Sunday, January 22, 2012

சோவும் சிவகுமாரும்..........

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நடிகர் சிவகுமாரின் சிறப்புப்பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்தப் பேட்டி நிறைய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. பொதுவாகவே அவரது இன்றைய பேச்சுக்கள் நிறையப் பேரால் கவனிக்கப்படுகின்றன. டிவி சேனல்கள் மூலம் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்களை நேரடியாகச் சென்று அடைகின்றன. ஹிண்டு பத்திரிகை ஒவ்வொரு பேச்சின் ஒளிபரப்பின்போதும் சிறப்புக்கட்டுரை எழுதுகிறது. பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றியபோதும் அவ்வளவாக கவலைப்படாதவர்கள் அவர் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தொட்டதும் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று இராமாயணம். இவர் எதற்காக ராமாயணத்தைப் பிரமோட் செய்யணும்? அதற்குபதில் சங்க இலக்கியம் பற்றிச்சொல்லலாம் திருக்குறள் பற்றிப்பேசலாம் என்பதான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இன்னொரு தரப்பினர், இவர் தலைவர்களைப்பற்றிப் பேசுகையில் காந்தி, காமராஜர், ஜீவா, வாஞ்சிநாதன், ஓமந்தூரார் என்று பேசுகிறார் பெரியார் பற்றியோ அண்ணா பற்றியோ ஏன் பேசுவதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர். பாரதி கண்ணதாசன் என்று பேசுபவர் பாரதிதாசனை அதிகம் பேசுவதில்லை என்பதும் இவர் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு.

அடுத்ததாக தற்போது மகாபாரதம் பற்றிப்பேசப்போவதாகவும் அதற்காக மகாபாரதம் படித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்போக கொஞ்சம் சூடான விவாதங்களே ஆரம்பமாகியுள்ளன. இதுபற்றி தமிழ்மணம் பதிவில் அவர் இப்படிச் சொல்லியிருந்தார்..... “மகாபாரதத்தையும் கம்பராமாயணம் பாணியில் சொல்லவேண்டும் என்ற முயற்சியில் தற்சமயம் என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் சீரியலே எழுபது மணிநேரம் ஓடுகிறது. சோ எழுதிய மகாபாரதமோ 1500 பக்கங்கள் கொண்டது. இவற்றையெல்லாம் பார்த்து படித்து உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் எக்காலத்திற்கும் சொல்லப்பட்ட தத்துவங்களைப் பிரித்தெடுத்து கதையோடு சேர்த்து அதன் மொத்த சாரமும் வருகிறமாதிரி மூன்றுமணி நேரத்தில் சொல்லவேண்டுமென்பதற்காக அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு ஒரு நண்பர் அனானிமஸ் என்ற பெயரில் கருத்திட்டிருந்தார். அவர் சொன்னது இது ; ‘சோவின் மகாபாரதமா? சுத்தம்! சிவகுமார் பேசுவது சிவனியம் மாலியம் சார்ந்த தமிழ் ஆன்மிகப்பாதை என்று நினைத்தேன். இது வைதிக ஆரிய பாசிசத்தில் போய்முடியும் என்று தோன்றுகிறது.

இவரது கருத்திற்கு பதில் சொல்லவந்த நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ‘சிலர் எங்கும் எதிலும் பார்ப்பன துவேஷம் தேடி அலைகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் சொல்லவந்த நண்பர் அனானிமஸ் ‘சோ போன்ற இனவெறியனை பொதுவெளி ஒன்றில் மேற்கோளிட்டால் இதுபோன்ற எதிர்ப்பு வராமலா போய்விடும்? என்று கேட்டவர் மனுஸ்மிருதி பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

சிவகுமாருடைய பேச்சுக்கள் விமரிசனங்களுக்கு ஆளாவது இயல்பான ஒன்றே. என்னைப் பொறுத்தவரை இவரது பேச்சுக்கள் இதுவரை மேடைகளில் பேசப்படும் பொதுவகைப் பேச்சுக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ரகம்; மாறுபட்ட கோணம். இந்தக் காரணங்களால்தாம் அவை பெரிதும் கவனிக்கப்படுகின்றவையாக இருக்கின்றன.

சிவகுமார் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவரைப் பற்றிய பிம்பம் அவரது பேச்சுக்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றது. நேரடியாக அவர் தமது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும்போது அவை புதிய பரிமாணத்துடன் மக்களைச் சென்று சேர்கிறது. மாணவமாணவிகளிடம் சென்று அவர்கள் வாழவேண்டிய வாழ்க்கைப் பற்றியும் மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கம் பற்றியும் பேசுகிறார். வேறு யாராவது அவர் பேசுவதுபோல் இளைஞர்களிடம் சென்று பேசினால் நடப்பதே வேறாக இருக்கும். தகுதியானவர் பேசுகிறார், கேட்போம் என்ற நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் அவை கேட்கப்படுகின்றன. கிராமத்து வாழ்க்கை பற்றி மேடைகளில் இவர் பேசும் அளவுக்கு அத்தனை நீளமாக வேறு யாராவது பேசியிருக்கிறார்களா? பேசினால் மக்கள் கேட்டுக்கொண்டிருப்பார்களா? கிராமத்தைப் பற்றிப்பேசும் அவரது நோக்கம் வேர்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே.

தலைவர்களைப் பற்றிப்பேசும் நேரங்களில்கூட வீண்புகழ்ச்சிக்கும் வெற்று கோஷங்களுக்கும் போவதில்லை அவர். அவர்கள் வாழ்க்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் சொல்லி அப்படிப்பட்ட தலைவர்கள் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்களாய் நாம் உருவாகவேண்டும் என்ற எண்ணத்தை இளையதலைமுறையிடம் விதைப்பதாகத்தான் அவர் பேச்சின் போக்கு இருக்கிறது.

அவர் பெரியார் பற்றியும் அண்ணா பற்றியும் பேசுவதில்லையே என்ற குற்றச்சாட்டில் சாரமிருப்பதாகத் தெரியவில்லை. பெரியார் பற்றி மிகச்சிறப்பாகப் பேசியிருக்கிறார். அண்ணாவின் தமிழ் பற்றியும் அண்ணாவின் வசனநடை பற்றியும் நிறையமுறை பேசியிருக்கிறார்.

அண்ணாவையும் பெரியாரையும் பேசுவதற்கு இரண்டு மாபெரும் இயக்கங்களே இருக்கின்றன.


திகவும் திமுகவும் அறுபது ஆண்டுகாலமாக அண்ணாவையும் பெரியாரையும்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று எத்தனை இயக்கங்கள்? தெருக்கள் தோறும் வீதிகள் தோறும் பெரியார், அண்ணா, பாரதிதாசன் மூன்றுபேரையும்தானே இந்த இயக்கத்திலுள்ளவர்கள் பேசுகிறார்கள்?

அதிலும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்றுபேரைத்தவிர மற்றவர்களைப் பற்றிப்பேசியிருக்கிறார்களா இதுவரை?

பாரதிதாசனைப் பேசும் திராவிட இயக்கத்தவர்கள் பாரதிதாசனுக்குக் கீழே இறங்கியிருக்கிறார்களா? பாரதிதாசன் முற்றத்தைத் தாண்டியதேயில்லையே.

இலக்கியத்துறையில் அண்ணா கலைஞர் பாரதிதாசன் என்ற மூவரைத் தாண்டாததன் பலன்தான் உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த நிலை என்பது திராவிடச்சிந்தனை நண்பர்களுக்குப் புரிகிறதா?

கன்னடமும் மற்ற மொழிகளும் ஏழு எட்டு என ஞானபீட விருதுகளும் மற்ற விருதுகளும் வாங்கிக் குவித்திருக்கையில் தமிழுக்கு இரண்டே இரண்டு என்பதற்கு காரணம் தெரிகிறதா?

மக்களோடு கலந்துவிட்ட மக்கள் நேசிக்கிற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் கொண்டாடாமல் இரண்டு தலைமுறைகள் போய்விட்டதை நீங்களெல்லாம் உணரவே மாட்டீர்களா?

இந்த நோக்கத்தில்தான் சிவகுமார் பேசுகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சிவாஜியையும் கண்ணதாசனையும் கொண்டாடாமல் விட்ட சமூகத்திற்கு(அவர்கள் அவர்களது துறையில் ராஜாவாக மட்டுமின்றி சக்கரவர்த்திகளாகவும் விளங்கினார்கள் என்பது வேறு விஷயம்.) இவர்கள் இருவரைப்பற்றியும் பேசத்தகுதியுள்ள ஒருவர் பேசுகிறார் என்பதாகவே நான் நினைக்கிறேன்.

இப்போது மகாபாரதத்திற்கு வருவோம்.

திரு சிவகுமார் ராமாயணம் பேசியபோதே சில முணுமுணுப்புகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தச் சாதனையின் வீச்சு எங்கேயோ சென்றுவிட்டது. இப்போது மகாபாரதம் பேசப்போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். இதையொட்டி சில முணுமுணுப்புகள் மட்டுமின்றி சில விமரிசனங்களும் வந்துள்ளன. மகாபாரதத்தை அவர் எப்படி அணுகப்போகிறார், அதனை எப்படி வெளிப்படுத்தப்போகிறார், எந்தக் கோணத்தில் அது அவரிடமிருந்து வெளியாகப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

ஏன், இன்றைய நிலையில் அவருக்கே அது தெரியாது என்றே நினைக்கிறேன்.

அண்ணா கம்பராமாயணம் படித்துக்கொண்டிருந்தபோது அது ‘கம்பரசமாகவெளிப்படப்போகிறது என்று யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும்?

என்னுடைய பதிவில் கேள்வி எழுப்பிய நண்பர் மகாபாரதம் பற்றிய கேள்வியில் சிவகுமாரின் நோக்கம் பற்றி தவறுதலாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ‘சோ எழுதிய புத்தகத்தையும் படித்துவிட்டா? என்பதுதான் அவர் எழுப்பி இருக்கும் கேள்வி. பின்னூட்டத்தில் அவர் அது பற்றி விளக்கவும் செய்கிறார். சோ சிவகுமாருக்கு நல்ல நண்பராகவும் சகநடிகராகவும் இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழ்ச்சமூகத்தில் சோ எப்படிச் செயல்படுகிறார் என்பதுபற்றி அந்த நண்பர் கேள்வி எழுப்புகிறார்.

நண்பரின் கேள்வி நியாயமானது. ஆனால் சிவகுமார் பற்றி இப்படியொரு சந்தேகம் எழும்பத்தேவையில்லை. ஏனெனில் சிவகுமார் யாரையும் அவ்வளவு சுலபமாகப் பின்பற்றுகிறவர் அல்ல. யாரையும் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்கிறவரும் அல்ல. விவேகாநந்தரைக்கூட கேள்விகளுடன்தான் அணுகுகிறவர். காந்தியைப் புகழ்ந்து பேசிய தவப்புதல்வர்கள் கேட்டுப்பாருங்கள்... ‘மனைவியை மலம் அள்ளச்சொல்லுகிறார் காந்தி. அந்த ஆள் மனுஷனா?என்று கேட்கிறார். ராமாயணக்கதையில் ராமனை இவர் செய்த விமரிசனம் புவியரசு கோவைஞானி போன்ற இலக்கிய அறிஞர்களையே உலுக்கியது.

சோ சிவகுமாருக்கு மிக நல்ல நண்பர்; மிக நெருங்கிய நண்பர். ஆனால் அதற்காக சோவின் கருத்துக்களை சிவகுமார் ஏற்றுக்கொண்டவர் என்றோ அவரைப் பின்பற்றுகிறவர் என்றோ பொருள்கொள்ள முடியாது. சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த தமிழ் இனம் சார்ந்த சோவின் எந்தக்கருத்தையும் சிவகுமார் ஏற்றுக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடன் பல விஷயங்கள் தொடர்பாக விவாதித்திருக்கிறேன். எந்த விஷயத்திலும் சோவின் கருத்தை சிவகுமார் பிரதிபலித்ததாக எனக்கு நினைவில்லை.

