Thursday, September 29, 2011

மாதம்பட்டி சிவகுமாருக்கு அஞ்சலி!


மாதம்பட்டி சிவகுமார் மறைந்துவிட்டார்.
மாதம்பட்டிமண் தன்னுடைய தவப்புதல்வரை இழந்துவிட்டது.
கோவை மாநகரம் பிரமுகர்களில் ஒருவரைத் தொலைத்துவிட்டது.
நடிகர் சத்யன் தம்முடைய பாசத்துக்குரிய தந்தையை இழந்துவிட்டார்.
நடிகர் சத்யராஜ் தம்முடைய இன்றைய நிலைமைக்குக் காரணமான அருமை அண்ணனை இழந்துவிட்டார்.
நடிகர் சிவகுமார் தம்மை அணைத்துப் பாராட்டி சீராட்டிக் கொண்டாடிய கெழுதகை நண்பர்களில் ஒருவரை இழந்துவிட்டார்.
மாதம்பட்டி சிவகுமார் போன்று அன்பு பாராட்டுகிறவர்களைக் காண்பது அரிது. அன்பையும் பாசத்தையும் மழையாக்ப்பொழிந்து மற்றவர்களைத் திக்குமுக்காடச் செய்வதில் அவருக்கு இணை அவர்தான்.
அவருடைய குட்புக்ஸில் யார்யார் இருக்கிறார்களோ அவர்கள் அத்தனைப்பேரின் பிறந்த நாட்களுக்கும் வரும் முதல் வாழ்த்து அவருடையதாகத்தான் இருக்கும்.
கடந்த முப்பது வருடங்களாக என்னுடைய பிறந்தநாளுக்கும் வந்துகொண்டிருந்த முதல் வாழ்த்து அவருடையதுதான்.
மாதம்பட்டியிலிருந்துகொண்டு பல்வேறு திசைகளிலும் பொழிந்துகொண்டிருந்த பாசமழை திடீரென்று நின்றுவிட்டதைத் தாங்கிக்கொள்ள திடமான சித்தம் வேண்டும்.
மாதம்பட்டி சிவகுமார் பற்றி என்னுடைய தளத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கும் பதிவை அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக மறுபடியும் இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.
பிரபலமான மனிதர்களில் இரண்டுவகை உண்டு. புகழ் பெற்ற பிரபலங்கள் ஒருவகை, அந்தப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவகுமார். நடிகர் சத்யராஜுக்கு அண்ணன்முறை. நான் இன்றைக்கு இந்த அளவு புகழ் பெற்றவனாக வந்திருக்கிறேன்னா அதுக்கு அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான் காரணம்" என்று சத்யராஜால் அடையாளம் காட்டப்படுபவர். விஜய், அஜீத், சூர்யா துவங்கி சிம்பு வரையிலும் இளைய தலைமுறையின் எந்தப் பெரிய நடிகர்கள் நடித்தாலும் எல்லாரின் படங்களிலும் காமெடியில் கலக்குபவர் நடிகர் சத்யன். அந்த சத்யனின் தந்தை இவர்.

கோயம்புத்தூர் பகுதியில் மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எம்.என்.எஸ் என்றும் மாதம்பட்டிக்காரர் என்றும் அறியப்படுபவர். குறுநில மன்னர் பரம்பரை. ஒரு காலத்தில் ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து பின்னர் அவ்வளவையும் விற்று நிறையப் படங்கள் எடுத்து (நினைவிருக்கிறதா? சின்னத்தம்பி பெரிய தம்பி) தற்போது விவசாயம் பார்க்கக் கூடிய அளவு மட்டும் நிலத்தை மட்டும் வைத்து நிர்வகித்து வருபவர்.

இவரது அன்புப் பட்டியல் மிகப்பெரியது. அந்த அன்புப் பட்டியலில் ஒருமுறை விழுந்து விட்டால் போதும். அவர்கள் விக்கித்துப் போகும் அளவுக்கு அன்பாலும் உபசரிப்பாலும் திக்குமுக்காடச் செய்துவிடுவார். அவர்களின் பிறந்த நாளை அவர்களுக்கே தெரியாமல் குறித்துவைத்துக் கொள்வார். பிறகு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பெற்றவர்களிடமி ருந்தும் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் வாழ்த்து வருகிறதோ இல்லையோ முதல் வாழ்த்து இவரிடமிருந்து வந்துவிடும்.

மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …....எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர். எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”
'
நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்" என்கிறார்.

"
சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா " என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.

இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக்ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.

எழுத்துக்களில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு மனம் பறிகொடுத்தவர். எந்த அளவு ஈடுபாடு எனில் எண்பதுகளின் மத்தியில் நான் கோவையில் இவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிப் பேசினோம். அவரைச் சந்திக்க வேண்டுமே ஏற்பாடு செய்ய முடியுமா ?” என்று கேட்டார்.
"அதற்கென்ன பெங்களூர் சென்றதும் ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். பெங்களூர் வந்ததும் சுஜாதாவிடம் சொன்னேன். அழைத்து வாருங்களேன்" என்றார் சுஜாதா. மாதம்பட்டிக்காரருக்குத் தெரிவித்தேன் . அவ்வளவுதான். அடுத்த ஃபிளைட் பிடித்து பெங்களூர் வந்தார். சுஜாதாவைச் சந்தித்துப் பேசினார்.மறு ஃபிளைட்டில் கோயம்புத்தூர் திரும்பிவிட்டார்.
எண்பதுகளில் 'கிராமர் வெர்ஸஸ் கிராமர்' என்றொரு ஆங்கிலப்படம் வந்தது. பாசத்தைப் பிழிந்துதரும் படம். 'பாசமலர் அளவுக்கு மனதை உருக்குகிறது. படம் பார்த்து அழாமல் வரமுடியாது ' என்ற விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருந்த வெற்றிகரமான படம் அது. இங்கே வர தாமதாகும்போல் தெரிகிறது. பெங்களூருக்குப் படம் வந்தால் தெரிவியுங்கள்" என்று கடிதம் போட்டிருந்தார் மாதம்பட்டி சிவகுமார். படம் பெங்களூர் வந்ததும் தெரிவித்தேன். அடுத்த நாளே காரை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்துவிட்டார் என்பது முக்கியமல்ல. படத்திற்குக் கிளம்பும்போது சூட்கேஸைத் திறந்து ஆறேழு கைக்குட்டைகளை எடுத்துக்கொண்டார். எதுக்குசார் இவ்வளவு கைக்குட்டைகள் ?” என்றேன்.
"
படம் ரொம்ப சோகமாயிருக்கும். நிறைய அழுகை வரும் என்றார்களே" என்றார்.

அந்த ரசனையுள்ள குழந்தை படத்தின் பல இடங்களில் கேவிக்கேவி அழுததை கலைக்க விரும்பாமல் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நல்ல ரசனை உள்ளவர்கள் தாம் ரசித்ததை அழகாக மற்றவர்களிடம் விவரிப்பதைக் கேட்பது ஒரு தனி அனுபவம். கண்ணதாசன் பாடல் எழுதிய நாளில் உடனிருந்து அதனை அனுபவித்த விவரத்தை இவர் சொல்வதைக் கேட்க வேண்டும். …...."சிவகுமார் அண்ணன் நடிச்ச படம் 'சந்ததி'.இந்தப் படத்திற்காக கவிஞர் பாடல் எழுதும் அனுபவத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களோடு நானும் சென்னிருந்தேன். கவிதா ஓட்டல்ல கவிஞர் வந்து உட்கார்ராரு. நாங்கள்ளாம் அவர்  யார்யார் இருக்காங்கன்னு கேட்கறார். தொகையறா வேணுஅந்தப் படத்திற்கான ஒரு பாடல் கம்போசிங்கிற்காக நானும் உடன் சென்றிருந் முன்ன உட்கார்றோம். டைரக்டர் கதையைச் சொல்றாரு. நடிகர்கள் யார் யாருன்னு கேட்கறார் கவிஞர். பாட்டு எந்த சிச்சுவேஷன்இரவு எஃபெக்டா பகல் எஃபெக்டான்னு கேட்கறாரு. பாட்டு பிக்சரைஸ் பண்ணும்போது காட்சியிலமா அல்லது பல்லவியிலிருந்தே ஆரம்பிச்சுரலாமான்னு கேட்கறார்.
அந்த சமயத்துல டைரக்டருக்கும் அவர் உதவியாளருக்கும் தொகையறா வேணுமா வேணாமான்னு சொல்லத்தெரியலை. இல்ல இந்தப் பாட்டுக்குத் தொகையறா போட்டுக்கங்க" என்கிறார் கவிஞர். டைரக்டர் சரின்றாரு.
அதுக்குப் பிறகு ஒரு நிமிஷம்.......ஒரேயொரு நிமிஷம் டைரக்டர் சொன்ன கதையை மைண்ட்ல ஓட்டறார். அவருடைய உதவியாளரைப் பார்த்து "எழுதிக்க" என்கிறார்.

இறைவன் எழுதிய கடிதம் ஒன்று
கையினில் கிடைத்தது இன்று
அது கால்பக்கக் கடிதம்
ஆரம்பம் முடிந்து அந்திக்கு வருகின்றது-உண்மை
சந்திக்கு வருகின்றது
எழுதி முடித்ததும் டைரக்டர் பாட்டில் புற்றுநோய் வரணும் என்கிறார்.
"
அது அவ்வளவு நல்லா இருக்காதே" என்கிறார் கவிஞர்.
"
இல்லைங்க கதை அதுதான். கதாநாயகனுக்கு ப் புற்றுநோய். ரத்தப் புற்றுநோய். அவன் சாகப்போறான். அந்த வார்த்தைப் பாடலில் வரணும்" என்கிறார் டைரக்டர்.

அப்படியா என்று யோசிக்கிறார் கவிஞர். ஒரு நிமிடம்....ஒரே நிமிடம்தான்.
'
என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன்
சந்ததியில் விருப்புற்று நோய் தந்தான் தந்தை
அப்போது புரியவில்லை ஆண்டவனின் வடிவம்
இப்போது வருகிறது இறைவனவன் கடிதம்-
அப்படின்னாரு. அப்படியே மலைச்சு மந்தரிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தோம். அந்தப் படத்தின் கதை என்னன்னா, வாடகைக்கு ஒரு விலைமாதைக் கொண்டுவந்து சந்ததிக்காக அவள் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது...பின்னர் அவளுக்குக் காசு கொடுத்து அவளை அனுப்பிவிடுவது. இவருக்கு யாரும் சொந்தத்துல பொண்ணுதர மாட்டாங்க. அதுக்காக வாடகைத் தாயார் அப்படின்றது கதை. வாடகைத்தாயா ஸ்ரீபிரியா நடிச்சிருந்தாங்க. இதைச் சொல்லி முடிச்சதுதான் தாமதம்.
'
இரவுக்கு வாழ்ந்த பெண்களில் ஒருத்தி
உறவுக்கு வந்தது என்வீடு-அதில்
வரவுக்கு ஒன்றை வைத்த பின்னாலே
செலவில் முடிந்தது என் ஏடு
வேலியில் ஒருவன் தாலியில் ஒருத்தி
யார்கடன் முதலில் நான் கொடுப்பேன்-என்
வேஷத்தில் ஒருவன் பாசத்தில் பிறப்பான்
வானத்தில் இருந்தே நான் பார்ப்பேன்'அப்படீன்னார்.அந்தக் கணம், அந்தக் கணத்தில் எழுதியது. ரூம் போட்டோ, நேரம் எடுத்துக்கொண்டோ, வீட்டுக்குப்போய் யோசிச்சோ எழுதியதில்லை.
அப்போதே அந்த நேரத்திலேயே எழுதியது. டைரக்டர் புற்றுநோய் வரணும்னு சொன்னதுக்காக என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன், விருப்புற்று நோய்தந்தான் தந்தை என்று அற்புதமாக அந்தச் சொல்லை வரவழைத்தார். தொடர்ந்து-
ஒருதுளி நீரில் ஆறடி உருவம்
உலகினில் வந்தது அவனாலே
அந்த ஆறடி உருவம் ஆறடி நிலத்தில்
அடங்கப் போவதும் அவனாலே- என்று தொடர்ந்து எழுதி முடிக்கிறார். கேட்ட மாத்திரத்தில் கதையையும் காட்சி
நியையும் சொன்ன மாத்திரத்தில் அருவிபோலக் கொட்டிமுடித்ததை இப்ப னைச்சாலும் உடம்பெல்லாம் சிலிர்க்குது" என்றார் மாதம்பட்டி சிவகுமார்.
கோவைத் தங்கங்களில் மாதம்பட்டியும் ஒன்று!

Monday, September 26, 2011

நீல்கிரீஸும் பில்லியர்ட்ஸும் சென்னியப்பனும்



குமுதம் பால்யூ வானதி சோமு ஆகியோர் திடீரென்று வீட்டிற்கு வந்தனர். “கிளம்புங்கள் நீல்கிரீஸ் சென்னியப்பனைச் சந்திக்கப்போகவேண்டும் என்றனர். அது தொண்ணூறுகளின் இறுதி. இன்னமும் சில வருடங்களில் புகழ்பெற்ற நீல்கிரீஸ் நிறுவனம் தன்னுடைய நூறாவது ஆண்டினைக் கொண்டாடவிருக்கின்றது. அதனையொட்டி நீல்கிரீஸ் சேர்மன் சென்னியப்பனின் வாழ்க்கை வரலாற்றை வானதிபதிப்பகம் சார்பில் கொண்டுவரலாம். சென்னியப்பனின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததுதானே நீல்கிரீஸின் வரலாறு என்றனர். உடனடியாகக் கிளம்பினோம்.

பெங்களூர் என்றாலேயே பிரிகேட் ரோடு; பிரிகேட் ரோடு என்றாலேயே நீல்கிரீஸ் என்ற நினைவுகளை பெங்களூரில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே அறிவர். உங்களுக்குத் தெரியுமா? இப்போது நாடெங்கும், ஏன் உலகெங்கும் Mall கலாச்சாரம் நிறைந்திருக்கிறதே, departmental stores என்ற பல்துறை அங்காடி எனப்படும் கருத்துரு (concept) நீக்கமற நிறைந்திருக்கிறதே- அந்தக் கருத்தோட்டத்தை முதன்முதலாக பெங்களூருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே கொண்டுவந்தது நீல்கிரீஸ்தான், சென்னியப்பன்தான். சென்னியப்பன் அவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கிளிலிருந்து கொண்டுவந்த சிந்தனைதான் அது.

நீல்கிரீஸ் மட்டுமல்ல, பெங்களூரில் பில்லியர்ட்ஸைக் கொண்டுவந்து பிரபலப்படுத்தியவரும் சென்னியப்பன்தான். முதன்முதலில் பில்லியர்ட்ஸை நீல்கிரீஸின் மாடியில்தான் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார் அவர். இங்கே அவருடன் உற்சாகமாக பில்லியர்ட்ஸ் ஆடிய பிரபலங்களில் ஒருவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குண்டுராவ்.

தமிழ் பத்திரிகையாளர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்தவர் சென்னியப்பன். ஆசிரியர் சாவி அவர்களுடன் நெருங்கிய தொடர்பு; அதனால் சாவி பெங்களூர் வரும்போதெல்லாம் ‘நீல்கிரிஸ் நெஸ்டில்தான் தங்குவார், சென்னியப்பனின் விருந்தினராகத்தான் இருப்பார். சாவியிடம் சொல்லி கலைஞரை ஒருமுறை நீல்கிரீஸுக்கு வரவழைத்திருந்தாராம் சென்னியப்பன். அப்போது கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சர். அங்காடியைச் சுற்றிப்பார்த்த கலைஞரிடம் தமது தந்தையார் ஊட்டியில் தபால் ஊழியராக வேலைப்பார்த்துவந்தபோது அப்போதிருந்த வெள்ளைக்கார துரைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும்விதமாக முதலில் பால் வெண்ணெய் நெய் என்று ஆரம்பித்து அடுத்ததாக பேக்கரி அயிட்டங்களுக்கு வந்தோம். என்று தாம் வளர்ந்தவிதத்தைச் சொல்லியிருக்கிறார். அப்போது கலைஞர் பளிச்சென்று அடித்த கமெண்ட் “ஓ, தபாலில் ஆரம்பித்ததுதான் பாலில் வந்து நின்றிருக்கிறதோ!” கலைஞரின் இந்த கமெண்ட்டைச் சொல்லிச் சொல்லி ரசிப்பார் சென்னியப்பன்.

சாவி அவர்களின்மூலம் முன்பே அறிமுகம் கிடைத்தபோதிலும் நெருங்கிப்பழகும் வாய்ப்பு இந்த நூல் தயாரிக்கும் சமயங்களில்தான் கிடைத்தது. அவருடைய மனதைப்போலவே வெள்ளைச்சீருடை. மென்மையான குணம். அதிர்ந்து பேசாத தன்மை. சுத்தம் சுத்தம் சுத்தம்,. எல்லாவற்றிலும் ஒழுங்கு ஒழுங்கு ஒழுங்கு- இதுதான் சென்னியப்பன்! இத்தனை சாதுவான எளிமையான மென்மையான மனிதரா இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளுகிறார் என்ற ஆச்சரியம்தான் முதல் சந்திப்பிலேயே ஏற்பட்டது.

‘தன்வாழ்க்கைஎன்று சொல்லப்படும் அந்த சுயசரிதத் தயாரிப்பின்போது பலமுறை அவரைச் சந்திக்கவேண்டியிருந்தது. நீல்கிரீஸின் கடைக்கோடியில் ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்து மொத்தத்தையும் கவனித்துக்கொண்டிருப்பார். அங்காடியில் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும். சிலரைத்தவிர யாருக்கும் ‘அவர்தான் இவர் என்பது தெரியாது. “இத்தனைப் பெரிய அளவில் நீல்கிரீஸை வளர்த்தெடுத்ததற்கான ‘தொழில் ரகசியம் என்னவென்று கேட்டேன். “வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்திசெய்வது என்பதுதான் எல்லா வியாபாரிகளும் சொல்லும் தொழில் மந்திரம். அதைப் பணியாளர்கள் செய்வார்கள் என்று இருக்கக்கூடாது. உதாரணமாக யாரோ ஒருவர் வந்து “கடலைமாவு எங்கே இருக்கு?” என்று கேட்கிறார்கள் என்றால் “அதோ பாருங்கள் அந்த ஷெல்ஃபில் இரண்டாவது வரிசையில் இருக்கு என்று சொல்லக்கூடாது. எழுந்து சென்று அதை எடுத்து அவர்கள் கையில் கொடுப்பேன். இதுதான் நான் கடைப்பிடித்துவரும் தொழில்தர்மம் என்றார்.

ஒரு சமயம் அங்காடிக்குள்ளிருந்த அவருடன் பேசிக்கொண்டே அவருடைய அறைக்குச் செல்வதற்காக அவருடன் நடந்தபடி லிப்ட் அருகில் வந்தோம். நீல்கிரீஸ் முகப்பில் இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது.நீங்க லிப்டில் வாங்க. நான் படிவழியே நடந்து மேலே வந்துர்றேன் என்றார் சென்னியப்பன். அவருக்கு அப்போது எண்பதைத் தாண்டிய வயது. நானோ பல மடங்கு சிறியவன்.

“ஏன் லிப்டில் ஏறுவதில்லையா? என்றேன்.

அவர் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது.’’இல்லை லிப்ட் வாடிக்கையாளர்களின் உபயோகத்துக்குப் போடப்பட்டதுதானே? நான் உபயோகிக்கும் சமயத்தில் யாராவது காத்திருந்தால் அவர்களுக்குத் தடைப்பட்டுப் போய்விடும் இல்லையா? என்றார். தொடர்ந்து “மாடிப்படியில் ஏறும்போது ஓரத்தில் ஏறவோ இறங்கவோ மாட்டேன். படிகளின் மத்தியில் பிடிப்பில்லாமல்தான் ஏறுவேன்-இறங்குவேன். இது உடற்பயிற்சிக்காக அல்ல; எல்லாருமே பிடியைப் பற்றியபடியேதானே ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருப்பார்கள். நாம் பிடியைப் பற்றிக்கொண்டு ஏறவோ இறங்கவோ செய்யும்போது எதிரில் வருகிறவர்கள் தடை ஏற்பட்டுத் திணறிவிடுவார்கள் இல்லையா? என்றார். ஒன்று புரிந்தது. பெரிய மனிதர்கள் யாரும் சும்மா வந்துவிடுவதில்லை.

புத்தகம் தயாராகும்வரை தினமும் ஒரு தடவையாவது தொலைபேசியில் பேசிவிடுவார். இன்னைக்கு பீரோவுல தேடிட்டிருந்தேன். ஒரு காகிதம் கிடைச்சுது. அனுப்பி வைக்கிறேன். பாருங்க, அவசியம் சேர்த்துக்கங்க என்பார். உதவியாளர் கொண்டுவந்து தரும் உறையைப் பிரித்தால் தொட்டாலேயே உதிர்ந்து விழும் அளவில் பழுப்பு நிறக்காகிதம் 1938 லோ 1940 லோ செலவு எழுதிவைத்த குறிப்புடன் இருக்கும். அரையணா காலணா தொடங்கி ஆயிரம் லட்சம் கோடி என்று செலவு செய்ததும் வரவு கொண்டதும் அவரிடம் இருக்கும். “ஒரு ரூபாய் வரவையும் சரி செலவையும் சரி அது பற்றிய குறிப்பு இல்லாமல் இதுவரைக்கும் பயன்படுத்தியதே இல்லை என்பார்.

‘நீல்கிரீஸை ஆரம்பித்து இத்தனைப் பிரபலப்படுத்தியிருக்கிறீர்கள். இதில் பெரிய சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்?என்ற கேள்விக்கு அவர் சொன்னார். “அப்போதெல்லாம் எங்கள் சொந்த ஊரில் அங்கங்கே நிறைய மாடுகள் எல்லா வீடுகளிலும் வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லாரிடமிருந்தும் பாலைக் கறந்து வாங்கி ஒன்று திரட்டி அதனை டெய்ரி வடிவில் கொண்டு வந்தோம். பின்னர் ஒரு கட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுமைக்குமே எங்களின் பால் டெய்ரி வீட்டுக்கு வீடு செய்யப்படும் ஒரு மிகப்பெரிய பிசினஸாகவே மாறிற்று. நிறைய குடும்பங்களுக்கு இதனால் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. இது ஒன்று; இரண்டாவது மிக முக்கியமானது. வெள்ளைக்காரனின் காலத்திலிருந்து இங்கே பிரெட் புழக்கத்திற்கு வந்தது. ஆனாலும் மக்கள் மத்தியில் பிரெட் என்பது யாருக்கும் காய்ச்சல் வந்தால் சாப்பிடவேண்டியது என்கிற எண்ணம்தான் இருந்தது. ஆஸ்பத்திரிகளில் கொடுக்கப்படும் நோயாளிகளுக்கான ஒரு உணவு என்கிற மனப்பான்மைதான் இருந்தது. அவர்களிடம் இருந்த இந்த எண்ணத்தை மாற்றுவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. மிகப்பெரும்பாடுபட்டு மக்களிடமிருந்த இந்த எண்ணத்தை மாற்றினோம். அது ஒரு பெரிய கருத்துப்புரட்சி என்றே சொல்லலாம். நீல்கிரீஸின் இந்த சாதனை எங்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது இதனை மாற்ற நாங்கள் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. இந்த எண்ண மாறுதல் எங்களுக்கு மட்டுமல்லாமல் பேக்கரி தொழில் புரியும் அத்தனைப் பேருக்குமே பயன்படுகிற ஒன்றாக மாறியதை நீல்கிரீஸின் சாதனை என்று தாராளமாகச் சொல்வேன்

ஒவ்வொரு சின்னச்சின்ன சம்பவத்தையும் டைரியாக எழுதி வைத்திருந்தார். அவ்வளவையும் படித்துத் தொகுத்து ‘உழைப்பும் உயர்வும்- என்ற புத்தகம் வருவதற்கு ஏற்ப அவரிடம் தந்தேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. நீல்கிரிஸின் கிஃட் ஹாம்பர் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். இரண்டொரு மாதங்கள் கழித்து அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. “உங்க வீடு எங்க இருக்கு? வழி சொல்லுங்க என்றார்.

“ஐயா நீங்க எதுக்கு என்னுடைய வீட்டுக்கு வர்றீங்க? நானே வந்து சந்திக்கிறேன் என்றேன்.

“இல்லை இல்லை நான் வரணும். ஏன் வரக்கூடாதா? என்று கேட்டுச் சிரித்தார்.

“நீங்க வர்றீங்கன்னா அது பெரிய விஷயம். எனக்கு மிகவும் பெருமை என்று சொல்லி விலாசம் சொன்னேன். “போன் பண்ணிட்டு இந்த வாரத்திலேயே வர்றேன் என்றார்.ஆனால் வரவில்லை. ஒரு இரண்டொரு மாதம் கழிந்தது. சரி அவராகவே போன் செய்யட்டும் என்று நானும் இருந்துவிட்டேன். ஒரு நாள் திடீரென்று அவரிடமிருந்து போன். குரல் மிகவும் நைந்து போயிருந்தது. “உங்கள்ட்ட பேசின அடுத்த நாளே வயித்துல பெரிய பிராப்ளம். திடீர்னு வெளிநாடு போயிட்டேன். அங்கே ஆபரேஷன் முடிந்து இப்பதான் பெங்களூர் திரும்பியிருக்கேன். என்று சொல்லி உடல்நலம் பற்றிய செய்திகளைச் சொன்னார். நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். உடல் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தது.

கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தொலைபேசி வந்தது. “நம்ம புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் துணை ஆசிரியரே மொழிபெயர்ப்பைச் செய்கிறார். என்ற தகவல் சொன்னார். ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அங்கே சென்றிருந்தபோது வீரப்ப மொய்லியிடம் “தமிழில் என்னுடைய புத்தகம் தொகுத்து எழுதியவர் இவர்தான் என்று அறிமுகம் செய்துவைத்தார்.

அதன்பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படவில்லை. இரண்டொருமுறை தொலைபேசியில் பேச நேர்ந்ததோடு சரி. ஒரு நாள் காலை பத்துமணி இருக்கும். அவரிடமிருந்து போன் வந்தது. “வணக்கம் எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்தார். அவர் குரலில் வழக்கமான உற்சாகம் இல்லை. முன்பொருமுறை உடல்நலமில்லாதபோது பேசினாரே அந்த அளவுக்கு நைந்துபோயிருந்தது குரல். “ஐயா உடல்நலமில்லையா?” என்றேன் பதட்டத்துடன்.

“நீங்க பத்திரிகைப் பார்க்கலையா இன்னும்? என்றார்.

“இல்லைங்களே என்றேன்.

“பெங்களூர் நீல்கிரீஸை வித்துட்டோம். பெருவாரியான பங்குகள் கைமாறிவிட்டன. மிகச்சிறிய அளவிலான பங்கை மட்டுமே வைச்சிருக்கோம். டைம்ஸ் பாருங்க முழுமையாகப் போட்டிருக்காங்க என்றார். நீல்கிரீஸை விற்க நேர்ந்த காரணத்தை தழுதழுத்த குரலில் சுருக்கமாகச் சொன்னார். “நஷ்டமெல்லாம் ஒண்ணுமில்லை. இனிமேல் முன்னை அளவுக்கு கவனிக்கமுடியாது. நம்ம காலத்துக்குப் பிறகு ஏதாவது நேர்வதற்கு முன்னேயே இப்போதே எல்லாருக்கும் செட்டில் செய்துவிடுவது நல்லதில்லையா? என்று ஒரு சராசரிக் குடும்பத்தலைவர் போல் அவர் கேட்டபோது நெஞ்சை என்னமோ பிசைந்தது.’’ரெண்டு மூணுநாள் விட்டுட்டு நீங்க நேர்ல வாங்க பேசுவோம் என்றார்.

அதன்பிறகு ஒரேயொருமுறை அவரிடம் தொலைபேசியில் பேசினேன். “இந்த வீட்டையும் இடிச்சு கட்டணும். அதுவரை ஹெச்செஸ்ஸார் லேஅவுட்டில் கொஞ்ச நாட்களுக்கு இருப்போம். நான் அந்த விலாசம் தருகிறேன்.அப்புறமா வாங்க என்றார். அவரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏனோ அதன்பிறகு இதோ இந்நாள்வரையிலும் கிடைக்காமலேயே போய்விட்டது. நீல்கிரீஸ் சென்னியப்பன் மறைந்துவிட்டார் என்கின்றன பத்திரிகைகள்.

சில மனிதர்களை நாம் மட்டுமல்ல சரித்திரத்தாலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பெங்களூர் நகரம் இருக்கிறமட்டிலும் பிரிகேட் ரோட்டையும் நீல்கிரீஸையும் யாராலும் மறந்துவிடமுடியுமா என்ன? நீல்கிரீஸ் என்றாலேயே சென்னியப்பன் ஐயா நினைவு வருவதையும் யாராலும் மறந்துவிட முடியுமா என்ன!

Saturday, September 3, 2011

ஜெயாவின் தீர்மானமும் தலைவர்களின் புகழாரங்களும்......


ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மூன்றுபேரின் தூக்குதண்டனையும் எட்டுவார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தூக்குதண்டனையை நிறுத்தவேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுக்க உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப்போராட்டங்களை சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்தபோதிலும் அவர்களுடைய ஆதரவு எதுவும் தேவை இல்லாமலேயே உணர்வுகொண்ட பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து போராட ஆரம்பித்த காட்சிகள்தாம் நிதர்சனமானவை. அவர்களுடைய உயிர் பறிப்பு தள்ளிப்போடப்பட்டதற்கு கோர்ட்டின் உத்தரவுதான் காரணமென்றபோதிலும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற சட்டமன்றம் மக்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் தீர்மானம் அவ்வளவு சாதாரணமாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டாக வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தீர்மானம் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பதிலும் அதற்காக மாநிலமுதல்வருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சட்டமன்றம் இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது; அதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்த நிலைமையில்தான் நீதிமன்றத்தில் விவாதம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் ஜெயலலிதா அப்படியொரு சூழலைத்தான் அதற்கு முந்தைய தினம்வரை ஏற்படுத்திவைத்திருந்தார். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் பற்றி பேச யாரையும் அனுமதிக்காத நிலைமை. புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த விஷயம்பற்றிப்பேச அனுமதிகிடைக்காததனால் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறார். 

மக்களெல்லாரும் கொதிக்கின்றனர். தலைவர்களெல்லாரும் வேண்டுகோளுக்குமேல் வேண்டுகோளாய் வைக்கின்றனர். முதல்வர் அசைந்துகொடுக்கவில்லை. ஆனால்-

ஜெயலலிதா வானத்தைக்கீறி வைகுண்டம் காட்டப்போகிறார் என்று நம்பிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த சிறுகட்சித்தலைவர்களும் சில இயக்கங்களின் தலைவர்களும் தங்களுடைய மானசிகத்தலைவி தாங்கள் எதிர்பார்த்ததுபோல எதுவும் செய்யவில்லை என்றதும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இன்னமும் தொடர்ந்து அந்தத் தங்கத்தலைவியை எப்படியெல்லாம் மனம்குளிரவைக்கமுடியுமோ அப்படியெல்லாம் மனம் குளிரவைக்க என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் தவறாமல் செய்துகொண்டு இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்! இது அவர்களுக்கு மிக சுலபமான காரியமாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர் மனம் குளிர இரண்டு காரியங்கள்தாம் தேவை.

ஒன்று, கருணாநிதியை மிகக் கேவலமாக வசைபாட வேண்டும்.

இரண்டாவது, தங்கத்தலைவியை மிக அதிகமாகப் புகழவேண்டும்.

இது இரண்டையும் அவர்கள் ஜெயலலிதாவுக்காகச் செய்வதில் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இந்தச் செய்கையை செய்வதற்கு அவர்கள் ஈழத்தமிழர்களின் விவகாரத்தைjfப் பயன்படுத்துகிறார்களே என்பதுதான் நாம் ஆட்சேபிக்கவேண்டிய விஷயமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினார். பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்றும் கோரினார். வானமே இடிந்து சிங்களர்கள் தலையில் விழுந்துவிட்டது என்பதுபோன்ற பிரமை இங்கே இருக்கும் தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழீழமே கிடைத்துவிட்டது என்பதுபோன்ற குரலை தமிழ் உணர்வாளர்கள் எழுப்ப ஆரம்பித்தனர். 

தமிழக மீனவர்கள் இனிமேல் தாக்கப்படமாட்டார்கள் ஏனெனில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. ஜெயலலிதாவை எதிர்த்து இங்கு எவன் வாலாட்டமுடியும்? என்ற கேள்வி அப்பாவித்தனமாக முன்வைக்கப்பட்டது. ‘ரவுடிகள் கொள்ளையர்கள் கொலைக்காரர்கள் அத்தனைப்பேரும் வெளிமாநிலத்துக்கு ஓடிவிட்டார்கள். நான் வந்துவிட்டேன் இல்லையா? என்ற சுயதம்பட்டத்தை அவரே தனக்குத்தானே வேறு எழுப்பிக்கொண்டார்.

எல்லாமே காமெடியாகப்போயிற்று.

கொலையும் கொள்ளையும் ரவுடியிசமும் எப்போதும்போல் நீக்கமற நடந்தன. போதாததற்கு 
சில சிரிப்புத்திருடர்கள் அவர் கட்சி எம்எல்ஏவும் இலக்கியவாதியுமான பழ கருப்பையா வீட்டிலேயே கொள்ளை நடத்தி ஜெயலலிதாவுக்கு பெப்பே காட்டினர். ஜெயலலிதா என்பது ஒரு ஒப்புயர்வற்ற வீரதீர சக்தி அவரிடம் அவ்வளவு சுலபமாக யாரும் வாலாட்டிவிட முடியாது என்ற பிம்பத்தை சர்வ சாதாரணமாய் உடைத்துக்காட்டினார் பாண்டிச்சேரியின் ரங்கசாமி. தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து வெற்றிபெற்ற முடிவுகள் வந்ததும் ஜெயலலிதாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் புறக்கணித்தார் அந்த மனிதர்.

சிங்களனின் கைவரிசையும்  தமிழக மீனவர்களிடம் வழக்கம்போல் தொடரவே செய்தது. அவன் பாட்டுக்கு மீனவர்களைக் கைதுசெய்வதும், நிர்வாணப்படுத்துவதும், வலைகளை அறுப்பதும், மீன்களைப் பிடுங்கிக்கொண்டு அடித்து விரட்டுவதும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜெயலலிதாவின் வீரமும் தீரமும் பல்வேறு தோல்விகளாலும் ஊழல் மற்றும் மகளின் சிறைவாசம் ஆகியனவற்றாலும் காங்கிரசின் போங்காட்டத்தினாலும் நொந்து நூலாகிப்போயிருக்கும் கருணாநிதியின் கட்சியினரைத் துன்புறுத்துவதிலும் வேட்டையாடுவதிலும் மட்டுமே தொடர்ந்தது. அவருடைய வீரதீர வேடத்துக்கு ஊடகங்களும் வழக்கம்போல் துணைபுரிந்தன.

கலைஞர் ஏற்கெனவே போட்ட பல்வேறு தீர்மானங்களைப் போன்ற தீர்மானங்களையே ஜெயலலிதாவும் போட்டார் என்றபோதிலும் சந்தர்ப்பங்கள் ஜெயலலிதாவின் தீர்மானத்தைத் தூக்கிப்பிடித்தன. ஆனால் இந்தத் தீர்மானங்கள் மக்களின்- குறிப்பாக இளைஞர்களின் வாக்குகள் தேர்தலில் எந்தக் காரணத்திற்காக விழுந்ததோ அந்தக் காரணத்தைச் சார்ந்ததாகவும் அதற்கு ஆதரவாகவும் இருந்துவிட்டுப்போகட்டுமே என்ற பாவனையில் ஒப்புக்காகப்போடப்பட்ட தீர்மானங்களாகவே இருந்தன என்பதுதான் உண்மையான உணர்வாளர்களின் சந்தேகங்களாக இருந்தது. அந்தச் சந்தேகங்களை உறுதிசெய்வதுபோன்றே இருந்தன ஜெயலலிதாவின் நடவடிக்கைகள். மூன்றுபேரின் தூக்குதண்டனை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதனை எதிர்த்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகளும் வேண்டுதல்களும் பல்வேறு முனைகளில் இருந்துவந்தபோதும் கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை அவர். அதுமட்டுமின்றி அதற்குத் தமக்கு அதிகாரமில்லை என்றும் அறிவித்தார்.

கருணாநிதியின் இரட்டைவேடம், பித்தலாட்டம், கபட நாடகம் – இவையெல்லாம் ஜெயலலிதாவின் விமரிசனங்கள். இவை அப்படியே தமக்கும் பொருந்தும் என்பதை அம்மையார் மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை.

ஏனெனில் முதல்வர் முடியாது என்று சட்டமன்றத்தில் சொல்லிவிட, அதுபற்றிக் கவலைப்படாத மக்கள் கூட்டம் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டது. சட்டக்கல்லூரி மாணவர்களும் மற்ற மாணவர்களும் தெருவில் இறங்கிப்போராட ஆரம்பித்துவிட்டனர். ரயில் மறியல்கள் நடைபெறுகின்றன. பெண்கள் தெருவில் இறங்கிவிட்டனர். பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள, மற்ற வக்கீல்கள் நீதிமன்ற வளாகங்களிலேயே போராடத்துவங்குகின்றனர். செங்கொடி என்ற பருவமலர் தீயில் தன்னையே சுட்டுப்பொசுக்கிக்கொண்ட திடுக்கிடும் செய்தி அதிர்ச்சியாய் வந்து பாய்கிறது. முத்துக்குமரன் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் மிகப்பெரிய பாதிப்பாக இந்த மரணம் இருக்குமோ என்ற அச்சம் தீயைப்போலப் பரவுகிறது.

ஏற்கெனவே உயர்நீதிமன்றமும் அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வி விஷயத்தில் தலையில் இறக்கிய சம்மட்டி அடியிலிருந்தே மீள்வதற்கு முன்னர் இப்படியொரு விவகாரம் அதுவும் இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் நேரிடையாக தெருவில் இறங்கிப்போராடும் போராட்டத்தை அவர்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கையினால் அடக்கமுடியாது என்ற மிகமிக சாதாரண எளிய உண்மையைத் தெரிந்துகொண்டதனால் ஒரு தீர்மானத்தை அவசர அவசரமாக நிறைவேற்றிப் படித்துவிட்டு அமைகிறார் அம்மையார்.

“நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தவுடன் ஐகோர்ட்டிலும் ஐகோர்ட் வளாகத்திலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி மேலிட முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இப்படியொரு காட்சியை ஐகோர்ட்டு வளாகத்தில் இதுவரை நான் பார்த்தது இல்லை. என்கிறார் வைகோ. ஏறக்குறைய இரண்டாயிரம்பேருக்குமேல் அன்றையதினம் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தார்கள் என்பது செய்தி.

ஆக, இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்த மக்களின் மனோபாவம் என்ன என்பதை விளக்குகிறது இந்தக்காட்சி. இது ஒருங்கிணைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி நிச்சயமாக பெரிய அரசியல் கட்சிகளாலோ அல்லது பெரிய இயக்கங்களாலோ கிடைக்கவில்லை. சிறுசிறு இயக்கங்களாலும் மக்கள் தாங்களாகவே கிளர்ந்து எழுந்து போராடியதாலும் கிடைத்தவெற்றிதான் இது. இன்னமும் சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூரிலும் டெல்லியிலும் மற்ற வெளிநாடுகளிலும்கூட தமிழ்மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையெல்லாம் மறந்துவிட்டு இது ஏதோ ஜெயலலிதா தாமாகவே முன்வந்து தாயுள்ளத்தோடு வாங்கித்தந்த சலுகை என்பதுபோல ஒரு மாயை கற்பிக்கப்படுகிறது. நளினியைத் தூக்குத்தண்டனையிலிருந்து தப்ப வைத்ததே கருணாநிதி செய்த மாபெரும் குற்றம் என்பதுதான் ஜெயலலிதாவின் கருத்து.

இதுநாள்வரை ஈழம் பற்றி எதையுமே அவர் சொல்லவில்லை என்றபோதிலும் பழ.நெடுமாறனிலிருந்து பரங்கிப்பேட்டை முனுசாமிவரை கருணாநிதியை எதிர்க்கும் அத்தனைத் தலைவர்களும் நாளை மறுநாளே ஜெயலலிதா ஈழத்தை வாங்கித்தந்துவிடுவார் என்ற தொனியில்தான் பேசிவருகின்றனர். இன்றைய ஈழ உணர்வாளர்கள் அத்தனைப்பேருக்குமே கருணாநிதியின்மீது எத்தனை வெறுப்பு இருக்கிறதோ அதற்கு இணையான பாசமும் நேசமும் ஜெயலலிதாவின்மீது பொங்கிவழிகிறது.

இத்தனைக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா என்றைக்குமே பேசியதில்லை, பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதைத் தவிர. தன்னுடைய அரசியல் வாழ்க்கை பூராவிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருப்பவர் அவர். எதிரான நிலைப்பாடு என்றாலும் பரவாயில்லை. விடுதலைப்புலிகளால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கி அந்தக் கற்பிதத்தை வைத்தே தன்னுடைய பாதுகாப்பிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீசை வைத்துக்கொண்டிருப்பவர் அவர்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இசட் பிரிவு பாதுகாப்புத் தனக்கு வேண்டும் என்பதற்கு அவர் சொல்லும் காரணமே விடுதலைப்புலிகளால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதைத்தான். இந்த ஒரு செயல்பாட்டைக்கூட மாற்றிக்கொள்ளத் தயாரில்லாத அவரை புலிகளின் ஆதரவாளர்கள் விழுந்து விழுந்து கும்பிடுவதைத்தான் புரிந்துகொள்ள இயலவில்லை. அதுமட்டுமல்ல, முருகன், சாந்தன், பேரறிவாளன் விஷயம் தொடர்பாக எத்தனையோ தலைவர்கள் போராட்டங்களை அறிவித்து தெருவுக்குவந்து போராடிக்கொண்டிருக்கிறார்களே அவர்களில் யாராவது ஜெயலலாதாவை இதுவரையிலும் சந்தித்துப் பேசியதாகவோ அரசின் கருத்தோ அல்லது ஜெயலலிதாவின் கருத்தோ இதுதானென்று மக்களிடம் அறிவித்திருக்கிறார்களா? அப்படியில்லையெனில் அவர்களுக்கு ஜெயலலிதாவின் பேட்டி கிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம்! ............... அல்லது, ஜெயலலிதாவே இவர்களுக்கு அழைப்பு விடுத்து நீங்கள் யாரும் போராட்டம் எதுவும் நடத்தவேண்டாம் இதற்கான நடவடிக்கைகளை நானே எடுக்கிறேன் என்றாவது சொல்லியிருக்கலாம் அல்லவா?

இது எதுவுமே இல்லாமல் அவர்பாட்டுக்குத் தம் வேலையைச் செய்துகொண்டிருக்க சும்மாவே ஆளாளுக்கு எதற்காக ஜெயலலிதா புகழ் பாடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. முதல்வரிடம் வேலையாகவேண்டும் என்பதற்காக அவருடைய புகழ் பாடிக்கொண்டு போகிறவர்கள்பற்றிக் கவலையில்லை. ஆனால் எதிர்காலம் என்னவென்பதே தெரியாமல் உயிரைக்கையில் பிடித்து வாடிக்கொண்டிருக்கும் ஒரு மனித சமூகத்திற்கு சாதாரண இரக்கப்பார்வைக்கூட சிந்தாமல் இருக்கும் ஒருவருக்கு எதற்காக பாராட்டு இதிகாசங்கள் என்பதுதான் கேள்வி.