இப்போதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. ரயில் பயணங்களின்போது சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கிறது. ஒரு
பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ரயில் பயணங்கள் என்றால் கையில் சோற்று மூட்டையுடன்தான் ரயிலேற வேண்டியிருக்கும். ரயில் பெட்டிகளில் இருக்கும் தண்ணீரைத்தான் பலபேர் குடிப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.அந்தத் தண்ணீர் எஞ்ஜின் நாற்றத்துடன் இருக்கும். பலருக்கு அந்தப் புகை நாற்றம் பிடிக்காமல் ஏதாவது ஸ்டேஷனில் வண்டி நின்றவுடன் ஓடிப்போய் குழாய்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவார்கள். அதற்காகவே சொம்புகளையும் டிபன் பாக்ஸுகளையும் எடுத்து வருவார்கள்.
அப்புறம் இதனை ஏதோ கதையிலும் எழுதியிருந்ததாக நினைவு. ரயிலில் விற்பனைக்கு வருகிற அத்தனையையும் ஒருவன் வாங்கித்தின்றானென்றால் அவனுடைய நிலைமை என்னாகும் என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு சிலர் ஒரு சிலவற்றைத்தவிர எல்லாவற்றையுமே வாங்கித் தின்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஏதோ நண்பர்களுடன் ஓட்டலுக்குப்போய் அனுபவித்து சாப்பிடுவதாக அவர்களுக்குள் நினைப்பு இருக்கலாம்.
மிகக் குறைந்த சதவிகிதம்பேருக்கு வேண்டுமானால் ரயில் உணவுகள் பிடிக்காமல் போகலாம். ஆனால் தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு இந்த உணவுகள் பிடிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு ரயிலில் டெல்லி சென்றபோது மதியம் ஒன்றுமே சாப்பிடக்கிடைக்காமல் போபால் வரும்வரைக் காத்திருந்து அந்த ஸ்டேஷனில் கிடைத்த ஊசிப்போன பூரியை வாங்கி அதைவிட ஊசிப்போயிருந்த உருளைக்கிழங்கை மட்டும் ஒதுக்கிவிட்டு வெறும் வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் கடித்துக்கொண்டு சாப்பிட்டதை நினைக்கும்பொழுது இப்போதைய கேண்டின் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எல்லா உணவு அயிட்டங்களின் மீதும் அடிக்கும் பாமாயிலின் பச்சை நெடிதான் சகிக்கவில்லை. எல்லா உணவுப் பொருள்களின் விலையையும் இன்னொரு ஒரு ரூபாய் ஏற்றி ரீஃபைண்ட் ஆயிலில் செய்துபோட்டால் புண்ணியமாக இருக்கும். செய்வார்களா..............?
பார்க்க ரொம்ப அழகான வடிவில் கட்லட் என்று ஒரு பொருள் விற்கிறார்கள். ஸ்டார் ஓட்டல்களில்கூட அத்தனை அழகாக இருக்காது. ஆனால் வாங்கினீர்களோ உங்கள் பாடு அதோ கதிதான். ஏதோ உருளைக்கிழங்கைப் பிசைந்து அதனுடன் காய்கறிகளைச் சேர்த்து செய்த ஒன்று இந்தக் கட்லட் என்று நினைத்தீர்காளானால் நீங்கள் அடப்பாவி என்று அழைத்துக்கொள்ளலாம். முழுக்க முழுக்க காய்ந்துபோன ரொட்டியைத் தண்ணீரில் ஊறவைத்து அதில் லேசாக கரம் மசாலாவைச் சேர்த்துப் பொரித்து எடுத்து தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறுகிறார்கள். பெரிய ஓட்டல்களில் சென்று கட்லட் சாப்பிட முடியாவிட்டாலும் இங்கே சாப்பிடக்கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சியில் ஏராள மக்கள் வாங்கிச் சாப்பிடும் காட்சியைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.
சரி போகட்டும்...தலைப்பிற்கு வருவோம். ரயில்களில் காபியும் டீயும் குடிக்கிறவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். இதில் முக்கால்வாசிப்பேர் எது கிடைக்கிறதோ அதை அனுபவித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம் என்கிற ரகம். அதனால் அவர்கள் தரம் பற்றியோ ருசி பற்றியோ கவலைப்படுவதெல்லாம் இல்லை. இந்த மகராசர்களை நம்பித்தான் இத்தனை லட்சக்கணக்கான ஓட்டல்களும் நடைபாதைக் கடைகளும் தைரியமாகச் செயல்படுகின்றன. இன்னொரு ரகம், வேறு வழியில்லை, எது கிடைக்கிறதோ அதை சாப்பிடப்பழகுவோம் என்பது. மூன்றாவது ரகம், வெளியில் எங்கும் சாப்பிடுவதில்லை நமக்கு வேண்டியதைக் கையோடு எடுத்துவந்து விடுவோம் என்பவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமே. நானெல்லாம் இந்த வகையில் அடக்கம். அப்படியே இருந்தாலும் ஒரு வேளை டிபனையோ, அல்லது ஒரு வேளை சாப்பாட்டையோ எடுத்து வரலாம். காபி டீயை எல்லாமா எடுத்துவர முடியும்?
முன்பெல்லாம் ரயில்களில் டிப் டீ என்று தருவார்கள். சர்க்கரைக் கலந்த பால்தண்ணீரில் டீ பாக்கெட் ஒன்றைப் போட்டுத் தருவார்கள். அதை நன்றாக நனைத்து நனைத்து பால்தண்ணீரை டீயாக்கிப் பருகலாம். அவர்களின் வழக்கமான டீயை விடவும் நன்றாக இருக்கும். அவர்களுக்கு அது கட்டுப்படியாகவில்லை போலும். இப்போது அதனை நிறுத்திவிட்டார்கள். டீ என்ற பெயரில் அவர்கள் தரும் பானத்தைக் குடிக்கவே முடியவில்லை. டீ என்னமோ நன்றாகப்போட்டு அதன் பிறகு அதில் இரண்டு பாத்திரம் வெந்நீர் ஊற்றிக் கொண்டுவருகிறார்கள் போலிருக்கிறது. தொழில் ரகசியம்!
எப்படியோ போகட்டும். இந்தத் தகிடுதத்தங்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மாற்றமுடியாது. அதற்கு வேண்டிய மக்கள் ஆதரவும் நமக்குக் கிடைக்காது. அதனால் வேறு வழிகளைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்....
இப்போதெல்லாம் ரயில் பயணங்களின்போது நல்ல சுவையுள்ள டீ அருந்துவது எப்படி என்பதற்கு ஒரு உத்தி கண்டுபிடித்திருக்கிறேன்.
மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது.
ஒன்றும் பெரிய விஷயமில்லை.
பயணம் கிளம்புவதற்கு முன்பு நான்கைந்து டிப் டீ பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
ரயிலில் வரும் டீ ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். அந்த டீ வாசனை வீசும் வெந்நீரில் உங்களிடம் இருக்கும் டீ பாக்கெட்டைப் போட்டு நன்றாக நனைத்துப் பிழிந்துவிட்டு டீ பேகைத் தூக்கி வெளியே வீசிவிடுங்கள்.
இப்போது டீயைக் குடித்துப் பாருங்கள்...
உண்மையிலேயே நல்ல சுவையோ சுவை.
நீங்களும் முயலலாம்!