Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Wednesday, July 16, 2014

உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம்- ஜெர்மனியின் வெற்றியும் சில சிந்தனைகளும்………………………….



 
கால் பந்தாட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

ஜெர்மனிக்காரர்கள் கோப்பையைக் கையிலேந்திக் குதூகலித்துக் கொண்டாடிவிட்டார்கள். அர்ஜெண்டினாக்காரர்கள் அழுதார்களோ இல்லையோ பிரேசில் மக்கள் அழுதுத் தீர்த்துவிட்டார்கள். நெய்மார் இல்லாத பிரேசில் அணி ஏழு கோல் வாங்கித் தோற்ற அவலத்தை பிரேசில் எத்தனைக் கார்னிவல்கள் நடத்தினாலும் மறப்பதற்கில்லை.

பிரேசில் மட்டுமல்ல வேறு சில நாடுகளும் தங்களுடைய ஒற்றை நட்சத்திர வீரர்களை மட்டுமே நம்பி ஆடுகிறது என்பது ஒரு சோகம் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஏதோ காரணத்தினால் அணியில் விளையாடவில்லை என்றால் அந்த அணி நம்முடைய உயர்நிலைப் பள்ளி ஃபுட்பால் டீமை விடவும் மோசமான நிலைமைக்கு வந்துவிடுகிறது என்பது பரிதாபமாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் பல ஆட்டங்கள் நம்முடைய உள்ளூர் அணிகள் மோதும் ஆட்டங்களை விடவும் சுமாராகத்தான் இருந்தன என்பதும் கசப்பான உண்மையே.

ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இருந்தது என்பது ஒரு புறமிருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட கால்பந்து விளையாட்டு என்பது பார்ப்பதற்கு ஒன்றும் பரவசம் தரும் ஒரு உற்சாகமான அனுபவம் என்று சொல்வதற்கில்லை. இன்னமும் சொல்லப்போனால் அவர்கள் ‘விளையாடுவதே’ இல்லை. மொத்த ஆட்டமும் வெறும் பாஸ்கள்தாம். யார் காலிலும் பந்து தங்குவதே இல்லை. ஃபுட் ஒர்க் என்பது அவர்களிடம் இல்லவே இல்லை. இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று எந்நேரமும் பந்தையும் எதிரணியினரையும் அலைக்கழித்துக் கொண்டே இருப்பதுதான் அவர்களது ஆடும் பாணி. ஆனால் எப்படி ஒவ்வொருவரிடமும் பந்தைக் கடத்துகிறார்கள், அடுத்து யாரிடம் கடத்தப்போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது அவர்களுடைய ஆட்டத்தின் சூட்சுமம். கூடவே குளோஸ் போன்ற ஒரு ஸ்ட்ரைக்கரை வைத்திருப்பதும் அவர்களுடைய அதிர்ஷ்டம். குளோஸ் ‘ஆடுகின்ற’ ஆட்டக்காரர் அல்ல; ‘அடிக்கின்ற’ ஸ்ட்ரைக்கர். அதனால்தான் குளோஸ் ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் என்ற இடத்தைப் பிடிக்கமுடியவில்லை. எங்கே இருப்பார் என்ன செய்துகொண்டிருப்பார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பந்து கோல் போஸ்ட் அருகில் போனவுடன் எங்கிருந்தோ எப்படியோ வந்து கோல் அடித்திருப்பார். அந்தவகையில் எதிரணியினருக்கு அவர் சிம்ம சொப்பனம். எப்படியோ கோல் அடித்து விடுவார் என்பது தெரிந்ததனால் இந்த ஆட்டங்களில் குளோஸையும் குறிவைத்து அடித்துத் துவைத்தார்கள்.
 
போட்டிகள் ஆரம்பித்த சமயத்தில் எப்போது ஆரம்பிக்கும்? தூக்கம் போனாலும் பரவாயில்லை. விடிய விடியக் கண்விழித்து எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றெல்லாம் காத்திருந்த நாட்கள் போய் ‘எப்படா முடியும்?’ என்று அலுப்புத் தர ஆரம்பித்துவிட்டது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும் கால்பந்தாட்டத்தின் விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்குமான உற்சாகமும் ஆர்வமும் உள்ளக்கிளர்ச்சியும் ஆரம்பத்து இரண்டொரு போட்டிகளிலேயே விடை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.

காரணம் கால்பந்தாட்டத்திற்கேயுரிய ‘உன்னதங்கள்’ எல்லாம் விடுபட்டுப்போய் விளையாட்டு என்றாலேயே அதிகபட்ச வன்முறைகள்……………….அடி, உதை, தலையை முட்டி மோதுவது, ஓடுகின்றபோது கால் கொடுத்து விழ வைப்பது, விழுந்தவன் மேலேயே விழுவது, மர்ம இடத்தைப் பார்த்து உதைப்பது….. என்பது போன்றே எல்லா ஆட்டங்களும் அமைந்திருந்தன.

