Showing posts with label அப்துல்கலாம். Show all posts
Showing posts with label அப்துல்கலாம். Show all posts

Thursday, July 30, 2015

கலாமை விமர்சிக்கலாமா?


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் ஊடகங்களில் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணர்கிறோம். ஊடகங்கள் இத்தனை தூரம் முக்கியத்துவம் பெறாத காலத்தில் மறைந்த மிகப் பெரிய தலைவர்களின் மரணங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை கலாமின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பெரிதாகப் பரவிவிட்ட ஊடகங்கள் மட்டும் காரணமில்லை என்பதும் அந்த ஊடகங்களின் இத்தனைப் பரபரப்பிற்கு ஈடாக அவர் வாழ்ந்துவந்த வாழ்க்கை அவற்றுக்கு ஒரு தகவாக இருந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

கலாமைப் பற்றி உயர்வாகச் சித்தரித்து அவரது மேன்மைகளைப் புகழ்பாடி வந்துகொண்டிருக்கும் நிலைத் தகவல்களும், பரப்புரைகளும், பதிவுகளும், கட்டுரைகளும், செய்திகளும், எண்ணவெளிப்பாடுகளும், சிந்தனைச் சிதறல்களும் ஒரு பக்கமிருக்க அவரை எதிர்த்து வரும் பதிவுகளுக்கும், நிலைத்தகவல்களுக்கும், எதிர்த் தரப்புக் கேள்விக்கணைகளுக்கும், குத்திக் கிளறும் வாதங்களுக்கும்கூடக் குறைவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

‘மறைந்த ஒருவரைப் பற்றி அந்த மரணத்தின் சுவடுகூட நீங்காத சமயத்தில், அட இன்னமும் அவரது உடல்கூட அடக்கம் செய்யப்படாத நேரத்தில் இம்மாதிரியான எதிர்க்கருத்துக்களை வைக்கலாமா?

நியாயம்தானா?

இவையெல்லாம் பண்பாடா? நாகரிகமா? ஒரு பொது கட்டுப்பாடு, கலாச்சாரம்கூடவா இவர்களிடம் இல்லை?’ என்பதற்கெல்லாம் இங்கே பதில்கள் கிடையாது.

பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் சுய ஒழுக்கம் போன்றவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து செயல்படுபவர்கள் குறைந்துகொண்டு வரும் ஒரு காலகட்டம் இது.

‘கையில் எழுதுகோலோ அல்லது அதற்கு இணையான இணையமோ கிடைக்கிறதா நான் எதுவேண்டுமானாலும் எழுதுவேன், எப்படி வேண்டுமானாலும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பேன், என்னை யார் கேட்கமுடியும்?’ என்ற மனவோட்டமும் சிந்தனைத் திமிரும் கொண்ட காலகட்டம் இது.

இங்கே இப்படித்தான் எழுதுவார்கள், இப்படித்தான் செயல்படுவார்கள்………… இப்படித்தான் நிலைத்தகவல்கள் போடுவார்கள்…………… இப்படித்தான் வினையாற்றுவார்கள்.

இவற்றுக்கெல்லாம் கலாமைப் போன்ற மாமனிதரைக் கூட ஆளாக்கிவிடலாமா என்ற சிந்தனைத்தான் எஞ்சுகிறது!

இவர்கள் கலாமைப் பற்றி என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்று பார்த்தோமானால் குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளின்போது வாய்மூடி மௌனியாக இருந்தார், ஈழத்தில் அத்தனைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது சின்ன வருத்தத்தையோ முனகலையோகூட வெளிப்படுத்தவில்லை, கூடங்குளம் அணுஉலையை மூடச்சொல்லி நடைபெற்ற போராட்டத்திற்கு எதிர்வினையே ஆற்றவில்லை என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய வாதங்களில் உண்மை இல்லாமலில்லை. நமக்கும்கூட இந்த விஷயங்களில் கலாமுடைய கனத்த மௌனத்தில் சம்மதம் இல்லைதான்.

