Sunday, September 6, 2015

எம்எஸ்வி – ஒரு நிறைவுற்ற சகாப்தம் – பகுதி-2


பாக்கியலட்சுமிக்கு வருவோம். ‘கண்ணே ராஜா’ பாடலில் ஒரு விசேஷம். அந்தப் பாடல் முதலில் சந்தோஷப் பாடலாகவும் பிறகு சோகப்பாடலாகவும் படத்தில் ஒலிக்கும். அந்தக் காலத்தில் பல படங்களில் இந்தப் பாணி இருந்தது. ஒரே மெட்டு மகிழ்வாகவும் பின்னர் கதையின் போக்குக்கேற்ப அதே மெட்டு சோகமாகவும் ஒலிக்கும். ஒரு இசையமைப்பாளரின் அற்புதத் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்தப் பாணியும் நிறையவே உதவிற்று.
இந்தவகையில் புகழ்பெற்ற பாடல்கள் நிறைய உண்டு.
  1.        வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே..
  2.         கண்ணே ராஜா கவலைவேண்டாம்……
  3.       மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்..
  4.    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்……….
  5.     இந்த மன்றத்தில் ஓடிவரும்…………
  6.     அன்றுவந்ததும் அதே நிலா………….
  7.      உன்னை ஒன்று கேட்பேன்………….
  8.      ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி……………
  9.     அன்றொருநாள் இதே நிலவில்….
  10.          அம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசு…….. என்று பட்டியல் பெரியது. 

இம்மாதிரியான சோகப்பாட்டுக்களை மட்டுமே, அதுவும் அன்றைக்கிருந்த ஒலித்தட்டு ரிகார்டுகளையே தேடித் தேடி சேகரித்து வைத்திருந்த ரசிகர்கள் நிறையவே உண்டு.
பாக்கியலட்சுமி’ படத்திற்குப் பின்னர் ‘பாசமலர்’ வருகிறது. பாசமலரில் ஏழு பாடல்கள் ஹிட். பாசமலருக்கு அடுத்து ‘பாலும் பழமும்’. பாலும் பழமும் படத்தில் ஏழு பாடல்கள். அதற்கடுத்து ‘பாவமன்னிப்பு’. பாவமன்னிப்பில் ஆறு பாடல்கள் ஹிட்.(புகழ்பெற்ற பாடலான ‘அத்தான் என் அத்தான்’ இந்தப் படத்தில்தான். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதைகளில் ஒருவரான நௌஷத் “ஒரு பாடலை இப்படியெல்லாம் கம்போஸ் பண்ணமுடியுமா என்ன?” என்று ஆச்சிரியத்தில் வியந்த பாடல் அது. தனக்கு மிகவும் பிடித்த பாடலாக லதா மங்கேஷ்கர் இன்றும் சொல்லிவரும் பாடல் அது) இப்படி….. தமிழ் நெஞ்சங்களில் தொடர்ச்சியாகத் தேன்மழையைப் பொழியும் காரியத்தை மெல்லிசை மன்னர்கள் செய்கிறார்கள்.

அதற்கடுத்து டி.ஆர்.ராமண்ணாவின் ‘மணப்பந்தல்’ வருகிறது. இந்தப் படத்திலும் பி.சுசீலாவை வைத்து வர்ணஜாலம் புரிகிறார்கள். அவர் பாடிய ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, ‘ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல்’ இரண்டு மட்டுமில்லாமல் பிபிஸ்ரீனிவாஸின் ‘உடலுக்கு உயிர் காவல்’ தத்துவப் பாடலும் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.

அடுத்து வருகிறது ‘ஆலயமணி’. சிவாஜியின் இந்தப் படத்தில் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘சட்டி சுட்டதடா’ மூன்றும் சிவாஜிக்கானவை. இந்த இடத்தில் ஒரு சின்னக் குறுக்கீடு. என்னுடைய நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பெரிய அளவுக்குப் படித்தவர். திருச்சியைச் சேர்ந்த அவருக்கு அவருடைய சொந்தத்திலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டாரோ பெரும் செல்வந்தர்கள். என்னதான் மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும் அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. அதனால் பெண்ணைத் தரமுடியாது என்று கடிவாளம் போட்டார் மாமனார். அந்தப் பெண் பிடிவாதமாக இருந்து இவரைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று இவரையே மணமுடித்தாராம். அந்தச் சமயத்தில் வந்த படம் ஆலயமணி. ‘பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே –புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே’ என்று “எனக்காகவே கண்ணதாசன் எழுதி சிவாஜி பாடிய மாதிரிதான் அன்றைக்கு இந்தப் பாடல் அமைந்திருந்தது. என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மனைவி வாழ்க்கையிலும் மறக்கமுடியாத பாடல் இது. நாங்கள் இறக்கும்வரை இந்தப் பாடலை மறக்கமாட்டோம்” என்று மனம் உருகிச் சொல்வார் ராமனாதன் என்ற என்னுடைய நண்பர். என்று இப்படி தனிப்பட்டவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களாகத்தான் அந்தக் கால பாடல்கள் அமைந்திருந்தன.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, சுசீலா பாடுகிறார். ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா?’ பாடல் சீர்காழி சுசீலா டூயட்டாக மலர்கிறது. இந்தப் படத்தில் வரும் இன்னொரு புகழ்பெற்ற பாடல் எஸ்.ஜானகி பாடும் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’.

