்கள் இருக்கலாம்” என்றார்.

விஸ்வநாதனைப் பற்றிய பேச்சு வந்தபோது “விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒண்ணா இருந்தபோதும் சரி விஸ்வநாதன் தனியாப் போனபோதும் சரி மெலடியில் அவங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. மெல்லிசை மன்னர்கள், சக்ரவர்த்திகள் எல்லாம் அவங்கதான். ஆனால் கே.வி.மகாதேவன் திறமையையும் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. ஒரு சம்பவம் சொல்றேன் பாருங்க. இதுவரை பத்திரிகை எதுக்கும் இதைச் சொன்னதில்லை. எந்த பத்திரிகையிலும் வந்ததில்லை.
ஒரு பாட்டு ரிகார்டிங் பண்ணவேண்டி கூப்பிட்டுருந்தாங்க. காலையிலேயே போயிட்டேன். மகாதேவன் இசைக்குழுவினருடன் உட்கார்ந்திருக்கார். பக்கத்துல அவரது உதவியாளர் புகழேந்தி உட்கார்ந்திருக்கார். டைரக்டர் தயாரிப்பாளர் எல்லாம் வந்துட்டாங்க. கவிஞர்
மட்டும் வரலை. அப்புறம் கேட்டா ஏதோ பெரிய புரொடக்ஷன். பெரிய பேனர். சிவாஜியோ எம்ஜிஆருடையதோ படம். அதுக்கு எழுத அவரைக் கூட்டிப் போயிட்டாங்க. விஸ்வநாதன் இசையமைப்புல பாடல் பதிவு. அங்கே போயிட்டார். அவர் வரமாட்டார்னு சொன்னாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய ஏமாற்றமாயிருச்சி.
என்ன பண்றதுன்னு தெரியலை.

இங்கே ரிகார்டிங்கிற்கு எல்லாம் எல்லா ஏற்பாடும் செய்தாச்சு. பாடல் எழுதப்பட்டு பிராக்டிஸ் முடிஞ்சு இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள பதிவாகிடணும்.  கவிஞர் இல்லாட்டா என்ன பண்றது? வாலியையோ ஆலங்குடி சோமுவையோ கூப்பிட்டு எழுதவைக்கலாம்னு முடிவு பண்ணாங்க. டைரக்டரும் தயாரிப்பாளரும் ஒத்துக்க மாட்டேன்றாங்க.

“இந்தப் பாடலை யாரையாவது வைத்து எழுதிக்கொள்ளலாம். அடுத்த படத்துக்கு கவிஞரைக் கூப்பிட்டுக்கலாம்” என்று கேவிஎம்மும் சொல்லிட்டார்.

ஆனா டைரக்டர் கவிஞர்தான் எழுதணும்னு பிடிவாதமாச் சொல்றார்.

“அப்ப வேற ஒண்ணும் பண்றதுக்கில்லை. இன்னைக்கு எல்லாத்தையும் கேன்சல் செய்துட்டு நாளைக்கு எப்படியாவது கவிஞரைக் கூட்டிவந்து எழுதவைக்கலாம்” என்றார் கேவிஎம்.

“இல்லை இன்னைக்கே முடிச்சாகணும். எங்களுக்கு ஒரு அரைமணிநேரம் டைம் கொடுங்க. நாங்க போய் கவிஞரைச் சந்தித்து பாடல் எழுதி வாங்கிட்டு வந்துர்றோம்” என்று சொல்லி தயாரிப்பாளரும் இயக்குநரும் கிளம்பினார்கள்.

எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘இன்னொரு கம்பெனிக்கு அதுவும் பெரிய பேனர் கம்பெனிக்குப் பாடல் எழுத உட்கார்ந்திருக்கும் அவரிடமிருந்து எப்படி இவங்க பாட்டெழுதி வாங்கிட்டு வரப்போறாங்க? மகாதேவன் இங்கிருக்கார். என்ன செய்யப் போறாங்க அவங்க’ என்ற எண்ணம் எங்களுக்கு எழுந்தது. சரி என்னதான் ஆகிறது பார்க்கலாம் என்றபடி உட்கார்ந்திருந்தோம்.
அங்கே போனவர்களுக்கு எப்படி காரியத்தை முடிக்கப்போகிறோம் என்ற பரிதவிப்பு. பார்த்தால் முழுமையான அளவில் சபை கூடியிருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குநர், வாத்தியக்காரர்கள் இசையமைப்பாளர்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கிறார் கவிஞர். இவர்களில் ஒருவர் தைரியமாக கவிஞரிடம் போய் “அண்ணே ரொம்ப அவசரமான விஷயம் ஒண்ணு பேசணும். ஒரு ரெண்டு நிமிடம் இப்படி வரமுடியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

