Sunday, April 24, 2011

வீடுகட்டிப் பார்த்தேன்.










பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம் ஒன்றை ஒரு வார இதழில் வாசிக்க நேர்ந்தது. படிப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் அனுபவம் அது. அந்த அனுபவம் இது;

‘சமீபத்தில் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லட்டுமா?....பெங்களூரில் எனது பழைய-சிறிய வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்திப் புதுப்பிக்க ஆறு லட்சம் ரூபாய் வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தேன். அந்த வீட்டின் மதிப்பு பெங்களூர் நிலவரப்படி ரூ.25 லட்சம். அதை அடமானமாகக் காட்டியும், எனது சம்பளத்தில் இருந்து 60 மாதத் தவணையில் பிடித்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்தும், முப்பது செக்குகளில்
கையொப்பமிட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தும்கூட,கிட்டத்தட்ட 10 முறை அலைந்தபின்பே கடனின் முதல் தவணை கிடைத்தது.

ஆனால் ஒவ்வொரு முறையும் பிரச்சினை என்னிடம்தான் இருந்தது...வங்கியிடமல்ல. வங்கியில் இருக்கும் நடைமுறைகள் அப்படி.

இதில், அவர்களுக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்ததை நான் அறிவேன். ஏன்.... எல்லாம் முடிந்த பின் அதே வங்கிக்கிளை ஒன்றை என்னை வைத்து ரிப்பன் வெட்டித் திறந்தார்கள்.
அப்போது நான் சொன்னது,’’இந்த வங்கியில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கும்.

ஏனெனில் என்னையே பலமுறை சோதித்தபின்தான் பணம் கொடுத்தார்கள். அதுவும் நான் வீட்டை உண்மையிலேயே அவர்களிடம் வரைபடத்தில் காட்டியபடிதான் கட்டுகிறேனா என்பதை பல கட்டங்களில் வந்து பார்த்துவிட்டு, நான்கு தவணையில் தொகையைக் கொடுத்தார்கள்.அப்படி இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய வங்கிகள் திவாலாகியும் இந்திய வங்கிகளில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கிறது.
இந்திய ஜனநாயகமும் வங்கியும் மிகவும் பலமானதே. என்ன...கொஞ்சம் பொறுமையுடனும் பொறுப்புடனும் அணுகவேண்டும்.”

இதனை வாசித்த போது ஒருபுறம் நெஞ்சு கனத்தது. நியாயமாகவும் நேர்மையாகவும் அணுகுகிறவர்களுக்கு வங்கிகளிடமிருந்தும், வேறு அரசு நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கின்ற அனுபவம் இதுதான். அவர்கள் எவ்வளவு பெரியவர்களாகவும் எத்தகைய சாதனையாளர்களாகவும் இருந்தாலும் சட்டதிட்டங்களையும், நிர்வாக நடைமுறைகளையும் சொல்லி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் அலுவலர் கொஞ்சம் மனசாட்சி உள்ளவராக இருந்தால் கூடுதலாக ஒரு அனுதாப வார்த்தையையும் சேர்த்து அனுப்பிவைப்பார்.’’என்ன பண்றது சார், உங்களுக்கே இந்த நிலைமை. ரொம்ப வருத்தமாயிருக்கு. நம்ம சட்டதிட்டங்கள் அப்படி. ஒண்ணும் பண்றதுக்கு இல்லை.’’
ஆனால் இந்தியா பூராவிலும் நகரங்களில் ஒரு அங்குலம் பாக்கியில்லாமல் வானளாவ உயர்ந்துகொண்டிருக்கிறதே கட்டிடங்கள் அவையெல்லாம் என்னவாம்? எந்த வணிக நிறுவனம், எந்த அபார்ட்மெண்ட், எந்த தொழில் நிறுவனம், எந்தக் கல்லூரி நிறுவனம், எந்தத் தனியார் நிறுவனம் சொந்தப் பணத்தில் எழுகிறது? எல்லாமே வங்கிக் கடனில் எழும் கட்டிடங்கள்தானே? அவையெல்லாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, வரைபடங்களுக்கு உட்பட்டு நியதி நெறிமுறைகளுக்கு உட்பட்டுக் கடன் பெற்றுக் கட்டப்படுபவைதானா?

வேடிக்கையாயிருக்கிறது....விஷயம் என்னவென்றால் நீதி நேர்மை நியாயம் என நமக்கென்று பிறப்பித்துக்கொண்ட நெறிமுறைகளுடன் வாழ நேரும்போதுதான் இம்மாதிரியான சோதனைகளையெல்லாம் சந்திக்க நேர்கிறது. இன்றைய உலகில் வெற்றிபெற்றவர்களாய் வாழ்வதற்கு வேறுமாதிரியான சட்டதிட்டங்களும் வழிமுறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. இதனை நடத்துவது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். பணநாயகத்தின் ஆட்சிக்குட்பட்டே இங்கு பல காரியங்கள் நடைபெறுகின்றன. அதில் சிக்கி அடிபடாமல் வெளியே வரும் அப்பாவி பொதுஜனம் வெகு சொற்பமே. இந்தப் பிரிவினர்க்குப் ‘பிழைக்கத்தெரியாதவர்கள்’ என்று பெயர்! இதற்கு அப்பாற்பட்ட ‘பிழைக்கத்தெரிந்த’ பொதுஜனம்தான் சுகபோகங்களுடன் வாழ்பவர்கள்.

இது ஒருபுறமிருக்க, இந்த வங்கிவிவகாரம் வீடு கட்டிய எனக்கும் ஏற்பட்டது. பல வங்கிகளில் சட்டதிட்டங்களைச் சொல்லியே திருப்பியனுப்பினார்கள். ஒரு கோரிக்கையை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு நிறைய சட்டப்பாயிண்டுகள் கிடைத்துவிடுகின்றன. நியாயப்படுத்துவதற்கு நம்மிடம்தான் சட்டக்குறிப்புகள் எதுவும் இருப்பதில்லை. நிலத்தை வாங்கிவைத்துக்கொண்டு வங்கிக்கடனுக்காக அலைந்துகொண்டிருந்தேன். என்னுடைய பரிதாப நிலையைப் பார்த்த நண்பரொருவர் சிரித்துவிட்டு “சார் இப்படியெல்லாம் நீங்களே போய் அணுகினால் எந்த வங்கியிலும் கடனெல்லாம் கொடுக்கமாட்டார்கள். அதற்கென்று ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் போனால்தான் நீங்கள் கடனெல்லாம் வாங்கமுடியும். வாங்க நான் கூட்டிப்போறேன்” என்று சொல்லி ஒரு ஏஜெண்டிடம் கூட்டிச்சென்றார்.

