Monday, October 12, 2015

மனோரமாவின் இறுதி அஞ்சலி!

                             

நடிகை மனோரமாவின் இறுதி அஞ்சலிக்கூட்டம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் கொடிகட்டிப் பறந்த மிகப்பெரிய நடிகைகளான சாவித்திரி, பத்மினி, தேவிகா போன்றோர் இறந்தபோதுகூட இந்த அளவு பிரமாண்டமான அஞ்சலி ஊர்வலங்கள் நடைபெற்றதில்லை. ஏன்? நடிகர் நாகேஷுக்குக்கூட இந்த அளவு பிரமாண்டம் காட்டப்படவில்லை.

இதற்குக் காரணம் இப்போது பெருகிவிட்ட ஊடகங்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் எந்தப் பிரபலம் மண்டையைப் போடுவார் என்று சில சேனல்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமையை இன்று பார்க்கிறோம். முன்பு சன் டிவி மட்டுமே களத்தில் இருந்தபோது இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் அவர்களின் தேர்வு எப்படி என்பதற்குக் காத்திருக்கவேண்டும். சன்டிவிக்கென்று சில கணக்குகள் இருந்தன.

இப்போதைய சேனல்களுக்கு அதெல்லாம் இல்லை.

யாராவது இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும்போதேயே அடியைப் படியைப் போட்டுக்கொண்டு பல செய்திச்சேனல்கள் முந்தி ஓடிப்போய் லைவ் டெலிகாஸ்ட் என்று கடையை விரித்துவிடுகின்றன. பதினைந்து இருபது மணி நேரங்களுக்கு நேரடி ஒளிபரப்பு என்று வரும்போது அதற்கேற்ப அந்தப் பிரபலத்துடன் சம்பந்தப்பட்ட ஓரிரு பிரபலங்களைத் தங்கள் தளத்திற்கு வரவழைத்து அவர்களிடம் ‘கடலைப் போடுவதையும்’ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் மனோரமாவிற்கு இத்தகையதொரு பிரமாண்ட இறுதி அஞ்சலி தேவைதானா என்பதைப் பார்க்கும்போது அவரது திறமைக்கு இது நியாயம்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

மனோரமா இறந்த சந்தர்ப்பமும் அப்படிப்பட்டது.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த நேரம் என்பதால் இரண்டு கோஷ்டிகளும் தங்களின் கோபம், தாபம், வீராப்பு, ஆக்ரோஷம், சவால்கள், கோர்ட் சம்மன்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு வீடு தொடங்கி மயிலாப்பூர் சுடுகாடுவரை மனோரமாவின் உடலுக்கு அருகே பச்சைத் தண்ணீர்கூடப் பல்லில் படாமல் விடியற்காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை இருந்ததையும் சாவைத் தூக்கிச் சுமந்ததையும் பார்த்தோம்.

சரத்குமார் கோஷ்டியாகட்டும் விஷாலின் கோஷ்டியாகட்டும் உடம்புக்கு அருகில் யார் இடம்பிடிப்பது, இறுதிக்கடனுக்கு வேண்டிய சடங்குகளுக்கு யார் அதிக உதவி செய்வது என்பதில் மிகவும் குறியாக இருந்தார்கள்.

சரத்குமார் கோஷ்டி தங்களின் சாதனைகளாகவும் பிரதாபங்களாகவும் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருந்ததே இதுபோன்ற விஷயங்களைத்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அவர் சாவுக்குக் கூட இருந்தது யார்? இவர் சாவுக்கு உடனடியாய்ப் போய் உடன் இருந்தது யார்?’ என்று சரத்குமார் கோஷ்டி கேட்க,