ஈழ விஷயத்தில்கூட சோவுக்கு முற்றிலும் எதிரான கருத்தைக்கொண்டவர்தான் சிவகுமார்.

இது ஒரு புறமிருக்க மகாபாரதம் பற்றிப்பேசப்போகிறவர் சோ எழுதியிருக்கும் மகாபாரதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வதே தவறு என்றும் நான் நினைக்கவில்லை.

சிவகுமாருடைய மகாபாரத உரையில் சாதியை உயர்த்தும் விஷயம் வராது என்று நிச்சயம் நம்பலாம். கடவுளை உயர்த்திப்பேசும் போக்கு இருக்காது என்பதும் கிருஷ்ணனின் பெருமைகளை உயர்த்திப்பேசுவதும் இவரது நோக்கமாக இருக்காது என்றும் நான் நம்புகிறேன்.

சரி, இந்த விவகாரம் குறித்து சிவகுமார் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா? அவர் எழுதி அனுப்பிய பதில் இது;

நான் மகாபாரதம் படிப்பது ஏதோ வயதான காலத்தில் காசி ராமேஸ்வரம் என்று புனித தலங்களுக்குச் சென்று புண்ணிய நதிகளில் மூழ்கி பாவம் தொலைத்து பகவான் தரிசனம் கொண்டு மோட்சத்தை நோக்கிப் பயணிக்கும் கோணத்தில் அல்ல என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

செம்மொழி மாநாட்டில் என் உரையைக் கேட்டவர்களுக்குத் தெரியும்.

பொழுது விடிந்தால் ‘ஏன் விடிகிறது, இன்று எத்தனை வீடுகள், எத்தனைத் தெருக்களுக்குப் போய் மலம் அள்ள வேண்டும்?என்ற உச்சகட்ட வேதனையுடன் வாழும் – உன்னை ஒத்த மனிதச்சகோதரன் செய்யும் வேலையை ஒரு நாள் ஒரேயொரு நாள் நீ நினைத்துப் பார்த்திருக்கிறாயா?

டாய்லெட்டில் உன் மலத்தையும் சிறுநீரையும்கூடத் திரும்பிப்பார்க்காமல் ஃபிளஷ் செய்யும் உனக்கு அவன் வலி எப்படித்தெரியும்?

என்னதான் வார்த்தை ஜாலங்களால் அதை வர்ணித்தாலும் அந்தச் சகோதரன் வலி அவனுக்குத்தான் தெரியும்.

நீ கற்பனைக்கூடச் செய்யமுடியாத – அந்த கடைநிலை ஊழியனாக்கப்பட்ட சகோதரன் செய்யும் பணிக்காக அவனை கடவுளுக்குச் சமமாக மதிக்கவேண்டும் என்று என் பிள்ளைகளிடம் கூறியுள்ளேன்.

மனுஸ்மிருதி பற்றிக்கேள்வி எழுப்புகிறவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில்.

.சாதிகள் பற்றிப்பேசவோ கடவுளின் மகிமைகளைச் சொல்லவோ என் மகாபாரத உரை நிச்சயம் அமையாது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.

பீஷ்மர், தர்மர், கர்ணன், கிருஷ்ணன் – கதாபாத்திரங்களின் வழியாக இன்றைய தலைமுறைக்குப் பயன்படும் சேதி ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுவதற்காகவே நான் மகாபாரதம் படிக்கிறேன்.

மண்ணில் வாழும் மனிதன் சக மனிதனைச் சமமாக மதிக்கவேண்டும். அவன் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை இல்லாத மனிதனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். கர்வமில்லாமல் வாழ வேண்டும்.

பூமிப்பந்தில் உள்ள எல்லா ஊரும் நம் ஊரே. மண்ணில் பிறந்த மக்கள் அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற உண்மையான உணர்வுடன் வாழ ஏதாவது செய்தி மகாபாரதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்வதே என் நோக்கம்.

காலங்காலமாகக் கொண்டாடப்படும் ஒரு காவியத்தை படிப்பதுகூடத் தவறு என்று வாதிடுவது சரியா என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நன்றி!

அன்புடன்,

சிவகுமார்.

Sunday, January 8, 2012

நன்றி நண்பர்களே நன்றி!


ஒரு வாரம் எப்படி ஓடிற்றென்றே தெரியவில்லை. அவ்வளவு வேகமாக ஓடிவிட்டது.

தமிழ்மணத்தில் ‘இந்த வார நட்சத்திரமாக இருந்தது ஒரு சுவாரசியமான அனுபவம். திருமணம் போன்ற ஒரு விசேஷ நிகழ்ச்சியில் நண்பர்களும் சுற்றமும் சமூகத்தின் பெரிய மனிதர்களும் கூடியிருக்கும் இடத்தில் எல்லாருடனும் ஒன்றாக மகிழ்வும் நிறைவுமாய் கலந்திருந்துவிட்டுப் பிரிவதைப் போலுள்ளது.

தமிழ்மணம் தந்த இந்த வாய்ப்பைக் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்யலாம் என்றே முடிவெடுத்தேன். முதலில் பதிவுலகமும் எழுத்துலகமும் பற்றிய கட்டுரை ஒன்று. அடுத்து இந்திரா காந்தி பற்றிய கட்டுரை, இளையராஜாவா ரகுமானா என்று ஒரு கட்டுரை, கமலஹாசன்-சுஜாதா சந்திப்பு பற்றிய கட்டுரை, ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரை, மற்றும் சிவகுமாருடைய பேட்டி என்று முடிவாயிற்று.

இவற்றில் இந்திரா காந்தியைப் பற்றிய கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாக நினைக்கிறேன். ஆனால் வாசகர்களின் கவனம் நான் நினைத்த அளவுக்கு அதன் மீது பதியவில்லை என்றே தோன்றுகிறது. அதற்கு வைக்கப்பட்ட தலைப்பான ‘சிக்மகளூரில் ஒரு நாள் என்பது காரணமாக இருக்கலாம். இந்திரா காந்தியுடன் இரண்டு நாட்கள் என்பதுபோல் வைத்திருந்தால் அதிகமான கவனம் ஈர்த்திருக்கமுடியுமோ என்னவோ.

கமல் சுஜாதா சந்திப்பு, ஜெயகாந்தன் பற்றிய நினைவு இவை போக இளையராஜாவா ரகுமானா கட்டுரை நான் எதிர்பார்த்த அதிர்வுகளை ஏற்படுத்திற்று. ஏனெனில் சிலருடைய சில நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அந்தப் பதிவைப் படித்த இளைய தலைமுறையினர் கோபம் கொண்டார்களே தவிர அவர்களால் சரியான காரணங்களைச் சொல்லி வாதாட முடியவில்லை. தவிர இதில் வாதாடுவதற்கும் ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.

திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. அந்தக் கருத்துக்களிலிருந்து மாறுபடுபவர்கள் எத்தனைக் கேள்விகளை எழுப்பிக்கொண்டாலும் சரி, அத்தனைக் கேள்விகளுக்குமான விடை அந்தக் கட்டுரைகளிலேயே இருக்கிறது. தமிழ்த்திரை இசை என்பது இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதாக அவர்களுக்குள்ளாகவே ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் முன்பு இந்தச் சில கேள்விகளை மட்டும் வைக்கிறேன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தியைத் தள்ளிவைத்துவிட்டுப் போவது அவ்வளவு சாதாரணமில்லை. ‘கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் என்று சொல்வார்களே அப்படி நிற்கக்கூடிய பாடல்கள் சில உள்ளன.

1) தமிழில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள்.

2) பி.சுசீலாவின் பாடல்கள்.

3) கண்ணதாசனின் பாடல்கள்

4) சிவாஜிகணேசனின் பாடல்கள்

5) எம்ஜிஆர் பாடல்கள்

6) சந்திரபாபு பாடல்கள்

7) பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்

8) எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்

9) சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

10) டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்

11) வாலி பாடல்கள்..........................................இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தரம்பாள் பாடல்கள்......இப்படியெல்லாம் வகைப்பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியேஇளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?

இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் டிஎம்எஸ் பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப் பாடல்? பேசுவதற்கு வாய் கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு அந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு அந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்.

இந்தப் பட்டியல்களுக்கெல்லாம் பிறகுதான் இளையராஜா பாடல்கள் ,ரகுமான் பாடல்கள், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள், வித்யா சாகர் பாடல்கள் என்று வரவேண்டும். தமிழ்த்திரையிசையின் அடையாளங்களான மேற்கண்ட பாடல்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மத்தியிலிருந்து ஆரம்பிப்பது சில பேருக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாமே தவிர நேர்மையோ அறமோ கிடையாது.

எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும் ரகுமானைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு போங்கள். ஆனால் இளையராஜாவிலிருந்துதான் தமிழ் திரை இசை துவங்கியது என்பதுபோல் சொல்லாதீர்கள். இதோ அப்படிச் சொல்லிமுடிப்பதற்குள் ரகுமான் வந்துவிட்டார். அதுவும் சாதாரணமாக வராமல் உண்மையிலேயே புயல் போல் வந்திருக்கிறார். ஆஸ்கார் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும். அவருடைய இசை ஆல்பங்கள் வெளியாகின்ற தினங்களில் அரபுதேசங்களிலும் வேறு நாடுகளிலும் மக்கள் கியூவில் நின்று அவற்றை வாங்குகிறார்கள் என்கிறது செய்தி. இன்னொரு நாட்டில் ஆல்பம் வெளியான அன்று தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது என்கிறது இன்னொரு செய்தி. முன்னோர்களை அப்படியே தலையில் ஏறி மிதித்துவிட்டுத் தனக்குப் பிடித்த நபருக்குக் கிரீடம் சூட்டுவது மிகவும் ஆபத்தானது. பாசமலர் படத்தில் சிவாஜிகணேசன் ஒரு சட்டிக்கதை சொல்லுவார்.(வசனம் ஆரூர் தாஸ்) அந்தக் கதைதான் நினைவு வருகிறது.

இவ்வாரத்தில் எனக்கு வந்த சில தொலைபேசிகளைப் பற்றிச்சொல்ல வேண்டும். தாம்பரத்திலிருந்து பிரகாஷ் குமார் என்பவர் தொலைபேசி செய்திருந்தார். “இளையராஜாவா ரகுமானா கட்டுரைப் படித்தேன். நான் அன்னக்கிளி படம் வந்தபோது எஸ்எஸ்எல்சி முடித்தவன். அந்த நாட்களிலிருந்துதான் நான் தனியாகவும் நண்பர்களுடனும் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். இளையராஜாவின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஆனால் எங்கப்பா எப்போதுமே பழைய பாடல்களின் ரசிகர். பழைய பாடல்கள் போல் வராது என்பார். அவருக்கும் எனக்கும் எப்போதுமே இந்த விஷயத்தில் ஆகாது. நான் என்னுடைய கருத்துக்களை விட்டுக்கொடுத்ததே இல்லை. உங்கள் பதிவை உங்களுடைய நண்பர் வீட்டில்தான் படித்தேன். படித்துவிட்டு ஒரு இரண்டு நாட்கள் எங்க அப்பா கேட்கும் பாடல்களைக் கேட்டுப்பார்த்தேன். குறிப்பாக ‘நினைக்கத்தெரிந்த மனமே பாடலும் ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்துபாடலும் என்னை என்னவோ செய்தன. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்காமல் இருந்தது இத்தனை நாட்களும் வாழ்வில் எதையோ இழந்ததைப்போல் உணர்கிறேன் என்றார். இதுதான் இதுதான் எனக்கு வேண்டியிருந்த பலன். யாரோ ஒருவருக்கு ஒரே ஒருவருக்கு இதுபோன்ற எண்ணம் வந்திருந்தாலும் போதும் என்றே தோன்றுகிறது.

இறுகப் படிந்துவிட்ட சில படிமங்களை உலுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் தமிழில்தான் இம்மாதிரியான குளறுபடிகள் அதிகம். அத்தனைக்கும் இந்த ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம். சிவாஜிகணேசனை மிஞ்சிவிட்டார் கமல் என்று சொல்லுவது, கண்ணதாசனை மிஞ்சிவிட்டார் இன்னொருவர் என்று சொல்லுவது இம்மாதிரியான போக்குக்கெல்லாம் கர்நாடகத்திலெல்லாம் இடமே இல்லை. ராஜ்குமாரை மிஞ்சிவிட்டார் இன்னொருவர் என்று சொல்லிவிட்டு எவனும் கர்நாடகத்தைவிட்டு உயிரோடு போய்விடமுடியாது.

நம்முடைய அடையாளங்களாக பத்துவருடத்திற்கு ஒருவரை மாற்றிக்கொண்டிருந்தோமானால் மாற்றியவரும் நிற்கமாட்டார். மற்றவனும் இந்த சமுதாயத்தை மதிக்கமாட்டான். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அரசியல், இலக்கியம், திரைப்படம், கலையுலகம் எல்லாவற்றிலும் நாம் பாட்டுக்கு என்னென்னமோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு பத்து வருடங்களுக்கு அல்லது இருபது வருடங்களுக்கு ஒருவரை மாற்றிக்கொண்டே இருக்கிறோம்.

இன்னொரு திரையுலகைச் சேர்ந்த நண்பர் போன் செய்திருந்தார். அவர் எம்எஸ்விக்கும் நல்ல நண்பர். அவர் சொன்னார். “இன்றைய இளையதலைமுறையினரில் சில பேர் இதுமாதிரி கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான். அதுவும் நெட்டில்தான் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் கருத்து எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தைத் தந்தது. இந்த விஷயம் எப்படியும் எம்எஸ்விக்குத் தெரியாது. நான் பிரிண்ட் அவுட் எடுத்து அவருக்குத் தரலாம் என்றிருக்கிறேன் என்றார். எனக்கு முழு அளவு நிறைவாயிருந்தது. ஏனெனில் எனக்கு எம்எஸ்வியைப் பழக்கமில்லை. தூரத்தில் பார்த்திருக்கிறேனே தவிர அறிமுகமில்லை. இத்தனை வருடங்களாக இந்தத் தமிழ் சமூகத்திற்கு இவ்வளவுபெரிய இசைக்கொடையை வழங்கியிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் மேதைமையைச் சொல்லுவதுதான் நேர்மை என்ற அளவில் மட்டுமே இங்கே அவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.

அந்த நண்பரிடம் “அப்படியே ராமமூர்த்திக்கும் ஒரு பிரதி சேர்ப்பித்துவிடுங்களேன் என்று வேண்டுகோள் வைத்தேன்.

தமிழ்மணமும் சரி என்னுடைய வலைத்தளமும் சரி வெவ்வேறு தளங்களில் உள்ள பெரிய பெரிய ஆளுமைகளை எல்லாம் தொட்டிருக்கிறது என்பது முக்கியமானது. அதற்கு சிவகுமாரின் பேட்டி காரணமாக இருக்கலாம்.

பல பெரியவர்கள் படித்துவிட்டுக் கருத்துச் சொன்னார்கள். சில பேர் தங்களைப் பற்றிக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லிவிட்டதால் விட்டுவிடுகிறேன். நிறைய ஐஏஎஸ்கள், நடுவண் அரசு மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் என்று படித்தவர்கள் நிறைய.

நிறைய டாக்டர்களை உருவாக்கியவரும் புகழ்பெற்ற டாக்டர்களில் ஒருவருமான டாக்டர் எம்.ராஜேந்திரன் போன் செய்திருந்தார். “இணையத்தில் தமிழ் படிக்கலாம் என்று உட்காருவேன். ரொம்ப மோசமான, ரொம்ப ஸில்லியான விஷயங்களையெல்லாம் எழுதியிருப்பாங்க. இணையம் என்பது என்னமாதிரியான விஞ்ஞான வளர்ச்சி. அத்தனைப் பெரிய தொழில்நுட்பத்தை என்ன இம்மாதிரியெல்லாம் உபயோகிக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும். உங்க பிளாக் ரொம்ப நன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக சிவகுமார் பேட்டி சூப்பர்ப் என்றார்.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கச் செயலாளர் தாமோதரன் போன் செய்து “அத்தனைக் கட்டுரைகளையும் படிச்சேன். அவ்வளவும் பயனுள்ளதாக இருந்தது. ரொம்பவும் வித்தியாசமாக இருந்ததுன்றதுதான் முக்கியம். அத்தனையையும் அப்படியே புத்தகமாகப் போட்டுவிடலாம் அப்படியிருந்ததுஎன்றார்.

தற்சமயம் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் இருக்கும் என்னுடைய மகள் “ப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு அவ்வளவையும் படிச்சிடறேன். எல்லாமே புதுசாவும் நல்லாவும் இருக்கு என்றாள். ‘ரொம்பக் கஷ்டப்பட்டு அவள் படிப்பதற்குக் காரணம் பெங்களூரில் பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் படிக்கமுடியாததுதான்.

ஒரு நல்ல வாய்ப்பை எனக்குத் தந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் குறிப்பாக மெயிலிலும் தொலைபேசியிலும் என்னைத் தொடர்பு கொண்ட திரு சங்கரபாண்டி அவர்களுக்கும், சென்ற வாரம் பூராவும் பதிவுகளில் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் ஏற்கெனவே ஃபாலோயர்களாக இருந்தவர்களுக்கும் புதிதாக என்னுடைய ஃபாலோயர்களாகச் சேர்ந்திருக்கும் திருவாளர்கள் சோம்லே,வெங்கட்குமார், அமிர்தநாதன் பிரசாந்தன், சில்ட் பீர்ஸ், சுனாபானா, இடிமுழக்கம், ப்ரியமுடன் வசந்த், வெங்கட் நாகராஜ், டாக்டர் பி.கந்தசாமி, ஸ்ரவாணி, தண்டோரா, விசா, முன்பனிக்காலம், குமரன், பிரபாகர் ராமசாமி, அசோக் குமார், கீதமஞ்சரி, வெண்புரவி, ஜீ..., ரியாஸ் அகமது, மாணவன் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க கேள்விகளுக்கான பதில்களைத் தம் கைப்படவே எழுதியனுப்பியதோடில்லாமல் பத்திரிகைகளில் வராத புகைப்படங்களாக வேண்டும் என்று கேட்டதற்கேற்ப படங்களைத் தேடியெடுத்து அனுப்பி முழு ஒத்துழைப்பு தந்த திரு சிவகுமார் அவர்களுக்கு என்னுடைய நன்றி.

இன்னமும் எனக்கு கணிணி பற்றியெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது. எழுதத்தெரியும் அவ்வளவுதான். அதையெல்லாம் இத்தனை நாட்களும் புகைப்படங்களுடன் ஜோடித்து தமிழ்மணத்திற்கு அனுப்பிவைத்துக்கொண்டிருந்த என்னுடைய இளைய மகளுக்கும் நன்றி.

சரி நண்பர்களே உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றி,

நாம் தொடர்ந்து சந்திப்போம்.!

Saturday, January 7, 2012

தமிழ்மணத்திற்கு நடிகர் சிவகுமாரின் சிறப்புப் பேட்டி- சூர்யா, கார்த்தி,தாயார்,துணைவியார் பற்றித் தொடர்கிறார். –பகுதி ; 2


க்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றான இணைய தளத்துக்கு நடிகர் சிவகுமார்வழங்கும் முதல் சிறப்புப் பேட்டி இது. தமதுபால்யகால நினைவுகளைப் பற்றிப் பேசிய சிவகுமார் தொடர்ந்து தமது மகன்கள், இலக்கியம், மேடைப்பேச்சு, உடல் ஆரோக்கியம், கடவுள் நம்பிக்கை என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து பேசுகிறார்

கே ; பொதுவாக நடிகர்கள் என்றால் தம்மைச்சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அது நண்பர்கள் கூட்டமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உங்களைப் பொருத்தவரை அப்படி ஒரு கூட்டத்தை எப்போதுமே வைத்திருப்பதுபோல் தெரியவில்லை. உங்களுடைய நட்பு வட்டம் மிகப்பெரியது என்றாலும் அவர்களிடம்கூட ஒரு வரைமுறையுடன்தான் பழகுவீர்கள் என்றே தோன்றுகிறது. இது எப்படி நீங்களாக அமைத்துக்கொண்டதா? திரையுலகில் பட்டும்படாமலும் நட்பு பாராட்டுவது எப்படி சாத்தியமாயிற்று?

சிவகுமார் ; எளிமையான கிராமத்து வாழ்க்கை ஏழைகளை நேசிக்கப் பழக்கியது. இயற்கையோடு இணைந்து எட்டு மணிநேரம் பத்து மணிநேரம் என்று ஓவியங்கள் தீட்டிய காலங்களில் தனியே இருந்தது தனிமை வசப்பட காரணமாக அமைந்தது. அந்தத் தனிமை உள்முகப் பார்வை பார்ப்பதற்கு என்னைப் பழக்கிவிட்டது. உடன் படிப்பவர்களாயினும், உடன் நடிப்பவர்களாயினும் அவர்களை எட்ட நின்று கூர்ந்து கவனித்து அவர்கள் பலம் என்ன, பலவீனம் என்ன நம்மிடம் இருக்கும் தகுதிகள் என்ன என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க தனிமை வசதியாக இருந்தது. Loneliness என்பது வேறு; alone என்பது வேறு. வேறு யாரும் நம்மோடு இல்லாமல் நாம் மட்டும் தனியாக இருப்பதுஒன்று. மற்றவர்களால் கைவிடப்பட்டுத் தனிமையில்வாடுவது வேறு. Loneliness என்ற சோகம் என்னைத் தீண்டியதே இல்லை. பத்தாயிரம் பேரை மகிழ்விக்க பல மணிநேரம் பேசவும் தெரியும், பத்து நாட்கள் யாரோடும் பேசாமல் தனிமையில் இனிமை காணவும் முடியும்.

கே ; உங்களைத் திரையுலக மார்க்கண்டேயன் என்கிறார்கள். அதற்கேற்ப எப்போதும் இளமையாய் காட்சியளிக்கிறீர்கள். இதற்கு உங்களுடைய கட்டுப்பாடான வாழ்க்கை மற்றும்யோகா இவைதான் காரணமா அல்லது மனம் ஒரு பெரிய பங்கைச் செலுத்துகிறதா?


சிவகுமார் ; உயிரும் அறிவும் இணைந்த சூக்கும் உடல் வேறு, ஐந்து புலன்களுடன் கூடிய இந்த உடல் வேறு. நான் என்ற வார்த்தை இந்த இரண்டு உடம்புகளின் கூட்டு வடிவம். முதலில் சொன்ன உயிரும் அறிவும் இணைந்த ‘நானுக்கு வயதாவதே இல்லை. அது என்றும் சுறுசுறுப்பாகச் செயல்பட, ஆரோக்கியமாக இருக்க பௌதிக உடம்பை நாம் தளர்ச்சியடையவிடாமல் உடல் உறுப்புக்களை உடற்பயிற்சி யோகா செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.எனக்கு என்றுமே வயதாகாது. வயோதிகம் எனக்கு வராது. காலண்டரில் பிறந்த வருடம் கூடிக்கொண்டே போகலாம். நான் என்றும் இளமையாக நிரந்தரமாக இருப்பேன். என்னைச் சுற்றியுள்ளோர் வயதாகி இறக்கலாம். பூமிக்கும் அழிவு ஏற்படலாம். நான் அழிவற்றவன், நிரந்தரமானவன் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுதான் எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இளமைத்தோற்றத்தைக் காப்பாற்றத் தூண்டுகிறது. அறிவு பூர்வமாக யோசித்தால் இது முட்டாள்தனம் என்று எனக்குத் தெரியும். இங்கு நான் அறிவைப் பயன்படுத்துவதில்லை. மனம் அலாவுதீனுக்கு உதவும் பூதம் போல. அது நீ கேட்டதைபபெற்றுக்கொடுக்கும். மனது லாஜிக் பார்க்காது. மனதில் நீ ஒரு நாள் கோடீஸ்வரனாகலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது முயற்சியாகி ஒரு நாள் உன்னைப் பணக்காரனாக்கிவிடும். மனதில் நீ உன் நண்பனைக் கொலை செய்யப்போகிறாய் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நீ நிச்சயம் கொலைகாரனாகிவிடுவாய் என்று காப்மேயரும் தம்முடைய நூலில் சொல்கிறார்.
ஒரு நாள் நான் போற்றப்படுவேன் என்றுபதினாறு வயது முதல் ஒரு குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. முடிந்தவரை நல்லவனாக, அனைவரையும் நேசித்து அன்பு காட்டுபவனாக வளர்வேன் என்பதையும் ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னுடைய ஆழ்மனதின் லட்சியம்தான்.


கே ; சரி, திரைபடத்துறையிலிருந்து சட்டென்று தொலைக்காட்சிக்கு வந்த பெரிய கதாநாயகன் நீங்கள்தான். தொலைக்காட்சி சீரியல்களில் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே அதிலிருந்து வெளிவந்து மேடைகளில் பேச ஆரம்பிக்கிறீர்கள். இப்போது இதையே தொடரவும் செய்கிறீர்கள். இந்த மாற்றத்திற்கும் மனம்தான் காரணமா?

சிவகுமார் ; ஆமாம் மனம்தான் காரணம்....... உனக்கு எழுபது வயதாகிறது. நீ என்ன பெரிதாகச் சாதித்துவிட்டாய்? நீ காந்தியில்லை, காமராஜர் இல்லை, கம்பன் இல்லை. உன்னுடைய துறையில் எம்ஜிஆரும் சிவாஜியும் அரசியலிலும் கலையுலகிலும் சாதித்ததை நீ நெருங்க முடியாது என்று தலையில் அடித்துச் சொல்கிறது மனம்.

ஏழு ஆண்டுகள் ஓவியம் தீட்டியவன், நாற்பது ஆண்டுகள் ஐம்பது இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியவன், எண்பத்தேழு கதாநாயகிகளோடு இணைந்து நடித்தவன் என்று பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காதே. பழைய குப்பைகளை மூட்டைகளாக்கிச் சுமக்காதே. புகழுக்கு மயங்காதே. இன்னமும் நீ போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நூறு படங்களில் நீ காட்டிய திறமையை உன் பிள்ளைகள் பத்தே பத்து படங்களில் காட்டிவிட்டார்கள். இருநூறு படங்களில் நீ சாதித்ததை இருபத்தைந்து படங்களில் அவர்கள் தாண்டிவிட்டார்கள்.

பிள்ளைகள் புகழில் குளிர் காயாதே.உனக்கு என்று ஒரு வழியைத் தேர்ந்தெடு. யாரும் போகாத வழியாக, எளிதில் யாரும் நெருங்க முடியாத வழியாகப் பார் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால்தான் நாற்பது வருடங்கள் நடித்தது போதும். அடுத்தவர் எழுதிக்கொடுத்த வசனங்களை கிளிப்பிள்ளையாய் ஒப்புவித்துக் காசு வாங்கியது போதும். உனக்கு நீயே எசமான். உனக்கு நீயே படைப்பாளி. இலக்கியங்களைப் படி; வரலாற்றைப் படி; வாழ்க்கையைப் படி; உன்னுடைய கோணத்தில் அதனை உரையாக்கு. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிதொட்டியெல்லாம் போய் ஆயிரம் நாடகங்களில் நடித்த அனுபவம் உனக்கு இருக்கிறது. மக்களை – இந்தியாவின் பல பகுதி மக்களை – மேடை நடிப்பில் மகிழ்வித்தவன் நீ. இப்போது நீயே உரையை எழுது! என்றும் உலகுக்குப் பயன்படும் இலக்கியத்தை, வரலாற்றை, உண்மைச் சம்பவங்களை உரையில் கொண்டு வா என்கிறது.அதன் விளைவுதான் பத்தாயிரத்திற்கும்மேலான கம்பனின் பாடல்களில் ஆயிரம் பாடல்களைப் படித்து, அவற்றில் நூறு பாடல்களைத் தேர்வுசெய்து கம்ப ராமாயணக் கதையை அந்த நூறு பாடல்களுக்கிடையேயும் நூலிழைப்போல் வரவழைத்து பேச்சுமொழியில் இரண்டு மணி பத்து நிமிட நேரத்தில் சொல்லிமுடித்தேன்.

இதற்குக் கிடைத்த பாராட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தியாவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த 2011-ல் முன்னணி நாடாக ஊ.ழலில் திளைக்க வைத்து உலகின்முன் தலைகுனியவைத்த இன்றைய அரசியல்வாதிகளைக் கண்டு உடைந்து நொறுங்கி அன்றைய அரசியல் தலைவர்கள் ஏழு பேரைப்பற்றி ‘தவப்புதல்வர்கள் என்ற தலைப்பில் பதினாறாயிரம் பேர் முன் ஒரு உரை நிகழ்த்தி டிவிடி வடிவமாக்கினேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது போக பள்ளி கல்லூரிகளில் அதனைத் திரையிட்டுக்காட்ட ‘அகரம்முயற்சி செய்துவருகிறது.

கே ; அடுத்து மகாபாரதத்தையும் கம்பராமாயணம் போல் பேச நீங்கள் தயாராகி வருகிறீர்கள் என்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே....மகாபாரதம் கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் அல்லவா......?

சிவகுமார் ; ஆமாம் மகாபாரதத்தையும் கம்பராமாயணம் பாணியில் சொல்லவேண்டும் என்ற முயற்சியில் தற்சமயம் என்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சீரியலே எழுபது மணிநேரம் ஓடுகிறது. சோ எழுதிய மகாபாரதமோ 1500 பக்கங்கள் கொண்டது. இவற்றையெல்லாம் பார்த்து, படித்து உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் எக்காலத்திற்கும் சொல்லப்பட்ட தத்துவங்களைப் பிரித்தெடுத்து கதையோடு சேர்த்து அதன் மொத்த சாரமும் வருகிறமாதிரி மூன்று மணி நேரத்தில் சொல்லவேண்டும் என்பதற்காக அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

கே ; உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

சிவகுமார் ; எனக்கென்று தெளிவான, முடிவான, முழுமையான அடையாளம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எதிலும் நான் பூரணத்துவம் பெற்றுவிடவில்லை.

நான் ஓவியன்தான். ஆனால் சரித்திரம் படைத்த ஓவியனல்ல. நான் நடிகன்தான். ஆனால் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவனல்ல. நான் யோகா பயிற்சியாளன்தான். ஆனால் என்னைவிட அதிகம் யோகாசனங்கள் செய்து என்னைவிடவும் ஆரோக்கியமாக இதே எழுபது வயதில் இருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். நான் புத்தகங்கள் வழி அறிவை அதிகம் வளர்த்துக்கொண்டவனல்ல. வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் பெற்றவன். ஆனால் சிவாஜியும் எம்ஜிஆரும் பெற்ற அனுபவங்கள் இன்னமும் கடுமையானவை. ஆழமானவை.நான் படித்தவனல்ல, படிக்கிறவன்.படிக்கப் படிக்க என் அறியாமையின் விஸ்தீரணம் கூடிக்கொண்டே போகிறது. அறிய வேண்டிய எல்லை தொடுவானமாகத் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.என்னை நல்ல பேச்சாளனாக நான் கருத முடியாது. உயர்ந்த தமிழ் நடையில் உணர்வுபொங்கப் பேசி மக்களை மயக்கும் பேச்சாளர்கள் இங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

என்னுடையது பேச்சு மொழி. கம்பனின் கரடுமுரடான கவிதை வரிகளை கைவண்டி இழுப்பவனும் புரிந்துகொள்ளும் எளிய பேச்சு மொழியில் சொல்லியுள்ளேன் என்பதே உண்மை...............ஆகவே, எதிலும் நான் முழுமை அடைந்துவிடவில்லை. இந்த வயதில் இன்னமும்கூட ஆரோக்கியமாக இருந்திருக்கலாம். இன்னும் மிகச்சிறந்த ஓவியங்கள் தீட்டியிருக்கலாம். இன்னும் ஆழமான வேடங்கள் ஏற்று அற்புதப் படைப்புகளைத் திரையில் தந்திருக்கலாம். ஆக நானே என் முதுகைத் தட்டிக்கொள்ளக்கூடிய சாதனை எதையும் நான் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கே ; உங்களுடைய பேச்சுக்களில் பெண்களைக் கொஞ்சம் அதிகமாகத் தூக்கிவைத்துப் பேசுகிறீர்கள் என்பதுபோன்ற தொனி இருக்கிறதே......?

சிவகுமார் ; உண்மைதான். நான் பெண்களை அதிகமாகப் போற்றிப் பேசுவதாகச் சொல்கிறார்கள். அது பாராட்டா விமர்சனமா என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும் பெண்களை நான் படைத்து, காக்கும்- பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும்தான் பார்க்கிறேன். பஞ்சம் நிரம்பிய காலத்தில் என்னைப் பெற்று, கணவனைப் பறிகொடுத்தபின், பாழும்வெயிலில் காய்ந்து, கூலி வாங்காத வேலைக்காரியாய் பொழுது புலர்ந்ததிலிருந்து மறையும்வரை மண்ணோடு மல்லாடி என்னை உருவாக்கிய தாய் தனக்கென்று எந்த சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை.

எனக்கு மனைவியாக வந்தவளும் மாமியார் வழியில் நின்று ஏணிமீது நான் மென்மேலும் ஏறிட துணை நின்றாளே தவிர, தன் தேவை, தன்னுடைய விருப்பம், தன்னுடைய சுகம் என்று நினைத்து அதற்காக அவள் எதுவும் செய்துகொள்ளவில்லை. எதையும் என்னிடம் இதுவரைக் கேட்டதும் இல்லை. சாதாரணத் தோற்றத்துடன் ஒரு சராசரிப் பெண்ணாக இறைவன் என்னைப் படைத்துவிட்டான் என்று சலித்துக்கொண்டாலும் இரண்டு அசாதாரணமான பிள்ளைகளை உருவாக்கியதன் மூலம்இன்று பெருமைக்குரிய தாயாக உயர்ந்துவிட்டாள். இன்று அந்தப் பிள்ளைகளிடம் காணப்படும் அத்தனைச் சிறப்புக்களுக்கும் இந்த அம்மையாரே பெரிதும் காரணம்.

கே ; முத்தாய்ப்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சிவகுமார் ; இந்த வீடு, வாசல், குடும்பம், குழந்தைகள் அவர்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, உன்னுடைய ஓவியங்களாலும் உன்னுடைய சிறந்த படைப்புக்களாலும் கிடைக்கின்ற பெருமிதம் இதெல்லாம் மாயை அல்ல, இதுதான் உண்மை. பிறவிகளில் மகத்தானது, முழுமையானது, உயர்வானது, மனிதப்பிறவிதான். தேவர்கள், கடவுளர்கள் எல்லாம் நம் முன்னோர் சிருஷ்டித்த கதாபாத்திரங்களே. வானுலகம் சென்று தேவர்களுடன் கைகுலுக்கி கடவுள் பாதத்தில் பூப்போட்டு வணங்கிவிட்டு வந்தேன் என்றெல்லாம் யாரும் இங்கு சொல்லிவிட முடியாது. சென்ற பிறவியில் என்னவாக இருந்தோம், என்னவெல்லாம் செய்தோம் என்பதையோ, அடுத்த பிறவியில் யாராகப் பிறக்கப்போகிறோம் என்ன செய்யப்போகிறோம் என்றோ யாரும் சத்தியமாகச் சொல்லிவிட முடியாதுமகத்தான இந்த மனிதப்பிறவியில் மண்ணுலக வாழ்வில் மக்கள் போற்றும் மனிதனாக, சமுதாயத்திற்குப் பயன்படும் சத்தியவானாக அன்பு கருணை வடிவமாக விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவோம் என்பதைத்தான் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

Friday, January 6, 2012

தமிழ்மணத்திற்கு நடிகர் சிவகுமாரின் சிறப்புப் பேட்டி - ‘சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை! – பகுதி; 1

மிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்ப்பு இது. இது எப்படி இவருக்குக் கைவந்தது? இந்தத்துறையை எப்படித் தேர்ந்தெடுத்தார் இவர்?

இதுவரை எங்கும் பேசியிராத விஷயங்களாகவும் பத்திரிகைகள் எதிலும் கொடுத்திராத பேட்டியாகவும் இருக்கவேண்டும் அப்படிப்பட்ட விஷயங்களைத் தமிழ் இணைய நேயர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தேன். மகிழ்வுடன் ஒப்புதல் தெரிவித்த சிவகுமார் இரண்டே நாட்களில் கேள்விகளுக்கான பதில்களைத் தம் கைப்பட எழுதி அனுப்பிவைத்தார்.


கே; நினைவாற்றலுக்குப் பெயர் போனவர் நீங்கள்.... உங்கள் பால்யகால அனுபவங்களின் நினைவுகள் எங்கிருந்து தொடங்குகின்றன?

சிவகுமார்;- பூஜ்ஜியத்தில் என் பிறப்பு துவங்கினாலும் சாகசங்கள் நிறைந்ததாக உள்ளது மட்டுமின்றி இன்னும் வாழ வேண்டும், முழுமையாக இதை வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற வேட்கை என்னுள் கூடிக்கொண்டே போகிறது

வறுமையில் கழிந்த இளமையும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஓவியக்கலை நாட்களும் ஆரம்பகாலத் திரையுலகில் பெற்ற அடித்து வீழ்த்தும் அவமானங்களும் அழகிய படிப்பினையாக எதையும் துணிந்து எதிர்கொள்ளும் துணிவையும் தந்தன.

.

பத்துவயதில் சூலூர் ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை சந்தைக்கு ரும் குளத்தூர் பெரியம்மா நாலணா நாணயம் கொடுத்துவிட்டுப் போவார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் தலை முன்பக்கம், புலியின் உருவம் பின்பக்கம் அச்சாகியிருக்கும் வெள்ளி நாணயம். கையில் வைத்துக்கொள்ளவே கௌரவமாக இருக்கும்.

கோவை திருச்சி சாலையில் பள்ளி முடித்து வீட்டுக்குப் போகும் வழியில் சீனிவாசா காபி கிளப் ஓட்டல் இருக்கும்.உள்ளே இருந்து வீசும் உருளைக்கிழங்கு போண்டா வாசனை உயிரையேவருடி அழைக்கும். உருளைக்கிழங்குபோண்டா நாலணா என்று விலைப்பட்டியலிம் போட்டிருக்கும். ஒரு போண்டா நாலணாவா, இரண்டு போண்டா நாலணாவா?......................தட்டில் இரண்டு போண்டா வைத்துத் தருகிறார்கள். கையில் இருப்பதோ நாலணா மட்டுமே. சாப்பிட்டு முடித்தவுடன் இரண்டு போண்டா விலை எட்டணா என்று சர்வர் சொல்லிவிட்டால் மீதி நாலணாவுக்கு எங்கே போவது? இந்தத் தயக்கத்திலேயே உருளைக்கிழங்கு போண்டாவை நான் ஒரு நாளும் சாப்பிடவே இல்லை.


மாரியம்மன் கோவிலை ஒட்டிய கந்தசாமித்தேவர் பெட்டிக்கடையில் கைமுறுக்கும் குச்சிமிட்டாயும் வாங்கிச் சாப்பிட்டு மனதைத் தேற்றிக்கொள்வேன்.

பொழுது விடியுமுன் அம்மாவுடன் தோட்டம் சென்று இடுப்பில் நாலுமுழ வேட்டி கட்டி, அதை மடியாக மாற்றி இரண்டு மடி பருத்தி எடுத்து அம்பாரத்தில் சேர்த்துவிட்டு, பரபரப்பாக பூக்குடலை எடுத்துக்கொண்டு நாலு பர்லாங் தூரத்திலுள்ள மிளகாய்க்கார பெரியம்மா தோட்டத்திற்கு ஓடி வெள்ளரளி, செவ்வரளி, சாமந்தி, அந்திமல்லிப் பூக்கள் என்று பறித்துக்கொண்டு வந்து வாழை நாரில் மாலை கட்டி மொட்டையாண்டி முருகனுக்குச் சாற்றி-

அன்பே அப்பா அம்மையே அரசே அருட்பெரும் சோதியே


அடியேன் துன்பமெலாம் தொலைத்த துறைவனே

இன்பனே எல்லாம்வல்ல சித்தாகி என்னுளே இயங்கிய பொருளே

வன்பனேன் பிழைகள் பொருத்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே – என்ற வள்ளலார் வரிகளைச் சொல்லி வேண்டிக்கொண்டு நேற்றைய சோளச்சோற்றில் கட்டித்தயிர் விட்டுக் கரைத்துக்குடித்துவிட்டு, உள்ளே ஈயம் பூசியிருக்கும் பித்தளைத் தூக்குப் போசியில் அக்கா செய்து கொடுக்கும் அரிசியும் பருப்பும் சோற்றைப் போட்டுக்கொண்டு வெறும் காலில் விரைசலாய் நடந்து எட்டு முப்பது மணிக்கு சூலூர் போர்டு உயர்நிலைப்பள்ளி போய்ச் சேருவேன்.

கே ; ஆரம்பநாட்களில் சினிமா மீது ஒரு ஈர்ப்பு இருந்ததா உங்களுக்கு?

சிவகுமார் ; சினிமா பார்க்கும் வாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறையே கிடைக்கும் என்பதால் திருச்சி ரோடு கலங்கல் பிரிவில் சொக்கப்பன் பீடிக்கடையை ஒட்டி இரண்டு மரக்கட்டைகளில் தொங்கும் சினிமா தட்டிகளில் சிவாஜியின் பராசக்தி போஸ்டர்களையும், மனோகரா போஸ்டர்களையும், தேவதாஸில் தாடியுடன் காட்சியளிக்கும் நாகேஸ்வரராவ் போஸ்டர்களையும், கவர்ச்சிகரமான ‘கணவனே கண்கண்ட தெய்வம் போஸ்டரையும் பார்த்து பொங்கியெழும் சினிமா ஆசையை அடக்கிக் கொள்வேன்.

வெள்ளிக்கிழமை பள்ளிவிட்டதும் சூலூர் ஷண்முகதேவி தியேட்டரில் புரொஜக்டரை ஒட்டிய காம்பவுண்டுக்கு வெளியே வெட்டி எறியப்பட்ட துண்டுப் பிலிம்களை நானும் நண்பர்களும் பொறுக்கி எடுப்போம். சங்கிலியால் பிணைத்த சிவாஜியும், குஷ்டரோகியாக எம்.ஆர்.ராதாவும், மலைக்கள்ளனாக தலையில் ஸ்கார்ஃபும் இடுப்பில் பெல்டுமாக இருக்கும் எம்ஜிஆர் படமும் கிடைக்கும். புதையல் எடுத்த சந்தோஷத்தில் ஊர் சென்று பூதக்கண்ணாடிக்கு பதிலாக பியூஸ் ஆன மின்சார பல்பின் உள்ளே நீர் ஊற்றிவைத்து இருண்ட வீட்டிற்குள் சாவித்துவாரத்தின் வழி முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம் சூரிய வெளிச்சம் பாய்ச்சி நாலு அடிக்கு மூணு அடி சைஸில் சுண்ணாம்புச் சுவற்றில் தெரியும் நடிகர்களைப் பார்த்துச் சிலிர்ப்போம்.

கூட்டணி சேர்ந்து சினிமா காட்டியது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி சண்டையில் முடிந்துவிட்டது.

பல்ப் என்னுடையது, கண்ணாடி அவனுடையது, பிலிம் உன்னுடையது என்று பாகப்பிரிவினை நடந்தது. அடுத்து பள்ளி இறுதி ஆண்டுவரை ஐந்து ஆண்டுகள் ஊரிலிருந்து புறப்படும் ஐந்து மாணவர்கள் ஒரு கட்சி, நான் தனிக்கட்சி என்று வைராக்கியமாக பகைமைத் தொடர்ந்தது. என்னமாதிரி பகைமை தெரியுமா?

அக்காவுக்கு பதினைந்து வயதில் திருமணம். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை முகூர்த்த நேரம். தாலி கட்டி சடங்குகள் முடிந்ததும் சும்மா இருக்கப் பிடிக்காமல் அன்றும் பள்ளிக்குச் சென்றுவிட்டேன். சண்டைப் போட்டுக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவனின் அண்ணன்தான் என் அக்கா கழுத்தில் தாலி கட்டினார். அதனால் இதோடு சமாதானம் ஆகிவிடுங்கள் என்று சொல்லிப்பார்த்தார்கள். அக்காவை மணந்து கொண்டார் என்பதற்காக

மச்சானின் தம்பியுடன் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை என்று எஸ்எஸ்எல்சி முடியும்வரை பிடிவாதம் காட்டினேன்.

கே ; சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இருந்ததா? கோவில்களுக்கு அடிக்கடி போவீர்களா?

சிவகுமார் ; மாதத்தில் ஒரு கிருத்திகைத் தவறாமல் என் அப்பா பழனிமலை சென்று முருகனைத் தரிசித்து வந்தார். முப்பத்து மூன்று வயதில் அவர் விடைபெற்றுக் கொண்டார். அவர் வாங்கிவைத்துக் கும்பிட்ட மொட்டை ஆண்டி படம் எண்பது ஆண்டுகள் கழித்து இன்னமும் பூஜை அறையில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மாவோடு பழனிக்குப் பயணமாவேன். இரவு பத்துமணி தாண்டி கோவை ரயிநிலையத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் திண்டுக்கல் பாசஞ்சர் புறப்படும். கோவை வழி எல்லா ரயில்களும் வந்துபோனபின் கடைசியாகப் புறப்படும் ரயில் அது.

பாக்குமட்டையைத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவி பக்குவமாய்ச் செய்த புளிச்சாதத்தை அதில் கொட்டி பார்சல் செய்து எடுத்துப்போவோம். பாசஞ்சர் ரயில் என்பதைவிட நடைவண்டி என்று சொல்லலாம். வண்டி போய்க்கொண்டிருக்கும்போதேயே வழியிலே இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு ஓடிப்போய் ஏறிக்கொள்ளலாம். அவ்வளவு வேகம்.

அதிகாலை நாலு மணிவாக்கில் பழனிரயில் நிலையத்தில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு திண்டுக்கல் நோக்கி அது நகரும். குழந்தைகள் கூட கிழவர்கள்போல கிடுகிடுவென்று நடுங்கும் குளிரில் பற்கள் தடதடக்க அரை டிராயர்வழி குளிர் உடம்பைத் தாக்க ரோமக்கால் குத்திட ஓட்டமும் நடையுமாக அடிவாரம் செல்வோம். கருப்பட்டிச் சத்திரம், மங்கம்மா சத்திரம் என்று தனவான்கள் தர்மசத்திரங்களை அரண்மனைப்போலக் கட்டிப்போட்டிருப்பார்கள். திருமலை நாயக்கர் மகால் தூண்கள் போன்று பல தூண்கள் தாங்கிய அகண்ட ஹாலில் ஒரு மணிநேரம் சுருண்டு படுப்போம் விடியுமுன் புறப்பட்டு மலையைச் சுற்றி நடக்க ஆரம்பிப்போம். தென்பகுதியில் வரத்தாற்றில் சிலிர்க்கும் தண்ணீரில் விழுந்து எழுவோம். திரும்பிய பக்கமெல்லாம் ஜடாமுடியும் காவியுமாய் சாமியார்கள். மலை ஏறுமுன் தேங்காய் பழம் பிரம்புத்தட்டில் வாங்கி எடுத்துப் போவோம்.

அனுமன் இலங்கையை அடைய ஆகாயத்தில் பறந்ததுபோல எங்கிருந்தோ பறந்துவரும் குரங்குகள் – கழுகு கோழிக்குஞ்சைப் பறித்துச் செல்வதுபோல் ஒரே தாவில் பழக்கூடையைப் பறித்துக்கொண்டு மதிற்சுவர் மீது ஏறி அமர்ந்து அழகு காட்டும். வெறும் கையோடு வியர்வை சொட்டச்சொட்ட ஆயிரம் படிகளைத் தாண்டி உச்சி செல்வோம். தென்கிழக்குப் பகுதி காம்பவுண்டில் ஒரு சிறு வழி...கீழே இறங்கினால் ‘ராமர் பாதம் என்றொரு கல்வெட்டு.

கொடைக்கானல் மலையிலிருந்து வீசும் கூதல் காற்று, நெஞ்சுக்குள் புகுந்து நனைந்த ஆடையை ஐந்து நிமிடத்தில் காயவைக்கும்.

முருகன் சந்நிதிக்குள் அனுபவித்த அந்த விபூதி வாசனையும் பஞ்சாமிர்த சுவையும் இன்னமும் அச்சு அசலாக மனதிற்குள் பதிவாகி இருக்கின்றன.

பன்னிரண்டு மணிக்கு பாக்கு மட்டையைப் பிரித்தால் அசுரப்பசியில் புளிசாதம் அமிர்தத்தை மிஞ்சும் ருசியில் இருக்கும்

கே ; உங்களால் மறக்கமுடி
யாத அனுபவமாக எதைச் சொல்லுவீர்கள்?

சிவகுமார் ; எங்கள் ஊருக்குள் மிகவும் பழமையானது பிள்ளையார் கோவில், அடுத்து மாகாளியம்மன் கோவில், மூன்றாவது அரச மரத்தடியில் வேல் குத்தி பாம்புப் புற்றுடன் விளங்கும் பரமசிவன் கோவில். மாதம் ஒண்ணாம்தேதி ஆனால் மில் முதலாளி படியளப்பதால் எதிர்காலம் பற்றிய பயம் எங்கள் மக்களுக்கு இருக்கவில்லை. ஆகவே இறை பக்தி தேவைப்படவில்லை. ஆடிக்கு ஒரு பூஜை, அமாவாசைக்கு ஒரு பூஜை மட்டுமே கோவில்களில் நடைபெறும். மற்ற நேரங்களில் இவை பாழடைந்த கோவில்கள்தாம்.

ஒரு நாள் பக்கத்து வீட்டிலிருந்த தச்சு ஆசாரி மகன் என்னுடைய தோழன் – சாமி கும்பிட பிள்ளையார் கோவிலுக்குள் நான் போக பின்னால் வந்தவன், விளையாட்டாக மரக்கதவை உதைத்துச் சாத்திவிட்டான்.

மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கம் காட்டும். உதைத்த உதையில் கதவுகள் வலுவாகக் கோர்த்துக் கொண்டன. உள்ளே இருந்து இழுத்துத் திறக்க கைப்பிடி எதுவுமில்லை.

உட்சுவர் உயரம் பதினைந்து அடி. அதற்குமேல் ஓடு வேய்ந்த கூரை. கதவே ஏழு அடி உயரம். மாட்டிக்கொண்ட இடம் இப்போது சவுண்ட் புரூஃப்.

நாங்கள் கத்த ஆரம்பித்தோம்.

இது விசேஷ நாளில்லை. சாமி கும்பிட யாரும் வரமாட்டார்கள். என்ன கத்தினாலும் பாதையில் போகிறவர்களுக்கு எங்கள் கூக்குரல் எட்டவில்லை. அகப்பட்டுக் கொண்டது காலை பதினோரு மணிக்கு. அப்போதிருந்து ஆரம்பித்து மாலைவரை கூச்சல் போட்டு தொண்டைக்கட்டிச் சுவற்றில் சரிந்து விட்டோம். மின்சார வசதி கிடையாது. மாலையிலும் கோவிலுக்குள் விளக்கேற்ற யாரும் வர மாட்டார்கள். அழுகை வந்தது.

நேரம் சென்றுகொண்டே இருந்தது. பூஜை அறையும் இருண்டது. கண்களும் இருண்டன. முதன்முதலாக மரணபயம் தொற்றியது. அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்ற எண்ணம் வந்தது.

அந்தி மயங்கிய நேரம்...காடு கரைகளில் வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிலரின் குரல்கள் மங்கலாகக் கேட்டது.

இதுதான் கடைசி சந்தர்ப்பம். சாவிலிருந்து விடுபடும் முயற்சியாக ஓங்கிக் குரலெடுத்து – “அக்கா....அம்மா.....அய்யா........கோவிலுக்குள்ளே நாங்க மாட்டிக்கிட்டிருக்கோம். வந்து கதவைத் திறந்து விடுங்கோ என்று கத்தினோம்.

ஏதோ ஒரு மகராசி காதில் எங்களின் குரல் விழுந்து ஓடிவந்து கதவைத் திறந்துவிட்டார். ஒரு வழியாக உயிர்பிழைத்து வெளியில் வந்தோம்.

அன்றைக்கு அடைபட்டு அவதிப்பட்ட அந்தப் பிரமை, அந்த திகில், அந்த தவிப்பு பின்னாளில் விமானத்தில் ஏறி அமர்ந்ததும், விமானத்தின் கதவை ஏர்ஹோஸ்டஸ் மூடியதும் வந்துவிடும். ‘ஓ, நாம் அகப்பட்டுக்கொண்டோம். இப்போது முயன்றாலும் வெளியே போக முடியாது. அதோ ஏணியையும் அகற்றிவிட்டார்கள். கூச்சல் போட்டாலும் திறக்க மாட்டார்கள்என்று ஆழ் மனத்தில் ஒரு பய உணர்ச்சி பதட்டத்தை ஏற்படுத்தும். ஏ.சி குளிரிலும் உடம்பு வியர்க்கும்.

‘பயப்படாதே, அடங்கு. நீ பாதுகாப்பாக இருக்கிறாய். உனக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாய் இரு என்று உணர்ச்சிவசப்படும் மனதை அறிவு அடக்கப் போராடும். பல நாட்கள் போராடித்தான் இதிலிருந்து மீண்டிருக்கிறேன்.

கே ; ஆரம்ப நாட்களில் ஒரு ஓவியராக வருவதுதான் உங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஓவியராக வருவது என்ற பொறி முதன்முதலாக உங்களுக்குள் எப்போது விழுந்தது என்பது நினைவிருக்கிறதா?

சிவகுமார் ; ஒண்ணாங்கிளாசில் அ , ஆ , எழுதிப் பழகும் போதே பூனை, மாடு, ரயில் என்றெல்லாம் வரைந்த நினைவு. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது முதுகுத்தண்டை நான் வரைந்த வேகத்தைப் பார்த்து வகுப்பே ஆச்சரியப்பட்டது. அதிகப் பட்சமாக ஐந்து நிமிடத்தில் தண்டுவடத்திலுள்ள அத்தனை எலும்புகளையும் அச்சாக வரைந்தபோது என் முதுகு நிமிர்ந்து நின்றது. நாம் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான் என்ற எண்ணம் அப்போதுதான் ஏற்பட்டது.

கே ; நீங்கள் அதிகம் சந்தோஷப்பட்ட முதல் தருணம் என்று எதைச் சொல்வீர்கள்?

சிவகுமார் ; ஆயிரம் முறை என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்திருந்தாலும் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் விஜயராகவ அய்யங்கார் என்னை உட்கார வைத்து இடது பக்க முகத்தோற்றத்தை பென்சிலால் வரைந்து காட்டியபோது – கந்தன்கருணையில் முருகனாக நடித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமாக உணர்ந்தேன்.

கே ; உங்களிடம் எப்போதுமே எச்சரிக்கை உணர்வு ரொம்பவும் அதிகம். இது எப்படி சிறுவயதிலிருந்தே வந்ததா?

சிவகுமார் ; சென்னைக்கு ரயில் ஏறும்போது பாக்கெட்டில் இருக்கிற பத்துப் பதினைந்து ரூபாயை யாராவது பிக்பாக்கெட் செய்துவிடுவார்கள் என்று என் தாய்வழிப் பாட்டி டிராயரின் உள் பகுதியைத் திருப்பி பின் ஊசியால் பாக்கெட் வழியை ‘டாக்கா போட்டு அனுப்புவார்கள். ஐந்தரை ரூபாய் கட்டணச் சலுகையில் சென்னையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்த காலத்திலும் சரி, ஏ.சி முதல்வகுப்பில் 1800 ரூபாய் டிக்கெட்டில் பயணம் செய்த நாட்களிலும் சரி என்றுமே நான் ரயிலில் தூங்கியதே இல்லை.... எச்சரிக்கை உணர்வு!

கண்களை மூடி படுத்திருந்தாலும் ரயில் நிற்கும் இடங்களில் இது அரக்கோணம், இது காட்பாடி, இது ஜோலார்பேட்டை, இது சேலம் என்று மூளைக்குள்ளே மணி அடித்துக்கொண்டே இருக்கும். அப்படி எச்சரிக்கையாக இருக்கும் என்னிடமே கோவை ராஜா தியேட்டரில் 1956-ல் வணங்காமுடி படம் பார்க்கச் சென்றபோது டிக்கெட் கவுண்ட்டரை நோக்கி கூட்டம் மோதிய தருணத்தில் யாரோ ஒருவன் நாலணாவை என் டிராயர் பாக்கெட்டிலிருந்து திருடிவிட்டான். மூன்று நாட்களுக்கு அழுதேன்.

நண்பன் கிருஷ்ணசாமி தன் பணத்தில் டிக்கெட் வாங்கிக் கொடுத்தான். ஆனாலும் என் மனம் ஆறவில்லை. நாம் மனமுவந்து நாலணா தானம் செய்வது வேறு; நம்மை ஏமாற்றி ஒருவன் திருடிச்செல்வது வேறு.

அன்று அலட்சியமாக இருந்த என்னை என்னால் மன்னிக்க முடியாது. –(தொடரும்)

Thursday, January 5, 2012

ஜெயகாந்தன்....ஜெயகாந்தன்....ஜெயகாந்தன்..!

ழுத்துலகிற்கு வருவதற்கு முன்னால் அகிலன், ஜெயகாந்தன், கல்கி, நாபா, தி.ஜானகிராமன் என்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே என்னுடைய ஆதர்ச கதாநாயகர்களாக எழுத்தாளர்களே இருந்தார்கள். பிறகுதான் சிவாஜிகணேசன், கண்ணதாசனுக்கெல்லாம் மனதில் சிம்மாசனங்கள் உருவாகின. அகிலன் நாபா இவர்களுடனான சந்திப்புகளெல்லாம் நடந்தபிறகும் ஜெயகாந்தன் சந்திப்பு மட்டும் நடைபெறாமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜெயகாந்தன் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த நேரம் அது.

பெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக South Indian Writers Conference ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் மூன்று நாட்களுக்கான கருத்தரங்கம். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை அங்கே அழைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் அன்றைக்குப் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள் யார்யாரோ அவர்கள் அத்தனைப்பேரையும் அழைத்திருந்தார்கள். தமிழிலிருந்து அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, நீலபத்மனாபன், ஸ்ரீவேணுகோபாலன், ஜி.நாகராஜன், ராஜம் கிருஷ்ணன், வல்லிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்திருந்ததால் நானும் கலந்துகொண்டேன். மலையாளத்தில் தகழியைத் தவிர மற்ற பெரிய எழுத்தாளர்கள் அனைவரும் வந்திருந்தனர். அதேபோல கன்னடத்திலிருந்தும் தெலுங்கிலிருந்தும் அன்றைக்குப் புகழோடு இருந்த அத்தனைப் பெரிய எழுத்தாளர்களும் கருத்தரங்கிற்கு வந்திருந்தனர்.

கருத்தரங்கம் பெங்களூரிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் நடந்தது. இன்றைக்கு

ஒயிட்ஃபீல்டை

நிறையப்பேருக்குத் தெரியும். ஏனெனில் ஐ.டி பூங்காவே அங்குதான் உள்ளது. அன்றைக்கு அது ஒரு வனாந்தரம். இந்த அமைப்பின் கட்டிடம் மட்டும் பெரிதாக இருக்க சுற்றிலும் அடர்த்தியான காடுபோல் இருந்த பிரதேசம் அது. கருத்தரங்கம் துவங்குவதற்கு முதல் நாளே அகிலன், நாபா, வல்லிக்கண்ணன் ஆகியோர் வந்துவிட்டனர். வேறு மாநில எழுத்தாளர்களும் வந்திருந்தனர்.

அகிலனையும் நாபாவையும் பார்த்தவுடனேயே மற்ற மொழி எழுத்தாளர்கள் “ஓ............மிஸ்டர் அகிலன், ஓ......மிஸ்டர் பார்த்தசாரதி என்று கூப்பிட்டுக்கொண்டே வந்து கைகுலுக்கி அறிமுக வணக்கம் செய்துகொள்வார்கள்.எப்படி இருக்கிறீர்கள்......? எப்போது வந்தீர்கள்.........? என்பதுபோன்ற சம்பிரதாயக்கேள்வி கேட்பார்கள். “மெட்றாஸிலிருந்துதானே வருகிறீர்கள்? என்பார்கள். இந்தக் கேள்விகளெல்லாம் முடிந்தபிறகு அவர்கள் தவறாமல் வேறொரு கேள்வியைக் கேட்பார்கள். “ஜெயகாந்தன் வரவில்லையா? என்பதுதான் அந்தக்கேள்வி.

இந்த ‘ஜெயகாந்தன் வரவில்லையா? என்ற இந்தக்கேள்வி கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அனைவரிடமும் கேட்கப்பட்டது. “நம்ம பெயர்போட்ட பேட்ஜை சட்டையிலே குத்தியிருப்பதற்கு பதில் ‘Jayakanthan not yet come என்பதுபோல ஒரு பேட்ஜ் குத்திக்கொள்ளலாம் போலிருக்கிறதே என்று ஜோக் அடித்தார் நாபா.

“ஜேகேவிற்கு இங்கே இத்தனை எதிர்பார்ப்பு இருப்பதைப் பார்த்தால் மொத்தக் கருத்தரங்கத்திற்கும் அவர்தான் ஹீரோவாக இருப்பார் போலிருக்கு. ஆனா அவர் வருவாரா என்பது தெரியலை. பல இடங்களுக்கு வருவேன் என்று ஒத்துப்பார். ஆனா வரமாட்டார். இங்கே வருவாரா என்பது தெரியலை. வந்து சேர்ந்தாரானால்தான் நிச்சயம் என்றார் இன்னொரு தமிழ் எழுத்தாளர்.

அன்று மாலையே ஜெயகாந்தன் வந்து இறங்கிவிட்டார்.

ஜெயகாந்தனை ஏற்கெனவே தமிழ்ப்புத்தகாலயத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன். அதிகம் பேசினதில்லை. இங்கே இன்னமும் மூன்றுநாட்கள் தங்கியிருப்பார் என்பதனால் தனிமையில் சந்தித்து நிறையப் பேசவேண்டும் என்று ஆசை. ஆனால் அவரைப்பற்றிய பிம்பம் பயமுறுத்தியது.

அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவர். யாரையும் மதிக்கமாட்டார். எடுத்தெறிந்து பேசுவார்........எதற்காக நாமாக அவரிடம் வலியப்போய் அவமானப்படவேண்டும் என்கிற தயக்கமும் இருந்ததனால் உடனிருந்த பழம்பெரும் எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். ஜேகேவின் சுபாவம் எப்படி? என்று வல்லிக்கண்ணன் அவர்களைக் கேட்டேன். ஏனெனில் ஜெயகாந்தன் வல்லிக்கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். அகிலன் நாபா ஆகியோருடன் வல்லிக்கண்ணனும் அன்று மதியம் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.

ஜெயகாந்தன் சுபாவம் பற்றிக்கேட்டதற்கு “அப்படியெல்லாமில்லை. கொஞ்சம் முரடர் போலத்தோன்றும்தான். ஆனால் அருமையான மனிதர். நீங்க வாங்க....நான் உங்களை அறிமுகப்படுத்தறேன். எப்படிப் பழகறார் என்பதை நீங்களே பாருங்க என்று சொல்லி ஜெயகாந்தன் அறைக்கு அழைத்துச்சென்றார் வல்லிக்கண்ணன்.

நாங்கள் போன சமயம் குளியலறைக்குப் போவதற்குத் தயாராக இருந்தார் ஜெயகாந்தன். இடுப்பில் ஒரேயொரு துண்டு மட்டுமே கட்டியிருந்தார். வாயில் வைத்திருந்த பைப்பிலிருந்து கடைசிப் புகையை இழுத்துவிட்டு பைப்பை உதவியாளரிடம் நீட்டிவிட்டு வந்தார்.

வல்லிக்கண்ணனைப் பார்த்ததும் முகமெல்லாம் சந்தோஷமாய் என்னென்னவோ பேசினார். என்னை வல்லிக்கண்ணன் அறிமுகப்படுத்தி வைக்க “ஏற்கெனவே பார்த்திருக்கேனே இவரை என்றார். பெங்களூர்ல என்ன பண்றீங்க? கிளைமேட் எப்படி என்பதுபோல் பொதுவாகப்பேசிக்கொண்டிருந்துவிட்டு குளிக்கச்சென்று விட்டார்.

அடுத்த நாள் கருத்தரங்கம் துவங்கிற்று. நிறையப்பேர் கட்டுரை வாசித்தார்கள். அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடந்தன. கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வருடம் ஞானபீடப் பரிசு அகிலனுக்குக் கிடைத்திருந்ததனால் அவருக்கு விசேஷ மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டன. அவரது கட்டுரையைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விடையளித்ததும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் சம்பிரதாயமான ஒன்று என்பது போன்றே இருந்தன. மதியம் வேறு மொழி எழுத்தாளர்கள். அவர்களுடனான விவாதம் என்று கழிந்தது

அன்று இரவு சுமார் ஏழு மணி இருக்கும். ஞானசேகரன் என்பவர் அகிலன் நாபா இருவரும் தங்கியிருக்கும் அறைக்கு ஓடி

வந்தார். ஞானசேகரன் அந்த அமைப்பின் செயலாளர். அவர்தான் மொத்த ஏற்பாடுகளையும் முன்நின்று கவனித்துக்கொண்டிருந்தவர்.

“சார் நாளைக்குக் காலையில ஜெயகாந்தன் பேப்பர் படிக்கணும். அவர் என்ன சப்ஜெக்ட் படிக்கணும் என்பதையெல்லாம் அவருக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தி இருக்கோம். இப்ப அவரிடம் போய் உங்க கட்டுரையைக் கொடுங்க சைக்ளோஸ்டைல் பிரதியெடுத்து(அப்போதெல்லாம் ஜெராக்ஸ் கிடையாது) எல்லாருக்கும் விநியோகிக்கணும். நீங்க கட்டுரைப் படிக்க ஆரம்பிக்கும்போது எல்லாரிடமும் அந்தப் பிரதி இருக்கணும். நீங்க எழுதிட்டுவந்திருக்கற பேப்பர் கொடுங்கன்னு கேட்டா “பேப்பரா என்ன பேப்பர்? அப்படின்னு திருப்பிக்கேட்கறார். இங்க படிக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் எழுதிக்கிட்டு வரலை. நீங்க என்ன சப்ஜெக்ட் எழுதுனீஙன்றதே தெரியாது. மறந்து போச்சு. நான் வெறும் கையோடத்தான் வந்திருக்கேன். அப்படின்றார். “அப்ப நாளைக்கு உங்க பேப்பர் செஷனுக்கு என்ன பண்றது? ன்னு கேட்டா “ஒண்ணும் பண்ணாதீங்க ன்னு சொல்லிச் சிரிக்கறார். இப்ப என்ன சார் பண்றது? என்று பதட்டத்துடன் கேட்டார்.

அகிலன் புன்னகைத்து “அதான் ஜெயகாந்தன் என்றவர் “அந்த நேரத்துக்கு வேறு யாரையாவது பேச வையுங்கள் கடைசி நாள் வேணும்னா ஜெயகாந்தனை வச்சுக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.

“அதான் சார் நாளை சாயந்திரத்துக்குள்ள கட்டுரைத் தந்துட்டார்னாக்கூட நாளை மறுநாள் அவர் நிகழ்ச்சியை வச்சுக்கலாம். அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிடுவேன் என்று விடைபெற்றுப்போனார் ஞானசேகரன்.

மறுநாள் மாலை. திரும்பவும் அகிலன் அறைக்கு அதே விதமான பதட்டத்துடன் வந்தார் அவர். “சார் இன்னைக்கும் இந்த நிமிடம்வரை கட்டுரை தரலைசார். கேட்டா அதெல்லாம் பிரிபேர் பண்ணமுடியாது அப்படின்றார். இப்ப என்ன செய்யட்டும் சார்?

“என்ன செய்யமுடியும்? விட்டுர வேண்டியதுதான் என்றார் அகிலன்.

“அதுவும் முடியாதே சார், மற்ற மொழி ரைட்டர்ஸுக்கு என்னால பதில் சொல்லி மாளலை. எங்கே ஜெயகாந்தன் செஷன்? அவருடைய கட்டுரை எப்போன்னு கேட்டுத் துளைச்சு எடுக்கறாங்களே சார்

“விஷயத்தை அவர்ட்டயே எடுத்துச்சொல்லிப் பேசிப்பாருங்க

ஜெயகாந்தன் அறைக்குச் சென்றுவிட்டு அரைமணி நேரம் கழித்துத் திரும்பினார் ஞானசேகரன். “ஜெயகாந்தன்கிட்ட பேசிட்டேன் சார்...........கட்டுரை எழுதி வெச்சுக்கிட்டுப் படிக்கவெல்லாம் முடியாது. வேணும்னா ஒரு அரை மணிநேரம் பேசறேன்றார்

“சரி, அப்படியே செய்யுங்க- அகிலன்.

“அதுல ஒரு சிக்கல் சார் என்றார் அவர். “இந்தக் கருத்தரங்கத்திற்கு எல்லா மொழிகள்ள இருந்தும் எல்லாப் பெரிய எழுத்தாளர்களும் வந்திருக்கீங்க. எல்லாரும் எழுதி எடுத்துவந்த கட்டுரையைப் படிப்பது, அதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களுக்கு பதிலளிப்பது என்கிறமாதிரிதான் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கு. ஞானபீடம் பெற்ற உங்களைப்போன்ற எழுத்தாளர்கள்கூட அதுக்கு உட்பட்டுத்தான் நடந்தீங்க. அப்படியிருக்கும்போது இவர் மட்டும் பேப்பர் எதுவும் படிக்கமாட்டார். வேணும்னா லெக்சர் கொடுப்பார் என்று அறிவிப்பு செய்வது எந்த அளவுக்கு சரிப்படும் என்பது தெரியவில்லை. ‘இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்? என்று யாராவது கேட்டுட்டா என்ன செய்வது சார்? என்றார் அவர் பதட்டத்துடன்.

“நீங்க நினைக்கிறமாதிரி யாரும் அப்படிக்கேட்க மாட்டாங்க. ஆனாலும் ஒரு அமைப்பாளர்ன்ற முறையில உங்க தயக்கம் நியாயமானது. ஒண்ணு செய்யுங்க ஞானசேகரன், மற்ற மொழியைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களை சந்திச்சு விஷயத்தைச் சொல்லிப்பாருங்க. அவங்க ஒப்புதல் தந்தாங்கன்னா ஜெயகாந்தன் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருங்க என்றார் அகிலன்.

புறபட்டுச்சென்ற அந்த அமைப்பாளர் சிறிதுநேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “சார் மத்தவங்க கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் சார். We are eager to hear him னு சொல்றாங்க. அவர் பேச்சைக்கேட்க அவ்வளவு ஆர்வமா இருக்காங்க சார்............... நாளைக்காலையில அவருடைய ஸ்பீச்சிற்கு ஏற்பாடு பண்ணிடறேன் என்று சொல்லிப்போனார்.

மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்ற அறிவிப்பு சைக்ளோஸ்டைல் பண்ணப்பட்டு அன்றைய இரவே எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது.

கருத்தரங்க ஹால் முழுக்க முழுமையான கூட்டம். ஏறக்குறைய வந்திருந்த அத்தனைப் பிரதிநிதிகளும் நிறைந்திருந்தனர். தமிழில் ஜி.நாகராஜன் மட்டும் ஊருக்குக் கிளம்பிவிட்டிருந்தார்.

கோட் சூட் சகிதம் கையில் பைப்புடன் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயகாந்தன். சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின்னர் ஜெயகாந்தன் பேசுவதற்கு எழுந்தார். எல்லாரும் ஆர்வத்துடன் உட்கார்ந்திருக்க......... “நான் தமிழ்ல பேசட்டுமா? என்று கேட்டார்.

“ஓ யெஸ் என்று சில குரல்களும் “இங்கிலீஷ் என்று சில குரல்களும் ஒலித்தன.

“சரி தமிழ்ல பேசறேன்........முடிஞ்சா இங்லீஷ்லயும் பேசறேன். இங்கிலீஷ் சரியாக வராவிட்டால் தமிழுக்கு வந்துவிடுவேன் என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலேயே அந்த முரட்டு அடி எல்லார் மீதும் விழுந்தது!

“எனக்கு எப்போதுமே இந்தக் கருத்தரங்கு, செமினார், கான்ஃபரன்ஸ், மீட்டிங்..............இவைகள் மீதெல்லாம் நம்பிக்கையும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இவைகளில் கலந்துகொள்வதிலோ பங்குபெறுவதிலோ எனக்கு உடன்பாடோ விருப்பமோ கிடையாது. இம்மாதிரி கருத்தரங்குகளில் உட்கார்ந்துகொண்டு மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்று பொழுது போக்குவதைக் காட்டிலும் தெருவிலே போகின்ற ஒருவனை நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் சந்தோஷமும் அதிகம். பயனும் அதிகம். என்றார்.

தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் நெளிய ஆரம்பிக்க.......மற்ற மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புருவம் சுருக்கி இன்னமும் அதிகமாய் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து அடுத்த சம்மட்டி விழுந்தது. “எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்ற ரீதியில் ஆரம்பமாயிற்று அவருடைய பேச்சு. ஆரம்பம்தான் இப்படி இருந்ததே தவிர அதன்பிறகு சீரியஸான விஷயத்துக்குப் போய்விட்டார். தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்து ஏறக்குறைய முக்கால் மணிநேரத்துக்குத் தொடர்ந்தார்.

அவரது உரை முடிந்ததும் அவரைக் கேள்விகள் கேட்டார்கள். பொதுவாக அவரது படைப்புக்கள் பற்றியும் சிறுகதைகள் பற்றியும் கேள்விகள் இருந்தன. இந்த நிகழ்ச்சி முடிந்தது.

இது முடிந்ததும் அடுத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டொரு ஜெயகாந்தனின் நூல்களை அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.(அதன் பதிப்பாளர் திரு முத்து என்பதாக ஞாபகம்) ஜெயகாந்தனின் பேச்சு முடிந்ததும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தைச் சுற்றி ஒரே கூட்டம். கருத்தரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முண்டியடித்துக்கொண்டு அந்த நூல்களை வாங்குவதற்குப் போட்டியிட்டனர். Joseph wept (தமிழில், ‘யாருக்காக அழுதான்?) என்ற புத்தகம் ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது. வேறு இரண்டொரு புத்தகங்களும் அதே வேகத்தில் முழுமூச்சாக விற்றுத்தீர்ந்தன.

அடுத்து இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது.

போட்டி போட்டுக்கொண்டு புத்தகங்களை வாங்கிய அந்த மகா மகா எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவரிடம் கையெழுத்து வேட்டை!

தங்களுக்குப் பிடித்த அபிமான நடிகரையோ எழுத்தாளரையோ சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கும் சாதாரண ரசிகர்களைப்போல நமது ஜெயகாந்தனைச் சூழ்ந்துகொண்டு மற்ற மொழியைச் சேர்ந்த பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஒன்றை கவனிக்க வேண்டும். அவர்கள் யாருமே வெறும் ரசிகர்களோ வாசகர்களோ கிடையாது...........அனைவருமே எழுத்தாளர்கள். அதுவும் அவரவர் மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். அந்த எழுத்தாளர்கள் இவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு சாதாரண ரசிகர்களைப்போல இவரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால் இவரது பெருமை – இவரது புகழ் என்னவென்பதை நினைத்தபோது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது.

கையெழுத்து வேட்டையெல்லாம் முடிந்தபிறகு வாயில் பைப் புகைய ஹாலை விட்டு வெளியில் வந்தார் ஜெயகாந்தன். வணக்கம் சொன்னதும் சிநேகமாகப் புன்னகைத்தார். “வாங்க...........இந்தப் பக்கமா நடந்துட்டு வரலாம்....சாப்பாட்டுக்குத்தான் இன்னும் நேரமிருக்கே என்று சொல்லியபடியே என்னுடைய தோள் மீது கையைப் போட்டுக்கொண்டார். “எப்படி இருந்தது பேச்சு? என்று கேட்டபடியே நடக்க ஆரம்பித்தார்.

“பிரமாதமாயிருந்தது....உங்களுடைய பேச்சும் சரி எழுத்துக்களும் சரி என்றைக்குமே இன்னொருவரால் வெல்ல முடியாத ரீதியில்தானே இருக்கும்........உங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, அல்லது ஒப்புக்கொள்வதே இல்லை என்று வைத்துக்கொண்டாலும் நீங்கள் சொல்லும் அந்தக் கருத்தை நீங்கள் சொல்லும் ரீதியில் மறுக்கமுடியாது. அப்படி ஒரு கோணம் உங்களுக்கு. அது போன்ற ஒரு பார்வை உங்களுடையது என்றேன்.

“எப்படிச் சொல்றீங்க? என்றார்.

“வேறெதுவும்கூட வேண்டாம். என்னுடைய இந்தக் கூற்றுக்கு உதாரணம் உங்கள் புத்தகங்களின் முன்னுரைகள். அந்த முன்னுரைகளில் நீங்கள் வைக்கின்ற வாதங்கள். எந்த விஷயம் பற்றியும் நீங்கள் செய்யும் வாதங்களும் சரி அந்தக் கோணத்தில் அதை மீறி ஒரு பதில் வந்துவிட முடியாது என்பதுபோல்தான் இருக்கின்றன....அப்படியே வரும் பதில்களும் உங்கள் வாதங்களுடன் மோதிப்பார்க்க இயலாதவையாய் வலுவிழந்து பரிதாபம் காட்டுவதோடு நின்றுவிடுகின்றன. இதற்கு ஒரு விஷயம் காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்

பேசிக்கொண்டே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். நான் பேச்சில் சிறிது இடைவெளி விட.... “ம்ம்..மேலே சொல்லுங்க என்றார்.

நான் சொன்னேன். “வெல்லும் சொல்!............தமிழில் ‘மங்களச்சொற்கள்இருப்பதைப் போலவே ‘வெல்லும் சொற்களும் உள்ளன. இந்த ‘வெல்லும் சொல்ஒரு சிலருக்கு மட்டுமே கைவருகிறது. அவர்களுக்கு மட்டுமே கைகட்டிச் சேவகம் புரிகிறது. அவர்களுடைய நாக்கிலும் கையிலும் மட்டுமே புரள்கிறது. அவை ஒன்றாகக்கூடி கம்பீரமாகவோ அழகாகவோ அணிவகுத்து வருகையில் மற்ற சொற்கள் எதுவும் அவற்றுக்கு ஈடாக நிற்க முடியாமல் விழுந்துவிடுகின்றன.

இன்றைக்கு இந்த ‘வெல்லும் சொற்கள்தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்.....இன்னொன்று கண்ணதாசன்............மூன்றாமவர் நீங்கள்.....இந்த வெல்லும் சொல் ஒன்றும் புதியதல்ல, திருவள்ளுவர் சொல்லிவைத்திருப்பதுதான். ‘சொல்லுக சொல்லை அச்சொல்லைப் பிறிதோர்சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து- என்கிறாரே அந்த ‘வெல்லும்சொல்லை வைத்திருப்பவர் நீங்கள்

“ஓஹ்ஹோ என்று பெரிதாகச் சத்தமெழுப்பி அட்டகாசமாகச் சிரித்தார் ஜெயகாந்தன். எந்த பதிலும் சொல்லவில்லை.

“எல்லாம் ஓகே...உங்களிடமும் சரி ; கண்ணதாசனிடமும் சரி ஏகப்பட்ட முரண்பாடுகள். அவைகளைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை என்றேன்.

“குறிப்பாக என்ன முரண்பாடு?”

“குமுதத்தில் ஒரு பக்கம் எழுதினீர்களே அவற்றிலேயே எவ்வளவு முரண்பாடு....இப்போது நீங்கள் பேசிய பேச்சில்கூட நிறைய முரண்பாடுகள் இருந்தனவே

“முரண்படுகிறவன்தான் மனிதன் என்றார் ஜெயகாந்தன் அழுத்தமாக.

“உண்மைதான்..ஆனாலும்

“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை

“புரியலை என்றேன்.

“புரியலை? என்றார் குரலை உயர்த்தி.

“இல்லை

“சொல்கிறேன்.......நேற்று மாலை நீங்கள் என்னைப் பார்க்க வல்லிக்கண்ணனுடன் என்னுடைய அறைக்கு வந்தீர்கள் அல்லவா............அப்போது நான் என்ன உடுத்தியிருந்தேன்?

“துண்டு

“என்ன துண்டு? கோவணம் என்று சொல்லுங்கள்......நேற்றைக்கு நான் கோவணம் கட்டியிருந்தேன். காரணம் அது என்னுடைய அறை. இப்போது இந்தக் கருத்தரங்க ஹாலுக்கு எப்படி வந்திருக்கிறேன்? கோட் சூட் உடுத்தி............! அங்கே கோவணத்துடன் இருந்தவன் இங்கே கோட்டும் சூட்டும் உடுத்தி டை கட்டி வந்திருக்கிறேன் எனில் இது என்னுடைய முரண்பாடு........அதாவது என்னளவில் நான் முரண் பட்டிருக்கிறேன் என்று அர்த்தம். இங்கே கருத்தரங்க ஹாலுக்குள்ளும் நான் கோவணத்துடன் வந்து நின்றிருந்தேன் என்றால் மற்றவர்களை முரண்படுத்துகிறேன் என்று அர்த்தம்

அவர் பேசுவதைக் கேட்டபடியே நடப்பது சுகமான அனுபவமாக இருந்தது. சுற்றிலும் மரம் செடி கொடிகள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்த அந்த வனாந்திரத்தில் அவர் பாட்டுக்குத் தம்மை மறந்து பேசிக்கொண்டே வந்தார். அவரது அறை வந்ததும் சிரித்துக்கொண்டே “அதிகம் பேசி போரடிச்சுட்டேனா? என்றார்

“அதிகம்தான் பேசினீர்கள்...........ஆனால் போரடிக்கவில்லை

“எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம் என்றார்.

அதுதான் ஜெயகாந்தன்!