அவர் நான் வைத்திருந்த பத்திரங்களை எல்லாம் வாங்கிப்பார்த்தார். பிறகு கடனுக்கு வேண்டிய சான்றிதழ்கள் எவையெவை குறைந்திருக்கின்றன என்தைச்சொன்னார். பிறகு ‘அவையெல்லாம் உங்களுக்கு அரசாங்கத்திலோ கார்ப்பரேஷனிலோ கிடைக்காது. அவற்றெயெல்லாம் வேறு வழிகளில் வாங்க வேண்டும்’ என்றார். ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும்?” என்றார்.

“இருபது லட்சம்” என்றேன். என்னுடைய மகள் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுவதால் அவள் பெயரில் கடன் பெறுவதற்கான வாய்ப்பிருந்தது.

அந்த மனிதர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. நாம் அதிக பணத்தை எதிர்பார்க்கிறோமோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

“என்ன சார் இவ்வளவு கொறைச்சலா கேட்கறீங்க? உங்க மகள் சம்பளத்துக்கு இன்னமும் அதிகமாக நீங்கள் கேட்கலாம். ஒரு இருபத்தைந்து லட்சம் கேளுங்க” என்றார்.

“வேண்டாம். அப்புறம் நாங்கதானே கட்டணும்..இது கிடைச்சாலே போதும்” என்றேன்.
அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களுக்குத் தெரியாதுசார். வீடு கட்ட ஆரம்பிச்சா கடைசியிலதான் பயங்கரமா இழுத்துரும். அந்தச் சமயத்துல என்ன செய்வீங்க? இருப்பதஞ்சு போடறேன்” என்றார்.

கடன் கிடைப்பதே பெரிது என்றிருக்கும் இந்த நேரத்தில் இவர்பாட்டுக்கு இன்னமும் அதிகமாக வாங்கித்தருகிறேன் என்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு.
கொஞ்சம் தயங்கியபடியே “சரி” என்றேன்.

“எதுக்கும் இருபத்தாறாவே போடறேன்” என்றார். என்ன இப்படி வாரிக்கொடுக்கிறேன் என்கிறாரே என்று யோசித்தபோதுதான் அவர் பேசிய அடுத்த வார்த்தையின்போது அதற்கான சூட்சுமம் தெரிந்தது. “எத்தனை லட்சமோ அத்தனை லட்சத்துக்கும் நாலு பெர்சன்ட் கமிஷன் தந்துரணும். இந்த பத்திரங்களெல்லாம் ரெடிபண்ண இருப்பஞ்சாயிரம் தந்துரணும்” என்றார்.

“எல்லார்ட்டயும் ஐந்து பெர்சன்ட்தான் வாங்குறது..நண்பர் கூட்டிட்டு வந்திருக்காரே என்பதற்காக உங்களிடம் நாலு பெர்சன்ட்” என்றார். கூட்டிக்கழித்துப் பார்த்தபோது ஒண்ணேகால் லட்சம் வெறும் கமிஷனாகவே தரவேண்டும் என்பது புரிந்தது.

ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டேன். பலரிடமும் பேசிப்பார்த்தபோது இது சாதாரணம்தான் என்று புரிந்தது. கமிஷன் தொகை அங்கங்கே வேறுபடுகிறது என்பதுதான் வித்தியாசம். இந்த வரிசையில் இன்னொரு புரோக்கர் சொன்னதுதான் வியப்பின் உச்சம். எல்லாம் பேசிவிட்டு ‘எந்த வங்கி?’ என்றேன். “உங்களுக்கு எந்த வங்கி வேண்டுமோ அந்த வங்கியில் வாங்கித்தருகிறேன்” என்றார் கூலாக.

புரோக்கர் சமாச்சாரமே வேண்டாம் என்று தள்ளிப்போட்டு சில மாதங்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தொடர்பு ஏற்பட்டு கடனுக்கு வழி பிறந்தது.

கடன் கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா என்ன? வீட்டைக் கட்டிக்கொடுக்க நல்லதொரு காண்ட்ராக்டர் கிடைக்கவேண்டுமே! என்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் என்னுடைய நெருங்கிய நட்பில் இருப்பவர் திரு. கோ.தாமோதரன். பெங்களூரின் குறிப்பிடத்தக்க காண்ட்ராக்டர்களில் ஒருவர். பெரிய தொழில் நிறுவனங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி, விஜய் மல்லய்யாவின் ஒரு கட்டிடம் என்று பல பெரிய பெரிய கட்டுமானங்களைக் கட்டியவர். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்ற நிறைவில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பொதுச்சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்து தற்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று சத்தமில்லாமல் தமிழ்த்தொண்டு புரிந்துகொண்டிருப்பவர். இவரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி, ஆனாலும் கேட்டுவிட்டேன்.

“அட, அதுக்கென்ன தாராளமா கட்டித்தர்றேன்” என்று முன்வந்தார். முக்கிய விஷயம், ஒரேயொரு ஒற்றைப் பைசாகூட வாங்கவில்லை. தம்மிடமுள்ள ஆட்களை அனுப்பினார். அவர்களுக்கான கூலி, மற்றும் கட்டட வேலைக்கான பொருட்கள் வந்து இறங்கினால் அவற்றுக்கான விலை-அவ்வளவுதான். வாரத்திற்கு இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை என்று வந்து மேற்பார்வையிட்டு யோசனைகள் சொல்லி மொத்த வீட்டையும் முடித்துகொடுத்துவிட்டார்.

கணக்குப்போட்டுப் பார்த்த நண்பர்கள் எப்படியும் காண்ட்ராக்ட் விட்டிருந்தால் ஐந்துமுதல் ஆறு லட்சம்வரைக்கும் அதிகமாகியிருக்கும் என்று சொல்கின்றனர். இப்படி நல்ல மனம் கொண்ட நண்பர் ஒருவர் கிடைத்ததில் இலகுவாக அழகிய வீடு ஒன்று உருவாகிவிட்டது.

