Saturday, February 21, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்




இலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி அவர்களால் அடிக்கடி சொல்லப்பட்ட ‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’ அவர்கள் விருப்பப்படியே பிரமாண்டமாக நடைபெற்று முடிவுக்கும் வந்துவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் இத்தனை வரவேற்புக்கும் காரணம் இந்த நிகழ்ச்சியின் மூலம்  திரையிசையில் விரும்பிய பாடல்களை, அல்லது முக்கியமான பாடல்களை மீண்டும் கேட்கிறோம் என்பதையும் தாண்டி- எது சிறந்த பாடல், யார் சிறந்த பாடகர் என்பதை நிர்ணயம் செய்வதில் தாங்களும் ஒரு ஜட்ஜாக இருக்கிறோம் என்னும் மனோபாவமே என்பதுதான் முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.

அதனால்தான் ஓட்டுப்போடுவதற்குத் தாங்கள் பணம் இழக்கிறோம் என்பது தெரிந்தும் கோடிக்கணக்கான மக்கள் அதுகுறித்துக் கவலைப்படாமல் ஓட்டுக்களையும் போட்டு தங்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்து வருகிறார்கள்.

“இந்த நிகழ்ச்சியில் ஓட்டுப்போடுவதற்குப் பணம்  தந்தாகவேண்டுமே இது சரிதானா?” என்று கேட்டதற்கு இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான நண்பர் ஒருவர் “அதிலென்ன தப்பு இருக்கிறது? 
படங்களைப் பார்க்கத் தியேட்டர்களுக்குப் போகும்போது காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதில்லையா? அதுபோல்தான் இது. அதுவும் ஒரு ஓட்டுக்கு வெறும் ஆறு ரூபாய்தானே? அதுவுமின்றி சின்னக்குழந்தைகளுக்காகத்தானே செலவு செய்கிறோம்? அந்தக் குழந்தைகளின் திறமைக்கு முன்னால் இதெல்லாம் வெறும் தூசு” என்றார்.

ஆக சரியாகத்தான் நூல் பிடித்திருக்கிறார்கள் விஜய் டிவிக்காரர்கள்……………!


ஸ்பூர்த்திக்கு முதல் பரிசைக் கொடுத்ததன் மூலம் முடிவுகளுக்குப் பின்னால் எழும்பப் போகும் சர்ச்சைகளை விஜய்டிவி வெகுவாகத் தவிர்த்திருக்கிறது என்று சொல்லலாம்.

யாராலும் குறை சொல்லமுடியாத ஒரு முடிவு இது.

அந்தச் சின்ன உடம்பிற்குள் அத்தனைத் திறமை. எவ்வளவு சிரமமான பாடல்களையும், ஓரளவு பயிற்சிபெற்ற பாடகர்களால் சுலபமாகப் பாடமுடியாத பாடல்களையும் நிகழ்ச்சி முழுவதும் சர்வசாதாரணமாகப் பாடி அசத்திக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

அதுவும் ஏற்ற இறக்கங்கள், கமகங்கள், பிர்காக்கள் என்று கர்நாடக சங்கீதத்தில் வரக்கூடிய சங்கதிகளையும், ஸ்வரங்களையும் கலந்தடித்து அந்தக் குழந்தை பண்ணிக்கொண்டிருந்தது அதகளம், அட்டகாசம்.

நடுவர்களாக வந்த பிரபல பாடகர்களும் சரி, இசையமைப்பாளர்களும் சரி அந்தச் சிறுமியின் திறமையை வெளிப்படையாகவே புகழ்ந்தார்கள், பாராட்டினார்கள், வியந்தார்கள்.

இதென்ன குழந்தை மேதையா என்று அதிசயித்தார்கள்.

அவள் பாடிமுடித்ததும் நம்ப முடியாத பலபேர் அந்தக் குழந்தையிடம் “உனக்கு என்ன வயசாகுதம்மா?” என்று கேட்டுக்கொண்டார்கள். இத்தனைப் பாராட்டுக்களையும் நிகழ்ச்சிகளின் தொடரிலேயே வாங்கிக்குவித்த அந்தப் பெண்ணுக்கு முதல் பரிசு என்றதும் ‘சரியான தீர்ப்புத்தான்’ என்று நிம்மதியுடன் தூங்கச் சென்றவர்கள் ஏராளம்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். அந்தச் சிறுமி பெங்களூரைச் சேர்ந்தவள். 
தாய்மொழி கன்னடம். தமிழில் சரியாகப் பேசக்கூடத் தெரியாது. ஆனாலும் அட்சர சுத்தம் என்பார்களே அதுபோல் அத்தனைத் துல்லியமாய்த் தமிழை உச்சரித்தாள். அதுவும் கேவிமகாதேவனால் இசையமைப்பக்கப்பட்ட பல கவியரசரின் அழகிய தமிழ்ப் பாடல்கள் அவளுடைய கொஞ்சும் குரலில் அத்தனை வசீகரமாய் வெளிப்பட்டன.

மீதிப் பரிசுகளையும் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை.

ஆறு பேருக்குமே முதல் பரிசுகளைக் கொடுத்திருக்க வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

எப்படிப் பார்த்தாலும் மூன்று பேரை ஒதுக்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயம். நீக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம். வேறுவழியில்லாமல்தான் அதைச் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரே ஆறுதல் அந்த மூன்று பேருக்கும்கூட ஆளுக்கு ஐந்துலட்சம் என்று பரிசுப்பொருள் தந்திருக்கிறார்கள்.

என்னவொன்று, சம்பிரதாயத்துக்காகவாவது இறுதி நிகழ்ச்சிவரை வந்த பரத் என்ற அந்தச் சிறுவனுக்கு ஏதாவது விசேஷப் பரிசு அறிவித்திருக்கலாம். ஏனென்றால் அந்தப் பையனை இரண்டு காம்பியர் பெண்களும் ஆரம்பத்திலிருந்தே என்னென்னவோ சொல்லி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தனர். ‘நீ தாண்டா இறுதிப் பரிசை வெல்லப்போறே’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லா வார்த்தைகளையும் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர். 

அந்தப் பையனும் அபாரத் திறமையுடன் எல்லாப் பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தான். இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் மற்றவர்களைவிட அந்தப் பையனின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

இத்தனைப் பெரிய நிகழ்ச்சியின் இறுதிநாள் இன்னமும் பெரிய பிரம்மாண்டத்துடன் இருந்திருக்கலாம். நிகழ்ச்சியின் வீச்சை வைத்துப் பார்க்கும்போது நிறைவுநாள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.

இன்னொரு குறை பங்கேற்ற பிரபலங்கள்.

எல்லாப் பிரபலங்களையும் ஏற்கெனவே நடைபெற்ற வாராந்தர நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவிட்டு இறுதிநாள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. எம்எஸ்வி, ஏ.ஆர்.ரகுமான், சுசீலா, ஜானகி, பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம், தேவா, டி.ராஜேந்தர், இமான் என்று எல்லாரையும் ஏற்கெனவே அழைத்துவிட்டுக் கடைசி நாளுக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் சங்கர் மகாதேவனையும், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் என்று மற்றவர்களையும் அழைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சியின் பெரிய குறை மேக்கப் என்ற ஒரு கோரத்தைப் போட்டு பாடிய அத்தனைக் குழந்தைகளையும் ஏறக்குறைய குமரிப்பெண்கள் போலத் தோன்றச் செய்திருந்தது.

சிறுமிகள், குழந்தைகள் என்ற தோற்றமே தெரியாமல் அடித்திருந்தார்கள்.

இன்னொன்று ‘இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவில் ஆறுகோடி வாக்குகள் வந்திருக்கின்றன’ என்று அறிவித்தார்கள். வேண்டுமென்றே அப்படி அறிவித்துவிட்டுப் பிறகு ‘இல்லை இல்லை ஒரு கோடியே சொச்சம் வாக்குகள்தாம். ஆறு கோடி என்பது அந்தக் காம்பியர் ஆசைப்பட்ட வாக்குகள்’ என்று திருத்திக்கொண்டார்கள்.

காம்பியர் பத்து கோடிக்கு ஆசைப்பட மாட்டாரா என்ன?

இதிலிருந்த ‘அரசியல்’ என்னவென்பது புரியவில்லை.
.
 இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கும் முக்கியமான பாடம் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது.  இது இணைய ரசிகர்களுக்கு என்பதால் இதனை மறுபடியும் சொல்ல நேர்கிறது. சென்ற பதிவிலேயே லேசாகச் சுட்டிக்காட்டியிருந்த அந்த முக்கியமான விஷயம் இந்த இறுதி நாளிலும் உறுதிசெய்யப் பட்டிருக்கிறது.

அதாவது, ‘இளையராஜா இல்லாமல் இசை சம்பந்தப்பட்ட எதுவுமே இங்கே நகராது. இந்தக் காலகட்டத்தின் இசைக்கடவுள் இளையராஜாதான்’ என்ற நம்பிக்கை இங்கே பலபேருக்கு இருக்கிறது.



இளையராஜா தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் திறமையான இசையமைப்பாளர்தான். தமிழ்த்திரை இசையின் சகாப்தத்தில் அவருக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, அதற்குப் பின்னர் தனியாக எம்எஸ்வி, கே.வி.மகாதேவன், ஏ.எம்.ராஜா, சுதர்சனம் வரிசையில் வருகிறவர் இளையராஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.

அதுபோலவே இளையராஜாவைத் தொடர்ந்து வருகிறவர்களாக ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

ஆனால் இம்மாதிரியான எந்தவித முக்கியத்துவமும் யாருக்குமே அளிக்கப்படாமல்,  இசை என்றாலேயே இளையராஜா மட்டும்தான் என்ற தவறான பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. 

அதற்கான முயற்சிகள் மிகப்பெரும் அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் இங்கே எழுதப்படுகின்றன.

‘நாங்கள் எங்களுக்குப் பிடித்தவரை எழுதுகிறோம்’ என்ற பெயரில் பொதுவெளியில் தவறான பிம்பத்தைக் கட்டுகிறார்கள். ‘நாங்கள் மற்ற யாரையும் குறை சொல்லுவதில்லையே’. என்று சமாதானம் வேறு சொல்கிறார்கள்.

குடிமக்கள் நிறைந்திருக்கும் தெருவில் ஒற்றை வீட்டில் மட்டும் ‘இங்கே இருக்கும் பெண்டிர் அனைவரும் பத்தினிகள்’ என்று போர்டு போட்டுவிட்டு, யாரும் தட்டிக்கேட்டால் ‘நாங்கள் வேறு யாரையும் குறை சொல்லவில்லையே. எங்கள் வீட்டில் உள்ளவரைத்தானே நாங்கள் சொல்லிக்கொள்ளுகிறோம்’ என்று அடாவடி பேசுகிற வாதம்தான் இது.

ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போதாவது சில இளையராஜா பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் இறுதி நிகழ்வில் ஆறுபேர்கள் கலந்துகொண்ட போட்டியில் ஆளுக்கு இரண்டு பாடல்கள் என்று பன்னிரண்டு பாடல்கள்.

அதில் ஒரேயொரு பாடல்தான் இளையராஜா இசையமைத்த பாடல்.

மற்ற அத்தனையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தவை.

இவையெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேண்டும்.

ஒரு இசையமைப்பாளரை மட்டுமே சுற்றிக்கொண்டு இந்த உலகம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படி இல்லை எனில் இத்தனைப் பெரிய, அதுவும் பல கோடி மக்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி எப்படி இத்தனை வெற்றிகரமாக சாத்தியப்படும்?

திரை இசை என்றால், அதிலும் தமிழ் இசை என்றால் நிறைய ஜாம்பவான்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரை இசை என்பதே பல முன்னோர்களால் வார்த்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு  இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிற ஒரு இசை வேள்வி என்பதே இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்ற பாடம் என்றே கருதவேண்டியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி இன்னொரு கற்பிதத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறது.

அதாவது ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் நிலைக்காதவை. அவற்றை ஒருமுறைக்குமேல் திரும்பத் திரும்ப கேட்க முடியாது என்ற வாதமும் இணையத்தில் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே அடிக்கடி சிலரால் அதுவும், இ.ரா ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களே.

அதிலும் குறிப்பாக இறுதிநாளில் பாடப்பட்ட பல பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசைத்தவையே. 

கேட்கின்ற அத்தனைப்பேரையும் உணர்ச்சிவசப்பட வைக்கின்ற அளவிலான பாடல்கள் என்பதாலேயே அவை இறுதி நிகழ்ச்சியில் பாடப்பட்டன.

எந்த உணர்வை ஊட்ட வேண்டுமோ அதற்கு மேலேயே ஊட்டுவதாகத்தான் அந்தப் பாடல்கள் அமைந்திருந்தன. உணர்ச்சித் ததும்ப அமைந்திருந்த அந்தப் பாடல்கள் உணர்ச்சித் ததும்ப பாடப்பட்டன.

ஆக, சிலர் ‘ஆசைப்படும்’ இந்தக் கற்பிதம்- ‘ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் ஒருமுறைக்குமேல் கேட்க முடியாது’ என்பது- சிதறுத்தேங்காயாக உடைந்திருக்கிறது. தேங்காய்கூடப் பெரிய பெரியத் துண்டுகளாகத்தான் உடையும். இந்தக் கற்பிதமோ கண்ணாடித் துண்டுகள்போல் நொறுங்கிச் சிதறியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி வெறும் பிரமாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் இவற்றில் வேறு சில அம்சங்களும் பொதிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை.  சார்லஸ் என்ற ஒரு இசை ரசிகர் குறிப்பிடுவதுபோல ‘ குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி. இசையைப் பற்றி தவறான கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி. பாடுவது எளிதான காரியமல்ல என்று உணர்த்தும் நிகழ்ச்சி. திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி. பாடல் உருவான விதம், பாடியவரின் பெருமை, இசையமைப்பாளரின் திறமை போன்ற பல விஷயங்கள் அங்கே பகிரப்படுகின்றன. ஒரு பாடல் என்றால் என்னென்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற பாடம் அங்கு நடத்தப்படுகிறது’- என்கிறார்.

இது அவ்வளவும் உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும் அந்த அன்பர் இ.ராவின் ரசிகர். ஆனால் அவர்  சொன்ன அத்தனை விஷயங்களும் அவருடைய அபிமான இசையமைப்பாளரின் பாடலே இல்லாமல்கூட அங்கு உணர்த்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் இங்கே முக்கியம்.

காலம் என்பது கொஞ்சம் கொடுமையானதுதான். யாரைவேண்டுமானாலும் தொப்பென்று கீழே போட்டுவிட்டு அதுபாட்டுக்குத் தன் திசையில் பயணம் செய்துகொண்டே இருக்கும்.


இதனைப் புரிந்துகொண்டால் அதி தீவிர ரசிக மனப்பான்மையைப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டிருப்பதிலிருந்து வெளியேறிவிடலாம்.

Monday, February 2, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்

                                

                           

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. அவர்களே அடிக்கொருதரம் அறிவிக்கிற மாதிரி தமிழகத்தின் ‘செல்லக்குரலுக்கான தேடல்’ என்ற அழகிய பெயருடன் நீண்ட நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி முடிவுபெறும் நிலைக்கு வந்தாகிவிட்டது.  நிச்சயமாக மக்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறது இந்த நிகழ்ச்சி. மற்ற சேனல்களில் வரும் சீரியல் குப்பைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பெரியதொரு ஆதரவு இருக்கிறது என்பதே உவப்பிற்குரிய விஷயம்தான்.

ஒரு வருடம் பெரியவர்களை வைத்து நடத்தப்படும் இதே நிகழ்ச்சியை அடுத்த வருடம் சிறியவர்களை வைத்து நடத்துகிறார்கள் போலும். ஏனெனில் முந்தைய வருடம் ஃபைனலுக்கு ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு ஜட்ஜாகவும் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று  ஆஜித் என்ற சிறுவனைத் தேர்வு செய்ய, சென்ற வருடம் எஸ்.ஜானகி பங்கேற்று திவாகர் என்பவரைத் தேர்வு செய்தார்.
அதனால் ஒரு வருடம் செல்லக்குரல்களுக்கான தேடலாகவும், அடுத்த வருடம் பொதுவான சிறந்த பாடகர் தேர்வாகவும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வளர்ந்துவிட்ட பெரியவர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சியை விடவும் சிறுவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான வீர்யமும் ரசிகக் கூட்டமும் நிச்சயம் அதிகம்தான்.

சின்னக்குழந்தைகளை வைத்து, அதிலும் பால்மணம் மாறாத பிஞ்சுக்குழந்தைகளை வைத்து சிரமமான ராகத்தையும், அவர்களுக்கு என்னவென்றே புரியாத வரிகளுடன் கூடிய பாடல்களையும் அவர்கள் மீது திணித்து அதனைத் தேர்ந்த தொழில்முறை சார்ந்த பின்னணிப் பாடகர்கள் எப்படிப் பாடியிருக்கிறார்களோ அதே தொனியில் அதே பாவங்களுடன் அதே உணர்வுகளுடன் பாடல்களை வெளிக்கொண்டுவரச் செய்யும் முயற்சி-

அடிப்படையில் யோசித்தால் அராஜகமானது என்றுதான் சொல்லவேண்டும்!

ஆனால் நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம், எம்மாதிரியான அலப்பறைகளுக்கு மத்தியில் வாழ்கிறோம் என்பதையும், இம்மாதிரியான அராஜகங்களுக்குத்தாம் இப்போது மதிப்பு என்பதையும் சேர்த்தே புரிந்துகொண்டால்தான் இதற்கான விடைகள் கிடைக்கும்.

உண்மையில் சில அசாத்தியங்களை ரசிக்கும், அதனைக் கொண்டாடும் மனப்பான்மையும் நம்மிடம் இருக்கிறது.

சின்னக்குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி செய்யும் சேஷ்டைகளை நாம் விரும்பி ரசிக்கிறோம்.

சின்னக்குழந்தைகளைக்குப் புடவைக் கட்டிப் பார்ப்பதும், சின்னப்பையன்களுக்கு வேட்டி ஜிப்பா அணிந்து பார்ப்பதும் நம்முடைய ரசிப்புப் பட்டியலில்தான் இருக்கிறது.

இப்போதெல்லாம் யார் வீட்டிற்குப் போனாலும் அந்த வீட்டுக்குழந்தை அதுபாட்டுக்கு அதன் கையிலிருக்கும் ஸ்மார்ட் போனில் நம்மைப் புகைப்படம் எடுத்து நம்மிடமே காட்டுவதை இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இதனையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.
எமர்ஜென்சிக்குப் பிறகு ஜனதா கட்சி மொரார்ஜி தலைமையில் பரபரப்பாக ஆட்சி அமைத்திருந்த நேரம்.

முதன்முதலாக நண்பர்களுடன் டெல்லி செல்லும் வாய்ப்பு வந்தது.

அப்போது ஒரு நண்பர் தன்னுடன் கிளிக்-3 காமிரா ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். அந்தக் காமிராவுக்காக அந்த நண்பருக்கு எங்கள் வட்டத்தில் ஒரு ஸ்பெஷல் மரியாதையே இருந்தது என்பதையும் புரிந்துகொண்டால்தான் இன்றைய டேப்லெட்டிலும் ஸ்மார்ட் போனிலும் சின்னக்குழந்தைக்கூட அபாரமான படங்களை எடுத்துத் தள்ளுவதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

கால ஓட்டம் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

                         

விஜய் டிவி நடத்தும் இந்தப் போட்டியில் வெற்றிபெறப்போகும் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகிற பரிசுப் பொருட்களும் நினைத்துப் பார்க்கவே முடியாதவையாக இருக்கின்றன.

முதல் பரிசு பெறும் குழந்தைக்கு ஒரு வீடாம். 

அதற்கடுத்து வரும் குழந்தைக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்று பரிசுப்பொருளாம்.

அதற்கடுத்துவரும் குழந்தைக்கு ஒரு கிலோ தங்கமாம்………………. இவை பரிசுப் பொருட்கள்.

அந்தக் குழந்தைகள் மத்தியில் இந்த வயதிலேயே இம்மாதிரியான விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அவர்களை எம்மாதிரியான மனநிலைக்கு உட்படுத்தும், அவர்களை எம்மாதிரியான எதிர்கால இளைஞர்களாக உருவாக்கும் என்பதெல்லாம் மனோதத்துவ நிபுணர்கள் யோசிக்கவேண்டிய விஷயங்கள்.

ஏனெனில், இம்மாதிரி பதினாறு வயதிலேயே பல ஆயிரங்களும் லட்சங்களும் வழங்கப்பட்டு, அவர்கள் மீது புகழ் வெளிச்சமும் பரப்பப்படும் சில நடிகைகள் பிற்காலத்தில் எந்த அளவு தங்களை சர்வாதிகார மனம் கொண்டவர்களாக வரித்துக்கொள்கிறார்கள் என்பதையும்-
மற்ற அவ்வளவு பேரையும் எந்த அளவுக்குக் கேவலமானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதையும் –
எம்மாதிரியான வகையில் தங்களை இந்தச் சமூகத்திற்கு வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கான விபரீதங்களையும் நாம் கண்ணெதிரில் பார்த்தபடிதான் இருக்கிறோம்.

இது ஏதோ வெறும் நடிகைகளைப் பற்றி மட்டும் இல்லை. நடிகர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எக்கச்சக்க பணமும் எக்கச்சக்கப் புகழும் மிகச்சிறிய வயதிலேயே வந்துவிட்டால் அந்தப் பணத்தையும் புகழையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதாக எல்லாரிடமும் வந்துவிடுவதில்லை.

மிகப்பெரிய புகழையும் மிகப்பெரிய பணவரவையும் தாங்கிக்கொள்ளுவதற்கு அரியதொரு மனப்பக்குவம் வேண்டும்.

அந்த மனப்பக்குவம் பெரும்பாலானோரிடையில் இருப்பதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இவை இரண்டில் - அதுவும் புகழ் வெளிச்சம் என்பது இவர்கள்மீது சுத்தமாக இல்லை. ஆனால் இவர்களின் தகுதிக்கு மீறிய பணம் மட்டும் இவர்களுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது. அல்லது சம்பளமாகவே கிடைத்துவிடுகிறது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே அந்த இளைஞர்கள் போடும் ஆட்டமும் நாம் பார்த்துவருவதுதான்.

இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இணையத்தில் உலவுவதும் அவர்களுடைய வார்த்தைகளில் கிஞ்சிற்றும் மரியாதை இல்லாமல் ஒருவித தடித்தனம் இருப்பதும் இந்தப் பணம் படுத்தும் பாடுதான்.

இந்த லட்சணத்தில் இவர்கள் மீது புகழ்வெளிச்சமும் பட்டால் எப்படியிருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

நமக்குத் தெரிந்து அப்படியொரு மனப்பக்குவத்துடன் இருந்த இரண்டு பேராக எம்ஜிஆரையும் சிவாஜியையும் மட்டும்தான் சொல்லமுடியும்.

தற்கால இளைஞர்கள் மத்தியில் ஏ.ஆர்.ரகுமானையும் கிரிக்கெட் தெண்டுல்கரையும் சொல்லலாம்.

                                                  

இந்தச் சூழலில்தான் சூப்பர் சிங்கர் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகும் பரிசுப்பொருள்களையும் அங்கீகாரத்தையும் புகழ்வெளிச்சத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

தொடர்ந்துவரும் நிகழ்ச்சிகளில் இந்தப் பரிசுப் பொருள்கள் மேலும் அதிக அளவுக்கு உயரப்போகிறது என்கிற யதார்த்தமும் இப்போதே சுடுகிறது.

இது ஒருபுறமிருக்க நிகழ்ச்சிக்குச் செல்லுவோம்.

முதலில் இந்தச் சின்னஞ்சிறுசுகளை இந்த அளவுக்குத் தயார்ப்படுத்தி கேட்பவர்கள் பிரமிக்கிற அளவுக்குப் பாடச் செய்வதற்குப் பின்னணியில் இருக்கும் அனந்த் நிச்சயம் மிகப்பெரிய பாராட்டிற்கு உரியவர். ஏனெனில் இதற்கான பயிற்சி என்பது பல்வேறு டெக்னிக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் போட்டியின் இடையில் பேசும்போது தெரிவித்தார். இது ஒரு செயற்கரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தச் செயலை முதன்முதலாகச் செய்பவர் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் விஜய்டிவியின் அனந்த் அல்ல.

அதற்கும் முன்பே இதனைச் செய்தவர் அபஸ்வரம் ராம்ஜி.

அவர்தான் சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மிகக் கஷ்டமான பாடல்களைக் கொடுத்து அவர்களைத் தயார்ப்படுத்தி அச்சு அசலாகப் பாடவைத்துக் கேட்பவர்களை பிரமிக்கவைத்தவர்.

நீண்ட நாட்களுக்கு இத்தகைய சாகசங்களை அவர் பல மேடைகளிலும் செய்துகொண்டிருந்தார். 

பொதிகை டிவியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய நடந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

ஒரு பிரமுகர் வீட்டுத் திருமணத்திற்கு நானும் சுஜாதாவும் சென்றிருந்தோம். அபஸ்வரம் ராம்ஜி குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்யும் கச்சேரி அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது.  நாங்கள் ஒருபுறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அபஸ்வம் ராம்ஜி அங்கு வந்தார். “சார் தயவு செய்து இரண்டுபேரும் அங்குவந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு அவர்களை வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.

                      


“இருக்கட்டும் ராம்ஜி. நான் இங்கேயே இருக்கேன்” என்றார் சுஜாதா.

“இல்லை சார் ஒரு இரண்டு பாடல்களுக்கு நீங்கள் அங்கே வந்து உட்கார்ந்தால் அது என்னையும் குழந்தைகளையும் கவுரவப்படுத்தியதுபோல் இருக்கும். ஒரு இரண்டு பாடல்களைக் கேட்டுவிட்டுக் குழந்தைகளை ஆசீர்வதித்துவிட்டுப் போங்கள்” என்றார்.

அவர் அழைத்தபடியே அந்த மேடையின் முன்பு சென்று அமர்ந்தோம். ஒரு சிறுவன் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே’ என்று ஆரம்பித்து செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடினான்.

இன்னொரு சிறுமி எம்எஸ்ஸின் ஒரு பாடலைப் பாடினாள்.

அத்தனை சுத்தம். அச்சு அசலாக அப்படியொரு க்ஸெராக்ஸ் பதிப்பு.

வியந்துபோன சுஜாதா (பொதுவாகக் குழந்தைகளை பெரியவர்கள் போல் இமிடேட் செய்ய வைக்கக்கூடாது  என்ற மனப்பான்மை கொண்டவர் அவர்) குழந்தைகளையும் ராம்ஜியையும் மனம்விட்டுப் பாராட்டினார்.

ராம்ஜியைத் தொடர்ந்து தற்சமயம் அனந்த் அதே பணியை விஜய் டிவியில் மிகச்சிறப்பாகவே செய்துவருகிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது. 

பல வீடுகளில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கென்றே தயாராகிவிடுகிறார்கள் என்றும் 
கூறப்படுகிறது. பெண்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும் உணரமுடிகிறது. இத்தனைப் பெரிய நிகழ்ச்சியைத் தொகுத்துத் தரும் தொகுப்பாளர்களின் மாபெரும் அறுவையையும், ஜட்ஜ்களாக வரும் சில பின்னணிப் பாடகர்கள் மற்றும் பாடகியரின் ஈகோ கலந்த ஆய்வுகளையும் (இதில் எல்லாரையும் சொல்லவில்லை) சகித்துக்கொள்ளப் பழகிவிட்டால் நிச்சயம் செல்லக்குரல்களின் சில தென்றல் போன்ற வருடல்களுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி பல அரிய தகவல்களை சத்தமில்லாமல் உணர்த்திவிடுகிறது என்பதுதான் இதிலுள்ள விசேஷம்.

தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து பாடல்களுக்கு அடிமையாகிக் கிடப்பதுதான் நம்முடைய தமிழினம். பாடல்களை நாம் திரைப்படங்களின் மூலம்தான் அனுபவிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். பாடல்கள் ஒரு காலத்தில் நாடோடிப் பாடல்களாக இருந்திருக்கக்கூடும். தெம்மாங்குப் பாடல், நாட்டுப்புறப் பாடல், உழவுப்பாடல் என்று பல்வேறு வகையான பாடல்கள் இருந்தபோதிலும் அவை யாவும் ஒரு சில பாணியிலேயே உழன்று வந்தவைதாம்.

பாடும் பாணியும் மெட்டுக்களும் வேறுபட்டாலும் அவை எல்லாமே அடிப்படையில் ஒரு சில வரையறைக்குள்ளேயே அடங்கிவிடக்கூடியவைதாம்.

அதன்பிறகு கர்நாடக இசையின் காலம் ஆரம்பித்தது.

கர்நாடக இசைப்பாணியிலான பாடல்கள் அணிவகுத்தன.

திரையிசையையும் மேடைகளையும் அத்தகைய பாடல்களே ஆக்கிரமித்தன.

கர்நாடகப் பாணியிலான பாடல்கள் வந்தபிறகுதான் இசை அனுபவத்தில் மிகப்பெரியதொரு இடைவெளி ஆரம்பித்தது.

கர்நாடக இசை கற்றவர்களுக்கும் அந்த இசையின் பரிச்சயம் இல்லாதவர்களுக்குமான மிகப்பெரியதொரு கோடு நடுவில் போடப்பட்டது.