கவிஞரும் என்னவோ ஏதோ என்ற பரபரப்பில் எழுந்து வெளியே வந்திருக்கிறார். சற்றே ஒதுக்குப்புறமாக அவரைக்கூட்டி வந்திருக்கிறார்கள். விஷயத்தை அவசரமாகச் சொல்லி பணத்தை அவரது கையில் திணித்து “நீங்க மறுக்கவே கூடாது. அங்கே எல்லாருமே உங்களுக்காக வெயிட்டிங். நின்றபடியே நீங்க பாடலைச் சொல்லிடுங்க. இதோ பேப்பர் பேனாவெல்லாம் தயாரா கொண்டுவந்திருக்கேன். மளமளன்னு எழுதிப்பேன். ஐந்து நிமிஷம் போதும். காதலியைப் பார்த்து காதலன் பாடுகின்ற பாட்டுதான். மாமாதான் இசை. பாட்டை எழுதி வாங்கி வந்துருங்க. மெட்டுப் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு. ப்ளீஸ், பாட்டுச் சொல்லுங்க நாங்க எழுதிக்கறோம்” என்று கேட்டிருக்கிறார்கள்.

“என்னப்பா விளையாடறீங்களா? இப்படியெல்லாமா பாட்டு எழுதமுடியும்? நாளைக்குக் கண்டிப்பா அங்கே வந்து எழுதித்தர்றேன்” என்று மறுத்திருக்கிறார் கவிஞர்.

இவர்கள் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே கடைசியில் கவிஞர் “சரி எழுதிக்கோ” என்று சொல்லியபடியே மளமளவென்று அங்கு நின்றபடியே பாட்டு வரிகளைச் சொல்ல அவர்களும் எழுதிக்கொண்டனர்.

எல்லாமே பத்து நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டன. நன்றி சொல்லிவிட்டு இவர்கள் அவசரமாகக் கிளம்பி எங்களிடம் வந்தனர்.

இங்கே இந்த அறையில் வாசல் பக்கமாகவே நான்தான் முதல் ஆளாக உட்கார்ந்திருந்தேன். வந்ததும் அந்தப் பேப்பரை வாங்கி நான் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தனியே கூப்பிட்டு ஒரு அவசரச் செய்தி சொல்லுகின்ற கேப்பில் ஒருவரால் ஒரு புதிய பாடல் எழுதிக்கொடுத்துவிட்டுப் போகமுடியுமா? என்ன மாதிரியான அசாத்தியக் கவிஞர் அவர்!
இந்தப் பாடலுக்கு என்னமாதிரியான டியூன் போடமுடியும் என்று யோசித்தேன். இப்படியான முயற்சிகள் அவ்வப்போது செய்வதுண்டு. அப்படி ஏதேனும் தோன்றினால் அதனை இசையமைப்பாளரிடமும் சொல்வேன். இந்த ராகத்தில் இந்த சந்தத்தில் போடலாமே என்று ஐடியா சொல்லுவேன். இந்தப் பாடலுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

“எங்கே கொடுங்க இப்படி” என்று வாங்கிப் பார்த்தார் புகழேந்தி. சற்றுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தவர் என்னமோ டியூன்களை முணுமுணுத்துப் பாடிப்பார்த்தார். ம்ஹூம் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. தலையை உலுக்கிக்கொண்டும் தொடையில் தாளம் தட்டிக்கொண்டும் என்னென்னவோ ராகங்களைப் பாடிப்பார்த்தார். எதுவும் சரிப்படவில்லை.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கேவிமகாதேவன் அங்கிருந்து எழுந்து வந்தார். “என்ன அது? நீங்க மட்டுமே பார்த்துக்கிட்டிருக்கீங்க? என்ன பாட்டு அது?” என்று கேட்டபடியே புகழேந்தியிடமிருந்து பேப்பரை வாங்கியவர் அதில் என்ன எழுதியிருக்கு பல்லவி என்ன சரணம் என்ன என்று எதுவும் படித்துப் பார்க்காமலேயே ‘ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து…..உன் அழகினைப் பாடவா தமிழைக் கேட்டு’ என்று எடுத்த எடுப்பிலேயே பாட ஆரம்பித்துவிட்டார். பாடலைப் படித்துப் பார்க்கவில்லை, அதற்காக யோசிக்கவில்லை, மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவில்லை, ஒரு சில வினாடிகள்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அதாவது என்ன ராகம் அமைக்கலாம் என்று முதல்முறையாகப் படித்துப்பார்ப்பதே மெட்டுப்போட்டுதான் என்றால் அது என்ன அசாத்தியமான திறமை என்று வியப்பில் அதிர்ந்துபோனோம்.

