தமிழ்த்திரை இசை பற்றிய
பதிவுகளை இணையத்தில் எழுதும்போது இளையராஜா பற்றிய இந்த ஒரு விஷயம் மட்டும் சரியான தகவல்களுடன்
விவாதத்திற்கு வராமல், பல்வேறு தரவுகளை எடுத்துவந்து அலசாமல்,
‘இதோ பார் இதுதான் சான்று
சிம்பொனி வந்திருக்கிறது’. இல்லாவிட்டால் ‘இந்தந்தக் காரணங்களால் வராமல் போய்விட்டது’
என்றெல்லாம் சரியான தகவல்கள் சொல்லப்படாமல்- கமுக்கமாய்க் கடந்துசெல்லப்பட்டு வருகிறது.
“இந்த விஷயம் ஒரு புனிதப்பசுவைப் போல் காப்பாற்றப்படுவது ஏன் என்று தெரியவில்லை” என்று
குறிப்பிட்டார் என் நண்பர் ஒருவர்.
அது எத்தனைப் பெரிய விஷயமாக
இருந்தாலும் எப்பேர்ப்பட்டவர்களைப் பற்றிய விஷயமாக இருந்தாலும், எப்படி யார் மூடிமறைக்க
முயன்றாலும் இணையத்தில் மட்டும் அது நடக்காது. எப்படியும் உண்மைகளை வெளிக்கொணர்ந்துவிடுவார்கள்.
இணையத்தின் சிறப்புத்தன்மையே அதுதான் என்று சொல்லப்படுவதெல்லாம் மற்ற விஷயங்களுக்குத்தான்.
இந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் அந்தத் தாரகமந்திரம் பொருந்தாது என்பதுபோல்தான் விஷயங்களும்
நடந்துகொண்டு வருகின்றன.
எப்படிப்பட்ட அரசாங்க ரகசியங்களாக
இருந்தாலும் வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள்.
மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்கள் பற்றிய விஷயங்களை அள்ளிக்கொண்டுவந்து வெளியே கொட்டுகிறார்கள்.
போலீஸ்துறையில் நடைபெறும்
அக்கிரமங்களைக் கொஞ்சம்கூட பயப்படாமல் வெளியில் சொல்லுகிறார்கள்.
நீதித்துறையே தவறான தீர்ப்புகளை
வழங்குகிறது என்றெல்லாம் அலசுகிறார்கள். சிபிஐயைக் கேள்வி கேட்கிறார்கள்.
நீரா ராடியா பல ‘படா படா
சூராதி சூரர்களுடன்’ பேசிய டெலிபோன் தகவல்களையெல்லாம்கூட ஒற்றுக்கேட்டு ஒன்றுவிடாமல்
இணையத்தில் ஏற்றிப் பிரித்து மேய்கிறார்கள்.
இளையராஜாவின் சிம்பனியை
மட்டும் வந்ததா வரவில்லையா,
இருக்கிறதா இல்லையா,
அங்கீகரிக்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டுவிட்டதா?
அப்படி அங்கீகரிக்கப்பட்டு
வெளியிடப்பட்டிருந்தால் எங்கே கிடைக்கிறது?
நிராகரிக்கப்பட்டிருந்தால்
அது ஏன் சொல்லப்படவில்லை? என்கிற கேள்விகள் எல்லாம் அப்படியே அந்தரத்திலேயே தொக்கி
நிற்கின்றன.