கர்நாடக இசை அறிந்தோர், அறியாதோர் என்றொரு பிரிவு மிக வேகமாக வளர ஆரம்பித்தது. 

கர்நாடக இசை கற்றவர்கள் மேலோர் என்றும் அதை அறியாதவர்கள் கொஞ்சம் கீழே இருப்பவர்கள் என்பதுமான வரையறை லேசாகத் தலைதூக்க ஆரம்பித்தது.

இது வேறு எந்த கலைவடிவமாக இருந்திருந்தாலும் இந்தப் பிளவு மேலும் மேலும் ஆழமாகப் போயிருக்கக்கூடும். இடையில் சாதி புகுத்தப்பட்டு  பல்வேறு பாதகங்களை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த இடைவெளியை இட்டு நிரப்பி திரையிசைக்கு வேண்டியது மெல்லிசைதான் என்ற நிலையை ஏற்படுத்தித் தந்தவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்தான்.

அன்றைய திரையுலகில் ஜி.ராமனாதனுக்கு அடுத்து  பிரபல இசையமைப்பாளர்களாக அறியப்பட்டு மிகப்பெரிய சாதனைகளையும் புரட்சிகளையும் இசையுலகில் கொண்டுவந்தவர்கள் இவர்கள் இருவரும்தான்.

இவர்களின் சாம்ராஜ்ஜியத்தில் நடைபெறாத சோதனை முயற்சிகளோ, பரீட்சார்த்தங்களோ, புதுமைகளோ, புரட்சிகளோ எதுவுமே கிடையாது.

அதனால்தான் இவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்று அறியப்பட்டார்கள்.

அதன்பிறகு நிறைய மன்னர்களும் ராஜாக்களும் வந்துவிட்டதனால் இவர்களை தற்போது 

மெல்லிசை மாமன்னர்கள் என்று குறிப்பிடுகின்றனர் விமரிசகர்கள்.

இவர்களுடைய அடியைப் பின்பற்றித்தான் இன்றைய இசையமைப்பாளர்கள்- இளையராஜாவிலிருந்து இன்றைய சங்கர்நாராயணன்வரை நடைபோடவேண்டிய கட்டாயத்தை இயல்பாகவே உருவாக்கிவிட்டிருப்பவர்களாக இவர்கள் இருவரையும்தான் சொல்லவேண்டும்.

52ல் துவங்கி 57ல் வேகமெடுத்த இவர்களின் இசைப்பயணம் 65ல் பிளவுபட்டபோதும் விஸ்வநாதன் பிரிந்துசென்று தனியொருவராக நின்று அவருடைய சாதனைகளில் சேதாரம் எதுவும் வராமல் பார்த்துக்கொண்டது அரியதொரு சாதனை.

இன்னமும் நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் ஆனபோதும் சிவாஜி என்றாலோ, எம்ஜிஆர் என்றாலோ கண்ணதாசன் என்றாலோ டிஎம்எஸ் என்றாலோ பி.சுசிலா என்றாலோ நினைவுக்குவரும் பாடல்கள் இவர்கள் இசையமைத்தவையாக மட்டுமே இருக்கும். இவர்களுக்கு இணையாக கூடவே பவனிவந்த இன்னொரு இசையமைப்பாளராக கே.வி.மகாதேவனையும் சொல்லவேண்டும்.

இந்த வரிசைக்குப் பின்னால்தான் எந்த வரிசையாயிருந்தாலும் வரவேண்டும்.
அத்தனை சாதனை. அத்தனை வெற்றி.

சினிமாவைப் பொறுத்தவரை சாதி மதம் மொழிக்கெல்லாம் இடமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதிய அடையாளங்கள் இருந்துகொண்டிருந்தாலும் அவை பொதுவான தளத்தில் வைக்கப்பட்டு இயங்குவதில்லை.

திரையுலகைப் பொறுத்தவரை இங்கு அடையாளப் படுத்தப்படுவது வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான்.

அதனால்தான் சினிமாவில் ‘மட்டும்’ சாதிய மற்றும் மொழி அடையாளங்களை அவ்வளவாகப் பார்க்கமுடியாது.

இங்கு எம்ஜிஆர் மலையாளியா தமிழரா என்று பார்க்கப்படுவதில்லை.

ரஜனிகாந்த் மராட்டியரா கன்னடரா தமிழரா என்று பார்க்கப்படுவதில்லை.

ஏசுதாஸ் மலையாளியா, எஸ்பிபி தெலுங்கரா, எம்எஸ்வி மலையாளியா என்பதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.

அதுபோலவே நடிகைகள் விஷயத்தில் சாதி, மதம், மொழி என்பதெல்லாம் என்றைக்கும் யாரும் பார்த்ததே இல்லை. அன்றிலிருந்து இன்றையவரைக்கும் நான்கைந்துபேரைத் தவிர தமிழச்சிகள் கதாநாயகிகளாக பவனிவந்ததே இல்லையென்பதும், அதனை ஒரு பொருட்டாகக்கூட யாரும் நினைத்ததில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு காலகட்டத்தில் தெலுங்கர்களும் மலையாளிகளும் கன்னடர்களும் மட்டுமே கதாநாயகிகளாக நிறைந்திருந்த தமிழ்த்திரையில் தற்சமயம் வடநாட்டுப் பெண்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு திரையுலகை ஆக்கிரமித்துள்ளனர்.

சினிமாவில் கதாநாயகர்களும்(ஓரிருவரைத் தவிர) கதாசிரியர்களும் கவிஞர்களும் மட்டுமே ‘பெரும்பாலும்’ தமிழர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இந்தப் பாட்டையில்தான் தமிழ்த்திரையுலகம் அன்றிலிருந்து இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் இதனடிப்படையில்தான் அணுகவேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேடையில் அமர்ந்திருக்கும் ஜட்ஜூகளும் சரி, பாடவந்திருக்கும் சிறுவர் சிறுமியரும் சரி பெரும்பாலும் பிற மொழியினரே.

அவர்கள் பாடுவது மட்டும்தான் தமிழ்.