ஆனால் நிச்சயம் இந்த விஷயங்களை விவாதத்திற்குள்ளாக்கும் தருணம் இதுவல்ல.

அவருடைய பூத உடல் அடக்கம் செய்யப்படுவதற்குள் அவருக்கெதிராக எழுப்பப்படும் கலகக்குரல்கள் அருவெறுப்பையே ஏற்படுத்துகின்றன.

சின்னச்சின்ன குறுங்கத்திகளை மறைத்து வைத்துக்கொண்டு யார் கிடைத்தாலும் அவர்களைக் குத்திக்கிழிப்பது மட்டுமே என்னுடைய பணி என்று செயல்படும் இணையச் செயல்பாட்டு வீரர்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள்.

பிறரைக் கீறுவதும் குத்திக்கிழிப்பதும் மட்டுமே இவர்களது வேலை. வேறு எந்த வேலையும் இவர்களுக்குக் கிடையாது என்பதுமட்டுமல்ல எதுவும் தெரியாது என்பதையும் சேர்ந்தே புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றவர்களை, அதுவும் பொதுவாழ்வில் தலைமை இடத்துக்கு ஒருவர் வந்துவிட்டாலேயே ‘நம்முடைய அட்டாக்கிற்கு இவர்களை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்று இவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்.

இல்லாத ஊர் நியாயங்களை இவர்கள் சேகரித்துக் கொள்கிறார்கள்.

கடுமையான கேள்விக்கணைகளை வீசுகிறார்கள்.

எத்தனை அசிங்கமாக எழுதமுடியுமோ அத்தனை அசிங்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். 

கொஞ்சம்கூட மட்டு மரியாதை இன்றி வயதுக்கான மரியாதைக்கூட இல்லாமல் அமில வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். தங்களை யார் என்ன செய்துவிடமுடியும் என்பதும், தங்களைப் பற்றி யார் என்ன எழுதிவிட முடியும் என்பதும் (இவர்களைப் பற்றி எழுத என்ன இருக்கப்போகிறது?) இவர்களுக்கான பாதுகாப்பு அரண்.

இன்னொன்றைச் சொல்லவேண்டுமானால் இவர்களில் யாரும் படைப்பாளிகளாய் இருக்கமாட்டார்கள். (ஒரு சிலரைத் தவிர) ஆகவே படைப்புக்கள் எழுதி தங்களை கவனிக்கவைக்க முடியாது. ஆகவே இம்மாதிரியான அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம் 

தங்கள்பால் படிக்கிறவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாதா என்ற நப்பாசை இவர்களுக்கு உண்டு.

இப்படிச் சுற்றித்திரியும் ஆசாமிகள் இணையத்தில் எல்லாத் தளங்களிலும் நிறையவே காணக்கிடைக்கிறார்கள்.

முதலில் அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

குடியரசுத் தலைவராக வலிந்து திணிக்கப்பட்டவர் அவர். அவருக்கு நிச்சயம் சில அரசியல் நிர்ப்பந்தங்கள் இருந்திருக்க வேண்டும்.

அரசியலில் யார் உள்ளே புகுந்தாலும் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டுத்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டு மௌனித்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குக்கூட அவர் ஆளாகியிருக்கக் கூடும். ஏனெனில் மேற்கண்ட இக்கட்டான சூழல்கள் வராத காலத்திலேயே அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே அவற்றிலுள்ள நிர்ப்பந்தங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட சிந்தனையாளரான அண்ணா தாம் ஏற்றுக்கொண்ட முதல்வர் பதவி பற்றிக்குறிப்பிடும்பொழுது “தான் ஒரு சூழ்நிலைகளின் கைதி” என்று குறிப்பிட்டார்.

