Monday, February 26, 2018

ஸ்ரீதேவி நினைவுகள்.........






கர்நாடக மாநிலம் சிக்மகளூருக்கு அது இரண்டாவது பயணம். முதலில் பாரதப் பிரதமராயிருந்த இந்திரா காந்தி சிக்மகளூரு இடைத்தேர்தலில் நின்றபோது குமுதம் பத்திரிகைக்காக பால்யூவுடன் போயிருந்தேன். இப்போது இரண்டாவது முறையாக சிக்மகளூர். இந்தமுறை சிவகுமார் நடித்த ‘கவிக்குயில் படம் சிக்மகளூருவில் வெளிப்புறப் படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போகவேண்டியிருந்தது. சிக்மகளூருவுக்கு சிவகுமாருடன் பயணம்.

அது டிசம்பரிலிருந்து பிப்ரவரிக்குள் இருக்கும் மாதமாக இருந்திருக்க வேண்டும். காரணம் மிகவும் கடுமையான குளிரும் பனியும் சேர்ந்த காலமாக இருந்தது. தவிர சிக்மகளூர் என்பது மலை வாசஸ்தலம் கொண்ட இடம்.

விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுவிடுவார் சிவகுமார். எம்மாதிரி குளிர் பனி இருந்தாலும் அந்த நேரத்தில் எழுந்துகொண்டால்தான் காலையில் சரியான சமயத்திற்குக் கிளம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

அவரும் அதற்கேற்றமாதிரி எழுந்து குளித்து முடித்து யோகாவெல்லாம் செய்து முடித்துவிட்டு மேக்கப் போட உட்கார்ந்துவிடுவார். அன்றைக்கும் அப்படித்தான் யோகா செய்துமுடித்து ஷேவிங் செய்ய உட்கார்ந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.

போய்க் கதவைத் திறந்தால்  சிரித்துக்கொண்டே நின்றிருந்தவர் ஸ்ரீதேவி.

“குட்மார்னிங்.... சிவாசார் எழுந்துட்டாங்களா?’ என்றார்.

“எழுந்துட்டேம்மா. வா......ஷேவிங் செய்துட்டிருக்கேன்”.... என்றார் சிவகுமார்.

அறைக்குள் வந்தவர் தாமே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டார்.
அவ்வளவு காலையில் அடுத்தவர் அறைக்கு வந்துவிட்டு அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது என்ற சங்கடம் ஸ்ரீதேவிக்கு இருந்திருக்க வேண்டும். “சார்... உங்களுக்கு டிஸ்டர்ப்டா இருக்கோ? இத்தனைக் காலையில் வந்துட்டேனே....நீங்கள்ளாம் இன்னமும் ரெடியாகிட்டு இருக்கீங்களே? என்றார்.

‘அதெல்லாம் பரவாயில்லை. உட்கார். நாங்களென்ன ஆம்பிளைங்கதானே? ஒரு சங்கடமும் இல்லை. ராத்திரி நல்லா தூங்கினாயா?

“தூக்கமெல்லாம் நல்லா வந்தது சார். ரூமுல அம்மாவோட ரொம்பவும் போரடிச்சது. தவிர நான் குளிச்சு முடிச்சுட்டேன். மேக்கப்பும் போட்டு ரெடியாயிட்டேன். அம்மா ரெடியாகணும். குளிக்கப்போயிட்டாங்க. ரூம் போரடிக்குது. அதான் அம்மாட்ட சொல்லிட்டு இங்க வந்துட்டேன். இங்க உங்களோட இருந்தாலாவது நீங்க பேசறதைக் கேட்டுட்டிருக்கலாம். ஏதாவது அட்வைஸ் செய்தீங்கன்னாலும் நல்லாருக்கும். அதான் வந்துட்டேன் என்றார்.

“சரி சேது... தேவிக்கும் சேர்த்து இங்கேயே டிபன் கொண்டுவர ஏற்பாடு பண்ணிடு என்று அங்கிருந்த சிவகுமாரின் மேக்கப் மேனிடம் சொல்வதற்குள் முந்திக்கொண்டு சொன்னார் ஸ்ரீதேவி. “சார் எனக்கும் சேர்த்து இந்த ரூமுக்கே டிபனை அனுப்பிருங்கன்னு நான் ஏற்கெனவே யூனிட்டிடம் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். அதனால் எனக்கும் சேர்த்து இங்கேயே டிபனும் வந்துரும் என்று சிரித்தார் ஸ்ரீதேவி.

“ஓ...பக்கா பிளானோடதான் வந்திருக்கியோ? என்று கேட்டுச் சிரித்த சிவகுமார் பொதுவாகப் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்.

அது ஸ்ரீதேவி கதாநாயகியாக உருவாகிக்கொண்டிருந்த சமயம். பாலச்சந்தரின் படத்தின் மூலம் பயங்கரமான புகழ் வெளிச்சம் அப்போதே கிடைத்திருந்தது. கவிக்குயில் என்பது ஸ்ரீதேவி கதாநாயகியாக ஒப்பந்தமான மூன்றாவதோ நான்காவதோ படம். (இயக்குநர்களான தேவராஜ் மோகன் இருவரும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அன்னக்கிளிக்கு அடுத்து ஏறக்குறைய முப்பது படங்களுக்கான ஒப்பந்தம் அவர்களைத் தேடி வந்திருந்தது. ‘ரொம்பவும் பார்த்துப் பார்த்துத்தான் ஒப்புக்கொள்வோம் என்ற அதிகபட்ச நம்பிக்கையிலேயே மார்க்கெட்டை கோட்டை விட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அன்னக்கிளி படம் ஹிட்டானதால் பறவைகள் பெயரைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துவிட்டு அழகியல் கலந்த சென்டிமெண்ட்டை அங்கங்கே தூவி இரண்டொரு பாடல்களை ‘தேவராஜ் ரசனைக்குப் பிடித்தமாதிரி தந்துவிட்டாலேயே படம் சூப்பர் ஹிட்டடித்துவிடும் என்பது இயக்குநர் தேவராஜின் அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே அன்னக்கிளிக்கடுத்து கவிக்குயில் சிட்டுக்குருவி என்கிற மாதிரியே படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.) சரி, நாம் கவிக்குயில் பற்றிப் பேசுவோம்.

வெளிப்புறப் படப்பிடிப்புகள் பற்றி, அங்கே சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றி, காலையில் எழுந்து தயாராவது பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தார் சிவகுமார். அத்தனையையும் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் ஸ்ரீதேவி. 

டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். “சார் கீழே போங்க. அம்மா ரெடியாயிருப்பாங்க. நான் அவங்களைப் போய்க் கூட்டிவந்துர்றேன் என்று அவருடைய அறைக்குப் போனார் ஸ்ரீதேவி.

நாங்கள் கீழே வர இயக்குநர்கள் தேவராஜ் மோகன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் ஆகியோர் கிளம்பிய கார் புறப்பட்டுக்கொண்டிருந்தது. யூனிட் வாகனத்தில் ஓடிச்சென்று சிவகுமாரின் மேக்கப் மேன் சேது ஏறிக்கொண்டார்.

எங்களுக்கான அம்பாசிடர் கார் தயாராக இருந்தது.


இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இப்போது போகப்போவது ஸ்ரீதேவியுடனான இரண்டாவது கார்ப்பயணம். நேற்றைக்கே முதல் பயணம் முடிந்துவிட்டது. நேற்று பெங்களூரிலிருந்து வந்து இறங்கி பகல் சாப்பாடு முடிந்தவுடன் அறைக்கு வந்த இயக்குநர் தேவராஜ் “சிவா இன்றைக்கு மதியம்போய் ஒரு அரை நாள் ஷூட்டிங் முடிச்சிருவோமா? ஸ்ரீதேவிக்கான பாட்டு லொக்கேஷன் ஒண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீயும் இரண்டொரு ஷாட்ல வரணும். கிளைமேட் நல்லாருக்கு. பாதிப் பாடல் முடிச்சிட்டு வந்துருவோமா? என்று கேட்டார்.

வெளிப்புறப் படப்பிடிப்பு போகும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் எவ்வளவு விரைவாக படப்பிடிப்பு முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்துவிட எண்ணுவார்கள். அதனால் எந்த நேரம் கூப்பிட்டாலும் உடனடியாகப் போய் முடித்துவிட்டு வர ஆர்வமாக இருப்பார்கள். சிவகுமார் ‘டெடிகேட்டட் ரகம். அதனால் உடனடியாய் தயாராக இருந்தார்.

“தேவிகிட்ட சொல்லியாச்சா? அந்தப் பொண்ணு ரெடியா? என்றார்.

“ஓ, சொல்லிட்டேன். பத்து நிமிஷத்துல தயாராயிர்றேன் சார்னு சொல்லிருச்சி. தயாராயிருக்கும். தேவியைக் கூப்பிட்டுட்டு நீங்க வந்துருங்க. நான் முன்னாடி போறேன் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார்.