இந்தப் பாடல் பற்றிய முக்கியமானதொரு செய்தியை இங்கே சொல்லியாக வேண்டும்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்த பாடலாகச் சொல்லியிருக்கும் வெகுசில பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவல்ல விஷயம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி; விஸ்வநாதன் தனித்திருந்தபோதும் சரி எஸ். ஜானகியை அவ்வளவாகப் பாடவைத்தவர்கள் கிடையாது.

மிகமிக அரிதாகத்தான் வாய்ப்புகள் வழங்குவார்கள். அவ்வப்போது ஏதோ ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பைத்தான் ஜானகிக்கு வழங்குவார்கள். அந்தக் காலத்தில் பெண் குரல் என்றாலேயே பி.சுசீலாதான். அதற்கடுத்த இடமும் ஜானகிக்கு அல்ல, எல்.ஆர்.ஈஸ்வரிக்குத்தான். அதனால் ஜானகி புத்திசாலித்தனமாக (அல்லது அப்படித்தான் அமைந்ததோ என்னவோ) கன்னடத்தின் பக்கம் போய்விட்டார். கன்னடத்தில் பிபிஎஸ்ஸூம் ஜானகியும்தாம் பெரிய முன்னணிப் பாடகர்கள். ஜி.கே.வெங்கடேஷ் கன்னடத்தில் நிறையப் படங்கள் பணியாற்றி வந்தமையால் அவருடைய உதவியாளராக இருந்த இளையராஜாவுக்கு பி.சுசீலாவை விடவும் ஜானகியிடம்தான் பணிபுரிந்த அனுபவம் அதிகம். எனவே இளையராஜா தமிழில் முன்னணிக்கு வந்ததும் அவருடைய ‘சாய்ஸ்’ இயல்பாகவே சுசீலாவாக இல்லாமல் ஜானகியாக இருந்தது. இந்தப் பின்னணியிலேயேகூட இந்தச் செய்தியை அணுகலாம்.

                                            

சில வருடங்களுக்கு முன்னர் விகடனிலோ குமுதத்திலோ எஸ்.ஜானகியின் பேட்டி வந்திருந்தது. அதில் அவர் ஒரு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமான ரசிகர்கள் கூட்டம். ஏதோ காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் கலாட்டா ஆரம்பமாகிறது. மேடையிலிருப்பவர்கள் என்ன சொல்லியும் ரகளை குறைவதாகத் தெரியவில்லை. அந்த நாட்களின் புகழ்பெற்ற பாடல்களைப் பாடத்துவங்குகிறார் ஜானகி. கூட்டம் கட்டுப்படவில்லை. சட்டென்று பாடலை நிறுத்தும் ஜானகி உடனடியாக ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ என்ற ஆலயமணி பாடலை ஆரம்பிக்கிறார்.

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் சட்டென்று கூச்சல் குழப்பம் அடங்கி கட்டுக்குள் வருகிறது கூட்டம்.

இந்த வித்தை எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாது.. “இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது” – என்று சொல்லியிருந்தார் ஜானகி.
இதே போன்ற அனுபவத்தை நேரடியாக சந்திக்க நேர்ந்தது பெங்களூரில். மிகப் பிரபலமான பாடகர்கள் வருவார்கள் என்று சொல்லி ஏகப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ஒரு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணியினர் யாரும் வரவில்லை என்றதும் ரகளையில் இறங்கியது கூட்டம். மேடைக்கு வந்த ஜானகி பாடிய முதல் பாடல் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’. மொத்தக் கூட்டமும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் அடங்கியதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பும் பெங்களூர் சிவாஜிநகர் ஸ்டேடியத்தில் கிடைத்தது.

ஜானகியின் பேட்டி வெளிவந்தது 2000 ஆண்டுகளில். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ வந்தது 1962 ம் ஆண்டில். இதற்குள் ஜானகி வெவ்வேறு தளங்களில் பயணித்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடி ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். அதில் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கும். ஆனாலும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு இருக்கும் மெஸ்மரிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆலயமணிக்கு அடுத்து இன்னொரு புகழ்பெற்ற படமான ‘காத்திருந்த கண்கள்’. ஜெமினி, சாவித்திரி நடித்த படம். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆறு பாடல்களும் அடித்துக்கொள்ள முடியாதவை. ‘கண்படுமே பிறர் கண்படுமே’ (இதை கண் badume என்றே பிபிஎஸ் பாடினார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும் இன்றுவரையிலும் அடித்துக்கொள்ள முடியாத பாடல் அது)  பாடலும் ‘துள்ளித் திரிந்த பெண் ஒன்று’ பாடலும் பிபிஎஸ்ஸின் ஹிட் லிஸ்டில் அடக்கம். அவர் சுசீலாவுடன் பாடிய ‘காற்றுவந்தால் தலைசாயும் நாணல்’ பாடலும், ‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலும் தமிழின் நிரந்தர இனிமையான பாடல்களில் அடக்கம்.
            
                                            


பி.சுசீலா தனியாகப் பாடிய ‘வா என்றது உருவம்’ ஒரு தேன் வழியும் பாடல் என்றால் சீர்காழியின் வெண்கலக்குரலில் வந்த ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ பாடல் நிலைத்து நின்றுவிட்ட சீர்காழியின் பாடல்களில் ஒன்று. இயக்குநராக இருந்து நடிகராக மாறிவிட்ட மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்தார். “டைவர்ஸுக்கு விண்ணப்பித்திருக்கும் தம்பதியர் எல்லாரையும் வரவழைத்து அவர்களை ஒரு அறையில் உட்காரவைத்து ஒரேயொருமுறை ‘வளர்ந்தகலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலைக் கேட்கும்படிச் செய்தால் போதும். நிச்சயம் பாதிப்பேர் டைவர்ஸ் நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தம்பதி சமேதராய் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள் என்று குடும்ப கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கும் ஒருவர் சொன்னார்” என்று.

ஒரு பாடலின் தாக்கம் என்பது இதுதான். சமூகத்தில் இறங்கி அந்தப் பாடல் ஒரு மாறுதலைச் செய்வதாக இருக்கவேண்டுமே தவிர ‘பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’ என்று எழுதப்படும் தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் எல்லாம் ஒரு பாடலைச் சிறந்த பாடலாக தனிப்பட்ட அவர்கள் அளவுக்குக் கருதிக்கொள்ளலாமே தவிர சமூகத்தின் முன் நிறுத்திவிடாது.

இந்தப் பெரிய பட்டியல்களுக்கு மத்தியில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அன்றைக்கு நம்பர் ஒன் லிஸ்டில் இருந்தவர்கள். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ஏவிஎம், ஸ்ரீதர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு இவர்கள்தாம் இசை. ஆனால் இவர்களுக்குப் பெரிய படம் சிறிய படம் என்ற பேதமெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களாக அன்றைக்குக் கருதப்பட்ட பல படங்களில்- குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் பாதகாணிக்கை, மணப்பந்தல், மணியோசை, வீரத்திருமகன், வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற படங்களில் அற்புதமான, மிக அற்புதமான பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். அதுவும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பத்து சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் போடப்படுமேயானால் (உலகிலேயே மிகவும் சிரமமான பட்டியல் இதுவாகத்தான் இருக்கமுடியும்) அதில் மூன்றாவதற்குள் வந்துவிடக்கூடிய படம் பாதகாணிக்கை. 

இந்தப் படங்களில் எல்லாம் உயிரை உருக்கும் பாடல்கள் உள்ளன.

