இது ஒரு புதிய விஷயம்.
கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப்
பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.
உலகில் அவ்வப்போது எல்லா
விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே
இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில்
வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத்
துவங்கிவிடும்.
அறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள
மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.
ஆரம்பத்தில் பல் துலக்க
பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்?
அப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும்
வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர்?
(இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்)
இன்னமும்கூட நகரத்தில் இருக்கும்
சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும்
கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி
அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.
சிறிது நாட்களுக்கு முன்பு
பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல
கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு
எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம்
சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி
யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.
ஆல்டர்னேட் தெரபி என்று
சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு
இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில
மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம்
கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு
ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும்
அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான
விடை கிடைத்துவிடும்.
‘சரி டாக்டர் நான் வீட்டில்
ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன்
இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண
குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில்
சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)
இப்படி ஆங்கில மருத்துவமுறையை
விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத்
தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.
இந்தக் காரணத்தினால்தான்
மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும்
மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு
விஷயமாகவும் இருந்துவருகிறது.
மாற்றுமருத்துவ முறைகளான
பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில
டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள்
போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை
என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.
ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது?
பல தனியார் மருத்துவ மனைகளில்
ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.
பல மருத்துவமனைகளில் பிராணிக்
ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.
சில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர்
மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
இவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான
அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும்
மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.
ஆரோக்கியத்திற்கான பயிற்சி
முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி
நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது.
தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத
யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே
ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது.
ஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள்,
நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய்
நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள
முடியாத நிலைமை.
அவ்வளவு கூட்டம்!
தினசரி நடைபயிலுகின்றவர்களும்
சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு
இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப்
பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.
நடைப்பயிற்சி என்பது எப்படி
இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட
பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது
பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை.
“Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி
ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன்
வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.
சரி; நாள்தோறும் நடைபயில
வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது
சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும்.
மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு
விடுமுறை விடவேண்டி இருக்கும்.
சமயங்களில் நாம் தினசரி
நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள்.
மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல்
இளிக்கும்.
மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து
நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன.
இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும்.
நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு
சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.
அதுதான் எட்டு நடை!
எட்டு நடை நடப்பதற்கு அதிக
பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில்
8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து
மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.
அதாவது எட்டிற்கு- மேல்
ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு
அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு
அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி
ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து
இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின்
ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று
இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை
மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.
மொத்த நீளம் பதினாறு அடி
என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல்
சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி
திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த
வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம்
இடமில்லை.
இந்த எட்டு நடையை உங்கள்
வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது
நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால்
வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென
பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு
அதன் மீதேயே நடக்கலாம்
மொட்டை மாடியில் நிரந்தரமாக
இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.
அடையாளத்திற்காக இந்த முனையில்
ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி
வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.
இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே
அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே
மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால்
எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.
அரைமணி நேரம் நடந்தால்
மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு
அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ
கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண
நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு
வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால்
என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது
என்று அர்த்தம்.
இன்னொன்றையும் நீங்கள்
கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன்
உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு
சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும்
மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து
காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும்
இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற
உணர்வுதான் இருக்கும்.
இந்த எட்டு நடையிலும் இப்படித்தான்.
எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம்.
இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.
எட்டுநடையால் ஏற்படும்
பலன்கள் என்னென்ன தெரியுமா?
ரத்த அழுத்தம் என்கின்ற
பி.பி குணமாகும்.
இரண்டு மாதங்களுக்குள்
சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
உடம்பில் தேவையற்று இருக்கும்
அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட
பிரச்சினைகள் விலகும்.
ரத்த ஓட்டம் சீர்ப்படும்.
ஜீரணம் சரியாகி மலச்சிக்கல்
மறையும்.
தூக்கமின்மை சரியாகும்.
அப்புறமென்ன? இன்னமும்
மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.
ரத்தம் சுத்தமடைந்து ரத்த
ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை
சித்தாந்தம்.
அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது
இந்த எட்டுநடை.
இந்த எட்டுநடை கொரியா தைவான்
ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN
BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.
நம்ம நாட்டிலும் இந்த நடை
இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப்
பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான்
ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி
தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
நேராக நடந்துவிட்டு வருவதற்கும்
இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே
அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.
‘
ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது
இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு
எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த
எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை
என்று கொள்ளலாம்.
இந்த எட்டுநடைப் பயிற்சி
இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில்
முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான
பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும்
ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முயற்சியால் அருகிலுள்ள
பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப்
பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள
ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது.
அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால்
பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து
குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர்
டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.
இந்த எட்டுநடைப் பயிற்சியினால்
கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப்
புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு
செய்திருக்கிறார்.
என்னிடம் ரெய்கி சிகிச்சைப்
பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான
பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி
நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன்
தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின்
95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில்
ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது.
பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.
தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர்.
இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில
மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத
அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை
குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.
கால்முழங்காலில் மூட்டுவலி
இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.
எல்லாருக்கும் குறிப்பாக
வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும்
விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக
அற்புதமானதொரு பயிற்சி இது.
இங்கு இணைக்கப்பட்டுள்ள
விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய
இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில்
அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
காசு பணம் என்ற ஒற்றைப்
பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா?
எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்!
52 comments :
super
கடுங்குளிர் இருப்பதால் வெளியில் நடக்க முடியாமல் இருக்கும் என் போன்றவர்களுக்கு 8 நடை மிகவும் பயன்படும். வீட்டை விட்டு வெளியில் சென்று நடை பயில சங்கடப்படுபவர்களுக்கும் இது மிகவும் சிறந்த மாற்று.
Interesting
இந்த எட்டு நடையை கேள்விப்பட்டிருக்கிறேன். துல்லிய அளவீடுகளுடனும் மேல்விவரங்களுடனும் தங்கள் பதிவு அறிவுறுத்தி விட்டது. மிக்க நன்றி.
நன்றி செந்தில்குமார்.
வாருங்கள் குறும்பன் இதுபோன்ற பல்வேறு காரணங்களில் இந்த நடைப்பயிற்சி சிறப்பானதாக இருக்கின்றது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிலாமகள்.
NAMASTHE/- Your presentation is really very convincing; I asked Matangi also to peruse your post to motivate her and both of us started the
practice in the terrace of our home ...Thank you
Mawley
வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.இருவரும் நடந்து பயன்பெறுதல் குறித்து மகிழ்ச்சி.
அன்பு சகோதரே உங்களுக்கு எதற்கு டார்ச் லைட் .. என் அன்பு பரிசாக வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் ! நேரம் இருந்தால் பார்வையிடுங்கள் இங்கே http://blogintamil.blogspot.com/2013/01/2516.html
//இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லி இருப்பார்கள்.//
உண்மை. எங்கள் ஊர் இயற்கை சங்கத்தில் இதை சொல்லிக் கொடுத்தார்கள்.(பொன், கோவிந்தராஜ்,ரெய்கி மாஸ்டர்) கற்றுக் கொண்ட புதிதில் மொட்டை மாடியில் செய்தேன் இப்போது உங்கள் பதிவை படித்தவுடன் தொடர்ந்து செய்ய முடிவு செய்து இருக்கிறேன்.
நன்றி.
வாருங்கள் ரியாஸ் வலைச்சரம் பார்த்துவிட்டேன். தங்களுக்கு என் நன்றி.
மீண்டும் எட்டுநடை போட ஆரம்பித்திருக்கும் கோமதி அரசு அவர்களுக்கு நன்றி.
Sir,
மிகவும் பயனுள்ள தகவலாகக் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நானும் என் மனைவியும் நாளை முதல் இதை பின்பற்ற நினைக்கிறோம்.
நன்றி, சார்.
அன்புடன்
VGK
சந்தோஷமாய் நடைபயிலுங்கள் சார் நன்றி.
Walk like a king -அருமை.
நல்ல சுலப பயிற்சி விளக்கப் பதிவு.
(பெரிய பதிவு. படிக்க சற்றே சிரமம்.)
வருகைக்கு மகிழ்ச்சி நிஜாம்.எல்லாவற்றையும் ரொம்பவும் சுருக்கிவிட்டால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் மனதில் படியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே.
நன்றி அய்யா,
என்னைபோன்ற நடக்கவேண்டும் என்று நினைத்து, ஆனால் தட்ப வெப்பத்திற்கு பயந்து நடக்காமல் இருப்பவர்களுக்கு, மிகவும் பயனுள்ளது
வாருங்கள் நாசர் அவர்களே உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் இது மிகவும் பயனளிக்கக் கூடியதுதான். என்னவொன்று விடாமல் தினசரி தொடர்ந்து நடை போட வேண்டும்.அப்போதுதான் பயன் சரியானபடி கிடைக்கும்.
தற்போது வெளிவந்திருக்கும் உலக மகா திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் திரைப்பட விமர்சனம். படித்து மகிழுங்கள்
http://www.rajanleaks.com/2013/01/blog-post.html
பார்ப்போம் இந்த படத்தையெல்லாம் நீங்கள் எப்படி பாராட்டி பதிவு போட போகிறீர்கள் என்று
திரு.அமுதன்.
தாமதமாக வருவதிற்கு மன்னிக்கவும்.
மிக அருமையான பயன் உள்ள பதிவு.இவ்வளவு விவரங்களை சிரமப்பட்டு நீங்கள் பதிவிட்டிருப்பதைக்காண நெகிழ்கிறேன்.
உங்களுக்கு கோடி நன்றி.நிச்சயமாக எட்டு போட தொடங்குகிறேன்.
என்ன அனானிமஸ் வேறு எந்தக் கோபத்தையோ இந்தத் திரைப்படத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கிறீர்கள். ஒரு நடிகரின் பயணத்தில் உயர்வுகள் மட்டுமல்ல சரிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதாம். ஏதோ ஒரு வகையில் நீங்கள் மகிழ்ந்தால் சந்தோஷம்தான்.
வாருங்கள் கவிஞர், தங்கள் வருகைக்கு நன்றி.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வாருங்கள் கண்பத் தங்களின் பரந்துபட்ட அனுபவங்களுக்கும் அறிவுசார் தேடலுக்கும் இந்த விவரம் இவ்வளவு நாட்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் இருப்பதுதான் ஆச்சரியம்.தங்களுக்குப் பயனுள்ள ஒன்றைத் தெரிவித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
very helpful thanks
உங்கள் கருத்துக்கு வாழ்த்துகள். ஆனாலும் சில சந்தேகங்கள்.
உடற்பயிற்சி குறித்து இன்று எல்லோருமே சொல்கின்றார்கள் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் ஒன்றை மறந்து விடுகின்றார்கள்.
தன் உடம்புக்கு, வயதுக்கு என்ன உணவு சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளாமல் பணம் இருப்பதால் குப்பைத் தொட்டி போல வாரி அள்ளிக் கொட்டிக் கொண்டு கடைசியாக குத்துதே குடையுதே என்று ஏன் அலைய வேண்டும்.
பசியில்லாமல் இருக்கும் போது ஒரு வேளை பட்டினியாக கிடந்து பார் என்று சொல்லிப்பாருங்க. கொலை வெறியோடு நம்மை தாக்க வருவார்கள்.
பசியெடுத்த பின் உண் என்ற வாக்கியத்தை செயலாக்கிக் கொண்டிருப்பதால் இதை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது. எந்த உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை. இனி அந்த எண்ணமும் இல்லை. எந்த நோயும் வந்ததும் இல்லை.
நாம் தான் நமக்கு முதல் மருத்துவர். நமது அன்றாட பழக்கவழங்கள் உண்மையான உடற்பயிற்சி.
nandre iyya. ithai muthalile kelvipaten, anal ithanudura artham ippothe pirinthathu. mikka makilchi.
இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த 'எட்டு'நடை பற்றி எழுதியிருக்கிறீர்கள். நான் இப்போதுதான் படிக்கிறேன் - ஒரு வருடம் வீணாக்கிவிட்டேன்! போகிறது இனி ஆரம்பிக்கிறேன். அடுத்த வருடம் இதே பக்கத்திற்கு வந்து என்ன எழுதப் போகிறேன் என்று பார்க்கலாம். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நிச்சயம் செய்து பார்க்கிறேன். நன்றி அமுதவன் ஸார்!
புஷ்பா தங்கதுரை பற்றிப் படித்தபின் உங்கள் மற்ற பதிவுகளையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஜோதிஜி திருப்பூர் said...
\\எந்த உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை. இனி அந்த எண்ணமும் இல்லை. எந்த நோயும் வந்ததும் இல்லை.\\
ஜோதிஜி, உங்களைப் பற்றி அறியும்போது நீங்கள் கார் வைத்திருப்பவராக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். காரிலேயே பயணிப்பவர் எனில் உங்களுக்கு உடற்பயிற்சி தேவைப்படுமே.
பசித்தபின் உணவு உட்கொள்வதன் மூலம் எந்தவித நோய்களும் அண்டாமல் வாழமுடியும் என்பது உண்மையே. அதற்கேற்ற சூழல் இருந்து இதனைத் தொடர்ச்சியாக செய்ய முடிகிறது என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவரே.
Ranjani Narayanan said...
\\இப்போதுதான் படிக்கிறேன் - ஒரு வருடம் வீணாக்கிவிட்டேன்! போகிறது இனி ஆரம்பிக்கிறேன். அடுத்த வருடம் இதே பக்கத்திற்கு வந்து என்ன எழுதப் போகிறேன் என்று பார்க்கலாம்.\\
வாருங்கள், நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதற்காக நானும் காத்திருக்கிறேன்.
thanks for your advice
ரஞ்சனி அம்மாவின் அறிமுகத்தில் இங்கு வருகிறேன்.. இந்த எட்டு நடை புதுமையாக இருக்கிறது.. முயற்சித்து பார்க்கிறேன்..
எட்ட நடை போட எட்டடி நடை. முதுமையில் நடை பழகு நல்ல செய்தி. நன்றி.
ஸ்ரீ நித்யா, கோவை ஆவி, திரு சேதுராமன் அனந்தகிருஷ்ணன் மூவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அமுதவன் ஸார்!
இந்த பதிவை இன்று நான் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டேன். தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.
நமக்குப் பிடித்த நல்ல விஷயங்களை நான்கு பேருக்குச் சொல்லுவது என்பது நல்ல மனதின் தன்மைதானே. போட்டுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி.
In the hill -city of Dalhousie, the Mall road is in the shape of 8 and one can cover the entire stretch of Mall road in half an hour. No wonder, the health-conscious British chose this place when they ruled us.
ஒரு புதிய விஷயத்தைச் சொன்னதற்கும் தங்களின் வருகைக்கும் நன்றி சஹஸ்ரநாமன் சங்கரன்.
இந்த அருமையான் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.
வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html
வலைச்சரம் பார்த்தேன். தங்கள் தேர்வில் இடம் பெற்றமைக்காக மகிழ்கிறேன். நன்றி.
Thanks, very useful information, I'll start this practice today onwards.
Well said.After practice ,in my experience this 8 walk is really wonderful.
8 நடை பிற்சிக்கான வீடியோ attach செய்தால் உபயோகமாக இருக்கும் sir. Please.
எட்டு போட்டு நடைபயிற்சி. சிறப்பான யோசனையாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி.
அருமையான , மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள்.
அருமையான , மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள்.
Sir,
மிகவும் பயனுள்ள தகவலாகக் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதுவரை ஏதோ நான்
எட்டு போட்டு தடந்து வந்தேன் தங்களின்
பகிர்வினை படித்த பிறகு எட்டு போடுவதின் பயனையும்.எட்டில் எப்படி நடக்க வேண்டும் என்பதையும்
தெரிந்து கொன்டேன்.என்னுடைய
நண்பர்களுக்கும் தங்களுடைய கருத்தினை பகிர்ந்துள்ளேன்.மீண்டும்
ஒரு முறை தங்களுக்கு நன்றி.
ஐயா, வீட்டில் இடப்பற்றாக்கறை உள்ளதால் கிழக்கு மேற்காகவும் நடைபயிற்சி செய்யலாமா ?
செய்யலாம். நடையின்போது எட்டு வருகிறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.
பயனுள்ள பதிவாக இருக்கிறது பதிவர் ஆதிவெங்கட் பேஸ்புக்கில் இந்த செய்தியை பார்த்தேன்... இதை மறுபதிவாக உங்கள் பெயருடன் எனது தளத்தில் பதிய அனுமதிகிடைக்குமா?
Avargal Unmaigal said...
\\பயனுள்ள பதிவாக இருக்கிறது பதிவர் ஆதிவெங்கட் பேஸ்புக்கில் இந்த செய்தியை பார்த்தேன்... இதை மறுபதிவாக உங்கள் பெயருடன் எனது தளத்தில் பதிய அனுமதிகிடைக்குமா?\\
தாராளமாகச் செய்யுங்கள்.
2013 நாம் உரையாடியதை இன்று பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். காலம் எந்த அளவுக்கு நம்மை இணைத்து உள்ளது?
Post a Comment