இளையராஜா சிம்பனிக்காக
இசை அமைத்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது
தெரியும். டோரன்டோவுக்கோ, பிலடெல்பியாவுக்கோ எங்கோ சென்றுவந்தார் என்பதும் தெரியும். அந்த இசையமைப்பு
பதிவானதையும் சன் டிவி மிகப்பிரமாதமாய் இரண்டு வாரங்களுக்கு அந்த நிகழ்ச்சியை மிக ஆர்ப்பாட்டமாய்
ஒளிபரப்பியதும் தெரியும். மீண்டும் மறுஒளிபரப்பு செய்ததும் தெரியும். அதுபற்றிய பேட்டிகளில்
இளையராஜா கலந்துகொண்டு பேசியது தெரியும். இதற்காக அவருக்கு மிகப்பெரிய பாராட்டுவிழா
நடைபெற்றது தெரியும். அதுபற்றி எழுதாத தமிழ்ப் பத்திரிகைகளே இல்லையென்பதும் தெரியும்.
மற்ற பத்திரிகைகளிலும் இளையராஜா இதற்காகக் கொண்டாடப்பட்டார் என்பதும் தெரியும்.
இதோ சமீபத்தில்கூட ஒரு
வெளிநாட்டுக்காரரை அழைத்துவந்து இளையராஜா சம்பந்தப்பட்ட விழாவொன்றில் கௌரவித்தார்கள்.
இளையராஜா அமைத்த சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கண்டக்ட் செய்தவர் இவர் என்று சொன்னார்கள்.
இத்தனையும் நடக்கிறது.
எல்லாம் சரி. சிம்பனி வெளிவந்ததா
இல்லையா?
யாருக்கும் தெரியாது.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்
எதற்காக இப்படியொரு மூடுமந்திரம்?
எல்லாவற்றையும் அக்குவேறு
ஆணிவேறாகப் பிரித்துப்போட்டு அலசித் துவைத்துக் காயவைக்கும் இணையத்தில் இந்த ஒரு விஷயத்தை
மட்டும் ஏன் யாருமே பேசத்துணிவதில்லை?
எதைக் காப்பாற்றுவதற்காக
இப்படியொரு ரகசியத்தைப் பேணிப் பாதுகாத்துவருகிறார்கள்?
இளையராஜா என்பவர் விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டவரா? அவரைப் போற்றிக் கொண்டாடப்படும் செய்திகள் மட்டும்தான் இங்கே பேசப்படவேண்டும்.
அவரைக் கேள்விக்குட்படுத்தும் மிகச்சிறிய விமர்சனங்களுக்கோ உண்மைச் செய்திகளுக்கோ கிஞ்சித்தும்
அனுமதி கிடையாது என்பது என்ன மாதிரியான சண்டியர்த்தனம் என்பது தெரியவில்லை.
சிவாஜி கணேசனை ஒன்றுமில்லை
என்று எழுதுகிறார்கள். கண்ணதாசனைக் குடிகார கவிஞன் என்கிறார்கள். எம்ஜிஆரை, மன்மோகன்
சிங்கை, சோனியாவை, மோடியை எல்லாரைப் பற்றியும் கேள்விப் பட்டிராத கோணங்களில் எல்லாம்
பிரித்துப்போட்டு விமர்சிக்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயம் வெளிவந்துவிட்டால் உடனே அந்த
விஷயம் உண்மைதானா என்று கண்டறிய எத்தனைப் பிரயத்தனப்படுகிறார்கள்?
ஸ்டாலினுக்கு ஒரு வெளிநாட்டுப்
பல்கலைக் கழகத்தின் பேரால் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று ஒரு செய்தி வந்தால்
அது உண்மையான பல்கலைக் கழகமா? கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் உண்மையானதுதானா? என்றெல்லாம்
பூமியைப் பிளந்து பதினைந்தாயிரம் அடி உள்ளே சென்று உண்மைத் தகவல்களை அள்ளி வருவார்களா
மாட்டார்களா? கருணாநிதிக்கு ஏதோ ஒரு நாட்டில் ஸ்டாம்ப் வெளியிடுகிறார்கள் என்று செய்தி
வந்தால் அது அரசாங்கம் வெளியிட்ட தபால்தலையா, இல்லை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்தால்
அப்படி வெளியிட்டுக்கொள்ள முடியுமா என்றெல்லாம் துப்பறியும் கட்டுரைகள் வெளிவருகிறதா
இல்லையா? கருணாநிதி தொடங்கி இன்றைய தமிழருவி மணியன்வரையிலும் அத்தனைப் பேரையும் எத்தனை
எத்தனை விமர்சனங்களுக்கு ஆட்படுத்துகிறார்கள்? என்னென்ன விதமான கேள்விகளையெல்லாம் முன்வைக்கிறார்கள்…..
ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ,
ஜெயகாந்தனுக்கோ, அல்லது கமல் ரஜினி போன்றவர்களுக்கோ ஏதோ ஒரு சிறப்புப் பட்டம் வழங்கப்படுகிறது
என்றால் அது யாரால் வழங்கப்பட்டுள்ளது, அது உண்மையானதுதானா அல்லது டுபாக்கூரா அதனை
வாங்குவதற்கு அல்லது பெறுவதற்கு இவர்கள் தரப்பில் என்னென்ன செய்யப்பட்டுள்ளது, யார்
யார் முன்னின்று செய்தார்கள் அல்லது உண்மையானதாகவே இருக்கும்பட்சத்தில் அது எவ்வளவு
சிறப்புக்குரியது என்பதுபோன்ற விவரங்கள் எல்லாமே இணையத்தில் அலசப்படுகிறதா இல்லையா?
அதன் பூர்விகம் என்ன நதிமூலம் என்ன எல்லாமே தோண்டித் துருவப்படுகிறதா இல்லையா?
இவருடைய விஷயத்தில் மட்டும்
என்ன நடக்கிறது?
ஏன் இந்த கனத்த மவுனம்?
எதற்காக இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான ஜமக்காளப் போர்வை?
இவர் மட்டும்தான் மக்களின்
அபிமானம் பெற்றவர், மற்றவர்களெல்லாம் மக்கள் தொடர்பே இல்லாதவர்கள் மக்களால் மதிக்கவே
படாதவர்கள் என்று அர்த்தமா?
ஒன்று இதோ சிம்பனி வெளிவந்துவிட்டது
என்று சொல்லப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் முயற்சி
செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்படவில்லை என்ற செய்தியாவது அதிகாரபூர்வமாகச் சொல்லப்படவேண்டும்.
இதுவுமில்லாமல் அதுவுமில்லாமல்
இருக்கிறதா?
பேசாமலாவது இருக்கவேண்டும்.
பண்ணைப்புரத்திலிருந்து
பிலடெல்பியாவரை என்ற தலைப்பில் கட்டுரை வருகிறது.
சினிமாவிலிருந்து சிம்பொனிவரை
என்று புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.
மியூசிக் டைரக்டராயிருந்து
மேஸ்ட்ரோவானவர் என்று புகழ்கிறார்கள். இவையெல்லாமே சிம்பொனி அமைத்தவர் என்ற அர்த்தம்
தொனிக்கும் வார்த்தைகள்தாமே? சிம்பொனி உண்மையிலேயே வெளியிடப்படவில்லை என்றால் “சிம்பொனி
முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே யாரும் என்னை அதனோடு சம்பந்தப்படுத்திப்
பேசாதீர்கள்” என்று இளையராஜா சொல்லவேண்டுமா வேண்டாமா?
ஒரு முறை இதுபற்றி விகடன்
பேட்டியில் கேட்கப்பட்டபோது “அதுபற்றி இப்போது பேசவேண்டாம்” என்றுதான் சொன்னார் இளையராஜா.
எப்போது பேசலாம் என்பதை
அவர் சொல்லவில்லை.
எனவே மூடுமந்திரம் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது.
சிம்பனி அமைப்பது என்பது
ஒரு பெரிய பகீரத முயற்சி. கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதுபோல.
தேர்வு எழுதுவதற்காக விசேஷமாய்ப் படித்தது சரி; பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது சரி.