ஒரு சாதாரண முதலமைச்சர் பொறுப்புக்கே அப்படி அவர் கருத்துத் தெரிவித்திருக்கும்போது ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் என்பவருக்கு எந்தவிதமான நிர்ப்பந்தங்கள் இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

இப்படிச் சொன்னவுடன் ‘இவ்வளவையும் சகித்துக்கொண்டு ஏன் இருக்கவேண்டும்? 

பிடிக்கவில்லையென்றால் பேசாமல் ராஜினாமா பண்ணிவிட்டுப் போயிருக்கவேண்டியதுதானே?’ 

என்று கேட்கவும் செய்வார்கள். இதுபோன்ற அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் இங்கே பதில் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இணையத்தின் சண்டப்பிரசண்டர்களின் ஆசை அபிலாஷைகளுக்கு ஏற்ப எந்தத் தலைவனும் தன்னை வடிவமைத்துச் செயலாற்றிக்கொண்டிருக்க முடியாது. அப்படிச் செயலாற்றவும் தேவையில்லை.
மறுபடியும் நினைவு கூறவேண்டும். ‘அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல!’

இங்கே ஒரு மனிதரின் தலைமைப் பண்பு என்பதும் அவரது ஆளுமைத் திறன் என்பதும் பல்வேறு வகைகளில் வெளிப்படுகின்றன.

எத்தனையோ தலைவர்களை நாம் தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாரதப் பிரதமரிலிருந்து நம் வீட்டுத் தெருவிலிருக்கும் கார்ப்பரேஷன் கவுன்சிலர் வரைக்குமான பலரையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லா விஷயங்களிலும் நூறு சதவிகிதம் ‘பர்ஃபெக்ட்டான’ ஆட்கள் அல்லது தலைவர்கள் இங்கே யாருமே இல்லை என்பதும் அப்படி யாரும் இருக்கமுடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.

அவ்வாறிருக்க இவர்கள் யாரை கல்லா கட்ட நினைக்கிறார்களோ அவர்களிடம் மட்டும் நூறு சதவிகிதத்திற்கும் அதிகமான ‘பர்ஃபெக்ஷன்களை’ எதிர்பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள். (அப்படிக் கேள்விகள் கேட்பவர்களிடம் ‘அந்தத் தகுதிகளில் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் ஏன் அரை சதவிகிதமாவது கேட்பவர்களிடம் இருக்கிறதா?’ என்ற கேள்வி ஒருபுறமிருக்க) “சரி, நீங்கள் சொல்லும் ஆளை விட்டுவிடுகிறோம். இவருக்கு மாற்றாக இங்கே யார் இருக்கிறார்கள்? அவரை எனக்குக் காட்டு. நான் அவரைப் பின்பற்றுகிறேன்” என்று கேட்டுப்பாருங்கள்.

அவ்வளவுதான். ஆசாமிகள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

சாதாரணத் தலைவர்களுக்கே இந்தக் கதி என்றால் கலாம்போன்ற ஒரு மாமனிதரை நாம் எப்படி வரையறுக்க வேண்டும்?

இத்தனை உயரங்கள் தொட்ட எந்தத் தலைவருக்கும் இல்லாத பல அரிய உயர்குணங்கள் கொண்டவர் அப்துல் கலாம்.

அவரிடமிருந்த தனிமனித நேயம் இங்கே எந்தத் தலைவனிடமும் இல்லை.

அவரிடமிருந்த உயர்குணங்கள் இங்கே எந்தப் பிரபலத்திடமும் இல்லை.

அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம் இங்கே எவரிடமும் இல்லை.

நீங்கள் கைகாட்ட முடிந்த யாரை விடவும் பண்புகளுக்கும் எளிமைக்கும் சொந்தக்காரர் அவர்.

உலகின் அத்தனைத் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்த ஒரு நாட்டின் உயர்ந்த குடிமகன் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியையும், பள்ளிக்குப் போகும் ஏழைச் சிறுமியையும் மதித்துத் தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்துப் பேசியதாய் எந்த வரலாறும் இல்லை.


எளிமையிலும் எளிமையினராய், தன்னை மற்றவர்களின் அளவுக்கு இறக்கிக்கொண்டுதான் அவர் மற்றவர்களிடம் பேசினார், பழகினார். இப்படி ஒரு உயர் பதவி வகித்தவரை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் இந்த நாடு பார்க்கப்போவதில்லை.

ஜனாதிபதியாய் இருந்தபோதுகூட தம்மைச் சந்தித்தவர்கள் எத்தனை சாதாரணர்களாக இருந்தபோதிலும் மரியாதை கொடுத்து “சார் சார்” என்றுதான் விளித்துப் பேசினார் என்பதை எங்கு கொண்டுபோய் மறைக்கப்போகிறீர்கள்?

சாரு நிவேதிதா போன்ற சிலர் அவருடைய இலக்கியப் பரிச்சயத்தின்மீது கேள்விகள் கேட்கிறார்கள். கலாமுக்குக் கூர்மையான இலக்கிய அபிப்பிராயங்கள் இல்லையாம். தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எவரென்று கேட்டால் அகிலன் கல்கி என்று சொல்லக்கூடிய மொக்கையான இலக்கிய சிந்தனை உடையவராம். சிறந்த கவிஞர் வைரமுத்து என்பாராம். இந்த வகையில் போகிறது அவரது சிந்தனை. இவருடைய கவலையெல்லாம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கலாமிடம் கேட்டிருந்தால் அவர் “எனக்குப் பிடித்த எழுத்தாளர் நகுலன், மற்றும் சாருநிவேதிதா. எனக்குப் பிடித்த கவிஞர் ஆத்மாநாம்” என்று சொல்லிவிட்டிருந்தால் கலாம் கூர்மையான இலக்கிய ரசனை உடையவர் என்று ஏற்றுக்கொண்டிருப்பார் போலும்.(நல்ல வேளையாக கலாம் தமிழின் அதி உன்னத ட்ரான்ஸ்கிரஸ்ஸிவ் வகை இலக்கியங்களைப் படிக்காதவராக இருந்திருக்கிறார்)

சாருநிவேதிதா சொல்கிற மாதிரியான இலக்கிய ரசனை கொண்டவர்கள் இங்கே பொதுமக்களுக்காகவோ அல்லது தமிழுக்காகவோ சாதித்திருப்பது என்ன என்பதை வைத்துத்தான் இந்த வெட்டிப்பேச்சு வீரர்களின் கருத்துக்களை அணுக வேண்டும்.

இவர் ஒரு விஞ்ஞானியே அல்ல; ஸ்கூட்டர் மெக்கானிக் போல ஏவுகணை மெக்கானிக் என்று வேண்டுமானால் கலாமை ஒப்புக்கொள்ளலாம் என்கிறார் இன்னொரு அதிமேதாவி.

அறிவியல்துறை மெக்கானிக் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் என்கிறார் இன்னொரு அதிபயங்கர மேதாவி.

கலாமின் சாதனைகளாக அவரே சொல்லிக்கொள்ள விரும்புவது அக்னி ராக்கெட், எஸ்எல்வி, மற்றும் அணுசக்தி. இவற்றைத் தாண்டி பாரமற்ற செயற்கைக் கால்கள், மற்றும் ஸ்டெண்ட். இவற்றையும் கடந்து சூரிய ஒளி மின்சாரம், காற்று மின்சாரம், மற்றும் அணுசக்தி மின்சாரம் ஆகியவற்றில் தமது கவனத்தையும் சிந்தனையையும் செலுத்திவந்தவர் அவர். அவரை எதற்காக இந்த அதிகப் பிரசங்கிகள் இவர்களின் வரையறைக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.  

கலாமையே ஒப்புக்கொள்ளாத அளவுக்கு இவர்கள் தங்களிடம் இத்தனை அரிய பெரிய விஞ்ஞானப் புதையல்களையும் அறிவுப் புதையல்களையும் வைத்துக்கொண்டு ஏன்தான் பேசாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை. இந்த ஞானவான்கள் எல்லாம் தங்கள் திருவாயைத் திறந்து ஏதாவது மலர்ந்தருளினார்கள் என்றால் நிச்சயம் இந்தியா நாளைக்கே உலகின் முதன்மை நிலைக்குச் சென்றுவிடும்.

பெங்களூரில் சந்திரமௌலி என்றொருவர் இருந்தார். மெத்தப் படித்தவர். இந்திரா நகர் பகுதியில் ஒரு பெரிய ஓட்டலின் முதலாளி. இவர்களின் கேட்டரிங் மிகவும் புகழ்பெற்றது. சந்திரமௌலியைச் சந்திக்கும்போதெல்லாம் கலாமின் அருமைப் பெருமைகள் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசுவார். 

பெங்களூர் இஸ்ரோவுக்குக் கலாம் தலைவராக இருந்தபோது அவருக்கு தினசரி உணவு கொடுக்கும் பணியினை மௌலி ஏற்றிருந்தாராம். அவருக்கு சித்திரான்னமும்(எலுமிச்சை சாதம்) புளியோதரையும் அத்தனைப் பிடிக்கும் என்பார்.

அக்னிச் சிறகுகள் வந்தபோது “இதுஒரு சாதாரண கான்செப்ட் இல்லை. இதனை ஒரு இயக்கம் ஆரம்பித்து இந்தியா பூராவுக்கும் கொண்டுசெல்ல இருக்கிறேன். இளைய தலைமுறை மொத்தத்தையும் ஒன்றுதிரட்டி செயல்பட வைக்கப்போகும் உத்தமமான பெரிய திட்டத்திற்கான அடித்தளம் இது” என்றிருக்கிறார் சந்திரமௌலி.

“அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க செய்யுங்க. ஆரம்ப விழாவை நானே வந்து துவக்கி வைக்கிறேன். ஏன்னா உங்க கையில எத்தனை தரம் சாப்பிட்டிருக்கேன். அந்த நன்றிக்கு இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி?” என்றிருக்கிறார் அன்றைய குடியரசுத் தலைவர்.

மௌலி ஆடிப்போய்விட்டார்.                           

எத்தனைப் பெரிய இடத்திலிருப்பவரிடம் இருந்து என்ன மாதிரியான வார்த்தை!
இங்கே எந்தப் பிரபலம் அய்யா தான் ஏதோ ஒரு காலத்தில் காசு கொடுத்துச் சாப்பிட்டவரிடம் 

இப்படி ஒரு வார்த்தையைப் பகிர்ந்து கொள்வார்?

இப்படிப்பட்ட ஒரு மனிதரை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்கு எப்படி அய்யா உங்களுக்கெல்லாம் மனம் வருகிறது?

காலத்தின் கோலம் அக்னிச் சிறகுகளுக்கான ஆரம்ப முயற்சிகளில் இருந்தபோது மௌலி திடீரென்று மாரடைப்பினால் காலமாகிவிட்டார்.

பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ‘ஜலவிஹார்’ என்றொரு குடியிருப்புப் பகுதி இருக்கிறது. 

ராணுவம் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளுக்கான குடியிருப்புப் பகுதி அது. என்னுடைய நண்பர் ஒருவரின் மாமா ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றதால் அந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜலவிஹாருக்குச் சென்றுவந்த நண்பர் அடுத்த நாள் பரபரப்பாக என்னைத் தேடி ஓடி வந்தார். “நேற்று ஜலவிஹாருக்குப் போய்வந்தேன். எங்க மாமா இருக்கும் ஃப்ளோரிலேயே நம்ம ஜனாதிபதி கலாமும் ஒரு வீடு வாங்கியிருக்காராம். இஸ்ரோ சீஃப்பாக இருந்ததால் கலாமுக்கும் அந்த இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்ப கலாம் ஜனாதிபதியாகிவிட்ட பிறகு டெல்லியில் கலாமைச் சந்தித்திருக்கிறார் கர்னல். “அந்த வீடு உங்களுக்கு எதுக்கு? அதனை விற்றுடுங்களேன்” என்றிருக்கிறார் கர்னல்.

“இல்லை இல்லை. அது என்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு. நான் ரிடையராகிவிட்ட பிறகு பெங்களூர் வந்தால் எனக்குத் தங்க இடம் வேண்டுமே. தவிர அந்த வீட்டை லோனுக்குத்தான் வாங்கியிருக்கிறேன். லோன் இன்னமும் முடியவில்லை. அதனால் வீட்டை விற்கிற பேச்சு எழவில்லையே” என்றாராம்.

பல வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரத்திற்குச் சென்றுவந்த அனுபவம் இருக்கிறது. 

“திருவனந்தபுரத்தில் நமக்குப் பிடித்த நல்ல சாப்பாடு கிடைப்பது சிரமம். அதனால் திருவனந்தபுரம் ஜங்ஷனில் இருக்கும் கேண்டீனுக்குப் போய்விடுங்கள். அங்கு மட்டும்தான் தமிழ்நாட்டு ஸ்டைலில் நல்ல உணவு கிடைக்கும்” என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அதன்படி ஜங்ஷன் ஓட்டலில் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களும் சென்று சாப்பிட்டு வந்தோம்.

கலாம் ஜனாதிபதியாகிவிட்ட பிறகு விகடனில் அவருடைய பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் இந்த ஜங்ஷன் ஓட்டல் பற்றிப் பேசுகிறார். “அந்த ஓட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கும். 

அதனால் மதியம் அங்கே சாப்பாட்டுக்குச் செல்வேன். நான் பணியாற்றிவந்த விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து அந்த ஓட்டல் இரண்டரைக் கிலோமீட்டர். தினசரி பகலில் பொடி நடையாக நடந்துவந்து உணவருந்திவிட்டுப் பொடி நடையாக நடந்தே அலுவலகம் வந்துவிடுவேன்”
அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி பதவிகள் வகிப்பவர்களே அரசாங்கக் கார்களையும் மற்ற சலுகைகளையும் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம். அத்தனை உயர் பதவி வகித்தபோதும் அரசாங்க ஊர்தியைப் பயன்படுத்தாமல் தினசரி வெயிலில் நடந்தே வந்து சாப்பிட்டுச் சென்ற அந்த மாமனிதரை இந்த உலகம் மிகச் சரியாகவே அங்கீகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

அப்துல் கலாம் தமது கனவுகள் நிறைவேறுவது இளைஞர்கள் கையில் அதுவும் மாணவர் கையில்தான் உள்ளது என்பதை மிகத்தீவிரமாக நம்பினார். அதற்கான முயற்சிகளில் இறங்கியவர் இதுவரை இரண்டு கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் என்று சொல்கிறது புள்ளிவிவரம் ஒன்று.

நாட்டின் தென்கோடியிலிருக்கும் ஒரு காய்ந்துபோன பிரதேசமான ராமேஸ்வரத்தை நோக்கி இன்றைக்கு இந்தியாவின் கவனம் முழுமையும் திரும்பியிருக்கிறது. அத்தனைத் தலைவர்களும் ராமேஸ்வரத்தை நோக்கித் தங்களது தலையைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் மாணவர் குலம் முழுக்கவும் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது. இதுதான் கலாமுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மற்றும் மரியாதை.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க எதிர்ப்புக் குரல்களும் இன்னொரு பக்கம் வந்த வண்ணமே உள்ளன. எத்தனை நல்ல மனிதர்களையும் ஏதோ ஒரு இல்லாத காரணம் கண்டுபிடித்துப் புறம் பேசுவது இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.


எப்படிப் பார்த்தாலும் பொதுக்கழிவறையில் எழுதும் மனப்பான்மை கொண்டவர்களைத் திருத்தவும் முடியாது  நிறுத்தவும் முடியாது என்றுதான் தோன்றுகிறது.