அதுவும் வீரத்திருமகனில் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் இதில் கதாநாயகன். கதாநாயகி சச்சு.) வரும் ‘பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்’ பாடலும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலும் தமிழ்நாடு முழுக்கச் சுழன்றடித்த பாடல்கள். பிபிஎஸ்ஸின் மகுடத்தில் என்றைக்கும் இருக்கும் பாடல்கள். கடைசியாக சந்தித்தபோது பிபிஎஸ் சொன்னார் “ஐயோ அந்த ரெண்டு பாடல் பத்தியும் ஏன் கேக்கறீங்க? பிரபலம் என்றால் இப்படி அப்படிப் பிரபலம் இல்லை. நான் கலந்துகொள்ளும் தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளில்கூட இந்த இரு பாடல்களையும் தவறாமல் இன்றளவும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”

அடுத்து சுமைதாங்கி, நிச்சய தாம்பூலம், நெஞ்சில் ஓர் ஆலயம், படித்தால் மட்டும் போதுமா, பலேபாண்டியா, பாசம், பாதகாணிக்கை, பார்த்தால் பசிதீரும், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், பெரிய இடத்துப் பெண், மணியோசை, ஆண்டவன் கட்டளை, என் கடமை, கர்ணன், கலைக்கோயில், கறுப்புப் பணம், காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை, வாழ்க்கை வாழ்வதற்கே, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சாந்தி, பஞ்சவர்ணக்கிளி, பணம் படைத்தவன், பழனி, பூஜைக்கு வந்த மலர், வாழ்க்கைப் படகு, வெண்ணிற ஆடை, ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் - என்று விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொன்னெழுத்துப் பட்டியல் நீண்டு 1965 டன் ஒரு முடிவுக்கு வருகிறது.

நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இங்கே குறிப்பிட்டிருக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. 

இந்தப் படங்களில் வரும் ஓரிரண்டு பாடல்களைத் தவிர பாக்கி அத்தனைப் பாடல்களும் – ஆமாம் அத்தனைப் பாடல்களும், சதவிகிதக் கணக்குப் போட்டால் தொண்ணுற்று ஒன்பது சதம் வரக்கூடிய அத்தனைப் பாடல்களும்- அதனை இயற்றியவரின் பெயர் சொல்லும், அதனைப் பாடியவரின் பெயர் சொல்லும், அதில் நடித்தவர்களின் பெயர் சொல்லும் தமிழின் நிரந்தர இனிமைப் பட்டியலில் இருக்கப்போகும் என்றென்றும் இனிக்கும் இறவாப் பாடல்களே.

இத்தனை இனிமையாய், இத்தனை சுவைகளில், இவ்வளவு அமுதத் தமிழில், இத்தனை விதவிதமான குரல்களில், இத்தனை விதவிதமான உணர்வுகளில், இத்தனை வித வாத்தியங்களின் இனிமையில் இதுவரை யாரும், ஆமாம் யாரும்- இத்தனைப் பாடல்களைத் தமிழுக்குக் கொடுத்ததில்லை.

இனிமேல் கொடுக்கப்போகிறவர்களும் யாரும் இல்லை.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி, தனியாக விஸ்வநாதன் பிரிந்து இசையமைத்துக்கொண்டிருந்தபோதும் சரி இவர்களின் தாரகமந்திரம் ஒன்றேஒன்றுதான். அதாவது இனிமை, இனிமை, இனிமை!

பாடல்களில், அது எப்பேர்ப்பட்ட பாடல்களாக இருந்தபோதிலும் இனிமையைக் குழைத்துக்கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். இனிமை அடிப்படை. அதன்பிறகு புதுமை, காலமாற்றம், அதற்கேற்ற மாறுதல்கள், விதவிதமான வாத்தியக்கருவிகள், பல்வேறு நாட்டு இசைகளின் கோர்வைகள் லொட்டு லொசுக்கெல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. முதல் அடிப்படை இனிமை. இனிமை இல்லையெனில் அது எப்பேர்ப்பட்ட புதுமையாக இருந்தபோதிலும் இவர்களின் கவனம் அங்கே செல்லாது. அவர்களின் தாரக மந்திரம் இது ஒன்றுதான் இனிமை, இனிமை, இனிமை!

அந்த ஒரே காரணத்தினால்தான் எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் இவர்களின் பாடல்களுக்கு மட்டும் வயதாவதும் இல்லை, தேய்ந்து போவதும் இல்லை, மறைந்துபோவதும் இல்லை, ஓரத்தில் ஒதுக்கப்படுவதும் இல்லை. யாரும் இந்தப் பாடல்களை மறப்பதும் இல்லை.

ஒரு பாட்டுக்கு இசை முக்கியமா? பாடல் வரிகள் முக்கியமா? என்ற சர்ச்சை எந்தக் காலத்திலும் உண்டு. இதற்கு எம்எஸ்வியே நிறைய நேரங்களில் பதில் சொல்லியிருக்கிறார். “மெட்டுக்குப் பாட்டும் உண்டு; பாட்டுக்கு மெட்டும் உண்டு” என்பது அவரது நிரந்தர பதில். இந்த பதிலில் உள்ள புரிதல் என்னவென்றால் மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பதுதான்.