அத்தனை முயற்சிகளையும் சேர்த்துவைத்து ஐஏஎஸ் பரீட்சை எழுதுவது சரி. ஆனால் தேர்வு செய்யப்படுவது
என்று ஒன்றிருக்கிறதே. அங்கீகாரம் பெறுவது என்று ஒன்றிருக்கிறதே. தேர்வாகாவிட்டால்
நம்மை ஐஏஎஸ் என்று அழைத்துக்கொள்ள முடியுமா என்ன? அங்கீகாரம் பெறாவிட்டால் ஐஏஎஸ் என்ற
பந்தாவுடன் வலம் வரமுடியுமா என்ன?
ஆனால் அதுதான் இங்கே நடைபெறுகிறது.
இளையராஜா சிம்பனி அமைத்தவர் என்றுதான் இன்னமும் லட்சக்கணக்கான மக்களால் நம்பப்படுகிறார்,
புகழப்படுகிறார்,
போற்றப்படுகிறார்.
இதுபற்றி யாரும் கேள்வி
எழுப்பவில்லை. யாருக்கும் இதுபற்றிய சந்தேகங்களும் இல்லை.
நான் இணையத்தில் இதுபற்றி
லேசுபாசாக எழுப்பிய சந்தேகங்களுக்கும் உரிய பதில்கள் இல்லை. அதனைத் துருவி ஆராய்ந்து
பதிவுகள் வெளியிடப்படவில்லை. வெறும் அர்ச்சனைகளும் வசவுகளும்தான் வருகின்றன.
இந்தப்போக்கு நேர்மையான
நியாயமான ஒன்றாகத் தெரியவில்லை.
இதுபற்றி எழுதினாலேயே,
இளையராஜாவை வசை பாடுகிறாய், தூஷிக்கிறாய், பொல்லாங்கு பேசுகிறாய் என்கிறார்கள். இது
எதுவுமே உண்மையல்ல.
அவர் இசையமைத்த சிம்பொனி
அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறதா என்பது மட்டும்தான் என்னுடைய கேள்வி. இதில்
பொல்லாங்கு. தூஷணை, வசை எங்கிருந்து வந்தது?
இது ஒரு உண்மைத் தேடல்
அவ்வளவே.
இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்ததைக்
கேட்ட என்னுடைய நண்பர் சந்திரசேகர் என்பவர் ஸ்கூட்டரைக் கொண்டுவந்து நிறுத்தி “வாங்க
போய் விசாரிச்சிட்டு வந்துருவோம்” என்றார். அவர் ஒரு இளையராஜாவின் ரசிகர்.
“எங்கே பிலடெல்பியாவுக்கா?”
என்றேன்.
“அட, அந்த சிம்பொனி வெளிவந்திருக்கா
இல்லையா என்பதை நாம் எதற்காக இணையத்தின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்? அதைவிட வேறொரு
சுலபமான வழி இருக்கு. அதற்கென்று ஒரு இடம் இருக்கு. அதுதான் சரியான இடம்., அந்த உரிய
இடத்தில் போய் விசாரிச்சிருவோம். மியூசிக்வேர்ல்ட், பிளானெட் எம் ஆகிய இடங்களில் போய்க்
கேட்டால் தெரிந்துவிடுகிறது. அப்படி அந்த இடங்களில் இவர் இசையமைத்த சிம்பொனி சிடி கிடைத்துவிட்டால்
அப்புறம் நீங்கள் இதுபற்றிப் பேசக்கூடாது” என்றார்.
“பேசக்கூடாதா, அப்புறம்தான்
நிறையப் பேசவேண்டும். சிம்பொனி இசையமைத்த ஒரு தமிழனின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கவேண்டும்”
என்றேன்.
“ஒரு நான்கைந்து சிடிக்கள்
ஒட்டுமொத்தமாக வாங்கிவிடுகிறேன். இந்த சிடியெல்லாம் அறுபது எழுபது ரூபாயெல்லாம் இருக்காது.
