ஜெயலலிதா தமது விருப்பத்திற்கேற்ப நடத்தி முடித்த மெல்லிசை
மன்னர்களுக்கான பாராட்டுவிழாவின் இரண்டாவது பாகத்தையும் ஜெயா டிவி 23-09-2012 அன்று
ஒளிபரப்பிற்று. இதுவரை ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளிலேயே சாலச்சிறந்த நிகழ்ச்சியாக
இதனையே சொல்லமுடியும். ரஜனியின் பேச்சை குளறுபடி செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியிருந்தார்களெனில்
அவர்களின் பெருமை நிச்சயம் இன்னமும் கூடியிருக்கும்.(விஸ்வநாதன் ஆரம்ப காலத்தில் நீலகண்ட
பாகவதரிடம் இசை பயின்றார் என்று சொல்லி யாரோ ஒருவருடைய படத்தைக் காட்டினார்கள். சி.ஆர்.சுப்பராமன்
குழுவில் இருந்தார் என்று சொல்லி கிவஜவின் படத்தைக் காட்டினார்கள். இந்த இரண்டு தவறுகளையும்
மன்னித்துவிடலாம்)
இப்படியொரு விழாவை திரைப்படத்துறையின் ஆகச்சிறந்த கலைமகன்களுக்காகவும்
தலைமகன்களுக்காகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்த ஜெயலலிதாவை இதற்காக எத்தனைப் பாராட்டினாலும்
தகும். ஏனெனில் நமக்கு ஜெயலலிதாவின் அரசியல் மீது நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு.
அதற்காக அவர் எது செய்தாலும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்த்து கருத்துச் சொல்லிக்கொண்டிருக்க
முடியாது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு துளியும் அரசியல்
கலக்காமல் எடுக்கப்பட்ட ஒரு பாராட்டு விழாவாகவே கொள்ள வேண்டும்.
அவரே தமது உரையில் குறிப்பிட்டதுபோல் சின்னக்குழந்தையாக இருந்தபோது
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து – அறியும் பருவம் வந்தபிறகு
அந்த பாடல்களின் இசையனுபவத்தில் மூழ்கி – இன்றைய நாள்வரை அந்தப் பாடல்களின் இனிமையுடன்
அவற்றுக்கான நிஜமான அனுபவங்களுடனும் பயணிக்கிறவர் அவர். ‘என்னுடைய உயிர் பிரியும்வரை
இவர்கள் இசையமைத்த பாடல்கள் என்னுடன் கலந்திருக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு இவர்களின்
பாடல்களில் தோய்ந்தவராக மனம் பறிகொடுத்தவராக இருக்கிறார் அவர்.
இந்த விஷயத்தில் ஜெவின் கருத்துக்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள
முடியாது. போகிறபோக்கில் சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டுப் போகிற விஷயமாக இதனைக் கொள்வதற்கில்லை.
கலைத்துறையில் திரைப்படக் கதாநாயகியாக ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பவனி வந்த
ஒரு கலைஞர்; கலைத்துறை சார்ந்த குடும்பச்சூழல் என்பதால் திரைப்படத்தில் அடியெடுத்து
வைக்குமுன்னரே வீட்டிலேயே சங்கீதம், நாட்டியம் என்று கற்றுத் தேர்ந்தவர்; கர்நாடக இசை
பற்றியும் நாட்டிய நாடகங்கள் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் மிக்க ஒருவர், தாம் ஈடுபட்ட
ஒரு பிரிவு குறித்து – அந்தப் பிரிவில் மகத்தான சாதனைகள் புரிந்த இரு மகான்களுக்குச்
செய்ய வேண்டிய மரியாதையை அவர் நினைத்த அளவில் பிரமாதமாய் பிரமாண்டமாய் செய்து முடித்திருக்கிறார்
என்றே எண்ணத்தோன்றுகிறது.
அவரது இந்த முடிவு ஒன்றும் சாதாரணமாக வந்ததாக நினைப்பதற்கில்லை.
ஏதோ ஒரு தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் ஒருவரின் பாடலை ரசிக்க ஆரம்பித்து பிற்பாடு
அதையே விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு தொடரும் மௌடிக ரசனை சார்ந்தது அல்ல அவருடைய
இந்த ரசனை. அந்த விழாவிலேயே சிவகுமார் சொன்னதுபோல் சென்னையில் அலிகான் என்பவரிடம் ஏராளமான இசைப்பாடல்கள்
சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து சுமார் அறுபதாயிரம்
பாடல்களை (சரியாகப் படியுங்கள்- அறுபதாயிரம் பாடல்கள்) பதிவுசெய்து வாங்கிவைத்துக்
கேட்டு உய்த்துணரும் உயர் ரசனைக்கு சொந்தக்காரராகத்தான் ஜெயலலிதா இந்த விழாவை எடுத்திருக்கிறார்
என்பதையும் நாம் சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.
சாதனையாளர்கள் வாழ்கின்ற காலமெல்லாம் பேசாமலிருந்துவிட்டு
அவர்கள் போய்ச்சேர்ந்த பின்னர் அவர்களுக்கென விழாவெடுத்து சிலைவைத்து தெருக்களுக்கும்
கட்டடங்களுக்கும் அவர்கள் பெயரைச் சூட்டுவதும் அவர்கள் பெயரால் விருதுகள் வழங்குவதும்
அவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவதும் என்று தொடரும் இம்மாதிரி சம்பிரதாயங்களுடன்
ஒப்பிடும்போது ஜெவின் இந்தச் செயல் மிகப்பெரும் பாராட்டுக்குரியது.
அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் ஜெவின் இந்தச்
செய்கையில் துளிக்கூட அரசியல் கிடையாது. அவர் அரசியலில் ஈடுபட்டு இத்தனை ஆண்டுக்காலமும்
பேசிய பேச்சுக்களை வைத்துப் பார்த்தாலும் ‘பத்ம விருதுக்கு இவர்களை நான் சிபாரிசு செய்தால்
அதனை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்தும் இடத்துக்கு நிச்சயம் வருவேன்” என்று குரல்
உயர்த்திய அந்த ஒரு பாராவை விட்டுவிட்டுப் பார்த்தால் பேச்சு நெடுகிலும் துளிக்கூட
அரசியல் இல்லை.
ஒரு நல்ல கலா ரசிகர் ஆட்சிபுரியும் இடத்திற்கு வந்தபிற்பாடு
தாம் இத்தனைக் காலமும் கண்டு கேட்டு அனுபவித்து பிரமித்த அந்த உயர் கலைஞர்களுக்குத்
தன்னுடைய அன்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் வெகுமதியையும் எப்படி நம்முடைய பாணியில்
செலுத்தலாம் என்று தெரிவிப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த விழா.
யோசித்துப் பாருங்கள்…………… இன்றைக்கு விசுவநாதன் ராமமூர்த்திக்குப்
பாராட்டு விழா எடுப்பதனால் ஜெயலலிதாவுக்கு ஆகப்போவது என்ன?
இதிலே அரசியல் ரீதியாக அவருக்கு என்ன ஆதாயம் இருக்கப்போகிறது?
இந்தக் காயை நகர்த்துவதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் அவர்
எந்தக் காயை வீழ்த்தப் போகிறார்? அவருக்குக் கிடைக்கப்போகும் வெற்றி என்ன?
ஒன்றுமே இல்லை.
ஆக, ஆத்மார்த்தமாக செலுத்தப்பட்ட நன்றி நவிலும் நிகழ்வாகவே
இது பரிமளிக்கிறது. இதனை அவர் ஸ்டைலில் ஆளுக்கு ஒரு காரும் தங்கக் காசுகளாகவும் பொழிந்து
தமது மரியாதையைத் தெரிவித்தார். இதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டும் அதே சமயத்தில் இளையராஜாவையும்
வேறொரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும்.