இதையும் தாண்டி தோண்டித் துருவும் வித்தகர்கள் காலந்தோறும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘பாட்டுக்கு இசை மட்டும்தான் முக்கியம். பாட்டுவரிகள் என்பன ஒரு பொருட்டேயில்லை’ என்ற ஒரு வாதமும் சிலர் மூலம் இங்கே பரப்பப்பட்டு வருகிறது. இந்த வாதத்தை ஒரு இசையமைப்பாளரே முன்நின்று பரப்புவதையும் பார்த்துத்தான் வருகிறோம். அவருக்கு மார்க்கெட் இருக்கும்வரை அந்த வாதத்திற்கும் ஒரு மவுசு இருந்தது. அவருக்கு மார்க்கெட் போனபின்பு அந்த வாதத்திற்கான நிழல் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரேயொரு வார்த்தை. பாட்டு வரிகளை, எழுத்தின் சக்தியை உணராதவர்கள் எத்தனை பெரிய வித்தகர்களாக இருந்தபோதும் பிரயோசனமில்லை. கம்பராமாயணம் காலத்தில் எத்தனையோ இசை வடிவங்கள் இருந்திருக்கலாம். அந்த இசையெல்லாம் இப்போது எங்கே?

ஆனால் கம்பராமாயணம் மட்டும் இன்னமும் இருக்கிறது.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி 1965-ம் ஆண்டுடன் பிரிகிறார்கள். அவர்கள் பிரிவுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் பிரிவுக்கடுத்து விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் விஸ்வநாதன் மட்டும் நிலைத்து நின்று தனியாகவே அறுநூறு படங்களுக்கும் மேல் இசையமைத்ததையும், ராமமூர்த்தி இருபது படங்களுடன் நின்றுவிட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இருவரும் சேர்ந்து இசையமைத்தபோது இருந்த அந்த ‘ரசவாத வித்தை’ விஸ்வநாதனிடம் தொடர்ந்து பல படங்களில் பயணித்ததையும், ராம மூர்த்தியிடம் பிரதானமாக ஒரு படத்தில்கூட முழுமையாகப் பயணிக்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான படங்களை, பாடல்களைத் தன்னந்தனியராக விஸ்வநாதன் இசையமைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது படங்களைத் தவிர மற்ற படங்களில் அவரும் குறிப்பிட்ட ஒரு பாடல், அல்லது இரண்டு பாடல்கள்தாம் ஹிட் என்ற அளவுக்குத் தம்மைச் சுருக்கிக்கொண்டார். இது மற்ற இசையமைப்பாளர்களைப் போன்றே அவரும் தம்மை வடிவமைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இருவரும் இணைந்து இருக்கும்போது இந்த நிலைமை இல்லை.

ஒரு படம் என்றால் அதில் வரும் அத்தனைப் பாடல்களும் பிரசித்தம்.

அத்தனைப் பாடல்களையும் ரசிகர்கள் கூடிக்களித்துக் கொண்டாடி காலம்பூராவும் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தனர் இருவரும்.

இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனை முறியடிக்கக்கூடியது அல்ல என்பது மட்டுமல்ல, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று.

தமிழ் இசையின் பொற்காலம் அது என்றுதான் சொல்லவேண்டும். 

‘குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், கொடிமலர், ராமு, நாடோடி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்களின் ஒரு சில பாடல்களில் அல்லது பல பாடல்களில் விஸ்வநாதனுடையது மட்டுமல்ல, ராமமூர்த்தியின் ‘டச்’சும் இருக்கிறது என்று சொல்லும் இசை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்ததால் நிறையப் படங்கள் ஏற்கெனவே புக் ஆகியிருக்கும். ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள், மூன்று பாடல்கள், இரு பாடல்கள், ஒரு பாடல் என்று ஏற்கெனவே இருவராலும் இசையமைக்கப்பட்டு முடிந்திருக்கும். திடீரென்று பிரிந்தவுடன் இசையமைக்க ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்துக்கொடுக்கும் பொறுப்பு எம்எஸ்வியிடம் வந்துவிட்டதால் ஏற்கெனவே இருவருமாகச் சேர்ந்து இசையமைத்த சில பாடல்களையும் சேர்த்தே தரவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்திருக்கும்.

