Thursday, July 30, 2015

கலாமை விமர்சிக்கலாமா?


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் ஊடகங்களில் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணர்கிறோம். ஊடகங்கள் இத்தனை தூரம் முக்கியத்துவம் பெறாத காலத்தில் மறைந்த மிகப் பெரிய தலைவர்களின் மரணங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை கலாமின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பெரிதாகப் பரவிவிட்ட ஊடகங்கள் மட்டும் காரணமில்லை என்பதும் அந்த ஊடகங்களின் இத்தனைப் பரபரப்பிற்கு ஈடாக அவர் வாழ்ந்துவந்த வாழ்க்கை அவற்றுக்கு ஒரு தகவாக இருந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

கலாமைப் பற்றி உயர்வாகச் சித்தரித்து அவரது மேன்மைகளைப் புகழ்பாடி வந்துகொண்டிருக்கும் நிலைத் தகவல்களும், பரப்புரைகளும், பதிவுகளும், கட்டுரைகளும், செய்திகளும், எண்ணவெளிப்பாடுகளும், சிந்தனைச் சிதறல்களும் ஒரு பக்கமிருக்க அவரை எதிர்த்து வரும் பதிவுகளுக்கும், நிலைத்தகவல்களுக்கும், எதிர்த் தரப்புக் கேள்விக்கணைகளுக்கும், குத்திக் கிளறும் வாதங்களுக்கும்கூடக் குறைவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

‘மறைந்த ஒருவரைப் பற்றி அந்த மரணத்தின் சுவடுகூட நீங்காத சமயத்தில், அட இன்னமும் அவரது உடல்கூட அடக்கம் செய்யப்படாத நேரத்தில் இம்மாதிரியான எதிர்க்கருத்துக்களை வைக்கலாமா?

நியாயம்தானா?

இவையெல்லாம் பண்பாடா? நாகரிகமா? ஒரு பொது கட்டுப்பாடு, கலாச்சாரம்கூடவா இவர்களிடம் இல்லை?’ என்பதற்கெல்லாம் இங்கே பதில்கள் கிடையாது.

பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் சுய ஒழுக்கம் போன்றவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து செயல்படுபவர்கள் குறைந்துகொண்டு வரும் ஒரு காலகட்டம் இது.

‘கையில் எழுதுகோலோ அல்லது அதற்கு இணையான இணையமோ கிடைக்கிறதா நான் எதுவேண்டுமானாலும் எழுதுவேன், எப்படி வேண்டுமானாலும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பேன், என்னை யார் கேட்கமுடியும்?’ என்ற மனவோட்டமும் சிந்தனைத் திமிரும் கொண்ட காலகட்டம் இது.

இங்கே இப்படித்தான் எழுதுவார்கள், இப்படித்தான் செயல்படுவார்கள்………… இப்படித்தான் நிலைத்தகவல்கள் போடுவார்கள்…………… இப்படித்தான் வினையாற்றுவார்கள்.

இவற்றுக்கெல்லாம் கலாமைப் போன்ற மாமனிதரைக் கூட ஆளாக்கிவிடலாமா என்ற சிந்தனைத்தான் எஞ்சுகிறது!

இவர்கள் கலாமைப் பற்றி என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்று பார்த்தோமானால் குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளின்போது வாய்மூடி மௌனியாக இருந்தார், ஈழத்தில் அத்தனைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது சின்ன வருத்தத்தையோ முனகலையோகூட வெளிப்படுத்தவில்லை, கூடங்குளம் அணுஉலையை மூடச்சொல்லி நடைபெற்ற போராட்டத்திற்கு எதிர்வினையே ஆற்றவில்லை என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய வாதங்களில் உண்மை இல்லாமலில்லை. நமக்கும்கூட இந்த விஷயங்களில் கலாமுடைய கனத்த மௌனத்தில் சம்மதம் இல்லைதான்.

ஆனால் நிச்சயம் இந்த விஷயங்களை விவாதத்திற்குள்ளாக்கும் தருணம் இதுவல்ல.

அவருடைய பூத உடல் அடக்கம் செய்யப்படுவதற்குள் அவருக்கெதிராக எழுப்பப்படும் கலகக்குரல்கள் அருவெறுப்பையே ஏற்படுத்துகின்றன.

சின்னச்சின்ன குறுங்கத்திகளை மறைத்து வைத்துக்கொண்டு யார் கிடைத்தாலும் அவர்களைக் குத்திக்கிழிப்பது மட்டுமே என்னுடைய பணி என்று செயல்படும் இணையச் செயல்பாட்டு வீரர்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள்.

பிறரைக் கீறுவதும் குத்திக்கிழிப்பதும் மட்டுமே இவர்களது வேலை. வேறு எந்த வேலையும் இவர்களுக்குக் கிடையாது என்பதுமட்டுமல்ல எதுவும் தெரியாது என்பதையும் சேர்ந்தே புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றவர்களை, அதுவும் பொதுவாழ்வில் தலைமை இடத்துக்கு ஒருவர் வந்துவிட்டாலேயே ‘நம்முடைய அட்டாக்கிற்கு இவர்களை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்று இவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்.

இல்லாத ஊர் நியாயங்களை இவர்கள் சேகரித்துக் கொள்கிறார்கள்.

கடுமையான கேள்விக்கணைகளை வீசுகிறார்கள்.

எத்தனை அசிங்கமாக எழுதமுடியுமோ அத்தனை அசிங்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். 

கொஞ்சம்கூட மட்டு மரியாதை இன்றி வயதுக்கான மரியாதைக்கூட இல்லாமல் அமில வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். தங்களை யார் என்ன செய்துவிடமுடியும் என்பதும், தங்களைப் பற்றி யார் என்ன எழுதிவிட முடியும் என்பதும் (இவர்களைப் பற்றி எழுத என்ன இருக்கப்போகிறது?) இவர்களுக்கான பாதுகாப்பு அரண்.

இன்னொன்றைச் சொல்லவேண்டுமானால் இவர்களில் யாரும் படைப்பாளிகளாய் இருக்கமாட்டார்கள். (ஒரு சிலரைத் தவிர) ஆகவே படைப்புக்கள் எழுதி தங்களை கவனிக்கவைக்க முடியாது. ஆகவே இம்மாதிரியான அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம் 

தங்கள்பால் படிக்கிறவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாதா என்ற நப்பாசை இவர்களுக்கு உண்டு.

இப்படிச் சுற்றித்திரியும் ஆசாமிகள் இணையத்தில் எல்லாத் தளங்களிலும் நிறையவே காணக்கிடைக்கிறார்கள்.

முதலில் அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

குடியரசுத் தலைவராக வலிந்து திணிக்கப்பட்டவர் அவர். அவருக்கு நிச்சயம் சில அரசியல் நிர்ப்பந்தங்கள் இருந்திருக்க வேண்டும்.

அரசியலில் யார் உள்ளே புகுந்தாலும் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டுத்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டு மௌனித்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குக்கூட அவர் ஆளாகியிருக்கக் கூடும். ஏனெனில் மேற்கண்ட இக்கட்டான சூழல்கள் வராத காலத்திலேயே அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே அவற்றிலுள்ள நிர்ப்பந்தங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட சிந்தனையாளரான அண்ணா தாம் ஏற்றுக்கொண்ட முதல்வர் பதவி பற்றிக்குறிப்பிடும்பொழுது “தான் ஒரு சூழ்நிலைகளின் கைதி” என்று குறிப்பிட்டார்.

ஒரு சாதாரண முதலமைச்சர் பொறுப்புக்கே அப்படி அவர் கருத்துத் தெரிவித்திருக்கும்போது ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் என்பவருக்கு எந்தவிதமான நிர்ப்பந்தங்கள் இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

இப்படிச் சொன்னவுடன் ‘இவ்வளவையும் சகித்துக்கொண்டு ஏன் இருக்கவேண்டும்? 

பிடிக்கவில்லையென்றால் பேசாமல் ராஜினாமா பண்ணிவிட்டுப் போயிருக்கவேண்டியதுதானே?’ 

என்று கேட்கவும் செய்வார்கள். இதுபோன்ற அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் இங்கே பதில் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இணையத்தின் சண்டப்பிரசண்டர்களின் ஆசை அபிலாஷைகளுக்கு ஏற்ப எந்தத் தலைவனும் தன்னை வடிவமைத்துச் செயலாற்றிக்கொண்டிருக்க முடியாது. அப்படிச் செயலாற்றவும் தேவையில்லை.
மறுபடியும் நினைவு கூறவேண்டும். ‘அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல!’

இங்கே ஒரு மனிதரின் தலைமைப் பண்பு என்பதும் அவரது ஆளுமைத் திறன் என்பதும் பல்வேறு வகைகளில் வெளிப்படுகின்றன.

எத்தனையோ தலைவர்களை நாம் தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாரதப் பிரதமரிலிருந்து நம் வீட்டுத் தெருவிலிருக்கும் கார்ப்பரேஷன் கவுன்சிலர் வரைக்குமான பலரையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லா விஷயங்களிலும் நூறு சதவிகிதம் ‘பர்ஃபெக்ட்டான’ ஆட்கள் அல்லது தலைவர்கள் இங்கே யாருமே இல்லை என்பதும் அப்படி யாரும் இருக்கமுடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.

அவ்வாறிருக்க இவர்கள் யாரை கல்லா கட்ட நினைக்கிறார்களோ அவர்களிடம் மட்டும் நூறு சதவிகிதத்திற்கும் அதிகமான ‘பர்ஃபெக்ஷன்களை’ எதிர்பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள். (அப்படிக் கேள்விகள் கேட்பவர்களிடம் ‘அந்தத் தகுதிகளில் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் ஏன் அரை சதவிகிதமாவது கேட்பவர்களிடம் இருக்கிறதா?’ என்ற கேள்வி ஒருபுறமிருக்க) “சரி, நீங்கள் சொல்லும் ஆளை விட்டுவிடுகிறோம். இவருக்கு மாற்றாக இங்கே யார் இருக்கிறார்கள்? அவரை எனக்குக் காட்டு. நான் அவரைப் பின்பற்றுகிறேன்” என்று கேட்டுப்பாருங்கள்.