முதல்வர் மட்டுமல்ல இளையராஜாவும் இதனை ஆத்மார்த்தமாக நன்றி
செலுத்தும் விழாவாகவே மாற்றிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இங்கே பதிவுகளில் இளையராஜாவைப் பற்றிப் பேசும்போது நிறைய
பதிவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இசை என்றால் அது இளையராஜா மட்டும்தான்
என்றே தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் மட்டுமல்ல பிற ஊடகங்களும்
இதே தவறுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் பாராட்டுவிழாவை ஒரு மிகப்பெரும் நிகழ்வாக
மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவேண்டிய ஊடகங்கள் ரஜனி கலைஞர் பெயரைக் குறிப்பிட்டுப்
பேசிய ஒன்றுமில்லாத விஷயத்தை மட்டுமே ‘பேனைப் பெருமாளாக்கிய’ கதையாகச் சொல்லி ஏதோ ஒரு பரபரப்புத் தேடுவதாக நினைத்து வெற்று உரலைக்
குத்தி சில்லைப் பேர்த்திருக்கிறார்கள்.
இளையராஜா நிற்கும் இடம் எது என்பது இளையராஜாவுக்குத் தெரிந்திருக்கிறது.
பாவம் இவர்களுக்குத் தெரியவில்லை.
தன்னுடைய உயரம் எது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரது
ரசிகர்களுக்கு அது தெரியவில்லை.
தம்மிடம் இருக்கும் சொத்து சொத்து எவ்வளவு என்பதற்கான சரியான
கணக்கை அவர் வைத்திருக்கிறார். பாவம் ரசிகர்கள் ‘உலகமே உன்னுது தாண்ணே’ என்றே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த்திரை இசையில் சாதித்த முன்னோர்கள் நிறைய இருக்கிறார்கள்.
ஜி.ராமனாதன் நிறைய மாறுதல்களைச் செய்தவர். அதற்கு அடுத்தும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
முதலில் பாடல்களை எழுதவைத்து அந்தப் பாடல் வரிகளுக்கு மட்டுமே மெட்டமைத்தவர் கே.வி.மகாதேவன்.
அது மட்டுமின்றி நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் தமிழ்த்திரையில் பெருக்கெடுத்தோடச்
செய்தவர் அவர்தான்.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாதனைகளோ இன்னமும் மகத்தானவை. இனிமை ததும்பிய ஓராயிரம் பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மட்டுமே. வேறு யாருடைய இசையிலும் ‘நின்று நிலைக்கும்’ பாடல்கள் இத்தனைத் தேறாது. தவிர மற்றவர்கள் ஒரு படம் இசையமைக்கிறார்கள் எனில் அதில் ஒரு பாடலோ இரண்டோ அல்லது மூன்று பாடல்களோ மட்டும்தான் தேறும். அவைதான் கொஞ்ச நாட்களுக்கேனும் வலம் வரும். மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் எந்தவொரு இசையமைப்பாளரின் படங்களாக இருந்தாலும் இதுதான் இயல்பு. தமிழில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த படங்களிலும் சரி, அதன்பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த பல படங்களிலும் சரி - அத்தனைப் பாடல்களும், ஆமாம் அத்தனைப் பாடல்களும் - தெவிட்டாத தேனமுதாய் நின்று நிலைக்கும் பேறு பெற்றவையாக இருந்தன, இருக்கின்றன! இம்மாதிரியான படங்கள் குறைந்தபட்சம் நூற்றி ஐம்பதாவது இருக்கும்.
எண்பத்தாறு படங்களுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர்.
பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்கள் நானூற்று ஐம்பதுக்கும் மேல். தனியாய்ப்
பிரிந்தபின்னர் ராமமூர்த்தியால் பெரிதாகத் தனி ஆவர்த்தனம் செய்ய முடியவில்லை. இருபது
படங்கள்தாம் தனியாக இசையமைத்தார் என்றே தெரிகிறது.
ஆனால் அந்தக் காம்பினேஷன்……………………!
அற்புதங்களை இசையில் விதைத்துச் சென்ற சேர்க்கை அவர்களுடையது.
அவர்கள் பிரிந்து இன்றைக்கு ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் பிரிந்தவர்களை ஒன்று
சேர்த்து உட்காரவைத்து இருவருக்குமாக இந்தத் தமிழகம் விழா எடுக்கிறது என்றால் அவர்கள்
சாதனைகளை நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் பிரிந்தது 1965-ல்! இப்போது விழா நடந்திருப்பது 2012-ல்.
தமிழ்த்திரை இசை என்றால் கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி,
டிஎம்எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், பிபிஸ்ரீனிவாஸ்,
எஸ்.ஜானகி, சந்திரபாபு, ஜமுனாராணி, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் ராஜேஸ்வரி, ஏஎல் ராகவன்
என்று இத்தனைப் பேரின் பங்களிப்புடன் வலம்வரும் சாகாவரம் பெற்ற பாடல்கள்தாம் நம்முடைய
அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள். தமிழ்த் திரையின் அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள்
இவர்கள் சம்பந்தப் பட்டவைதாம். இந்த - அத்தனை ஜாம்பவான்களின் பின்னணியிலும் இருக்கும்
இசை முகவரிக்குச் சொந்தக்காரர்கள் இரட்டையர்கள் மட்டுமே.
இன்னமும் நூறு வருடங்கள் அல்ல, ஐநூறு வருடங்களுக்குப் பின்னரும்
தமிழ்த்திரையின் சாதனையாளர்களாக சிவாஜியும் எம்ஜிஆரும் கண்ணதாசனும் கொண்டாடப்படுவார்கள்
என்றால் அப்போதும் பேசப்படக்கூடியவர்களாக இருக்கப்போகிறவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியுமே.
ஏதோ இருபது பதிவர்கள் திட்டுவார்களே என்பதற்காக நாம் வரலாற்றை
விட்டு ஓடிவிட முடியாது. அப்படித் திட்டுபவர்களால் எந்தப் புதிய வரலாற்றையும் உருவாக்கவும்
முடியாது. இதற்கும் கண்ணதாசன் எழுதி இந்த இரட்டையர்கள் இசையமைத்த பாடல் வரிகளே பதில்
சொல்கிறது; ‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது’
இளையராஜாவை மட்டுமே ரசிக்கிறவர்கள் ரசித்துக்கொண்டு போங்கள்.
ஆட்சேபணையே கிடையாது. “இளையராஜா ‘மட்டும்தான்’ நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர்”
என்பது உங்கள் கருத்தா?
பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தில் குறுக்கிடும்
எண்ணமே நமக்குக் கிடையாது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் இளையராஜா மட்டும்தான் தமிழின் ஒரே இசையமைப்பாளர் என்பதுபோன்ற
ஒரு கருத்தாக்கத்தைப் பொதுவெளியில் பரப்ப முயலாதீர்கள் என்பதை மட்டும்தான் வலியுறுத்துகிறோம்.
“மொழி படத்தில் ‘காற்றின் மொழி’ பாடலை என்றைக்குக் கேட்டேனோ
அன்றிலிருந்து நான் வித்யாசாகரின் இசைக்கு அடிமையாகிவிட்டேன். இனி வித்யாசாகர்தான்
என்னுடைய ஃபேவரிட்”
அப்படியா? மகிழ்ச்சி.
“மின்னலே படத்தில் ‘வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்’
கேட்ட மாத்திரத்திலிருந்து எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்”
ரொம்பவும் மகிழ்ச்சி.
“ரோஜா படத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் பிடித்தது. காதலன்
படம் வந்தது பாருங்க………அதுல சூப்பர் ஹிட்ஸ் தந்தாரு பாருங்க. அடட………, ஏ.ஆர்.ரகுமானுக்கு
இணை யாருமே இல்லைங்க”
அப்படியா? ஓகே. வைத்துக்கொள்ளுங்கள்.
“ரொம்பச் சின்னப் பையன்சார் இவன். வெயில் படத்திலும் மதராசப்
பட்டிணம் தெய்வத்திருமகள் படத்திலும் என்னமா ஸ்கோர் பண்ணியிருக்கான் தெரியுமா? இந்த
வயசிலயே இப்படின்னா இன்னும் போகப்போக எப்படிசார்? இளையராஜா ரகுமானையெல்லாம் ஒண்ணுமில்லாம
செய்திருவான் போலிருக்கே”
ஜி.வி.பிரகாஷ்குமாரைப் பற்றி இப்படியொரு சிலாகிப்பு.
மாறுபாடான ரசனைகளும் மனநிலைகளும் கொண்ட மக்களிடமிருந்து இப்படியெல்லாம்
விமரிசனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்பவை வேறு. உனக்குப்
பிடித்தது இர்விங் வாலஸாக இருக்கலாம். உன்னுடைய பிள்ளைக்குப் பிடித்தது ஹாரிபாட்டராக
இருக்கலாம். ஆனால் ஆங்கில இலக்கிய உலகம் அங்கீகரித்துக் கொண்டாடுவது சாமர்செட் மாமையும்
பெர்னார்ட்ஷாவையும் மில்டனையும் இன்னும் வேறு பல முன்னோர்களையும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இர்விங் வாலஸின் இடம் இவர்களுக்கு மிகவும் பின்னால்தான் என்பதைப் புரிந்துகொண்டால்
போதும்.
இந்தக் கருத்தைச் சொன்னாலேயே நண்பர்கள் சீறுகிறார்கள். இவர்கள்
சீறலையும் கோபத்தையும் தாண்டி டிஎம்எஸ்ஸும் பி.சுசீலாவும் கண்ணதாசனும் கணந்தோறும் தமிழர்கள்
உள்ள இடங்களில் அவர்கள் பாட்டுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரஜனி சொன்னமாதிரி
போனால் போகட்டும் போடா சட்டிசுட்டதடா எல்லாம் இன்னமும் கன்னடர்களாலும் உச்சரிக்கப்படும்
பாடல்கள்.
இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லட்டும். நமக்கும்
சம்மதமே. ஆனால் தமிழனுக்குக் காதுகள் முளைத்ததே இளையராஜா பாடல்கள் போட்டபிறகுதான் என்கிற
மாதிரி பிதற்றித்திரிவதைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது.
ஆனால் நம்முடைய கவலையைக் களைகிற மாதிரியான நடவடிக்கைகளை இளையராஜாவும்
கங்கை அமரனுமே எடுத்திருக்கின்றனர். ராஜா ரசிகர்களின் மருளையும் மருட்சியையும் போக்கும்
விதமாக அவர்கள் இருவருமே முத்தாய்ப்பாக சில விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.
ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்பதனால்
அதற்குப் போட்டியாக அன்றைய தினம் காலையில் மெகா டிவியில் இதைப் போன்றே ஒன்றரை வருடங்களுக்கு
முன்பு நடைபெற்ற விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவருக்கும் மெகா டிவியில் அதன் உரிமையாளர்
திருமதி ஜெயந்தி தங்கபாலு நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.(பார்ரா
இங்கேயும் இவர்கள் இருவருக்கும்தான் பாராட்டுவிழா!) அந்த நிகழ்வில் இளையராஜாவின் சகோதரர்
கங்கைஅமரன் பேசிய பேச்சு முக்கியமான ஒன்றாக இருந்தது.
“நாங்களெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள்.
எங்கள் கிராமத்தில் ஒலித்த பாட்டெல்லாம் இவங்களுடையதுதான். முதன்முதலாக விஸ்வநாதன்
இசையில் மலர் எது பாடலுக்கு அண்ணன் இளையராஜா
வாசித்துவிட்டு வந்தார். அவ்வளவுதான்… எங்கள் கிராமம் பூராவும் கொண்டாடியது அதை. கிராமம்
பூராவும் இதான் பேச்சு. எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டே ‘காலமகள் கண்திறப்பாள்
சின்னையா’ பாட்டுத்தான். எங்களுக்குத் தெரிஞ்ச இசையெல்லாம் இவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான்.
கோரஸ் எப்படிப் பாடணும், தபலா எப்படித் துவங்கணும், எப்படித் தொடரணும் வாத்தியக்கருவிகளை
எல்லாம் எப்படி யூஸ் பண்ணனும் எல்லாமே இவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான். அவங்ககிட்ட யார்
யார் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வாசிச்சாங்களோ அவங்கதான் பிற்பாடு மியூசிக் டைரக்டர்ஸ். அவங்களுக்கு
நாங்களெல்லாம் சரண்டர்தான். எங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அவங்கதான்” என்று பேசிக்கொண்டே
வந்தவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தழுதழுத்த குரலில் சொன்னார். “இந்த சூட், இந்தக்
கார், இந்த பங்களா எல்லாமே இவங்க போட்ட பிச்சை”.
இதை அப்படியே கவனத்தில் பதித்துக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா
நடத்திய விழாவில் இளையராஜா பேசிய பேச்சுக்கு வருவோம்.
“அந்தக் காலத்தில் டைரக்டர் ஸ்ரீதர்சார்தான் எங்களுக்கு ஹீரோ.
அவர் நடத்திய வெண்ணிற ஆடை ஷூட்டிங்கில் ஜெயலலிதாதான் கதாநாயகி. அந்த படப்பிடிப்பு பார்ப்பதற்கு
அன்றைக்கு அங்கே நின்றிருந்தவன் நான்” என்று உற்சாகமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார் இளையராஜா.
பிற்பாடு அவர் பேசியதும் ஏறக்குறைய கங்கை அமரன் பேச்சினை ஒட்டியே இருந்தது. “என்னுடைய
மனசு நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக்கிடப்பது இவருடைய இசைதான். இதெல்லாம் அவர் போட்ட
பிச்சை” என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராக அடுத்து சொன்னதுதான் மிகப்பெரிய வார்த்தை. நிச்சயமாக
மிக மிகப் பெரிய வார்த்தை.
“அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது”-
என்று சொன்ன இளையராஜா அதற்குமேல் பேசுவதற்கு வார்த்தைகள்
அற்றவராக ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.
ஜெயலலிதா எப்படி ஆத்மார்த்தமாக இந்த விழா எடுத்தார் என்று
சொல்கிறோமோ அதே போல இளையராஜாவும் மிகவும் ஆத்மார்த்தமாக தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்
என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் இப்படிச் சொல்வதால் இளையராஜாவுக்கு
எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.
இளையராஜா அவர்கள்
மீது மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் இரண்டு விஷயங்களில் அவர் மீது மிகப்பெரிய
மரியாதை உண்டு. முதலாவது, விஸ்வநாதன் மீதான அவருடைய வெளிப்படையான என்றைக்கும் மாறாத
இந்தக் கருத்திற்காக.
இரண்டாவது சம்பவத்தை நண்பர் ஒருவர் சொன்னார். கவியரசர் கண்ணதாசன்
பிறந்த இடத்தைத் தரிசிப்பதற்காக சிறுகூடற்பட்டி கிராமத்துக்குப் போனாராம் இளையராஜா.
அந்த கிராமத்தை அடைந்ததும் காரை அங்கேயே நிறுத்தி “அந்த மகாகவிஞன் பிறந்த ஊர் எனக்குப்
புனிதமானது. இந்த மண்ணில் செருப்பு அணிந்து நடக்கமாட்டேன்” என்று சொல்லி செருப்பைக்
கழற்றி வைத்துவிட்டு வெறும் காலோடுதான் மொத்த கிராமத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு
வந்தாராம்.