இரட்டையரின் அந்த ‘மேஜிக் டச்’ விஸ்வநாதனின் பல படங்களிலும் பாடல்களிலும் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இருக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
அதேபோல் ராமமூர்த்தியின் கதையும் இதே தான். அப்படி அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ‘மேஜிக் டச்’ எது? என்ன? என்பதற்கான பதில் இதுவரையிலும் நமக்கு கிடைத்தபாடில்லை. அந்த இருவருக்குமே கூட அதற்கான விடைதெரிந்திருக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

"இருவரும் இருந்தபோது இருந்த அந்த டச் இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறதே அது ஏன்?" என்ற கேள்விக்கு எம்எஸ்வியும் சரி, ராமமூர்த்தியும் சரி ஒரே விதமான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “அது என்ன என்பது தெரியவில்லை. ஏதோ கடவுள் கொடுத்த வரம் போல் இருக்கிறது. அப்போது என்னமாதிரியான சிரத்தையுடன் உழைத்தோமோ அதே போன்ற சிரத்தையுடனும் அக்கறையுடனும்தான் இப்போதும் உழைக்கிறோம். அந்த டச் ஏன் வரவில்லை என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லை” என்பதுபோல்தான் சற்றேறக்குறைய இருவருமே கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.

மன்னர்களும் சரி, தனியே விஸ்வநாதனும் சரி ஒரு பாடலுக்கு அடிப்படையான மாறுதல்கள், புதுமைகள் எவ்வளவோ அவ்வளவையும் தங்கள் படைப்புக்களிலேயே செய்துமுடித்துவிட்டார்கள். அதற்குப் பின் வந்தவர்கள் செய்வதெல்லாம் அவர்கள் செய்ததிலிருந்து அங்கே ஒரு மாற்றம், இங்கே ஒரு மாற்றம் இந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை, அந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை என்பது மாதிரியான மாறுதல்கள்தாம். 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ ‘மவுண்ட்ரோட்டில்’ என்ன பெரிய மாறுதல்களைச் செய்துவிட முடியும்?

சுத்தமான கர்நாடக இசையில் மெட்டை மட்டும் உருவி, கமகங்கள் ஆலாபனைகள் வாய்ப்பாடுகளை நீக்கி எளிமைப்படுத்தி அத்தோடு லேசான அளவுக்கு மேல்நாட்டு இசைக் கலவையையும் கலந்து தந்ததுதான் மெல்லிசை மன்னர்களின் பாணி. பிற்பாடு காலத்தின் தேவைக்கேற்ப உலக இசையைத் தமிழில் புகுத்தவும் அவர்கள் தவறியதில்லை. எகிப்து இசையைப் ‘பட்டத்து ராணியின்’ மூலமும், பெர்சியன் இசையை ‘நினைத்தேன் வந்தாய்’ மூலமும், ஜப்பான் இசையை ‘பன்சாயி’ மூலமும், லத்தீன் இசையை ‘யார் அந்த நிலவு’ மூலமும், ரஷ்ய இசையை ‘கண்போன போக்கிலே’ மூலமும், மெக்சிகன் இசையை ‘முத்தமிடும் நேரமெப்போ’ மூலமும் எம்எஸ்வி புகுத்தினார் என்று சொல்வார்கள்.

இவையில்லாமல் பொம்மைகளை வைத்துக்கொண்டு ‘மகராஜா ஒரு மகராணி’, ‘ஜூனியர் ஜூனியர்’ பாடல்களிலும், கிளியை வைத்துக்கொண்டு ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே’ பாடலும் மிமிக்ரி கலைஞர் ஒருவரை வைத்துக்கொண்டு அவள்ஒரு தொடர்கதை படத்திலும் அவர் கட்டமைத்த பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது. (இப்படியொரு பாடலை மேஜர் சந்திரகாந்த் படத்தில் முயன்றவர் வி.குமார். ‘ஒருநாள் யாரோ’ பாடலை அற்புதமாகப் போட்டிருப்பார் அவர்) விசில் அடிப்பதைப் பின்னணியாக வைத்து மட்டும் ஒரு இருபது பாடல்களையாவது அமைத்திருப்பார் விஸ்வநாதன். விசில் மட்டுமல்லாமல் கூடவே ரயில் புறப்படுவது, வேகமாக ஓடுவது, நிற்பது என்ற சத்தங்களில் ‘பச்சைவிளக்கு’ படத்தில் ‘கேள்விபிறந்தது அன்று’ பாடலை அமைத்திருப்பார் அவர். பின்னாட்களில் கே.பாலச்சந்தர் படங்களில் இம்மாதிரியான ஏகப்பட்ட புதுமைகளை நிகழ்த்தியிருப்பார் எம்எஸ்வி.

இன்றைய படங்களின் பாடல்களுக்கு வழியமைத்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடிகளும் இவர்கள்தாம். முதன்முதலாக இந்தியாவிலேயே மேடை நிகழ்ச்சியாக திரைஇசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர்களும் இவர்கள்தாம். இதற்குப் பின்னால்தான் பம்பாயில்கூட இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள்.

இவர்கள் இணைந்திருந்தபோதும் சரி, விஸ்வநாதன் தனியே இயங்கியபோதும் சரி இனிமைக்கு அடுத்தபடி இவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது குரல்களுக்கு. ஆரம்பத்தில் டிஎம்எஸ், சுசீலா, பிபிஸ்ரீனிவாஸ், எல்ஆர்ஈஸ்வரி, சீர்காழி ஆகியோரின் குரல்களை வைத்து விந்தை புரிந்த விஸ்வநாதன் அடுத்து ஏசுதாஸ், எஸ்பிபாலசுப்ரமணியம், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வைத்து விந்தை புரிய ஆரம்பித்தார். ஒரு ஆண்குரல் ஒரு பெண்குரல் என்பதோடு இவரது பரிசோதனை முயற்சிகள் முற்றுப்பெற்றவை அல்ல. மாறாக இரண்டு ஆண்குரல்கள், அல்லது மூன்று நான்கு ஆண் குரல்கள், இரு பெண் குரல்கள் என்று வைத்துக்கொண்டு இவர்கள் புரிந்த ஜாலங்கள் எல்லாம் வேறு எந்த இசையமைப்பாளர்களாலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. 

டிஎம்எஸ்- சீர்காழி, டிஎம்எஸ்-பிபிஎஸ் என்று ஆண்களை வைத்துக்கொண்டு பத்துப் பாடல்களுக்கு மேல் இவர்கள் போட்டிருக்கிறார்கள். எல்லாமே ஹிட்டடித்தவை என்பதுதான் இங்கே முக்கியம். படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை’ என்று காலத்தால் அழிய முடியாத ஒரு பாடல். டிஎம்எஸ்ஸும் பிபிஎஸ்ஸும் பாடியிருப்பார்கள். இதுபோன்ற ஒரு இனிமையான பாடலை இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளரும் இரு ஆண்குரல்களை வைத்து யோசித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். 

இரண்டு ஆண்குரல்கள்….. அதுவும் சிவாஜியையும் பாலாஜியையும் நீச்சல் குளத்தில் குளிக்கவைத்துப் பாட்டுப்பாடவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்களை நீச்சல்குளத்தில் குளிக்கவைத்துப் படமாக்கும் தைரியம் பீம்சிங்கைத்தவிர உலகில் யாருக்குமே வராது- என்று விமரிசனம் எழுதியது குமுதம். 

கர்ணன் படத்தில் ஆயிரம் கரங்கள் நீட்டி’ பாடலை டிஎம்எஸ், சீர்காழி, திருச்சிலோகநாதன், பிபிஎஸ் ஆகிய நான்குபேரை வைத்துப் பாடவைத்திருந்தார்கள்.
(விஸ்வநாதனுக்குப் பின் வந்த சில இசையமைப்பாளர்கள் இரண்டு ஆண்குரல்களை வைத்து சில பாடல்களை முயன்றிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். ராகமே இல்லாமல் வசனம் ஒப்பிப்பதுபோல் ரொம்பவும் பரிதாபமாக இருக்கும் அவை.)

                                         

இதுஒரு புறமிருக்க பி.சுசீலாவையும், எல்ஆர்ஈஸ்வரியையும் இணைத்து இரு பெண் குரல்களைப் பாடவைத்து இவர்கள் செய்திருக்கும் இசை ஜாலத்திற்கு இணையே கிடையாது. இருவருக்கும் ஒரு போட்டியே ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இருக்கும். இந்தவகைப் பாடல்களின் எண்ணிக்கையும் பதினைந்து இருபதைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.

மன்னர்கள்  வாத்தியக்கருவிகளைக் காட்டிலும் குரல்களைத்தாம் முக்கியமென்று நினைத்தனர். அதனால்தான் பாடும் குரல்களோடு இயைந்துவரக்கூடிய ராகத்திற்குத் துணையாக ஹம்மிங் என்ற குரல்களையே பல பாடல்களில் பயன்படுத்தினர். எம்எஸ்வியே நிறைய ஹம்மிங் தந்திருக்கிறார். அவருக்கடுத்து சீர்காழி, சுசீலா, ஜானகி எல்லாருமே ஹம்மிங் தந்திருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திய இன்னொரு ஹம்மிங்கிற்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவருடைய பல பாடல்களுக்கான ஹம்மிங் விசேஷமானது. இவர்கள் அளவுக்கு அல்லது எம்எஸ்வி அளவுக்கு இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பது தெரிந்த எந்த இசையமைப்பாளர்களும் இந்த ஏரியாவுக்குள் எல்லாம் நுழையவே இல்லை என்பதையும் நுழையவே பயந்து தவிர்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எம்எஸ்வி முக்கியத்துவம் கொடுத்த இன்னொன்று விசில். விசிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாதமான பல பாடல்களைப் போட்டிருக்கிறார் அவர். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், கேள்விபிறந்தது அன்று.......... என்று பல பாடல்கள். வாசிப்புக் குழுவினில் இருந்து எம்எஸ் ராஜூ என்ற ஒருவர் மிகப் பிரமாதமாக விசிலடிப்பார் என்பதை அறிந்து அவரை உபயோகித்துப் பல படங்களில் விசில் பாடல்கள் போட்டார் என்று சொல்வார்கள். 

நல்ல வேளையாய் இதிலும் கைவைக்கும் 'தைரியம்' எந்த இசையமைப்பாளருக்கும் இருந்ததில்லை.

எம்எஸ்வி பாடுவதைப் பற்றியும் நடிப்பதைப் பற்றியும் டிவி நிகழ்ச்சிகளில் எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். அவர்கள் சொல்லாத ஒரு தகவல்……. அந்தக் காலத்திலிருந்து எம்ஜிஆர், சிவாஜி. ஸ்ரீதர் மற்றும் சில படங்களில் பியானோ வாசிக்கும் குளோஸப் விரல்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான். பாசமலர் படத்தின் ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ பாடலில் சிவாஜிக்கான விரல்களாகவும், வெண்ணிற ஆடை படத்தின் ‘என்ன என்ன வார்த்தைகளோ’ பாடலில் ஸ்ரீகாந்தின் விரல்களாகவும் காட்டப்படும் மந்திர விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான்.

எம்எஸ்வி மறைந்த சோகம் ஒருபுறமிருக்க, அச்சு ஊடகங்களும் சரி, மின் ஊடகங்களும் சரி அவருடைய மறைவுக்கு அளித்த முக்கியத்துவமும், அவரைப் பற்றி மக்களுக்கு என்னென்ன சேரவேண்டுமோ, எப்படி எப்படிச் சேரவேண்டுமோ அத்தனையையும் சரிவர வகைப்படுத்தி, முறைப்படுத்தி, தோண்டித் துருவியெடுத்து மக்கள் முன் வைத்த விதமும் சரி, அந்தப் பெருங்கலைஞர் நினைவுகூறப்பட்ட விதமும் சரி பாராட்டுக்குரியவை.

கடைக்கோடித் தமிழனுக்கும் அவர் யார் அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் ஐயம் திரிபற சொல்லப்பட்டுவிட்டன. 

இனிமேல் இணைய பிஸ்கோத்துகளின் தகிடுதத்தங்கள் எல்லாம் எங்கேயும் எடுபடப்போவதில்லை. இவர்கள் பாட்டுக்கு இணையச்சுவர்களைப் பிறாண்டிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.

எல்ஆர்ஈஸ்வரி மனதில் பட்டதை அங்கேயே அப்படியே கொட்டிவிடும் சுபாவம், நாசுக்கெல்லாம் தெரியாது. எம்எஸ்வியின் இறுதி ஊர்வல நேரலையின்போது புதிய தலைமுறை டிவியில் எம்எஸ்வி போட்ட ஒரு வித்தியாசமான பாடலைச் சொல்லும்போது ‘இளையராஜாவும் அப்படிப் பின்னால் போட்டார்’ என்று மற்றவர் சொல்லப்போக “எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது.

ஜெயா டிவியில் சுதாங்கன் நடத்திய ‘என்றும் நம்முடன் எம்எஸ்வி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோபாலா ஒரு கேள்வி எழுப்பினார். 


“எல்லாம் சரி; எம்எஸ்வி வாசித்த ஆர்மோனியம் இப்போது எங்கிருக்கிறது? அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்? அதனை எங்கே வைக்கப்போகிறார்கள்? அதனை உபயோகிக்கும் அருகதையோ தகுதியோ இங்கே யாருக்குமே இல்லையே, அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்?” என்றார்.


மில்லியன் டாலர் கேள்வி இது.