இயக்குநர் கிளம்பிச் சென்றவுடன் நாங்களும் கிளம்பத் தயாரானோம். கீழே அம்பாசிடர் காரும் ஸ்ரீதேவியும் அவர் அம்மாவும் இருந்தார்கள்.

இங்கேதான் ஒரு சின்னப் பிரச்சினை.

பட யூனிட் மொத்தமும் போய்விட்டிருந்தது. இன்னமும் புறப்பட வேண்டியவர்கள் கதாநாயகனும் கதாநாயகியும்தான். அவர்கள் இருவரும் இதோ தயாராக நிற்கிறார்கள்.

சிவகுமாரும் மேக்கப்மேன் சேதுவும் ஒரு பக்கம். அந்தப் பக்கம் ஸ்ரீதேவியும் அவரது தாயாரும். இவர்கள் நான்கு பேர். இப்போது நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்.

இருப்பது ஒரே ஒரு கார்தான்.

நாங்களே ஆறுபேர். டிரைவரைச் சேர்த்து ஏழுபேர் ஆகிறது. என்ன செய்யலாம்?

நான் சிவகுமாரிடம் சொன்னேன். “சார் நீங்க கிளம்புங்க. நாங்க ரூம்ல இருக்கோம். இல்லைன்னா ஊரைச் சுத்திப்பார்த்துகிட்டு இருக்கோம். நீங்க ஷூட்டிங் முடிச்சு வந்துருங்க

சிவகுமார் இன்னொரு யோசனை சொன்னார். “சேதுவும் கிருஷ்ணமூர்த்தியும் முன்பக்கம் டிரைவரோட உட்கார்ந்துக்கட்டும். நாம பின்னாடி நாலுபேர் அட்ஜஸ்ட் செய்துகிட்டுப் போயிருவோம்

இந்த இடத்தில்தான் நிறையக் கதாநாயகிகள் ‘எனக்குத் தனியாகக் கார் வேண்டும். அட்ஜஸ்டெல்லாம் பண்ணமாட்டேன் என்றெல்லாம் கேட்டு அடம் பிடிப்பார்கள். இதுபற்றிய நிறையக் கதைகள் திரைஉலகில் உள்ளன.

ஆனால் ஸ்ரீதேவியுடைய அம்மா சொன்னார்கள் பாருங்கள் ஒரு பாயிண்ட்..... எல்லாரும் அப்படியே அசந்து போனோம்.

சிவகுமாரைப் பார்த்து அவர் சொன்னார். “உங்களுக்கு ஒரு கவலையும் வேணாம். எனக்குக் கொஞ்சுண்டு இடம் கொடுத்தால் போதும். நான் உட்கார்ந்துக்குவேன். பாப்பா (ஸ்ரீதேவி) என் மடியிலதான் உட்கார்ந்துக்கும். அதுக்கு தனி சீட்டெல்லாம் கேட்காது.

பின்னர் அதே போல்தான் எங்கள் பயணம் அமைந்தது.

இறுக்கி அடித்துக்கொண்டு நாங்கள் அமர்ந்துவர அதேபோல ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டுதான் ஸ்ரீதேவியும் அவரது அம்மாவும் பயணித்தார்கள்.

மறுநாள் விஷயமும் இதேபோல்தான்.

ஸ்ரீதேவி அவரது அம்மாவின் மடியில் அமர்ந்துதான் பயணித்தார்.

முதல்நாள் ஒரு பாடல்......குயிலே கவிக்குயிலே யார்வரவைத் தேடுகிறாய்... மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா? என்ற பாடலை சுற்றிலும் மலைகள் இருக்கும் ஒரு ரம்மியமான இடத்தில் படமெடுத்தார்கள். சிவகுமாரையும் சேர்த்து எடுத்த காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன். முழங்கால் தெரியும் பாவாடை தாவணியுடன் ஸ்ரீதேவியை அங்கேயும் இங்கேயும் ஓடவிட்டு ‘இளமை சதிராடும் தோட்டம் காலம் கனியானதே என்ற அடியை முழுக்க முழுக்க அன்றைக்குப் படமாக்கினார்கள்.