“சாவுகளுக்குக் கூட இருந்தேன், கூட இருந்தேன் என்று சொல்கிறார்கள். சாவுகளுக்குக் கூட இருப்பது யார்? வெட்டியான்தானே? அப்ப இவங்க என்ன வெட்டியான்களா?’ என்று சிறுபிள்ளைத்தனமாக விஷால் பதில் சொல்லியிருந்தார். (உடனே பக்கத்திலிருந்தவர்கள் ஏதோ சொல்ல “நான் ஒண்ணும் வெட்டியான்களைத் தவறாகச் சொல்லவில்லை. அவர்கள் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை. சாவுகளைப் புதைப்பது என்பது உத்தமமான பணி என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்லி உடனே மன்னிப்புக் கேட்டார்.) அப்படித் தான் பேசிய அடுத்த இருபத்துநான்கு மணி நேரத்தில் தானே ஒரு சாவுக்குத் துணையாகப் பக்கத்தில் நிற்கப்போகிறோம் என்பது பாவம் விஷாலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மனோரமாவின் இறுதி அஞ்சலியை சமூக அந்தஸ்து வாய்ந்த ஒரு நிகழ்வாக மாற்றியது அனேகமாக கம்யூனிஸ்டுகளாகத்தான் இருக்கவேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தியது அவர்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவரிடமும் மனோரமா நெருங்கிய நட்பு பூண்டிருந்தார் என்பதும், இருவர் உடனேயும் சேர்ந்து நடித்திருக்கிறார் என்ற தகவல்களும் அதற்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இவர்கள் இருவரும் வருவார்கள் அதனால் நாம் போகாவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, முதலில் ஆஜரானது இ. கம்யூனிஸ்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன்தான். அவரைத் தொடர்ந்து வீரமணி, திருமாவளவன், தா.பாண்டியன், நல்லகண்ணு, இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், குமரிஅனந்தன் என்று ஆரம்பித்து ஜிகேவாசன் வரைக்கும் வந்து தீர்த்துவிட்டார்கள்.

கலைஞர் உட்பட எல்லாருமே திரண்டிருந்த கூட்டத்தைத் தொந்தரவு செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு வந்து இறுதிமரியாதை செலுத்திவிட்டுப் போய்க்கொண்டிருக்க திடீரென்று மொத்தக்கூட்டத்தையும் காலி செய்து ஈ காக்கை எறும்பு போன்ற ஜந்துக்கள் ஊர்வதற்குக்கூட போலீசார் தடைவிதிக்க ஆரம்பித்ததுமே ஜெயலலிதா வரப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது. 

(மெயின் சாலையிலிருந்து வீடு வரைக்குமான இடத்தைப் பெருக்கிக் கழுவி சுத்தம் செய்தார்களா என்பது பற்றிய தகவல் இல்லை) ஜெயலலிதா வந்தார். வருத்தத்துடன் மனோரமா முகத்தைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார். அவர் பின்னால் கம்பீரமாக சசிகலா. முதல்வரின் பேச்சில் எந்தவிதமான பாசாங்குகளோ, செயற்கைத் தன்மையோ அறவே இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

மனோரமாவைப் பற்றி இங்கே தனிப்பட்ட அளவில் பதிவு எழுதும் அளவிற்கு நட்போ அனுபவங்களோ இல்லை.

நான்கைந்துமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.

சிவகுமார் நடித்த ‘சிட்டுக்குருவி’ படத்தின் படப்பிடிப்பு மைசூரை அடுத்த தலக்காடு பகுதியில் நடைபெற்றபோது ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்த ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகுமாரும் சுமித்ராவும் நடித்துக்கொண்டிருக்க கோவிலுக்கு வெளிப்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி கீழே சப்பணமிட்டு அமர்ந்து அங்கிருந்த செடிகளிலிருந்து பூப்பறித்துக்கொண்டு வந்து அதைச் சிரத்தையுடன் கட்டிக்கொண்டிருந்தார் மனோரமா. பக்கத்தில் எஸ்.என்.லட்சுமி அமர்ந்து பேசிக்கொண்டிருக்க இவரது கைகள் பாட்டுக்கு அசுரவேகத்தில் பூத்தொடுப்பதிலேயே கவனமாக இருந்தது. . எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் எவ்வளவு புகழுக்குரியவர் இப்படி சர்வ சாதாரணமாய்……………….?

இந்தக் காட்சி வித்தியாசமாய் இருக்க நானும் நண்பரும் அருகில் போய் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டோம். அவர் பதறிப்போய் “எதுக்குத் தரையில உட்கார்றீங்க? அதோ பாருங்க சேர்கள் இருக்கே. அதில் உட்காரலாமே” என்றார்.

“நீங்களே தரையில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும்போது நாங்க நாற்காலியில் உட்காரணுமா என்ன?” என்றதற்கு “கோயில் பிரகாரத்துல எதுக்குத்தம்பி சேர்ல உட்காரணும்? இப்படி உட்கார்றதே சௌகரியமா இருக்கு இல்லையா?” என்று சிரித்தார்.

அதன்பிறகு ‘கண்ணாமூச்சி’ என்றொரு படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிருந்தாவனம் தோட்டத்தில் நடைபெற்றது.

அந்தப் படப்பிடிப்பிலும் மனோரமாவைச் சந்திக்க நேர்ந்தது. நினைவு இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகத்துடன் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள முனைந்தபோது “தெரியுமே. நீங்க சிவா தம்பியோட கெஸ்ட் தானே? அதான் எல்லா ஷூட்டிங்கிற்கும் வந்துடுறீங்களே” என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தார்.

அந்தப் படப்பிடிப்பில் மனோரமாவை வேறொரு கோணத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் படப்பிடிப்பிற்குத் தன் உறவு நபர் ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தார் அவர். அந்த நபருக்குச் சின்ன வயசு. கோட் சூட்டெல்லாம் போட்டு டையெல்லாம் கட்டி ஜம்மென்று வந்திருந்தார். அவரது கோட் சூட்டிற்கும் அவர் செய்த செயல்களுக்கும் தாம் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் இருந்தன அவரது நடவடிக்கைகள்.

சிவகுமாருக்கும் லதாவுக்குமான பாடல் காட்சி சிறிது தூரத்தில் படமாகிக்கொண்டு இருந்தது. வேறொரு புறத்தில் எல்லாரும் அமர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட ஆரம்பித்த சமயத்தில் “எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி எழுந்துகொண்டார் மனோரமாவுடன் வந்திருந்த அந்த நபர்.

எழுந்தவர் பக்கத்திலிருந்த மரத்தின் கிளையிலிருந்து ஒரு நீண்ட கிளையை உடைத்து எடுத்துக்கொண்டார்.

அவ்வளவுதான். 

ஆரம்பித்தது சூரத்தனம்.

சுற்றிலும் அழகழகாய்ப் பூத்துக்குலுங்கிச் செழித்து வளர்ந்திருந்த பூக்களின் தலையைப் பார்த்து ஒரே அடி.

பூக்கள் சிதறித் தெறித்து விழுந்தன. அந்த நபரும் அவருடன் இருந்த அவர் வயதையொத்த ஒரு இளம் நண்பரும் அதனைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்தனர்.

“டேடேடே என்னடா காரியம் பண்றே?” என்று பதறி எழுந்தார் மனோரமா.

அதட்டி மிரட்டிப் பணிய வைப்பார் என்று பார்த்தால் அவரது செய்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. “வேணாம் ராஜா வேணாம் கண்ணு. அப்படியெல்லாம் செய்யாதேய்யா. வாட்ச்மேன் பார்த்தா திட்டுவாண்டா சாமி. அந்தக் குச்சியை முதல்ல கீழே போட்டுரு” என்று கெஞ்சி மன்றாட ஆரம்பித்தார்.

அந்தப் பையன் எதையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.

அவர் பாட்டுக்குத் தன் செய்கையில் தீவிரமாக இருந்தார். அழகாகப் பூத்திருக்கும் பூக்களையும் இலைகளையும் பார்த்து ஒரே வீச்சு. சடசடவென்று விழுந்துகொண்டிருந்தன பூக்கள். சிறிது நேரத்திற்குள் பிருந்தாவனத்திலிருந்த பல பூக்கள் துவம்சம் ஆகியிருந்தன.

ஏதோ வாள் கொண்டு வீசுவதாகவும், தலைகள் கொய்யப்பட்டு வீழ்வதுபோலவும் அவருக்குள் நினைப்பு இருந்திருக்கவேண்டும். படர்ந்து நீண்டிருந்த பூங்காவில் இவர் ஓடி ஓடிப்போய் பூக்கள் பூத்திருக்கும் இடங்களை எல்லாம் விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார்.

“ஐயா அவம்பாருங்க…….. என்ன செய்யறான்னு? போய்யா நீங்களாச்சும் போய் அவனுக்கு ஏதாவது செய்து அவனை நிறுத்தவையுங்கய்யா. நான் சொன்னால் கேட்க மாட்டான்யா அவன்” என்று எதிரிலிருந்த சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் என்னைப் பார்த்துக் கேட்க நாங்கள் மூவரும் அந்த இளைஞரைத் தேடி ஓடினோம்.

சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் என்னென்னவோ பேசி அந்த நபரின் கவனத்தை திசை திருப்பினார்கள். அதற்குள் தோட்டக்காரனும் பார்த்துவிட்டுக் கத்திக்கொண்டே ஓடிவர சமாதானம் பேசி தோட்டக்காரனை அனுப்பிவைத்தனர் தேங்காயும் சுருளியும்.

இதற்குள் பிருந்தாவனத்துக்குள்ளேயே நீண்ட தூரத்திற்குப் போய்விட்டிருந்தார் அந்த நபர்.

“இதுக்குமேல இவனை நம்மால துரத்த முடியாது. தோட்டக்காரன் பிடிச்சு கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினான்னா சரியாயிரும். விட்ருவோம்” என்று சொல்லிவிட்டார் சுருளி.

அந்தப் பையன் பிறகு கண்காணாத தூரத்திற்குப் போய் மதியம் சாப்பிடுகின்ற நேரத்திற்குத்தான் வந்து சேர்ந்தார்.

அந்தப் படப்பிடிப்பின் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மனோரமாவை மறுபடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு வந்ததில்லை.

இரண்டொரு முறை சில நிகழ்ச்சிகளில் சந்தித்ததுதான். வணக்கம் வைத்தால் சிரித்துக்கொண்டே 
“எப்ப வந்தீங்க தம்பி? நால்லாருக்கீங்களா?” என்று கேட்பார்.

சிவகுமார் சம்பந்தப்பட்ட நூல் ஒன்றிற்காக அவரைச் சந்திக்கவேண்டும் என்று முயற்சி மேற்கொண்டபோது “அவர் முன்பைப்போல் நினைவு படுத்திப் பேசும் நிலையில் இல்லை” என்று சொல்லப்பட்டது.

எம்மாதிரியான வேடமாயிருந்தாலும் உடன் நடிப்பவர் யாராக இருந்தாலும், அத்தனைப் பேருக்கும் ஈடு கொடுத்து நடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. ஆனால் அதனை சர்வசாதாரணமாக செய்துவிட்டுப் போயிருக்கும் ஒருவராகத்தான் மனோரமா இருக்கிறார்.

சிவாஜியிலிருந்து தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் எம்ஆர் ராதா என்று பல ஜாம்பவான்களுடன் இணைந்தும் ஈடுகொடுத்தும் நடித்தவர் பின் நாளில் வந்தவர்களான தேங்காய், சுருளிராஜன், கவுண்டமணி ஆரம்பித்து கமல்ஹாசன், ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த், சூர்யா, அஜீத், விஜய்,  வடிவேலு என்று இன்றைய விஷால்வரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் அம்மாவாகவும், பாட்டியாகவும் அத்தையாகவும் எத்தனை வேடங்கள் உண்டோ அத்தனை வேடங்களிலும் தோன்றி அமர்க்களம் செய்திருக்கிறார்.

நடிப்பு அமர்க்களங்கள் ஒருபுறம் இருக்க, வசன உச்சரிப்பிலும் உச்சம் தொட்டவர் அவர். எந்த மாதிரியான வட்டார பாஷையும் அவருக்குக் கைவந்த கலை. சென்னைத் தமிழை அசால்ட்டாகப் பேசி அமர்க்களம் செய்த ஒரே நடிகை மனோரமாதான்.

‘வா வாத்யாரே வூட்டாண்ட. நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன். ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டைக் கொக்கு’……….. தமிழில் அதிர்வலைகளை ஏற்படுத்திய முதல் குத்துப் பாடல். 

அதையும் ஒரு பெண் பாடியிருக்கிறார் என்பதுதான் பாடலில் உள்ள விசேஷம்.

வேடிக்கைக்குச் சொன்னாரோ, மனதில் எந்த கர்நாடக சங்கீதப் பாடகியையாவது வைத்துக்கொண்டு அவருக்கு எதிராகச் சொன்னாரோ அல்லது உண்மையாகவே சொன்னாரோ பிரபல சங்கீத மேதையான பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் தம்மை மிகவும் கவர்ந்த பாடல் இதுதானென்றும், தன்னை மிகவும் கவர்ந்த பாடகி மனோரமாதான் என்றும் ஒரு பேட்டியில் சொல்லித் தம் பங்கிற்குப் பரபரப்பைக் கிளப்பினார்.

எது எப்படியோ, அசாத்தியத் திறமை இல்லையெனில் திரையுலகிலும் திரைப்படங்களிலும் ஐம்பது வருடங்கள் எல்லாம் ஒருவரால் தாக்குப்பிடிக்க முடியாது.

இத்தனை வருடங்கள் இருந்தபோதும் புகழையும் வெற்றியையும் தம்முடைய தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அவரால் இருக்கமுடிந்திருக்கிறது என்பதுதான் சிறப்பு.ஆச்சி மனோரமா நம்முடைய மன ஓரமா நீண்ட காலத்திற்கு வாழ்க்கைப் பூராவும் நம்முடன் நடந்து வந்துகொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி.