Saturday, November 16, 2013

ஊதாப்பூ இனிமேல் கண் சிமிட்டாது.



புஷ்பா தங்கதுரை மறைந்துவிட்டார்.

இந்த வருட தினமணி தீபாவளி மலரில் வாழும் மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் எழுதிய சில கட்டுரைகள் வந்துள்ளன. தி.க.சி பற்றி பழ நெடுமாறனும், ஜெயகாந்தனைப் பற்றி கவிஞர் வைரமுத்துவும், அசோகமித்திரனைப் பற்றி ஞாநியும், இந்திரா பார்த்தசாரதியைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணனும், கு.சின்னப்ப பாரதியைப் பற்றி ஸ்டாலின் குணசேகரனும் எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில் எழுத்தாளர் விக்கிரமனைப் பற்றி புஷ்பா தங்கதுரை எழுதியிருந்தார். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வரும் மாதநாவல்களையும் தொடர்கதைகளையும் படிக்கமாட்டேன். ஆனால் சிறுகதைகளோ வேறு கட்டுரைகளோ என்றால் உடனே படித்துவிடுவேன். அதுவும் அவரது இயற்பெயரான ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஏதாவது வந்திருந்தால் உடனே உடனே படித்துவிடுவேன்.

அதுபோல்தான் இந்த மலரிலும் இந்தக் கட்டுரைக் கண்ணில் பட்டதும் உடனடியாகப் படித்தேன். எழுத்தாளர் விக்கிரமனைப் பற்றிச் சொல்ல வந்தவர்….’இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது எனது கஷ்ட காலத்தில் விக்கிரமனைச் சந்தித்திருக்கிறேன். அவரிடம் என்னைப் பற்றிய செய்திகளைக் கூற அவர் எனக்கு ஒரு ரூபாய் கொடுத்ததாக நினைவு’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இம்மாதிரியான சின்னச்சின்ன உதவிகளைக்கூட மறக்காமல் நினைவுகூறும் பண்பு புஷ்பா தங்கதுரையிடம் உண்டு. சாவி பற்றி அப்படித்தான் பேசுவார். “எவ்வளவோ எழுதி எழுதிக் குவித்திருக்கிறேன். ஆனால் சாவி போன்று பப்ளிசிடியும் பணமும் கொடுத்துப் பார்த்துக்கொள்கிறவர்கள் யாரும் இல்லை. இப்ப என்னமாதிரி பப்ளிசிடி என்கிறீர்கள்? கல்லூரிகள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் புஷ்பா தங்கதுரை என்பது யாரென்று தெரியாது. ஆனால் அந்தப் பெயருக்கு அப்படியொரு கிரேஸ். பத்திரிகை ஆபீஸுக்கு வந்து குவியும் கடிதங்களைப் பார்த்தா மலைச்சுப் போயிருவீங்க. நான்தான் புஷ்பா தங்கதுரை என்பது வெளில யாருக்கும் தெரியாது. என்னை முழுமையாய் மறைத்துக்கொண்டுதான் உலவ வேண்டியிருக்கிறது” என்பார்.

அவர் சொன்னதை அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை கவனத்தில் கொண்டு பார்க்கும்போதுதான் அதன் உண்மையும் தீவிரமும் புரியும்.

சுஜாதா மிகவும் பரபரப்புடன் புகழ் பெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. கூடவே இன்னொரு டிராக்கில் புஷ்பா தங்கதுரை என்ற பெயருக்கு பயங்கர கிரேஸை உருவாக்கிக்கொண்டிருந்தார் சாவி. எல்லாம் திடீரென்று நிகழ்ந்ததுபோல்தான் ஆரம்பிக்கப்பட்டது.

தினமணி கதிரின் இரண்டுபக்க அளவுக்கு கோபுலு வரைந்த பெரிய சித்திரம். எல்லாரும் குனிந்து எதையோ அல்லது யாரையோ பார்த்துக்கொண்டிருக்கிறமாதிரி.

அவர்களின் தலையும் தோள்பட்டையும் கைகளும் மட்டும்தான் தெரியும். அதனுடன் கூடிய சிறுகதை ஒன்று. ‘அப்பாவி சுண்டுவுக்கு ‘அதெல்லாம்’ தெரியும்’ என்று தலைப்பு. 

எழுதியவர் பெயர் புஷ்பா தங்கதுரை.

கதையைப் படித்தால் சின்னத்தம்பி ரேஞ்சுக்கு ஒரு அப்பாவி. எல்லாராலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய ஒரு பையன். ஆனால் ‘அந்த’ விஷயத்தில் மட்டும்  அவன் கில்லாடிதான் என்கிறமாதிரியான கதையமைப்பு. புஷ்பா தங்கதுரை என்ற பெயரின் அறிமுகம் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒரு கல் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் இன்னொரு சிறுகதை. இப்படியே வாரம் ஒரு சிறுகதை. அதற்கேற்ப பார்த்தவுடன் கவனத்தைக் கவர்கிற அளவில் பெரிய பெரிய சித்திரங்கள். வாசகர் கடிதம் பகுதியில் இந்தச் சிறுகதைகளுக்கான எதிர்வினைகள். Talk of the town என்பார்களே அதுபோல் மொத்த தமிழ்நாட்டையும் ‘யார் இந்த புஷ்பா தங்கதுரை?’ என்று சில வாரங்களிலேயே பேச வைத்துவிட்டார் சாவி. எங்கும் எல்லா இடத்திலும் இதே பேச்சாகத்தான் இருந்தது. அன்றைக்கு வாரப் பத்திரிகைகள் படிக்கிறவர்கள் அத்தனைப்பேர் கவனமும் இந்த ஒரு புள்ளியில் குவிய ஆரம்பித்து விட்டது.

இந்த சிறுகதைகளைத் தொடர்ந்து சிவப்பு விளக்கு பேசுகிறது என்ற பெயரில் பம்பாய் சென்று சிவப்பு விளக்கு பகுதியில் வாழும் பெண்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகளும் பெருமளவில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பின. ஆனால் புஷ்பா தங்கதுரை என்ற பெயர் செக்ஸ் விஷயங்களைப் பரவலாக எழுதும் ஒரு எழுத்தாளர் என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது.

நான் அப்போதுதான் எழுத்துத்துறையில் ஓரளவு கவனம் ஈர்க்க ஆரம்பித்த நேரம். என்னுடைய தொழிற்சாலையில் இருந்த வாசக நண்பர்கள் நான் வேலைப் பார்க்கும் செக்ஷன் தேடிவந்து வேறுவிஷயங்கள் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். “சார் இந்தப் புஷ்பா தங்கதுரைன்றது யாரு சார்?”

கொஞ்ச நாட்களுக்கு ஒரு ராணுவ ரகசியம்போல்தான் இந்தப் பெயரைப் பாதுகாத்துவைத்திருந்தார்கள்.

சென்னையில் சில நண்பர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கடைசியில் டெல்லியிலிருந்த நகைச்சுவை எழுத்தாளர் அகஸ்தியனுக்குக் கடிதம் எழுதி விஷயம் தெரிந்துகொண்டேன்.

ஒருநாள் சுஜாதாவிடம் இது பற்றிய பேச்சு வந்தது. அப்போது சுஜாதா சிரித்துக்கொண்டே சொன்னது நினைவில் இருக்கிறது “என்னய்யா அது? கொஞ்சப் பேரு நான்தான் அந்தப் பெயரிலும் எழுதுகிறேனா என்று சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க. என்னையே சிலபேர் நீங்க தானா சார் அது?ன்னு கேட்கறாங்க”.

“சார் அந்த சிறுகதைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா அவருடைய நடை ரொம்ப அழகா இருக்கு” என்றேன் சுஜாதாவிடம்.

“வேணுகோபாலனை நீங்க வெறும் புஷ்பா தங்கதுரையாப் பார்க்காதீங்க. தமிழ் இலக்கியங்களை ரொம்ப ஆழமா தீவிரமாப் படிச்சவர் அவர். சமஸ்கிருதத்துல ரொம்பவும் புலமை உண்டு. வைணவ இலக்கியங்கள்ள ஈடுபாடு அதிகம். மணிக்கொடியிலதான் எழுத ஆரம்பிச்சார்னு நினைக்கிறேன். ரொம்பப் பெரிய நிறைய விஷயங்கள் உள்ள ஆளு. அவரை வச்சு ஒரு பெரிய மேஜிக் பண்ணப்போறேன்ற மாதிரி சாவி சொல்லிட்டிருந்தார். ஆரம்பிச்சுட்டார்னு நினைக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.

சாவி செய்த மேஜிக் மிகப்பெரிய அளவிலேயே பத்திரிகை உலகிலும் வாசகப் பரப்பிலும் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது. அந்தப் பரபரப்பின் போதேயே புஷ்பா தங்கதுரை எழுதும் தொடர்கதை என்ற அறிவிப்பும் தினமணி கதிரில் வெளியானது.

‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்பது தொடர்கதையின் தலைப்பு. தலைப்பே கவிதை பேச பத்திரிகையின் விற்பனை பல மடங்கு எகிறியது. ‘யார் இந்த புஷ்பா தங்கதுரை?’ என்ற கேள்வி சகல விதத்திலும் சுழன்றடிக்க “யார் இந்த புஷ்பா தங்கதுரை என்பதை தயவுசெய்து சொல்வீர்களா? தெரிந்துகொள்ளாவிட்டால் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது’ என்று ஒரு அவசரக் கடிதம் ஒன்று எழுதினார் ஒரு பிரபலம்.

அந்தப் பிரபலம் அந்த நாட்களில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா.



ஸ்ரீவேணுகோபாலன்தான் என்று அவருக்குப் பதில் எழுதிப்போட, உடனடியாக அவரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. ‘அவரை நான் சந்திக்கவேண்டும். ஏற்பாடு செய்ய முடியுமா?’

ஆரம்பத்தில் கமலஹாசனும் இதுபற்றிக் கேட்டார். “புஷ்பா தங்கதுரைங்கறது ஸ்ரீவேணுகோபாலன்தானா? கன்ஃபர்ம்டா? அவர்தான்னு தெரியவந்தது, கன்ஃபர்ம் பண்ணிக்கத்தான் கேட்கறேன்”

இத்தனைக் களேபரங்கள் அவருக்காக நடைபெற்றுக்கொண்டிருக்க தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருந்தார் புஷ்பா தங்கதுரை என்ற வேணுகோபாலன்.

அதற்கு முன்னமேயே ‘நீ நான் நிலா’ என்ற தொடர்கதை மூலம் என்னைக் கவர்ந்த எழுத்தாளராகியிருந்தார் அவர். அந்தத் தொடர்கதை தினமணி கதிரில் வந்து முடிந்தபோது அவரைப் பாராட்டி நான் எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் போட்டிருந்தார். அந்த பதிலிலேயே அவர் குறிப்பிட்டிருந்தது ‘சென்னைப் பக்கம் வர நேர்ந்தால் தெரிவியுங்கள். நாம் சந்திப்போம்’
ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது தொடருக்குப் பிறகு அந்த நாவலுக்கு மக்கள் மத்தியில் எழுந்திருந்த பரபரப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய திரைப்படத்துறை அந்த நாவலைப் படமாக்க விழைந்தது. கமலஹாசன் சுஜாதா ஆகியோர் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் படமாக வந்தது. இந்த நாவலிலிருந்து புஷ்பா தங்கதுரைக்குச் சித்திரம் வரையும் பொறுப்பு கவர்ச்சி ஓவியர் ஜெயராஜூக்குப் போய்விட்டது என்று நினைக்கிறேன். அதற்கடுத்து புஷ்பா தங்கதுரை என்ற பெயர் தீயாய்ப் பற்றிக்கொள்ள எல்லாப் பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு புஷ்பா தங்கதுரை எழுத்துக்களை வாங்கிப் போட ஆரம்பித்தார்கள்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் புஷ்பா தங்கதுரை என்ற பெயருக்கும் அதற்கான கதையின் சித்திரத்திரங்களிலும் இருந்த செக்ஸ் அப்பீல் அவரது கதைகளிலோ எழுத்துக்களிலோ இருக்கவில்லை. மெல்லிய போர்னோவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் படிக்கிறவர்களிடம் இருந்ததே தவிர கதைகளில் போர்னோவும் இல்லை ஒன்றும் இல்லை. புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வந்தவை பூராவும் துப்பறியும் கதைகள்தானே தவிர செக்ஸ் கதைகள் அல்ல. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் “சார் ‘நீ நான் நிலா’ மாதிரியான கதைகள் எப்போது எழுதுவீர்கள்?” என்றே கேட்டுக்கொண்டிருப்பேன். நீ நான் நிலாவுக்கு அடுத்து ‘நந்தா என் நிலா’ என்றொரு தொடர்கதை எழுதினார். “இந்தக் கதை அந்த அளவுக்கு இல்லை” என்று அபிப்பிராயம் சொன்னபோது “உண்மைதான் எனக்கே தெரியுது. ஆனால் இந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பும் விளம்பரமும் நீ நான் நிலாவுக்கு இல்லையே” என்றார்.

மிகமிக மென்மையான சுபாவம். அதிர்ந்துகூடப் பேசமாட்டார். எப்போது பார்த்தாலும் அப்போதுதான் குளித்துவிட்டுத் தலை துவட்டிக்கொண்டு வந்து நிற்கிறமாதிரியான தோற்றம். மெல்லிய சுருளுடன் புசுபுசுவென்ற தலைமுடி. சாம்பல் நிறத்தில் பூனைக்கண்கள். சிரித்தமுகம். அடிப்பாகத்திலிருந்து மூக்கை உள்ளங்கையால் மேல்நோக்கி அழுத்தித் துடைத்துக்கொண்டேயிருப்பார் அடிக்கடி. அது ஒன்றுதான் பார்ப்பதற்குக் கஷ்டமாயிருக்கும். “ஏன் சார் இப்படிப் பண்றீங்க? இந்த மேனரிசத்தை விடமுடியலையா?” என்றேன். ஒருமுறை.

“நானும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். விடமுடியலை. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்” என்று சிரித்தார்.

அளவெடுத்த சுருக்கமான வார்த்தைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதுவார். பெரும்பாலும் கார்டுகள்தாம். ‘நாளை பெங்களூர் வருகிறேன். சேஷாத்ரிபுரத்தில் சாவியுடன் வந்திருந்தபோது தங்கிய அதே ஓட்டல். முடிந்தால் சந்தியுங்களேன்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார். மறுநாள் ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். டிபன் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டே சேஷாத்ரிபுரத்திலிருந்து மல்லேஸ்வரம் வரைக்கும் நடந்து சென்று வந்தோம். அவர் தனிமையில்தான் வசித்து வந்தார். 

பேச்சலர் லைஃப் என்றுதான் சொன்னார்கள். ஒருமுறை திருமணம் பற்றிக் கேட்டேன். “ஒய்ஃபைத் தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கிடைக்கலை. எங்காவது பார்த்தா சொல்லுங்க” என்றார். 

அதிலிருந்து அவரது திருமண வாழ்க்கைப் பற்றி அவரிடம் எதுவும் பேசியதில்லை.
சென்னை சென்றிருந்தபோது ஒருமுறை கே.கே.நகரிலிருந்த அவரது வீட்டைத் தேடினோம்  நானும் அகிலன் கண்ணனும். எத்தனைத் தேடியும் விலாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு கடைக்குச் சென்று போன் பண்ணியபோது இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார். கடையின் அடையாளத்தைச் சொன்னதும் “அங்கேயே இருங்க இதோ வந்துர்றேன்” என்றவர் சற்று நேரத்திலேயே வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீடு முழுக்கக் குப்பையும் கூளமுமாக இறைந்து கிடந்தன புத்தகங்கள். “சார் ஏதாவது புத்தகம் தேடினீங்களா?” என்றேன். “அதெல்லாம் இல்லை. சாதாரணமாகவே இப்படித்தான் இருக்கும். எப்பவாச்சும்தான் அடுக்கிவைப்பேன்” என்றார். 
 அவரது தாயாரிடம் அறிமுகப்படுத்தி காப்பி கொடுத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து வழியனுப்பி வைத்தார்.

ஒருமுறை ஏதோ ஒரு பத்திரிகையில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லும்போது “புஷ்பா தங்கதுரை அல்ல, ஸ்ரீவேணுகோபாலனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நீ நான் நிலா, திருவரங்கன் உலா இரண்டும் தமிழின் முக்கியமான நூல்கள் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்” என்று சொல்லியிருந்தேன். இதைச் சொல்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் சென்னையில் கலந்துகொண்டிருந்தபோது நிகழ்ச்சியிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் அருகில் வந்து “நீங்க சொல்லியிருந்தது பார்த்தேன். ரொம்ப தேங்ஸ்” என்று ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.

தனக்கு உரிய முக்கியத்துவம் தமிழ் இலக்கிய அரங்கில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் நிறையவே இருந்தது. அந்த ஆதங்கத்தினால்தான் அவர் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதவே துவங்கினார் என்று நினைக்கிறேன். ‘நல்ல எழுத்து எழுதும்போது கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் கிடைக்கலை. இப்ப செக்ஸ் எழுதறேன்னு ஆரம்பிச்சதும் மொத்த பத்திரிகைத் துறையும் வந்து குவியுது. இது ஒரு மாதிரி பழி வாங்கறதுன்னு வச்சுக்கங்களேன். உனக்கு என்ன வேணுமோ அதை நான் தர்றேன். நீ என்னிடம் வந்து விழு ஆட்டிடியூட்தான். வேலைக்கும் போய்க்கிட்டு இவ்வளவு எழுதறதுன்றது முடியலை. ரொம்ப சிரமமாத்தான் இருக்கு’ என்றார் ஒருமுறை.

அடுத்த சந்திப்பிலேயே அவருடைய இந்தக் கருத்திற்கு முழுவதும் மாறாகப் பேசத்தொடங்கியிருந்தார். “என்ன சார், நான் ஒண்ணும் பெரிசா செக்ஸ் எழுதவே இல்லை. எழுத ஆரம்பிச்சா தாங்காது நம்ம பத்திரிகைகள். ஏன் செக்ஸ் எழுதுவது கூடாதா என்ன? எதுக்காக இப்படி ஒரு ஹிப்போக்ரசித்தனம்? அவனவன் முக்காடு போட்டுக்கிட்டுத்தான் எல்லாத்தையும் செய்யணும்னு நினைக்கறான். இவனுக்கெல்லாம் செக்ஸ் வேண்டாமா? எழுத்தில் செக்ஸ் இருக்கக்கூடாதா? போர்னோ எழுதுகிறவன் எல்லாரும் மிக மட்டமான எழுத்தாளன்னு முத்திரைக் குத்தறான். மேல்நாட்டில் போர்னோ எழுதுகிற எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள் சார். மிகப்பெரிய எழுத்தாளனா அங்கே மதிக்கப்படுகிறவர்கள் எல்லாருமே போர்னோ எழுதுகிறவர்களே. அவங்களுக்கு அங்கே என்ன மரியாதை தெரியுமா? ஒவ்வொரு போர்னோ புத்தகங்களும் என்ன வருமானத்தை அவர்களுக்குத் தருகிறது என்று நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இத்தனை டாலர்கள் என்று சம்பாதிக்கிறார்கள். அங்கே இம்மாதிரி எழுத்துக்களுக்கே பரிசுகள் எல்லாம் தருகிறார்கள். இங்கே நாம்தான் கொஞ்சூண்டு செக்ஸ் எழுதினாலே தரக்குறைவான எழுத்து என்று முத்திரைக் குத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார். (இப்போது இதே வாதங்களைத்தானே சாருநிவேதிதா சொல்லிக்கொண்டிருக்கிறார்!)

இது சம்பந்தமாய் அவர் எனக்கு ஒரு யோசனையும் சொன்னார். “பிளேபாய் வருகிறது இல்லையா? அந்தப் பத்திரிகையில் வரும் படங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிக அருமையான பிரமாதமான எழுத்துக்களைக் கொண்டு வெளிவரும் பத்திரிகை அது. அதில் வரும் கட்டுரைகளும் பேட்டிகளும் பிரமாதமானவை. சில சிறுகதைகள் அற்புதமானவை. வருடந்தோறும் பிளேபாயில் வரும் சிறுகதைகளை மட்டும் தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் புத்தகம் போடுகிறார்கள். அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கிவிடுங்கள். அந்தக் கதைகளைப் படித்துப் பார்த்தீர்கள் என்றாலேயே எத்தனையோ புதிய பிளாட்டுகள் கிடைக்கும். சிறுகதைகளை அவர்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுத்தும். ஒரு இளம் எழுத்தாளர் என்பதனால் உங்களுக்குச் சொல்கிறேன். பிளேபாய் சிறுகதைகள் கலெக்ஷனை வாங்கிவிடுங்கள்” அவர் சொன்னாரே என்பதற்காக நானும் பெங்களூரில் பல இடங்களில் தேடிவிட்டேன். ஒரு நாளும் அத்தகைய கலெக்ஷன் கிடைக்கவே இல்லை இதுவரைக்கும்.

ஜெயகாந்தன் எழுத்துக்களில் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்ததே தவிர ஜெயகாந்தன் நடந்துகொள்வதையும் அவரது சில பேச்சுக்களையும் எழுத்துக்களையும் கடுமையாகவே விமரிசிப்பார். ஒருமுறை இவரது எழுத்துக்களை ஜெயகாந்தன் மிக மோசமாக விமரிசித்துவிட மிகக் காட்டமாக அவருக்கு இவர் தொடுத்த வினாக்கள் அந்த சமயத்தில் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ‘எழுத்தில் சமுதாய ஆன்மிகப்பார்வை வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன். சும்மா அர்த்தமில்லாமல் இப்படி ஏதாவது வார்த்தைகளைப் போட்டுத் தப்பிக்க வேண்டாம். தெரியாமல்தான் கேட்கிறேன். அதென்ன சமுதாய ஆன்மிகப்பார்வை? முதலில் அந்த வார்த்தைக்கு ஜெயகாந்தன் அர்த்தம் சொல்லட்டும்’ என்று கோபப்பட்டார் ஸ்ரீவேணுகோபாலன்.

தமிழ் இலக்கிய அரங்கில் அவருக்கான இடம் எது என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் இத்தனை வருடங்களும் அவருக்கென்று ஒரு இடம் இருந்தது என்பதுதான் முக்கியம். அவருக்கென்று பரந்ததொரு வாசகப்பரப்பு இருந்தது. அவர் பெயரைப் போட்டாலேயே பத்திரிகைகள் விற்பனை ஆயின. அவரை மட்டும் நம்பியே மாத நாவல்கள் ஆரம்பிக்கப்பட்டன. புகழ் வெளிச்சம் அவர் மீது எவ்வளவு இருந்தபோதிலும் அடக்கமும் பணிவுமாக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதுதான் இன்றைய நிலையில் முக்கியம். பல லட்சக்கணக்கான வாசகர்கள் ஒரு முப்பது நாற்பது வருடங்களாகச் சலிக்காமல் அவரைப் படித்து வந்தார்கள் என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஆயிற்று. அவருடன் எந்தவிதத் தொடர்புமற்று பல வருடங்கள் ஓடிவிட்டன. சில நாட்களுக்கு முன்பு தினமணி தீபாவளி மலரில் அவருடைய கட்டுரையைப் பார்த்ததும்தான் அந்த எண்ணம் வந்தது. இவரைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டனவே. அடுத்தமுறை சென்னை செல்லும்போது சென்று பார்த்துப் பேசிவிட்டு வரலாம் என்று நினைத்தேன். சில நாட்களுக்குள் இப்படியொரு அதிர்ச்சி செய்தி. ‘புஷ்பா தங்கதுரை மறைந்துவிட்டார்.’

அனேகமாய் புஷ்பா தங்கதுரை எழுதிய கடைசி எழுத்து விக்கிரமனைப் பற்றியதாக இருக்கலாம். அதில் விக்கிரமன் குறித்து இப்படி எழுதியிருக்கிறார்.

“இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்’ என்று வைணவரது வாழ்த்தொளியுடன் அவரை வாழ்த்துகிறேன்”

இந்த வாழ்த்துக்கள், எழுதிய புஷ்பா தங்கதுரைக்குக் கிடைக்காமல் போய்விட்டதுதான் உலகின் சோகங்களில் ஒன்று.

Thursday, October 31, 2013

நடிகர் சிவகுமாரின் அறம்செய விரும்பு






சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரான ஃபோர் ஃபிரேம்ஸ் வழக்கமாய் தயாரான படங்களைத் திரையிட்டுப் பார்க்கும் திரையுலகப் பிரமுகர்களால் மட்டுமே நிரம்பிவழியும். இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை அந்தத் தியேட்டருக்கு இந்தியாவை வழிநடத்திச் செல்லும் முக்கியமான தமிழர்கள் வருகிறார்கள். சமூகத்தின் பலதுறைகளைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்று வந்து குழுமுகிறார்கள். இவர்கள் அத்தனைப் பேரும் ஒரு மனிதரின் அழைப்பின்பேரில் வருகிறவர்கள்………………


அடுத்து சில நாட்களில் ஏதோ ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த மனிதரின் ஒன்றரை மணி நேர பேச்சைப் பெரிய ஸ்கிரீனில் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அந்தப் பேச்சால் கவரப்பட்டு வியந்துபோய் அந்த மனிதரின் கைகளைப் பற்றிக் குலுக்குகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு அந்த மனிதரின் செல்போன் பிரமுகர்களின் தொடர்ச்சியான அழைப்புகளில் திக்குமுக்காடுகிறது. அவ்வளவு பேரும் தங்களின் கருத்துக்களைப் பாராட்டுக்களைக் குவிக்கிறார்கள். தங்கள் மனதிலுள்ளதை பேச்சின் மூலம் சொல்வதை விடவும் எழுத்துக்களாய் சொல்வதில் உள்ள சுதந்திரத்தை விரும்பும் பெரிய மனிதர்கள் தங்கள் கருத்துக்களைக் குறுஞ்செய்திகளாய் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். குறுஞ்செய்திகளால் அவருடைய செல்போன் நிரம்பிவழிகிறது.

அந்த மனிதர் நடிகர் சிவகுமார்!
 
யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்று பார்த்தோமானால் ஆச்சரியமாயிருக்கிறது. அப்துல்கலாமின் செயலர் பொன்ராஜ் இதற்கென்றே டெல்லியிலிருந்து வருகிறார். ‘மேடம் இன்னைக்கு சீக்கிரமாகவே விட்டுட்டாங்க’ என்று சொல்லி தமிழக முதல்வரின் செயலாளர் சுடலைக்கண்ணன் ஐஏஎஸ் தமது துணைவியாருடன் வருகிறார். மரியாதைக்குரிய நீதியரசர் சந்துரு தமது குடும்பத்தாருடன் வருகிறார். இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர்கள் வருகிறார்கள். ராஜாராம் ஐஏஎஸ் வருகிறார், உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராக இருப்பவரும், உலகெங்கும் பல்வேறு ஆடிட்டர்களை உருவாக்கியவருமான பத்மஸ்ரீ மனோகர் சௌத்ரி வருகிறார். ஜவஹர்லால் நேருவிடம் பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரியான பி.எஸ்.ராகவன் வருகிறார்………………

தமிழகத்தின் புகழ்பெற்ற டாக்டர்களான டாக்டர் ராஜேந்திரன், டாக்டர் செங்கோட்டுவேல், டாக்டர் ஜே.வி ஆகியோர் வருகின்றனர். டாக்டர் கமலா செல்வராஜ் வழக்கமாய் வருபவர்.
தொழிலதிபர்கள் பழனி.ஜி.பெரியசாமி, தொழிலதிபரும் இலக்கியவாதியுமான இயகோவா சுப்பிரமணியம், சுமங்கலி சந்துரு, கோயம்புத்தூர் ராமலிங்கம், கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் ஆகியோர் கண்களில் படுகின்றனர்.

எஸ்பிமுத்துராமன், முக்தா சீனிவாசன் ஆகியோரைத் தொடர்ந்து பிரபஞ்சன், இந்துமதி, திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர் மணா, பிரபல ஓவியர் மணியம் செல்வன், எழுத்தாளர் லாசராவின் குமாரர் கண்ணன், திஜரவின் மகள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி குடும்பத்தினர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டே இருக்கின்றனர். ஆல்இந்தியா ரேடியோவைச் சேர்ந்த குமரி எஸ்.நீலகண்டன் வருகிறார். ஸ்டாலின் குணசேகரன் வருகிறார். ஈரோடு அபி வருகிறார். (குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த இளைஞர் எதிர்கால இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வரப்போகிறவர்) இன்னமும் பலதுறையைச் சார்ந்தவர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

ஏவிஎம் சரவணன், இறையன்பு, தமிழருவி மணியன் ஆகியோர் ஏற்கெனவே இந்தப் படக்காட்சியைப் பார்த்துவிட்டார்கள் என்ற தகவலும் கசிகிறது.
அடுத்து ஒரு சின்ன பரபரப்பு. வெள்ளை நிறத்துக்கு அடையாளமான ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வருகிறார். சிவகுமாரின் எல்லா முக்கிய பேச்சுக்களையும் பிரபல சேனல்களில் ஒளிபரப்பும் உரிமையைப் பெறுவதுடன் அவற்றை சிடிக்களாக்கி பல லட்சம் மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரிய பணியையும் செய்துவருபவர் நாகராஜ்.

இத்தனை பிரமுகர்களுடன் ஃபோர்ஃபிரேம்ஸ் தியேட்டர் நிரம்பி வழிகிறது. முன்னைக்கும் இப்போதைக்கும் ஒரு பெரிய வித்தியாசம். முன்பெல்லாம் பிரமுகர்கள் தனியராய்த்தான் வந்து செல்வார்கள். இப்போதெல்லாம் திருமதிகளுடனும் பிள்ளைகளுடனும் வருகிறார்கள். உட்கார இடமில்லாமல் எக்ஸ்ட்ரா நாற்காலிகள் போடப்படுகின்றன. எவ்வித முணுமுணுப்புமில்லாமல் அமர்ந்து கொள்கின்றனர் பிரமுகர்கள். 

படக்காட்சி ஆரம்பிக்கிறது. வழக்கமாய் இல்லாத சம்பிரதாயமாக இந்த முறை சிவகுமார் மைக் பிடித்தார். இரண்டொரு வார்த்தைகள் பேசினார். “நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால் கோவிலுக்குப் போகமாட்டேன். புராண இதிகாசங்கள் அறநெறி நூல்கள் சொல்லும் நல்ல கருத்துக்களில் ஈடுபாடு உள்ளவன். விவேகானந்தர் போன்ற மகான்கள் சொல்லியவற்றை மதிப்பவன். அந்த வகையில்தான் வேதாத்ரி மகரிஷி அவர்களையும் நான் பார்க்கிறேன். தவிர, எந்த சாமியாரையும் நான் பின்பற்றுகிறவன் அல்ல” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். ‘எந்த சாமியாரையும் நான் பின்பற்றுகிறவன் அல்ல’ என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்ததுபோல் தோன்றியது.

அவருடைய இந்த முன்னுரை இந்தப் பேச்சிற்கு வேண்டியிருந்தது என்பது புரிகிறது. தமது நீண்ட நெடிய நடிப்புலக வாழ்க்கைக்குப் பின்னர் அவராகவே தேர்ந்தெடுத்துக் கொண்டது இந்தப் ‘பேச்சாளர்’ என்ற முகம்.

தமிழ்ச் சமுதாயம் பேச்சுகளுக்கும் பேச்சாளர்களுக்கும் பெயர்போனது. அரசியல் பேச்சாளர், ஆன்மிகப் பேச்சாளர், இலக்கியப் பேச்சாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என்று நிறைய பேச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எந்த வகையினரிலும் வராமல் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை அவர் ஏற்படுத்த நினைக்கிறார். தமக்கென்று ஒரு பாதையை அவராகவே போட்டுக்கொள்கிறார். 

எந்த மேடைப் பேச்சுக்கும் சில கிளிஷேக்கள் உள்ளன. அவற்றில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். சொல்ல நினைத்த விஷயங்களை புராணங்கள் இதிகாசங்கள் கலந்து சொல்கிறார். உதாரணங்களுக்கு அவர் வெளியில் அதிகமாகச் செல்ல வேண்டியதில்லை. அவருடைய வாழ்க்கை அனுபவங்களிலேயே அவருக்கு நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. நிறைய பெரிய மனிதர்களிடம் ஏற்பட்ட நெருங்கிய நட்பு அவருக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது. அந்தக் கதைகளை ரத்தமும் சதையுமாகத் தோண்டி எடுக்கிறார் -

தேவைப் பட்ட இடங்களில் அவற்றைத் தொகுத்துத் தருகிறார்!

போலித்தனங்களைக் களைந்த வாழ்க்கை எது, வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய பண்பாட்டுக் கூறுகள் என்ன, குடும்பம் என்றால் என்ன, சமூகம் சார்ந்த விழுமியங்கள் யாவை, கலாச்சாரம் கற்றுக்கொடுப்பது எதை, ஒரு தனி மனிதனின் கடமைகள் என்ன, குடும்பப் பொறுப்புகள் எவை, தாயை போற்றுவது எப்படி, பெண்களை மதிப்பது எப்படி, மனைவியை நேசிப்பது எப்படி, பெற்றோரை மதிக்கவேண்டிய குழந்தைகளின் கடப்பாடு என்ன என்று குடும்பத்தில் ஆரம்பித்து சமூகம், நாடு, உலகம் என்று பயணிக்கிறவிதமாகத் தம் பேச்சுக்களை வடிவமைத்துக் கொள்கிறார்.

முக்கியமான விஷயம் என்னவெனில் இம்மாதிரிப் பேச்சுக்களை யாராவது பேச ஆரம்பித்தால் இன்றைய சூழ்நிலையில் இந்த சமூகம் நின்று காதுகொடுத்துக் கேட்காது. ஆல்இந்தியா ரேடியோவைச் சேர்ந்த குமரிஎஸ். நீலகண்டன் சொல்வதுபோல் ‘நல்ல கருத்துக்களுக்கு எந்தக் கூட்டமும் இருப்பதில்லை. நல்ல அறிவுரைகள் எந்தக் காதுகளுக்கும் பிடிப்பதில்லை. இலக்கியங்கள் எவரையும் கவர்வதில்லை.’

ஆனால் சிவகுமாரின் பேச்சுக்களுக்கு இந்த சமூகம் காதுகளைக் கொடுக்கிறது.

பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர்கிறது.

அதைத் தொடர்ந்து முக்கியமான பேச்சுக்கள் பிரபல சேனல்களில் திருவிழா ஸ்பெஷலாக ஒளிபரப்பப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் காத்திருந்து பார்க்கிறார்கள்.  அந்தப் பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. பல பெரிய மனிதர்களின் வீட்டுத் திருமணங்களில் இவருடைய சிடிக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கப்பட்டு வருகிறவர்களுக்கு தேங்காய்ப் பையுடன் இலவசமாக விநியோகிக்கப் படுகின்றன.

சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் சிவகுமார் பேச்சைக் கேட்பதற்காக உட்கார்ந்திருந்தபோது பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். “இரண்டு விஷயங்கள்……….. ஒண்ணு இம்மாதிரியான பேச்சுக்களை இன்னைக்கிப் பேசறதுக்கு ஆட்கள் கிடையாது. இரண்டாவது, அப்படியே யாராச்சும் பேசினாலும் யார் கேட்கப் போறாங்க? யாரும் கேட்கப் போறதில்லை. அது அப்படியே காத்தோடப் போயிரும். இவரு பேசறாருன்னா ஒவ்வொரு பேச்சும் எத்தனை மக்களைச் சென்றடையுது இல்லையா? அதிலும் இந்தப் பிள்ளைகளுக்கு இவர் சொல்ற அட்வைஸ் இருக்கு பாருங்க அதை மட்டும் கேட்டு நடந்தாங்கன்னா எதிர்காலத்தை சிறப்பா அமைச்சுக்கலாம். எத்தனைப் பெரிய கலைஞர் ஆனா தன்னை எத்தனை சிம்பிளா வெளிப்படுத்தறார் பாருங்க…… அதான் கரூரிலிருந்து புறப்பட்டு வந்திருக்கேன்”

சிவகுமாரின் வெற்றிக்குக் காரணம் சமூகத்தின் முக்கியமான விஷயங்களைப் பேசுபொருளாக எடுத்துக்கொள்கிறார்.


அதன் உயிர்நாடியைப் பிடிக்கிறார்.


மக்களுக்கு எந்தத் தொனியில் சொன்னால் போய்ச்சேருமோ அந்தத் தொனியில் அதனை வெளிப்படுத்துகிறார்.

ஆனால் இதைவிடவும் முக்கியமான விஷயம் வேறொன்று இருக்கிறது.

எந்த விஷயமாக இருந்தாலும் அதைச் சொல்கிறவர் யார், அவர் எப்படிப்பட்டவர், அதைச் சொல்கிற தகுதி அவருக்கு இருக்கிறதா என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம்.

அவர் என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப தமது வாழ்வை அமைத்துக்கொண்டிருப்பவர்தானா என்பதைத்தான் மக்கள் முக்கியமாக கவனிக்கிறார்கள்.

ஒழுக்கம் பற்றிப் பேசுபவன் தன்னளவில் ஒழுக்கசீலனா என்பதைத்தான் அளவுகோலாக வைக்கிறார்கள்.

ஒழுக்கக்குறைவிற்கும், சீர்கேட்டிற்கும், தவறுகளுக்கும், மதுபானங்களுக்கும், காமக்களியாட்டங்களுக்கும்  பேர்போன திரைத்துறையில், நாற்பது வருடங்களுக்கும் மேல் பவனிவந்தும் தம்மைப் புடம்போட்டு எடுத்த தங்கமாக வைத்துக்கொண்டிருப்பவர் என்ற இவரது பிம்பம் இவர் சொல்வதை மக்கள் காதுகொடுத்துக் கேட்க வைக்கிறது.

சத்திய ஆவேசம் பொங்க இவர் சில கருத்துக்களை வெளிப்படுத்தும்போது இவரது மனதிலிருந்து வரும் கனல் கேட்பவர்களையும் அதே ஆவேசத்துடன் சுடுகிறது.

சிவாஜியின் புகழ்பெற்ற வசனங்களை, கலைஞர் எழுதிய காலத்தால் அழியாத வசனங்களை வீரியம் குறையாமல் மேடைகளில் பேசுபவர் என்றுதான் சிவகுமாரை முதலில் கவனிக்க ஆரம்பித்தது தமிழகம். பிறகு தம்முடன் பழகிய சக கலைஞர்களைப் பற்றிய அரிய தகவல்களை, மக்கள் அவ்வளவாக அறியாத தகவல்களை அழகாக எடுத்துரைப்பவர் என்பதாகவும் பார்க்க ஆரம்பித்தது. ஆனால் ‘பெண்’ என்ற தலைப்பில் எப்போது திருப்பூரில் பேசினாரோ அன்றையிலிருந்து இவரது பேச்சின் வடிவம் மாறியது. ஈரோடு புத்தகச் சந்தையில் இவரது பேச்சுக்கள் புதிய தளத்திற்கு வித்திட்டன. கம்பராமாயணத்தை நூறு பாடல்களில் சொல்லுவது என்று இவர் வடிவமைத்துச் சொன்ன ராமாயணக்கதை தமிழ்கூறு நல்லுலகம் இவரை வியப்புடன் பார்க்க வழிவகுத்தது.

இப்போதெல்லாம் தமிழகம் தாண்டி கடல்கடந்த தமிழர்களும் அடுத்து இவர் என்ன பேசப்போகிறார் என்பதற்காகக் காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மகாபாரதக் கதையை இரண்டுமணி நேரத்தில் சொல்லப்போவதாக அறிவித்து அதற்கான தயாரிப்பிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்பதனால் அந்த நிகழ்வு எப்போது என்பதற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது தமிழகத்தில்.

இரண்டுமணி நேரம் என்பது இரண்டரை மணி நேரமாகவும் ஆகலாம். ஆனால் அத்தனைக் குறுகிய நேரத்தில் மகாபாரதக்கதையைச் சொல்வது என்பதற்காக இவர் தேர்வு செய்திருக்கும் வடிவம் ரொம்பவும் புதுசு.


தொழிலதிபரும் வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோவில் நிர்வாகங்களுக்குத் தலைவரும் சமூக சேவகருமான மயிலானந்தத்திற்கு அவர் செய்துவரும் சேவைகளைப் பாராட்டி பத்மஸ்ரீ பட்டம் கிடைத்ததை கௌரவிக்கும் முகமாக கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வேதாத்ரி மகரிஷியின் போதனைகளை சாரமாகக் கொண்டு உரையாற்றினார் சிவகுமார்.

தலைப்பு; ‘அறம்செய விரும்பு’

முழு அளவுக்கும் வேதாத்ரி மகரிஷியின் அன்பர்களும் சீடர்களும் நிறைந்திருந்த அரங்கம் அது.
‘சாமான்யன் ஒருவன் சந்நியாசியான அதிசயம்’ என்ற வார்த்தைகளுடன் தமது உரையைத் துவங்கினார் சிவகுமார். இறைவனுக்கு வடிவமில்லை என்று வள்ளலார் போன்றே உரைத்தவர் வேதாத்ரி. ‘கடவுள் உணரக்கூடிய விஷயம்; விவாதம் பண்ண வேண்டிய விஷயம் அல்ல’ என்றுதான் காந்தியடிகளும் சொல்லியிருக்கிறார் என்று தொட்டுக்காட்டியவர் ‘மனைவியைக் கொண்டாடுங்கள்’ என்கிறார் வேதாத்ரி மகரிஷி. நாம என்ன செய்யறோமென்றால் பொம்பள சாமிகளைக் கும்பிடுவோம். பொம்பள சாமி கோவிலுக்குப் போவோம். வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டியைத் தோப்புக்கரணம் போடவைப்போம்’ என்று ஆரம்பத்திலேயே சூடானார்.

பேச்சின் மையத்திற்குப் போவதற்கு முன்பு வேதாத்ரி மகரிஷி பற்றி சிவகுமார் சொல்லிய பல தகவல்கள் வேதாத்ரி மகரிஷியின் பக்தர்களுக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வேதாத்ரிக்குத் திருமணமானது, முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாததால் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக இன்னொரு பெண்ணை மணமுடித்தது இரண்டு மனைவிகளையும் வைத்துக்கொண்டு உணவுக்குக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டது, குடியிருந்த வீட்டையும் இழந்து மனைவிகளுடன் நடுத்தெருவுக்கு வந்து நின்றது என்று ஆரம்பித்து அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து உலக அமைதிக்கும் மேம்பாட்டிற்குமான சிந்தனைகளை இன்றைய வாழ்க்கைக்கான நடைமுறை அனுபவங்களுடன்  அவர் சொல்லியிருப்பது பற்றி விரிவாகப் பேசிவிட்டு நல்ல வாழ்க்கைக்கு எதெதை விட்டொழிக்க வேண்டும் என்று மகரிஷி சொல்லியிருக்கிறார் என்ற விஷயத்துக்கு வந்தார்.

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த ஆறையும் விட்டொழிக்கவேண்டும் என்று வேதாத்ரி மகரிஷி கூறுகிறார் என்று சொன்னவர் அந்த ஆறு விஷயங்களுக்கும் சொன்ன உதாரணங்களும் சின்னச் சின்ன வாழ்க்கை சம்பவங்களும்தாம் பேச்சை எங்கோ உயரத்திற்குக் கொண்டுசென்று நிறுத்தின.

‘ஆசை வேறு தேவை வேறு பேராசை வேறு’ என்பதற்கு ஒரு பெரும் பணக்காரரின் பேராசைகள் அவரை எந்த நிலைக்குக் கொண்டு சென்று நிறுத்தின என்ற விவரங்களை இவர் சொல்லியவிதம் எவரையுமே யோசிக்கத் தூண்டும்.

அடுத்து சினம் பற்றிப் பேசவந்தவர் ஓவியர் மனோகர் தேவதாஸின், உண்மைக்கதையைச் சொன்னார். ஓவியர் மனோகர் தேவதாஸும் அவரது இளம் மனைவியும் காரில் போய்க்கொண்டிருக்கின்றனர். மனைவி காரை ஓட்டிச் செல்கிறார். இளம்பெண்கள் வாகனங்கள் ஓட்டிச் சென்றால் அதைப் பொறுக்காமல் பின்னாலேயே வந்து வம்பு செய்யும் பொறுக்கிக்கூட்டம் இவரையும் அப்படியே செய்கிறது. பயங்கரமாக விசில் அடித்து கேலிசெய்து காரைத் தொடர்ந்து விரட்டியபடியே தொல்லை தருகிறது. என்ன செய்தும் சேஸிங்கை விடமாட்டேனென்கிறார்கள் அந்த இளைஞர்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த இளம்பெண் காரை 160 மைல் வேகத்துக்கு விரட்டுகிறார். சிறிது தூரம்தான். அந்த சிறிது தூரத்திலேயே அபாயம் காத்திருப்பது தெரியவில்லை. கொஞ்ச தூரத்திலேயே ஒரு பயங்கரத் திருப்பம். பிரேக் பிடிக்கமுடியாமல் தலைகீழாகப் புரள்கிறது கார்.

விளைவு, தம்பதியர் இருவரும் மோசமான விபத்தில் சிக்குகிறார்கள்.

கணவருக்கு பலத்த அடி. மனைவிக்கோ கழுத்துக்குக் கீழே எல்லா உறுப்புக்களும் செயலிழந்துபோய் படுத்த படுக்கைக்கு ஆளாகிறார். ஒருநாள் இரண்டு நாள் அல்ல. அடுத்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு இதே நிலையில் படுக்கையில் கிடந்த மனைவிக்கு சிரம பரிகாரம் பண்ணுகிறார் கணவர். இதில் கணவருக்குக் கண்பார்வை வேறு படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து கடைசியில் முழுப்பார்வையும் பறிபோய்விடுகிறது. அந்த நிலையிலும் மனைவியை கவனித்து அந்த அம்மாளின் இறுதி மூச்சுவரை உடனிருந்து கவனிக்கிறார். இன்னமும் நடைப்பிணமாய் இன்றைக்கும் வாழ்ந்துவரும் தேவதாஸின் கதையைச் சொல்லிவிட்டு “ஒரு கணம் ஒரேயொரு கணம் அந்த அம்மாள் மட்டும் சினத்துக்கு ஆளாகாமல் ‘என்ன தம்பிகளா என்னை சேஸிங் பண்றதுதான் உங்க விருப்பமா? நான் காரை நிறுத்திக்கறேன். நீங்க வேணா போய்க்கங்க” என்று விட்டுக்கொடுத்திருந்தால் முப்பத்தைந்து வருடம் இப்படி வாழவேண்டி வந்திருக்குமா?’ என்று சோகத்துடன் கேட்டு நிறுத்தும்போது கேட்கிறவர்களின் நெஞ்சம் விம்மித் தணிவதை தவிர்க்கமுடிவதில்லை.

படக்காட்சி முடிந்ததும் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த திரு சுடலைக்கண்ணன் ஐஏஎஸ் அவர்களின் திருமதி “ஒரு பெண் கார் ஓட்டிச் சென்றாலேயே சில இளைஞர்களுக்குப் பிடிப்பதில்லை. தொடர்ந்து வந்து வம்பிழுப்பது, கார் ஓட்டுகிறவர்களின் கவனம் கலையுமாறு நடந்துகொள்வது, கூச்சலிடுவது ஊளையிடுவது போன்றதெல்லாம் செய்கிறார்கள். ஒருமுறை நான் கார் ஓட்டிச் செல்லும்போது எதிரில் ஒரு சவ ஊர்வலம் வந்தது. ஓரத்தில் காரை ஒதுக்கினேன். உடனே சில இளைஞர்கள் சவப்பெட்டியில் இருந்த பூக்களை எடுத்து என் காரின்மீது இறைத்தார்கள். இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள், என்ன செய்வது?” என்று தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.

முறையற்ற பால்கவர்ச்சி பற்றிப் பேசும்போது வி.எஸ்.காண்டேகரின் யயாதி கதையைச் சொல்லும் சிவகுமார், ‘செக்ஸ் என்பது அனுபவித்துத் தீர்ப்பதற்கு அல்ல; அடக்கி ஆள்வதற்கு’ என்கிறார். ‘வங்காள விரிகுடாக்கடலை நீச்சலடித்துக் கடக்க முடியுமா என்ன? நீந்திக் கடந்தவன் யாருமில்லை. அடக்கி ஆள்பவன்தான் இருக்கிறான்’ என்கிறார்.

காரல் மார்க்ஸ் – ஜென்னி இருவரின் வாழ்க்கை, ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரபாவதி ஆகியோரின் வாழ்க்கை அனுபவம், பாஞ்சாலி பற்றிய பாரதியின் வரிகள், சீதை, கண்ணகி என்று சிவகுமார் பயணிக்கும் தளம் ஆச்சரியப்படுத்துகிறது.

அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஏற்பது இகழ்ச்சி……………என்று ஆத்திச்சூடியில் சொல்லிச் செல்வதுபோல் வேதாத்ரி மகரிஷியின் கடைப்பிடிக்கவேண்டிய சொற்றொடர்களை எடுத்துக்கொண்ட சிவகுமார் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விளக்கம் தந்துசெல்வது என்று பேச்சின் பாதையை வகுத்துக்கொள்கிறார்.

அதிலும் இரண்டு பிரிவுகள்.

முதலில் பேராசை, சினம் என்று தொடங்கி வஞ்சத்தில் முடித்தவர் அடுத்த பகுதியை ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும் பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, வறுமையிலும் பரோபகாரம், துன்பத்திலும் தைரியம், செல்வத்திலும் எளிமை, பதவியிலும் பணிவு என்று ஏழு பகுதிகளாக எடுத்துக்கொள்கிறார்.

ஏழு சொற்றொடருக்கும் ஒவ்வொரு கதை. அல்லது ஒவ்வொரு உதாரணம்.

அத்தனை உதாரணங்களும் அதுபாட்டுக்கு செவியைக் கடந்து மனதிற்குள் ஊடுருவி தனக்கென்று ஒரு பத்திரமான இடத்தைத் தேடிப்பிடித்து நாற்காலி போட்டு உட்கார்ந்துகொள்கிறது. அந்த அளவு வலிமை, அந்த அளவு எதார்த்தம். 

மக்களின் கையைப் பிடித்து உண்மைக்கு மிக நெருக்கமாகவே பயணிக்கச் செய்வதால் உதாரணங்களும் அதற்கான குறியீடுகளும் அது உணர்த்தும் செய்தியும் மிகச் சுலபமாக உள்ளே நுழைந்து மனதில் உட்கார்ந்து பிறகு மனதைவிட்டு அகல மறுக்கின்றன.

ஏழ்மையிலும் நேர்மை – ஒரு ஆட்டோக்காரரின் நேர்மை,

கோபத்திலும் பொறுமை – காரில் அடிபட்டு விழும் பேப்பர் போடும் சிறுவன்,

தோல்வியிலும் விடாமுயற்சி – அக்னிசாட்சி தோல்விக்குப்பின் வீறு கொண்டு எழுந்து சிந்துபைரவி என்ற படத்தை வெற்றிப்படமாக்கும் கே.பாலச்சந்தர்,

வறுமையிலும் பரோபகாரம் – அகரம் பவுண்டேஷன் சார்பில் ஐந்தாயிரம் ரூபாய் பண உதவி பெறும் கிழிந்த ட்ரவுசர் போட்டுவரும் சிறுவன், ‘இந்தப் பணம் தனக்கு மிக அதிகம் என்றும் ‘நேற்றுதான் நடிகர் விஜய் எனக்கு ஐந்தாயிரம் தந்தார்; எனக்கு அதுவே போதும். ஆகவே இந்தப் பணத்தை கிழிந்த பாவாடை சட்டை போட்டுவரும் சிறுமிகளுக்கு நல்ல பாவாடை சட்டை வாங்குவதற்குத் தந்துவிடுகிறேன்’ என்று அறிவிப்பது,

துன்பத்திலும் தைரியம் – டிபி ஹாஸ்பிடலில் நோயாளிகள் சாப்பிட்டுவிட்டுப் போடும் ரொட்டித்துண்டை எடுத்து வயிறுவளர்க்கும் தாய் ஒருவர் தன்னுடைய மகன் விபத்தில் திடீர் என்று இறந்துவிட அவனது உறுப்புக்களை மற்றவர்களுக்கு தானம் செய்ய முன்வருவது,
செல்வத்திலும் எளிமை – இந்த வார்த்தைக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் உதாரணம் காட்டப்படுகிறார்,

பதவியிலும் பணிவு –இந்த வார்த்தைக்கு சிவகுமார் சொல்லும் விளக்கம் இன்றைய அரசியல் தலைவர்களை பலத்த சர்ச்சைக்குள் தள்ளி அவர்களின் மனோபாவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

57-ல் காமராஜர் முதல்வர். அப்போது அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கிறதாம். அதாவது அரசாங்கத்தில் பியூன் வேலையில் இருப்பவன்  எல்லாம் எட்டாவது படிப்பை முடித்தவனாக இருக்கவேண்டும். இந்த அறிவிப்பு வந்தவுடன் எம்எல்ஏ ஹாஸ்டலில் வேலையில் இருந்த ஒரு பியூன் மிகவும் வருத்தத்தில் ஆழ்கிறார். ஏனெனில் இந்த அறிவிப்பு நடைமுறைப் படுத்தினால் தன்னுடைய வேலை போய்விடும். தன்னுடைய வேதனையை எம்எல்ஏ ஹாஸ்டலில் வைத்துப் புலம்புகிறார். ‘வெறும் ஐந்தாங்கிளாஸ் படித்தவர் முதலமைச்சராக வரலாம். ஆனால் எட்டாவது படிக்கவில்லையென்றால் பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லை என்றால் என்ன அர்த்தம்?’
இவரது புலம்பலைக் கேட்ட அப்போதைய எம்எல்ஏவான திரு மூக்கையாதேவர் “இதை நீ காமராஜர் வீட்டிற்கு போன் போட்டு அவரது உதவியாளரிடம் சொல்லு. அவர் காமராஜரிடம் சொல்லி உனக்கு ஏதாவது வழி செய்வார்” என்று சொல்லி காமராஜர் வீட்டிற்கு போன் போட்டுத் தருகிறார்.

அந்த முனையில் போன் எடுக்கப்படுகிறது.

இங்கிருந்து இந்தப் பியூன் தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார். “இந்தப் புதிய உத்தரவால் என்னுடைய வேலை பறிபோகப் போகிறது. ஏங்க, அஞ்சாவது படிச்சவர் முதலமைச்சரா வரலாம் என்றால் ஒரு பியூன் எட்டாவது படிச்சவனாத்தான் இருக்கணும்ங்கறது என்ன நியாயம்?”

“உண்மைதான் நிச்சயமா நியாயம் கிடையாது. நீ சொல்றது உண்மைதான்” என்று பதில் வருகிறது.

“இதைக் கொஞ்சம் காமராஜர்கிட்டே சொல்லிடறீங்களா?”

“நான் காமராஜர்தான் பேசுகிறேன்” என்று பதில் வருகிறது.

இந்தப் பியூன் ஆடிப்போகிறார். உடம்பெல்லாம் வெலவெலத்துப் போகிறது.”ஐயா ஐயா தெரியாமப் பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்கய்யா’ என்று இவர் பதற-

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ சரியாய்த்தான் பேசியிருக்கே. நாளைக்குக் காலையில நீ என்னை வந்து பார்” என்று சொல்லி போனை வைக்கிறார் காமராஜர்.

மறுநாள் பயந்துகொண்டே போக அருகில் அழைத்து அரவணைத்து சோபாவில் தம் பக்கத்தில் அமர வைக்கிறார். எல்லா விஷயங்களையும் கேட்டுக்கொண்டவர் “உன்னுடைய உத்தியோகத்துக்கு ஒண்ணும் தொந்தரவு வராது. இப்ப இருக்கறவங்க இருந்துட்டுப் போகட்டும். இனிமே புதுசா வர்றவங்க எட்டாவது படிச்சிருக்கணும் என்று உத்தரவு போடுகிறேன் போதுமா?” என்று கேட்டு அனுப்பிவைக்கிறார்.

இந்த சம்பவத்தை சிவகுமார் விவரிக்கும்போது ‘அடாடா எத்தனைப் பெரிய தலைவர் அவர்’ என்று நெஞ்சம் விம்முவதை அடக்கமுடியவில்லை.

இந்தச் செய்திகளை எல்லாம் எந்த மாடுலேஷனில் எப்படித் தரவேண்டும் என்பது சிவகுமார் என்ற பண்பட்ட திரைக்கலைஞருக்கே உரித்தான பிரசன்டேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நிச்சயம் அவர் திரையில் நடிக்காமல் நேரடியாக மேடைகளுக்கு வந்திருந்தால் இந்த வகை presentation

சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை.


இந்த உரையைக் கேட்டுவிட்டுச் சென்ற ராஜாராம் ஐஏஎஸ் ‘நாங்கள் உங்கள் வடிவில் விவேகானந்தரைப் பார்க்கிறோம். எந்திரத்தனமாகிவிட்ட இன்றைய நாகரிக உலகில் மனித இனம் இழந்துவிட்ட நல்ல தன்மைகளை மீட்டெடுக்க மனதை விழித்தெழவைக்கும் பணியை உங்கள் உரை செய்கிறது” – என்று செய்தி அனுப்புகிறார்.

What a wonderful presentation…..Every story starts and ends with values. To days youth have to get exposed to these value system. I hope your wisdom spreads to every home by air DVD and also in you tube – என்று செய்தி தருகிறார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்.

“In my view the message can be taken to younger generation of today only in this form” என்று குறிப்பிடும் சுடலைக்கண்ணன் ஐஏஎஸ், “very informative well structured and aptly presented. As usual it is one of your great service to the younger generation” என்கிறார்.

“மகரிஷியே உங்கள் வடிவத்தில் வந்து பேசியது போல் உணர்ந்தேன்” என்கிறார் எம்.மோகன்.

முன்னாள் பேராசிரியரும் தற்போதைய தொழிலதிபருமான பழனி ஜி பெரியசாமி “உங்கள் உரை தந்த இந்த வித்தியாசமான அனுபவத்தை என்னால் என்றும் மறக்கமுடியாது” என்று ஆரம்பிக்கிறார். “The way you have interpreted and explained the real life situation was so overwhelming and impressive that everybody was touched with your deep sense of scholastic, intellectual and moral explanation. Every aspect of the speech, you have addressed us to how we should live a happy and purposeful life based on some fundamental values. It is a great guide for leading a noble life. I know those who had attended the event were emotionally touched by your eloquence and intrinsic and deep knowledge of Maharishi. I feel proud of you. You are an extraordinary man. You are not only a great actor, a noble painter, an artist, a speaker but also a great human being trying to live by example. I am indebted to you for having invited me to participate in this most unique intellectual and moral experience…என்று தமது கருத்தைப் பிரதிபலிக்கிறார் அவர்.

இந்த உரையில் சிவகுமார் பேசியதிலேயே ஹைலைட்டான விஷயம் ஒன்றுண்டு. அது ‘உயர்வு தாழ்வு மனப்பான்மை’ என்ற தலைப்பில் வருகிறது. உண்மையில் இந்த விஷயத்தை ஒரு பொதுமேடையில், அதுவும் இத்தனை ஆயிரம் பேர் குழுமியிருக்கும் ஒரு மேடையில் சிவகுமார் போன்ற ஒரு பிரபலம் பேசுவதற்கே முதலில் தயங்குவார்கள். அப்படியே பேச நேர்கிறது என்றாலும் மேலோட்டமாகவோ பூடகமாகவோ பேசிவிட்டுக் கூடுமானவரை அவசரமாகக் கடந்துசெல்லத்தான் பார்ப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தை சிவகுமார் நின்று நிதானித்து, அழுத்தம் கொடுத்து, கேட்கிற அத்தனைப் பேரின் மனதிலும் சென்று ஈட்டி போல் இறங்குகிற தொனியில் பேசுகிறார். இந்த சமூகத்தையும் அரசாங்கத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திக் கேள்வி கேட்கிறார். ஏற்கெனவே லேசுபாசாக செம்மொழி மாநாட்டில் இதுபற்றிப் பேசியிருந்தபோதிலும் இன்னமும் அழுத்தம் கொடுத்து இங்கேயும் அதுபற்றிப் பேசினார் அவர்.

அவர் பேசியது கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றி.

“தொழில் முறையிலே பிறந்தவர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து பத்து சதவிகித மக்கள் தொண்ணூறு சதவிகித மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுரண்டிக்கொண்டிருந்தார்கள்.” என்று ஆரம்பிக்கிறவர் நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறார். “இந்த நாட்டில் இன்னமும் எட்டு லட்சம் சகோதரர்கள் கையால் மலம் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இருபத்தி ஏழாயிரம்பேர் கையால் மலம் அள்ளுகிறார்கள். நம்முடைய மலத்தையே நாம் பார்ப்பதற்குக்கூட எத்தனைக் கூச்சப்படுகிறோம். எவ்வளவு அருவெறுப்பு அடைகிறோம். 


எப்போதாவது ஒருமுறை டாக்டர் மோஷன் டெஸ்ட் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டால் நம்முடைய மலத்தை அதுவும் ஒரு ஸ்பூன் மலத்தை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு எடுத்துப்போவதற்குள் எத்தனை அருவெறுப்பு கொள்கிறோம். யோசித்துப் பாருங்கள். 

கோடிக்கணக்கான மக்களின் மலத்தை தினசரி கைகளால் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதனை இந்த நாட்டில் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும். 

இதெல்லாம் செய்யாமல் சும்மா ஆன்மிக பூமி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. செவ்வாய்க் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவதில் பிரயோசனம் இல்லை. முதலில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்” என்று சிவகுமார் முழங்கியபோது கேட்கிறவர்கள் 

ஒருகணம் ஆடித்தான் போனார்கள்.

கொடிசியா அரங்கில் சிவகுமார் பேசியதைக் கேட்டுவிட்டு இந்தப் பிரிவியூவில் படக்காட்சியாகப் பார்த்தபோது நிறைய வித்தியாசம் இருந்தது. அங்கே வெறும் பேச்சு மட்டும்தான். இப்போது பேச்சுக்களுக்கான படங்களும்  இணைத்திருந்தது. அதிலும் சில புகைப்படங்கள் எடுப்பதற்காக அவரே புகைப்படக்காரருடன் சிந்தாதிரிப்பேட்டை போன்ற ஏரியாக்களுக்குச் சென்றிருந்தார் என்பதை அறிந்தபோது அந்த மனிதரின் அர்ப்பணிப்பு வியக்கவைத்தது.

நிஜமாகவே ஒரு மாறுபட்ட அனுபவம்தான், என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் முக்கியம்.