அடுத்தது புதுமனைப் புகுவிழா!

என்னுடைய திருமணத்திலிருந்து எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக்கொடுத்தவர் நடிகர் சிவகுமார். வாழ்க்கையில் சில அதிர்ஷ்டங்கள் கிடைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அப்படியொரு அதிர்ஷ்டம் சிவகுமார் அவர்களின் நட்பு. எந்த ஜென்மத்திலோ செய்த நற்பயன் அவருடைய நட்பாக இன்றும் தொடர்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே, புதுவீட்டை அவரும் திருமதி சிவகுமாரும் வந்திருந்து குத்துவிளக்கேற்றித் துவக்கிவைக்க வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவான ஒன்று.

அவர்களுடன் யார் வருவது?

நான் சொன்னேன்,’’சார் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் பேராசைப் பிடித்தவன். எனக்கு சூர்யா, ஜோதிகா, குழந்தைகள், கார்த்தி, பிருந்தா, குழந்தைகள் என்று எல்லாரும் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்றேன்.

சிவகுமார் சிரித்துவிட்டுச்சொன்னார்.’’அதெல்லாம் சரி, ஆனால் நடைமுறைக்கு அதெல்லாம் ஒத்துவரணுமான்னு பார்க்கணும். குட்டிக்குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாது. சூர்யா கார்த்தியைப் பொறுத்தவரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்ந்தாற்போல வீட்டுல வச்சிப்பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. ஒருத்தர் இருந்தா இன்னொருத்தர் வெளில இருப்பாங்க. பார்க்கலாம்.. ரெண்டு பேர்ல யார் ஃப்ரீயாக இருக்காங்களோ அவங்களை மட்டும் கூட்டிவர்றேன். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார்.

சூர்யாவா கார்த்தியா யார் வருவார்கள் என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம் இருக்க நாட்கள் நகர்ந்தன. செய்தியை வெளியில் கசிய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.. ஆனால் நிகழ்ச்சிக்கு அழைத்த அத்தனைப் பேரும் முதலில் கேட்ட கேள்வி “சிவகுமார் வருகிறாரா?” என்பதுதான். பூசிமெழுகினாற்போல் பதில் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தால் அவர்களின் அடுத்த கேள்வி-“சூர்யா வர்றாரா இல்லை கார்த்தி வர்றாரா?” என்பது.

மிக நெருங்கிய நட்பு வட்டத்தையும் உறவினர்களையும் மட்டுமே அழைப்பது மிக எளிமையாக நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவானது. மூலிகைமணி டாக்டர் வெங்கடேசன் தமது கனவுத்திட்டமான ஷாங்ரீலாவை முழுமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்.
கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு பெரிய மூலிகைப்பண்ணை, மூலிகைத்தொழிற்சாலை, காட்டேஜ்களுடன் கூடிய மருத்துவமனை என்று மிகப்பெரிய திட்டம். அதனை முடிப்பதில் தீவிரமாக இருந்தவரை என்னுடைய அழைப்பு தொடவும் “குடும்பத்துடன் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

கவிஞர் அறிவுமதியை அழைக்க,” எந்த நிகழ்ச்சி இருந்தாலும் விட்டுட்டு பெங்களூருக்கு ஓடிவந்துருவேன்” என்றார்.

எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி. “காலையிலேயே வந்துர்றோம்” என்றார். தென்காசியைச் சேர்ந்த பிரபல மூட்டு எலும்பு சிகிச்சை சர்ஜன் டாக்டர் சந்திரன் ‘தவறாமல் கலந்துக்கறேன்’என்றார். தொழிலதிபர் ஈஸ்வர் “இப்பவே அட்டெண்டன்ஸ் போட்டுக்கங்க” என்றார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் புதிய விளக்கம் எழுதுவதில் ஈடுபட்டிருக்கும் திரு கே.பத்மநாபன் ‘’ஞாயிற்றுக்கிழமைத்தானே எல்லோருமே வந்துர்றோம்” என்றார்.

மேலும் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்றவர் சேலம் ஜெயராமன், அவரும் அவருடைய நண்பர் பேராசிரியர் டாக்டர் ரமணிகோபாலும் சேலத்திலிருந்து காரிலேயே வந்துவிடுகிறோம் என்றனர்.

இரண்டு நாட்கள் இருக்கும்போது சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. அவரது உறவு அம்மாள் ஒருவர் மிகவும் உடல்நலிவுற்றிருப்பதால் கோவைக்குப் போகவேண்டியிருக்கிறது. “நானும் வீட்டம்மாவும் போகிறோம். அங்கிருந்து நாங்கள் எப்படியாவது பெங்களூர் வந்து கலந்துகொள்கிறோம். சூர்யாவையோ கார்த்தியையோ கோவை பெங்களூர் என்றெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாமற்போகலாம்” என்றார்.

அடுத்த தகவல் “அந்த அம்மாள் இப்போது கொஞ்சம் தேவலை. பிளைட் டிக்கெட் கான்சல் செய்துட்டோம். கோவை போறதாயிருந்தாலும் பெங்களூர் வருவதாயிருந்தாலும் காரிலேயே வந்து செல்வதாக ஏற்பாடு. சூர்யா வரலை.வெளியூர் சூட்டிங். கார்த்தியைக் கூட்டிவர்றேன்” என்றார்.

அடுத்த தகவல், “கார்த்தி வருவதும் சந்தேகம். அவனுக்கு முதுகு பிடிச்சிருக்கு. அத்தனை தூரம் கார்ல டிராவல் பண்ணமுடியுமான்னு தெரியலை. டாக்டர்ட்ட போயிருக்கான். டாக்டர், பயணம் பண்ணலாம்னு சொன்னால்தான் வருவான்” என்றார்.
இன்னொரு அரைமணி நேரம் கழித்து அவரிடமிருந்து வந்த குறுந்தகவல்-‘karthi is coming’ என்றது.

ஆக, நாங்கள் நினைத்தது போலவே சிவகுமாரும் திருமதி சிவகுமாரும் கார்த்தியுடன் வந்திருந்து அத்தனைப்பேரின் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் காரணமாயினர்.
வீட்டிற்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருந்தோம். அந்த உணர்வு எல்லாருக்கும் கிடைத்தது.

இந்தத் தகவல்களை வலைப்பூவில் எழுதுவதாக எண்ணம் எதுவும் இருக்கவில்லை. சொந்த விஷயங்களை கடைவிரிக்கக் கூடாது என்ற நினைப்பு எனக்கு உண்டு. ஆனால் இங்கே இதனை எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம்தான். வங்கிக் கடன்கள்பற்றி அப்பாவியாக அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களையொட்டி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் நிகழ்ச்சி நடந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே இதுபற்றி இங்கே எழுத நேர்ந்திருக்கிறது.

நேர்மையும் நாணயமுமாக நடந்துகொள்ள நினைக்கும் அத்தனைப்பேரையும் சட்டங்களைக்காட்டி நிராகரிக்கும் சமூக அமைப்புதான் பரவலாக இருக்கிறது. ‘இதெல்லாம் வேற ரூட்ல போய்ப் பண்ணிக்கணும்சார்’ என்ற பிழைக்கத்தெரிந்த மனிதர்களின் பஞ்ச் டயலாக்தான் இங்கே வெற்றிக்கான ஃபார்முலா.

கூடவே, வேறொரு கருத்தும் தோன்றியது. வலைப்பூவில் சமூகம் சார்ந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய கோபங்களை, எரிச்சல்களைப் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால் மகிழ்ச்சியையும் நிறைவான தருணங்களையும் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இது எனக்கானது மட்டுமே என்று கமுக்கமாக இருந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் மகிழ்ச்சி அலைகளையும் பரவச்செய்யலாமே என்று தோன்றிற்று.

எனவே பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, April 11, 2011

கலைஞரா...? ஜெயலலிதாவா...?


தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கலைஞரா ஜெயலலிதாவா என்ற கேள்வி நான்குபுறமும் தகித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்களும் வலைத்தளங்களும் தெளிவான இறுதியான முடிவை எடுத்துவிட்டு அதனைப் பெருங்குரலில் பரப்பிக்கொண்டும் இருக்கின்றன. ‘கலைஞர் உடனடியாகத் தோற்கடிக்கப்பட்டு ஜெயலலிதா உடனடியாக அரியணை ஏறியாகவேண்டும்’ என்ற முடிவை தொண்ணூறு சதம் ஊடகங்களும், தொண்ணூற்றொன்பது சதம் வலைப்பூக்களும் பேரொலியாக உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கின்றன.

கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களாக ஈழ விவகாரத்தில் அவர் நடந்துகொண்டவிதம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், குடும்ப ஆதிக்கம் என்ற மூன்று விஷயங்கள் பிரதானமாக வைக்கப்படுகின்றன.

இலவசங்களை அள்ளிக்கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும், ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டு தேர்தல்களில் வெல்கிறார் என்பதும் இவர்மீது வைக்கப்படும் மேலும் சில குற்றச்சாட்டுகள்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது இவை அத்தனையுமே தவறுகள்தாம் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதே சமயம் ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றத்துடிக்கும் அறிவுஜீவிகள் அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்கு எந்த வலுவான காரணத்தையும் கூறுவதாக இல்லை. கருணாநிதி தோற்கடிக்கப்படவேண்டும், ஜெயலலிதா அரியணை ஏற வேண்டும் என்பதுமட்டும்தான் அவர்களுடைய வாதமும் எதிர்பார்ப்பும். இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கலைஞர் மீது இவர்கள் இப்போது சொல்லும் ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்கள் இல்லாமல் இருந்திருந்தால்கூட இவர்கள் ‘கருணாநிதி தோற்கவேண்டும்’ என்ற வாதத்தை முழக்கமாக்கிக்கொண்டு வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்களில் ஒரேயொரு பிரிவினர்தான் புதிதாகச் சேர்ந்திருப்பவர்கள்.
எதிர்ப்பாளர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம்.

1) இன மத துவேஷம் காரணமாக கருணாநிதியை எப்போதுமே எதிர்ப்பவர்கள்....சோ ராமசாமி, குருமூர்த்தி, இந்து, தினமலர், ராமகோபாலன் போன்றவர்கள் இதில் அடக்கம்.

2) எம்ஜிஆரின் ஏகாதிபத்திய ரசிகத்தன்மைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட ரசிகர்கள், அரசியல் மற்றும் கட்சி சார்ந்தவர்களும் இதில் அடக்கம்.

3) தமிழ் உணர்வில் ஈர்க்கப்பட்டு அண்ணா, கலைஞர் என்று நெஞ்சில் வைத்திருந்து..பின்னர் பிரபாகரன் விசுவரூபம் எடுத்ததும் தங்களின் தலைவனாக பிரபாகரனை வரித்துக்கொண்டவர்கள்... இவர்கள்தாம் புதிய பிரிவினர்.

4) தினசரிகளையும் செய்திச்சேனல்களையும் பார்த்து தங்களுக்கான பொதுவாழ்வு மற்றும் அரசியல் கூர்மைகளை தினசரி பெறுகிறவர்கள்.. என்று இந்த நான்கு விதத்தினர்தாம் கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இவர்களில் முதல் இரண்டு வகையினர் எந்தக் காரணத்திற்காகவும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்கிறவர்கள் அல்ல. தாங்கள் சார்ந்த அரசியல் பற்று காரணமாகவும், எம்ஜிஆர் மீதுள்ள அதீதமான மோகம் காரணமாகவும் கடைசி வரைக்கும் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்ஜிஆரின் விசுவாசிகளாகவும்தாம் இரண்டாவது வகையினர் எப்போதுமே இருப்பார்கள்.

இவர்களில் முதல்வகையினரின் எதிர்ப்பும் ஆற்றலும்தாம் விபரீதமானவை. தாங்கள் நினைத்ததை மக்களிடம் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும், மக்களையோ ஒட்டுமொத்த சமுதாயத்தையோ தங்களின் இசைவுக்கு ஏற்ப எப்படியெல்லாம் திசைதிருப்ப வேண்டும் என்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. அரசியலமைப்பு ஆட்சித்துறை அதிகார மையங்கள் சட்டத்துறை ஊடகங்கள் என்று மக்களை ஆட்டுவிக்கும் அத்தனைத் துறைகளும் இவர்கள் கைவசம் இருப்பதால் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளும் வல்லமை இவர்களுக்கு அபரிமிதமாக உண்டு.

கருணாநிதிக்கு எதிரான மிகப்பெரிய கரும்புள்ளியாய் ஆ.ராசாவை மக்களுக்கு இன்றைக்கு காட்டியிருப்பதில் இவர்களின் பங்கு மிகப்பெரியது. ராசா குற்றமற்றவர் என்றோ, ஸ்பெக்ட்ரமில் ஊழல் நடக்கவில்லையென்றோ சொல்லவரவில்லை. அல்லது இன்றைய அமைச்சர்களில்- அமைச்சர்கள் என்றால் நமது மாநிலத்தில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல; மத்தியிலே ஆளுகிறவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் ஆளும் அமைச்சர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் ஒரேயொரு வார்த்தைதான் சொல்லமுடியும். எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையின் தலைப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடர்கள் அல்ல;’ ராசா அகப்பட்டுக் கொண்டார் அவ்வளவுதான்!

இந்தியாவில் உள்ள பரிசுத்தவான்களின் அத்தனைத் துப்பாக்கிகளும் இன்றைக்கு ராசாவை நோக்கியும் கருணாநிதியை நோக்கியும் திருப்பப்பட்டுவிட்டன. இதில் அரைவேக்காட்டுத்தன புத்திகொண்ட காங்கிரஸ்காரனின் கைங்கர்யம் வேறு.

சோ போன்றவர்கள் கருணாநிதியை எதிர்ப்பது ஒன்றும் புதிதல்ல. சோவுக்கு அதிமேதாவி என்றதொரு பிம்பம் இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் தமிழகத்து அரசியலைப்பற்றிக் கருத்துச்சொல்லும் மேதையாக இன்றைக்கும் சோவைத்தான் கருதுகிறார்கள். சோவை விட ஆழமாகவும் அழகாகவும் கருத்துரைக்க எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவிட்ட நட்பு அல்லது வேறுசில தொடர்புகள் காரணமாக இன்றைக்கும் சோவைத்தான் ஆங்கில ஊடகங்கள் நாடுகின்றன. கருணாநிதி எதிர்ப்பை விட்டுவிடுவோம். இவற்றில் ஒரேயொரு முறைகூட தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனம் என்றவற்றைச் சார்ந்தோ அல்லது தமிழனுக்கு ஆதரவான ஒற்றை வார்த்தையையோகூட சோ இதுவரை தவறியும்கூட உச்சரித்ததில்லை.

கருணாநிதி பற்றிக் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரது அறிவுக்கூர்மை குறித்தோ, அரசியலில் அவருக்கிருக்கும் ராஜதந்திரம் குறித்தோ, அவரது இலக்கிய மேதைமை குறித்தோ, படைப்பாற்றலில் அவருக்கிருக்கும் திறமை குறித்தோ எவரும் வியக்கவே செய்வர். இந்த விஷயங்களில் யாரையும் அவருக்கிணையாகச் சொல்வதற்கில்லை. ஆனால் சோ போன்றவர்கள் இப்படிப்பட்ட கருணாநிதியைக் கொச்சைப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளும் விஷயம் மிகவும் அற்பமான ஒன்று.

எப்போது பார்த்தாலும் அல்லது அடிக்கடி இவரே ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வார். ‘கருணாநிதியைவிட ஜெயலலிதா எந்த வகையில் மேலானவர்? அல்லது சிறந்தவர்?’ என்பது
கேள்வி.

இந்தக் கேள்விக்கு சோ சொல்லும் பதில்-‘கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது. ஜெயலலிதாவுக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும். எனவே இந்த வகையில் கருணாநிதியைவிட ஜெயலலிதா எவ்வளவோ மேலானவர்.’

இதைவிட அபத்தமான ஒரு பதிலை அற்பபுத்தி படைத்தவன்கூடச் சொல்லமாட்டான். நீண்ட காலத்துக்குச் சோ இந்த பதிலையே சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் சொல்லுவதில்லை. ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அதிகமில்லாமல் இருந்தபோது சொன்ன பதில் இது. இப்போதெல்லாம் கருணாநிதி வீட்டுச் சின்ன குழந்தைகள் எல்லாம்கூட ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டனர். நம்முடைய வீட்டிலும் பிள்ளைகள் எல்லாம் சோவைவிட நல்ல ஆங்கிலம் பேசுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொதுவாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மிக அழகிய ஆங்கிலம், ஜெயலலிதாவை விடவும் அழகாகப் பேசுகிறார். வடக்கத்திய ஊடகங்கள் அடிக்கடி ஜெயந்தி நடராஜன் ஆங்கிலத்தில் பேசும் பேச்சுக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டதும் இனிமேல் இந்தப் பருப்பு வேகாது என்ற எண்ணத்தில் இந்த பதிலைத் தவிர்த்துவிட்டார் சோ.

இது என்னவிதமான ஆங்கில மோகம் என்னவிதமான அடிமைத்தனம் என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்தார். பத்திரிகைகள் எல்லாம் சார்லஸ் வருகையைப்பற்றி அதிகமான செய்திகளை வெளியிட்டன. உடனே வந்ததே கோபம் சோவுக்கு. பேனாவைத் திறந்து கொட்டித் தீர்த்துவிட்டார். ‘இன்னமும் இவர்களுக்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சியின் மோகமும் அடிமைத்தனமும் போகவேயில்லை. அவர்கள் விட்டுச்சென்ற மிச்சங்களைக் கட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். எப்போதுதான் இவர்களுக்கெல்லாம் புத்திவருமோ?’ என்றெல்லாம் போட்டுக்காய்ச்சி எடுத்திருந்தார். பரவாயில்லையே மனிதர் பல விஷயங்களில் ஒருபக்கச் சார்புடன் இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் சரியான வாதங்களையே முன்வைக்கிறாரே என்று தோன்றிற்று.

அடுத்து வந்தது கிரிக்கெட் மேட்ச் சீசன்...அடாடா அதே இங்கிலாந்து நம்மிடம் விட்டுச்சென்ற அந்த ஆட்டத்தை சிலாகித்தும் அதற்குத்தான் பரம ரசிகராக இருந்து அந்த ஆட்டத்துக்கும் ஆட்டக்காரர்களுக்கும் துதிபாடுவதையும் ஆரம்பித்தார் பாருங்கள்..அப்போதுதான் இந்த மனிதரின் மனதிலும் படிந்துவிட்டிருந்த ஆங்கிலேய மோகமும் அடிமைத்தனத்தின் எச்சங்களும் பல்லையிளித்தன. இவர் கருத்துப்படி கருணாநிதியைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்தான் நாட்டை ஆள தகுதியானவர் என்றால் ஜெயலலிதாவைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்த சிறுமிகள் ஒவ்வொரு கான்வென்டிலும் நூறுபேராவது தேறுவார்கள்.
சோவைப்பற்றி இந்த அளவுக்கு இங்கே எடுத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு காரணம் பல தேர்தல்களின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் தம்மை வரித்துக்கொண்டு செயல்படுவதும், பல சமயங்களில் அவை செயல்வடிவமும் பெற்றுவிடுவதாலும்தான்.

இதோ, இந்தமுறைகூட கருணாநிதியின் அணியை எதிர்த்து எம்மாதிரி அணி அமையவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக சோ தான் இருந்திருக்கிறார். ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் கொண்டுபோய்ச் சேர்த்ததிலும் இரண்டு கம்யூனிஸ்டுகளைக் கொண்டுவந்து சேர்த்ததிலும் சோவின் பங்கு கணிசமானது.

விஜயகாந்த்தின் இன்றைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது சோ அவரை அறியாமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் செய்திருக்கிறாரோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
எம்ஜிஆரைப்பற்றி விரிவாகப்பேசாமல் சிறு குறிப்புடன் நிறுத்திக்கொள்வோம். எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியிலே இருக்கும் பிம்பம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அவர்
ஏழைப்பங்காளன் என்பதும் கொடைவள்ளல் என்பதும் வாரிவாரி வழங்குபவர் என்பதும்தான். இதுபற்றிய விரிவான விவாதங்களைப் பிறிதொரு சமயத்தில் வைத்துக்கொள்வோம். அதனால்தான் அவர் ஆட்சிக்கு வந்ததும் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த இலவச மதிய உணவு திட்டத்தை மறுபடியும் கொண்டுவந்தார். அதுவும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற செய்தி முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டு எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாக மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த இலவச உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு வந்த தேர்தல்களில் அவர் கட்சிக்கான ஓட்டு கணிசமாக உயர்ந்தது. கூடவே, அவர் ஆட்சிபுரிந்த சமயங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மக்களுக்குப் பணமும் இலவசங்களும் தாராளமாக வழங்கப்பட்டன. இவையெல்லாவற்றையும் அந்த நாட்களின் தினசரிகளைப் படித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். லட்டுக்குள் மூக்குத்தி, எவர்சில்வர் குடங்கள் என்றெல்லாம் அப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்ட தகவல்கள் அத்தனையும் அன்றைய பத்திரிகைகளில் பிரசித்தம். அல்லது ஜூனியர் விகடன் பழைய இதழ்களின் கோப்புக்களைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஆக, இதெல்லாம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது மாத்திரமின்றி மக்களின் மன இயல்பும் அவர்களின் எதிர்பார்ப்பும் இதுதான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தன.

வெறும் கொள்கை, கோட்பாடு, தமிழர்க்கான உரிமைகள், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் என்று மட்டுமே பேசியும் எழுதியும் இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதைக் கலைஞர் புரிந்துகொண்ட தருணம் இதுவே. பேச்சைக்கேட்டுவிட்டு, உடன்பிறப்புக்கான கடிதத்தைப் படித்துவிட்டு ஓட்டுப்போட்ட காலம் மலை ஏறிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார் அவர். இலவசங்களை எடுத்துவிட்டார். ஸ்டாலின் மூலம் மகளிர் அணியினருக்குப் போய்ச்சேரவேண்டிய பலன்களை முடுக்கிவிட்டார்.

மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ, வள்ளலாரின் வாரிசுகளோ இல்லை. கொஞ்சம் முரட்டுத்தன அரசியலுக்குப் பெயர்போனவர்கள். இவரகளின் கையிலிருக்கும் மதுரையை மீட்க வேண்டும் என்ன செய்யலாம்? அனுப்பு அழகிரியை அங்கே...என்று முடிவெடுத்து அழகிரியை அங்கே அனுப்பிவைக்கிறார்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரை அந்தப் பிடிகளிலிருந்து முழுவதுமாக மீட்கப்படுகிறது. முற்றாக அழகிரியின் கைகளுக்குள் வருகிறது.

அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல;

சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல. சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.

ஆக, இலவசங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் மற்ற அரசியல்வாதிகளைப்போன்றே இத்தனைக்காலமும் அரசியல் நடத்திக்கொண்டிருந்த கலைஞரை இலவசங்களை நோக்கித் தள்ளியதும்,
முரட்டுத்தனம் காட்டித்தான் மதுரையில் அரசியல் நடத்த முடியும் வேறுவழியில்லை என்பதும் காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இவற்றிற்கான பங்களிப்பு கணிசமாக எம்ஜிஆரின் அரசியலுக்கும் அவர் காலத்தில் கலைஞர் பெற்ற தொடர்ச்சியான தோல்விகளுக்கும் இருக்கிறது.

அடுத்து, இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் குறித்து எந்தத் தமிழனும் அவரைப் பாராட்டமாட்டான். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவரும் மத்திய அரசும் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதற்காக இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் போக்கையும் நியாயப்படுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் நியாயமற்றது என்று சொல்லும் அதே நேரத்தில் வேறு சில விஷயங்களையும் கவனிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இலங்கை விவகாரம் ஒன்றிற்காக மட்டுமே அவர் இரண்டுமுறை ஆட்சியை விட்டு இறங்கியிருக்கிறார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அப்படி ஆட்சியை அவர் பறிகொடுத்த சமயத்தில் அவர் பின்னால் அத்தனைத் தமிழ் சமூகமும் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்பதும் அவருக்குப்பின்னால் ஒரே குரலில் அணிசேரவில்லை என்பதையும் சௌகரியமாக மறந்துவிடக்கூடாது.

இலங்கை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தனித்தனிக் குழுக்களாகப் போராளிக்குழுக்கள் தமிழகம் வந்து ஆதரவு திரட்டியபோது யார்யார் எந்தெந்தத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்களோ அவரவர் அந்தந்தத் தலைவர்களுடனேயே நட்பைத் தொடர்ந்தார்கள். அப்படித்தான் முகுந்தனும், பாலகுமாரும், சிறீசபாரத்தினமும், பத்மநாபாவும், பிரபாகரனும் வெவ்வேறு தலைவர்களுடன்தான் நட்பு பூண்டார்கள். பின்னாளில் இவர்களில் பிரபாகரன் மட்டுமே வானளாவிய வலிமையுடன் உயர்ந்து நின்றார். ஆனால் பிரபாகரன் ஆரம்பத்திலேயே எம்ஜிஆருடன் நட்புகொண்டுவிட்ட காரணத்தால் கலைஞரைப் பிரபாகரன் புறக்கணித்ததும், பிரபாகரனைக் கலைஞர் புறக்கணித்ததும் மாறி மாறி நடந்தது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் நிலைகள் மாறியபோது பிரபாகரனுடனான கலைஞரின் தொடர்புகளோ அல்லது கலைஞருடனான பிரபாகரனின் தொடர்புகளோ நிச்சயம் மறுபரிசீலனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்ததாகத் தகவல்கள் இல்லை. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு. பிரபாகரனுக்கு வேண்டியவர்களாக இங்கு இருந்த சில தலைவர்களும் கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அல்லது பிரபாகரன் தரப்பில் வெளிநாடுகளில் இருந்தாவது கலைஞரிடம் ஒரு நல்ல நட்பைப் பேணியிருக்கவேண்டும். அதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அதனைத்தொடர்ந்து ராஜிவ் காந்தியின் மரணம். குற்றவாளிகள் யாரோ பழி என்னவோ கலைஞர் தலையில் விழுந்தது. தேர்தல் முடிவு என்னவென்றால் 234 தொகுதிகளில் திமுகவுக்கு ஒரேயொரு இடம்.

என்ன செய்யலாம் கருணாநிதி?

ராஜிவ் மரணத்தின் தாக்கமெல்லாம் குறைந்து இலங்கையில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருக்கும் நிலைமைகள் இருந்தபோது மறுபடி கலைஞர் இங்கே ஆட்சிபீடம் ஏறினார். அதன்பிறகாவது பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் நல்லதொரு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். அதற்குபதில் அவருக்கும் இவருக்குமான ego clash ஐ உருவாக்கிவிட்டு இரண்டுபேருக்கும் எவ்விதமான புரிதலும் ஏற்படாமல் இங்குள்ள தலைவர்கள் சிலர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து வந்துவிட்டது முள்ளிவாய்க்கால். விளைவுகள் இத்தனை மோசமாக இருக்கும் என்பதை கருணாநிதியே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தம்முடைய கடிதங்களுக்கோ, அல்லது ‘உண்ணாவிரதத்துக்கோ’ மத்திய அரசு செவி சாய்க்கும் என்றுதான் நினைத்தார் அவர். இலங்கை விவகாரத்தில் இவருடைய வார்த்தைகளுக்கு சல்லிக்காசு மரியாதையும் இல்லை என்ற அதிர்ச்சியான பதிலைத்தான் ‘சென்ட்ரல்’ இவருக்குத் தெரிவித்தது. இவர் கையில் இருந்தது ஒரேயொரு அஸ்திரம்தான். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் கோரக்கொடுமைகள் நின்றிருக்குமோ இல்லையோ, இவரது பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அதன் தொடர்ச்சியாக இங்கிருக்கும் எதிர்க்கட்சியுடன் சேர்ந்துகொண்டு தன்னையும் தன்குடும்பத்தையும் படுத்தப்போகும் பாட்டை அவர் யோசித்துப் பார்த்திருக்கவேண்டும். மத்திய அரசுடன் ஒத்துப்போய்விடுவது என்ற தவறான முடிவுக்குத்தான் அவரால் வரமுடிந்தது.

சகோதர யுத்தம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்ற பலவீனமான காரணத்தைச் சொல்லத்தொடங்கினார். முரசொலியை நாள்தவறாமல் அறுபது வருடங்களுக்கும் மேலாகப்படித்துக்கொண்டிருக்கும் கடைநிலை உடன்பிறப்புக்கூட இதை ஒப்புக்கொள்ளமாட்டான் என்று அவருக்கே தெரியும்.

அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ஒருமுறை சொன்னார். “நான் சூழ்நிலைகளின் கைதி” என்று. இன்று அது இவருக்குத்தான் நூறு சதம் பொருந்துகிறது.

இலவசங்கள், இலங்கைப் பிரச்சினைக்கடுத்து குடும்ப ஆதிக்கம் என்ற ஒன்றும் கருணாநிதிக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கில் அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாம் மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கு அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் எல்லாரும் டீக்கடையோ அல்லது பெட்டிக்கடையோதான் வைத்திருக்கிறார்கள். அசாமிலும் குஜராத்திலும் அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் மூட்டை தூக்கித்தான் பிழைக்கிறார்கள். இங்கே கர்நாடகத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் எல்லோரும் கட்டடம் கட்டும் இடத்தில் கொல்லத்து வேலைதான் செய்கிறார்கள். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தம்பிதுரை, செங்கோட்டையன், பன்னீர்செல்வம், வளர்மதி, மதுசூதனன் இன்னபிறரும் அவர்களது உறவினர்களும் தினக்கூலிக்குத்தான் வேலைப்பார்க்கிறார்கள். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் ஆட்சியை உபயோகித்து கோடிகளில் புரள்கிறார்கள்.....

உண்மை என்னவென்று பார்த்தோமானால் சாதாரண ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் மிகப்பெரிய ‘கல்வித்தந்தைகளாக’ உருமாற்றம் கொண்டது எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் ஏகப்பட்ட கல்வித்தந்தைகள் உருவாகி நாடெங்கும் கல்விக்கோவில்களைப் பெருக்கினார்கள். மணல் ராஜாக்கள் உருவானார்கள். அந்த பிசினஸ் இந்த பிசினஸ் என்று கல்லா கட்டினார்கள். இவையெல்லாம் பொதுமக்களின் விவாதத்திற்கு வராத விஷயங்கள். ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. சினிமா என்பதும் பத்திரிகை என்பதும் சேனல்கள் என்பதும் பொதுமக்களின் கண்முன்னாடியே இருக்கின்ற விஷயங்கள். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனைப்பேரும் இதே தொழிலில் இறங்கியதும், ஒவ்வொரு படத்துக்கும் கதாநாயகனுடனும் கதாநாயகியுடனும் சேனலில் தோன்றி பேட்டி கொடுத்ததுவும் இன்று இவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்கிறது அவ்வளவுதான்.

மற்றபடி உறவினர்களின் ஆதிக்கம் என்பது என்னதான் இருந்தாலும் வளர்ப்பு மகன் திருமணத்தை மைசூர் தசரா ஊர்வலம் போல் நடத்திக்காட்டினாரே ஜெயலலிதா அப்படியெல்லாம் தறிகெட்டுப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாகவே இருக்கிறோம். (அதிலும் அந்தத் திருமணத்தின்போது உலகப்புகழ்பெற்ற அந்த மகாநடிகன் சிவாஜிகணேசன் எழுந்து நின்று ஜெயலலிதாவைப் பார்த்து முதுகு வளைந்து ஒரு கூழைக்கும்பிடு போடும் போட்டோவைப் பார்த்து-அந்த மனிதனுக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்திய ஜெயலலிதாவை நினைத்து நெஞ்சுபிளக்காத சிவாஜி ரசிகர்கள் இருக்கமுடியாது.)

இப்போது தேர்தல்!

கலைஞரின் தவறுகள் தெரிகின்றன. சரி கலைஞரைத் தோற்கடித்துவிடுவோம். ஆனால் அவருக்குப்பதில் யார்? என்பதைச் சொல்லவேண்டிய கடமையும் கட்டாயமும் இருக்கிறது.
கலைஞரைத் தோற்கடித்த இடத்திற்கு எளிமையும் பண்புமாய் இந்த நாட்களிலும் வலம்வரும் தலைவர் நல்லகண்ணு வருவாரா?

எம்எல்ஏக்களிலேயே இவர்போல் யாரும் இவ்வளவு எளிமையாய் இருந்ததில்லை. சட்டமன்ற விடுதியைக் காலி செய்யும்போது ஒரு காட்டன் பையில் வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் நன்மாறன் என்று இன்னொரு கம்யூ. உறுப்பினரைப்பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அந்த நன்மாறன் வருவாரா?

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை உலகிலுள்ள தொண்ணூறு சதம் தமிழர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரே தமிழகத் தலைவர் ஐயா நெடுமாறன். அந்த நெடுமாறன் வருவாரா?
இல்லை. ஜெயலலிதாதானே வருவார்?

கலைஞருடைய தகுதிகள், பெருமைகள், திறமை, பழுத்த அனுபவம், ஞானம், ஆளுமை, இலக்கியத் தேர்ச்சி தேசத்தலைவர்களிடையே அவருக்கிருக்கும் நன்மதிப்பு, அவருக்கே உரித்தான ராஜதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்தால் மக்களோடு மக்களாக அவர்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப அவர்களின் ஏற்றத்தாழ்வில் பங்கு பெறும் தலைவராக அவர் இருப்பாரா மாட்டாரா என்பதை முடிவு செய்பவர்களாகவே மக்கள் இருக்கவேண்டும். பதினான்கு வயதுமுதல் மக்களோடு மக்களாகவே அவர் இருக்கிறார். ஸ்டாலினும் அழகிரியும்கூட மக்களுக்கு எந்த நேரமும் கிடைக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதனைப் படித்துக்கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும், அல்லது இதனை எழுதும் நான் வேண்டுமானாலும் எப்போது நினைத்தாலும் கலைஞரையோ அல்லது ஸ்டாலினையோ அழகிரியையோ, பேராசிரியர் அன்பழகனையோ சென்று சந்தித்துவிட முடியும்.

ஜெயலலிதாவை அப்படிச்சென்று சந்திப்பது சாத்தியமா?

குறைந்தபட்ச மனிதப்பண்புகளோ, தனிமனித நாகரிகமோ அவரிடம் காணக்கிடைக்கிறதா?
மற்ற மக்கள் தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்துப் பேசும் மனப்பான்மை அவரிடம் சாத்தியமா?

சாத்தியமில்லையெனில் அப்படிப்பட்ட ‘மக்கள்தலைவர்’ மக்களுக்கு எதற்கு? அவர்பாட்டுக்கு ராஜவாழ்க்கை வாழ்வதற்கும், அவரது கோபதாபங்களுக்கு ஏற்ப எல்லாரையும் தண்டிப்பதற்கும், பந்தாடுவதற்கும் மட்டுமே முதல்மந்திரி பதவி என்பது ஜனநாயகத்திற்கு இழுக்கு அல்லவா?

எல்லாம் போகட்டும்.. தோல்விக்குப்பின்னர் தன்னுடைய போக்குகளை அவர் கொஞ்சமேனும் மாற்றிக்கொண்டிருக்கிறாரா?

வைகோ போன்ற ஒரு தலைவனை அவர் நடத்தியவிதம் அரசியல் பண்புகளுக்கு உகந்ததுதானா? ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவியாகவாவது கடந்த ஐந்தாண்டுகளில் அவர் நடந்துகொண்டிருக்கிறாரா?

நாம் எப்படியாவது ராஜயோக சுபவாழ்க்கை நடத்திக்கொண்டு ஜாலியாக இருப்போம். கொடநாட்டில் குளுகுளு பிரதேசத்தில் மொத்தநாட்களைக் கழிப்போம். சட்டமன்றத்துக்குப் போகவேண்டியதில்லை. மக்கள் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தவேண்டியதில்லை. தேர்தல் சமயத்தில் சென்னைக்குப்போய் ஒரு பிரச்சாரவண்டியில் ஏறிக்கொண்டு ஒரு ரவுண்ட் அடித்து எழுதிவைத்த அட்டைகளை வாசித்துக்காட்டிவிட்டு வந்தோமானால் பதவிக்கு வந்துவிடலாம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ராஜவாழ்க்கை மற்றும் எதிர்த்தவர்களைப் பந்தாடுவதற்கு வாய்ப்பு உறுதி என்று அந்த அம்மையார் நினைத்தால் அது தப்பு என்று உணர்த்தும் கடமை தமிழ்மக்களுக்கு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை.