Friday, November 6, 2015

தொலைக்காட்சி விவாதங்களின் அட்டூழியங்கள்

    
அவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும்.  தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளாக அரசியல் விவாதங்களைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் அவை இரண்டு விதமாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று செய்திகள் தருவது………… அடுத்து அந்தச் செய்திகளுக்கான விவாதங்களை முன்னெடுப்பது…. (News and views)

இந்த விவாதங்களில் டைம்ஸ் நவ் சேனலில் வரும் அர்னாப்கோஸ்வாமி இந்திய டெலிவிஷன்களின் தாதாவாகத் தம்மையே வரித்துக்கொண்டவர். இன்றைய நாள்வரை அர்னாப்தான் இந்திய டெலிவிஷனின் மிகப்பெரிய சண்டியர் என்று கருதப்படுகிறார். அரசியலிலும், சமுகத்திலும் புகழ்பெற்ற பெரிய பெரிய ஆட்களையும் ஆளுமைகளையும் கூட்டிவைத்துக்கொண்டு ‘எல்லாருமே தமக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்ற பெயரில் அவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சநஞ்சமல்ல.

“இதுதான் உண்மையான டாக்குமெண்ட்” என்று ஏதோ ஒரு பேப்பரைக் கையில்  வைத்துக்கொண்டு கத்திக் கூச்சல்போட்டு விவாதத்திற்கு வந்திருக்கும் ஆளுமைகளை  மிரளவைத்து கதிகலங்க வைக்கும் கலையை மேலைநாட்டு ஆங்கிலச் சேனல்களிலிருந்து எப்படியோ கடத்திக்கொண்டு வந்து விட்டார். “Shut your mouth, Close your mouth, ok ok stop talking” என்றெல்லாம் இவர் மிகப்பெரிய ஆளுமைகளை மிரட்டுவதும் அவர்களும் அதற்கு அடிபணிவதும் கண்கொள்ளாக் காட்சிகள்………….

சமீபத்தில்கூட அவர் சுஷ்மா ஸ்வராஜுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். “அவ்வளவுதான் வேறு வழியில்லை. இன்றைக்கு சாயந்திரம் சுஷ்மா இங்கே வந்தாக வேண்டும். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்”

இந்த வரிசையில் அவர் யாரையும் விடுவதில்லை. ‘ஆளும் கட்சித்தலைவராக இருந்தாலும் சரி; எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி. இந்த நிகழ்ச்சிக்கு நான்தான் எஜமான். எல்லாரும் எனக்குக் கட்டுப்பட்டவர்களே’ என்ற பாணியில்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதே அடாவடிப் பாணியைக் கடைப்பிடித்து ஈழ விவகாரத்தையும் சுப்பிரமணிய சாமி, சோ போன்ற தமிழ் எதிரிகளை வைத்துக்கொண்டு நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த அர்னாபின் கனவு பல சமயங்களில் பல்லிளித்திருக்கிறது.. ஒருமுறை எழிலனும் சரி, திருமுருகனும் சரி அர்னாபின் வாயை அடைத்து மூக்கை உடைத்தார்கள். அந்தச் சமயங்களின் அர்னாபின் முகம் சுருங்கிய காட்சியைப் பார்க்கவேண்டுமே………………..!

சரி, அர்னாபை விட்டுவிட்டுத் தமிழ்ச் சேனல்களுக்கு வருவோம்.

இப்போதைய தமிழ் சேனல்களின் பிரதான போட்டியே தமிழில் ‘யார் அர்னாப்?’ என்பதுதான்.

தமிழில் நிறைய நியூஸ் சேனல்கள் வந்துவிட்ட நிலையில் எல்லா சேனல்களுமே அரசியல் விவாதங்களைக் கையிலெடுத்துவிட்டன. அந்தக் காலத்தில் சன் டிவி மட்டுமே இருந்த நாட்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ‘நேருக்கு நேர்’ என்ற பெயரில் சன் டிவியில் ரபிபெர்னாட் நடத்திய அரசியல் விவாதங்கள் மிகவும் புகழ் பெற்றவை..

மலர்ந்த முகமும், அழகிய தமிழும், திருத்தமான உச்சரிப்புடனும் அவர் பிரபலங்களைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு மடக்கியது ரசிக்கத்தக்கதாயிருந்தது. எத்தனைச் சிக்கலான விஷயங்கள் என்றாலும் மிகவும் கவனமாகக் கத்திமேல் நடப்பது போன்ற பாவனையில் விஷயங்களைக் கொண்டு செல்வதில் வல்லவர் அவர். (தமக்கு இதன்மூலம் கிடைத்த புகழைத் தக்கவைத்துக்கொண்டு அதற்கான பலனை அனுபவிக்கிறவராக இவரைத்தான் சொல்லவேண்டும். 

அந்தப் ‘புகழையும் திறமையையும்’ அப்படியே ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சமர்ப்பித்து அதிமுகவின் நியமிக்கப்பட்ட ராஜ்யசபை எம்பியாகிவிட்டார் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்)

ரபி பெர்னாடின் விலகலுக்கடுத்து அந்த இடத்திற்கு வந்த வீரபாண்டியன் பிரபலங்களைப் பேட்டி காணும்போது ஏகப்பட்ட புள்ளிவிவரங்களைத் தயாராகக் கையில் வைத்துக்கொண்டு அவர்களை மடக்கியபோது அந்தப் பிரபலத்திற்கும் பார்க்கிறவர்களுக்குமே வியப்பு மேலிட்டது. பல ஆண்டுகளுக்கு மக்கள் நினைவில் இருந்த ‘விவாதக்களம்’ என்பது இதுமட்டும்தான்.

தற்போது செய்திச்சேனல்கள் அதிகமாகிப்போய்விட, அரசியல் விவாதங்களுக்கான தேவை பெருகிவிட்டது. தவிர அத்தகைய விவாதங்களுக்கான பார்வையாளர்களும் பெருகிவிட்டனர்.. எக்கச்சக்கப் பார்வையாளர்கள் இருப்பதனால்தான் ஏறக்குறைய எல்லா செய்திச்சேனல்களுமே இரவு எட்டு மணிக்குத் துவங்கும் விவாத நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரையும் அதனைத் தாண்டியும் மறுஒளிபரப்பும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அத்தனை தூரத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த நிகழ்ச்சிகளுக்கு இருக்கிறது.

சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் செவன் என்று எல்லா சேனல்களுமே விவாத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணம் தந்து புகழ்பெற வைத்தவர்களாக புதிய தலைமுறை சேனலைத்தான் குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து தந்தி டிவியும் இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களைப் பெருக்கிக்கொண்டது.

சன் டிவி மூலம் ரபி பெர்னாடும், வீரபாண்டியனும் புகழ் பெற்றதுபோல் தற்போது இந்த விவாதங்களின் மூலம் ரங்கராஜ் பாண்டே, மு.குணசேகரன், ஹரிஹரன், தம்பிராஜா, நெல்சன் சேவியர், சண்முக சுந்தரம், வெங்கட், தியாகச் செம்மல், ஜெனிபர் வில்சன், நிகிதா, கார்த்திகைச் செல்வன், செந்தில் என்று பலபேர் புகழ்பெற்ற முகங்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். 

                           

இவர்கள் நடத்தும் விவாதங்கள்தாம் இன்றைய தேதியில் அரசியலில் ‘ஹாட் டாபிக்’.
இவர்களில் மிகுந்த நிதானத்தோடு விஷயஞானத்துடன் விவாதங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக தம்பிராஜா, குணசேகரன், ஜெனிபர், செந்தில், மற்றும் நிகிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் விவாதிப்பவர்கள் சொல்லவேண்டும் என்று வார்த்தைகளைப் போட்டு நிரப்பி அதனை எதிராளியின் வாயில் திணித்து அவர்களிடமிருந்து அந்த வார்த்தைகளைப்  பிடுங்குவது என்ற பாணியைக் கைக்கொள்கிறவர்களாக ரங்கராஜ் பாண்டே மற்றும் ஹரிஹரன் ஆகியோரைச் சொல்லலாம். இருவருமே தந்தி டிவியைச் சேர்ந்தவர்கள். 

(இதில் ரங்கராஜ் பாண்டேயின் நினைவாற்றலையும், பேசும் வேகத்தையும், கேள்விகேட்டு மடக்கும் தனிப்பட்ட பாணியையும் பாராட்டியே ஆகவேண்டும்.)

இவர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த தியாகச் செம்மல் என்பவரும் அடக்கம். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு உள்வாங்கி அதற்கேற்ப விவாதங்களைக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணமெல்லாம் இவர்களிடம் கிடையாது. இவர்கள் ‘ஹோம் ஒர்க்’ செய்து ஒரு முடிவுடன் வந்திருப்பார்கள். அதற்கேற்ப பேசுகிறவர்கள் பேசிவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை. அதற்கு மாறாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்கும் தயாராகவே இவர்கள் வந்திருப்பார்கள். ஏனெனில் மாற்றுக்கருத்துடன் வருகிறவர்கள் என்னென்ன பாயிண்டுகளைக் கையிலெடுப்பார்கள் என்பது தெரியும் இவர்களுக்கு. அந்தப் பாயிண்டுகளை அவர்கள் கையிலெடுத்ததுதான் தாமதம், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள்போல் வேறொரு விஷயத்தைச் சொல்லி அவர்கள் மேல் விழுந்துப் படுத்துப் பிறாண்டி அவர்களை மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசவிடாமல் செய்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவதுதான் அத்தனைப் பேருடைய பாணியும்.

இந்தப் போங்குத்தனத்திற்கு இவர்கள் பெரிதாக ஒன்றும் மெனக்கெடுவதில்லை. இவர்களின் நோக்கம், கொள்கை, எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவு;

 திமுக மீதும் கருணாநிதி மீதும் எதிர்ப்பு. அதுவும் சாதாரண எதிர்ப்பல்ல, கண்மூடித்தனமான எதிர்ப்பு.


இந்த விஷயத்தில் தந்தியின் பாண்டேயும், ஹரிஹரனும் வேண்டுமானால் சில இடங்களில் விட்டுக்கொடுத்துவிடுவார்களே தவிர, புதிய தலைமுறையின் தியாகச்செம்மல் என்ற நபரிடம் அதெல்லாம் நடக்காது.

அவர் நேர்மை, நடுநிலை, சரியான பார்வை இவற்றையெல்லாம் தியாகம் பண்ணிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கும் செம்மல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. ‘கருணாநிதி தவறு செய்தவர்; அதைத்தான் இப்போது ஜெயலலிதாவும் செய்கிறார். அதனால் கருணாநிதியை ஆதரிப்பவர்களுக்கு ஜெயலலிதா செய்த தவறுகளைப் பற்றிப் பேச யோக்கியதை இல்லை. ஆகவே நீங்கள் அதுபற்றிப் பேசக்கூடாது. 

ஜெயலலிதா செய்யும் தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருங்கள்.’ – இந்த ஒரு விஷயத்தைத்தான் நாள்தவறாமல் எல்லா ‘நெறியாளர்களும்’ மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் அத்தனைப் பேருமே ஒரே ஒரு ஆயுதத்தைத்தான் கையாள்கிறார்கள். அதாவது நிறையப்பேருக்கு, நிறையப்பேருக்கென்ன நிறையப்பேருக்கு – தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லாருக்குமே ஒரே விதமான பார்வைதான் இருக்கிறது. இவர்களுடைய அரசியல் பார்வை என்பதே இதுமட்டும்தான்.

அதிமுக அரசியல் ரீதியாக ஏதாவது தவறுகளைச் செய்கிறதா?

உடனே, திமுக அதுபோன்ற தவறுகளைச் செய்ததில்லையா என்று தேடுகிறார்கள். (ஒரு இருபது வருடங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் இருந்த ஒரு கட்சிக்கு இப்படி எல்லாவிதமான தவறுகளுக்கும் முன்மாதிரிகள் நிச்சயம் இருக்கும்) உடனே “இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். திமுகவும் தவறு செய்தது அதே தவறை இப்போது அதிமுக செய்கிறது. அவ்வளவுதான் முடிந்தது விஷயம்” என்பதுபோன்று பேசுவார்கள்.

திமுக தவறு செய்கிறதா? கிடைத்தது கழுத்து.

மறந்துபோய்க்கூட அதிமுகவையோ ஜெயலலிதாவையோ அல்லது எம்ஜிஆரையோ நினைவுபடுத்தவோ, சம்பந்தப்படுத்தவோ மாட்டார்கள். பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள். ‘இந்தக் கருணாநிதியே இப்படித்தான். ரொம்ப மோசம். நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதுதான் அவருடைய – அவர் குடும்பத்தாருடைய வேலை’ என்பதாகப் பேசுவார்கள்.

கவனியுங்கள்.

‘இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். அதிமுகவும் இதைத்தான் செய்தது திமுகவும் இப்போது அதே தவறைச் செய்கிறது’ என்ற வாதம் இங்கே கிடையாது.

அதிமுக தவறு செய்தால் மட்டும் திமுகவையும் கருணாநிதியையும் சேர்த்து இழுத்துவந்து குற்றம் சாட்டி அதிமுகவைக் காப்பாற்றுகிறவர்கள், திமுக செய்யும் தவறுகளுக்கு திமுகவை மட்டுமே பொறுப்பாக்குவார்கள்.

இங்கே அதிமுகவையும் இழுத்து வந்து இந்த அதிமுக திமுக இரண்டுமே இப்படித்தான் என்று பேசுவது கிடையாது.

இந்த அயோக்கியத்தனமான பாணியை ஆரம்பித்துவைத்தவர் சோ என்று நினைக்கிறேன். இந்தப் பாணி இப்போது வளர்ந்து செழித்து நீக்கமற எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி வளர்ந்து கோரமான அரசியல் குப்பையாய்க் கிடக்கிறது.

திரும்பத் திரும்ப ஒரே கருத்தைச் சொல்வதன் மூலம் அதனை எவர் மண்டையில் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் நுழைத்துவிட முடியும் என்பதற்கு இந்தப் பாணி ஒரு அருமையான உதாரணம். ஏனெனில் மக்களே இப்போது இப்படிப் பேச பழகிவிட்டார்கள்.
திமுக சாராமல் அரசியல் பேசும் எல்லா அயோக்கிய சிகாமணிகளும் இந்தப் பார்வை கொண்ட ‘அரசியல் நேர்மையாளர்கள்’தாம்.

உதாரணத்திற்கு மதுவிலக்கு.

தமிழ்நாட்டில் பக்தவச்சலம் ஆட்சி முடிகிறவரைக்கும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ‘ஒரு படி அரிசி ஒரு ரூபாய்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார். (ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் அண்ணா. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் மட்டும் படி அரிசி ஒரு ரூபாய் என்ற அளவில் போட்டார். கேட்டதற்கு ‘மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்றுதான் சொன்னேன் என்று சொல்லிச் சமாளித்தார்) இந்தப் படி அரிசி திட்டத்திற்கு ஏகப்பட்ட செலவு பிடித்தது. சமாளிக்கமுடியாமல் போகுமோ என்ற கவலை வந்தது அண்ணாவுக்கு. அரசுக்கு அதிக வருமானம் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார் அவர்.

அதன்படி அதிக வருமானம் வேண்டும் என்பதற்காக அண்ணா கொண்டுவந்த திட்டம்தான் லாட்டரிச்சீட்டு.

லாட்டரிச்சீட்டைக் கொண்டுவந்து சூதாட்ட மனப்பான்மை எதுவுமே தெரியாமல் இருந்த தமிழர்களை முதன்முதலில் சூதாட வைத்தவர் அண்ணாதான்.

இன்றுவரைக்கும் இந்த சூதாட்ட மனப்பான்மையிலிருந்து விடுபட முடியாமல் சூதாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தமிழர்களைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் லாட்டரி மறுபடியும் ஒழித்துவிட்டபோதும் பெங்களூருக்கும் ஆந்திராவுக்கும் சென்று லாட்டரி சீட்டுக்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்களும், பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு பணம் அனுப்பி அவர்கள் மூலம் கட்டுக்கட்டாக லாட்டரிச்சீட்டு வாங்கிக்கொண்டிருந்தவர்களும் ஏராளம்.

லாட்டரி மனப்பான்மையே இல்லாமல் இருந்த தமிழர்களை லாட்டரிச்சீட்டிற்கு பழக்கப்படுத்தியவர் அண்ணா என்பதை யாரும்- ஆமாம் யாருமே- இதுவரை எந்த விவாதங்களிலும் சொன்னதே கிடையாது.

காரணம், கருணாநிதியைத் தவிர வேறு யார் மீதும் எந்தவிதமான அரசியல் குற்றங்களையும் யாருமே சொல்லக்கூடாது என்பது தமிழகத்தின் எழுதப்படாத விதி.

அண்ணா செய்த தவறுகளையோ எம்ஜிஆர் செய்த தவறுகளையோ யாருமே சொல்வதில்லை. சொல்வதில்லை. சொல்வதில்லை.

போகட்டும். மதுவிலக்கிற்கு வருவோம்.

மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில் 1967 க்குப் பிறகு மதுவைக்கொண்டு வந்தவர் கருணாநிதிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அண்ணா லாட்டிரிச்சீட்டைக் கொண்டுவந்தார். கலைஞர் மதுவைக் கொண்டுவந்தார்.
ஆனால் மதுவினால் நடைபெறும் சீரழிவுகளைப் பார்த்த கலைஞர் மறுபடியும் அவர் ஆட்சியிலேயே மதுவுக்கு மூடுவிழா நடத்திவிட்டார். ஆம், அவர் கையாலேயே மதுவை ஒழித்துக்கட்டினார் கருணாநிதி.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆருடைய கட்சியிலே போய்ச் சேர்ந்தவர்கள் கலைஞர் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று “மறுபடியும் மதுவைக் கொண்டுவந்துவிட்டார்” என்பதுதான்.

அந்தச் சமயத்தில் பெங்களூரில் வசித்த அண்ணாவின் மகன் கௌதமன் அதிமுகவில் சேருவதற்கு இந்தக் காரணத்தைத்தான் சொன்னார்.

ஏனெனில் அவருடைய பரபரப்பான பேட்டியை அப்போது குமுதத்தில் எழுதியவனே நான்தான்.

அதிமுகவில் சேர்கிறவர்கள் மட்டுமல்ல எம்ஜிஆரே கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளில் கடுமையான குற்றச்சாட்டாக இதனைத்தான் வைத்தார். “ஒரு தலைமுறையையே கெடுத்துவிட்டவர் கருணாநிதி. மதுவை அறிமுகப்படுத்தி இளைஞர்களைக் கெடுத்துவிட்டார். 

தாய்மார்களின் சாபம் கருணாநிதியைச் சும்மாவிடாது” என்று சீறினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தாம் நடிக்கும் படங்களில் மதுவையே தொடாதவராகத்தான் நடிப்பார். மது அருந்தவேண்டும் என்ற கட்டாயம் அவருடைய கதாபாத்திரத்திற்கு வந்தபோதும் அவருக்கு வழங்கப்படும் மதுவை வாங்கி அங்கிருக்கும் பூத்தொட்டியிலோ வேறெந்த பாத்திரத்திலோ ஊற்றிவிட்டு மது அருந்துவதுபோல் ‘நடிப்பவராகத்தான்’ தம்மை முன்னிறுத்திக்கொண்டார் எம்ஜிஆர்.

ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு, அத்தைமகள் ரத்தினத்தைப்……… போன்ற பல பாடல்கள் அவர் மது அருந்திவிட்டுப் பாடுவதாகப் படத்தில் அமைந்திருக்கும். ஆனால் எம்ஜிஆர் குடிக்கவில்லை. எம்ஜிஆர் மது அருந்த மாட்டார். சும்மா அப்படிக் குடித்ததாக நடிக்கிறார் என்ற செய்தி பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இப்படியெல்லாம் தம்மீது புனிதப் பிம்பம் வைத்திருந்த எம்ஜிஆர்தான் மீண்டும் மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.

அதாவது கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு, மறுபடியும் அவராலேயே மூடப்பட்டுவிட்ட மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர்தான்.

எம்ஜிஆர் ஆட்சியில்தான் முதன்முதல் சாராய ஆலை தமிழகத்திலே தொடங்கப்பட்டது.
இந்தத் தகவல்களை தொலைக்காட்சி விவாதங்களில் சொல்வதும் இல்லை. 

சொல்லவருகிறவர்களை விவாதங்கள் நடத்தும் ‘நெறியாளர்கள்’ சொல்லவிடுவதும் இல்லை.

ஆக சூதாட்ட மனப்பான்மையை ஏற்படுத்திவிட்ட அண்ணா இங்கே புனித வளையத்தில். கருணாநிதி ஒழித்துக்கட்டிய மதுவை மறுபடியும் ஆறாக நாட்டில் ஓடவிட்ட எம்ஜிஆரும்  புனித வளையத்தில்……………..

ஆனால் கருணாநிதி மட்டும் குற்றவாளிக்கூண்டில்!

எந்த ஊர் நியாயமய்யா இது?

திமுகவை முற்று முழுதாக ஆதரித்து எழுதப்படும் பதிவு அல்ல இது. ஆனால் ஊடகத்துறை எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக சிலவற்றைக் கூறுபோட்டுக் காட்டவேண்டியிருக்கிறது.

சரி, தொலைக்காட்சி விவாதங்களுக்கு வருவோம்.

                                        


இந்தத் தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் பயனடைந்தவர்களாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒரு சிலரைத்தான் சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட யாரென்று தெரியாத நபர்கள் எல்லாம் இன்றைக்கு பாஜகவின் ‘பிரமுகர்கள்’. படு கெத்தாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு உலக அரசியல் பேசுவதும், பல முதிர்ந்த அரசியல் தலைவர்களை – குறிப்பாக கருணாநிதியை கேலி பேசுவதும், கேள்வி கேட்பதும், புத்திமதி சொல்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்…

இந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. எல்லா விவாதங்களுமே ஒரே நோக்கத்தோடுதான் நடத்தப்படுகின்றன.

தினசரி அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தும் ஏதாவதொரு பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். அதனைப் பற்றி ‘விவாதிக்கிறார்கள்’ என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் விவாதிக்கப்படும் அத்தனை விவாதங்களுக்குமான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்   
-திமுகவைக் குறைகூறுவது!

தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமே திமுகவும் கருணாநிதியும், அவர் குடும்பமும்தாம் என்று கூறுவது; கருணாநிதியாலோ திமுகவாலோ தமிழ்நாட்டிற்குத் துளியளவும் நன்மை நடந்துவிடவில்லை என்று சாதிப்பது, இந்தியாவில் ஊழல் புரிந்த ஒரே கட்சி திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டுவது, இத்தகு காரணங்களால் வேறு எங்கு எவ்வளவு பெரிய ஊழல்கள் நடைபெற்றாலும் அதனைப் பற்றிப் பேசவோ கேட்கவோ திமுகவினருக்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்று ஒரேயடியாக திமுகவின் கதையை முடித்து வைப்பது.,,,,,,

பெரிய பெரிய ஜாம்பவான்களிலிருந்து விவாதங்களில் பங்குபெறும் குஞ்சுகுளுவான்கள்வரைக்கும் இது ஒன்றுதான் நோக்கம்; இது மட்டுமேதான் தாரகமந்திரம்.

இந்த விவாதங்களில் பங்குபெறுவோரின் எண்ணிக்கை நான்கு பேர் என்பதான பொதுவான வழக்கம் ஒன்றுண்டு. ஒரு கட்சிக்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் விவாதம் நடைபெறும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

இந்த எண்ணிக்கையிலேயே குயுக்தியாய் தங்கள் கைவரிசையைக் காட்டி முடித்திருப்பார்கள் டெலிவிஷன் நிலையத்தினர். அதாவது அதிமுக சார்பாக இரண்டுபேர் பேசுவதற்குத் தயார் செய்திருப்பார்கள். ஒருவர் திமுக. அப்படியானால் திமுக சார்பாக இன்னொருவரும் வேண்டும்தானே? இங்கேதான் டெலிவிஷன்காரர்களின் குயுக்தி வேலை செய்யும். மூன்றுபேர் போக நீங்கலாக அந்த ‘மற்றொருவர்’ பத்திரிகையாளராக இருப்பார். அவர் பெரும்பாலும் நடுநிலையாளராக கருத்துத் தெரிவிப்பார். ஆக அதிமுகவுக்கு ஆதரவாக இரண்டுபேர். ஒருவர் திமுக, அடுத்தவர் நடுநிலையாளர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் நெறியாளராய் அந்தந்த டெஷவிஷன்காரர்கள் இருப்பார்கள் இல்லையா? இங்கேதான் பிரதான குத்து காத்திருக்கிறது. அந்த டெலிவிஷன்காரர்கள் ‘அறிவிக்கப்படாத’ அதிமுககாரர்………………..! இதுதான் தினசரி நடைபெறும் கூத்து.

‘அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவினரிடம்’கூட இல்லாத உச்சபட்ச வெறுப்பும் தீப்பந்தங்களும் இவர்களிடம்தாம் இருக்கின்றன. கருணாநிதி எந்தெந்த சமயத்தில் என்னென்ன விதமாய்ப் பேசினார், எந்தெந்த தவறுகள் செய்தார், யார்யாரை என்னென்ன மொழியில் ஏசினார் என்பதுபோன்ற விஷயங்கள் தவிர, திருக்குவளையில் சின்னப்பையனாக இருந்தபோது சாப்பாட்டுப் பந்தியில் எத்தனைப் பருக்கைச் சோற்றைக் கீழே சிந்தியிருக்கிறார் எங்கெங்கே எச்சில் துப்பியிருக்கிறார், எந்தெந்த சுவர்களில் ஒண்ணுக்கடித்தார் என்பதுவரையிலான பட்டியல் இந்த ‘நெறியாளர்களிடம்’ உண்டு.

நாவலர் நெடுஞ்செழியனை ஜெயலலிதா எந்த மொழியால் வசை பாடினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.

ஆனால் அனந்தநாயகிக்கு கருணாநிதி சட்டமன்றத்தில் என்ன பதில் சொன்னார் என்பது இவர்கள் கைகளில் தயாராக இருக்கும்.

ஒரு மாநிலத்தின் கவர்னர் மீது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன ஆபாசமாய்க் குற்றம் சாட்டினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.

ஆனால் இந்திராகாந்தியைக் கருணாநிதி என்ன விமர்சித்தார் என்பதுமட்டும் இவர்களுக்கு மூக்குக்குமேல் விடைத்துக்கொண்டு நிற்கும்.

டான்சி வழக்கோ, வருமான வரி கட்டாத வழக்கோ, வெளிநாட்டிலிருந்து வந்த டிடி வழக்கோ, சொத்து குவிப்பு வழக்கோ (இந்த வழக்கிற்கு தந்திடிவி சூட்டிய செல்லப்பெயர் ‘சொத்துவழக்கு’. சொத்துக் குவிப்பு வழக்கு அல்ல என்று குமாரசாமி தீர்ப்பிற்கு முன்பேயே இவர்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.) எந்த வழக்குபற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் 2ஜி வழக்கு தெரியும்; ஆ.ராசா வழக்கு தெரியும், கனிமொழி வழக்கு தெரியும்.

குன்ஹா கொடுத்த தீர்ப்பு பற்றித் தெரியாது. ஆனால் குமாரசாமி ‘விடுவித்தது’ பற்றி மட்டும் தெரியும். இவர்கள்தாம் நெறியாளர்கள்.

பாரதிய ஜனதா சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் பேச வரும் பிரமுகர்கள் பெரும்பாலும் வாதத்திறம் மிக்கவர்களாகவும், பேச வேண்டிய விஷயத்தை ஒட்டிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவர்களுடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ அவர்கள் விஷயஞானத்துடன் வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸைச் சேர்ந்த கோபண்ணா, அமெரிக்கை நாராயணன், விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, இதயத்துல்லா, ஜோதிமணி எல்லாருமே திறமையாக விவாதம் புரிகிறவர்களாகவும் புள்ளிவிவரங்களுடன் வருகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதேபோன்று பாரதிய ஜனதா சார்பில் வரும் ராகவன், நாராயணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோரும் வாதத்திறனும், அதிகபட்ச தகவல்களும் கொண்டவர்களாகவே உள்ளனர்.

அதிமுகவுக்கு வருகிறவர்களில் யாரையும் அப்படிச் சொல்வதற்கு இல்லை. சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், காசிநாத பாரதி என்ற மூன்றுபேர் அதிமுகவுக்கு நிரந்தரமாய் வருபவர்கள். 

இவர்களில் தீரன் ஒருவரைத்தான் விஷயஞானம் உள்ளவராகச் சொல்லமுடியும். அதிலும் 
பல்வேறு கட்சிகளுக்கும் பயணப்பட்ட தீரன் விஷயத்தையும் ஞானத்தையும் இறக்கிவைத்துவிட்டுத்தான் அதிமுகவுக்கு வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் தீரன் வாதிடும்போது என்ன சப்ஜெக்ட் பேச வருகிறாரோ அதைப்பற்றிய கவலையை விடவும் ஜெயை விளிக்கும்போது ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’ என்ற சொல்லாடலை சரியாகச் சொல்கிறோமா என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் இருக்கிறது என்பதை விவாதங்களைப் பார்க்கிறவர்கள் சுலபமாகவே புரிந்துகொள்ள முடியும்.

சி.ஆர்.சரஸ்வதியைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. உலகின் எந்த விஷயம் பற்றியும் சி.ஆர்.எஸ்ஸை வைத்துக்கொண்டு எந்தமாதிரியான கொம்பனும் விவாத மேடையை நடத்தலாம் என்பதுதான் இவரிடமிருந்து நாம் பெறும் செய்தி. அவருக்கு என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு எந்தவிதமான மேடையாக இருந்தாலும் சமாளித்துவிடுகிறார் அவர். ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவுக்கு இணையானவர்கள் எவரும் இல்லை. அவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. அவருக்கு இருக்கும் செல்வாக்கு இங்கே யாருக்கும் இல்லை. நாற்பத்தைந்து சதவித ஓட்டுவங்கி அம்மாவுக்கு உண்டு. ஆகவே தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.’ இதுதான் சி.ஆர்.சரஸ்வதியிடம் இருக்கும் சரக்கு. இதனை உலகின் எந்த விஷயமாயிருந்தாலும், அதனை வெளிப்படுத்தும் தளம் எதுவாக இருந்தாலும் அமெரிக்க செனட் சபையாயிருந்தாலும், நாசா விண்வெளி மையமாக இருந்தாலும் எதிர்கொள்வதற்கும் சொல்வதற்கும் சி.ஆர்.சரஸ்வதி தயார்.

சாதாரணமாய் கலைஞர் என்றும் தளபதி என்றும் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்துவிடும் திமுகவினர் மையக்கருத்து எதுவோ அதைப்பற்றிப் பேசுவதில் அக்கறை காட்ட ஆரம்பிப்பர். அதிமுகவினரின் நிலைமைதான் பரிதாபம். மாண்புமிகு தமிழக முதல்வர் என்று ஆரம்பித்து அரை நிமிடத்திற்கு மூச்சுவிடாமல் அவர்கள் தலைவியின் பெயரைப் புகழ் மாலைகளுடன்  சொல்லியாக வேண்டும் அவர்கள்.

பாமகவின் பாலு, மதிமுகவின் அந்திரி தாஸ்,  அதிமுகவின் காசிநாதபாரதி மற்றும் செ.கு.தமிழரசன். இவர்கள் நான்கு பேரையும் ஒரே லிஸ்டில்தான் சேர்க்கவேண்டும். வேறு யாரையும் எதுவுமே பேச இவர்கள் விடுவதில்லை. இவர்களின் வாதத்திற்கு முன்பு ‘மற்றவர்களின் வாதங்களெல்லாம் கால்தூசு’ என்பதான நினைப்பு இவர்களுக்கு உண்டு என்பதை இவர்கள் பேசும் விதத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம். இவர்கள் ஒன்றைச் சொல்லிவிட்டார்களென்றால் மற்றவர்கள் அடிபணிந்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். மீறி யாராவது பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் சம்பந்தப்பட்டவருடன் சேர்ந்து கடைசிவரைக்கும் கத்திக்கொண்டே இருப்பதுதான் இவர்களின் பாணி. அதிலும் செ.கு.தமிழரசன் தனிரகம். பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் நிறுத்தவே மாட்டார். மற்ற எல்லாரும் பேசும்போதும் குறுக்கிட்டு பதில் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பேசிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அவரை நிறுத்திவிட்டு மற்றவர்களைப் பேசச்சொல்லும்போது “என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க, என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க” என்று இவர் புலம்புவது உச்சபட்ச காமெடி.

அதிமுக வரிசையில் சமரசம் என்று ஒருவர் வருவார். முன்னாள் எம்எல்ஏ.

என்னுடைய நண்பர் ஒருவர் “சமரசம் வருகிற எந்த நிகழ்ச்சியையும் மிஸ் பண்ணுவதில்லை” என்று சொல்வார். காரணம் பழமொழிகள்… சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் எந்த விஷயம் வந்தாலும் ஒரு பழமொழியுடன்தான் தமது வித்தியாசக் குரலில் பேசவே ஆரம்பிப்பார். “சமரசம் இருந்தால் சிரிப்புக்குப் பஞ்சமேயில்லை” என்பார் நண்பர்.

“மக்கள் நலக்கூட்டணியைப் பற்றிக் கலைஞர் இன்றைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்” என்று ஆரம்பித்து நெறியாளர் ஏதோ சொல்லப்போக சமரசம், “ஐயா பருப்பு சாம்பாருக்கு கருப்புக்கோட்டு போடக்கூடாது. அருப்புக் கோட்டையிலபோய் நெருப்புக் கோழி தேடக்கூடாது” என்று எதையோ எடுத்துவிடுவார். ஒருத்தருக்கும் ஒரு எழவும் புரியாது.

“மோடி தம்முடைய வெளிநாட்டுப் பயணத்தில்…” என்று நெறியாளர் எதையோ கேட்கப்போக-
“புளியங்கொட்டை வளைஞ்சிருந்தா கொடுக்காப்புளி ஆகாது. கொடுக்காப்புளியை வண்டியேற்றினா வாழைக்காய் வேகாது” என்பார்.

“ஸ்டாலின் நடைப்பயணத்தில் மக்கள் கூட்டம் அதிகமாய் சேர்கிறதே……” என்பதுபோல் யாரோ சொல்லப்போக ஒரு விசித்திரமான குரலில் சமரசத்தின் பதில் பாய்ந்து வரும் – “ஐயா காத்து வீசினா காஞ்சிபுரம் பாடும். களரி வீசினா சிலையெழுந்து ஆடும்” என்பார். கேட்பவர்களுக்குச் சிரித்துச் சிரித்து மாளாது.  

ரெகுலர் பேச்சாளர்கள் வரிசையில் இவர்களுக்குச் சற்றும் சளைக்காத இன்னொரு அப்பாடக்கர் சுமந்த் சி.ராமன்.

பல் டாக்டரான இவர் பொதிகை டிவியில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்தியபோது  பார்க்கிறவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். விளையாட்டில் இவருக்கிருந்த அபரிமிதமான விருப்பமும், அர்ப்பணிப்பும், விஷயஞானமும் பார்க்கிறவர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்ச்சி மூலம் தாம் ஏற்படுத்திவைத்திருந்த இமேஜைக் குறைத்துக்கொள்ள இவருக்கு ‘அரசியல் களம்’ தேவைப்பட்டிருக்கிறது. நடுநிலையாளர், நடுநிலைச் சிந்தனையாளர் என்ற பெயர்களில் வரும் இவர் அதிதீவிர அதிமுக தொண்டனைவிடவும் மோசமாக அதிமுக பாட்டுப் பாடுகிறார். ‘வேறு யாரையுமே பேச விடாமல் நிகழ்ச்சி முழுவதற்கும் தாம் ஒருவரே பேசிக்கொண்டிருக்கவேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த இவர் முயலும் விதம் இவர் மீதான மரியாதையை வெகுவாகக் குறைக்கிறது.

அதிமுகவுக்கு இவர்கள் இல்லாமல் பேசக்கிடைக்கிறவர்கள் செ.கு.தமிழரசன், தனியரசு, மற்றும் மாபா பாண்டியராஜன். இவர்கள் மூவருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

மா.பா.பாண்டியராஜன் தேமுதிகவிலிருந்து வெளியேறியவர். அதிமுக தொண்டரைப்போல சரணம் சர்வகதி என்று சரணடையவும் முடியாமல், பெரிய மனிதத்தோரணையைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாமல் இவர் தவிக்கும் தவிப்புதான் இவரது ஹைலைட். அதனால் “இத பாருங்க,,,, இதபாருங்க” என்று டிஸ்கஷன் முடிகிறவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இவரது பாணி.

திமுக சார்பாகப் பேச அப்பாவு, பரந்தாமன், சிவஜெயராஜ், கண்ணதாசன் என்று சிலர் வருகிறார்கள். இவர்களில் அப்பாவு ஒருவரைத்தவிர மற்றவர்கள் புதுமுகம். அப்பாவு காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு வந்தவர். தமது தொகுதியில் கட்சி அடையாளங்களை உதறி சுயேச்சையாக நின்று வெற்றிபெறுமளவுக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்தவர். அரசியலில் ஏகப்பட்ட அனுபவங்கள் மிக்கவர். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எந்த விஷயமாயிருந்தாலும் விவாதிப்பதில் வல்லவர்.

எத்தனை இருந்து என்ன? அப்பாவுவை இந்த ‘நெறியாளர்கள்’ பேச விட்டால்தானே?

“கலைஞர் தம்முடைய ஆட்சியில்” என்று அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “எம்ஜிஆர் மதுவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கலாம். திரும்பவும் கலைஞர் இருபதாண்டுக்காலம் ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் அமல் படுத்தவில்லை?” என்று மேற்கொண்டு பேசவிடாமல் கேள்வி கேட்பார்கள்.

“தளபதி ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தில்” என்று அப்பாவு துவங்கும்போது “ஸ்டாலினுக்கு எந்தக் கட்சித் துணையும் இல்லாமல் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதென்றால் எந்தக் கட்சித்துணையும் இல்லாமல் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். எந்தக் கூட்டணியும் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா?” என்று அடுத்த கேள்வியை வீசுவார்கள்.

“அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. ஜெயலலிதா கொடநாட்டில்…” என்று ஏதோ சொல்ல அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “2ஜி வழக்கில் உச்சநீதி மன்றத்தில் கனிமொழியின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர் வழக்கைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இத்தனை வழக்குகளை வைத்துக்கொண்டு திமுக எந்த தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கப்போகிறது?” என்று குறுக்குசால் ஓட்டுவார்கள்.
து அப்பாவு ஒருத்தருக்கு மட்டும் ஏற்படும் நிலைமை அல்ல. திமுக சார்பாக யார்யார் பேச வருகிறார்களோ அவர்கள் அத்தனைப் பேருக்கும் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்படும் கதி இதுதான். எந்த வகையிலும் திமுகவின் ‘வாய்ஸ்’ ஒலித்துவிடக்கூடாது என்பதுதான் ஊடகங்கள் எடுத்திருக்கும் கொள்கை சார்ந்த முடிவு.

அதாவது திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவின் பதில்கள் வந்துவிடக்கூடாது. அதேபோல் திமுக மற்றவர்கள் மீது - குறிப்பாக அதிமுகவின் மீதும், ஜெயலலிதாவின் மீதும் - எந்தவித குற்றச்சாட்டையோ விமரிசனத்தையோ வைத்துவிட அனுமதிக்கவும் கூடாது. இதில் மிகவும் கவனமாக இருப்பவர்களாக ரங்கராஜ் பாண்டே, ஹரிஹரன், தியாகச்செம்மல், கார்த்திகைச் செல்வன் ஆகியோரைச் சொல்லலாம். ஓரளவு பதில் சொல்ல அனுமதிக்கிறவர்களாக குணசேகரன், செந்தில் ஆகியோரைச் சொல்லலாம்.

நான்குபேர் கொண்ட குழு விவாதத்தைத் துவங்கும் என்பதாகப் பார்த்தோம். ஒரு விவாதப் பொருளைப் பேச ஆரம்பிக்கிறவர்களை வரிசையாகப் பேசச் சொல்வார்கள். திமுகவினரை நான்காவதாகத்தான் பேச அழைப்பார்கள். இதில் ஒரு பெரிய சூட்சுமம் இருக்கிறது.

அதாவது மூன்று பேரும் பேசி முடித்துவிட்டு நான்காவதாக இவர்களிடம் வருகிறார்கள் இல்லையா? இவர்கள் ஏதாவது சொல்லப்போக முதல் வார்த்தையிலேயை இடைமறித்து வேறொரு கேள்வி கேட்பது, அதற்கு திமுக பிரமுகர் பதில் சொல்ல ஆரம்பித்து முதல் வார்த்தைச் சொன்னதுமே மற்றொரு கேள்வி எழுப்புவது, அதற்கும் பதில் சொல்லமுனைந்தால் மறுபடி வேறொரு கேள்வி போடுவது என்று இருக்கிறார்கள் இல்லையா? அதையும் தாண்டி திமுகவினர் சமாளித்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருக்கவே இருக்கிறது அடுத்த பிரம்மாஸ்திரம். “ஒருநிமிஷம். நீங்க உங்க பதில்களை ஒரு பிரேக்குக்கு அப்புறம் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு இடைவேளை விட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

இடையிலேயே “என்னை பதில் சொல்லவே விடமாட்டேன்றீங்க. இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்” என்று திமுக பிரமுகர் சொன்னால் இவர்களிடம் ஸ்டாக் இருக்கும் ஒரே பதில். 

“நான் உங்க கிட்டேதான் வர்றேன். உங்களைத்தான் கேட்கறேன்”

இவர்களின் இந்த பாச்சாவை பலிக்காமல் செய்த பிரபலங்கள் சிலரும் உண்டு. குறிப்பாக வசந்தி ஸ்டான்லி. “இருங்க தம்பி. நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவே ஆரம்பிக்கலை. என்னைப் பேசவே விடாம நீங்க பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தா என்ன அர்த்தம்? என்னை வைச்சுக்கிட்டு நீங்க பேசறதுன்னா என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று ஒரு அதட்டல் போட்டு பதில் சொன்னவர் அவர். ஆனால் எல்லாப் பிரபலங்களும் இதனைச் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

அந்தக் காலத்திலெல்லாம் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஆங்கிலச் சேனல்களில் வெறும் சோ மட்டுமே வந்துகொண்டிருப்பார். தமிழில் ஞாநியை மட்டும்தான் வரவழைப்பார்கள். இப்போதுதான் எல்லாப் பத்திரிகையைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இவர்களில் துக்ளக் ரமேஷ் என்ற ஒருவரைத்தவிர (இவர் மட்டுமே அதிமுக சார்பு) மற்ற எல்லாப் பத்திரிகையாளர்களும் நடுநிலையாளர்களாத்தான் இருக்கிறார்கள். அதுவும் திரு.மணியின் அலசல்கள் கவனத்துக்குரியவை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இம்மாதிரியான தடங்கல்களும், தடைக்கற்களும் எத்தனைப் போடப்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துக்கொண்டு சுலபமாக ஸ்கோர் செய்துவிட்டுப் போகும் ஒரு சிலர் இருப்பார்கள் இல்லையா? அம்மாதிரியான ஒருவர்-
தமிழன் பிரசன்னா!

திமுகவைச் சேர்ந்த இளம் வக்கீலான இவரிடம் இந்த நெறியாளர்கள், வெறியாளர்கள் யாருடைய குயுக்தியும் செல்லுபடி ஆவதில்லை. எப்படிப் போட்டு வளைத்தாலும் அத்தனை வியூகங்களையும் உடைத்துக்கொண்டு வந்து தம்முடைய கருத்தை நிலைநாட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார் இந்த இளைஞர். அரசியல் விவாதங்களில் ஒரு நட்சத்திரம் போல் பவனி வருகிறார் இவர். இந்த இளைஞர் பங்குபெறும் விவாதங்களைப் பார்க்கும் நேயர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.