Sunday, March 23, 2014

ஜெயலலிதாவின் வாக்குவங்கி அப்படியே இருக்கிறதா?



ஜெயலலிதா இந்தத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சியின் துணையுமில்லாமல் போட்டியிட்டவுடன் பத்திரிகைகள் உட்பட எல்லாருக்குமே ‘என்ன இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்குவரும்?’ என்ற எண்ணம்தான் வந்தது. தவிர, சில இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவங்களும் இருப்பதால் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் அந்த ஃபார்முலாபடியே வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அம்மையாருக்கு இருக்கக்கூடும். பத்திரிகைகளும் அதேபோல நினைக்கவும் கூடும்.

இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்ற ஃபார்முலா என்பது இப்போதைய தலைமுறைக்கு ‘திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா’ என்று சொல்லப்பட்டு அதன் முழுப்பெருமையும் அழகிரிக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் இத்தகைய ஃபார்முலாக்களின் பிதாமகன் திருவாளர் எம்ஜிஆர் அவர்கள்தாம். அவர் ஆட்சியிலிருந்த காலத்தில் நடைபெற்ற மருங்காபுரி தேர்தல் தொடங்கி எல்லா இடைத்தேர்தல்களிலும் அவர் கையாண்டு வெற்றிகண்ட உத்திகளைத்தாம் அழகிரியும் கொஞ்சம் பிரமாண்ட அளவில் கையாண்டார்.

எம்ஜிஆர் தமது ஆட்சியின்போது எவர்சில்வர் ஸ்டீல் குடங்களையும், காமாட்சி விளக்குகளையும், மூக்குத்திகளையும் கொடுத்து அன்றைய எதிர்க்கட்சிகளையெல்லாம் திக்குமுக்காட வைத்தார்.
அப்போதிருந்த மக்கள் மனநிலை அதனைக் கொண்டாடவே செய்தது. ‘என்ன இருந்தாலும் வாத்தியார் வாத்தியார்தான். அவருடைய கொடையுள்ளம் யாருக்கு வரும்?’ என்றேதான் அந்த நாட்களில் இந்த நிகழ்வுகள் பார்க்கப்பட்டன. தேர்தல் ஆணையமும் இன்றைய அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருந்தபடியால் எம்ஜிஆருக்கு அன்றைக்குத் தாம் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு மிகவும் வசதியும் வாய்ப்புக்களும் இருந்தன. 

அழகிரி அதனைத்தான் தொடர்ந்தார்………………. கலைஞர் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் மக்களுக்கு பணம் மற்றும் கொடைகள் என்று ஏதோ தருகிறார் என்பதே சற்று வித்தியாசமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் ‘கலைஞருக்கு மக்களிடமிருந்து வாங்கித்தான் பழக்கமே தவிர கொடுத்துப் பழக்கமில்லை’ என்ற ஒரு சொல்லாடலும் எப்படியோ மக்கள் மத்தியில் இன்னமும் புழங்கித்தான் வருகிறது.

மதுரையில் காலூன்றிய அழகிரி இந்த சித்தாந்தத்தை அப்படியே உடைத்துப் போட்டார். அழகிரியை நம்பிப் போகிறவர்களை அழகிரி கைவிடமாட்டார் என்ற எண்ணத்தை மக்களிடம் அவர் எப்படியோ ஏற்படுத்தினார். அதனால்தான் ‘மதுரை என்பது எம்ஜிஆரின் கோட்டை’ என்று முப்பது வருடங்களாக வழங்கிவந்த பெயரைச் சில ஆண்டுகளிலேயே மாற்றிக்காட்டினார் அழகிரி. அதனைத் தொடர்ந்து வந்தவைதாம் திமுக ஆட்சியில் அழகிரியிடம் இடைத் தேர்தல்களை ஒப்படைத்து விட்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலைமை.

இந்த சித்தாந்தத்தை அப்படியே பற்றிக்கொண்ட ஜெயலலிதா தாமும் எதிர்கொண்ட இடைத்தேர்தல்களில் தமது அமைச்சர்களை வைத்துக்கொண்டு அழகிரி ஃபார்முலாவையே பயன்படுத்தினார். பத்திரிகைகளும் ஜெயலலிதாவின் எல்லாத் தவறுகளுக்கும் முட்டுக்கொடுப்பது போலவே ஏற்காட்டில் திருமங்கலம் ஃபார்முலாதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்றே எழுதின. இதன் பிதாமகர் எம்ஜிஆர்தான் என்பதை மறந்துபோயும் எந்தப் பத்திரிகையும் குறிப்பிட்டுவிடவில்லை.

சரி இப்போதைய அரசியல் விவாதங்களில் ‘ஓட்டுக்குப் பணம் வழங்கும் இந்தச் செயல்’ பற்றிக் குறிப்பிட விரும்புவர்கள் ‘ஏற்காடு ஃபார்முலா’ என்று குறிப்பிடுகிறார்களா என்றால் கிடையாது. அப்படிச் சொன்னால் ஜெவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே. அதனால் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்றே சொல்லித் தப்பித்துக் கொள்கின்றனர்.

திருமங்கலம் ஃபார்முலாவோ ஏற்காடு ஃபார்முலாவோ என்ன இழவாவது இருந்துவிட்டுப் போகட்டும்.

இந்த நாடாளுமன்றத்தில் இதையே முழுமையாகச் செய்து ஓட்டு வாங்கிவிடமுடியுமா என்றால் முடியாது. ஏனெனில் ஒரே ஒரு தொகுதியில் செய்து பார்க்கும் குயுக்தியை மொத்தத் தமிழ்நாட்டிற்கும் பரவலாகச் செய்வது சாத்தியமில்லை. அதனால் ஓட்டுவங்கியைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

ஓட்டு வங்கி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத்தாம் சொல்லும் விதத்தில் ஓட்டு வங்கி இருந்தது. காங்கிரஸின் ஓட்டு வங்கியை அந்தக் கட்சியும் அதன் தலைவர்களும் விடாப்பிடியாக ஒற்றுமையாக நின்று ஒழித்துக்கட்டி விட்டனர். பின்னர் அந்த ஓட்டுவங்கி அப்படி இப்படி அலைந்து பாமகவுக்குக் கொஞ்சம், அந்தக் கட்சிக்குக் கொஞ்சம் இந்தக் கட்சிக்குக் கொஞ்சம் என்பதாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

வந்தாரய்யா விஜயகாந்த்.

ஒரு கணிசமான ஓட்டுவங்கியை கறுப்பு எம்ஜிஆர், திமுக அதிமுகவுக்கு மாற்று, நான் வந்தால் உங்கள் வீட்டு வாசலுக்கே ரேஷன் பொருட்கள் என்று என்னென்னமோ சொல்லி ஓரளவு திரட்டி வைத்திருந்தார்.

சென்ற தேர்தலில் ஸ்டாலினுக்குக்கூடக் கிடைக்காத எதிர்க்கட்சித்தலைவர் பதவி லட்டு மாதிரி வந்து வாய்த்தது.

என்னவெல்லாம் செய்திருக்கவேண்டும் அந்த மனிதர்?

ஒன்றுமே இல்லை.

இதோ இப்போதைய தேர்தலில்கூட கூட்டணி அமைப்பதற்குள் குழம்பித் தவித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பதையே கொத்து பரோட்டாவாக்கிக் குதறிப்போட்டுவிட்டார். ஓரளவு படித்தவர்களின் நம்பிக்கையை எல்லாம் அடித்து நொறுக்கி சூரசம்ஹாரம் பண்ணிவிட்டுத்தான் கூட்டணியே போட்டார். அதனால் அவருடைய வாக்குவங்கி என்பது போன தேர்தலில் இருந்தபடியே இன்றைக்கும் இருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஜெயலலிதா எதற்கும் பயப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இது மட்டுமே மிகப்பெரிய தகுதி என்றும் சொல்வதற்கில்லை. ‘அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை’ என்பதையும் நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சென்ற தேர்தலில் கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், முஸ்லிம்களின் ஒரு பிரிவு, இவற்றோடு விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்துத்தான் அத்தனை ஓட்டுக்களை அவரால் பெற முடிந்தது.
இன்றைக்கு இந்தக் கட்சிகளெல்லாம் இல்லை.

முஸ்லிம்களின் ஓட்டுக்கள் இல்லை.

கம்யூனிஸ்டுகளின் ஓட்டுக்கள் இல்லை.

புதிய தமிழகம் கட்சியினரின் ஓட்டுக்கள் இல்லை.

மிகப்பெரிய பலமாக இருந்த தேமுதிகவின் ஓட்டுக்கள் இல்லை.