எப்படியும் நானூறு ஐநூறு ரூபாயாகத்தான் இருக்கும்” என்றபடியே வழியெல்லாம் பேசிக்கொண்டே
வந்தார்.
முதலில் இந்திரா நகரிலிருந்த
சப்னா புக்ஹவுசுக்குச் சென்றோம். இது மிகப்பெரிய புத்தகக் கடை என்றாலும் மியூசிக்கிற்குத்
தனி செக்ஷன் வைத்திருப்பார்கள். அவர்கள் மிகவும் சிரத்தையாகத் தேடிவிட்டு “இல்லை தீர்ந்துவிட்டிருக்கிறதுபோல”
என்றார்கள். அங்கிருந்து பிளானெட் எம் கடைக்குச் சென்றோம். அங்கும் அக்கறையாகத் தேடிவிட்டு
இல்லை என்றார்கள். நண்பர் மனம் தளரவில்லை. “இவனுங்களுக்கு இதுபோன்ற டேஸ்டெல்லாம் இருக்காது
சார். வெறும் சினிமா பாட்டுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பானுங்க. வாங்க நாம பிரிகேட்
ரோடு போயிரலாம்” என்று நேராக பிரிகேட் ரோட்டிற்கு ஸ்கூட்டரை விரட்டினார்.
“முதலில் மியூசிக் வேர்ல்ட்
பார்த்துறலாம்” என்று பிரமாண்டமான கடைக்குள் நுழைந்தார். இளையராஜா அடுக்கப்பட்டிருந்த
வரிசைக்குச் சென்று தேடிப்பார்த்துக் கிடைக்காமல் டை கட்டியிருந்த இளைஞனைக் கேட்க
‘அட இதானே வேண்டும்’ என்ற பாவனையில் அந்த இளைஞன் மடமடவென்று சென்று ஒரு வரிசையில் உட்கார்ந்து
ஆராயத்தொடங்கியதும் பாரத்தீங்களா எப்படி நம்ம செயல்பாடு என்பதுபோன்ற பார்வையை நண்பர்
என்மீது வீச ஆரம்பிக்க, ‘சே, நாம்தான் தப்பாக விஷயம் தெரியாமல் இருக்கிறோம். சிடி வந்திருக்கிறது’
என்றுதான் தோன்றிற்று.
அந்த வரிசையைப் பார்த்துக்
கலைத்துப்போட்டு, பக்கத்து வரிசைக்கு நகர்ந்து சென்று உட்கார்ந்து “இதுவா பாருங்கள்”
என்று அந்த இளைஞன் எடுத்துக்காட்டியது HOW TO NAME IT. “இது இல்லை சிம்பொனி” என்றதும்
அவன் மறுபடியும் தேடிவிட்டு “இல்லை சார் Out of stock என்று நினைக்கிறேன்” என்றான்.
“அந்த சிடி வந்திருக்கிறதா? என்பதைக் கொஞ்சம் செக் செய்யுங்கள்” என்றதும் “ஒன்மினிட்
சார்” என்றவன் கம்ப்யூட்டரில் இருந்த லிஸ்டில் எதுஎதையோ தட்டி எங்கெங்கோ மவுசை இழுத்துக்கொண்டுபோய்
கிளிக் செய்து ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப்பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி
“இல்லை சார். அதனை வரவழைக்கவில்லை போலிருக்கிறது” என்று சொல்லி “பேர் என்ன சொன்னீர்கள்?”
என்று கேட்டு டயரி ஒன்றில் குறித்துக்கொண்டான்.
அடுத்து போன இடம் பிளானட்
எம். அங்கும் இதே கதைதான் நடைபெற்றது. தேடுதேடு என்று தேடினார்கள். கடைசியில் இல்லையென்று
கை விரித்தார்கள். நண்பருடைய முகம் இப்போது கொஞ்சம் இறுக்கத்துக்கு வந்திருந்தது. ஆனாலும்
அவர் நம்பிக்கையை இழந்தமாதிரி தெரியவில்லை. “சார் மல்லேஸ்வரத்தில் குரு டிரேடர்ஸ் என்று
ஒரு கடை இருக்கிறது. அவர்கள் வெறும் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட சிடிக்களை வைத்திருப்பவர்கள்.