சினிமாவில் என்ன நடக்கிறதோ அதுதான் இங்கேயும் நடக்கிறது.

சினிமாவில் வெற்றிக்குத்தான் முக்கியத்துவம், வெற்றிக்கு மட்டும்தான் முதல் மரியாதை. முதல் மரியாதை என்ன மரியாதையே வெற்றிக்கு மட்டும்தான்.

தொடர்ச்சியான வெற்றி மட்டும் தரவில்லையென்றால் அவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட்டு அதன் பாதையில் போய்க்கொண்டே இருக்கும் திரையுலகம்.

சாதனை என்பதும், திறமை என்பதும், உழைப்பு என்பதும் இங்கே வெற்றியை மட்டுமே வைத்துக் கணக்கிடப்படும். வெற்றி மட்டும் தரவில்லையென்றால் (அதுவும் தொடர்ச்சியான வெற்றி) நீ எத்தனைப் பெரிய கொம்பனாக இருந்தாலும் திரையுலகம் கவலைப் படுவதில்லை. ‘தூக்கிக் கடாசிவிட்டுப்’ போய்க்கொண்டே இருக்கும்.

மிகப்பெரிய சாதனையாளர்கள் புறந்தள்ளப்படுவதும், சாதாரணர்கள் இமயத்துக்கும் அப்பால் கொண்டாடப்படுவதும் இங்கே சர்வசாதாரணம் என்பது இயற்கைக்குப் புலப்படாத ஒரு விதி.

அதே சமயம் திறமைக்கு மதிப்பே இல்லை என்றும் சொல்லமுடியாது.

திறமைக்குத்தான் மதிப்பு. கூடவே அதிர்ஷ்டமும் இருக்கவேண்டும்.(பகுத்தறிவு வாதங்கள் நாயடி பேயடி வாங்கும் இடங்களில் திரைத்துறையும் ஒன்று. பகுத்தறிவு வாதங்களை வைத்து இங்கே எந்த முடிவுக்கும் வரவே முடியாது)

பகுத்தறிவு இங்கே எதையுமே நிர்ணயிப்பதில்லை. மாறாக ‘அதிர்ஷ்டம்தான்’ இங்கே எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முடிவுகள் இன்னமும் சில நாட்களில் வந்துவிடும். முடிவு எப்படியிருக்கப்போகிறதோ என்பது ஒருபுறமிருக்க இங்கே போட்டிக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்கள் மீது ஒரு பார்வையை வீசுவோம்.

பாடியவர்கள் அத்தனைப்பேரும் சிறுவர் சிறுமியர்.

பெரும்பாலான பாடல்கள் சிக்கலானவை. பெரியவர்களே பாடத் திணறும் நுட்பம் கொண்டவை. 

மிகத் தீவிரமான பயிற்சி இல்லையென்றால் சாதாரண ரசிகர்கள் என்றில்லை ஓரளவு பாடத்தெரிந்து ஆர்க்கெஸ்ட்ராக்களில் பாடும் நிலையில் இருப்பவர்கள்கூட சட்டென்று எடுத்துப் பாடமுடியாதவை.

அத்தகைய பெரும்பாலான பாடல்களை இந்தச் சிறார்கள் பாடியதை, அதுவும் சர்வசாதாரணமாகப் பாடியதை வியப்புக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும்.

நிச்சயம் அவர்களின் வயதுக்கும் ஞானத்துக்கும் அப்பாற்பட்ட பாடல்கள்தாம் பெரும்பாலானவை. 

அவர்கள் அதனை மிகச்சிறப்பாகப் பாடியதுதான் நிகழ்ச்சியின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம்.
இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் தொண்ணூறு சதம் நல்ல பாடல்களே.

தமிழின் மிகப்பெரிய இசையமைப்பாளர்களால் மிகத் தேர்ச்சியுடன் பின்னப்பட்டு மிகச்சிறப்பான நுணுக்கங்களுடன் இசையமைக்கப்பட்ட பாடல்கள் அவை. மெட்டிலும், பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், ஆர்க்கெஸ்ட்ரேஷனிலும், இவையெல்லாவற்றையும்விட பாடுகிறவர்களின் குரல் வளத்தாலும், உத்தியாலும் பிரமாதமாக அமைந்த பாடல்கள்.

சாதாரணப் பாடல்கள் என்று ஒரு வகை இருக்க – பாடல் போட்டிகளில் பாடுவதற்கென்றே சிறப்பான பாடல்கள் என்று சில இருக்குமல்லவா? அந்தவகையில் அமைந்த பாடல்கள் இவை.

அதனைத் தேர்ந்தெடுத்துப் பாடிய சிறார்களும் சரி; பாடவைத்த நிகழ்ச்சி அமைப்பாளர்களும் சரி பாராட்டுக்குரியவர்கள்.

அதே சமயம் அம்மாதிரி பாடல்களை உருவாக்கி நமக்களித்த அந்தப் பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரும் நம்முடைய வணக்கத்துக்குரியவர்கள்.

இந்த இடத்தில்தான் ஒரு உண்மையைப் பதிவு செய்யவேண்டும்.

போட்டிக்கென அமைந்த பெரும்பாலான பாடல்களின் இசைக்குச் சொந்தக்காரர்கள் எழுபதுக்கு முன் வந்த இசையமைப்பாளர்களாகவே இருக்கிறார்கள்.

ஜி.ராமனாதன் தொடங்கி, டி.ஜி.லிங்கப்பா, விஸ்வநாதன்- ராமமூர்த்தி, எம்எஸ்வி, கே.வி.மகாதேவன் என்றுதான் பெரும்பாலான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. அதுவும் கே.வி.மகாதேவன் பாடல்கள்தாம் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.

இளையராஜா தொடங்கி ரகுமான் மற்றும் ஜிப்ரான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், இமான், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரின் பாடல்கள் மிகக்குறைந்த அளவிலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அதிலும் இளையராஜா வருகைக்குப் பின்னர்தான் தமிழ்ப் படங்களில் இசை என்பதே ஆரம்பமாயிற்று, அவர் ஒருவர்தான் பாட்டுக்கு மெட்டமைத்தவர் அவர் இல்லாவிட்டால் தமிழனுக்கு இசை என்ற ஒன்றோ பாடல் என்ற ஒன்றோ கிடைத்தே இருக்காது, இசை என்றாலேயே அது இளையராஜாதான் என்ற மயக்கத்திலேயே இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரமாண்ட போட்டி நிச்சயம் ஒரு பெரிய ஏமாற்றத்தையே அளித்திருக்கும்.

ஏனெனில், அவ்வப்போது பல்வேறு சிரமமான கட்டங்களைத் தாண்டி வருவதற்குத் தேர்ந்தெடுத்துப் பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்களாகவே இருந்தன.

கடைசி ரவுண்டுகளில் இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றைப் பாடினாலும், அதற்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமாக ஏ.ஆர்.ரகுமானின் மிகக் கடினமான பாடல்களை இந்தச் சின்னஞ்சிறுசுகள் அனாயாசமாகப் பாடியது ரசிப்பதற்குரியதாகவே இருந்தது.

ஸ்பூர்த்தி  என்ற ஒரு சுட்டிப்பெண், பெங்களூரைச் சேர்ந்தவள் பல பிரபலமான கஷ்டமான பாடல்களைப் பாடியது அசத்தல் ரகம். இத்தனைக்கும் அவளுடைய தாய்மொழி கன்னடம். 

அதிலும் அனுஷ்யா என்ற சின்னப் பெண் ‘புத்தம்புது பாட்டுவந்தா தாண்டவக்கோனே’ என்ற வித்யா சாகரின் அற்புதமான ஒரு பாடலைப் பாடியமுறை கேட்பவர்களை உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தது. ஜட்ஜ்கள் அத்தனைப்பேரும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று கைதட்டியதோடு அருகில்வந்து அந்தச் சிறுமியைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்தது நெகிழ்ச்சியூட்டிய ஒரு அனுபவம்.

                     


ஒவ்வொருவர் பாடி முடித்ததும் நீதிபதிகளாக வந்திருந்த கர்நாடக இசைப் பாடகர்களும், திரையிசைப் பின்னணிப் பாடகர்களும், சில இசையமைப்பாளர்களும் செய்த விமர்சனங்கள் அவர்களுடைய ஈகோவை விட்டுக்கொடுக்காமல் செய்யப்பட்டதுபோல் செயற்கையாகத் தோன்றினாலும், சில விமர்சனங்கள் உபயோகமுள்ளவையாகவே இருந்தன. அதிலும் எல்.மகராஜனுடைய விமர்சனங்கள் கனகச்சிதம்.

சில பாடல்களைத் தவிர பெரும்பாலான பாடல்களைக் கேட்கும்போது அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்கும்போது ஒரு பெரிய குறை தென்பட்டது.

அதாவது ஏதோ ரயிலைப் பிடிக்கவோ அல்லது விமானத்தைப் பிடிக்கவோ ஓடுவதுபோன்ற அவசரத்துடன் பாடல்கள் பாடப்பட்டன.

பின்னணி இசையும் அதற்கேற்பவே வாசிக்கப்பட்டது.

இதுபற்றி ஜட்ஜ்களாக வந்திருப்பவர்கள் யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று காத்திருந்ததில் வியர்த்தமே மிஞ்சியது.

இந்தக் குறையை அவர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அதாவது ஒரு பாடல் எப்படிப் பாடப்பட்டிருக்கிறதோ அந்தத் தாள லயத்திலும் நேர லயத்திலும் இல்லாமல் படுவேகமாக ஓடி முடிந்திருந்தன ஒவ்வொரு பாடலும்.

ஒரு பாடல் எவ்வளவு நேரத்தில் முடியவேண்டுமோ அதற்கேற்ப இல்லாமல் அரை நிமிடம் முன்னதாகவே முடிந்திருந்தன என்பதுதான் விஷயம்.

இதனை யாரும் உணரவில்லை என்பது ஒரு சோகம்.

வேறொன்றுமில்லை. எம்பி-3 சிடிக்களில் திணித்து நிரப்பப்படும் பாடல்களைக் கேட்டுவிட்டு அதற்கேற்ப பாடுவதாலும் அதற்கேற்ப இசைப்பதாலும் வருகின்ற வினை இது.

இதைப்பற்றி பிரபல இசை விமரிசகர் ஷாஜிகூட ஏதோ ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்ததாக ஞாபகம்.

நூறு இருநூறு பாடல்களை, அல்லது நானூறு ஐநூறு பாடல்களை ஒரே சிடியில் திணிப்பதனால் வரும் மோசமான விளைவு இது.

நெருக்கியடித்துக்கொண்டு அத்தனைப் பாடல்களை ஒரே சிடியில் சேர்த்துத் திணிக்கும்போது இப்படிக் கைகால்கள் ஒடுங்கிப்போய் மூச்சுத்திணறிப் போய் அந்தப் பாடல்கள் தங்களின் சுயம் இழந்து ஏதோ ஒரு வேகத்துக்கும் எண்ணிக்கைக்கும் மட்டுமே ஈடு கொடுக்கமுடியும். நிச்சயமாக இனிமைக்கு அல்ல.

 பழைய பாடல்களின் ரசிகர்கள் இந்த ‘எம்பி- 3’ சிடிக்களை வாங்கி மோசம் போகாதீர்கள். உங்களின் இசை ரசனையையே கெடுத்துவிடக்கூடியவை அவை.


பழைய பாடல்கள் தேவையெனில் யூ டியூபில்வரும் பாடல்களுடன் கூடிய திரைக்காட்சிகளிலிருந்து ஒலியை மட்டும் பதிந்துவைத்துக்கொண்டு கேளுங்கள்.(விபரம் 
தெரிந்தவர்கள் மேற்கொண்டு வேறு எப்படி நல்லமுறையில் சேமிக்கலாம் என்பதைத் தெரிவித்தால் நலம்)


அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்குள் இந்தப் பிரச்சினைக்கு விஜய் டிவிக்காரர்கள் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்.