அவ்வளவுதான். ஆசாமிகள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

சாதாரணத் தலைவர்களுக்கே இந்தக் கதி என்றால் கலாம்போன்ற ஒரு மாமனிதரை நாம் எப்படி வரையறுக்க வேண்டும்?

இத்தனை உயரங்கள் தொட்ட எந்தத் தலைவருக்கும் இல்லாத பல அரிய உயர்குணங்கள் கொண்டவர் அப்துல் கலாம்.

அவரிடமிருந்த தனிமனித நேயம் இங்கே எந்தத் தலைவனிடமும் இல்லை.

அவரிடமிருந்த உயர்குணங்கள் இங்கே எந்தப் பிரபலத்திடமும் இல்லை.

அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம் இங்கே எவரிடமும் இல்லை.

நீங்கள் கைகாட்ட முடிந்த யாரை விடவும் பண்புகளுக்கும் எளிமைக்கும் சொந்தக்காரர் அவர்.

உலகின் அத்தனைத் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்த ஒரு நாட்டின் உயர்ந்த குடிமகன் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியையும், பள்ளிக்குப் போகும் ஏழைச் சிறுமியையும் மதித்துத் தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்துப் பேசியதாய் எந்த வரலாறும் இல்லை.


எளிமையிலும் எளிமையினராய், தன்னை மற்றவர்களின் அளவுக்கு இறக்கிக்கொண்டுதான் அவர் மற்றவர்களிடம் பேசினார், பழகினார். இப்படி ஒரு உயர் பதவி வகித்தவரை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் இந்த நாடு பார்க்கப்போவதில்லை.

ஜனாதிபதியாய் இருந்தபோதுகூட தம்மைச் சந்தித்தவர்கள் எத்தனை சாதாரணர்களாக இருந்தபோதிலும் மரியாதை கொடுத்து “சார் சார்” என்றுதான் விளித்துப் பேசினார் என்பதை எங்கு கொண்டுபோய் மறைக்கப்போகிறீர்கள்?

சாரு நிவேதிதா போன்ற சிலர் அவருடைய இலக்கியப் பரிச்சயத்தின்மீது கேள்விகள் கேட்கிறார்கள். கலாமுக்குக் கூர்மையான இலக்கிய அபிப்பிராயங்கள் இல்லையாம். தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எவரென்று கேட்டால் அகிலன் கல்கி என்று சொல்லக்கூடிய மொக்கையான இலக்கிய சிந்தனை உடையவராம். சிறந்த கவிஞர் வைரமுத்து என்பாராம். இந்த வகையில் போகிறது அவரது சிந்தனை. இவருடைய கவலையெல்லாம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கலாமிடம் கேட்டிருந்தால் அவர் “எனக்குப் பிடித்த எழுத்தாளர் நகுலன், மற்றும் சாருநிவேதிதா. எனக்குப் பிடித்த கவிஞர் ஆத்மாநாம்” என்று சொல்லிவிட்டிருந்தால் கலாம் கூர்மையான இலக்கிய ரசனை உடையவர் என்று ஏற்றுக்கொண்டிருப்பார் போலும்.(நல்ல வேளையாக கலாம் தமிழின் அதி உன்னத ட்ரான்ஸ்கிரஸ்ஸிவ் வகை இலக்கியங்களைப் படிக்காதவராக இருந்திருக்கிறார்)

சாருநிவேதிதா சொல்கிற மாதிரியான இலக்கிய ரசனை கொண்டவர்கள் இங்கே பொதுமக்களுக்காகவோ அல்லது தமிழுக்காகவோ சாதித்திருப்பது என்ன என்பதை வைத்துத்தான் இந்த வெட்டிப்பேச்சு வீரர்களின் கருத்துக்களை அணுக வேண்டும்.

இவர் ஒரு விஞ்ஞானியே அல்ல; ஸ்கூட்டர் மெக்கானிக் போல ஏவுகணை மெக்கானிக் என்று வேண்டுமானால் கலாமை ஒப்புக்கொள்ளலாம் என்கிறார் இன்னொரு அதிமேதாவி.

அறிவியல்துறை மெக்கானிக் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் என்கிறார் இன்னொரு அதிபயங்கர மேதாவி.

கலாமின் சாதனைகளாக அவரே சொல்லிக்கொள்ள விரும்புவது அக்னி ராக்கெட், எஸ்எல்வி, மற்றும் அணுசக்தி. இவற்றைத் தாண்டி பாரமற்ற செயற்கைக் கால்கள், மற்றும் ஸ்டெண்ட். இவற்றையும் கடந்து சூரிய ஒளி மின்சாரம், காற்று மின்சாரம், மற்றும் அணுசக்தி மின்சாரம் ஆகியவற்றில் தமது கவனத்தையும் சிந்தனையையும் செலுத்திவந்தவர் அவர். அவரை எதற்காக இந்த அதிகப் பிரசங்கிகள் இவர்களின் வரையறைக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.  

கலாமையே ஒப்புக்கொள்ளாத அளவுக்கு இவர்கள் தங்களிடம் இத்தனை அரிய பெரிய விஞ்ஞானப் புதையல்களையும் அறிவுப் புதையல்களையும் வைத்துக்கொண்டு ஏன்தான் பேசாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை. இந்த ஞானவான்கள் எல்லாம் தங்கள் திருவாயைத் திறந்து ஏதாவது மலர்ந்தருளினார்கள் என்றால் நிச்சயம் இந்தியா நாளைக்கே உலகின் முதன்மை நிலைக்குச் சென்றுவிடும்.

பெங்களூரில் சந்திரமௌலி என்றொருவர் இருந்தார். மெத்தப் படித்தவர். இந்திரா நகர் பகுதியில் ஒரு பெரிய ஓட்டலின் முதலாளி. இவர்களின் கேட்டரிங் மிகவும் புகழ்பெற்றது. சந்திரமௌலியைச் சந்திக்கும்போதெல்லாம் கலாமின் அருமைப் பெருமைகள் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசுவார். 

பெங்களூர் இஸ்ரோவுக்குக் கலாம் தலைவராக இருந்தபோது அவருக்கு தினசரி உணவு கொடுக்கும் பணியினை மௌலி ஏற்றிருந்தாராம். அவருக்கு சித்திரான்னமும்(எலுமிச்சை சாதம்) புளியோதரையும் அத்தனைப் பிடிக்கும் என்பார்.

அக்னிச் சிறகுகள் வந்தபோது “இதுஒரு சாதாரண கான்செப்ட் இல்லை. இதனை ஒரு இயக்கம் ஆரம்பித்து இந்தியா பூராவுக்கும் கொண்டுசெல்ல இருக்கிறேன். இளைய தலைமுறை மொத்தத்தையும் ஒன்றுதிரட்டி செயல்பட வைக்கப்போகும் உத்தமமான பெரிய திட்டத்திற்கான அடித்தளம் இது” என்றிருக்கிறார் சந்திரமௌலி.

“அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க செய்யுங்க. ஆரம்ப விழாவை நானே வந்து துவக்கி வைக்கிறேன். ஏன்னா உங்க கையில எத்தனை தரம் சாப்பிட்டிருக்கேன். அந்த நன்றிக்கு இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி?” என்றிருக்கிறார் அன்றைய குடியரசுத் தலைவர்.

மௌலி ஆடிப்போய்விட்டார்.                           

எத்தனைப் பெரிய இடத்திலிருப்பவரிடம் இருந்து என்ன மாதிரியான வார்த்தை!
இங்கே எந்தப் பிரபலம் அய்யா தான் ஏதோ ஒரு காலத்தில் காசு கொடுத்துச் சாப்பிட்டவரிடம் 

இப்படி ஒரு வார்த்தையைப் பகிர்ந்து கொள்வார்?

இப்படிப்பட்ட ஒரு மனிதரை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்கு எப்படி அய்யா உங்களுக்கெல்லாம் மனம் வருகிறது?

காலத்தின் கோலம் அக்னிச் சிறகுகளுக்கான ஆரம்ப முயற்சிகளில் இருந்தபோது மௌலி திடீரென்று மாரடைப்பினால் காலமாகிவிட்டார்.

பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ‘ஜலவிஹார்’ என்றொரு குடியிருப்புப் பகுதி இருக்கிறது. 

ராணுவம் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளுக்கான குடியிருப்புப் பகுதி அது. என்னுடைய நண்பர் ஒருவரின் மாமா ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றதால் அந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜலவிஹாருக்குச் சென்றுவந்த நண்பர் அடுத்த நாள் பரபரப்பாக என்னைத் தேடி ஓடி வந்தார். “நேற்று ஜலவிஹாருக்குப் போய்வந்தேன். எங்க மாமா இருக்கும் ஃப்ளோரிலேயே நம்ம ஜனாதிபதி கலாமும் ஒரு வீடு வாங்கியிருக்காராம். இஸ்ரோ சீஃப்பாக இருந்ததால் கலாமுக்கும் அந்த இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்ப கலாம் ஜனாதிபதியாகிவிட்ட பிறகு டெல்லியில் கலாமைச் சந்தித்திருக்கிறார் கர்னல். “அந்த வீடு உங்களுக்கு எதுக்கு? அதனை விற்றுடுங்களேன்” என்றிருக்கிறார் கர்னல்.

“இல்லை இல்லை. அது என்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு. நான் ரிடையராகிவிட்ட பிறகு பெங்களூர் வந்தால் எனக்குத் தங்க இடம் வேண்டுமே. தவிர அந்த வீட்டை லோனுக்குத்தான் வாங்கியிருக்கிறேன். லோன் இன்னமும் முடியவில்லை. அதனால் வீட்டை விற்கிற பேச்சு எழவில்லையே” என்றாராம்.

பல வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரத்திற்குச் சென்றுவந்த அனுபவம் இருக்கிறது. 