எத்தனைக் குறைச்சலாகப் போட்டாலும் இவையெல்லாம் சேர்ந்து ஒரு ஐந்து சதவிகிதம்தான் என்றாலும்

-அந்த ஐந்து சதவிகித ஓட்டுக்கள் இன்றைக்கு அதிமுகவிற்கு இல்லை.

அதுமட்டுமல்ல; சென்ற தேர்தலில் நேரடிக் கூட்டணி இல்லையென்ற போதிலும் பாஜக சிந்தனைக் கொண்ட அத்தனைப்பேரின் ஓட்டுக்களும் ஜெயலலிதாவிற்குக் கிடைத்தன.

இன்றைக்கு அந்த ஓட்டுக்களும் இல்லை.

புதிய வாக்காளர்கள் தொகை இந்தத் தேர்தலில் நிறைய இருக்கிறது.

இந்தப் புதிய வாக்காளர்களும் சரி,

சென்ற தேர்தலில் முதல்முறையாக ஓட்டுப்போட்ட புதிய வாக்காளர்களும் சரி தங்கள் வாக்குகளை அதிமுகவுக்குத்தாம் போட்டார்கள்.

இப்போது அதனை எதிர்பார்ப்பதற்கில்லை.

புதிய வாக்காளர்கள் நிறையப்பேர் மோடிக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள்.

அவர்களில் ஒரு கணிசமான சதவிகிதம்பேர் கேஜ்ரிவால் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
பாரதிய ஜனதா சித்தாந்தம் கொண்ட நிறையப்பேர் தங்கள் வாக்குகளை எப்போதுமே ஜெயலலிதாவுக்குத்தாம் போடுவார்கள்.

வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் குறிப்பாக பிராமணர்கள் தங்கள் வாக்குகளை என்றென்றும் ஜெயலலிதாவுக்குத்தான் போடுவார்கள்.

இப்போது அவர்களுக்கே அவர்களுக்கென்று கட்சியும் சின்னமும் ‘கேண்டிடேட்டும்’ பிரதம வேட்பாளரும் கிடைத்துவிட்ட பிறகு அவர்கள் எதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கப்போகிறார்கள்?
ஆக இத்தனைப் பேரின் வாக்குவங்கியைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஓட்டுவங்கி என்பது எத்தனை வலுவானது என்று தெரியவில்லை.

யார் எங்களிடமிருந்து பிரிந்து போனாலும் அதுபற்றிக் கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் ஓட்டுக்களே போதும் என்று அதிமுகவினர் மார் தட்டுவதற்கு அவர்களிடம் என்ன அறுபது சதவிகிதமும் எழுபது சதவிகிதமும் கொண்ட வாக்குவங்கியா இருக்கிறது?

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் சதவிகிதத்தின் வித்தியாசமே இரண்டோ மூன்றோதானே?

தவிர அதிமுகவின் வாக்குவங்கியை அதிகரிக்கச் செய்யுமாறு அவர் ஆட்சிக்கு வந்து எந்த செயற்கரிய செயலையும் செய்ததாகவும் தெரியவில்லை. புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவமனையாக்கியது, அண்ணா நூலகத்தை அகற்ற நினைத்தது, வந்ததும் வராததுமாக பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பாடத்திட்டம் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு வீட்டுக்கு விரட்டியது, இரண்டு மணி நேரமிருந்த மின்வெட்டை பதினெட்டு மணி நேரமாக்கியது என்று தொடர்ந்து செய்த அனர்த்தங்களில் நம்பி வாக்களித்த நடுத்தட்டு வர்க்கத்தினரின் வாக்குகளிலும் கணிசமான பகுதியை அல்லவா இழந்திருப்பார்?

அசட்டுத் துணிச்சல் மட்டுமே பிரதமர் நாற்காலியில் ஒருவரைத் தூக்கிப்போய் 

உட்காரவைத்துவிடுமா என்ன!

Wednesday, March 19, 2014

ஜெயலலிதா என்ன செய்திருக்கவேண்டும்?

                       ஜெயலலிதா மத்திய அமைச்சரவைப் பட்டியலை அறிவிக்காததுதான் பாக்கி.
மற்ற அனைத்தையும் செய்துமுடித்துவிட்டார்.

தேர்தல் அறிக்கைகள், தேர்தல் பிரகடனங்கள், தேர்தல் பேச்சு எல்லாமே பிரதமர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் செய்வதுபோலவே செய்துகொண்டு வருகிறார். அவரது ஊழியர்கள் சென்னை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ‘பாரதப் பிரதமர் புரட்சித்தலைவி மாண்புமிகு முதல்வர்’ என்பதாகக் கலந்துகட்டி ஒரு வாசகத்தை எழுதி அத்துடன் அவருடைய பிரமாண்ட பிரமாண்ட முகங்களை வரைந்து தமிழ்நாடு முழுவதும் சுவர் ஓவியங்களாகவும் சுவரொட்டிகளாகவும், பிளெக்ஸ் பேனர்களாகவும் பரப்பி அதகளம் செய்துவருகின்றனர்.

மக்களை ஏமாற்றும் கம்பெனிகள் ஆயிரத்தெட்டு கவர்ச்சி வாசகங்களுடன் புதிய புதிய திட்டங்களை மக்கள் முன்பு வைக்கும். எங்கோ ஒரு ஓரத்தில் கண்ணுக்குத் தெரியாத பொடி எழுத்துக்களில் ‘யாவும் வரையறை செய்யப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது’ என்ற வாசகம் எங்காவது ஒளிந்துகொண்டிருக்கும். அம்மாதிரிக்கூட எந்த இடத்திலும் சின்னஞ்சிறியதாக ‘வருங்கால’ என்று ஒரு வார்த்தைக்கூட இல்லை. எடுத்த எடுப்பிலேயே ‘பிரதமர்’………………………… அவ்வளவுதான்!

‘தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சி  இப்படியெல்லாம் செய்வதற்கு உரிமை இல்லையா, அவர்கள் செய்யக்கூடாதா?’ என்று கேட்டால் –

‘இதுவும் செய்யலாம் இன்னமும் செய்யலாம், எதற்கும் ஒரு அளவு உண்டு  அந்த அளவுபடி செய்யலாம்’ என்பதுதான் பதில்.

‘எதுபற்றியும் கவலைப்படாமல் என்னுடைய பாணி இதுதான் நான் அப்படித்தான் பண்ணுவேன்’ என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தால் –

அவற்றுக்கான விமரிசனங்களையும், அவற்றுக்கான விளைவுகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.

வேறு வழியில்லை.

இத்தனைச் செய்தவர்கள் இன்னமும்கூட ஒன்று செய்யலாம்.

பேசாமல் ஓ.பன்னீர்செல்வத்தையோ பண்ருட்டி ராமச்சந்திரனையோ அழைத்து ‘எனக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவை’ என்றுசொல்லிப் பதவி கூட ஏற்றுக்கொண்டு விடலாம்.
எல்லாமே விருப்பம் போல் சரிவர நடந்துமுடிந்துவிட்டால் பிரச்சினை இல்லை. 

ஆசைப்பட்டதுபோல் எதுவும் நடைபெறவில்லையெனில் எல்லாமே காமெடிக் காட்சிகளாகப் போய்விடக்கூடிய ஆபத்து உண்டு.

அதுபற்றிப் பரவாயில்லை, அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றால் ‘இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அவர்களாகவே ஆசைப்பட்டு என்னமோ செய்துவிட்டார்கள். நான் எப்போதும்போல் என்னுடைய வழியில் போய்க்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று ஏதோ சொல்லிச் சமாளித்துவிடலாம். ஆனால்-

ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுவடுகளின் கறைகள் அத்தனைச் சீக்கிரம் அழிந்துபோய்விடும் என்று சொல்வதற்கில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் நின்று நிதானித்துப் போவதுதான் அழகு.

வேகம் வேகம் வேகம் என்பது விளையாட்டுத் துறைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

மக்கள் நலன் சார்ந்த அரசுத்துறையிலும் ஆட்சித்துறையிலும் இத்தனை வேகத்துக்கு இடமில்லை.

எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி என்றைக்குக் கை கொடுத்திருக்கிறது? யாருக்குக் கை கொடுத்திருக்கிறது?

சில வேளைகளில் கை கொடுத்ததுபோல் தோன்றினாலும் இந்தப் பாணி எல்லாம் அரசு இயந்திரத்தை நடத்திச் செல்வதற்கு எப்போதும் துணை போய்விடாது.

சில உயர் அதிகாரிகளை மாற்றுவதற்கும், போர் நடக்கும் காலங்களில், சுனாமி போன்று மக்களை வருத்தும் இயற்கைப் பேரிடர் நிகழும் காலங்களிலும் மக்கள் விரும்பும் சில முடிவுகளை தடாலடியாக எடுத்துச் செயல்படுத்துவதிலும் வேண்டுமானால் கை கொடுக்கலாம். எல்லா சமயத்திற்கும் எல்லா விஷயங்களிலும் கை கொடுத்துவிடாது.

இன்னொரு ஆபத்தும் இருக்கிறது.

இம்மாதிரியான தடாலடி முடிவுகள் “வெற்றி பெற்றுவிட்டால் மட்டுமே” பெயரைப் பெற்றுத்தரக்கூடியவை.

தோல்வியில் முடிந்துவிட்டாலோ தீராப் பழியைத்தான் சுமத்திச்செல்லும்.

‘ஆய்ந்து தெளிந்து’ எடுக்கும் முடிவுகள்தாம் அரசு இயந்திரத்தைச் சிறப்பாக நடத்திச் செல்லுவதற்கான சீர்மிகு பாதை.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதான ஏழு பேரை விடுவிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது. இப்படியொரு தீர்ப்பு ஒரு கோர்ட்டிலிருந்து அதுவும் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து வருகிறது எனில் அது எத்தனைப் பெரிய விஷயம்! அதனை எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கவேண்டும்?

என்ன செய்தார்?

அதே எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி!

மொத்தமே மூன்று நாட்கள்தாம் கெடு! அதற்குள் கிளியரன்ஸ் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் நானே விடுதலை செய்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

என்ன ஆயிற்று?

ஈவு இரக்கம், தமிழகத்தின்பால் நல்லெண்ணம் இவையெல்லாம் கிஞ்சிற்றும் இல்லாத மத்திய அரசு வேண்டுமென்றே தடையுத்தரவுக்கு விண்ணப்பித்தது.

மறுபடியும் கோர்ட். வாதங்கள் பிரதி வாதங்கள் அப்புறம் நீதிபதிகளின் தீர்ப்பு என்று நாட்கள் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றன.

இடைப்பட்ட காலத்தில் இவரால் அவர்களை விடுதலை செய்ய முடிந்ததா என்றால் இல்லை.
அப்புறம் எங்கே போயிற்று அந்த மூன்று நாட்கள் கெடு?

என்ன ஆயிற்று வீராவேசம்?

யாரிடம் காட்டமுடிந்தது அந்த வெற்றுச்சவடாலை?

வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக்குதித்த ‘தெகிரியம்’ என்ன ஆயிற்று?

எதுவொன்றும்  வெற்றிகரமாக முடிந்தது என்றால்தான் வெற்றிக்கும் வீராவேசத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியும். அந்த வெற்றிக்கு “ஆப்பு” வைக்கப்பட்டுவிட்டது என்றால் என்ன பண்ணியும் பிரயோசனமில்லை.

“நான்  என்ன செய்யமுடியும்? நான் சரியாகத்தானே செய்தேன்? மத்திய அரசு குறுக்கே புகுந்து தடுத்துவிட்டது என்றால் மக்கள் கோபமெல்லாம் மத்திய அரசின் மீது தானே போகும்? மக்கள் மத்திய அரசைத்தான் கரித்துக் கொட்டுவார்கள். பழியையும் பாவத்தையும் ஏற்கவேண்டியது மத்திய அரசுதானே தவிர நான் அல்ல’- என்று நினைப்பாரேயானால் அந்த நினைப்பு தவறு என்று அர்த்தம்.

எந்த ஒன்றையும் சரிவரச் செய்து நல்ல ரிசல்ட்டைப் பெற்றுத்தருவதுதான் மாநில அரசின் கடமையே தவிர என்னத்தையோ செய்துவிட்டு வெற்றி பெற்றால் சொந்தம் கொண்டாட நினைப்பதுவும், தோல்வியடைந்துவிட்டால் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் தூக்கிப்போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்று நினைப்பதுவும் எப்போதுமே காரியத்துக்கு ஆகாது.

இம்மாதிரியான நேரங்களில் கர்நாடக அரசு என்ன செய்திருக்கும் என்பதை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

மக்களுடைய உணர்வுகளோடு நேரடித் தொடர்புள்ள எந்த விஷயமாயிருந்தாலும், நடைபெறுவது எந்த அரசாக இருந்தாலும் – அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, ஜனதாதள அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா அரசாக இருந்தாலும் சரி பொதுப் பிரச்சினைகள் என்று வரும்போது உடனடியாக முதலமைச்சர் செய்யும் காரியம் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதுதான்.

சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டி எல்லாரிடமும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைத்தான் அந்த அரசு செயல்படுத்தும்.

இப்படியொரு நிலைப்பாடு எடுக்கும்போது அந்த அரசாங்கத்தின் மீது எந்த ஒரு பழிச்சொல்லும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, மத்திய அரசின் கைகளையே கட்டிப்போட்டுவிடும் உத்தியும் இதில் அடங்கியுள்ளது. எனவே, மாநில அரசு எடுத்த முடிவுக்கு மாறாக மத்திய அரசு எவ்வித காயையும் நகர்த்தாது. ‘இது சர்வகட்சி சார்பில் எடுக்கப்பட்ட முடிவு இந்த முடிவுக்கு எதிராக நாம் செயல்பட முடியாது. அப்படிச் செயல்பட்டால் மாநிலத்தில் நமக்கு ஆதரவு கிடைக்காது .நமக்கு ஆதரவு தர எவருமே இல்லை’ என்ற முடிவையும் அது மத்திய அரசின் மீது திணித்துவிடுகிறது.

காவிரி பிரச்சினை, கோகாக் பிரச்சினை, ராஜ்குமார் கடத்தல் விவகாரம் போன்ற பிரச்சினைகளில் எல்லாம் கர்நாடக அரசு நடந்துகொண்ட முறை இதுதான். உடனடியாக சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுவார்கள். எல்லாரும் கலந்துபேசி ஒரு முடிவு எடுப்பார்கள். அதனை நடைமுறைப்படுத்துவார்கள்.

ஏனெனில் எல்லாக் கட்சிகளுமே மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட கட்சிகள்தாம். எல்லாக் கட்சிகளுக்குமே மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தாம் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகம் என்பதால் நாம் ஆட்சியில் இருக்கிறோம் அவ்வளவுதானே தவிர, நாம் ஆட்சியில் இருப்பதால் மற்ற அனைத்துக்கட்சியினரையும் கிள்ளுக்கீரைகளாக நினைப்போம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர்கள் யாரையும் நாம் மனுஷப்பிறவிகளாகவே நினைக்கத் தேவையில்லை என்று ஒரு ஆளும்கட்சி நினைக்காது, நினைக்கக்கூடாது. 

மற்றவர்களையும் மதிக்கவேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்களால்தாம் சிறப்பான ஆட்சியை வழங்கமுடியும்.

இலங்கைப் பிரச்சினை, சேது சமுத்திரத்திட்டப் பிரச்சினை, கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகள் தமிழகத்தில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளாகவே உள்ளன. இவையனைத்திலுமே இம்மாதிரியான ‘பாசிட்டிவ் அணுகுமுறையுடன்’ பிரச்சினைகளை அணுகி தீர்வுகளைக் கண்டறிந்தால் தமிழகத்தின் முன்னேற்றம் தங்குதடையின்றி இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டிடத்தை நிராகரிப்பதுபோன்ற முடிவுகளைக்கூட தனியொரு நபர் எடுக்கிறார் எனும்போது ஜனநாயகம் என்ற சித்தாந்தத்திற்கே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.

மக்களின் கருத்து என்பது அவர்கள் சார்ந்துள்ள பிரதிநிதிகளிடமிருந்துதானே வரவேண்டும்? முக்கியமான விஷயங்களில் சட்டமன்றத்தில் நூற்றுப்பத்தின் கீழ் அறிக்கைப் படித்துவிட்டு உட்கார்ந்துவிடுவதன் மூலம் யாருமே தன்னுடைய முடிவுகளுக்கு எதிராக எந்தவிதமான கருத்தும் சொல்லக்கூடாது என்பதும், அப்படி எந்தவிதக் கருத்தையும் சொல்ல இடமளிப்பதில்லை என்பதும் நல்ல அரசின் இலக்கணமல்ல.


தனிப்பட்டவர்களின் அரசு என்பதைத்தாண்டி மக்களுக்கான அரசு என்ற நிலை வந்தால்தான் மற்ற மாநிலங்கள் பார்த்து வியக்கும்படியான மாநிலமாகத் தமிழகம் உருவாகும். தற்போதைய தமிழர்களின் கனவு இதுதான்.