அந்தப் பேப்பரை அப்படியே கொண்டுபோய் தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியிடம் வைத்துக்கொண்டு மொத்த மெட்டையும் பாடிவிட்டு பேப்பரை என்னிடம் நீட்டினார். “இதான் ராகம். மறுபடி பாடறேன். பிடிச்சுக்கங்க” என்று சொல்லிப் பாடிக்காட்ட நான் ஒரு அரைமணி நேரத்தில் தயாராகிவிட்டேன். நாங்கள் நினைத்தபடியே பகலுக்குள் பாடல் ரிகார்டிங் முடிந்துவிட்டது.
இங்கே இந்த இரண்டு விற்பன்னர்களின் திறமைகளையும் யோசித்துப் பாருங்கள். கூப்பிட்டு அவசரப்படுத்தியவுடன் அங்கே நின்றபடியே ஒரு முழு பாட்டையும் ஒரே மூச்சில் எழுதித்தரும் கவிஞர்; அவர் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாரோ அதே அளவு நேரம் எடுத்து அந்தப் பாடலுக்கு மெட்டுப்போடும் இசையமைப்பாளர்……………….

தங்கள் தங்கள் துறையில் இவர்கள் என்னமாதிரியான சாதனையாளர்கள் என்பதை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியம் தாளவில்லை” என்று சிலிர்ப்புடன் அந்த அனுபவத்தைச் சொல்லி முடித்தார் பிபிஎஸ்.

கதவு தட்டப்பட்டது. பிபிஎஸ்ஸை அழைத்துப்போக விழா அமைப்பினர் வந்தனர்.
நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.

அதற்குப்பின்னர் இரண்டொருமுறை அலைபேசியில் பேசினேன். இடையில் ஒருநாள் கையில் கட்டுடன் அமர்ந்து தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி தந்துகொண்டிருந்தார். போனில் கேட்டபோது “குளியலறையில் வழுக்கிவிழுந்துவிட்டதாகவும் இப்போது பரவாயில்லை” என்றும் சொன்னார்.

மீண்டும் ஒருமுறை அவர் பெங்களூர் வந்திருக்கிறார் என்பதை செய்தித்தாள் பார்த்து தெரிந்துகொண்டு அவரிடம் பேசியபோது கன்னட இசையமைப்பாளர் ஒருவரின் வீட்டிற்கு விருந்திற்குச் செல்வதாகச் சொன்னார். “அடுத்த தடவை வரும்போது எங்கள் வீட்டிற்கு வரவேண்டும்” என்றேன்.

“பார்க்கிறேன். முடிந்தால் வருகிறேன். இப்போதைய என்னுடைய உடம்பை வைத்துப் பார்க்கும்போது முடியும்னு தெரியலை” என்றார்.

சில மாதங்களுக்கு முன் போனில் தொடர்பு கொண்டபோது “நீங்க யாரு தெரியலையே” என்றார்.
பெங்களூர் பிலிமாலயா கடிதம் என்றெல்லாம் நினைவுபடுத்தியவுடன் “ஆ…இப்ப நினைவு வந்துருச்சி. சாரி…சாரி….மன்னிக்கணும். ஆனா இப்படித்தான் எல்லாமே மறந்துபோயிருது. அப்பப்ப நினைவு தவறிடுது. ஒண்ணும் ஞாபகத்துல இருக்கறதில்லை” என்றார். அதன்பிறகு அவரை சிரமப்படுத்தவில்லை.

கோடிக்கணக்கானவர்களின் மனதில் மென்மையான குரல் மூலம் மாபெரும் வசந்தத்தை ஏற்படுத்திய ஒரு சகாப்தத்தின் நாயகன் இதோ தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.



எத்தனையோ சாதனைகள் புரிந்திருந்தபோதும் ஒரு சாதாரண ரசிகனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அளவுக்கு இறங்கிவந்து பழகிய அந்தக் கலைஞனின் பாடல்கள் மட்டுமல்ல பேசிய வார்த்தைகளும் இறுதிவரை நினைவிலேயே இருக்கும்.