சாருநிவேதிதா அவ்வப்போது இளையராஜா பற்றி எழுதுவது வாடிக்கைதான். இந்த இணைய உலகில் – அதாவது தமிழ் இணைய உலகில், ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. இந்த நாட்டின் பிரபலங்களில் யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உங்களைப் பேச அனுமதிப்பார்கள். யாரை வேண்டுமானாலும் திட்டலாம். எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். எந்தவித எதிர்ப்பும் வராது. அப்படியே வந்தாலும் அது வாதத்திற்கு வாதம் என்ற அளவில்தான் இருக்கும்.
மகாத்மாவைப் பற்றி விமர்சிக்கலாம். பண்டித நேருவைப்பற்றி விமர்சிக்கலாம். லால்பகதூர் சாஸ்திரியை, வல்லபபாய் பட்டேலை, மொரார்ஜி தேசாயை, பால் தாக்கரேயை, மோடியை, அத்வானியை, இந்திரா காந்தியை.......ஏன், தமிழகத்திற்கு வந்தால் பெரியாரை, ராஜாஜியை, காமராஜரை, அண்ணாவை, கலைஞரை ஜெயலலிதாவை இன்னமும் சிவாஜியை எம்ஜிஆரை, விஜயகாந்தை, விஜய்யை, அஜித்தை, சூர்யாவை........ யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். கூடவே தாளம் போட இன்னும் இருபது பேர் கிடைப்பார்கள்.
ஆனால் தப்பித் தவறிக்கூட இளையராஜாவை ‘மட்டும்’ விமர்சிக்கக்கூடாது. இது இணையம் பூராவும் பரவியிருக்கும் ஒரு விதமான ‘மௌடீக கொள்கையாக’ இருக்கிறது. இது ஏனென்று தெரியவில்லை.
இதற்கு சமீபத்திய உதாரணம் பாரதிராஜா.
பாரதிராஜா விகடனில் இளையராஜாபற்றிக் கருத்து தெரிவித்திருந்தார். உடனே பாரதிராஜாவை உண்டு இல்லையென்று ஆக்கி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவருடைய துரதிர்ஷ்டம் இரண்டு நாட்கள் கழித்து அவர் விமர்சித்திருந்த மணிவண்ணன் திடீரென்று இறந்துவிடவே மொத்த இளையராஜா எதிர்ப்பு விமரிசனங்களையும் ‘மடைமாற்றி’ பாரதிராஜா விமர்சித்ததால்தான் மணிவண்ணன் இறந்துவிட்டார் என்று ‘பெயிண்ட் அடித்த’ விமரிசனமாகப் பண்ணிவிட்டார்கள்.
இதோ இப்போதுகூட அடுத்த விகடன் இதழில் இளையராஜா பற்றி பாரதிராஜா பதில் சொல்லப்போகிறாராம். கேள்வி மட்டுமே விகடனில் வந்திருக்கிறது. பாரதிராஜா என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியாது.ஆனால் இப்போதே பாரதிராஜாவை ‘எதிர்த்து’ எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ரசிகர்களாவது பரவாயில்லை. வினவுக்கு என்ன வந்தது?
வியப்பு என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைப்பேரையும் அல்லது அத்தனை விஷயங்களையும் கன்னாபின்னாவென்று பிரித்துக்கட்டி ‘பிய்த்து உதறும்’ வினவு தளம் கூட இளையராஜாவை ‘மட்டுமே’ உயர்த்திப்பிடித்து எழுதுகிறது. வினவு ‘பாராட்டியிருந்த’ இன்னொரு பிரபலம்- இரண்டாவது பிரபலம்- ஷ்ரேயா கோஷல்.
அது கிடக்கட்டும். சாரு சில விஷயங்களில் மட்டும் எப்போதும் தமது கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை.அதில் ஒன்று இளையராஜா பற்றிய விஷயம்.
நான் இணையத்தில் அடிக்கடி சொல்லிவரும் அதே கருத்துக்களைத்தான் அவரும் சொல்லிவருகிறார். ‘இளையராஜாவை விடவும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஏற்கெனவே தமிழில் இருக்கிறார்கள்.’
இன்னொரு மிகப்பெரிய கோமாளித்தனம், இளையராஜாதான் பாடல்களில் இன்டர்லூட் எனப்படும் பின்னிசையைக் கொண்டுவந்தார்- என்பது. இப்படி எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது என்பதே வேஸ்ட். இவர்களாகத் தேடி பாடம் கற்றால்தான் உண்டு.
இரண்டாவது- படங்களில் வரும் பின்னணி இசை. பின்னணி இசை கோர்ப்பில், பின்னாட்களில் இளையராஜாவின் பங்கு பாராட்டுக்குரியதுதான். ‘நல்ல பின்னணி இசை சேர்ப்பவர் இளையராஜா’ என்ற அளவில்தான் இது அடங்கும். ஆனால் இதையே ‘உலக மகா இசையமைப்பாளர் ஆகா ஓகோ’ என்று இவர்கள் ஆடும் ஆட்டம் பரிதாபத்திற்குரியது. இதுபற்றிப் பிற்பாடு நிறைய எழுத இருப்பதால் இப்போதைக்கு இது போதும்.
ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் சினிமாவிலுள்ள பல்வேறு தொழில்நுணுக்கங்களிலும் நாள்தோறும் ஏற்பட்டுவரும் மாறுதல்களில் ஒன்றுதான் பின்னணி இசையில் இளையராஜா பின்னாட்களில் ஏற்படுத்திய மாறுதல். அதுவும் நிறைய இசையமைப்பாளர்கள் செய்த ஒன்றுதான். இந்த ஒன்றுக்காகவே உலகில் இவருக்கு இணையாக யாருமே இல்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் அலைவதுதான் கேவலமாக இருக்கிறது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
இளையராஜா பற்றிய சாருவின் கருத்து இது.
‘ஒருநாள் மாலை முன்னறிவிப்பு இல்லாமல் பத்துப் பதினைந்து பேர் வந்து விட்டனர். நான் விருந்தாளியாகவே இருந்தாலும் என்னைச் சந்திக்க புதிய நண்பர்களை அனுமதிப்பதில்லை. அதிலும் ஒரு நண்பர் “இளையராஜா விஷயத்தை வைத்து என்னை மடக்க வேண்டும்” என்ற திட்டத்தில் நூறு கேள்விகளோடு வந்திருக்கிறார்.
வந்தவுடனேயே அவரை நாக்-அவுட் செய்து விட்டேன். இளையராஜாவை விமர்சித்தேனா? நானா? எனக்கு அவரை ரெம்ப ரெம்பப் பிடிக்குமே? குணாவிலும் ஹே ராமிலும் அவர் மாதிரி வேறு யாரால் அப்படிப் போட முடியும்? ஏ. ஆர். ரஹ்மானா? அவர் பாடல்கள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. கடல் மட்டுமே விதிவிலக்கு.
இப்படி ஐந்து நிமிடம் பேசியதுதான் நாக்-அவுட். நான் மேலே எழுதியதெல்லாம் பொய் அல்ல. நிஜம்தான். ஆனாலும் எனக்கு இளையராஜாவைப் பிடிக்காது. ஏனென்றால், அவரை விட ஜாம்பவான்களெல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள். அவர் பொன்மலை என்றால் இங்கே பல இமயங்கள் இருந்திருக்கின்றன. விஸ்வநாதன் ராமமூர்த்தி duo-வை என்னவென்று சொல்வது? ஒரு படம் என்றால் அதில் வரும் ஐந்து பாடல்களையும் சூப்பர் ஹிட் பண்ணுவார்கள் அவர்கஆனந்த ஜோதி ஒரு உதாரணம். கே.வி.மகாதேவனும் அப்படியே. கர்ணன் உதாரணம். இது போக, தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா போன்றவர்களின் படங்களுக்கெல்லாம் இசை அமைத்தவர்கள் யார்? இன்றைக்கு யாருக்காவது பெயர் ஞாபகம் இருக்கிறதா?