“திருவனந்தபுரத்தில் நமக்குப் பிடித்த நல்ல சாப்பாடு கிடைப்பது சிரமம். அதனால் திருவனந்தபுரம் ஜங்ஷனில் இருக்கும் கேண்டீனுக்குப் போய்விடுங்கள். அங்கு மட்டும்தான் தமிழ்நாட்டு ஸ்டைலில் நல்ல உணவு கிடைக்கும்” என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அதன்படி ஜங்ஷன் ஓட்டலில் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களும் சென்று சாப்பிட்டு வந்தோம்.

கலாம் ஜனாதிபதியாகிவிட்ட பிறகு விகடனில் அவருடைய பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் இந்த ஜங்ஷன் ஓட்டல் பற்றிப் பேசுகிறார். “அந்த ஓட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கும். 

அதனால் மதியம் அங்கே சாப்பாட்டுக்குச் செல்வேன். நான் பணியாற்றிவந்த விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து அந்த ஓட்டல் இரண்டரைக் கிலோமீட்டர். தினசரி பகலில் பொடி நடையாக நடந்துவந்து உணவருந்திவிட்டுப் பொடி நடையாக நடந்தே அலுவலகம் வந்துவிடுவேன்”
அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி பதவிகள் வகிப்பவர்களே அரசாங்கக் கார்களையும் மற்ற சலுகைகளையும் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம். அத்தனை உயர் பதவி வகித்தபோதும் அரசாங்க ஊர்தியைப் பயன்படுத்தாமல் தினசரி வெயிலில் நடந்தே வந்து சாப்பிட்டுச் சென்ற அந்த மாமனிதரை இந்த உலகம் மிகச் சரியாகவே அங்கீகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

அப்துல் கலாம் தமது கனவுகள் நிறைவேறுவது இளைஞர்கள் கையில் அதுவும் மாணவர் கையில்தான் உள்ளது என்பதை மிகத்தீவிரமாக நம்பினார். அதற்கான முயற்சிகளில் இறங்கியவர் இதுவரை இரண்டு கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் என்று சொல்கிறது புள்ளிவிவரம் ஒன்று.

நாட்டின் தென்கோடியிலிருக்கும் ஒரு காய்ந்துபோன பிரதேசமான ராமேஸ்வரத்தை நோக்கி இன்றைக்கு இந்தியாவின் கவனம் முழுமையும் திரும்பியிருக்கிறது. அத்தனைத் தலைவர்களும் ராமேஸ்வரத்தை நோக்கித் தங்களது தலையைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் மாணவர் குலம் முழுக்கவும் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது. இதுதான் கலாமுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மற்றும் மரியாதை.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க எதிர்ப்புக் குரல்களும் இன்னொரு பக்கம் வந்த வண்ணமே உள்ளன. எத்தனை நல்ல மனிதர்களையும் ஏதோ ஒரு இல்லாத காரணம் கண்டுபிடித்துப் புறம் பேசுவது இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.


எப்படிப் பார்த்தாலும் பொதுக்கழிவறையில் எழுதும் மனப்பான்மை கொண்டவர்களைத் திருத்தவும் முடியாது  நிறுத்தவும் முடியாது என்றுதான் தோன்றுகிறது.

Thursday, July 2, 2015

நடிகர் சிவகுமாரின் மறுபக்கம்! – ஒரு எக்ஸ்ரே பார்வை!!

                 நடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற படத்தில்தான் சிவகுமாரின் திரைப்பிரவேசம் நடைபெற்றது. 1965-ம் வருடம் ஜூன் மாதம் 20-ம் தேதி காக்கும் கரங்கள் திரையிடப்பட்டது. இந்த ஐம்பதாண்டுகளைக் குறித்துவைத்து மிகச்சரியாக வாழ்த்துச்சொல்லி “உங்களுக்கு ஒரு பாராட்டுவிழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று சொன்ன நண்பர்களுக்கு சிவகுமாரிடம் இருந்து கிடைத்த பதில் இதுதான்………

“எனக்கெதற்குப் பாராட்டும் விழாவும்? அப்படி என்ன செயற்கரியச் செயலை நான் செய்துவிட்டேன்? ஐம்பது நூறு அல்ல, அதற்கும் மேலே இருநூறு வருடங்களாக உயிருடன் இருக்கிறதே அடையாறு ஆலமரம், அது என்ன பாராட்டையும் விழாவையும் எதிர்பார்த்தா காத்திருக்கிறது? புகழ் விரும்பாமல், எதற்கும் பெரிதாக ஆசைப்படாமல், என்னுடைய லட்சியக் கனவுகளை நிறைவேற்ற நான் துவங்கின பயணம் இன்றைக்கு நான் நிற்கின்ற இடத்தைப் பார்க்கும்போது எனக்குக் கிடைத்திருக்கும் புகழும் பெருமையும் மிகமிக அதிகம். இதுவே அதிகம். இதற்கு மேலும் நான் ஆசைப்படக்கூடாது. எதற்கும் எவரிடத்திலும் நான் குசேலனாகக் கையேந்தி நிற்கக் கூடாது. நீங்கள் கொண்டாட நினைக்கிறமாதிரி அப்படி ஒண்ணுமே நான் பண்ணலை”

சிவகுமாரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய இந்த பதில் ஒன்றும் ஆச்சரியத்தையோ அதிர்ச்சியையோ தரும் பதில் அல்ல; வேண்டுமானால் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம்.

அவர் இப்படித்தான். 

பல விஷயங்களில் பெரும்பாலான விஐபிக்கள் எப்படி நடந்துகொள்கிறார்களோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதமாகத்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கும்.

ஒரு பிரமுகருக்கான அடையாளங்கள், நடவடிக்கைகள் என்று இந்த சமுதாயம் எது எதைக் குறித்து வைத்திருக்கிறதோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் கைக்கொள்ள மாட்டார் அல்லது விரும்பமாட்டார். 

வெற்று ஆரவாரங்கள், வீண் படோடபங்கள், மாலை மரியாதை, புகழ் வார்த்தைகள் இவற்றுக்கெல்லாம் ஆட்பட்டவர் அவர் அல்ல. விழாக்களில் சட்டென்று பாராட்டி ஒரு மாலைப் போடுவது, ஒரு பொன்னாடைப் போர்த்துவது என்பதெல்லாம் அவரிடம் வேலைக்காகாது.

(உடனே வலையுலக வீர தீரர்கள் எதற்கோ எங்கோ சபை நாகரிகம் கருதி அவர் ஏற்றுக்கொண்ட பொன்னாடையையோ மாலையுடன் நிற்கின்ற புகைப்படத்தையோ போட்டு இது என்னவாம்? என்று மல்லுக்கு நிற்க வர வேண்டாம். மரியாதைக் கருதி ஏற்பதென்பது வேறு. பாராட்டு விழாக்களுக்குப் போய் ஏற்பதென்பது வேறு)

இதனால் நூற்றுக்கணக்கான பாராட்டு விழாக்களை அல்ல, ஆயிரக்கணக்கான பாராட்டு விழாக்களை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பது எனக்குத் தெரியும். அதிலும் அவருடைய கம்பராமாயணச் சொற்பொழிவுக்குப் பிறகு அவரைப் பாராட்ட நினைத்து அணுகியவர்கள் சொற்பத் தொகையினர் அல்ல. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து வந்த அழைப்புக்களையும் எதையாவது சொல்லி மறுத்துவிடுவதே அவருடைய பழக்கம்.

அவர் மற்றவர்களிலிருந்து மாறுபட்டவர், பெரிதும் வித்தியாசமானவர் என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். அவருடைய உண்மையான பிம்பம் எது? அவர் எப்படிப்பட்டவர்? 

எம்மாதிரியான அணுகுமுறைகள் கொண்டவர்? பல விஷயங்களில் எம்மாதிரியான பார்வைகளைக் - கருத்துக்களைக் கொண்டவர், அவர் எடுக்கும் முடிவுகள் எப்படிப்பட்டவை, என்பதையெல்லாம் என்னுடைய பார்வையிலிருந்து சொல்ல முயற்சி செய்கிறேன்………

அவரைப் பல வருடங்களாக - ஏறக்குறைய முப்பத்தெட்டு முப்பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகி வருகிறவன் என்ற முறையிலும், அவரைப் பற்றி உள்ளும் புறமும் அறிந்தவன் என்ற முறையிலும் எனக்குள் இருக்கும் அவர் பற்றிய பார்வையை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

சிவகுமார் ஒரு பிரமுகராகத்தான் நமக்கு அறிமுகம். அதிலும் முதலில் அவரை ஒரு நடிகராகத்தான் நமக்குத் தெரியும். பின்னர் அவர் ஒரு ஓவியரும்கூட என்பது தெரியவந்தது. ஒரு நடிகர் எப்படி எல்லாம் இருப்பார் என்ற பிம்பம் நம்மில் பதிந்துபோயிருக்கிறது.

அம்மாதிரி தான் இல்லை என்பதை அறிமுகம் முதலாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். மது மாது என்பதை விட்டுவிடுவோம். புகைப்பழக்கம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஐம்பத்தேழு வருடங்களாய் காபி டீ அருந்துவதில்லை என்கிறார். இவையெல்லாம் திரைத்துறைக்கு வந்தபிறகு ஏற்படுத்திக்கொண்ட பழக்கவழக்கங்களா என்று பார்த்தால், இல்லை. 

ஒரு ஓவியனாய் ஓவியக்கல்லூரியில் நுழையும்போதேயே இம்மாதிரிப் பழக்கங்கள் அவருக்கிருக்கின்றன என்று தெரிகிறது.

எத்தனை நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவராயிருந்தாலும் திரைத்துறைக்கு வந்துவிட்டால் அங்கு கிடைக்கும் ‘அசாதாரண ஆடம்பர சொர்க்கங்களுக்காகத்’ தங்களுடைய சுயத்தை இழந்து திரைத்துறைக்கு ஏற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்கிறவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்.

இவர் அப்படியில்லை என்பதுதான் இவருக்குள்ள விசேஷம்.

ஆரம்பத்திலிருந்தே ஒரு லட்சிய வெறியும் கொள்கைப்பிடிப்பும் சத்திய ஆவேசமும் இவரிடம் இருந்ததை இவரின் ஆரம்பகால நடவடிக்கைகள் காட்டுகின்றன.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவரவர்களும் வக்கீலுக்கோ, டாக்டருக்கோ படிக்க விரும்புவார்கள். 

அல்லது மத்தியதர வாழ்க்கை முறைகளில் ஊறியவர்கள் இவருடைய ஊரின் சூழ்நிலைகளுக்கேற்ப மில்லில் சேர்ந்து பணிபுரிய போயிருப்பார்கள். ஆனால் இவரோ ஓவியக்கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். 

அன்றைய நிலையில் ஓவியக்கலை என்பது சம்பாதிப்பதற்கான ஒரு துறையே அல்ல. எதிர்காலமே இல்லாத துறை என்று தெரிந்தும் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார். தேர்ந்தெடுத்துப் படிக்க ஆரம்பித்து ஓவியம் வரைவதில் தம்மை ஒரு தேர்ச்சிபெற்ற ஓவியராக வரித்துக்கொண்டதும் ஓவியங்கள் வரைவதற்காக இவர் மேற்கொண்டது ஸ்பாட் பெயிண்டிங் (spot painting) முறை.

நேரடியாய் அந்தந்த இடங்களுக்கே சென்று அந்தந்த இடங்களை ஓவியங்களாக வரைவது. 

அதில் இவருக்கு முன்னோடி என்றெல்லாம் யாருமில்லை. இவருடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சில்பி இந்தத் துறையில் பெரிய வித்தகர். 

ஆனால் அவரும்கூட அவருடைய உள்ளக்கிடக்கைக்காக பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களை வரைந்தவர் என்று சொல்லமுடியாது. பத்திரிகைகளின் ஒப்பந்தங்களினால்தாம் அவர் அந்தந்த இடங்களை வரைந்தார். 

அதிலும் அவர் வரைந்தது கோயில்களும் அதன் சிலைகளையும் மட்டுமே. அவர் வரைவது அடுத்த வாரமே பத்திரிகைகளில் பிரசுரமாகி பணமும் வந்துவிடும்.

இவருக்குப் பணமாவது காசாவது? இந்த ஓவியங்களெல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் என்றோ விற்பனைக்கு வைக்கப்பட்டு பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டுப் பணத்தைக் கொட்டித்தரும் என்றோ எந்தவித உத்தரவாதமும் கிடையாது. நம்பிக்கையும் கிடையாது.


ஓவியக்கல்லூரியின் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் அல்லது சாதாரண மாதாந்தர விடுமுறைகளின்போதும் அடுத்து போகப்போவது இந்த ஊர் என்று முடிவு செய்துவிடுவார்.

நண்பர்களைக் கூப்பிட்டுப் பார்ப்பார். வந்தால் சரி; வராவிட்டால் கவலை இல்லை. 

தானே தனியாகக் கிளம்பிவிடுவார். ஒற்றை ஆளாகக் குறிப்பிட்ட பகுதிகளுக்குப் போய் மணிக்கணக்கில் உட்கார்ந்து பசி, தண்ணீர், ஓய்வு………. எதுபற்றியும் கவலைப்படாமல் வெயிலில் மணிக்கணக்காக உட்கார்ந்து கருமமே கண்ணாயிருந்து ஓவியங்களை முழுதாக முடித்துக்கொண்டுதான் திரும்புவார்.

அந்த ஓவியங்களை என்ன செய்வது என்பதுபற்றியெல்லாம் அன்றைக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. வரைய வேண்டும் அவ்வளவுதான். வரைந்துவிடுவார். இம்மாதிரி அவர் வரைந்த ஓவியங்கள் என்பது திருவண்ணாமலை, திருப்பதி, தஞ்சை, புதுச்சேரி, மகாபலிபுரம், சித்தன்ன வாசல், மதுரை தொடங்கி டெல்லி பம்பாய் என்றெல்லாம் நீள்கிறது.

“அன்றைக்கே தனியாக எப்படி போனீர்கள்?” என்ற கேள்விக்கு அவருடைய பதில் “ஒரு ரயில் என்ஜின் பெட்டிகளோடுதான் தண்டவாளத்தில் போகும் என்பதில்லை. தனியாகவும் போகுமில்லையா? நான் என்ஜினைப் போன்றவன். தனியாகவும் போய்விடுவேன்”

இதுவரை எத்தனைப் படங்கள் வரைந்திருப்பார் என்று பார்த்தால் “ஸ்கெட்சுகள் மட்டும் ஐந்தாயிரம் இருக்கும். வண்ண ஓவியங்கள் ஒரு நூற்றைம்பது இருக்கும்.” என்கிறார்.

                                     


இவரது ஓவியங்களை வீட்டிலேயே வந்து பார்த்தவர்களில் முக்கியமான ஒருவர் கலைஞர் கருணாநிதி. “என்ன சிவகுமார்…….. ஏதோ அரை குறையாய் வரைஞ்சு வைச்சிருப்பீங்க ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டுப் போயிரலாம்னு வந்தா முழுமையான ஓவியராய் இருந்து இத்தனைப் படங்களை வரைஞ்சு வைச்சிருக்கீங்களே! நீங்க எதுக்காக ஓவியத்துறையை விட்டுட்டு சினிமாத்துறைக்கு வந்தீங்க?” என்று தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார் கலைஞர்.

                         

இதே வார்த்தைகளைச் சொல்லி வியந்த இன்னொரு முக்கியஸ்தர் சுஜாதா

இவருடைய ஓவியங்களைப் பல ஓவியர்கள் இவரது வீட்டிற்கே வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள். இந்திய அளவில் பிரபல ஓவிய மேதைகளான சி.ஜே.அந்தோணிதாஸ், ஏ.பி.சந்தானராஜ், கோபுலு, ஜெயராஜ், மருது, மணியம் செல்வன் ஆகியோர் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள்.

இவரது கைவண்ணத்தைப் பார்த்து வியந்த கோபுலு இவரது வலது கையை வாங்கித் தமது கைகளில் வைத்துக்கொண்டு “What a wonderful hand” என்று சொல்லி இவரது கையைத் தமது கைகளால் தடவிப் பார்த்துவிட்டு அப்படியே இவரது கைக்கு முத்தம் தந்திருக்கிறார்.

அத்தனை ஓவியங்களையும் பார்த்த பிரபல ஓவியர் மணியம் செல்வன் “என்ன சார் இது? நாங்க ஒரு வாழ்நாள் பூராவும் வரைய வேண்டிய விஷயத்தை நீங்க ஆறு வருடங்களில் வரைந்து வைத்திருக்கிறீர்களே” என்றிருக்கிறார்.

இவருடைய ஓவியங்களின் மிகக் கடுமையான விமரிசகர் இவர்தான். “என்னுடைய ஓவியங்களில் ஒரு பத்துப் பதினைந்து தேறும்” என்பார் சர்வசாதாரணமாக.

இப்படித் தன்னந்தனி ஆளாகச் சென்று ஓவியம் வரைந்த இந்த மனநிலை இவர் திரைத்துறைக்கு வந்து பிரபலமான நடிகராக விளங்கியபிறகும் தொடர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

                        

ஊட்டியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு. 

இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு பெரிய பங்களா. யாரோ ஒரு வெள்ளைக்காரியுடையது. பூத் பங்களா போன்ற தோற்றம் கொண்டது அது. இரவு பத்து மணி அளவில் இவர் தன்னந்தனியாக அமர்ந்து விளக்கு வெளிச்சத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். 

அதைப் பார்த்து வியந்த நடிகை மனோரமா “என்ன சிவா……………… கூட யாரும் இல்லையா? இத்தனைப் பெரிய பங்களாவில் நீ தனியாகவா இருக்கே?” என்று கேட்டிருக்கிறார்.

இவர் சொன்ன பதில் “தனியாக இல்லை. நானும் நானும் இருக்கிறோம்”

இது ஏதடா வம்பு என்று மனதிற்குள் நினைத்திருப்பாரோ என்னவோ, மனோரமா ஒன்றும் பதில் பேசவில்லையாம். போய்விட்டாராம்.


சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு உள்ளூரில் படப்பிடிப்பு இருந்தாலும் படப்பிடிப்பு முடிந்த அடுத்த நிமிடம் கிளம்பிவிடுவார். நேராக வீடுதான். ஓட்டல், கிளப், நண்பர்கள், கேளிக்கைகள், ஆட்ட பாட்டங்கள் எதுவும் கிடையாது. ஏதாவது விழாக்கள் திருமணங்கள் இருந்தால் போவார். இல்லாவிட்டால் மறுநாள் படப்பிடிப்புக்குக் கிளம்புவதுவரைக்கும் குடும்பம்தான், வீடு மட்டும்தான்.

அவர் பிரபலமாக இருந்து கதாநாயகராக நடித்துக்கொண்டிருந்த அத்தனை நாட்களிலும் வெளியூர்ப் படப்பிடிப்புக்கள் இருந்தால் ஐந்து நாட்கள், நான்கு நாட்கள், மூன்று நாட்கள் என்ற அளவில் என்னை மட்டும்தான் அவருடன் தங்கியிருக்க அழைப்பார். கன்னியாகுமரி, சேலம், குற்றாலம், ஊட்டி, கோடைக்கானல், ஏற்காடு, மைசூர், தலக்காடு, சிக்மகளூர் என்று எந்த இடமாயிருந்தாலும் அவருடன் உடன் தங்கியிருந்த நாட்கள் இந்த நெடிய வருடங்களில் ஏராளம் உண்டு.

இவரை ஒரு தனிமை விரும்பி என்று சொல்லமுடியுமா என்று பார்த்தால் அப்படிச் சொல்லிவிட முடியாது. எத்தனைப் பெரிய கூட்டமாயிருந்தாலும் உட்கார வைத்து எவ்வளவு நேரம் என்றாலும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் பேசிக்கொண்டே இருப்பார். தான் தனியாக இருக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றிற்றென்றால் சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விடுவார். 

அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ கழித்து மறுபடி அதே கூட்டத்தில் வந்து உட்கார்ந்து விட்ட இடத்திலிருந்து கலகலப்பைத் தொடர்வார்.