கால்பந்தாட்டம் என்றாலேயே இம்மாதிரியான மெல்லிய வன்முறைகள் இயல்பானவைதாம். ஆனால் இவையெல்லாம் இவ்வளவு நாட்களும் இத்தனை ஆக்ரோஷமாகவும் இத்தனை மூர்க்கத்தனத்துடனும் இருந்ததில்லை. மனதிற்குள் ஏதோ வன்மம் கொண்டு எதிரியின் மீது மோதுவதுபோல் மோதுகிறார்கள். குழு அமைத்துக்கொண்டு ‘போட்டுத்தள்ளும்’ கூலிப்படையினர்போல் நட்சத்திர வீரர் மீது மோதி அவரை உண்டு இல்லையென்று ஆக்குகிறார்கள். கீழே போட்டு புரட்டித்தள்ளி துவம்சம் செய்கிறார்கள். இரண்டு எட்டுக்கு மேல் ஓடவிடாமல் கால் கொடுத்து விழவைத்து பந்தைக் கவர்ந்துகொண்டு ஓடுகிறார்கள்.

இவையெல்லாம் இத்தனை நாட்களும் இலை மறைவு காய் மறைவாக இருந்தன. இப்போதோ இதுதான் ஃபுட்பால். ஃபுட்பால் என்ற விளையாட்டே இப்படித்தான் என்று நினைக்குமளவுக்கு எல்லா ஆட்டங்களிலும் வன்முறை நீக்கமற நிறைந்து இருந்தது. முன்பெல்லாம் நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

அவர்கள் திறமையினாலும் தங்களுக்கேயுரிய தனிப்பட்ட நுணுக்கங்களாலும் பலபேருடைய கால்களுக்கிடையில் பந்தைக் கட் செய்து கொண்டு எதிர்க்க வருகிறவர்களையெல்லாம் சமாளித்து ஒற்றை ஆளாக பலரையும் தாண்டிச்சென்று கோலடிக்கும் காட்சி பார்க்கிறவர்களுக்கு ஒரு அற்புத அனுபவமாக இருக்கும். பார்ப்பவர்களை பரவசத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அந்த தனிப்பட்ட வீரரின் சாகசம் கண்களுக்குள்ளேயே நிற்கும். இப்போதைய மேட்சுகளில் அதற்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விட்டது.
 
ஒருத்தனைக் கட் செய்து பந்தை எடுப்பதற்குள் இரண்டு பேர் மேலே வந்து விழுகிறார்கள். அதையும் தாண்டி பந்தைத் தள்ளினால் மூன்றாமவன் இந்த வீரரின் கால்களுக்கிடையில் காலைக்கொடுத்துப் பின்னி விழவைக்கிறான். மஞ்சள் கார்டாவது, ரெட் கார்டாவது……….ஆட்டம் அதுபாட்டுக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

இம்மாதிரியான வன்முறைகளெல்லாம் இல்லாத சமயத்தில் ‘வெறும் ஃபுட்பால் மட்டும்’ ஆடித் தன் திறமையை நிரூபித்தவர்தான் பீலே. அவர் அதிர்ஷ்டக்காரர். அவருக்கு ‘நீட்டான’ ஃபுட்பால் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் மலை போல இருந்தன.

அதற்கடுத்த பெரிய ஃபுட்பால் ஜாம்பவானாக மாரடோனா பெயரெடுத்த காலத்தில்தான் இம்மாதிரி வன்முறைகள் எல்லாம் வெளிப்படையாக ஆட்டங்களில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.

அதுவும்கூட நமக்கெல்லாம் டிவி வந்து உலக கால்பந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்த முதல் வருடமான 1994-ல் மாரடோனா ஆடியபோது அவருடைய அற்புத ஆட்டத்தை வியந்துபோய் பார்க்கமுடிந்தது.

அடுத்த 98-ம் ஆண்டிலிருந்துதான் வன்முறை இறக்குமதி செய்யப்பட்டது. பந்தை விட்டுவிட்டு ஆளை அடிப்பது என்கிற ரீதியில் ‘அடித்து ஆட’ ஆரம்பித்த உலகக்கோப்பையை 98-ம் ஆண்டின் போட்டிகள் உறுதி செய்தன.
 
அதே மாரடோனாவைச் சுற்றி எதிரணியைச் சேர்ந்த தடியர்கள் இரண்டுக்கு மூன்று பேர் இருப்பார்கள். மாரடோனாவிடம் பந்து வந்ததுதான் தாமதம். அவரை ஓடவிடாமல் அடிப்பது, கால்களுக்கிடையில் காலை நுழைத்து விழவைப்பது, பந்தை விட்டுவிட்டுக் கால்களின் மீது உதைப்பது என்ற அடாவடி ஆட்டம் இந்த ஆண்டிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது.

எத்தனைப்பேர் சேர்ந்து அடித்தாலும், காலை இடறவிட்டு விழவைத்தாலும் அப்படியே கரணம் அடித்து சுருண்டு கீழே விழுந்து அதே வேகத்தில் எழுந்து – அத்தனை அடிவாங்கி உருண்டையாக சுருண்டு விழுந்தபோதும் எக்காரணத்தைக்கொண்டும் பந்தை மட்டும் விடாமல் தன்னுடைய கால்களுக்கிடையிலேயே வைத்திருந்து உடனடியாக எழுந்து பந்தைத் தொடர்ந்து தள்ளிக்கொண்டு ஓடிய மாரடோனாவின் திறைமையைப் பார்த்து உலகம் வியந்தது.

மக்கள் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

டிவியில் பார்த்தவர்கள் அந்தக் குள்ள மனிதனின் திறமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒரு மூன்று உலகப்போட்டிகள் மாரடோனாவை மட்டுமே மையம் கொண்டிருந்தன.

எங்கோ ஒரு சாதாரண சேரியில் பிறந்த மாரடோனா என்ற கால்பந்தாட்ட வீரன் உலகின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கடவுளாகப் போற்றப்பட்டது இப்படித்தான்.

ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு என்றில்லாமல் அவன் தோன்றிய விளம்பரங்கள் ஒளிபரப்பாவதன் மூலம் (உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் 

மாரடோனாவின் ஏதாவது ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள்) ஒரு வினாடிக்கு இவ்வளவு என்று விலைபேசி அவனைக் கொண்டாடியது வர்த்தக உலகம்.

மாரடோனாவைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பெக்காம், ரொனால்டோ, கிறிஸ்டியானா ரொனால்டோ, மெஸ்ஸி என்று சாகச வீரர்களைக் கொண்டாட ஆரம்பித்தது உலகம்.

இந்த உலகக் கோப்பையிலும் மெஸ்ஸி, கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் புதிய வீரரான நெய்மார் ஆகியோரை நட்சத்திர அந்தஸ்துள்ள வீரர்களாகக் களம் இறக்கிற்று ஃபிபா.

நட்சத்திர வீரராக பெரிதும் பேசப்படும் ரொனால்டோ ஆடிய போர்ச்சுகல் அணி பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருடைய ஆட்டத்தை மேற்கொண்டு பார்க்கமுடியாமல் போய்விட்டது.

நெய்மாரை அடித்துத் துவைத்து படுக்கப்போட்டு ஸ்டிரெச்சரில் தூக்கிக்கொண்டுபோக வைத்துவிட்டார்கள். மேலே பறந்து எகிறி முதுகில் ஒருத்தன் விழுந்ததில் நெய்மாரின் முதுகெலும்பு முறிந்துபோய்விட்டது.
 
நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஓரளவுக்காவது மக்களுக்குப் பார்க்கக் கிடைத்தது மெஸ்ஸியின் ஆட்டத்தை மட்டும்தான். அதிலும் இதே பாணிதான். மெஸ்ஸியைச் சுற்றிலும் எந்நேரமும் மூன்று நான்கு பேர். மெஸ்ஸியிடம் பந்து வந்தாலேயே அடி உதை ஆரம்பிக்கப்பட்டு காலை விட்டு இடறி மெஸ்ஸியை விழவைக்கும்வரை விடுவதில்லை. (ஆனாலும் ஓரளவுக்காவது தன்னுடைய ஆட்டத் திறமைகளையும் நுணுக்கங்களையும் மெஸ்ஸி வெளிப்படுத்திய காட்சிகள் காணக் கிடைத்தது ஒரு சந்தோஷ அனுபவம் என்றுதான்  சொல்லவேண்டும்). இதே போக்கு எல்லா நட்சத்திர வீரரிடமும் காட்டப்பட, எந்தப் ‘பயபுள்ளையையும்’ ஆடவிடாமல் பார்த்துக்கொண்டார்கள் படுபாவிகள்.

இன்னொன்று- எல்லா நட்சத்திர வீரர்களுக்கும் எதிராகவே அத்தனை ரெஃபரிகளும் இருந்தார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களும் தெரியவில்லை.

இதனையும் மீறி உலகம் முழுக்கவும் இருநூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கால்பந்தாட்டக் கொண்டாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால் அது இந்த ஆட்டத்தின் மீது இருக்கும் அதீதக் கவர்ச்சியால்தான். களமிறங்கியிருக்கும் அத்தனை வீரர்களுமே அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாமல் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனித்துக்கொண்டிருக்கவும் செயல்படவும் செய்யும் கவர்ச்சி அது.

எந்த நேரத்தில் பந்து எப்படி வரும், யாரிடம் போகும், தலையால் முட்ட வேண்டுமா, காலால் தள்ள வேண்டுமா, கட் செய்வதா?, பாஸ் கொடுப்பதா? யாரிடம் கொடுப்பது? மார்பால் தடுக்க வேண்டுமா? தொலைதூரத்துக்கு உதைக்க வேண்டுமா? என்று எல்லாவற்றையும் அந்தந்த நொடிக்கு ஏற்பத் தீர்மானிக்க வேண்டிய விளையாட்டு இது. கொஞ்சம் ஏமாந்தாலும் தீர்ந்தது. எதிரி கோல் போட்டுவிட்டு இரண்டு கைகளையும் விரித்துப் பறவை மாதிரியான போஸில் மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பான்.

விளையாட்டு நடைபெறும் ஒன்றரை மணி நேரத்திலும் ஒரு வினாடி தவறாமல் சுவாரஸ்யம், விறுவிறுப்பு இரண்டிற்கும் பஞ்சம் வைக்காத ஒரே விளையாட்டு இதுதான்.

இந்த விளையாட்டை முற்றிலும் புறந்தள்ளி கிரிக்கெட்டுக்கு ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிறதே இந்த தேசம் என்பது கவலைக்குரிய ஒன்றுதான். தொண்ணூறுக்கு முந்தைய நாட்களில் வெளியூர்ப் பயணங்களின்போது கண்களில் தென்படும் மைதானங்களில் எல்லாம் இரண்டு புறமும் ‘ப’வைக் கவிழ்த்து வைத்தமாதிரி கோல் போஸ்ட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.

பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது காலியாகக் கிடக்கும் அத்தனை மைதானங்களிலும் இத்தகைய கோல் போஸ்ட்டுகள் இருக்கும் அந்தக் காட்சியே பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும்.

 சிறுவர்களும் இளைஞர்களும் அணி சேர்ந்துகொண்டு ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். விளையாடும் அணி ஒன்பது, ஒன்பது என்று பதினெட்டுப் பேரோ, அல்லது பதினொன்று, பதினொன்று என்று இருபத்தியிரண்டு பேரோ- விளையாடும் அத்தனைப் பேருக்கும் நொடி தவறாமல் வேலை வைக்கும் விளையாட்டு இது. உடம்பையும் மனதையும் சுறுசுறுப்பாகவும் துடிதுடிப்பாகவும் வைத்திருப்பவன் மட்டுமே கால்பந்து ஆட முடியும்.

பெங்களூரில் முன்பெல்லாம் நிறைய கால்பந்து வீரர்கள் இருந்தார்கள். ஆஸ்டின் டவுன், டேனரி ரோடு, கன்ட்ரூப் போன்ற தமிழ்ப் பகுதிகளில் நிறைய இளைஞர்கள் அணிஅணியாக உருவாகிவந்தார்கள். நிறைய தொழிற்சாலைகள் இவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு கூடவே தங்களுக்கென்று கால்பந்தாட்ட அணிகளையும் வைத்திருந்தன. இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் சென்று ஆடி புகழ் சேர்த்து வருவார்கள் இந்த ஆட்ட வீரர்கள். எதிர்காலத்தில் எப்படியெல்லாமோ வந்திருக்கக்கூடும்……………………….

இதையெல்லாம் இல்லாமல் செய்துவிட்ட, கவிழ்த்துப் போட்ட பெருமை டிவிக்கே உண்டு. இந்தியாவில் டிவி வருவதற்கு முன்னால் கிரிக்கெட் இத்தனைப் ‘பாப்புலரான’ விளையாட்டாக இருக்கவில்லை. வர்த்தக பணமுதலைகளால் எந்தவிதமான மோசடி மாற்றங்களையும் ‘அங்கீகரிக்கப்பட்ட இலட்சிய மாற்றங்கள் போன்ற தோற்றத்தில்’ உருவாக்கிவிட முடியும் என்பதற்கு கிரிக்கெட்டும் ஒரு சான்று.

மேற்கத்திய நாடுகளிலிருந்து தேவையற்ற எதை எதையெல்லாமோ இறக்குமதி செய்யும் இந்தியன் விளையாட்டு விஷயத்தில் அந்த நாடுகளிலிருக்கும் ஃபுட்பால் வசீகரத்தை இறக்குமதி செய்யாததோடு, தன்னிடம் அதுவரை  இருந்த கொஞ்ச நஞ்ச ஈடுபாட்டையும் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தொலைத்துவிட்டு உட்கார்ந்தாலும் பரவாயில்லை. தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்துவிட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறான். உலக அளவில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இவன் பாட்டுக்கு ‘உலகக் கோப்பைக் கிரிக்கெட்’ என்று நாமகரணம் வேறு செய்துகொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

அந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் மூன்று நான்கு நாடுகள்தாம் ‘சொல்லிக்கொள்ளும்படியான’ நாடுகள். மற்றவையெல்லாம் சுண்டைக்காய் நாடுகள் அல்லது தீவுகள்…...

சரி கிரிக்கெட் எப்படி ஆடப்படுகிறது?

இரண்டு பேர் ஆடுகிறார்கள் ஒருவர் பந்து போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆறு பந்துகளில் இரண்டோ மூன்றோதான் அடிக்கப்படுகிறது. அதுவும் ஒன்றோ இரண்டோ மட்டும்தான் ஓங்கி அடிக்கப்படும் பந்து. மற்றதெல்லாம் தடுப்புக்கள்தாம்.

பந்தை ஒருவர் அடித்துவிட்டால் அந்த அணியைச் சேர்ந்த இரண்டுபேர் ‘மட்டுமே’ ஓடுவார்கள். மற்றவர்களெல்லாம் மைதானத்திலேயே இல்லையே, கேலரி ஓரமாக அல்லவா உட்கார்ந்திருப்பார்கள்…………..? பந்து தடுக்கப்பட்டாலோ அல்லது அடிக்கப்பட்டாலோ எதிரணியிலிருந்து ஒரே ஒருவர் மட்டும்தான் அந்தப் பந்தைப் பிடிப்பார். அல்லது பிடிக்க ஓடுவார். எடுத்து வீசும்போது பௌலிங் போட்டவர் அந்தப் பந்தைப் பிடித்து கிரீஸில் ஓடிக்கொண்டிருப்பவர்களை அவுட்டாக்க முடியுமா என்று பார்ப்பார்.

ஆக இருபத்திரண்டு பேர் ஆடும் ஆட்டத்தில் ஒரு சமயத்துக்கு மூன்று பேர் அல்லது நான்குபேர் மட்டுமே ‘செயல்படுகின்ற’ சோம்பேறி ஆட்டம் அது.

அந்த ஆட்டம் துடிப்பான இளைஞர்கள் ‘விளையாடுவதற்காக’ ஏற்பட்ட ஆட்டம் அல்ல; பொழுதுபோகாதவர்கள் ‘பார்த்துக்கொண்டிருப்பதற்காக’ உருவாக்கப்பட்ட ஆட்டம்.

அதனை- பல வகையிலும் இன்னமும் முன்னேறாத, தன்னுடைய அடிப்படைத் தேவைகளில் முப்பது சதவிகிதத்தைக்கூடப் பூர்த்தி செய்துகொள்ளாத, வறுமைக் கோட்டிற்குக் கீழே இருபத்தைந்து சதவிகிதம் மக்களைக் கொண்ட நூற்றுப்பனிரெண்டு கோடி மக்கள் கொண்ட இந்த தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்டமாக ஆக்கிய பெருமை வர்த்தக உலகத்தையே சேரும்.

இன்றைய இளைஞர்களின், பணக்கார மேல்தட்டு இளைஞர்களின் நவீன மோஸ்தரில் செலவழிக்கும் பணமும் நேரமும் கணிசமான பங்கு கிரிக்கெட்டிற்கும் போகிறது.

தன்னுடைய பாட்டிக்கோ தாத்தாவிற்கோ தெரு முனையிலிருக்கும் மருந்துக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மாத்திரைக்கூட வாங்கிவர நேரமில்லாதவன், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்க விடியற்காலையிலேயே சென்று மூன்று நான்கு மணி நேரம் கியூவில் நிற்பதையும், அரை நிக்கரும் கோக் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுமாக ஐந்து மணி நேரம் டிவி முன்னால் பழி கிடப்பதையும் சர்வ சாதாரணமாக வீட்டுக்கு வீடு பார்க்கமுடியும்.

இம்மாதிரியான இளைஞர்கள் மத்தியில் சின்னதொரு சலசலப்பையாவது இந்த உலகக் கோப்பைக் கால்பந்து ஏற்படுத்தியதா என்பது தெரியவில்லை.

இந்தக் கால்பந்து போட்டிகளின் இன்னொரு சுவாரஸ்யம் முன்கூட்டிய கணிப்புகள்.

யார் ஜெயிப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லும் கணிப்புகளைச் சென்ற கால்பந்தாட்டப் போட்டிகளின் போதேயே கணித்துச் சொல்லியிருந்தார் ஒரு ஜோசியர்.
 
இங்கே ஜோசியர் என்பது மனிதரில்லை. ஒரு ஆக்டோபஸ். பால் என்று அதற்குப் பெயர் வேறு சூட்டியிருந்தார்கள். ஒவ்வொரு பந்தயத்திற்கு முன்னாலும் ஆடப்போகின்ற அணிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை ஓரளவிற்குக்கூட அல்ல; மிகத் துல்லியமாக கணித்துச் சொன்னது அந்த ஆக்டோபஸ். இறுதி ஆட்டம்வரை அந்தக் கணிப்பு பொய்க்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம்தான்.

கொஞ்ச நாட்களில் பால் என்ற அந்த ஆக்டோபஸ் செத்துப்போய்விட்டது. இந்தமுறை என்ன செய்வார்கள் என்று பார்த்தால் அந்த ஏமாற்றத்திற்கு இடமே வைக்காமல் எங்கிருந்தோ ஒரு யானையப் பிடித்து வந்திருந்தார்கள். அதற்கு நெல்லி என்று பெயராம். அந்த யானை கணிக்கிறது என்றார்கள். இதுவரை முப்பத்தேழு கணிப்புகளில் முப்பத்து மூன்று கணிப்புகள் அட்சர சுத்தம் என்றார்கள். பந்தயங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பேயே இறுதிக்கோப்பையை வெல்லப்போவது ஜெர்மனிதான் என்பதைச் சொல்லிவிட்டது நெல்லி.
 
நெல்லி போதாதென்று எங்கிருந்தோ ஒரு கரடியைப் பிடித்து வந்திருந்தார்கள்.  இரண்டு அல்லது மூன்று கோல் போஸ்ட்டுகளை அமைத்து அதில் விளையாடப்போகும் அணிகளைச் சார்ந்த நாடுகளின் கொடிகளைப் போர்த்தி எந்த அணி வெல்லப்போகிறது காட்டு என்று சொல்லும்போது அந்தக் கரடி, எந்த அணி வெல்லப்போகிறதோ அந்த அணியின் கொடி போர்த்தப்பட்ட கோல்போஸ்ட்டைப் போய் தாங்கிப்பிடித்துத் தொங்கியது ஒரு ஆச்சரியம்தான்.
 
 மூன்று நான்கு கோல் போஸ்ட்டுகளை அமைத்து அதில் ஆடுகின்ற நாட்டின் கொடிகளைப் போட்டுவைத்து எந்த நாடு வெற்றிபெறும் என்று குட்டியானையைக் கேட்டபோது ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும் அணி இதுதான் என்பதைச் சொல்லும்விதமாக தன்னுடைய காலின் அருகில் வைக்கப்படும் பந்தை அந்தக் கொடி போட்ட கோல் போஸ்ட்டுக்குக் கொண்டு சென்று தள்ளிய நெல்லியின் செய்கையும் ஒரு அதிசயம்தான்.

நான் கூட ஆரம்பத்தில் இதென்ன கூத்து, இதென்ன முட்டாள்தனம் என்றுதான் நினைத்தேன். இறுதி விளையாட்டு நடைபெற்றபோதுகூட நெல்லியும், கரடியும் சொல்லியதற்கேற்ப ஜெர்மனி வெற்றிபெறக்கூடாது. இந்த ஜோசியங்கள் பொய்க்கவேண்டும் என்பதற்காகவாவது அர்ஜெண்டினா வெற்றிபெற வேண்டும் என்றுகூட எதிர்பார்த்தேன்.

ஒன்றும் நடக்கவில்லை.

பகுத்தறிவுக்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.

அறிவுலகத்திற்கும் விஞ்ஞான உலகத்திற்கும் பதிலளிக்க முடியாதவாறு சில ஆச்சரியங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உலகை சுவாரஸ்யமாக வைத்திருப்பது இத்தகைய ஆச்சரியங்கள் என்றே தோன்றுகிறது.

Friday, November 5, 2010

பட்டாசு வெடிச்சாச்சா?

தோ இன்னுமொரு தீபாவளி வந்துவிட்டது. முன்னெல்லாம் தீபாவளி என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் ஆரம்பித்துவிடும். விடியற்காலையிலேயே பட்டாசு வெடிக்கத் துவங்கிவிடுவார்கள். அதிகாலை ஐந்துமணி ஆவதற்குள்ளாகவே யாராவது ஒருவர் பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி. உடனடியாக அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் காதைப்பிளந்துவிடும். யாராலும் தூங்கமுடியாது. இந்தக் களேபரங்கள் அந்த மூன்று நாட்களும் தொடரும். தீபாவளியன்று உச்சக்கட்டத்தில் இருக்கும். பெரிதான சத்தத்துடன் வெடிக்கும் வெடிக்கு லட்சுமி வெடி என்று பெயர். பாவம் லட்சுமி! காதுகளைச் செவிடாக்கும்....இதய நோயாளிகளைத் தூக்கிவாரிப்போடச்செய்யும்......குழந்தைகளைத் திடுக்கிடச்செய்யும் பயங்கர வெடிக்கு லட்சுமி வெடியென்று அந்தம்மாவின் பெயரை எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதன்முதலாக யாரோ ஒரு கம்பெனிக்காரன் லட்சுமி படத்தைச்சுற்றி அந்த பிராண்டில் இந்த வெடியைக்கொண்டு வந்திருப்பான். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
கொண்டாட்டங்களுக்கு மக்கள் வெடிச்சத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சத்தங்களை விரும்புகிறார்கள். திருமண ஊர்வலங்களில் பட்டாசு கொளுத்துகிறார்கள். திருவிழாக்களில் பட்டாசு வெடிக்கிறார்கள். அரசியல் கூட்டங்களுக்கு சரம்சரமாய்ப் பட்டாசு கொளுத்துகிறார்கள். படங்கள் ரிலீசாகும்போதும் பட்டாசு.....சாவு ஊர்வலங்களுக்கும் பட்டாசு..............


நடுத்தரவர்க்கத்துத் தந்தைமார்களின் நிலைமைதான் பரிதாபம். போனஸ் வாங்கி கடன் வாங்கி தீபாவளிச்செலவை எப்படியோ ஒப்பேற்றுகிறார்கள். துணிமணிகள் பலகாரங்களுக்கு ஈடான ஒரு பெரிய தொகை பட்டாசுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ஆன செலவு இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆகிறது. எத்தனை ஆயிரமாக இருந்தால் என்ன எல்லாமே அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் கரியாகப் புகையாகப் போய்விடுகிறது. இதிலுள்ள பொருளாதார ரீதியிலான சிந்தனை நிறையப் பேருக்கு வந்துவிட்டது. ‘கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஒரு மணி நேரத்துல எதுக்குக் கரியாக்கணும்? இனிமேல் பட்டாசுக்குச் செலவழிக்க மாட்டோம்’ என்று முடிவெடுத்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால் அத்தனைப்பேராலும் இந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடிக்க முடிவதில்லை. தாய்க்குலங்கள் இம்மாதிரியான உறுதிகளுக்கெல்லாம் கணவர்களை அனுமதிப்பதில்லை. “ஊர்பூராவும் பட்டாசு வெடிச்சுக்கொண்டாடும்போது நம்ம பிள்ளைங்க மட்டும் வெடிக்காம இருக்கமுடியுமா? உங்க கஞ்சத்தனத்துக்கு எதுக்காக வெட்டியாய் என்னென்னமோ சால்ஜாப்பெல்லாம் பேசறீங்க?” என்று சொல்லி உறுதியைக் கலைத்துவிடுவார்கள்.
ஆனாலும் ஒன்று நிச்சயம். முந்தைய வருடங்களை ஒப்பிடும்போது இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. பொருளாதாரக் கணக்குகளுக்கு அடுத்து பெரியார் போன்றவர்களின் பகுத்தறிவு வாதங்கள்.....நரகாசுரனை எரித்த கதையெல்லாம் ஆரியத்தரப்பின் பித்தலாட்டங்கள். தீபாவளி நம் பண்டிகையல்ல.. அதனைப் புறக்கணிக்க வேண்டும்.” என்பதுபோன்ற தீவிரப்பிரச்சாரங்களின் மூலம் தீபாவளி கொண்டாடுவது அறவே நிற்கவில்லையாயினும் பட்டாசு கொளுத்துவது கணிசமாகக் குறைந்திருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பட்டாசு மோகம் குறைய நல்லாசிரியர்கள் காரணம். காசு கரியாவது ஒருபுறம், சுற்றுச்சூழல் மாசடைவது ஒருபுறம், குழந்தைத் தொழிலாளர்களையே பெருமளவில் உபயோகித்து வேலை வாங்கப்படுவதால் பட்டாசுகளைப் புறக்கணியுங்கள் என்று சில ஆசிரியர்களின் அறிவுறுத்தல் நல்ல பலன்களைத் தந்துள்ளது
என்னுடைய நண்பர் ஒருவர் செலவில்லாமல் தீபாவளி கொண்டாடுவது பற்றிச் சொல்லுவார். “தீபாவளியன்றைக்குச் சாயந்திரம் ஆறுமணி அளவில் எங்கள் வீட்டு மொட்டைமாடி மீது நானும் என் குடும்பத்தினரும் நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவோம். எங்களைச் சுற்றிலும் எல்லா வீடுகளிலும் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் பல்வேறு வாணவேடிக்கைகளையும் கொளுத்துவார்கள். ஒரே கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். பட்டாசு கொளுத்துகிறவனைத்தவிர மற்றவர்களெல்லாம் வேடிக்கைப் பார்க்கிறவர்கள்தானே! நாங்கள் மொத்தப்பேரின் சந்தோஷத்திலும் பங்கேற்ற திருப்தியுடன் தீபாவளியைக் கழிப்போம்” என்பார்.
இந்தியாவின் எல்லாக் கமிஷனர்களும் தீபாவளி தவறாமல் நிருபர்களிடம் பேசுகிறார்கள்...சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் எந்தக்குடிமகனும் எதையும் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடுகிறான். எங்கேயாவது தப்பிதம் நிகழ்ந்துபோக தினத்தந்தியிலும் சன்டிவியிலும் கரிக்கட்டையாகக் காட்சியளித்து அனுதாபம் பெற்று மறைந்துபோகிறான்.

கல்வி வளர வளர பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறையும் என்று மகிழ சந்தர்ப்பம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் இடம்பெயர்ந்திருக்கிறதே தவிர மாறவோ குறையவோ இல்லை என்பதைத்தான் இன்னொரு கோணம் காட்டுகிறது. ஏனெனில் இப்போதெல்லாம் படித்த இளைஞர்கள் பட்டாசுகளை தீபாவளிக்குக் கொளுத்துவதில்லை. அப்படியே பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள். எப்போதெல்லாம் கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா பூராவுக்கும் கொளுத்துகிறார்கள். அது விடியற்காலையா நள்ளிரவா என்பதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்களுக்கு ஆண்டெல்லாம் தீபாவளிதான். கிரிக்கெட்டிற்காக பட்டாசு கொளுத்துவது பற்றியெல்லாம் சுப்ரீம் கோர்ட் ஒன்றும் சொல்லவில்லை போலிருக்கிறது. அல்லது சொல்லியும் இவர்கள் கேட்பதில்லையா என்பதும் தெரியவில்லை.
பட்டாசுகளுக்கு அடுத்து நமக்கெல்லாம் தீபாவளியென்றாலேயே நினைவுக்கு வருவது தீபாவளி மலர்கள்தாம். அந்தக்காலத்தில் விகடன் கல்கி தீபாவளி மலர்கள் பார்ப்பதற்கே அவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தும். கலைமகளும் அமுதசுரபியும்கூட நல்ல கனமான மலர்களைத் தருவார்கள். கல்கி, விகடன் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஏராளம். இத்தனைக்கும் ஐந்து ரூபாய்தான் விலை. அந்த மலர்களை எல்லாராலும் வாங்க முடியாது. அந்தக்கால பொருளாதார நிலை அப்படி. அதனால் தீபாவளியன்று பத்திரிகைக் கடைகளில் அந்த மலர்களை வாங்கிப்போகிறவர்களை ஒரு ஹீரோ அளவுக்குப் பார்ப்பார்கள் சாமானியர்கள். இப்போதும் கல்கி விகடன் இரண்டு பத்திரிகைகளுமே தீபாவளி மலர்களை வெளியிடுகின்றன. ஆனாலும் அந்தக்கால மலர்களிலிருந்த ‘கனம்’ இப்போதைய மலர்களில் நிச்சயமாக இல்லை. ஏனோ அன்றையிலிருந்தே குமுதம் பெரிய சைஸ் தீபாவளி மலர்களை வெளியிடுவதே இல்லை. ஆனால் ஒருமுறையோ இரண்டு முறையோ கல்கண்டு இதழ் ஒரு ரூபாய் விலைக்கு பெரிய அளவில் தீபாவளி மலர் வெளியிட்டிருந்தார்கள். தமிழ்வாணன் அந்த தீபாவளி மலரை மிக அழகாகவும் சுவாரஸ்யமாகவும் வெளியிட்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம் தீபாவளி மலர்களில் பெரும்பாலும் தீபாவளி சம்பந்தமான சிறுகதைகள் இருக்கும். ஒரு முறை நா.பார்த்தசாரதிதான் “தீபாவளி மலர் என்றால் தீபாவளியன்று வெளியிடப்படும் மலர் என்றுதான் அர்த்தமே தவிர அதில் தீபாவளியைப் பற்றிதான் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைக்கத் தேவையில்லை”என்று சொன்னார். அதன்பிறகுதான் அந்தப்பாணி குறையத்தொடங்கியது.

தீபாவளி மலர்களுக்கு அடுத்து திரைப்படங்கள்தாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. ஒரு கன்னட இலக்கிய நண்பர் ஒருமுறை “தமிழர்களுக்கு தீபாவளியென்றால் பூஜை பண்டிகை பட்டாசு என்பதற்கடுத்து அன்றைக்கு கட்டாயம் ஒரு புதிய சினிமா பார்த்தாகவேண்டும் என்பதாக ஒரு சடங்கு இருக்கிறதாமே” என்று கேட்டார். “சடங்கு சம்பிரதாயம் என்றெல்லாம் கிடையாது. சிவாஜி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அப்படியொரு பழக்கத்துக்கு தமிழர்கள் அடிமையாகி விட்டார்கள் என்பதென்னமோ உண்மைதான்” என்கிறமாதிரி நான் சொன்ன பதிலை அவர் கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை.”இல்லை சார் அப்படி ஒரு சாஸ்திரமே இருக்கிறதாமே” என்று அந்த நண்பர் பிடிவாதமாக இருந்தார். யோசித்துப்பார்த்தால் இதையும் தமிழர்கள் ஒரு சாஸ்திரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பாதித்தமிழர்கள் தியேட்டர்களில் புதுப்படங்களையும் மீதித்தமிழர்கள் தொலைக்காட்சிகளில் நடிக நடிகையர்களின் ஞானோபதேசத்தையும் கேட்டுத்தான் தீபாவளியன்று தங்களை உயிர்ப்பித்துக்கொள்கிறார்கள்.

இதோ இன்னுமொரு தீபாவளியும் வழக்கம்போல் கடந்துவிட்டது.