மறுநாள் சிவகுமார் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே பாடும் பாடல். ஸ்ரீதேவி ஓடிவருவதுபோல் காட்சி. பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கும் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலின் படப்பிடிப்பு அந்தப் பகுதியில் நடைபெற்றது. பாலமுரளி  பாடியிருக்கும் பாடல் என்ற விவரமும், ரீதி கௌளை ராகத்தில் அமைந்திருக்கும் பாடல் என்ற தகவலும் அங்கே கசியவிடப் பட்டிருந்தன. பாதிப் படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரீதேவியை அனுப்பி ராதை வேடம் அணிந்துகொண்டு வரச்சொன்னார் இயக்குநர். அந்த வேடத்தில் அதே பாடலுக்காக நான்கைந்து காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஏறக்குறைய இந்த நாட்களில்தான் எனக்கு நடிகர் கமலஹாசனின் அறிமுகமும் ஏற்பட்டிருந்தது. பெங்களூர் மோதி மஹால் ஓட்டலில் முதன்முதலாக கமலைச் சந்தித்தேன். குடிசை படத்தின் இயக்குநர் ஜெயபாரதி தினமணி கதிரில் துணை ஆசிரியராக இருந்தார். பரீட்சார்த்த முறையில் தமிழில் படம் எடுக்கவேண்டும் அதுவும் முதல் படமாக குடிசை படத்தை எடுக்கவேண்டுமென்று அவருக்குத் தீராத ஆசை. அதற்காக என்னென்னவோ வழிகளில் முயன்றார். முதலாவதாக ஒரு குழுவை ஏற்படுத்தினார். அதில் மனோபாலா, ராபர்ட் ராஜசேகரன், பாலகுமாரன், மாலன் தொடங்கி நான்வரை இருந்தோம்.

படமெடுப்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை பெங்களூரிலிருந்து செய்வது என்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது.

அப்போது இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக கமலும் இணைந்திருந்தார்.

பெங்களூர் வரும் கமலைச் சந்தித்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார் ஜெயபாரதி. கமலிடமும் என்னைப் பற்றிச் சொல்லி அனுப்பியிருந்தார்.

மோதி மகாலில் கமலைச் சந்தித்து நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதிலும் கமல் பேரார்வத்துடன் இருந்த நேரம் அது.

நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடிப்பது குறித்தும் பேசினார் கமல். ரஜினியுடன் சேர்ந்து அவர் நடிக்கும் படத்தின் கதையைத் தமக்குத் தெரிந்த முறையில் சொன்னார். அந்தப் படப்பிடிப்பிற்காகத்தான் வந்திருப்பதாகவும் சிவசமுத்திரத்தில் ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னைப் பாடலின் படப்பிடிப்பு நடைபெறப்போவதாகவும் சொன்னார்.(கடைசியில் அந்தப் பாடல் ‘தொட்டத ஆலமரா என்றழைக்கப்படும் பெரிய ஆலமரம் பகுதியில்தான் படமாகியது)

இங்கே இந்தத் தகவல் எதற்கு எனில், கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி இசையமைத்திருந்த அந்தப் பாடலை மிக அழகாகப் பாடிக்காட்டினார் கமல்.

அதாவது, ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னை நான்அடைந்த நேரம்- கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம் என்பது கண்ணதாசனின் பாடல்.

அதனை ‘தேவி உன்னைத் தேடிவந்து நான் அடைந்த நேரம் என்பதுபோல் தொடங்கி இங்கே பகிர்ந்துகொள்ள முடியாத அளவு வார்த்தைகளில் விரசம் வடித்து அதே மெட்டில் கமல் எழுதிய பாடலைச் சொன்னார்.

அந்தப் பாடலை ஸ்ரீதேவியிடம் பாடிக்காட்டியதாகவும் ஸ்ரீதேவி அந்தப் பாடலைக் கேட்டு எத்தனைச் சிரித்தார் என்பதையும் சொன்னார்.

கமல் மூலம் கிடைத்த ஸ்ரீதேவியின் அறிமுகம் இது. (கமலிடம் இம்மாதிரியான சேட்டைகள் நிறைய இருந்தன. பிரபலமான பாடல்களில் வேறுவரிகளைப் போட்டு சக நண்பர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் பாடிக்காட்டுவார் கமல். அவரிடம் இருக்கும் பல்வேறு திறமைகளில் இதுவும் ஒன்றாக கிளை பரப்பி ‘கமல் பெரிய புத்திசாலிப்பாஎன்ற பேச்சுப் பரவ அவருடைய இம்மாதிரியான செய்கையும் அந்த நாட்களில் சிறப்பான ஒன்றாக இருந்தது.)

அதன்பிறகு ஸ்ரீதேவியை நினைவு படுத்தியவர் பாரதிராஜா.

சுஹாசினியை வைத்து ‘கொத்த ஜீவிதலு என்ற தெலுங்குப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் பாரதி ராஜா. புதிய வார்ப்புகளின் தெலுங்குத் தழுவல் இது. இதற்காக சிவசமுத்திரம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் மனோபாலா அப்போது பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக இருந்தார். அவர் அழைப்பில் சிவசமுத்திரம் சென்றிருந்தேன். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் வழியில் அங்கங்கே காரை நிறுத்திவிடுவார் பாரதிராஜா.

அந்தப் பகுதியில்தான் பதினாறு வயதினிலே படத்தின் படப்பிடிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

அந்த நினைவுகளின் சுவடுகளை அவரால் மறக்க முடியவில்லை. ‘இங்க பாருங்க..... இங்கிருந்துதான் ஸ்ரீதேவி நடந்து வருவா.... இதோ இந்த இடத்துலதான் ஸ்ரீதேவியின் குடிசை இருந்தது. இதான் கமல் நடந்துவரும் ஒற்றையடிப் பாதை. இங்கிருந்துதான் ஸ்ரீதேவி பாடலைத் துவங்குவா..... என்று அந்தக் காலத்திற்கே மயிலுவுடன் நடந்து சென்று நினைவு கூர்வார் பாரதிராஜா. இது ஸ்ரீதேவியைப் பற்றிய மூன்றாவது நினைவு.

அடுத்ததாக ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் விதமாக வேறொரு தகவல் சொல்லப்பட்டது.

அது காதல் மன்னன் பாலுமகேந்திரா பற்றிய கதை.

அதாவது, ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பாலுமகேந்திரா நடிகை ஸ்ரீதேவியைத் தமது வலையில் வீழ்த்திவிடுவதற்குப் பெரிதும் முயன்றிருக்கிறார். அதற்கென அவர் கையெலெடுத்தது காமிராவை. படப்பிடிப்பின்போதும் சரி, படப்பிடிப்பு முடிந்துவிட்டபிறகும் சரி ஊட்டியில் பல இடங்களில் பல வெளிச்சங்களில், பல பின்னணிகளில், மலர்களுக்கிடையில், மரக்கிளைகளுக்கிடையில் என்று வைத்து அவர் பாட்டுக்கு தினசரி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருப்பாராம். மற்றவர்களை படப்பிடிப்பு முடிந்ததாகச் சொல்லி அறைகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஸ்ரீதேவியையும் இன்னும் சிலரையும் மட்டும் வைத்துக்கொண்டு இதனைச் செய்வாராம். “சார் போதும் விட்ருங்க சார் என்று ஸ்ரீதேவி கதறும்வரை இது நடைபெறுமாம்.

ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரு அழகிய பெண்ணைத் தாம் கருதும் கோணங்களில் எல்லாம் புகைப்படம் எடுப்பதில் என்ன தவறு? இது அழகியல் உணர்வல்லவா.....? என்று கேட்கத் தோன்றும்.

உண்மைதான்.

ஆனால், விஷயம் இதற்கு மேலேதான் இருக்கிறது. அப்படி எடுத்த புகைப்படங்களில் சிறந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதனைப் பெரிதாக்கிப் புகைப்படமாகப் போட்டு அதனை பிரேம் செய்துகொண்டு வரவேண்டும் என்று தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களை நெருக்குவாராம். அதுவும் அன்றைக்கு இரவே வரவேண்டுமாம்.

கூடவே ஒரு பெரிய பூச்செண்டையும் வாங்கி வரச் சொல்வாராம்.

மறுநாள் படப்பிடிப்பிற்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் தயாரிப்புத் தரப்பு இயக்குநர் சொல்வதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றும்.

எப்படி?

இன்றைய காலகட்டம் வேறு.

மூன்றாம் பிறை எடுக்கப்பட்ட காலகட்டம் வேறு அல்லவா?

அன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்போதே பிரிண்ட் போடும் அளவிற்குத் தொழில் நுட்பவசதிகள் ஊட்டியில் கிடையாது. அதனால் அந்த இரவிலேயே அல்லது மாலையிலேயே புறப்பட்டு கோயம்புத்தூருக்கு வரவேண்டும். குறிப்பிட்ட ஸ்டுடியோவில் வந்து பிரிண்ட் போட்டு பிரேமும் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்குள் எங்கோ சென்று பொக்கே வாங்கிக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் கொண்டுவந்து இயக்குநரிடம் தந்தால் அவர் காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனவரிகள் எழுதி அந்த நள்ளிரவு நேரத்திலேயே நடிகை ஸ்ரீதேவியை எழுப்பி அதனைப் பரிசாக வழங்குவாராம்.

இந்த  ஒரு செய்கையிலேயே அந்தப் பெண் மயங்கிவிடுவார் என்று காமிராக் கவிஞர் எதிர்பார்த்திருக்க ஸ்ரீதேவியோ இதனை ஒரு டார்ச்சராகத்தான் நினைத்தார் என்பதுதான் பரிதாபம்.

படம் அழகியலுக்காகவும் ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பிற்காகவும் பெரிதாகப் பேசப்பட்டது. வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து நடைபெற்றதுதான் சோகத்திலும் சோகம்.

சிறந்த நடிப்பிற்கான கதாநாயகி விருதுக்கு ஸ்ரீதேவி மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன.

மிகச்சிறப்பான நடிப்பிற்கு மூன்றாம் பிறை நிச்சயம் பரிசு பெறும் என்று எல்லா தரப்பினராலும் நம்பப்பட்டு, எழுதப்பட்டு, பேசப்பட்ட ஒரு விஷயம் அது.

இரண்டொரு நாட்கள் கழித்து முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

சிறந்த நடிப்பிற்கான பரிசு மூன்றாம் பிறை படத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஸ்ரீதேவிக்கு அல்ல மாறாக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான பரிசு என 
அறிவிக்கப்பட்டது.

கமலஹாசனை நிருபர்கள் இதுபற்றிக் கேட்டபோது “எனக்கு சிறந்த நடிகருக்கான பரிசுதான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர சிறந்த நடிகைக்கான பரிசு வழங்கப்படவில்லையே. ஆக, சிறந்த நடிகைக்கான பரிசை ஸ்ரீதேவியிடமிருந்து நான் எப்படித் தட்டிப் பறிக்க முடியும்? என்று சமத்காரமாக பதிலளித்தார்.

இதுபற்றிப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இப்படிச் சொன்னார். “இம்மாதிரியான அட்ஜஸ்ட்மெண்டுகள் எல்லாம் டெல்லியைப் பொறுத்தவரை சாதாரணம்தான். ஏன் ஒரு சமயம் சிந்துபைரவி படத்திலிருந்து சிறந்த நடிகருக்கான விருதுக்கு சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விஷயம் கேள்விப்பட்ட ஒரு முக்கியஸ்தர் உடனடியாக டெல்லிக்குப் போனார். சிந்துபைரவிக்கு ஒரு விருது என்றால் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட வேண்டுமே தவிர சிவகுமாருக்கு அல்ல என்று லாபி செய்தார். பின்னர் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சிவகுமாருக்கே தெரியுமா என்பது தெரியவில்லை என்றார் அந்தப் பத்திரிகையாள நண்பர்.

மூன்றாம் பிறை படத்திற்காகத் தமக்கு விருது இல்லை என்ற ஏமாற்றம் ஸ்ரீதேவியிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்று சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். “ஸ்ரீதேவியின் முகத்தில் ஒரு நிரந்தர சோகம் இருந்தது. இதனை நீங்கள் பல ஆண்டுகளாகவே பார்க்கலாம். அவர் திருமணமாகி பம்பாய்க்குப் புறப்படுவதற்கு முன்பேயே இந்த சோகம் இருந்தது.அதன் காரணம் ஒன்று அல்ல. நிறைய காரணங்கள் இருக்கலாம் என்பது அவரை அறிந்தவர்களின் கூற்று.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீதேவி பல விஷயங்களில் அதிர்ஷ்டம் வாய்ந்தவர். ஒரு கதாநாயகிக்கு எந்த அளவு புகழும் பெயரும் கிடைக்கவேண்டுமோ அதனைத் தாண்டி பன்மடங்கு பெயரும் புகழும் பெற்றவர் அவர்.

அதாவது 1976ம் வருடத்தை எடுத்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய மாற்றம் அந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது. உண்மையில் அதற்காக வித்திட்ட படங்களாக அன்னக்கிளியையும், ஒருதலை ராகத்தையும்தான் சொல்லவேண்டும். ஆனால் அன்னக்கிளி இளையராஜாவுக்கும், அதேபோல ஒருதலை ராகம் டி.ராஜேந்தருக்கும்தான் மிகப்பெரிய இடங்களைக் கொடுத்ததே தவிர, அதில் பணியாற்றிய மற்றவர்களுக்கெல்லாம் சாதாரண பலன்களையே தந்தது.

உதாரணத்திற்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான, மிக அரிய திறன் படைத்த சாவித்திரி, பத்மினி போன்றவர்களெல்லாம் ஒன்றுமே இல்லாமல் ஆக்கப்பட்டு, அல்லது அவர்களுடைய பெயர்கள் முழுவதுமாக மறக்கடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் பெயர் மட்டுமே ‘நடிகைகள் என்ற பட்டியலில் நிலைநிறுத்தப்பட்டது.

சிறந்த நடிகை யார்?

ஸ்ரீதேவி.

சிறந்த ஒளிப்பதிவாளர் யார்?

பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம்.

சிறந்த இசையமைப்பாளர் யார்?

சிறந்த இசையமைப்பாளரெல்லாம் கிடையாது. ஒரேயொரு இசையமைப்பாளர்தான். அவர் இளையராஜா. அவர்தான் இசைப்பிரம்மா, அவர்தான் இசைக்கடவுள், அவர்தான் ராகதேவன், அவர்தான் இசைஞானி

சிறந்த இயக்குநர் யார்?

சிறந்த இயக்குநர் இருவர். அவர்கள் பாரதிராஜா, மணிரத்தினம்.

பிரமாண்ட படங்களைத் தமிழில் எடுத்தவர் யார்?

சங்கர்.

-தமிழ்த்திரையுலகம் இந்த வரையறைக்குள் ‘யாராலோ கொண்டுவரப்பட்டுவிட்டது. அதன்பிறகு முளைத்த இணையம் இந்த வரையறையை அப்படியே ‘சுவீகரித்துக்கொண்டு பேசும் படக் காலத்திலிருந்து தமிழ்த்திரையுலகை இன்றுவரைக்கும் தங்கள் திறமையாலும், சாதனைகளாலும் யாரெல்லாம் வளர்த்தெடுத்து வந்தார்களோ அவர்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் இருட்டடிப்புச் செய்து மகிழ்ந்தது.

ஒன்றுமில்லை, உத்தம புத்திரன் படத்தில் கேஎஸ்கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே என்ற பாடலுக்கு ஒரு இடத்தில் மல்லாக்காக அப்படியே வளைந்து தரையைத் தொடுமளவுக்குப் போவார் பத்மினி. இம்மாதிரி வில்லைப்போல் வளைவது எல்லாம் இன்றைய நடிகைகளிடம் எதிர்பார்க்கமுடியாது. அதே பத்மினி சித்தி படத்தில் ‘பெண்ணாகப் பிறந்தவற்குஎன்ற கண்ணதாசன் பாடலில் காட்டும் முகபாவங்களும் உடல்மொழியும் வேறு ரகம்.

வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தி மாலாவுடன் ஆடும் போட்டி நடனம் ஆகட்டும், நாற்பதாவது வயதில் தில்லானா மோகனாம்பாளில் மோகனாம்பாளாக வடித்துக்காட்டியிருக்கும் பாத்திரப்படைப்புகளெல்லாம் கற்பனைக்கு எட்டாதவை.

சாவித்திரியின் ஒவ்வொரு படமும் நடிகைகளுக்கு ஒரு பாடம். நவராத்திரி, பாசமலர் போன்ற படங்களாகட்டும், பார்த்தால் பசிதீரும், கைகொடுத்த தெய்வம் போன்ற படங்களாகட்டும் சாவித்திரியின் நடிப்பிற்கு..... அந்தத் திறமைக்கெல்லாம் ஈடாக இன்னொருவரையெல்லாம் சொல்ல முடியாது.

ஆனால் இன்றைய சினிமா ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவன் நடிகையென்றால் ஸ்ரீதேவி மட்டுமே என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டான்.

அதேபோல தமிழ்திரை இசை என்பது எஸ்விவெங்கட்ராமன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமனாதன் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன்பிறகு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரால் இன்றைய நிலைமைவரைக்கும் வடிவமைக்கப்பட்டு பிறகு எம்எஸ்வியால் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு இன்றுவரைக்கும் வந்து நிற்கிறது.

ஆனால் இன்றைய திரைஇசை ரசிகனுக்கு இவர்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவனுக்குத் தெரிந்தது இளையராஜா, இளையராஜா, இளையராஜா மட்டுமே.

நல்லவேளை, ஏ.ஆர்.ரகுமான் வந்து இந்த ராஜா காய்ச்சலைக் கொஞ்சம் தடுத்து நிறுத்தினார். இல்லாவிட்டால் இது எங்கே போய் நின்றிருக்குமோ தெரியவில்லை.

ஜி.ராமனாதன் இசையமைத்த பாடல்களைக் கேட்டால் தெரியும்.... ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் பயணித்து மீண்டும் பழைய ராகத்துக்கே கொண்டுவந்து அந்தப் பாடலை முடிப்பார். ஐயா, குறைந்தது ஒரு இருநூறு பாடல்களிலாவது இந்த யுத்தியைக் கையாண்டிருப்பார் அவர்.

சில பாடல்களில் பயணிக்கும் ராகங்கள் நான்கைந்துகூட இருக்கும். இந்தவகைப் பாடல்களுக்கு ராகமாலிகா என்று பெயர்.

இந்த வகையிலான பாடல்களை ஒரு படத்திற்கு நான்கைந்தாவது போடுவார் ஜி.ராமனாதன். அந்தக் கால வழக்கமும் அப்படித்தான் இருந்தது.

அதையெல்லாம் ‘கவனிக்கஇன்றைய ரசிகனுக்குத் தெரியாது.

ஏதாவது ஒரு படத்தில் ஏதோ ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் இளையராஜா வந்து முடித்திருந்தாரென்றால் ஆயிற்று. தையா தக்கா என்று இவன் குதிக்கும் குதிப்புக்கு தாய்லாந்தே ஆடிப்போகணும். அந்தப் பாடலைத் தூக்கிக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கே போய்விடுகிறான். ‘இந்தப் பாட்டு மலயமாருதம் ராகத்தில் ஆரம்பிக்கிறது. பின்னர் அதனை அப்படியே பிலஹரிக்குக் கொண்டுபோகிறார் என்று இவனுக்குத் தெரிந்த புருடாவை இவன் அவிழ்க்கும்போதுதான் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது.

அடே மண்டூகங்களே.... இந்தச் செய்கையைத்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும் ‘தீவிரமான கர்நாடக சங்கீத மெட்டுக்கள் திரைப்படங்களுக்குத் தேவையில்லை. அவற்றின் அடிப்படை ராகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதிலிருந்து மெல்லிய தென்றல் தவழ்ந்துவருவதுபோல் மேலோட்டமான ராகங்களை மட்டும் தரலாம் என்று மாற்றியமைத்தார்கள் 

– அதனால்தான் அவர்கள் ‘மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன? (இந்தப் பணியில் இந்தி இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பங்குண்டு) அந்த ‘மெல்லிசையைத்தான் இளையராஜாவும் ஏனைய இசையமைப்பாளர்களும் இன்றைக்கும் திரையில் போட்டு வருகின்றனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன?

ஒரு ராகத்தை ஆரம்பித்து அதனை அப்படியே வேறொரு ராகத்திற்கு மாற்றும் முயற்சிகளை பல இசையமைப்பாளர்கள் அசால்டாகச் செய்திருக்கிறார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு இசைக்கோர்வையைக் கர்நாடக சங்கீதத்தில் ஆரம்பித்து ஆங்கில் நோட்ஸில் கொண்டுவந்து முடிப்பார் கேவிஎம்.

இதெல்லாம் ‘இசையமைப்பாளரின் கடமை என்பதாக அவதானித்த இன்றைய இசை ரசிகன், இளையராஜா இதையே சிந்துபைரவியில் கர்நாடக இசையில் ஆரம்பித்து நாட்டுப்புற மெட்டில் கொண்டுவந்து முடித்ததை இன்னமும் இசையுலகில் எவருமே முயன்று பார்க்காத, முடியவே முடியாத அசாத்திய திறமை என்பதாக மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்.

தமிழ்த்தாத்தா யார்?

உ.வே.சா.

தமிழின் நீதி நூல்கள் எவை?

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் மற்றும் எத்தனையோ தனிப்பாடல்கள்...
கம்பராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள், சங்கப்பாடல்கள்... இந்த வரிசையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.

இலக்கியம், இலக்கணம் குறித்தெல்லாம் சரியான பார்வைதான் இருக்கிறது.

சினிமா என்று வரும்போதுதான் எக்குத்தப்பான கருத்துக்கள் புகுந்துகொண்டு சிரமப்படுத்துகின்றன.
எப்படியோ தப்பித்தவறி சிவாஜியை மாபெரும் நடிகரென்றும், எம்ஜிஆரைத் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் கண்ணதாசனை மிகப்பெரும் பாடலாசிரியர் என்றும் ஒப்புக்கொண்டுவிட்டான். இங்கெல்லாம் வரிசை சரியாகத்தான் இருக்கிறது. வேறு விஷயங்கள் என்று வரும்போதுதான் குபீரென்று ஒரு பல்டி.

‘முந்தா நாளிலிருந்து மட்டுமே கணக்கைத் தொடங்க வேண்டிய ஏதோ ஒரு நிர்ப்பந்தம்.

போகட்டும்.....

இந்த வகையான புகழும் பெயரும் பணமும் செல்வாக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு நான்கைந்து பேருக்குக் கிட்டியிருக்கிறது.

அவர்களில் ஸ்ரீதேவி முதன்மையானவர்.