இதனை அவர் வீட்டில் நடைபெற்ற சூர்யா, கார்த்தி, பிருந்தா திருமணங்களின்போது கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. திருமணம் நடைபெற்ற மூன்று நாட்களில் ஒவ்வொரு திருமணத்தின்போதும் குறைந்தது மூன்று நாட்களுக்கு அவரது வீடு முழுக்கக் கூட்டம். எந்த அறைக்குப் போனாலும் கூட்டம் நிரம்பி வழியும். ஏதாவது ஒரு கூட்டத்தில் அமர்ந்திருப்பார். சட்டென்று எழுந்துபோய் மறுபடியும் திரும்ப வருவார்.

திருமணங்கள் எல்லாம் முடிந்தபின்னர் இதுபற்றி அவரிடம் கேட்டேன். “ஆமாம் உண்மைதான். திடீரென்று என்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளத் தோன்றும். எழுந்து போய்விடுவேன். அறையில் போய் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதுபோல் அமர்ந்திருப்பேன். ஒரு அரை மணி நேரம்தான். மறுபடி ஃபெஷ்ஷாக உணரும்போது திரும்பிவந்து கலந்து கொள்வேன்.” என்பார்.

“எந்தக் கூட்டத்திலிருந்தும் என்னை என்னால் தனிமைப் படுத்திக்கொள்ள முடியும். உள்ளுக்குள் இருக்கும் சுவிட்ச்தான் காரணம். சுவிட்சை ஆஃப் செய்து கொள்வதும் ஆன் செய்து கொள்வதும் நம் கையில்தானே இருக்கிறது?” என்பார்.

மைண்ட் கன்ட்ரோலில் அத்தனை வித்தகர்.

அரசியலிலிருந்து நாட்டில், உலகில் நடைபெறும் அத்தனை விஷயங்களுக்கும் தமக்கென்று ஒரு கருத்து வைத்திருப்பார். எல்லா விஷயங்களும் விரல் நுனியில் இருக்கும். யாராவது புதிதாகச் சொல்வது போல் அந்த விஷயங்களைச் சொல்லவந்தால் அப்போதுதான் அந்த விஷயத்தைக் கேள்விப்படுவதுபோல் ‘பார்ரா…………. அட…………. ம்…….. அப்புறம்?’.............. என்றெல்லாம் சர்வ ஆலாபனைகளுடன் கேட்டுக்கொள்வார். பிறகு தமது கருத்தைச் சொல்வார்.

பேச வந்தவர் அதற்கு எதிர்க்கருத்து கொண்டவரா? வந்தவர் சொன்ன கருத்தைக் கேட்டுவிட்டு பதிலெதுவும் சொல்லாமல் அடுத்த விஷயத்துக்குப் போய்விடுவார்.

‘வாதம் செய்யாதே. நண்பனை இழந்துவிடுவாய்’ என்ற கொள்கை அவருக்கு எப்போதுமே உண்டு.
முரட்டுப் பிடிவாதம் அவரிடம் உண்டு. அதே சமயம் காலத்துக்கும் நியாயத்திற்கும் ஏற்ப தம்மை இளக்கிக்கொள்ளும் தன்மையும் அவரிடம் உண்டு.

சினிமாவில் அவர் நுழைந்த காலகட்டத்தில் அவருக்கு முன்பிருந்த எல்லாருமே நாடக மேடையிலிருந்து வந்தவர்கள். சிவாஜி எம்ஜிஆர் உட்பட நாடக அனுபவம் உள்ளவர்கள். தான் மட்டும் நாடக அனுபவம் எதுவும் இல்லாமல் இருக்கக்கூடாது என்று நினைத்தார். தாமே ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்து நடித்தார். பிறகு கதாநாயகனாய் நடித்துக்கொண்டிருக்கும் வேளையிலும் மேஜர் சுந்தரராஜனின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஆயிரம் நாடகங்கள் வரையிலும் நடித்தார்.

திரைப்படத்துறையில் பாரதிராஜா மகேந்திரன் யுகம் ஆரம்பித்தது.

இனிமேல் நாடகப் பாணி நடிப்பிற்கோ அந்தப் பரம்பரைக்கோ திரையில் இடமில்லை என்ற யதார்த்தம் தெரியவந்தது.

நாடக நடிப்பிற்கு குட்பை சொல்லிவிட்டார்.

“ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள். அவ்வளவு நாட்கள் அதற்காகச் செலவிட்டிருக்கிறீர்கள். பணம் எதுவும் வாங்கவில்லை என்றே நினைக்கிறேன். கைக்காசு செலவழித்துத்தான் நாடகங்களில் நடித்தீர்கள். அப்படியானால் அத்தனையும் வீண் என்றுதானே அர்த்தம்?” என்று கேட்டதற்கு சிவகுமாரின் பதில் ;

“அப்படிச் சொல்ல முடியாது. ஆயிரம் நாடகங்கள் நடித்தபோது கிடைத்த தைரியம் இன்றைக்கு மேடையில் பேசும்போது உதவுகிறது. அந்த அனுபவம் இல்லாவிட்டால் மேடையில் இத்தனை ஆயிரம் மக்களை இவ்வளவு தைரியத்துடன் சந்திக்க முடியாது”

எந்த விஷயமாயிருந்தாலும் இவரது மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் முடிந்த முடிவு. யாருடைய ஆலோசனைகளையும் கேட்க மாட்டார். ஒரு விஷயத்தில் ஒரு முடிவை எடுத்துவிட்டாரென்றால் கோடி ரூபாய் நஷ்டமென்றாலும் கவலைப்பட மாட்டார். “இப்படியொரு முடிவை எப்படிச் சரியென்பீர்கள்?” என்று கேட்டேன்.

அவர் சொன்னார் “ஊட்டியில் படப்பிடிப்புக்குப் போயிருப்போம். நாங்களிருக்கும் மலையில் மழை பெய்து கொண்டிருக்கும். எதிரிலிருக்கும் மலையில் அருமையான சூரிய வெளிச்சத்துடன்கூடிய வெயில் அடித்துக்கொண்டிருக்கும். எடுரா காமிராவை. கட்றா மூட்டையை அந்த மலைக்குப்போய் படப்பிடிப்பு நடத்துவோம் என்று சொல்லி மூட்டையைக் கட்டிக்கொண்டு அடித்துப் பிடித்து எதிரிலிருக்கும் அந்த மலைக்குப் போவார்கள். அங்கு போய்ச் சேர்ந்ததுதான் தாமதம். அங்கே மழை பெய்ய ஆரம்பிக்கும். நாங்கள் கிளம்பிவந்தோமே அந்த மலையில் அருமையான வெயில் அடிக்கும்…………. வாழ்க்கை என்பது இம்மாதிரியான கண்ணாமூச்சி விளையாட்டுத்தான். அதனால் வெயில் அடிக்கிறது என்று நம்பி அந்த மலைக்கு ஓடுவானேன்? இந்த மலையில் என்று தீர்மானித்துவிட்டால் இங்கேயே இருப்பது என்பதுதான் என்னுடைய கருத்து. உனக்கு என்றுள்ளதை யாரும் பறிக்கமுடியாது” என்பார்.

ஒவ்வொரு விஷயத்திலும் சரியான திட்டமிடல் என்பதில் இவரை அடித்துக்கொள்ள முடியாது. அதனை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடிப்பார் என்பதுதான் ஆச்சரியம். கடைசி நேரத்தில் ஓடுவது அலைபாய்வது என்பதெல்லாம் இவரது அகராதியிலேயே கிடையாது.

பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் வேறு பற்பல காரணங்களுக்காகவும் அடிக்கடி அவர் வெளியூர்கள் செல்வது என்பது வாடிக்கையாகிவிட்ட இந்நாட்களில்  எந்த அரிபரியையும் அவரிடத்தில் பார்க்கமுடியாது. ஏனெனில் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே போக-வர விமான டிக்கெட், ஐடி கார்டு, திருமணங்களுக்குப் போகிறார் எனில் அந்தத் திருமணத்தின் அழைப்பிதழ்கள், அங்கே தருவதற்கான பரிசுப் பொருட்கள்……… அல்லது வேறு நிகழ்ச்சிகள் என்றால் அந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், அங்கே சந்திக்கவேண்டிய நண்பர்களின் பெயர்ப்பட்டியல்கள் மற்ற தேவையான சாமான்கள் என்று எல்லாவற்றையும் தயாரித்துக்கொண்டு விடுவார்.

ஒரு ஊருக்குப் புறப்படுகிறார் என்றால் சூட்கேசில் என்னென்ன கொண்டுசெல்லவேண்டும் என்பதை துணிமணி தொடங்கி அத்தனையையும் ஒரு பட்டியல் போட்டுக்கொண்டு விடுவார். “இந்தப் பழக்கத்தை எப்போதிலிருந்து ஆரம்பித்தீர்கள்?” என்று கேட்டேன்.

“ஐம்பத்தேழு வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறேன். இன்றைக்கு நேற்று ஆரம்பித்தது இல்லை இது. முதன்முதலாக சென்னைக்கு வரும்போது கிராமத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே, நாம் என்னென்ன கொண்டுபோகவேண்டும் என்பதையெல்லாம் ஒரு துண்டுக்காகிதத்தில் எழுதிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டுதான் கிளம்பினேன்……….. நான்கு சட்டை, மூன்று பேண்ட், பனியன்கள், உள்ளாடைகள், ஒரு பேனா, ரயில் டிக்கெட், போய்ச் சேரவேண்டிய விலாசம், ஏதாவது ஆகிவிட்டால் தந்தி கொடுக்கவேண்டிய நபர்களின் பெயர்கள், டிக்கெட் நம்பர் என சகலத்தையும் எழுதி சட்டைப்பையில் வைத்துக்கொள்வேன். அது இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது. இதனால் பெரிய சவுகரியம் என்னவென்றால் போன இடத்திலிருந்து மறுபடி திரும்பும்போதும் கிளம்புவதற்கு சிரமமெல்லாம் படவேண்டிய அவசியமில்லை. மூணே நிமிஷத்துல தேடி அடுக்கிக்கொண்டு வந்துவிடமுடியும்” என்றார்.

இந்தத் திட்டமிடல் அவர் ஊர்களுக்குக் கிளம்பும்போதுதான் என்றில்லை. அவரைத்தேடி யாராவது வருகிறார்கள் என்றாலும் இதே திட்டமிடல் வேறு வகையில் ஆரம்பித்துவிடும். 

நான் சென்னைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், நான் எந்த ரயிலில் வருகிறேன். அது பெங்களூரிலிருந்து எத்தனை மணிக்குப் புறப்படும், எத்தனை மணிக்குச் சென்னை வந்து சேரும் என்ற விவரங்களையெல்லாம் கேட்டுக் கொள்வார். ஏதோ விசாரிக்கிறார் என்று நாம் நினைத்தால் அது தவறு. நம்முடைய ரயில் பெரம்பூர் ஸ்டேஷனில் நுழையும்போது அவரிடமிருந்து ஒரு போன்வரும். “வந்தாச்சா?” என்பார்.

“சார் இப்பதான் பெரம்பூர் வந்திருக்கேன். இன்னும் ஒரு பதினைந்து இருபது நிமிடத்தில் சென்ட்ரல் வந்துவிடுவேன்” என்பேன்.

ரயில் பேசின்பிரிட்ஜ் நுழையும்போது அடுத்த போன் வரும். “பேசின்பிரிட்ஜ் வந்தாச்சா?” என்பார். “இப்பதான் நுழைஞ்சுகிட்டிருக்கு” என்பேன்.

“சரி, கார் அனுப்பியிருக்கேன். காரின் நம்பர், டிரைவரின் பெயர், டிரைவரின் செல்போன் நம்பர் அனைத்தையும் எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கேன். டிரைவர் உங்களுக்காக ரயிலின் என்ஜின் அருகில் நிற்பார். உங்கள் நம்பரையும் அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கேன். வந்துவிடுங்க” என்பார்.

சொன்னபடி எல்லாமே கச்சிதமாக நடந்திருக்கும்.

நாம் பார்ப்பதற்கு முன்பே நம்மைப் பார்த்த டிரைவர் நேராக நம்மிடம் வந்து வணக்கம் சொல்லி பெட்டியை வாங்கிக்கொண்டு நடப்பார். போய்க் காரில் ஏறி அமர்ந்திருப்போம். அதற்குள் அடுத்த போன் வரும். “என்ன டிரைவர் கிடைச்சாரா? காரைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?”

நமக்கு மூச்சு முட்டும். இப்படியெல்லாம்கூடப் பிரபலங்கள் இருப்பார்களா? அடுத்தவர் நலன்களில் இத்தனை ஆர்வம் காட்டுவார்களா?

எத்தனை பிசியாக அவர் இருந்தபோதும் இந்த நடைமுறைகள் மட்டும் மாறாது. எத்தனை ஆயிரம் வேலைகள் இருந்தபோதும் இந்த விதிகளில் ஒன்றுகூட மாறாது. மாறியதில்லை. அத்தனை ஆயிரம் வேலைகளோடு இது ஆயிரத்து ஒன்று என்று எடுத்துக்கொண்டு பணியாற்றும் வல்லமையும் பக்குவமும் அவருக்கு உண்டே தவிர கார் அனுப்பிவிட்டோம். வந்து சேரட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பாங்கெல்லாம் அவரிடம் கிடையாது.

அதேபோல ஊருக்கு அனுப்பிவைக்கும்போதும் இதே கதைதான்.


ரயில் கிளம்பும் நேரம் நமக்கு ஞாபகமிருக்கிறதோ இல்லையோ அவர் அவசரப்படுத்திக்கொண்டே இருப்பார். இரவு நேர ரயில்களில் டிக்கெட் போட்டிருந்தால் அவருடைய டிரைவர்களில் ஒருவரை அனுப்பிவைப்பது என்பதெல்லாம் எப்போதோ ஒருமுறைதான் நடக்கும். “வேணாம் அவனும் காலையிலிருந்து உழைச்சிக்கிட்டிருக்கான் இல்லையா? வீட்டுக்குப் போகட்டும். குழந்தைக் குட்டிங்க காத்திருக்கும் இல்லையா?” என்று சொல்லி அனுப்பிவிடுவார். “ஒரு ஆட்டோ பிடித்துப் போய்விடுகிறேன்” என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்.

இரவு ஒன்பதரையோ பத்தோ அவரே காரை ஓட்டிக்கொண்டு வருவார். சென்ட்ரல் ஸ்டேஷன் உள்ளே வந்தால் தொந்தரவு என்பதால் சுவரை ஒட்டி பிளாட்பாரம்வரை வந்து “பத்திரமாப் போங்க. போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்புவார்.

இம்மாதிரி செயலுக்கான பிரதிபலனையெல்லாம் நாம் எந்த ஜென்மத்தில் தீர்க்கப்போகிறோமோ என்று மனதுடன்தான் ரயிலைப் பிடிக்கப் போகவேண்டியிருக்கும்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் பதிவு செய்யவேண்டும்.

பல சமயங்களில் அவர் கிளம்பும்போது வீட்டில் அந்தச் சமயத்தில் சூர்யாவோ கார்த்தியோ இருந்தால் அப்பாவை ஸ்டேஷனுக்கு அனுப்ப அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. “ப்பா நீ படுத்துக்கோ. நான் கொண்டுபோய் விட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிக் கிளம்பிவிடுவார்கள்.
முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறோமே, கோடிகளில் சம்பாதிக்கிறோமே என்ற இறுமாப்போ செருக்கோ பகட்டு ஆடம்பரங்களோ அவர்களிடம் இல்லை. துளியும் இல்லை. பிள்ளைகளை சிவகுமார் வளர்த்துவைத்திருக்கும் பண்பாடு இது.

                       

கார்களை அவர் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் சொல்லவேண்டும்.

முன்பெல்லாம் காரை அவரே துடைப்பார், ஆயில் பார்ப்பார், டயர்களைக் கழுவுவார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது வண்டியை அப்படியே கொண்டுபோய் நிறுத்தமாட்டார். இரவு எத்தனை மணியானாலும் ரிவர்ஸ் எடுத்து ஸ்ட்ரெய்ட் செய்து வைத்துவிடுவார். ஏனெனில் அடுத்த நாள் எங்கோ அவசரமாகக் கிளம்பவேண்டியிருக்கலாம். அவசரத்துக்கு ரிவர்ஸ் எடுக்கமுடியாது. குறுக்கே யாராவது வந்துவிடலாம். ஏதோ வண்டி வழியை அடைத்துக்கொண்டு நிற்கலாம். அதேபோல பெட்ரோல் ரிசர்வில் இருந்தால் அது எத்தனை மணி இரவாயிருந்தாலும் பெட்ரோல் பங்க் சென்று முழு அளவில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வந்துதான் இரவில் வண்டியை வீட்டில் விடுவார்.

டிரைவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து பயணிப்பதுதான் இவரது வழக்கம். “இந்தப் பழக்கம் அன்றே ஆரம்பித்துவிட்டது. என்றாலும், நான் நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்தபோதுதான் இந்த வழக்கத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் நாடகங்கள் நடத்துவதற்காக ராஜபாளையம், விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோவில் என்று பல இடங்களுக்கும் போவோம். பெரும்பாலும் இரவுநேரப் பயணங்கள். நாடகக் குழுவுடன் தனிப் பேருந்துகளில்தான் பயணம் செய்வோம். நாடகக் கலைஞர்கள் உதவியாளர்கள் என்று அத்தனைப்பேரும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். டிரைவர் ஒருவர் மட்டும் விழித்தபடி வண்டி ஓட்டவேண்டும் இல்லையா? அவரும் தன்னை மறந்து கொஞ்சம் அசந்துவிட்டால் என்னாவது? அதனால் டிரைவர் சீட் பக்கத்தில் சென்று அமர்ந்துகொள்வேன். துளிக்கூட கண் அயரமாட்டேன். விடிய விடிய அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். அந்தப் பழக்கம் அப்படியே இன்று வரை தொடர்கிறது”

திரையுலக மார்க்கண்டேயன் என்று சொல்லப்படுபவர் சிவகுமார். “நீங்கள் இன்னமும் மார்க்கண்டேயன்தானா?” என்றேன்.


“எழுபது வயதாகிறது. சில நாட்களுக்கு முன்பு கையைத் தடவிப் பார்த்தேன். சுருக்கம் வந்திருந்தது. அட நமக்குக்கூட சுருக்கம் வருகிறதே என்று நினைத்தேன். நமக்கு இப்படியெல்லாம் ஆகக்கூடாதே என்ற மனோபாவம் எனக்குண்டு. மகாபாரதத்திலே ஒரு கேள்வி வருகிறது. “உலகத்திலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம் எது?” என்று யட்சன் தருமனைக் கேட்கிறான். அதற்கு தருமன் சொல்கிறான் “உன்னுடைய தாத்தாவும் பாட்டியும் இறந்துவிட்டார்கள். பெரியம்மா இறந்துவிட்டார். பெரியப்பா இறந்துவிட்டார். மாமா, தங்கச்சி, மைத்துனன், மைத்துனி என்று உறவினர்கள், நண்பர்கள், நட்பு வட்டங்களில் யாரெல்லாமோ செத்துப் போயிருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் என்றும் சாகமாட்டேன் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறானே அதுதான் உலகிலேயே ஆச்சரியமான விஷயம்.” என்பான். அந்த ஆச்சரியமான விஷயம் எனக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே”

“பொதுவாழ்க்கையில் அறமும் ஒழுக்கமும் சார்ந்து வாழ்கிறவர்கள் அரிது. அதுவும் சினிமாத்துறையில் கேட்கவே வேண்டாம். அப்படியிருக்க எத்தனையோ நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறீர்கள். நீங்களும் மனிதப்பிறவிதானே? உண்மையைச் சொல்லுங்கள். அந்தக் கதாநாயகிகளில் யார்மீதும் நீங்கள் ஆசைப்பட்டதில்லையா?”

இம்மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் முகம் சுளிப்பவர் இல்லை அவர். “நீங்கள் கேட்பது உண்மைதான். மொத்தம் எண்பத்தேழு கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தேன். அவர்களில் ஒரு பத்துப் பதினைந்து பேருக்காவது என்மீது ஆசை வந்திருக்கும். வந்திருக்கும் என்ன? வந்திருந்தது. ஒரு ஐந்து ஆறு பேர் மீதாவது எனக்கு ஆசை இருந்தது. ஆனால் வெளித்தோற்றங்களில் மயங்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். இவர்கள் கவர்ச்சியாக அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது புறத்தோற்றம். புறத்தோற்றம் விரைவில் போய்விடும். இரண்டு குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தது என்றால் இந்த அழகு போய்விடும். கொஞ்ச நாட்களில் கவர்ச்சி கலைந்துவிடும். அதனால் இதற்கு எதற்காக ஆசைப்படவேண்டும்? என்று தோன்றும். பெற்ற தாயார் உடனிருக்கிறார்கள். சம்சாரம் நல்லவராக வந்தால் போதும் என்று நினைத்தேன். என்னுடைய குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளென்னவோ அவற்றில் இதுநாள்வரை என்னுடைய அம்மாவோ சம்சாரமோ தலையிட்டதே இல்லை. அதனால் எந்தக் குறையுமில்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன்”

ஆனாலும் இன்றைக்கும் இரவுகளில் படுக்கும்போது காலுக்கடியில் ரப்பர்வைத்துத் தேய்த்து சுத்தமாக்கிவிட்டுத்தான் படுக்கச் செல்கிறார். “சரி, பெடிக்யூர் பண்ணுவதற்கு ஆளை அழைக்கிறேன். பண்ணிக்கங்க” என்றிருக்கிறார் மனைவி.

“எண்பத்தேழு பெண்களை தடவி நடிச்சது போதும். இன்னொரு பொம்பளை என்னைத் தொட வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் இவர்.

யாரும் எதையும் இவரிடம் திணித்துவிட முடியாது. இவருக்கு ஒப்புதல் இல்லையென்றால் எந்தக் கருத்தும் இவரிடம் செல்லுபடியாகாது. அது எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் இவர்தான் முடிவெடுப்பார். ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டாரென்றால் அவ்வளவு எளிதில் பிறரால் இவரை மாற்றிவிட முடியாது. தினசரி சூர்யாவின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவருவது தான்தான் என்று முடிவெடுத்துக் குழந்தைகளை தினசரி அழைத்துச்சென்று பள்ளியில் விட்டு வருகிறார். இதற்கு மாற்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

பிடிவாதம், கண்டிப்பு இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இவரிடம் இருக்கும் மனித நேயம் அபாரமானது. ஒரு சம்பவர் நினைவு வருகிறது. ‘பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை’ என்றொரு படம். சேலத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர் அன்றைக்கு பாலச்சந்தர் படம் மூலம் அறிமுகமாகி அன்றைய தினத்தில் மிகமிகப் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.

அந்த நாயகியுடன் ஒரு டூயட் பாடல்.

சேலம் ரத்னா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு. காலை எட்டு மணிக்கே படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பல்லவி ஆரம்பம். ஒரு சின்ன ஸ்டெப். நடிகைக்கு அது சரியாக வரவில்லை. அடுத்து ரீடேக். அதுவும் சரியாக வரவில்லை. எத்தனை ரீடேக் எடுத்து எத்தனைச் சொல்லிக்கொடுத்தும் அந்த நடிகையால் அதனைச் சரியாகச் செய்யமுடியவில்லை. அந்த ஸ்டெப் வரவில்லை என்பதனால் நடன மூவ்மெண்ட் மாற்றியமைக்கப்பட்டது.

அதுவும் வரவில்லை.

இன்னமும் எளிமையாக்கப்பட்டது.

ஆனாலும் சரியாக வரவில்லை. நடன மாஸ்டரும் உதவியாளப் பெண்மணியும் சோர்ந்துபோய் விட்டார்கள். கொஞ்சமும் கோபித்துக்கொள்ளாமல் பொறுமை இழக்காமல் இருந்தவர்கள் சிவகுமாரும், இயக்குநர் எஸ்பிமுத்துராமனும்தாம். இருவரும் மாறி மாறிப் பொறுமையாய் சொல்லித்தந்தார்கள். ம்ஹூம். அந்தப் பெண்ணுக்கு வரவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்? மதியம் பன்னிரண்டு மணியைத் தாண்டி ஒரு மணிவரை ஆகிவிட்டது. ஒரே ஒரு காட்சிகூட எடுத்தபாடில்லை. பொறுமைக்குப் பெயர்போன எஸ்பிமுத்துராமனே பொறுமை இழந்துகொண்டு வருவது தெரிந்தது.

ஒன்றரை மணி ஆனதும் சிவகுமார் எஸ்பிஎம்மைத் தனியே அழைத்தார். “சார் இதுக்கு மேலேயும் அந்தப் பொண்ணைப் போட்டு வாட்டறது சரியில்லை. அந்தப் பொண்ணுக்கு நடனம் வரவில்லை. தவிர இத்தனைப்பேர் பார்த்துக்கொண்டிருக்கும் பதட்டம் வேறு. ஆகவே இப்ப பிரேக் விட்டுருங்க. ரூமுக்கு டான்ஸ் மாஸ்டரை அனுப்பி இரவு வரைக்கும் திரும்பத் திரும்ப நல்லா பிராக்டிஸ் பண்ண வையுங்க. ஓரளவு தேறினதும் நாளைக்கு இதே காட்சியை எடுத்துக்கொள்ளலாம். இன்றைக்கு நானும் கதாநாயகியும் சம்பந்தப்பட்ட வேறு காட்சிகள் இருந்தால் மதியம் அதை எடுத்துப்போம். ஹீரோயினை வரவழைச்சிருங்க” என்றார். படப்பிடிப்பு குளறுபடி ஆகிவிட்டபடியால் அங்கே மதிய சாப்பாடு வரவில்லை. அதனை வேறொரு இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள் போலிருக்கிறது. “கவலையே வேண்டாம். நான் தங்கியிருக்கும் ஓட்டல்ல போய் சாப்பிட்டுட்டு உடனே வந்துர்றேன். நீங்க ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க” என்றார்.

“சரி சிவா ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துருங்க. நான் அதுக்குள்ள ஹீரோயினை வரவழைச்சுர்றேன். மதிய படப்பிடிப்பை மாடர்ன் தியேட்டர்ஸ்ல வெச்சுப்போம்” என்றார் முத்துராமன்.

சாப்பிட்டுவிட்டு உடனடியாக வருவதற்காக ஐந்துரோடு அருகில் தங்கியிருந்த கோகுல் ஓட்டலுக்கு வந்தோம். “இரண்டு சாப்பாடு கொண்டுவாப்பா” என்றதற்கு மேனேஜர் தலையைச் சொறிந்தார். “சார் நீங்க வர்றதாகச் சொல்லிப்போகலையே. அதனால் சாப்பாடு வைக்கவில்லை சார். இருக்கிறதா என்று பார்க்கிறேன். சாப்பாடு நேரம் வேறு முடிந்துவிட்டது. அதனால்……..” என்று இழுத்தவர்……….. பார்த்துவிட்டுவந்து “நல்லவேளை இரண்டே இரண்டு சாப்பாடு இருந்தது. கொண்டுவந்துட்டேன்” என்று பணியாளருடன் ஆஜரானார்.

எங்கள் இருவருக்கும் மேஜையில் சாப்பாடு வைக்கப்பட………. உட்காரப்போன சமயம் சிவகுமாருக்குத் தொலைபேசி வந்தது. சென்னையிலிருந்து பெரிய தயாரிப்பாளர் ஒருவர் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தில் ஒப்பந்தம் செய்வது சம்பந்தமாகப் பேசினார்.

“நீங்க சாப்பிடுங்க. நான் பேசிட்டு வந்துர்றேன்” என்றவர் பேச ஆரம்பித்தார்.

நான் சாப்பிட ஆரம்பித்து நீண்ட நேரமாகியும் பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஒரு வழியாகப் பேசி முடித்து டைனிங் டேபிளில் அமர்ந்து மூடிவைத்த சாப்பாட்டைத் திறக்கவும் கதவு தட்டப்படவும் நேரம் சரியாக இருந்தது.

கதவு திறந்தால் படப்பிடிப்பின் டிரைவர் நின்றிருந்தார். “சார் கார் தயாராயிருக்கு. நீங்க ரெடின்னா 
கிளம்பலாம்” என்றார்.

“இதோ ஒரு நிமிஷம். சாப்பிட்டுக் கிளம்பிர்றேன்” என்றவர் என்ன நினைத்துக்கொண்டாரோ, “நீ சாப்பிட்டியா?” என்றார் டிரைவரைப் பார்த்து.

“நான் வந்து…………புரொடக்ஷனில் சாப்பிட்டுக்கறேன் சார். எனக்கொண்ணும் அவசரமில்லை” என்றார் டிரைவர்.

“கேட்டதற்கு மட்டும் பதில் சொல். இன்னும் சாப்பிடலைதானே?”

“இன்னும் இல்லை.” என்றார் தயங்கியபடியே.


“முதல்ல இங்க உட்கார்ந்து இதைச் சாப்பிடு” என்றார் சிவகுமார்.

 டிரைவர் தயங்கினார். “இல்லை சார் நான் புரொடக்ஷனில் சாப்பிட்டுக்கறேன்”

“வெளியூர் புரடக்ஷனைப் பற்றி எனக்குத் தெரியும். அதுவும் வெளியூர் படப்பிடிப்புகளில் டிரைவர்தான் மிகவும் பரிதாபமானவர். டைரக்டரைக் கூட்டிவா, ஹீரோவைக் கூட்டிவா, ஹீரோயினைக்கூட்டிவா காமிரா மேனைக்கூட்டிவா என்று அலைக்கழித்துக்கொண்டே இருப்பார்கள். வண்டிகள் வேறு குறைச்சலாக இருக்குமா… எல்லாவற்றையும் சில கார்களிலேயே முடித்துக்கொள்ளணும். ஒருத்தரைக்கூட்டி வந்து விட்டதும் இன்னொருத்தரைக்கூட்டி வர்றதுக்கான பிளான் தயாரா இருக்கும். நான் இன்னும் சாப்பிடலை. சாப்பிட்டுப் போறேன்னெல்லாம் சொல்லமுடியாது. அப்படியே இழுத்துப் பறித்து ஓடவேண்டியதுதான். இதில் டிரைவர் சாப்பிட்டாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் யாருக்கும் யோசிக்கறதுக்கு நேரமெல்லாம் இருக்காது. யோசிக்கவும் மாட்டார்கள். ஒரு வாழைப்பழத்தையோ என்னத்தையோ வாங்கித் தின்றுவிட்டுப் பசியாற வேண்டியதுதான். அதனால் உனக்கு சாப்பாடெல்லாம் கிடைக்காது. பேசாம உட்கார்ந்து இதைச் சாப்பிடு”

“இல்லை சார் நீங்க……….?” என்று டிரைவர் தயங்க………………..

“யோவ் பேசாம உட்கார்ந்து சாப்பிடு. நீ இதைச் சாப்பிட்டாதான் நான் கிளம்புவேன்” என்று உறுதியான குரலில் சொல்லி சோபாவில் உட்கார்ந்துகொண்டார் சிவகுமார்.

வேறு வழியில்லாமல் டேபிளில் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு கீழே அமரப்போன டிரைவருக்கு “பேசாம அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுய்யா” என்று ஒரு அதட்டல் குரல் வந்தது.

டிரைவர் சாப்பிட்டு முடிக்கும்வரைக் காத்திருந்து முடித்ததும் படப்பிடிப்புக்குக் கிளம்பினார். ஓட்டலில் இன்னொரு சாப்பாடும் கேட்க முடியாது.
கிடைக்காது.

என்னுடைய நிலைமைதான் மிகவும் சங்கடமாயிருந்தது. ஏனெனில் நான் ஏற்கெனவே சாப்பிட்டு முடித்திருந்தேன். காரில் போகும்போது “காலையில் சாப்பிட்ட டிபனுடன் இருக்கிறீர்களே எப்படி?” என்றதற்கு-

“அதெல்லாம் ஒரு இளநீர் குடித்து அட்ஜஸ்ட் செய்துகொள்வேன்” என்று சொல்லிவிட்டார்.

இதுதான் சிவகுமார்.

கம்பனுடைய தேர்ந்தெடுத்த நூறு ராமாயணப் பாடல்களை மனப்பாடம் செய்து அதனூடே அழகாக ராமாயணக்கதையைக் கோர்த்து அது அழகாகப் பின்னிப் பிணைந்து ஊடுருவிச் செல்லும்வகையில் சொல்லிய ராமாயண உரை இன்றைக்கு இவரைத் தமிழ்க்கூறு நல்லுலகெங்கும் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது.

உலகளாவிய அளவில் அதற்காகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறார் இவர்.

இது கடந்த பத்து வருடங்களுக்குள் இவரிடம் நிகழ்ந்த மாற்றம் என்று ஏற்கமுடியவில்லை. ஏனெனில் தங்கப்பதக்கம் படத்திற்காக இலங்கை வானொலி நடத்திய ஒரு பிரமோவில் சிவாஜி பேசிய வசனங்களைப் பேசிக்காட்டியபோதுதான் என்னுடைய கவனம் முதன்முதலாக இவர் மீது விழுந்தது. அதன் பிறகு பல மேடைகளில் சிவாஜி வசனங்களை உணர்ச்சிப் பெருக்குடன் பேசிக்காட்டி மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். 

சிவாஜியின் வசனங்கள் என்று இல்லை. இவர் நடித்த ஏபிஎன், கே.பாலச்சந்தர் படங்களின் அத்தனை வசனங்களையும் சொல்லுங்கள் என்று நாற்காலி போட்டு உட்கார்ந்தால் சிறிதும் சளைக்காமல் அத்தனைப் படங்களின் வசனங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்லமுடிவது இவருக்குள்ள அசாத்திய திறமை என்றுதான் சொல்லவேண்டும். “இந்த அசாத்திய நினைவாற்றல் எப்படி வந்தது?”

“சின்ன வயதிலிருந்து அறுபத்தைந்து வயதுவரை சிரசாசனம் செய்துவந்திருக்கிறேன். நினைவாற்றலுக்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது பரம்பரையாக எங்க அப்பா வழிவந்ததா  என்பதும் தெரியாது. நீங்களெல்லாம் நினைப்பதுபோல நான் ஒன்றும் கிருபானந்தவாரியாரோ, சிவாஜியோ, மேஜர் சுந்தரராஜனோ அல்ல. கலைஞர், கண்ணதாசன், நாகேஷ் இவர்களெல்லாம் அற்புதமான நினைவாற்றலும் திறமையும் கொண்டவர்கள். அந்த வரிசையில் நான் இல்லை. ஒவ்வொன்றையும் குண்டூசி வைத்துக் குத்துவதுபோல குத்திக் குத்தி மூளைக்குள் பதியவைத்துக்கொண்டேன். ஆழ்மனதிலிருந்து நிறைய விஷயங்கள் வருவதற்குத் தீவிரமான பயிற்சிதான் காரணம். கொஞ்சம் மெனக்கெட்டால் எல்லாருக்கும் இது சாத்தியமே.”

“உங்களின் உச்சகட்ட சாதனை என்று கம்பராமாயண உரையைச் சொல்லலாமா? அத்தனைத் திருத்தமான உச்சரிப்புக்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?”

“அப்படி எதையும் தீர்மானித்துவிடாதீர்கள். கம்பராமாயணம் சொன்னது சாதனை அடிப்படையில் அல்ல. இன்னமும் சொல்லப்போனால் சிவாஜியின் உச்சரிப்பு அதில் இல்லை. ஒரு அறுபது சதம் சிவாஜியின் உச்சரிப்பு வந்திருக்கலாம். ஆனால் அதில் பாடல்களை உச்சரிக்கிறேன் பாருங்கள்…………. அதில் நூறு பாடல்களின் உச்சரிப்பும் சிவாஜிக்கு இணையான உச்சரிப்பு. என்னுடைய அடுத்த முயற்சி மகாபாரதம் உரை. மகாபாரதம் முடிந்தபிறகு திருக்குறளைக் கையில் எடுக்கலாம் என்றிருக்கிறேன்

“மகாபாரதம் என்பது ஒரு ஆன்மிக உரையாக இருக்குமா?”

 “ஆன்மிக உரையைச் செய்வதற்குத்தான் நிறையப்பேர் இருக்கிறார்களே. நானும் எதற்காக ஆன்மிக உரை ஆற்றவேண்டும்? மகாபாரதத்திலிருந்து நான் என்ன உணர்ந்தேனோ அதனை என்னுடைய பாணியில் சொல்லப்போகிறேன். இதற்காக கடந்த நான்கு வருடங்களாக மகாபாரதம் படித்து வருகிறேன். படித்து என்னைக் கவர்ந்த விஷயங்களை அப்படியே எழுதிக்கொண்டு வருகிறேன். இதுவரை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியாயிற்று. இது மொத்தத்தையும் ரீரைட் பண்ணுவேன். அதன்பிறகு ஒரு வடிவம் வரும். அதனைத்தான் வெளிப்படுத்தப் போகிறேன். இப்போதே எந்த முன்முடிவுக்கும் வராதீர்கள். நான் பேசி முடித்தபிறகு சொல்லுங்கள்”


“சரி; மீண்டும் விஷயத்திற்கு வருவோம். பாராட்டு விழாக்களை ஏன் தவிர்க்கிறீர்கள்?”

“நான் வள்ளுவனோ, கம்பனோ, பாரதியோ இல்லை. காந்தியோ காமராஜரோ இல்லை. அவர்களெல்லாம் வளர்ந்தவர்கள். நான் வளரவேண்டும் என்று நினைக்கிறவன். பாராட்டிற்கும் புகழுரைக்கும் என்றைக்கு நீ ஏங்குகிறாயோ அன்றைக்கு நின்றுவிடும் உன்னுடைய வளர்ச்சி என்பதில் முழு நம்பிக்கைக் கொண்டவன். என்றைக்கு எனக்குப் பொன்னாடைப் போர்த்தறீங்களோ அன்றைக்கே என்னுடைய வளர்ச்சி நின்றுபோய்விடும். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டுப் போறேன். விட்டுருங்க. என்னுடைய வளர்ச்சியைத் தடுக்கவேண்டாம்”

இந்த மண்ணில் புகழ்பெற்ற பிரமுகர்கள் எல்லாரும் தங்களுடைய அடையாளங்களாகச் சிலவற்றைக் கொண்டிருக்கிறார்கள். கலைஞருக்குத் தமிழுணர்வும், பகுத்தறிவும் அடையாளங்கள்.

எம்ஜிஆர் கடமையுணர்வு, தாய்ப்பாசம் என்பதை அடையாளங்களாகக் கொண்டிருக்கிறார்.

சிவாஜியின் நடிப்புத் திறமையைத் தாண்டி  தேச உணர்வு, தேசபக்தி, குடும்பம், பாசம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன.

சிவகுமார் சொந்த மண், கிராமம், அம்மா இவற்றைத் தம்முடைய அடையாளமாகக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பம் முதல் இன்றுவரை பரபரப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும் எதனையும் செய்து கொள்ளாதவர்.

தம்முடைய இயல்பு என்னவோ அதன்படி நடப்பது என்பதாலேயே வந்து சேரும் புகழ் வெளிச்சம் மட்டுமே இவருக்கு சொந்தம்.

இப்படி இயல்பான நடத்தை மூலமே பெரிய மனிதர் ஆவது என்பது அத்தனை சாதாரணமில்லை. இயற்கையின் ஆசியும் இறைவனின் நல்லருளும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.