அங்கே ஒரு நடைபோய் விசாரித்துவிட்டு வந்துவிடுவோமே” என்றார். எனக்கும் ஆசைதான். எங்கேயாவது
கிடைத்துவிட்டால் நன்றாகத்தானே இருக்கும். “சரி போவோம்” என்றேன். அங்கும் போனோம். எம்எல்வசந்தகுமாரி,
பித்துக்குளி முருகதாஸிலிருந்து பக்தி கர்நாடகம் இசை ஆல்பங்கள் என்று நிறைய வைத்திருந்தார்கள்.
இந்த ஒரு சிடி மட்டும் அவர்களிடமும் இல்லை.
“இதனை நான் விடுவதாக இல்லை.
இந்த சிடி பெங்களூர் வராததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அடுத்த சனிக்கிழமை நான்
சென்னை போகிறேன். அங்கே போய் சல்லடைப் போட்டாவது இந்த சிடியுடன்தான் வருவேன்” என்றார்
நண்பர்.
“அப்படியே செய்யுங்கள்.
எனக்கு ஒரு மூன்றோ நான்கோ வாங்கிவந்துவிடுங்கள்” என்றேன்.
சென்னை சென்ற நண்பர் ஆழ்வார்பேட்டை,
மவுண்ட்ரோடு என்று எங்கெங்கோ அலைந்திருக்கிறார். கடைசியில் அங்கும் அவருக்குக் கிடைத்தது
ஏமாற்றமே. “அதுமட்டுமில்லை. இந்த சிடி வரவில்லையென்ற விஷயமே அந்தக் கடைக்காரர்களுக்குக்கூடத்
தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களே ஒவ்வொரு இடத்திலும் தேடுதேடென்று
பல ஷெல்புகள் தேடிவிட்டுத்தான் அப்புறம் இல்லையென்கிறார்கள்” என்று வருத்தப்பட்டார்
நண்பர்.
அப்படித்தான் இருக்கிறது.
இன்னமும் விளங்கமுடியாத புதிர்களில் ஒன்றாகவே இந்த விஷயத்தைச் சிலபேர் வைத்திருக்கிறார்கள்
என்றுதான் தோன்றுகிறது.
இளையராஜாவோ அல்லது அவர்
சம்பந்தப்பட்டவர்களோ இந்தப் புதிரை விடுவிக்கவேண்டும். விக்கிலீக்ஸ் மூலம் உலகின் எத்தனையோ
ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இன்றைய இணையத்தின் வீச்சுக்கு இதுவும் ஒரு அடையாளம்.
அப்படியிருக்கும்போது இதற்கு மட்டும் ஏன் இத்தனை ரகசியக்காப்பு?
இளையராஜா சிம்பொனி அமைத்தார்
என்று சொல்லித்தான் அவருக்குப் பெருமை சூட்டவேண்டும் என்பதில்லை. அவர் பேர் சொல்வதற்கு
அவர் இசையமைத்த எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்கின்றன. விஸ்வநாதனுக்குப் பிறகு வந்த நல்ல
இசையமைப்பாளர் அவர். ஒரு பத்து வருடங்களுக்குத் தமிழ்த்திரை இசையுலகை ஆக்கிரமித்திருந்தவர்
அவர். அந்தச் சமயத்தில் அவர் தந்த எத்தனையோ நல்ல பாடல்கள் அவர் பெயர் சொல்லும்.
இந்த சிம்பொனி விஷயத்தை
யாராவது வெளிப்படையாக இணையத்திலாவது விளக்கினார்கள் என்றால் நல்லது.