என்னைப் பலருக்கும் பிடிக்காமல் போனதற்குக் காரணம், நான் இளையராஜாவை விமர்சித்ததுதான் என்று தெரிகிறது. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் உங்களுக்கு இளையராஜாவை மட்டுமே தெரியும். எனக்கோ உலக இசை உள்ளங்கையில். உதாரணமாக, மெட்டாலிகாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள். இதைக் கேட்பதால்தான் என்னால் இன்னமும் 15 வயது இளைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்க முடிகிறது. பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என் விசிறிகள். புத்தகம் அல்ல; இசை தான் எங்களை இணைப்பது.
ஓகே. இளையராஜா பற்றிக் கூட என்னோடு விவாதிக்கலாம். ஆனால் அதற்கு எனக்கு நீங்கள் கட்டணம் கொடுக்க வேண்டும். என் நேரத்தை என்னால் ஓசியில் தர முடியாது. அதிலும் முன் அனுமதி இல்லாமல், எனக்குத் தெரிந்த உங்கள் நண்பர்களின் துணை கொண்டு என்னை சந்திப்பதை அத்துமீறல் என்றே நான் கருதுகிறேன். திபுதிபுவென்று இருபது பேர் புதிதாக வந்ததும் நான் மிரண்டே போனேன். எங்கள் வாசகர் வட்டக் கூட்டங்களில் அப்படி ஒருவர் கூட புதிய நபராக அனுமதி இல்லாமல் வருவதில்லை. வருவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை.’
மேற்கண்ட சாருவின் எழுத்தில் ஒரு சிறு திருத்தம். விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைத்த படங்களில் ‘ஐந்து
பாடல்கள் என்றால் ஐந்து பாடல்களும் ஹிட்’ என்கிறார். அவர்கள் இசையமைத்த படங்களில் ஐந்து பாடல்கள்
அல்ல. ஆறு, ஏழு, எட்டு பாடல்கள் என்றுதான் பெரும்பாலும் இருக்கும். அத்தனைப்
பாடல்களையும் ‘தேனாமிர்தமாக’ ஆக்கிய கலைக்கு அவர்கள் மட்டுமே
சொந்தக்காரர்கள். அவர்கள் இசையில் மிகக் குறைவான பாடல்கள் கொண்ட படம் கற்பகம்.
அந்தப் படத்தில் வெறும் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
1) அத்தைமடி மெத்தையடி 2) பக்கத்துவீட்டு பருவமச்சான் 3)ஆயிரம் இரவுகள் வருவதுண்டு 4)மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா........கவிஞர் வாலியைக் கடைக்கோடிவரைக் கொண்டுசேர்த்தவை இந்தப் பாடல்கள்தாம். இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம்....நான்கு பாடல்களையும் பாடியவர் ஒரே ஒருவர். பி.சுசீலா. வேறு குரல்களோ, ஆண் குரலோ படத்தில் கிடையாது. அந்தக் காலத்திலேயே இம்மாதிரியான சாதனைகளையெல்லாம் சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போனவர்கள் அவர்கள். இன்றுவரை யாராலும் இந்தச் சாதனைகளையெல்லாம் தொடக்கூட முடிந்ததில்லை.
இன்னொன்று கே.வி.மகாதேவனும் மிகப்பெரிய அற்புதங்களையெல்லாம்
நிகழ்த்திக்காட்டிய இசையமைப்பாளர். அவருடைய சாதனைக்கு உதாரணம் கர்ணன் என்று
சொல்லியிருக்கிறீர்கள்.
சாரு, கர்ணனும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த படமே. நீங்கள் தில்லானா
மோகனாம்பாளையோ, திருவிளையாடலையோ சொல்ல வந்தீர்களோ? இருக்கக்கூடும்.
சாருநிவேதிதா எங்கோ ஒரு இடத்திற்குப்
போனாராம். அங்கே அவருடைய ரசிகர்களைச் சந்தித்துப் பேசலாம் என்று உட்கார்ந்த
இடத்தில் இளையராஜா பற்றி எப்படி எழுதலாம் என்று கேட்பதற்காகவே ஒரு கூட்டம்
வந்ததாம். நல்ல கூட்டம்தான் போ.
சாருவிற்குப் புகழ் மாலையோ பாமாலையோ பாடும் பதிவல்ல இது. அவர் சொன்ன ஒரு
கருத்திற்கு எதிர்வினையாற்றவந்த பதிவு மட்டுமே இது.
